ஃபிடெல் காஸ்ட்ரோ 1926 – 2016

(இன்று வெளியாகியுள்ள கட்டுரை. ஒரு வாரத்திற்கு முன்பு எழுதப்பட்டது)

எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் கியூபாவுக்குள் நுழைந்த (மார்ச் 21, 2016) முதல் அமெரிக்க குடியரசுத் தலைவரான ஒபாமா இன்றைய கியூபத் தலைவர்  ராவ்ல் கேஸ்ட்ரோ விடம், “கியூபாவில் மனித உரிமைகளுக்கு உரிய மதிக்களிக்கப் படுவதில்லையே..?” என்றார்,

இந்த மாதிரிக் கேள்விகள் பலமுறை ஃபிடெலிடமும் கேட்கப்பட்டவைதான். அப்போதெல்லாம் அவர் சொன்னது: “இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு (அமெரிக்காவுக்கு) என்ன தகுதி இருக்கிறது? கோடீஸ்வரர்களும் பிச்சைக்காரர்களும் அருகருகே வசிக்கும் நாடு உங்களுடையது; அங்கே பூர்வகுடிகள் கொல்லப்படுகின்றனர்; கருப்பர்கள் ஒதுக்கப்படுகின்றனர்; பெண்கள் விபசாரிகளாக்கப் படுகின்றனர்; சிக்கனோக்கள், போர்டாரிகோக்கள், லத்தீன் அமெரிக்கர்கள் இழிவு செய்யப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர்….. உலக அளவில் கவிழ்ப்பு வேலைகளைச் செய்ய ஒரு சி.ஐ.ஏ, சொத்துக்களை அழிக்காமல் உயிர்களை மட்டும் கொல்லும் நியூட்ரான் குண்டுகளைச் செய்ய ஒரு பென்டகன்…. (உங்களுக்கு மனித உரிமைகளைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?)”

உலகின் பலமிக்க வல்லாதிக்க அரசான அமெரிக்காவிலிருந்து 90 மைல் தொலைவில் இருக்கும் கியூபா, எண்ணை வளமோ இல்லை வேறு பெரிதான மூல வளங்களோ இல்லாத ஒரு கரீபியத் தீவு. அதில் தன் பலம் கொண்ட மட்டும் அந்த “யாங்கி ஏகாதிபத்தியத்தை” 60 ஆண்டு காலமாக  எதிர்த்துக் கொண்டு ஒரு சோஷலிச பாணி அரசை அமைத்து வெற்றி கண்டவர் ஃபிடெல் காஸ்ட்ரோ. அரும்பி வந்த அந்த அரசுக்கு  முதல் முப்பதாண்டுகள் சோவியத் யூனியன் பக்க பலமாக இருந்தது உண்மைதான். ஆனால் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கிழக்கு ஜெர்மனியைப் போலவோ இல்லை யுகோஸ்லேவியா அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போலவோ அது கலகலத்து நொறுங்கி ‘நேட்டோ’ போன்ற முதலாளித்துவக் கூட்டணிகளில் சரண் புகவில்லை.

இதை எப்படிச் சாதித்தார் காஸ்ட்ரோ?

இதைப் புரிந்து கொள்ள கியூபப் புரட்சி குறித்த சில அடிப்படைகளையும், அது மற்ற சோஷலிசப் புரட்சிகளிலிருந்து வேறுபட்ட அம்சங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் என்பது பெரும்பாலும் ஆட்சி கவிழ்ப்புகளின் ஊடாகவே நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு கவிழ்ப்பின் மூலமாக (1952) ஆட்சிக்கு வந்த ஜென்ரல் பாடிஸ்டா வின் ஊழல் மிக்க சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஒரு படை திரட்டி  கியூபாவில் உள்ள மோன்கேடோ பாரக்சை ஃபிடெல் தாக்கியபோது அவருக்கு வயது 24 தான். ஒரு வசதியான நிலவுடமையாளரின்  மகன். வழக்குரைஞர் படிப்பை முடித்தவர்.

அந்தத் தாக்குதல் படு தோல்வியில் முடிந்தது. அனைவரும் கைதானார்கள். பலர் கொல்லப்பட்டனர். ஃபிடெல் மன்னிப்புக் கோரவில்லை. உங்கள் சட்டம் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரட்டும். ஆனால் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்கிற அவரது வழக்குமன்ற உரை புகழ்பெற்ற ஒன்று. தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட ஒன்று.

