பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு

{இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது முந்தைய கட்டுரைகளுடன் சேர்த்துப் படித்தால் இன்னும் வரலாறு விளக்கமாகும். ‘ஏரியல் ஷரோன்: மாவீரனா போர்க்குற்றவாளியா?’ (2013), ‘காஸாவில் ஒரு கண்ணீர் நாடகம்’ (2005), ‘காஸா : போரினும் கொடியது மௌனம்’ (2014) முதலிய என் கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. சுருக்கத்தின் விளைவாக முக்கிய செய்திகள் ஏதும் விடுபட்டு விட்டதாகக் கருதினால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம்.}

இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை (வெஸ்ட் பாங்க்) என்கிற மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் ‘பலஸ்தீன்’ என்கிற ஒரே பகுதியாக அறியப்பட்டன. பலஸ்தீனிய அரபியர்கள் (பெரும்பாலும் முஸ்லிம்கள், ஒரு சிறிய அளவில் கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ்கள்) மற்றும் யூதர்கள் இரு சாரரும் இதைத் தமக்குரிய நிலம் என்கின்றனர்.

கி.மு நூற்றாண்டுகளில் இங்கு வாழ்ந்த யூதர்கள் பெரிய அளவில் புலம் பெயர்ந்து சென்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தனர். யூத வெறுப்பு அரசியல் (Anti Semitism) ஒன்று எழுந்ததை ஒட்டி 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் தமது பூர்வ நிலமான பலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்வது என முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்து, அங்கு பல நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் மத்தியில் குடியேறத் தொடங்கினர். புனித பைபிளைச் சான்று காட்டி, இறைவனால் தங்களுக்கு “வாக்களிக்கப்பட்ட நிலம்” இது என உரிமை கோரினர்.

1882ல் பலஸ்தீனத்திற்குள் இப்படி முதல் யூதக் குடியிருப்பு உருவானது. 1884ல் இதை நியாயப்படுத்தும் நோக்கில் ‘ஸியோனிச’ கோட்பாட்டையும் உருவாக்கினர். இதற்கு முன் பலஸ்தீனத்திற்குள் வாழ்ந்த யூதர்கள் வெறும் 4 சதம் மட்டுமே. (முஸ்லிம்கள் 86 சதம், கிறிஸ்தவர்கள் 9 சதத்திற்கும் மேல்.) தொடர்ந்து இரண்டாம் உலகப் போர், இட்லரின் யூதப் படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டி பெரிய அளவில் அகதிகளான யூதர்களை ஸியோனிஸ்டுகள் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். முதல் உலகப் போருக்குப் பின் பலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

முதலில் இக் குடியேற்றத்தை பலஸ்தீனியர்கள் பெரிதாக எடுத்துக் கொள்லாவிட்டாலும் தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.

1947ல் ஐ.நா அவை இதில் தலையிட முடிவு செய்தது. அப்போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதம்; அவர்கள் வசமிருந்த நிலம் 7 சதம். எனினும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பலஸ்தீனின் 55 சதப் பகுதியில் யூதர்களுக்கென இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க ஐ.நா பரிந்துரைத்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட யூதர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக் காலம் முடியும்போது சுதந்திர இஸ்ரேலைப் பிரகடனம் செய்தனர். பலஸ்தீனியர்கள் அதை எதிர்த்தனர்.

1947 -48 அரபு- இஸ்ரேல் போர்: மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரபு நாடுகள் யூதர்களுக்கு எதிராகப் படை எடுத்து வந்தன. ஐந்து அரபுப் படைகள் அதில் பங்குபெற்ற போதும் யூதர்களின் மூர்க்கமான தாக்குதலின் ஊடாக போர் முடியும்போது அவர்கள் பலஸ்தீனத்தின் 78 சதப் பகுதியைக் கைப்பற்றி இருந்தனர். சுமார் 500 நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டிருந்தன. கைப்பற்றிய இடங்களுக்கெல்லாம் ஹீப்ரு மொழியில் பெயர்கள் இடப்பட்டன.

“உலகிலுள்ள 11 மில்லியன் யூதர்களில் 10 மில்லியன் பேரேனும் குடியமர்த்தப்பட்ட ஒரு இஸ்ரேலைக் கனவு காண்கிறேன்” என்றார் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன்,“பலஸ்தீனம் என்று எதுவும் கிடையாது” என்றார் இஸ்ரேலின் முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றவர், முதல் பெண்பிரதமர், இரும்புப் பெண் என்றெல்லாம் பெயர் பெற்ற கோல்டா மேய்ர். போரின் முடிவில் எகிப்து வசம் காஸாவும் மேற்குக் கடற்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் வசமும் கோலான் மேடுகள் சிரியா வசமும் இருந்தன.

பலஸ்தீனியர்கள் அகதிகளாகும் வரலாறு தொடங்கியது.

1967 போர்: ஆறு நாள் யுத்தத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் எல்லாவற்றையும் கூடுதலாக சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் கைப்பற்றியது. ஐ,நா அவை பலஸ்தீனம், இஸ்ரேல் என்கிற இரு நாட்டுத் தீர்வு குறித்த 242 வது தீர்மானத்தை இயற்றியது. எனினும் இன்றுவரை அது நடைமுறைப் படுத்தப்பட வில்லை. பலஸ்தீனத்திற்கு இறையாண்மை உடைய நாடு எனும் நிலை இன்னும் வழங்கப்படவில்லை.

இடையில் மீண்டும் 1973ல் ஒரு போர்.

1964ல் பல்வேறு பலஸ்தீனியக் கெரில்லாக் குழுக்கள் இணைந்து பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) உருவானது. ஜோர்டான், லெபனான் முதலான அரபு நாடுகளைத் தளமாகக் கொண்டு அது இயங்க வேண்டி இருந்தது

யாசிர் அராஃபத்தின் தலைமையில் இயங்கிய பலஸ்தீனிய விடுதலை அமைப்பிற்கு காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பலஸ்தீனியப் பகுதிகளுக்கான முழு அதிகாரத்தையும் வழங்குவதாக அரபு நாடுகளின் குழுமம் (Arab League) 1974ல் அறிவித்தது. ஐ.நா. அவையில் பார்வையாளர் நிலையும் அதற்கு வழங்கப்பட்டது.

1982 போர்: லெபனான் மீதான ஆறு மாதப் படையெடுப்புக்குப் பின் பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) லெபனானிலிருந்து வெளியேறி துனீசியாவிலிருந்து இயங்கியது. 1988 ல் அது அல்ஜியர்சிலிருந்து, ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீனிய நாட்டிற்கான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தது (Government in Exile).

1988- 03 காலகட்ட பலஸ்தீனிய எழுச்சிகளில் (Intifadas) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்தது.

1993 ல் ஆஸ்லோவில் முதன்முதலாக பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸா, மேற்குக்கரை இரண்டையும் பாதை (corridor) ஒன்றின் மூலம் இணைத்து நிர்வகிப்பதற்கான “பலஸ்தீனிய தேசிய ஆணையத்திற்கு” (PNA) இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. காசா, மேற்குக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை வெளியேற்றிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இரு பகுதிகளும் இரு பலஸ்தீனிய அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தீவிர இயக்கமான ஹமாசின் கட்டுப்பாட்டில் காஸாவும் ஃபடா வின் கட்டுப்பாட்டில் மேற்குக் கரையும் தற்போது உள்ளன.

எனினும் எதார்த்தநிலை அப்படியேதான் தொடர்ந்தது. 1995 முதல்2007 வரை எத்தனையோ ‘சம்மிட்’கள், பேச்சுவார்த்தைகள் எதிலும் பயனில்லை. பலஸ்தீனியர்களின் நிலை மேலும் மேலும் மோசமாகியது.

இன்று தங்களை ஒரு நாடாக அங்கீகரிக்க பலஸ்தீனியர்கள் ஐ.நா அவையையும் பிற நாடுகளையும் கெஞ்சித் திரிகின்றனர்.

விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். கொண்டிருந்த குறைந்த காலப் பழக்கத்தில் அந்த உறவு அப்படித்தான் இருந்தது. ஒரே ஒருமுறைதான் அவரை நான் சந்தித்தேன். அது 1986 ஜூலை அல்லது ஆகஸ்ட். துல்லியமாக நினைவில்லை. முதல் நாள் காலையும் அடுத்த நாள் மாலையும் தஞ்சையிலிருந்த என் “12/28, அம்மாலயம் சந்து” வீட்டில் அமர்ந்து நெடு நேரம் அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு அவரைக் கொண்டு சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வரும் வரை இடையிடையே சிறு கேள்விகளைத் தவிர நான் வேறொன்றும் பேசவில்லை.

நேரில் கண்டதில்லை ஆனாலும் அவரது எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வந்தேன். 1984 கோடையில் வெளிவந்த ‘இலக்கு’ முதல் இதழிலிருந்து புரட்டாதி 86 ல் வெளி வந்த ‘பயணம்’ இரண்டாவது இதழ் வரை தவறாமல் எனக்குக் கிடைத்து வந்தது. ஓரளவுக்கு அப்போது நான் ஈழத்தில் உள்ள இடதுசாரித் தோழர்களுக்கு, குறிப்பாக சண்முகதாசன் வழி வந்தோருக்கு நான் பரிச்சயமாகி இருந்தேன். தோழர் கே. டானியல் அவர்களுக்கும் எனக்குமான நட்பு, அவரது நூல்களை நாங்கள் வெளியிட்டு வந்தது என்பதன் ஊடாக அது சாத்தியமாகியிருந்தது. 1983 ஜூலைக்குப் பின் ஒரு முறை சண்முகதாசன் அவர்கள் இங்கு வந்தபோது சென்னயில் ஒரு சிறு சந்திப்பை நான்தான் ஏற்பாடு செய்திருந்தேன். உலகறிந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தபோதும் அன்று இங்கிருந்த இடதுசாரி அரசியல் சூழலில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சீனச் சார்பு மற்றும் ரஷ்யச் சார்பு) அவருடன் பேசத் தயாராக இல்லை.

