இந்துத்துவமும் தம்மத்துவமும்

{இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் ஒரு அவதூறு நூலை ‘கிழக்கு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்கு பவுத்தவியல் அறிஞர் ஓ.ர.ந. கிருஷ்ணன் அவர்கள் ஒரு மறுப்பு நூல்  எழுதியுள்ளார். அந்த நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை இது. இந்து மதம் முன்வைக்கும் ‘தர்மம்’ என்பது வருண அடிப்படையில் உலகைப் பிரித்து நிறுத்துவது. பவுத்தம் முன்வைக்கும் ‘தம்மம்’ கருணையால் உலகைத் தழுவுவது என இக்கட்டுரை ஆழமாக இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை நுண்மையாகச் சுட்டிக் காட்டுகிறது.}

மதிப்பிற்குரிய பெரியவர் ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்கள் பவுத்த சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை கடமையாய்க் கொண்டு வாழ்பவர். அயோத்திதாசர் முதலானோர் சென்னையை மையமாகக் கொண்டு மேற்கொண்ட பவுத்த நெறி பரப்பும் பணியை இக்காலத்தில் முன்னின்று தொடர்ந்து வருபவர். பவுத்த நெறி மட்டுமின்றி இந்தியத் தத்துவங்கள், புராணங்கள், மதங்கள் குறித்து ஆழ்ந்த தேர்ச்சி உடையவர். அவரது இந்த நூலுக்கு ஒரு முகப்புரை எழுத என்னைப் பணித்தமைக்கு என் அன்பார்ந்த நன்றிகள் முதலில்.

இந்துத்துவ ஆதரவு நிறுவனமான ‘கிழக்கு’ பதிப்பகம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ம. வெங்கடேசன் என்பவரின் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் நூலை ஒரு நண்பர் கிருஷ்ணன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். ‘பிறக்கும்போது இந்து மதத்தில் பிறந்தேன். ஆனால் இறக்கும்போது அந்த மதத்தில் இருக்க மாட்டேன்’ எனக் கூறி அதை வாழ்நாளில் நிறுவியவரும், இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும் தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவித்து பவுத்தம் தழுவச் செய்தவருமான அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு இந்துத்துவவாதியாக நிறுவ முயலும் வன்ம நோக்குடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலை வாசித்த உடன் எதிர்வினையாக எழுதப்பட்ட அற்புதமான ஆய்வு நூல் இது.

எதிர்வினை என்றவுடன் இதை ஒரு  எளிய விவாத நூலாக (polemics) எண்ணிவிட வேண்டாம். எதிராளியை வெல்வதற்காக எதையும் செய்யலாம், அதை தர்மத்தின் பெயரால் நியாயப்படுத்திவிட இயலும் என்பதுதான் மகாபாரதம் முன்வைக்கும் இந்து தர்மம். அதைத்தான் இப்போது தமிழ் எழுத்தாளர்கள் பலரும் எழுதிக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். பவுத்தம் இதற்கு எதிரானது. அதில் பகைக்கு இடமில்லை. அது அன்பால் உலகைத் தழுவுவது. கிருஷ்ணன் அவர்கள் அந்த வழியில் வந்தவர், நிற்பவர். இந்த நூலின் அணுகுமுறையும் அத்தகையதே. எந்தக் கடுஞ்சொல்லோ, உள் நோக்கமோ கற்பிக்காமல் வெங்கடேசனின் கருத்துக்களைச் சூழ்ந்துள்ள பொய்மையைச் சுட்டிக்காட்டும் நூல் இது. அம்பேத்கரைக் கொச்சைப்படுத்தும் அந்த நூல் என்னுடைய பார்வைக்கும் கொண்டு வரப்பட்டது. ஒரு வேளை நான் அதற்கு மறுப்புரை எழுதி இருந்தேன் என்றால் உறுதியாக அது இத்தகைய பண்புடன் இருந்திருக்காது. கிருஷ்ணன் அவர்கள் பவுத்தத்தை அறிந்தவர் மட்டுமல்ல; அந்த வழியில் நிற்பவரும் கூட. வெறுப்பற்ற உலகை லட்சியமாகக் கொண்டு முன்நகர்பவர். எனவே இந்நூல் ஒரு சிறந்த ஆய்வு நூலாகவும், இந்த மண்ணில் கிட்டதட்ட 3500 ஆண்டு காலமாக நடந்து கொண்டுள்ள ஒரு பெரும் போரின் அடிச் சரடுகளைத் தொட்டுக் காட்டி நமக்கு அறம் புகட்டும் ஒரு நன்னூலாகவும் இது பரிமளித்துள்ளது. ‘இல்லை, இல்லை உண்மை அதுவல்ல’ என மெலிதாக இழையோடும் ஒரு படபடப்பைத் தவிர மற்றபடி இது ஒரு முழுமையான ஆய்வு நூல். நம்மைச் சிந்திக்க வைக்கும் அறிவு நூல்.

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இங்கு ஒரு போர் தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது என்பதை கிருஷ்ணன் இந்நூல் முழுக்க தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளார் என்றேன். அதென்ன? அது இந்துத்துவத்துக்கும் பவுத்தத்தின் தம்மத்துவத்துக்கும் நடந்த, நடந்து வருகிற போர்தான். இந்து மதத்திற்கும் பவுத்தம், சமணம் முதலான சிரமண மதங்களுக்கும் இடையில் நடக்கும் போர்தான். இந்துத்துவத்தின் அடிநாதமாக, அடிப்படை ஆதாரமாக இருப்பது முன் வேதகாலத்தின் கர்ம காண்டம்தான். கிட்டத்தட்ட அதற்கு ஆயிரம் ஆண்டுகட்குப் பின் உருவானவைதான் பவுத்தமும் இதர சிரமண மதங்களும். அதற்குப் பின் இன்றுவரை உள்ள கால இடைவெளி சுமார் 2600 ஆண்டுகள்தான். எனில் இந்துத்துவத்திற்கும் சிரமண அணுகல் முறைகளுக்கும் இடையில் 3500 ஆண்டுகாலப் போர் எப்படிச் சாத்தியம்?

மத்திய ஆசியாவிலிருந்து இங்கு வந்து வேதங்களை இந்த மண்ணுக்கு அறிமுகம் செய்த ஆரியர்களுக்கு முன் இங்கு செழித்திருந்த சிந்துவெளிப் பண்பாட்டின் அடிப்படையான தத்துவ மற்றும் வழிபாட்டு வடிவம் என்பது சிரமணம்தான் என்பது கிருஷ்ணன் அவர்களின் முடிபு. மக்களிடையே பேதங்கள் கற்பிக்கும், வேள்விகளையும், போர்களையும் உன்னதப்படுத்தும் வைதீக மரபுக்கு முற்றிலும் பொருந்தாத ஒரு மரபுதான் இந்த மண்ணுக்கு உரிய சிரமண மரபு. சிந்து மண்ணில் கிடைக்கும் தவக்கோல உருவம் இதற்கொரு சான்று. சிந்து வெளியில் செழித்திருந்த சமூகம் வருண பேதங்கள் அற்றது. வேள்விகள் என உயிர்க் கொலைகளைத் தவிர்த்த சமூகம். இந்த மண்ணின் பூர்வீக மதமும் தம்மமும் அதுவே என்கிறார் கிருஷ்ணன்.

ஆரியப் பண்பாட்டுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு பண்பாடு இங்கு நிலவியது என்பதும் இந்த ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு திராவிட மொழிக் குடும்பம் இங்கு விளங்கியது என்பதும் நீண்ட காலமாக இங்கு பேசப்பட்டு வருவதுதான். எனினும் சிந்து வெளிப் பண்பாடு என்பது இந்த திராவிடப் பண்பாட்டுடன் நெருக்கமான தொடர்புடையது என்பதற்கு மேலும் மேலும் நிரூபணங்கள் சமீப காலத்தில்தான் அதிகமாகக் கிடைத்து வருகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் பலரும் சிந்து வெளிப் பண்பாட்டைத் திராவிடக் கூறுகளுடன் ஒப்பிடுவதற்கான ஆதாரங்கள் அதிகமாகியுள்ளதைச் சுட்டிக் காட்டியது குறிப்பிடத் தக்கது.

இப்படி இங்கு வந்த ஆரியப் பண்பாட்டிற்கும் முற்பட்ட இந்த மண்ணின் பூர்வீகப் பண்பாட்டின் தொடர்ச்சியாக உருவானவையே சிரமண மதங்கள் என்பது கிருஷ்ணன் அவர்களின் முடிபு. முப்பத்திரண்டு தீர்த்தங்கரர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர் மகாவீரர், எண்ணில் புத்தர்களின் வரிசையில் உதித்தவர் புத்த பகவன் எனும் சிரமண நம்பிக்கைகள் இத்துடன் பொருந்திப் போவதாகவே உள்ளன.

இப்படிச் சிந்துவெளி நாகரிகத்தின் அழிவில் வேர்கொண்டதுதான் இந்துத்துவப் பண்பாடு. ஆரியத்திற்கு முன் இங்கே நான்கு வருணங்கள் இல்லை. மக்களிடையே பேதங்கள் உருவாக்கப்பட்டு அதற்குத் தத்துவ நியாயங்கள் கற்பிக்கப்படவில்லை. இந்துத்துவத்தின் அடிப்படையான இந்த நால் வருணம் முதன் முதலில் புருஷ சூக்தத்தின் ஊடாகத்தான் முன்வைக்கப் படுகிறது என்கிற அம்பேத்கரின் ஆய்வுரையை கிருஷ்ணன் நினைவூட்டுகிறார்.

கி.மு 600 வாக்கில் இங்கு உருவான பவுத்தத்திற்குப் பின் இந்த நாட்டின் வரலாறு என்பது இந்துத்துவத்திற்கும் பவுத்தம் முன்வைத்த தம்மத்துவத்திற்கும்  இடையிலான போராட்டம்தான் என்பதுதான் இந்நூல் வாயிலாக கிருஷ்ணன் முன்வைக்கும் அடிப்படையான கருத்து.

என்னுடைய ‘புத்தம் சரணம்’ நூலின் இரண்டாம் பதிப்பு கிருஷ்ணன் அவர்களின் முன்னுரையோடு அவர்களின் மெத்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நான் நூல் முழுமையும் இந்துத்துவத்திற்கு எதிராக எவ்வாறு போதிசத்துவம் வேறு பட்டுள்ளது என்பதைச் சொல்லிக் கொண்டே இருப்பேன். நான் ‘போதிசத்துவம்’ எனச் சொல்லியுள்ளதும் கிருஷ்ணன் ‘தம்மத்துவம்’ எனச் சொல்வதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. புத்த நெறிதான் இப்படி வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்துத்துவத்திற்கும் தம்மத்துவம் என்கிற போதிசத்துவத்திற்கும் உள்ள பொருந்த இயலாத, முற்றிலும் எதிர் எதிரான தத்துவார்த்த நிலைபாடுகளை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்:

இந்துத்துவம் இறைமயப் படுத்துவதை (theologize) தம்மத்துவம் அறமயப் படுத்துகிறது (ethicize). இந்துத்துவம், தம்மத்துவம் இரண்டும் கர்ம விளைவுகள் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்துத்துவம் கர்மங்களைப் பாவம் X புண்ணியம் எனப் பிரித்தால், பவுத்தமோ குசல கம்மம் X அகுசல கம்மம் எனப் பிரிக்கிறது. அதாவது நல்ல நோக்கத்துடன் கூடிய செயல்கள் X ஆசை, வெறுப்பு, மருள் ஆகிய தீய நோக்கங்களுடன் கூடிய செயல்கள். நற்பயன்கள் பெற வேண்டுமானால் ஒருவர் பக்தியுடன் இறைவனைத் தொழுதலோ, வேள்விகள் மேற்கொண்டு இறைமைகளைக் குளிர்விப்பதோ, ஆலய வழிபாடுகளோ, உதவா. வேட்கைகளாலும் ஐயங்களாலும் உருவான வெறுப்பற்று மற்றவரை நேசிக்கும் நற்செயல்கள் மட்டுமே நற்பயன்களை விளைவிக்கும். இந்த மற்றவர் அல்லது மற்றமை என்பதில் சக மானுடர்கள் மட்டுமின்றி பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் அடங்கும். ஆக இங்கே பாவம், புண்ணியம் என்பன குணம் X அகுணம் என்பதாக எதிர் நிறுத்தப்படுகின்றன.

இந்துத்துவம் முன்வைக்கும் சாராம்சவாதத்திற்கு தம்மத்துவத்தில் இடமில்லை. ‘சுயம்’ (self), ‘ஆத்மன்’, ‘ப்ரும்மம்’ முதலான இந்துத்துவக் கருத்தக்கங்களை பவுத்தம் முற்றாக மறுக்கிறது. வேதங்களின் மறைபொருளை அறியும்போதே ஒருவன் ப்ரும்மத்தை / மெஞ்ஞானத்தை அடைகிறான் என்கிறது இந்துத்துவம். வேதங்களின் மெய்யறிவை அறிவது என்பதைக் காட்டிலும் ஒருவர் வாழும்போது எப்படி வாழ்கிறார் என்பதே விடுதலைக்கான ஒரே வழி என இறைவழிக்குப் பதிலாக அறவழியை முன்வைக்கிறது போதிசத்துவம்.

இந்துத்துவம் ‘ஆத்மன்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தால் பவுத்தம் ஆத்மா அல்லாதது எனப் பொருள்படும் ‘அனாத்மன்’ என்பதை முன்வைக்கிறது. இப்படி எதையும் சாராமல் தனித்து இயங்கும் சுயம், ஆத்மன் முதலானவற்றை ஏற்காத தம்மத்துவம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன (interdependency) என்கிறது. பெற்றோர் / பிள்ளைகள்; ஆசிரியர் / மாணவர்; பொதுமக்கள் / பரிவ்ராஜகர்; மக்கள்/ அரசு என அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என பவுத்தம் சொல்லும்போது மற்றமைக்கான ஒரு எல்லையற்ற திறப்பு நம்முள் நிகழ்கிறது. வருணம், சாதி, அந்நியன் முதலான கருத்தாக்கங்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இந்துத்துவமும் மற்றமையை உள்ளடக்குவதையே தர்மமாக்கும் போதிசத்துவமும் எந்நாளும் சந்திக்கவே இயலாத இரு துருவங்களாக அமைவது இப்படித்தான்.