இரண்டாண்டுகளுக்குப் பின் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் அர்ஜென்டினாவைச் சேர்ந்த அந்த இளம் மருத்துவர் சேகுவாரா ஃபிடெலிடம் ஈர்க்கப்பட்டு வந்து இணைந்தார். அங்கிருந்தவாரே படை ஒன்றைத் திரட்டி 1956 டிசம்பரில் ஒரு ஓட்டைக் கப்பலில் கடலைக் கடந்து கிரான்மா வைத் தாக்கினார்கள். சிலர்  மட்டுமே தப்பின.ர் சியாரா மேஸ்ட்ரோ மலைத் தொடர் அவர்களுக்கு தஞ்சம் அளித்தது. காயங்களை ஆற்றிக் கொண்டு அவர்கள் கொரில்லாப் போருக்குத் தயாரானார்கள். விவசாயிகளின் ஆதரவு அவர்களுக்குப் பெரிய அளவில் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வலிமை அடைந்தார்கள். அவர்கள் வலிமை அடைய அடைய பாடிஸ்டா அரசுக்கு எதிரான இயக்கங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இவர்களின் கீழ் வந்தன. கடைசியாக (1958) வந்து சேர்ந்தவர்கள் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

ஆம். தொடக்கத்தில் மட்டுமல்ல. அதற்குப் பின்னர் பல காலமும் கூட ஃபிடெல் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. ராவ்ல் கேஸ்ட்ரோவும் சேயும்தான் கம்யூனிஸ்டுகள் மீதும் சோவியத் மீதும் அவருக்கு நட்பையும் நெருக்கத்தையும் தூண்டினார்கள் என்பர். புரட்சிக்கு முன் அங்கிருந்த பல கட்சிகளில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே கருப்பின மக்களையும் கட்சியில் உறுப்பினர் ஆக்கியுள்ளதைச் சுட்டிக் காட்டி ஃபிடெலை வற்புறுத்தி இணங்க வைத்தனர் என்றும் சொல்வதுண்டு.

எனினும் ஆகத் தொலைவில் இருந்த சோவியத்யூனியன் பக்கம் ஃபிடெல் சாய்வதற்கு அவரது இயல்பான அமெரிக்க மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒரு காரணமாக இருந்தது. ஆட்சியைக் கைப்பற்றிய கையோடு பெரும் எஸ்டேட்கள் எல்லாவற்றையும் நாட்டுடமை ஆக்கினார். ‘எஸ்ஸோ’ போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உட்படப் பலவும் நாட்டுடமை ஆக்கப்பட்டன. நாடெங்கும் ஏராளமான பள்ளிகள், மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. கியூபா முழுவதும் 600 மைல்கள் நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. குடிநீர் மற்றும் சுகாதார  நடவடிக்கைகளுக்கு 300 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 800 வீடுகள் கட்டி எளிய மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகங்கள் அமைக்கப்பட்டன. 993 ஏக்கர் நில உச்சவரம்பு அறிவிக்கப்பட்டு 2,00,000 பேர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. அங்கு அப்போது மக்கள் தொகை வெறும் 71 லட்சம்தான் என்பது கவனத்துக்குரியது. (இப்போது 11.42 மில்லியன்).

தனது கொல்லைப்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், குறிப்பாக ஃபிடெலிடமிருந்து விழுந்து சிதறிய யாங்கி ஏகாதிபத்திய எதிர்ப்புரைகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களும் சொத்துக்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டது ஆகியன அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குக் கடுப்பேற்றியதை விளக்க வேண்டியதில்லை. அப்போதைய அமெரிக்கத் தலைவர் டிவைட் ஐசன்ஹோவர் தான் பதவி விலகுமுன் கியூபாவின் புரட்சிக்குப் பிந்திய அரசைக் கவிழ்ப்பதற்காக 13.1 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிச் சென்றார். புதிதாகப் பதவியேற்ற ஜான் எஃப் கென்னடி செய்த மிகவும் அபத்தமான தோல்வியாக முடிந்த்து அந்தக் கவிழ்ப்பு முயற்சி. ஃபிடெல் அரசின் மீது வெறுப்புற்று நாடுகடந்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா விலுள்ள மியாமியில் குடிபெயர்ந்திருந்த கியூபா மக்களைத் தூண்டி ஆயுதங்களும் பயிற்சியும் அளித்து ‘பே ஆஃப் பிக்ஸ்’ எனப்படும் கியூப வளைகுடா மீது தாக்குதல் (1961 ஏப்ரல் 17) தொடுக்கப்பட்டது. முன்னதாக அமெரிக்க சி.ஐ.ஏ விமானத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உலக அளவில் ஏற்படும் கெட்ட பெயருக்கு அஞ்சி விமானத் தாக்குதல் நான்கு நாட்களில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அதை ஒட்டி அந்தப் படையெடுப்பு காஸ்ட்ரோவின் படைகளால் முறியடிக்கப்பட்டு எஞ்சியோர் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பின் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் அமெரிக்கப் படை வீரர்களும் உண்டு.

இந்த அபத்த முயற்சியின் விளைவாக அமெரிக்க அரசு சற்றே பம்மி இருந்த போதும் எந்த நேரத்திலும் அமெரிக்கப் படைஎடுப்புக்குக் கியூபா ஆளாக நேரிடும் அச்சம் மிகுந்திருந்த நிலையில் அன்றைய சோவியத் யூனியன் உதவிக் கரம் நீட்டியது. அமெரிக்காவுக்கு மிக அருகாமையில் ஒரு நம்பிக்கைக்குரிய எதிரி அமைவது அந்தப் பனிப்போர் காலத்திய அதன் தேவைகளில் ஒன்றாக இருந்தது.

