மலம் அள்ளும் துப்புறவுப் பணி குறித்து காந்தியடிகள்

“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்:

டிசம்பர் 3 1932 அன்று புனே  பகுதி காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்தான் அவை.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரத்னகிரி சிறையில் இருந்த அப்பாசாகேப் பட்டவர்தன் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியுள்ளார். பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்திக் காந்தி இந்தக் கடிதங்களை எழுதுகிறார்.

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஒரு ‘மேல்’ சாதிக்காரர். அந்தக் காலத்தில் எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி

சக கைதிகளின் மலத்தை அள்ளும் தூய்மைப் பணி, துப்புரவுப் பணி.

#    #    #

உங்களுக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; அபத்தம் எனலாம். ஆத்திரம் கூட வரலாம்.

‘பங்கி’கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நீங்கள் கொதிப்பதை என்னால் காண இயலுகிறது.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப் பிரசினைகளில் நவீனமாதல், எந்திரமயமாதல் ஆகியவற்றை எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின் எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தியவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் மலம் அள்ளுவதை ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என நான் சொல்ல வரவில்லை. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

காந்தியை அறியாமலேயே அவர் மீது ஒரு வெறுப்பைச் சுமந்து திரியும் நாம் மட்டும் என்ன ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை ஒழித்துவிட்டோமா என்ன?

 

இப்படியானது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலை பெறும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம் இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இங்கொன்றை மிகவும் அழுத்தமாகப் பதிய விரும்புகிறேன். இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என நினைத்துவிடக் கூடாது, அப்படியாக இந் நிகழ்வை வாசிக்க நம் மீது திணிக்கப்பட்டுள்ள காந்தி வெறுப்பு நம்மை ஆட்படுத்திவிடக் கூடாது.

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, கஸ்தூரி பா காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்ட வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

குறிப்புகள் 1:  முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’காசியும் குமரியும்’ எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் அவர் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை பாவே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவதைத் தயவு செய்து ஒருமுறை படித்துப் பாருங்கள்.  நமக்குத் தோன்றலாம். இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலுமா? நான்தான் சொன்னேனே இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

  1. காந்தி டோயலுக்கு எழுதியுள்ள கடிதங்களை அவரது தொகுப்புகளில் காண்லாம்… நறுக்குத் தெரித்தாற் போன்ற காந்தியின் ஆங்கிலம், அதிகாரிகளுக்கு எழுதும் போதும் சற்றும் வளைந்து கொடுக்காதது. அதே நேரத்தில் அதில் மிளிரும் பண்பு யாரையும் தலை வணங்கச் செய்வது.  இந்தக் கடிதம் எழுதப்படும்போது காந்தியும் ஒரு சிறைவாசி என்பது கவனத்துக்குரியது பட்டவர்தன் அவர்கள் உண்ணா விரதம் இருப்பது காந்தி கேள்விப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வேளை அது தவறாக இருக்கக்கூட வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டு காந்தி எழுதும் வாசகங்கள் இவை..

“If I am misinformed about the present position you will let me know what it really is. If I am correctly informed I would ask you in view of the circumstances brought to your notice please to telegraph instructions that my friend and his associates may be allowed to resume Bhangi work under whatever written guarantee as to its voluntary nature you may deem fit to take from them. Though I am a prisoner, you will not expect me to see a comrade dying by inches, not for any crime, not for any indulgence he desires, but for deprivation of humanitarian service for the prosecution of which Government have recognized the necessity of giving me special facilities…  I am sure that you will treat this as a matter of urgency involving as it does the possibility of great damage being done to a fellow-being under your custody.”

  1. சுதந்திரத்திற்குச் சற்று முன்னதாக காந்தி அளித்த மிக முக்கியமான நேர்காணல்களில் ஒன்றில் “முதல் குடியரசுத் தலைவராக ஒரு பங்கி இனத்துப் பெண் அமைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளதை எனது பழைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்
  2. காந்தி டோயலுக்கு எழுதிய கடிதங்களை Years of Fasts of Mahatma Gandhi என்னும் தலைப்பில் இந்த இணையப் பக்கத்தில் காணலாம்: http://www.mkgandhi.org/fastofmahatma.htm

தொடரும் கொலைகளும் ஒரு காவல்துறை அதிகாரியின் கருத்தும்

இன்றைய முக்கிய பேச்சுப் பொருள் இந்தத் தொடரும் கொலைகள்தான். மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல இதற்கும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நான்காண்டுகளில் 9,000 கொலைகள். 85,000 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் சுமார் 5000 கள்ளத் துப்பாக்கிகள் புழங்குவதாகவும் விவரங்கள் தருகிறார். ஸ்டாலின் சுவாதி வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு அவரும் சமீபத்திய சென்னைக் கொலைகளைப் பற்றி விரிவாக விவரங்கள் சொல்லியுள்ளார். இரண்டாம் முறையாக ஜெயா தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபின் நடந்த கொலைகளைப் பட்டியலிட்டுள்ளார். ஜெயா வழக்கம்போல “அமைதிப் பூங்கா” கதை அளந்துள்ளார்.
முகநூலில் நண்பர்கள் பலப்பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் காவல் நிலையங்களில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்வேறு மட்டங்களில் சுமார் 20,000 காலியிடங்கள், ஆறில் ஒன்று பணியிடங்கள், நிரப்பப்படவில்லை எனக் காரணம் சொல்கின்றனர்.
எனக்கு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது நினைவுக்கு வருகிறது ஏப்ரல் 15, 2008 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அது வந்துள்ளது. அவர் சி.கே. காந்திராஜன். சென்னை நகர கமிஷனராக இருந்தவர். ‘Organised Crime — A study of Criminal Gangs in Chennai’ என்பது அவரது Ph.D ஆய்வுத் தலைப்பு. டெல்லி ‘ஏ.பி.எச் பப்லிகேஷன்ஸ்’ இதை இப்போது நூலாக வெளியிட்டுள்ளது. Google Books ல் Organised Crime C.K.Gandhirajan எனத் தேடினீர்களானால் எளிதில் முழுமையாகப் படிக்கலாம். சென்னை நகரில் செயல்படும் சுமார் ஆறேழு கிரிமினல் குமபல்களை அவர் ஆய்வு செய்து அவை செயல்படும் முறை முதலியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறிய ஒரு செய்தியைக் கவனப்படுத்துவதுதான் இங்கு என் நோக்கம்.
இன்று நடந்துள்ள பல கொலைகள் கூலிப் படைகளினால் நடத்தப் படுவதையும், பணப் பறிப்புக்காகவும், கொள்ளை முதலிய காரணங்களுக்காகவும் நடத்தப்படுவதை அறிவோம். இந்தக் ‘கிரிமினல் கேங்’ குகளைப் பொருத்தமட்டில் அவை காவல்துறையுடன் நெருக்கமாக உறவுகொண்டுள்ளன என்பதுதான் அவர் சொல்வது. பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பல காவல்துறை அதிகாரிகள் இந்தக் கும்பல்களுக்கு ‘ராயல்டி’ பெற்றுக் கொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர் என்கிறார் அவர். சிலர் இப்படி மாதம் 50,000 முதல் பல இலட்சங்கள் வரை சம்பாதிப்பதாகவும் அவர் கூறுகிறார். “எந்த ஒரு அமைப்பு ரீதியான குற்றச் செயல்களும் அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், போலீஸ்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறுவதில்லை” என்கிறார் காந்திராஜன். அப்பட்டமாக இந்தத் தொடர்புகள் வெளிப்பட்டவுடன் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சிலர் சஸ்பென்ட் செய்து கொஞ்ச நாள் கழித்துப் பணியமர்த்தப் படுகின்றனர். அவ்வளவுதான்.
மேலே குறிப்பிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த இரண்டு விவரங்களைச் சொல்கிறேன். பாம்ப் பாலாஜி என்கிற இப்படியான ஒரு கும்பல் தலைவனுடன் தொடர்பு வைத்திருந்தார் என தஞ்சை மேற்கு காவல் நிலையத்திலிருந்த குமாரவேலு எனும் ஆய்வாளரை வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு மாற்றினார்கள். மோசடி மன்னன் ஆதிகேசவனுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என மகாகவி பாரதி நகர் காவல் நிலைய உதவி ஆணையர் முகமது காசிஃப் மற்றும் ஆய்வாளர் பீர் முகமது இருவரையும் சஸ்பென்ட் செய்து, பிறகு வேறொரு காவல் நிலையத்தில் பணி அமர்த்தினார்கள்.
சமீபத்தில் நடந்துள்ள சென்னைக் கொலைகளிலும் கூட வழக்குரைஞர் ஒருவரைக் கொல்ல வேலூர் சிறைக்குள் உள்ள ஒரு நபர் காரணமாக இருந்துள்ளது இரண்டு நாள் முன்னர் பத்திரிகைகளில் வெளி வந்தது. இன்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் தற்போது வளைகுடா நாடொன்றில் இருந்து கொண்டு செயல்படும் ஒரு தாதாவான ஸ்ரீதர் தனபாலன் என்பவருடன் தொலைபேசி ஒன்றில் பேசி அவர் சொன்ன பதிலும் இரண்டு நாள் முன் அந்த நாளிதழில் வந்தது. இவர்களை எல்லாம் போலீஸ் கைது செய்து சரியாக விசாரித்து முழுமையாக அந்தக் கும்பல்களையே ஒழித்திருக்க இயலாதா எனும் கேள்வி நமக்கு எழுகிறது. காவல்துறை அதெல்லாம் செய்வதில்லை.
காந்திராஜன் சொன்னது போல இது அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், காவல்துறை, கிரிமினல் கும்பல்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துச் செய்யும் குற்றம். இப்படி கொலை கொள்ளைகள் அதிகமாகி ஊடக கவனம் பெற்று பிரச்சினை பெரிதாக ஆகும்போது காவல்துறை இந்த மூல வேர்களை ஆராய்ந்து அவற்றை வேறறுக்கும் வேலையைச் செய்யாது. மாறாக யாராவது ஒரு பழைய குற்றவாளியைப் பிடித்துக் கொண்டு சென்று என்கவுன்டர் செய்து படம் வெளியிட்டு பதவி உயர்வும் பணப் பரிசும் பெறுவார்கள். மறுபடியும் குற்றச் செயல்கள் தொடரும்.
சென்ற ஆண்டில் திருநெல்வேலி நகரில் கொலை கொள்ளை பெருகிவிட்டன எனப் பத்திரிகைகள் எழுதப் போக கிட்டப்பா எனும் ஒரு பழைய குற்றவாளி, இப்போது திருந்தி மாமியார் வீட்டில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபரை அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து உண்மைகளைக் கொணர்ந்தோம். நாங்கள் விசாரித்தபோது அது உண்மையான என்கவுன்டர்தான் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள் உயர் அதிகாரிகள். இப்போது நீதிமன்றம் அது கொலைதான் எனச் சொல்லி சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுவாதி கொலை போன்றவை வேறு. இப்படித் தனி நபர்கள் வக்கிரமாகச் செய்யும் கொலைகளின் சமூகக் காரணங்கள் வேறு. ஆனால் நடக்கும் ஆணவக் கொலைகளிலும் கூடச் சில இப்படியான கும்பல்களை வாடகைக்கு அமர்த்தி செய்யப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை

“தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள செய்தி. இப்படித் தமிழகத்திலேயே மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என்றொரு கருத்தைப் பொதுப் புத்தியில் பதிப்பதில் தமிழக் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. 2011 லிருந்து இன்று (2016) வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் காவல்துறையினர் 17 வெடிகுண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தும் டாஸ்மாக் கடைகள் பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள். இவற்றில் இரண்டு பார்சல் குண்டுகள்.

