இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒய்.கே. ஷபானாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

என் பேனலின் முன் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்தவர்களில்  சென்ற வாரம் ஹைதராபாத்தில் சந்தித்த  அந்தஅழகிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப்  பற்றிக் கொண்டேன்.

ஹைதராபாத்தில் . இதே UAPA சட்டத்திற்கெதிரான அரங்கக் கூட்டம் ஒன்றிற்கு  வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவால் அல்ல. அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில் முடியும்தானே.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று ஹைதராபாத்தில் விரிவாகப் பேசமுடியவில்லையே என ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று டெல்லியில் அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார். ஆயுதங்களுடனும் ஆபாசமான முழக்கங்களுடனும் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அப்படி ஊர்வலம் போவதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவதை, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

###

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி (அப்போது).

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின. முஸ்லிம் இளைஞர்கள் பலர் சுற்றி வளைக்கப்பட்டார்கள், கைடு செய்யப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவந்தான் இம்ரான்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு (25, மே, 2007) எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வேனில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் மத்தியில் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோருக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல்.

தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுந்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானுக்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா?”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடக்கூடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நான் விரிவாக அன்று இதழ்களில் எழுதியுள்ளேன் எனது ‘நெருக்கடிநிலை உலகம்’ தொகுப்பிலும் உள்ளது. இது தொடர்பான பெரும் போராட்டங்களுக்கும் நீதிமன்றக் கண்டனங்களுக்கும் பின்தான் இன்று  அந்ததச் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அபயா கொலையில் (1992) குற்றவாளிகளைக் காப்பாற்ற பொய்யான டெஸ்ட் ரிசல்ட் எழுதியதால் சி.பி.ஐ அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர். புகழ் பெற்ற ஆருஷி வழக்கிலும்போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்தவர் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. 2009ல் அவர் தன் பிறந்த நாளை மாற்றி பொய் சர்டிஃபிக்ட் கொடுத்து ஏமாற்றிய குர்றத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட புகழுக்கும் உரியவர் அவர் ..

“லேடி போரிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உட்கார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன்.

‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’… அப்டீன்னு அந்த நர்ஸ் சொன்னாங்க”

எனக்கு வியப்பு.

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லல்லி இம்ரான்?”

“இல்லை.  கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா நீதிபதியிடம் ஒத்துக்கொண்டால் உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டுடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ் கான். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச  120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையோ அவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்.

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷபானா கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம்..  இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷபானாவின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.

இஸ்லாமியப் புனித  நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு

 

சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான” துறையின் சார்பில் “மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது” குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன். வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று – இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் அப்படி ஒன்றும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும், பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா’ குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.

எனினும் புனித நூற்கள் (Scriptures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்’ பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் (arbitrary) தன்மை  சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். “எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது” என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர், “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்’ பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.

சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது. துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான’ அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் சொல்லப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வார்த்தைகட்கு விஞ்ஞானத்திடம் சான்றிதழ் கோருவதுதான் எத்தனை முரண்?

இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்’துகள் என்றே அழைக்கப்படும். அதாவது Parables, நீதிக்கதைகள், உருவகக் கதைகள். சுவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான். என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.

இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.

இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

  1. திருக்குர்ஆன் – இறைவனால் நேரடியாக அருளப்பட்டது என்பது முஸ்லிம்களின் மிக அடிப்படையான நம்பிக்கை.
  2. `ஹதீஸ்’ மற்றும் `சீறத்’கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்’கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.
  3. `ஷரியத்’கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.

இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:

(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.

(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.

(இ) 634-644 : கலிபா உமர் – இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.

(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.

இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: சன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்’களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன.  1.அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம்  2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம் 3. ஷாஃபி (இ.820) சட்டம்  4.இப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம். எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.

இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்’திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்’தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா’ விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (முடா) அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்’ முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதூத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி’ எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்’ அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். “நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்” என்கிறார் அஸ்மா.

திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (hermeneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல.

தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.

அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி’ _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91). வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை “நாம் நிச்சயமாக விசாரிப்போம்” என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (misogyny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தந்தைமையையும் (fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன் தான் `போராடி’ உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார். மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா’. இதற்கு `அடிப்பது’ என்பது தவிர `பிரிப்பது’ என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது’ என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?

`நுஷூஸ்’ என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை’ என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்’ குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு. இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது’ என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு.

 

 

பெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்

பெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்…

பெரியாரியம் – அமார்க்ஸ்

அண்ணாவின் அரசியல் 

அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி..

இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா பெரியாரிடமிருந்து விலகினார் என்று கூறுவது வழக்கம்.

உண்மைதான். ஆனால் மேலோட்டமாக இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட இயலாது.

ஒரு கால மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக அண்ணா உணர்ந்தார். இந்த மாற்றத்தை நுணுக்கமாகக் கையாண்டு பெரு வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் விளைவுகள் மக்களைப் பொருத்தவரை எப்படியாக இருந்தன என்பது வேறு விடயம். அண்ணாவைப் பொருத்த மட்டில் மிகத் துல்லியமான வெற்றியை அவரது அணுகல்முறை ஈட்டித் தந்தது.

1955 மே 22 முதல் 1969 ஜனவரி 12 வரை- அதாவது இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை அவர் “தம்பிகளுக்கு” எழுதிய 289 கடிதங்கள் அண்ணா எவ்வாறு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார் என்பதற்குச் சான்றுகளாக நம்முன் இன்று கிடக்கின்றன.

உலக அளவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான் அண்ணாவின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவு, இந்தியா போன்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் முடிந்து நாடுகள் சுதந்திரம் அடைச்த சூழல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனமும் ஏகாதிபத்தியச் சார்பு அரசுகளை வீழ்த்தி சோஷலிச மாற்று ஒன்றை முயற்சிக்கத் தொடங்கிய நிலை என்பதாக உலகமே போராட்டங்கள் எல்லாம் முடிந்ததாகக் கருதிச் சற்றே இளைப்பாரத் தொடங்கிய தருணம் அது.

இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்தி அதிகாரத்தை எட்டுவதற்கு உரிய அரசியலை அண்ணா தேர்ந்தெடுத்தது இருக்கிறதே.. அற்புதம்.

அண்ணா கண்ட “எதார்த்தம்..”