அமெரிக்கா துருக்கியில் தன் ஏவுகணைகளை சோவியத்தை நோக்கி நிறுத்திய பின்னணியில் 1962 அக்டோபரில் நிகிதா குருஷேவ் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சோவியத் ஏவுகணைகளை அமெரிக்காவைக் குறிவைத்து கியூபாவில் நிறுத்தினார். ஒரு மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டதாக உலகே அச்சம் கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா பணிந்து வந்தது. இரு வல்லரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கியூபாவுக்கு இடமில்லை என்றபோதும் இரண்டும் தத்தம் ஏவுகணைகளை நீக்கிக் கொண்டன. கியூபா மீது இனி படையெடுப்பு எதையும் மேற்கொள்வதில்லை என அமெரிக்கா வாக்குறுதி அளிக்க வேண்டியதாயிற்று. படை எடுப்பு இல்லாதபோதும் கியூப எதிர்ப்பாளர்களை ஊக்குவிப்பது எப்படியாவது கேஸ்ட்ரோவைக் கொன்று தீர்ப்பது என்பதில் அமெரிக்கா தொடர்ந்து தன் வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தது. கடுமையான பொருளாதாரத் தடையை கியூபா மீது சுமத்தி அதைத் திக்குமுக்காடச் செய்தது. அருகில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை கியூபாவிலிருந்து தள்ளியிருக்கச் செயதது. சிலி தவிர பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூ கட்சிகள் வலுவாக இல்லை என்பது கவனத்துக்குரியது. நிகரகுவா, வெனிசூலா போன்றவற்றில் இடதுசாரிகள் வளர்ச்சி அடைந்ததெல்லாம் பின்னால்தான்.

எனினும் தொடர்ந்து சோவியத் யூனியன் கியூபாவிற்குப் பொருளாதார உதவிகளைச் செய்தது. குறிப்பாக எண்ணை வளமற்றுக் காய்ந்து கிடந்த அதன் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு பீப்பாய் பீப்பாயாக கச்சா எண்ணைகளை வழங்கியது. திரும்பி அந்தக் கப்பல்கள் எந்தப் பொருள்களுமின்றி வெற்றுக் கப்பல்களாகத்தான் போக வேண்டும் என்ற போதிலும் அந்த உதவி தொடர்ந்தது. கியூபாவால் ஏற்றுமதி செய்ய முடிந்தது சர்க்கரை ஒன்றைத்தான்.

கஸ்ட்ரோ இன்னும் கூட முழுமையான சோவியத் ஆதரவாளராகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை. அவரது பாணி சோஷலிசம் லத்தீன் அமெரிக்க தேசியவாதத்துடன் இணைந்து உருமாறிய ஒன்றாக இருந்தது. 19ம் நூ லத்தீன் அமெரிக்க தேசியவாதியான ஜோ மார்டி ஃபிடெலின் ஆதர்சங்களில் ஒன்றாக இருந்தார். 1968 ல் எல்லோராலும் இன்று விமர்சிக்கப்படும் பிரெஷ்னேவ் காலத்திய செக்கோஸ்லேவியப் படையெடுப்பை ஆதரித்த போதுதான் கேஸ்ட்ரோ தன்னை ஒரு சோவியத் முகாம்காரராக உலகின் முன் அடையாளப்படுத்திக் கொண்டார்.

எனினுமவர் இன்னொரு பக்கம் தன் நட்பு மற்றும் உதவிக் கரங்களை பெரு, பனாமா, சிலி போன்ற பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், அல்ஜீரியா, அங்கோலா, எதியோப்பியா முதலான ஆப்ரிக்க நாடுகளுக்கும், வியட்நாம், வட அமெரிகா போன்ற ஆசிய நாடுகளுக்கும் விரித்தார். தன்னை ஒரு மூன்றாம் உலக விடுதலையின் நாயகனாக அடையாளப் படுத்திக் கொண்டார். கியூபாவின் இந்த உதவிகள் பலவாறாக அமைந்தன. எதியோப்பியா மீதான சோமாலியின் (1977-78 ஓகாடன் போர்) தாக்குதலில் சோவியத் யூனியனுடன் சேர்ந்து கியூபா எதியோப்பியாவுக்கு ஆதரவு அளித்தது., அங்கோலா விடுதலைக்காக இடதுசாரிகள் (MPLA) போராடிக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக எதிராக நேட்டோ ஆதரவுடன் தென் ஆப்ரிக்கா மற்றும் ஸெய்ரே நாடுகள் களத்தில் இறங்கின (1975). இடதுசாரிப் போராளிகளுக்கு ஆதரவாக 25,000 கியூப வீர்கள் அங்கோலாவில் இறக்கப்பட்டபோது உலகமே வியந்து நோக்கியது.

