முதலாளித்துவ நெருக்கடிகள், புராதன மூலதனத் திரட்டல் குறித்த மார்க்சீயக் கோட்பாடுகள்

கார்ல் மார்க்ஸ் 7 (மக்கள் களம், நவ 2017)

முதலாளித்துவ நெருக்கடி குறித்து மார்க்ஸ் ஏதும் தொகுப்பாக எழுதவில்லை ‘நியூயார்க் ட்ரிப்யூன்’ இதழில் எழுதிய கட்டுரைகள் மற்றும் ‘மூலதனம்’ நூலுக்கான குறிப்புகள் முதலானவற்றிலிருந்துதான் அவரது கருத்தோட்டத்தை நாம் கட்டமைக்க முடிகிறது. 1860 களின் தொடக்கத்தில் அவர் ‘மூலதனம்’ நூல் எழுதத் தொடங்குகிறார். அதன் மூன்றாம் தொகுதியை எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட வேண்டி வந்தது. முதலாளியம் அது தோன்றிய காலத்திலிருந்தே நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளது. நெருக்கடி என்பது முதலாளியத்திலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. மார்க்சின் காலத்திலேயே 1825, 1836 ஆகிய ஆண்டுகளில் முதலாளியம் பெரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அது குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதினார்.

முதலாளிய நெருக்கடி குறித்து லியொனார்ட் டி சிஸ்மோன்டி, ஜான் ஸ்டூவர்ட் மில், டேவிட் ரிகார்டோ ஆகியோரும் மார்க்சுக்கு முன்னதாகவே எழுதியுள்ளனர். இவர்கள் எல்லோருமே இந்த நெருக்கடிக்கான மூல காரணமாக “லாபம் குறைந்தபட்சமாகக் குறுகும் முதலாளியப் பண்பை” (Tendency of Profits to a Minimum) குறிப்பிட்ட போதிலும் அதைத் தெளிவான கோட்பாட்டு உருவாக்கமாக மார்க்சியம்தான் முன்வைக்க முடிந்தது. இப்படி லாபம் குறுகி வீழ்வதை முதலாளியத்தின் ஒரு வெறும் “பண்பாக” (tendency) பார்க்காமல் அதுவே முதலாளியத்தின் தவிர்க்க இயலாத “விதி” என்பதை மார்க்சியம்தான் சுட்டிக் காட்டியது. எனினும் மார்க்ஸ் – எங்கல்ஸ்சுக்குப் பின் வந்த மார்க்சியர்கள் எல்லோரும் இதை சரியாகப் புரிந்து உள்வாங்கி விளக்கமளித்தனர் எனச் சொல்ல இயலாது. மார்க்ஸ் இது குறித்துத் தொகுப்பாக எதையும் சொல்லிச் செல்லாததால் இப்படி லாபம் என்பது குறைந்தபட்சமாகச் சிறுத்து ஒரு நெருக்கடியை உருவாக்குவதற்கான நிலையை ஏதேனும் ஒரு ஒற்றைக் காரணத்தோடு (monocausal) இணைக்கும் தவறைப் பலரும் செய்தனர். எடுவர்ட் பெர்ன்ஸ்டெய்ன், ருடால்ஃப் ஹில்பெர்டிங் ஆகியோர்  இந்த மார்க்சியக் கோட்பாடு எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்தாது எனக் கூடக் கூறினர்.marx 2

லாபம் இப்படிக் குறைந்தபட்சமாக வீழ்வதற்கு, 1.தொழிலாளிகள் மீதான சுரண்டலை அதிகபட்சமாக ஆக்குவது 2.கூலியின் மதிப்பு வீழ்ச்சி அடைவது 3.எந்திர உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் ஊடாக மாறாத முலதனத்தை (எந்திரங்கள் மற்றும் அதன் தேய்மானச் செலவுகள்) குறைத்தல் 4. அளவுக்கதிக உற்பத்தியின் (over production) விளைவாகத் தொழிலாளிகள், சொகுசுப் பொருட்களின் உற்பத்தி என்பது போன்ற பின் தங்கிய தொழிற்துறைகளுக்குத் தள்ளப்படுதல் 5.அயல்நாட்டு வணிகத்தின் ஊடாக அதிக லாபம் தரும் தொழில்களை நோக்கி உற்பத்தி நகர்தல் 6. வட்டி மூலம் லாபம் தரும் மூலதனம் (stock capital) மிகுதியாதலின் ஊடாக விற்றுவரவின் (returns) வீதம் குறைதல் எனப் பல காரணங்கள் உண்டு.

இந்தப் பல காரணங்களில் ஆட்டோ பாயர், ஹில்ஃபெர்டிங், புகாரின் போன்றோர் தேவைக்கதிக உற்பத்தி என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டும் முதன்மைப் படுத்தினர். ரோசா லக்சம்பர்க், பால் ஸ்வீசி முதலானோர் வேலை இழப்பு, குறைந்த ஊதியம் ஆகியவற்றால் நுகர்வோர்களுக்கு வாங்கும் திறன் குறைந்து போவது என்கிற அம்சத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். ஹென்ரிக் க்ராஸ்மன், எர்னெஸ்ட் மான்டல் ஆகியோரே இப்படி ஒற்றை அம்சங்களில் கவனம் குவிப்பதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியை விளக்கிவிட இயலாது.  முதலாளியத்தின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தும் முதலாளிய நெருக்கடியில் பங்குவகிக்கின்றன என்பதை வலியுறுத்தினர். இந்தக் காரணங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவையாகவும் உள்ளன.  எடுத்துக்காட்டாக அளவுக்கு மீறிய உற்பத்தி என்பது இன்னொரு பக்கம் அளவுக்கு மீறிய மூலதனக் குவிப்பின் விளைவாகவும் உள்ளது. இப்படி ஒன்றோடொன்று இந்தக் காரணிகள் பின்னிக் கிடப்பதால்தான் நெருக்கடிகள் என்பன முதலாளியத்தின் “விதி” ஆகிவிடுகின்றன. முதலாளித்துவம் வளர வளர நெருக்கடிகள் மிகுமே ஒழியக் குறையாது என்றார் மார்க்ஸ். போகப் போக கைத்தொழில்களையும் முதலாளியம் கையகப்படுத்தும். உற்பத்தி மையப்படுத்தப்படுதல் அதிகரிக்கும் தொழிலாளிகள் மேலும் மேலும் அந்நியப்படுவர். தொழில்நுட்ப வளர்ச்சிகளின் ஊடாக மேலும் மேலும் தொழிலாளிகள் வேலை இழப்பர். இது மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிகளை அதிகப்படுத்தவே செய்யும். அதேபோல தொழிலாளிகளின் கூலி முதலான மாறும் மூலதனத்தைக் காட்டிலும்எந்திரங்களின் விலை உள்ளிட்ட  மாறாத மூலதனம் கூடுதலாக இருக்கும்போதுதான் லாப வீதம் அதிகமாக இருக்கும் என முன் அத்தியாயத்தில் பார்த்தோம். நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக மாறாத மூலதனத்தின் மதிப்பு (அதாவது எந்தி ரங்களுக்கான செலவு)  குறையும்போது லாப விழ்ச்சி ஏற்படுவது முதலாளியத்தின் விதியாகிறது. எனவேதான் முதலாளியம் நெருக்கடிகளிலிருந்து தப்பவே முடியாத நிலை ஏற்படுகிறது.

