‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ -முன்னுரை – மு.சிவகுருநாதன்

(‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலுக்கு நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை)
“பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை முகப்பாகக் கொண்டு ‘தீராநதி’ மாத இதழில் ஜன. 2007 முதல் டிச. 2011 முடிய அறுபது மாதங்கள் பத்தியாக வெளியான பேரா. அ.மார்க்ஸ் –ன் ஆக்கங்கள் மிகத் தாமதமாக நூல்வடிவம் பெறுகின்றன.
பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துகளுக்கு முன்னுரை எழுதும் தகுதி எனக்குத் துளியும் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இருப்பினும் 1990 களின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் கருத்தரங்கில் தொடங்கி இன்று வரைத் தொடரும் தோழமை உணர்வினுடாக ஓர் வாசகப் பார்வையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அன்று நிறப்பிரிகையில் வெளியான கட்டுரைகள் இன்று குமுதம் நிறுவன இதழான ‘தீராநதி’யில் வெளியாகக் கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் தமிழ் இதழியல் உலகில் ஏற்பட்டுள்ளன. அரசியலற்ற ஓர் நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பலகாலமாக எடுத்திருந்த நிலையில் ‘நிறப்பிரிகை’ நுண் அரசியல் களங்களை விவாதப் பொருளாக்கியது. இதில் அ.மார்க்ஸ் – ன் பங்கு பணி அளப்பரியது.
தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ் அளவிற்கு கடும் விமர்சனங்களுக்கு ஆளான சமகால அறிவுஜீவி யாருமில்லை.. இந்தத் தொகுப்பின் குறுக்கு வெட்டாகப் பார்த்தால்கூட அவர் தொடாமல் விட்ட பிரச்சினைகள் மிகக் குறைவு. சமகால தமிழ்ச் சிந்தனையாளர்களில் இது அரிது. கிராம்சியின் ‘உயிர்ப்புமிகு அறிவுஜீவி’ (Organic Intellectual) எனும் கருத்தாக்கத்திற்கு தமிழ்ச்சூழலில் மிகவும் பொருத்தமான ஆளுமை அ.மார்க்ஸ். அ.மார்க்ஸால் இது சாத்தியமாகியுள்ளது எங்களைப் போன்ற நண்பர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. புத்தர், காந்தி, அம்பேத்கர், பெரியார், தாகூர், ஸ்பாடிஸ்டா, பரமேஸ்வர அய்யர் என எங்கும் அறத்தைத் தேடி அலையும் மனித உரிமைப் போராளியாகவே அ.மார்க்ஸ்ளைந்நூல் முழுவதும் காட்சியளிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதி செத்த உலகில் அறத்தைத் தேடி தன்னந்தனியனாய் நெடுந்தூரம் பயணிக்கிறார்.
தமிழகத்தில் சொல்லப்படும் எந்தக் கருத்தும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்கிற இரு பார்வைகள் வழியே பயணிப்பதால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் படும் இடர்பாடுகளை சொல்லி மாளாது. இருப்பினும் எது குறித்தும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தனது கருத்துக்களோடு அனைவரையும் கடந்து செல்கிறார். இத்தொகுப்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து அதிக எண்ணிகையிலான கட்டுரைகள் இருக்கின்றன. இந்தப் பார்வைகள் அவருக்கு நிறைய எதிர்ப்புக்களை உருவாக்கித் தந்தன.
அதற்காக தனது அறம் சார் நிலைப்பாட்டில் அவர் எள்ளளவும் உறுதி குலைவதில்லை. ஈழப்பிரச்சினை தமிழ்த் தேசியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், பெற்ற படிப்பினைகள், அரசியல் தீர்வு, கச்சத்தீவு, மீனவர் பிரச்சினைகள், அகதிகள் வாழ்வு குறித்தான கரிசனங்கள் என்பதாக அ.மார்க்ஸிடம் விரிவு கொள்கின்றன. கச்சத்தீவு, அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்களில் தேசியம் கடந்த ஒருவகை ஆளுகை முறை பற்றி யோசிக்கிறார்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்: “இன்றையத் தேவை போரல்ல; சமாதானம், சமாதானம் மட்டுமே. பேச்சுவார்த்தைகள் மூலமே எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். வரையறுத்தல் என்பதைவிட வரையறை நீக்கம் (delimit) செய்தல், நெகிழ்ச்சியாக்கப்படுதல், ஒருங்கிணைக்கப்படுதல் (integrate) வேண்டும். முன்பொரு முறை நான் இந்தப் பத்தியில் எழுதியது போல தேசியம் கடந்த ஆளுகை முறை (Non-Nationalistic mode of Governance) குறித்தல்லாம் நாம் யோசிக்கவேண்டும். குறைந்தபட்சம் எல்லைப் பிரச்சினைகளிலாவது இந்தப் பார்வைகள் தேவை.”
விலகி நிற்றல், தன்னிலை அழிப்பு, பன்முகப்பார்வை குறித்த அவதானிப்புகள், மற்றமை சார்ந்த கரிசனங்கள், அறவியல் நிலைப்பாடு, பெருங்கதையாடல் தகர்ப்பு, ஒற்றைத்தீர்வுகளில் முடங்காமல் பன்மைத் தீர்வுகளைப் பரிந்துரைத்தல், தேசபக்தி எனும் மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை, எங்கும் உரையாடலுக்கான சாத்தியப்பாடு, வைதீக எதிர்ப்பு என்பதான தன்மைகள் இத்தொகுப்பு முழுதும் இழையோடுவதைக் காணலாம். அரபுலக எழுச்சி, ஈழப்பிரச்சினை, பாகிஸ்தானுடனான உறவு என எந்தச் சிக்கலுக்கும் “தொடர்ந்த உரையாடலுக்கான சாத்தியமும், பன்மைத்துவம் தக்கவைக்கபடுதலுமே முக்கியம்” என வலியுறுத்துகிறார். ஈழச்சிக்கலுக்கு அடுத்தபடியாக காந்தி குறித்த இவரது பார்வைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. நீதி செத்த உலகில் அறத்தைப் பேச இவருக்குக் கிடைத்த பெரு வாய்ப்பு காந்திதான். பெரியார், அம்பேத்கரைப் போற்றும் இவர், பெருகி வரும் வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள காந்தியின் உதவியை நாடுகிறார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எல்லாவற்றையும் அரசு-அதிகார கண்ணோட்டத்திலிருந்து சிந்திக்காமல் அரசுக்கு எதிராகவும் அரசுக்கு அப்பாலும் எனகிற நிலையிலிருந்து அணுக முயலும் அ.மார்க்ஸ் காந்தியைக் கண்டடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காந்தியைக் கடுமையாக விமர்சித்த பெரியார்தான் இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னவரும் கூட என்பதை மறந்துவிட இயலுமா?? காந்தி வலியுறுத்தியது அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) ஓர் தேசியம். தேசியம் என்பதை ஓர் அரசியல் வகையினமாக அன்றி கலாச்சாரமாக அவர் பார்க்கவில்லை. சுயாட்சி என்ற கருத்துடன் அரசற்ற நிலையை (anarchy) விரும்பியவர் காந்தி. காந்தியின் சிந்தனைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் அடிநாதமாக ஒன்றிணைக்கும் இழை இருப்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
