பிரிட்டோவின் கதை…

(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு)

ஒன்று

இரண்டு நாட்களுக்கு முன் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தேன். ஒரு போன் கால். எண் மட்டும் வந்தது, பெயரில்லை. “நான் சுதா பேசுறேன்.. மார்க்ஸ்”.. குரல் சற்று கம்மி இருந்தது. நான் அந்தக் குரலை கேட்டு நீண்ட நாட்களும் ஆகிவிட்டன.

“சொல்லுங்க சுதா, எப்டி இருக்கீங்க. பிரிட்டோ எப்டி இருக்கார்?”

“அதான்.. அவருக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாமப் போயி பத்து நாளா ஆஸ்பிடல்லதான் வச்சிருந்தோம். லிவர் ஃபெய்லியர். போயிட்டார்..”

“எங்கே போயிட்டார் சுதா..?”

அவர் அப்படி எல்லாம் போகக் கூடியவர். அதனால்தான் அப்படிக் கேட்டேன். ஒரு கண நேர மௌனத்துக்குப் பின் சுதா பதிலளித்தபோது அந்தக் குரலில் கண்ணீர் கலந்திருந்தது…

“செத்துப் போயிட்டாரு மார்க்ஸ்..” அவர் லேசாக விம்மத் தொடங்கினார்.

# # #

கால் நூற்றாண்டுக்கு முன் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தவன் நான்.

“திருமணம்” என்றா சொன்னேன். அது திருமணம் இல்லை. அவர்கள் இணையாராக வாழத் தொடங்கிய நாளில் திருத்துறைப்பூண்டி நண்பர்களோடு அதைக் கொண்டாடியபோது அதில் முக்கிய விருந்தினராக இருந்தவன் நான்.

பிரிட்டோ இந்து வன்னியத் தந்தைக்கும் கிறிஸ்தவ நாடார் அம்மைக்கும் பிறந்தவர். பெற்றோர் இருவரும் ஒரே பள்ளியில் பணி செய்த ஆசிரியர்கள். காதலித்து இணைந்தவர்கள். பிரிட்டோவின் தந்தைக்கு அது இரண்டாவது திருமணம். முதல் மனைவியும் குடும்பமும் இருந்தது.

இப்படியான திருமணங்களில் அந்த மனைவிக்குத்தான் பொறுப்புகள் அதிகம். கிட்டத்தட்ட ஒற்றை ஊதியத்தில் மகன் பிரிட்டோவையும் மகள்களையும் பிரிட்டோவின் அம்மாதான் பொருளாதார ரீதியாகச் சுமந்தார், படிக்க வைத்தார். இப்படியான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு identity crisis உண்டு. பிரிட்டோவை நான் சந்தித்த காலத்தில் அவர் கிறிஸ்தவரா இல்லை இந்து வன்னியரா… அப்போது அவருக்கு அது குறித்த தெளிவு இல்லை என்றே உணர்கிறேன்.

பிரிட்டோவை நான் முதன் முதலில் சந்தித்தது எனது தஞ்சை ‘அம்மாலயம் சந்து’ வீட்டில் ஒரு பத்து இளைஞர்கள் சூழ அவர் என் மாடி அறைக்கு வந்தார். கூட வந்தவர்களில் ஒருவரை உங்களுக்கு நிச்சயம் தெரியும். அவர் கவிஞர் மாலதி மைத்ரி. திருச்சியில் நடந்த ஒரு சினிமா தொடர்பான பயிற்சி முகாமில் கலந்து விட்டு இங்கு வந்திருந்தனர்.

அப்படித் தொடங்கியது எங்கள் அறிமுகம். அடுத்த சில ஆண்டுகளில் நான் பழி வாங்கல் இடமாற்றத்தில் மன்னார்குடி கல்லூரிக்குச் சென்றேன். அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில்தான் திருத்துறைப்பூண்டி. பிரிட்டோவும் நானும் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாயின. அவர் அப்போது அருகில் உள்ள ஏதோ ஒரு ஊரில் பள்ளி ஆசிரியராக இருந்தார்.

இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்போது நாங்கள் பேரா. கல்யாணியுடன் இணைந்து தமிழ் வழிக் கல்விக்காக இயக்கங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். மன்னார்குடியில் நானும் என் அன்பு நெடுவாக்கோட்டை ராஜேந்திரனும் என் மாணவர்கள் தை.கந்தசாமி, தகட்டூர் ரவி, வழக்குரைஞர் சிவ.இராஜேந்திரன் எல்லோரும் சேர்ந்து ஒரு மிகப் பெரிய மாநாட்டை நடத்தினோம்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ் வழிக் கல்வி மாநாட்டை முன்னின்று நடத்தியது பிரிட்டோ.

கல்யாணியையும் அழைத்துகொண்டு பிரிட்டோவின் வீட்டுக்குச் சென்றது நினைவில் படிந்துள்ளது. திருத்துறைப்பூண்டி ECR சாலைக்குச் செல்லும் வழியில் கடைத்தெருவுக்குள் ஒரு சிறு ஆற்றின் மீதுள்ள மரத்தாலான குறும் பாலத்தைத் தாண்டி அக்கரையில் இருந்தது பிரிட்டோவின் வீடு. அன்று பார்த்ததுதான் பிரிட்டோவின் அப்பாவையும் அம்மாவையும்.

அதற்குப் பின் எத்தனையோ நிகழ்வுகள். அவற்றில் ஒன்று நிச்சயம் நண்பர் ராஜன் குறைக்கும் நினைவிருக்கும். ஆனந்த் பட்டவர்தன் முதலானோரின் புகழ்பெற்ற ஆவணப் படங்களை. தமிழகம் முழுவதும் திரையிட ராஜன் அப்போது ஏற்பாடு செய்திருந்தார். மன்னார்குடியில் என் மாணவர்களின் துணையோடு இப்போது இரு சிறு நீரகங்களையும் இழந்து வாழும் ராஜேந்திரனும் நானும் நடதினோம். மன்னை போன்ற சிறு நகரங்களில் அது ஒரு வித்தியாசமான அனுபவம்.

திருத்துறைப்பூண்டியில் அதைச் செய்தது பிரிட்டோ. 

பிரிட்டோ_0002

இரண்டு

அது தலித் எழுச்சி மேலுக்கு வந்து கொண்டிருந்த நேரம். முன் குறிப்பிட்ட மாணவர்கள் தவிர அருகிலுள்ள மதுக்கூரில் ஆசிரியர்களாக இருந்த உஞ்சை ராசன், காளிமுத்து இன்னும் விடுதிப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலித் மாணவர்கள் எல்லோரும் இணைந்துஅந்த எழுச்சியில் பல்வேறு வகைகளில் பங்கு பெற்றோம். குறிப்பான சாதி,மத அடையாளங்கள் இல்லாத பிரிட்டோ அதில் மிக எளிதாகப் பொருந்திப் போனார்.

அவ்வாறு எங்களுடன் கலந்தவர்களில் இரண்டு ஆசிரியைகளும் அடக்கம். ஒருவர் கவிஞர் இளம்பிறை; மற்றவர் சுதா. மணலி அப்துல் காதர், சிவகுருநாதன், பூங்குன்ற பாண்டியன், திருத்துறைப்பூண்டி பாண்டியன்… என்பதாக அந்த வட்டம் அகன்று கொண்டே சென்றது.

சுதா பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அத்தனை வசதியற்ற குடும்பம். எங்கள் கும்பலில் அவர் முழுமையாகப் பொருந்திப் போயிருந்தார். ஒரு முறை காக்காய்க் கறி சாப்பிடுபவர்கள் பற்றி ஒரு பேச்சு வந்தது. ஏன் சாப்பிட்டால் என்ன என்றார் ஒருவர். அதில் முழுமையாகப் பங்கேற்று அக் கருத்தை ஆதரித்தவர் சுதா.

பிரிட்டோவும் சுதாவும் இணைந்து வாழ்வது என முடிவு செய்தனர். இரண்டு குடும்பங்களிலும் சிறிது எதிர்ப்புகள் இருந்த போதிலும் அது பெரிய தடையாக அமையவில்லை. நான் ஒருமுறை பிரிடோவின் அம்மாவைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியதாக நினைவு. வெகு விரைவில் அவர்களின் இணைவை இரண்டு குடும்பங்களுமே அங்கீகரித்தன.

திருமணத்தைப் பதிவு கூடச் செய்யக் கூடாது என இருவரும் கருத்துக் கொண்டிருந்தனர். புரட்சிகர உணர்வு அந்த அளவிற்குக் கரை புரண்டு ஓடிய காலம் அது. பின்னாளில் அவர்களுக்கிடையில் பிரச்சினைகள் உருவான போது இத்தகைய பதிவு இல்லாதது சில சிக்கல்களையும் ஏற்படுத்தின. வரட்டுக் கொளகைப் பற்று இப்படியான சிக்கல்களுக்குக் காரணம் என அவர்கள் மட்டுமல்ல நாங்கள் யாரும் அப்போது உணரவில்லை.

ஒரு எளிய முறையில் விருந்தளித்து சிறிய கொண்டாட்டங்களுடன் அந்த வாழ்க்கை இணைவு நிகழ்ச்சி நிறைவேறியது. நான்தான் பிரதம விருந்தினன்.

பிரிட்டோ-சுதா தம்பதியர் எளிதாக மாற்றல் பெற்று சென்னைக்கு வந்தனர். இடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான். அவனுக்கு ‘எதார்த்’ எனப் பெயரிட்டனர்.

பிரிட்டோ ஒரு நல்ல படிப்பாளி. தீவிர சிறு பத்திரிகைகளின் வாசகர்.தமிழில் வந்துள்ள அனைத்து நாவல்கள், சிறுகதைகள், மொழி பெயர்ப்புகள், நடந்துள்ள விவாதங்கள் எல்லாம் அத்துபடி. திடீரென போன் செய்வார். “மார்க்ஸ், நீங்க அந்தக் கட்டுரையில் இப்படி எழுதி இருந்தீங்களே..” என நானே மறந்துபோன எதையாவது சொல்லுவார்.

எழுத்து தவிர சினிமாவிலும் பிரிட்டோவுக்கு ஈடுபாடு உண்டு. சினிமா தொடர்பான ஒரு நல்ல புத்தக சேகரமும் அவரிடம் உண்டு. திருச்சியில் பேரா.ஆல்பர்ட் நடத்திய சினிமா தொடர்பான கருத்தரங்குகள் அனைத்திலும் பங்குபெற்றவர். சினிமாவில் எதையாவது செய்ய வேண்டும் என்றுதான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ‘ஊட்டி’ என்றொரு படத்தில் உதவி இயக்குனராகப் பங்கு பெற்றதோடு அவரது அந்த முயற்சிகள் நின்று போயின.

அவர், பிரிட்டோ, மணலி அப்துல்காதர்,பாண்டியன் எல்லோரும் சேர்ந்து “கிழக்கு” என்றொரு சிற்றிதழ் தொடங்கினர். எல்லாச் சிற்றிதழ்களையும் போல சில இதழ்களோடு அது நின்றுபோனது. இது தவிர ‘தகழி’. ‘கவிதைக்காக’ என்று இரு இதழ்களையும் கூடத் தொடங்கிச் சில இதழ்கள் வந்தன.

அசோகமித்திரன் மேல் அவருக்குக் கூடுதலான பிரியம் உண்டு. அசோக மித்திரன் பற்றிய இரங்கல் குறிப்பில் திருத்துறைப்பூண்டி நண்பர்கள் ஒரு படைப்பு கேட்டு அசோகமித்திரனை அணுகியபோது அவர், “எதுக்குய்யா நீங்கள் எல்லாம் பத்திரிகை நடத்துறீங்க? பாப்பான்னு திட்டத்தானே…. போ போ..” என விரட்டி அடித்தார் எனக் குறிப்பிட்டிருந்தேனே. அது வேறு யாருமல்ல. பிரிட்டோதான் அப்படி விரட்டி அடிக்கப்பட்டவர்.

மூன்று

நான் 2000 த்தில் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். பிரிட்டோ குடும்பத்தை அடிக்கடி சந்திப்புது குறைந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் நான் கேள்விப்பட்ட செய்திகள் கவலை அளித்தன. பிரிட்டோ அதிகம் குடிக்கத் துவங்கியுள்ளார் என்பது ஒன்று. மற்றது அவர் அதிகம் கடனாளியாகியுள்ளார் என்பது. மூன்றாவது அவருக்கும் சுதாவுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்பது.

சுதா ஒரு கடின உழைப்பாளி. பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் வீடுகளுக்குச் சென்று இந்தி டியூஷன் எடுப்பார். அவரது முயற்சியில் சென்னையில் ஒரு வீடும் அவர்களுக்கு உரிமையாயிற்று.

என்னுடைய தலையீடுகள் அங்கு உருவாகியிருந்த பிரச்சினைகளைத் தணிப்பதில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அடுத்து நான் அறிந்த இன்னொரு செய்தி என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

பிரிட்டோ தன்னுடன் பணி செய்யும் இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பில் இருப்பதும், அதனால் குடும்பத்தில் உருவான பிரச்சினையில் அவர் பிரிந்து சென்று தனியே தான் பணியாற்றும் பள்ளிக்கு அருகில் வசிக்கிறார் என்பதும்தான் அந்தச் செய்தி. பிரச்சினை முற்றி பணியாற்று ம் பள்ளியில் விசாரணை என்கிற அளவிற்கு வளர்ந்தது என்கிற நிலையில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லாமற் போயிற்று. சுதாவும் நீங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்றார். பிரிட்டோ போனை எடுப்பதில்லை.

