சச்சார் அறிக்கையின் பத்தாண்டுகள்

சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

(பிப் 25, 2017 ல் எழுதியது; புதிய விடியல் இதழில் வெளிவந்தது)

ச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (United Progressive Front -UPA) அரசு அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து இந்தத் திசையில் சில நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தது. ஐ.மு.கூ அரசு ஆண்ட அந்த பத்தாண்டுகளில் (2004 -14) இவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு எந்தப் பெரிய பலன்களும் கிட்டிவிடவில்லை என்ற போதிலும் உலகமயத்துக்குப் பிந்திய புதிய சூழலில் சமூக சமத்துவம் குறித்த செயற்பாடுகள் பழைய மாதிரியாக இருக்க இயலாது என்கிற நிலையில், சில புதிய சாத்தியங்களை நோக்கி நகர்ந்த வகையில் அவை முக்கியமானவையாக அமைகின்றன. இவை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவும் இவற்றை கவனமாக மதிப்பிட வேண்டிய தேவையும் நமக்கு உள்ளது.

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்டவுடன் அது பெரிய அளவில் இந்தியா முழுதும் விவாதிக்கப்பட்டது.  ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த ஒரு விவாத அரங்கு டெல்லியில் நடந்தது. சச்சார் அறிக்கை உருவாக்கத்தில் பங்குபெற்ற பல முக்கிய அறிஞர்களும் வல்லுனர்களும் அதில் பங்கு பெற்றனர்.  எட்டாண்டுகளுக்குப் பின் அரசே பத்து உறுப்பினர்கள் அடங்கிய ஒரு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ஐ.மு.கூ அரசின் இறுதியில் சச்சாரின் பரிந்துரைகளில் முக்கியமானதாகிய ‘சம வாய்ப்பு ஆணையம்’ (Equal Opportunity Commission – EOC) ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியில் இந்தத் திசையில் எந்த நகர்வும் இல்ல்லை.

இப்போது பத்தாண்டுகள் முடிந்துவிட்டதை ஒட்டி இப்போது மீண்டும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்தப் பின்னணியில் நாம் முதலில் இந்தப் பத்தாண்டுகளில் இந்தத் திசையில் என்னென்ன நடந்தன என்பதை முதலில் தொகுத்துக் கொள்வோம்.சச்சார் அறிக்கைப் பரிந்துரைகள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா என அடுத்துப் பார்ப்போம்.

I
சச்சார் அறிக்கைக்குப் பின்னும் என்னவெல்லாம் நடந்தன?

2004 ல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ‘குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் அறிவித்தபடி 2005 மார்ச் 9 அன்று முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி சார்ந்த நிலையைக் குறித்து ஆய்வு செய்ய சச்சார் குழுவை நியமித்தது. அது மட்டுமல்ல 2006 ஜன 29 அன்று முதன் முதலாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான அமைச்சகமும் (Ministry of Minority Affairs) டெல்லியில் உருவாக்கப்பட்டது.

சச்சார் குழு 2006 நவ 17 ல் தன் அறிக்கையை அளித்தது. சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி இப்படி இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையாகிய முஸ்லிம்களின் நிலையை மட்டுமே தனிக் கவனம் எடுத்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு என்கிற வகையில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த அறிக்கை தான் திரட்டித்தந்த ஏராளமான விவரங்களின் பின்னணியில் 400 க்கும் மேற்பட்ட பக்கங்களில் முஸ்லிம்களின் சமூக, பொறுளாதார மற்றும் கல்வி நிலையைப் பற்றிச் சொன்னதை சுருக்கிச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம். இந்த அம்சங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ள தலித் மக்களைக் காட்டிலும் கீழாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றது சச்சார் அறிக்கை.

இந்த நிலையை மாற்றி அமைப்பதற்குச் சில பரிந்துரைகளையும் அது செய்தது. வெறுமனே இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் என்பவற்றோடு நிற்காமல் மாறிவரும் உலக அளவிலான பொருளாதாரச் சூழலையெல்லாம் கணக்கில் கொண்டு அது முன்வைத்த இரண்டு பரிந்துரைகளை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சமூகம் முழுவதும் அனைத்து நிலைகளிலும் அனைத்து அமைப்புகளிலும் இந்த நாட்டின் பன்மைத்துவம் பிரதிபலிக்கிறதா என்பதை ஆராயவும், அதைச் செயற்படுத்தவும் ‘பன்மைத்துவ ஆணையம்’ (Diversity Commission / Diversity Index) ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஒரு பள்ளிக் கூடம், காவல் நிலையம், புதிதாக உருவாகும் நகர்ப்புறங்கள்.. இப்படி எங்கும், எந்த நிறுவனத்திலும் இச்சமூகத்தில் உள்ளடங்கியுள்ள பலதிறப்பட்டவர்களும் உரிய அளவில் தென்படவேண்டும். அடுத்து வெறும் வேலை வாய்ப்பில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் எல்லாத் தரப்பினருக்கும் சம வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா என எந்த ஒரு நிறுவனத்தையும் அழைத்து விசாரிக்க, விளக்கம் கேட்க, நடவடிக்கைகள் எடுக்க அதிகாரமுள்ள அமைப்பு (Equal Opportunity Commission) ஒன்றை அமைக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தத் திசையில் சில முயற்சிகளில் இறங்கியது. 2007 ஆகஸ்டில் இரு குழுக்களை அது அமைத்தது. ஒன்று ‘பன்மைத்துவ கணிப்பிற்கான வல்லுனர் குழு’ (Expert Group on Diversity Index). டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேரா. அமிதாப் குண்டு தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து வல்லுனர்கள் கொண்ட இந்தக் குழு 2008 ஜூன் 24 அன்று தன் அறிக்கையை அளித்தது. பேரா. என்.ஆர்.மாதவ மேனன் தலைமையில் அமைக்கப்பட்ட இன்னொரு குழு ‘சம வாய்ப்பு ஆணையம்’ Equal Opportunity Commission -EOC)  அமைப்பது தொடர்பானது. ஏழு வல்லுனர்கள் கொண்ட இந்தக் குழு 2008 பிப் 20 அன்று தன் அறிக்கையை அளித்தது.

இந்தக் குழுக்கள் இப்படி விரிவான அறிக்கையை அளித்த போதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரிய சாதனைகளைச் செய்துவிட இயலவில்லை. எனினும் இரண்டாம் முறையும் ஆட்சிக்கு வந்த அந்த ஐ.மு.கூ அரசு தனது பதவி முடியுமுன் 2013 ஆக 5 அன்று பேரா. அமிதாப் குண்டு தலைமையில் பத்துபேர் கொண்ட இன்னொரு வல்லுனர் குழுவை அமைத்தது. ‘சச்சாருக்குப் பிந்திய காலகட்டம் பற்றிய மதிப்பீட்டுக் குழு’  (Post Sachar Evaluation Committee / Kundu Committee) என இது அறியப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பாக,   பிப்ரவரி 20, 2014 அன்று மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ‘சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்தது. ஆனால் அது முன்வைத்த வடிவம் இந்த அமைப்பின் நோக்கத்தையே முறியடிப்பதாக இருந்தது. நான் ஒரு முஸ்லிம் அல்லது, தலித் அல்லது இந்த மொழியைப் பேசுபவன் அல்லது மாற்றுத் திறனாளி அல்லது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள், அல்லது வேறெதோ ஒரு அடையாளத்தைக் காரணம் காட்டி ஒரு நிறுவனம் வேலை வாய்ப்பையோ இல்லை ஏதோ ஒரு சேவையையோ மறுத்தார்கள் என இந்த ஆணையத்தின் முன் புகாரளித்தால் அழைத்து விசாரித்து அந்தக் குறையை நிவர்த்திக்கவோ இல்லை அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவோ அதிகாரமில்லாத வெறும் பரிந்துரை மட்டுமே செய்யக் கூடிய ஒரு நிறுவனமாக அது இருந்தது. தவிரவும் இப்படி எல்லாவிதமான வேறுபடுத்தல்களையும் தட்டிக் கேட்கும் நிறுவனமாக அன்றி முஸ்லிம்கள் என்கிற அடிப்படையில் வேறுபடுத்தல் இருந்தால் மட்டுமே கவனம் கொள்ளும் அமைப்பாகவும் அது முன்வைக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட மோசமான அம்சம் என்னவெனில் தனியார் நிறுவனங்கள் மீது எந்த அதிகாரமும் இல்லாத ஒன்றாகவும் அது இருந்தது. இர்ஃபான் எஞ்சினீர் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் ஐ.மு.கூ அரசின் இந்த அறிவிப்பு முஸ்லிம்களின் வாக்குகளை நோக்கமாகக் கொண்டு முன் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

சச்சார் அறிக்கைக்குப் பிந்திய காலத்தில் சிறுபான்மை மக்களின் நிலையில் எற்ற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைதாப் குண்டு குழு செப் 29, 2014 அன்று தன் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது மத்தியில் பா.ஜ.க அரசு பதவியில் இருந்தது.

குண்டு குழு அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நரேந்திரமோடி அரசு அடுத்த இரண்டு மாதங்கள் ஒன்றும் பேசவில்லை. டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இது குறித்து அரசின் கருத்தறிய முயன்றபோது சிறுபான்மையினர் பிரச்சினைக்கான மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துலாவைச் சந்திக்க இயலவில்லை. பின் துணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: “முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவது என்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினை அவர்கள் அரசியல் களத்தில் ஏமாற்றப் படுவதுதான். மதச்சார்பின்மை எனப் பேசுகிறவர்கள் கொடுமையாகவும் மோசமாகவும் இதுகாறும்வரை முஸ்லிம்களை ஏமாற்றி வந்துள்ளார்கள். அதனால்தான் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் முஸ்லிம்கள் மேலே வர இயலாமல் போய்விட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் இரண்டு குறிக்கோள்களையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது குறித்து கவனமாக வேலை செய்கிறோம்” என்றார் (நவ 22, 2014). என்ன அலட்சியம், திமிர், நக்கல் பாருங்கள். சிறுபான்மையினர் நலமடைய இரண்டு குறிக்கோளையும் இவர்கள் நிறைவேற்றப் போகிறார்களாம்.

பா.ஜ.க அரசு இப்போது குண்டு அறிக்கையை முற்றாகக் கைவிட்டுவிட்டது. “மொத்த மைனாரிட்டிகளையும் பற்றிப் பேசாமல் குண்டு அறிக்கை முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளது. அது மேற்கொண்ட ஆய்வு முறை தவறானது. தகவல்கள் ஒழுங்காகத் திரட்டப்படவில்லை ..” என்றெல்லாம் கூறி பேரா. அமிதாப் குண்டு குழு அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் குப்பையில் எறிந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா, இந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் யாவை என்பவற்றைப் பார்ப்போம்.

II
எட்டாண்டுகளுக்குப் பின் முஸ்லிம்கள் : அமிதாப் குண்டு குழு அறிக்கை

அமிதாப் குண்டு குழு அமைக்கப்பட்டபோது அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனுடைய ஆய்வெல்லைகளாகக் கீழ்க் கண்டவற்றை வரையறுத்திருந்தது.  i) சச்சார் குழு செயல்படுத்தப்பட்ட முறை, ii) பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டம், iii) புதிதாக உருவாக்கப்பட்ட ‘சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளுக்கான மத்திய அமைச்சகம்’ (Ministry of Minority Affairs) தனது திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த மதிப்பீடு, iv) இந்த அமைச்சகம் சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களின் பன்முக வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த மதிப்பீடு, v) முன்னதாக குண்டு தலைமையிலான வல்லுனர் குழு முன்வைத்த ‘பன்மை ஆணையத்தை’ செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குதல்- இவையே அமிதாப் குண்டு குழுவிற்கு அளிக்கப்பட்ட பணிகள்.. கொடுக்கப்பட்ட குறைவான காலத்திற்குள் இதிலுள்ள அனைத்தையும் முடிப்பதில் உள்ள சிரமங்களைத் தாண்டி இந்தப் பணியை ஓரளவு திருப்திகரமாகவே அமிதாப் குண்டு குழு நிறைவேற்றி இருந்தது. எனினும் இது முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசி பிற சிறுபான்மையர்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாகச் சொல்வது உண்மைதானா? பார்ப்போம்.

