அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?

(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்)

பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே வினையாற்றி வருகிற அ.மா, ஈழப்போர் அதன் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து, ஒரு உரையாடலுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். போருக்குப் பிந்திய அந்த மயானவெளிக்குள் இரண்டுமுறை பயணம் மேற்கொண்ட அவர், தற்போது மூன்றாவது முறையாக கடந்த 8.2.13 அன்று பல்வேறு கருத்தரங்க விவாதங்களில் பங்கேற்பதன் பொருட்டு சென்றிருந்தார்.

முதல்நாள் கூட்டத்திலேயே இலங்கை அரசு அதிகாரிகளால் அவரது பேச்சிற்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மற்ற கருத்தரங்கக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக இலங்கைப் பயணத்திற்குப் பின்பு ‘என்ன நடக்குது இலங்கையில்’ என்று தனது பார்வைகளை அம்பலப்படுத்தும் அ.மா.விடம், ‘என்ன நடந்தது இலங்கையில்’ என்பது குறித்து விவாதிப்பதற்காய் சென்னை திரும்பிய அவரைச் சந்தித்தோம். இலங்கை அரசின் தடை, தொடரும் அதிகார அத்துமீறல்கள், வரவிருக்கும் ஐ.நா.தீர்மானம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே..

தீராநதி : தோழர்.நா.சண்முகதாசனின் இருபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரை ஆற்றுவதற்காகத் தான் நீங்கள் இலங்கை சென்றதாக அறிகிறோம். முதலில், தோழர் சண்முகதாசன் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்..

அ.மா : நா.சண்முகதாசன் என்றொரு தமிழர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்ததெல்லாம் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகளாவிய பொதுவுடைமை இயக்கப் பிளவின்போது அவர் மாஓ பக்கம், அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். மாஓ உடன் நெருங்கிப் பழகியவர் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எண்பதுகளில் கைலசாபதி, சிவத்தம்பி ஆகியோரது நூல்களை எல்லாம் நாங்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஆவலுடன் படித்த நூல்களில் ஒன்று சண்முகதாசனின் மார்க்சீயப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இலங்கை வரலாறு.

அவர் உருவாக்கிய செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு தொழிலாளர் இயக்கம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் என்றும் அவருக்கு ஒரு பெயருண்டு. ஒரு கட்சித் தலைவராக மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எது குறித்தும் ஆழமாக உடனுக்குடன் கருத்துக்கள் சொல்லவும் எழுதவும் வல்லவராகவும் அவர் இருந்தார். இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்புகளாகவும் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதி, தீண்டாமைக் கொடுமைகளைக் கவனத்தில் எடுத்து, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றைக் கட்டியது அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவரைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டவர். அவர் மூலமாக எனக்கு ‘சண்’, ஆம் அவர் இலங்கை மக்கள் மத்தியில் அப்படித்தான் அறியப்பட்டிருந்தார் எண்பதுகளின் தொடக்கத்தில் பழக்கமானார். 83 கருப்பு யூலைக்குப் பின் தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் அவர் சென்னை வந்திருந்தபோது, சிறிய சந்திப்பு ஒன்றைச் சென்னை விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தோம்.

தீராநதி : சரி. அவரது நினைவுப் பேருரையில் கலந்துகொண்டது, உங்கள் பேச்சு தடை விதிக்கப்பட்டது பற்றி கூறுங்கள்…

அ.மா : அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் பெயரில் இயங்கும் ‘மார்க்சீயக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்’ அவரது இருபதாம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்திருந்தது. அவரது நூல் தொகுப்பு ஒன்றும் அதில் வெளியிடப்பட இருந்தது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் செந்தில்வேல், அஜித் ரூபசிங்க, எழுத்தாளர் சிவசேகரம் ஆகியோர் பேச இருந்தனர். சண்ணின் இறுதிக் காலம் வரை அவரோடு இருந்தவரும், தொடர்ந்து அவரது நூல்களை மொழியாக்கி வெளியிட்டு வருபவருமான ‘தினக்குரல்’ நாளிதழ் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். புகழ் பெற்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தற்போதைய தலைவர் பேரா. சபா. ஜெயராசா தலைமையில் சென்ற 10ந்தேதி மாலையில் நடை பெற இருந்த கூட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை அரசின் நான்கு ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து நான் பேசக் கூடாது என்றார்கள்.