இடையில் திருத்துறைப் பூண்டியில் பிரிட்டோவின் தந்தை இறந்தபோது அவர் அதற்கும் போகவில்லை என அறிந்தேன்.

# # #

சில ஆண்டுகளுக்கு முன் பெரியார் திடலில் எனக்கு ஒரு விருது அளித்தார்கள். அந்தக் கூட்டத் திரளில் ஒரு தெரிந்த முகம். அது பிரிட்டோ. நிகழ்ச்சி முடிய இரவு மணி பத்தாகிவிட்டது. அவர் காத்திருந்தார். அவரோடு தினத்தந்தி குழுமத்தில் வேலை செய்த ஒரு பத்திரிகையாளரும் இருந்தார். என்னோடு வீட்டுக்கு வருகிறேன் என்றார். அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு நான் என் பைக்கில் சென்றேன். பிரிட்டோவும் நண்பரும் வீட்டுக்கு வரும்போது அவரின் கையில் ஒரு பெரிய பை இருந்தது. பழங்கள், பிஸ்கட்கள் தவிர ஒரு முழு பாட்டில் பகார்டி ரம்மும். நிறையாப் பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்து அவர் இப்போதும் ‘அப் டு டேட்’ ஆக இருந்தது விளங்கியது.

அன்று அவர் நிறையக் குடித்தார். ஜெயாவை அக்கா என்றுதான் அழைப்பார். போய் அக்காவுடன் உட்கார்ந்து கொண்டு அங்கும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று நள்ளிரவுக்குப் பின் அவர்களை ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்தேன். அவர் போன பின் ஜெயா அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பிரிட்டோ இப்போது மிகவும் ஆன்மீகவாதியாக மாறி விட்டதாகவும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக ஆகிவிட்டதாகவும் கூறினாராம். ஞாயிற்றுக் கிழமை தோறும் தான் சர்ச்சுக்குப் போகத் தவறுவதில்லை எனவும், கிறிஸ்துவில் தான் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறினாராம்.

தொடர்ந்து முன்னைப் போல அவர் என்னிடம் இலக்கியம் அரசியல் முதலியவற்றை போனில் பேசத் தொடங்கினார். இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் பள்ளி செல்வதில்லை எனவும், புதிதாகத் தொடர்பில் இருந்த ஆசிரியையிடமிருந்தும் பிரிந்து விட்டதாகவும், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துத் தான் வழக்கு தொடுத்திருப்பதாகவும், சங்கரசுப்பு அவர்கள்தான் தன் வழக்குரைஞர் எனவும் சொன்னார். நான் ஒன்றும் சொல்ல வில்லை.

பின் ஒரு நாள் அவர் போன் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஒரு பழைய கைலி, அழுக்குச் சட்டையுடன் முதலில் அவரை யாரோ என நினைத்து என்ன வேண்டும் எனக் கேட்டேன். தெரிந்தவுடன், “என்ன பிரிட்டோ இது இப்படி..” என்றேன். இதுதான் வசதியாக இருக்கிறது என்றார். அன்றும் அவரது பையில் ஒரு பாட்டில் பகார்டி இருந்தது. அவரது மெலிந்த உடலைப் பார்த்துவிட்டு மருத்துவ செக் அப் எல்லாம் செய்கிறீர்களா எனக் கேட்டபோது எல்லாம் செய்வதாகவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னார்.

அவர் அன்று சொன்ன செய்தி சற்று ஆறுதலாக இருந்தது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் இப்போது சுதாவின் வீட்டிற்கே சென்று விட்டாராம். மகன் யதார்த்தும் ஹைதராபாத்திலிருந்து இங்கு மாற்றலாகி வந்துவிட்டானாம்.

எனக்குச் சற்று மகிச்சியாக இருந்தது. அன்றும் ஜெயாவிடம் சென்று தான் சர்ச்சுக்குப் போவது குறித்தும், கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதில் உள்ள சுகம் குறித்தும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.

அடுத்த நாள் நான் சுதாவிடம் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்த போது அவர் அத்தனை உற்சாகமாக இல்லை. பிரிட்டோவுக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லை எனவும் தான் மிகவும் முயற்சி செய்து, உயர் அதிகாரிகளை எல்லாம் சந்தித்து அவருக்கு மீண்டும் போஸ்டிங் வாங்கி இருப்பதாகவும், ஆனாலும் அவரால் பள்ளி சென்று வர இயலுமா எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.

கடைசியாக நான் பிரிட்டோவைச் சந்தித்தது இன்குலாப்பின் மரணத்தின் போது. நான் வரும் நேரம் கேட்டு காத்திருந்து இருவருமாக இன்குலாபுக்கு அஞ்சலி செலுத்தி மீண்டோம். அன்றும் அதே பழைய கைலி, சட்டை இவற்றோடுதான்….

கடந்த பத்து நாட்களாக அவர் பக்கலிலிருந்து செய்தி ஒன்றும் இல்லையே என நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் சுதாவிடமிருந்து அந்த மரணச் செய்தி.

# # #

சற்று முன் சுதா சொன்னது: இறுதி ஆண்டுகளில் அவர் தொடர்ந்து சர்ச்சுக்குப் போய் வந்தபோதும் எந்தப் பங்கிலும் அவர் பதிவு செய்யவில்லையாம். எனவே மாதா கோவில்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லறைத் தோட்டங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லையாம். நல்ல வேளையாக அரசு இடு காட்டில் கிறிஸ்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு இடம் கிடைத்ததாம்.

போதாதா. அவரது இறுதி விருப்பப்படி சிலுவை அடையாளத்துடன் அவருக்கு ஒரு கல்லறை.

பிரிட்டோவின் கல்லறை மீது என்ன வாசகத்தைப் பொறிப்பது…

“ஒரு இலக்கியவாதி இங்கே உறங்குகிறான்” – என்றா? இல்லை ஒரு குடிகாரன் அல்லது பொறுப்பற்ற குடும்பத் தலைவன் அல்லது, ஒரு நல்ல நண்பன், இல்லை.. இயேசுவை இறுதியாக வந்தடைந்த ஒருவன்…..

இவற்றில் பிரிட்டோவை எப்படி அடையாளப்படுத்துவது?

மனிதர்களை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறதா என்ன..

பிரிட்டோ அவரின் தந்தையை மிகவும் நேசித்தவர். என்னிடம் தன் தந்தையின் தொழில் நேர்மை குறித்துப் பலமுறை சொல்லியுள்ளார். பின் ஏன் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் போகவில்லை?

52 வயது… சாகிற வயதா?

ஒரு முறை குமுதம் இதழில் பிரிட்டோ- சுதா தம்பதி அட்டையில் இடம் பெற்றிருந்தனர். எந்த சட்டபூர்வமான பிணைப்பும் இல்லாமல் சேர்ந்து வாழும் தம்பதி என…

கண்பட்டுவிட்டதா?

என்ன நடந்தது?.

 

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்

 உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சை
ஜூன் 19, 2012

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். பழங்குடிப் பட்டியல் இனத்தவரான (scheduled tribes) இவர்கள் பன்றி வளர்ப்பு, கூடை முடைதல், அம்மி கொத்துதல் முதலான தொழில்களைச் செய்து பிழைத்து வருகின்றனர். சிலர் விவசாயம், கொத்து வேலை முதலியவற்றையும் செய்து வருகின்றனர்.

தஞ்சை நகரை ஒட்டியுள்ள அன்னை சிவகாமி நகரிலுள்ள குறவர் குடியிருப்பில் கடந்த வாரத்தில் 60 பழங்குடிக் குறவர் பெண்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதமிருந்த செய்தியைப் பத்திரிக்கைகளில் படித்தோம். இவர்களில் நான்கு பெண்களின் உடல்நிலை மோசமானதையொட்டி அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்தோம்.. தஞ்சை, அரியலூர், திருவாரூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறைகளால் தாங்கள் குற்றப்பரம்பரையினராக நடத்தப்பட்டுப் பொய்வழக்குகள், சட்ட விரோதக் காவல், சித்ரவதை முதலியவற்றால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். போராட்டத்தை வழி நடத்திய விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் விவேகானந்தன் மற்றும் மனித உரிமைகளில் அக்கறை உள்ள சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இப்பிரச்சினை குறித்து விசாரிக்கக் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
4. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம், பேராவூரணி,
5. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
6. பேரா. சி. சுப்பிரமணியன், தஞ்சை

முதற் கட்டமாக சென்ற 11ந்தேதி அ.மார்க்ஸ் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அன்று மாலை மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் உண்ணாவிரதமிருந்த பெண்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

இரண்டாங் கட்டமாக எம் குழுவினர் அனைவரும் நேற்றும் இன்று காலையும் தஞ்சை சென்று பாதிக்கப்பட்ட சுமார் 50 குறவர் இன ஆண்கள் மற்றும் பெண்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், மாவட்டக் கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி ஐ.பி.எஸ் ஆகியோரையும். தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கேப்டன் துரை, மாநிலப் பொருளாளர் திருவாதிரை ஆகியோரையும் சந்தித்தனர்.
கு2

பின்னணி

காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவெங்கிலும் பல பழங்குடிகளையும், சாதிகளையும் “குற்றப் பரம்பரை” என அறிவித்து அவர்களைக் குற்றப்பறம்பரைச் சட்டத்திற்குள் (Criminal Tribes Act -1911) கொண்டுவந்திருந்த வரலாற்றை நாம் அறிவோம். இந்தப்பட்டியலிலுள்ள மக்களில் 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அனைவரும் தினம் மாலையில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து அங்குள்ள பதிவேட்டில் தம் கைரேகைகளைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் அங்கேயே தங்கிக் காலையில்தான் வீடு திரும்ப வேண்டும். வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டுமாயின் காவல் துறையிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இப்படியான ஒரு வாழ்வை வாழ நேர்ந்த இம்மக்களைக் காவல்துறையினர் எவ்வெவ் வகைகளிலெல்லாம் பயன்படுத்தியிருப்பர் என்பதை யாரும் யூகித்துக் கொள்ள இயலும். இலவச உழைப்பு, பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பவை தவிர தேவைப்படும்போதெல்லாம் திருட்டு வழக்குகளில் தொடர்புபடுத்திச் சிறையிலடைத்தல் என்பன இக்கொடுமைகளில் சில.

சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் இக்கொடுமைகட்கு எதிராக மக்கள் ஆங்காங்கு போராடினர். மதுரைக்கருகிலுள்ள பெருங்காமநல்லூரில் வாழ்ந்த பிரான்மலைக் கள்ளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 ஆண்களும் 1 பெண்ணும் இறந்தனர். முத்துராமலிங்கத் தேவர் போன்றோரும் இச்சட்டத்திற்கெதிரான போரட்டங்களை நடத்தினர். சுதந்திரத்திர்குப் பின் இச்சட்டம் நீக்கப்பட்டது.

சட்டம் ஏட்டளவில் நீக்கப்பட்டபோதும் நமது காவல்துறையினரின் நெஞ்சத்திலிருந்து அது நீங்கவில்லை. இந்தச் சட்டம் அளித்த அபரிமிதமான அதிகாரங்களை அவ்வளவு எளிதாக அவர்கள் இழந்துவிடத் தயாராக இல்லை. ஒருகாலத்தில் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும் எண்ணிக்கையில் பலமாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்தும் வாழ நேர்ந்த சாதியினர் தேர்தல் அரசியலினூடாக வலுவான அரசியல் சக்திகளாக மாறினர். ஆனால் அத்தகைய வாய்ப்புப் பெற்றிராத பழங்குடியினர்களான இருளர்கள், குறவர்கள், ஒட்டர்கள் முதலானோர் காவல்துறையினரால் குற்றப் பரம்பரையினராக நடத்தப்படுவது தொடர்ந்தது.. ஆண்டு இறுதியில் கணக்கு முடிக்கவும், கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை முடிக்கவும், சில நேரங்களில் காவல் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படும் திருட்டுக் கும்பல்களைக் காப்பாற்றவும், பதவி உயர்வுகளுக்காகவும், பதக்கங்கள் (out of turn promotion and gallantry awards) பெறுவதற்காகவும் இவர்கள் கைது செய்யப்படுவர். வீடு புகுந்து இழுத்துச் சென்று பல நாட்கள் வரை சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து, குற்றங்களை ஒப்புக் கொள்ளச் செய்து சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு தேடி வரும்போது இளம் பெண்கள் தென்பட்டால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப் படுவர். பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதும் உண்டு.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை விழாவை வெகு விமரிசையாகக் காவல் நிலையங்களில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரியும். அதை ஒட்டி பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடக்கும். ஆயுத பூஜை கொண்டாடும்போது காவல் நிலைய லாக் அப் அறை காலியாக இருக்கக் கூடாதாம். அதற்காக யாராவது ஒரு குறவரைக் கொண்டுவந்து பொய் வழக்கொன்றைப் போட்டு அடைத்து வைப்பார்களாம்.