நான் அப்போது ‘மார்க்சிஸ்ட் கட்சி’ எனப்பட்ட சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டிருந்தேன். ஈழப் போராட்டத்தை ஆதரித்து கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராகக் கூட்டங்கள் பேசினேன் என்பது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதன்பின் நான் இங்கிருந்த நக்சல்பாரி இயக்கங்கள் என அழைக்கப்படும் ஆயுதப் போராட்டங்களை ஆதரிக்கும் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தேன். இவற்றுள் ‘மக்கள் யுத்தம்’ என்றழைக்கப்பட்ட குழுவுடன் பின் ஐக்கியமானேன். ஆனால் அன்று இந்தக் குழுக்களும் சண் அவர்களின் கூட்டத்திற்கு வரவில்லை. சண் அவர்களின் கட்சி தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதுதான் காரணம். நக்சல்பாரி இயக்கங்கள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும் உண்மையாகவும் ஈழ ஆயுதப் போராட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட ஈழ ஆயுதக் குழுவையும் முழுமையாக ஆதரிக்காத போதுங் கூட தனி ஈழம் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் தேவை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியில் வந்த பின் என் நிலைப்பாடு அத்தனை தெளிவுடன் இருந்தது எனச் சொல்ல இயலாது. ‘கைலாசபதி இலக்கிய வட்டம்’ எனநாங்கள் ஒரு இலக்கிய அமைப்பு வைத்திருந்தோம். அதன் சார்பாக அப்போது நாங்கள் “தேசிய இனப் பிரச்சினை : கேள்விகளை நாங்கள் கேட்கிறோம். பதில்களை மார்க்சீய ஆசான்கள் சொல்கின்றனர்” என்றொரு எட்டு பக்க பிரசுரத்தை வெளியிட்டோம். அதில் தேசிய சுய நிர்ணயப் போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் ஆதரித்தே ஆக வேண்டும் என்பதாக அந்த மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன.
அந்த வெளியீடு டானியல் அவர்கள் வழியாக சண் அவர்களைச் சென்றடைந்தது. அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அழகான ஆங்கிலத்தில் மிக விரிவாக ஒரு பதில் எழுதினார். இப்படி மேற்கோள்களைப் பிய்த்துப் போட்டு ஆதரிப்பது அல்லது எதிர்ப்பதன் மூலம் எதையும் நியாயப்படுத்தி விடலாம்; ஆனால் அது தவறு. இன்றைய சூழலில் அப்படியான ஒரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என அந்தக் கடிதத்தில் அவர் விளக்கி இருந்தார். விசுவானந்த தேவன் மற்றும் தோழர்களின் NLFT உருப்பெற்ற காலத்தில் இங்கு சூழல் எப்படி இருந்தது என்பதை விளக்கத்தான் இவ்வளவையும் சொல்ல வேண்டியதாகி விட்டது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நாங்கள் ஒன்றும் பெரிய சக்திகள் இல்லை. ஒரு மிகச் சிறிய குழு அவ்வளவுதான். எனினும் இடது சார்புள்ள ஈழப் போராளிகள் பலரும் தஞ்சையில் என் அம்மாலயம் சந்து வீட்டுக்கு வந்து போவர். ஒரு இருபது கி.மீ தொலைவில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் ப்ளாட் அமைப்பின் முகாம் ஒன்று செயல்பட்டு வந்தது. அவர்களின் ஒலிபரப்பு நிலையம் தஞ்சையிலிருந்து இயங்கியது. இப்போது ஃப்ரான்சில் உள்ள தோழர் சிவா வின் தலைமையில் அது இயங்கியது. அவரும் அவரது தோழர்களும் வீட்டுக்கு வருவர். ஒரு கட்டத்தில் ப்ளாட் அமைப்பின் பின் தள மாநாடு தமிழகத்தில் நடந்தபோது சில தோழர்கள் என் வீட்டில் தங்கிப் பல நாட்கள் அவர்களின் ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்டதும் உண்டு. இதற்கிடையில் தோழர் டானியலும் இங்கு வந்து போவார். என் வீட்டில்தான் தங்குவார். சுருக்கமாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகள் தவிர்த்த பிற அமைப்பில் உள்ள சற்றே இடதுசாரிச் சார்புடைய பலரும் எங்களுடன் நட்பாக இருந்தனர்.

அந்தப் பின்னணியில்தான் இங்கிருந்த NLFT தோழர்களும் எங்களுடன் தொடர்பில் இருந்தனர். இலக்கு இதழ்கள் தொடர்ந்து எனக்கு வந்தன. இங்குள்ள மற்ற நண்பர்களுக்கும் அவை என் வழி சென்றடையும். இலக்கு இதழில் வெளி வரும் கட்டுரைகளை முழுமையாக வாசித்து நண்பர்களுடன் விவாதிப்போம்.

இந்தப் பின்னணியில்தான் ஆயுதப் போராட்டக் குழுக்களிடையே மோதல்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு மற்ற குழுக்களை அழிப்பது, கருத்து மாறுபாடுகள் கொண்டவர்கள் கடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது என்பதெல்லாம் நடந்தேறின. டானியல் அவர்கள் இதச் சுட்டிக்காட்டிப் ‘பாருங்கள் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்’ என்று எங்களிடம் வாதிடுவார். இந்த நிலையில்தான் நான் ‘எரிதழல்’ எனும் அப்போதைய எனது புனை பெயரில் ‘ஈழப் போராளிகளின் சிந்தனைக்கு’ எனும் சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டேன் (நூலகம் எனும் தளத்தில் அது கிடைக்கும்). இந்தப் போக்குகளை நான் அதில் கடுமையாகச் சாடி இருந்தேன். ஒரத்தநாட்டில் இருந்த ப்ளாட் அமைப்பில் சிலர் ஒரு நாள் ஆயுதங்களுடன் வந்து அந்த வெளியீட்டிற்காக என்னை எச்சரித்துச் சென்றதும் நடந்தது.
இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ப்ளாட் அமைப்பு பலவீனமாகி அதிலிருந்து பிரிந்த ஒர் குழுவினர் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமத்தில் தங்கி இருந்தனர். அவர்களைச் சந்திக்க விசுவானந்த தேவன் வருகிறார் என்கிற தகவல் எனக்கு வந்தது. விசுவானந்த தேவன் குறித்து அறிந்திருந்த நான் மிக்க ஆவலுடன் அவரை எதிர்பார்த்திருந்தேன். இந்த நேரத்தில் வெளி வந்து கொண்டிருந்த இலக்கு இதழ்களில் இயக்கங்களுக்கு இடையே நடைபெறும் இந்தக் கொலைகள், அழித்தொழிப்புகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் கட்டுரைகளும் வந்திருந்தது எனது எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

# # #

அன்று காலை நான் தன்சைப் பேருந்து நிலையத்தில் தேவாவுக்காகக் காத்திருந்தேன். புகைப்படத்திலும் கூட அவரை நான் பார்த்ததில்லை. இலக்கு இதழில் படங்கள் மட்டுமல்ல, கட்டுரைகளில் ஆசிரியர் பெயரும் இருந்ததில்லை. எல்லாக் கட்டுரைகளையும் நாங்கள் தேவாவை வைத்தே அடையாளப் படுத்தியிருந்தோம். எனக்கு அவர் முகம் பரிச்சயமில்லை என்ற போதிலும் பத்திரிகைகளில் வெளி வந்த புகைப்படங்களின் ஊடாக தேவாவுக்கு என் முகம் ஓரளவு பரிச்சயமாயிருந்திருக்க வேண்டும்.

தோழர் என விளித்தாரா, மார்க்ஸ் என விளித்தாரா என எனக்கு நினைவில்லை. என் எதிரே ஒரு கைலி (சாரம்), மேலே ஒரு அரைக் கை சட்டை, கையில் ஒரு துணிப் பை சகிதம் அவர் நின்றிருந்தார்.
என் சைக்கிளில் அவரைப் பின்னால் அமர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவர் சந்திக்க வந்தவர்கள் அருகில் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தனர். அந்த முகவரியை விசாரித்து மதியம் வந்து அழைத்துச் செல்வதாக நண்பர் வேல்சாமி சொல்லியிருந்தார். மதியம் இரண்டு மணி வாக்கில்தான் தேவாவை அழைத்துச் செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் வேல்சாமி அனுப்பிய அவரது பணியாளர் வந்தார். அதுவரை என் கேள்விகளுக்கெல்லாம் மிக்க பொறுமையாகவும், எளிமையாகவும் தேவா பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் இரவு நான் அவருக்குச் சென்னைக்கு டிக்கட் ரிசர்வ் செய்திருந்தேன். அன்று மாலை அந்தக் கிராமத்திற்குச் சென்று அவரை அழைத்து வர வேண்டும். மாலை நான்கு மணி வாக்கில் வேல்சாமி வந்தார். அப்போது அவரிடம் ஒரு ‘பஜாஜ் எம் 80’ என்றொரு சிறிய மொபெட் இருந்தது. அதில் அந்தக் கிராமத்திற்குச் சென்றோம். அதற்குள் அங்கிருந்தவர்களோடு தேவா பேசி முடித்திருந்தார். என்ன என்பது குறித்து நாங்களும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.

திரும்பி வரும்போது அந்தச் சின்ன வண்டியில் மூவரும் வந்தோம். வெண்ணாற்றங்கரைப் பாலத்தைத் தாண்டி வரும்போது ஒரு அதிர்ச்சி. அங்கு காவல்துறையினர் நின்று போகிற, வருகிற வாகனங்களைச் சோதித்துக் கொண்டிருந்தனர். ஒரே வண்டியில் மூவர் வருவதைக் கண்டதும் நாங்கள் நிறுத்தப்பட்டோம். வண்டியைச் சற்றுத் தள்ளி நிறுத்திய வேல்சாமி எங்கள் இருவரையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு சோதனை செய்து கொண்டிருந்தவர்களிடம் சென்றார். வண்டியில் செல்வது யார் என்பதை அவர்கள் குடையவில்லை. மூன்று பேர் வந்தத்தைத்தான் அவர்கள் பெரிய குற்றமாகச் சொன்னார்கள். வேல்சாமி ஏதோ கொஞ்சம் பணம் தந்து அவர்களைச் சரி செய்தார். வேல்சாமியையும் தேவாவையும் அதே வண்டியில் அனுப்பி விட்டு நான் பஸ்சில் பின் தொடர்ந்தேன்.