கடும் நோய்வாய்பட்டபோது ஊசிகளைத் தவிர்த்த காந்தி ரயில் பயணங்களை மறுத்ததில்லை என்று சொல்லும் மார்க்ஸ் நவீன தொழில்நுட்பங்களுக்கு அவரை ஒரு வரட்டுத்தனமான எதிரியாகக் கட்டமைக்க முடியாது என்றும் சொல்கிறார்.
டால்ஸ்டாய் போன்ற உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் முதல் ஈன்ஸ்டின் உள்ளிட்ட அறிஞர்கள் வரை தேசபக்தியை ஏன் வெறுத்தார்கள் என கேள்விகேட்டு அதற்கான விடையும் தேடுகிறார். தேசபக்தி உணர்வு இயற்கையானதல்ல. அது அறிவுக்குப் புறம்பானது; ஆபத்தானது. மானுடத்தை நேசிப்பவர்கள் தேசபக்தியை வெறுக்கத்தானே முடியும்? பெரியாரிடமிருந்து அண்ணா வேறுபடும் புள்ளிகளை மிக நுணுக்கமாக சுட்டுகிறார். இதன் பொருள் அண்ணாவை நிராகரிக்கிறார் என்பதல்ல. அ.மார்க்ஸை விமர்சிப்பவர்கள் இவ்வாறான எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுகின்றனர். “அடையாள அரசியல், அடையாளத்தைப் பேணுவதன் ஊடாக எல்லாவற்றையும் உள்ளடக்குவதாகவும் இருக்கவேண்டும். காந்தி, பெரியார், அண்ணா என்றொரு நல்ல பாரம்பரியம் நமக்கு இந்தவகையில் உண்டு” என்று அவர் சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்நூலில் உள்ள அம்பேத்கர் குறித்த மூன்று கட்டுரைகள் அம்பேத்கர் குறித்து இதுவரை யாரும் தொடாத புதிய பரிமாணங்களை எட்டுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்த ‘டாக்டர் அம்பேத்கரின் போர்க்குரல்’ எனும் குறுநூல் அவரின் அரசியல் பார்வைகளைத் துல்லியப்படுத்தியது என்றால் இந்நூலிலுள்ள கட்டுரைகள் அம்பேத்கர் என்னும் சிந்தனையாளரின் இதயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அ.மார்க்ஸ் எழுத்தில் ஓர் பிடித்த விடயம் என்னவெனில் எந்த சிக்கலான கோட்பாடுகளைச் சொல்லும்போதும் அதற்கு எளிய உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் நிகழ்த்திவிடுவார். அதைபோல சமயம் பார்த்து குறைகளை நேருக்குநேர் சுட்டும் பண்பு அநாயசமானது. விக்ரமாதித்யன் மணிவிழாவிற்கு கூடிய எழுத்தாளர்களைப் பட்டியலிட்டு விக்ரமாதித்யன் என்ன கனிமொழியா இல்லை தமிழச்சியா? இத்தனை எழுத்தாளர்கள் குவிந்திருந்ததே பெரிய விஷயமில்லையா? என்று கேட்பார். கூடவே விக்ரமாதித்யன் மீதான விமர்சனமும் சட்டென்று வரும். “ஒருபக்கம் அப்பட்டமான சைவப் பிள்ளைமார்த்தனம்; மறுபக்கம் அசாத்தியமான கலகக் குணம், முழுசான அதுதானே விக்ரமாதித்யன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர் ஒழுங்கான சைவப்பிள்ளையும் கிடையாது, கலகக்காரனும் இல்லை” என்று கருத்துரைப்பார். தமிழ் அறிவுலகில் இவ்வாறு வெளிப்படையாகப் பேசும் ஆளுமைகள் அரிது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்துடன் கூடவே அவரது மகளும் அமெரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளருமான அம்ரித்சிங்கை பாராட்டுகிறார். கனிமொழியின் அணு ஒப்பந்ததிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.
இங்கு பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன் சிறைப்பட நேர்ந்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். புலவர் கலியபெருமாள் அவரது மனைவி, மகன்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது இரு மகள்களுக்கு அடைக்கலம் கொடுத்து தனது பள்ளியில் சேர்த்தக் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாளின் மனைவியின் சகோதரி அனந்தநாயகி அம்மையார் பற்றி இப்பத்தியில் எழுதி மு.கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார். அப்பாவி பெண்மணியை சிறைவைக்கக் காரணமாக இருந்தவர் தனது மகள் சிறைப்பட்டதற்குப் புலம்பும்போது ஒரு உயிர்ப்பு மிகு அறிவுஜீவி எப்படி மவுனமாக இருக்கமுடியும்? நிறப்பிரிகை காலத்தில் விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த கவனத்தை ஈர்த்த அ.மார்க்ஸ் இன்றும் தனது ஆய்வுத்தேடலை பல்வேறு புதிய களங்களில் தொடந்த வண்ணம் உள்ளார். சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’, ‘இணைப்புண்ட வரலாறுகள்’ போன்ற புதிய பார்வைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். ஆங்கில நூற்கள் குறித்து மட்டுமின்றி. செயல்வழிக் கற்றல் பற்றி பேரா. கல்யாணி வெளியிட்ட குறு வெளியீடுகள் குறித்தும் தனது பதிவை மேற்கொள்கிறார். கோட்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் பாலை நிலவன் கதைகள், யவனிகா ஶ்ரீராம் கவிதைகள், ‘வாத்தியார்’, ‘மறுபக்கம்’ ஆகிய நாவல்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். தமிழ் எழுத்துலகில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட ‘வாத்தியார்’ நூலைத் தேடி எடுத்து அடையாளம் காட்டிய அவர் விமர்சிக்க வேண்டியவற்றைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார். மிலன் குந்தேரா முன்வைக்கும் வரலாற்றுணர்வு கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் அரிது என்கிறார். தாகூர், டால்ஸ்டாய் போன்று தமிழ் எழுத்தாளர்கள் அறவியல் நிலை எடுக்கும் வரை இங்கு காத்திரமான படைப்புகள் தோன்ற வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார். தேசத்திலிருந்து வரலாற்றை விடுவிக்கவேண்டிய தேவை பற்றி வலியுறுத்துகிறார். புனைவுகள் வழியே தமிழ், இந்திய வரலாறு கட்டமைக்கப்படுவதில் உள்ள ஆபத்தையும், தொல்லியல் தோண்டிகள் இதற்கு உறுதுணையாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். சோழப்பெருமை பேசும் தமிழ்தேசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று வெளிப்படையாக நிலப்பிரபுத்துவப் பெருமைகளைப் முன்னிறுத்தத் துணிந்துள்ளதைச் சுட்டி, இதன் பின்னாலுள்ள பாசிச அம்சங்களை தோலுரிக்கிறார்.
யாரும் செய்ய மறுக்கும் இப்பணிகளைச் செய்ய இன்றைய தமிழ்ச்சூழலில் மார்க்ஸை விட்டால் யாருமில்லை. வரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை பரமேஸ்வர அய்யரின் ‘Ramayana and Lanka’ என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத் தக்கது.. தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, “சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட.” என்று சொல்லிவிட்டு, “பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை” என்றும் சொல்கிறார். ‘விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல்” என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.
மு.சிவகுருநாதன் திருவாரூர்.
ஆகஸ்ட் 20, 2015

பாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல

(2014 ல் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை)

மியான்மர் நாட்டு எல்லைக்குள் நுழைந்து நாகாலந்து தீவிரவாத அமைப்புகளின் இரு முகாம்களைத் தாக்கி தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான கப்லாங் குழுவைச் சேர்ந்தவர்களை வெற்றிகரமாகக் கொன்று திரும்பிய பெருமிதத்தை மோடி அரசும், பா.ஜ.கவும் இதர இந்துத்துவ அமைப்புகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்தியாவின் “மனநிலையில் ஒரு மாற்றம்” (change in mindset) ஏற்பட்டுள்ளதை இந்தச் “சூடான தாக்குதல்” (hot pursuit) காட்டுவதாகவும், இந்தியாவின் இந்தப் புதிய தோற்றத்தை (new posture) கண்டு கலங்கிப் போயிருப்பவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதர பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களின் பேச்சுக்களையும், மீசை முறுக்கல்களையும், தொடை தட்டல்களையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தியா இனி “சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை” (zero tolerance) என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவின் தலைமைப் பேச்சாளரும், முன்னாள் இதழாளருமான எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார். முன்னெல்லாம் இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகளைத் திரட்டி நிறுத்த பாகிஸ்தானால் முடிந்தது எனவும், இன்றைய மோடி அரசின் அணுகல் முறை அதைத் தகர்த்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் இதழாளர் ஒருவரே இப்படிச் சொல்லும்போது விசுவ இந்து பரிஷத்தின் தொகாடியா போன்றோரைக் கேட்கவா வேண்டும். அவர்கள் பங்கிற்கு இன்னும் நிறையச் சடவடால்களை அடித்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசுத் தரப்புப் பிரகடனங்கள்தான். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், இனி பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இப்படித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இனி யார் வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழைவோம் என்பது இதன் சுருக்கம்.

இன்னொரு துணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இந்தியப் படைவீரகள் 18 பேர்களைச் சென்ற 4ம் தேதி கொன்றதற்குப் பழி வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை “பிற” நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றுள்ளார்.