காலங் காலமாக நடைபெற்று வந்த இக்கொடுமைகளை எதிர்த்துத்தான் இப்போது அந்தப் பழங்குடிப் பெண்கள் காலவரையரை அற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இனி அவர்களின் சொற்களினூடாகச் சில சோகக் கதைகளைக் கேட்கலாம். நாங்கள் சேகரித்த வாக்கு மூலங்களில் இரண்டு மட்டுமே மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்குமூலங்களிலிருந்து சுருக்கமாகச் சில செய்திகள்

1. முத்து வீரக் கண்டியன் பட்டி செல்வராணி க/பெ வீரையன்

“எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன். பண்ணி வளர்க்கிறது, கூலி வேலை மற்றும் வேஸ்ட் சாப்பாடு எடுக்கிறது எங்கள் தொழில். தொடர்ந்து என் புருசன் மேல கேஸ் போட்டுகிட்டே இருகாங்க. எல்லா ஸ்டேசன்லையும் அவர் மேல கேஸ் இருக்கு. மொத்தம் 17 கேஸ்கள். பிடிச்சிட்டுப்போய் சித்திரவதை பண்றாங்க. குறவன்ன்னா கேஸ் இல்லாம இருக்கக்கூடாதுங்கிறாங்க. பிள்ளைகள்

படிக்கக்கூடாதுங்கிறாங்க. போன வருசக் கடைசியில அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ்.ஐ டேவிட் இருவரும் வந்து என் புருசனத் தேடுனாங்க, ஒப்படைக்கலன்னா உன்னை பலாத்காரம் பண்ணுவேன்னாங்க. என் அப்பா துரைசாமி கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கார். வார்டு மெம்பராவும் இருக்கார். அவர் இது பற்றி மேலதிகாரிங்க கிட்டப் புகார் மனு கொடுத்தார். அதனால அவரையும் சட்டக் கல்லூரியில் படிக்கிற என் தம்பியையும் பிடிச்சுட்டுப் போனாங்க. அப்பாவ விலங்கு போட்டு தெருவுல நாய் மாதிரி இழுத்துட்டுப் போனாங்க. தம்பிய விட்டுட்டு அப்பா மேல கேஸ் போட்டாங்க. பத்து பவுன் நகை கொடுத்தா விட்டுடரேன்னு சொன்னாங்க. எங்க கிட்ட இல்லன்னோம். ஏதாவது ஒரு நகை கடையைக் காமி. இங்கதான் திருட்டு நகையை வித்தோம்னு சொல்லு. நாங்க அவன்கிட்ட வாங்கிக்கிறோம்னு சொன்னாங்க. அப்போ முல்லை பெரியார் பிரச்சினை இருந்துச்சு. முத்தூட் ஃபைனான்ஸ்லதான் குடுத்தேன்னு சொல்லுன்னு சொன்னாங்க. தாங்க முடியாம நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்ணையை ஊத்தி தீ வச்சுக்கிட்டேன்.”

50 சதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராணி சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டார். எனினும் கைது பொய் வழக்குகள் முதலியன தொடர்ந்தன. குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி பெருமாள்(60), அவரது மருமகன் அன்பழகன் (28) ஆகியோர் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், மானோஜிப்பட்டி நாகப்பா (37) மே 20ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை குறவர் பழங்குடி சங்கம் ஏற்பாடு செய்தது. இதை அறிந்த காவல் துறையினர் அன்னை சிவகாமி நகர் கணேசனை (45) கடந்த 5ம் தேதியும், இச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் செல்வராணியின் கணவருமான முத்துவீரக் கண்டியன் பட்டி வீரையனை ஏழாம் தேதியும் கைது செய்தது. மருத்துவக் கல்லூரிக் காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், வீரையனை தொலைபேசியில் அழைத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிக் கைது செய்தார். பின் அவர் அய்யம்பேட்டைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று பழைய வழக்கொன்றில் சிக்கவைக்கப்பட்டார்.

நேற்று மாலை பிணையில் விடுதலை ஆன அவரை சிறை வாசலிலேயே சாதாரண உடையிலிருந்த போலீசார் மீண்டும் கைது செய்ய முனைந்துள்ளனர். அவரது வழக்குரைஞர் காமராஜ் தலையிட்ட பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை தன்மீது 17 பொய் வழக்குகள் போடப்பட்டன எனவும் விசாரணை முடிந்த இரு வழக்குகளிலும் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீரையன் எம் குழுவிடம் கூறினார்.

கு 2

2. முருகாயி க/பெ ரஜினி

“மானோஜிப்பட்டி சரபோஜி நகரில் நாங்க இருக்கோம்.நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் தவிர கொத்தனார் வேலையும் அவர் செய்வார். 2005 லிருந்து எ3ன்னையும் என் புருசன், தம்பி, மாமியார், ஓப்படியா இப்டி எல்லாரையும் குடவாசல், அரியலூர், புதுக்கோட்டை, மெடிகல் காலேஜ் இப்படி பல போலீஸ்காரங்க பிடிச்சு, அடிச்சு, சித்ரவதை பண்ணி பொய் கேஸ் போட்டு கொடுமைப் படுத்திருக்காங்க. 2005ல குடவாசல் போலீஸ் என் புருசனப் புடிச்சிட்டுப்போயி 30 நாள் வச்சிருந்தாங்க. போய்க் கேட்டா காட்ட மாட்டாங்க. அடி தாங்க முடியாம என் புருசன் தப்பிச்சு ஒடிட்டாரு. உடனே எங்கள தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. என்னை, மாமியார், தம்பி, அண்ணன் நாலு பேரையும் புடிச்சுட்டுப் போனாங்க. மாமியாரை தஞ்சாவூர் நூலகக் கட்டிடத்துக்குப் பக்கத்துல ஒரு மாடியில வச்சு அடிச்சாங்க. அண்ணன், தம்பி ரண்டு பேரையும் குடவாசல் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என்னையும் நாலு வயசு, ஒன்றரை வயசுள்ள என் ரண்டு பிள்ளைகளையும் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என் பிள்ளைங்க போட்டிருந்த வெள்ளி அரணா, மோதிரம் எல்லாத்தையும் புடுங்கிட்டாங்க. என்னை ஒரு வாரம் போட்டு அடிச்சாங்க. என் புருசன் போய் அரெஸ்ட் ஆனார். அப்புறந்தான் எங்களை விட்டாங்க.
5பேர் மேல கேஸ் போட்டாங்க. அப்புறம் பெயிலில் எடுத்தோம். ஆனா மறுபடி மெடிகல் காலேஜ் ஸ்டேசன்ல அவரைக் கைது செய்து 20 நாள் வச்சு அடிச்சாங்க. அப்புறம் அவர் மேல 4 கேஸ் போட்டு திருவையாறில ரிமான்ட் பண்ணினாங்க. மறுபடி பெய்ல் எடுத்தோம். 2009ல் அரியலூர் ஸ்டேஷன்லேருந்து பிடிச்சுட்டுப் போய் ஒரு வாரம் வச்சிருந்து அடிச்சுச் சித்ரவதை பண்ணி அப்புறம் ஒரு கேஸ்ல ரிமான்ட் பண்ணினாங்க. அதோட முடியல. நான், என் ஓப்பிடியா, மாமியார், சித்தப்பா மொத்தம் 11 பேர், ரண்டு ஆண், 9 பெண்கள திருச்சி போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போச்சு.. திருச்சி டோல்கேட் மண்டபத்தில் வச்சு ராத்திரியெல்லாம் அடிச்சாங்க. சித்தப்பாவையும், மாமியாரையும் விட்டாங்க. என்னையும் ஓப்பிடியாவையும் புடவையெல்லாம் அவுத்துட்டு வெறும் பாடி, பாவாடையோட 3 பெண் போலீஸ்கள் தொடை மேல ஏறி நின்னு ஆண் போலீசை விட்டு அடிக்கச் சொன்னாங்க. இப்படி ஒரு வாரம் நடந்துச்சி. அப்புறம் திருமானூர் ஸ்டேசனுக்குக் கொண்டுபோயி மத்தவங்க மேல குண்டர் சட்டம் போட எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு விட்டாங்க. என் கொழுந்தனார் அப்புறம் அண்ணன் 2 பேர் மேல குண்டர் சட்டம் போட்டாங்க.

2010ல மறுபடி மெடிகல் காலேஜ் போலீஸ் வந்து பிடிச்சது. அங்கே வந்த புதுக்கோட்டை போலீஸ் எங்களை ஆலங்குடி கொண்டு போச்சுது. 8 நாள் வச்சிருந்தாங்க. நாலு நாள் என்னையும் எம் புருசனையும் பத்துப் பத்துப்பேர் சுத்தி நின்னு அடிச்சாங்க. அப்புறம் 6 பேர் மேல கேஸ் போட்டாங்க. எம் மேலையும் (24) ஓப்பிடியா (22) மேலையும் கொள்ளை முயற்சின்னு கேஸ் போட்டாங்க.

அப்புறம் அம்மாபேட்டையிலுள்ள அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ பஸ்சை நிறுத்தி ஏட்டு செழியன், ரவி ஆய்வாளர், சுபாஷ் சந்திர போஸ் என்கிற மூணு போலீஸ்களும் என்னை, அண்ணனை, வீட்டுக்காரரை அழைச்சிட்டுப் போனாங்க. இரவு 9 மணிக்கு என்னை விட்டுட்டாங்க. மறு நாள் போனேன். அவங்களைக் காட்டல. 28 நாள் இப்படி வச்சு அடிச்சாங்க. மஜிஸ்ட்ரேட்டிடம் பெட்டிசன் கொடுத்த பின்புதான் ரிமான்ட் பண்ணாங்க. ஆனா அப்புறம் அவரு மேல குண்டர் சட்டம் போட்டாங்க. தெற்கு ஸ்டேஷன், மெடிகல் காலேஜ், பல்கலை கழகம், கீழவாசல்ன்னு மொத்தம் எட்டு கேஸ் அவர் மேல இருக்கு. அப்புறம் திருவெறும்பூர் ஸ்டேஷன்லையும் ஒரு கேஸ் இருக்கு.”.

அன்னை சிவகாமி நகரில் சேதுமணி மாதவன் உருவாக்கிய பெண்கள் சிறைச்சாலை.

அன்னை சிவகாமி நகரில் முருகேசன் என்பவரை அப்போது (2005) இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் தேடி வந்தார், முருகேசன் பயந்தோடிச் சென்றவுடன் அவரது வீட்டில் அந்தப் பகுதியிலிருந்த 15 பெண்களை உள்ளே வைத்துப் பூட்டிச் சுமார் 45 நாள் சிறை வைத்ததாகப் பலரும் வாக்குமூலங்கள் அளித்தனர். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், முத்தரசு, தமிழ்ச்செல்வன் முதலானவர்களும் உடந்தையாக இருந்ததாக நாகன் மகன் கணேசன் கூறினார். வேண்டும்போது வந்து பண்ணி அடிச்சு விருந்து சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டும் போவார்களாம்

ஒரு நாள் மஃப்டியில் அங்கு வந்த இன்னாசிமுத்து, தருமராஜ் என்ற இரண்டு போலீஸ்களை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த செல்லன் மகன் ஆறுமுகம் அடித்து அங்கேயே உட்கார வைத்துவிட்டார். இதற்காக அவர் பட்ட சித்திரவதைகள், அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஏராளம். ஈரோடு, சேலம், பரமக்குடி முதலான பல இடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு கொலை வழக்கும் அடக்கம். எனினும் விசாரணை முடிந்துள்ள 3 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி ஆறுமுகம் என்பவரைத் தேடி வந்து அவரது மனைவி மீனாட்சியைக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் அவரைத் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். வயதில் சிறிய அவரது கொழுந்தன்முன் அவரது மேற்சீலையை அவிழ்த்து வீசி. கொழுந்தன் மீது அவரைத் தள்ளி “அவளைக் கெடுறா” எனச் சொல்லி அடித்துள்ளனர். கையை அடித்து, பின்புறம் இழுத்து வளைத்துச் சித்திரவதை செய்ததில் மீனாட்சியின் சுண்டு விரல் நிரந்தரமாக வளைந்துள்ளது. அவமானம் தாங்காத மீனாட்சி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முனைந்துள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்பதற்காக அவரது வீட்டார் அவரைக் கண்காணிப்பில் வைத்துப் பாதுகாத்துள்ளனர். தனது ஒன்பதாவது படிக்கும் மகளையும் பன்னிரண்டாவது படிக்கும் மகனையும் பள்ளியில் சென்று அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவமானம் செய்து, “நீங்கள்லாம் திருந்தினா எப்படி எங்களுக்கு வழக்குக் கிடைக்கும். எங்களின் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன செவாங்க? உங்களை நாங்க திருந்த விட்ருவோமா?” என ஏட்டு செழியனும் ஆய்வாளர் ரவிச்சந்திரனும் பள்ளியிலிருந்து விரட்டியதாகவும் மீனாட்சி வாக்குமூலம் அளித்தார். மகள் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

சித்திரவதைகளில் லாடம் கட்டுவது, விரல்களில் ஊசி ஏற்றுவது, சிகரெட்டால் சுடுவது, மிக அசிங்கமாகப் பேசுவது என இந்த அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

பெண்கள் மீதுப் பொய்யாகத் திருட்டுக் கேஸ்கள் போடுவது தவிர கஞ்சா கேஸ்கள் போடும் கொடுமையும் இங்கு நடந்துள்ளன. ஆனந்த் மனைவி கல்யாணி இவ்வாறு தன்மீது பொய்யாகக் கஞ்சா வழக்கு போடப்பட்டது குறித்து எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செழியன் என்னும் ஏட்டு காளியப்பனின் மனைவி பங்காருவின் வீட்டுப்பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். செழியன், ஆய்வாளர் சோமசுந்தரம் இருவரும் அவர்களின் மகன் ராஜாவின் டி,வி,எஸ் ஃபோர்ட் எனும் இரு சக்கர வாகனத்தையும் (எண்: டி.என். ஏ.கே 49/ 7480) எடுத்துச் சென்றுள்ளனர். ஓட்டர் அய்.டியையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் மானோஜிப்பட்டியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைக்குப்பின் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட்டார். சிறையிலிருந்தபோது அவர் இறந்து போனார். 2008ல் முன்னயம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற 9 வயதுச் சிறுவனைச் சமயபுரம் காவல் துறைக் கைது செய்து கொண்டு சென்று கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்து தலையில் கடுமையான காயங்களுடன் வீட்டில் கொண்டு சென்று போட்டது. மூன்று நாட்களில் அவன் இறந்து போனான்.