ஒவ்வொரு முன்வைப்புகளிலும் இந்துத்துவமும் புத்த தம்மமும் வேறுபட்டு மட்டுமல்ல நேர் எதிர் எதிராக நிற்கின்றன. அரசுருவாக்கம் குறித்து இந்துத்துவம் சொல்வது என்ன? தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த பெரும்போரில் அசுரர்களே வென்றனர். இறைவன் அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றும் முகமாக தெய்வாம்சம் ஒன்றை அவர்களுக்குத் தலைவனாக்கினான். உக்கிரமான போர் ஒன்றின் ஊடாக அசுரர்களை அழித்த அந்த தெய்வாம்சமே பின்னர் அரசன் ஆகியது என்பதே இந்துத்துவம் முன்வைக்கும் அரசுருவாக்கம் பற்றிய புனைவு (அய்த்ரேயப் பிராமணம் மற்றும் தைத்ரேயப் பிராமணம்). ஆக அரசன் என்பவன் இறைவனால் அருளப் பெற்றவன். தெய்வாம்சம் பொருந்தியவன்.

ஆனால் பவுத்தம் முற்றிலும் வேறொரு கதையைச் சொல்கிறது. ஒருகாலத்தில் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இங்கே தனிச் சொத்துருவாக்கம் நிகழ்ந்தது. அதை ஒட்டி சொத்து சேர்த்தல், திருட்டு, கொள்ளை முதலியன உருவாகின்றன. மக்கள் கூடி இவற்றை மேற்பார்வையிட்டுத் தடுக்க ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கின்றனர். பவுத்தத்தில் அரசனுக்கான பெயர்கள் ‘மகாசம்மதா’ (அதாவது அனைத்து மக்களின் சம்மதத்துடனும் தேர்ந்தெடுக்கப்பட்டவன்); ‘கணதாசன்’ (அதாவது மக்களின் அடிமை. இந்துத்துவம் சொல்வது போல மக்களின் இறைவன் அல்ல); ‘சக்கரவர்த்தின்’ (அதாவது தருமச் சக்கரத்தை உருட்டியவன்).

அப்படி தருமச் சக்கரத்தை உருட்டிய மகத்தான மன்னனாக இந்திய வரலாற்றில் தனித்து நிற்பவர்தான் பிரியதர்சி மாமன்னர் அசோகச் சக்கரவர்த்தி.

அவருடைய தரும ஆட்சி எப்படி மக்களை நேசிப்பதாகவும், மக்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் காப்பதாகவும் இருந்தது என்பதை கிருஷ்ணன் அவர்கள் அசோகரின் சாசனங்கள் பலவற்றை மேற்கோளாக்கி இந்நூலில் விளக்குகிறார். மெத்தா பதிப்பகம் அசோகரின் சாசனங்களைத் தனி நூலாகத் தமிழில் வெளியிட வேண்டும் என கிருஷ்ணன் அவர்களைக் கோருகிறேன்.

அரசுருவாக்கம் குறித்து இந்து மதம் விரிக்கும் இந்தக் கதையின் மையமாக இருப்பது அரசனின் தெய்வாம்சப் பண்பு மட்டுமல்ல, போர் மூலமாகவே இங்கு நீதியை / தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்பதுந்தான். ஆனால் பவுத்தத்தில் போருக்கே இடமில்லை. தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற எனச் சொல்லி பிற நாட்டு மக்களை அழிப்பதைத் தர்மமாக்கும் இந்துத்துவ அணுகல்முறைக்கு பவுத்தத்தில் இடமில்லை. கோலியர்களுக்கும் சாக்கியர்களுக்கும் நிகழ இருந்த ஒரு போருக்கு எதிராகத்தான் புத்தர் உலகைத் துறந்தார் என்பதை அண்ணல் அம்பேத்கர் தனது ஆய்வுகளின் ஊடாகக் கவித்துவம் ததும்ப வெளிப்படுத்துவது கற்கத் தக்கது. அப்போது புத்தர் உதிர்த்த போருக்கு எதிரான கவிதை நிகர்த்த சொற்களைச் சுருக்கம் கருதி இங்கே தவிர்க்கிறேன்.

புத்தர் ‘நிகித சத்தர்’, ‘நிகித தண்டர்’, அவர் ஆயுதங்களைத் துறந்தவர். எப்போதும் ஆயுதங்களுடனேயே காட்சி அளிக்கும் இந்துக் கடவுளர்க்கும் கருணையின் வடிவமாகத் தோன்றும் புத்தபகவனுக்கும் என்ன தொடர்பு?

இந்துத்துவம் முன்வைக்கும் “தர்மயுத்தம்” எனும் கருத்தாக்கம் போல அபத்தம் ஏதுமில்லை. யுத்தங்கள் எதுவும், அவற்றை யார் நடத்தியபோதும் அவை தர்மமாக இருக்கச் சாத்தியமே இல்லை. மகாபாரதத்தை ஆழமாக ஆய்வு செய்வதன் ஊடாக கிருஷ்ணன் அவர்கள் இதை விரிவாக விளக்குகிறார். இந்த நூலின் மிகச் சிறப்பான பகுதியாக இது அமைகிறது. முழுக்க முழுக்க அதர்மங்களை தர்மத்தின் பெயரால் நியாயமாக்கும் முயற்சிதான் இந்துப் புராண உருவாக்கங்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைக்கிறது நூலின் இப்பகுதி.

மகாபாரதத்திற்கு ‘கிருஷ்ணாவதாரம்’, ‘பாண்டவர் கதை’, ‘இதிகாசம் ‘ என்கிற பெயர்களோடு ‘தர்மசாஸ்திரம்’ என்றொரு பெயரும் உண்டு. அது தர்மத்தைப் பற்றிப் பேசும் நூல் என்று கூறிக் கொண்டாலும் எங்கும் அது தர்மத்தை இதுதான் என வரையறுப்பதில்லை. திருதராஷ்டிரன் ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை எழுப்புவான். ஆனால் பதில் சொல்வதில்லை. பதிலுக்காகக் காத்திருப்பதும் இல்லை. எல்லா வன்முறைகளும், ஏமாற்றுகளும், சூதுகளும் ‘தர்மம்’ என்பதாகவே அந்த மகாகாவியம் முழுமையிலும் நியாயப்படுத்தப்படும். “தர்மம் சூஷ்மம் ஆனது” என்கிற சொற்களின் ஊடாக திரௌபதியும் மற்றவர்களும் முன் வைக்கும் கேள்விகள் கடந்து செல்லப்படும்.

பகவத் கீதை என்பது மகாபாரதத்தின் அங்கமல்ல. அது ஒரு பிற்கால இடைச் செருகல்.

இந்து மதமாக இன்று அறியப்படுவது, பவுத்தம் தோன்றுவதற்கு முன் தர்மம் பற்றிக் கவலைப்பட்ட தில்லை. அதைப் பேசியதுமில்லை.ஆனால் புத்த பகவனோ தன் மதத்தையே “தம்மம்” (‘தர்மம்’ என்பதன் பாலி மொழி வடிவம்) என அழைத்தவர்.

மேலை எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பலரும் ‘தர்மம்’ எனும் சொல்லை ‘மதம்’ (religion) எனும் பொருளில் கையாள்வதைக் காணலாம். இது தவறு பவுத்தம் எந்நாளும் தன்னை ‘மதம்’ என அழைத்துக் கொண்டதில்லை. ‘புத்திசம்’ எனும் தற்காலச் சொல்லுக்கு இணையான சொல் பாலியிலோ சிங்களத்திலோ கிடையாது என்பார் கணநாத் ஒபயசேகர. ‘புத்தாகம’ எனும் சிங்களச் சொல்லுக்கு புத்தனை நோக்கி வருதல், நெருங்குதல் என்று மட்டுமே பொருள். பவுத்தம் ஒரு ‘மஜ்ஜிம பதிபாதம்’ – நடுநிலைப் பாதை. ஆம் புத்த பகவன் காட்டியது ஒரு பாதை. தம்ம நெறிப்பட வாழும் பாதை. புத்த பகவன் அவதாரமோ இல்லை கடவுளின் புத்திரனோ அன்று. அவர் தன் சொந்த முயற்சியால் ‘விழிப்படைந்தவர்’. அவர் ஒரு ‘ததாகதர்’. வழிப்போக்கர். “இவ்வழியே வந்தவர். இப்படியே போனவர்”. எதிர்ப்பட்ட யாருக்கும், அங்குலிமாலன் போன்ற கொடிய கொலைகாரர்களுக்கும், தம்மம் உரைத்து நல்வழிப் படுத்தியவர். பவுத்தம் தன்னை தம்மம் என்பதாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டது.

பவுத்தத்தின் ஊடாக தம்மம் ஒரு மிகப் பெரிய பேசு பொருளாக ஆக்கப்பட்ட சூழலில் இந்து மதமும் தர்மம் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயிற்று என்றேன். கிமு 3ம் நூ லிருந்து கிமு 1ம் நூற்றாண்டுக்குள் ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் எழுதப்பட்டுவிட்டன. எடுத்துக்காட்டு மனு தர்மம்.

இந்து மதம் தன்னை ‘மதம்’ என அழைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினாலும் அது முன்வைக்கும் ‘தர்மம்’ எனும் கருத்தாக்கம் இந்தப் பொருளுடன் பொருந்தாது.. பவுத்தம் ‘தம்மம்’ எனச் சொல்லும்போது அது அனைத்து மக்களும் கடைபிடித்து ஒழுக வேண்டிய நெறி. இந்துமதம் பவுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி தர்மம் பற்றிப் பேச நேர்ந்தாலும் அது தர்மம் என்பதற்குக் கொண்ட பொருள் முற்றிலும் வேறுபட்டது. இங்கே அனைத்து மக்களுக்குமான தர்மம் என ஒன்றில்லை. இங்கே ‘தர்மம்’ என்பதன் பொருள் ‘கடமை’ (duty) என்பதுதான். ஒவ்வொரு உயிருக்கும் ஆற்ற வேண்டிய தருமம் ஒன்று உண்டு. ஆனால் இது அனைத்து உயிர்களுக்கும் ஒரே மாதிரியானது அல்ல. இந்தக் கடமை ‘வருணம்’ அல்லது ’சாதி’க்குத் தக வேறுபடும்.

ஆனால் பவுத்தத்தில் அனைத்து மக்களுக்கும் தம்மம் ஒன்றே. அது அன்பு செய்வது, கருணையால் உலகைத் தழுவுவது, வன்முறையற்ற வழிமுறை ஒன்றை மட்டுமே வாழ்முறையாகச் சொல்வது. இந்து மதத்திலோ “தர்மங்கள்” தான் உண்டே ஒழிய ‘தர்மம்’ இல்லை.

பவுத்தம் தம்மத்தை வரையறுத்ததுபோல இந்து மதம் ரத்தினச் சுருக்கமாக தர்மத்தை வரையறுக்க இயலாது. அதனால்தான் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தால் சொல்ல முடிந்தது அவரவர் வருணக் கடமையை அவரவர் செய்வதுதான் தர்மம் என்பதை மட்டுமே.

இந்து மதத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து தர்ம சாஸ்திரங்கள் என்பன இன்னொரு பக்கம் தண்டனை இயல் (penology) தொடர்பான சட்ட நூல்களாகவும் உள்ளன. இன்றைய ‘இந்திய தண்டனைச் சட்டம்’, குற்ற நடைமுறைச் சட்டம்’ முதலான எண்ணற்ற சட்டத் தொகுப்புகளின் நோக்கம் சமூகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது. சட்ட ஒழுங்கு குலையும்போது அதற்குக் காரணமானவர்களுக்கு இன்னின்ன குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனை என அவை வரையறுக்கின்றன.

மனு தர்ம சாஸ்திரமும் ஒரு தண்டனை இயல் நூல்தான் என்பது மனங்கொள்ளத் தக்கது. அது மிக விரிவாகக் குற்றங்களையும், அவற்றுக்கான தண்டனைகளையும் வரையறுக்கிறது. ஆனால் அதன் நோக்கம் சட்ட ஒழுங்கைக் காப்பது அல்ல. மாறாக வருண ஒழுங்கைக் காப்பதையே அது பிரதான நோக்காகக் கொண்டுள்ளது. எனவேதான் அது ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு வருணத்தவர்க்கு வெவ்வேறு தண்டனைகளைச் சொல்கிறது. வேள்வியைக் கலைப்பது, குருவின் மனைவியைப் புணர்வது முதலானவை மரண தண்டனைக்குரிய கொடிய குற்றங்களாக வரையறுக்கப்படுவதும் இதே நோக்கில்தான். ஆம், தண்டனைகளை மட்டுமன்று, குற்றங்களையும் வருண அடிப்படையில் வரையறுகிறது இந்து தர்மம் (பார்க்க: டாக்டர் பாலகோபாலின் ‘கருத்தாயுதம்’ நூல்).மனுவின் நூலுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒரு பக்கம் அது “மனுதர்மம்”. இன்னொரு பக்கம் அது “மனு நீதி”.