இப்படியான இராணுவ உதவிகள் தவிர, இந்த நாடுகள் கொள்ளை நோய்களால் தாக்கப்பட்ட காலங்களில் மருத்துவ உதவியையும்கியூபா மேற்கொண்டது.. பல்வேறு லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகள் கொள்ளை நோய்களால் தாக்கப்பட்டபோது சுமார் 60,000 மருத்துவர்கள் கியூபாவிலிருந்து அனுப்பபட்டனர். பெரும் பொருளாதார நெருக்கடியைக் கியூபா சந்தித்துக் கொண்டிருந்த 2010 லும் கூட ஹைதியை காலரா தாக்கியபோது ஹவானாவிலிருந்து 1200 மருத்துவர்கள் அங்கு சென்றனர். மேற்கு ஆப்ரிகாவை எபோலா வைரஸ் தக்கியதைக் கண்டு (2013- 15) உலகமே அஞ்சியபோது கியூபாதான் மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்பியது. பிரேசிலுக்கு 14,000 மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர்.

மனித உரிமை மீறல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் கியூபாவுடன் இழைவது குறித்த விமர்சனம் நெல்சன் மன்டேலா மீது வைக்கப்பட்டபோது அவர் கூறினார்: “40 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க இனவெறி அரசை ஆதரித்தவர்களுக்கு இந்த விமர்சனத்தை வைக்க யோக்கியதை இல்லை”.

கியூபா சிவப்பு ஹிஸ்பானிய வழிவந்தோரின் நாடு என்ற போதிலும் அங்கு கணிசமாக கருப்பு இனத்தவர்கள் உண்டு அவர்களுக்கு உரிய ஏற்பும் உரிமைகளும் கேஸ்ட்ரோவின் ஆட்சியில் வழங்கப்பட்டன. அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் (civil war) நடைபெற்றபோது கேஸ்ட்ரோ அவர்களுக்கு அளித்த ஆதரவும் அமெரிக்காவிற்கு எரிச்சல் ஊட்டியது. ஐ.நா மாநொடொன்றுக்காக அமெரிக்கா சென்ற போது கருப்பின மக்களின் ஹார்லெம் பகுதியில் அமைந்த தெரசா ஓட்டலில்தான் ஃபிடெல் தங்கித் தன்னை அம்மக்களோடு அடையாளப் படுத்திக் கொண்டார்.

இரண்டு

1991 ல் சோவியத் யூனியன் வீழ்ந்தது. தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கலைந்து வீழ்ந்தன. பெர்லின் சுவரும் நொறுங்கி மண்ணாகியது. இந்த நாடுகள் பலவும் இன்று நேட்டோ படைகளின் தளங்களாகியுள்ளன.ளைந்தப் பின்புலத்தில் கியூபாவுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சோவியத் உதவி முற்றிலுமாக நின்றது. கோர்பசேவுக்குப் பின் ருஷ்ய அதிபரான போரிஸ் யெல்ட்சின் மியாமியில் இருந்த கியூப எதிர்ப்பு அணியின் தலைவர் ஜோர்ஜ் மாஸ் கனோசா வைச் சந்திக்கவும் செய்தார். ருஷ்யத் துருப்புகள் அனைத்தும் கியூபாவை விட்டு அகற்றிக் கொள்ளப்பட்டன. கியூபாவுக்கு ருஷ்யா அளித்திருந்த பொருளாதார முன்னுரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்க காங்கிரஸ் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் இறுக்கியது. ருஷ்ய எண்ணை வரத்து முற்றிலுமாக நின்றது.