இம்மக்ககள் அளித்துள்ள இந்த வாக்கு மூலங்களைப் படித்தால் நம் காவல்துறையிடம் இத்தனை வக்கிரங்கள் புதைந்துள்ளனவா என ஒருவர் வியப்படைவதைத் தவிர்க்க இயலாது.

நிர்வாகத்தின் விளக்கங்கள்

மாவட்ட ஆட்சியரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது தன் அதிகார வரம்பிற்குள்ன் சாத்தியமான வகையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த விசாரணையில் காவல் அதிகாரிகள்மீது கூறப்பட்டிருக்கும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அவர் எங்களின் குற்றச்சாட்டுகளை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லுமாறும் வேறு எந்தெந்த முகமைகளிடம் இது குறித்துப் புகார்கள் செய்ய இயலுமோ அங்கெல்லாமும் முயற்சியுங்கள் என்றும் கூறினார். காவல்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாக இருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது என்பதைச் சொல்லி வந்தோம்.

ஐ.ஜி அலெக்சாண்டர் மோகன் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கிரிமினல்கள் மீது மட்டுமே தாங்கள் வழக்குகளைப் போடுவதாகவும், பொய் வழக்குகள் போடுவதில்லை எனவும் கூறினார். குற்றவாளிகள் மீது வழக்குகள் போடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஒரு இனத்தையே குற்றவாளியாகக் கருதி நடவடிக்கை எடுப்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம் எனச் சொன்னபோது அப்படியெல்லாம் இல்லை எனத் தான் குறவர் பிரதிநிதிகளிடம் விளக்கி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளனர் எனப் பதிலளித்த அவர் கண்காணிப்பாளரிடம் பேசுமாறு கூறினார். கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி மிகவும் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டார். காவல் துறை அதிகாரிகள் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

1. காவல் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளே இந்த அத்து மீறல்களுக்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பான போதிலும் உயர் அதிகாரிகள் இதற்கு உடந்தையாகவும், இது குறித்து முறையான விசாரணைக்குத் தயாரில்லாமலுமே உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் பழங்குடிப் பிரதிநிதிகள் ஐ.ஜி அலெக்சான்டர் மோகனைச் சந்திக்கச் சென்றபோது அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வேண்டுமானால் நீங்களே போலிஸ் ஸ்டேஷனை நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். இன்று அவர் தஞ்சையில் இருந்தும் நாங்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டும் எங்களை அவர் சந்திக்கவில்லை. தொடர்ந்து சில மாதங்களாக இந்த அத்து மீறல்கள் குறித்துப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருந்ததை மாவட்டக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. இன்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அக்கறையுடன் நாங்கள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டது குறிப்பிடத் தக்கது. வெறும் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் நீதி கிடைக்க வழி இல்லை என்பதையே இவை அனைத்தும் உறுதி செய்கின்றன.

2. குறவர்கள், இருளர்கள், ஒட்டர்கள் போன்ற பழங்குடிகள் எண்ணிக்கையில் சிறுத்தும் எந்த ஓரிடத்திலும் பெரும்பான்மையாக இல்லாதும் இருப்பதால் இவர்களின் பிரச்சினைகளை எந்த அரசியல் கட்சிகளும் பொருட்படுத்துவதில்லை. மிகவும் அடித்தள மக்களாகவும் எவ்வகையிலும் அரசியல் அதிகாரமும் அற்றுள்ள இவர்களின் பிரச்சினைகளில் இடதுசாரிக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை வழி நடத்துவது பாராட்டுக்குரியது. எனினும் குறிப்பான வழக்குகள் புகார்கள் ஆகியவற்றைக் காவல் துறை அதிகாரிகள் மீது பதிவு செய்து முறையான வழக்குகளை அத்து மீறிய காவல் அதிகாரிகளின் மீது மேற்கொள்ளும் முயற்சி இதுவரை செய்யப்படாதது வருந்தத் தக்கது.

3. இது போன்று பொய் வழக்குகள் போடுவதன் மூலம் திருட்டுக்களும், கொள்ளைகளும் குறைந்ததில்லை என்பதை காவல்துறை கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுவது குறித்தும் அதற்குக் கவலை இல்லை.

4. இதுவரை இவ்வாறு பழங்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்த வழக்குகள் அனைத்திலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் காவல்துறைக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

5. பெண்களை இவ்வாறு கொண்டுவந்து சித்திரவதை செய்து திருட்டு மற்றும் கஞ்சா வாழக்குகள் போடப்படும் கொடுமைகட்கும் அதிக முன்னுதாரணங்கள் இல்லை.

6. தஞ்சாவூரில் உள்ளவர்களைக் கொண்டு சென்று ஈரோடு, சேலம், பரமக்குடி முதலிய ஊர்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவர்களுக்கு உறவினர்களோ, தொடர்புகளோ உள்ளனவா எனக் கேட்டபோது அப்படி இல்லை என்பது தெரிய வந்தது. பொதுவாகப் பழக்கமில்லாத பகுதிகளில் திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் எந்த வீடுகளிலும் திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ அவை ந்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

7. பலர் மீது அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் திருடியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன. மானோஜிப்பட்டி பொதிகை நகரைச் சேர்ந்த பொன்னன் மகன் மணி சேலம் சிறையில் இருந்த காலத்தில் பந்தநல்லூரில் திருடியதாகப் பிடித்துச் சென்று 9 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து அடித்துள்ளனர். சேலம் சிறையில் இருந்ததை அவர் நிறுவியவுடன் அவர் மீது கஞ்சா வழக்குப் போடுச் சிறையில் அடைத்தனர்.

8.. காவல் துறை பழங்குடிக் குறவர்களைத் தேவைப்படும்போது வழக்குகள் போடுவதற்கான சேமிப்புப் படையாகவே வைத்துள்ளது.. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அதிக அளவில் கைது செய்யப்படும் அவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப் படுகின்றனர். சிறிய அளவில் கைதுகள் நடக்கும்போது ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படுகின்றன. கைதுகள், சட்ட விரோதக் காவல்கள், சித்திரவதைகள், சிறை வாழ்க்கை, வழக்குகள், பிணை விடுதலைக்கு அலைதல் என்பதாக அவர்களின் வாழ்க்கை கழிகிறது.

எமது கோரிக்கைகள்

இப்பழங்குடி மக்கள் காவல்துறை மீது வைக்கும் ஏராளமான குற்றச்சாட்டுகளை விசாரித்து நீதி வழங்குவது ஆர்.டி.ஓ விசாரணையில் சாத்தியமே இல்லை என்பதால் பதவியில் உள்ள நீதிபதி ஒருவரால் இவை விசாரிக்கப்பட அரசு உத்தரவிட வேண்டும்..

சேதுமணி மாதவன், சுபாஷ் சந்திர போஸ் சோம சுந்தரம், ரவிச்சந்திரன், தமிழ்ச் செல்வன், முத்தரசு, பழனியப்பன் முதலான ஆய்வாளர்கள் ரவி, செழியன், தருமராஜ், பன்னீர்செல்வம், பத்மநாபன் முதலான காவலர்கள் மீது இம்மக்கள் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகின்றனர். சாட்டுகின்றனர். அவர்கள் இப்பகுதியிலேயே பணியாற்றும் பட்சத்தில் விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுத் துறை நடவடிக்கை மட்டுமின்றிப் பழங்குடிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்ற விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சித்திரவதையில் இறந்துபோன முருகன், முத்துக்குமார் ஆகியோரின் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பழங்குடியினர் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் அனைத்துக் காவல் துறையினருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

பழங்குடிக் குறவர்கள்மீதான காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே இவ்வறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. இனச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருப்பது முதலான பழங்குடிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் எதுவும் இவர்களைச் சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் இவற்றைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

இது போன்ற சிறுபான்மையாக உள்ள மக்கட் பிரிவுகளின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆங்காங்கு அக்கறையுள்ள மனித உரிமை அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும்.

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ்

3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை – 600 020.
செல்: 9444120582.

 

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்

உண்மை அறியும் குழு அறிக்கை

(இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டு வரும் ஏப்ரல் 7, 2017 உடன் இரண்டாண்டுகள் மிடிகின்றன. இன்னும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.அபோது நாங்கள் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை) 

சென்னை,  ஏப்ரல் 21, 2015

சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF – AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல்நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பதும் எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்றசந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக அனுதாபத்தையும், இதற்குக் காரணமான ஆந்திரகாவல்துறையின் மீது கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் செம்மரக் கடத்தல்தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில்தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தவிரவும் கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும்மார்புக்கு மேலாகவும், தலையிலும் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும்இது போலி என்கவுன்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது  எனத் தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள்மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூடக் கண்டிப்பிற்குஉள்ளாகியது.

பேருந்துகளில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளிகள் இடையில்இறக்கப்பட்டுக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி, சம்பவம்  நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியான போது ஆந்திரக்காவல்துறை முழுமையாக அம்பலப்பட்டது.

ஆந்திரக் காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலைநியாயப் படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஜே.வி.ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், “போலீசுக்குத்தெரியாதது உங்களுக்குத் தெரியுமோ” என்றெல்லாம் ஆத்திரப்பட்டுக் கத்த வேண்டிய நிலைஇன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் APCLC போன்ற ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் உள்ளிட்டஅமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல் படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த “மோதல்” கொலைகள் தொடர்பான உண்மைகளையும்,இதற்குப் பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம்வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்யகீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:

 6

உண்மைஅறியும் குழு

அ. மார்க்ஸ் – தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (National Confederationof Human Rights Organisations -NCHRO). சென்னை.- 09444120582

கோ. சுகுமாரன் – மக்கள்உரிமைக் கூட்டமைப்பு (Federation of PeoplesRights), பாண்டிச்சேரி. –  9894054640
பேரா.பிரபா. கல்விமணி –   பழங்குடிஇருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம். – 09442622970
சீனிவாசன் –  சுற்றுச்சூழல் ஆய்வாளர், சென்னை.- 9840081114
ரமணி- ஜனநாயகத் தொழிற்சங்க மையம்.சென்னை.- 9566087526
முகம்மது தன்வீர் –  தேசிய மனிதஉரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (NCHRO), சென்னை.- 7299924030
தை.கந்தசாமி- தலித்மக்கள்பண்பாட்டுக் கழகம், திருத்துரைபூண்டி – 9486912869
பரிமளா- இளந்தமிழகம் இயக்கம், சென்னை.- 9840713315
சே.கோச்சடை –  மக்கள் கல்விஇயக்கம். – 9443883117
தமயந்தி – வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம்,சேலம்.- 9943216762
அப்துல் சமது- மனிதநேயமக்கள்கட்சி,  வேலூர். – 8940184100
விநாயகம்  – மக்கள் விடுதலை இதழ்- 9994094700
சேகர்-  மக்கள்வழக்குரைஞர்  கழகம்,திருவண்ணாமலை. – 9789558283
வேடியப்பன் – சமூகசெயற்பாட்டாளர், அரூர்- 9443510238.

பாரதிதாசன், இளந்தமிழகம் இயக்கம்,சென்னை-9994743071

மணியரசன் –  வழக்குரைஞர்,செங்கம் – 9442810463

எங்கள் ஆய்வு முறை

என்கவுன்டர் கொலைகள் நடந்தஇடங்களுக்கு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவுகடுமையாகக் கடைபிட்டிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டயாரிடமும் தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனத்தடையும் உள்ளது. இது ஒரு “உண்மையான” மோதல் தான் எனவும், மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்தஎன்கவுன்டரைச் செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு ‘டெக்கான்கிரானிகலு’க்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17,18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியம்; தருமபுரி மாவட்டம் சித்தேரிமலை ஆகியபகுதிகளுக்குக்  சென்று பல தரப்பினரையும்சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர்செல்வம், கல்லுக்காடுசசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம்.அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ் நிலை, அவர்களின் கிராமங்களின் நிலைஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தோம்.  முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம்,வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்குச் சென்றுக் கொலையுண்டவர்களின்குடும்பங்களைச் சந்தித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் மற்றும் இதன் பின்னணிதொடர்பான ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றையும்கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள் செயல்படும்விதங்களையும் ஆய்வு செய்தோம்.

செம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல்,இப்படி இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி முன்னதாக வெளியிடப்பட்ட உண்மைஅறியும் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

ஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் 

காலை 10 மணி வாக்கில் திருப்பதியைஒட்டிய சேஷாசலம் காடுகளில் “செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த” 20பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளி வந்து அதிர்ச்சியைவிளைவித்தன. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால் டி.ஐ.ஜிகாந்தாராவ் தலைமையில் வந்த சிறப்புக் காவற் படையினர் (APRSASTF)”தற்காப்பிற்காக”த் சுட்டுக் கொன்றதாகவும் ஆந்திரத் தரப்பில்சொல்லப்பட்டது.