இந்த “வீரப் பேச்சுக்களை” காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி முதலானவை சரியாகவே கண்டித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளும் நிச்சயமாகக் கண்டிக்கும் என நம்பலாம். தங்களின் அமைச்சர்களுக்கு என்ன பேசுவது என்பது குறித்து ‘கவுன்சிலிங்’ கொடுப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

இப்படி அண்டை நாடுகளுக்குள் அவற்றின் ஒப்புதலின்றி நுழைந்து தாக்குதல் நடத்த பன்னாட்டுச் சட்டங்களில் அனுமதியில்லை. எந்தக் காரணங்களுக்காகவும் நாடுகளின் இறையாண்மையை மீற  பன்னாட்டுச் சட்டங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. இந்த விதியை முதன் முதலாக எந்தப் பெரிய கண்டனங்களும் இல்லாமல் மீறியது அமெரிக்காதான். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்கிற பெயரில் அது பாகிஸ்தானுக்குள் அதன் ஒப்புதலின்றி நுழைந்து ‘ட்ரோன்’ தாக்குதல்களை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்றது, இன்று ISS பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இப்படித் தாக்குதலை நடத்துகிறது, “முன்கூட்டிய தாக்குதல்” (pre emptive strike) என்றெல்லாம் இதற்கு ஒரு தத்துவத்தையும் சொன்னது.

சரி, இப்படி இன்னொரு நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு தாக்கும் பயங்கரவாதிகளை என்னதான் செய்வது? சர்வதேச அழுத்தங்கள், புத்திசாலித்தனமான அரசியல் முதலியவற்றின் ஊடாகத் தான் இதை எதிர் கொண்டாக வேண்டும். 2003ல்  சிக்கிமில் இருந்து கொண்டு தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளை சிக்கிம் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அந்த அரசின் மூலமாகவே அவர்களை இந்திய அரசு அழித்தது நினைவிற்குரியது. இன்னொரு பக்கம் பயங்கரவாதம் வேர் கொள்வதற்கான அடிப்படைப் பிரச்சினைகளில் உரிய அரசியல் தீர்வுகளையும் மேற்கொள்வதும் அவசியம்

1990 கள் தொடங்கி மியான்மருடன் நெருக்கத்தைப் பேணி வருகிறது இந்திய அரசு. ஏராளமான ஒத்துழைப்புகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் இந்தியா மியான்மரில்  மேற்கொண்டு வருகிறது. இன்று ரோகிங்யா முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப் படுவதற்காக மியான்மரை உலகமே கண்டிக்கும்போது இந்தியா இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து மியான்மர் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் மியான்மர் அரசைக் கொண்டே அந்தத் தீவீரவாத முகாம்களை இந்தியா அழித்திருக்க முடியும்.

இன்றைய தாக்குதல் குறித்து மோடி அரசு இதுவரை முழு விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த ‘வெற்றிகரமான’ தாக்குதலில் எவ்வளவு பேர்கள் கொல்லப்படார்கள் என்பதிலும் கூட உண்மை தெரியவில்லை. 38 பேர்கள் என ஒரு செய்தி சொல்லுகிறது. இன்னொன்று 70 பேர்கள் என்கிறது, மற்றொன்று நூறு பேர்கள் என்கிறது. தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கப்லாங் குழுவோ தங்கள் பக்கம் யாரும் சாகவில்லை என்கிறது.

மியான்மர் அரசின் ஒப்புதலுடன்தான் அவர்களின் நாட்டிற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம் என இந்தியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் எல்லைக்குள் இந்தியா புகவே இல்லை எனவும், தனது எல்லைக்குள்தான் இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது எனவும் மியான்மர் அரசு கூறுகிறது. ‘அவர்கள் அப்படித்தானே சொல்லியாக வேண்டும்” என இந்தியத் தரப்பு சமத்காரம் பேசுகிறது.

அடுத்த தாக்குதல் பாகிஸ்தான்தான் என்கிற பொருளில் இந்திய அமைச்சர்கள் பேசியதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது. பாக் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான். “பாகிஸ்தான் மியான்மரல்ல” என இந்தியாவை எச்சரித்துள்ளார். முன்னாள் அதிபர் முஷாரஃப், “பாகிஸ்தான் அணு குண்டுகளை வைத்திருப்பது வைத்துக் கும்பிடுவதற்காக அல்ல” என எச்சரித்துள்ளார். “எங்களைத் தாக்க நினைக்காதீர்கள். எங்களது இறையாண்மையை அத்து மீற முற்சிக்காதீர்கள். நாங்கள் சின்ன நாடு அல்ல. அணுகுண்டுகளை வைத்திருக்கும் மிகப் பெரிய வல்லரசு” என்று அவர் பக்கத்திற்கு சவால்களை இறக்கியுள்ளார்.

இரண்டு விடயங்களை இந்தியா மறந்துவிடலாகாது. 1. இந்தியா மரபுவழிப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை மிஞ்சியுள்ளது உண்மை.. ஆனால் என்றைக்கு அதுவும் அணு குண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கியதோ அதற்குப்பின் இரு நாடுகளும் சம பலம் உள்ளவையாகிவிட்டன. 2. பாக் இந்தியாவைப் போல ஒரு ஜனநாயக நாடு அல்ல, நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்படாத ஒரு இராணுவம், வலிமையான ஆயுதக் குழுக்கள் என அங்கு அதிகாரம் பிரிந்து கிடக்கிறது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பதை இவர்களில் யாரும் தன்னிச்சையாக்கக் கூடச் செய்துவிட இயலும்.