1955 ல் ஒரே நேரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளை தம்பிகளுக்கு முன் juxtapose பண்ணி தம்பிகளை அசத்துவார் அண்ணா (22ம் கடிதம்). அவை:

நிகழ்வு 1: “ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடி அடி என்று அடித்தாலும் கேட்க நாதியில்லை” என்றொரு வாசகம் பெரியாரின் ‘விடுதலை’ இதழில் வருகிறது.

நிகழ்வு 2: தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு சுவரொட்டி வெளியிடுகிறது. சிண்டும் பூணூலும் அணிந்த ஒரு நபர் தீண்டாமையைக் கடைபிடிப்பதாக அதில் ஒரு படம். இதைக் கடுமையாகப் பார்ப்பனர்கள் எதிர்க்கின்றனர். ‘இந்து’ இதழ் கண்டிக்கிறது. தமிழக அரசு பின்வாங்குகிறது. அந்தச் சுவரொட்டி வாபஸ் பெறப்படுகிறது.

‘இன்றைய எதார்த்தம்’ என இரண்டாவது நிகழ்வை முன்வைக்கும் அண்ணா, பெரியார் இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவிலை எனச் சொல்லி, எடுத்துக் காட்டாக முதல் நிகழ்வைத் தம்பிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

“ஆரியம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் ஆரியம் ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினருடனும் இன்னும் பெருமளவுக்கு இருப்பதாலும், ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதாலும் தான்….தம்பி ! கழகம் ஆரியரை ஒழித்திடும் வேலையில் இல்லை. ஆரியத்தை ஒழித்திடும் வேலைகளில் ஈடுபடுகிறது. நாம் ஆரியத்தை அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும்” – என்பார் அண்ணா.

அதாவது பெரியார் ஆரியர்களை, அதாவது பார்ப்பனர்களை நேரடியாக எதிர்க்கிறாராம். இவர்கள் ஆரியரை எதிர்க்காமல் ஆரியத்தை எதிர்க்கின்றனராம்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழக மக்களை ஆரியர், சூத்திரர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், தேவதாசிகள் என்பதாக அடையாளம் கண்டதை அண்ணாவின் அரசியல் சற்றே ஒதுக்கி “வரம்புகளற்ற ஒரே தொகுதியாக” ‘தமிழர்’ எனும் அடையாளத்தைக் கட்டமைக்கிறது. முகத்திற்கு முகம் என்கிற அடையாளத்தைத் தாண்டிய ஒரு இணைவை (solidarity) முன்வைக்கும் நுணுக்கமான ethnic politics ஒன்றை அண்ணா முன்வைத்தார். ‘திராவிடம்’ என்பது கட்சிப் பெயரில் இருந்த போதும் தி.மு.கவின் அரசியல் என்பது “தமிழர்” என்கிற அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒருபடித்தான ஒரு கற்பனைச் சமூகத்தையே முன்வைத்தது. தனது தேர்தல் அரசியலுக்கு அதுவே உகந்தது என்பதை அண்ணா சரியாக அடையாளம் கண்டார். தம்பிகளும் அவரை அறிஞராக, பேரறிஞராக ஏற்றுப் பின் தொடர்ந்தனர்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

பெரியார் நடத்திய போராட்டங்களை அண்ணா எதிர்கொண்ட விதம் அவரை மட்டுமல்ல இன்றைய தமிழகத்தின் நிலையையும் புரிந்து கொள்ள உதவும்.

1947 சதந்திர நாளையும், 1950 குடியரசு நாளையும் பெரியார் துக்க தினங்களாக அறிவித்தார். இந்தி எதிர்ப்பிற்காகவும் வகுப்புரிமைக்காகவும் தேசியக் கொடியையும் (1955), தேசப் படத்தையும் (1960) எரித்தார். உச்சநீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றமாக அடையாளம் காட்டி (1964) தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தினார். தமிழர்களைக் கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னார் (1966)….

இந்தப் போராட்டங்கள் எதிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை என்பதை அறிவோம். இவற்றிற்கு அண்ணா காட்டிய எதிர்வினைகள் நினைவிருக்கிறதா?

பதிலாகத்தான் அண்ணா குடிமக்களுக்குரிய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றை வற்புறுத்தினார். சுதந்திரதினத்தை “இருநூற்றாண்டுப் பழி தீர்த்த நாள்” என்றார். “மகத்தான சம்பவம்” என்றார். “உலகம் முழுதும் கூர்ந்து கவனிக்கும்” ஒரு நிகழ்வை “நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ உதாசீனம் செய்வதோ கூடாது” என்றார். அண்ணாவைப் பொருத்த மட்டில் கொள்கை அல்ல பொது மனநிலையே முக்கியம். அதற்கிசைய நோகாமல் அரசியலைச் செய்வதே குறிக்கோள்.

பெரியார் மூவண்ண தேசியக் கொடியை எரித்தார். அண்ணாவோ “யூனியன் ஜாக்” பறந்த இடத்தில் “நமது கொடி” பறக்கிறது என்றார். “நமது நாட்டுத் தூதுவர்கள் உலகின் பல பாகங்களில் உலவுகின்றனர்” எனத் தம்பிகளுக்கு ச் சுட்டிக் காட்டினார்.

“நமது” நாடு, “நமது” கொடி முதலிய சொற்களைக் கவனியுங்கள். இவை எல்லாம் அண்ணா ‘திராவிடநாடு’ கோரிக்கையைக் கைவிடுமுன் சொன்னவை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியாரின் திட்டம் திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதல்ல“- அண்ணா

இது போராட்டங்களின் காலம் அல்ல. அறுவடை செய்யும் காலம் என்பதை அண்ணா தம்பிகளின் மனத்தில் ஆளப் பதித்தார்.

இந்தி எதிர்ப்பு முதலான பிரச்சினைகளில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகப் பெரியாருடன் இணைந்து செயல்படுவதாக அண்ணா அறிவித்திருந்த போதும், பெரியாரின் பொது அழைப்பையும் மீறி அண்ணா பெரியாரது கொடி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனது 11 ம் கடிதத்தைக் கேள்வி பதில் வடிவத்தில் அமைத்த அண்ணா இது குறித்துத் தம்பிகளுக்கு எழும் அய்யங்களை தனக்கே உரித்தான தளுக்குடன் மறுத்தார். அண்ணா சொன்னது இதுதான்:

“பெரியார் நம்மை நேரடியாக அழைக்கவில்லை. அழைக்காதபோதும் நோக்கம் சரி என்பதற்காக அதில் கலந்து கொள்ள இயலாது. நாம் இப்போது ஒரு அமைப்பாகி விட்டோம். நமக்கென்று ஒரு பொதுச் செயலாளர், பொதுக்குழு.. இப்படியெல்லாம் இருக்கிறது” என்றெல்லாம் அண்ணா வித்தாரமாகச் சொல்லிக் கொண்டு வரும்போதே பூனைக்குட்டி வெளியே குதித்து விடுகிறது.

“கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ்காரர்களையும் நம் பக்கம் சேர்க்கும்படியாக இருக்க வேண்டும். கொடி கொளுத்துவது போன்ற போராட்ட முறை மூலம் காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விடும்”

ஆக போராட்டம் தேவை இல்லை என்பது மட்டுமல்ல. இந்த வடிவங்கள் அறவே கூடாது என்பதும்தான் அண்ணாவின் கருத்து.

‘வீரம்’, ‘காதல்’ என்பவற்றுக்கெல்லாம்
எல்லாச் சூழலுக்குமான பொது அளவுகோல்கள் கிடையாது; ஒரு சூழலில் வெற்றி ஈட்டித் தரும் ஒரு வீரச் செயல் இன்னொரு சூழலிலும் வெற்றி ஈட்டித் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை எனச் சொல்லும் அண்ணா (கடிதம் 13),
இப்படிச் சொல்வதால் தனக்குக் கோழை பட்டம் வந்தால் பரவாயில்லை என்கிறார்.

“நான் கோழை என்றால், என்னைப்போலவே கோழைகள் நிறைந்த திராவிட சமுதாயத்திற்கு ஏற்ற திட்டத்தை அல்லவா பெரியார் வகுத்திருக்க வேண்டும்” – எனப் பெரியாரை அண்ணா மடக்கும்போது அவரது சாமர்த்தியத்தைக் கண்டு நம்மால் புன்முறுவலிக்காமல் இருக்க இயலாது.

தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையருக்கு எதிராக காங்கிரஸ்கார ர்கள் நடத்திய போராட்டம் எனச் சொல்லும் அண்ணா, இன்று அவை பொருந்தாது; “ராஜதந்திரம்” போதும் என்பார். அதாவது தேர்தல் அரசியலுக்குரிய ராஜதந்திரம்.

பார்ப்பனீயத்தின் ‘ஸ்லீப்பர் செல்’ லாக விளங்கிய ம.பொ.சியுடன் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு (பிப் 20,1956) அண்ணா இசைவார். வேறு சில இயக்கங்களும் அந்தக் கூட்டில் இருந்தன. ‘ரயில் மறியல்’ என்பது கூட்டு முடிவு என்பதால் அண்ணா அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்கு அண்ணா கொடுக்கும் அழுத்தம் இருக்கிறதே தா..ங்க முடியாது.

“அமைதி அமைதி என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம். பலாத்காரம் கூடவே கூடாது எனப் பன்னிப் பன்னிக் கூறுகிறோம்….. ரயில்களைத் தடுத்து நிறுத்துவதா என்று கேட்கிறார்கள் நம் கழகத் தோழர்கள். தம்பி! இது சர்வ கட்சிக் கூட்டணி. தி.மு.க மட்டும் நடத்துவதல்ல. எனவே பணியாற்றச் செல்லாதீர்கள் எனப் பாட்டாளிகளை வேண்டிக் கேட்டுக் கொள்வது. அன்று மட்டும் பயணப் படாதீர்கள் எனப் பொது மக்களை வேண்டிக் கொள்வதும் மட்டுந்தான் நான் கையாள வேண்டிய முறையே தவிர தண்டவாளத்தில் படுப்பதோ, சங்கிலியைப் பிடித்து இழுப்பதோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறோம்..”

தென்னாட்டு பெர்னாட்ஷா எனக் கல்கி அண்ணாவுக்குப் பட்டம் அளித்துப் பாராட்டியது நினைவிருக்கலாம். அண்ணாவின் இந்த உரை கல்கிக்கு நினைவிருந்திருந்தால் ஒரு வேளை “தமிழ்நாட்டுக் காந்தி” என்றே அவருக்குப் பட்டம் அளித்திருப்பார்.

தம்பி ! மனையில் மகிழ்ந்திரு

நாட்டுப் பிரிவினை உட்பட எல்லாக் கோரிக்கைகளையும் சட்டசபை நுழைவு மூலமே சாதித்துவிட இயலும் என்கிற எண்ணத்தைத் தம்பிகள் மத்தியில் படிப்படியாகப் பதிய வைக்கத் தனது கடிதங்களை வெற்றிகரமாகக் கையாண்டார் அண்ணா.

“நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக் கொண்டு , நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளப் பெற்று அரசியல் கழைக் கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்து காட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணிகளின் மூலம் பெற்று, ஒரு பொதுத்தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக் கொண்டு , ஒரு பதினைந்து பேர் கோட்டைக்குள் நிறைந்திடத் தக்க நிலையும் பெற்றுள்ளோம்” (கடிதம் 90)

-இது அவர் 1957 தேர்தல் சாதித்த வெற்றி பற்றிக் கூறியது.

93ம் கடிதத்தில் அவர் இதை இன்னும் வித்தாரமாக மொழிவார். அவரளவுக்கு மொழியை விரயம் செய்ய இங்கு இடமில்லை என்பதால் சற்றே சுருக்கி அவர் சொன்னதை இங்கு வைக்கிறேன்.:

“சட்டசபைக்கு வெளியே எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேலை கொடு என சோஷலிஸ்டுகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிடுக்கிறார்கள். ஊதியம் உயர்த்து என தபால் தந்தி ஊழியர்கள் போராடுகின்றனர். ஆகஸ்டுக்கு ஆகஸ்டு வர்ணாசிரமத்தையும் மற்றவற்றை யும் எதிர்த்து பெரியார் அறப்போர்களை நடத்திக் கொண்டுள்ளார். ஆனால் நம்முடைய கருணாநிதி அன்று அமைச்சர் பக்தவச்சலனாரைக் கல்லணையில் சந்தித்து நங்கவரம் பண்னைப் பிரச்சினையைத் தீர்த்தார். சத்தியவாணிமுத்து அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்தும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்தும் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம். இவைகள் யாவும் நமது, கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்சிகள்”

-இது அவர் ஒரு முழுப் பக்கத்தில் சொல்லியுள்ளதை அவரது வார்த்தைகளிலேயே, ஒன்றும் விடுபடாமல் சுருக்கித் தந்துள்ளது.

