காலனிய ஆட்சியினூடாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் 15 , மக்கள் களம், அக்டோபர் 2018                                       

(தேங்கிக் கிடந்த இந்தியச் சமூகத்தில் காலனிய ஆட்சியினூடாக ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மார்க்ஸின் கூரிய பார்வை நமக்கு வியப்பளிக்கிறது)

1813ம் ஆண்டு ‘சார்ட்டர்’ சட்டத்தின் ஊடாக பிரிட்டிஷ் – இந்திய வணிக உறவில் ஒரு மாற்றம் உண்டாகியது என்கிறார் மார்க்ஸ். இரண்டுக்கும் இடையேயான வணிகம் ஒரு குறுகிய காலத்தில் மூன்று மடங்காக அதிகரித்தது. இது வெறும் அளவு மாற்றமாக இல்லாமல் ஒரு பண்பு மாற்றமாகவும் அமைந்தது. அதுவரைக்கும் ஒரு ஏற்றுமதி நாடாகவே இருந்த இந்தியா இப்போது இறக்குமதியும் செய்கிற நாடாக மாறியது. இந்தியாவிலிருந்து இறக்குமதியான மூலப் பொருட்கள் ஒரு பெருநகர நாடாக மாறியிருந்த இங்கிலாந்தில் வணிகத்துக்குரிய நுகர் பொருட்களாக ஆக்கப்பட்டு மீண்டும் அவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டது.images KM

“நினைவுதெரிந்த காலம் முதல் உலகிற்குத் தேவையான பருத்தித் துணி வகைகளின் மிகப் பெரிய உற்பத்திசாலையாக இருந்த இந்தியா இப்போது பிரிட்டிஷ் துணி வகைகளால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது” என எழுதினார் கார்ல் மார்க்ஸ். “1818 லிருந்து 1836 க்குள் கிரேட் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தித் துணி 52,000 மடங்கு அதிகரித்தது.1824ல் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பிரிட்டிஷ் மஸ்லினின் அளவு 1,000,000 கெஜம் ஆக இருந்தது 1837ல் அது 67,000,000 கெஜம் ஆகியது” என்பதையும் அவர் சுட்டிக் காட்டியது குறிப்பிடத் தக்கது, ஒரு கெஜம் என்பது 3 அடி நீளத்தைக் குறிக்கும். இப்படியான பருத்தித் துணி வகை உற்பத்தி என்பது பிரிட்டிஷ் மக்களில் எட்டில் ஒரு பங்கினருக்கு வேலை வாய்ப்பு அளித்ததைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ் பிரிட்டனின் மொத்த ஏற்றுமதியில் எட்டில் ஒரு பங்கு இந்தியாவுக்கு ஏற்றுமதியானது என்பதையும் குறிப்பிடுவார். இப்படி இந்தியா என்பது பிரிட்டனின் உயிர் ஆதாரமாக மாறியது என்பார் (Tribune, 1853, June 25, July 11- Progressபதிப்பகத்தார் வெளியிட்டுள்ள மார்க்ஸ் – எங்கல்சின் On Calonialism தொகுப்பில் இதைக் காணலாம்).

காலனியச் சுரண்டலின் கொடுமையையும், ஒரு ஏற்றுமதி நாடாக இருந்த இந்தியா எவ்வாறு இறக்குமதி நாடாக மாறியது என்பதையும் விளக்கும் மார்க்சின் 1853 ம் ஆண்டு கட்டுரைகள் அள்ளித் தரும் ஏராளமான புள்ளி விவரங்களையும், கூர்த்த பார்வைகளையும் சுருக்கம் கருதித் தவிர்க்கிறேன். 1813- 35 கால கட்டத்தில் இந்தியாவின் மொத்தத் துணி நுகர்வில் 3.9 சதமாக இருந்த பிரிட்டிஷ் துணிகளின் அளவு 1880 -81ல் 58.4 சதம் ஆகியது என்பதைக் கவனத்தில் கொண்டால்தான் அடுத்த சுமார் அரை நூற்றாண்டில் காந்தி அடிகள் இங்கு முன்வைத்த அந்நியத் துணிவகைகள் எரிப்பு மற்றும் எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் நாம் உணர முடியும்.