எனினும் இது தற்காப்புக்காகக்கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களைவிரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டேஇருந்தன.

அடுத்தடுத்த நாட்களில்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தமிழக் போலீஸ்உதவியுடன் மூட்டைகளாகக் கட்டப்பட்டு உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்படன். உடல்களோடுஇறப்புச் சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட உயிர் வளங்களைக்கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரைக் கொலை செய்ய முயன்றது முதலானகுற்றங்களைக் கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கைப் பிரதிஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.

கொல்லப்பட்டவர்களின் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  படவேடு (7)

காந்தி நகர் எஸ்.மகேந்திரன் (22), முருகப்பாடி ஜி.மூர்த்தி (38), ஜி.முனுசாமி (35),  நுளம்பை கே.பெருமாள் (37),வேட்டகிரிபாளையம்கே.சசிகுமார்(34),  முருகன் (38), கலசமுத்திரம் வி.பழனி (35). (போயர் வகுப்பைச்சேர்ந்த கலசமுத்திரம் பழனியின் உடல் வந்த அன்றே எரிக்கப்பட்டது. வன்னியர்சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பின்புதைக்கப்பட்டன).

திருவண்ணாமலைமாவட்டம் ஜமுனமரத்தூர் (5)

மேலக்கணவாயூர் ஆர்.பன்னீர்செல்வம் (22), மேல்குப்சானூர் (நம்மியம்பட்டு)எஸ். கோவிந்தசாமி (42), கோ.ராஜேந்திரன் (30), சி.சின்னசாமி (48) ,வி.வள்ளிமுத்து(18), ( இந்த ஐந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் புதைக்கப்பட்டன).

தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை (7)

அரசநத்தம் வி.ஹரிகிருஷ்ணன் (52), எம்.வெங்கடேசன்(23), எஸ்.சிவகுமார் (25), டி.லட்சுமணன் (23), எல். லட்சுமணன் (46), ஆலமரத்து வளவுஏ.வேலாயுதம் (25). கருக்கன்பட்டி பி.சிவலிங்கம்(42). ( இந்த அய்ந்து மலையாளிப் பழங்குடியினரின்உடல்களும் அன்றே எரிக்கப்பட்டன எரிக்க வேண்டும் என ரெவின்யூ மற்றும் காவல்துறைஅதிகாரிகள் வற்புறுத்தியதாக கொல்லப்பட்ட வேலாயுதத்தின் தம்பி ராமமூர்த்தி கூறினார்).

சேலம் மாவட்டம்,வாழப்பாடி வட்டம், கல்வராயன் மலை (1)

கல்லுக்காடுச.சசிகுமார், (பழங்குடியினரான இவரது உடலும் அன்றே எரிக்கப்பட்டது).

5

கொல்லப்பட்ட நிகழ்வு குறித்துகொல்லப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டி ஆந்திர காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல்அறிக்கை விவரம்:திருப்பதி மாவட்டம், சந்திரகிரி காவல் நிலையம், மு.த.எண்: 42/2015, தேதி: ஏப்ரல்7, 2015 குற்றப் பிரிவுகள்

147,148,307,332 r/w 149 இ.த.ச மற்றும் ஆந்திர மாநிலவனச் சட்டப் பிரிவுகள் 20(1), (2),(3), (4), 44 மற்றும் Biological Diversity Actபிரிவுகள் 7,24(1), 55. சம்பவம் நிகழ்ந்த நேரம்: ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை காலை5.30 முதல் 06 மணிக்குள். 

தொடர்ந்த நிகழ்வுகள்:

20 பேர்களும்சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்[பட்டதாக ஆந்திரகாவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11பேர்களின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்குக் காட்டப்பட்டன. உடல்களுக்குஇடையில் அவர்களால் ‘வெட்டப்பட்ட’ செம்மரத் துண்டுகள் எனக் ட்டப்பட்டவைகளில்பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதைக் காட்டுவதைஊடகங்கள் சுட்டிக் காட்டின. மேலே குறிப்பிட்டவாறு, கொண்டுவரப்பட்டபழங்குடியினரின்  உடல்களில் எட்டுஎரிக்கப்பட்டன். ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில்பழனியின் உடல் எரிக்கப்பட்டது. வன்னியர்கள் நீதி வேண்டும் எனச் சாலை மறியல்செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்டமுயற்சிகளின் விளைவாக ஆறு பேர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டுள்ளன.மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம்ஆந்திர காவல்துறையின் ‘என்கவுன்டர்’ கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ய்ப்புள்ளது.

இதற்கிடையில்மோதலின்போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திரக் காவல்துறை சொல்வதற்குஎதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் மேலுக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர்கள்திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திரப் போலீசால் கடத்திச் செல்லப்பட்ட செய்திதான்அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள்அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன..

நடந்ததுஇதுதான். எங்களது விசாரணையும் இதை உறுதிப் படுத்தியது. மரக் கடத்தல் மாஃபியாவின்உள்ளூர் ஏஜன்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் மரம் வெட்டுவதற்கென அழைத்துச்செல்லப்பட்ட ஒரு குழுவில் எட்டு பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடுவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாக சித்தேரிமலையிலிருந்து சனிக்கிழமை (ஏப் 4) மாலையே புறப்பட்டு வந்த குழு அது. ஜவ்வாதுமலையில் வந்து தங்கிப் பின் ஞாயிறு மதியம் அவர்களைக் கண்ணமங்கலம் கொண்டு வந்துஅங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேணிகுண்டா கொண்டு செல்வது ஏஜன்டுகளின்  திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ளபடவேட்டைச் சேர்ந் சேகர் (45),சித்தேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும்இருந்துள்ளனர்.

3

இவர்களில்பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில்மது அருந்தச் சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற் போயிற்று. அந்தக் குழுவில்அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்தபாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள்நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தது.பின் அவர் ஊருக்குத் திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றைவிரிவாக எங்களிடம் விளக்கினார்.

ரேணிகுண்டாவைநோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திரபோலீசாரால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்களை இறக்கியபோது யாரோ ஒருபெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப் பெண்ணின் கணவர் என நினைத்துக்கொண்டு விட்டு விட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் அழைத்துச் சென்றனர். சேகர் அடுத்தநிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்துத் தப்பித்துவந்துள்ளார்.

இப்படி வெவ்வேறுபேருந்துகளில் வந்துள்ள பலரும் அன்று, அதாவது திங்கள் மாலை வாகனங்களிலிருந்துஇறக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர் செல்வமும்இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பிஓடி வந்துள்ளார் இளங்கோ.

ஆந்திரகாவல்துறையின் என்கவுன்டர் கதையைப் பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர்,பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ‘பீப்பிள்ஸ் வாட்ச்’அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள்குறித்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இளங்கோ முதலானோர் சொல்வதிலிருந்து அன்று இவ்வாறு ஆந்திரக் காவல்துறையால் கடத்திச்செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலைஎன்ன என்பது மர்மமாக உள்ளது.

4

இதற்கிடையில்ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக இன்று ஆந்திர மாநிலசெம்மரக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் படையினர் மீது ஆட்களைக் கடத்தியது, கொன்றதுஆகிய குற்றங்களைச் சுமத்தி இரு  முதல்தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

மகேந்திரன், கல்லுக்காடுசசிகுமார் ஆகியோர் தவிர பிற அனைவரது வீடுகளுக்கும் எங்கள் குழுவினர் சென்றனர். இவர்கள்அனைவரும் ஒரே மாதிரி வாக்குமூலங்களையே அளித்தனர். இன்று கொல்லப்பட்டவர்கள் யாரும்மரம் வெட்டப் போகவில்லை என உறுதிபடக் கூறினர். இதுவரை அவர்கள் மரம் வெட்டும்வேலைக்குச் சென்றதே இல்லை எனவும் கூறுகின்றனர். பெயின்ட் அடிப்பது, கட்டிடவேலையில் கலவை போடுவது, காப்பிக் கொட்டை பறிப்பது, மேஸ்திரி வேலை செய்வது  முதலான வேலைகளுக்காகத்தான் அடிக்கடி இப்படிப்பல நாட்கள் வெளியூர் செல்வார்கள் எனச் சொன்னார்கள். வேட்டகிரிபாளையம் சசிகுமார்,முருகன் ஆகியோரது வீடுகளில் அவர்கள் பெயின்டிங் செய்யப் பயன்படுத்தும் கருவிகள்,வண்ணக் கறை படிந்த சட்டைகள் ஆகியவற்றையும் காட்டினர்

மரம் வெட்டப்போவதில்லை எனில் பின் எதற்காக அன்று திருப்பதி பக்கம் சென்றனர் என்கிற கேள்விக்குஅவர்களிடம் பதிலில்லை. கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கைகளுக்குஅளித்த பேட்டிகளில் இவர்களில் சிலர் மரம் வெட்டப் போனதாகச் சொல்லியுள்ளதையும் நாம்மறந்துவிட இயலாது.

செம்மரம்வெட்டிக் கடத்தல் காரர்களுக்கு உதவுவது குற்றம் என்பதால் அதற்காகப் போனார்கள்என்றால் சுட்டது சரிதானே என நாம் நினைத்து விடுவோமோ என அந்த அப்பாவி மக்கள்அச்சப்படுவது விளங்கியது. அதோடு அவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையேதொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வறுமை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழைஇல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில்,கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவுஉயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர்கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் ப்[அல மாதங்கள்அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள்வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப் படுகிறது என்றோ, அதிகாரிகளுக்குலஞ்சம் கொடுத்துச் சரிகட்டியாகிவிட்டதால், பிரச்சினை  ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும்அழைத்துச் செல்லுகின்றனர்.

ஒரு சிலர் மரம்வெட்டுவதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை எண்ணியும் இந்த ஆபத்தான வேலைகளுக்குச்செல்லுகின்றனர்.

இவர்களில்ஆசிரியர் பயிற்சி முடித்த பழனி, அஞ்சல் வழிக் கல்வியில் பட்டம் பயிலும் மகேந்திரன்தவிர மற்றவர்கள் அதிகம் படிக்காதவர்கள். பழங்குடி மலையாளிகளில் பலர்படிக்காதவர்கள். ஒரு சிலருக்கு செல்போன்களைக் கூடப் பயன்படுத்தத் தெரியாது எனஅவர்களின் உறவினர்கள் கூறினர். கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்எல்லோரும் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இன்று கணவரை இழந்துள்ள பெண்கள் பலரும் 30வயதுக்கும் குறைந்த இளம் வயதினர். சிலர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

இவர்கள்எல்லோரும் ஒரே குரலில் சொன்ன இன்னொரு விடயம் கொல்லப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட தம்உறவினர்களின் உடல்கள் யாவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டும் தீக்காயங்களுடனும்இருந்தது என்பதுதான்.

மலைவாழ்ப்பழங்குடியினரைப் பொறுத்த மட்டில் அவர்கள் முழுவதும் மழையை நம்பியே வாழ்கின்றனர்.யாரிடமும் போதுமான அளவு நிலம் இல்லை. பலரும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலங்களையேகொண்டுள்ளனர். சில புளியமரங்கள், பலா மரங்கள். ஆங்காங்கு கண்ணில் படுகின்றன, மழைநீரைத் தேக்கி வைக்க சிறு அணைகளோ, குளம் குட்டைகளோ இல்லை. மழை வந்தால்தான்சாகுபடி. விளையும் பொருட்களை அங்கேயே கொள்முதல் செய்ய அரசு எந்த வழியையும்செய்யவில்லை. மலைக்குச் செல்ல சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. சித்தேரி மலையில்அடிவாரத்திலிருந்து (வாச்சாத்தி) மேலே செல்ல முறையான சாலையே இல்லை. நாங்கள் சென்றஸ்கார்பியோ வண்டி ஒரிடத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டது.

சித்தேரிமலையில் பழங்குடியினருக்குப் பொதுச் சுடுகாடும் கூடக் கிடையாது, தற்போது கொல்லப்பட்டஎட்டு பேர்களும் அவரவரின் சொந்த நிலங்களிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியினர்நலத் துறையின் கீழ் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில்ஆசிரியர்கள் இல்லை. நம்மியம்பாடி மேலக்குசானூரில் உள்ள ஒரு உண்டு உறைவிடப்பள்ளியில் 60 மாணவர்கள் உள்ளனர், ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வாட்ச் மேன், ஒருசமையற்காரர் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியர்தான் வார்டன் வேலையையும் செய்யவேண்டும். சித்தேரி மலையில் அரசநத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 172மாணவர்கள் உள்ளனர். அது ஒரு நடுநிலைப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர்.

2

போதியமருத்துவமனைகளும் கிடையாது. இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லா நேரங்களிலும்இருப்பதில்லை. 99 சதப் பிரசவங்கள் இன்னும் வீடுகளிலேயே நடக்கின்றன. பிரசவம்முடிந்த பிறகு மருத்துவ மனையில் கொண்டு வந்து பதிந்து அழைத்துச் செல்கின்றனர்.முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படும் 12,000 ரூபாய் உதவித் தொகையைப்பெறுவதற்காகவே இப்படிச் செய்கின்றனர், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும்சரி போதிய சத்துணவு கிடைப்பதில்லை. குழந்தை இறப்பு வீதம் இங்கு அதிகம் என்கிறார்இப்பகுதியில் UNICEF ஆய்வாளராகப் பணி செய்யும் டாக்டர் வித்யாசாகர்.நம்மியம்பாடியில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எல்லோரும்,குறிப்பாகப் பெண்கள் சோகை பிடித்தவர்களாகவும் இளைத்தும் காணப்பட்டனர். டாக்டர்பினாயக் சென் குறிப்பிடுவதுபோல இப்பகுதிப் பழங்குடி மக்களுக்கும் உயரத்திற்கேற்றநிறையும் பருமனும் இல்லை. போதிய சத்துணவு இல்லாமையே இதன் காரணம்.