ஏகாதிபத்தியமும் உலகமயமும்

கார்ல் மார்க்ஸ் முதலாளியத்தின் விதிகளைக் கண்டறிந்தார் எனவும், விளாடிமிர் லெனின் முதலாளியத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்பதை நமக்குச் சொன்னார் எனவும் மார்க்சீயத்தின் அடிப்படைகளை விளக்குவோர் கூறுவர். மார்க்சின் காலத்தில் ஏகாதிபத்தியம் எனச் சொல்லத்தக்க அளவுக்கு முதலாளியம் வளரவில்லை என்பது இதில் தொக்கி நிற்கும் பொருள்.

முதலாளியத்தின் கோரப் பசிக்குச் சொந்த நாட்டுச் சந்தையின் மூலம் அள்ளும் லாபம் மட்டும் போதாது, அதற்கு வெளிநாட்டுச் சந்தைகளும் வேண்டும் என்றார் லெனின். அதற்கென அது மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் அவர் விளக்கினார். வங்கிகளின் ஒருங்கிணைவு, தொழில்களின் ஏகபோகம் (monopoly) முதலியவற்றின் மூலம் “நிதிமூலதனம்” உருவாகிறது. இதன் அடுத்த கட்டமாக பொருள்கள் மட்டுமல்ல, மூலதனமே நாடு விட்டு நாடு ஏற்றுமதி செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் குறை வளர்ச்சி நாடுகளுக்கு இப்படி மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன.. இதன் விளைவாக இனி உலகமே ஏகபோக வணிக நிறுவனங்களாலும் சக்தி வாய்ந்த முதலாளிய நாடுகளாலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும் நிலை உருவாகும் என்றார் லெனின். அவரது காலத்திய முதல் உலகப் போரை (1914 -18) அவர் இப்படித்தான் விளக்கினார். கொள்ளை அடிப்பதற்காகவும், நாடுகளைப் பங்கு போட்டுக் கொள்வதற்காகவும் உலக ஆதிக்க சக்திகளுக்கிடையே (great powers) நடக்கும் போர் இது என்றார். இப்படி உலக முதலாளிய மையங்களாக உருவாகும் நாடுகள் தம் இராணுவ பலத்தை மிகுதிப்படுத்திக் கொண்டு பேரரசுகளாக (empires) வெளிப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு ஏகபோக முதலாளியம் (monopolist capitalism), உலக அளவிலான வணிகப் போட்டி, காலனியம், உழைப்புச் சுரண்டல், இயற்கை வளங்களின் கொள்ளை, புவி அரசியல் மோதல்கள் (geopolitical conflicts) என்பதாக ஒரு புதிய உலகம் உருவாகி வருவதை லெனின் சுட்டிக்காட்டினார். இப்படியான உச்ச கட்டத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டுள்ளோம்.

லெனின் (1870 – 1924) மறைந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகப் போகின்றன. இந்த இடைவெளியில் லெனினே கற்பனை செய்ய இயலாத பல ,மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. லெனினிய அணுகல்முறையைச் சற்றே முன் நகர்த்தி இம்மானுவேல் வாலர்ஸ்டெய்ன், அன்டோனியோ நெக்ரி, மிஷேல் ஹார்ட் ஆகியோர் இன்றைய உலகை விளக்குவதைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.

உலகம் ஒரு கிராமமாமகச் சுருங்கிவிட்டது என இப்போது நாம் சொல்கிறோம். ஆனால் இது ஏதோ கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் நடந்த ஒரு மாற்றமல்ல. ஒரு நீண்ட வரலாற்றின் இன்றைய பரிமாணமாகவே நாம் இதைக் காண வேண்டும். 1884 ல் கிரீன்விச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் நேரம் ஒழுங்கமைக்கப்பட்டது. 1896-உலக அளவிலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்; 1901- நோபல் பரிசு நிறுவப்படல்; 1930 – உலக அளவில் வானொலி பரப்பு; 1914-1918- முதல் உலகப் போர்; 1939-45- இரண்டாம் உலகப் போர்; 1945- ஐக்கிய நாடுகள் அவை…. என்பதாகப் பல்வேறு வகைகளில் உலக ஒருங்கிணைப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது.

அன்றே இது குறித்து மார்க்சும் எங்கல்சும் குறிப்பிட்டனர்:

“தான் உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு சந்தை இடைவிடாது வளர வேண்டும் என்பது முதலாளிக்குத் தேவையாக இருக்கிறது. அது அவனை இந்த உலகப் பரப்பு முழுவதும் துரத்தி அடிக்கிறது. முதலாளிகள் உலகச் சந்தையைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த முயற்சி, ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியிலும், நுகர்விலும் ஓர் உலகத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது…. பழைய மாதிரியான வட்டார- தேசிய அளவிலான ஒதுங்குதல், சுய தேவைப் பூர்த்தி என்பவற்றிற்குப் பதிலாக எல்லா அம்சங்களிலும் உலக அளவில் தேசங்களுக்கு இடையே ஒரு பரஸ்பரச் சார்பு ஏற்படுகிறது- பொருள் உற்பத்தியில் மட்டுமல்ல அறிவு உற்பத்தியிலும் கூட..” (மார்க்ஸ் – எங்கல்ஸ், பொதுவுடைமை அறிக்கை, 1848).