இப்படியான வெடிகுண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெரிய அளவில் கொல்லப்படுவது என்பது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ள நேரத்தில் இப்படி மதுரை மாவட்டப் போலீஸ் 17 வெடிகுண்டு வழக்குகளைப் புலன் விசாரித்து வருவது என்பது இங்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்படுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் அந்தச் சமூகத்தையே “சந்தேகத்திற்குரிய சமூகமாகவும்”, “பயங்கரவாதச் சமூகமாகவும்” பார்க்கக் கூடிய நிலைக்கும் இட்டுச் செல்கிறது.

எப்படி இருந்த போதிலும் இப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் கவனமாகப் புலன் விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவெனில் ஆண்டுகள் ஐந்தாகியும் பெரிய அளவில் யாரும் இதில் கைது செய்ய்ப்படவில்லை. கைது செய்யப்பட்ட சுமார் பத்து பேர்களில் ஒன்பது பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவரும் இரண்டொரு நாளில் பிணையில் வெளிவருவார் எனச் சொல்லப்படுகிறது. தவிரவும் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளாக இவை காவல்துறையாலும் ஊடகங்களாலும் பிரமாதப் படுத்தப்பட்டாலும் இந்தப் 17 பயங்கரவாததாக்குதல் முயற்சிகளிலும் யாரும் ஒரு சிறிய அளவில் கூட பாதிக்கப்படவில்லை; சொத்திழப்புகளும் இல்லை.

இந்த வழக்கு விசாரணைகளில் குறைந்த பட்சம் மூன்று புலன் விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த மெத்தனம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தறுவாயில் இதை முறியடிக்கும் நோக்கில் ஆய்வாளர் மாடசாமி எனும் புலன் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒரு குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாய் வந்தது. வேறொரு புலன் விசாரணைக் குழுவில் உள்ள ஒருதலைமைக் காவலர் தீவிரவாதி ஒருவருடன் தொடர்பில் உள்ளார் எனவும் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனவும் ஆதாரத்துடன் அதே கண்காணிப்பாளர் முன்வைத்துள்ள இன்னொரு புகார் பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்தது.

இது குறித்தெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டுகள் “வைக்கப்படுவதும்”, முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்கு விவரங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. பல்வேறு புலன் விசாரணை முகமைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரே குற்றம் குறித்து இரண்டு முகமைகளும் வெவ்வேறு நபட்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதெல்லாம் காவல்துறையினருக்கு இடையே யார் விரைவாகப் பதவி உயர்வு பெறுவது, பணப் பரிசுகளைப் பெறுவது என நடக்கும் போட்டி என நாம் வாளாவிருந்துவிட முடியாது. ஏனெனில் இந்தப் போட்டிகளுக்கிடையில் பல அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாக மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை நீதிவழங்கு நெறிமுறைகளுக்கும் எதிரானது என்கிற வகையில் இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளையும், ஐயங்களையும் பொது வெளியில் வைப்பதற்கென கீழ்க்கண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1. பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை

2. ரஜினி, மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

3. வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், மாநிலச் செயலர், NCHRO, மதுரை

4. வழக்குரைஞர், ஏ.ராஜா, உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

5. வழக்குரைஞர் எம். முஹம்மது அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO, சென்னை

6. வழக்குரைஞர் எஸ்.ஏ.எஸ்.அல்லாவுதீன்,உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

இக்குழுவினர் இந்தப் 17 வெடிகுண்டு வழக்கு விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்தபின் சென்ற ஆக 5, 2016 அன்று மதுரை நகர காவல்துறை ஆணையர் ஷைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ், உளவுத்துறை உதவி ஆணையர் முத்து சங்கரலிங்கம், ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ள மதுரை புதுராமநாதபுரம் சாலை முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக்(35) த/பெ மீரான் கனி, தற்போது கைது செய்யப்படுச் சிறையில் இருக்கும் நெல்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கின் தாய் ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை பாண்டலி எனப்படும் முகமது அலி (39) த.பெ முகமது சுல்தான், நெல்பேட்டையில் பீடா கடை வைத்துள்ள சகோதரர்கள் ஃபரீத்கான் மற்றும் மன்சூர் கான் த/பெ அப்துல் ரீதிஃப் கான், நெல்பேட்டை வழக்குரைஞர் உ.முகமது அலி ஜின்னா த.பெ உமர் பாய், நெல்பேட்டை வழக்குரைஞர் சௌகத் அலி, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனின் புகார்க்கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞரும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவருமான சையது அப்துல் காதர் த.பெ அப்துல் ரஷீது ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினர். மீண்டும் இவர்களில் சிலரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

17 வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்

1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.

2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது (கே.புதூர் கா.நி.கு.எண் 1302/2011).

3. 07-12,2011 – திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது).

4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது).

5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது.

6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது.

7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012)

8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014).

9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014).

10. 05.02.2014 – ராஜலிங்கம் வெங்காயக் கடை அருகில் ஒரு குண்டு கண்டெடுப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014)

11. 14.03.2014 – நெல்பேட்டை ஜமாத் செயலர் காஜா மைதீன் பைக்கில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 196/2014).

12. 02.01.2015 – சிவகங்கை டாஸ்மார்க் பாரில் குண்டு வெடிப்பு (சிவகங்கை கா.நி.கு.எண் 02/2016) – பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் எனச் சொல்லப்பட்டது.

13. 01.03.2015 – வில்லாபுரம் சம்சுதீன் என்பவரது வீட்டில் கத்தி மற்றும் குண்டு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சோதனையில் கண்டெடுக்கப் பட்டது (அவனியாபுரம் கா.நி.கு.எண் 262/2015 u/s 25(1)(a) of arms act r/w 201, 153 (A), 187, 120(B), 341 IPC).

14. 21.03.2015 – சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு.

15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு.

16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016).

17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016).

மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது.

இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது:

“இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்”

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார்.
இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது.

இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்?

இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை என நகைப்பதா? இல்லை இதற்கெல்லாம் பின் ஏதோ கரணங்கள் உள்ளன என சந்தேகப்படுவதா?

இதற்கு விடை காண இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறைகளையும் அதனூடாக இன்று மேலெழுந்துள்ள சில பிரச்சினைகளையும் ஆராய வேண்டும்..

காவல்துறை மீது காவல்துறையே வைக்கும் குற்றச்சாட்டு

வெடித்ததெல்லாம் பட்டாசுக் குண்டுகள்தான் என்ற போதிலும் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகள் யார் எனப் பெயரிடப்படாத போதும், இந்த வழக்கு விசாரணைகளில் மதுரை முஸ்லிம்கள், குறிப்பாக நெல்பேட்டை வாழ் ஏழை எளிய முஸ்லிம் இளைஞர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை (Special Team) சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களைக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி விசாரித்தது. நெல்பேட்டை வாழ் பெண்களும் கூட பெண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை இல்லாமல் விசாரிக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு முன் நெல்பேட்டை மக்கள் மத்தியில் இது தொடர்பாக விசாரித்த எங்கள் குழு முன் இப்படிப் பலரும் வந்து தாங்கள் அப்பாவிகள் எனவும், தங்களைத் துன்புறுத்துவதாகவும் பதிவு செய்தனர்.

இவர்களின் விசாரணை முறை எத்தனை அநீதியானது, இவர்களது விசாரணையில் எப்படி முஸ்லிம் வெறுப்பு அடிநாதமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். 2011ல் இந்த மயில்வாகனன் – மாடசாமி ‘டீம்’ பரமக்குடி பா.ஜ.க பிரமுகர் முருகன் என்பவர் கொலையைப் புலனாய்வு செய்தது. பரமக்குடி – இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதார் சிக்கந்தர் என்பவர் திருச்சி சிறையில் காவலராக இருந்தார். இவரையும் இந்தப் பகுதியைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவரையும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு படுத்த மாடசாமி குழு முடிவெடுத்துக் களத்தில் இறங்கியது. இவர்கள் மதாரையும் இத்ரிசையும் கடத்திச் சென்று திருச்சியில் ஒரு விடுதியில் தங்க வைத்துச் சித்திரவதை செய்தனர். இதே நேரத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு, பாண்டி என்னும் இரு இளைஞர்கள் வேறொரு வழக்கில் பிணை கிடைத்து திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டனர். கையெழுத்திடவந்த இந்த இளைஞர்கள் இருவரையும் மாட்சாமி டீம் கடத்திச் சென்று அவர்களை என்கவுன்டர் செய்வதாக மிரட்டியது. இறுதியில் அந்த மிரட்டலுக்கான காரணத்டை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் கையெழுத்துப் போடுவதற்காக திருச்சியில் இருந்த போது அவர்கள் ஊர்க்காரரான மதாரின் அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர்களுக்குத் தெரிந்த இத்ரிஸ் அங்கு வந்ததாகவும் மதாரும் இத்ரிசும் சேர்ந்து முருகனைக் கொல்லச் சதித் திட்டம் செய்ததைத் தாங்கள் கண்டதாகவும் சாட்சி சொல்ல அவர்களை மாடசாமி டீம் மிரட்டியது.

திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் தங்கவைத்து அவர்கள் இவ்வாறு மிரட்டப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர்கள் வந்தபோதும் கூடவே வந்த மாடசாமி டீம் வாசலில் காத்திருந்தது. அப்போது இந்த இளைஞர்கள் இருவரும் ஓடி அங்கு இருந்த வழக்குரைஞர் கென்னடியிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள். அவர் உடனடியாக மாஜிஸ்ட்ரேட் முன் (Judicial Magistrate Court No 2, Thiruchirappalli)அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி ராஜாராம் அவர்கள் மாடசாமி மற்றும் அவரது குழுவில் இருந்த 16 காவலர்கள் மீதும் கொலை செய்வதாக மிரட்டியது, பொய்சாட்சிகளை உருவாக்கியது, மனித உரிமைகளை மீறியது ஆகிய அடிப்படைகளில் விசாரணை நடத்த வேண்டும் என CBCID காவல் பிரிவுக்கு ஆணையிட்டார் (ஆக 1, 2011). இந்த ஒரு சான்று போதும் மயில்வாகனன் – மாடசாமி குழு எவ்வளவு முஸ்லிம் வெறுப்புடன் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பதற்கு.

இந்தக் குழு மீது CBCID விசாரணை தொடங்கிய பின்னும் தொடர்ந்து அந்தக் குழு மதுரை வெடிகுண்டு வழக்கு விசாரணைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தனது அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் மேற்கொள்ளும் கொடும் மனித உரிமை மீறல்களைக் காவல்துறை தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி.

இந்தப் பின்னணியில்தான் அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் காவல்துறைத் தலைவருக்கு (DGP) எழுதிய இரு கடிதங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன.

23.08.2013 அன்று எழுதப்பட்ட முதல் கடிதத்தில் மயில்வாகனன் – மாடசாமி டீம் தனது நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும், ஆனால் குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு கைது செய்ய இருந்த நிலையில் அவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார்.

29.03.2013 அன்று டி.ஜி,பி க்கு பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் மதுரை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த பல்வேறு புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகளான மதுரை SID, மதுரை SIT, மதுரை நகர SIC ஆகியவற்றுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாகவும் காவல்துறையின் தகவலாளிகளாகவும் (informants) செயல்படும் இஸ்மத், வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன் கவலைகளைப் பகிர்ந்திருந்தார். அப்படியான ஒரு ‘தீவிரவாதியிடம்’ இருந்து 25,000 ரூபாயை உளவுப் பிரிவைச் சேர்ந்த விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் பெற்றுக் கொண்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருந்தார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த விஜய பெருமாளும் இந்த முஸ்லிம் ‘தீவிரவாதிகளும்’ சேர்ந்து பரமக்குடியில் சிலரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன் விஜய பெருமாளின் நடவடிக்கைகள் மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைப்பதற்கும் பயன்பட்டுள்ளது என்கிறார்.

இன்றுவரை விஜயபெருமாள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. மாடசாமியின் இடமாற்றமும் ரத்தாக வில்லை.
கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முறையீடு செய்தும் தன் இடமாற்றம் ரத்தாகாததைக் கண்ட மாடசாமி நேரடியாக ஊடகங்களிடம் பேசத் தொடங்கினார். ‘தி இந்து’ நாளிதழிலும் (அக் 23, 26, 2013), ஜூனியர் விகடனிலும் (நவ 03, 2013) அவரது கருத்துக்கள் வெளியாயின. அவற்றில் மதுரைக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான மூன்று பேர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால் காவல்துறையின் CBCID பிரிவின் Special Investigation Division ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன் என்கிற இரு ADSP கள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காவல்துறைப் பிரிவுகளுக்கிடையே இருந்த இந்த முரண்கள் அம்பலத்துக்கு வந்ததில் ஒன்று தெளிவாகியது. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காவல்துறைக்கும் தொடர்புண்டு அல்லது யார் அதைச்செய்திருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் அது. உண்மைகள் வெளிவந்தால் காவல்துறைக்கே பிரச்சினைகள் வரும் என்பதாலேயே ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்தப் புலன் விசாரணைகள் இறுதியை எட்டவில்லை.

இந்த அறிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி SDPI கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் அப்துல் காதர் ஒரு ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார் (W.P –MD- No. 4711 of 2014). தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது எனவும் மதுரை வெடிகுண்டு விசாரணை முழுமையையும் CBI க்கு மாற்றுமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மதுரை காவல்துறை மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகளும் அதன் மூலம் வெளிப்படும் முரண்களும்
இந்த வெடிகுண்டு வழக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக CBI விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மதுரை காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கு விசாரணைகளில் சில் மாற்றங்களைச் செய்தனர். இதன் முதற் கட்டமாக ஒரு புதிய ஆணையை வெளியிட்டனர் (மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் செயல்முறை ஆணை C.No.66/ Camp/ DC/ L&O/ M.C. 2015 dated 25.01.2015). இதன்படி மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை விசாரிக்க அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த “மார்ச் 01, 2015 அன்று தனக்குக் கிடைத்த இரகசிய தகவல்” ஒன்றின் அடிப்படையில் அண்ணா நகர் இராமர் கோவில் சைக்கிள் குண்டு வெடிப்பு வழகில் (குற்ற எண் 404/2012) தொடர்புடைய சம்சுதீன் என்பவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார். அந்த சம்சுதீன் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் புதிய வழக்கொன்றைப் (262/2015) பதிவு செய்து, அவரது “ஒப்புதல் வாக்குமூலம்” நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரையைச் சுற்றி நடந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ள நபர்கள்தான் செய்தனர் எனக் கூறப்பட்டது. இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வாக்குமூலம் அளிப்பவரிடம் படித்துக் கூடக் காட்டாமல் கையொப்பம் பெறப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மதுரை காவல்துறை இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படுத்தும் இடியாப்பச் சிக்கல் இத்தோடு முடியவில்லை. சிவகுமாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இந்த குண்டு வெடிப்புகள் குறித்து மார்ச் 21, 2015 அன்று மதுரை Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்னொரு வழக்கைப் பதிவு செய்தது. இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2011 முதல் 2015 வரையிலான அனைத்து வெடிகுண்டு வழக்குகளையும் கொண்டுவந்தனர். இந்த வழக்குகள் அனைத்திலும் 1908 ம் ஆண்டு Explosive Substances Act பிரிவுகள் 3,4,5 மற்றும் 120 (B) and 34 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதில் 11 பேர்கள் பெயர் குறிப்பிட்டும் மற்றும் சிலர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஏற்கனவே அந்தந்தக் காவல் நிலையங்களில் தனித்தனியே வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தப் பழைய முதல் தகவல் அறிக்கைகளுக்கும் இன்றைய அறிக்கைக்கும் இடையில் பல முரண்கள் உள்ளன. இந்த முரண்கள் அவை அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்பதைக் காட்டுகின்றன். எமது வழக்குரைஞர் குழு சுட்டிக்காட்டியுள்ள அப்படியான முரண்களில் சில இங்கே:

1. 2011 மாட்டுத்தாவணி டாஸ்மாக் குண்டு வெடிப்பு வழக்கு: ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் குண்டு வைத்தது உமர் ஃபாரூக் எனப் பதிவாகியுள்ளது. இன்றைய Q பிரிவு முன்வைக்கும் வாக்குமூலத்தின்படி அதைச் செய்தது ஹாரூன் எனச் சொல்லப் படுகிறது.

2. 2011 கே. புதூர் அரசு டிப்போ பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன்.

3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையில் இதைச் செய்தது பிலால் மாலிக், தௌபீக் ஆகியோர், ஹாரூன். Q பிரிவு விசாரணையில் தவ்பீக் பெயர் மட்டும் உள்ளது.

4. 2013 நவம்பர் சுங்கம் பள்ளிவாசல் அக்பர் அலி கார் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி இதைச் செய்தது ஹாருனுன் அசாருதீனும். Q பிரிவு விசாரணையில் இது மைதீன் பீர் ஆக மாறுகிறது.

5. 2014 சுங்கம் பள்ளிவாசல் காஜா மைதீனின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்த வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி அது உமர் ஃபாரூக்; Q பிரிவு விசாரணையின்படி அது மைதீன் பீர்.

6. 2012 ஆகஸ்டில் உமர் ஃபாரூக் கடைக்கு வந்த பார்சல் குண்டு வழக்கு: சம்பவம் நடந்த உடன் பதியப்பட்ட தெற்குவாசல் காவல் நிலைய மு.த.அ யின் அடிப்படையில் 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அசாருதீன்தான் என அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றைய Q பிரிவு விசாரணையின்படி பார்சல் குண்டைக் கொண்டு வந்தது தவ்பீக்.

விசாரணையில் இப்படி ஏற்படுத்திய அதிரடித் திருத்தங்கள் இத்தோடு முடியவில்லை. அடுத்து மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென இந்த வழக்குகள் C.B.C.I.D யின் S.I.D வசம் ஒப்படைக்கப்பட்டுன. C.B.C.I.D யின் ADSP மாரிராஜன் கடந்த 24.03.2015 அன்று இதை மறு வழக்காக மீள்பதிவு (Re – Register) செய்தார். அதன்பின் இந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகளாக சீனிவாசன், முருகவேல், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இப்போது மாரிராஜனே விசாரித்து வருகிறார். நாங்கள் சந்தித்த அனைவரும் இதை உறுதி செய்தனர்.