தீராநதி : உங்கள் உரையின் தலைப்பு அப்படியொன்றும் இலங்கை அரசை நேரடியாக விமர்சிப்பது கூட இல்லையே.. உங்களை அழைத்து ஏதும் விசாரித்தார்களா?

அ.மா : என்னிடம் ஏதும் பேசவில்லை. தனபாலசிங்கம் மற்றும் ஜெயராசா ஆகியோருடந்தான் பேச்சு நடந்தது. அவர்களுக்கு ஏதோ புகார் வந்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் விசாரித்தபோது அது உண்மை எனத் தெரிந்ததாகவும் எனவே நான் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். எந்த விதி அல்லது சட்டத்தின் கீழ் பேசக்கூடாது எனக் கேட்டபோது ‘டூரிஸ்ட்’ விசாவில் வந்தவர்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்றார்கள்.

தீராநதி : நீங்கள் ஏன் டூரிஸ்ட் விசாவில் சென்றீர்கள்? ‘கான்ஃபெரன்ஸ்’ என விசா வாங்கி இருக்கலாம் தானே?

அ.மா : நான் இதுவரை பலமுறை வெளிநாடுகள் சென்றுள்ளேன். எல்லாமே கூட்டங்களில் பேசுவதற்காகத்தான். டூரிஸ்ட் விசாவில் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் அப்படித்தான் எல்லோரும் போய் வருகிறார்கள், இலங்கைக்கும் அப்படித்தான் இரு முறை சென்று வந்தேன். கூட்ட அழைப்பிதழைக் காட்டி விசா கேட்டால், என்ன கூட்டம், யார் ஏற்பாடு, நீங்கள் பேசப் போவதை எழுதித் தாருங்கள் என்றெல்லாம் விசாரணை நடக்கும். கால தாமதம் மட்டுமின்றி அந்த அடிப்படையில் விசா மறுக்கவும் படலாம். அதனால் ட்ராவெல் ஏஜன்சிகளே, “நீங்க ஏன் சார் அதை எல்லாம் சொல்றீங்க? எல்லோரும் டூரிஸ்டுன்னு சொல்லித்தான் போய் வராங்க. நீங்களும் அப்படியே போடுங்க” என்பார்கள்.

தீராநதி : சரி, அப்புறம் என்ன நடந்தது?

அ.மா : தனபாலசிங்கமும் ஜெயராசாவும் விளக்கிச் சொன்னார்கள். ஏற்கனவே நான் சிவத்தம்பி நினைவுரைக்கு வந்ததையும், இப்போதும் கூட அடுத்த சில நாட்களில் தமிழ்ச் சங்கத்திலேயே, “சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இரட்டைக் காப்பியங்கள்” என நான் உரை நிகழ்த்த இருப்பதையும், கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் நான் பேச இருப்பதையும் விளக்கிச் சொன்னார்கள். வந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர் தமிழர். தன்னை ஜெயராசாவின் மாணவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. மேலிடத்து ஆணை” என்றார்கள். சரி மேடையிலாவது அமரலாமா? எனக் கேட்டபோது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு அதுவும் கூடாது என்றார்கள். ஆனால் கூட்டம் நடத்தத் தடை இல்லை நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். சரி அரங்கத்தில்கூட அவர் இருக்கக் கூடாதா எனக் கேட்டபோது மறுபடியும் யாருடனோ பேசிவிட்டு இருக்கலாம் என்றார்கள். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டபின்பே சென்றார்கள். தொடர்ந்து உளவுத் துறையினர் கூட்டத்தைக் கண்காணித்தனர்.