ஆனால் மார்க்ஸ் இத்தோடு நிறுத்தவில்லை. அவர் இன்னொன்றையும் சொல்வார். அதை அவர்தான், அவர் மட்டுமேதான் சொல்லவும் முடியும். எனினும் “(இந்த மாற்றங்கள்) இங்கிருந்த சிறு சிறு அரைக் காட்டுமிராண்டி, அரை நாகரிகச் சமூகங்களின் பொருளாதார அடித்தளத்தைத் தர்த்தெறிந்து, ஆசியா என்றைக்குமே கேட்டிராத சமூகப் புரட்சிக்கும் காரணமாகியது” என்பார் மார்க்ஸ். எந்த வளர்ச்சியும் இன்றித் தேக்கமடைந்திருந்த இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட முதல் மாற்றம் என இதை மார்க்ஸ் இதைக் கண்டார்.

துணி மட்டுமல்ல, நூலும் பிரிட்டனிலிருந்து இறக்குமதி ஆகியது. இந்திய கிராம சமுதாய அமைப்பிலிருந்த விவசாயம் மற்றும் கைத்தொழில் உற்பத்தி ஆகியவற்றுக்கிடையேயான நெருக்கமான பிணைப்பு நொறுங்கியது. இந்திய விவசாயிகள் லங்காஷையரிலிருந்து இறக்குமதியான மலிவான துணிகளை வாங்கத் தொடங்கினர். கிராம சமூகங்களின் ஓரங்கமாக இருந்த, நெசவாளிகள் வேலை இழந்து நின்றனர். நெசவாளிகளின் தொழில் நசிந்தபோது அது நூற்பாளர்களின் வேலை இழப்பிற்குக் காரணமாகியது. கொஞ்ச நஞ்சமாக  இருந்த நெசவாளிகளும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியான எந்திரங்களால் நூற்கப்பட்ட நூல்களை வாங்கத் தொடங்கினர்.

கிராம சமூதாய இயற்கைப் பொருளாதாரம் வீழ்ந்ததை ஒட்டி விவசாயிகளும் தம் தேவைகளுக்கு இறக்குமதியான பொருட்களையே வாங்க நேரிட்டதால் தமது உபரி உற்பத்தியைக் காட்டிலும் கூடுதலான பொருட்களைப் புதிதாக உருவாகியிருந்த சந்தையில் விற்க நேரிட்டது. விவசாயம் இப்படி வணிக மயமாக்கப்பட்டபோது, இந்திய மக்கள் உலகச் சந்தைக்கான கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மாறினர். கிராம அளவிலான நுகர்வு மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் என்பன தகர்ந்தன. பஞ்சு, நூல், சணல், இன்டிகோ என உலகச் சந்தைக்கான உற்பத்தியாக இந்திய விவசாயம் மாறியது.

பிரிட்டிஷ் தொழிற்சாலைகளில் உருவான கைவினப் பொருட்களும் இப்போது இந்தியச் சந்தைகளுக்கு வந்து குவிந்தன, இதன் விளைவாக கிராம சமுதாயக் கைவினைஞர்களும் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதுவரை கிராம சமுதாய அமைப்பின் பாதுகாப்பிலிருந்த இவர்கள் இப்போது தொழில் மட்டுமின்றி நிலமும் அற்றவர்களாக ஆயினர். இந்தியக் கிராம சமுதாய அமைப்பின் இப்படியான தகர்வுகள் விவசாய அமைப்புகளில் கடை மட்டத்தில் இருந்த தொழிலாளிகளை நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள் ஆக்கியது,