கூலி உயர்வு, வேலை கொடு என எதற்கும் வீதிக்குக் கூட வராதீர்கள். ஓட்டுப் போட்டு எங்களை சட்டசபைக்கு அனுப்புங்கள். வாக்குப் பெட்டி ஒன்றே போதும் வேறு எதுவும் வேண்டாம்…..

இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் திமுகவினர்.

புதிய ஜனநாயகம் பற்றி அண்னா சொன்ன விளக்கத்தை யாராவது மாஓ வைப் படித்தவர்கள் படிக்க நேர்ந்தால் அதிர்ச்சியில் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

1957ல் ஈழத் தமிழர்கள் ஏதோ ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டிக் கடிதத்தை முடிக்கும் அண்ணா, “ஆகஸ்டு இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் தம்பி” என்பார். “ஆகஸ்டு” (போராட்டம்) என்பது பெரியார் முதல் காந்தி வரை ஒரு கிளர்ச்சியின் குறியீடு. அண்ணாவைப் பொருத்த மட்டில் காந்தியின் கதை பழைய கதை. பெரியாரின் கதை காலத்திற்கு ஒவ்வாத கதை.

ஆகஸ்டுகள் இல்லாமலே வெல்வதுதான் அண்ணாவின் வெற்றிக் கதை.

சரி. போராட்டம் மற்றும் இதர பணிகள் ஏதும் இல்லையென்றால் தம்பிகள் என்னதான் செய்ய வேண்டுமாம்.

95ம் கடிதத்தில் அண்ணா சொல்வார்:

“தம்பி ! மனையில் மகிழ்ந்திரு. பெற்றோருக்குப் பெருமை தேடிடு. உற்றார் உறவினரை உவகை கொள்ளச் செய்! ஊருக்கு உழைத்தலில் இன்பம் பெறு. விழி புகுந்து உன் நெஞ்சில் உறையும் உன் இனியாளைக் கண்ணெனப் போற்றிடு ! கன்னல் மொழிக் குழந்தைகளைக் கற்றோராக்கு! தமிழ் மணம் கமழ வழிகாண்பாய், தம்பி! தமிழன் என்றோர் இனம் உண்டு ! தனியே அவர்க்கோர் குணம் உண்டு!”

தம்பிகள் பாக்கியசாலிகள். யாருக்குக் கிடைப்பர் இத்தகைய பொன்னான தலைவர்….

# # #

(முடியவில்லை. சிறிது இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறேன். சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன் (செப் 2017) புதுச்சேரி PILK நிறுவனத்தில் நான் “அண்ணாவின் கடிதங்கள்” எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் (க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு) ஒரு பகுதி இது . சுருக்கியும். ஆய்வுக் கட்டுரைக்குரிய நடையைச் சற்றே தளர்த்தியும் இங்கு தந்துள்ளேன். சொற்பொழிவின் ஒரு பாதியில் சொன்னவற்றின் சில துளிகள் இவை. )

ஏன் கூடாது ‘நீட்’?      

(செப்டம்பர் 2017 ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளியான கட்டுரை)

ஒன்று

இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஒரு சமச் சீர்வை ஏற்படுத்துவது என்று சொல்லித்தான் இங்கே நீட் புகுத்தப்படுகிறது. அது எத்தனை பொய் என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு மட்டுமின்றி இன்றும் அசாம் கர்நாடகா, கேரளா, மே.வங்கம், ஆந்திரம், காஷ்மீர் எனப் பல மாநிலங்களிலும் ‘நீட்’ டுக்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், வணிக நோக்கில்லாத கல்வித்துறையினர், மாநில நலன்களில் அக்கறையுள்ள கட்சியினர் என எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த வகையில் இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு வகையில் இந்தி பேசும் மாநிலங்கள் X இந்தி பேசாதவை என இரு கூறுகளாக எதிர் எதிர் நிலையில் நிற்கின்றன.

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் CBSE போன்ற கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் பயின்ற உயர் சாதி, உயர் வர்க்க மாணவர்களே இதன் மூலம் பயன் பெறுவர் என்கிற பிற மாநிலத்தவரின் அச்சம் இன்று உறுதியாகியுள்ளது. சாதி, வர்க்கம் என்கிற வேற்றுமைகளுக்கு அப்பால் இப்போது மொழி, வாழும் நிலப் பகுதி, நகர்ப்புறம், கிராமப் புறம் எனும் முரண் ஆகிய அடிப்படையிலான ஒதுக்கல்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அடித்தள மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள பெருமைக்குரிய மாநிலக் கல்வி வாரியங்கள் இன்று மதிப்பிழந்துள்ளன.

நீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்பட்ட வாதங்கள் என்ன மாதிரியானவை? பல்வேறு விதமான தனித்தனி நுழைவுத்தேர்வுகளிலிருந்து மாணவர்களை இத்தகைய பொதுத் தேர்வு காப்பாற்றும் என்பது ஒன்று மற்றது மருத்துவச் சேர்க்கையில் இப்போதுள்ள மிகப் பெரிய ஊழல்கள், கொள்ளைகள் முதலியன ஒழிக்கப்படும் என்பது. மற்றபடி ஒரே மாதிரி தரமான மருத்துவ வர்க்கம் ஒன்று இந்தியா பூராவும் உருவாகும் என்பது  மூன்றாவதாகச் சொல்லப்பட்ட  வாதம்.

எல்லாம் அபத்தம். ஒரு நுழைவுத் தேர்வு என்பது எப்படி ஒரே மாதிரி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?  திறமான, சீரான மாருத்துவக் கல்வியும், பயிற்சியும்தான் ஒரே தரமான சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியுமே ஒழிய ஒரு நுழைவுத் தேர்வு எப்படி அதைச் சாதிக்க முடியும்?