சுருங்கச் சொல்வதானால் இந்துமதத்தின் அடிப்படை வருணம், சாதி, தீண்டாமை என பேதங்களைக் கற்பிப்பதே. பேதங்களும், பேதங்களின் அடிப்படையிலான வெறுப்புகளும், தீண்டாமையுமே இந்து மதம். பவுத்தம் இதற்கு முற்றிலும் எதிரானது. அது கருணையால் உலகைத் தழுவுவது. அதில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. அதுவே அதன் தம்மம். அதில் ‘அந்நியர்’ ‘கீழோர்’, ‘மேலோர்’ ‘தர்ம யுத்தம்’ என்பதற்கெல்லாம் இடமில்லை. “போரல்ல, சமாதானமே’ எனச் சொன்ன ஒரே காரணத்திற்காக மாமன்னர் அசோகரை இந்தியாவை பலவீனமாக்கியவர் என வசைபாடுபவர்கள் இந்துத்துவவாதிகள்.

இந்துத்துவத்திற்கும் தம்மத்துவத்திற்கும் உள்ள இந்த வேறுபாடுகளின் அடியாகவே அண்ணல் அம்பேத்கர் “நான் பிறக்கும்போது இந்துவாக இருந்தேன். இறக்கும்போது அப்படிச் சாகேன்” எனச் சொல்லி பவுத்த நெறியைத் தழுவினார். அவரைப் போய் மனுதர்ம ஆட்சி குறித்துப் பேசுகிற இந்துத்துவவாதிகளில் ஒருவராக நிறுத்தும்  கயமையை என்ன சொல்வது.

தம்மத்துவத்துக்கு எதிராக இந்துத்துவம் மேற்கொண்ட ஒரு நீண்ட யுத்தத்தின் ஒரு அங்கம்தான் அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவவாதி எனச் சொல்லி அணைத்துக் கொள்ளும் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம். இந்துத்துவத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனமும் ஒரு தர்மமாக ஏற்கப்பட்டதுதானே.

 

அ.மார்க்ஸ்,

சென்னை, ஜூன் 27, 2016.

 

 

கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல் மயப்பட வேண்டும்? 

கிறிஸ்தவப் பொது நிலையினர் அரசியல் மயப்பட வேண்டிய  உடனடி அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதைத்தான் இத்தகைய கருத்தரங்கு ஒன்று இங்கு கூட்டப்பட்டிருப்பது காட்டுகிறது. கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுவது, கன்னியர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஆகியன அப்படி ஒன்றும் புதிதில்லை என்றாலும் இன்றைய சூழல் சற்று வித்தியாசமனது.

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் ஊடாக இன்று ஏற்பட்டுள்ளது ஒரு வெறும் ஆட்சி மாற்றமல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (UPA) அரசு போய் பா.ஜ.க தலைமையில் உள்ள ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’(NDA) அரசு நிறுவப்பட்டுள்ளது என்கிற அளவில் இதைப் பார்த்துவிட முடியாது. இன்று ஏற்பட்டுள்ளது ஒரு பண்பு மாற்றம். ஒரு regime change.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆட்சி மீது பல விமர்சனங்கள் நமக்கு உண்டு. ஊழல், அமெரிக்க ஆதரவு, கார்ப்பொரேட்களுக்கு அபரிமிதமான சலுகைகள், ஈழப் பிரச்சினையில் ராஜபக்‌ஷே அரசுக்கு உதவி என நிறையச் சொல்லலாம். ஆனால் இவை அனைத்திலும் பா.ஜ.க அரசு காங்கிரஸ் அரசைக்காட்டிலும் பல மடங்கு அதிகமாக அதே திசையில் செல்வதை இந்தப் பத்து மாத காலத்திலேயே  நாம் கண்டு விட்டோம்.

இவை தவிர பா.ஜ.க விற்கும் காங்கிரசுக்கும் கூடுதலாகக் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகள் உள்ளன என்பதுதான் இப்போது ஏற்பட்டுள்ளதை ஒரு பண்பு மாற்றமாக ஆக்குகிறது. இவை மிக முக்கியமானவை மட்டுமல்ல மிக மிக மிக ஆபத்தானவை. சொல்லப் போனால் காங்கிரசிலிருந்து பா.ஜ.க வேறுபடும் புள்ளிகள் என்பதைக் காட்டிலும், பா.ஜ.க இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கட்சிகளிலிருந்து வேறுபடும் ஆபத்தான புள்ளிகள் எனவும் இதைச் சொல்லலாம். அவை:

  1. காங்கிரஸ் கட்சிக்கும் இதர மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் நோக்கம் கிடையாது. நமது அரசியல் சட்டத்தில் சில குறைபாடுகள் உண்டு. எனினும் உலக அளவில் பல ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது பல வரவேற்கத்தக்க கூறுகள் இதில் உண்டு. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (UDHR) வெளியிடப்பட்ட (1948) பின் உருவான அரசியல் சட்டம் என்கிற வகையில் அதன் பல கூறுகள் நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஆக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளாக உள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்துத்துவ சக்திகள் ஏற்பதில்லை. அதனாலேயே இந்த அரசியல் சட்டத்தை அவை மதிப்பதில்லை. சென்ற முறை பா.ஜ.க தலைமியிலான அரசு அமைந்தபோது நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவது குறித்த பரிந்துரைகளைச் செய்ய குழு ஒன்றை நியமித்தது நினைவிருக்கலாம். இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அரசியல் சட்டத்தின் முகப்புரையில் அமைந்துள்ள சோஷலிசம், மதசார்பின்மை முதலான சொற்களை நீக்கி அவர்கள் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்தது நினைவிருக்கலாம். நிச்சயமாக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் கவிழ்க்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான திட்டம் ஏதும் கிடையாது.
  2. காங்கிரஸ் ஆட்சியின் வன்முறை என்பது அரச வன்முறை மட்டுமே. தண்டகாரண்யம் மற்றும் காஷ்மீர் முதலான பகுதிகளில் அஃப்ப்சா முதலான கருப்புச் சட்ங்களின் ஊடாகவும், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டும் போராடும் மக்கள் மீது கடும் வன்முறையைப் பிரயோகித்த அரசுதான் காங்கிரஸ் அரசும். இந்த வன்முறைகளை அதே மக்கள் மீது பிரயோகிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு எந்த வகையிலும் சளைக்காத ஒன்று பா.ஜ.க அரசு என்பதை விளக்க வேண்டியதில்லை. கூடுதலாக இது அரசு சாரா வன்முறையையும் (violence by non state actors) கைக் கொண்டுள்ளது என்பது கவனத்துக்குரியது. பஜ்ரங் தள், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி என்பன போன்ற கிட்டத்தட்ட 60 க்கும் மேலான பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்த வன்முறை அமைப்புகள் தொடர்ந்து சிறுபான்மை மதத்தவர் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது வன்முறையைப் பிரயோகித்துக் கொண்டே உள்ளன. கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி ஆயுதப் பயிற்சி, இராணுவத்தில் ஊடுருவுதல், வெடி மருந்துத் தொழிற்சாலைகளைச் செயல்படுத்துதல், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல், கிறிஸ்தவ இஸ்லாமிய தொழுகைத் தலங்களைத் தகர்த்தல் என்கிற வகைகளில் இவற்றின் வன்முறைகள் அமைகின்றன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் இந்த அரசு சாரா வன்முறைகள் என்பன அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தொடர்கின்றன என்பதுதான்.
  3. காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளைப் பின்னின்று இயக்கும் வன்முறை அமைப்பு ஏதும் இல்லை. அவை சுயேச்சையாகச் செயல்படும் அமைப்புகள். ஆனால் பா.ஜ.க இப்படி சுயேச்சையாக இயங்கும் அமைப்பு அல்ல. பா.ஜ.க மற்றும் ஏராளமான அதன் துணை அமைப்புகள் மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஆர்.எஸ்.எஸ்சால் பின்னின்று இயக்கப்படுகின்றன. இந்து ராஷ்டிரம் ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பு வெளிப்படையாக ஆயுதப் பயிற்சிகளைச் செய்யத் தயங்காதது என்பதும் குறைந்த பட்சம் இருமுறை பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளில்தான்  இப்போது ஏற்பட்டுள்ளது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல என்கிறோம். இது பாசிசத்தை நோக்கிய ஒரு பண்பு மாற்றம்.

சென்ற சில மாதங்களுக்கு முன்னர் Frontline இதழ் நேருவின் 125வது பிறந்த நாளை ஒட்டிச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. இந்துத்துவ சக்திகளால் காந்தி அடிகளுக்கு அடுத்தபடியாக மிகக் கடுமையாக வெறுக்கப்படுபவர் நேரு. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசுக்கான அடித்தளத்தை இட்ட அவரது 125வது பிறந்த நாளை பா.ஜ.க  உரிய மரியாதைகளுடன் கொண்டாடாமல் அடக்கி வாசிக்கும் சூழலில் வெளிவந்த அந்த ஃப்ரன்ட்லைன் இதழ் நேரு குறித்துச் சிறந்த ஆய்வறிஞர்கள் எழுதிய கட்டுரைகளுடன் மிளிர்ந்தது. அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கட்டுரைகள் பெறப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிடும் ‘பாஞ்சஜன்யம்’ இதழின் முன்னாள் ஆசிரியரும், தற்போது பா.ஜ.கவின் மாநிலங்கள் அவை உறுப்பினருமான தாருண் விஜய் அவர்களில் ஒருவர்.

பா.ஜ.க ஆளுகையின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை மிக மிக முக்கியமான ஒன்று. நேருவின் ஆளுகையைத் தான் ஏன் வெறுக்கிறேன் என்பதற்கு அவர் குறைந்த பட்சம் ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறார். நேருவை அவர்கள் வெறுப்பதற்கான மிக முக்கியமான காரணம் அவரிடம் வெளிப்பட்ட மதச்சார்பின்மை என்பதை உலகறியும் அது தவிர அவர்கள் நேருவை வெறுப்பதற்கான இதர காரணங்களாக அவர் சொல்வன:

  1. இந்தியப் பொருளாதாரத்தை முழுக்க முழுக்க கார்பொரேட்களின் கையில் உள்ள சந்தையின் கட்டுப்பாட்டிற்குள் விடாமல், அரசுக் கட்டுப்பாடு உள்ள திட்டமிட்ட பொருளாதாரமாக அமைக்க நேரு அடித்தளமிட்டார். சோவியத் மாதிரியில் அமைந்த ஐந்தாண்டுத் திட்டங்கள், திட்ட ஆணையம் (Planning Commission) ஒன்றை அமைத்து அதன் மூலமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்.
  2. அயலுறவில் ‘அணி சேராக் கொள்கை’யை அவர் கட்டமைத்தார். அவர் தலைமை ஏற்ற Non Alignment Movement (NAM) இதற்கொரு எடுத்துக்காட்டு.
  3. அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளில் அவர் உறுதியான முடிவெடுக்காமல் அனுசரித்துப் போகும் கொள்கையை மேற்கொண்டார். ‘பஞ்ச சீலம்’ முதலான அறக் கோட்பாடுகளின் அடிப்படையில் சீனா மற்றும் இதர அண்டை நாடுகளுடன் அவர் உறவை மேற்கொண்டது ஒரு எடுத்துக்காட்டு.
  4. இராணுவ பலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்தியாவை ஒரு இராணுவ வல்லமை மிக்க நாடாக ஆக்காமல் அதைப் பலவீனமாக்கியது.

இவை தாங்கள் வெறுக்கக் கூடிய நேரு காலத்திய (Nehruvian Era) ஆளுகையின் முக்கிய கூறுகள் என்கிறார் விஜய். இந்தக் காரணங்களுகாகத்தான் இந்துத்துவவாதிகள் நேரு சகாப்தத்தையும் நேருவிய ஆளுகையயையும் எதிர்க்கிறார்களாம். இதன் மறுதலை, இதற்கு நேர் மாறாகத்தான் இந்துத்துவ ஆளுகை, அதாவது பா.ஜ.க ஆளுகை இருக்கும் என்பது.

மதச்சார்பின்மையை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களது இலட்சிய இந்து ராஷ்டிரத்திற்கு ஒவ்வாதவை என  கூடுதலாக அவர்கள் சொல்பவை அணி சேராக் கொள்கை, பஞ்ச சீலம் முதலியன. அற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கோட்பாடுகளான இவை. சமாதான சக வாழ்வை (peaceful co-existence) அடிப்படையாகக் கொண்டு நேரு உலகிற்கு அளித்த அறக் கொடைகள். அண்டை நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அகண்ட பாரத அணுகல் முறைக்காரர்களால் இவற்றை எப்படிச் சீரணிக்க இயலும்? பொகாரனில் அணு குண்டை வெடித்த கையோடு அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி “இனி அயலுறவில் அறத்திற்கு இடமில்லை. எதார்த்த அரசியலுக்கே (Real Politiq) இனி இடம்” எனச் சொன்னது நினைவிருக்கலாம்.

ஏதோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். இன்னொரு பக்கம் அவர்கள் இவற்றைச் சாத்தியமான அளவிற்கெல்லாம் நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எந்தப் பெரிய விவாதங்களுக்கும் இடம் கொடாமல் அவர்கள் செய்துள்ள சில:

  1. நேரு அமைத்த திட்ட ஆணையத்தைக் கலைத்தது.
  2. மதக் கலவரங்களைத் தடுப்பதெற்கென நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட ‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை’ (National Integration Council) கலைத்தது.
  3. நீதிபதிகள் தேர்வில் அரசுத் தலையீடு கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட collegium முறையைக் கலைத்தது.