இந்தப் புதிய திருப்பங்களின் ஊடாக இவர்கள் உருவாக்கிய ஒரு புதிய வழக்கு அதிர்ச்சியை அளைக்கக் கூடியது. மார்ச் 21, 2015 அன்று மேலூரில் அப்போது கூரியர் ஏஜன்சி ஒன்றை வைத்திருந்த அப்பாஸ்மைதீன் (43) என்பவரை Q பிரிவு போலீசார் பெரும் படையுடன் வந்து இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரைக் கடுமையாக அச்சுறுத்தி இறுதியில் பிரான் மலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஏராளமான காவல்துறையினர் முன் அவரை நிறுத்தி, அடித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியைக் கை நீட்டிக் காட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீழே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த வாளி குண்டுக்குக் காரணமானவர் அப்பாஸ் மைதீன் தான் எனச் சொல்லப்பட்டது. பின் அவரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமும் பெறப்பட்டது. பின் மீண்டும் மார்ச் 31, 2015 அன்று அவரை ADSP மாரிராஜன் ‘கஸ்டடி’ எடுத்து இன்னொரு வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஒரே நபர், ஒரே வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம் கொடுத்தனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் செருப்புகடை செய்யது கடைக்கு வந்தோம். அப்போது உமர் ஃபாரூக் கையில் ஒரு பேக் கொண்டு வந்திருந்தார். அதிலிருந்து பேட்டரி, வெடிமருந்து மற்றும் டைமருடன் கூடிய ஒரு டப்பாவை வெளியில் எடுத்தார். பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் அதை எப்படி வெடிக்கச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். பின்னர் வெடிகுண்டை எடுத்து சென்று மதுக்கடை பார் முன்பு வைக்கச்சொல்லி பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அன்று இரவு மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுக்கடையில் வெடிகுண்டு வெடித்தது” என விரிவாக உள்ளது.

நாங்கள் நெல்பேட்டையில் சந்தித்த பலரும் “உன்னை 13 வழக்குகளிலும் சிக்க வைத்து விடுகிறேன்” என மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மிரட்டி வருவதாகக் கூறினர். யாரை எல்லாம் காவல்துறை குறி வைத்துள்ளதோ அவர்களை எல்லாம் இப்படிக் காவல்துறையாலேயே தயாரிக்கப்பட்ட இந்த அப்பாஸ் மைதீனின் வாக்குமூலத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாங்கள் சந்தித்தவர்கள் சொன்னவை

முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக் (35), புது ராமநாதபுரம் : “தற்போது 13 வழக்குகள்ல என்னைச் சேர்த்துள்ளதாக நேற்று கூட ஆய்வாளர் சீனிவாசன் சொன்னார். இப்டி பொய் வழக்கு போடுறீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களா, என் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி உங்க பெண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்பட மாட்டாங்களான்னு கேட்டேன். ‘என்ன சபிச்சிராதப்பா. நான் என்ன பண்றது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்யிறது Q பிராஞ்ச் ஏற்கனவே உன்னை இந்த வழக்குகள்ல சேர்த்துருக்கதால ஒண்ணுமே பண்ண முடியல. நீ 13 வழக்குலயும் AB (முன் ஜாமீன்) வாங்கிடு’ என்றார். நான் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது அப்படி இப்படின்னு 2004 முதல் 2007 வரை மூணரை வருஷம் ஜெயில்ல இருந்தேன். ஹை கோர்ட்ல எல்லா வழக்கிலயும் விடுதலை ஆனேன். இப்ப மீன் வியாபாரமும் ரியல் எஸ்டேட்டும் பண்றேன். விஜய பெருமாள் என்கிற ஏட்டு என்னிடம் வந்து ஒரு ரியல் எஸ்டேட் டீல்ல அவருக்கு வேண்டிய ஒரு மூணாவது நபருக்குச் சலுகை பண்ணச் சொன்னார். என்னால முடியல. இப்ப என்னைப் பழி வாங்குறாங்க. இமாம் அலி வழக்குபோது நான் தலைமறைவா இருந்தப்போ போலீஸ் தொல்லை தாங்காம எங்க அப்பா மீரான் கனி மனித உரிமை செல்பாட்டாளரான ஹென்றி டிபேனிடம் உதவி கேட்டதுக்காக வங்கிக் கொள்ளை வழக்கு ஒண்ணுல அவரையும் என் அக்கா மாப்பிளையையும் பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளினாங்க. அதிலேயும் அவங்களை நீதிமன்றம் விடுதலை பண்ணிச்சு”
பாண்டு அலி என்கிற முகமது அலி (39), த.பெ முகமது சுல்தான் நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகள்ல சேர்த்திருக்காங்க. அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வழக்குகள் எதுலயும் நான் இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன். அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”
வழக்குரைஞர் சவுக்கத் அலி (36), த.பெ அப்துல் அஜீஸ், நெல்பேட்டை: “நான் ஹைகோர்ட்ல வழக்குரைஞரா இருக்கேன். என்னையும் 13 வழக்கில சேர்த்திருக்காங்க. ஒரு வழக்கில named accused. மற்ற வழக்குகள்ல confession ல கொண்டு வந்திருக்காங்க. நான் இதுக்கு முன்னாடி எந்த வழக்குலையும் சம்பந்தப்பட்டதோ விசாரிக்கப்பட்டதோ இல்லை. உமர் ஃபாரூக்கிற்கு நான் வழக்குரைஞர். அவரோட ரியல் எஸ்டேட் பார்ட்னர். அதனால என்னைப் பழி வாங்குறாங்க”

ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை (ராமர் கோவில் குண்டு வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கைதாகிச் சிறையில் உள்ள அபூபக்கர் சித்திக்கின் அம்மா): “என் மகன் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். அரசியலுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. அவன் ஒரு செல்போன் கடை வச்சிருக்கான். அதுல ஏதாவது திருட்டுபோன் பிரச்சினையில ரெண்டொரு தடவை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மத்தபடி இந்த குண்டு வழக்குகள் எதுலையும் அவனை விசாரிச்சது இல்ல. பெருநாள் முடிஞ்சு டூர் போய்ட்டு வந்தான். இப்டி அவனைப் புடிச்சுட்டுப் போயி ராமர் கோவில் வழக்குல சேர்த்துட்டாங்க…”

ஜரீனா பேகம் அழுதுகொண்டே இதைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அதோடு இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழு வந்து சித்திக்கைக் கைது செய்தபோது அவரது கடையில் வேலை செய்யும் சையது முகமது அதை வீடியோ எடுத்துள்ளார். உடனே அவர் செல்போனை சீனிவாசன் டீம் பிடுங்கிச் சென்றுள்ளது. அதைத் திரும்பப் பெறக் காவல் நிலையம் சென்றபோது சையது முகமதுவை ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனிலேயே காக்க வைத்து விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து வந்த சையது மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டுப் பின் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சையதுவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தேவை இல்லாமல் ஆய்வாளர் சீனிவாசன் அந்த இடத்தில் ரொம்ப நேரம் சுற்றிச் சுற்றி வந்தார் எனவும் கூறுகின்றனர்.

வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா த.பெ கே.ஏ. உமர் பாய், நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகளில் சேர்த்துள்ளனர். எனது 17 வயதில் போலீசை அடித்ததாக என் மீது ஒரு வழக்கு. அதன் பின் 2005 வரை ஏழு வழக்குகள் போட்டார்கள். அதில் ஆறு வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மற்ற ஒரு வழக்கும் ரத்தாகி விட்டது. தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிரார்கள். அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.

ஆட்டோ யாசின் த.பெ காதர் மைதீன், நெல்பேட்டை மீன்மார்கெட் அருகில்: ”எந்த வழக்குன்னு தெரியல. ஆனா வழக்கில சேர்த்துருக்காங்களாம். வக்கீல் சொன்னாரு. இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் என்மீது கிடையாது. 2013ல் மயில்வாகனன், மாடசாமி டீம் நிறைய நெல்பேட்டைப் பையன்கள அழைச்சிட்டுப் போயி அடிச்சு சித்திரவதை பண்ணினாங்க. என்னையும் எந்தத் தப்பும் பண்ணாமலேயே ADSP ஆபீசில் வச்சு அடிச்சாங்க. நான் வெளியே வந்து அமானுல்லா என்கிற வழக்குரைஞர் மூலமா இன்ஸ்பெக்டர் மாடசாமி மேல ஒரு பிரைவேட் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல இப்ப என் மேல பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு இந்த ஆட்டோ தொழில் தவிர வேற வருமானம் இல்ல..”
பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன், நெல்பேட்டை: “கல்யாண ஆர்டர்க்கு பிரியாணி செஞ்சு கொடுப்பது என் தொழில். 2002ல் இமாம் அலி வழக்கில என்னை சேர்த்திருந்தாங்க. அதுல எனக்கு 2 வருஷம் தண்டனை. அதுக்கு அப்புறம் எட்டு வழக்கு போட்டாங்க. ஒரு கொலை கேஸ் உட்பட. எல்லாத்துலையும் நான் விடுதலை ஆயிட்டேன். இப்ப பிரியாணி தொழில்தான் செய்றேன். அன்னிக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து என்னை வழக்கில் சேர்த்துள்ளதா சொன்னாரு. எந்த வழக்குன்னு தெரியல.