லெனினியம் முன்வைத்த “ஏகாதிபத்தியம்” என்கிற கோட்பாட்டிற்கும், வாலர்ஸ்டைன் போன்றோர் முன்வைக்கும் “உலக முதலாளிய அமைப்பு” என்கிற கருத்தாக்கத்திற்கும் இடையில் சில நுண்மையான வேறுபாடுகள் உள்ளன. முதலாளியப் பரிணாம வளர்ச்சியின் தனி ஒரு கட்டத்தின் குணாம்சமாக ஏகாதிபத்தியம் என்பது முந்தைய மார்க்சிய அறிஞர்களால் வரையறுக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளியம் ஏகாதிபத்தியமாக வடிவெடுத்தது என்பது இதன் பொருள். முதலாளியத்தின் உலகளாவிய தன்மையை அதற்குப் பின்பே காண வேண்டும் என்பது இதன் உட்கிடை.

மாறாக முதலாளியம் தோன்றும்போதே உலகளாவிய தன்மையுடையதாக உள்ளது என்பது உலக முதலாளியக் கருத்தாக்கத்தின் பங்களிப்பு. முதலாளியம் முந்தைய உற்பத்தி முறைகளிலிருந்து வேறுபடுகின்ற மையமான புள்ளிகளில் ஒன்று இது. முதலாளியத்தின் இந்த உலகளாவிய செயல்பாடு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் மூலதனத் திரட்டலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடலாதிக்கத்தின் மூலமான கொள்ளைகள் மற்றும் வணிகம் என்பதான வடிவங்களில் முதற்கட்ட மூலதனத் திரட்டலின் உலகளாவிய தன்மை அமைந்தது. இந்தியா போன்ற விளிம்புகளிலிருந்து (periphery) ஐரோப்பா போன்ற மையங்களை (centers) நோக்கி மூலதனத் திரட்சி அமைந்தது. ஆதி மூலதனத் திரட்டல் (primitive capitalist accumulation) குறித்து எழுதும்போது மார்க்ஸ் இதனைக் கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

“அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கப்பட்டதும் வளரும் முதலாளிகளுக்குப் புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டன. கிழக்கிந்திய மற்றும் சீனச் சந்தைகள், அமெரிக்கக் குடியேற்றம், குடியேற்ற நாடுகளுடன் வணிகம், பண்டப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முதலியன கடல் வணிகம், தொழில் ஆகியவற்றில் முன்பு சாத்தியமற்ற பெரு வளர்ச்சிகளுக்கு வித்திட்டன” (கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், பொதுவுடைமை அறிக்கை,1848).

“உற்பத்திப் பொருளுக்கான ஒரு நிரந்தரச் சந்தையைக் குடியேற்றங்கள் ஏற்படுத்தின. இவ்வாறு உருவான சந்தை ஏகபோக மூலதனத் திரட்சிக்குக் காரணமாகியது. வெளிப்படையான கொலை, கொள்ளை, அடிமைகளைக் கைப்பற்றுதல் முதலான கொடூரச் செயல்பாடுகளின் மூலமாக அள்ளிய செல்வங்கள் ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்று மூலதனமாக மாற்றப்பட்டன.  இப்படி ஐரோப்பியக் கூலித் தொழிலாளிகளின் மறைமுகமான அடிமைத்தனத்திற்கு அடித்தளமாக குடியேற்ற உலகின் அடிமைத்தனம் பயன்படுத்தப்பட்டது. .. மூலதனம் இவ்வாறு தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு துளையிலிருந்தும் ரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்டத்தான் அரங்கில் நுழைந்தது.” (கார்ல் மார்க்ஸ், மூலதனம், 1867)

மார்க்சின் இந்தக் கூற்றை சுமார் எண்பது ஆண்டுகளுக்குப் பின் ஜே.எம்.கீன்ஸ் இப்படி வழிமொழிந்தார்:

“ஸ்பெயினில் சர் ஃப்ரான்சிஸ் ட்ரேக் அடித்து வந்த கொள்ளையே பிரிட்டனின் வெளிநாட்டு முதலீட்டின் அடித்தளமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கொள்ளையின் ஒரு பகுதியைத் தன் வெளிநாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கும், இன்னொரு பகுதியை லெவென்ட் கம்பெனியில் முதலீடு செய்வதற்கும் அரசி எலிசபெத் பயன்படுத்திக் கொண்டாள். இந்த லெவன்ட் கம்பெனி மூலம் கிடைத்த லாபமே கிழக்கிந்தியக் கம்பெனி உருவாவதற்குக் காரணமாகியது. 17, 18ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் கிடைத்த லாபமே இங்கிலாந்தின் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கான முக்கிய அடித்தளமாகியது” (‘பணம் குறித்த ஆய்வு’, 1930).

ஆக முதலாளியத்தின் இந்த இரு பண்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று அதன் உலகளாவிய தன்மை; மற்றது அது தொடர்ந்து சந்திக்கும் நெருக்கடிகள். இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அது அவ்வப்போது “கட்டுமானச் சீர்திருத்தனகளை” (structural adjustments) மேற்கொண்டு தன் வடிவத்தில் உரிய மாற்றங்களை மேற்கொண்டு தன்னைப் புதிய சூழல்களுக்குத் தகவமைத்துக் கொள்கிறது.

உலக முதலாளியத்தின்.அப்படியான சில தகவமைப்பு மாற்றங்களை நாம் இப்படி அடையாளம் காணலாம்:

1.தொடக்க முதலாளியம் (1500 -1640), 2.வணிக முதலாளியம் (1640 – 1750), 3.தொழில் முதலாளியம் (1750- 1870), 4.ஏகபோக முதலாளியம் (1870 -1950), 5.பன்னாட்டு நிறுவன முதலாளியம் (1950 – ).karl-marx-9401219-1-402

முதலாளிய மையங்கள் இவ்வாறு தம்மைத் தகவமைத்துக் கொள்வது என்பதன் இன்னொரு பக்கம் அவற்றின் விளிம்புகளாக உள்ள இந்தியா போன்ற நாடுகளிலும் உரிய கட்டுமானச் சீரமைப்புகள் திணிக்கப்படுகின்றன. ‘காட்’ முதலான ஒப்பந்தங்கள், நரசிம்மாராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானச் சீர்திருத்தங்கள் முதலியன இப்படித் திணிக்கப்பட்டவைதான்.