1991 – 2000 காஸ்ட்ரோக்களுக்கு மிக நெருக்கடியான காலம். கடும் பொருளாதார நெருக்கடியும் பஞ்சமும் கியூபாவை ஆட்கொண்டன. ‘பொருளாதார நெருக்கடிகாலம்’ ஒன்றை அறிவிப்பதைத் தவிர கியூபாவுக்கு வேறு வழியில்லை. எவ்வளவு சாதுரியமாக அதை ‘சிறப்புப் பொருளாதாரம்’ என காஸ்ட்ரோ பெயர் சூட்டிப் புண்ணுக்குப் புனுகு தடவ முயற்சித்த போதும் அதன் துயரங்களை மக்கள் சுமக்க நேரிட்டது. மக்களை மயக்கக் கூடிய சொல்லாற்றல் படைத்த ஃபிடெல் இந்த நிலைமையையும் பேசிச் சமாளிக்க முயன்றார்.  மின் ஆற்றல், உரம், பூச்சி மருந்து எதையும் நம்பியிராத உலகின் முதல் “பசுமைத் தாயகமாக்” கியூபா ஆக்கப்படுவதாக அறிவித்தார். இனி இங்கு காற்றாலைகள்தான் எந்திரங்களை இயக்கும் என்றார். இனி சைக்கிள்களில்தான் எம் மக்கள் பயணம் செய்வர் என்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு கியூபா திறந்து விடப்பட்டது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோஷலிசக் கூட்டணியிலிருந்து உதிர்வதற்குக் காரணமானவர் எனக் கருதப்படும் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு 1998ல் கியூபா வரவேற்பளித்தது. உலக அரங்கில் தான் ஒதுக்கப்படுவதிலிருந்து தப்பிக்க கியூபா இப்படியெல்லாம் செய்ய நேரிட்டது.  போப்புக்கு வரவேற்பு அளித்த நிகழ்வை லத்தின் அமெரிக்கச் சூழலின் பின்னணியிலிருந்தும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கத்தோலிக்க கிறிஸ்தவம் லத்தீன் அமெரிக்காவில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்துள்ளது. இங்கிருந்துதான் 1970 களில் ‘விடுதலை இறையியல்’ எனும் கோட்பாடு உருவானது. இந்திய தலித் இயக்கங்கள், ஈழப் போராட்டம் உட்பட அதன் செல்வாக்கு உலகெங்கிலுமிருந்த ஒடுக்கபட்ட மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. காஸ்ட்ரோ கத்தோலிக்கப் பள்ளிகளில் பயின்றவர். தன்னைப்பற்றி அவர் சொல்கையில், “மத ரீதியாகவன்றி சமூகக் கண்ணோட்ட அடிப்படையில் என்னை கிறிஸ்தவன் என யாரும் அழைத்தால் நான் கிறிஸ்தவன்தான்… 5000 பேருக்கு உணவு வரவழைத்து அளித்த கிறிஸ்து ஒரு கம்யூனிஸ்ட் தானே..” என்றார்.

2000 க்குப் பின் அவரது “மகன்” ஹ்யூகோ சாவேஸ் வெனிசூலா அதிபரான போது கியூபா மீது மீண்டும் அதிர்ஷ்டக் காற்று வீசியது. வெனிசூலாவில் அபரிமிதமாக இருந்த எண்ணை கியூபாவில் உலர்ந்து கிடந்த சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உயிரூட்டியது. பதிலாக கியூப மருத்துவர்கள் வெனிசூலாவை நிறப்பினர்.

கியூபாவின் மீதும் ஃபிடெல் மீதும் அன்பும் நம்பிக்கையுமுள்ள ரிச்சர்ட் கோட் எனும் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளர் சொல்வதுபோல ஃபிடெலும் கிழக்கு ஜெர்மனியின் எரிக் ஹோனேக்கரும் “சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டு” களாகத்தான் இருந்தனர். எனினும் சோவியத் வீழ்ச்சியோடு கிழக்கு ஜெர்மனி தன் சிவப்பு அடையாளத்தைத் துறந்து மேற்குடன் கலந்தது. ஆனால் கியூபா இன்னும் அப்படி முற்றாகத் தன் சிவப்பு எச்சங்களைத் துறக்கவில்லை. ஜெர்மனியின் சிவப்பு அடையாளம் அதன் மீது திணிக்கப்பட்ட ஒன்று: கியூபாவின் சிவப்பு அடையாளம் ஒரு புரட்சியினூடாக மேலெழுந்த ஒன்று என்பதைத் தவிர இதற்கு வேறென்ன விளக்கம் சொல்ல முடியும்?

இன்று ராவ்ல் கேஸ்ட்ரோவின் ஆட்சியில் ஃபிடெலின் கண் முன்னே சந்தைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஒருவகையான இரட்டைப் பொருளாதாரத்திற்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வந்து விட்டது.  2015ல் அங்கே அமெரிக்கத் தூதராலயம் திறக்கப்பட்டது. 2016 ல் ஒபாமா ஹவானா வந்தார்.

எனினும் இன்னும் கியூபா ஃபிடெலால் கட்டமைக்கப்பட்ட தன் அடையாளங்களை முற்றாக இழந்து விடவில்லை. இன்று ஏற்பட்டுள்ள சமரசங்கள் இன்றைய உலகச் சூழலின் விளைவு. இவை தவிர்க்க இயலாதவை.

“ஒரு வியட்நாம், இரண்டு வியட்நாம், மூன்று வியட்நாம்கள்..” இங்கே உருப்பெறப் போவதாகக் கனவு கண்டவர் ஃபிடெல். ஆனால் அது லத்தீன் அமெரிக்காவுக்குள்ளும் கூடச் சாத்தியமாகவில்லை. ராவ்ல் கேஸ்ட்ரோ சோஷலிச உணர்வுகளில் ஃபிடெலுக்குச் சளைத்தவரல்ல. சொல்லப்போனால் அவருக்கு ராவ்ல் ஒரு முன்னோடி கூட. “ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசம்” எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் இவை.