வன உரிமைச்சட்டம் 2006 என்பது வனத்தை நம்பி வாழ்பவர்களுக்குப் பல உரிமைகளைத் தருகிறது. தமிழகஅரசு அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கண்டுகொள்வதே இல்லை. பிற மாநிலங்களில் சுமார் 3மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1.5 மில்லியன் மலைவாழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதோடு,திட்ட ஒதுக்கீடுகளில் பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும் கூடப்பிற துறைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. வன உரிமைச் சட்டம் பயன்பாட்டில்இல்லாததன் விளைவாக இன்று வனத் துறை அதிகாரிகள் இம்மக்களைத் தொல்லை செய்வதற்கும் வழியாகிவிடுகிறது.

இதழாளர் ஒருவர்,”சரி பஞ்சத்தின் விளைவாக உங்களின் கடைசி மாட்டையும், இருந்த பனைமரங்களையும்விற்று விட்டீர்கள். இந்தப் பணம் தீர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?” எனக்கேட்டபோது இப்பகுதிப் பழங்குடி ஒருவர், “காப்பாதுறவன் வருவான்” எனச்சொல்வது சில நாட்களுக்கு முன் ஒரு இதழில் வெளியாகி இருந்தது. ஆமாம், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் ஆள் பிடிக்கும் ஏஜன்டுகளாகச் செயல்பட்டுத் தங்களைக்கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளில் ஈடுபடுத்துவோர் இப்படிக் காப்பாற்றவந்தவர்களாகத் தோற்றமளிக்கும் காட்சிப் பிழ்சை ஒன்று இங்கே நிகழ்கிறது. இது இந்தஅரசப் புறக்கணிப்புகளின் விளைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது.

இவர்களின் கடும்உழைப்பின் மூலமும், இவர்களின் உயிர்களைப் பணயம் வைத்தும்  கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கும்மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பல மட்டங்களில் செம்மரக் கடத்தல் தொழில்அமைந்துள்ளது. ஒரு மட்டத்திற்கும் இன்னொன்றிர்கும் இடையில் உள்ள தொடர்பு அவ்வளவுதுல்லியமானதல்ல. யாருக்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்பது கீழே உள்ளவர்களுக்குத்தெரியாது. தொடர்புக் கண்ணியைத் தொடர்ந்து கொண்டே வந்தால் அது எங்கோ ஒரு புள்ளியில்அறுந்து போகும்.

தங்கள்கிராமத்திற்குள்ளேயே யாரோ ஒருவருக்குச் சேதி வரும். நடந்து முடிந்த கொடுமையில்பழனி அல்லது மகேந்திரன் சொல்லித்தான் சித்தேரி மலையிலிருந்து ஜமுனாமருதூருக்குவந்துப் பின் கண்ணமங்கலம் சென்று பேருந்து ஏறியதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பழனி, மகேந்திரன் இருவருமே இன்று கொல்லப்பட்டுள்ளனர். புதூர்வெங்கடேசன் என இன்னொரு ஏஜன்ட் மூலம்தான் இந்த இருவருக்கும் அல்லது இவர்களில் யாரோஒருவருக்கும் மேலிருந்து செய்தி வந்துள்ளது.

இவர்களைஅழைத்துச் செல்லும் வழியும் அவ்வப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பஸ்கண்டக்டர்கள், டிரைவர்களும் கூடச் சில நேரங்களில் கையாட்களாக உள்ளனர். குறிப்பிட்டஇடத்திலிருந்து இவர்கள் வன ஓரங்களுக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள உள்ளூர்அடித்தள மக்களின் (பெரும்பாலும் தலித்கள்) வீடுகளில் தங்க வைக்கப் படுகின்றனர்.பின் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றியோ, இல்லை வாகனம் செல்ல இயலாத இடங்களில் நீண்டநடைப் பயணம் மூலமாகவோ ஒரு ‘பைலட்’ அவர்களை செம்மரக் காடுகளுக்குக் கொண்டுசெல்கிறான். அங்கே இவர்களுக்குக் கொஞ்சம் உணவும் கருவிகளும் வழங்கப்படுகின்றன.  வெட்டிய மரங்களைத்துண்டுகளாக்கி சுமார் 25 கிலோ எடையை அவர்கள் தலையில் சுமந்து நீண்டதூரம் நடந்துவந்து சேர்ப்பித்து அகல வேண்டும். அதற்குப் பின் கடத்தல் கண்ணி அவர்களைப் பொறுத்தமட்டில் அறுந்து விடுகிறது. ஊதியத்தைக் கூட அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து தங்களைஅனுப்பிய ஏஜன்டிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பல நேரங்களில் பேசியதொகையைக் கொடுப்பதில்லை.

இந்த மரங்கள்பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்வது இன்னொரு மட்டத்தில் நடைபெறும் வேலை. பத்து டன் மரத்தை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால் அவை எட்டுலாரிகளில் ஏற்றப்படும். இன்னொரு இரண்டு லாரிகளில் ஒரு டன் மரம் ஏற்றப்பட்டு அவைமட்டும் வழியில் சோதனையில் “பிடிபடும்”. காவல்துறை, வனத்துறை உரியஅமைச்சு எல்லாவற்றிற்கும் இதற்கான காணிக்கைகள் செலுத்தப்படும். பழங்கள் என்றோ,காய்கறிகள் என்றோ இன்வாய்ஸ்களும் பிற ஆவணங்களும் பெறப்படும்.

1

இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட மரங்களை வெளி நாட்டுக் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசி அனுப்புவதுஇன்னொரு மட்டத்தில் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து மாஃபியா கும்பல்பணத்தை விசிறி அடித்து வேலை முடித்து லாபத்தை அள்ளும். 

ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச்செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை

திருப்பதிமற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளஇந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல்மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும்இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய்.வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமானவேலைப்பாடு களுக்காகவும், மருந்துக்காகவும், மதச் சடங்குகளுக்காகவும் பெரிதும்விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தைஅழியும் உயிரிகளில் (endangered species) ஒன்று என “இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்” (IUCN) 2000 த்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புத்தான்இன்று மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும்.அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன;ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ளமாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.

மிகப் பெரியஅளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள்ஆகியுள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கிரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தையமுதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார்ரெட்டி இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.

சந்திரபாபுநாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்தபோதிலும் கடப்பா மற்றும் சித்தூர்மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதியாகவே உள்ளன. சென்றதேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை.சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவேஉயர் காவல்துறை அதிகாரிகளிக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ்ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.

நவம்பர் 2014ல்”ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை” (APRSASTF)உருவாக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ்நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது படைதான்.

நாயுடுஎதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர்பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.

தமிழக எல்லையோரமாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான்செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாட்டியக்காரரான மோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும்  கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு30 வீடுகள் உண்டு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச்சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

சென்ற ஆண்டுமத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும்அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம்மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.

சிறப்புப் படைஅமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள்எல்லோரும் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது,வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப் பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில்தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது எனமுடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர்மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர். உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்;தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறதுஎனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.

கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில்வாடும் தமிழர்கள்

நாங்கள்சென்றிருந்த இரண்டு பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள்கொல்லப்பட்டு உடல்கள் அனுப்பப் படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை எனமறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படிஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது,

சென்றடிசம்பர்2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற இரு வனத்துறை அதிகாரிகள் கொடூரமாகக்கொல்லப்பட்டனர், ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்,இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொருபேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லைஎன்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொருகருத்தும் உண்டு.

இது தவிர இந்தஅதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச்சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலானதஊர்களில் மட்டும்சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்திராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன்,ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில்உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில்உள்ளனர்.

வெங்கடாசலத்தின்(35) மனைவி மகேஸ்வரி (30), திருமால் மனைவி அலமேலு மற்றும்  லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள்பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமிகும்பிடப் போனபோது தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக்கைது செய்து கொண்டு சென்றது என்றனர்.

அலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன்உட்படத் திருப்பதி சென்று வனங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச்சென்றபோது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில்சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

வழக்குரைஞர்களை வைத்து அணுகியபோதுதான் அவர்ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர்சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்றஇளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைதுசெய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.

 

வன அதிகாரிகள்இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும்,இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும்ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதிஎன்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், “தமிழர்களுக்குபிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க” எனச்சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம்.போக்குவரத்துச் செலவே இது வரை 35,000 ரூ ஆகியுள்ளதாம்.

பிள்ளைகளைவைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப் படுகிறோம் என இந்தப்பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், “:இனிமே நாங்கவிடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க” எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள்தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு. என்ன கணக்கில்430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களால்விளக்க இயலவில்லை.

ஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:

“2014ல்கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்கள், 15,520 மரத்துண்டுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. ஜன 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில்தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள்பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடகமாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள்  தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” – (டெக்கான்க்ரானிகல், ஏப்ரல் 15).

ஆக ஆந்திரடி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியதமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும்பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வதொன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

இந்த முறை 20பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத்தெரியவில்லை.

கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000 மும், ஜி.கேவாசன் காங்கிரஸ் 25,000 மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின்பிள்ளைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச்செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது.

சந்திரபாபு அரசுசென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது.வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப்போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள்பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக்கோரிக்கையும் விடுத்துள்ளார். 

செய்ய வேண்டியவை

1.மனித உரிமைஅமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப்     படை மீதுஇரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர்     மட்டுமேஅவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்துநீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப்புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதிமன்றக்கண்காணிப்பின் (monitering) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்டஅதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2.கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும்.

3.கொலை நடந்தபகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால்சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும், கொல்லப்பட்ட அன்று இந்த 20பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின்கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும்.தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்தபதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கவேண்டும்.

4.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாகஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5.செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள்பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயேகைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதைவேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டஇரு ஆந்திர வனத்துறை அதிகாரி குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

6.சுமார் 1.4 கோடிசெம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்துகைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும்தொகையைக் கொண்டு இவ் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களைமேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ல பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகபீடம் மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச்சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில்இவற்றை அவ் அமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது இதுதடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறுசெம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7.கடத்தல்காரர்களால்வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில்வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள்மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

8.தமிழக அரசுஇதுவரை வனப்பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது,இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிறமாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ளபழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம்ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குபழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்ரும் முரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள்(sensitisation programmes)) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9.பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒருஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படு மோசமாக உள்ளது.போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோலபழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதியமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாகமருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும்பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்கவேண்டும். இந்த உதவிச் செவிலியர்கள் முறையாகப் பணியாற்றுகின்றனரா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும்.

10.அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள்இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்கு வரத்து வசதிகள் அதிகப் படுத்தவேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில்சுமைகளுடன் பயணம் செய்யத் தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசுஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurementcentres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro basedindustries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில்மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

 

  1. மலைஅடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும்பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச்சிறைகள் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள்மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
  1. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHRமற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடுவழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளைஇக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம்வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையிலுள்ளவர்களைச் சந்திப்பதிலும் பலசிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரியசட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழுஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமைஅமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிறநிலையில் தமிழக அரசு, “முறையான விசாரணை வேண்டும்” என ஆந்திர அரசை”வேண்டிக் கொண்டதோடு”  நிறுத்தியுள்ளதுவன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுஎன்கவுன்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரியஇழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14.கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களின்விவரங்கள்:

 

Name.of Victim                Name of Wife.                Age.          No ofChildren        Age

 

Murugan.                           Thanjaiammal.                                                 2

 

Sasikumar.                          Muniammal.                                                     2.                   4 and 2 yrs

 

Munusamy.                         Thanjaiammal.                                                  2.                 3 and 2 yrs

 

Perumal.                              Selvi.                                                                     3.