அப்பாஸ் மைதீன் (43) த.பெ ஷேக் தாவூது, மேலூர்: “நான் ரொம்ப சாதாரண குடும்பம். எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்குக் குழந்தை இல்ல. இரண்டாவது மனைவிக்கு நாலு பிள்ளைகள். ஒரு கூரியர் ஏஜன்சி எடுத்திருந்தேன். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. மார்ச் 21, 2015 அன்னிக்கு யாரோ வந்து நூறு தேங்கா கூரியர் அனுப்பனும்னு கூப்பிட்டாங்க. கீழே இறங்கிப் போனா ஒரு வேன்ல ஏற்றிக் கொண்டு போய்ட்டாங்க. இரவு வரை என்னை என்னென்னவோ கேட்டாங்க. யார் யாரோ வந்து ஏதேதோ விசாரிச்சாங்க. ஒண்ணும் எனக்குப் புரியல. பயந்து போனேன். சாயந்திரம் என்னை பிரான் மலைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே நிறைய பத்திரிகையாளருங்க இருந்தாங்க. மேலே கொண்டுபோனாங்க. ஏராளமாக அங்கே போலீஸ் அதிகாரிங்க இருந்தாங்க. அங்கே தூரத்தில ஒரு வாளியில என்னமோ இருந்துச்சு.. அதைக் கையை நீட்டி காமிக்கச் சொன்னாங்க. “ஏன்” ன்னேன். “என்னடா எதிர்த்தா பேசுறேன்னு அடிச்சாங்க. நான் கையை நீட்டினேன் போட்டோ பிடிச்சுட்டாங்க. அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க. சார். இது ரொம்ப அநியாயம். என் பழைய தொழில் போச்சு. இப்ப ஒரு செருப்புக் கடையில் வேலை செய்றேன். எனக்கு இது தாங்க முடியாத அனுபவம். என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாங்கன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது சார்…”

அடுத்து அப்பாஸ் மைதீனுடன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முபாரக்கிடம் (வயது 24, த.பெ ஷேக் என்கிற மீரான் மைதீன், மேலூர்) பேசினோம். சின்னப் பையன் என்பதும் மிகவும் பயந்துபோயுள்ளான் என்பதும் குரலிலேயே தெரிந்தது. அப்பாஸ் சொன்ன அதே கதையை அவனும் திருப்பிச் சொன்னான். இந்தச் சின்ன வயதில் அந்தக் கோடூரமான அனுபவத்தை அவன் சந்தித்தபோது குணாளன் என்பவரது செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான். ஆறு மாதம் கழித்து பிணையில் அவன் வெளியே வந்தபோது யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறான். தினம் 170 ரூ ஊதியமாம். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை எழுதும்போது ஏதோ ஒரு தகவலை உறுதி செய்ய போனில் தொடர்பு கொண்டோம். அவன் அம்மா பேசினார்கள். வேலைக்குப் போவிட்டானாம். “ஐயா, நாங்க எல்லாம் ஏழைங்க அய்யா, எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லைங்க அய்யா. இது ரொம்ப அநியாயம் அய்யா. அவன் ரொம்பச் சின்னப் பையன் அய்யா.. அவனுக்கு யாரும் இப்ப வேலை கூடக் குடுக்க மாட்டெங்குறாங்க அய்யா..” என அந்த அம்மா புலம்பி அழுதார்.

அதிகாரிகள் சந்திப்பு

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது. அப்புறம் இந்த முஸ்லீம்கள்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இவங்க எல்லாம் போலீசுடன் நெருக்கமா இருக்கிறதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. அதனாலயும் சில பிரச்சினைகள் ஏற்படுது….”
“ஆய்வாளர் மாடசாமி என்பவர் உங்கள் மீதெல்லாம் கொடுத்துள்ள புகார் விசாரிக்கப்பட்டதா, ஏட்டு விஜயபெருமாள் ஒரு தீவிரவாதியிடமிருந்து பணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளதே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம். “மாடசாமியிடம் விளக்கம் கேட்டு இருக்காங்க. அது குறித்து மேலதிகாரிங்களைத்தான் கேட்கணும் .விஜயபெருமாளிடம் விளக்கம் கேட்டதுக்கு அவர் தனக்கு அந்த நபர் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்னு பதில் சொல்லி இருக்கார்” என்றார்.

நாங்கள் புறப்படும்போது, “ஆண்டவன் செயலால் உண்மைக் குற்றவாளிகள் கன்டுபிடிக்கப்பட்டால் அப்பாவிகளை விடுதலை செய்வதில் தடையில்லை. என் மீதுள்ள ரிட் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் நானே இந்த வழக்குகளை விசாரித்து நல்லபடியாய் முடித்து வைப்பேன்” என்றார்.

அடுத்து நாங்கள் உளவுத் துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் அவர்களைச் சந்தித்தோம். “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, பீடா கடை பார்சல் குண்டு வழக்கு இந்த இரண்டையும்தான் நகர காவல்துறை (city police) விசாரிக்குது. மற்றதெல்லாம் Q பிராஞ், CBCID இவங்க கிட்ட கொடுத்தாச்சு. இந்த இரண்டையும் கூட அவங்க கிட்ட மாத்தலாம்னு இருக்கோம். மற்ற வழக்குகளைப் பற்றித் தெரியணும்னா அந்த வழக்குகளை இப்போ விசாரிக்கிற ஆய்வாளர் சீனிவாசனைத்தான் நீங்க கேட்கணும்” எனச் சொல்லி அவரது தொடர்பு எண்ணையும் எங்களுக்குத் தந்தார்.
அடுத்து நாங்கள் நகர காவல் ஆணையர் ஷைலேந்திர குமார் யாதவ் அவர்களைச் சந்தித்தோம். பொய் வழக்குகள் பற்றிய எங்களின் புகார்களைச் சொன்ன போது, “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கைத்தான் நாங்க விசாரிக்கிறோம். அது நேரடியா என் கண்காணிப்பில் விசாரிக்கப்படுது. அது பொய் வழக்கு இல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டு தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. மற்ற வழக்குகள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார். பல்வேறு புலன் விசாரணை முகமைகளுக்கு இடையில் உள்ள போட்டிகளால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவது பற்றி நாங்கள் கேட்கத் துவங்கியபோது, “ஒரு குற்ற விசாரணை என்பது போலீசின் புலன் விசாரணையோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பின் நீதிமன்றம் இருக்கிறது. குறுக்கு விசாரணைகள் இருக்கின்றன, வக்கீல்களின் வாதங்கள் இருக்கிறது. அவற்றின் மூலம் உண்மைகளைக் கொண்டுவரலாமே” என்றார்.

தற்போது இந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தான் விசாரிக்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், உயர் அதிகாரிகளைக் கேட்காமல் தான் ஏதும் பேச இயலாது எனவும் குறிப்பிட்டார். அப்பாவிகள் பலர் வழக்கில் சிக்கவைக்கப் பட்டுள்ளார்களே என்றபோது அதைப் பற்றியெல்லாம் விசாரணையில் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எதற்கும் நேரில் வாருங்கள் எனவும் கூறினார்.

எமது பார்வைகள்

இந்திய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். பிணையில் வெளிவர இயலாமல் அவர்கள் நீண்ட வருடங்கள் சிறைகளில் வாடி, தங்களின் இளமையைத் தொலைத்து இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் இன்று கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏன் முஸ்லிம்களாகவே உள்ளனர்? அவர்களைக் கைது செய்வது எளிது. அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை நிறுவுவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. அவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தினாலே போதும். அதுவே அந்தக் குற்றங்களின் நிரூபணங்களாகவும் ஆகிவிடுகின்றன. இந்த நிலை மிகவும் கவலைக்குரிய ஒன்று.

இதன் பொருள் குண்டு வைப்பவர்கள் மீது கடுமை காட்டக் கூடாது என்பதல்ல. அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் குற்றமற்ற அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். இப்படிச் சொல்வது வெறும் அற அடிப்படையான கூற்று மட்டுமல்ல. ஒரு ஜனநாயக அமைப்பு உறுதியாக நிலைப்பதற்கான அடிப்படியான நிபந்தனை இது. இந்த அமைப்பில் நமக்கு நீதி கிடைக்காது என்கிற எண்ணம் எந்தத் தரப்புக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி உருவாகும் அவநம்பிக்கை (despair) அமைப்பின் மீது மட்டுமல்ல, சகமனிதர்கள் மீதும் வெறுப்பை விதைக்கிறது. இந்த வெறுப்பு அவரை வன்முறையாளராக்குகிறது. “அவநம்பிக்கை ஒரு குடிமகனை வன்முறையாளனாக்குகிறது. வேட்டையாடப்படுபவன் வேட்டை ஆடுபவனாக மாறுகிறான். அவநம்பிக்கை ஒரு கொடூரமான கொலை ஆயுயதம்” (Despair can turn you from citizen to perpetrator. From the hunted to the hunter. Despair can be a deadly weapon) என ஷோமா சவுத்ரியை மேற்கோள் காட்டி நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு சொல்வது கவனத்துக்குரியது.

பெருகிவரும் தீவிரவாதச் சூழலில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பின் என்னதான் வழி? விஞ்ஞானபூர்வமான புலனாய்வு என்பதுதான் ஒரே வழி. கிரிமினல் குற்றப் புலனாய்வு என்பது ஒரு அறிவியல். இன்று அது பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீவிரமாக முயன்றால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. ஆனால் மதுரையில் என்ன நடக்கிறது? முறையான புலனாய்வு நடை பெறுவதே இல்லை. நாங்கள் விசாரித்தவர்களில் ஒருவர் சொன்னது போல பெரும்பாலான நேரங்களில் அவர்கள் செல் போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது. இது ஏன்?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முதற்படியாக நாம் இதுவரை கண்டவற்றைத் தொகுத்துக் கொள்வோம்?

1. இந்த 17 குண்டுவெடிப்புகளும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. வெறும் பட்டாசு வெடிக் குண்டுகள்.

2. ஐந்து ஆண்டுகள் ஆகியும் வெறும் ஐந்து வழக்குகளில்தான் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3. வழக்கு விசாரணையில் ஏகப்பட்ட குழப்பங்களும் முரண்களும் உள்ளன. ஒரு புலனாய்வு முகமை குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் இன்னொரு புலனாய்வு முகமை அதைத் தடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

4. ADSP மாரிராஜன், ADSP கார்த்திகேயன், தலைமைக் காவலர்கள் மாரியப்பன், விஜய பெருமாள் ஆகியோருக்கும் நகர காவல்துறைக்கும் இடையில் முரண் உள்ளது.

5. மேற் குறிப்பிட்ட இந்த நால்வர் குழு தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார்கள். விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் அப்படி ஒருவரிடம் பணம் பெற்றுள்ளது இன்று உறுதியாகியுள்ளது.

6. இன்று வழக்கு பதியப்பட்டவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்பதை வெளிப்படையாக ஒரு அதிகாரி ஒத்துக் கொள்கிறார்.

7. வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அ) இமாம் அலி காலகட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுப் பின் இப்போது குடும்ப வாழ்க்கை, தொழில் என வாழ்ந்து கொண்டிருப்போர் ஆ) ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் இருப்போர் இ) காவல்துறையுடன் நேரடியாக முரண்பட்டோர் ஈ)மேலே சொன்ன இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் தவிர உ) முற்றிலும் எந்த அரசியலிலும் தொடர்பில்லாத அப்பாவிகள் என அவர்களை அடையாளம் காண முடிகிறது.

