பிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 18        – தீராநதி, ஜூலை 2018                            

சம்பாபதிக் கோயிலினுள் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலை உதயகுமாரன் கொல்லப்பட்டது கண்டு எழுந்தாள், கலங்கினாள்.. முந்தைய பிறவியில் தாங்கள் கணவன் மனைவியாய் வாழ்ந்ததையும், விடம் தீண்டி அவன் இறந்ததையும் எண்ணிப் புலம்பினாள். தான் காயசண்டிகை உருவில் இருந்ததுதானே இத்தனைக்கும் காரணம் என அவ்வுருவைக் களைந்து உதயன் வெட்டுண்டு கிடந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.B

அவளைத் தடுத்து நிறுத்தியது அந்த ஆலயத் தூணில் அமைந்திருந்த கந்திற்பாவை. முற்பிறவியில் கணவன் மனைவியாய் வாழ்ந்த போதும் இன்னும் பல பிறவிகளில் தாய் – சேய் உறவில் அவர்கள் வாழ்ந்ததையெல்லாம் நினைவூட்டி அவளைச் சற்றே அமைதிப் படுத்தியது. இனி இப்பிறவியில் அவளின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதையும் அவளுக்கு உணர்த்தியது. இளவரசனின் இறப்புக்குக் காரணமாக இருந்தாள் என அவளை மன்னவன் சிறையில் அடைக்கப்போவது, அரசி அவளைக் கொடுமைகளுக்கு ஆளாக்குவது, அவற்றிலிருந்து மீண்டு அவள் சாவகம் சென்று அங்கு இப்பிறவியில் புண்ணியராசன் எனும் பெயருடன் அரசாளும் ஆபுத்திரனைக் கண்டு, இருவரும் மணிபல்லவம் சென்று திரும்புவது, பின் அவள் வஞ்சி சென்று பல்வேறு சமயத்தினரின் கருத்துக்களுக்கும் செவிமடுப்பது, பெரும் பஞ்சத்தில் துயருற்றுக் கிடக்கும் காஞ்சி மாநகர் சென்று அமுதசுரபி கொண்டு அம்மக்களின் பசியாற்றுவது, அங்கே அவள் இப்பிறவி வாழ்வை முடித்துக் கொள்வது, அடுத்துப் பல பிறவிகளில் ஆண் மகனாகப் பிறந்து, இறுதியில் மக்களுக்கு அறநெறி அருளிவரும் புத்த தேவனை அடைந்து அவன் தலை மாணவனாயிருந்து, எல்லாப் பற்றுகளையும் அறுத்து இறுதி உய்வை அடைவது என அனைத்தையும் சொல்லி முடிக்கிறது அத் தெய்வம்.

இப்பிறவியில் மணிமேகலைக்கு உய்வில்லை. அவள் இன்னும் முழுமையாய் எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபடவில்லை. எனினும் இன்னும் பல பிறவிகளின் ஊடாக அவள் இறுதி விடுதலையைப் பெறுவாள் என்கிற உண்மையை உணர்த்தி, அவளது தற்காலிகத் துயரை நீக்கி எதிர்காலச் சவால்களுக்குத் தயார் செய்கிறது கந்திற்பாவை.

தெளிவுற்று நின்றிருந்த மணிமேகலையையும் வெட்டுண்டு கிடந்த உதயனையும் அங்கேயே மறைத்து வைத்துவிட்டு அரசனிடம் நடந்ததைச் சொல்ல விரைந்தனர் அங்கிருந்த தவசிகளும் பிறரும்.

சிறைசெய் காதை எனும் இப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கிளைக் கதை ஒன்றினூடாகச் சாத்தனார் சொல்கிற செய்திகள் மிக முக்கியமானவை.

மரபுப்படி அரசனை வாழ்த்தி அவனது மகன் இறந்த செய்தியைப் பக்குவமாக அவனுக்கு உணர்த்த மருதி, விசாகை எனும் இரு பெண்களின் வரலாற்றை அவர்கள் விரிவாகச் சொல்கின்றனர்.. கற்புறுதி தவறாத பெண்களைக் காம நோக்குடன் அணுகி அதனூடக உயிரை இழந்த இருவரின் வரலாற்றை அரசனும் பொறுமையுடன் கேட்கிறான்.,