மூன்று

2004 ம் ஆண்டு. நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றித் திரும்பும்போது தடுமாறி வீழ்ந்த ஃபிடெல் அத்ன் பின் சக்கர நாற்காலியை விட்டு எழுந்திருக்க இயலாதவரானார். 2006ல் மேலும் உடல் நலம் சீர்கெட்ட போது கிட்டத்தட்ட எல்லா அதிகாரங்களையும் சகோதரருக்குக் கைமாற்றினார். 2008ல் தலைமைப் பொறுப்பை முற்றாக ரால்விடம் கையளித்தார்.

ஒரு நிலவுடமைக் குடும்பத்தில் பிறந்த ஃபிடெலின் வாழ்விம் ஐந்து பெண்கள் இடம் பெற்றனர். ஒருவர் விவாகரத்து செய்து கொண்டு அமெரிக்கா சென்றார். இன்னொருவர் இறந்தார். பின் ஃபிடெல் ஒரு ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு அப்பாலான தொடர்புகளும் ஃபிடெலுக்கு இருந்தன. ஒன்பது பிள்ளைகள். இறுதிக் காலத்தில் பேச்சின் அளவைக் குறைத்துக் கொண்ட போதும் நீண்ட உரைகளை ஆற்றுவதில் வல்லவர்.

அவர் ஒரு சர்வாதிகாரி என்பதில் ஐயமில்லை. ஒரு கட்சி ஆட்சி; முடக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சுருக்கமான விசாரணையுடன் தீர்த்துக் கட்டப்பட்டமை ஆகிய விமர்சனங்கள் அவர் மீது உண்டு. “இதை எல்லாம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?” என்கிற ரீதியில்தான் அவராலேயே அவற்றை எதிர் கொள்ள முடிந்தது. பலர் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று கியூப மக்கள் தொகையில் 20 சதம் பேர்கள் வெளியே உள்ளனர். “புரட்சிகர நீதியில் சட்டத்தின் ஆட்சிக்கு இடம் கிடையாது. அறக் கடப்பாடுதான் தேவை” என அவர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டதை அவ்வளவு எளிதாக நாம் ஏற்றுக் கொண்டுவிட இயலாது. இப்படியான “நியாயங்களை” யாரும் எதற்கும் பயன்படுத்தி விட இயலும்.

எனினும் மக்கள் அவரை நேசித்ததும் உண்மை. அவரை ஒரு இரக்கம் மிக்க சர்வாதிகாரியாகவே (benevolent dictator) அவரது மக்கல் நேசித்தனர். அவர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள மூன்றாம் உலக மக்கள் அனைவருக்கும் நாயகனாக அவர் விளங்கினார்.

ஜெயலலிதா ஜெயராம் (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016)

(ஜெயலலிதா மறைவை ஒட்டி அடுத்த நாள் ஒரு இதழுக்காக எழுதப்பட்டது.)

மிகப்பெரிய அளவு அடித்தள மக்களின் பங்கேற்பு, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்படும் அளவிற்கு நாடெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்களின் வருகை ஆகியவற்றுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் சடங்குகளும் நேற்று சென்னையில் நடந்தேறின. மாவட்டங்களிலிருந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருக்காவிட்டால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு மக்கள் திரண்டிருப்பர் எனக் கூறப்படுகிறது. ஜெயாவின் மரணச் செய்தியைக் கேட்டு தமிழகமெங்கும் 26 பேர்கள் காலமாகியுள்ளதாக  இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

இரண்டு வயதில் தந்தை மரணம். 16 வயதில் விருப்பமின்றி திரைப்படத் துறையில் ஈடுபடுத்தப்பட்டது, 34 வயதில் அரசியல் நுழைவு, 43 வயதில் முதல்வர், இருமுறை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையேகிப் பதவி இழத்தல், மீண்டும் பெரும்மக்கள் ஆதரவுடன் பதவி ஏறல், மிக உயர்ந்த மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டும் 75 நாட்கள் பிரக்ஞை இல்லாமலேயே இருந்து மரணம் – என ஒரு ஏற்ற இரக்கங்கள் மிக்க வாழ்வை வாழ்ந்தவர் ஜெயா.

“நான் ஒரு பாப்பாத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்” எனச் சட்டமன்றத்தில் பீற்றிக் கொண்ட ஒரு கன்னடத்துப் பார்ப்பனர் திராவிட இயக்கமொன்றின் தலைவராக 27 ஆண்டுகள் கோலோச்ச நேர்ந்ததற்கு திராவிட இயக்கங்களின் பலவீனங்கள் முக்கிய காரணமாக இருந்தன.