சேர்க்கையில் உள்ள ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்றால் உரிய விதிகளை உருவாக்கி, கடுமையான கண்காணிப்புகள், மீறும் நிறுவனக்களைக் கடுமையாகத் தண்டிப்பது ஆகியவற்றின் மூலம்தான் அதைச் சாதிக்க வேண்டுமே ஒழிய இப்படி இன்னும் ஒரு மோசமான ஒதுக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைச் சாதிக்க முடியாது, சாதிக்கவும் கூடாது. தேவையானால் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயமாக்கலாம். பல மாநிலங்களில் அத்தகைய நுழைவுத் தேர்வுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இதையெல்லாம் செய்யாமல் ஊழலை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் இப்படியான ஏழை எளிய அடித்தள சாதிகளைச் சேர்ந்த, கிராமப்புற, இந்தி பேசாத மக்களைப் பழிவாங்கும் ஒரு முறையைக் கட்டாயமாகப் புகுத்துவதை எப்படிச் சகிப்பது? கோடிக்கணக்கான ரூபாய்களை ‘கேபிடேஷன் ஃபீ’ ஆக வசூலிப்பதைக் கடும் கண்காணிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் உயர் பணத் திமிர் மிக்க ஒரு மேல்தட்டு 5 சத மக்களின் பிரச்சினை. இதைக் காட்டி ஏழை எளிய அனிதாக்களைப் பலி கொடுக்கக் கூடாது.

இரண்டு

பல நுழைவுத் தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய சுமையை மாணவர்களுக்குக் குறைக்க நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு தேவை என்கிற வாதத்தில் ஏதும் நியாயம் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.

‘நீட்’ தேர்வை விரும்பித் தேர்வு செய்பவர்களைப் பொருத்த மட்டில் யார் அந்த மாணவர்கள், அப்படி எழுதுகிறவர்கள் எத்தனை வீதம் பேர் என்பதற்கு உரிய தரவுகள் இல்லை. எனினும் அதுவும் ஒரு மிகச் சிறிய வீதத்தினர்தான். அவர்களும் கூட சமூகத்தின் மேல் தட்டிலிருந்து வருபவர்கள்தான். சென்ற ஆண்டு அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் (AIIMS) நடத்திய இந்தப் பொது நுழைவுத் தேர்வில் பங்குபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம். இது அப்போது மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர் தொகையில் வெறும் பத்து சதம்தான். அப்போது இந்தப் பொதுத்தேர்வு கட்டாயம் இல்லை என்பதால் மற்ற 90 சதம் மாணவர்களும் ‘நீட்’ எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்று பல்வேறு படிப்புகளுக்கும் மேற் செல்கிறவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டால் பொதுத்தேர்வை, அதாவது ‘நீட்’டை விருப்பபூர்வமாகத் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பதை விளக்க வேண்டியதில்லை.

சரி அப்படிப் பொது நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்த அந்தச் சிறு தொகை மாணவர்கள் யார்? அவர்கள் CBSE போன்ற மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டங்களில் படித்த மேல்தட்டினர்தான். இன்று 1716 மதிப்பெண்கள் வாங்கிய அனிதா எனும் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஒரு தலித் பெண்ணுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற இயலாத காரணத்தால் மருத்துவக் கல்வி வாய்ப்புப் பறி போனதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எப்படி புறக்கணிக்கத் தக்க ஒரு சிறிய மேல் தட்டினரின் நலனுக்காக மற்ற 90 சதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏன் தற்கொலை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என விளங்கும்.

சரி.ஏன் CBSE மாணவர்கள் மட்டும் ஏன் எளிதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்? மாநிலக் கல்வி வாரியங்களில் படிப்பவர்களால் அது சாத்தியமில்லாமல் போகிறது? வேறொன்றுமில்லை. ‘நீட்’ தேர்வு CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்பதுதான் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில். CBSE பாடத் திட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால் அந்தப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் நீட்டில் வெற்றி பெற முடிகிறது. மற்றவர்களுக்கு அது சாத்தியமில்லாமல் ஆகிறது.

அடுத்த கேள்வி: இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் இதர ICSC போன்ற இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு CBSE ன் பாடத் திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வை நடத்துவது ஏன்? இப்படியான சந்தர்ப்பங்களில் மிக அதிக மாணவர்கள் பயன்பெறுமாறு அதிக மாணவர்கள் படிக்கிற ஏதேனும் ஒரு பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதுதானே நியாயம்? இந்தியா முழுவதிலும் உள்ள CBSE பாடத்திட்டத்தில் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லையா? இந்தியா முழுவதும் மொத்தமாக 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையையும், CBSE மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ‘நீட்’ தேர்வு என்பது எந்த அளவுக்கு உயர் தட்டு, உயர் சாதி, நகரங்களை மையமாகக் கொண்ட ஒரு தேர்வு முறை என்பதும் நம் அனிதாக்கள் ஏன் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

மூன்று

தமிழகத்தின் சமச்சீர்க் கல்வி முறை, அதன் கேள்வித் தாள் வடிவம், தேர்வு முறை, பாடத் திட்டம் எல்லாம் குறைகளற்றவை என நான் சொல்ல வில்லை. நிச்சயம் அவற்றில் குறைபாடுகள் உண்டு. நாங்களே பலவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளோம். 11 ம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலேயே 12ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதற்குத் தோதாக நமது கல்வி முறை உள்ளது, கேள்வித்தாள் வடிவம் மனப்பாட முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது முதலானவற்றை இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசும் கல்வித்துறையும் இப்போது அவற்றைக் கணக்கில் கொண்டு சில மாற்றங்களையும் இந்தக் கல்வி ஆண்டு முதல் கொண்டு வந்துள்ளன. குறைகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளும் திறமையும் வல்லமையும் நமக்குண்டு. இப்படி நம் கல்வி முறையில் சில குறைகள் உள்ளன என்பதற்காக CBSE தான் இந்தியாவில் உள்ள கல்வி முறைகளிலேயே சிறந்த முறை எனவும் அதில் குறைகளே இல்லை எனவும் நம்புவது போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஆனால் அப்படியான நம்பிக்கை நமக்குள் சிலரிடையே உள்ளது.

2009 ல் அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS யில் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் CBSE உடன் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்திருந்தனர்,

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் CBSE மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை அவர்கள் நிறுவினர் (Current Science, 2009).  இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் மேற்கு வங்கமோ இல்லை ஆந்திரப் பிரதேசமோ ‘நீட்’ டில் அப்படி ஒன்றும் பிரமாதமாகச் செய்துவிடவில்லை. ஆக, ‘நீட்’டில் பிரமாதமாகச் செய்வது என்பது அவர்களின் கல்வித் திறமைக்கும் பாடப் புரிதலுக்கும் நிரூபணமல்ல.  CBSE  வடிவத்தில் ‘நீட்’ தேர்வு கட்டமைக்கப்பட்டுள்ளதன் விளைவுதான் அம் மாணவர்கள் ‘நீட்’டில் நன்றாகத் தெரிவது.