 

(அடுத்த இதழில் நெக்ரி -ஹார்ட் ஆகியோரின் empire எனும் கருத்தாக்கம் பற்றி)

 

 

 

 

தாஜ்மகால் எப்போது சார்?

 (‘நேற்று பாபர் மசூதி, இன்று தாஜ்மகாலா?’ எனும் தலைப்பில் நவம்பர் 2017 ‘மக்கள் களம்’ இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

TAJ+photo+(high+resolution)

“காந்தியைக் கொன்னது சரிம்பான் ஒருத்தன்; நாங்க கொல்லலைம்பான் இன்னொருத்தன்; கொன்னா என்னாம்பன் மூணாவது ஆள்”

-இந்துத்துவவாதிகள் பற்றி இப்படியொரு சொலவடை உண்டு. இது வெறும் நகைச்சுவை அல்ல, நடந்து கொண்டிருப்பதுதான். இப்போது இதற்கும் ஒருபடி மேலே போய் ஒரே ஆளே தாஜ்மகாலை முதல்ல உடைக்கணும்பான். அப்புறம் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு அய்யோ அதை உடைக்கக் கூடாதுன்னு சொல்லிக் கண் சிமிட்டுவான்.

தாஜ்மகால் விவகாரத்தில் இப்போது அதுதான் நடந்து கொண்டுள்ளது. தாஜ்மகால் குறித்து அவர்களின் நிலைபாடு என்ன என்பது யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு மர்மம். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஜூன் 16 அன்று, “வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது தாஜ்மகால் பொம்மைகளைப் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும். அதில் இந்தியத் தன்மை இல்லை” என்றார். அப்புறம் அவர்களது ஆட்சியின் ஆறாம் மாத நினைவு நாளுக்காக சுற்றுலாத்துறை வெளியிட்ட சிறு நூலில் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் நீக்கப்பட்டது. ஆனால் அதே குறுநூலில் யோகி தலைவராக உள்ள கோரக்பூர் கோவிலுக்கெல்லாம் பல பக்கங்களில் படங்களுடம் அறிமுகம் இருந்தது. உலகின் ஏழாம் அதிசயம் என உலகமே கொண்டாடும் அந்த வெண்பளிங்குக் காதற் சின்னத்திற்கு மட்டும் இடமில்லாமல் போய்விட்டது. இது ஒரு பிரச்சினையானவுடன் தாஜ் “இந்தியத் தன்மையில் இல்லை என்பதற்காகவெல்லாம் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியெல்லாம் உள் நோக்கத்துடன் செய்யவில்லை, அதுவும் இனி சேர்க்கப்படும்” என சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுணா மூலம் பதிலளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மிகப் பெரிய விளம்பரங்களுடன் யோகியே சென்ற மாத இறுதியில் தாஜ்மகாலுக்குப் போனார். சுற்றிப் பார்த்துவிட்டு, “ஆகா, இது இந்தியாவின் மாணிக்கம் (gem)” என்றார். “இதைக் காப்பாற்றுவோம் என்றார். “சுற்றுலா மூலம் தாஜ்மகால் அளிக்கும் வேலை வாய்ப்பு, வருமானம் ஆகியவற்றை எப்படி விட முடியும்” என்றார்.

இப்படி அவர் சொல்லிக் கொண்டுள்ளபோதே மாநில பா.ஜ.க வின் ச.ம.உ சங்கீத் சோம், “இது துரோகிகளால் கட்டப்பட்டது. இந்தியப் பண்பாட்டின் களங்கம்” என்று இன்னொரு பக்கம் முழங்கினார். G.V.L நரசிம்மா ராவ் என்கிற அவர்களின் இன்னொரு உள்ளூர்த் தலைவர், “அது காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடு” என்றார்.

“அது அவர்களின் சொந்தக் கருத்து” என வழக்கம்போல அரசு சொல்லி நழுவிக் கொண்டது. இதற்கிடையில் வன்முறைகளுக்குப் பேர் பெற்ற பஜ்ரங் தள் அமைப்பை உருவாக்கியவரும், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளியுமான வினய் கத்தியார், “தாஜ்மகால் என்பது ‘தேஜோ மகாலயா’ என்கிற ஒரு சிவன் கோவில். ஜெய்பூர் மகாராஜாவிடமிருந்து ஷாஜகான் அதை வாங்கி இடித்துக் கட்டியதுதான் இது” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இன்னொரு பக்கம் இரண்டாண்டுகளுக்கு முன் ஹரிஷங்கர் ஜெயின் என்கிற ஒரு ஆர்.எஸ்,எஸ் வக்கீலுடன் இணைந்து மொத்தம் ஆறு வக்கீல்கள், அக்ரேஷ்வர் மகாதேவ் ஞானதீஷ்வர் சார்பாக வழக்கொன்றைத் தொடுத்தனர். இந்துக்களின் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாஜ்மகாலை மீட்டுத் தருவது, உள்ளே சென்று வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளிப்பது முதலானவை வழக்கில் முன்வைக்கப்பட்ட வேண்டுதல்கள். சரி யார் அந்த அக்ரேஷ்வர் மகாதேவ் ஞானதீஷ்வர் என்கிறீர்களா? அவர்தான் அந்த இடித்துக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிவன் கோவிலின் மூலவர். பாலராமர் பெயரில் பாபர் மசூதிக்கு உரிமை கோரி வழக்குப் போட்டவர்கள் அல்லவா அவர்கள்.

இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? அதுவும் வழக்கம்போலத்தான். பி.என்.ஓக் என்கிற வரலாறு அறிந்த யாருமே கேள்விப்படாத ஒரு “வரலாற்றாசிரியர்”.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது பா.ஜ.க அரசின் தொல்லியல் துறை சார்பாக அளிக்கப்பட்ட எதிர் மனுவில், “தாஜ் ஒரு கல்லறை. இந்துக் கோவில் எதுவும் இதற்கென அழிக்கப்பட்டதில்லை” எனப் பதிலளிக்கப்பட்டது. நகைச்சுவையானவர்கள். வழக்குத் தொடுப்பவர்களும் அவர்களே. எதிர் வழக்காடுபவர்களும் அவர்களே. ஒரே தரப்பினர் அவர்களுக்குள் நடத்திக் கொள்ளும் இந்த விளையாட்டுச் சண்டையின் கொடு விளைவுகள் யார் தலையில் விடியும் எனச் சொல்லத் தேவையில்லை.