 

Govindasvamy                     Muthammal.                                                      4.                  13,10,5and 4 yrs

 

Rajendaran.                         Nadia.                          20            ( 2 months Pregnant)

 

Venkatesan.                         Kanakarani                   20            ( married 6 months back)

 

Velayutham                           Padma.                        20.                                     1.                 1year 6 month

 

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், சென்னை 20. செல்:94441 20582

 

 

 

பார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்

வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு

அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன். நெதுசு அவர்கள் மாநிலக் கல்லூரியில் படிக்கிறார். புகழ் பெற்ற விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.
அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பின் (1968 -70) நானும் எனது பட்டமேற்படிப்பை மாநிலக் கல்லூரியில்தான் படித்தேன். அப்போது எனக்கு உதவித் தொகை எல்லாம் இல்லாததால் நான் வெளியில் மேன்ஷன்களில் தங்கித்தான் படித்தேன். எனினும் விக்டோரியா ஹாஸ்டலில் எனது நண்பர்கள் இருந்தனர். குறிப்பாக அறந்தாங்கி பெரியசாமி, திட்டை பிச்சையன் முதலானோர். (இருவரும் இப்போது இல்லை). அடிக்கடி அந்த விடுதிக்குச் செல்வது உண்டு. அபோதெல்லாம் அது பெரும்பாலும் அடித்தளச் சமூக மாணவர்கள் தங்கிப் படிக்கும்விடுதி. இப்போதும் அப்படித்தான்.
ஆனால் சுந்தரவடிவேலு அங்கிருந்தபோது நிலைமை அப்படியில்லை. இரண்டு மெஸ்கள் அங்கு இயங்கியிருக்கின்றன. சைவம் ஒன்று. அசைவம் ஒன்று. சைவ மெஸ் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பன மாணவர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஒன்று. பார்ப்பனர் அல்லாதார் அமர்ந்து சாப்பிட ஒன்று. பார்ப்பன மாணவர்கள் பார்ப்பனரல்லாதாருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதில்லை.
ஏதோ வ.வே.சு அய்யர் அவர்களின் சேரன்மாதேவி குருகுலம் பற்றி மட்டும் பேசுகிறோமே. அதே காலத்தில் தலைநகர் சென்னையிலும், Princes of Presidency எனச் சொல்லத்தக்க ஒரு ‘எலைட்’ (அப்போது) கல்லூரியில், (வெள்ளை) அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு கல்லூரியிலும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது.
இதைப் பலரும் யோசிப்பதில்லை. நான் உட்பட.
இந்தக் காலகட்டத்தில் விக்டோரியா மாணவர் விடுதி சைவப் பகுதி மாணவர்களுக்கு சுந்தரவடிவேலுதான் தலைவர். சுயமரியாதைப் பின்னணி உள்ளவராக இருந்தபோதிலும் அவரும் இதை எதிர்த்தெல்லாம் போராடவில்லை. போராடும் சூழல் இல்லை. அப்போது சில பார்ப்பன மாணவர்கள் அவரை ஒரு மனுவுடன் அணுகுகின்றனர். அந்த மனுவில் இப்படி பார்ப்பன மாணவர்களும் பார்ப்பனரல்லாத மாணவர்களும் தனித்தனியே அமர்ந்து உண்ணும் வழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கையொப்பமிட்டிருந்தனர். உண்மையில் நெதுசு அதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பக்கலிலிருந்து இப்படி ஒரு initiative தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டு மட்டுமல்ல; சைவப் பகுதி மாணவர் தலைவன் என்கிற வகையில் தான்தான் இதற்குக் காரணம் என விடுதி நிர்வாகம் தன் மீது நடவடிக்கை எடுத்து விடுமோ என்கிற அச்சந்தான் பிரதான காரணம்.
“எல்லோரும் கையெழுத்து இட்டுள்ளார்களா?” எனத் தயக்கத்துடன் கேட்கிறார் நெதுசு.
“இல்லை எட்டு (பார்ப்பன) மாணவர்கள் மட்டும் கையொப்பமிட மறுத்து விட்டார்கள். அவர்கள் மற்றவர்களோடு உட்கார்ந்து சாப்பிடமாட்டார்களாம்” என்று பதில் வருகிறது.
அப்போது விக்டோரியா விடுதியில் இருந்த பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை 88 என்கிறார் நெதுசு. மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அவர் சொல்லவில்லை. எனவே பார்ப்பனர்களின் வீதத்தை கணக்கிட முடியவில்லை. எப்படியும் 88 என்பது மிக அதிக எண்ணிக்கைதான். இட ஒதுக்கீடு எல்லாம் இப்போது அளவிற்குச் செயற்படாத காலம். அப்போது அவர்கள்தானே படித்தார்கள்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படிச் சிலர் சமபந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் பிரச்சினைக்கும் பார்ப்பன மாணவர்களே தீர்வும் சொல்கின்றனர். அந்தத் தீர்வும் வ.வே.சு அய்யர் முந்திய பத்தாண்டுகளுக்கு முன்பு வைத்த வந்த தீர்வுதான்.
“எல்லோருடனும் உட்கார்ந்து உண்ண மறுக்கும் அந்த எட்டு பார்ப்பன மாணவர்களை மட்டும் அங்குள்ள சிறிய மெஸ்ஸில் உட்கார்ந்து சாப்பிடச் சொல்லலாம். மற்ற 80 பார்ப்பன மாணவர்களும் மற்றவர்களும் ஒன்றாக ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்”
என்பதுதான் அவர்கள் வைத்த தீர்வு.
வேறு வழியில்லை. தயக்கத்துடனும் அச்சத்துடனும் மாணவர் தலைவர் என்கிற முறையில் அவர்களை அழைத்துக் கொண்டு விடுதிக் காப்பாளர் (warden) பேரா. பிரங்கோ வைச் சந்திக்கின்றார் சுந்தரவடிவேலு.
அவர் கடுமையாகப் பேசி அந்தக் கோரிக்கையை மறுத்துவிடுகிறார். பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதோரும் தனித்தனியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மாணவர்களின் சம பந்திக் கோரிக்கை முறியடிக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, இதைத் தொடங்கி வைத்தது பார்ப்பன மானவர்களேயானாலும் சுந்தரவடிவேலு அச்சப்பட்டது போல பேரா.பிரங்கோ அவர்தான் இதற்குக் காரணம் என முடிவு கட்டுகிறார். சுந்தரவடிவேலு மிகவும் பயந்து போய விடுகிறார். ‘செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா?” என்று வேதனைப் படுகிறார். ஊருக்குச் சென்று பெற்றோரின் சம்மதத்தோடு அசைவ விடுதிக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார். அதனூடாக சைவ மாணவ விடுதித் தலைமையைத் துறந்து தனக்கும் சமபந்தி உணவுப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிறுவ முயல்கிறார். சுத்த சைவ தொண்டை மண்டல வேளாளரான அவருக்கு அசைவ உணவு விடுதியில் தொழிலாளிகளின் ஒத்துழைப்புடன் தனிக்கரண்டி, பாத்திரங்களில் அசைவம் அல்லாத உணவு வழங்கப்படுகிறது.
இப்படிப் போகிறது வரலாறு.
_________________________________________________
குறிப்புகள்
1. இப்படியான ஒரு சம பந்தி உணவுக் கோரிக்கை பார்ப்பனரல்லாத மாணவர்களிடமிருந்து அல்லாது பார்ப்பன மாணவர்களிடமிருந்து எழுந்தது ஒரு முக்கியமான அம்சம். இது ஆய்வு செய்யப்படல் வேண்டும். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையை ஏதோ தமிழ்நாட்டில் இருந்த ஒரு தீவில் நடந்த போராட்டம் என்பதைப்போல மட்டும் பார்க்காமல் அந்தக் காலகட்டத்தில் தமிழக மாணவர் விடுதிகளில், அரசு விடுதிகள் உட்பட என்ன நிலை இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் சாவர்கரின் வழியிலிருந்து விலகி காந்தியின் வழியைத் தேர்வு செய்தவரும், தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சன முன்னோடியும், திருக்குரான் தமிழ் மொழியாக்கம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டும் என எழுதியவருமான வ,வே.சு அய்யரின் பங்கு வரலாற்றுப் பின்னணியில் வைத்து மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
2.சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் 1924-25 காலகட்டத்தில் தந்தை பெரியார், வரதராஜுலு நாயுடு போன்றோரால் நடத்தப்பதால் ஏற்பட்ட விழிப்புணர்வு இதற்கும் பின்னணியாக இருந்துள்ள நிலை ஒரு பக்கம் என்றால் இத்தனைக்குப் பின்னும் அரசு விடுதிகளிலும் கூட இந்நிலைமை தொடர்ந்துள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
3. இந்தக் காலகட்டத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. 1927ல் தமிழ்நாடு சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி இதைக் கண்டித்தார். அவர் பள்ளிகளுக்குப் போகும்போதெல்லாம் இது குறித்து விசாரித்தார். மன்னார்குடி நேஷனல் பள்ளியில் அவர் இது பற்றி நிர்வாகத்தை விசாரித்தது குறித்து நான் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலில் குறிப்பிட்டுள்ளேன். இந்தக் காலகட்டங்களில் காந்தி அடிகள் தமிழகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆலயக் கதவுகள் சாத்தப்பட்டன. இது குறித்துக் கண்டித்து அக்காலகட்ட சுய மரியாதை இயக்க ஏடுகளில் குத்தூசி குருசாமி விரிவாக எழுதியுள்ளார். காந்தியின் மீது தமிழ்ச் சனாதனிகளுக்கு இருந்த கோபம் அவர் தீண்டாமைக்குக் காரணமான பிரிவினரையே அதற்கு எதிராகக் களத்தில் இறக்கியதுதான். மதுரை வைத்தியநாத அய்யர், திருப்பூர் சிவசாமி அய்யர் முதலானோர் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

அசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3

(தீராநதி, மார்ச் 2017)

asokaஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டபோதும் ‘மணிமேகலை’ குறித்து ஆங்கிலத்தில் வந்துள்ள அளவிற்கு ஆழமான ஆய்வுகள் தமிழில் இல்லை. பல வகைகளில் அது தனித்துவமான ஒரு காவியம். பவுத்தக் கோட்பாடுகளை விளக்கும் முகமான உட்கதைகள், தத்துவ விவாதங்கள், ஒரு இளம் பெண்ணை முக்கிய பாத்திரமாகக் கொண்டு இயங்கும் காப்பியக் கதையாடல் எனப் பல அம்சங்களில் அது தனிச் சிறப்புடையது. மகாபாரதத்தில் பொதுவான காப்பியப் போக்கிலிருந்து விலகி நிற்கும் தத்துவ விசாரப் பகுதியான ‘பகவத் கீதை’ ஒரு பிற் சேர்க்கை என்பது அறிஞர்கள் கருத்து. பவுத்தம் முன்வைத்த தத்துவச் சிந்தனைகளுக்கு ஒரு எதிர்வினையாக பாரதம் தோன்றிப் பலகாலத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட இடைச் செருகல்தான் கீதை என்பர். ஆனால் மணிமேகலையின் ‘சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை’ எனும் முற்றிலும் தத்துவம் விவாதப் பகுதி கதைப் போக்குடன் பிரிக்க இயலாமல் பிணைந்து கிடக்கும் ஒன்று.

இயற்கையில் காணக் கிடைக்காத அதீத கற்பனைகள் என்பன பழங் காப்பியங்களில் நிறைந்து கிடப்பதென்பது வழமைதான். கூடுவிட்டுக் கூடு பாயும் விந்தையிலிருந்து பறக்கும் கம்பளம் வரை எத்தனையோ கற்பிதங்களை நாம் காப்பியங்களில் பார்த்துள்ளோம். ஆனால் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்கிற கற்பிதம் தனித்துவமானது. ஏசுநாதரும் கூட இப்படியான ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதை திரு விவிலியத்தில் காண்கிறோம். ஆனால் மணிமேகலை அமுதசுரபி கொண்டு பசியாற்றுவது என்பது இப்படியாக ‘நிகழ்த்தப்படும்’ ஒரு அற்புதமல்ல. பவுத்தத்தின் அடிப்படைகளில் ஒன்று பசிப்பிணி அகற்றல். இந்த அறக் கடப்பாட்டின் ஓரங்கமாகவே மணிமேகலை இந்த பசியகற்றும் அறப்பணியைச் செய்து திரிகிறாள்.

அரசன் முன் ஒரு கோரிக்கை வைக்கும் வாய்ப்புக் கிடைத்தபோதும் கூட அவள் அறவோர் தங்க ஒரு மடாலயம் வேண்டும் என்பதை அறவோருக்கு அளிக்கப்படும் ஒரு அடிப்படை வசதி எனும் நோக்கிலிருந்து அவள் கோரவில்லை. அவளது நோக்கம் ஒரு மடாலயம் அமைத்தல் என்பதைக் காட்டிலும் சிறைச்சாலைகளை ஒழிப்பது என்பதுதான். அது கைதிகளை அடைத்து வைக்கும் கோட்டமாக அன்றி அறவோர் வந்து இளைப்பாறிச் செல்லும் இல்லமாக ஆக்கப்பட வேண்டும் என்பதுதான் அவள் வேண்டுதல். அது உடனடியாக நிறைவேற்றவும் படுகிறது.

பவுத்த வரலாற்றில் இந்தக் காட்சி காப்பியத்தில் இடம்பெறும் ஒரு கற்பனை என்பதோடு நின்றுவிடவில்லை. மணிமேகலைக்குச் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இப்படிச் சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்குதை ஒரு வரலாற்று எதார்த்தம் ஆக்கிய அனுபவமும் பவுத்தத்திற்கு உண்டு. அதைச் சாத்தியமாக்கியவர்தான் மாமன்னர் அசோகர் (கி.மு 268 -339).  இன்றைய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி உள்ளிட்டு, இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஒரு குடையின் கீழ் ஆண்ட மாமன்னர் அவர். ‘சக்கரவர்த்தி’ எனும் பெயர் அடைவு பல நாடுகளை வென்றவர் எனும் பொருளில் அவர் பெயருடன் இணைக்கப்படவில்லை. மாறாக ‘தருமச் சக்கரத்தை உருட்டியவர்’ எனும் பொருளிலேயே அது அவரால் பாவிக்கப்பட்டது. ‘தேவனாம்பிரியர் பிரியதஸ்ஸி’ என அவர் தன்னைத் தன் சாசனங்களின் ஊடாக விளித்துக் கொண்டார். இறைவனுக்குப் பிரியமானவன், கருணை ததும்பும் பார்வைக்குரியோன் என்பது இதன் பொருள்.

