நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்

(மார்ச் 16, 2016 ல் எழுதப்பட்ட இக்கட்டுரை ippodhu.com ல் அப்போது வெளிவந்தது) 

‘நல்ல முஸ்லிமையும்’ ‘கெட்ட முஸ்லிமையும்’ பிரித்தறிய இப்போது இந்துத்துவவாதிகள் ஒரு புதிய ‘ஈஸி’யான சூத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ‘பாரத் மாதா கி ஜே” என யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் நல்ல முஸ்லிம்கள். எவ்வளவுக்கெவ்வளவு சத்தமாகச் சொல்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு ரொம்ப நல்ல முஸ்லிம்கள். யார் இதைச் சொல்ல மறுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கெட்ட முஸ்லிம்கள்.இதுதான் இப்போது நல்ல முஸ்லிம்களைக் கண்டறிவதற்கான ‘லிட்மஸ் டெஸ்ட்’ இதை பாஜக நடிகர் அனுபம் கெர் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

இந்தச் சோதனையில் சமீபத்தில் வெற்றி பெற்று நல்ல முஸ்லிம்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இந்தித் திரைப்பட உலகில் புகழ்பெற்ற கவிஞர், திரைக் கதாசிரியர் ஜாவேத் அக்தரும், சமீபத்தில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘அனைத்திந்திய உலமா மற்றும் மஷாய்க் வாரியத்தால்’ நடத்தப்பட்ட ‘உலக சூஃபி மாநாட்டில்’ கூடியிருந்த முஸ்லிம்களுந்தான்.
மாநிலங்களவை உறுப்பினரான ஜாவேத் அக்தார் தனது பதவி இறுதிநாளில் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையில் மூன்று முறை “பாரத் மாதா கீ ஜே!” என முழக்கமிட்டு தான் ஒரு ‘தேஷ் பிரேமி’ என்பதை நிரூபித்துக் கொண்டார். சூஃபி மாநாட்டில் கூடியிருந்த முஸ்லிம்களோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நரேந்திர மோடி “இஸ்லாம் சமாதானத்திற்கான மதம்” எனச் சொன்னபோதெல்லாம் “பாரத் மாதா கி ஜே !” என முழக்கமிட்டுத் தாங்கள் நல்லவர்கள் என நிறுவிக்கொண்டனர்.

ஜாவேத் அக்தார் மற்றும் உலக சுஃபி மாநாட்டைக் கூட்டிய உலமாக்களின் இந்த பாரத் மாதா முழ்க்கம் பற்றி விரிவாக எழுதியுள்ள ஜாவேத் ஆனந்த் சொல்லியுள்ளது போல நல்ல வேளையாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் யாரும் தொப்பி எதையும் மோடியிடம் கொடுத்து அணிந்துகொள்ளச் சொல்லவில்லை. அப்படி முன்பு ஒருமுறை தந்தபோது அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை யாரோ அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

இவர்களின் இந்த ‘நல்ல முஸ்லிம்’ சோதனையில் சமீபத்தில் தோற்று ‘தேஷ் துரோகி’ ஆகி இருப்பவர்கள் ‘அனைத்திந்திய மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன்’ (AIMIM) அமைப்பின் தலைவர் அஸதுத்தீன் உவைஸியும் அவரது கட்சியின் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரான வாரிஸ் பதானும்தான். “ஜெய் ஹிந்த் எனச் சொல்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் பாரத் மாதா கி ஜே எனச் சொல்வதற்கு எங்கள் நம்பிக்கையில் இடமில்லை” என்பது அவர்கள் நிலைப்பாடு.