வடபுலத்தில் சத்திரியர்களை வேரறுத்துப் பழி தீர்த்த பரசுராமன் தன் இறுதிக் காலத்தைத் தென்னாட்டில் கழித்தான் என அகநானூறில் ஒரு குறிப்பு உண்டு. அதை ஒட்டி சாத்தனார் விரிக்கும் வரலாறு பல செய்திகளைச் சொல்கிறது.  பரசுராமனின் வருகையை அறிந்த சம்பாபதித் தெய்வம் அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த காந்தன் எனும் மன்னவனை அணுகி பொதியமலையில் சென்று ஒளிந்து கொள்ளுமாறு எச்சரிக்கிறது. பரசுராமன் கண்டால் சத்திரியனான அவன் கொல்லப்படுவான் என்பதால் அரசன் அம்முடிவை ஏற்கிறான். எனினும் அரசுப்பொறுப்பை யாரிடமாவது ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அவன் சத்திரியனாகவும் இருக்கக் கூடாது. கணிகை ஒருத்தியுடன் தனக்குப் பிறந்தவனும், வீரத்தில் யாருக்கும் சளைக்காதவனுமான ககந்தனிடம் அரசை அளித்துவிட்டு அவன் அகத்தியன் வாழும் பொதிகைக்கு அகல்வான்.

அப்போது ஒருநாள் காவிரியில் நீராடி வந்துகொண்டிருந்தாள் மருதி எனும் ஒரு பார்ப்பனி. அவளைக் கண்டு காமுறுகிறான் ககந்தனின் மகன் ஒருவன். அவளை அணுகி தன் ஆசையை வெளிப்படுத்துகிறான். அது கேட்ட அவள் துடித்தாள். இந்த மண்ணின் மழை வளத்திற்குக் காரணமான கற்புடைய பெண்ணாகத் தான் இருந்திருந்தால் இப்படிப் பிறர் நெஞ்சு புகுந்திருப்பேனோ. இனி நான் எவ்வாறு முப்புரி நூலணிந்த என் கணவனோடு முத்தீயைப் பேணும் தகுதியுடையவளாக இருக்க முடியும் எனப் பலவாறும் கலங்குகிறாள் அந்தப் பார்ப்பனி.

கற்பெனப்படுவது பிறர்பால் மனம் செல்லாதிருப்பது மட்டுமன்று. கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமையும் கூட என இங்கே சொல்லப்படுகிறது. கற்பிற் சிறந்த பெண்ணாயினும் அவளைப் பார்த்து யாருக்கும் காம உணர்வு தோன்றக் கூடாது என்பது இதன் உட்கிடை.

பூதச் சதுக்கத்தை அடைந்த மருதி அங்கிருந்த தெய்வத்திடம் தனக்கு நேர்ந்ததைச் சொல்லிப் பு;லம்பினாள். அங்கிருந்த தெய்வம் அவளை விளித்து, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” எனும் குறளைச் சொல்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் காலத்தை நிர்ணயிக்க ஒரு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக அறிஞர்கள் இதைக் குறிப்பர். திருக்குறளுக்குப் பிந்தியதே மணிமேகலை என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுவர். மணிமேகலையை மிக விரிவாகவும் நவீனமாகவும் ஆய்வு செய்துள்ள பௌலா ரிச்மான், ஆனே மோனியஸ் முதலானோர் இதனூடாக வேறு சில சிந்தனைகளுக்கும் நம்மை இட்டுச் செல்கின்றனர்.

மணிமேகலை திருக்குறளுக்குப் பிந்தியது மட்டுமல்ல சங்க கால ஒழுங்கு, மதிப்பீடுகள், இலக்கியக் கொள்கைகள் எல்லாம் மாறி, ஒரு புதிய உலகம், புதிய நம்பிக்கைகள், புதிய ஒழுங்குகள், புதிய இலக்கியக் கொள்கைகள் உருப்பெறுவதற்கும் அது தொடக்கப் புள்ளியாய் அமைகிறது. கண்டதும் காதல், காதலை வெளிப்படுத்துதல், பரத்தையர் ஒழுக்கம், பெண் துறவு எனப் பல சங்க கால மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் மாறி எப்படி ஒரு புதிய சமூக ஒழுங்கு மேற்கிளம்புகிறது என்பதை மருதியின் கதையினூடாக நமக்குக் காட்டுகிறார் சாத்தனார். சங்க கால ஒழுங்கும் இலக்கிய மரபும் இங்கே கவிழ்க்கப்படுகின்றன என்பார் மோனியஸ். சங்கத்தின் “பாலை வெளியை வாழ்வின் நிலையாமை குறித்த ஒரு ஆழ்நிலைத் தியானமாக” மணிமேகலை மாற்றுகிறது என்பார் ரிச்மான். அதே நேரத்தில் தான் தமிழ் மண்ணையும், மரபையும் விட்டகலவில்லை என்பதையும் சாத்தனார் ஆங்காங்கே உறுதி செய்யத் தவறுவதில்லை. அதன் விளைவே தன் கருத்திற்கு அவர் “பொய்யில் புலவனை” மேற்கோளிடுவது எனலாம்.