இந்தியாவின் இந்தப் “புதிய வெளிப்பாடு” குறித்துப் பெருமிதம் கொள்ளுபவர்கள் அப்படியான ஒரு போர் வரும் எனில் அதை இந்தத் துணைக் கண்டம் தாங்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவும் ஒரு போரைத் தாங்கும் நிலையில் இல்லை.

அமெரிக்கா இப்படி நாடு புகுந்து தாக்குதலை நடத்தியதைப் பார்த்து மோடியும் இப்படியான வேலையில் இறங்கினால் சரியான பாடங் கற்றுக் கொள்ளத்தான் நேரிடும். ஒபாமவைப்போல கோட் போட்டுக் கொண்டதால் மட்டுமே மோடி ஒபாமா ஆகிவிட முடியாது.

“பாகிஸ்தான் மியான்மரல்ல” என்பது மட்டுமல்ல, “இந்தியா அமெரிக்காவும் அல்ல”

 

இந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்

(ஜனவரி 23, 2013 ல் எழுதியது)

டெல்லி பாலியல் வன்முறைக்கு அடுத்தபடியாக இன்று இந்திய ஊடகங்களை நிரப்புகிற செய்தி காஷ்மீருக்குள் உள்ள போர் நிறுத்தக் கோட்டில் (LoC) ஏற்பட்டுள்ள முறுகலும் அதை ஒட்டிய ஆவேசப் பேச்சுக்களுந்தான். “கொல்லப்பட்ட ஒவ்வொரு இந்திய வீரரின் தலைக்கும் பத்து பாகிஸ்தானியர்களின்  தலை உருள வேண்டும்”, “பாகிஸ்தான் மீது இந்தியா ‘உண்மையான நடவடிக்கை’ எடுக்க வேண்டும்”, “சமாதானத்திற்கு இது நேரமில்லை”, “வேறு வகைச் சாத்தியங்கள் உண்டு என எச்சரிக்கிறோம்” என்பது போன்ற முழக்கங்களை இன்று அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்திய இராணுவத் தலைமைகளும் உதிர்க்கின்றன.

பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் முதல் எதிரிகளாகக் கற்பித்து ஒரு அரசியலைக் கட்டமைக்கும் இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.கவுக்கும் காங்கிரசிற்கும் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசமில்லை என்பதுபோல இன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அமைகின்றன. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்துள்ள இசைக் கலைஞர்களையும் ஹாக்கி வீரர்களையும் திருப்பி அனுப்புவதும் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய விசா அளிப்பதை நிறுத்துவதும், “இனி பாகிஸ்தானுடன் சுமுக உறவு கிடையாது” என்று பிரதமர் அறிவிப்பதுபும் கவலை அளிக்கிறது.

பாகிஸ்தானுடனான உறவைப் பொருத்தவரை பேச்சு வார்த்தை, போர் நிறுத்தம், பாகிஸ்தான் மண் பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில் அழுத்தத்தை அளித்துக்கொண்டே சுமுகமான போக்கு வரத்து, வணிக உறவு ஆகியவற்றைப் பேணுவது ஆகிய அணுகல்முறைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர் என்கிற பெயர் பிரதமர் மன்மோகனுக்கு உண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன் (ஜூலை 16, 2009) ஷர்ம் –எல்- ஷேக்கில் (எகிப்து) நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் கீலானியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை இங்கே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பா.ஜ.க மற்றும் அதற்கு ஆதரவான ஊடகங்கள் மன்மோகன், இந்திய நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டின.

பயங்கரவாதத்தைத் தடுப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது, இது தொடர்பான உளவுகளைப் பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பாகப் பேச வரும்போது ‘பலூசிஸ்தான்’ என்கிற சொல்லைக் கூட்டறிக்கையில் சேர்த்ததற்காகவே அத்தனை கண்டனங்களும் முன்மொழியப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் பலவற்றின் விளை நிலமாக பாகிஸ்தான் உள்ளது என்பது ஊரறிந்த உண்மை. பதிலுக்கு பாகிஸ்தான், தனது நாட்டில் பலூசிஸ்தான், வாசிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் உருவாகும் உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் பின்புலமாக இந்தியா உள்ளது எனக் குற்றம் சாட்டுகிறது. இந்தியா இதை ஏற்பதில்லை. இந்நிலையில் இரு தரப்புக் கூட்டறிக்கையில் பலூசிஸ்தான் பெயரும் இடம் பெற்றதற்குத்தான் அத்தனை எதிர்ப்பு. கூட்டறிக்கை என்பது இரு தரப்பினரும் சற்றே தம் இறுக்கங்களை விட்டுக் கொடுத்து இறங்கி வருவதுதான். நமது நிலைபாடு மட்டுமே அதில் இடம் பெறவேண்டும் எனச் சொல்வது என்ன நியாயம் என மன்மோகன் தரப்பினர் பதிலளித்தது எடுபடவில்லை.

பாக் மண்ணில் திட்டமிடப்பட்டு இந்திய மண்ணில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியில் இத்தகைய நியாயமான கோபம் இந்தியாவில் உருவாவது வியப்பில்லை. சமீபத்தில் (ஜனவரி 8) காஷ்மீரில் ஊரி பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அருகில் ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்கிற இரு இந்திய இராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிகழ்வு இன்று மிகப் பெரிய கொந்தளிப்பிற்கும், ஏதாவது எதிர்வினை ஆற்றியாக வேண்டும் என்கிற மனநிலை உருவாக்கத்திற்கும் காரணமாகியுள்ளது.