சுருக்கமாகச் சொல்வதானால் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு நலத் திட்டங்கள் முதலியவற்றின் பலன்கள் உரிய அளவில் சிறுபான்மை மக்களுக்கும் போய்ச் சேர்ந்தனவா எனப் பார்ப்பதுதான் குண்டு குழுவுக்கு இடப்பட்ட பணி. எனவே பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்த பலன்களையும் சிறுபான்மை மக்களுக்குக் கிட்டியதையும் ஒப்பிட்டாக வேண்டும். இந்த ஒப்பீட்டைக் குண்டு குழு எப்படிச் செய்துள்ளது? இந்துக்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், பட்டியல் சாதி இந்துக்கள், பட்டியல் இன மக்கள். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பிற முஸ்லிம்கள், பிற மதங்கள்  சில அம்சங்களில் பிற மதங்கள் என்பதை கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பிறர் என விரித்தும் இந்த ஒப்பீடுகளை அது  செய்து.

முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளதுள்ளது. எனினும் முஸ்லிம்கள் என்பதற்கு ஒப்பீட்டளவில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுள்ளது உண்மைதான். மொத்த சிறுபான்மையினருள் முஸ்லிம்கள் 74 சதம். பிற சிறுபான்மையினரான கிறிஸ்தவர், சீக்கியர், பார்சிகள், சமணர், பவுத்தர் முதலானோர் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்பதாலும், இவர்களுள் முஸ்லிம்களும் பவுத்தர்களும் மட்டுமே மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர் என்பதாலும் இத்தகைய ஆய்வுகளில் எண்ணிக்கையில் மிக அதிகமாக உள்ள  முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்க இயலாததே. அதோடு இந்தக் குழுவின் முக்கிய பணி சச்சார் குழு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையை ஆய்வு செய்வது என்பதுதான். குழுவுக்கு அளிக்கப்பட்ட பெயரே அப்படியானதுதான். சச்சார் குழு என்பது முழுக்க முழுக்க முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு. அதை மதிப்பீடு செய்யும்போது பெரும்பான்மையுடன் ஒப்பிட்டு முஸ்லிம்களின் நிலை இப்போது எப்படி உள்ளது, இந்த இடைக்காலத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுதான் பேச முடியும். இந்நிலையில் குண்டு குழு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது எனக் குற்றஞ் சாட்டி இந்த அறிக்கையை முஸ்லிம் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க அரசு நிராகரிப்பதை என்ன சொல்வது.

சரி. இப்போது அமிதாப் குண்டு குழு அறிக்கையின் முக்கிய பார்வைகளையும் பரிந்துரைகளையும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்: 189 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கை மிக விரிவான தரவுகளுடன் தனது மத்திப்பீடுகளை முன்வைத்துள்ளது. முழு அறிக்கையையும் நீங்கள் இணையத் தளங்களில் காணலாம். சில மட்டும் இங்கே:

1.சச்சார் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தனி அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அரசு நிறுவனங்களின் ஊடாக தேசிய வளர்ச்சியில் முஸ்லிம் சிறுபான்மையினர் பங்கு பெறுவதில் உள்ள குறைகளைக் களைவதை நோக்கி இன்று ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. எனினும் சிறுபான்மை மக்களின் இந்தக் குறைகளைத் தீர்க்கும் அளவிற்கு அரசுத் தலையீடுகள் போதுமானதாக இல்லை. முதலில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் வறுமை நிலையை எடுத்துக் கொள்வோம். 2004-05 முதல் 2011-12 வரையிலான இந்த ஏழு நிதி ஆண்டுகளின் அனைத்து மக்களின் வறுமை நிலை குறித்த தேசியச் சராசரியைக் காட்டிலும் முஸ்லிம்களின் வறுமை நிலை அதிகமாக உள்ளது தொடர்கிறது. சச்சார் அறிக்கைக்குப் பின் முஸ்லிம்களின் வறுமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் தம் அடிப்படை நுகர்வுகளுக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர் (consumption expenditure) என்பது இத்தகைய ஒப்பீட்டிற்கான ஒரு மிக முக்கிய அடிப்படை. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் வறுமையில் உள்ளனர் என்பது பொருள். இந்த அம்சத்தில் முஸ்லிம்களைப் பல்வேறு மக்கள் பிரிவுகளுடனும் ஒப்பிடும்போது அவர்கள் ஆகக் கீழிருந்து மூன்றாவது நிலையில் உள்ளனர். பட்டியல் சாதியினர் மட்டுமே அவர்களுக்குச் சற்றுக் கீழே உள்ளனர்.

 1. இயல்பிலேயே முஸ்லிம் சமூகத்தில் நலவாழ்வுக் குறிகள் (health indices) பாராட்டத்தக்கவையாக இருக்கும். பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது சமமாக இருத்தல், குழந்தை இறப்பு வீதம் குறைவாக இருத்தல் முதலானவை முஸ்லிம்களின் சிறப்புகள் எனலாம். ஆனால் இந்தச் சிறப்புகள் எல்லாம் இன்று அழிந்து கொண்டுள்ளன. முஸ்லிம் பகுதிகளில் போதிய மருத்துவவசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்கிற சச்சார் குழு பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படாமையே இதற்குக் காரணம். நாடெங்கிலும் மருத்துவத்தில் புதிய வசதிகள் அதிகரித்த போதும் அவை முஸ்லிம்களுக்கு எட்டாதவையகவே உள்ளன.
 2. சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் கீழுள்ள அரசு நலத்திட்டங்கள் எல்லாம் போதிய நிதி நல்கை இன்றி வாடுகின்றன. 12ம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளுக்கான அமைச்சகம் 58,000 கோடி கோரியிருந்தது. ஆனால் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 17,323 கோடி மட்டுமே. (இந்த அடிப்படையில் குண்டு குழு செய்துள்ள பரிந்துரை: ‘பிரதமரின் 15 அம்சத் திட்டம் என்பது மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டம் (MGREGA) மற்றும் ‘பிரதான் மந்திரி ஜன் தன் திட்டம்’ ஆகியவற்றிற்கும் விரிவாக்கப்பட வேண்டும்’.
 3. 37 அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் பணி நியமன விவரங்களை ஆய்வு செய்தபோது சிறுபான்மையோரின் பங்கேற்பு அவர்களின் வீதத்தைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது தெரிய வருகிறது. மக்கள்தொகையில் சிறுபான்மையினர் கிட்டத்தட்ட 25 சதம். ஆனால் 2006-07 முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில் ‘குரூப் ஏ’ அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினர் வெறும் 7.5 சதம்தான். ‘குரூப் பி’ யில் 9.1 சதம்; ‘குரூப் சி மற்றும் டி யில்’ 8.6 சதம் மட்டுமே.
 4. அரசு வழங்கும் ‘முன்னுரிமைத் துறைக் கடன்’ (Priority sector lending (PSL) வசதியைப் பெறுவதிலும் முஸ்லிம்களுக்குச் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இந்தக் கடன் வசதி 2013-14 ம் ஆண்டில் 16.09 சதம் அளவை எட்டியது எனச் சிறுபான்மைத் துறை அமைச்சகம் அறிவித்தது. அதாவது மொத்தமாக அளிக்கப்படும் கடனில் 16.09 சதம் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டது. எனினும் மொத்தச் சிறுபான்மையருள் 76 சதம் உள்ள முஸ்லிம்களுக்கு இந்தத் தொகையில் எவ்வளவு கிட்டியது? வெறும் 44. 31 சதம் மட்டும்தான். அதாவது ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியை விடக் குறைவு. சீக்கியர்களுக்கு 24.58 சதமும், கிறிஸ்துவர்களுக்கு 21.87 சதமும், பவுத்தர்களுக்கு 2.06 சதமும், பார்சிகளுக்கு 2.23 சதமும், ஜெயின்களுக்கு 4.96 சதமும் கிட்டியது. சிறுபான்மையருள் மிகவும் கீழ் நிலையில் உள்ளோர் முஸ்லிம்களும் பவுத்தர்களும்தான். ஆனால் ஒப்பீட்டளவில் வசதியாக உள்ள பிற சிறுபான்மையினரே அதிக அளவில் இந்தக் கடன் வசதியை அனுபவித்துள்ளனர்.
 5. முஸ்லிம்கள் மத்தியில் கல்வி அறிவு இந்துக்களைக் காட்டிலும் குறைவு என்ற போதிலும் கல்வி அறிவு வீதத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. எனினும் கல்வி பெறுவதில் முஸ்லிம்களின் வீதம் ஆகக் கீழாக உள்ள பழங்குடியயினரின் (ST) அளவே உள்ளது. சமீப காலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் பிள்ளைகளின் சேர்க்கை வீதம் அதிகரித்துள்ள போதிலும் படிப்பைப் பாதியில் நிறுத்துவோரின் அளவு முஸ்லிம்கள் மத்தியில் இன்னும் மிக மிக அதிகமாகவே உள்ளது. இதில் ஆண், பெண், கிராமம், நகரம் என்கிற வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இந்தக் குழந்தைகள் உயர் கல்வியை எட்டுவதே கிடையாது.

7.இத்தகைய நிலையிலிருந்து விடுதலை பெற குண்டு குழு முன்வைக்கும் முக்கிய பரிந்துரை இதுவரையிலான நமது அணுகல்முறையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய அளவில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பதுதான் நாம் இதுவரை பின்பற்றி வரும் அணுகல் முறை. இதுவும் அரசுப் பணிகளிலும் கல்வியிலும் மட்டுமே. அதுவும் கூட இது தனியார் துறைகளில் இல்லை. ‘காட்’ ஒப்பந்தத்திற்கு அடிமையாகிப்போன இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில், குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களில் ஒதுக்கீடு என்பது கனவே. தவிரவும் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் பணி நிலையங்களில் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கிறது. நகர்மயமாதல், அரசு கடன் திட்டங்களில் பயன்பெறுதல் முதலானவற்றில் இத்தகைய ஒதுக்கீடுகள் இல்லை. எனவே புதிய அணுகல்முறை என்பது அனைத்திலும் சமூகத்தின் பன்மைத் தன்மை வெளிப்படுவதாக அமைய வேண்டும்.

அந்த வகையில் குண்டு குழு முன்வைக்கும் பரிந்துரை ஒரு Anti Discrimination Law இயற்றுவது. அதாவது சாதி, மதம், பாலியல், மாற்றுத் திறன் (disability) ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுக்கிடையே வேறுபடுத்தல்கள் பாராட்டுவதைக் குற்றமாக்கும் சட்டம் ஒன்றை இயற்றுவது. இத்துடன் “பன்மைத்துவக் குறியீடு” (Diversity Index) சட்டம் ஒன்றை இயற்றி ஒவ்வொரு நிறுவனமும் தனது பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் குறித்த விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்போது அனைவருக்கும் உரிய பலன் கிடைக்கும். சமூகத்தின் பன்மை நிலை எங்கும் ஒளிரும்.

 1. 1990 கள் தொடங்கி மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்தல் என்பது வழமையாகிவிட்டது (urbanisation). புதிய தொழில் வளர்ச்சிகள், தொழிற்பேட்டைகள், சிறு நகர மையங்கள் உருவாவது என்பதெல்லாம் நகரங்கள்ளிலும் நகரங்களை ஒட்டியும்தான் நடக்கின்றன. இத்தகைய நகர உருவாக்கங்களில் முஸ்லிம்கள், தலித்கள் முதலானோருக்கு உரிய பங்கிருப்பதில்லை (exclusionary urbanisation). புதிய நகர மையங்களில் முஸ்லிம்கள் பெரிய அளவில் ஒதுக்கப்படுகின்றனர், எனவே அரசு தலையிட்டு இம்மாதிரி ஒதுக்கப்படும் பிரிவினரை அடையாளம் கண்டு அவர்கள் உரிய அளவில் பங்கு பெறுமாறு இலக்கு நோக்கிய ஆளெடுப்புகளை நிறைவேற்ற வேண்டும் (government-led planned and targeted recruitment drives in a time-bound manner). இது இட ஒதுக்கீட்டிலிருந்து சற்று வேறுபட்ட ஒன்று. எந்தப் பிரிவினர் குறைவாக உள்ளனரோ அந்தப் பிரிவினர் உரிய அளவில் இடம் பெறும் இலக்கு நோக்கிய ஆள் தேர்வு ‘targeted recruitment’ இது.
 2. ஒரே ஒரு அம்சத்தில் சிறுபான்மைத் துறை அமைச்சகத்தைப் பாராட்டியாக வேண்டும். சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாகக் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை இந்த இடைக்காலத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்விக்கான உதவி பெறுவோர் இலக்கு 2008-09 ல் வெறும் 3 இலட்சமாக இருந்தது 2002 -13 மற்றும் 2013-14 ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் 40 இலட்சமாக அதிகரித்தது. அதாவது 115- 221 சத அதிகரிப்பு. மேற்கல்விக்கான உதவி பெறுவோரின் எண்ணிக்கை 2008 -09 ல் 75,000 ஆக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு முறையும் 5 இலட்சமாக அது அதிகரித்தது. 121- 178 சத அதிகரிப்பு.