ஒரு சிறுமி, அதிலும் கணிகையர் குலத்தில் தோன்றியவள் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் துறவேற்பது முதல், அரசனுக்கு அறமுறைத்து சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்குவது வரை சாத்தனார் செய்துள்ள புரட்சிகள் ஏராளம். அது மட்டுமன்று. இரட்டைக் காப்பியங்கள் என நாம் எப்போதும் மணிமேகலையை சிலப்பதிகாரத்துடன் இணைத்தே பேசிய போதிலும், சாத்தனார் மிகத் தாராளமாக சிலம்பின் முக்கிய பாத்திரங்களைத் தம் காவியத்தில் உலவ அனுமதித்தபோதும், இளங்கோவடிகளின் சில மதிப்பீடுகளையும் அவர் ஆங்காங்கு கலைத்துப் போடுகிறார். மணிமேகலை எனும் அச் சிறுமியை அவர் கண்ணகிக்குச் சமமான தவ ஆற்றலும், கற்பொழுக்கமும் கொண்டவளாகச் சித்திரிப்பது மட்டுமின்றி எல்லாவற்றிலும் சிறந்தது துறவொழுக்கமும் அறச் செயல்பாடுகளும்தான் என்பதையும் அவர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாமும், வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் சொல்லத் தவறுவதில்லை.

ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதாக முற்றிலும் ஊழுக்குப் பணிந்து போகிறவளல்ல மணிமேகலை ஊழ்வினையால். கணிகையர் குலத்தில் பிறந்தும், அதைத் தொழிலாகவும் வாழ்வாகவும் ஏற்காமல் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி அனைவருக்கும் வழிகாட்டும் வாழ்வொன்றைத் தனக்கென அமைத்துக் கொண்டவள் அவள். ஊழ்வினைக்குப் பணியாதவள் மட்டுமல்ல, ஊழ்வினை உருத்து வந்தூட்டும்போது ஆத்திரமுற்று சாபமிட்டு ஒரு பெருநகரையே தீக்கிரையாக்கி அழிப்பவளும் அல்ல. அந்தப் பைங்கொடி நங்கை ஊழ்தரு தவத்தள்; சாப சரத்தி; காமற் கடந்த வாய்மையள்.(5: 16,17). ஆம். அவள் கண்ணகி போலச் சாபத்தைத் ஓர் ஆயுதமாகக் கொண்டவள் ஆயினும். அவள் அதைப் பயன்படுத்தியவள் அல்ல. தன்னைத் துன்புறுத்திய அரசி திருந்தி அவள் காலடி வீழ முயலும்போதுத் துடித்து அணைத்துப் பணிபவள் அவள். மன்னர்கள் அவள் வேண்டுவவனவற்றைச் செய்து முடிக்கத் தயாராக நிற்கும்போது கண்ணகி பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் எழுப்பச் சொல்வாள். மாறாக மணிமேகலையோ புகாரில் தன் விருப்பை நிறைவேற்ற நின்ற சோழமன்னனிடமும், சாவகத்தை ஆண்ட புண்ணியராசனிடமும் புத்த சேதியங்களையோ, தூபிகளையோ கூட எழுப்பச் சொல்லவில்லை. ஒருவனிடம் சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கச் சொல்கிறாள். இன்னொருவனிடம் “மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும், உறையுளும் அல்லது” வேறெதுவும் வேண்டாம் எனச் சொல்லி அகல்கிறாள்.

stock-photo-thai-buddhist-temple-bangkok-thailand-wat-suthat-better-known-for-the-towering-red-giant-swing-636275087