பாகிஸ்தான் இன்று கிட்டத்தட்ட ஒரு ‘தோல்வியடைந்த அரசு’ (Failed State) என்கிற நிலைய நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட முஜாகிதீன்கள் (1979 – 87), ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டபின் ஆயுத நீக்கம் செய்யப்படவில்லை. அமைதி வாழ்க்கைக்கு அவர்கள் திருப்படப்படவில்லை. மாறாக பாக் இராணுவத்தின் ஐ.எஸ்.ஐ இயக்ககம் அவர்களில் ஒரு பகுதியை காஷ்மீர்ப் பிரச்சினையை முன்வைத்து இந்தியாவிற்கு எதிராகத் திருப்பியது. இன்னொரு பகுதி அடுத்ததாக ஆப்கனைக ஆக்ரமித்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் திரும்பியது. பலூசிஸ்தான், கில்ஜித், சிந்து பகுதிகளில் இன்று ஆயுதம் தாங்கிய பிரிவினை இயக்கங்கள் செயல்படுகின்றன. கராச்சியில் முட்டாஹிடா குவாமி இயக்கதினர், தெற்கு பஞ்சாபில் செராய்கிகள் ஆகியோரும் இன உணர்வு அடிப்படையில் இயங்குகின்றனர்.

மொத்ததில் பாகிஸ்தான் இன்று இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு உள்ளேயான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகவும் மாறியுள்ளது. இந்தப் பயங்கரவாதம் இன்று இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள அழிவுகளைக்காட்டிலும் பாகிஸ்தானிற்குள் அதிக அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று எல்லையோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமானத் (ட்ரோன்)தாக்குதல்களால் உயிரிழப்பவர்களும் உள்நாட்டிலேயே அகதிகளாயிருப்போரும் பல இலட்சம் பேர்.

பாக் இன்று தன் நிதிநிலை அறிக்கையில் 25 சதத்தை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் உருவாகியுள்ள வறுமை பெரிய அளவில் அந்நாட்டு இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளுகிறது.  பாக் அரசே இன்று  இந்நிலையை ஏற்றுக்கொண்டு தன் அணுகல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்ற சுதந்திர நாளின்போது (ஆக 14, 2012) பாக் இராணுவக் கழகத்தில் (National Military Academy) பேசிய ஜெனரல் கயானி உள்நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் குறித்துக் கவலை தெரிவித்ததோடு, தேசிய உணர்வுச் சக்திகளைத் திரட்டிப் பல்வேறு ஆயுதக் குழுக்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், லஷ்கர்கள் ஆகியவற்றையும் எதிர்க்க வேண்டிய முக்கியத்துவத்தை வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தேசிய இராணுவப் பல்கலைக் கழகத்தில் (National Defence University) பேசும்போது பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், உள்நாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில் பாக்கின் இராணுவ மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் பேச நேர்ந்துள்ளது.  இந்த அடிப்படையில் சமீபமாக பாக் இராணுவம் தனது கொள்கையை ‘மறு அளவை’ (Re-calibration) செய்து தனது ‘முதல் எதிரி’ நிலையிலிருந்து இந்தியாவை நீக்கி, உள்நாட்டு பயங்கரவாதத்தை அந்த இடத்தில் வைத்துள்ளதாகவும் செய்தியொன்று வந்தது.

இந்த அணுகல் முறை மாற்றம் பாக்கில் செயல்படும் பலமுனை அதிகார மையங்களின் கருத்தொருமிப்பு எனச் சொல்லிவிட இயலாது என்பது உண்மைதான். எனினும் இத்தகைய ஒரு பின்புலத்தில் இன்று காஷ்மீர் எல்லையோரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி.

அந்த வகையில் இந்தியத் தரப்பும், இந்திய ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை அணுகுவது ஒரு புத்திசாலித்தனமான அயலுறவுக் கொள்கை சார்ந்த அணுகல்முறைதானா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. பாக் ஊடகங்களைப் பொருத்தமட்டில் எல்லையில் உருவாகியுள்ள இந்த முறுகலுக்கு அத்தனை முக்கியம் அளிக்கவில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்க வேறு உள்நாட்டு அதிரடிப் பிரச்சினைகள் உள்ளன என்பது மட்டும் இதற்குக் காரணமில்லை. பொதுவாக இந்திய பாக் உறவுகளிலுள்ள நெரிசல்களைப் பொருத்த மட்டில் பாக் ஊடகங்கள் தத்தம் பார்வைகளைச் சுயேச்சையாக வெளிப்பத்தும் எனவும், அதே நேரத்தில் இந்திய ஊடகங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் அரசின் அணுகல்முறையை அப்படியே வலியுறுத்தும் எனவும் ஒரு கருத்து உண்டு. தற்போதும் அப்படித்தான் நிகழ்வுகள் உள்ளன.

“அடங்காப்பிடாரியான தன் பக்கத்து நாட்டைக் கட்டுக்குள் வைக்க முடியும் என இந்தியா உலகத்திற்குக் காட்ட வேண்டும்” என்றொரு தேசிய ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதுகிறது. அதன் பிரதம ஆசிரியர் பெயரில் வெளிவந்துள்ள இன்னொரு கட்டுரையில் அவர், அமைதி, பேச்சுவார்த்தை, பதட்டத்தைக் குறைத்தல் ஆகியவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுகிற ‘பாகிஸ்தானின் நண்பர்களான’ சில திரைப்படக்காரர்கள், அறிவு ஜீவிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். அப்படியானவர்கள் பாக் அரசிடம் விலைபோனவர்கள் எனச் சொல்கிற அளவிற்கு அக்கட்டுரை அமைகிறது. பாக் மீது போர் தொடுத்து ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இத்தகைய பேச்சுக்களின் உள்ளுறையாக அமைகின்றது.