அன்றிரவு பத்து மணி அளவில் தேவாவுக்கு பஸ். பேசிக்கொண்டே இருந்தோம். இன்னொரு நாள் இருந்து மேலும் சிலரைச் சந்தித்துச் செல்லலாமே என்றேன். உடனடியாகச் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டும் எனவும் தங்குவது சாத்தியமில்லை எனவும் கூறி இரவே புறப்பட்டார். முழுக்க முழுக்க அவரது அன்றைய உரையாடல் போராட்டம் மற்றும் அரசியல் பற்றித்தான் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர் யாரைப் பற்றியும் பெரிதாக ஏதும் பேசவில்லை. செல் போன்கள் இல்லாத காலம் அது. சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் துயரமும் அதிர்ச்சியும் மிக்க அந்தச் செய்தி எனக்குக் கிட்டியது. சென்னையிலிருந்து இலங்கைக்குச் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் விசுவானந்த தேவன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதான் முதலில் கேள்விப்பட்டோம். பின்னர் கிடைத்த செய்திகள் அவர் சென்னையிலிருந்து இலங்கை சென்று மீண்டும் சென்னை வரும்போது கொல்லப்பட்டர் எனத் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டதற்கும் கூட ஆதாரம் இல்லை எனவும் இப்போதைக்கு அவர் மறைந்து போனார் என்றே கொள்ள வேண்டும் எனவும் பின்னர் கூறப்பட்டது. இலங்கைப் படையா, இல்லை இயக்கங்களுக்குள்ளான மோதலா எது இந்த மறைவின் பின் உள்ள காரணம் எனவும் யாருக்கும் தெரியவில்லை. டெலோ, EPRLF முதலான இயக்கங்கள் அழிக்கப்பட்ட காலம் அது.
1986 ஏப்ரலில்தான் டானியலும் இறந்து போனார். என் வீட்டில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.
ஈழத்து இடதுசாரி நண்பர்களுடனான எனது தொடர்புகள் அறுந்தன.

# # #

அந்த இரண்டு நாட்கள் நான் விசுவானந்த தேவனுடன் என்ன பேசினேன் என இப்போது நினைவில்லை.

இன்று விசுவானந்த தேவனும் தோழர்களும் மட்டுமல்ல, அவர்களின் NLFT, PLFT, இலக்கு, பயணம் எல்லோரும், எல்லாமும் பழைய வரலாறாகி விட்டதற்குச் சாட்சிகளாக நாம் நிற்கிறோம். எஞ்சியுள்ள நாம் இந்த எல்லாத் தியாகங்களையும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட விட்டுவிடக் கூடாது. முடிந்தவரை நமது அறிவுக்கும் அனுபவங்களுக்கும் எட்டியவரை நம்முடைய இந்த வரலாற்றைப் பதிவு செய்வதும் மதிப்பிடுவதும் அவசியம். வருகிற தலைமுறைகளுக்குப் பயன்படுமாறு விருப்பு வெறுப்பின்றி நாம் அதைச் செய்தல் வேண்டும். விசுவானந்த தேவனும் தோழர்களும் மறைந்த இந்த முப்பதாம் ஆண்டு நினைவு அதற்குக் கால்கோள் இட வேண்டும். அந்த வகையில் சில:

தோழர்களின் மறைவுக்குப் பின் இடதுசாரி இயக்கங்கள் வெகு விரைவாகப் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தன. இலங்கையில் மட்டுமல்ல, உலகளவிலும் இதுதான் நிலை என்பது கவனத்துக்குரியது. பெருகிவந்த இனவாதத்தின் முன் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் நிற்க இயலவில்லை. இடதுசாரி அடையாளத்துடன் உருப்பெற்ற NLFT எந்நாளும் பெரிய அளவில் வளர இயலவில்லை. இந்தத் தேக்கம் பல உள்கட்சி விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்குமே இட்டுச் சென்றது. இறுதியில் எல்லா இடதுசாரி இயக்கங்களைப் போலவும் அது பிளவில் முடிந்தது. பிளவிற்குப் பின் NLFT யிலிருந்து PLFT உருப்பெற்றபோதும் அது பெரிதாக வளரவில்லை. மிக விரைவில் அதன் தத்துவார்த்த வழிகாட்டியாக இருந்த விஸ்வானந்த தேவன் கொல்லப்பட்டார் (1986, அக் 15). அதன் பின் NLFT மட்டுமல்ல PLFT யும் சிதைந்து சிறுத்தது. விசுவானந்த தேவனுடன் வெளி வந்து PLFT ஐ உருவாக்கிய அன்ரன், ரமணன் போன்றோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டுக் கடுஞ் சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தோர் ஒன்று வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர் அல்லது அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கினர்.

உலக அளவிலும் இடதுசாரி இயக்கங்கள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன. சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் வீழ்ந்தன; கட்சிகளும் இல்லாமற் போயின. லத்தீன் அமெரிக்கா, சீனம் போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தம் அடிப்படை அடையாளங்களை இழந்தன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் ஆயுதப் போராட்டங்களும் படிபடியாக ஒடுங்கின. இலங்கையில் எல்லா இயக்கங்களையும் அழித்தொழித்த விடுதலைப் புலிகள் அமைப்பும் அழித்தொழிப்புக்கு ஆளானது.

# # #

பாரம்பரிய இடதுசாரி இயக்கங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு வெளிவந்த விஸ்வானந்த தேவனும் தோழர்களும் அங்கிருந்து விலகி “தமிழீழப் போராளிகளுடன் தன்னையொரு புதிய தோழனாக” அடையாளம் கண்டு “பெருமிதம்” கொண்டனர். உருவாகியிருந்த ஈழ ஆயுதப் போராட்டங்களை அவர்கள் “சொந்த ஜனநாயக அரசை அமைத்துக் கொள்வதற்காகத் தமிழ் இனம் நடாத்திவரும் புரட்சிகரப் போராட்டம்” என வகைப்படுத்தி “அதில் தனது பங்களிப்பைச் செய்கின்ற நோக்கில்” தம்மையும் இணைத்துக் கொள்வதாக அறிவித்து அவர்களின் ‘இலக்கு’ தன் பயணத்தைத் தொடங்கியது. அது மாத்திரமல்ல இப்படி முன்வைக்கப்படும் தனது பங்களிப்பு நடந்து கொண்டிருந்த “தமிழீழ தேசியப் போராட்டத்தை சரியான திசைவழியில் முன்னெடுத்துச்” செல்ல உதவும் எனவும் அது நம்பியது.

இன்னும்கூட “சிங்கள -தமிழ் இன தொழிலாளி வர்க்க இணைவு சாத்தியம்” என நம்பியவர்களை இலக்கு வரட்டுச் சூத்திரவாதம் எனக் கேலி செய்தது. “ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒற்றுமைக் குரல் எழுப்பும் என எதிர்பார்ப்பது கயமைத்தனம்” எனச் சாடியது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இடதுசாரி அடையாளங்களை இழக்கத் தொடங்கியது.
இதன் விளைவாக அது இன அஇயாளத்தைத் தவிர பிற அடையாளங்களை மறுதலிக்கவும் தொடங்கியது. தமிழ் மக்களிடையே உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் கணக்கில் கொண்டாலும் அது குறித்த தெளிவான திட்டம் எதையும் NLFT, PLFT முதலியன முன்வைக்கவில்லை.

முஸ்லிம் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களைத் “தனித் தேசியப் பண்புகளைக் கொண்டிருப்பதாக” அங்கீகரித்த போதும் அவர்கள் “தனி இனமாகக் கூடுவதை” அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல “முஸ்லிம் மக்களுக்குத் தனியான அமைப்பு (என்பது) தவறான போக்கு” என அழுத்தம் திருத்தமாகவும் அவை முன்வைத்தன. NLFT யிலிருந்து பிரிந்து PLFT ஐத் தொடங்கியபோது இரண்டும் வேறுபடும் புள்ளி குறித்து விசுவானந்த தேவனின் PLFT முன்வைத்த ஓரம்சம் இங்கே குறிப்பிடத்தக்கது. “பாட்டாளி வர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்த பின்னால்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமுடியும் என NLFT அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்து தவறானதென நாம் கருதுகிறோம். போராட்டம் முனைப்படைந்து ஏனைய வர்க்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்டுவது என்பது சாத்தியமற்றது” என்பதுதான் அது.

இப்படி அப்பட்டமாக வர்க்க அரசியலிலிருந்து இன அரசியலுக்குச் செல்வதை PLFT முன்மொழிந்துக் களம் இறங்கியபோதும் அந்த “ஏனைய வர்க்கங்கள்” இந்த மனம் திருந்தி வந்த “பாட்டாளி வர்க்கத்தை” அனுமதிக்கவில்லை என்பதுதான் வரலாறாக அமைந்தது. எனினும் இந்தப் பிற வர்க்கங்களால் தலைமை தாங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சீரழிந்து வருவதை விசுவானந்த தேவனும் தோழர்களும் காணத் தவறவில்லை. “கருத்து மாறுபடுகிறவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாவதையும்”, ஆயுதப் போராட்டங்கள் சித்திரவதை முகாம்களாக மாறுவதையும்”, “இயக்கங்கள் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுவதற்குப் பதிலாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதையும்” தோழர்கள் தங்களின் புதிய “பயணம்” ஊடாக அவர்கள் அடையாளப்படுத்தியபோதும் அந்த விஷச் சுழலிலிருந்து அவர்களால் தப்பிக்க இயலவில்லை.