ஏதோ CBSE, MCI (இந்திய மருத்துவக் கவுன்சில்) லஞ்ச ஊழல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றெல்லாம் நம்பினாலும் அப்போதும் நாம் முட்டாள்கள்தான்.

MCI யின் முன்னாள் தலைவர் கேடன் தேசாய் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் கொடுத்தபோது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். சென்ற ஆண்டு CBSE ஏற்பாடு செய்திருந்த  All India Pre-Medical Test இப்படியான குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

CBSE வாரியத்துக்கும் அதன் பாடத் திட்டத்துக்கும் இப்படியான ‘நீட்’ ஆதரவு தாராளமாக இருப்பதன் விளைவாக இன்று இந்தியாவெங்கும் CBSE பாடத் திட்டத்தை ஏற்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துள்ளது. இந்த வகையில்  இப்போது ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாநிலக் கல்வி வாரியங்களைச் செல்லாக் காசாக்கும் முயற்சியாகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் இனி அவர்களை CBSE பள்ளிகளைத் தேடிச் சென்று மிக அதிகமாகப் பணம் கொடுத்துச் சேர்க்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் ஒரே சீராக இந்தியா முழுவதும் திணிக்கப்படுவதற்கும், கல்விக் கொள்ளைகள் அதிகமாவதற்கும், ஏழை எளிய மக்களின் கல்விச் செலவுகள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்கு அதிகரிப்பதற்கும்  மாநிலங்களின் கல்விக் கொள்கைகளும் அணுகல் முறைகளும் பலவீனமாவதற்கும் வழி வகுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இப்படி CBSE பள்ளிகளில் அதிகம் பணம் கொடுத்துப் படிக்க வழி இல்லாமல் தொடர்ந்து மானிலக் கல்வி முறையில் படிக்கும் ஏழை எளிய. அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டார்களானால் என்ன ஆகும் என்பதற்குத்தான் அனிதாவின் இறப்பு நம் முன் இரத்த சாட்சியமாக அமைந்துள்ளது.

நான்கு

இந்தப் ‘பன்மை விடைக் கேள்விகள்’ (Multiple Choice Question) நிறைந்த கேள்வித்தாள் என்கிற CBSE யின் தேர்வு வடிவம் அப்படி ஒன்றும் மாணவர்களின் திறனை மதிப்பிட்டு விடுவதற்கான ஆகச் சிறந்த வடிவம் எனச் சொல்லிவிட முடியாது. அறிவியல் கருத்தாக்கங்களை தர்க்க பூர்வமாகத் தருவிக்கும் விரிவான தர்க்க அடிப்படையில் விளக்கம் அளிக்கும் (concept development) முறையும் முக்கியமானதே. தமிழ்நாடு, மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் இத்தகைய தேர்வுமுறையையே நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்றன. என்னைப் பொருத்த மட்டில் இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களை அவர்களுக்குப் போதிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் ஒரு முடிவு சரியானதா தவறானதா எனச் சிந்திக்கத் தெரிந்தால் போதும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கணினிகள் கூட அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து விடக் கூடும். மாறாக ஏற்கனவே உள்ள எல்லா நம்பிக்கைகளையும் சந்தேகிக்கும் திறன் உடையவர்களாக மாணவர்களை ஆக்குவதே அறிவியல் வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

நான் அடிக்கடி கூறும் ஒரு எடுத்துக்காட்டை இங்கு முன் வைக்க விரும்புகிறேன். மரத்தில் இருக்கும் ஆப்பிள் காம்பு அறுந்தால் கீழே விழ வேண்டியது இயல்புதானே என நியூட்டன் நினைத்திருந்தாரானால் அவரது புகழ் பெற்ற புவி ஈர்ப்புத் தத்துவம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க இயலாது. இப்படியான counter inductive சிந்தனை முறை அம்மைவதாகக் கல்வி முறை அமைய வேண்டும். எனவே ஆம் / இல்லை; சரி / தவறு என்கிற ரீதியில் கேள்வித் தாள்களை அமைத்து கணினிகளின் உதவியால் மாணவர்களை மதிப்பிடும் CBSE முறையே சிறந்தது என்பதாக நம்புவது சரியல்ல.

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ என்பது புதிதல்ல. CBSE பாடத் திட்டத்தில் படித்த வடநாட்டு இந்தி மொழி மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய முன் தேர்வு’ (AIPMT) என்பதன் நீட்சிதான் இன்றைய ‘நீட்’. இந்த AIPMT தேர்வு CBSE பாடத் திட்டத்தின்படி CBSE யால் நடத்தப்பட்டது என்பது மட்டுமின்றி அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் 15 சத ஒதுக்கீடு இருந்தது. இதைப் பெரும்பாலும் வட இந்திய ஆங்கிலோ – ஹிந்தி மேல் தட்டினரே பறித்துய்க் கொண்டிருந்தனர். ஒப்பீட்டளவில் வட நாட்டு இந்தி பேசும் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவு. அந்த வகையில் பிற மாநிலங்களில் வட மாநிலத்தவரைத் திணிப்பதில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதில் CBSE யில் பயின்ற மேல் தட்டினரே பெரிதும் பலனடந்தனர்.

‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்குவதன் மூலம் இந்த நிலை மேலும் அதிகரிக்கும். அதாவது மேல்தட்டு நகர்ப்புற மாணவர்களின் கூடாரமாக மருத்துவக் கல்லூரிகள் ஆவது உறுதி.

இன்னொன்றையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நீட்’ இப்போது இந்திய அளவில் கட்டாயமாக்கப்பட்டு, அதற்கு உச்சநீதிமன்றமும் ஆசி வழங்கி, ‘நீட்’டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட நளினி சிதம்பரம் கூறியது போல இனி ‘கடவுளிடம் முறையிட்டாலும் கூட’ ஆகப் போவது ஒன்றுமில்லை என ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் கூட AIIMS, PGI,JIPMER ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ‘நீட்’ டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் சிறப்பான தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். அதென்ன? இன்னும் உயர் மட்டத்திலுள்ள மேல் தட்டு நகர்ப்புற ஆங்கிலோ ஹிந்தியர்களுக்கான நிறுவனங்களாக ஆக்கும் முயற்சியாக அது அமையலாம்.

இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும்?