‘இந்து’ நாளிதழ் மட்டுமே இந்தப் போக்கிலிருந்து விடுபட்டு நடுநிலையாகத் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. பாக்குடன் இனி சுமுக உறவு கிடையாது என்கிற மன்மோகனின் பேச்சைக் கண்டித்து அந்த நாளிதழ் நேற்று (ஜன 16) எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், “இது அப்படி ஒன்றும் நல்ல முடிவு அல்ல. இந்திய  வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் இது போன்ற செயல்களைப் பாகிஸ்தான் மட்டுமே ஏகபோகமாய்ச் செய்து வருகிறது  என்பதல்ல. இதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுக் கோட்டருகில் சில கட்டுமானங்களை பாக் செய்து வருவதாக சென்ற மார்ச்சில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதே வேலையை இந்தியாவும் செய்து வருகிறது என்பதை, வேறு யாருமல்ல, இந்திய இராணுவத் தளபதி விக்ரம்சிங்கே ‘இந்து’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் கல்லை யார் எறிந்தது எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் பொருளில்லை. இப்போது வேண்டுவது நிதானத்தைக் கடைபிடிப்பதுதான்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்திய பாக் எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு (செப் 26, 2003) சுமார் பத்தாண்டுகள் ஆகின்றன. போர் நிறுத்தத்தின் பலன்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்கியுள்ள சூழலில் இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் இப்குதிகளிலிருந்து பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு முகாம்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் தினம் காலை சுமர் இரண்டு மணிநேரம் பயணித்து தம் கிராமங்களிலுள்ள நிலங்களில் வேலை செய்யப் போவார்கள்.  மதியம் அவர்கள் வீட்டிலுள்ளோர் சமைத்து உணவு எடுத்து வருவார்கள். மாலை இருட்டுமுன் அவர்கள் வீடு திரும்பியாக வேண்டு,. பாக் இராவணுவ ஷெல்லடித் தாக்குதல் போர்வையில் தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு.

கட்டுப்பாட்டுக்கோடு என்பது அதுவரை ஒன்றாக இருந்த கிராமங்கள் மற்றும் வயற்காடுகளினூடாகப் போடப்பட்ட ஒன்று. ஒரு பக்கம் இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர். மறுபக்கம் பாக்  அரசின் இராணுவம்…. இன்று முட்கம்பி வேலிகளாலும் கடும் இராணுவக் கண்காணிப்புகளாலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன அக்கிராமங்கள். கிராமங்கள் மட்டுமல்ல அந்தக் கிராமங்களில் வசித்த மக்களும்தான்.

இப்படியாக தேச எல்லையைக் காரணம்காட்டி கிராமங்களைப் பிரிப்பது எத்தனை அபத்தமானது என்பது மட்டுமல்ல, எத்தனை சோகமானது என்பதையும் உணர ஒருவர் சாதத் ஹஸன் மன்டோவின் ‘டோபா டேக் சிங்’ என்கிற சிறுகதையைப் படிக்க வேண்டும். (உருது மூலத்தின் ஆங்கில வடிவத்தை Sadat Hasan Manto, Toba Tek Singh என கூகிளில் தேடினால் அடையலாம்.) அந்தக் கதையில்,  இந்திய பாக் பிரிவினையின்போது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் உள்ளவர்களையும்  அவரவர் மத, இன அடிப்படையில் அவரவர் நாட்டுக்கு அனுப்புவது என்கிற ஒரு பைத்தியக்கார முடிவை அரசு எடுத்து அவ்வாறே அவர்கள் பிரித்து அனுப்பபடுவர். அப்போது அந்தப் பைத்தியங்கள் எழுப்பும் கேள்விகளும், அவர்கள் காட்டும் எதிர்ப்புகளும் யார் பைத்தியக்காரர்கள் என்கிற கேள்வியை நம்முன் எழுப்பும்.

இதுபோல  சம்பத்தப்பட்ட மக்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது நம் அரசியல்வாதிகள் தம் மேசை மீது விரிக்கப்பட்ட வரைபடத்தில் வரையும் கோடுகள் பாரதூரமான விளைவுகளை மக்களின்மீது ஏற்படுத்தும். ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் ஒரே நாளில் வேவ்வேறு பகை நாடுகளுக்குரியவர்களாக மாற்றப்படுவர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாது.

அப்படிப் பல பத்தாண்டுகளாகத் தன் மகன்களைப் பார்க்காமல் பிரிந்து வாழ்ந்தவர்தான் காஷ்மீரின் ஊரிப் பகுதியிலுள்ள சரோன்டா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா பீவி. இவர் தனது தள்ளாத முதுமையில் (70) மகன்களோடு வசிப்பது என்கிற முடிவில் சென்ற செப் 26, 2011 அன்று கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்தார். இப்படி ஒருவர் கண்காணினிப்பைக் கடந்துசென்றதை அறிந்த இந்திய இராணுவம் துணுக்குற்றது.கட்டுப்பாட்டுக் கோட்டருகில் கண்காணிப்பிற்கென பங்கர்களைக் கட்டத் தொடங்கியது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இவ்வாறு பங்கர்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை. நேரடித் தொலைபேசித் தொடர்பு வழியாக பாக் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்திய இராணுவம் இதைக் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் சரோண்டா கிராமத்தை நோக்கித்தான் பங்கரை அமைக்கிறோமே தவிர பாக் இராணுவத்தை நோக்கி அல்ல என இந்திய இராணுவம் கூறியதை பாக் இராணுவம் ஏற்கவில்லை. ஒலி பெருக்கி மூலமாகப்  பாக் இராணுவம் எச்சரிக்கை செய்தது. பின் ஷெல்லடித் தாக்குதல்களைத்  தொடங்கியது. மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இரு பக்கமும் போர் நிறுத்தத்தை மீறும் செயல்கள் அதிகரித்தன. சில ஆண்டுகளாகவே இவ்வாறு போர் நிறுத்தத்தை இரு தரப்பும் மீறுவது அதிகரித்து வந்தது 2008ம் ஆண்டில் மட்டும் இதுபோல 77 மீறல்கள் நடைபெற்றன என அப்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் குறிப்பிட்டார். சென்ற ஆண்டில் 117 மீறல்கள் நடந்துள்ளனமிந்த ஜனவரி 8ந்தேதி இரு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தன் இராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி பெரிதான பின்பு, அதை பாக் இராணுவம் மறுத்ததோடு நிற்காமல், அதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தனது வீரர் ஒருவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவித்தது. இந்திய இராணுவம் தான் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என்றுதான் சொல்கிறதே ஒழிய பாக் வீரர் கொல்லப்பட்டதை மறுக்கவில்லை.

