ஜெயலலிதா ஜெயராம் (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016)

(ஜெயலலிதா மறைவை ஒட்டி இதழ் ஒன்றுக்காக உடன் எழுதப்பட்ட கட்டுரை)

மிகப்பெரிய அளவு அடித்தள மக்களின் பங்கேற்பு, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்படும் அளவிற்கு நாடெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்களின் வருகை ஆகியவற்றுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் சடங்குகளும் நேற்று சென்னையில் நடந்தேறின. மாவட்டங்களிலிருந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருக்காவிட்டால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு மக்கள் திரண்டிருப்பர் எனக் கூறப்படுகிறது. ஜெயாவின் மரணச் செய்தியைக் கேட்டு தமிழகமெங்கும் 26 பேர்கள் காலமாகியுள்ளதாக  இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

இரண்டு வயதில் தந்தை மரணம். 16 வயதில் விருப்பமின்றி திரைப்படத் துறையில் ஈடுபடுத்தப்பட்டது, 34 வயதில் அரசியல் நுழைவு, 43 வயதில் முதல்வர், இருமுறை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையேகிப் பதவி இழத்தல், மீண்டும் பெரும்மக்கள் ஆதரவுடன் பதவி ஏறல், மிக உயர்ந்த மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டும் 75 நாட்கள் பிரக்ஞை இல்லாமலேயே இருந்து மரணம் – என ஒரு ஏற்ற இறக்கங்கள் மிக்க வாழ்வை வாழ்ந்தவர் ஜெயா.

“நான் ஒரு பாப்பாத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்” எனச் சட்டமன்றத்தில் பீற்றிக் கொண்ட ஒரு கன்னடத்துப் பார்ப்பனர் திராவிட இயக்கமொன்றின் தலைவராக 27 ஆண்டுகள் கோலோச்ச நேர்ந்ததற்கு திராவிட இயக்கங்களின் பலவீனங்கள் முக்கிய காரணமாக இருந்தன.

ஜெயாவின் பலமும் பலவீனமும் அவருக்கு குடும்பம் ஒன்று இல்லாமல் இருந்ததுதான். முக்கிய எதிரணியாக இருந்த கட்சியின் ஆக அருவருப்பான குடும்ப அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அந்த மாதிரியான குடும்ப அரசியல் ஆபத்து ஜெயாவுக்கு இல்லை அல்லது அவரே அந்த ஆபத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். ஆனால் அதற்குப் பதிலாக ரத்த பந்தமில்லாத ஒரு நட்பை அவர் உருவாக்கிக் கொண்டது இன்னும் பெரிய ஆபத்தாக விளைந்தது. அது ஜெயாவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் மாஃபியா கும்பலாக அவரைச் சுற்றி அரண் எழுப்பி நின்றது. இப்படி உருவான வளர்ப்பு மகனுக்கு அவர் நடத்திய அருவருப்பான் ஆடம்பரத் திருமணம் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியது. ஒரு வேளை அ.தி.மு.க உடைந்து அந்த இடுக்கில் இந்துத்துவ அரசியல் உள் நுழைய நேர்ந்தால் அதற்கும் இந்த உறவே காரணமாக இருக்கப் போகிறது.

எனினும் ஜெயாவை மக்கள் மன்னித்தார்கள். ஒவ்வொருமுறையும் மன்னித்தார்கள். அவர் மீது வைக்கப்பட்டு, நீதிமன்றங்களால் ஏற்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கூட மக்கள் ஏற்கவில்லை. மக்களின் தர்க்கத்தைப் புரிந்து கொள்வது அப்[படி ஒன்றும் கடினம் அல்ல. இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இவருக்கு வாக்களிக்காமல் விட்டால் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்புப் பெற்றவர்கள்  இவருக்கு எள்ளளவும் சளைக்காத ஊழல் பேர்வழிகள்தான். அவர்கள் ஊழல் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை அவ்வளவுதான். இந்த அமைப்பில் ஊழல் தவிர்க்க இயலாதது என ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்..