தீராநதி : இந்தத் தடை தமிழர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

அ.மா : சண் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. என்னுடைய உரை அச்சிடப்பட்டுத் தயாராக இருந்தும் வினியோகிக்கப்படவில்லை. வந்திருந்தவர்களில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலியோரும் இருந்தனர். சேகு தாவூத் முன்னாள் ‘ஈரோஸ்’ காரார். நிறப்பிரிகை வாசகர். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் ஏதாவது ஒரு கூட்டத்திற்கு வந்து விடுவார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆறுதல் சொல்ல மட்டுந்தான் முடிந்தது. ராஜபக்‌ஷே குடும்பத்தைத் தவிர அங்கு கேபினட் அமைச்சர்கள் உட்பட அங்கு யாருக்கும் அதிகாரமில்லை. கைகளைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்த மனோ கணேசன், “பரவாயில்லை விடுங்கள். நீங்கள் பேசியிருந்தால் இந்த முன்னூறு பேரோடு போயிருக்கும். இப்போது மூவாயிரம் பேருக்குச் செய்தி போயுள்ளது” எனக் கூறி அகன்றார். உடனடியாக, முகநூல் ஆகியவற்றின் ஊடாகச் செய்தி பரவியது. பி.பி.சி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களிலிருந்து என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நடந்ததைத் தவிர கூடுதலாக நான் எதையும் கூற மறுத்துவிட்டேன். லெனின் மதிவானம், ஃபர்சான் ஆகியோருடன் தொடர்புகொண்டு மலையகத்திலும், கிழக்கிலும் நடக்க இருந்த கூட்டங்களை ரத்து செய்தேன். கிழக்குப் பல்கலைக் கழக நண்பர்களிடமும் பேசி ரத்து செய்யச் சொன்னேன்.

தீராநதி : உங்கள் வருகை குறித்து அரசிடம் யாரோ புகார் அளித்ததாகச் சொன்னீர்கள். இந்த புகாரின் அடிப்படையில் தான் தடை விதிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? உங்களின் மற்ற கூட்டங்கள் என்னவாயின?

அ.மா : இதுவரை நான் சென்ற போதெல்லாம் அங்கு கூட்டங்களில் பேசும்போது நேரடியாக அரசை விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால் இங்கு வந்தபின் அங்குள்ள சூழலை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை அரசின் கவனத்திற்குச் சென்றதை அறிவேன். தீராநதியில் நான் ‘என்ன நடக்குது இலங்கையில்’ தொடர் எழுதியபோது முதல் இதழுக்குப் பின் இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் வந்த இதழ்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படவில்லை. நண்பர்கள் கடிதம் எழுதி இங்கிருந்து பிரதிகள வாங்கினார்கள். நான் வந்து சென்ற பிறகு கூட்டம் நடத்திய சிலரிடம் என் வருகை குறித்து விசாரித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கார்கில் யுத்தம் நடந்தபோது நான் அது குறித்து ‘சரிநிகர்’ இதழில் எழுதியபோது இந்திய தூதரக அதிகாரிகள் வந்து விசாரித்ததைச் சரிநிகர் நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தபாலில்தான் கட்டுரைகள் அனுப்புவேன். இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் அவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. ஜூ.வியில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் அப்படியே அங்கு மீள்பிரசுரமானது.

யார் புகார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. பல ஊகங்கள் உள்ளன. அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மௌனகுருவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: ‘சரி விடுங்க மார்க்ஸ். இதுவும் நல்லதுக்குத்தான். உங்களைப் பற்றி உங்க ஊரில் அரசாங்க ஆதரவுடன் வந்து போறீங்கன்னு சிலர் ஏதாவது எழுதுவாங்கதானே. இப்ப அவங்க ஒண்ணும் பேச முடியாதில்லே..” என்றார். நான் சொன்னேன்: “சார் என்னைப் பத்தி அப்படியெல்லாம் எழுதுறவுங்க உண்மை தெரியாம எழுதுறதில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் எழுதுவாங்க. இப்ப கூட, ‘இது ராஜபக்‌ஷேவும் அ.மார்க்சும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி’ன்னு எழுதினாலும் எழுதுவாங்க” என்று சொல்லிச் சிரித்தேன்.

