ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்

(‘சண்டே இந்தியன்’ இதழுக்காக அப்பண்ணசாமி செய்த நேர்காணல்)

ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தற்போது ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. ஆனால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ஒரு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கியது. இப்போது அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது எனப் போராடும் மாணவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என ‘டெசொ’ கடை அடைப்பு நடத்துகிறது. ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருப்பது ஏன்?

அமெரிக்கத் தீர்மானத்தால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்பது நாம் முன்பே ஊகித்ததுதான். “இன்னொரு ஆண்டு கால அவகாசம் கொடுத்து ஊத்தி மூடப் போகிறார்கள்” என இரண்டு வாரம் முன்பு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். மே 2009 கடைசி நேரப் போரை ‘சாடர்லைட்’ மூலம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த நாடுகள்தான் அமெரிக்காவும் இந்தியாவும். கடைசி நேரம் வரை இரண்டு நாடுகளும் இலங்கை அரசுக்கு உதவி செய்து கொண்டும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இதே போன்ற மனித உரிமை மீறல்களைச் செய்தவை மட்டுமல்ல செய்து கொண்டிருப்பவையும் கூட. இன்று இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதென்பதெல்லாம் போர் மற்றும் கடல் வழி முக்கியத்துவம் வாய்ந்த இந்து மகா சமுத்திரப் பகுதியில் யார் அதிகாரம் செலுத்துவது என்கிற அரசியலின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதற்கெல்லாம் அப்பால் மனித உரிமைகளை நிலை நாட்டுவதில் அமெரிக்காவுக்கோ இந்தியாவிற்கோ எந்த அக்கறையும் கிடையாது. எனவே அமெரிக்கா பெரிதாகத் தீர்மானம் கொண்டு வந்து ராஜபக்‌ஷே அரசை இனப்படுகொலை செய்த நாடாகவும் போர்க் குற்றவாளியாகவும் நிறுத்தி விசாரிக்கும் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். இதை நாம் முன்னூகித்திருக்க வேண்டும். “எல்லாம் எங்களுக்கும் தெரியும், அமெரிக்காவை வந்த வரைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தோம்” என்பதெல்லாம் சரியான சமாதானமாகாது, ராஜபக்‌ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் என்கிற நிலைபாடு இப்படியான குழப்பங்களுக்குத்தான் இட்டுச் செல்லும். ஏதோ இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது வரைக்கும் லாபம்தான் எனச் சொல்வதையும் ஏற்க இயலாது. அரசியல் தெளிவுடன் மேற்கொள்ளப்படும் எழுச்சிகள்தான் தொடர்ந்து மேலெழுந்து செல்லும். மற்றவை தேவையற்ற இழப்புகளுக்கே காரணமாகும்.

முப்பதாண்டுகளாக ஈழப் போராட்டத்தைக் கவனித்து வருபவன் என்கிற வகையில் தொடக்க காலத்தில் ஈழ விடுதலை குறித்து அரசியல் மற்றும் தத்துவார்த்தத் தளத்தில் நடந்த விவாதங்கள் இன்று இல்லாமற் போனது ஒரு பெருங்குறை. யோசித்துப் பாருங்கள், எண்பதுகளில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஈழப் போராட்டம், தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எத்தனை நூல்கள் வந்தன, எவ்வளவு விவாதங்கள் நடந்தன, ஆய்வுகள் வேண்டியதில்லை, விவாதங்கள் வேண்டியதில்லை என்கிற நிலை எப்போது தொடங்கியதோ அப்போதே போராட்டம் பின்னடையவும் தொடங்கிவிட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைய குழப்பங்கள்.

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பது, போர்க்குற்றம் தொடர்பான பொது விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பு முதலான கோரிக்கைகள் மேலுக்கு வந்துள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