இவை சில எடுத்துக்காட்டுகள். இந்த நிறுவனங்களில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவை உன்னத நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. குறைபாடுகளை நீக்கி முறையாகச் செயல்படுத்தாமல் அவற்றை ஊற்றி மூடுவதன் பின்னணியில் அவர்களின் உள் நோக்கம் உள்ளது. ராஜீவ் காந்தி அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தபோது கூட ஏதோ ஒரு வகையில் ஓராண்டு காலம் தேசிய விவாதத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எந்த விவாதமும் இன்றி இன்று இவை கலைக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் மேற்கொண்ட வேறு சில அணுகல் முறைகளையும் கவனியுங்கள். பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோது இறுதி வரை நரேந்திர மோடி அரசு அந்தக் குண்டு வீச்சைக் கண்டிக்க மறுத்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வற்புறுத்தியும் இந்த நிலையை அது கைவிடவில்லை. பாரம்பரியமான இந்திய அரசின் அயலுறவு அணுகல் முறைகள் குப்பையில் எறியப்பட்டன. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தததில் அமெரிக்க விசுவாசியான மன்மோகன் சிங் அரசு கூடக் காட்ட மறுத்த சலுகைகளை மோடி அரசு காட்டியுள்ளது. மன்மோகன் அரசும் கார்பொரேட் ஆதரவு அரசுதான். ஆனால் அது நிறைவேற்றிய ‘நிலப் பறிப்புச் சட்டத்தை’ அது கார்பொரேட் நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக இன்று முறியடிக்கத் துடித்து நிற்கிறது மோடி அரசு.

2015 – 16ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அது கார்பொரேட் வரியைக் குறைத்துள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம், எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான திட்டங்கள் எல்லாவற்றிற்குமான நிதி ஒடுக்கீட்டைச் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைத்துள்ள பா.ஜ.க அரசு இராணுவ ஒதுக்கீட்டை மட்டும் 10 சதம் அதிகரித்துள்ளது.

இப்படி நிறையச் சொல்லலாம். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.  2002 ல் அன்றைய பா.ஜ.க பிரதமர் வாஜ்பேயி அமெரிக்கா சென்றபோது ‘கடல் கடந்த பா.ஜ.க நண்பர்கள்’ (Overseas Friends of BJP) எனும் அமைப்பு ஸ்லேடன் தீவில் அவருக்கு விருந்தொன்று அளித்தது. அப்போது அவர், “இப்போது நமக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. கூட்டணி ஆட்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும். அப்போது நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்” எனப் பேசியது குறிப்பிடத் தக்கது.

இப்போது அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டது. எதிர் காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைக்கலாம். அப்போது அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உங்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.

2.

இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அவர்களின் அணுகல் முறைகளை நான் விரிவாகப் பேசவில்லை. அவற்றை நாம் எல்லோரும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால். ICHR போன்ற உயர் வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் சநாதனமான கருத்துக்களைத் தாங்கியுள்ள, கல்வித்துறைச் சாதனைகள் ஏதுமற்ற இந்துத்துவவாதிகளை நியமித்தது, ‘கர் வாபசி’ என்கிற பெயரில் வெளிப்படையாகக் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களிலிருந்து இந்து மதத்திற்குக் கட்டாய மதமாற்றம் செய்தது, தலைநகர் டெல்லியிலேயே கிறிஸ்தவ ஆலயங்களும் திருலோக்புரி முஸ்லிம்களும் தாக்கப்பட்டது, கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை கிடையாது எனக் கூறியது, புனித ரமலான் நாளில் வழமையாக அளிக்கப்பட்டு வரும் அரசு விருந்துகளை நிறுத்தியது, மாட்டுக் கறி உண்பதைக் குற்றமாக்கியது…. இப்படி நிறையச் சொல்லலாம்.ஆட்சிக்கு வந்த இந்தச் சில மாதங்களில் இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மீது 800 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று சிறுபான்மையினர் மத்தியில் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.

3.

இந்தக் ‘கர் வாபசி’ குறித்து ஒரு சொல்.

நமது அரசியல் சட்டத்தில் உள்ள முற்போக்கான சில கூறுகளைத் தொடக்கத்தில் சிலாகித்தேன். எனினும் அன்றைய அரசியல் சட்ட அவையில் மிகுந்திருந்த வலதுசாரி சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிராகச் சில ஆபத்தான கூறுகளைப் புகுத்தத்தான் செய்தனர்.

பேச்சுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட எல்லா அடிப்படை உரிமைகளையும் நிபந்தனை இன்றி வரையறுத்துள்ள இந்திய அரசியல் சட்டம், மதத்தைக் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றைப் பொருத்த மட்டிலும், “சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வரையில்” என்கிற நிபந்தனையோடு அனுமதித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் இன்று பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மதம் மாற்றுவதால் சமூக அமைதி குலைகிறது எனச் சொல்லி இச்சட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற்றுவது, அது மத மாற்றமே இல்லை. “தாய் மதத்திற்குத் திரும்புதல்”  எனச் சொல்லிக் குற்றமற்றதாக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இதற்கு வழி இல்லாவிட்டாலும் நடைமுறையில் இது அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதே போல தலித் (SC) பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும் ஒதுக்கீட்டை மறுப்பதற்கு அரசியல் சட்டம் வழி வகுக்கிறது. இதன் விளைவாக இன்று பெரிய அளவில் கிறிஸ்தவ தலித்கள் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பதற்கெனவே ஆண்டு தோறும் இந்து மதத்திற்கு மாறுகின்ரனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட சில மடங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பல ஆயிரம் பேர்களை “மதம் மாற்றி” தாய் மதம் திருபிவிட்டதாகவும், இனி அவர்கள் இந்துக்கள் எனவும் சான்றளிக்கின்றன. இவற்றை அரசுகளும் ஏற்கின்றன.

அதே போல மாநில அளவில் சிறுபான்மை மக்களுக்கு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையைக் கருதி இட ஒதுக்கீடு அளிப்பதிலும் அரசியல் சட்ட வாசகங்கள் தெளிவின்றி உள்ளதைப் பயன்படுத்தி இன்று அவை எதிர்க்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் அவற்றை ஏற்கின்றன.

இவை அரசியல் சட்டத்திலேயே சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள்.

4.

காங்கிரஸ் ஆட்சியில், பல ஆண்டுகள் விவாதங்களுக்குப் பின், வரைவாக்கப்பட்ட ‘மதக் கலவரத் தடுப்புச் சட்டம்’ (Prevention of Communal Violence Act) பா.ஜ.கவின் கடும் எதிர்ப்பால் நிறைவேற்றப்படவில்லை. பல நல்ல கூறுகளைக் கொண்டுள்ள இச் சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசும் முனைப்புக் காட்டவில்லை.

சிறுபான்மையினரது முன்னேற்றத்திற்கென பல நியாயமான பரிந்துரைகளைச் செய்துள்ள ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது.

சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்த பரிந்துரைகளைச் செய்துள்ள சச்சார் அறிக்கை முன்வைக்கும் “சம வாய்ப்பு ஆணையம் “ (Equal Opportunity Commission) அமைத்தல், அனைத்துத் துறைகளும் ஆண்டுதோறும் “பன்மைக் குறியெண்”களை (Diversity Index) வெளியிடலைக் கட்டாயமாக்குதல் முதலியன அனைத்துச் சிறுபான்மையினருக்கும், தலித் முதலான புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய பரிந்துரைகள்.. இவை குறித்தும் இன்று கேட்க நாதியில்லை.

5.

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை சதத்திற்கும் குறைவு. முன்னூறு ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்கும், சுமார் 500 ஆண்டுகால மிஷனரி நடவடிக்கைகளுக்குப் பின்னும் இதுதான் நிலை. இந்த இரண்டரை சதக் கிறிஸ்தவர்களுங் கூட தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலுமே செறிந்துள்ளனர்.

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள்  சுமார் ஆறு சதம் உள்ளனர்.  முஸ்லிம்களைக் காட்டிலும் இது சற்று அதிகம். இரு சமூகங்களுமே இன்று வளர்ந்து வரும் வலதுசாரி பாசிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும், இயக்க ரீதியிலும் திரண்டுள்ள அளவிற்கு கிறிஸ்தவர்கள் திரளவில்லை.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் அணி திரண்டிருப்பதால் அவர்களுக்கு இன்று அரசியல் அரங்கில் அங்கீகாரம் உள்ளது, மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு அது இல்லை. முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளத்துடன் கூடிய கட்சிகளின் சார்பாகத் தேர்தலில் பங்கேற்கிறார்கள். தேர்தல் கூட்டணிகளில் இடம் பெறுகின்றனர். முக்கிய அரசியல் கட்சிகளுடன் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்துப் பேரம் பேசுகின்றனர். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இணைக்க வேண்டி உள்ளது.

ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் அரங்கில் அந்த ஏற்பு இல்லை. காரணம் நீங்கள் அரசியல்மயப் (politicize) படவில்லை என்பதுதான்.

கிறிஸ்தவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றவர் ஏசு கிறிஸ்து. இன்றளவும் விடுதலை இறையியல் முதலான கிறிஸ்தவத்தின் அரசியல் ஈடுபாடு என்பது அங்கிருந்துதான் முகிழ்க்கிறது. நான் சொல்ல வருவது இன்றைய இந்திய அரசியல் நிலையை மனதிற் கொண்டு.

1938ல் சோலாபூரில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒரு குழுமமாக வந்து அவரைச் சந்தித்துத் தங்களுக்கு அறிவுரை கோரி நின்றனர். அவர்களுக்கு அண்ணல் சொன்ன அறிவுரை, “நீங்கள் அரசியல் மயப்பட வேண்டும்” என்பதே. “தலித்கள் நாங்கள் மாகாண சபையில் 15 உறுப்பினர்கள் உள்ளோம். ஆனால் கிறிஸ்தவர்கள் நீங்கள் ஒரு பிரதிநிதி கூட இல்லை.எங்கள் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அரசு விடுதிகள் உள்ளன.  உங்களுக்கு அதெல்லாம் இல்லை. உங்களில் பலர் படித்துள்ளீர்கள். நல்ல வேலைகளில் உள்ளீர்கள். ஆனால் உங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  நீங்கள் அரசியலை அலட்சியம் செய்வதன் விளைவு இது” என்றார்.

(“Your society is educated. Hundreds of boys and girls are matric. These people have not agitated against this injustice unlike the uneducated untouchables. If any girl becomes a nurse or any boy becomes a teacher they are involved in their own affairs, they do not get involved in public affairs. Even clerks and officers are busy in their work, he ignores the social injustice. Your society is so much educated, how many are District judges or magistrates? I tell you, this is because of your neglect towards politics,because there in nobody to talk of and fight for your rights. …” )

அவர் சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளது.

தமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது?

எனக்குத் தோன்றுகிற சில காரணங்களை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.

1.கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாதிற்கும் வரலாற்று ரீதியாக ஒரு வேறுபாடு உண்டு. கிறிஸ்து அநீதிகளுக்கு எதிராக நின்றார், அதற்காக அவர் துன்பங்களை ஏற்றார். ‘என் தேவனே, என் தேவனே, என்னைக் கைவிட்டீரே’ என மனம் வெதும்பிச் சிலுவையில் மாண்டார். கிறிஸ்துவிற்குப் பின்னர் அடுத்த 300 ஆண்டுகள் கிறிஸ்தவம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட (persecuted) மதமாகத்தான் இருந்தது. ஆனால் இஸ்லாத்தின் வரலாறு வித்தியாசமானது. இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு இறை வாக்குகள் வரத் தொடங்கிய காலத்தில் அவரும் துன்புறுத்தப்பட்டார். அவர் மக்காவிலிருந்து புலம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் விரைவில் அந்த நிலையை மாற்றியமைத்தார். அவரது எஞ்சிய காலம் வெற்றிகளில் கழிந்தது. அவருக்குப் பின் இஸ்லாம் ஏற்றத்தில் இருந்தது. வெற்றிகளைக் குவித்தது. நபிகள் குறித்து ஆய்வு செய்வோர் அனைவரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமல்ல. ஒரு Statesmen கூட. இஸ்லாத்திற்கு ஒரு political poject உண்டு. அது இறப்பிற்குப் பிந்திய இறுதித் தீர்ப்பு என்பதோடு தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த உலகிலேயே நீதியை நிலைநாட்டும் பொறுப்பையும் அது முன் வைத்தது.

கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக மாறியபோதிலும் அதன் உருவாக்கம் அப்படியாக இல்லை. அது மூன்றாம் உலக நாடுகளில் “விடுதலை இறையியலாக”(Liberation Theology)  வடிவெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றது என்பதும் அதன் தொடக்க காலப் பாடுகளிலிருந்து பெற்ற உத்வேகந்தான். தமிழகத்திலும் கூட தலித் இயக்கங்களின் உருவாக்கத்தில் கத்தோலிக்க மதமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது. எனினும்கூட அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலவில்லை.

2.தமிழகத்தில் முஸ்லிம்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. ஆம் கிறிஸ்தவர்கள் இல்லை. இங்கே கிறிஸ்தவ உடையார்கள் உண்டு; கிறிஸ்தவ வன்னியர்கள் உண்டு: கிறிஸ்தவப் பிள்ளைமார்கள் உண்டு; கிறிஸ்தவ நாடார்கள் உண்டு; கிறிஸ்தவ மீனவர்கள் உண்டு; கிறிஸ்தவ தலித்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. இதன் விளைவு முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்கிற அடையாளத்தில் இணைவது போல இங்கே கிறிஸ்தவர்கள் இணைய முடியவில்லை.

3.கிறிஸ்தவத் திருச்சபைகள் மிக வலுவான படிநிலைப் படுத்தப்பட்ட ஒரு கார்பொரேட் வடிவம் எடுத்துள்ளன. மத நிறுவனமே இங்கு கிறிஸ்தவ அடையாளத்தைப் பேணும், காப்பாற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. “மேய்ப்பன் (ஆயர்) / ஆடுகள்” எனும் கிறிஸ்தவ மத உருவகம் ஒன்றே போதும் இந்நிலையை விளக்க. எனவே கிறிஸ்தவ மக்களின் நல்லது கெட்டதுகளை எதிர்கொள்வதற்கு திருச்சபை ஒன்றே போதும் என்கிற நிலை வந்து விடுகிறது. ஆனால் திருச்சபைகள், அவை ஒரு மத நிறுவனங்கள் என்கிற வகையில் பல்வேறு நிலைகளில் அரசுடன் சமரசம் மேற்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. கூடங்குளம் இதற்கொரு நல்ல உதாரணம். இதன் விளைவு? கிறிஸ்தவப் பொது நிலையினரிடம் (laity) அரசியல் முனைப்பு (political initiative) இருப்பதில்லை.

முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது இங்கே கிறிஸ்தவர்கள் மத்தியில் அரசியல் முனைப்பு மழுங்கிக் காணப்படுவதன் பின்னணியாக எனக்குப் படுபவை இவை. மட்டற்ற மனித நேயமும், சேவை மனமும், விடுதலைப் போராட்டங்களில் அர்ப்பணிப்பும் காட்டும் கிறிஸ்தவம் தன்னளவில் தனக்கான ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலாத நிலை உள்ளதற்கு  இவை முக்கிய காரணங்களாக உள்ளன.

கிறிஸ்துமஸ் தினம் கூட கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். பாதிரிமார்கள் உயிருடன் எரிக்கப்படக் கூடிய, கன்னியர்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய, கிறிஸ்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்படக் கூடிய கால கட்டம் இது. தலித்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலை, மதமாற்றத் தடைச் சட்டங்களின் ஊடாக மத உரிமைகள் பரிக்கப்படும் நிலை ஆகியவற்றிற்கு நமது அரசியல் சட்டத்திலேயே வழிவகுக்கப்பட்டுள்ள அபத்தம்.

இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி முஸ்லிம்களைப் போல கிறிஸ்தவர்களும் அரசியல் மயப்பட வேண்டும். உங்கள் பிரச்சினைகளை இப்படி அறைக்குள் இருந்து கருத்தரங்குகள் நடத்திக் கொண்டிருப்பதன் மூலம் தீர்த்துவிட இயலாது. வீதியில் இறங்க வேண்டும். வீதிக்கு வரும்போது மட்டுமே உங்கள் பிரச்சினை ஊடக கவனம் பெறும். தொலைக் காட்சிகளில் விவாதப் பொருளாகும். அரசையும் அரசியல் கட்சிகளையும்  உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். வலுவான அரசியல் சக்தியாக உருப்பெறுங்கள். சுயேச்சையாகச் செயல்படுங்கள். ஒவ்வொன்றிற்கும் திருச்சபையை நம்பியிராதீர்கள். உங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்குங்கள். இடதுசாரிகள், பிற சிறுபான்மையினர், தலித்கள், மதச்சார்பற்ற கட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து நின்று பாசிசத்தை எதிர் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை.

 

மார்க்சியம் முன்வைக்கும் அரசியல் பொருளாதாரம்

கார்ல் மார்க்ஸ் தொடர் 6

மக்கள் களம், அக் 2017

மார்க்சியம் பொருளாதாரத்தை வெறுமனே ‘பொருளாதாரம்’ எனச் சொல்லி முடித்துக் கொள்வதில்லை. ‘அரசியல் பொருளாதாரம்’ என்றே அது சொல்கிறது. பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றையும் அது தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தே வரலாற்றில் வளர்ந்துள்ளன. முதலாளிய உற்பத்தி முறையில் உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவான வர்க்கப் போராட்டம் குறித்த பகுப்பாய்வு இதனூடாகத் தவிர்க்க இயலாததாகிறது. மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம் நூலுக்கு முன்பாக மார்க்ஸ் தொகுத்த குறிப்புகளால் ஆன Grundrisse, மார்க்சின் மூலதனம், எங்கல்சின் ‘அரசியல் பொருளாதார விமர்சன வரைவு’ (An outline of the critique of Political Economy)  முதலியன மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளாக உள்ளன. இவற்றின் அடிப்படையில் பின் வந்த சந்ததியினர் விளக்கம் அளிக்கும்போது அந்த விளக்கங்களுக்கிடையே சில நுணுக்கமான வேறுபாடுகள் அமைந்தபோதும் மார்க்சீயப் பாரம்பரியத்தில் வருகிற யாரும், சமூகம், அரசியல் மற்றும் இவற்றின் அடிப்படையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றைப் பொருளாதாரத்திலிருந்து பிரித்து அணுகுவதில்லை.statue-karl-marx-st-petersburg-russia-30768928

இந்த அணுகல்முறையின்படி ‘மூலதனம்’, ‘உழைப்பு’ ஆகிய இரண்டும் இரு எதிரெதிரான வர்க்கங்களை அடையாளப்படுத்துகின்றன. மூலதனம் என்பது உற்பத்திக்குத் தேவையான அடிப்படைகளை, “அதாவது உற்பத்திச் சாதனங்களை” (means of production) சொந்தமாக அதாவது உடமைகளாகக் கொள்வதைக் குறிக்கிறது; உழைப்பு என்பது “சுதந்திரமான கூலித் தொழிலாளிகளை” (free wage laborers)) குறிக்கிறது. ஆம், முதலாளியச் சமூகத்தில் தொழிலாளி ஒருவகையில் சுதந்திரமானவரே. உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை அவருக்குக் கிடையாது என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நிலவுடைமை அல்லது அடிமை முறைகளில் உள்ளது போல உழைப்பைச் செலுத்துபவர் முதலாளிக்கு அடிமை இல்லை. அவர் தனது உழைப்புச் சக்தியை யாரிடமும் விற்றுக்கொள்ளும் சுதந்திரம் படைத்தவர். இந்தச் சுதந்திரம் முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகளில் கிடையாது. முதலாளிய உற்பத்திமுறையில் மூலதனம் (முதல்) (capital) என்பதே எல்லாவற்றையும் இயக்குவதாக இருந்து செய்யப்பட்ட முதலீட்டிற்கு லாபத்தை உறுதி செய்கிறது. இந்த வகையில் மூலதனமாக (C) முலீடு செய்யப்படும் பணம் (M) மேலும் பணத்தை (M) ஈட்டித் தருகிறது. இதை M -> C -> M எனக் குறிப்பர்.

மார்க்சீயம் பொருளாதாரத்தைச் சமூகத்துடனும் அரசியலுடனும் இணைப்பதன் வழியாகப் பொருளாதாரச் செயல்பாட்டை பொருளாதாரத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் விரிவாக்குகிறது. இதனால் மார்க்சுக்கு முந்தியும் பிந்தியும் வந்த பொருளியல் வல்லுனர்கள் தொட இயலாத இடங்களை மார்க்சியத்தால் தொட முடிந்தது. எடுத்துக்காட்டாக நாம் இந்தத் தொடரில் முன்னர் விளக்கமாகப் பார்த்த ‘அந்நியமாதல்’ எனும் விளைவைக் குறிப்பிடலாம்.  தொழிலாளி மூலதனத்தால் சுரண்டப்படுவது மட்டுமல்ல. அவன் தனது உற்பத்திச் செயல்பாடுகளிலிருந்தே அந்நியமாகிறான். இதையெல்லாம் மார்க்சியப் பொருளாதாரத்தால் மட்டுமே விளக்க முடியும்.

தவிரவும் முதலாளிய உற்பத்தி முறை என்பது பல்வேறு வகைகளில் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம். முந்தைய உற்பத்தி முறைகள் அத்தனை எளிதாக சந்தையின் தர்க்கங்களுக்கு வசப்படுவதில்லை.  மாறாக முதலாளியம் அனைத்தையுமே விற்பனைக்கும் லாபம் சம்பாதிப்பதற்கும் உரிய “பண்டம்” (commodification) ஆக்குவதன் மூலம் சமூக உறவுகளையே சந்தையின் தர்க்கத்துக்குக்குள் கொண்டுவந்து விடுகிறது. எல்லா மானுட உறவுகளும் வாங்குதல், விற்றல், லாபம் தேடுதல் என்கிற சுழலுக்குள் உள்வாங்கப்பட்டதாய் மாறிவிடுகின்றன. எல்லாமே பரிவர்த்தனைக்குரிய வணிக உறவுகளாகி விடுகின்றன.

மார்க்சீயப் பொருளியல் இவற்றை எல்லாம் அடையாளம் கண்டு விளக்குவதோடு அமையாமல், இவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் சிந்திக்கிறது. முதலாளியத்தின் இந்தக் கூறுகளைத் தாண்டி ஒரு நீதியான சமூகத்தைக் கட்டமைப்பது குறித்தும் அது பேசுகிறது. முதலாளியத்தைத் தாண்டிய சோஷலிசச் சமூகங்களைக் கட்டமைக்கும் முயற்சிகள் பலவும் சமீப காலங்களில் தோல்வியுற்றதை அடுத்து மார்க்சீயமே தோற்றுவிட்டதாக உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சொல்லாடல்கள் 2007-2008 ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை (global credit crunch) விளக்க முடியாமல் திணறியதைப் பார்த்தோம். அதை ஒட்டி மீண்டும் மார்க்சியப் பொருளாதாரம் குறித்துக் கவனம் திரும்பியதையும் கண்டோம். அதேபோல 1990 களின் இறுதியில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் (Asian Contagion) முதலாளியப் பொருளாதாரத்தால் விளக்க இயலவில்லை. 2007-08 கடன் நெருக்கடியை ஒட்டி உலகெங்கிலும் வெளிப்பட்ட போராட்ட வடிவங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் (வால்ஸ்ட்ரீட் அமர்வு, அராபிய வசந்தம் முதலியன) ஆகியவற்றில் மேலெழுந்த முழக்கங்கள் மார்க்சீயக் கோட்பாடுகளைச் சார்ந்து அமைந்ததும் கவனத்துக்குரியது.

அரசியல் பொருளாதாரம் என்பது பண்டங்கள், தேவை, விநியோகம், விலை (commodities, demand, supply, price) ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளை ஆராய்வதோடு முடிந்துவிடுவதல்ல என்கிற வகையில்தான் மார்க்சியம் முன்வவைக்கும் அரசியல் பொருளாதாரம் பிற முதலாளியப் பொருளாதாரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. முதலாளியச் சமூக உறவுகளை அது துல்லியமாக முந்தைய கால உறவுகளிலிருந்து வேறுபடுத்தி அணுகுகிறது. அந்த வகையில் அது பொருளாதாரத்தைச் சமூக உறவுகளுடன் மட்டுமின்றி வரலாற்றுடனும் பொருத்தி அணுகுகிறது.

இதன் பொருள் மார்க்ஸ் திடீரென முளைத்து எல்லாவற்றையும் புதிதாகச் சொன்னார் என்பதல்ல. முதலாளியம் மேலெழுந்த காலகட்டத்தில் அதை எதிர்த்து நிலவுடைமை உற்பத்தி முறைக்கு ஆதரவாகப் பழைய தலைமுறையினர் முதலாளிய மாற்றங்களை எதிர்த்தனர். நிலவுடமையுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டு ரீதியில் முற்போக்கான முதலாளிய முறைக்கு ஆதரவாக அந்தப் புதிய பொருளாதார மாற்றங்களை ஆதரித்து எழுதிய செவ்வியல் பொருளியல் அறிஞர்களான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ ஆகியோரின் பங்களிப்புகளிலிருந்தே முதலாளியப் பொருளாதாரத்தின் மீதான தன் விமர்சனத்தை மார்க்ஸ் தொடங்கினார்.

இந்தச் செவ்வியல் பொருளாதார அறிஞர்கள் உருவாக்கிய உழைப்புக் கோட்பாடு (labour theory), முதலாளிய அமைப்பின் மையமாக விளங்கும் லாபத் தேட்டம் என்பதன் ஆதாரம் தொழிலாளிகளின் உழைப்புதான் என்பதைச் சுட்டிக் காட்டியது. உற்பத்திப் பொருள்களின் மதிப்பின் (value) பின்புலமாக தொழிலாளியின் உழைப்பு அமைந்ததை அது ஏற்றுக் கொண்டது. சந்தையில் விற்க உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பு என்பது அதற்கான உழைப்பு மேற்கொள்ளப்படும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது என்கிற அளவிற்கு ஸ்மித்தும் ரிக்கார்டோவும் கருத்துக்களை முன்வைத்தனர்.. பொருட்களை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பு நேரத்தின் அடிப்படையிலேயே பண்டப் பரிவர்த்தனைகள் (commodity exchange) மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர்கள் கூறினர்.

எனினும் உழைப்புக்கான கூலி என்கிற அம்சத்திற்கு உரிய முக்கியத்துவத்தை  ஆடம் ஸ்மித் அளிக்கவில்லை. பொருள்களுக்கிடையேயான பரிவர்த்தனையில் சமத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான பரிவர்த்தனையின் சமத்துவம் குறித்துச் சிந்திக்கவில்லை. எனவே ‘லாபம்’ எவ்வாறு உருவாகிறது என்பதை அவரால் விளக்க முடியவில்லை இந்நிலையில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான பரிவர்த்தனை சமமாக இருந்தால் முதலாளிக்கு லாபம் எப்படிக் கிடைக்கும் என்கிற கேள்வியை ரிகார்டோ எழுப்பினார்.