karl marx 2மாற்றமில்லாது தேங்கிக் கிடந்த இந்திய சமூகத்தில் இப்படியான மாற்றங்கள் தேவையான ஒன்றாக இருந்தபோதிலும் அது இவ்வாறு காலனியச் சுரண்டலின் ஊடாக நேர்ந்தபோது அது அடித்தள மக்கள், கடைமட்ட விவசாயிகள், மற்றும் கிராமப்புறத் தொழிலாளிகள் ஆகியோரைக் கையறு நிலைக்குத் தள்ளியது. மார்க்ஸ் இந்த மாற்றங்களை நுணுக்கமாக விளக்கியபோதும் மிக்க இரக்கத்துடனும் வேதனையுடனுமேயே அவற்றை அணுகினார். “மான்செஸ்டரும் சுதந்திரவர்த்தகமும் இந்தியாவை அழித்துவிட்டன” என்றார். ஏதோ ஒரு வகையில் இந்திய மக்கள் அவர்களுக்கிருந்த தொல் பழம் பண்பாட்டையுயம் இழந்தனர்; கிராம சமுதாய அமைப்பினூடாக அவர்களுக்குப் பாரம்பரியமாக இருந்துவந்த குறைந்தபட்சப் பாதுகாப்பையயும் இழந்து நிற்கின்றனர் என்றார். ஆனால் அந்தப் பழைய சமுதாய அமைப்பு தொடர வேண்டும் என்று மட்டும் அவர் கூறவே இல்லை. “அது தொடர்ந்திருந்தால் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே அவர்களின் சிந்தை முடங்கியிருக்கும். ஒரு வகையான பழமைத் தன்மையுடன் கூடிய ஒரு குறுகிய சுய மோகம், கொடும் மூடநம்பிக்கைகள் என அவர்கள் சுருங்கியிருப்பர். அந்தச் சமூகம் அதற்குரிய பெருமிதங்களையும் வரலாற்று ஆற்றல்களையும் இழந்திருக்கும்” என்றார். “எப்படி ஐரோபாவில் நவீனத் தொழில் உற்பத்தியின் தோற்றத்துக்கு  சிறு உற்பத்தி அழிக்கப்படுவது நிபந்தனையானதோ அதேபோல இந்தியாவிலும் பழைய உற்பத்தி அமைப்பும் பண்பாடும் அழிக்கப்பட வேண்டி இருந்தது” என இந்திய சாதீய கிராம சமுதாயத்தின் வீழ்ச்சியை வரவேற்றார்.

நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் இதழில் மார்க்ஸ் இந்தியா பற்றி எழுதிய இந்த முதற்கட்டக் கட்டுரைகள் 1853 மே 24 ல் தொடங்கி 1853 செப் 20 ல் முடிகின்றன. கடைசிக் கட்டுரை இந்தியாவில் ரயில் போக்குவரத்து கட்டமைக்கப்படுவதைப் பற்றியது. இந்தியத் துணைகண்டத்தில் அப்போது எங்கெங்கெல்லாம் ரயில் பாதைகள் போடப்படுகின்றன என்பதை, அவை ஒவ்வொன்றின் மொத்த நீளங்களுடன் பதிவு செய்கிறார். மெட்ராசிலிருந்து போடப்படும் ரயில் பாதை மேற்கு நோக்கி 70 மைல்கள் சென்று அதன் பின் அது இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஒன்று காலிகட்டுக்கும் மற்றது பெல்லாரிக்கும் போய் முடியும் என்கிறார். பஞ்சு உற்பத்தி மாவட்டங்களுடம் இந்தப் பாதைகள் இணைக்கப்படுவதைச் சொல்கிறார். இதற்கிடையில் இந்தியத் தீபகற்பம் முழுவதும் மின் தந்திப் போக்குவரத்தால் இணைக்கப் படுவதையும் குறிப்பிடுகிறார்.

அடுத்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பிப்ரவரி 23, 1855ல் ட்ரிப்யூன் இதழில் மார்க்ஸ் பெயரில் ஒரு பதிவு வருகிறது. பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனி ‘சார்ட்டரை’ மேலும் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க உருவாக்கியுள்ள மசோதா பற்றிய குறிப்பு இது. மார்க்ஸ்  எங்கல்சுக்கு இது குறித்து எழுதிய கடித்தின் அடிப்படையில் எங்கல்ஸ் ட்ரிப்யூனுக்கு அனுப்பி வைத்த குறிப்பு இது எனச் சொல்லப்படுகிறது.