8. முன்னதாக வழக்குகளில் சம்பந்தப்பட்டுச் சிறை சென்றவர்கள் ஆயினும் அவர்களில் பலருக்கும் இப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு இல்லை. பெரும்பாலும் அவை பொய் வழக்குகள்.

9. அல்முத்தகீம் ஃபோர்ஸ் எனும் அமைப்பைக் காரணம் காட்டி உ.முகமது அலி ஜின்னா போன்ற வழக்குரைஞர்கள் சிக்கலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் அப்படி ஒரு அமைப்பு செயல்படுவதற்கான சான்றுகள் இல்லை. ஒருமுறை தமுமுக பிரமுகர் ஒருவரது லெட்டெர் பேடில் SIT தலைமைக் காவலர் மாரியப்பன் என்பவரே ‘அல்முத்தஹீம் ஃபோர்ஸ்’ குறித்து ஒரு புகார் டைப் செய்து வந்து தந்து அனுப்பச் சொன்னர் என நாங்கள் சந்தித்த முகமது அலி கூறினார்.

10. வழக்குகளில் தண்டிக்கப்பட்டு வெளி வந்து திருமணம் தொழில் என யாரும் திருந்தி வாழ காவல்துறை அனுமதிப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் உளவு சொல்வதற்கும் பிற சட்ட விரோத காரியங்களுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

11. ரியல் எஸ்டேட் முதலான சிக்கலான தொழிலில் ஈடுபடுவோர்கள் காவல்துறையினரால் எளிதில் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் பழிவாங்கப்படக் கூடியவர்களாகவும் ஆகிறார்கள்.

12. SIT முதலிய சிறப்புப் படைகளைத் தக்க வைத்துப் பலன் பெறுவதற்கும், பதவி உயர்வு, பணப் பரிசுகள் முதலியவற்றைப் பெறுவதற்கும் காவல் துறையில் சிலருக்குத் தொடர்ந்து இந்த மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தேவைப்படுகின்றன.

13. இந்தத் “தீவிரவாதிகள்” என முத்திரை குத்தப்படுபவர்களில் ஒருவரான முகமது அலியுடன் அண்ணன் தம்பி உறவுமுறையுடன் செல்போனில் ADSP மாரிராஜன் ‘சாட்’ செய்துள்ளதைக் கண்டோம். ஆனால் அதே அண்ணன் தம்பிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது ஏராளமான ஆயுதக் காவலர்கள் புடை சூழ அவர்களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் இவர்கள் பீதி ஊட்டுவதைக் காணலாம்.

14. வழக்கு விசாரணை தவறாகச் செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமே என கண்காணிப்பாளர் ஷைலேஷ் யாதவ் அவர்கள் சொன்ன பதில் மிகவும் பொறுப்பற்ற ஒன்று. வழக்கு என போடப்பட்டுச் சிக்க வைக்கப்பட்டால் இத்தகைய வழக்குகளில் பிணையில் வெளிவருவது எளிதல்ல. இதனால் அவர்களின் எதிர்காலமும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் குற்றவாளிகளின் பிள்ளைகளாகக் காணப்படும் கொடுமையும் நிகழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூகமே இத்தகைய வழக்குகள் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு சமூகமாகக் கட்டமைக்கப்படுகிறது.

15. இந்தக் காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டாலும், முரண்பட்டுக் கொண்டாலும் ஒரு அம்சத்தில் மிகவும் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். நெல்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு தீவிரவாதச் சமூகமாகக் கட்டமைப்பது என்கிற அம்சம்தான் அது. காவல்துறையினர் மத்தியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை சமூக ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மை குறித்த உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் (sensitization programme) ஒன்றை நிறைவேற்றுவது அவசியமாகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தலித் பிரச்சினைகளிலும், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினைகளிலும் தமிழகத்தில் இத்தகைய பயிற்சிமுகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

எமது முடிவுகளும் கோரிக்கைகளும்

1. இந்த வெடிகுண்டு வழக்குகள் 17 லும் இங்குள்ள பல்வேறு விசாரணை முகமைகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெரும்பான்மையோருக்கு இந்தக் குற்றங்களில் தொடர்பு இல்லை.

2. இமாம் அலி காலத்திலிருந்து மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என தமிழகக் காவல்துறை மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கிப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பக்ருதீன் போன்றவர்கள் கைது செய்யப்பட்ட பின்னும் இன்னும் அங்கு ஆபத்து உள்ளது என ஒரு புனைவை உருவாக்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதுவரை மயில்வாகனன் – மாடசாமி டீம் இப்பகுதி இளைஞர்களைச் செய்த கடும் சித்திரவதைகள் எல்லாம் நியாயமானவைதான் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆகியன இந்தப் பொய்வழக்குகளின் நோக்கங்களாக் உள்ளன. இதன் மூலம் ஒரு சமூகப் பிரிவின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பும் கோபமும் ஏற்படுவது பற்றியும், இது சமூக ஒற்றுமையைக் குலைப்பது பற்றியும் காவல்துறை இம்மியும் கவலைப்படுவதில்லை. ADSP மாரிராஜன், கார்த்திகேயன், மயில்வாகனன் ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் விஜயபெருமாள், மாரியப்பன் போன்றோரின் சார்பு நிலை மற்றும் பொய் வழக்குகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற துயரங்களை. உருவாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இக்குழு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.

3. காவல்துறை மற்றும் உளவுத்துறையுடன் முஸ்லிம்கள் கொண்டுள்ள வெளிப்படையான மற்றும் இரகசியமான தொடர்புகள் இறுதியில் அவர்களுக்கும் அவர்களின் சமுதாயத்திற்கும் உலை வைப்பதாகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இக்குழு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

4. தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ காவல்துறையினர் அனுமதிக்காத நிலை மிகவும் அநீதியானது. இதை வன்மையாக இக்குழு கண்டிக்கிறது.

5. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் உள்குத்து வேலைகள் நடப்பது அதிகாரபூர்வமாக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் அம்பலப்பட்டுத்தப்பட்ட பின்னும் அதன் அடிப்படையில் ரிட்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் உடனடியாக வழக்குகளைத் திசை திருப்பிக் கொண்டு போகும் நோக்கில் காவல் துறையின் ஒரு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு நடவடிக்கைதான் பிரான் மலை வெடிகுண்டு வழக்கு. முற்றிலும் அப்பாவியான அப்பாஸ் மைதீன், முபாரக் என்கிற இரு நபர்கள் இதில் பலியாக்கப்பட்டுள்ளனர். வழக்கைத் திசை திருப்பும் நோக்குடன் ADSP மாரி ராஜனே அவர்களின் வாக்குமூலம் என ஒன்றைத் தயாரித்து அவரை மிரட்டிக் கையொப்பம் பெற்றுள்ளார். அவரால் குறி வைக்கப்பட்ட நெல்பேட்டை இளைஞர்கள் பலரும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது குறித்து ADSP மாரிராஜன் உள்ளிட்ட குழுவினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் பதவியில் உள்ள ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

7. இந்தப் 17 வழக்குகளையும் தமிழகக் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் இந்த வழக்கு விசாரணை முழுமையையும் உடனடியாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்ற வேண்டும்.

பேரழிவு ஆயுத வணிகம்

(‘இளைஞர் முழக்கம்’ இதழ் மார்ச் 2011 மற்றும் ஜூன் 2011 ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரை)

உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என இளம் தோழர்கள் என்னிடம் கேட்டபோது என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ‘உலகம்’ ‘ஆயுதம்’, வணிகம் என்கிற மூன்று சொற்களில் முதல் சொல் மட்டுமே இன்றைய நிலையை விளக்க உதவும் என எனக்குத் தோன்றியது. இன்றைய உலகின் மூலை முடுக்குகள் வரை ஆயுத வணிகம் எட்டியுள்ளது. சிறிய கொலை ஆயுதங்கள் முதல் மிகப்பெரிய ஏவுகணைகள், விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை இன்று ஆயுதச் சந்தைகளில் கிடைக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி ஆயுதம் தாங்கிப் போர் செய்கிற குழுக்கள், இயக்கங்கள் யாரும் ஆயுதங்களை வாங்க இயலும். இணையத் தளங்களில் “ஆர்டர்’’ கொடுத்து ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒருவர் வாங்கிவிட இயலும். இந்த வகையில் ‘உலகம்’ என்கிற சொல் அடுத்த கிரகங்களில் நாம் குடியேறாத வரையில் பொருத்தமானதுதான்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி, எறிகுண்டு என்கிற நிலை எல்லாம் தாண்டி இன்று மிகப்பெரிய பேரழிவுகளை கண நேரத்தில் உருவாக்கி கோடிக்கணக்கான மக்களைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் உருவாகிவிட்டன. இன்றைய குறிக்கோள் இத்தகைய பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகத்தான் உள்ளது. எனவே வெறுமனே ஆயுதம் என்று சொல்லாமல் ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம்.

‘வணிகம்’ என்கிற சொல் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவருக்கொருவர் பொருட்களை விற்று, வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்கிற விவகாரமல்ல இது. பல வணிகர்கள் மத்தியில் பொருட்களைப் பார்த்து யாரிடம் வாங்குவது எனத் தேர்வு செய்கிற சுதந்திரமும் இங்கில்லை. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் இவ்வணிகத்தில் ஒரு சிலரே வியாபாரிகள். மற்ற எல்லோரும் வாங்குபவர்கள்தான். ஆக இது ஒரு ஏகபோக வணிகம். ஏகபோகத்திற்கான அத்தனை கொடூரப் பண்புகளும், விளைவுகளும் இதில் வெளிப்படுகிறது. ஆக இதனை ‘உலகப் பேரழிவு ஆயுத ஏகபோக வணிகம்’ (Global weapons monopoly) எனச் சொல்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

இராணுவச் செலவுகளுக்கே உலகம் இன்று ஆண்டொன்றுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. உலக மொத்த உற்பத்தில் சுமார் மூன்று சதம் இப்படிச் செலவழிக்கப்படுகிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை “பாதுகாப்பு ’’க்கென செலவழிப்பதை அறிவோம். 2006ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நூறு அழிவாயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 315 பில்லியன் டாலர்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் பனிப்போர் முடிவடைந்ததை ஒட்டி கொஞ்ச காலத்திற்கு அழிவாயுத விற்பனை குறைந்திருந்தது. எனினும் விரைவில் சாவு வணிகங்கள் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்கிற சொல்லாடலையும் அதையட்டி உலகம் மாறிப்போன கதையையும் நாம் அறிவோம். எனவே மறுபடியும் 2003 தொடங்கி அழிவாயுத விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் காங்கிரசுக்கான ஆய்வுச் சேவை (Congressional Research Service) அவ்வப்போது அழிவாயுத வணிகம் குறித்து ஆய்வறிக்கைகளை அளித்து வருகிறது. இணையத் தளங்களில் இவற்றைக் காணலாம். 2008ஆம் ஆண்டு அறிக்கையின்படி அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அழிவாயுத விற்பனை ஒப்பந்தங்களின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர். இதில் அமெரிக்காவின் பங்கு 37.8 டிரில்லியன் டாலர். அதாவது மொத்தச் சாவு வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 68.7 சதமாகும்.

சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் (1990) மொத்த அழிவாயுத விற்பனை 32.7 பில்லியன் டாலராகவும், இதில் அமெரிக்காவின் பங்கு 10.7 பில்லியனாகவும் இருந்தது. எவ்வளவு வேகமாக அமெரிக்கா இந்த அழிவாயுத விற்பனையில் வளர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

அழிவாயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிற்கிற நாடுகளாக உள்ளவை ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், சீனா, இஸ்ரேல், நெதர்லான்ட், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, உக்ரேன், கனடா ஆகியன. இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்கிற அழிவாயுத வணிகம் மொத்தத்தில் 32 சதம். சாவு வணிகத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு ஏகபோகம் கொண்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அழிவாயுதங்களை யார் அதிகம் வாங்குகின்றனர்? எந்தெந்த நாடுகள் இத்தகைய அழிவாயுத இறக்குமதிக்கு அதிகம் செலவிடுகின்றன? இந்த விஷயத்தில் பிற எல்லா நாடுகளையும் ‘பீட்’ பண்ணி நம்பர் ஒன்னாக நின்று அமெரிக்க விசுவாசம் காட்டிக் குழைகிற நாடு இந்தியா.

2000 த்தில் மட்டும் 911 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழிவாயுதங்களை அது இறக்குமதி செய்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரித்து 2003இல், 2802 பில்லியன் டாலராகவும், பின்பு சற்றுக் குறைந்து, மீண்டும் 2007இல், 2179 பில்லியன் டாலராகவும், 2009இல், 2116 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிச் செலவை 158 பில்லியன் டாலரிலிருந்து 2000 த்தில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2009ல் இது 1146 பில்லியன் டாலராக இருந்தது. பிற முக்கியமான ஆயுத இறக்குமதி நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிரீஸ், தென்கொரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், சீனா, நார்வே ஆகியன. சீனாவைப் பொருத்தமட்டில் படிப்படியாக தனது அழிவாயுத இறக்குமதிச் செலவை 2015 பில்லியன் டாலரிலிருந்து (2009)ல் 595 பில்லியன் டாலராக 2009 ல் குறைத்துள்ளது. அதுவே ஒரு ஆயுத ஏற்றுமதி நாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

பஞ்சைப் பராரி நாடுகளெல்லாம் இத்தகைய அழிவு ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகைகளைப் பார்க்கும்போது நமக்குப் பகீரென்கிறது. அமெரிக்க இராணுவ மையமான பென்டகனின் தரவுகளின்படி கம்போடியா (3.04 லட்சம் டாலர்), கொலம்பியா (256 மில்லியன் டாலர்), பெரு (16.4 மில்லியன் டாலர்), போலந்து (79.8 மில்லியன் டாலர்) ஆகியன அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கின்றன. பென்டகனின் இன்னொரு அறிக்கையின்படி 2008இல் அமெரிக்காவுடன் அழிவாயுத இறக்குமதி ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளான, சவூதி அரேபியா (6.06 பில்லியன் டாலர்), ஈராக் (2.5 பில்லியன்), மொராக்கோ (2.41 பில்லியன்), எகிப்து (2.31 பில்லியன்), இஸ்ரேல் (1.32 பில்லியன்), ஆஸ்திரேலியா (1.13 பில்லியன்), தென்கொரியா (1.12 பில்லியன்), பிரிட்டன் (1.1 பில்லியன்), இந்தியா (1 பில்லியன்), ஜப்பான் (840 மில்லியன்).

1987ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் கோஸ்டாரிகாவின் குடியரசுத் தலைவருமான ஆஸ்கார் ஏரியஸ் சான்செஸ் கூறினார். “கல்வி, வீட்டு வசதி, மருத்துவம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு அழிவாயுதங்களில் முதலீடு செய்வதென ஒரு நாடு முடிவு செய்யுமானால் ஒரு தலைமுறையினரின் வாய்ப்புகளையும், நல்வாழ்வையும் அது புறந்தள்ளுகிறது என்றே பொருள். இந்தப் புவியில் வாழ்கிற ஒவ்வொரு பத்து மனிதருக்கும் ஒரு கொலை ஆயுதத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் நம்மால் சாத்தியம்தான் என்றாலும் பசியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. மொத்த அழிவாயுத வணிகத்தில் முக்கால் வாசியை பின் தங்கிய நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நமது சர்வதேச நெறிமுறைகள் வழிவகுக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ஏதுமில்லை. இந்த ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பொறுப்புகள் எதையும் சர்வதேச நெறிமுறைகள் ஆயுத விற்பனை நாடுகள் மீது சுமத்துவதுமில்லை.’’

ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா

 

அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இரண்டு வழிகளில் ஆயுத விற்பனை செய்கின்றனர். முதலாவது அயல் இராணுவ விற்பனைகள் அமெரிக்க இராணுவ கேந்திரமான பென்டகன் ஊடாக இரு அரசுகளுக்கிடையே நேரடியாக பேரம்பேசி விற்கப்படுவது இது. மற்றது நேரடி வர்த்தக விற்பனைகள். இதில் ஆயுத கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாடுகளுடன் பேரம்பேசி அரசியல் உரிமம் பெற்று விற்பது. இந்த பேரத்தில் ஏராளமான ஊழல்களுக்கு இடமுண்டு.

இது தவிர அமெரிக்க அரசு தனது இராணுவ ஆயுதக் கிடங்குகளிலிருந்து மிகக் குறைந்த விலையிலும். சமயங்களில் இலவசமாகவும் தனக்கு வேண்டிய நாடுகளுக்கு கொடுப்பதும் உண்டு. தேவைக்கு அதிகமான பாதுகாப்புப் பொருட்களாக ஒதுக்கப்பட்டவை என இதற்கு பெயர். இது தவிர பிறநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சிகள் அளிப்பது பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சி எடுப்பது என்பதெல்லாம் இன்று அதிகமாகியுள்ளதை நாம் அறிவோம். செப்டம்பர் 11, 2011க்கு பிறகு இவை இன்னும் அதிகமாகியுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி,ஏ,ஈ சிஸ்டம்ஸ், போயிங், ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எஃப் ஆகிய ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள். இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். ஏழாவது மட்டுமே பிரான்சுடையது.

“சிறு ஆயுத விற்பனை” பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர், துணை இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரும் கூட அதிகம் பயன்படுத்தும் ஆயுதங்களான கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல்கள்) ஃரைபில்கள், எந்திரத் துப்பாக்கிகள், தாக்குதல் ரைப்பில்கள், எறிகுண்டு வீசிகள் எடுத்துச்செல்லக்கூடிய டாங்கி மற்றும் விமானங்களைச் சுடும் பீரங்கிகள் முதலியவை பெரிய அளவில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. இவற்றை ரொம்பவும் விலை மலிவாகவும், எளிதாகவும் யாரும் வாங்கக்கூடிய நிலை இன்று உள்ளது. அரசுகள் மட்டுமின்றி போராளிக் குழுக்கள், மாஃபியா கும்பல்கள், கடற் கொள்ளையர்கள், கடத்தல்காரர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள் எல்லோரும் இத்தகைய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கார்ப்பரேட்டுகள் இந்த விற்பனையைச் செய்கின்றனர். அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை.

உலகம் என்பது இன்று மிகப்பெரிய போர்களின் களமாக உள்ளது. 36 நாடுகளில் நடைபெறும் 40 ஆயுதப் போராட்டங்களுடன் 21ம் நூற்றாண்டு விடிந்தது 2000யில் வெளியிட்ட கணக்கு) சிவில் யுத்தம் (உள்நாட்டுப் போர்) நடைபெறும் பல நாடுகளில் போரே வாழ்வாக மாறியுள்ளது. கண்முன் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களைப் பார்த்தவர்கள் நாம். உள்நாட்டுப் போர் என்பது உன்னத அரசியல் இலட்சியங்களுக்காக மட்டுமின்றி, நிதி சேகரிப்பதற்காக, போரால் கல்வி இழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக என்றெல்லாம் போருக்குப் பன்முகப் பரிமாணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதலிய பகுதிகளில் குழந்தைகள் முதலில் அறிந்து கொள்ளும் பொருட்களில், தெரிந்துகொள்ளும் மொழிகளில் பல வகைத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் ஆகியன அடங்கும். இத்தகைய சூழலில் திருட்டு ஆயுத வணிகம் பல்கிப் பெருகியுள்ளதை விளக்க வேண்டியதில்லை. உலகில் மிகப் பெரிய அளவில் இன்று கள்ள ஆயுத வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதம் பற்றி இன்று வாய் கிழியும் அமெரிக்கா ஏகப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கிய கதைகளை நாம் அறியலாம். கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் கூட இப்படி வளர்க்கப்பட்டவர்தான். சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒசாமா உள்ளிட்ட முஜாஹிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா. நாடுகளுக்கிடையே சோதனை இல்லாமல் பெரிய அளவில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1985ல் இத்தகைய ஆப்கன் முஜாஹிதீன்களை வெள்ளை மாளிகையில் வைத்துப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீசன், அமெரிக்காவை உருவாக்கிய நமது தந்தையர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று இன்னொரு நாட்டு எல்லைக்குள், அந்நாட்டின் அனுமதியின்றி நுழைந்து ஒசாமாவையும், கூட இருந்தவர்களில் சிலரையும் சுட்டுக் கொன்று ஒசாமாவின் உடலைக் கடலில் தூக்கி வீசி எறிந்திருக்கிறது அமெரிக்கா இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது ஒசாமாவை உயிருடன் பிடித்தப்பின் சுட்டதாகச் செய்தி ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன், நடேசன், புலித்தேவன் முதலியோரை நாங்கள் இப்படிக் கொன்றதை மட்டும் பெரிது படுத்துகிறீர்களே என்கிற ரீதியில் இலங்கையில் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியும் உள்ளார். ஒருவரை ஒருவர் உதாரணம் காட்டித் தத்தம் கொடுமைகளையும் சிவிலியன்களுக்கு (பொதுமக்களுக்கு) எதிரான தாக்குதல்களையும் நியாயப்படுத்தி கொள்வதற்கு இன்னொரு பெயர் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்.