19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட அதிவிரைவான தொழில்மயம், அதன் மூலம் உற்பத்தித் திறன் பெருகுதல் ஆகியவற்றின் மீது கவனம் கொண்ட ரிக்கார்டோ பொருள் உற்பத்திக்கான நேரம் குறையக் குறைய அதற்குத் தேவையான உழைப்பின் கூலியும் குறைகிறது. அதுவே முதலாளிக்கு லாபமாகச் சேர்கிறது என்றார்.marx-with-workers

அக்கால மாற்றுச் சிந்தனையாளர்கள அதை ஏற்கவில்லை.தொழிலாளர்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுகிறது என அவர்கள் முழக்கம் எழுப்பினர். தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்கான முழுப்பயனும் போய்ச் சேர வேண்டும் என்றனர். 1830 தொடங்கி ஐரோப்பாவில் இந்த அடிப்படையில் வர்க்கப் போராட்டங்கள் முகிழ்த்தன. இந்தப் பின்னணியிலேயே பொருளின் மதிப்பு குறித்த உழைப்புக் கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மேலுக்கு வந்தது. இந்தக் கோட்பாடு முதலாளியச் சுரண்டலை அப்பட்டமாக வெளிக் கொணர்ந்து விடும் என உணர்ந்த முதலாளியப் பொருளியலாளர்கள் லாபம் உருவாகுதல் குறித்த பல்வேறு அபத்தமான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். முதலாளியச் சொத்து குவிப்பு குறித்து அவர்கள் மிகவும் தவறான கருத்துக்களைச் சற்றும் வெட்கமின்றி முன்வைத்தனர். பிற்காலத்தில் தாட்சர், ரீகன் ஆகியோரின் பொருளாதார அணுகல்முறைகள் இத்தகைய தவறான கருத்துக்களின் அடிப்படைகளிலேயே அமைந்தன. அவர்களின் வாய்கள் ஆடம் ஸ்மித், ரிகார்டோ போன்ற பெயர்களை உச்சரித்தபோதும் அந்த அறிஞர்களின் நேர்மையான அணுகல் முறைக்கும் தாட்சர் – ரீகன் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.

இந்தக் கட்டத்தில்தான் (1840) மார்க்சும் ஏங்கல்சும் களத்தில் தோன்றி ஸ்மித்தும் ரிகார்டோவும் எந்த இடத்தில் விட்டார்களோ அந்த இடத்திலிருந்து மதிப்பு குறித்த உழைப்புக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர்.

லாபம் உருவாதல் குறித்த சரியான புரிதலை அடைய “உழைப்பு” என்பதை மிகவும் தூலமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது மார்க்சீய அணுகல்முறையாக இருந்தது. உழைப்பின் மதிப்பு என்பது இரு தன்மைகளைக் கொண்டதாக அமைகிறது. ஒரு பக்கம் எல்லாப் பண்டங்களையும் போலவே உழைப்புக்கு ஒரு “பயன் மதிப்பு” (use value) உண்டு.

பயன் மதிப்பு என்றால் என்ன?

எந்த ஒரு பண்டத்தின் மதிப்பும் எவ்வாறு உருவாகிறது? மனிதர்களுக்குப் பயன்படுபவற்றையே ‘பண்டம்’ என்கிறோம். ஒவ்வொரு பண்டத்திற்கும் ஒவ்வொரு விதமான பயன்பாடு உண்டு. அரிசி ஒரு வகையில் பயன்படுகிறது. பஞ்சு அல்லது காகிதம் வேறு வைகளில் பயன்படுகின்றன. இந்தப் பயன்பாடுகளைப் பொருத்து அவற்றுக்கும் மதிப்புகள் உருவாகின்றன. இந்தப் பண்டங்களைப் போன்றதுதான் உழைப்பும். கணினியில் ‘புரோக்ராம்’ செய்வதும் உழைப்புதான். மரத்தை இழைத்து நாற்காலி செய்வதும் உழைப்புதான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பயிற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது. இந்தப் பயன்பாட்டில் அடிப்படையில் ஒரு பண்டம் அடையும் மதிப்புத்தான் ‘பயன் மதிப்பு’ . தொழிலாளிகளின் உழைப்புத் திறன் அவற்றின் மீது செயல்படுவதன் ஊடாகப் பொருள்களின் இந்தப் பயன் மதிப்பு கூடும்.

இப்படிப் பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கும் தேவையான பல்வேறு தூலமான (concrete) உழைப்புகளும்  ஒரு “கருத்துருவான மட்டத்தில்” (abstract level) ஒன்றிணைகின்றன. இரண்டு பொருள்களின் (அதாவது பண்டங்களின்) உருவாக்கங்களுக்கும் தேவையான இப்படியான கருத்துருவான உழைப்பின் அடிப்படையில் சமனப் படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட அளவிலான சராசரிச் சமூக உழைப்பாக (social labour) அவற்றைச் சுருக்கலாம். ஒரு புரிதலுக்காகச் சொல்வதானால் ஒரு பேனா செய்வதற்கான சமூக உழைப்பும் 10 பென்சில்கள் செய்வதற்கான சமூக உழைப்பும் ஒரு சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருக்கலாம். இப்படி இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் அடிப்படையில்தான் அந்தப் பொருளின் பரிமாற்ற மதிப்பு (exchange value) உருவாகிறது.

பொருள்கள் சந்தையில் விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த ‘விலை’ எனும் கருத்தாக்கம் ஒருவகையில் மிகவும் நவீனமான ஒன்று. சில மொழிகளில் அச் சொல் 13 ம் நூற்றாண்டுக்குப் பின்பே உருவாகியுள்ளது. வரலாறுத் தொடக்கத்தில் பொருட்கள் பண்டப் பரிவர்த்தனையாகவே பல காலம்வரை பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக இருந்தது அவற்றை உருவாக்குவதற்கான மேலே குறிப்பிட்ட இந்தச் சமூக (சராசரி) உழைப்புதான்.

ஆனால் சந்தை என வரும்போது பொருள்கள் ‘பண்டமாக’ (commodity) எதிர்கொள்ளப்படுகின்றன. அங்கு இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் அடிப்படையில் பொருட்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை. மாறாக அவை விற்கப்படுகின்றன. அப்படி விற்கப்படும்போது அவை இந்தச் சராசரிச் சமூக உழைப்பின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலான ‘விலை’ க்கு விற்கப்படுகின்றன. அதுவே முதலாளியிடம் லாபமாகக் குவிகிறது. இதைச் சற்று விளக்குவோம்.

ஆடம் ஸ்மித் அல்லது ரிக்கார்டோவைப் போலன்றி மார்க்ஸ் இந்த பயன் மதிப்பு , பரிமாற்றமதிப்பு என்கிற கருத்தாக்கங்களை மனித உழைப்பிற்கும் பொருத்திப் பார்த்தார். அதன்படி உழைப்புத் திறனின் விலையும் சமூக ரீதியில் தீர்மானிக்கப் படுகிறது. அதுதான் பொருளின் பரிமாற்ற மதிப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பொருள் கூடுதலான விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது மனித உழைப்பின் அடிப்படையிலான உற்பத்தியின் ஊடாக அதன் மதிப்பு கூடுகிறது. இந்த மதிப்புக் கூடலைத்தான் நாம் “உபரி மதிப்பு” (surplus value) என்கிறோம். எப்படி இந்த உபரி மதிப்பு உருவாகிறது? சந்தையில் ஒரு பண்டத்திற்கு எவ்வாறு மதிப்பு கூடுகிறது?

m5மூலப் பொருட்களின் மதிப்பு+ உற்பத்திச் சாதனங்களின் தேய்மானம் (அதாவது எந்திரங்களின் தேய்மானம், அவற்றை இயக்குவதற்கான மின்சாரம் முதலியவற்றின் மதிப்பு முதலியன) + தொழிலாளியின் உழைப்புத் திறனின் (labor power) மதிப்பு + உபரி மதிப்பு = பண்டத்தின் மதிப்பு.

மேலே உள்ள சமன்பாட்டில் மூலப் பொருட்களின் மதிப்பு  ‘நிரந்தர  மூலதனம்’ (constant capital) எனப்படும். . எனவே உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு கூட்டலில் இதற்குப் பங்கில்லை. தொழிலாளியின் உழைப்புத்திறன் நுகரப்படுவதன் (consumption) ஊடாகத்தான் (அதாவது தொழிலாளியின் உழைப்பின் ஊடாகத்தான்) உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பு கூடுகிறது. இந்த உபரி மதிப்பே முதலாளியிடம் லாபமாகக் குவிகிறது.

ஆனால் தொழிலாளியின் இந்த உழைப்புத் திறனுக்கான கூலி கணக்கிடும்போது அவனது உழைப்புத் திறனால் உருவாக்கப்படும் இந்த உபரி மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அந்தத் தொழிலாளியின் உழைப்புத் திறனை மறு உற்பத்தி செய்வதற்குத் தேவையான குறைந்த பட்சக் கூலி மட்டுமே அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அதாவது அவனது உயிரையும் உழைப்புத் திறனையும் தக்க வைப்பதற்குத் தேவையான கூலி மட்டுமே அவனுக்குத் தரப்படுகிறது. முன் குறிப்பிட்டவாறு சமூக உழைப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட சராசரி விலைக்கும் தொழிலாளிக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கும் இடையிலான வேறுபாடு முதலாளியின் கையில் லாபமாகச் குவிகிறது. இதையே மார்க்சியம் உபரி மதிப்பு (surplus value) என்கிறது. தொழிலாளியின் உழைப்புத் திறனும் கூடவிற்பனைக்கும் வாங்குவதற்குமான ஒரு பண்டாமாக்கப்படுவது இப்படித்தான். .

 

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

 

 

யார் இந்த ரோஹிங்யாக்கள்?

எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் 

(மக்கள் களம், அக் 2017)

“உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most persecuted minority) எனவும், மியான்மரில் நடப்பது “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” (crime against humanity) எனவும் ஐ.நா அவை மியான்மர் நாட்டு ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை இன்று வரையறுக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 பேர் உட்பட சுமார் ஐந்து இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவையும் கூட அளிக்க இன்று எந்த நாடும், அவர்களின் முந்தைய தாயகமாகக் கருதப்படும் வங்கதேசம் உட்படடத் தயாராக இல்லை.

இவர்கள் யார்? 138 இனங்களை உள்ளடக்கியுள்ள மியான்மர் ஏன் இவர்களை மட்டும் அங்குள்ள கூடுதலான இன்னொரு இனமாக ஏற்கத் தயாராக இல்லை? தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்யாக்களை வெளியேற்றியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்குக் காரணமாகச் சொல்கிற பாக் மற்றும் இஸ்லாமியத் தீவிரவாத ஊடுருவல் என்பதில் நியாயம் உள்ளதா என்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

யார் இந்த ரோஹிங்யாக்கள்?

மியான்மர் நாட்டு வரைபடத்தில், வங்க தேச எல்லையில், வங்கக் கடலை ஒட்டி ஒரு வால் போல் தொங்குகிற ராகைன் எனப்படும் மியான்மர் நாட்டு மாநிலத்தில் வாழ்கிற முஸ்லிம் இனங்களில் ஒன்றுதான் ரோஹிங்யாக்கள் எனப்படுவோர். வங்க இலக்கியங்களில் ‘ரோஷாங்’ எனக் குறிப்பிடப்படும் இவர்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து வந்து இங்கு குடியேறினர். இந்தியப் பெருங்கடலை ஒட்டி வாழ்ந்த முஸ்லிம்கள் இவ்வாறு பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்படியான துறைமுக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வந்து தென் கிழக்கு ஆசிய பவுத்த நாடுகளில் (மியான்மர், தாய்லந்த், லாவோஸ், கம்போடியா முதலியன) குடியேறினர் என்பது வரலாறு. காலனிய ஆட்சிக் காலத்தில் இத்தகைய இடப்பெயர்வு அதிகரித்தது. இந்துக்களும் கூட இவ்வாறு கொஞ்சம் இடம்பெயர்ந்தனர். 1869 ல் சூயஸ்  கால்வாய் திறக்கப்பட்டபின் இப்போதைய வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியிலிருந்து கூலித் தொழிலாளிகள் இவ்வாறு நிரந்தரமாகவும், தர்காலிகமாகப் பருவ காலங்களிலும் இடம் பெயர்ந்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசு தங்களின் நலனுக்காக இப்படியான பெருந்திரள் இடப்பெயர்வை ஊக்குவித்தது. இரண்டாம் யுத்தகாலம் வரையில் இவ்வாறு இடம்பெயர்ந்து வருவது தொடர்ந்தது. இப்படியான நீண்ட கால இடபெயர்வில் கடைசிக் கட்டத்தில் இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், அதற்குப் பல காலம் முன்னதாக வந்து கிட்டதட்ட இங்குள்ள சமூகத்துடன் உட்கலந்து வாழத் தொடங்கிவிட்ட முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவத்துடன் விளங்கினர், ஆக இடம்பெயர்ந்த முஸ்லிம்களையே நாம் இரு பிரிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிற்காலத்தில் வந்த இவர்களே பின்னர் சுயாட்சி கோரிய வகையிலும், வங்க தேசத்துடன் (ஒருகாலத்தில் கிழக்கு பாகிஸ்தான்) ராகைன்ன் மாநிலம் இணையவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்த வகையிலும் சற்றே தீவிர அடையாள அரசியலை முன்வைத்தனர். 1950 களில் ராகைன் நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்ட முச்லிம்களும் ராகைன் ‘முஜாஹித்’ போராளிகளும் ஷரியா சட்டத்தை அடிப்படையாகவும், உருதைத் தாய்மொழியாகவும் கொண்ட சுயாட்சி உரிமை உள்ள முஸ்லிம் பகுதி (autonomous Muslim zone) ஒன்றை உருவாக்கக் கோரினர். இந்தப் பின்னணியில்தான் இந்த ‘ரோஹிங்யா’ எனும் சொல்லும் அடையாளமும் உருவானது. தொடக்க கால பிரிட்டிஷ் ஆவணங்களில் இந்த அடையாளத்துடன் அவர்கள் பதியப்படவில்லை. முஸ்லிம்கள், வங்காளிகள், சிட்டகாங்கிலிருந்து வந்தோர் என்றே பதியப்பட்டனர்.

இன்று ரோஹிங்யாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலம் ஆங்கிலோ பர்மிய யுத்தத்தின் போதுதான் (1826) பர்மாவுடன் இணைக்கப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அதற்கு முற்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அது வங்க மாநிலத்தின் கீழ்தான் இருந்தது.