சரி. இதன் உண்மை என்ன? ராஜா ஜெய்சிங் என்பவரிடமிருந்து தரிசாக இருந்த நிலத்தை உரிய ஈடு கொடுத்து வாங்கிக் கட்டப்பட்டதுதான் தாஜ். தினசரி கொடுக்கப்பட்ட கூலிகள், சலவைக் கல் வாங்கச் செலவிடப்பட்ட தொகை எல்லாவற்றிற்கும் ஷாஜகான் உரிய கணக்கு வைத்துள்ளார். அவரது ‘பாஷாநமா’ இன்றும் உள்ளது. அக்காலத்தில் இங்கு வந்த ஐரோப்பியப் பயணிகளான டாவர்னியர், பீட்டர் முண்டி ஆகியோரும் ஷாஜகான் தனக்கு மிகவும் பிடித்தமான மனைவியான மும்தாஜ் மீது எத்தனை அன்பு கொண்டிருந்தார் எத்தனை ஈடுபாட்டுடன் இந்தக் காதற் சின்னத்தைக் கட்டி முடித்தார் என்பதை எல்லாம் பதிவு செய்துள்ளனர்.

தாஜ் உலக அதிசயங்களில் ஒன்று என உலக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்று. உலக அளவில் உள்ள தொல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. 2,80,000 லிகோ சலவைக் கற்களைக் கொண்டு சென்ற ஆண்டு துபாயில் இதன் replica ஒன்று கட்டப்பட்டது. 2007ல் வாயேஜர் விண்கலம் ஏவப்பட்டபோது அதனுள் வைத்து அனுப்பத் தேர்வு செய்யப்பட்ட 115 உலக அற்புதங்களில் தாஜ்மகாலின் அழகிய வடிவும் ஒன்று. தப்பித் தவறி இந்தப் பிரபஞ்சத்தில் எங்கேனும் வேற்றுயிர்கள் வசிக்கின்றன எனில் பாருங்கள் எங்களின் அழகுணர்வை எனப் பீற்றிக் கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட நம் பெருமிதங்களில் ஒன்று தாஜ்..

சீனப் பெருஞ்சுவரை இடித்துத் தள்ள  அங்குள்ள கம்யூனிஸ்டுகள் முயல்வார்களா? டாவின்சியின் மோனோலிசாவை நெருப்பில் பொசுக்க ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு மனம் வருமா? சுதந்திர தேவி சிலையை ஏதோ காரணம் சொல்லி அமெரிக்கர்கள் வீழ்த்துவார்களா?

தாஜ்மகாலையும் விடப் பெரிய அதிசயம் ஒன்று இருக்குமானால் அது அந்த வெண்ணிறக் கனவை யாரும் வெறுக்க முடியும் என்பதுதான்.

தாஜ்மகாலோ தஞ்சைப் பெரிய கோவிலோ அவை என்ன ஷாஜகான் அல்லது ராஜராஜன் என்கிற மன்னர்களின் சாதனையா? அவை ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடுகள். அவை அழகுணர்வின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் மனப்பாங்கு எல்லாவற்றிற்கும் சாட்சியாக நிற்பவை. அவற்றை மன்னர்களோ கட்டினார்கள்? அவ்வக் கால மக்களின் உழைப்பின், கலை உணர்வின் வெளிப்பாடுகள் அவை. பாமியானில் புத்த சிற்பங்களைத் தகர்த்த தாலிபான்களும், பாபர் மசூதியைத் தகர்த்துவிட்டு  தாஜ்மகாலைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கும் நீங்களும் மனித குலத்தின் விரோதிகள்.

இந்துத்துவத்தின் மிகப் பெரிய மனச்சிக்கல் (psychological complex) வரலாறு குறித்த அதன் நாணம்தான். மத்திய கால வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட கால வரலாற்றையும் அவர்களால் துடைத்தெறிய முடியவில்லை. அவர்களிடம் அதானிகள் இருக்கிறார்கள், அம்பானிகள் இருக்கிறார்கள். காசு இருக்கிறது. கல்புர்கிகளையும் கௌரிகளையும் கொன்று குவிக்க கொலைகாரப் படைகள் உள்ளன. அவர்களிடம் இல்லாதது அறிவு மூலதனம்தான் (intellectual capital). இப்படியான நடவடிக்கைகளைத் தொடரும் வரை அவர்களிடம் இது எந்நாளும் குவியப் போவதும் இல்லை. அவர்களுக்கு எஞ்சுவது பி.என்.ஓக் போன்றோர் உமிழ்ந்துள்ள வரலாற்றுக் குப்பைகள்தான்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வலிமையும் பெருமையும் அதன் பன்மைத்தன்மைதான் என்பதை உணராதவரை இதைத் தாண்டி நீங்கள் மேலெழப் போவதில்லை.

கடைசியாக இரண்டு கேள்விகள்:

  1. தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றால் டில்லி செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது. இனி ஆக 15 களில் அங்கு நின்று கொடியேற்றமாட்டீர்களா?
  2. வெளிநாட்டு விருந்தினர்களுக்குத் தாஜ்மகால் பொம்மைகளுக்குப் பதிலாக ‘பகவத் கீதை’ நூற்பிரதிகளைப் பரிசளிப்பதைச் சாதனையாகச் சொல்பவர்களே, புத்தனின் தம்மபதம், கபீர் வாணி, குரு கிரந்த் சாகிப், பசவண்ணர், நாராயண குரு, சித்தர் பாடல்கள், அகிலத் திரட்டு, சுஃபி ஞானியரின் பொதுமைச் சிந்தனைகள், அம்பேத்கரின் அரிய நூல்கள் இவற்றைப் பரிசளிப்பதுதானே?

மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10   

(தீராநதி, நவம்பர் 2017)              

புத்தர் தோன்றியதும் புத்தம் அரும்பியதும் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில்தான். புத்தர் அவதரித்த லும்பினி இன்று நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ளது. புத்தர் நிர்வாணம் அடைந்த புத்த கயா நேபாளத்திற்குக் கீழ் அமைந்துள்ள பீஹார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ளது. அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநாரா உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலிருந்து சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் நேபாள எல்லையில் உள்ளது.

எனினும் அடுத்த சுமார் மூன்று நூற்றாண்டுகளில் மாமன்னர் அசோகரது காலத்தில் பவுத்தம் இலங்கை முதலான தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தடம் பதிக்கத் தொடங்கி இருந்தது. மணிமேகலைக் காப்பியம் புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றியது. புகார், வஞ்சி, காஞ்சி எனும் தமிழகத்தின் அன்றைய மூன்று முக்கிய நகரங்கள் தவிர மணிபல்லவம், சாவகம் முதலான இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயும்  பௌத்தம் செழித்திருந்த பல நிலப்பரப்புகளையும் மணிமேகலை நம் முன் விரிக்கிறது. மணிமேகலையில் காட்சிப்படுத்தப்படும் மணிபல்லவத் தீவு இன்றைய இலங்கையின் நயினாத்தீவுதான் என்றொரு கருத்துண்டு. சாவகம் என்பது இன்றைய ஜாவா என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியா, இலங்கை, தாய்லந்த், கம்போடியா, லாவோஸ், ஜாவா, சுமத்ரா (இந்தோனேஷியா) என ஒரு தென்கிழக்காசிய பவுத்த வெளி ஒன்று அன்று உருவாகியிருந்தது என ஆனே மோனியஸ் போன்ற இன்றைய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மணிமேகலையில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வெளிப்படும் காஞ்சிபுரத்திற்கும் சாவகத்திற்கும் இடையில் அடுத்த பல நூற்றாண்டுகள் வரை நெருக்கமான தொடர்பும் இருந்துள்ளது. பதினான்காம் நூற்றாண்டு ஜாவா காவியமான ‘நாகரக்ருதாகம’ எனும் நூலில் ஆறு பவுத்த விகாரைகள் அமைந்த “காஞ்சிபுரி” யிலிருந்து வந்த ஸ்ரீபுத்தாதித்யா எனும் பிக்கு எழுதிய கவிதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக மோனியஸ் கூறுகிறார்.

இப்படியான ஒரு அகன்ற தெனிந்திய – தென் கிழக்காசிய இலக்கிய – பண்பாட்டு வெளி ஒன்று குறித்து தனக்கும் முன்பாக சில்வேய்ன் லெவி பதிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார். இந்த நிலப்பகுதிகள் அனைத்தையும் இப்படி இணைக்கும் பண்பாட்டுக் குறியீடாக பவுத்த கடவுளர்களில் ஒன்றான மணிமேகலா தெய்வத்தை லெவி சுட்டிக் காட்டுகிறார். “தமிழ்நாடு, சிலோன், பர்மா, சயாம், கம்போடியா முதலான நாடுகளில் மணிமேகலா தெய்வம் அறியப்பட்டிருந்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன” எனக் கூறும் லெவி “இந்த நில, நீர் பரப்புகளுக்கு அப்பால் அதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

கடல் கடந்து வணிகம் செய்வோரின் கடற்பயணங்களில் அவர்களைக் காப்பவராக வணிகர்களால் வணங்கப்பட்டதுதான் மணிமேகலா தெய்வம். பவுத்த புனிதத் தொகுப்புகளான மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களிலும் எதிர்கால புத்தர் ஒருவர் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்தபோது அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது என மணிமேகலா தெய்வம் குறிப்பிடப் படுகிறது. தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணி இரண்டிலும் அப்படிக் காப்பாறப்பட்ட எதிர்கால புத்தர் ஒருவர் கோவலனின் மூதாதையர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுவார். மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த கோவலன், “எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக” எனக் கூற, மணிமேகலைக்கு அத் தெய்வத்தின் பெயர் இடப்பட்டது என்பது இளங்கோவடிகள் கூற்று (அடைக்கலக் காதை). “பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ எனவும் மணிமேகலாவை ஒரு கடற் தெய்வமாக சாத்தனாரும் குறிப்பார். பாலி இலக்கியங்களில் இந்தக் கதையாடல் சற்று வேறுபட்டு இருக்கும். மணிமேகலா தெய்வம் தனது காவற் பொறுப்பைச் சற்று மறந்திருந்ததால் கப்பல் கவிழ்ந்து ஏழு நாள் கழித்தே எதிர்காலப் புனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது என்று அவற்றில் கூறப்படும். ‘புத்சாரணா’ ‘சதர்மாலங்காரா’ முதலான சிங்கள நூல்களிலும் மணிமேகலா தெய்வம் போற்றப்படும். ஜாவாவின் (அதாவது சாவகத்தின்) தென்மேற்கு முனையில் உள்ள ‘பெலாபுஹான் ராட்டு’ எனும் கடற்கரைச் சிற்றூர் மணிமேகலா தெய்வம் தங்கி இளைப்பாறும் இடமாக இன்றும் கருதப்படுகிறது.

அந்த மணிமேகலா தெய்வம்தான் நம் காப்பிய நாயகி மணிமேகலையை உரிய ஏது நிகழ்ச்சிகளுடன் துறவு நோக்கி ஆற்றுப்படுத்துபவராக இங்கு வெளிப்படுகிறார். அந்தத் தெய்வம் உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றி அவளறியாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வான்வழி பறந்து சென்று, புகாருக்கு தெற்காக முப்பது யோசனைத் தூரத்தில் வைத்துத் திரும்பும். அத்தோடு நில்லாமல், “விடியட்டும் அவளை என் கையில் கொணர்வேன்” என உறக்கம் வராமல் கிடந்த உதயகுமாரன் முன் தோன்றி அரசனின் கடமையை நினைவூட்டி,”தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” என எச்சரித்து அகலும்.