கிறிஸ்துவுக்குச் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் ஆயினும் பாறைகளிலும், குகைச் சுவர்களிலும், நிறுவப்பட்ட கற்றூண்களிலும் செதுக்கப்பட்ட அவரது சாசனங்களின் (edicts) ஊடாக அவரது வரலாறு ஓரளவு துல்லியமான நமக்குக் கிடைக்கிறது. மத்தியதரைக்கடற் பகுதியில் உருவாகியிருந்த ஹெல்லெனிய அரசின் இரண்டாம் ஆன்டியோகஸ் (கி.மு 261 – 246) மற்றும் எபிரசை ஆண்ட அலெக்சான்டர் (272–255)  தமிழகத்தில் ஆட்சி புரிந்த முற்கால மூவேந்தர்கள் ஆகியோரது சமகாலத்தவர் அவர் என்பதற்கு இச்சாசனங்கள் சான்றாக உள்ளன. இன்றைய காபூல் தொடங்கி இன்றைய பாகிஸ்தான், நேபாளம், தெற்கே கர்நாடகம் வரை பரந்திருந்த அவரது பேரரசில் சுமார் 60 சாசனங்களை அவர் செதுக்கினார் என்பர். இன்னும் அவை அனைத்தும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியத் தொலலறிவுச் சேகரங்கள் எல்லாம் ஐரோப்பிய அறிஞர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் (19ம்நூ) கீழைத்தேயவியல் அறிஞர்களில் ஒருவரான ஜேம்ஸ் ப்ரின்செப் தான் முதன் முதலில் (1837) டெல்லியில் இருந்த ஒரு கற்றூணில் அசோகச் சாசனம் ஒன்றைக் கண்டு அதை வாசிக்கவும் செய்தார். இப்போது ஒரு 28 சாசனங்களின் தொகுதியை நீங்கள் இணையப் பக்கங்களில் காணலாம்.

அசோகன் என்கிற மனிதனின் இயற்பண்பையும், அசோகன் என்கிற மாமன்னனின் ஆளுகை நெறியையும் அறிய உதவும் ஒரு அற்புதமான ஆவணத் தொகுதியாக இன்று நமக்கு அவை கிடைக்கின்றன. அக்கேமெனிட் பேரரசு (இன்றைய ஈரான்) காலத்திய சாசனங்களைப் பின்பற்றித்தான் அசோகரும் இப்படியான சாசனங்களைத் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுமையும் செதுக்கினார் என்பர். ஆனால் அக்கேமெனிட் மன்னன் டேரியசின் சாசனங்கள், அவனது படைஎடுப்புகள், வெற்றிகள், அவன் கொன்று குவித்த பிரதாபங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றுவன என்றால் அசோகச் சாசனங்கள் போரின் அநீதிகளை வெளிப்படுத்துபவை, அதற்கென வருந்துபவை, மன்னிப்புக் கோருபவை. முதியோர், பெற்றோர், தொழிலாளிகள் ஆகியோரை மதிக்கச் சொல்வது மட்டுமின்றி மிருகங்களையும் பறவைகளையும் அன்பு செய்யச் சொல்பவை. அந்த வகையில் அசோகச் சாசனங்களுக்கு இணையாக வரலாற்றில் வேறெதையும் சுட்டிக் காட்ட இயலுமா எனத் தெரியவில்லை.

“வரலாற்று நூல்களில் இறைந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான பேரரசர்களின் பெயர்கள் மத்தியில் அசோகரின் பெயர் மட்டும் தனித்து ஒளி வீசுகிறது…ஒரு நட்சத்திரமாக ஒளி தெறித்து மின்னுகிறது..” – என எச்.ஜி.வெல்ஸ் போன்ற அறிஞர்கள் ஒரு கணம் மயங்கி உழற்றுவது இந்தப் பின்னணியில்தான்.

இந்தச் சாசனங்கள் அனைத்தும் அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுமையும் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக மக்கள் கண்ணில் படும் இடங்களாகப் பார்த்து அவ்வப் பகுதி மக்களின் மொழிகளில் அவை செதுக்கப்பட்டுள்ளன, அல்லது தூண்களாக நிறுவப்பட்டுள்ளன. குகைச் சுவர்களில் செதுக்கப்பட்டவை மிகவும் அடித்தள மக்கள் பேசுகிற ‘கரோஷ்தி’ மொழியிலும், ஆப்கானிஸ்தானில் உள்ள சாசனங்கள் அராமிக் மற்றும் கிரேக்கத்திலும், கங்கச் சமவெளியின் கிழக்குப் பகுதியில் ‘மாகதி’ (பாலி) மொழியிலும், மேற்குப் பகுதியில் கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தை ஒத்த மொழியிலும் அவை செதுக்கப்பட்டுள்ளன. எழுத்துருவைப் பொருத்த மட்டில் பெரும்பாலும் ‘பிராமி’ எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இத்தனை விளக்கமாக இங்கு சொல்வதற்குக் காரணம் தான் சொல்பவை அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அசோகர் குறியாக இருந்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே. இந்தச் சாசனங்களை மூன்று வகைப் படுத்தலாம். 1. மக்களை நோக்கிச் சொல்பவை 2. அரசதிகாரிகளை நோக்கிச் சொல்பவை 3.சங்கத்திலுள்ள பிக்குகளை நோக்கிச் சொல்பவை. அதிகாரிகளை நோக்கிய தன் ஆணைகளையும் கூட அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும் என நினையாமல் என்ன ஆணைகள் இடப்பட்டுள்ளன என்பதை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் அசோகருக்கு இருந்த கரிசனம் வியப்பளிக்கிறது.

எளிய மக்களுடன் உரையாடும் வடிவத்தில் மிகச் சாதாரண மொழியில் மட்டுமின்றி சற்றே சோர்வூட்டினும் பாதகமில்லை என மிக விரிவாகவும், திரும்பத் திரும்பச் சொல்வதாகவும் அவை அமைந்துள்ளன.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்கும் பவுத்தத் திட்டம் பற்றிப் பேசத் தொடங்கினோம். இந்தச் சாசனங்களின் வாயிலாக அசோகரின் ஆட்சியில் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம்.. பெரியோர், முதியோர், அறவோர், விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது கரிசனம் கொண்டதோடு அசோகர் நிற்கவில்லை. குற்றவாளிகள் மற்றும் தண்டிக்கப்பட்டவர்கள் குறித்தும் அவர் நிரம்பக் கரிசனம் கொண்டிருந்தார்..

அசோகரது ஆட்சியில் இருவகை அதிகாரிகள் இருந்ததை இந்தச் சாசனங்களிலிருந்து அறிகிறோம். ‘ராஜ்ஜுக்கள்’ எனும் அதிகாரிகளின் பணி. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வது, நீதிபரிபாலனம் செய்வது முதலியன இவர்களின் பணி. ‘தர்ம மகாமாத்திரர்கள்’ என்போர் இன்னொரு வகையினர். இவர்கள் மதம், மற்றும் நீதிபரிபாலனத் துறைகளுக்கான மேற்பார்வை அதிகாரிகள் (Department of Religious and Judicial Affairs) எனலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறைச்சாலைகளைப் பார்வையிடல், கைதிகளைச் சந்தித்து அவர்களின் நிலை அறிந்து உதவுதல், விடுதலை செய்தல் முதலியன இவர்களின் பணியாக இருந்துள்ளன.

இனி  சாசனங்களில் காணப்படும் நீதி வழங்கல் மற்றும் கைதிகள் நலன் குறித்த சில வாசகங்கள்:

  1. நீதிவழங்குவோர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடந்து கொள்ளல் பற்றி:

“தேவனாம்பிரிய மன்னர் நீதிபரிபாலிக்கும் பணியில் உள்ள மகாமாத்திரர்களுக்கு இவ்வாறு ஆணையிடுகிறார்: ‘நீங்கள் இதைக் கவனத்தில் இருத்த வேண்டும். சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் சிலரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கொடுமையாக நடத்தப் படுகின்றனர். காரணமில்லாமல் கொல்லவும் படுகின்றனர். இதனால் மக்கள் துயருறுகின்றனர். ஆகையால் நீங்கள் சார்பின்றி நேர்மையாக நடக்க வேண்டும்’..”

“….இந்தச் சாசனம் கீழ்க்கண்ட நோக்கத்திற்காக இயற்றப்படுகிறது: நகரங்களில் நீதிபரிபாலனம் செய்யும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். அவர்களது அதிகாரத்தின் கீழுள்ள மக்கள் நேர்மையற்ற முறையில் சிறையில் அடைக்கப்படுவது, அல்லது கொடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுத்தப்படுவது முதலியவற்றால் துன்புறாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் முழு வலிமையையும் பயன்படுத்தி இதைச் செயல்படுத்த வேண்டும்..” (கலிங்கத்துப் பாறைச் சாசனம் எண் 1)

2.சிறைக் கதிகள் நலன் அறிதல் மற்றும் முன்கூட்டி விடுதலை செய்தல், பொது மன்னிப்பு அளித்தல் ஆகியன பற்றி”

“அவர்கள் (தர்ம மகாமாத்திரர்கள்) சிறைக் கைதிகள் சரியான முறைகளில் நடத்தப்படுகின்றனரா என்று கண்காணிக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ‘இந்தக் கைதிக்கு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு உள்ளது’, ‘இந்தக் கைதி மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்’, ‘இவருக்கு வயதாகிவிட்டது’ என்றெல்லாம் இவர்கள் கருதினால் அந்தக் கைதிகளின் விடுதலைக்காகவும் அவர்கள் செயல்படுவார்கள். (பாறைச் சாசனங்கள் எண் 5.)

“எனது முடிசூட்டுக்குப் பிந்திய இந்த 26 ஆண்டுகளில் இருபத்தைந்து முறைகள் சிறைவாசிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” (கற்தூண் சாசனங்கள் எண் 5)

  1. மரணதண்டனைக் கைதிகளுக்குத் தண்டனை குறைப்பு பற்றி

“மக்களின் வேண்டுதல்களைக் கேட்டு நீதியை நிலைநாட்டும் பொறுப்பு ராஜ்ஜுகர்களுடையது. அவர்கள் அச்சமின்றியும் அக்கறையோடும் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்துவதிலும், தண்டனை வழங்குவதிலும் (ஏழை / பணக்காரர் , உயர்ந்தோர்/ தாழ்ந்தோர் என்கிற வேறுபாடுகள் இன்றி) அனைவர்க்கும் பொதுவாக நீதி பரிபாலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஒன்றைச் சொல்வேன். முறையாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை உடனே தண்டனையை நிறைவேற்றாமல் அவர்களை மூன்று நாட்கள் வரை சிறையில் அடைத்திருக்கலாம். இந்த நாட்களில் அவர்களின் உறவினர்கள் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்க யாரும் இல்லையெனில் அடுத்த உலகில் புண்ணியம் தேடிக் கொள்வதற்கு அவர்கள் தானங்கள் செய்யலாம். அல்லது உபவாசம் இருக்கலாம். எஞ்சியுள்ளது கொஞ்ச காலமே ஆனாலும் அதை அடுத்த உலக வாழ்க்கைக்கு நன்மை தேடப் பயன்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் தம்மப் பயிற்சி, தானம் செய்யும் பண்பு, சுய கட்டுப்பாடு ஆகியவை வளர வேண்டும் என்பதே என் விருப்பம்.” (கற் தூண் சாசனம் 4)

தேவர்களுக்கு உகந்த மாமன்னராகிய  அசோகரது நீதிபரிபாலனம் மற்றும் சிறைக் கைதிகளின் நலன் குறித்த அணுகல்முறைகளை மேற்கண்ட சாசனங்களிலிருந்துக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மிகவும் நேர்மையாக நீதிபரிபாலனம் செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது, சிறைவாசிகளை தொடர்ந்து அதிகாரிகள் சந்தித்துக் குறைகளை அறிந்து, தேவையானோருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பொது மன்னிப்பு அளித்து சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மரணதண்டனைக் கைதிகளுக்கு தண்டனை உடனே நிறைவேற்றப்படாமல் அவர்களின் தண்டனை குறைப்பிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

ஒன்றை நினைவூட்டுதல் நன்று. அசோகர் புத்தருக்குச் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர். ஏசுவுக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தியவர். நபிகளுக்குச் சுமார் 900 ஆண்டுகள் மூத்தவர்; கார்ல் மார்க்சுக்குச் சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன்னும் காந்திக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னும் வாழ்ந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் இப்படி அறம் சார்ந்த ஒரு சிறைக் கொள்கை நடைமுறையிலிருந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றளவும் நம் சிறைச்சாலைகள் எப்படி உள்ளன என்பதுடனும், இன்றைய நவீன உலகின் குவான்டனமோ பே மற்றும் அபு காரிப் சிறைச்சாலைகளுடனும் அசோகரின் அணுகல்முறையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் நாகரிக வளர்ச்சியில் முன்னோக்கி நகர்கிறோமா இல்லை பின் நோக்கிச் செல்கிறோமா என்கிற கேள்வி உருவாவது தவிர்க்க இயலாது.

அதே நேரத்தில் அரசுருவாக்கம் குறித்து அறிந்தோருக்கு முதன் முதலில் இப்படியான ஒரு மாபெரும் அகண்ட அரசை உருவாக்கிய அசோகருக்கு சிரமண தம்மக் கோட்பாடுகள் எந்த வகையில் உதவின என்கிற கேள்வி உருவாவதும் இயல்பு.

(அடுத்த இதழில் பார்ப்போம்)