பொதுக் கூட்டங்கள் ரத்தானாலும் மலையகத்திலும் கிழக்கிலும் நண்பர்களின் வீடுகளில் சந்திப்புகள் நிகழ்ந்தன. கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பள்ளியிலும், காத்தான்குடியில் விபுலானந்தர் பெயரில் இயங்கும் நுண்கலைத் துறையிலும், கிழக்குப் பல்கலைக் கழக ஸ்டாஃப் டெவெலப்மேன்ட் சென்டரிலும் சந்திப்புகள் நடந்தன.

தீராநதி : இப்போது அங்கு நிலைமைகள் எப்படி உள்ளன? ஐ.நா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் அங்கே ஏதாவது அச்சத்தை உருவாக்கியுள்ளதா?

அ.மா : நிச்சயமாக ஒரு அச்சம் உருவாகித்தான் உள்ளது. ராஜபக்‌ஷேவின் இந்திய வருகை இந்திய அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப்படாமை குறித்தும் பத்திரிகைகள் எழுதின. இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் தூதுவர் நவனீதம் பிள்ளை ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருப்பது குறித்தும், பிரிட்டன் வெளி விவகார இணை அமைச்சர் அலிஸ்டெர் பேர்ட் வடக்கில் நிலைமை சீரடையவில்லை, இராணுவ இருப்பு குறையவில்லை என்றெல்லாம் எழுதியுள்ளது குறித்தும் அங்கு விரிவாகச் செய்திகள் வெளிவந்தன. வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்லெவ போன்றோரும் சில பிக்குமார்களும் வீரம் பேசுவதும் கூட ஒருவகை அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு எந்த வகையிலும் தன் போக்குகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமை அவை கூட உள்ள சூழலில் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகா பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ பக்‌ஷே குடும்ப விசுவாசி ஒருவர் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். அரசால் கடத்திக் கொல்லப்பட்ட லசந்த விக்ரமசிங்க ஆசிரியராக இருந்த அதே ‘சண்டே லீடர்’ இதழின் இன்றைய உதவி ஆசிரியர் அஸ்கர் பரான் சவுகத் அலி நான் அங்கிருந்தபோது சுடப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ‘தினக்குரல்’ நாளிதழ் விற்பனை முகவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மீள்குடியேற்றம் நிகழவிடாமல் இராணுவம் தமிழ்ப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதற்கு ஏதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறுகின்றன. நான் அங்கிருந்தபோது இவ்வாறு வலிகாமம் வடக்கில் முப்பதாயிரம் பேர் குடியமர்த்தப்படாமல் இருப்பதைக் கண்டித்துத் தெல்லிப்பழையில் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடந்தது, அரசுக்கு எதிராக உருவாகியுள்ள பத்து கட்சிக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்ணாவிரதத்திலும் இறுதியாகச் சிலர் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இவர்கள் வடபகுதி இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்ருசிங்கவின் கூலிப் படையினர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் குற்றம் சாட்டினார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொண்டு ஏராளமாகப் பிள்ளை பெற்றுக் கொள்வதாக பவுத்த பிக்குகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். ‘ஹலால்’ முத்திரை குத்திப் பொருட்களை விற்கக் கூடாது என பிக்குகளின் ‘பொது பல சேனா’ என்கிற அமைப்பு கெடு விதித்துப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மாத்தளையில் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் இந்திய அரசால் அதன் கடுமைகள் எல்லாம் நீர்க்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது. ராஜபக்‌ஷே அரசே நியமித்த மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி அந்த அரசே ஒரு குழுவை அமைத்து போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம். இதை விட எளிமையாக என்ன தீர்மானம் இருக்க முடியும். அதைக் கூடச் செய்ய மறுக்கிறது இலங்கை அரசு. கிரிசாந்த டி சில்வா என்ற இராணுவத் தளபதி ஒருவர் தலைமையில் படைத் தளபதிகளின் குழு ஒன்றை அமைத்து ‘விசாரணை’ ஒன்று நடத்தப்பட்டு அந்த அறிக்கை சென்ற வாரம் தலைமைத் தளபதி ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டது.. இலங்கை இராணுவம் எதுவுமே செய்யவில்லை எனவும், புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. யார் விசாரிக்கப்பட வேண்டியவர்களோ அவர்களே தம்மை விசாரித்துக் குற்றம் அற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் அதிசயம் இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்காது.