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக சென்னைப் புற நகரில் உள்ள ஒப்பீட்டளவில் சற்றே மலிவான ஒரு மருத்துவமனையில் பத்து நாட்கள் நான் சிகிச்சைக்கு வந்தவருடன் தங்க நேரிட்டது. அங்கு நான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஒரு பதிவு செய்திருந்தேன். சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் அதே போல ஒரு பத்து நாட்கள் நான் ஒரு மருத்துவ மனையில் இருந்த அனுபவத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை அது. அதில் நான் குறிப்பாகச் சுட்டிக் காட்டியிருந்தது இதுதான். இந்த முப்பதாண்டுகளில் பெரிய அளவில் நிலைமை மாறி இருந்தது. அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளையும் கிராமப்புறங்களையும் சேர்ந்த மருத்துவர்களை இப்போடு காணமுடிந்தது. ஒப்பீட்டளவில் மருத்துவர் – நோயாளி உறவு மிகவும் ஜனநாயகப்பட்டிருந்ததை விளங்கிக் கொள்ள முடிந்தது. எளிதில் அணுகக் கூடியவர்களாக மருத்துவர்கள் இப்போது உள்ளனர்.

கட்டாய ‘நீட்’ நடைமுறைக்கு வந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலை முற்றிலும் மாறும். மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ஜனநாயகப்பாடுகள் (democratisation) என்பன முற்றிலும் அழியும். அடித்தள மக்கள் முற்றிலும் அந்நியப்பட நேரிடும். இதுதான் எல்லாவற்றிலும் மோசமான பின்விளைவாக அமையும்.

ஐந்து

‘நீட்’ தேர்வு கட்டாயமானால் கிராமப்புற அடித்தள மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் என்பதையும் அதன் விளைவாக மருத்துவ சேவை மேலும் மேட்டிமைத் தன்மை மிக்கதாக மாறி அடித்தள மக்கள் அந்நியமாக அது வழி வகுக்கும் என்பதையும் பார்த்தோம். இது தவிர கிராமப்புற மருத்துவ சேவையே நீட்டின் விளைவாக பாதிக்கப்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீட்டில் வெற்றி பெற்று மருத்துவராகும் மேட்டிமைச் சக்திகளின் கனவு வெளி நாடு அல்லது நகர்ப்புற ‘மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் + ப்ரைவேட் ப்ராக்டிஸ்’ என்பதாகவே அமையும்.  கிராமப்புற மக்கள் குறைந்த பட்சம் அருகிலுள்ள மாவட்டத் தலைநகர்களுக்காவது ஓடித்தான் மருத்துவ வசதி பெற முடியும் எனும் நிலை இன்னும் அதிகமாகும் அல்லது தொடரும்.

‘நீட்’ கட்டாயமாதலை ஆதரிப்பவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். ஒரு சாரர் நகர்ப்புற மேல் தட்டினர். இன்னொரு சாரர் இதன் அரசியல் விளைவுகளையும் அரசின் நோக்கங்களையும் புரியாதவர்கள், அல்லது புரிந்தும் அது குறித்துக் கவலைப் படாதவர்கள். இந்த இரண்டாமவர்கள் கட்டாய ‘நீட்’ ஐ ஆதரிப்பதற்குக் கண்டுபிடித்துச் சொல்லும் ஒரே காரணம் அதன் மூலம் ‘நாமக்கல் பாணி ப்ராய்லர்’ பள்ளிகளும் ‘கேபிடேஷன் கொள்ளை’ களும் ஒழிக்கப்படும் என்பதுதான். இதுவும் ஒரு அப்பாவித்தனாமான நம்பிக்கைதான். இந்தப் பள்ளிகள் எல்லாம் CBSE க்கு மாறுவது தவிர இப்போதே இலட்சக் கணக்கான ரூபாய் பயிற்சிக் கட்டணத்துடன் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளையும் இவை தொடங்கி விட்டன. மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்த மட்டில் கல்லூரி முதலாளிக்கு ஒதுக்கப்படும் 50 சத ‘மேனேஜ்மென்ட் கோடா’ வில் வழக்கம் போலக் கொள்ளைகள் தொடரத்தான் போகிறது. இந்த மாதிரிக் கொள்ளைகளை ஒழிக்கும் விருப்புறுதி உள்ள அரசுகள் வரும் வரை இவற்றுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் எல்லாம் முடிவு கட்ட இயலாது.

இவர்கள் மறைக்கும் அல்லது மறக்கும் ஆபத்தான ‘நீட்’ அரசியல் குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.

மாநிலங்களின் உரிமைகள் மற்றும் மாநிலங்களின் தனித்துவம் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மயிரளவும் மதிப்பதில்லை. கல்வியைப் பொருத்த மட்டில் அது உள்ளூர் அளவில் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நம் அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது கல்வி மாநிலப் பட்டியலில் தான் வைக்கப்பட்டது. இந்திரா காந்தி நெருக்கடி நிலை கொண்டு வந்து ஜனநாகத்தை முடக்கிய காலகட்டத்தில்தான் கல்வி மத்திய – மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இன்றைய பா.ஜ.க அரசைப் பொருத்த மட்டில் அது மொழிவாரி மாநிலம் என்கிற கருத்தாக்கத்தையே ஏற்பதில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மொழி சார் அடையாளங்களை அழித்து மதம் சார்ந்த ஒற்றை அடையாளத்துடன் கூடிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனக் கனவு காணும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பபின் கொள்கை இந்த நாட்டை அதன் மொழி அடையாளங்களை அழித்து, 72 நிர்வாக அலகுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதுதான். இந்த நோக்கில்தான் ஒரே மொழி பேசும் தெலுங்கு மக்களில் ஒரு பாதியான தெலங்கானா மக்கள் தனி மாநிலம் கோரியபோது அதைத் தீவிரமாக அவர்கள் ஆதரித்தனர்.

மக்கட் சமூகங்களை அவர்கள் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களுடன் கூடிய சமூக அலகுகளாக அவர்கள் ஏற்பதில்லை. அப்படியான இன அடையான வேர்களில் இருந்து மக்களை அறுத்தெறிந்து (deracination), இந்திய அளைல் ஒரு பன்மைத்துவ அழிப்பை மேற்கொள்வது அவர்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று.