முன்னாள் காலனிய நாடுகளில் இன்றுள்ள பிரச்சினைகள் பலவற்றிற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே விதைகள் தூவப்பட்டன என்பது வரலாறு. ‘சென்சஸ்’ முதலானவை இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இப்படி வங்க தேசத்திலிருந்து (அதாவது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து) வந்த முஸ்லிம்களை ‘அந்நியர்கள்’ என்றும், மேற்குத் திசையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் (‘கலர்’) என்றும் பதிந்ததன் மூலம் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் சூட்டப்பட்டது. பாகிஸ்தான் உருவானபோது அவர்கள் பாகிஸ்தானிகள் எனவும் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் கொஞ்சம்பேருக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கும் நிலையும் இருந்தது.

இரண்டாம் யுத்த காலத்தில் படையெடுத்து வந்த ஜப்பானியர்களை பவுத்தர்களாக இனம் கண்ட மியான்மர் பவுத்தர்கள் அவர்களின் படையெடுப்பை ஆதரித்தபோது மியான்மர் முஸ்லிம்கள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர். ஆந்த வகையிலும் ஒரு பிளவு உருவாகியது. பிற்காலங்களில் இடம்பெயர்ந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம்களின் அடையாள வலியுறுத்தல், சுயாட்சி கோரல் முதலியனவும் பவுத்த அரசியல் ஒன்று உருவானபோது ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நியர்களாகவும் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களாகவும் கட்டமைத்தது. இந்த அடிப்படையில்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றறிஞர் ஜேக்வஸ் பி. லெய்டர், இன்று மியான்மரில் உருவாகியுள்ள வன்முறையை “முஸ்லிம்கள் மீதான வன்முறை” என்பதைக் காட்டிலும் இது “ரோஹிங்யாக்களின் மீதான வன்முறை” என்றே காணவேண்டும் என்கிறார்.

சுதந்திரத்திற்குப் பின் (1948) இந்தப் பகை முற்றியது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவுடன், அதாவது இன்றைய வங்க தேசத்துடன் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தனர். புதிய சுதந்திர அரசு ரோஹிங்யாவினரை இன அடிப்படையில் ஒதுக்கத் தொடங்கியது. அவர்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கியது. முழுக்குடியுரிமை, அரைக் குடியுரிமை முதலியவற்றைப் பெற வேண்டுமானால் உரிய ஆவணங்களை அவர்கள் அளிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தியது. ஆனால் இவர்கள் குறித்த பதிவுகளில் பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய அலட்சியங்களின் ஊடாக இவர்களால் அரசு கோரிய ஆவணங்களை அளிக்கமுடியவில்லை.

ரோஹிங்யாக்களின் இனப்பெருக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். அதைக் காரணம் காட்டி, ரோஹிங்யாக்கள் திருமணம் செய்ய அரசு அனுமதி பெற வேண்டும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில் குறைந்தது மூன்றாண்டு இடைவெளி வேண்டும் என்பன போன்ற இன ஒதுக்கல் சட்டங்களையும் பர்மிய அரசுகள் இயற்றின.

இதற்கிடையில் வங்கதேசச் சுதந்திரப் போரின்போது, 1971 – 72 காலக்கட்டத்தில் சுமார் 5,00,000 முஸ்லிம்கள் இன்றைய வங்க தேசத்திலிருந்து ராகைன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர்

இப்படித் தொடர்ந்து வங்க முஸ்லிம்கள் ஊடுருவி வருவதைத் தடுப்பது என்கிற பெயரில் மியான்மர் இராணுவம் அப்படியான ‘ஊடுருவல்காரர்களை’ திருப்பி விரட்டும் நடவடிக்கை என மேற்கொண்ட தாக்குதலின் ஊடாக 1978ல் சுமார் 2,00,000 வங்க முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குள் விரட்டப்பட்டனர். 1991 – 92 ல் மேலும் சுமார் 2,70,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இனிமேலும் ஒருவரைக்கூட  எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என இன்று அறிவித்துள்ளது வங்க தேச அரசு.

பவுத்தம் கட்டமைக்கும் ரோஹிங்யா வெறுப்பு

இன்று அஷின் விராத்து எனும் புத்த பிக்குவால் பெரிய அளவில் மியான்மர் மக்கள் மத்தியில் ரோஹிங்யா வெறுப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2003 முதல் இராணுவ அரசால் சிறைவைக்கப்பட்ட விராத்து இன்றைய “ஜனநாயகமய நடவடிக்கைகளின்” ஊடாக 2012 ல் விடுதலை செய்யப்பட்டபோது அது தீவிரமாகியது, அதிகமாகப் பிள்ளை பெறுகிறார்கள், பவுத்தப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர், பர்மியப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர் என்றெல்லாம் மிகப்படுத்தப்பட்ட, பொய்யான வெறுப்பு அரசியல் முழக்கங்கள் இன்று அங்கு விராத்து முன்வைத்து வன்முறையைத் தூண்டுகிறார். இலங்கையில் இதே போல வெறுப்பு அரசியலைக் கட்டமைக்கும் பொதுபலசேனா எனும் பிக்குகள் அமைப்புடனும், இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பை முன்னெடுக்கும் இந்துத்துவத்துடனும் அவர் நெருக்கமான உறவுகளைப் பேணுவதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில்தான் 2012 ல் பவுத்தப் பெண் ஒருவரை மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலாத்காரம் செய்த செய்தியின் அடிப்படையில் மிகப் பெரிய அளவில் ரோஹிங்யாக்கள் மீது தாக்குதல் தொடங்கியது.

இத்தகைய தாக்குதல்களின் விளைவாக அன்று (2012) உள்நாட்டில் உள்ள எந்த அடிப்படை வசதிகளும் அற்ற அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள் இருந்தனர். அங்கு அவர்களுக்குத் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் கூட இல்லை. “எல்லை கடந்த மருத்துவர்கள்” எனும் புகழ் பெற்ற சேவை அமைப்பினரும் வன்முறையாளர்களால் விரட்டப்பட்டனர். அன்றைய கணக்குப்படி முந்தைய 25 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00,000. தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில்  அடைக்கலம் புகுந்தவர்கள் 3,00,000ம் மேற்பட்டோர் என ஒரு கணக்கீடு கூறுகிறது.. இந்தியாவில் இப்போது 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஆகஸ்ட் 24 (2017) அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army – ARSA) எனும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் ‘அர்சா’ படையின் இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இதன் விளைவாக ரோஹிங்யாக்கள் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு அஞ்சித் தப்பி ஓடி வரும்  அப்பாவி மக்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. தரை வழி தவிர கடல் வழியாகவும் இம்மக்கள் தப்பி ஓடி வருகின்றனர். பாதுகாப்பற்ற கடல் பயணத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் மரணித்த செய்திகளும் வந்துள்ளன. முதல் பத்து நாட்களில் மட்டும் இப்படி ஓடியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,000.

எல்லா நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்டுக் கடலிலேயே மரணித்தவர்கள், வந்து இறங்கிய இடத்திலிருந்து நாடுகளுக்குள் புக இயலாமல்அருகிலுள்ள காடுகளில் ஒதுங்கி மாண்டவர்கள் ஆகியோரின் வரலாறுகளை விரிக்கப் புகுந்தால் கட்டுரை நீளும்.

மோடி அரசின் அணுகல்முறை

இந்தியாவ்வில் உள்ள 40,000 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளில் 16,000 பேருக்கு ஐ.நா அகதிகள் அமைப்பு அடையாள அட்டை வழங்கியுள்ளது. இந்திய அரசின் சார்பாகப் பேசி வரும் மத்திய துணை அமைச்சர் கிரேன் ரெஜ்ஜு இது குறித்து, “அவர்கள் பாட்டுக்குக் கணக்கு எடுத்து அட்டை வழங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்காக ரோஹிங்யாக்களை அனுமதித்துவிட இயலாது. நாங்கள் அவர்களை வெளியே அனுப்புவது உறுதி” என்கிறார். அதுமட்டுமல்ல, இந்திய அரசுக்கென இதுவரை தேசிய அளவிலான அகதிகள் கொள்கை எதுவும் கிடையாது. அகதிகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்பாட்டிலும் அது கையெழுத்திடவில்லை. இதையெல்லாம் சுட்டிக் காட்டி நாங்கள் அவர்களை வெளியேற்றுவதை ஐ.நாவோ இல்லை யாருமோ ஒன்றும் கேட்க முடியாது என்கிறது மோடி அரசு.

உயிருக்குப் பயந்து அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களை வெளியேற்றக் கூடாது என்கிற (principle of non-refoulement) கொள்கை இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே அப்படியெல்லாம் சொல்லி இந்தியா தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்கிறது ஐ.நா. “அவர்களை நாங்கள் அகதிகளாகக் கருதவில்லை. அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் (illegal immigrants). பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் IS உளவு அமைப்பு எல்லாம் இதில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்றியே தீருவோம்” என்பது மோடி அரசின் பதில்.

முஸ்லிம் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்கிற இந்தக் குற்றச்சாட்டில் ஏதும் உண்மையுண்டா? அப்படி ஏதும் ஆதாரபூர்வமான தகவல் இதுவரை இல்லை. எனினும் இப்படியான சூழலில் பன்னாட்டளவில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதம் இன்றைய மியான்மர் சூழலைப் பயன்படுத்தி இப்பகுதியில் ஊடுருவும் சாத்தியத்தை முற்றாக மறுத்துவிடவும் இயலாது. ஆனால் இப்படியான காரணங்களைச் சொல்லி மிக அடிப்படையான மனித உரிமைகளைக் காப்பதிலிருந்தும், அரசின் பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் ஒரு நாடு ஒதுங்கிக் கொள்ள இயலாது. உரிய கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் இத்தகைய ஊடுருவலைத் தடுக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி அடிப்படை உரிமைகளை மறுப்பதுய் அறமும் அல்ல, நியாயமும் அல்ல. மோடி அரசின் உள்நோக்கம் ஊரறிந்த ஒன்று. அது தன் முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்டும் எத்தனையோ நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9 

(தீராநதி, அக் 2017)

ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய படைக்கப்பட்டுள்ள மணிமேகலை இன்னொரு பக்கம் அது எவ்வாறு முழுமையாக ஒரு பவுத்த மரபில் ஆக்கப்பட்ட படைப்பாக அமைகிறது என்பதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். மணிமேகலையின் கதை அமைப்பு மிகவும் சிக்கலானது. கோவலன் – மாதவி ஆகியோரின் ஒரே மகளான மணிமேகலை எவ்வாறு ஒரு பவுத்தத் துறவியாக மலர்கிறாள் என்பதை மையக் கருவாகக் கொண்ட கதை அமைப்பு, அத்தோடு ஒரு பதினாறு உட் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதைகளின் ஊடாக வாழ்வின் உண்மைகளையும், தத்துவங்களையும் விளக்கும் ஒரு மரபு இங்கு உண்டு. புத்தஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன சில எடுத்துக்காட்டுகள். மகாபாரதத்திலும் நாம் இதைக் காண இயலும். மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் இந்தப் பதினாறு உட்கதைகளும் காப்பியத்தின் மையக் கதை ஓட்டத்திற்குக் குறைவு ஏற்படுத்தாமல் பவுத்த அறங்களை விளக்கும் பாங்கு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

பவுத்தம் அது தோன்றிய காலத்திலிருந்து வைதீகத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எதிர் கொண்டு இயங்க வேண்டியதாக இருந்தது. புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ் மண்ணில் மணிமேகலை உருவானபோது இந்திய அளவில் இந்த விவாதங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. வைதீகத்திற்கு ஒரு வலுவான மாற்றாக எல்லா அம்சங்களிலும் பவுத்தம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த காலம் அது. காஞ்சிபுரம் அந்த வகையில் ஒரு முக்கியமான மையமாக அமைந்தது. பவுத்தம் வைதீகத்தை எதிர்கொண்டு மட்டுமல்ல தனக்குள்ளும் பல விவாதங்களை நிகழ்த்திக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருந்த காலம் அது. இந்தப் பின்னணியில் அமைந்த மணிமேகலை சிக்கலான பவுத்த தத்துவக் கோட்பாடுகளையும் தன் கதை ஓட்டத்தின் ஊடாகவே, காப்பிய நெறிக்கும் அழகுக்கும் சிறிதும் பங்கம் ஏற்படாமல் சொல்லிச் செல்லும் திறன் வியக்கத் தக்க ஒன்று.

மையக் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் பதினாறு உட்கதைகள், பவுத்தத்தின் சில தத்துவக் கோட்பாடுகள் என இந்த முன்றும் இணைந்து பொருந்தி அமையப்பட்ட ஒரு அழகிய ஆபரணமாக மணிமேகலை தமிழ் இலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த மூன்று கூறுகளும் காப்பிய அழகைச் சிதைக்காமல் முரணின்றிப் பின்னப்பட்டுள்ளதுதான் மணிமேகலைக் காப்பியத்தின் தனிச் சிறப்பு.

இந்தியத் தத்துவ மரபில் ஏதேனும் ஒரு பொதுவான கூறு உண்டெனில் அது ‘கர்ம’க் கோட்பாடுதான். பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளுடன் இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்து இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை வலியுறுத்துகின்றன. பிராமண மரபிற்கு எதிராக அமைந்த பவுத்தம், சமணம், ஆஜீவகம் முதலான சிரமண மரபுகளைப் பொருத்த மட்டில் துறவு என்பது இந்தப் போக்கில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் இன்னொரு பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பது நினைவிற்குரியது. கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு இளம் பெண், பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் எவ்வாறு அந்தச் சமூக நியதியை வெல்வதோடு, எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கிய படியாகிய துறவு நிலையைச் சென்றடைகிறாள் என்பதைச் சொல்வதுதான் மனிமேகலைக் காப்பியத்தின் அடிப்[படை அமைப்பு.