எனினும் இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமக்கு அளிக்கப்பட்ட இந்த உதவித் தொகையை முழுமையாகச் பயன்படுத்திக் கொள்ள இயலாத அளவிற்குச் சிறுபான்மையினர் பின்தங்கியுள்ளனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக 1400 கோடி ரூ ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் பள்ளிக் கல்விக்காக ஒடுக்கப்பட்ட உதவித்தொகையில் 94.81 சததை மட்டுமே சிறுபான்மை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.. மேற்கல்விக்கு ஒதுக்கப்பட்ட உதவித்தொகையில் 71.38 சதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. திறமை அடிப்படையிலான (merit-cum-means) உதவித்தொகையில் 71.23 சதமே பயன்படுத்தப்பட்டது.

மேற்குறித்த இந்த மதிப்பீடுகள் சச்சார் அறிக்கை வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டவை. இப்போது பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. இந்த இடைக் காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி போய் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இன்று அதிகாரத்தில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியாவது தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற கடப்பாட்டு உணர்வுடன் ஏதோ இந்தக் குழுக்களையாவது அமைத்தது. முஸ்லிம்களுக்கு உரிய நியாயங்களைச் செய்வதையே ஓட்டுவங்கி அரசியல் என எதிர்க்கும் பா.ஜ.க அரசு அதிகாரம் செலுத்தும் காலம் இது. இன்றைய சூழலில் உள்ள நிலையைப் பார்க்கலாம்.

III

பத்தாண்டுகளுக்குப் பின் இன்றைய நிலை 

பல்வேறு அரசுத் துறைகளிலும் உயர் பதவிகள் முதல் எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களின் இருப்பு என்பது அவர்களின் மக்கள்தொகை வீதத்தைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக உள்ளதை சச்சார் அறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. முன் அத்தியாயத்தில் தொகுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சச்சார் அறிக்கை வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் உள்ள நிலை குறித்து அமிதாப் குண்டு குழு அறிக்கை தொகுத்தவை.

இப்போது சச்சார் குழுவுக்குப் பின் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்றைய நிலையைப் பார்ப்போம். தற்போது கிடைக்கும் தரவுகளோடு ஒப்பிடுகையில் எந்தப் பெரிய மாற்றமும் இதில் ஏற்படவில்லை. பல அம்சங்களில் நிலைமை இப்போது இன்னும் மோசமாகி உள்ளது என்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக சச்சார் அறிக்கையின்படி 2001ல் இருந்த மொத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,209. இதில் முஸ்லிம் அதிகாரிகள் வெறும் 128 தான். அதாவது 4 சதம். மக்கள் தொகையில் 14.2 சதமாக உள்ள முஸ்லிம்கள் ஐ.பி.எஸ் அதிகாரத்தில் வெறும் 4 சதமாகவே இருந்தனர். சரி, இன்று நிலைமை என்ன? ஜனவரி 2016ல் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 3754 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ளது. அதாவது வெறும் 3.19 சதம்தான்.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு வகைகளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநில அளவில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இறுதியில் ஐ.பி.எஸ் அதிகாரிகளாவோர் ஒரு வகை. இன்னொரு வகை UPSC போட்டித் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்படுவோர். 2006 ல் இப்படி மாநில அளவில் பதவி உயர்வு மூலமாக ஐ.பி.எஸ் ஆனோர்  912 பேர். இதில் 65 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் (7 சதம்). 2016 ல் இப்படிப் பதவி உயர்வு பெற்றோர் 1150 பேர்.. இதில் முஸ்லிம்கள் 44 பேர்தான் (3.82 சதம்). அதாவது மாநிலங்களிலிருந்து பதவி உயர்வோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு குறைந்து கொண்டே போகிறது.

எனினும் நேரடித் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெறும் முஸ்லிம்களின் பங்கு சற்று அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வில் பங்குபெற்று  ஐ.பி.எஸ் அதிகாரிகளானோர் 2006 ல் 2,297 பேர் (2.7%). 2016 ல் இப்படித் தேர்ந்தெடுக்க்ப்பட்டோர் 2,604. இதில் முஸ்லிம்கள்  76 பேர் (2.91%).

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தேர்வுகளை எடுத்துக் கொண்டால் 2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் வீதம் 3 சதம். இது 2016 ல் 3.32 சதமாகச் சிறிது அதிகரித்திருந்தது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இரண்டிலுமே முஸ்லிகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் (14.2 சதம்) தேர்ந்தெடுக்கப் படுபவர்களின் எண்ணிக்கை (4 சதத்திற்கும் குறைவு) மிக மிகக் குறைவு என்பது மட்டுமல்ல. அதில் எந்தப் பெரிய மாற்ரமும் இல்லை,. எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதைப் போலவே எவ்வளவு பேர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதும் முக்கியம் எனச் சொல்லும் டாக்டர் அமிதாப் குண்டு, “மொத்த விண்ணப்பதார்களில் 8 சதம்தான் முஸ்லிம்கள்” என்கிறார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 2016 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 172. இதில் உ.பி ஐச் சேர்ந்தோர் 48. பீஹார் மாநிலத்தவர் 34. ஜம்மு காஷ்மீர் 22. தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்டபிற 26 மாநிலங்களையும் சேர்ந்தோர் 58 பேர்கள் தான்.

ஒட்டு மொத்தமாகக்காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படையாகக் குறைந்து வருகிறது. 2006ம் ஆண்டில் மொத்த காவல்துறை பணியாளர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் வீதம் 7.63 சதம். இது 2013ல் 6.27 சதமாகக் குறைந்தது. 2014ல் பா.ஜ.க ஆட்சி வந்தபின் காவல்துறை போன்ற sensitive department களில் இது போன்ற புள்ளி விவரங்களைத் தர இயலாது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் வீதம்

 

2006 -07 ————–6.03%

2007 -08 ————–8.23%

2008 -09 ————–9.90%

2009 -10 ————–7.28%

2010 -11 ————–10.18%

2011 -12 —————6.24%

2014 -14 —————8.67%

 

 

காவல்துறையில் முஸ்லிம்களின் பங்கு

 

ஆண்டு              முஸ்லிம்கள்              மொத்தம்

2006                 1,06,634 (7.63%)             13,18,295

2013                 1,08,602 (6.27%)             17,31,537

 

மாதாந்திரத் தனிநபர் செலவு (ரூபாய்களில்)

ஆண்டு       முஸ்லிம்கள்          மொத்தம்

2004 -05            635                  712

2009 -10            980                  1128

 

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சர்வ சிக்‌ஷா அபியான் திட்ட்டத்தின் கீழ் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கும் திட்டத்தின் கீழ் இலக்கை எட்டிய விவரம்

2006 -07 ————92.45%

2007 -08 ————51.72%

2007 -09 ————97.40%

2009 -10 ————92.91%

2010 -11 ————99.93%

2011 -12 ————85.105

 

பட்டதாரிகளின் எண்ணிக்கை

ஆண்டு       முஸ்லிம்கள்       மொத்தம்

2001          23.9 லட்சம்          3.76 கோடி

2011          47.52 லட்சம்         6.2 கோடி

 

பள்ளி செல்லாக் குழந்தைகள் (6 முதல் 14 வயது)

ஆண்டு        முஸ்லிம்கள்        மொத்தம்

2004 -05                                      15.3%                                           10.2%

2011 -12             8.7%                 4.4%

 

எழுத்தறிவு பெற்றோர் வீதம்

ஆண்டு         முஸ்லிம்கள்        மொத்தம்

2001                59.1%               64.8%

2011                68.5%               73.0%

IV

வல்லுனர்கள் சிலரின் முக்கிய பார்வைகள்.

2013 ஜனவரி 14 அன்று டெல்லியில் “சச்சார் அறிக்கைக்கு ஆறாண்டுகளுக்குப் பின் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் துறையின் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், சச்சார் அறிக்கையை எழுதியவரும் (member secretary) ‘அமெரிக்க இந்திய அரசியல் நிறுவனத்தின்’ இயக்குனருமான டாக்டர் அபு சாலே ஷரீஃப், சச்சார் குழு உறுப்பினர்களில்  ஒருவரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தகைசால் பேராசிரியருமான டீ..கே. ஊமன் முதலானோர் அதில் கலந்து கொண்டனர்.  அங்கு முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் நம் கவனத்துக்குரியவை.

சல்மான் குர்ஷித்: அமைச்சராக இருந்த குர்ஷித் அனுபவபூர்வமாகச் சிலவற்றைச் சொன்னார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்த அணுகல்முறையில் நிறுவனங்கள் மத்தியில்  ஒரு கருத்துநிலைக் குழப்பம் (conceptual confusion evident at multiple levels) நிலவுகிறது எனவும், அதுவே பல நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தடையாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். .துறைசால் வல்லுனர்கள், சமூக அறிவியலாளர்கள், அரசில் கொளகை உருவாக்குவோர், அதைச் செயல்படுத்துவோர், நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கிடையே இப்பிரச்சினையில் கருத்தொருமிப்பு இல்லை. உச்சநீதி மன்றம் விதித்த ஒரு இடைக்காலத் தடை ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு 4 சத ஒதுக்கீடு அளிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குள் முஸ்லிம்களுக்கு ஒரு உள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முயன்றபோது உச்ச நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது எனத் தான் ஒரு முறை கூறியபோது தேர்தல் ஆணையத்துடன் தனக்குப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் குர்ஷித் குறிப்பிட்டார். மதரசாக்கள் தொடர்பான பிரச்சினைகள் கல்வித்துறையின் கீழும், ஹஜ் குழு தொடர்பானவை அயலுறவு அமைச்சகத்தின் கீழும் வருவது  என்பதுபோல முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பல அமைச்சரகங்களின் கீழ் அமைவது என்பதெல்லாமும் கூடப் பல நேரங்களில் நல்ல திட்டங்களைச் செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது என்றார் குர்ஷித்.

டாக்டர் அபு சாலே ஷரீஃப்: முஸ்லிம்களின் கல்வி மட்டத்தில் சச்சார் அறிக்கை வந்த ஆறு ஆண்டுகளில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆரம்பம் மற்றும் உயர் கல்வி என எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ள நிலை தொடர்கிறது. கொள்கை அறிவிப்புகளும் முஸ்லிம்களுக்கான திட்ட அறிவிப்புகளும் மட்டும் போதாது. “நிறுவனச் சீர்திருத்தங்கள்” (institutional reforms) தேவை என்றார் ஷரீஃப்.

‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில்” முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டிய அவர் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தும் கூட வளர்ச்சிக் கடன்கள் முஸ்லிம்களைச் சென்றடைவதில்லை என்பதையும் குறிப்பிட்டார். மார்ச் 2011 வரைக்கும் ‘சிறுபான்மையோர் செறிந்துள்ள மாவட்டங்களுக்கான’ (Minority Concentration Districts) வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 37,800 கோடிதான். ஆனால் அதுவும் கூட முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. 856 கோடி ரூபாய்கள் மட்டுமே மாவட்டங்களைச் சென்றடைந்தது. அதிலும் மக்களைச் சென்றடைந்தது இன்னும் குறைவு. 11வது திட்ட கால இறுதிவரை ஒதுக்கப்பட்ட நிதியில் 3.46 சதம்தான் உண்மையான பயனாளிகளுக்கும் தேவையான பகுதிகளுக்கும் சென்றடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரா டி.கே ஊமன் மற்றும்  ஸகாத் ஃபௌன்டேஷன் தலைவர் சய்யத் ஸஃபார் முகமது: இவர்கள் இருவரும் சிறுபான்மையோர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை பட்டியல் சாதியினருக்கு ஒதுக்குவதால் சிறுபான்மையோர் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வாய்ப்பு தடுக்கப்படுவதன் மீது கவனத்தை ஈர்த்தனர். சிறுபான்மையோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி ஒதுக்கீடு இல்லாத நிலையில், இயற்கையாக அவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையும் பட்டியல் இன ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது .தவிர்க்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

சிறுபான்மையோர் அதிக அளவில் வசிக்கக்  கூடிய பகுதிகளில் தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை வகுக்கும்போது அவற்றைச் சிதைக்காமல், சிறுபான்மையினர் வெல்லக் கூடிய அளவிற்கு தொகுதிகள் செதுக்கி உருவாக்கப்பட வேண்டும் என சச்சார் அறிக்கை கூறியுள்ளது இங்கே நினைவுகூரத் தக்கது. இன்னொன்றையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு சிறுபான்மை மக்களுக்கு இன்று இல்லை என்ற போதிலும் நகராட்சி, மாநகராட்சி முதலான உள்ளாட்சி மட்டங்களில் சிறுபான்மையினருக்கு தொகுதிகள் ஒதுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. தற்போது அது சில மாநிலங்களில் நடைமுறையிலும் உள்ளது. அது குறித்தும் சச்சார் அறிக்கை பதிவு செய்துள்ளதை நான் என் நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன். எனினும் அது ஒரு கோரிக்கையாகக் கூட இங்கு உருப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது..

முடிவாக

அடையாளம், பாதுகாப்பு, சமத்துவம் என்கிற மூன்று அடிப்படை நோக்கிலிருந்து தம்குழு இந்தப் பரிந்துரைகளைச் செய்துள்ளது என நீதியரசர் சச்சார் குறிப்பிடுவார். முஸ்லிம் என்கிற அடையாளமே அவர்களது பாதுகாப்பின்மைக்கும், பிற சமூகங்களுடன் சமமாக வாழ்வதற்கும் அவர்களை இயலாதவர்களாக ஆக்கக்கூடிய நிலை இன்று உள்ளது. இந்தச் சூழலில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் சச்சார் அறிக்கை என்பது இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். இந்தக் குழுவை நியமித்து அதன் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துகிற முயற்சிகளில் ஐக்கிய முன்னணி அரசு குறிப்பிடத் தக்க பங்காற்றிய போதிலும் முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க வின் ‘முஸ்லிம் வாக்குவங்கி அரசியல்’ மற்றும் ‘போலி மதச்சார்பின்மை”  (muslin appeasement / pseudo secularism) முதலிய குற்றசாட்டுகளை எதிர்த்து நின்று அவற்றை நிறைவேற்றும் அரசியல் விறுப்புறுதி (political will) அதற்கு இல்லாததால் அந்தத் திசையில் அதனால் நகர இயலவில்லை.

இப்போதோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர்களே ஆட்சியில் உள்ளனர். இது முஸ்லிம்கள் மத்தியில் இருந்த பாதுகாப்பின்மை உணர்வை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை எல்லாம் நிறைவேற்றுவது குறித்த கோரிக்கைகள் வைப்பதிலேயே ஒரு அவநம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது,

சச்சார் பரிந்துரைகள் மற்றும் அதனடிப்படையிலான மாதவ மேனன் மற்றும் அமிதாப் குண்டு குழு பரிந்துரைகளை மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் நல்லிருப்பையும் உறுதி செய்வதற்கான இதர சில முக்கிய பரிந்துரைகள் மற்றும் சட்ட உருவாக்கங்களையும் கூட அவர்கள் தம் நினைவிலிருந்தே துடைத்தெறியக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான முக்கிய கோரிக்கைகள் இரண்டை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘மதக் கலவரத் தடுப்புச் சட்டம்’ ஒன்று குறித்த விவாதம் இங்கு பல ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பாக இரண்டு மூன்று முறை நகல் சட்டங்களும் அதில் திருத்தங்களும் செய்யப்பட்டன.. அதேபோல முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்துச் சிறுபான்மையினர் நலனையும் கண்க்கில் கொண்டு உருவாக்கப்பட்ட ரெங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை மிக மிக முக்கியமான ஒன்று. இட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு முதலான பல அம்சங்களில் தற்போது சிறுபான்மை மக்கள் ஒதுக்கப்படும் நிலைக்கு மாற்றாக இப்போதுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் –  என்னென்ன சட்டங்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும், இப்போதுள்ள சட்ட வாசகங்களில் எந்தச் சொல்லை நீக்கி எந்தச் சொல்லைப் பதிலீடு செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு குறிப்பான பரிந்துரைகளை அந்த ஆணையம் செய்திருந்தது. அந்த அறிக்கையை அன்றைய ஐ.மு.கூ அரசு வெளியிடவே தயங்கியது. அதையும் மீறி அது வெளியே கசிந்தவுடன் அதை நிறைவேற்ற மாட்டோம் எனச் சொல்லிக்கொண்டே அதை வெளியிட்டது. இன்று அதைப் பற்றி நாமும் கூடச் சிந்திப்பதில்லை. மறந்தும் போனோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் இன்று சச்சார் அறிக்கையின் பத்தாண்டு ஆயுள் குறித்து பேசத் தொடங்கியுள்ளோம். இங்கு எதிர்காலமே இல்லை என்கிற உணர்வில் இன்று முஸ்லிம் இளைஞர்கள் முழுக்க முழுக்க வளைகுடா நாடுகள், மலேசியா சிங்கப்பூர் எனத் தம் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கெல்லாமும் கூட இப்போது ஆட் குறைப்புகள் தொடங்கி விட்ட நிலையில் சிறுபான்மை மக்கள் இங்கேயே தம் உரிமைகளை வற்புறுத்தி இயங்க இப்போது காலம் கனிந்து விட்டது.

சமவாய்ப்பு ஆணையம், பன்மைத்துவக் குறியீட்டெண், மதக் கலவரத் தடுப்புச் சட்டம் முதலானவை இன்று நமக்கு மிகவும் அத்தியாவசியமான உடனடித் தேவைகள், தற்போது இட ஒதுக்கீடு முதலானவற்றில் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுதலை முடிவுக்குக் கொண்டு வரும் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையும் அத்தகையதே.

இவை குறித்துச் சிந்திப்போம். செயல்படுவோம்.

இணைப்பு

ஆர்.எஸ்.எஸ் சின் பார்வையில் சச்சார் அறிக்கை

(சச்சார் அறிக்கையை மறுப்பவர்கள் என்ன சொல்கின்றனர், அவற்றில் ஏதும் உண்மையோ நியாயமோ உண்டா என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்)

இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை குறித்த சச்சார் அறிக்கை வெளிவந்து 10 ஆண்டுகள் முடிந்ததை ஒட்டி இதழ்களிலும் இணையத் தளங்களிலும் ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டுள்ளன. கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளும் சச்சார் அறிக்கை முன்வைத்த தரவுகளைத்  தற்போதைய தரவுகளுடன் ஒப்பிட்டு நிலைமை மோசமாகியுள்ளதை நிறுவுகின்றன.

இந்நிலையில் ஒரே ஒரு கட்டுரை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. விவேக் வி. குமாஸ்தா என்பவர் எழுதியுள்ளது அது. இவர் அமெரிகாவில் வசிக்கும் இந்தியர். கல்வித்துறை சார்ந்தவர் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துக் கருத்தியலுடன் எல்லாப் பிரச்சினைகளிலும் உடனுக்குடன் “அறிவுசார்ந்த (scholarly)” கட்டுரைகளை ஆங்கில இதழ்கள் மற்றும் தளங்களில் எழுதுகிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக நின்ற அறிஞர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து எழுத்தாளர்கள் பரிசுகளைத் துறந்தது, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அம்பேத்கரை சுவீகரிப்பதைக் மறுத்து ராமச்சந்திர குகா எழுதியது, அரசியல் விமர்சனங்களை முன்வைப்போரை தேசத்துரோகம் எனக் குற்றம்சாட்டுவதை விமர்சிப்பது – முதலானவற்றைக் கண்டித்து இவர் எழுதியுள்ள கட்டுரைகளை புரட்டிப் பார்த்தேன். என்ன மாதிரியான ஆள் என்பது எளிதில் புரிந்தது.

இந்த ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் பிரச்சார வரிசையில் அவர் சச்சார் குழு அறிக்கையின் பத்தாண்டு நிறைவு குறித்து எழுதி ஹஃப்ஃபிங்ஸ்டன் போஸ்ட் தளத்தில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை பற்றிச் சில.. 10 ஆண்டுகளுக்கு முன் சச்சார் அறிக்கை வெளிவந்தபோது தான் எழுதிய கட்டுரையின் சுருக்கம் என அவர் இப்போது இந்தப் பதிவைச் செய்துள்ளார். அதில் அவர் ஒட்டு மொத்தமாக சச்சார் குழு அறிக்கையையே அபத்தம் என்கிறார். புள்ளிவிவரங்கள் என்பன வெறும் அற்ப எண்களே. அவற்றை வைத்துக்கொண்டு யாரும் எதையும் செய்யலாம். எப்படியும் அவற்றுக்கு விளக்கம் கொடுக்கலாம். அப்படியான ஒரு பக்கச்சார்பான போலி ஆய்வுதான் சாச்சார் அறிக்கை எனச் சொல்லி அந்த ஆள் சுட்டிக்காட்டும் சில மட்டும் இங்கே.

அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் குறைவாக இருப்பதை சச்சார் அறிக்கை மிக விரிவான தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது. அதை இந்த ஆர்.எஸ்.எஸ் குமாஸ்தா எப்படி எதிர்கொள்கிறார் எனப் பார்ப்போம். இதை மறுப்பதற்கு அவர் என்ன செய்ய வேண்டும். அந்தப் புள்ளிவிவரம் தவறு, முஸ்லிம்கள் அவர்களுக்குரிய வீதத்தில் அரசுப்பணிகளில் உள்ளார்கள் என நிறுவ வேண்டும். அவர் அந்த முயற்சியில் இறங்கவில்லை. மாறாக அறிக்கையில் உள்ள வேறொரு புள்ளி விவரத்தைச் சுட்டுகிறார். 20 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் பட்டதாரிகள் வெறும் 3.2 சதம்தான். ஆனால் தேசியச் சராசரியோ 6.7 சதம். ஆக சராசரியில் பாதிகூட முஸ்லிம்கள் இல்லை என்பதை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி பற்றிப் பேசும்போது சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. இப்படிப் போதிய அளவில் முஸ்லிம்கள் படிக்காமல் இருக்கும்போது அவர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் என்பது குமாஸ்தாவின் கேள்வி. சச்சாரின் தரவுகளே கோல்மால் பண்ணப்பட்டது எனச் சொல்லும் இவர் இப்போது சச்சார் சுட்டிக் காட்டும் இன்னொரு தரவைத் தன் வசதிக்காககப் பயன்படுத்திக் கொள்வது இருக்கட்டும். முஸ்லிம்கள் மத்தியில் கல்வி குறைவாக இருப்பது என்பதும் அவர்களின் சமூக நிலை பொது அளவைக்காட்டிலும் தாழ்ந்துள்ளது என்பதற்கு இன்னொரு அளவுகோல். 3.2 சதம் பட்டதாரிகள் என்பது ஒப்பீட்டளவில் குறைவு என்பது ஒரு பக்கம். ஆனால் 15 கோடி முஸ்லிம்களில் 3.2 சதம் என்பது கிட்டத்தட்ட ஒரு 5 மில்லியன் பேர். முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகை வீதத்திற்குச் சரியாக வேலை கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால் இந்த 5 மில்லியன் பட்டதாரிகளில் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் கிடைத்திருக்க மாட்டார்களா/

ஒரு ஒப்பீட்டுக்காகத் தலித்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மத்தியிலும் இந்த வீதம் குறைவுதான். அதை ஈடுகட்டத்தான் இட ஒதுக்கீடு, வேலையில் மட்டுமல்ல கல்வியிலும் கொடுக்கப்பட்டு ஈடு செய்யப்படுகிறது.