இதில் யார் பொய் சொல்கிறார்கள் எனச் சொல்வது எளிதல்ல. இராணுவங்கள் எந்தக் காலத்தில் உண்மைகளைப் பேசின?

இன்றைய பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் பாக் அரசு ரொம்பவும் அடக்கி வாசிக்கிறது. அதன் அணுகல்முறை மாற்றம் தவிர அதன் உள் நாட்டு நெருக்கடிகளும் இதற்கொரு காரணமாக உள்ளன.  பேச்சு வார்த்தைக்குத் தயார் என அது சொல்கிறது.  தொடக்கத்தில் அது வழக்கம்போல ஐ.நா அவை தலையிட்டு இதை விசாரிக்கட்டும் என்று சொன்னது. இந்தியாவும் வழக்கம்போல மூன்றாவது நபருக்கு இதில் இடமில்லை என அக் கோரிக்கையை நிராகரித்தது.

பேச்சு வார்த்தைக்குத் தயார் என பாக் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி சொல்வதையும், பாக் இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறக் கூடாது என ஆணையிட்டிருப்பதாகவும் இன்று செய்திகள் வந்துள்ளன. இதைக்கூட மன்மோகன் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு பாக் அரசும் இராணுவமும் பயந்து பின் வாங்குவதாக இன்றொரு ஆங்கில நாளிதழ் முதற் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான மக்கள் கடந்த சில ஆண்டுகளாக எளிதில் அதனூடாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வணிக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன். இரவில் நிம்மதியாகத் தூங்கினர். இணையத் தளம் ஒன்றில் கண்டுள்ள தகவல் ஒன்றின்படி, போர் நிறுத்தத்திற்கு முன் 2000வது ஆண்டில் செப் 26 முதல் நவ 27 வரையிலான இரு மாதங்களில் மட்டும் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் 611 பேர் கொல்லப்பட்டனர். இதில் 159 பேர் இராணுவத்தினர். 151 பேர் சாதாரண மக்கள். பிறர் “தீவிரவாதிகள்”.

2009ல் பாதுகாப்பு அமைசர் அன்டனி நாடாளுமன்றத்தில் கூறியபடி, போர் நிறுத்தம் தொடங்கப்பட்ட 2003 முதல் 2006 வரை ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. 2003 முதல் ஜூலை 2009 வரை நடைபெற்ற 110 சம்பவங்களில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் வெறும் நான்கு பேர். சிவிலியன்கள் வெறும் இரண்டு பேர். போர் நிறுத்தம் எத்தகைய அமைதியை அங்கு வாழும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தின என்பதை அறியாதவர்களும், அறிந்தும் இது குறித்துக் கவலைப்படாதவர்களும் இன்று எழுப்பும் போர் ஊளைகளை என்ன சொல்வது?

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உமிழும் போர்வெறிப் பேச்சுக்கள் இந்த நிலையையை அழித்துவிடுமோ என்கிற அச்சம் அமைதியை விரும்புவோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அணு வல்லமை பெற்ற நாடுகள். பாக்கைப் பொருத்தமட்டில் இந்திய அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லி வருவதைப் போல பல அதிகார மையங்கள் செயல்படக்கூடிய ஒரு நாடு. போர் இரு நாடுகளுக்குமே இன்றைய சூழலில் உகந்தது அல்ல.

எத்தனை போர் வெறிக்கும் வெறுப்புக்கும் மத்தியில் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் ஆகியோர் இரு மக்களையும் இணைக்கும் பாலங்களாக விளங்கி வந்துள்ளனர். அதேபோல இரு நாடுகளிலும் உள்ள வணிகர்களும்கூட அமைதிச் சூழலையே விரும்புவர். பயங்கரவாதத்தின் விளை நிலமாகப் பாகிஸ்தான் இருந்தபோதும் பாகிஸ்தானிகள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர். இரு நாடுகளுக்குமே பயங்கரவாதம் பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு புத்திசாலித்தனமான அயல் உறவு நிலைபாடு என்பது இன்றைய சூழலில் பாகிஸ்தானிற்குள் உள்ள பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களையும் அடிப்படைவாதிகளையும் தனிமைப் படுத்துவதாகவே அமைய வேண்டும்.  மாறாக அவர்களின் நோக்கத்தை நிரைவேற்றுவதாக அமைந்துவிடக் கூடாது.

இந்திய அரசின் அணுகல்முறை அந்த வகையில் அமையவில்லை.