இதுதான் நம் வரலாறு. இங்கே நான் நம் வரலாற்றை மட்டுந்தான் சுட்டிக்காட்டியுள்ளேன். இதிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் சிந்திக்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு எனும் மாயை

சென்னையில், “விடிவெள்ளி வாசகர் வட்டம்” சார்பாக “குடி: அரசியல் பொருளாதாரம் பண்பாடு” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. கள் எப்படி ஒரு இயற்கை உணவு, அதைத்தடை செய்துள்ளது எத்தனை அபத்தம் என்பதை இதைத் தொடர்ந்து வற்புறுத்தி வரும் பெரியவர் நல்லுசாமி அவர்கள் விரிவாகப் பேசினார்கள். தோழர் வேணி, மருத்துவர் ராமசாமி, எழுத்தாளர் போப்பு, திரைப்படக் கலைஞர் ராமு ஆகியோர் குடி பற்றி இங்கு கிளப்பப்படும் பீதி எத்தனை தேவையற்றது எனப் பேசினர். இறுதியாக முத்தையா வெள்ளையன் நிறைவுரை ஆற்றினார்.

நான் பேசும்போதுகுடிப் பழக்கம் ஒரு பிரச்சினையே இல்லை என நாம் கருதவோ சொல்லவோ வேண்டியதில்லை. குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது, இளைஞர்கள் மாணவர்கள் மத்தியிலும் குடிப் பழக்கம் வளர்ந்துள்ளது கவலைக்குரிய விடயம்தான். ஆனால் இதற்கு என்ன செய்வது என்பதில்தான் நான் இங்குள்ள மதுஎதிர்ப்பு அரசியல் கட்சிகளுடன் வேறுபடுகிறேன் என்றேன். பூரண மது விலக்கு என்பதை நாம்ஏற்றுக் கொள்ளக் கூடாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அ.தி.மு.க அரசை வீழ்த்துவதற்கு வேறு வழியே இல்லைஎன விரக்தியுற்ற கட்சிகளின் கடைசி ஆயுதமான மது விலக்கு உள்ளது.

மதுவிலக்கு கூடாதுஎன்பதற்கு இரண்டு காரணங்களை நாம் (அதாவது மதுவிலக்கு கூடாது என்போர்) சொல்வதாகவும் அது தவறு எனவும் இவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் மதுவிலக்கை ஆதரித்து தமிழ் இந்து நாளிதழில் எழுதப்பட்ட தொடர் கட்டுரையிலும் கூட அப்படித்தான் சொல்லப்பட்டது. முதல் காரணமாகஅவர்கள் சொல்வது மது மூலம் வரும் அரசின் அரசின் வருமானம் (25 ஆயிரம் கோடி) இல்லாமல்போய்விடும் என நாம் சொல்கிறோமாம். இது முற்றிலும் தவறு. நாம் அப்படிச் சொல்லவில்லை. இப்படி அரசு வருமானம் தேட வேண்டும் என்பது நம் விருப்பமும் அல்ல. அதேபோல டாஸ்மாக் மற்றும் மதுத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை போய்விடும் என்பதும் இங்கு முக்கியபிரச்சினை அல்ல. டாஸ்மாக் கடைகளை வேறு ஏதாவது விற்பனை செய்யும் கடைகளாக மாற்றலாம். ஏற்கனவே அரசு உணவு, மருந்துக்கடைகளை நடத்தவில்லையா, அதுபோல பலசரக்குக் கடைகளையும் நடத்தட்டுமே. தமிழகம் முழுவதும் உள்ள 6,826 டாஸ்மாக் கடைகளிலும் மலிவாக பலசரக்கு சாமான்கள் விற்றால் நல்லதுதானே. அதேபோல இங்குள்ள சுமார் 20 IMFL ஆலைகளையும் வேறு ஏதாவது தொழிற்சாலைகளாக ஆக்கட்டும். இது பிரச்சினை அல்ல.

இரண்டாவதாக அவர்கள்சொல்வது: மது விலக்கு வந்தால் கள்ளச் சாராயம் வந்துவிடும் என்று நாம் சொல்கிறோமாம். உண்மை. நாம் அப்படித்தான்சொல்கிறோம். ஆனால் அப்படி நேராதாம், கள்ளச் சாராயத்தை இவர்கள் கட்டுப்படுத்தி விடுவார்களாம். இதை நாம் கடுமையாக மறுக்கிறோம். உண்மைக்கு மாறான படு அபத்தம் என்கிறோம். மது விலக்கு அமுல்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் ஆறாய்ப் பெருக்கெடுத்தோட அதைக் கட்டுப் படுத்த இயலாமல்தான் மீண்டும் இந்த நாடுகளும்மாநிலங்களும் மதுவை அனுமதித்தன.

சென்ற ஆண்டு (2014) காங்கிரஸ் ஆண்ட மூன்று மாநிலங்களில் இந்தப் பிரச்சினை மேலெழுந்தது. மதுப் பழக்கம் மித மிஞ்சி விட்டதாகக் கூறி கேரள அரசு படிப்படியாக மது விலக்கை அமலாக்கப்போவதாகச் சொல்லியது. இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது உள்ள மதுக் கொள்கையில் IMFL எனப்படும் ‘உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டுச் சரக்குகள்’ மட்டுமே தயாரிக்க, விற்க, குடிக்க அனுமதி உண்டு. இது வேறு இரண்டு முக்கிய மது வகைகளைத் தடை செய்கிறது. அவை: 1. கள் 2.சாராயம். கேரளா அப்படி அல்ல. அங்கு கள் தாராளமாகக் கிடைக்கிறது. லிட்டர் சுமார் 45 ரூபாய். முதல் அமைச்சர் உமன் சாண்டி இப்போது சொல்வது படிப்படியாக IMFL விற்பனை குறைக்கப்படும் என்பதுதான். கள் அங்கு தொடரும் என்பது மட்டுமல்ல அதன்விற்பனை அதிகரிக்கவும் படும்.

அடுத்து மணிப்பூர். இங்கு 1991 முதல் மதுவிலக்கு அமுலில் இருக்கிறது. மெய்ரா பெய்பி எனும் மக்களியக்கம் வலுவான போராட்டங்களை நடத்தியதன் பின்னணியில்தான் 24 ஆண்டுகளுக்கு முன் அங்குமது விலக்கு கொண்டுவரப்பட்டது. அதிலும் கூட பட்டியல் பிரிவினர் (SC/ST) தங்கள் பகுதிகளில் தங்களின் பாரம்பரிய மது வகைகளை அவர்களின் கலாச்சாரத் தேவைகளுக்காகத் தயாரித்துக் கொள்ளஅனுமதி அளிக்கப்பட்டது. நடந்தது என்னவெனில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மதுவகைகள் பண்டிகைப் போதுகள் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் தயாரிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்பட்டது. இந்த பாரம்பரிய மது வகைகள் மிக எளிதாகப் பெரிய அளவில் எல்லா இடங்களிலும்கிடைத்து வந்தது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தபோதெல்லாம் பெரிய அளவில்பட்டியல் சாதியினர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். இன்னொரு பாக்கம் IMFL வகையறா மது வகைகள் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மியான்மரில் இருந்தும் கடத்தப்பட்டு வந்தது. இதைத்தடுக்க வழியற்றுப் போனதை ஏற்றுக் கொண்டுதான ஓக்ரம் இபோபி சிங் அரசு இன்று மதுவிலக்கைரத்து செய்து மீண்டும் மதுவை அனுமதிக்கப்போவதாக அறிவித்தது.

அத்தோடு நிற்கவில்லை.உள்நாட்டு சாராய (country liquor) வகைகளை அரசுக் கட்டுப்பாட்டில் தரமாகத் தயாரித்துக்குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க வழி செய்வதாகவும் இபோபி சிங் கூறியுள்ளார்.

மிசோராமும் காங்கிரஸ்ஆளும் மாநிலம்தான். அங்கும் 17 ஆண்டுகளாக மதுவிலக்கு இருந்து வந்தது. சென்ற ஆண்டு மேற்சொன்ன இதே காரணங்களுக்காக மதுவிலக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதான் நிலைமை.அமெரிக்க அரசு 1920ல் மது விலக்கு அறிவித்தபோது கனடாவுக்கு அருகில் ஃப்ரெஞ்ச் ஆளுகையில்இருந்த செய்ன்ட் பியரி தீவு வழியாக ஏராளமாக ஃப்ரெஞ்ச் மது வகைகள் கடத்தப்பட்டன. செய்ன்ட்பியரி தீவுக்கு உல்லாசப் பயணம் வருவது, கப்பலிலேயே குடித்துக் கொண்டாடுவது என்பதான நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மதுவிலக்கை நீக்கிக் கொண்டது.

இப்போது கேரளா IMFL ஐத் தடை செய்தால் என்ன நிகழப் போகிறது? வட கேரள மக்கள் புதுச்சேரி அரசின் கீழுள்ளமாஹேக்கு உல்லாசப் பயணம் செல்வர்; புதுச்சேரி மது வகைகள் ஏராளமாக கேரளாவுக்குள் கடத்தப்படும். தென் கேரள மக்களுக்கு அடுத்த 20 கி.மீ தொலைவில் களியக்காவிளை, தமிழ்நாடு. பிறகென்ன?

தமிழகத்தில் மதுவிலக்குவந்தால் என்ன ஆகும்? சென்னை மக்களுக்குப் பிரச்சினை இல்லை. இப்போதே புதுச்சேரியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் அங்கு விடுதிகளில் அறை கிடைப்பதில்லை. பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து செல்லும் IT துறை ஆண்களும் பெண்களும் அதிகச் செலவில்லாமல்இப்படிக் குடி உல்லாசப் பயணங்கள் வரும் தலமாகிவிட்டது அது. தமிழகத்திலும் மது விலக்குஅமுல்படுத்தப்பட்டால் இனி புதுச்சேரியிலும் காரைக்காலிலும் வார நாட்களிலும் விடுதிகளில் இடம் கிடைக்காது. பயனடையப் போவது புதுவை முதல்வர் ரெங்கசாமிதான். இன்னும் ஏராளமான இலவசங்களைத் தம் மாநில மக்களுக்கு அளித்து தன் ஆட்சியை இன்னும் பத்தாண்டுகளுக்கு பா.ஜ.க ஆதரவுடன்ஜாம் ஜாம் என நடத்துவார்.