தீராநதி : சேனல் 4 வீடியோ ஆதாரங்கள், சர்வதேச நெருக்கடிகள், மனித உரிமைப்புகளின் கண்டனங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசு இத்தனை துணிச்சலாக அதிகாரத்தை உமிழ்வதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

அ.மா : பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த அதே நாளில் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டிலும் கூட பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்றுள்ளது என்பதுதான் அது. நான் அங்கிருந்தபோது நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அமைதி நிலவுகிறது என்று பேசினார். மிலோசெவிக் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டது போலத் தன் மீது நடத்துவது சாத்தியமில்லை என ராஜபக்‌ஷே நம்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினர் கிடையாது. எனவே ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதலுடன்தான் ராஜபக்‌ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலும். அதற்கு சீனா, ருஷ்யா முதலிய நாடுகள் சம்மதிக்காது என்பது ராஜபக்‌ஷேக்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுதல்.

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா இலங்கைப் பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காது. இந்து மகா சமுத்திரம் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்தியாவும் அமெரிக்காவும் ‘strategic partners’. இலங்கைத் தீவின் கீழும் மேலும், அம்பாந்தோட்டவிலும், மன்னாரிலும் சீனா உறுதியாகக் கால் பதித்துள்ளது. பத்தாயிரம் சீனக் கைதிகள் இன்று இலங்கை முழுதும் பல்வேறு பணிகளில் உள்ளனர். கட்டுநாயக்கா உயர் வேகப் பாதை உட்பட பல கட்டுமானப் பணிகளை இன்று சீனா இலங்கையில் செய்து வருகிறது. மலேசியாவுக்கு அடுத்தபடியாக இன்று மிக அதிக அளவு இலங்கையில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா. அவ்வளவு எளிதாக இவர்கள் எல்லாம் நம்மை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ராஜபக்‌ஷேக்களுக்கு.

தீராநதி : அப்படியானால் வரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்கிறீர்களா?

அ.மா : நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆனால் இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளித்து விஷயம் முடிக்கப்படுமோ என்பது நமது அச்சம். உண்மையிலேயே இன்றைய சூழலில் இலங்கை மீதான நடவடிக்கையின் உச்சபட்சமான சாத்தியம் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு அதற்கு இந்திய அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். நேற்று சானல் 4 வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றை உறுதி செய்கின்றன. கடைசி நேரத்தில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது ஏதோ போரின் ஊடான தாக்குதலில் அல்ல என்பதுதான் அது. இது பிடித்து வைத்து systematic ஆகச் செய்யப்பட்ட படுகொலை. இந்தக் கொலைகளுக்கான command responsibility மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷேக்களுக்கும் அன்றைய தளபதி ஜெனெரல் ஃபொன்சேகாவிற்கும் உண்டு. அந்த வகையில் அவர்கள் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்படத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். புலிகளும் செய்தார்கள் நாங்களும் செய்தோம் என்று அவர்கள் சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கூற்றுப்படி புலிகள் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே நானும் செயல்படுவேன் என ஒரு அரசு எப்படிச் சொல்ல முடியும்?

மேலும் ஓராண்டு கால அவகாசம் என்பதாக இல்லாமல் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறியுள்ளபடி போர்க் குற்றங்கள் மற்றும் காணமலடிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தை நீர்க்கச் செய்யாமல் நிறைவேற்றுவதற்கு இந்தியா மனப்பூர்வமாகச் செயல்படவேண்டும். செயல்படுமா?!!