அடுத்து உவவனம் செல்லும் அத் தெய்வம் அங்கு களைத்து உறங்கும் சுதமதியை எழுப்பி இந்திரவிழா காணப் புகாருக்கு வந்த தான் வேறு பொறுப்புக்களை மெற்கொள்ள வேண்டிய தேவை வந்ததை விளக்கும். “மணிமேகலையை புத்த தேவனின் அற வழியில் ஆற்றுப்படுவதற்கான ‘ஏது’ முதிர்ந்துளது. அதனால் அவளை மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். அங்கவள் முற்பிறப்புணர்ந்து இன்றிலிருந்து ஏழாம் நாள் திரும்புவாள். அன்று இங்கு நிகழ இருக்கும் ‘ஏதுக்கள்’ பல உள்ளன” என்றுரைத்து நீங்கும்.

உவவனத்திலிருந்து சுதமதி மாதவியின் இல்லம் நோக்கிச் செல்லும் வழியில் புகார் நகரின் அந்த இரவு நேரத்தை ஒரு பெருங் காப்பியத்திற்குரிய அழகுடன் சாத்தனார் விரித்துரைப்பார் (‘துயிலெழுப்பிய காதை).

அந்த இரவிலும் அந் நகரில் ஆடல் மங்கையர் தம் நடன அரங்குகளில் நாட்டியம் பயின்று கொண்டிருப்பர்; பல்வேறு இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருக்கும்; பரத்தை வீடு சென்று திரும்பிய கணவனிடம் ஊடி அகன்று படுத்திருந்த மனையாள் காமம் மீதூற கோபம் மறைந்து அவனைக் கட்டி அணைவாள்; சிறு தேர் இழுத்து தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களை அவர்தம் செவிலித் தாய்மார்கள் படுக்கைக்கு அழைத்துச் சென்று வாசனைப் புகை காட்டி உறங்க வைப்பர். அடுத்து அந்தப் பெரு நகரில் நடுச்சாமத்திலும் ஒலிக்கும் பல்வேறு ஒலிகள் குறித்தும் சுமார் இருபத்திரண்டு வரிகளில் மிக விரிவாக காப்பியச் சுவையோடு எடுத்துரைக்கப்படும். அதன் பின் சுதமதி சக்கரவாளக் கோட்டம் தாண்டி ஊரம்பலத்தே சற்று இளைப்பாறுவாள். அவள்முன் தோன்றிய கந்திற்பாவை மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகிய மூவரும் சகோதரிகளாக  முறையே தாரை, வீரை, இலக்குமி என்கிற பெயர்களில் ரவிவர்மன் என்பானின் மகள்களாகப் பிறந்த முற்பிறப்பு வரலாற்றை உரைக்கும்.  அடுத்து சுமார் பதினாறு வரிகளில் புகார் நகரில் இரவு அடங்கி வைகறை விடியும் காட்சி அமையும். இறுதியாக மணிமேகலை இன்னும் வராததால் கவலையுற்றுக் கிடக்கும் மாதவியை அடைந்து நடந்த கதைகளை விளக்குவாள் சுதமதி.

இவற்றை இங்கு இத்தனை விரிவாகச் சொன்னதற்குக் காரணமுண்டு. இங்கே புகார் நகரம் கண்விழிக்கும் அதே நேரத்தில் அங்கே முப்பது காத தூரத்தில் அந்தச் சிறுபெண் மணிமேகலையும் கண் விழிப்பாள். அது இதனின்றும் முற்றிலும் வேறுபட்ட பின்புலம். புகாரில் அது ஒரு விழாக் காலம்; அது ஒரு பெருநகர், தலை நகர், அங்கு காண்பவை ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், படுக்கையில் முயங்கிக் கிடக்கும் காதலர்கள், சிறு தேர் உருட்டி விளையாடும் சிறார்கள்.. மணிபல்லவத்திலோ நாம் காண்பது முற்றிலும் வேறுபட்ட காட்சிகள். நில அமைப்பு மட்டுமல்ல அனைத்தும் வேறுபட்ட ஒரு சூழலில் கண் விழிக்கிறாள் மணிமேகலை. இந்தப் புதிய சூழல் உணர்த்துவதும், அது காட்டும் வழித்தடமும்தான் இனி அவள் வாழ்வாகப் போகிறது. அவளுக்குக் காட்டப்படும் இந்தப் புதியவாழ்வின் பொறுப்புகளை, அதன் கடமைகளை, இவற்றின் பின்புலமாக இருக்கும் உன்னதங்களை அவள் இனிதான் உணரப் போகிறாள். இந்த முரண்பட்ட இரு சூழல்களை அருகருகே அமைப்பதன் மூலம் (juxtapose) வாசிக்கும் நம்முள்ளும் எல்லாமும் வெறும் தகவல்களாகவன்றி ஒரு அனுபவமாக மலர்ந்து விகசிக்கின்றன.

மணிமேகலை விழித்தெழும் இடம் ஒரு கடற்கரை. அலைகள் சூழ்ந்த அந்தத் தீவில் யாரும் இல்லை. முத்து விளையும் வயல்கள், சிதறிக் கிடக்கும் செம்பவளத் துண்டுகள், ஆங்காங்கு தென்படும் மணற் குன்றுகள், கடல் அலைகள் உருட்டி வந்து சேர்த்துள்ள மரத் துண்டுகள், தனித்து நிற்கும் ஒரு புலிநகக் கொன்றை மரம், ஒரு மலர் சூழ்ந்த பொய்கை என இவைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றன. சுற்றிலும் அலைகளால் முற்றுகை இடப்பட்ட ஒரு பாடிவீட்டுக்குள் அடை பட்டிருப்பது போன்று அவள் உணர்கிறாள், இதுவரை கண்டறியாத, மனித வாடையே இல்லாத அந்தச் சூழலில் ஒரு மர நிழலில் கண்விழித்தெழும் ஒரு சிறு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும். அவள் எழுந்த இடம் அவள் உறங்கத் தொடங்கிய உவவனம் இல்லை. உறங்குமுன் அருகிருந்த சுதமதி எங்கே? மலர் கொய்யச் சென்ற நான் இன்னமும் வாராததைக் கண்டு அன்னை மாதவி எத்தனை துயருறுவாள்?