வரவேற்கத்தக்கதுதான். சென்ற மாதம் வெளியிடப்பட்ட நவநீதம் பிள்ளையின் அறிக்கை இப்படியான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற கருத்தைத்தான் முன்வைத்தது. அதை வலியுறுத்துவதும் தொலை நோக்கில் பொது வாக்கெடுப்பு என்பதை நோக்கி உலக அளவில் ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சியில் நமது ஆற்றலைச் செலவிடுவதும்தான் சரியான நடைமுறையாக இருக்கும். ஆனால் அதற்காக அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பது ன்கிற நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து. அடுத்து எது உடனடிக் கோரிக்கை, எது தொலை நோக்குடன் செயல்பட வேண்டிய கோரிக்கை என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். நவி பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்பதற்கு நாம் உடனடி அழுத்தம் கொடுப்பது சரி. பொது வாக்கெடுப்பு என்பதற்காகக் கால வரையரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்பதெல்லாம் அத்தனை உசிதமாகத் தெரியவில்லை. அதை வேறு வடிவங்களில்தான் செய்ய வேண்டும். அப்படியான ஒரு பொது வாக்கெடுப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் இன்று ஜெனிவாவில் கூடியுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்குக் கிடையவும் கிடையாது. மனித உரிமை தொடர்பான தீர்மானத்தில் நமக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகள் கூட பொது வாக்கெடுப்பை ஆதரிக்குமா எனச் சொல்ல இயலாது. இன்று இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோர் நடத்தப்படும் அவலம், இராணுவமயமாகும் இலங்கையின் ஆளுகை, வாக்களித்த அரசியல் தீர்வை மறுக்கும் திமிர்த் தனம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி உலகளவில் கடும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது. குறிப்பாக வாக்களித்த 13வது சட்டத் திருத்தத்தைக் கூட இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை நாம் முன்னிலைப் படுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தப் பின்னணிகளிலேயே பொது வாக்கெடுப்பு குறித்து நாம் பேச வேண்டும். இன்று இலங்கை கிட்டத்தட்ட ஒரு தோற்றுப்போன நாடு என்கிற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரில் அது வெற்றி பெற்றிருக்கலாம். பொருளாதார ரீதியாகவும் ஆளுகை என்கிற அடிப்படையிலும் அது தோற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றைக் காட்டியும் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைக் காட்டியும், தேசத்தை அந்நிய நாடுகளில் அடகு வைத்து அங்கே உருவாக்கப்படுகிற வளர்ச்சித் திட்டங்களைக் காட்டியும் அங்கு நடைபெறும் குடும்ப சர்வாதிகார ஆட்சியும் இராணுவ மயமான ஆளுகையின் கீழ் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் ரொம்ப நாட்கள் நீடிக்க இயலாது.

இராணுவ மயமான அரசியல், ஆளுகை என்பதையெல்லாம் கொஞ்சம் விளக்க இயலுமா?

இன்று அந்தச் சின்னத் தீவில் 4,50,000 பேர் கொண்ட இராணுவம் உள்ளது. 2009ல் போர் முடிந்தது. அன்று 9ஆக இருந்த இராணுவ டிவிஷன்கள் இன்று 20 ஆகவும், 44 பிரிகேடுகள் 71 ஆகவும், 149 பெடாலியன்கள் 284 ஆகவும் அதிகரித்துள்ளன. 2013ம் ஆண்டுக்கு மட்டும் 290 பில்லியன் ரூபாய் பதுகாப்பு மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 25.9 சதம் அதிகம். போருக்குப் பிந்திய சமாதானத்தின் கூலியாக இத்தனை பெரிய சுமையை எத்தனை நாட்கள் மக்கள் மீது சுமத்த முடியும்? இந்தப் பெரும் படையைக் கலைக்கவும் இயலாது. போரால் சீரழிந்த பொருளாதாரத்தில் தென்னிலங்கைக் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஒரே வேலை வாய்ப்பு அதுதான். இவ்வளவு பெரிய இராணுவத்தை எவ்வளவு நாளைக்குச் சும்மா வைத்திருக்க இயலும்? எனவே இப்போது அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகளுக்கு’ப் பயன்படுத்தப் படுகின்றனர், கான்டீன்கள் நடத்துவதிலிருந்து, அதி வேக நெடுஞ்சாலைகள் அமைப்பதிலிருந்து, ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் விவசாயம் செய்வதிலிருந்து பல்வேறு பணிகளில் அவர்களை நீங்கள் இலங்கை முழுதும் காணலாம். இதையெல்லாம் விட இன்னொரு ஆபத்தான விஷயம் உயர்கல்வி மாணவர்கள் அனைவருக்கும் ‘தலைமைப் பயிற்சி’ என்கிற பெயரில் மூன்று வாரங்களுக்கு இராணுவம் கட்டாயமாகப் பயிற்சி அளிக்கிறது. அதே போல பயிற்சியளிக்கப்பட்ட ப்ரின்சிபால்களுக்கு கர்னல், பிரிகேடியர் பட்டங்கள் அளிக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். புலிகளின் மாவீரர் கல்லறைகள் தகர்க்கப்பட்டு அங்கே இராணுவ முகாம்களையும் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து தமிழர்களை நோக்கி, “நீங்கள் தோற்றவர்கள், தோற்றவர்கள்” என ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தில் 75 சதம் இன்று வட கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்குப்படி சுமார் 1,98,000 இராணுவ வீரர்கள் இங்கே தமிழ்ப் பகுதிகளில் உள்ளனர். அதாவது வட பகுதியில் 1000 பேருக்கு 198.4 இராணுவ வீரர்கள் உள்ளனர். அல்ஜீரியா, அயர்லாந்து போன்ற இடங்களில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடை பெற்றபோது கூட படை அடர்த்தி 1000க்கு 60 என்கிற அளவைத் தாண்டியதில்லை. இன்று போர் முடிந்து, அமைதி நிலை எட்டிய பிறகு இத்தகைய இராணுவ அடர்த்தியை ஏற்கவே இயலாது என்பதை உலக நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். போர் முடிந்த பின் வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வை இப்போது சாத்தியமே இல்லை எனத் துணிந்து சொல்வதை முக்கிய பிரச்சினையாக்க வேண்டும். டயஸ்போரா தமிழர்களின் நிலைபாட்டிலிருந்து மட்டுமே ஈழ்ப் பிரச்சினையை அணுகாமல் வட, கிழக்கு தமிழர்கள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளோடு தமிழக ஈழ ஆதரவுப் போராட்டங்களை இணைக்க வேண்டும்.