வேலை வாய்ப்பு குறைந்துள்ளதைச் சரி செய்வதற்கு, இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகியுள்ள பிற பிரிவினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு போல முஸ்லிம்களுக்கும் உரிய அளவில் முன்னுரிமை அளிப்பது என்பதோடு இப்படி அவர்களை வேலைக்குத் தகுதிப்படுத்துவது என்பதற்கு முதற்படியாக அவர்கள் மத்தியில் கல்வி வீதத்தி அதிகரிக்க வேண்டி உள்ளது.. அதில் அரசுக்கும் கடமை உண்டு.

சச்சார் அறிக்கை பற்றி ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (அது வெளியிடப்பட்டபோதே அது குறித்து என் நூலும் வெளிவந்தது). அப்போது முஸ்லிம்களின் தரப்பில் அந்த அறிக்கை வரவேற்கப்பட்டது மட்டுமல்ல சில விமர்சனகளும் வைக்கப்பட்டன. அவற்றில் மூன்று விமர்சனங்கள் இங்கே குறிப்பிடத் தக்கன. முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு நேர்ந்துள்ள ஆபத்து குறித்து அது பேசவில்லை என்பது ஒன்று. மற்றது, அதில் முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது. மூன்றாவது, அது முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எதையும் தெளிவாகச் சொல்லவில்லை என்பது.  எனவே ஏதோ இட ஒதுக்கீட்டிற்காக சச்சார் புள்ளிவிவரங்களில் கோல்மால் பண்ணிவிட்டதாகச் சொல்வது அபத்தம். அடுத்து சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் அணுகுகிறது. அரசாங்கத்தை மட்டுமே அது குற்றம் சாட்டுவதில்லை. முஸ்லிம்களின் பொறுப்பையும் அது ஆங்காங்கு வலியுறுத்தத் தவறுவதில்லை. மதரசா கல்வியை எப்படி நவீனப்படுத்துவது, அதை எப்படிப் பொதுக்கல்வியுடன் இணைப்பது முதலான ஆலோசனைகளையும் அது சொல்கிறது. தவிரவும் முஸ்லிம் மொஹல்லாக்களின் (குடியிருப்புகளின்) அருகாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அமைக்கப்படாததையும், அமைக்க வேண்டிய அவசியத்தையும் அறிக்கை பிறிதோரிடத்தில் சுட்டிக்காட்டும்.

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதுதான் அவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்கி இருப்பதற்கான காரணம் எனச் சொல்லும் குமஸ்தா, கல்வியில் இப்படிப் பின்தங்கி இருப்பதற்கும் அவர்களே காரணம் என மீண்டும் பழியை அவர்கள் மீதே போடுகிறார். முஸ்லிம் பிள்ளைகள் மதரசா மற்றும் மக்தப் பள்ளிகள் படிக்கின்றனர். தவிரவும் 30 முதல் 50 சதம் பேர் உருது மொழிப் பள்ளிகளில் படிக்கின்றனர். இவை CBSE பள்ளிகளுக்குச் சமமாக இருப்பதில்லை, பின் எப்படி அவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக வர முடியும் என்பது அவரது வாதம். சந்தடி சாக்கில் முஸ்லிம்கள் படிக்கும் இந்தப் பள்ளிகள் அகன்ற பார்வையை உருவாக்காதவை; குறுகிய பார்வை உடையவை என்கிற கருத்தையும் வைக்கிறார். மறுபடியும் மறுபடியும் முஸ்லிம்களே குற்றவாளி ஆக்கப்படுகின்றனர். முஸ்லிம் குழந்தைகளில் மதரசா மற்றும் மக்தப்களில் பயில்வோர் மொத்தத்தில் வெறும் எட்டு சதம் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது..

தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பற்றிச் சொல்லவரும்போது அவற்றில் முஸ்லிம்களுக்கு குறைந்த ஊதியமுள்ள தாழ்ந்த பணிகளே கொடுக்கப்படுவதை சச்சார் சுட்டிக்காட்டி இருப்பார். இது ஊரறிந்த உண்மை. தாழ்ந்த பணிகளுக்குத் குறைந்த ஊதியம்தானே கொடுக்க முடியும் எனச் சாமர்த்தியம் பேசுகிறார் குமாஸ்தா. ஒரே பணியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதுபோல சச்சார் பிரச்சினையைத் திரிப்பதாக இதை அவர் முன்வைக்கிறார். என்னுடைய நூல் ஒன்றில் ஆம்பூர் – வாணியம்பாடி பகுதிகளில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பற்றிய ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி இருப்பேன். என்னுடன் பணி புரிந்த ஒரு பேராசிரியர் தன் ஆய்வுப் பட்டத்திற்காகச் சேகரித்த தரவுகளிலிருந்து தெரிய வருவது இதுதான், தோல்பதனிடும் தொழிலில் ஆகக் கீழான  அசுத்தமான பணிகளில்தான் முஸ்லிம்கள் உள்ளனர். கணக்கெழுதுதல், நிர்வாகம் செய்தல் முதலான பணிகளில் எல்லாம் பிற மதத்தைச் சேர்ந்த உயர் சாதியினர்தான் உள்ளனர். இதுதான் எதார்த்தம்.

முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வறுமை பற்றிப் பேச வரும்போதும் இந்த ஆர்.எஸ்.எஸ் குமாஸ்தா இதே போன்ற தகிடுதத்தங்களைத்தான் செய்கிறார். இந்த அம்சத்தில் மட்டும் அவர் தேசிய அளவிலான புள்ளிவிவரங்களைக் கைவிட்டு தமிழ்நாடு, கர்நாடகா போன்ற பகுதிகளை எடுத்துக்கொண்டு முஸ்லிம்கள் பிற உயர் சாதியினருக்கு வசதியில் தாழ்ந்தவர்கள் இல்லை என “நிறுவுகிறார்”. நான் என் எழுத்துக்களில் தொடர்ந்து ஒன்றைக் குறிப்பிட்டு வருகிறேன். தென் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் நிலைமை பரவாயில்லை என. அதுவும் ஒப்பீட்டளவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உத்தரப்பிரதேசம், பிஹார், மே.வங்கம் முதலிய பகுதிகளில் நிலைமை படு மோசம். ஆகக் கீழான வருமானங்கள் உள்ள பணிகளில்தான் முஸ்லிம்கள் உள்ளனர். ஊதியத்தில் கீழான பணிகள் மட்டுமல்ல, கடின உழைப்பைக் கோரும் பணிகளிலும் அவர்கள்தான் உள்ளனர்..

தமிழகத்தில் மட்டும் என்ன? இங்கே உள்ள பெருந்தொழில்களில் எல்லாம் பார்ப்பனர், நாயுடுகள், மார்வாரிகள் ஆகியோர்தான் உள்ளனர். உயர் கல்வித் தொழிலிலும் கூட ஒப்பீடளவில் முஸ்லிம் அல்லாதவர்களே உள்ளனர். நெல்பேட்டை, மேலப்பாளையம் முதலான பகுதிகளுக்குப் போய்ப் பார்த்தால் முஸ்லிம்களின் வறுமையைப் புரிந்துகொள்ள இயலும்.

 

செங்கல்பட்டு பாலேஸ்வரம் காப்பகப் பிரச்சினை : அறிக்கை

செங்கல்பட்டு பாலேஸ்வரம் மரணத் தறுவாய் பராமரிப்பு   நிலையம்  (St Joseph Hospice)  மீது  அரசு  நடவடிக்கை

 

                                      உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை,

ஏப்ரல் 20, 2018.

பகுதி I

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் உத்திரமேரூர் செல்லும் வழியில் வலப்புறம் சற்றே உள்ளடங்கியுள்ள சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ‘புனித ஜோசப் மரணத் தறுவாய் பராமரிப்பு நிலையம்’ (St. Joseph’s Hospices) எனும் சேவை நிலையத்தில் முறைகேடுகள் உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது அதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இரும்புலியூர் (தாம்பரம்), திருவல்லம் (வேலூர்) மற்றும் புலிப்பள்ளம் (விழுப்புரம்) ஆகிய ஊர்களில் அமைந்திருந்த அதன் கிளைகளில் இருந்தவர்களும் இப்போது வெளியேற்றப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 14 நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பராமரிப்பு நிலையங்களின் இயக்குநர் பாதிரியார் ஆர்.வி. தாமஸ் அவர்களிடன் விளக்கம் கோரியும் அனுமதியின்றி குழந்தைகளைக் காப்பகத்தில் வைத்திருந்தார் எனவும் இரு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனினும் பாதிரியார் தாமசுக்கு அளிக்கப்பட்ட விளக்கக் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.

 1. குழுவில் பங்கு பெற்றோர்
 2. பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை,
 3. தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சென்னை,
 4. பேரா. பிரபா.கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்,
 5. அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO),
 6. வி.சீனிவாசன், சுற்றுச்சூழல் ஆர்வலர், சென்னை,
 7. ஆசிர், மக்கள் கண்காணிப்பகம், மதுரை,
 8. செல்வி, உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை,
 9. வன்னிஅரசு. துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், சென்னை,
 10. குடந்தை அரசன், நிறுவனத் தலைவர். விடுதலைத் தமிழ்ப் புலிகள்,
 11. ரைட்ஸ் பாபு, சசி மனித உரிமை அமைப்பு, கடலூர்,
 12. தேவநேயன், மனித உரிமைச் செயல்பாட்டாளர், சென்னை,
 13. மு.களஞ்சியம், திரைப்பட இயக்குநர், சென்னை,
 14. எஸ்.சத்யபாபு, ஹெல்ப் ஏஜ் இன்டியா, கடலூர்,
 15. முருகப்பன், பத்திரிகையாளர், திண்டிவனம்.

இந்தக் குழுவினர் மார்ச் 03 மற்றும் 07 தேதிகளில் பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள அச் சேவை நிலையத்திற்குச் சென்றனர். அப்பகுதி மக்கள் அந்த நிலையத்தின் மீது கோபமாக இருப்பதாலும், ஒரு கொந்தளிப்பான சூழல் அப்பகுதியில் நிலவுவதாலும் பாதுகாப்பு கருதி அதன் இயக்குநர் பாதிரியார் தாமஸ் அங்கிருந்து வெளியேறி வேறெங்கோ இருந்ததால் முதல் முறை சென்றபோது அவரைச் சந்திக்க இயலவில்லை. எனினும் பாதிரியாரின் உதவியாளரும், அந்நிறுவனத்தில் சமூகப் பணியாளராகவும் உள்ள அலெக்ஸ் பாண்டியன் எங்களிடம் விரிவாகப் பேசியதோடு, தேவையான ஆவணங்களையும் எங்களுக்குக் காட்டி உதவினார். அங்கிருந்த சொற்பப் பணியாளர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பார்த்துப் பேசினோம். நாங்கள் சென்றபோது சாந்தோம் மாதாகோவில் நிர்வாகத்தில் பணி செய்யும் அருட் பணியாளரும் வழக்குரைஞருமான ஸ்டாலினும் அங்கிருந்தார். தேவையான சில விளக்கங்களை அவரும் எங்களுக்கு அளித்தார். இரண்டாம் முறை சென்ற போது பாதிரியார் தாமசும் இருந்தார். அவரது கருத்துக்களையும் பதிந்து கொண்டோம்.

H1 நிலையத்தையும், அங்கே தங்கவைக்கப்படுகிற இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், மனநோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான மருத்துவ வார்டுகள், இறந்தோரைப் புதைப்பதற்காக அந்த வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மீண்டும் பயன்படுத்தக் கூடிய கான்க்ரீட் கல்லறை அமைப்பு (reusable concrete vaults) ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்துப் படங்களையும் எடுத்துக் கொண்டோம். கல்லறை அமைப்பிலுள்ள படிக்கட்டுகளில் இறங்கி இறந்தோரின் எலும்புகள் விழுவதற்கான மூடப்பட்ட பகுதியையும் பார்வையிட்டோம்.