1989முதல் 1998க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆப்பிரிக்க இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகள் அளித்த வகையில் மட்டும் அமெரிக்கா 227 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. பயனடைந்த நாடுகளில் பல உள்நாட்டு மக்களைக் கொன்று குவித்தவை. அவற்றில் சில காங்கோ, அங்கோலா, புருண்டி, ருவாண்டா, சூடான், உகாண்டா மற்றும் ஸிம்பாப்வே.

இவை தவிர இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல், சைனா, தய்வான், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் அமெரிக்கா, ப்ரான்சு, பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி முதலிய நாடுகள் ஆயுதங்களை விற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் உள்நாட்டுப் போராளிகள், சிறுபான்மை மொழி மற்றும் இனத்தினர், மதத்தினர், பழங்குடியினர் ஆகியோரின் மீது ஆயுதத்தாக்குதலை நடத்திய, நடத்துகிற நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது,ஆயுத விற்பனை செழிப்பதற்கு போர்கள் அவசியம். போர்களற்ற அமைதியான உலகை ஆயுத விற்பனையாளர்களால் சகித்துக்கொள்ள இயலாது. பல நாட்டு இராணுவங்களுக்கும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிப்பதில் இந்தப் பின்னணியும் சேர்ந்து கொள்கிறது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அரசு படைகளுக்கும், ருவாண்டா மற்றும் உகாண்டாவில் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் அமெரிக்க அரசு பயிற்சி அளித்தது. சட்டபூர்வமான ஆயுத விற்பனை தவிர சட்டபூர்வமற்ற இந்த ஆயுத உதவி மற்றும் விற்பனை சென்ற இதழில் நான் முன்வைத்த புள்ளி விவரங்களில் அடங்காது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாத நாடுகள் மனித உரிமை மீறல்கள் புரிகிற நாடுகள் ஆகியவற்றிற்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் (1999ம் ஆண்டு அமெரிக்க சர்வதேச ஆயுத விற்பனை நடத்தை விதி ஆகியன வரைமுறைகளை விதித்துள்ளதாம்) இவை அனைத்தும் ஏட்டோடு சரி, துருக்கி, இந்தோனேசியா, சவூதி, இலங்கை உட்பட மனித உரிமை மீறல்கள் புரிந்த பல நாடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி உதவிகளை செய்துவந்துள்ளன.

இன்னொன்றும் நம் கவனத்திற்குரியது மிகப்பெரிய அளவு ஊழல்கள் நடைபெறும் துறையாகவும் ஆயுத விற்பனை உள்ளது. இத்துடன் இணைந்த தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசியம் முதலான சொல்லாடல்கள் ஊழலை ஊற்றி வளர்க்கின்றன. மிகப்பெரிய அளவில் குவட்ரோஷி போன்ற இடைத்தரகர்கள் (போபர்ஸ் ஊழல்) இதில் இலாபம் குவிக்கின்றனர். கார்ப்பரேட்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி யுத்த பீதியை ஏற்படுத்திப் பரப்புவது முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ சிவில் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, எதிரி நாட்டு இராணுவ முன்னேற்பாடுகள் குறித்துப் பொய்யான தகவல்களை பரப்பி போட்டியை ஊக்குவிப்பது, உள்நாட்டு ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து போருக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கிடையே இரகசிய கூட்டுகளை உருவாக்கி ஆயுதங்களின் விலையை அபரிமிதமாக உயர்த்துவது முதலியன ஆயுத விற்பனையை அதிகரிக்க கார்ப்பரேட்டுகள் மேற்கொள்ளும் உத்திகள்.

இது ஏகாதிபத்திய விரிவாக்க அரசியலுடன் தொடர்புடைய விஷயமாக இருப்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் மானியங்களை அரசுகள் வழங்குகின்றன. ஆயுத விற்பனை தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் விதிக்கப்படுகிற நிபந்தனைகள் தேசியப் பாதுகாப்பு என வருகிற போது பொருந்தாது என்கிற பிரிவு சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. போலந்து அரசிற்கு விமானங்கள் வழங்கியதற்கு லாக்கதீடு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் மானியம் வழங்கியது சமீபத்திய எடுத்துக்காட்டு. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களின் முக்கிய பணியே தமது நாட்டிலுள்ள ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக செயல்படுவதுதான். இந்தியாவில் தற்போதைய அமெரிக்க தூதர் இன்று பதவி விலகியுள்ளார். ஒரு முக்கிய ஆயுத பேரம் ஒன்றில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒன்று பயனடையாமல் போனதே இதற்கு காரணம் எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

2011 செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா பிறநாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வது மற்றும் ஆயுத உதவிகளைச் செய்வது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பாதுகாப்பு தகவல் மையம் கூறுகிறது. மிகப்பெரிய பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள இந்நிறுவனம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதாக வாக்களித்துள்ள நாடுகளுக்கு வேறெப்போதையும் விட அதிக அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் முதலான அடிப்படையில் ஆயுத விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா பெரிதும் திருத்தி அமைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2002 பிப்ரவரி 4 தேதி இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உதவி செய்த நாடுகளுக்கு இவை இது தொடர்பாக செய்த செலவுகளை ஈடுகட்ட 390 மில்லியன் டாலர்களையும் வேறுசில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக 120 மில்லியன் டாலர்களையும் பிற சட்ட விதிகளின் தடையை மீறி அளிக்க பாதுகாப்பு துறைக்கு ஒப்புதலையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை அளித்துள்ளது.

திருட்டுத்தனமாக ஆயுதங்களை உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்து அதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் இந்நாடுகள் ஈடுபடுவதற்கு புரூலியா விவகாரம் தற்போதைய நடைமுறைச் சாட்சியாக உள்ளது. மேற்குவங்க இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்கு நரசிம்மராவ் அரசு துணைபோகியுள்ளதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆக்ஸ்டாம் இன்டர்நேஷனல் சிறு ஆயுதவிற்பனை தொடர்பான சர்வதேச வலைப்பின்னல் முதலான அமைப்புகள் ஆயுத விற்பனைக் கட்டுபாடுகளை ஏற்படுத்துவதற்கான பன்னாட்டு ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது அமெரிக்கா. புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவரை இது தொடர்பான பேச்சு வார்த்தைகளிலே கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒபாமா ஆட்சிக்கு வந்த பின் மாறியுள்ள சூழல்களின் விளைவாக வேறு வழியின்றி சென்ற 2009 அக்டோபர் 15 ல் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா கலந்து கொண்டது.

எனினும் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஹில்லாரி கிளின்டன் இது தொடர்பான எந்த முடிவும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடனேயே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிற பிரிவை மேற்குறித்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். அதாவது எந்த ஒரு நாடாவது மறுப்பு தெரித்தால் அந்த முடிவு நடைமுறைக்கு வராது. இது உள்ளிருந்து கெடுக்கும் வேலை என பல நாடுகள் பேசியதன் விளைவாக இறுதியாக ஹில்லாரி இதை வற்புறுத்தவில்லை. 2012க்குள் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இன்று உள்ளது. இதற்கென 2010 ஜூலையில் ஒரு தயாரிப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் இதற்கெதிராக பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றையும் நடத்தினர். ஆயுதங்கள் குற்றசம்பவங்களுக்கு பயன்படுத்துமானால் அந்த நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என நிபந்தனை விதித்தால் அது அமெரிக்காவின் இரண்டாம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு துப்பாக்கியை குற்றச் செயலுக்கு பயன்படுத்தினால் அந்த நாடே அதற்கு பொறுப்பு. இது தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பறிக்கும் எனவும் ஆயுதப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். தொலைகாட்சி தொடர்கள் தடைசெய்யப்படுதல் என்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருக்கும் எனவும்! கூறி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடக்கூடாது என இவர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பல மூன்றாம் உலக நாடுகள் ஏழ்மையிலும், பஞ்சத்திலும், கடனிலும் அமிழ்த்தப்படுவதற்கு ஆயுத விற்பனையே காரணம். ஆயுத விற்பனைச் சந்தையாக இன்று மூன்றாம் உலக நாடுகளே உள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தில் 19 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. பொது நலத்திற்கு வெறும் ஒரு சதம், கல்விக்கு 5 சதத்திற்கும் குறைவே என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தான் இதன் அபத்தம் புரியும். ஆனால் இதை யாரும், எதிர்கட்சிகளும் கூட வலுவாக எதிர்க்கவில்லை. தேச பாதுகாப்பில் அக்கறையில்லை என்கிற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற அச்சமே காரணம்.

தேசபாதுகாப்பு என்பது இராணுவத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகிவிடுவதில்லை. பகைக்கான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே தேசபாதுகாப்பை உறுதி செய்யமுடியும். தேவையற்ற தேசிய வெறி, பேச்சுவார்த்தைகளை நம்பியிராத வல்லரசு வெறி ஆகியவையே போர்களுக்கும், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் காரணமாகின்றன. அரசியல் தீர்வு அண்டை நாடுகளுடன் சமாதானம் ,ஆக்கிரமிப்பு படைகளை திரும்பப்பெறுதல் ஆகிய முழக்கங்கள் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும் போதே அது வெற்றி பெறும். ஆயுத விற்பனையிலும் உலக மேலாதிக்கத்திலும் முன்னிற்கும் அமெரிக்காவை நம்பி பிழைக்கும் அரசுகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதொன்றே நமது இன்றைய உடனடிப்பணியாக இருக்க முடியும்.