வசதி மிக்க தமிழ்க் குடியர்களுக்கு மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பாதிக்கப்படப்போவதும் குற்றவாளிகளாக்கப்பட்டுச் சிறைகளை நிரப்பப் போவதும் அப்பாவி ஏழை எளிய தமிழ்க்’குடி’ மக்கள்தான்.

இரண்டு : மதுப்பழக்கம் நம் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த ஒன்று

குடி என்பது நம்கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்று. ஒவ்வொரு பகுதிகளிலும் அங்குள்ள தென்னை, பனை,ஈச்சம் முதலான பாளை வெடித்துக் காய்க்கும் தாவரங்களிலிருந்து கள் வடிக்கப்பட்டன; அப்பகுதியில்கிடைக்கும் பூக்கள், பழங்கள், மரப்பட்டைகள் ஆகியவற்றை ஊற வைத்து, ஈஸ்ட் கலந்து நொதிக்கச்செய்து, காய்ச்சி வடிக்கும் உள்ளூர் சாராயங்களும் உண்டு. விருந்தினர்கள் வருகை, பிறப்பு,இறப்பு, திருமணம் முதலான சமூக ஒன்று கூடல்கள், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடும்பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றில் குடி என்பது தவிர்க்க இயலாத ஒன்று. பெண்ணடிமைத் தனம் உச்சமாகஇருந்த உயர் சாதியினர் தவிர பிற சமூகப் பெண்கள் குடித்தார்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டன.இவற்றையெல்லாம் நான் ஆதாரபூர்வமாக எனது முந்தைய கட்டுரைகளில் (‘குடியும் குடித்தனமும்’)குறிப்பிட்டுள்ளேன். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ப் பண்பாட்டை விரித்துரைக்கும் முகமாகக் கபிலர் சொல்கையில், “மனையோள் மடுப்ப தேம்பிழி தேறல் மகிழ் சிறந்து” என்பார். அன்பு மனையாள் ஊற்றிக் கொடுத்த தேம்பிழி தேறலை மாந்தி மகிழ்ந்தானாம் அந்தத் தமிழ்க் கணவன்.

ஒன்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இது ஒரு சமுதாயக் குடி. தனி நபர் அறையில் உட்கார்ந்து தள்ளாடி விழும்வரை குடிக்கும் பழக்கமல்ல. சமுதாயக் குடியில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் மதுஅளவுக்கு மிஞ்சிப் போவதில்லை.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் எனக்குத் திருமணம் ஆனபோது கள்ளுக் கடைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. என் மனைவியின்ஊர் கொரடாச்சேரி. ஒரு தென்னந் தோப்புக்குள்தான் அவர்களின் வீடு. தென்னை மரங்களை அவர்கள் கள் இறக்கக் குத்தகைக்கு விட்டிருந்தனர். தினம் அதிகாலையில் கள் இறக்க வரும் தொழிலாளிகள்இறக்கி முடித்தவுடன் ஒரு பெரிய சொம்பு நிறைய ஒரு மரத்துக் கள்ளை வீட்டில் வைத்து விட்டுப்போய்விடுவார்கள். அதை வீட்டில் யாராவது குடிப்பார்கள், அல்லது விருந்தினர் வந்தால்கொடுப்பார்கள். நான் அங்கு இருக்கிற நாட்களில் அந்தச் சொம்பு என் அறைக்கு வந்துவிடும்.ஆம், மருமகனை அவர்கள் அப்படி உபசரித்தனர். எதற்குச் சொல்கிறேன் என்றால் இது நம் கலாச்சாரத்தில்பின்னிப் பிணைந்த ஒன்று.

பிரிட்டிஷ் ஆட்சிஇங்கு வந்தபோது அது கைவைத்த பல அம்சங்களில் குடியும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சியில் அதன்மூன்றில் ஒரு பங்கு வருமானம் குடி மூலமாகத்தான் வந்தது. எனவே அவர்கள் விரிவான ஆய்வுகளைச்செய்து அதன் அடிப்படையில் இந்த ‘அக்பரி’ வருமானத்தை உச்சபட்சமாக் ஆக்குவது எப்படி எனத்திட்டமிட்டார்கள். அவர்கள் முதலில் செய்தது பெரும் ஆலைகளை அமைத்து உரிமம் அளித்துச்சாராயம் தயாரிப்பதும், ஏல முறையில் கள்ளுக் கடைகளைத் திறப்பதுந்தான்.

அதன் இன்னொரு பக்கமாகவீடுகளில் கள் இறக்குவதும் சாராயம் வடிப்பதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன. பெரும் பணக்காரர்கள்சாராய ஆலைகளை அமைத்தார்கள்; உள்ளூர்ப் பெரியதனக்காரர்கள் கள்ளுக் கடைகளை ஏலம் எடுத்தனர்.குடி அதிகம் செலவைக் கோரும் வழமை ஆகியது; அதோடு குடி வியாபாரப் பொருள் ஆகியதும் அதில் போதையை அதிகப்படுத்த கண்ட தீங்கு விளைவிக்கும்பொருட்கள் கலக்கப்பட்டன.

பாரம்பரியமாகக்காய்ச்சி வடித்துக் குடித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்; அழுதார்கள்; கெஞ்சினார்கள்;அந்த முட்டாள் ஜனங்கள் காசு திரட்டி நகரங்களுக்குச் சென்று புதிதாய் உருவாகியிருந்தநீதிமன்றங்களை அணுகி இருந்த காசையும் அழித்தார்கள்; திருட்டுத்தனமாகக் காய்ச்சிப் பிடிபட்டுச்சிறை ஏகினார்கள்; குடி பெயர்ந்து சென்று இந்தத் தடைகள் இல்லாத சமஸ்தானங்களில் குடியேறமுயற்சித்தார்கள்.

இத்தனையும் வரலாறுகள்தானே.

சில நாட்களுக்குமுன் யாரோ இரண்டு கிராமத்தவர்கள் ஒரு குழந்தைக்கு சாராயம் ஊட்டியது வாட்ஸ் அப் முதலானவற்றில்விஷமாய்ப் பரவி கடும் கண்டனத்துக்குள்ளாகி, அவர்கள் கைது செய்யப்பட்டதை மறந்துவிட இயலாது.போகிற போக்கைப் பார்த்தால் அவர்களைத் தூக்கில் போட்டு விடுவார்களோ என்று கூட எண்ணத்தோன்றியது. நிச்சயமாக அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அப்படி ஊட்டியவர்கள் அந்தக் குழந்தையைக் கடத்தி வந்துஅப்படியான பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தும் சதித்திட்டத்தோடு செய்யவில்லை. அதற்காகச் செய்த ஆர்பாட்டம் ரொம்ப ஓவர். இதெல்லாமும் கூடநமது பண்பாடு குறித்த ஒரு பிரக்ஞை இல்லாததன் விளைவுதான்.

மூன்று

அறுபது ஆண்டுகளுக்குமுன் ஒரு காட்சி: எனக்கு அப்போது ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்; ஒரத்தநாடு வட்டத்தில்உள்ள பாப்பாநாடு கிராமத்தில் இருந்து கண்ணுகுடி மற்றும் மதுக்கூர் செல்லும் வழியில்மூன்று கி.மீ தொலைவில் இருந்த குத்தகைக்காடு எனும் கிராமத்தில் இருந்தோம். அப்பா மலேசியாவிலிருந்துநாடுகடத்தப்பட்டு இங்கு வந்து, கூடவே இரண்டு யாருமற்ற இளைஞர்களையும் அழைத்து வந்து(அவர்களில் ஒருவரும் அப்படி நாடுகடத்தப்பட்டவர்) மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தகாலம் அது. வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள வெளுவாடி எனும் கிராமத்தில்ஒரு சிறிய சோடா கம்பெனி வைத்துப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் அம்மா,நான், தங்கை.

எங்கள் வீட்டிலிருந்துசுமார் இரண்டு ஃபர்லாங் தூரத்தில் ஒரு குடிசை; 45 வயதிருக்கும் ஒரு பெண்மணி. அவரதுகணவன் ஒரு மனநோயாளி; அவர் அந்த அம்மையை வீட்டுவிட்டு எங்கோ போய்விட்டார். பல ஆண்டுகளுக்குஒரு முறை அவர் எப்போதாவது வருவார். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் காணாமற்போய்விடுவார். அவர் உருவம் எனக்கு நினைவில்லை. தலையில் கொண்டை ம்போட்டிருப்பார். அதுமட்டும் நினைவில்.

வேறு யாருமே அந்தஅம்மைக்குக் கிடையாது. பக்கத்தில் உள்ள உடையார் கடையில் ஏதேனும் பலசரக்கு சாமான் வாங்கச்செல்கையில் அந்த அம்மை என்னைப் பார்த்துச் சிரிப்பார். அவர் வீட்டுக்குப் போகக் கூடாதுஎன என் அம்மா என்னை எச்சரித்து வைத்திருந்தார். நான் அச்சத்தோடும், ஒரு வகை ஆர்வத்தோடும்அவரின் குடிசைக்குள் எட்டிப் பார்ப்பேன். யாராவது ஒருவர் அல்லது இருவர் உட்கார்ந்திருப்பார்கள்.

நீங்கள் ஊகிப்பதுதான்.அவரது ஒரே வருமானம் கள்ளச் சாராயம் விற்பதுதான். எங்கிருந்தோ வாங்கி வருவார். மக்கள்வந்து சாப்பிட்டுப் போவார்கள். போலீஸ்காரர்கள் வந்து வாரந்தோறும் மாமூல் பெற்றுச் செல்வார்கள்.