அவரது பலமும் பலவீனமும் அவருக்கு குடும்பம் ஒன்று இல்லாமல் இருந்ததுதான். முக்கிய எதிரணியாக இருந்த கட்சியின் ஆக அருவருப்பான குடும்ப அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அந்த மாதிரியான குடும்ப அரசியல் ஆபத்து ஜெயாவுக்கு இல்லை அல்லது அவரே அந்த ஆபத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். ஆனால் அதற்குப் பதிலாக ரத்த பந்தமில்லாத ஒரு நட்பை அவர் உருவாக்கிக் கொண்டது இன்னும் பெரிய ஆபத்தாக விளைந்தது. அது ஜெயாவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் மாஃபியா கும்பலாக அவரைச் சுற்றி அரண் எழுப்பி நின்றது. இப்படி உருவான வளர்ப்பு மகனுக்கு அவர் நடத்திய அருவருப்பான் ஆடம்பரத் திருமணம் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியது. ஒரு வேளை அ.தி.மு.க உடைந்து அந்த இடுக்கில் இந்துத்துவ அரசியல் உள் நுழைய நேர்ந்தால் அதற்கும் இந்த உறவே காரணமாக இருக்கப் போகிறது.

எனினும் ஜெயாவை மக்கள் மன்னித்தார்கள். ஒவ்வொருமுறையும் மன்னித்தார்கள். அவர் மீது வைக்கப்பட்டு, நீதிமன்றங்களால் ஏற்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கூட மக்கள் ஏற்கவில்லை. மக்களின் தர்க்கத்தைப் புரிந்து கொள்வது அப்[படி ஒன்றும் கடினம் அல்ல. இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இவருக்கு வாக்களிக்காமல் விட்டால் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்புப் பெற்றவர்கள்  இவருக்கு எள்ளளவும் சளைக்காத ஊழல் பேர்வழிகள்தான். அவர்கள் ஊழல் இன்னும் நிரூபிக்கப்பட வில்லை அவ்வளவுதான். இந்த அமைப்பில் ஊழல் தவிர்க்க இயலாதது என ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்..

________________________________________________________________________________________________________

1948 பிப் 24 கர்நாடக மாநிலம் பாண்டவபுரம் தாலுகா மேல்கோட்டையில் பிறப்பு

1950 தந்தை மரணம்

1965 தமிழில் திரைப்பட கதாநாயகியாக அறிமுகம். தென்னிந்திய மொழிகளில் 140 திரைப்படங்கள்.

1982  அரசியல் நுழைவு

1984 மாநிலங்கள் அவை உறுப்பினர்

1989 அ.தி.முக பொதுச் செயலர்; முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவி

1991 முதலமைச்சர்; மிகவும் இளம் வயது முதல்வர்.

1995 வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணம்

1996 தேர்தல் தோல்வி தொடர்ந்து கருணாநிதி அரசு தொடுத்த லஞ்ச ஊழல் வழக்குகள்; சில மாத காலம் சிறைவாசம்

1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் அமைச்சரவையில் பங்கேற்பு. வஜ்பேயீ அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சி கவிழ்ப்பு

2001 மீண்டும் தேர்தலில் வெற்றி; மீண்டும் முதல்வர். சில மாதங்களில் லஞ்ச வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டு பதவி இழப்பு. ஆறு மாதத்தில் மீண்டும் பதவி ஏற்பு. போலீஸ் அடக்குமுறையுடன் கூடிய ஆட்சி.

2004  நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி

2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.

2011 தேர்தலில் வெற்றி. மீண்டும் முதல்வர்.

2014 செப் சொத்து குவிப்பு வழக்கில் பதவி இழப்பு. 22 நாள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் விடுதலை

2015 மே கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி வழக்கிலிருந்து விடுதலை. மீண்டும் முதல்வர்

2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமலே வெற்றி. 1984 க்குப் பின் தொடர்ந்து அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை வென்றவர் எனும் சாதனை.

2016 டிச 5 எழுபத்தைந்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்து மரணம்

______________________________________________________________________________________________________

அவர் பதவிகளில் இருந்த காலம் இந்தியத் தொழிற் துறையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட்ட காலம். 2003 ல் அவர் ஒரு 90 முக்கிய தொழில் நிறுவனங்களை  அழைத்து அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார். அவர்கள் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். இதற்குச் சில தினங்கள் முன்னர்தான் (ஜூலை 2003) போராட்டத்தில் கலந்து கொண்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து போராடும் தொழிலாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தன் அரசு தயக்கம் காட்டாது என்பதை அவர் கோடி காட்டியிருந்தார். முதலாளிகள் அமைப்பு இதை வெகுவாகப் பாராட்டி, “உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றது. ஃபோர்ட், ஹ்யூண்டாய், நோக்கியா என உலகளவிலான பன்னாட்டு நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இங்கே கடைவிரித்தன.

இதையும் மக்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் தவிர்க்க இயலாதவை. யார் வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்பதை ஏற்கும் மனநிலைக்கு மக்கள் அதற்குள் பழக்கப் படுத்தப்பட்டிருந்தனர். ஆனானப்பட்ட இடதுசாரிகளே டாட்டாவுக்கு இடம் கொடுத்து ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் அம்மா மட்டும் என்ன செய்ய முடியும் என்பது மக்களின் ‘லாஜிக்’ ஆக இருந்தது.