அவர் பதவிகளில் இருந்த காலம் இந்தியத் தொழிற் துறையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட்ட காலம். 2003 ல் அவர் ஒரு 90 முக்கிய தொழில் நிறுவனங்களை  அழைத்து அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார். அவர்கள் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். இதற்குச் சில தினங்கள் முன்னர்தான் (ஜூலை 2003) போராட்டத்தில் கலந்து கொண்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து போராடும் தொழிலாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தன் அரசு தயக்கம் காட்டாது என்பதை அவர் கோடி காட்டியிருந்தார். முதலாளிகள் அமைப்பு (CII) இதை வெகுவாகப் பாராட்டி, “உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றது. ஃபோர்ட், ஹ்யூண்டாய், நோக்கியா என உலகளவிலான பன்னாட்டு நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இங்கே கடைவிரித்தன.

________________________________________________________________________________________________________

1948 பிப் 24 கர்நாடக மாநிலம் பாண்டவபுரம் தாலுகா மேல்கோட்டையில் பிறப்பு

1950 தந்தை மரணம்

1965 தமிழில் திரைப்பட கதாநாயகியாக அறிமுகம். தென்னிந்திய மொழிகளில் 140 திரைப்படங்கள்.

1982  அரசியல் நுழைவு

1984 மாநிலங்கள் அவை உறுப்பினர்

1989 அ.தி.முக பொதுச் செயலர்; முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவி

1991 முதலமைச்சர்; மிகவும் இளம் வயது முதல்வர்.

1995 வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணம்

1996 தேர்தல் தோல்வி தொடர்ந்து கருணாநிதி அரசு தொடுத்த லஞ்ச ஊழல் வழக்குகள்; சில மாத காலம் சிறைவாசம்

1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் அமைச்சரவையில் பங்கேற்பு. வஜ்பேயீ அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சி கவிழ்ப்பு

2001 மீண்டும் தேர்தலில் வெற்றி; மீண்டும் முதல்வர். சில மாதங்களில் லஞ்ச வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டு பதவி இழப்பு. ஆறு மாதத்தில் மீண்டும் பதவி ஏற்பு. போலீஸ் அடக்குமுறையுடன் கூடிய ஆட்சி.

2004  நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி

2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.

2011 தேர்தலில் வெற்றி. மீண்டும் முதல்வர்.

2014 செப் சொத்து குவிப்பு வழக்கில் பதவி இழப்பு. 22 நாள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் விடுதலை

2015 மே கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி வழக்கிலிருந்து விடுதலை. மீண்டும் முதல்வர்

2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமலே வெற்றி. 1984 க்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை வென்றவர் எனும் சாதனை.

2016 டிச 5 எழுபத்தைந்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்து மரணம்

________________________________________________________________________________________________________

இதையும் மக்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் தவிர்க்க இயலாதவை. யார் வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்பதை ஏற்கும் மனநிலைக்கு மக்கள் அதற்குள் பழக்கப் படுத்தப்பட்டிருந்தனர். ஆனானப்பட்ட இடதுசாரிகளே டாட்டாவுக்கு இடம் கொடுத்து ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் அம்மா மட்டும் என்ன செய்ய முடியும் என்பது மக்களின் ‘லாஜிக்’ ஆக இருந்தது.

இவற்றின் இன்னொரு பக்கமாக அம்மாவின் ஆட்சியில் ‘பாப்புலிசம்’ அதன் எல்லையைத் தொட்டது. இலவச கம்ப்யூட்டர், மிக்சர், கிரைண்டர், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள், அம்மா தண்ணீர், அம்மா உணவகங்கள்…. வேறு என்னதான் வேண்டும்? இந்தச் செலவை எல்லாம் ஈடுகட்ட இருந்தது அவருக்கு ‘டாஸ்மாக்’.

அம்மாவின் ஆட்சி என்றால் அது போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது ஊரறிந்த செய்தி. என்கவுன்டர் கொலைகள், லாக் அப் சாவுகள், காவல்துறை அத்துமீறல்கள் எதிலும் அவர் காவல் துறையை விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியான அத்து மீறல்களைத் தொடர்ந்து ‘குறைந்த விலை போலீஸ் கான்டீன்கள்’ முதலான பரிசுகளும் பதவி உயர்வுகளும் காவலர்களுக்குக் காத்திருந்தன.