இதன் பின் ஏப்ரல் 10, 1857ல் ஒரு கட்டுரை வெளிவருகிறது. “யாருடைய கொடுமைகள்?” என்பது தலைப்பு. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி மேற்கொள்ளும் கொடூரமான சித்திரவதைத் தண்டனைகள் பற்றியது அது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சர் ஜேம்ஸ் ஹாக் இதை அம்பலப்படுத்துகிறார். இதைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ் தொடர்ந்து, “இந்த ‘மகா மரியாதை’ மிக்க கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களில் ஒருவர் மிகவும் தைரியமாக இந்தக் குற்றச்சாட்டைப் பொய் எனச் சொல்லியுள்ளார்” எனக் கிண்டலாகக் குறிப்பிடுகிறார். அத்தோடு நிறுத்தவில்லை. “(ஆனால்) தொடர்ந்த புலனாய்வில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது என்பதும், கம்பெனியின் இயக்குனர்களுக்குத் தெரிந்தே அவை நடந்துள்ளன” என்பதை சர் ஜேம்ஸ் ஹாக் அம்பலப்படுத்தியுள்ளதையும் மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார்.

அதன்பின் 1857 ஜூலை 15 அன்று “இந்திய இராணுவத்திற்குள் புரட்சி” (The Revolt in Indian Army) எனும் தலைப்பில் ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’, ‘சிப்பாய்க் கலகம்’ என்றெல்லாம் சொல்லப்படும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி குறித்து அந்த ஆண்டு மட்டும் கார்ல் மார்க்சின் 17 கட்டுரைகள் ட்ரிப்யூனில் வெளி வந்துள்ளன. அதன் பின் 1861 வரையிலும் அவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எனினும் 1857 மற்றும் 1858 ஆண்டுகளிலேயே அதிகமான கட்டுரைகள் வெளி வந்துள்ளன.

1857ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி இந்தியாவில் வெடித்ததை அறிந்த உடன் அந்தக் கிளர்ச்சிக்கு முழு ஆதரவையும் அளித்து எழுதத் தொடங்கினார் மார்க்ஸ். அது மட்டுமல்ல இன்றைய அளவு தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமில்லாத அக்காலகட்டத்தில் அந்த எழுச்சியை மிகச் சரியாகவும் துல்லியமாகவும் அவர் மதிப்பிட்டார். எல்லோரும் அதை சிப்பாய்க் கலகம் எனச் சொல்லிக் கொண்டிருந்தபோது மார்க்ஸ்தான் அதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புரட்சியாகக் கண்டார். “கடலென எழுந்த புரட்சி” (sea of revolution) என அதைக் குறிப்பிட்டார். மக்களிடமிருந்து பிரிட்டிஷ் இராணுவம் அந்நியமாகியதற்குக் காரணம் விவசாயிகளின் நல்லெண்ணத்தை அது இழந்ததுதான் என்றார். ஆனாலும் விவசாயிகள் முன்னெடுத்த புரட்சியாக இது அமையாமல் சிப்பாய்கள் முன்னெடுத்த புரட்சியாக இது ஏன் அமைந்தது என்பதையும் அவர் விளக்கினார்.

“(ஃப்ரெஞ்சுப் புரட்சியிலும் கூட) முதல் அடி பிரிட்டிஷ் பிரபுக்குலத்திடமிருந்தே (nobility) விழுந்தது. விவசாயிகளின் முன்னெடுப்பில் அது தொடங்கவில்லை. (அதேபோலத்தான்) இந்தியப் புரட்சியும்கூட பிரிட்டிஷ்காரர்களால் பல்வேறு வகைகளிலும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கி, அவமரியாதை செய்து அம்மணமாக்கப்பட்ட விவசாயிகளால் எழவில்லை. இங்கே அது பிரிட்டிஷ்காரர்களால் அழகு செய்யப்பட்டு, தட்டிக் கொடுத்து ஊட்டி வளர்க்கப்பட்ட சிப்பாய்களால் தொடங்கப்பட்டது.”