திரும்பும் வழியில் பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலரையும் சந்தித்து அந்நிலையம் தொடர்பான அவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டோம். பின் நிலையத்தின் மீது புகார் அளித்துள்ளவரும், பிப் 20 அன்று சர்ச்சைக்குரிய அந்த இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிலைய வாகனம் இடையில் நிறுத்தப்பட்டுப் பிரச்சினையானபோது அதற்குக் காரணமாக இருந்தவரென தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ள ம.தி.மு.க பிரமுகரான கருணாகரனையும் சந்தித்து விரிவாக அவரது கருத்துக்களையும் பதிந்து கொண்டோம். இரண்டாம் முறை சென்ற போது பாதிரியார் தாமஸ், செங்கல்பட்டு காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ ஆகியோரையும் சந்தித்து விளக்கங்களைப் பெற்றுக் கொண்டோம்.

நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் எல்லோரையும் சந்திக்க இயலவில்லை ஆயினும் சென்னை- புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ காப்பகத்தில் தற்போது உள்ள 24 பேர்களில் சிலரை எம் குழுவில் உள்ள சீனிவாசன் மார்ச் 11 அன்று சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டார். மார்ச் 13 அன்று திண்டிவனம் ‘அன்னை கருணாலயம்’ எனும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 9 பேர்களையும் இக்குழுவில் உள்ள பேரா.கல்விமணி மற்றும் பத்திரிகையாளர் முருகப்பன் ஆகியோர் சந்தித்து அவர்களில் பேசக் கூடியவர்களின் வாக்குமூலங்களையும் பதிந்து கொண்டனர்.

நிலையத்திலிருந்தவர்கள் அகற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிக் குழப்பம் நிலவுகிறது. அகற்றப்பட்டபோது அங்கு 323 பேர்கள் இருந்ததாக நிலையத்தில் பணியாற்றும் அலெக்ஸ் பாண்டியன் கூறினார். இன்று அரசு 294 பேர்கள்தான் இருந்ததாகச் சொல்கிறது.  அகற்றப்பட்டவர்களில் ஒரு 91 பேர் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுப் பின் அவர்களில் சாகும் தருவாயில் இருந்த ஆறு பேர்களை மட்டும் அங்கேயே விட்டுவிட்டுப் பிறரை வேறு இல்லங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருந்தவர்களை, பிப் 07 அன்று மாலை, எம் குழுவில் உள்ள பேரா. மார்க்ஸ், பாபு, டாக்டர் சத்யபாபு  ஆகியோர் சென்று பார்த்தனர். நாங்கள் போன அன்று காலையில் ஒருவரும், முதல் நாள் மாலையில் ஒருவரும் இறந்திருந்தனர். மற்றவர்களை மட்டும் பார்க்க முடிந்தது.

I.2. பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பான பிரச்சினையின் பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள ‘புனித ஜோசஃப் இறக்கும் தறுவாய் பராமரிப்பு நிலையம்’ என்பது முதியோர்களைப் பராமரிப்பதற்கான தமிழக அரசின் (Tamilnadu Maintenance and Welfare of the Parents and Senior Citizens) விதி எண் 12 (3) (Central Act 56 of 2007)ன் கீழ் 28.12.2011 முதல் செயல்பட்டு வருகிறது. 18 ஏக்கர் நிலத்தில் இதற்கென கட்டப்பட்ட நவீனமான கட்டிடம் ஒன்றில் இது கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. பாதிரியார் ஒருவர் கொடையாகக் கொடுத்த நிலத்தில் அந்நிலையம் கட்டப்பட்டுள்ளதாக இதன் நிர்வாகி பாதிரியார் ஆர்.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Founder இந்தக் காப்பகம் செயல்படுவதற்கான அனுமதியையும், பதிவுச் சான்றையும் (Certificate of Registration) அது தொடங்கப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அளித்துள்ளது (Roc. No. 2588/A1/2011, Dated: 28.12.2011). ‘பராமரிப்பு தேவைப்படும் முதிய குடிமக்களுக்கான நிறுவனம்’ (Institution for Senior Citizens in need of care) என இந் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்’ குறித்த விதி 12(3) (Rule 12-3 of the Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens rule 2009) ன் கீழ் அந்தச் சான்று வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்தப் பதிவு 01.01.2012 முதல் 30.06.2012 வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாநில சமூகநல ஆணையரின் அனுமதியுடன் மாவட்ட சமூக நல அதிகாரி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த அனுமதி 30.06.2012 தேதியுடன் காலாவதி ஆனபின் அனுமதித் தொடர்ச்சிக்கு விண்ணப்பித்து விட்டு அது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. எனினும் சுமார் 27 மாதங்களுக்குப் பின் 19-09-2014 அன்றுதான் இந்நிறுவனத்திற்கு அடுத்த மூன்றாண்டுகள் (19.09.2014 முதல் 18-09-2017) வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட சுமார் இரண்டே கால் ஆண்டுகள் இந்நிறுவனம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தும் பதிலளிக்கப்படவில்லை என நிறுவன இயக்குநர் தாமஸ் குறிப்பிட்டார். ஆனாலும் அந்நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அரசு நிறுவனங்கள் மெமோ எழுதித் தந்து பராமரிப்பு தேவைப்படுபவர்களை அந் நிறுவனத்துக்கு அனுப்பிக் கொண்டும் இருந்துள்ளன. அதிகாரிகளும் வந்து போய்க் கொண்டிருந்துள்ளனர்.

2017 செப்டம்பர் 18 உடன் இந்த அனுமதியும் காலாவதி ஆகிவிடுகிறது. இந்தத் தேதிக்கு மூன்று மாதம் முன்னதாகவே அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும் என்பதும், அலுவலக அறையில் இந்த அனுமதிக் கடிதம் எல்லோரும் பார்க்கும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முன்னர் விதிக்கப்பட்ட நிபந்தனைகள். அவ்வாறே அலுவலக வரவேற்பறையில் அக் கடிதம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. நிலையத்தின் அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பம் 15.09.2017 அன்று அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாகத் தாங்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டுள்ளதையும் அக்கடிதத்தில் அந் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வெண்டிய சுகாதாரச் சான்றிதழ் தவிர பிற ஆவணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டன. சுகாதாரச் சான்றிதழுக்காக மாவட்ட  சமூகநல அலுவலகத்திற்கு விண்ணப்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் அவரது அதிகாரத்தின் கீழ் அதை வழங்காமல், அவ்வாறு வழங்கலாமா என, 28.07.2014 அன்று, மாநில சமூகநல ஆணையரிடம் அறிவுரை கோரியுள்ளார். மாநில சமூகநல ஆணையர் உரிய ஆவணங்களைப் பெற்று அனுமதி வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார் (ந.க.எண்.33410/மானியம்.1/2014, நாள் 3.09.2014). எனினும் பிரச்சினை உருவான நாள் வரை அந்த அனுமதிக் கடிதம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து சமூக நலத்துறை அலுவலகத்திடமிருந்து எந்தக் கடிதமும் இல்லை.

இதன் விளைவாக அந்த ஆவணம் மட்டும் இல்லாமல் மற்ற ஆவணங்களான கட்டிட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட 15 ஆவணங்களுடன் காப்பகத்தின் அனுமதித் தொடர்ச்சிக்கு சென்ற 15-09-2017 அன்று மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இன்றைய பிரச்சினை தொடங்கும் வரை (பிப் 20,2017) அனுமதித் தொடர்ச்சிக்கான ஆணை வரவுமில்லை. தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவும் இல்லை.

I.3 இப்போது அந்நிறுவனத்தின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை விவரம்

இந் நிறுவனத்தின் கீழ் பாலேஸ்வரம் உட்பட, கிளைக் காப்பகங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஐந்து நிலையங்கள் செயல்படுகின்றன. 2008ம் ஆண்டில் திண்டுக்கல்லில்தான் ‘இறந்து கொண்டிருப்பவர்களுக்கான பராமரிப்புக் காப்பகம்’ (Hospice) எனும் கருத்தாக்கத்துடன் முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பின் 2011ல் பாலேஸ்வரம் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் புதுச்சேரிக்குப் பத்து கி.மீ தொலைவில் புளிச்சப்பள்ளம் எனும் ஊரில் ஒரு சிறிய காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.. வேலூருக்கருகில் திருவல்லம் எனும் இடத்திலும் சிறு கிளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது இவை தவிர தாம்பரம் இரும்புலியூரில் கிறிஸ்தவ சபை கொடுத்துள்ள நிலம் ஒன்றில் ஒரு சிறிய காப்பகம் கட்டப்பட்டுள்ளது. சென்னை நகரில் காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவ மனைகளிலிருந்து இப்படிப் பாதுகாப்புத் தேவைப்படுகிற யாருமற்றோர் குறித்த தகவல்கள் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும்போது இவர்கள் அங்கு சென்று, உரிய ‘மெமொ’ எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களைத் தங்களின் வாகனத்தில் ஏற்றி வந்து இந்த இரும்புலியூர் காப்பகத்தில் தங்கவைக்கின்றனர். சுமார் 25 பேர்களுக்கு மேல் சேர்கிறபோது அதிகமாக உள்ளவர்களைத் தங்களின் ஆம்புலன்சுகளில் பாலேஸ்வரம் கொண்டு செல்வதாகக் கூறினர்.

இதற்கென இரண்டு ஆம்புலன்சுகள் உள்ளன. பெரியது TN19 L 2695; சிறியது TN57 AC 6327. இறந்தவர்களைக் கொண்டுவர என தனி ஆம்புலன்சுகள் கிடையாது. ஏன் எனக் கேட்டபோது தாங்கள் சாகும் தறுவாயில் உள்ளவர்கள் மற்றும் நோயாளிகளைத்தான் கொண்டுவருவதாகவும் இறந்த உடல்களைக் கொண்டுவருவதில்லை எனவும், காப்பகத்தில் இறப்பவர்களை அந்த வளாகத்திற்குள்ளேயே புதைப்பதால் அதற்கு வாகனம் தேவைப் பட்டிருக்கவில்லை எனவும் கூறினர்.

தவிரவும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் கோயம்பேடு காய்கறி வியாபாரிகளால் நன்கொடையாகக் கொடுக்கப்படும் காய்கறிகள் ஆகியனவும் இரும்புலியூரில் சேகரிக்கப்பட்டுப் பின் பாலேஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென TN 57 AM 3351  என்கிற எண்ணுள்ள சிறிய வான் ஒன்றும் இருந்துள்ளது. ராஜேஷ் என்கிற வாகன ஓட்டி தன் மனைவியுடன் இரும்புலியூர் காப்பகத்தில் இருந்துள்ளார்.

 

கடந்த பிப்ரவரி 19 அன்று இரும்புலியூர் காப்பகத்தில் இருந்துள்ளவர்களில் மூவரை பாலேஸ்வரம் கொண்டு செல்ல வேண்டி இருந்துள்ளது. அவர்கள் முறையே 1. விஜயகுமார் (65) த/பெ முத்துக்குமார். இவருக்கு ராஜிவ்காந்தி நினைவு மருத்துவமனைக் காவல்நிலைய ஆய்வாளர் கடந்த பிப் 13 அன்று மெமோ எழுதி இங்கு அனுப்பி உள்ளார். இரண்டாமவர் அன்னம்மாள் (75) க/பெ முருகேசன். இவருக்கு கோட்டூர்புரம் காவல்நிலைய ஆய்வாளர் பிப் 16 அன்று மெமோ எழுதி அனுப்பியுள்ளார். மூன்றாமவர் ‘பெயர் தெரியாதவர்’ (65). இவரை குரோம்பேட்டை உதவி ஆய்வாளர் பிப் 13 அன்று மெமோ எழுதி அனுப்பியுள்ளார்.