எல்லாம் சரியாகத்தான்நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் குடிசை வாசலில் ஒரு போலீஸ் ஜீப். நான்கைந்து போலீஸ்காரர்கள்.வெளியில் கூட்டம். போலீஸ் அவரைக் கைது செய்ய வந்திருந்தது. அமலாக்கத்துறையினருக்குமாதம் சில வழக்குகளும் போட்டு ஆக வேண்டுமல்லவா. இம்முறை அந்த அம்மை. அவர் ஏதோ பேரம்பேசிப் பார்த்தார். அவர்கள் கேட்ட தொகையை அவரால் கொடுக்க இயலவில்லை. அந்த நேரத்தில்அப்பா சோடா கம்பெனியிலிருந்து சைக்கிளில் வந்தார்.

பிரச்சினையை அறிந்தவுடன் அங்கு சென்றுபோலீஸ்காரர்களுடன் பேசிப் பார்த்தார். அவர்கள் கேட்ட தொகையை அப்பாவாலும் கொடுக்க இயலவில்லை.அந்த அம்மையையும் ஒரு சாராயப் பானையையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் நகர்ந்தது. அந்தக்குடிசையின் தட்டிக் கதவில் ஒரு பூட்டைப் பூட்டி அப்பாதான் சாவி வைத்திருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்குப்பின்அந்த அம்மை விடுதலை ஆகி வந்தார். அவர் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சிஇன்னும் என் மனதில். அப்போதெல்லாம் சிறைச்சாலைகளில் கைதிகளின் சிகை வழிக்கப்படும்.

அந்த அம்மையின்பெயரும் உருவமும் இன்னும் நினைவில் உள்ளது. அவர் பெயர் “பரிசுத்தம்”

ஒரு பழக்கம் குற்றச் செயலாக மாற்றப்படும் கொடுமை
மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டால் உடனடியாக IMFL ஐக் காட்டிலும் இரட்டிப்பு விலையில் கள்ளச் சாராயம்கிடைக்கத் தொடங்கி விடும். வீட்டில் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.

கள்ளச்சாராயம்ஒரு வகையான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். ஆனால் அவை அனைத்தும் அரசால் குற்றம்என வரையறுக்கப் பட்டவையாகவே அமையும். கள்ளச் சாராயத் தயாரிப்பு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்துIMFL கடத்தல், கள்ளச் சாராய வினியோகம், விற்பனை என்று பல வகைகளில் வேலை வாய்ப்பும்வருமான வாய்ப்புகளும் உருவாகும். இவை அனைத்தும் ஆங்க்காங்குள்ள மிக வலுவான அரசியல்சக்திகளால் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். பல்வேறு படிநிலைகளினூடாக வந்துசேரும் லஞ்சப் பெருந்தொகை உள்ளூர் முதல் மேல்மட்டம்வரை காவல் அதிகாரிகள், கலால் பிரிவினர், அமலாக்கத்துறை அமைச்சர், முதலமைச்சர் என்பதாகப்பெருந்தொகை கைமாறிக் கொண்டே இருக்கும்.

அதே நேரத்தில்அரசாங்கம் இருப்பதையும் காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா. அவ்வப்போது கடத்தல் லாரிகள் பிடிபடும்;கைதுகள் நடக்கும்; ரெய்டுகள் நடக்கும். அதிலும் பெரிய கைகளுக்கும் அரசு மற்றும் காவல்துறைக்கும்இடையே எழுதப்படாத ஒப்பந்தம் மிக்க அற நெறிகளோடு கையாளப்படும். காய்ச்சுபவர்களும் கடத்துபவர்களுமேமாதம் அல்லது வருடத்திற்கு இத்தனைபேர் என வழக்குகளுக்கென ஆட்களைக் கொடுப்பார்கள். அவர்கள்சிறைகளை நிரப்பிவிட்டு வந்து தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்வார்கள்.

கள்ளச் சாராயம்காய்ச்சும்போது அதில் போதைக்காக நவச்சாரம், ஊமத்தங்காய் முதலான விஷப் பொருட்களைச் சேர்த்துஈடாக நிறையத் தண்ணீர் ஊற்றி கொள்ளை தொடரும். காய்ச்சும்போது ஏற்படும் தவறுகளால் EthylAlchohal க்குப் பதிலாக Methyl Alcohol உற்பத்தியாகி மிகப் பெரிய விஷச் சாராயச் சாவுகள்நிகழும்.

இன்னொன்றையும்நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மது விலக்கு வந்தால் சட்ட விரோதக் கள்ளச் சாராயம் மட்டுமல்ல,சட்டபூர்வமான கள்ளச் சாராயங்களும் புழக்கத்துக்கு வந்துவிடும். கடும் மதுவிலக்கு அமுலில்இருந்த காலங்களில் ஊருக்கு ஒரு மது கஷாயக் கடை இருக்கும். பாப்பாநாட்டில் நாங்கள் வசித்தபோதுஎங்கள் சோடா கம்பெனியை ஒட்டி அப்படி ஒரு கடை உண்டு. வேறொன்றும் இல்லை. அரசு உரிமம்பெற்று ‘ஆயுர்வேத மருந்து’ (அரிஷ்டம்) விற்கும் கடைகள்தான் அவை. அங்கே ஒரே ஒரு ‘மருந்து’தான் கிடைக்கும். அது வியாதியைக் குணமாக்கும் மருந்தல்ல; வியாதியை உருவாக்கும் மருந்து.அதுதான் மதுகஷாயம். கடுமையான போதை அளிக்கும் ஒரு திரவம். அதற்கு கிராமங்களில் ‘வேலிமுட்டி’, ‘சுவர் முட்டி’ என்கிற பெயர்களும் உருண்டு. அதைக் குடித்தவுடன் அந்த நபர்தள்ளாடிச் சென்று அருகிலுள்ள வேலி அல்லது சுவரில் முட்டிக் கொண்டு விழுந்து விடுவார்.இந்த விற்பனையாளர்களும் முறையாகக் காவல்துறைக்குக் கப்பம் செலுத்தி விடுவர். உடலுக்குமிகவும் தீங்கு செய்யும் கடும் போதைப் பொருள் இது.

திருச்சி திருவானைக்கோவிலில் என் மாமா பணியாற்றிய ஒரு அலுமினியக் கம்பெனிக்கு அருகில் ஒரு ‘வார்னிஷ்’ கடைஇருந்தது. பெயின்ட் விற்பனைக்கான உரிமம் பெற்று நடத்தப்படும் கடை அது. அங்கே ஒரே வகையான’வார்னிஷ்’ அடைக்கப்பட்ட புட்டிகள்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு தட்டில்எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி வைத்திருப்பார்கள். வருபவர்கள் ஒரு பாட்டில் வார்னிஷ்வாங்கி அதில் எலுமிச்சையைப் பிழிவார்கள். உடன் கச்சா ஸ்பிரிட்டில் கலக்கப்பட்டிருந்தஅரக்கு திரண்டு கீழே கட்டியாகச் சிவப்பு நிறத்தில் ஒதுங்கும். மேலே உள்ள ஸ்பிரிட்டைஒரு கிளாசில் ஊற்றி ஒரே மடக்கில் குடித்துத் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டு தள்ளாடியவண்ணம் சென்றுவிடுவர். அரக்கு கலக்கப்பட்ட அந்த ஸ்பிரிட்டும் உடம்புக்கு அத்தனை கேடு.தொடர்ந்து குடிக்கும் யாரும் இரண்டாண்டுகளில் ஈரல் பாதிக்கப்படுவது உறுதி

இதெல்லாம் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பெரிய அளவில் ஆதரவற்ற பெண்கள் இந்தக் கள்ளச் சாராயத் தொழிலில்ஈடுபடுத்தப் படுவர். தயாரிப்பு, கடத்தல், விற்பனை எனப் பல மட்டங்களில் இது நடக்கும்.இந்த வகையில் பெண்கள் அதிக அளவில் சிறைகளை நிரப்பும் கொடுமையும் நிகழும்.

அப்படி ஒரு பாதிக்கப்பட்டஅம்மைதான் நான் சற்று முன் சொன்ன பரிசுத்தம் அன்னை. மொட்டைத் தலையுடனும், கையில் ஒருபையுடனும் என் வீட்டுத் திண்ணையில் அந்த அம்மை அமர்ந்து என் அம்மா கொடுத்த காப்பியைக்குடித்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி என் மனதில் அழியாமல் படிந்து போன படிமங்களில்ஒன்று.

நான்கு

ஆம், ஒரு பழக்கம்(custom) குற்றமாக (crime) ஆக்கப்படும் நிலைக்குப் பெயர்தான் மது விலக்கு. அப்பாவிஏழை எளிய மக்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு காவல்துறைக் கொடுமைகளுக்கு ஆளாவர். அதேநேரத்தில் வசதியானவர்கள், வெளி நாட்டு பாஸ்போர் வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும்IMFL அருந்த உரிமம் வழங்கப்படும். மதுவிலக்கு அமுலில் உள்ள குஜராத்தில் விமான நிலையத்திலேயேபாஸ்போர்ட்டைக் காட்டி நூறு ரூபாய் செலுத்தி குடி உரிமம் பெற்று வரலாம்.

பூரண மதுவிலக்குபற்றிப் பேசும் வாய்கள் எல்லாம் நான் சற்று முன் சொன்ன அந்த முதல் இரண்டு மறுப்புக்களைமட்டுந்தான் சொல்வார்கள். அதுவும் எத்தனை அபத்தம் எனக் கண்டோம். ஆனால் நம்மைப் பொருத்தமட்டில் இந்த இரண்டைக் காட்டிலும் அவர்கள் சொல்லாத, சொல்ல விரும்பாத இந்த மூன்றாவதுபிரச்சினைதான் கொடிது. அதற்காகத்தான் மதுவிலக்கு கூடாது என்கிறோம்.