இதற்காக அவர்கள் மிகக் கடுமையாக இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர். வாரிஸ் பதான் இதை மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கூறியபோது சிவசேனை எம்.எல்.ஏ குலாப்ராவ் படீல், “இந்த நாட்டில் இருக்க வேண்டுமானால், நாய்களே, நீங்கள் வந்தே மாதரத்தைப் பாட வேண்டும்” என்றார். இரண்டு நாள் கழித்து காங்கிரஸ்காரர்கள் கேட்டுக் கொண்டதை ஒட்டி அவைத் தலைவர் இந்த வரிகளை சட்டமன்றப் பதிவிலிருந்து நீக்கினார். இந்தப் பாரத் மாதா கீ ஜே பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாடும் பாஜகவின் நிலைப்பாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஒருவர்தான் இதைக் கண்டித்துள்ளார்.

ஆக,விடுதலைப் போராட்டத்தில் ஒரு புல்லையும் கூடப் பிடுங்கிப் போடாதவர்களும், வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துப் பிழைத்தவர்களுமான சங்கப் பரிவாரிகள் இன்று இந்த ‘பாரத் மாதா கீ ஜே’ சோதனையை நடத்தி எல்லோருக்கும் தேசபக்தர் மற்றும் தேசத் துரோகி சான்றிதழ்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனந்த் தன் பதிவில் மறந்துபோன சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்கிறார்.

ஜாவேத் அக்தரைப் பொருத்த மட்டில் அவர் மத இணக்கம் பேணும் பாரம்பரியத்தில் வந்தவர். மற்ற மதங்களையும், சக நம்பிக்கையாளர்களையும் சமமாக அணுகி ஏற்கும் ஒரு பாரம்பரியம் இந்தித் திரைப்பட மரபில் வந்த உருதுக் கவிஞர்களுக்கு உண்டு. பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானில் குடியேறிய சாதத் ஹஸன் மன்டோ, ஃபெய்ஸ் அகமத் ஃபெய்ஸ் உட்பட இந்தியாவிலேயே வாழ்ந்த, வாழ்ந்து வருகிற சாஹிர் லுத்வானி, கைஃபி ஆஸம், மஜ்ரு சுல்தான்புரி, ஜன்நிசார் அக்தார், மஜாஸ் என்றொரு பட்டியலைச் சுட்டிக்காட்டுகிறார் சபா நக்வி. இவர்களில் பலர் 1930 களில் புகழ்பெற்றிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தவர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். ஒன்றாக இருந்த கம்யுனிஸ்டுக் கட்சியிலும் இருந்தவர்கள்.

ஜாவேத் அக்தர் ஜன்நிஸார் அக்தரின் மகன், கைஃபி ஆஸ்மி அவரது மாமனார். மஜாஸ் அவரது தாய்மாமன்.

எல்லாம் சரிதான். ஜாவேத் அக்தர் அவர்களே நீங்கள் இப்படியான ஒரு பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் ஒன்றை மறந்து போனீர்கள். இது 1930 கள் அல்ல. இது உங்கள் தந்தை ஜன்நிஸார் அக்தர் வாழ்ந்த காலமல்ல. இது வெறுப்பு அரசியல் அரியணையில் ஏறியுள்ள காலம். ஒரு கையில் தேசபக்திச் சான்றிதழுடனும் இன்னோரு கையில் கொலை ஆயுதங்களுடனும் பரிவாரிகள் அலையும் காலம். “‘பாரத் மாதா கீ ஜே’ எனச் சொல்லாவிட்டால், நாய்களே, நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்கிற குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் காலம். இந்த கருத்துரிமைப் பறிப்பை எதிர்த்து இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் தம் விருதுகளைத் துறந்து நிற்கும் காலம், உயர் கல்வி மாணவர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறைகளில் அடைக்கப்படும் காலம்…..

உலக சூஃபி மாநாடு கூட்டி நரேந்திர மோடிக்கு விருந்து வைக்கும் உலமா மற்றும் மஷாய்க் வாரியப் பெரியவர்களே நீங்களும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்த, மத நம்பிக்கைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறைத்த பாரம்பரியத்தில் (syncretic tradition) வந்தவர்கள்தான். மத ஒற்றுமையின் சின்னங்களாக டெல்லியிலும், ஆஜ்மீரிலும் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா மற்றும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி ஆகியோரின் அடக்கத் தலங்களைத் தேடி வரும் இலட்சக் கணக்கான மக்களின் வருகையால் பெருமையுற்றவர்கள் நீங்கள்.