பௌத்தம் வடக்கிலிருந்துவந்த ஒரு மதம் ஆயினும் அதற்கு ஒரு உள்ளூர்த் தன்மையை ஏற்றும் முகமாகவே சாத்தனார் பொய்யில் புலவனை மேற்கோள் இடுகிறார் எனவும் கூறுவர்; சோழ மன்னனை ஒரு பாத்திரமாகவும், புகார், வஞ்சி, காஞ்சி ஆகியவற்றைக் கதைக் களங்களாகவும் கட்டமைப்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.. அதே நேரத்தில் பௌத்தப் பிரபஞ்சம் இன்னும் விரிவானது என்பதைச் சொல்ல அவர் மணிபல்லவம் முதல் சாவகம் வரை செல்லுகிறார். அதே நேரத்தில் பௌத்த புண்ணியத் தலங்களான லும்பினியோ இல்லை புத்தகயையோ இங்கே முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தென் கிழக்காசியப் பகுதிகளை இணைத்து வேறொரு பௌத்தப் பிரபஞ்சம் இங்கே முன்வைக்கப்படுகிறது. பாலி அல்லது சமஸ்கிருதம் என்பவையாக அல்லாமல் தமிழை இந்தப் புதிய பிரபஞ்சத்தின் இலக்கிய மொழியாக முன்னிறுத்தவும் செய்கிறார். இலக்கிய மொழித் தேர்வு குறித்து ஷெல்டன் பொல்லாக் சொல்வதை ஆனே மோனியஸ் இங்கு நினைவூட்டுவார். இலக்கிய மொழித் தேர்வு என்பது பழைய தொடர்புகள் சில கைவிடப் படுதலையும், புதிய தொடர்புகள் சில உருவாவதையும் புதிய அடையாளங்கள் சில உறுதியாவதையும் குறிக்கும். சமஸ்கிருதத்தின் இடத்தில் தமிழ் ஒரு விரிந்த பிரபஞ்ச மொழியாக அமையும் சாத்தியம் இங்கே முயற்சிக்கப்படுகிறது

பௌத்தம் தமிழை இப்படி ஒரு விரிந்த பகுதியின் இலக்கிய மொழியாக்க முயற்சித்தது என்றால் இன்னொரு பௌத்த நூலாகிய வீர சோழியம், அதற்கு முந்திய சமணப் பின்புலத்தில் உருவான இலக்கண நூல்களிலிருந்து வேறுபடும் புள்ளி ஒன்றும் இத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது. முந்திய இலக்கண நூல்கள் சமஸ்கிருதத்துடன் உறவாடும்போது உருவாகும் மொழிக் கலப்பைப் பற்றிப் பேசும்போது வீரசோழியம் சிங்கள மொழியுடன் கூடிய மொழிக் கலப்பைப் பற்றிப் பேசத் துணிவது இப்படித்தான் என்பார் மோனியஸ். கிறிஸ்தவம், இஸ்லாம் போல பௌத்தம் ஒரு பன்னாட்டு மதம் என்பது குறிப்பிடத் தக்கது. பாலி மொழியிலேயே பௌத்த நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி சமஸ்கிருதத்தில் அவை எழுதப்படும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில் சாத்தனார் அந்த இடத்தில் தமிழை வைக்க முயற்சிக்கிறார் எனவும் இதைக் கொள்ளலாம்.

தமிழுக்கு அப்பாலிருந்த இலக்கிய மூலங்களைத் தமிழ்க் காப்பிய உருவாக்கத்திற்குப் பயன்படுத்தும் முகமாய்த் தோன்றிய முதல் நூல் மணிமேகலை. தொடர்ந்து குண்டலகேசி, சீவகசிந்தாமணி, பெருங்கதை, விம்பிசாரகதை, இராமாயணம் எனப் பல பிற மொழி இலக்கியங்கள் தமிழுக்கு வரலாயின. இதில் பலவும் பௌத்த சமண நூல்களாகவே இருந்தன. தம்மபதம், தேரிகாதை முதலானவற்றுக்கான உரை நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படும் கதைகளும் இவ்வாறு தமிழில் காவியங்களாயின. ‘பத்தா குண்டலகேசா’ தான் குண்டலகேசி எனவும் புத்தரை ஆதரித்த மன்னன் பிம்பிசாரனின் வரலாறுதான் விம்பிசாரகதையாகவும் இருக்க வேண்டும் என்பர்.

bs 4

இவ்வாறு பிறமொழி இலக்கியச் செல்வங்கள் தமிழுக்கு வரவும் சமண பௌத்த மதங்கள் முன்னோடியாக அமைந்தன.

(அடுத்த இதழில் மணிமேகலை சிறைப்படுதலும் விடுதலை பெற்று ஆபுத்திரநாடு அடைதலும்)