ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்

ippodhu.com, Nov 10, 2016

“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”

(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள  அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின்  மொழிபெயர்ப்பு அல்ல)

  1. 1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.
  2. இந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.
  3. ‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்? கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.
  4. ஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.
  5. எந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.

    6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.

    7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.

  6. எனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்?
  7. 1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  8. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.
  9. கடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்

பேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.

உண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.

இப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது  மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும்? ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா?

இன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள்  செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.