குடிப்பழக்கம்என்கிற காலங் காலமாக நம் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்து போயுள்ள ஒரு பழக்கம் குற்றச்செயலாக மாற்றப்பட்டு ஏழை எளிய மக்கள் குற்றவாளிகளாக சிறைகளை நிரப்பும் கொடுமைதான் இந்தமதுவிலக்கின் மூன்றாவது விளைவு.

மதுவிலக்கை ஆதரிக்கும்பிரிவினர் ஏன் இப்படி ஒரு பிரச்சினை உள்ளதைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்? வேறொன்றும்இல்லை. ஏழை எளிய மக்கள் மீது அவர்கள் உள்ளார்ந்து கொண்டுள்ள வெறுப்பே இதன் அடிப்படை.

ஐந்து : குடியை உன்னதப் படுத்தவும் வேண்டாம், அதைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஆக்கவும் வேண்டாம்

தொடங்கிய இடத்திற்கு வருவோம். இத்தனையையும் நான் சொல்வதால் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாக நினைக்க வேண்டாம். அப்படியான ஒரு தவறு கேரளத்தில் நடந்தது என்பார்கள். ஜான் ஆப்ரஹாம் முதலான கலைஞர்களை எடுத்துக் காட்டி குடிப் பழக்கத்தை அங்கு சிலர் உன்னதப் (romanticise) படுத்தினர். நடிகர் பாலகிருஷ்ணன் போன்றோர் முன்வைத்த Forum for Better Spirit போன்றவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். “மூத்த குடிமக்களுக்குக் குறைந்த விலையில் சரக்கு கொடு” என்றெல்லாம் முழக்கங்களும் கூட அங்கு வைக்கப்பட்டன. இங்கும் கூட இன்றளவும் இலக்கியவாதிகள் மத்தியில் குடியை ஆகா ஓகோ என உன்னதப்படுத்தும் ஒரு நிலைபாடு உண்டு.

நான் இதை ஏற்கவில்லை. குடி இப்போது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை மறுக்க முடியாது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகியிருப்பதை நாம் கவலையோடு பார்க்க வேண்டித்தான் உள்ளது. மாநிலக் கல்லூரியில் நான் பணியாற்றும்போது எனது இயற்பியல் துறையை ஒட்டி அமைந்துள்ள திடலில் மாணவர்களில் சிலர் கல்லூரி நேரத்தில் குடித்திருப்பதைக் கண்டு நாங்கள் சென்று அவர்களைக் கண்டித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.

அதேபோல இது குறித்து ஆய்வு செய்பவர்கள் குடிப்பழக்கத்தால் ஆகும் செலவுகளால் ஏழைக் குடும்பங்கள் பாழாவது குறித்தும் சொல்கின்றனர். ஆனால் அதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆவதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இன்று டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் குடி வகைகளைப் பொருத்த மட்டில் அவற்றுக்கு விதிக்கப்படும் விலையில் 85 சதம் வரிதான். இந்த அளவுக்கு வரி வேறு எந்தப் பொருளுக்கும் விதிக்கப்படுவதில்லை. நூறு ரூபாய்க்கு ஒரு குவார்டர் வாங்கினால் அதன் தயாரிப்புச் செலவு வெறும் 15 முதல் 20 ரூ தான். மீதமுள்ள 80 ரூ வரியாகத்தான் உறிஞ்சப்படுகிறது. இது குறித்து எந்த அரசியல் கட்சியும் முணு முணுப்பது கூட இல்லை. சரக்குகளில் செய்யப்படும் கலப்படம், குடிசாலைகள் மிக மிக அசுத்தமாகக் காணப்படுதல் ஆகியன குறித்தெல்லாம் யாரும் கவலைப் படாததையும், அது குறித்துப் பேசாதத்தையும் நிச்சயமாகப் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்க இயலாது.

அதிகரித்து வரும் குடிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை எனச் சொன்னேன். ஆனால் அந்தப் பிரச்சினையை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதும், குடிப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அதிகாரத்தையும் காவல்துறையிடம் கொடுப்பதுந்தான் இங்கு கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

குடிப் பழக்கத்தைக் குறைப்பது குறித்து நாம் சட்ட ஒழுங்குக் கோணத்தில் அல்லாமல் வேறு கோணத்தில் ஒரு சமூகக் கலாச்சாரப் பிரச்சினையாக இதை அணுக வேண்டும்.

முதலில் இப்படி அரசே கடைகளை அமைத்து , விற்பனை இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இன்று மது அதிகமாகப் பாவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டிலுமே இப்படி இந்தத் துறையில் அரசு ஏகபோகம் இருப்பது குறிப்பிடத் தக்கது. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த வரை மதுவிலக்கு அமுலில் இருந்தது. 1967ல் கம்யூனிஸ்டுகள் தலைமையில் கூட்டணி ஆட்சி வந்தபோது மதுவிலக்கு நீக்கப்பட்டது.. எனினும் நிறைய கலப்படச் சாராயம் புழக்கத்தில் இருப்பதும், இது ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பதும் 1970களின் இறுதியில் பெரும் பிரச்சினை ஆகியது. 1980களின் தொடக்கத்தில் இது குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 1984ல் ‘கேரள அரசு குடிபானங்கள் கழகம்’ (Kerala State Beverages Corporation – KSBC) உருவாக்கப்பட்டது. இடைத்தரகர்களின் கொள்ளை லாபம், கடும் வரி இவையெல்லாம் இல்லாமல் நியாயமான விலையில் தரமான சரக்குகளை அளிப்பது என்பதை நோக்கமாக அறிவித்து உருவாக்கப்பட்ட இந்தக் கழகம் அதுவே ஆலைகளிலிருந்து ஸ்பிரிட்டை வாங்கி, கலந்து, புட்டிகளில் அடைத்து, வினியோக்கிக்கும் பணியை ஏற்றுக் கொண்டது. இப்படி அரசு ஏகபோகத்தில் 2010க்குள் 337 கடைகள் உருவாயின.

இந்தக் கழகம் உருவான அதே நேரத்தில்தான் கேரள இளைஞர்கள் பெரிய அளவில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் கேரளத்தில் தொழில் மந்தம் ஏற்பட்டது. வளைகுடாவிலிருந்து வந்த பணம் இங்கே வங்கிகளில் முடங்கியது. சேமிப்பு உள்ள துணிச்சலில் வேலைக்குப் போனவர்கள் நாடு திரும்பினர். இந்தப் பின்னணியில்தான் அங்கே குடிப்பழக்கமும் அதிகமாகியது.

தமிழகத்திலும் இதேபோல டாஸ்மாக் ஏகபோகம் வந்தபின் ஏற்பட்ட குடிப்பெருக்கம் குறித்துப் பெரிதாக விளக்க வேண்டியதில்லை.

இன்று ஏன் IT இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் குடிப்பழக்கம் ஏற்படுகிறது? வேலைப் பளு, கடும் கார்பொரேட் அழுத்தம், ஒரு அரசு ஊழியருக்கு இருக்கும் சுதந்திரம் இன்மை, முற்றிலும் பணிச் சூழல் அந்நியப்பட்டுள்ள கொடுமை, ஒப்பீட்டளவில் ஏகப்பட்ட வருமானம் இவற்றையெல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

குடிப்பழக்கம் மிகுவது என்பதன் பின்னணியில் அரசியல் பொருளாதார, சமூகக் காரணங்கள் உள்ளன. இவற்றைச் சுருக்கி, கடைகள் அதிகமாக இருப்பதுதான் எல்லாவற்றிற்கும் காரணம் எனப் பார்க்க இயலாது. கடைகளின் எண்ணிக்கையையும், மது விற்பனை நேரத்தையும் குறைப்பது தேவைதான். ஆனால் அது மட்டுமே பிரச்சினை அல்ல.

இங்கிலாந்தில் குடிப்பழக்கம் குறித்து ஆய்வு செய்தவர்கள் பெருந் தொழிற்சாலைகள் உருவாகி, இடப் பெயர்வுகள் ஏற்பட்டு, உற்பத்தியிலிருந்து தொழிலாளிகள் அந்நியப்பட்ட காலத்தில்தான் (alienation) அங்கு முதன் முதலாக குடிப் பழக்கம் பெரிய அளவில் அதிகரித்தது என்கின்றனர். சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் இந்தியப் புலம்பெயர் தொழிலாளிகள் மத்தியில் அதிகக் குடிப் பழக்கம் உள்ளது என்பது அங்குள்ளவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. பொய் வாக்குறுதிகளுடன் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கடும் உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வது, எந்த வசதிகளுமர்ற தங்குமிடம், வேறு எந்தக் கேளிக்கைகளுக்கும் வாய்ப்பும் வசதியுமில்லாத சூழல் இத்தனையும் அவர்களின் குடிப்பழக்கம் மிகைத்திருப்பதற்கான காரணங்களாக உள்ளதை இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் யோசிப்பதில்லை.

தஞ்சையில் நான் வடக்கு அலங்கத்திலுல்ள அம்மாலயம் சந்தில் ஐந்தாண்டுகள் வசித்தேன். பின்புறமுள்ள வடக்கு வீதியில்தான் துப்புரவுத் தொழிலாளிகளின் வீடுகள் இருந்தன. பழைய நகரமான தஞ்சையில் அப்பகுதி முழுவதும் உலர் கழிப்பறைகள்தான். காலையில் இந்தத் துப்புரவுத் தொழிலாளிப் பெண்கள்தான் தலைகளில் சுமந்து மலம் அள்ளிச் செல்வர். ஆண்களுக்குப் பிணம் எரிப்பது, மருத்துவ மனைகளில் பிரேத be பரிசோதனை உதவியாளராக இருப்பது முதலான வேலைகள். எந்த நவீனப்படுத்தலும் இல்லாமல் அப்படியே அந்த வேலைகள் அவர்கள் மீது இன்றும் திணிக்கப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் மாலை நேரமானால் குடிப்பர். அவர்களிடம் போய் இது தவறு என ஒழுக்கவாதம் பேசும் யாரையும் பார்த்து என்ன இரும்பு இதயமடா உங்களுக்கு எனக் கேட்பதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?