‘இந்தியா’ எனும் கருத்தாக்கத்தை அவர்கள் எந்நாளும் பல மொழி பேசுகிற பல்லின,, பல்மத மக்கள் வாழும் ஒரு பன்மைச் சமூகமாக ஏற்றதில்லை. ஒற்றை அடையாளத்துடன் கூடிய ஒற்றைச் சமூகமாகவே இந்தியச் சமீகங்களை அடையாளம் காணும் அவர்கள் மாநிலக் கல்வி வாரியங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்வை இந்த நோக்கிலிருந்து நாம் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். பெருமைக்குரிய சாதனைகளை எல்லாம் செய்துள்ள மாநிலக் கல்வி வாரியங்களின் அதிக்காரங்களை எல்லாம் அழித்து அதை வெறும் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுச் சான்றிதழை அச்சிட்டுக் கொடுக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இன்று இவர்களின் நோக்கம். உயர் கல்விக்கென உள்ள UGC, ACTE, MCI முதலான நிறுவனங்களை எல்லாம் அழித்து எல்லா அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட்ட ‘உயர் அதிகார நடுவண் அமைப்பு’ ஒன்றை அமைப்பது குறித்து 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக பேசியது. இன்று அது வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையிலும் அது உள்ளது. இது குறித்து நான் விரிவாக இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றிய விமர்சன நூலில் எழுதியுள்ளேன். மாநில அடையாளங்களை அழித்து மத்தியப்படுத்தும் அவர்களது நோக்கத்தின் ஓரங்கம்தான் ‘நீட்’. ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் JEE, NIT முதலானவற்றுடன் இப்போது ‘நீட்’டும் சேர்ந்து கொள்கிறது.

கல்வித்துறைதான் இளம் பிள்ளைகள் முகிழ்த்து வெளிப்படும் நாற்றங்கால். அங்கே கை வைப்பது என்பது அவர்களின் மிக அடிப்படையான அணுகல்முறைகளில் ஒன்று. அதற்குள் பன்முகப் போக்குகளுக்கு இடமிருக்கவே கூடாது. அதனால்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பல்கலைக் கழகங்களுக்குள் செயல்பட்ட சுதந்திரமான அரசியல் போக்குகளின் மீது கைவைத்தனர். உலக அளவில் புகழ் பெற்ற டெல்லி JNU வில் மாணவர் தலைவர்கள் கன்னையா குமார், உமர் காலித் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நஜீப் எனும் ஆய்வு மாணவர் காணாமலடிக்கப்பட்டு ஓராண்டு முடியப் போகிறது. அங்கு நியமிக்கப்பட்ட புதிய துணைவேந்தர் பதவி ஏற்ற பின்  மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும்  நான்கு இலட்சம் ரூபாய். அடுத்து ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம். அங்கு பல்கலைக் கழக ஜனநாயகத்துடன் சேர்த்து ரோஹித் வெமுலாவும் பலி கொள்ளப்பட்டார்.அப்புறம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், சென்னை IIT….

இந்தப் பின்னணிகளை எல்லாம் மறந்துவிட்டு “நீட்’ பிரச்சினையில் மோடி அரசும், நிர்மலா சீதாராமன் போன்றவர்களும் காட்டிய அலட்சியத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? ஒரு மாநில  சட்ட மன்றம் கட்சி வேறுபாடுகளை எல்லாம் மீறி நீட்டிலிருந்து ஓராண்டேனும் விலக்கு வேண்டும் எனத் தீர்மானம் இயற்றுகிறது. ஒரு மத்திய அமைச்சர், “நீங்கள் அவசரச் சட்டம் ஒன்று இயற்றுங்கள். விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்கிறார். அவசரச் சட்டம் இயற்றப்படுகிறது. அதன் கதி என்னாச்சு என்றால் “எனக்குத் தெரியாது” எனத் திமிர்த்தனத்துடன் பதில் வருகிறது. நீதிமன்றம் விசாரிக்கும்போது அதெல்லாம் விலக்கு அளிக்க முடியாது என அத்துணை ஆணவத்துடன் பதில் அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் இதன் பின்னால் உள்ள இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல் எப்படி விளக்க இயலும்?

இறுதியாக இன்னொன்றையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘நீட்’ ஆக இருக்கட்டும், பொது விநியோக முறைக்கான நியாய விலைக் கடைகளை ஊத்தி மூடுவதாக இருக்கட்டும், GST வரியாகட்டும் இவற்றை எல்லாம் நாம் உலகமயச் செயல்பாடுகளின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் ஒப்புதல் இல்லாமல் இவற்ரில் எல்லாம் மத்திய அரசு கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டு வருவதன் விளைவுகள் இவை. இந்தியத் துணைக் கண்ட அளவில் கல்வி அதிகாரத்தை மத்திய அரசு தன் கைக்குள் வைத்துக் கொள்வது இன்று இதற்கு அவசியமாகிறது. வாஜ்பேயி தலைமையில் இருந்த பாஜக அரசுதான் அன்று கல்வியை ஒரு வணிகத்துக்குரிய சேவை என ஏற்றுக் கையொப்பம் இட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால்தான் கீழே உள்ள இந்தக் கூற்றுகள் எத்தனை நியாயமானவை என்பது விளங்கும். அவை:

# நீட் திணிப்பு என்பது மாநில கல்வி வாரியத்தை (State Board) வெறும் +2 சான்றிதழ் கொடுக்கும் எந்த அதிகாரமும் அற்ற நிறுவனமாக ஆக்கும் முயற்சி..

# இது நவீன மருத்துவத்தில் இட துக்கீட்டின் மூலம் ஏற்பட்டுள்ள ஜனநாயகப்பாட்டை ஒழித்துக் கட்டுவதன் முதல்படி..

# உயர்சாதி – உயர் வர்க்க, நகர்ப்புற ஆங்கிலோ – ஹிந்திய ஆண்டைகளிடம் அதிகாரத்தை இடம் பெயர்க்கும் மோடி அரசின் திட்டங்களில் ஒன்று.

# இன்றைய கார்பொரேட் உலகமயச் சூழலை மிகச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் உள்ளிட்ட தேசிய அடையாளங்களைக் கசக்கி எறியும் நடவடிக்கைகள் இவை.

# எந்த விவாதத்திற்கும் உட்படுத்தாமல் நேரடியாக இவர்கள் உருவாக்கியுள்ள இன்றைய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் செயல்பாடுகளில் ஒன்று இது.

# வாஜ்பேயி தலைமையிலான NDA 1 ஐக் காட்டிலும் மோடி தலைமையிலான NDA 2 நுணுக்கமானது, அறுதிப் பெரும்பான்மையுடையது, கொடூரமானது என்பதை அறியாதவர்கள் வாயில் மண் !