இராணுவத்தை இப்படி அதற்குத் தகுதியில்லாத பணிகளில் அமர்த்துவது, பொருத்தமற்ற அளவில் அதன் எண்ணிக்கையை வளர்த்து வைத்திருப்பது என்பதெல்லாம் பாம்புக்குப் பால் வார்க்கிற கதைதான். என்றைக்கு இருந்தாலும் இந்த ஊட்டி வளர்க்கப்படும் இராணுவத்தால்தான் ராஜபக்ஷேக்களின் குடும்ப சர்வாதிகாரத்திற்கு ஆபத்து வரப்போகிறது.

இறுதியாக ஒரு கேள்வி. தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவது தொடர்கிறது. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் மேலெழுந்துள்ளது. அதைப்பற்றி..

கச்சத்தீவைத் தமிழக மக்களைக் கலந்தாலோசிக்காமல் இலங்கைக்கு அளித்தது மிகப் பெரிய தவறு. ஆனால் கச்சத்தீவை மீண்டும் பெற்றுவிட்டால் தமிழக மீனவர் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. போர் நடந்தபோது பாதுகாப்புக் கருதி இராணுவம் சுட வேண்டியுள்ளது எனச் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது போர் முடிந்த பின்னும் இப்படியான நிலை தொடர்வது இலங்கை அரசு எந்த வகையிலும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மீனவர்களைப் பொருத்தமட்டில் இது உடனடியான உயிர்ப் பிரச்சினை. கடலைப் பொருத்த மட்டில் நிலத்தைப் போல முள் வேலி அமைத்து எல்லை அமைத்துவிட முடியாது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடலில் மீன் வளம் அதிகம் உள்ள பகுதிகளில் பாரம்பரியமாக நாம் மீன் பிடித்து வந்துள்ளோம். அந்தப் பாரம்பரிய உரிமை மதிக்கப்பட வேண்டும். வெறும் கடல் எல்லை என்கிற அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. பாரம்பரிய உரிமைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து இரு தரப்பு மீனவர்களையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகள் உடனடித் தேவை. நமது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அவசியம். அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் அது சீனாவாக இருக்கட்டும் அல்லது பாகிஸ்தானாக இருக்கட்டும் பேசுவார்த்தை, ‘டிப்ளமசி’ இரண்டுக்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுவதுதான் உசிதம். சமீபத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல்கள் தொடர்பான உடனடி விசாரணையையும் விளக்கத்தையும் இந்திய அரசு கோர வேண்டும். மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். சற்றுமுன் வந்துள்ள செய்திகள் மேலும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், போராட்டங்கள் எது குறித்தும் கவலைப்படாமல் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதாவது தொடர்கிறது. கடல் எல்லையைத் தாண்டுகிறார்கள் என்கிற ஒரே காரணம்தான் இலங்கை அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. பாரம்பரிய உரிமை என்கிற வகையில் மீன்பிடி எல்லையை வரையறுப்பது தொடர்பாக இந்திய அரசு இலங்கையுடன் கறாராக ஒப்பந்தம் செய்யவும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய வேண்டிய தருணம் வந்துவிட்டது.