இவற்றின் இன்னொரு பக்கமாக அம்மாவின் ஆட்சியில் ‘பாப்புலிசம்’ அதன் எல்லையைத் தொட்டது. இலவச கம்ப்யூட்டர், மிக்சர், கிரைண்டர், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள், அம்மா தண்ணீர், அம்மா உணவகங்கள்…. வேறு என்னதான் வேண்டும்? இந்தச் செலவை எல்லாம் ஈடுகட்ட இருந்தது அவருக்கு ‘டாஸ்மாக்’.

அம்மாவின் ஆட்சி என்றால் அது போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது ஊரறிந்த செய்தி. என்கவுன்டர் கொலைகள், லாக் அப் சாவுகள், காவல்துறை அத்துமீறல்கள் எதிலும் அவர் காவல் துறையை விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியான அத்து மீறல்களைத் தொடர்ந்து ‘குறைந்த விலை போலீஸ் கான்டீன்கள்’ முதலான பரிசுகளும் பதவி உயர்வுகளும் காவலர்களுக்குக் காத்திருந்தன.

அவர் இறந்த அன்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக் காட்சி அவரது பழைய நேர்காணல் ஒன்றை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அழகான ஆங்கிலத்தில் அம்மா சொன்னார்: “நான் பழைய ஜெயலலிதா அல்ல. நான் மாறிக் கொண்டிருக்கிறேன்”.

அது உண்மை. காலம் யாரைத்தான் மாற்றவில்லை. நீங்களும் நானும் கூடத்தான் மாறிக் கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளையும், அதுவும் நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்களையும் நாம் அப்படித்தான் மதிப்பிட வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் உறைந்தவர்களாக அவர்களைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. தான் ஒரு பாப்பாத்தி என்பதில் பெருமைப்படுவதாகச் சொன்ன அவர்தான் சங்கரசாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சுப்பிரமணிய சாமி முதலான பார்ப்பனீய சக்திகளுக்கு எதிராகவும் இருந்தார். சசிகலா போன்ற பார்ப்பனரல்லாதவர்களையே “உயிர்த் தோழி” யாக இருத்திக் கொண்டார். கருணாநிதியின் ஆட்சியில்தான் சங்கராச்சாரி மீதான அந்த வழக்கு நீர்க்கச் செய்யப் பட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

போர் என்றால் சிலர் கொல்லத்தான் படுவார்கள் என ஈழ மக்கள் மீதான அடக்குமுறையை ஆதரித்துப் பேசிய ஜெயாதான் 2011க்குப் பின்னர் ஈழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் இயற்றினார். மஹிந்த ராஜபக்‌ஷே உள்ளிட்ட “போர்க் குற்றவாளிகள்” மீது நடவடிக்கை வேண்டும் என்றார். ஐ.நா அவை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் 2013ல் சட்டமன்றத்தைக் கூட்டி “இனப் படுகொலை” க்குக் காரணமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும், தனி ஈழத்திற்கான கருத்துக் கணிப்பு வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றினார். 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என அவர் காட்டிய எதிர்ப்புத்தான் கடைசி நேரத்தில் மன்மோகன் சிங் தன் கொழும்புப் பயணத்தை ரத்து செய்வதற்குக் காரணமாகியது. 2015ல் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணையத் தீர்மானத்தை நீர்க்கச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டபோது அதற்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.

ராஜீவ் காந்தி ஜெயாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்தான். எனினும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு அதரவாகவும் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் கச்சத்தீவு பிரச்சினையிலும் அவர் தீவிரமாக இருந்தார்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பதைத் தவிர்ப்பது, தி.மு.க ஆட்சி செய்தது என்பதற்காகவே சமச்சீர்க் கல்வித்திட்டத்தை ஊற்றி மூட முயற்சித்தது, அண்ணா நூலகத்தை மூடவும், இராணி மேரிக் கல்லூரியை அந்த இடத்திலிருந்து அகற்றவும் முயற்சித்தது, சட்டமன்றத்திற்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது, எதிர்க் கட்சித் தலைவர்கள், தெருக்களில் கொள்கை முழக்கமிட்டுப் பாடி ஆடிய கலைஞர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுத்தது முதலான நடவடிக்கைகள் அவரிடம் இறுதி வரையிலும் மாறாமல் இருந்த பண்புகள் எனலாம். 2015 சென்னை வெள்ள எதிர்ப்பு நடவடிக்கையிலும் அவரது செயலின்மை பெரிய அளவில் கண்டிக்கப்பட்டது.

ஒரு வேளை இன்னும் கொஞ்சகாலம் அவர் வாழ்ந்திருந்தால் இந்த அம்சங்களிலும் அவரிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில் இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என அவர் யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும் செல்லவில்லை. அவரைப் பற்றிய கணிப்பில் கவனத்துக்குரிய அம்சங்களில் முக்கியமானது இது.