இந்தச் சிந்தனைகள் அலைக்கழிக்க அவள் வாய்விட்டு “ஐயாவோ” எனக் கூவி அழத் தொடங்கினாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம். அவள்முன் எழுந்தது புத்த தேவனின் தர்மாசனம். மூன்று முழ அளவிற்கு நிலத்திற்கு மேலுயர்ந்து, நான்கு முழ அளவிற்கு அகன்று வெளிப்பட்டது ஒளி வீசும் அந்த தர்ம பீடிகை. தன்னை மறந்து கைதொழுதாள் மணிமேகலை. கண்களில் திரண்ட முத்துக்கள் அவளது முலைகள் மீது உதிர்ந்தன. இடம் வலமாக புத்த தேவன் அமர்ந்த அந்தத் தர்மாசனத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். மின்னலொன்று வானிலிருந்து நழுவி மண்ணில் சரிந்ததுபோல வீழ்ந்து வணங்கினாள்.

அப்படி வீழ்ந்து அவள் எழுந்தபோது அவள் தன் முற்பிறப்பு உணர்ந்தவளாய் வெளிப்பட்டாள். மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் முற்பிறவியில் சகோதரிகள் என அவளுக்கும் உணர்த்தப்பட்டது. இலக்குமி என முன்பிறவியில் அறியப்பட்ட மணிமேகலையின் கணவன் இராகுலன் திருமணம் ஆன எட்டாம் நாள் பார்வையாலேயே கொல்லும் திட்டிவிடப் பாம்பு தீண்டி இறந்தான். கணவனோடு அழற் பாய்ந்து உயிர்விட்டாள் இலக்குமி.

இலக்குமி (அதாவது முற்பிறவி மணிமேகலை), அப்பிறவியில் பிறவிப் பெருங்கடல் அறுக்கும் பேறு பெற்றிருக்கவில்லை. அதற்குரிய ‘ஏது நிகழ்ச்சி’ ஏதும் அப்போது முதிரவில்லை. “எனவே நீ அடுத்த பிறவி ஒன்றை எடுப்பாய். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். உனக்கொரு பெருந்துயர் வரும். மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்து வந்து இந்தத் தீவில் வைக்கும். அங்கு நீ பிறவிப்பிணியிலிருந்து விடுவிக்கும் மருத்துவனான புத்தன் அமர்ந்து அறம் உரைத்த ஆசனத்தின் காட்சி அருளப் பெறுவாய்..” என மணிமேகலைக்கு முற்பிறவி வரலாறு உணர்த்தப்பட்டது.

மணிமேகலைக் காப்பியத்தில் பதினாறு கிளைக் கதைகள் பதிக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு புத்த நெறியை விளக்குமாறு அமைந்துள்ளன என்றேன்.  இந்திய மதங்கள் எல்லாவற்றிலும் இந்த கர்ம வினைக் கோட்பாடு, அதாவது இறப்புக்குப் பின் மீண்டும் உயிர்கள் மறுபிறப்பு எடுப்பது என்பது ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவங்களுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தொடரில் முதலாவதாக கோதமை அவள் மகன் சார்ங்கலன் ஆகியோரின் கதையைப் பார்த்தோம். பேயைக் கண்ட அதிர்ச்சியில் மரணமுற்ற மகனை உயிர்ப்பித்துத் தருமாறு சம்பாபதி என்னும் தெய்வத்திடம் வேண்டி அழுவாள் கோதமை. தன்னுயிரை எடுத்துக் கொண்டு அவனது உயிரைத் தருமாறு அவள் கோருவாள். ஒரு உயிர் போனது என்றால் போனதுதான். இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினை சார்ந்து அது இன்னொரு பிறவி எடுத்தே ஆக வேண்டும். இது விதி. எம்மைப் போன்ற தெய்வங்கள் நினைத்தாலும் அதை மாற்ற இயலாது என ஆற்றல் மிகு தெய்வமான சம்பாபதி சொல்லி அகலும்.

பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான ஏதுக்கள் நிகழும் தகுதி பெற்று அதன் வழிச் செல்லும்வரை ஒருவர் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்பது ஒரு பவுத்த நம்பிக்கை. மணிமேகலையின் முற்பிறவிக் கதையைச் சொல்லி வரும்போதும் சாத்தனார் அப்பிறவியில் பிறப்பறுத்தற்குரிய ஏதுக்கள் நிகழாததால் இப்போது மணிமேகலையாய் மறு பிறவி எடுக்க வேண்டியதாயிற்று என்பதை வற்புத்துவது கவனிக்கத் தக்கது.

தன் முற்பிறவி உணர்ந்த மணிமேகலை அப்பிறவியில் தன் கணவனாக அமைந்த இராகுலன் இப்பிறவியில் எங்குளன் எனக் கேட்கும்போது மணிமேகலா தெய்வம் தோன்றி  இப்பிறவியில் அவன்தான் உதயகுமாரன் எனத் தெளிவுறுத்தும். அது மட்டுமல்ல முற்பிறவியில்  மணிமேகலை விண்ணிலிருந்து இறங்கிய சாது சக்கரன் என்கிற முனிவனுக்கு அமுதூட்டிய நல்லறத்தின் பயனாகப் பிறவி அறுக்கும் பேறுடையதாக இப்பிறவி அவளுக்கு வாய்த்துள்ளது என்பதையும் விளக்கும். “இப்பிறவியில் உதயகுமாரன்பால் உன் மனம் சென்றால் உனக்கு வாய்த்த இந்த நற்பேற்றை நீ இழந்தவள் ஆவாய். மிக உயர்ந்த நெல் வித்தொன்று வெங்களர் நிலத்தில் வீழ்ந்து பாழாவதற்கொப்ப அது முடியும். நீ அறத்தின் வித்து. நீ அப்படிப் பாழாகக் கூடாது. நீ நல்வழியில் உறுதிப்பட வேண்டுமென்றுதான் இங்கு கொணர்ந்தேன்” என தெய்வம் அவளுக்கு விளக்கும்.

“முற்பிறவியில் உன் தமக்கையர் இருவரும் ஒரே ஆடவனை மணந்தனர். அவர்கள் அப்பிறவியில் புத்த தேவனின் பாதங்கள் படிந்த பாதபங்கய மலையத் தொழும் பாக்கியம் பெற்றதனால் இப்போது மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உன்னோடும் வாழும் பேறு பெற்றனர்” என்பதையும் சொல்லி முடிக்கும்.

 

(அடுத்த இதழில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் பவுத்த அறம் மணிமேகலையில் வெளிப்படுதல்)