நண்பர்களே ! குடிப்பழக்கத்தை நாம் உன்னதப் படுத்த வேண்டாம். ஆனால் அதே நேரத்தைல் அதைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கவும் வேண்டாம். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் காவல்துறையிடம் கொடுக்கும் தவறைச் செய்யவே வேண்டாம்.

இது சமூகப் பெரியவர்கள், சிந்தனையாளர்கள், மனநிலை வல்லுனர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி. அரசே கடைகளை நடத்தும் நிலையை மாற்றுவோம். கடைகளின் எண்ணிக்கை, வேலை நேரம் ஆகியவற்றைக் குறைப்போம். பள்ளி கல்லூரிகளில் மது குறித்த பிரச்சாரங்கள், கவுன்சிலிங் வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவோம்.

விற்கும் மதுவைப் பொருத்த மட்டில் தரக் கட்டுப்பாட்டை அதிகப் படுத்துவோம். கலப்படத்தை ஒழிப்போம். தரமான குறைந்த விலைச் சாராயத்தை அனுமதிப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக IMFL கடைகளைப் படிப்படியாகக்க் குறைத்து கள் விற்பனையை அனுமதிப்போம்.. உள்நாட்டு இயற்கை உணவான கள்ளைத் தடை செய்து IMFL ஐ மட்டும் விற்பனை செய்வது நம் ஆட்சியாளர்களின் ஆகக் கீழான நோக்கத்தைதான் காட்டுகிறது. இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு இன்று திடீரென மதுவிலக்கு ஆர்பாட்டம் செய்யும் நமது அரசியல்வாதிகளின் படு கேவலமான அரசியலையும் இனம் காண்போம்.

கள்ளை அனுமதித்து டாஸ்மாக் கடைகளைக் குறைக்கக் கோருவோம். தரமான உள்நாட்டுச் சாராயத்தை அளித்து இந்த IMFL சரக்குகளின் பயன்பாட்டைக் குறைப்போம். சிறார்களுக்கு விற்பது முதலியவற்றை இன்னும் கவனமாகத் தடுப்போம்.

எக்காரணம் கொண்டும் பூரண மதுவிலக்கு எனும் அபத்தத்தைச் செய்யாமல் இருப்போம்.

தமிழ்த் தேசியர்களும் முஸ்லிம்களும்

(எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து..)

தமிழ் தேசியம் பேசுகிற சிலர் அல்ல, அத்தனை பேரிடமே எச்சரிக்கியாக இருக்க வேண்டும் என்றேன். குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சினைகளிலும், பா.ஜக எதிர்ப்பிலும் அவர்களை நம்ப முடியாது என்றேன். சுமார் 80.000 யாழ்ப்பாண முஸ்லிம்களை இரவோடிரவாக நாடுகடத்தி, இன்று வரை அவர்கள் புத்தளத்தில் அகதிகளாக சீரழிகிறார்களே, காத்தான் குடி பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை 100 க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றார்களே விடுதலைப் புலிகள் அதற்காக அவர்கள் தலைவர் பிரபாகரன் இறுதி வரை உளமார்ந்த வருத்தம் தெரிவிக்காததோடு மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் அவர்களிடத்திற்குத் திரும்பி வரலாம் என வாயாறச் சொன்னதும் இல்லை. அவரது தமிழக ஆதரவாளர்களும் இதுவரை அதற்கெல்லாம் வருத்தம் தெரிவிப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்தினேன்.

பா.ஜ.க, வலது, இடது கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் எல்லாமும் ஒன்றுதான் என ஒருமுறை அல்ல பலமுறை அ்ன்று அந்த மேடையில் பேசப்பட்டதை ஆணித்தரமாக மறுத்தேன். இன்றைய இந்துத்துவ பாசிச கருத்தியலை எல்லாம் ஆணித்தரமாக மறுப்பதற்கான ஆயுதங்களை நமக்கு வழங்கி இருப்பவர்கள் அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் இன்டெலெக்சுவல்கள். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் இந்துத்துவ சக்திகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துச் செயல்படுபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுந்தான். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவை ஈழத்தின் பெயரால் மேடை ஏற்றி தமிழக அரசியலில் இடம் அமைத்துக் கொடுத்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியவாதிகள்தான் என்றேன். இன்றளவும் அவர்களுக்கு அது குறித்து வருத்தமில்லை எனவும் சொன்னேன்.

காங்கிரஸின் மீது எனக்கும் வெறுப்பு உண்டு ஆனால் காங்கிரசும் பாஜகவும் ஒன்றா? காங்கிரசுக்கு இந்த அரசியல் சட்டத்தை கவிழ்க்க வேண்டும் என்கிற மறைமுக அஜென்டா கிடையாது, ஆனால் பாஜகவிற்கு உண்டு; காங்கிரசுக்குப் பின்னால் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்கிற ஒரு அப்பட்டமான பாசிச அமைப்பு கிடையாது, ஆனால் பா.ஜ.கவுக்கு உண்டு; காங்கிரசின் வன்முறை அரச வன்முறை மட்டுந்தான். ஆனால் பாஜகவின் வன்முறை அரச வன்முறை மட்டுமல்ல, எண்ணற்ற பல வன்முறை அமைப்புகளின் மூலம் அவர்களைப்போல காங்கிரஸ் வன்முறையை ‘அவுட் சோர்ஸ்’ பண்ணுவதில்லை; பன்சாரேயையும், கல்புர்கியையும், தபோல்கரையும் கொன்றது யார்? காங்கிரசின் போலீசா இல்லை பாஜக கும்பலின் அடியாட்களா? என்று கேட்டேன்.

இன்று ஆட்சியில் அமர்ந்து மிகக் கடுமையான முறையில் மாணவர்கள் உள்ளிட்டு கருத்துமாறுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு கொண்டு, உலகமே கண்டிக்கும் வகையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவைப்பற்றி, ஒரு முஸ்லிம் மேடையில் நின்று கொண்டு பாஜகவும், காங்கிரசும் ,கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுதான் எனச் சொல்வது அந்த மூன்று கட்சிகளையும் இழிவு செய்வது மட்டுமல்ல, அது பா.ஜகவிற்கு சூத்து கழுவும் வேலை எனவும் சொன்னேன்.

அதுமட்டுமல்ல ஏழு தமிழர்கள் விடுதலை பற்ரி நாமும் பேசினோம்; பேசுகிறோம்; மாநாடுகளும் போட்டோம். ஆனால் நாம் அத்தோடு நிறுத்தவில்லை. கூடுதலாக இதோ இன்றும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் வாடும் 49 முஸ்லிம் தமி்ழர்களின் விடுதலைக்காகவும் போராடுகிறோம். நீங்கள் மேடை போட்டால் வந்து முழங்கும் இவர்கள் என்றைக்காவது 49 + 7= 56 தமிழர்கள் என முஸ்லிம்களையும் சேர்த்து வாயாற தமிழர்கள என அழைத்து அவர்களின் விடுதலையை இவர்கள் பேசியுள்ளார்களா? யோசித்துப் பாருங்கள் என்றேன். அது மட்டுமல்ல இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். கன்னையா குமார் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தபோது “இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்” எனச் சொல்லிவிட்டானாம் அந்த 20களைத் தாண்டாத சிறுவன். நம் அனைவராலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்ய முடியாததைச் செய்தவன் அவன். இன்று உலகமே பாஜக அரசைக் கண்டிக்க வைத்தவன் அவன்.

அகில் பில்கிராமி போன்ற தத்துவவியலாளர்கள் எல்லாம், சிறுபான்மையர், தலித்க்ள், விவசாயிகள், எளிய தொழிலாளிகள்” இவர்களின் அரசியலைப் பேசியவன் எனவும், எந்த தேர்தல் நோக்கமும் இல்லாமல் அவர்களை இணைத்தவன் எனவும், அவனிடம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்வும் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் மேடையிலிருந்து கன்னையா குமாரைக் கேலி செய்து ஒலிக்கிறது ஒரு குரல். அத்தனை கொடிய நிபந்தனைகளுடன் இன்று அவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். ஆயுள் வரை சிறையில் அடைக்கத்தக்க பிரிவுகளில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவன் அவன். நகத்தில் அழுக்குப் படாமல் அரசியல் செய்பவர்கள் இன்று அவனை உங்கள் மேடையில் நின்று கேலி செய்கிறார்கள். இதையும் சொன்னேன் அங்கு.

இலங்கைக்குச் சென்று வந்து ஒன்றரை மணி நேரம் அங்கு தமிழர்களின் வேதனைகளையும் இராணுவக் கொடுமைகளையும் பேசிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் தலிதகள், முஸ்லிம்கள் எனப் பேசத் தொடங்கியவுடன், “இனி ஒரு வார்த்தை பேசினால் உன் கையை வெட்டுவோம்” என என் கூட்டத்தில் வன்முறை செய்தார்களே அவர்கள் எந்தெந்த அமைப்பினர் என அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ஹாஜாகனி. அதில் ஒரு சாரார் சீமான் ஆட்கள். இன்னொரு சாரர் யார் எனக் கேட்டுப் பாருங்கள். எனக்கும் அவர்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கலா? முஸ்லிம் கள் பற்றிப் பேசக் கூடாது, தலித்கள் பற்றிப் பேசக் கூடாது என்றுதானே அந்த வன்முறை. அதை நீங்கள் எல்லாம் அன்று கேட்டிருக்க வேண்டும் ஹாஜாகனி. உங்கள் இதழ்களில் கண்டித்து எழுதியிருக்க வேண்டும். ஆளூர் ஷா நவாஸ் சீமானிடம், “என்ன இப்படி மார்க்ஸ் கூட்டத்தில் உங்கள் ஆட்கள் இப்படிச் செய்துள்ளார்களே” எனக் கேட்டதற்கு அந்த ஆள் என்ன சொன்னார் என்பதை நவாசிடம் கேட்டுப்பாருங்கள்.