அவர் இறந்த அன்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக் காட்சி அவரது பழைய நேர்காணல் ஒன்றை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அழகான ஆங்கிலத்தில் அம்மா சொன்னார்: “நான் பழைய ஜெயலலிதா அல்ல. நான் மாறிக் கொண்டிருக்கிறேன்”.

அது உண்மை. காலம் யாரைத்தான் மாற்றவில்லை. நீங்களும் நானும் கூடத்தான் மாறிக் கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளையும், அதுவும் நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்களையும் நாம் அப்படித்தான் மதிப்பிட வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் உறைந்தவர்களாக அவர்களைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. தான் ஒரு பாப்பாத்தி என்பதில் பெருமைப்படுவதாகச் சொன்ன அவர்தான் சங்கரசாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சுப்பிரமணிய சாமி முதலான பார்ப்பனீய சக்திகளுக்கு எதிராகவும் இருந்தார். சசிகலா போன்ற பார்ப்பனரல்லாதவர்களையே “உயிர்த் தோழி” யாக இருத்திக் கொண்டார். கருணாநிதியின் ஆட்சியில்தான் சங்கராச்சாரி மீதான அந்த வழக்கு நீர்க்கச் செய்யப் பட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

மதமாற்றத் தடைச் சட்டம், சிறுதெய்வ வழிபாடுகளில் மிருக பலிக்குத் தடை, பா.ஜகவுடன் கூட்டணி முதலான அவரது பதவிக் காலத்திய முதற்கட்ட நடவடிக்கைகளை அவர் பிற்காலத்தில் தொடரவில்லை.

போர் என்றால் சிலர் கொல்லத்தான் படுவார்கள் என ஈழ மக்கள் மீதான அடக்குமுறையை ஆதரித்துப் பேசிய ஜெயாதான் 2011க்குப் பின்னர் ஈழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் இயற்றினார். மஹிந்த ராஜபக்‌ஷே உள்ளிட்ட “போர்க் குற்றவாளிகள்” மீது நடவடிக்கை வேண்டும் என்றார். ஐ.நா அவை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் 2013ல் சட்டமன்றத்தைக் கூட்டி “இனப் படுகொலை” க்குக் காரணமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும், தனி ஈழத்திற்கான கருத்துக் கணிப்பு வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றினார். 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என அவர் காட்டிய எதிர்ப்புத்தான் கடைசி நேரத்தில் மன்மோகன் சிங் தன் கொழும்புப் பயணத்தை ரத்து செய்வதற்குக் காரணமாகியது. 2015ல் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானத்தை நீர்க்கச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டபோது அதற்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.

ராஜீவ் காந்தி ஜெயாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்தான். எனினும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு அதரவாகவும் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் கச்சத்தீவு பிரச்சினையிலும் அவர் தீவிரமாக இருந்தார்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பதைத் தவிர்ப்பது, தி.மு.க ஆட்சி செய்தது என்பதற்காகவே சமச்சீர்க் கல்வித்திட்டத்தை ஊற்றி மூட முயற்சித்தது, அண்ணா நூலகத்தை மூடவும், இராணி மேரிக் கல்லூரியை அந்த இடத்திலிருந்து அகற்றவும் முயற்சித்தது, சட்டமன்றத்திற்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது, எதிர்க் கட்சித் தலைவர்கள், தெருக்களில் கொள்கை முழக்கமிட்டுப் பாடி ஆடிய கலைஞர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுத்தது முதலான நடவடிக்கைகள் அவரிடம் இறுதி வரையிலும் மாறாமல் இருந்த பண்புகள் எனலாம். 2015 சென்னை வெள்ள எதிர்ப்பு நடவடிக்கையிலும் அவரது செயலின்மை பெரிய அளவில் கண்டிக்கப்பட்டது.

மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என அவர் யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரைப் பற்றிய கணிப்பில் கவனத்துக்குரிய அம்சங்களில் முக்கியமானது இது.