இந்த அன்னம்மாள் தன் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்தவர். சென்னையில் எங்கு செல்வது எனத் தெரியாமல் அலைந்து இறுதியாக பிப் 16 அன்று சின்னமலைப் பக்கம் வந்து அங்கே தனியாக அமர்ந்துள்ளார். சின்னமலை இயேசுவின் சீடர் புனித தாமஸ் வந்து இருந்ததாக நம்பப்படும் இடம். அங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் முதலியன உண்டு. அங்கிருந்த பாதிரியார் ஒருவர் இவரைக் கண்டு விசாரித்தபோது இந்த அம்மையார் தனக்கு யாரும் இல்லை எனவும் தன்னை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிடுமாறும் கேட்டுள்ளார். அவர் இரும்புலியூர் காப்பகத்துடன் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லியுள்ளார், அவர்கள் சின்னமலைக்கு அருகில் உள்ள கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு அந்த மூதாட்டியுடன் சென்று அங்குள்ள அதிகாரியிடம் மெமோ எழுதி வாங்கி இரும்புலியூர்க் காப்பகத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு வந்தபின், அங்கு சாகும் நிலையிலிருந்தவர்களை எல்லாம் பார்த்துவிட்டு அன்னம்மாளுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவர் தன்னை விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் போலீசில் பதிவு செய்து மெமோ எழுதி வாங்கியபின் அவர்களுக்கு காப்பாகம் பொறுப்பாகி விடுவதால் அப்படிச் செய்ய இயலாது எனவும், யாரும் உறவினர்கள் ஆதாரத்துடன் வந்தால்தான் விடமுடியும் என்பதுதான் காப்பகத்தின் விதி என்பதாலும் அவர் கேட்டவுடன் அவரை வெளியே அனுப்ப முடியவில்லை என காப்பகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இரும்புலியூர்க் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வந்த இரு மருத்துவர்களிடம் அன்னம்மாள் தன்னை விடுவிக்கக் வேண்டியதாகவும், அந்த மருத்துவர்கள் விரும்பாத ஒருவரை ஏன் இங்கே வைத்துள்ளீர்கள் எனக் கூறிக் கடிந்து கொண்டதாகவும் அன்னம்மாள் தரப்பில்  கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும் அன்னம்மாளின் நெருங்கிய உறவினருமான கிருஷ்ணனும் எங்களிடம் அவ்வாறே கூறினார்.

இந்தப் பின்னணியில்தான் இரும்புலியூரிலிருந்து அன்னம்மாளையும், உடனடியாக பாலேஸ்வரம் கொண்டு செல்லும் நிலையில் உள்ள முன் கூறிய விஜயகுமார் மற்றும் பெயர் சொல்ல இயலாத ஒருவர் உட்பட மூவரையும் பிப் 20 அன்று பாலேஸ்வரம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்களில் இறக்கும் தறுவாயில் இருந்த விஜயகுமார் 19 ந்தேதி மாலை இறந்துள்ளார். இறந்தவர்களைப் புதைக்க இங்கு வழி இல்லாததால் அவரது உடலை அங்கு கொண்டு சென்று விடுவது என ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ், தான் தன்னிச்சையாக முடிவு செய்ததாகக் கூறுகிறார்.St_Joseph_Hospice_750

அது மட்டுமல்ல. காப்பகத்திலுள்ள மூன்று வாகனங்களில் ஒன்று புளிச்சப்பள்ளம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி இருந்ததாலும், இன்னொரு வாகனம் பாலேஸ்வரத்தில் இருந்ததாலும் ஒரே வாகனத்தில் இறந்த விஜயகுமாரின் உடல், காய்கறிகள், அன்னம்மாள் மற்றும் பெயரில்லாத முதியவர் எல்லோரையும் ஏற்றிச் சென்றதாக ராஜேஷ் சொல்லுகிறார்.

பிணத்துடன் உட்கார்ந்திருந்த இருவரில் அன்னம்மாள் பயந்து வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் அழத் தொடங்கியுள்ளார். வான் டிரைவரைப் பொருத்த மட்டில் தான் தன்னிச்சையாக அவரை விட முடியாது எனவும் பாலேஸ்வரம் சென்று ஒப்படைத்துவிட்டால் பாதிரியார் போலீசுக்குச் சொல்லி முடிவெடுத்துக் கொள்ளட்டும் எனவும் எண்ணியதால் அந்த மூதாட்டி அழுத போதும் தான் அவரை விட முடிவில்லை எனவும் கூறினார்.

அழுது கொண்டே வண்டியில் வந்த அவரை வழியில் சிலர் கண்டு சந்தேகப்பட்டு, வேனை நிறுத்தி சாலவாக்கம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பிரச்சினையைக் கேள்விப்பட்டுக் காவல் நிலையத்திற்கு வந்த உள்ளூர் ம.தி.மு.க பிரமுகர் கருணாகரன் வேனை காப்பகத்திற்கு அனுப்பக் கூடாது என அவரது ஆதரவாளர்களுடன் காவல்துறை டி.எஸ்.பி மதிவாணனிடம் வாதிட்டுள்ளார். எனினும் முறையான போலீஸ் மெமோக்கள் இந்த மூவருக்கும் உள்ளதால் வேன் செல்வதைத் தான் தடுக்க இயலாது எனக் கூறியதாக டி.எஸ்.பி மதிவாணன் எங்களிடம் கூறினார். பாலேஸ்வரம் காப்பக நிறுவனர் பாதிரியார் தாமசிடம் தனிப்பட்ட பகையுள்ள கருணாகரன் அதை ஏற்கவில்லை. இதற்கிடையில் யாரோ அங்கிருந்த வேனின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். அதை ஒட்டி கருணாகரன் மீது இ.த.ச 147, 148, 341, 294(b), 506(1) மற்றும் பொதுச் சொத்து அழிப்புச் சட்டம் (PPD) 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து (சாலவாக்கம் காவல் நிலையம், F.I.R No 42 / 2018) அவர் கைது செய்யப்பட்டார். வேனில் இருந்த உடல் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைக்குப்  பின் பாலேஸ்வரம் காப்பகம் வசம் ஒப்புவிக்கப்பட்டு அங்கே உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது. அன்னம்மாளிடம் இருந்த தொலைபேசி எண்ணைப் பெற்று அவரது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் அவர் ஒப்புவிக்கப்பட்டார்.

I.4. பாலேஸ்வரம் காப்பகத்தின் மீது அரசு தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை

இச்சம்பவத்தை ஒட்டி அடுத்த நாள் (பிப் 21) ஆர்.டி.ஓ நேரில் வந்து இல்லத்தைப் பார்வையிட்டு உள்ளிருந்தோரை விசாரித்தும் சென்றுள்ளார். இரண்டாம் நாள் (22.02.2018) காஞ்சிபுரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய்க் கோட்ட அலுவலரிடமிருந்து (RDO) அந் நிறுவனத்திற்கு குற்ற விசாரணைச் சட்டம் 133 (ஆ) பிரிவின் கீழ் விளக்கம் கோரும் அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

(1)தமக்கு வந்துள்ள புகார்களின் அடிப்படையில் இந்நிறுவனத்தில் போதிய சுகாதாரம் இன்மை, இறக்கும் நபர் அனுமதியின்றி புதைக்கப்படுதல், பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது, இக்காப்பகம் உரிய துறைகளின் அனுமதி இன்றி செயல்படுவது முதலியன தெரியவருகிறது (2) அதில் உள்ளவர்களுக்கும், பிற ஆதரவற்ற நபர்களுக்கும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிப்பதாகவும் தெரிகிறது (3) இவற்றைத் தடுக்க வேண்டும்  எனக் கோரப்படுகிறது (4) எனவே உரிய அனுமதியில்லாத இந்தக் காப்பகத்தை ஏன் தடை செய்யக் கூடாது என ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தம் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுதான் இந்த விளக்க அறிவிப்பின் சாரம்.

இக்கடிதம் பிப்ரவரி 22 தேதியிட்டு அனுப்பப்படுகிறது. எனவே பிப்ரவரி 29 வரை பதிலளிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கால அவகாசம் உள்ளது. பிப்ரவரி 28 அன்று நிறுவனம் சார்பாக நிர்வாக இயக்குநர் தாமஸ் அவர்களின் பதில் அனுப்பபப்டுகிறது. (1) தாம் உரிய அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளதாகவும், உரிய காலகெடு முடியும் முன்பே தான் அனுமதி புதுப்பிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவற்றுக்குரியதாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும், (2) தாங்கள் சேர்க்கை மற்றும் சுகாதாரம் தொடர்பாகக் கடைபிடிக்கும் நடைமுறைகளை விவரித்தும், (3) புதைப்பதற்குத் தடை இல்லை எனத் தாங்கள்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றுள்ள கடித நகலை இணைத்தும் (4) முன்னதாகத் தனி வருவாய் ஆய்வாளர், மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் முதலியோர் காப்பகத்தில் தரமான சமையல் மற்றும் சுகாதாரமான சூழல் உள்ளதாக அளித்துள்ள சான்றுகளை முன்வைத்தும் அந்தப் பதில் உள்ளது.

ஆனால் உரிய காலகெடுவுக்குள் அளிக்கப்பட்ட இந்தப் பதில் விளக்கக் கடிதம் சென்றடையும் முன்பே, காலகெடு முடிவதற்கு உள்ளாகவே சென்ற பிப்ரவரி 22 அன்று புனித ஜோசப் ஹாஸ்பிஸ் எனப்படும் இந்நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கே தங்க வைக்கப்பட்டிருந்த 323 (அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கணக்குப்படி 294) பேர்களும் பிப்ரவரி 22, 23, 24 தேதிகளில் வெளியேற்றப்பட்டுப் பல்வேறு காப்பகங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் கீழ்க்கண்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவை: 1.DGS காப்பகம், மதுராந்தகம் 2.பார்வையற்றோர் காப்பகம், பெரும்கண்டிகை, அச்சரபாக்கம் 3.அன்னை கருணாலயம், திண்டிவனம் 4.அன்னை இல்லம், சோளிங்கநல்லூர் 5.கலைச்செல்வி கருணாலயம், சேலையூர் 6.லிட்டில் உட்வர்ட்ஸ், ECR சாலை, பனையூர் 7.Shelter for Urban Homeless, தண்டையார்பேட்டை 8.சரணாலயம் ட்ரஸ்ட் கருணை இல்லம், பெருமாள்பேட்டை, வாணியம்பாடி 9.செயின்ட் ஆனிஸ் இல்லம், குடியாத்தம் 10.SRDPS, பெருமாள்நகர், திருப்பத்தூர் 10.ORD, வேலூர்.

எனினும் காஞ்சிபுரம் RDO மற்றும் நிர்வாக நடுவர் சென்ற பிப் 22 அன்று குற்ற விசாரணை முறைச் சட்டம் 133 (ஆ) வின் படி பாலேஸ்வரம் காப்பகத்தை ஏன் மூடக் கூடாது என அனுப்பிய அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. ரமேஷ் அவர்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளார் (தேதி: 22.03.2018, WP. No 5240 of 2018 & WMP No 6430).

I.5 காப்பகத்தில் இருந்த குழந்தைகள் தொடர்பான நடவடிக்கை

காப்பகத்தில் ஒன்பது குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காப்பகத்தில் வேலைசெய்பவர்களின் குழந்தைகள் எனவும் அக்குழந்தைகள் அந்தக் காப்பகத்தில் தம் பெற்றோர்களுடன் வசிக்கிறார்கள் எனவும் காப்பகம் தரப்பில் சொல்கின்றனர். நாங்கள் அப்படியான மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் சந்தித்தோம். அவர்களில் ஒருவர் ஏஞ்சலினா, குழந்தையின் பெயர் மஞ்சுளா (வயது 1 1/2). இன்னொருவர் மஞ்சுளா, குழந்தை ஜோபின் மஞ்சு (7 1/2 வயது). மூன்றாமவர் சத்யா க/பெ முருகன், குழந்தையின் பெயர் இளவரசி (வயது 1 1/2). இவர்களில் மஞ்சுளா அங்கு எங்கள் ஆய்வின் போது தேவையான விவரங்களை எடுத்துத் தந்து கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். மற்ற இருவரில் ஒருவர் பேசும் நிலையில் இல்லை. மூன்றாமவர் பேச இயலாதவராக இருந்தபோதும் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடியவராக இருந்தார்.

பிற ஆறு குழந்தைகளின் விவரங்களாவன: 1.சூரிய பிரகாஷ் (9) த/பெ ரவி 2.தேசிகபிரியன் (5) த/பெ பிரேம்குமார் 3.சபிதா ஜான்சி (8 1/2) த/பெ ஜோசப் சகாயராஜ்- செலின் மேரி 4.ஜோஷி (1 1/2) தா/பெ சின்னபொண்ணு – பிரவீன் 5.ரோஹினி (7 1/2) த/பெ இன்னாசியார்- பிரகாஷ் மேரி 6.எம்மா (3 1/2), த/பெ மணி – நாகம்மாள்.