என்றார். பிரிட்டிஷ் கன்செர்வேடிவ் கட்சித் தலைவரான டிஸ்ரேலியின் பேச்சு ஒன்றை மேற்கோள்காட்டி முடியிழந்த மன்னர்கள் மட்டுமல்ல இனாம்தார்கள், ஜாகிர்தார்கள் முதலானோரும் கூட அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்காக பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக வருத்தமுற்றுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டினார். 1856 ல் டல்ஹௌசி ஊத் பகுதியை வாஜித் அலி ஷாவிடமிருந்து கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்திற்குள் கொண்டுவந்தது எவ்வாறு தாலுக்தார்களின் வெறுப்பிற்குக் காரணமாகி அதன் விளைவாக அவர்களும் சிப்பாய்களுடன் பிரிட்டிஷாருக்கு எதிராக இணைந்து கொள்ள நேரிட்டது என்பதையும் மார்க்ஸ் பிறிதொரு கட்டுரையில் விளக்கினார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புரட்சியாளர்களின் அத்துமீறல்களை மிகவும் பெரிதுபடுத்திச் செய்த அவதூறுகளையெல்லாம் கூட அவை எல்லாம் எவ்வாறு மிகைப்படுத்தப்பட்ட கதைகளாக இருந்தன என்பதையும், இது போன்ற எழுச்சிகளில் இவை தவிர்க்க இயலாதவை என்பதையும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அதே சமயத்தில் பிரிட்டிஷார் இந்த எழுச்சியை ஒடுக்க எத்தனை மோசமாக நடந்துகொண்டனர் என்பதையும் அவர் பதிவு செய்தார்.

பிரிட்டிஷ் சுரண்டலுக்கு எதிரான ஒரு எழுச்சி என இதை மார்க்ஸ் இப்படியெல்லாம் கொண்டாடியபோதும் இந்த எழுச்சியில் உள்ளார்ந்திருந்த ஒரு பிற்போக்குத் தன்மையையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. என்ன இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பான்மையோர் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததை ஒட்டிப் “பழைய வர்க்கம்” கொண்ட கோபம் மற்றும் அவர்களின் பழைய வாழ்முறை சிதைக்கப்பட்டது ஆகியனவற்றிற்கான எதிர்வினையே இந்த எதிர்ப்பு என்பதை அவர் புரிந்துகொள்ளாமலில்லை. தான் இந்தியமக்களிடம் எதிர்பார்த்த மீளுருவாக்கம் இதுவல்ல என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். ஆனால் இந்தியச் சூழலில் அது அப்படித்தான் அமையும் என்பதையும் அவர் குறிப்பிடத் தயங்கவில்லை.

“இந்திய எழுச்சி என்பது ஐரோப்பாவில் நிகழ்ந்த புரட்சிகளைப்போலவே அமையும் என எதிர்பார்ப்பதில் பொருளில்லை” என்றார் மார்க்ஸ்.

1857 எழுச்சியில் தலித்கள் முதலான அடித்தள மக்களின் பங்கேற்பு குறித்து அதன் 150வது ஆண்டு நிறைவின்போது (2007) நிறைய எழுதப்பட்டது. சிப்பாய்கள் மற்றும் இந்த அடித்தள சக்திகள் ஆகியோரின் பங்கேற்புகள் இருந்தபோதும் பெரிய அளவில் அதிகாரத்தை இழந்த பழைய ஆதிக்க சக்திகள் ஆங்காங்கு இந்த எழுச்சியை முன்னெடுக்க நேர்ந்ததன் விளைவாக அது விரைவில் பெரும் இரத்தக் களறியினூடாக ஒடுக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். அந்த எழுச்சி அதன் தொடர்ச்சியற்றுச் சுவடில்லாமல் அழிக்கப்பட்டதற்கு இந்தப் பழைய ஆதிக்க சக்திகள் அதில் தலைமைப் பங்கு வகித்ததே காரணம் மார்க்சின் நுணுக்கமான பார்வைகளின் ஊடாக நாம் புரிந்து கொள்கிறோம்.

(அடுத்த இதழுடன் காரல் மார்க்ஸ் குறித்த இக்கட்டுரைத் தொடர் நிறைவுறும்)