நீங்களும் ஒன்றை மறந்துவிடலாகாது. ஹஜ்ரத் நிஜாமுதின் அவர்கள் எட்டு சுல்தானின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் எந்த அதிகாரத்தையும் தன் அருகே அவர் அண்ட விட்டதில்லை. அவர்களின் அரசவைக்கு அவர் சென்றதுமில்லை. சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் அவன் எப்படியாவது ஹஜ்ரத் அவர்களைத் தரிசித்துவிட முயன்றான்.மாறுவேடத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அவன் செல்லத் திட்டமிட்டிருந்ததை ஹஜ்ரத் அவர்களின் முக்கிய சீடரும், கில்ஜியின் அரசவையில் அதிகாரியாகவும் இருந்த அமிர் குஸ்ரோ ஹஜ்ரத் அவர்களுக்குத் தெரிவிக்க அவரும் கில்ஜி வரும் நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அமிர் குஸ்ரோவின் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் போது அவர் சொன்னார் : “எனக்கு முன் இரண்டே தேர்வுகள்தான் இருந்தன. ஒன்று நான் ஹஜ்ரத்துக்குத் துரோகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நான் என் ‘ஈமானை’ (நம்பிக்கையை) இழப்பேன்.. அல்லது உங்களுக்குத் துரோகம் இழைக்க வேண்டும். அப்போது நான் என் ‘ஜான்’ ஐ (உயிரை) இழப்பேன். நான் விரைவில் ஜானை இழந்து என் ஈமானைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்”.
கில்ஜி அமீர் குஸ்ரோ மீது சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டை மன்னித்தார் என்பது வரலாறு. இங்குள்ள பல சூஃபி மரபுகளில் (சில்சாலா) அதிகாரத்தை அண்டவிடாதவையும் இருந்தன, சமரசம் செய்து கொண்டவையும் இருந்தன. ஆனால் ஹஜ்ரத் நிஜாமுதீனும், க்வாஜா அகமத் சிஸ்டியும் எந்நாளும் அதிகாரத்துடன் சமரசம் செய்துகொண்டதில்லை.

சூஃபி மரபைப் பின்பற்றி வரும் ஒருவர் இந்த வரலாற்றை எல்லாம் சொல்லி, “இன்று உலக சூஃபி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்ததன் மூலம் அழைத்தவர்கள் தங்கள் ஈமானை இழந்தார்களோ இல்லையோ நிச்சயம் தங்களின் சில்சாலாவை இழந்தனர்” என்று முடித்ததையும் இது குறித்த தன் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார் ஜாவேத் ஆனந்த்.

அஸஸுத்தீன் உவைசி இன்று இந்திய அளவில் வளர்ந்து வரும் ஒரு முஸ்லிம் தலைவர். ஒரு நல்ல நாடாளுமன்றச் செயல் வீரர். முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியை துணிச்சலாக எதிர்கொள்பவர். எனினும் அவரது வழிமுறைகளில் ஒருவருக்குக் கருத்து மாறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் ஒப்பீட்டளவில் சூஃபி மரபின் மீதும், இஸ்லாமிற்குள் மத நல்லிணக்கத்திற்கு முதன்மை அளித்துச் செயல்பட்டு வரும் ஜாவேத் அக்தார் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையையும் நெருக்கத்தையும் பேணும் எங்களைப் போன்றவர்களும்…….. மன்னிக்கவும் ஜாவேத் அக்தார் அவர்களே, உலக சூஃபி மாநாட்டைக் கூட்டிய உலமாக்களே, உங்களோடு சேர்ந்து கொண்டு இந்த ‘பாரத் மாதாகி ஜே முழக்கத்தை ஒலிக்க நாங்கள் தயாராக இல்லை.