பிறவிப் பெருங்கடலை அறுக்கும் இறுதி உய்விற்குரிய துறவு நிலை எய்துவதற்கு உரிய பொருத்தமான “காரணி”கள் அத் தகுதிக்குரியோரின் வாழ்வில் அவரவரின் வாழ்வுக்கேற்றவாறு தோன்றி, மலர்ந்து, முதிர்ச்சி அடையும் என்கிறது பவுத்தம். இந்த துறவுக்குரிய ‘காரணி’ என்பதற்கான பவுத்த தத்துவக் கருத்தாக்கம் சமஸ்கிருதம் மற்றும் பாலியில் ‘ஹேது’ எனப்படும். சாத்தனார் இதைத் தமிழ் மரபிற்கேற்ப ‘ஏது’ எனக் குறிப்பார். மணிமேகலைத் துறவுக்குரிய இந்த ஏதுக்கள் தோன்றி மலர்வது குறித்து ஒன்பது குறிப்புக்கள் மணிமேகலைக் காப்பியத்துள் அமைந்துள்ளன. காப்பியக் கதைப் போக்கின் ஊடாக இந்த ஏதுக்கள் எதிர்கொண்டு (எதிர்தல்), மணிமேகலையின் வாழ்வின் ஊடாக அவை நிகழ்ந்து (நிகழ்தல்), படிப்படியாக அவை முற்றிக் (முற்றுதல்) கனிவதைச் சொல்வதுதான் மணிமேகலைக் காப்பியம். துறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து  முற்றுவது எனும் வளர்ச்சிப் போக்கு காப்பியத்தின் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் உட்கதைகள், பவுத்த அடிப்படைத் தத்துவக் கோட்பாடு ஆகிய மூன்றையும் பிசிறின்றி இணைக்கிறது.

வைதீகம் கருமங்களை (அதாவது செயல்களை) “பாவம் X புண்ணியம்” எனப் பகுக்கும். பவுத்தம் கருமங்களை நல்ல நோக்கமுடையவை, கெட்ட நோக்கம் உடையவை என அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டும். நல்ல நோக்கங்களுடன் அமைவன ‘குசல கம்மங்கள்’; ‘கம்மம்’ என்பது ‘கர்மம்’ எனும் வடமொழிச் சொல்லின் பாலி மொழி வடிவம். தீய நோக்கங்களுடன் அமைவன ‘அகுசல கம்மங்கள்’. குசல கம்மங்கள் என்பன கர்ம விளைவுகளிலிருந்து உங்களை விடுவித்து பிறவியற்ற இறுதி விடுதலையை நோக்கி நகர்த்தும். அப்படியான நல் நோக்கத்துடன் கூடிய செயல்களுக்குக் காரணியாக அமையும் நிகழ்வுகள் “குசலமூலம்” எனப்படும். இத்தகைய மூலம் அல்லது காரணி அல்லது நிகழ்வு என்பதே இங்கு ‘ஏது’ எனப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளும் செயல்களும் பேரானந்தத்தை விளைவிப்பவை என்கிறது பவுத்தம்.

மீண்டும் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமான கர்மிய விளைவுகளை ஏற்படுத்தும் கம்மங்கள் அகுசல கம்மங்கள் எனப்படும். 1.ஆசை (லோபம்), 2.வெறுப்பு அல்லது பகை (தோஷம்), 3.மருள் அல்லது ஐயம் அல்லது தெளிவற்ற நிலை (மோகம்)’ ஆகியவற்றுக்குக் காரணமானவையே அகுசல கம்மங்கள். (பார்க்க: அ.மார்க்ஸ், புத்தம் சரணம், கருப்புப் பிரதிகள், பக். 74, 84). ஆசையின்மை (அலோபம்), வெறுப்பின்மை (அதோஷம்), ஐயமின்மை (அமோகம்) ஆகியவற்றுடன் செயலூக்கமுள்ள ஒரு வாழ்வை எதிர்கொள்வதே இறுதி விடுதலைக்கான வழி. அப்படியான விருப்பபூர்வமான செயலுக்கு (செய்கை அல்லது பாலி மொழியில் ‘சேதனா’) இட்டுச் செல்லும் ஏதுக்களை (காரணமாகும் நிகழ்வுகளை) நோக்கி இட்டுச் செல்பவர்களாக பவுத்த பிக்குவான அறவண அடிகள், மணிமேகலா தெய்வம் முதலானவர்கள் சாத்தனாரின் படைப்பில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் என்ன நோக்கத்துடன் நமது செய்கைகள் உந்தப்படுகின்றன என்பதற்கும் ஐயமின்மை என்பதனூடாக ஆழ்ந்த புரிதல், அதற்குக் காரணமாகும் கல்வி ஆகியவற்றிற்கும் பவுத்தம் அளிக்கும் கூடுதல் முக்கியம் இங்கே கவனத்துக்குரியது.

புகார் நகரில் பிரும்மாண்டமான ஏற்பாடுகளுடன் கூடிய இந்திரவிழா அறிவிப்போடு காப்பியம் மொட்டவிழ்வதைக் கண்டோம். தீவகச் சாந்தியுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழா எனில் ஆடலும் பாடலும் அதனின்றும் பிரிக்க இயலாதவை. இது உலகெங்கிலும் ஒரு பொது இயல்பு. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த மட்டில் அனைத்தும் குலமரபாகப் பிரித்து ஒதுக்கப்பட்ட பின்னணியில் கணிகையர் குலத்தில் தோன்றிய அன்றைய புகழ்பெற்ற ஆடல் நாயகியான மாதவியின் நடனத்தை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாதவி மட்டுமல்ல அவளது அழகிய இளமகள் மணிமேகலையின் ஆட்டமும் இம்முறை விருந்தாக அமையும் என்கிற மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கின்றன. மணிமேகலையோடு மாதவியும் வாராததைக் கண்டு மக்களைக் காட்டிலும் மாதவியின் தாய் சித்திராபதி தணியாத் துன்பம் அடைந்தாள் என்கிறார் சாத்தனார். செவ்வரியோடிய நீண்ட கண்களை உடைய தன் மகளின் உற்ற தோழியாகிய வயந்தமாலையை (வசந்தமாலை) அழைத்து மாதவியின் ஆட்டம் இல்லாமற் போனமைக்காக ஊர்தூற்றும் செய்தியை அவளிடம் சொல்லிவரப் பணிக்கிறாள்.

ஆடிய சாயல் அழகு மிக்க மாதவி வாடிய உடலுடனும் மகளுடனும் இருந்த மலர் மண்டபத்துக்குச் சென்று வயந்தமாலை இந்த ஊரலரை எடுத்துரைக்கிறாள். வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தையும் சார்ந்த கூத்தும் பாட்டும், தூக்கும் துணிவும் என்கிற ஆடற் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி எனப் பதினைந்து அழகான வரிகளில் மாதவியின் கல்விச் சிறப்பை இங்கு விதந்து முன்வைப்பார் சாத்தனார். குலத்தொழிலில் இத்தகைய வல்லுனளான நீ இப்படி தவக்கோலம் பூண்டு அமர்ந்துள்ளது வெட்கக் கேடு என முடிப்பாள் வயந்தமாலை. ஆம். நமது மரபில் கணிகையாய்ப் பிறந்தோர் அதற்குரிய வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடான செயல்லல்ல. யாராயினும் அவர்கள் பிறவித் தொழிலைச் செய்யாதிருத்தலே நாணுடைத்து.

பவுத்தம் மேலோங்கி வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத்தில், துறவு நிலையும், துறவியரும் பெரிதும் மதிக்கப்பட்ட அக்காலத்தில் கணிகையர் இருவரைத் துறவுக்குரியோராய்ப் படைத்தது மட்டுமின்றி அதிலொருவளை பிறவிப் பெருங்கடகைக் கடக்கும் ஒளிபெற்றவளாய்ப் படைத்திருப்பதுதான் இந்தப் பவுத்தக் காப்பியத்தின் தனித்துவம். இரட்டைக் காப்பியங்களாகத் தமிழ் போற்றும் சிலம்பும் மணியும் இப்படியான எளிய மக்களையும், குற்றம் குறைகளுடையோரையும் காப்பியநாயகர்களாகக் கொள்வதை நாம் கவனத்தில் கொள்ளல் தகும். பவுத்தம் அங்குலிமாலன் போன்ற கொலைக்கஞ்சாத கள்வனுக்கும் புனித நிலை சாத்தியம் எனக் கொண்டாடும் ஒரு மதம்..

“காதற் கணவன் மறைந்தால் அவனது உடலோடு தீப்பாய வேண்டும் அல்லது கைம்மை நோன்பு பூண்டு காலம் கழிக்க வேண்டும். நான் கணவனை இழந்தவள்; கணவனுக்கு நேர்ந்த அநீதியைப் பொறாது தன் முலை திருகி எறிந்து மதுரையை அழலுக்கு இரையாக்கிய மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை. அவள் இந்தத் திருந்தாச் ‘செய்கை’ தீத்தொழிற் படாள் எனப் போய்ச் சொல்” என வயந்தமாலையைத் திருப்பி அனுப்பும் மாதவி, தான் மாதவராம் அறவண அடிகளின் உறைவிடம் சென்று அவரது வழிகாட்டலில் பவுத்த சீலங்கள் ஐந்தையும் ஏற்றுக் கொண்டுள்ளதையும் கூறுவாள்.

தான் ஒருவேளை பத்தினி என்கிற பிறப்பிற்குரியவளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் தந்தையின் பத்தினி என்கிற வகையில் கண்ணகி மணிமேகலையின் தாயாகிறாள். எனில் அவளும் எப்படி இத் தீத்தொழிற்குரியவள் ஆவாள் என்றொரு நியாயத்தையும் மாதவி முன்வைக்கிறாள்.

ஆனால் மறச்செயல்கள் அனைத்தையும் நீத்தவரும் மாசறு கேள்வி ஞானத்திற் சிறந்தவருமான அறவண அடிகளார் இந்தப் பிறவி நியாயங்களை எல்லாம் யோசித்தார் இல்லை. மாசறு மாதவன் தாள் பணிந்து ஐவகைச் சீலங்களையும் ஏற்போர் யார்க்கும் உய்வுண்டு என அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆடற்கலைக்கு அது பேரிழப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ந்த பாதை சிறைக்கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கப் போகிறது. எத்தனையோ பேர்களின் பசித்துயர் களையப் போகிறது. பிறவியின் பெயரால் அவர்கள் அந்த வாய்ப்புகளை இழந்திருப்பின் அது அவர்களுக்கு மட்டுமா இழப்பு?

மாதவி சொன்னதைக் கேட்டு வயந்தமாலை வந்த வழியே திருப்பிச் சென்றபோது அந்த வனத்தில் மாதவி, மணிமேகலை அவள் தோழி சுதமதி ஆகிய  மூவரும் அம் மண்டபத்தில் அமர்ந்து பூசைக்குரிய மாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் கணத்தில்தான் மணிமேகலையின் துறவுக்குரிய அந்த முதல் ஏது நிகழ்ந்தது.

தன் தாய்க்கும் வயந்தமாலைக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைச் செவிமடுத்திருந்த மணிமேகலையின் கண்களிலிருந்து கசிந்த நீர்த் துளிகள் அந்தப் பூக்களில் சிந்தி பூசைக்குரிய அவற்றின் புனிதம் அழிந்தது. அதுவே அந்த முதல் ஏது நிகழக் காரணமாகவும் அமைந்தது. தனது முற்பிறவிகள் சார்ந்த கர்மிய வினைப்பயன்களை அந்தச் சிறுபெண் எதிர்கொள்ளத் தொடங்கினால். அவற்றை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பொறுத்து அவளின் எதிர்காலம் அமையப் போகிறது.

“வயந்த மாலைக்கு மாதவி உரைத்த

உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி

மாமலர் நாற்றம்போன் மணி மேகலைக்கு

ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்…”

என்பார் சாத்தனார். தந்தை மற்றும் இன்னொரு தாயான கண்ணகி ஆகியோரின் சோக முடிவுகள், பெற்ற அன்னை தவக்கோலம் பூண்டது, தன்னையும் அவள் அவ்வழியே திருப்பத் துணிவுகொண்டது முதலான  செய்திகள் மணிமேகலை துறவு மேற்கொள்வதற்கான ஏதுவாக அமைந்தது.

மகளின் கண்ணீரைத் துடைத்த மாதவி, பூசைக்குரிய புது மாலை தொடுக்க மீண்டும் உவவனம் சென்று பூக்கொய்துவரக் கோரினாள். தனியே செல்ல வேண்டாம் நானும் போகிறேன் என சுதமதியும் உடன்சென்றாள். ஊர்வழியே நடைபயின்று சென்றுகொண்டிருந்த அவர்களைப் பலரும் கண்ணுறுகின்றனர்.

அப்போது மதம் கொண்ட யானை ஒன்றை யாவரும் வியக்க அடக்கித் தேரில் வருகிறான இளவரசன் உதயகுமாரன். மணிமேகலை மலர்கொய்ய உவவனம் பக்கல் சென்றிருப்பதை அறிந்து அவளைத் தேரில் ஏற்றிக் கொணர்வேன் எனக் கூறி அவளிருக்கும் இடம் நோக்கி தேரைப் பாய்ச்சுகிறான். தேரொலி கேட்டு மருண்ட மணிமேகலை, அவன் தன் மீது மோகம் கொண்டிருப்பதை முன்னரே அறிந்தவள். அஞ்சி பளிக்கறையினுள் புகுந்த அவளை மணிமேகலா தெய்வம் தோன்றிக் காப்பாற்றி, மணிபல்லவத் தீவில் கொண்டு வைக்கிறது. அங்கே அவள் முற்பிறப்பு உணர்த்தப்படுகிறாள். புத்தபீடிகையை வணங்கும் பேறு பெறுகிறாள். கோமுகிப் பொய்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை அவளுக்கு அளிக்கிறது. ஆகா, எத்தனை வேகமாக நிகழ்ச்சிகள் நகர்கின்றன. அந்தச் சிறுபெண்தான் அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் எதிர் கொள்ள நேர்கிறது.

(அடுத்த இதழில் ஏதுக்கள் மலர்ந்து, முதிர்ந்து மணிமேகலை துறவேற்றல்)