ஆக மொத்தம் 9 குழந்தைகள் அந்தக் காப்பகத்தில் தம் பெற்றோருடன் இருந்துள்ளனர். சில குழந்தைகளுக்குத் தாய் மட்டும், சிலருக்கு பெற்றோர் இருவரும் இருந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இங்கு அடைக்கலமாக வந்து பின் குணமாகி இங்கேயே தொடர்ந்து பணியாளர்களாக இருப்போரின் குழந்தைகள். சித்த சுவாதீனமற்று வீட்டை விட்டு வந்து, அல்லது எல்லோராலும் கைவிடப்பட்டு தெருவில் அலைந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள் கருத்தரித்து இங்கு காவல்துறை மூலமாகவோ வேறு எப்படியோ அடைக்கலமாக வரும்போது அவர்கள் இங்கே தங்க வைக்கப்பட்டுக் குழந்தைகளைப் பெறுகின்றனர். அவர்களில் பலர் வேறு எங்கும் செல்ல வழியற்று இங்கேயே தங்கி விடுகின்றனர். இந்நிறுவனம் அவர்களை ஊழியர்களாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஒன்பது குழந்தைகளில் நால்வர் பாலேஸ்வரம் மான்ட்ஃபோர்ட் சென்டினரி ஹையர் செகன்டரி பள்ளியிலும் மற்ற நால்வர் பாலேஸ்வரம் அங்கன்வாடியிலும் படித்து வருகின்றனர். ஒரு குழந்தை தாயுடன் உள்ளது.

பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்த அனைவரையும் அரசு வெளியேற்றியபின் இங்கு ஊழியம் செய்த இவர்களும், இந்தக் குழந்தைகளும் அங்கேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்ற பிப் 27 அன்று செங்கல்பட்டு Child Welfare Committee (CWC) அமைப்பினர் அங்கு வந்து அங்குள்ள குழந்தைகளை உரிய அனுமதி இன்றியும், மேற்படி குழந்தை நலக் குழுவிற்கு (CWC) தெரிவிக்காமலும் ‘சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக’ குற்றம் சாட்டி எல்லாக் குழந்தைகளையும், அவர்கள் அழ அழ முரட்டுத்தனமாக வேன்களில் ஏற்றி வேறு இரண்டு அனாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கென டாக்டர் மணிகண்டன் தலைமையில் உள்ள அந்த அமைப்பின் ‘லெட்டர் பேடில்’ அவசர அவசரமாக அடித்தல் திருத்தல்களுடன் கூடிய, தெளிவற்ற கையொப்பத்துடன் கூடிய ‘ஆணை’ ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்தகவல் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட, அவர் தலையிட்டு குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

எனினும் தற்போது பாலேஸ்வர காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் மீது இது தொடர்பாக Juvenile Justice (Care and Protection of Children Act) சட்டம் 34 மற்றும் 42 பிரிவுகளின் கீழ் வழக்கொன்று தொடரப்பட்டு உத்திரமேரூர் நடுவர் நீதிமன்றத்தில் (Dt Munsif cum Judicial Magistrate Court) விசாரணையில் உள்ளது. பாதிரியார் தாமஸ் மீது அனுமதி இல்லாமல் குழந்தைகளை வைத்திருந்தது, அரசுக்குத் தெரிவிக்காமல் குழந்தைகள் காப்பகம் நடத்தியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடக்கிறது. குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளனர். இது குழந்தைகள் காப்பகம் அல்ல என்கிற அடிப்படையில் பாதிரியார் தரப்பில் வழக்காடப்படுகிறது.

I.6. நாங்கள் சந்தித்தவர்கள் அளித்த வாக்குமூலங்கள்

I.6.1. பாதிரியார் தாமஸ், நிர்வாகி பாலேஸ்வரம் கருணை இல்லம்

“நான் இங்கிலாந்தில் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்துவிட்டு இந்தியா திரும்பியபின் முதுமையில் கைவிடப்பட்டு மரணத் தறுவாயில் உள்ளவர்களைப் பராமரித்து அவர்கள் ஒரு கண்ணியமான மரணத்தை அடைய உதவுவது என்கிற முடிவை எடுத்து இந்தப் பணியைத் தொடங்கினேன். முதலில் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு, பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் ஆகியவற்றில் இத்தகைய Hospices தொடங்கினேன். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும் வேலூரிலும் தொடங்கியுள்ளோம். இனிமேல் மருத்துவம் பயனளிக்காது என டாக்டர்கள் முடிவெடுக்கும் நோயாளிகள் குறித்த தகவல்களை மருத்துவமனைகளில் இருந்து எங்களுக்கு அனுப்புகிறார்கள். உரிய மருத்துவச் சான்றுகளைப் பெற்று அவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். தெருவோரங்களில் இப்படிச் செத்துக் கொண்டிருப்பவர்கள், அனாதைகளாகக் கிடப்போர் குறித்த தகவலை காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் ‘மெமோ’ எழுதி வாங்கிக் கொண்டு இங்கே அழைத்து வருகிறோம்.

நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வெண்டும். குணமாக்க முடியாத நோய், சீழ் வடியும் உடல், கழுவப் படாத நரகல்கள் ஆகியவற்றுடன் வரும் நோயாளிகளைப் பராமரிப்பது ரொம்பவும் கடினமான, கடும் சகிப்புத்தன்மை வேண்டும் ஒரு பணி.

உரிய போலிஸ் மெமோ அல்லது மருத்துவச் சான்றிதழில்லாமல் யாரையும் நேரடியாக இங்கே அனுமதிப்பதில்லை. இயற்கைச்சூழலும் காற்றோட்டமும் உள்ள எங்கள் இல்லத்தில் பணியாற்றுபவர்கள் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். இங்கு ஆண்கள், பெண்கள், செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தனித்தனியாக போதிய கழிப்பறைகளுடன் கூடிய வார்டுகள் உண்டு.  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியான பெண்கள் ஆகியோரும் இங்கே அனுப்பப் படுகிறார்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம், இட நெருக்கடி ஆகியவற்றின் விளைவாக இன்று ஒருவரைப் புதைத்த இடத்திலேயே இன்னொருவரைப் புதைக்கும் முறை உலகில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கேரளத்தில் இப்படியான முறை அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டிலும் கீழ்ப்பாக்கத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது. அப்படியான ஒரு முறையைத்தான் இங்கு பின்பற்றுகிறோம்.  30X20 அடி பள்ளம் ஒன்று தோண்டி, கீழ்ப் பகுதியில் நிலத்தடி நீர் வராத அளவு கான்க்ரீட் தளம் அமைக்கப்படுகிறது. அதன்மீது கான்க்ரீட் தூண்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கிடையே கம்பிப் படுக்கை உருவாக்கப் படுகிறது. ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே காற்றுப் புகாத வண்ணம் தனித்தனி அறைகள் உருவாக்கப் படுகின்றன. இறந்த உடல் கான்க்ரீட் படுக்கையில் வைக்கப்பட்டு காற்றுப் புகாத வண்ணம் அடைக்கப்படுகிறது. 70% தண்ணீரும் 30% எலும்பும் உள்ள மனித உடல் இறந்தபின் தானே மக்கி அழிந்து போகும். இதுவரை இந்த ஏழு அண்டுகளில் 1663 பேர் இப்படிப் புதைக்கப்பட்டுள்ளனர்.

இங்கே நிரந்தர மருத்துவர்கள் யாரும் இல்லை ‘அவுட் ரீச்’ புரோக்ராமில் ‘கற்பக விநாயகர் மருத்துவ மனையிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு டாக்டர்கள் வந்து முதியவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ உதவி அளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற நர்சுகள் இருவார் உள்ளனர்.

யாரேனும் வெளியில் உள்ளவர்கள் வந்து இங்கிருப்பவர்கள் தம் உறவினர்கள் எனச் சொல்லி அழைத்துப் போக வேண்டும் என்றால் அவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை முதலான அடையாளங்களுடன் வர வேண்டும். அப்படி வந்தால் அவர்களோடு அவர்கள் தேடி வரும் நபரை அனுப்பி விடுவோம்.” – இவை பாதிரியார் தாமஸ் கூறியவை

வேலை செய்பவர்கள் பற்றி அவரிடம் கேட்டபோது மொத்தமாக இங்கு 24 பேர் வேலை செய்வதாகவும். தோட்ட வேலைக்கு 6 நபர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மனநோயாளிகளுக்கான வார்டு, இறக்கும் தறுவாயில் உள்ளோருக்கான வார்டுகள் தனியாக உள்ளன எனவும், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான வார்டுகள் உள்ளன எனவும் காட்டினார்கள்.

இறப்புச்சான்றிதழ் பற்றிக் கேட்டபோது பாதிரியார் சொன்னது:

“இறந்து போகிறவர்கள் குறித்த தகவலை படிவம் 2A ல் கிராம அலுவலரிடம் அளிக்கிறோம். காவல் நிலையத்திற்கும் தகவல் அளிப்போம். மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு பதிவுத் தபாலில் தகவல் அனுப்புவோம். 09.01.2018 வரை இவ்வாறு பதிவுத் தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2017 அக்டோபர் 31வரை கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்துள்ளோம். ஆனால் 2018ல் இருந்து படிவம் 4A வில் மருத்துவரின் சான்றுடன் விண்ணப்பத்தை அளிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் கேட்டார். ஆனால் நாங்கள் மருத்துவமனை நடத்தவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தோம். அவர் ஏற்கவில்லை. நாங்கள் அனுப்பிய பதிவுத் தபாலை அவர் வாங்காமலேயே திருப்பி அனுப்பிக் கொண்டுள்ளார்.”

மேலும் பாதிரியார் தாமஸ் கூறியவை:

“இந்தக் கட்டிடத்தைக் கட்டிய வெள்ளை மேஸ்த்திரி என்பவர் பாதிக் கட்டிடம் முடியும்போது மணல் விலை ஏற்றம் முதலியவற்றைச் சொல்லிப் பேசிய தொகையைக் காட்டிலும் கூடுதலாகக் கேட்டார். நான் அந்தத் தேதி முதல் கூடுதலாகத் தருகிறேன் என்றேன். அவர் தொடக்கம் முதல் கூடுதல் தொகை கணக்கிடப்பட வேண்டும் என்றார். சுமார் 30 இலட்ச ரூ கூடுதலாக அவர் கேட்டபோது நான் மறுத்து விட்டேன். அவருக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் பிரமுகர் கருணாகரன் என்பவர் வந்து பேசினார். காஞ்சிபுரம் எஸ்.பி மனோகரன் அவர்களிடமும் புகார் செய்தார்கள். அவர் கூப்பிட்டு விசாரித்தபோது எல்லா ஆவணங்களையும் காட்டினேன். அவர் என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவரது அப்பா தாமோதரன் ஆகிய இருவரும் 2012ல் என்னோடு நில எல்லை தொடர்பான பிரச்சினைக்கு வந்தார்கள். ஒரு நாள் நான் வந்து கொண்டிருந்தபோது ஆலஞ்சேரியைச் சேர்ந்த இரண்டு பேர்கள் என்னை அருகில் இருந்த மலைக்குக் கடத்திச் சென்று பணம் கேட்டு அடித்து மிரட்டினார்கள். அவர்களில் ஒருவர் காலில் முள் குத்தி விழுந்தபோது நான் தப்பித்து ஓடி வந்தேன்.

என்மீது பல குற்றச்சாட்டுகளையும் வதந்திகளையும் பரப்பினார்கள். ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து இல்லத்தில் உள்ளவர்களைக் கொன்று எலும்புகளையும், உடல் உறுப்புகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன் என்று வதந்தி பரப்பினார்கள். புகார்களும் எழுதினார்கள். விசாரணைக்கு வந்த அதிகாரிகள் கல்லறையை உடைத்துப் பார்த்தனர். உத்தரமேரூரிலிருந்து வந்து விசாரணை செய்த உளவுத்துறை போலீஸ் சிவராமன் சடசடவென எலும்புகள் கடும் நாற்றத்துடன் விழுவதைப் பார்த்து ஓடினார். 2012ம் ஆண்டில் இது தொடர்பாக விசாரணைகள் செய்து பரிசோதித்தும் பார்த்தார்கள். நான் விளக்கங்கள அளித்தேன். மேல் நடவடிக்கை இல்லை.

இது தவிர ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர், மற்றும் காவல்துறையினர் வந்து ஆய்வு செய்து குறிப்பேட்டில் பதிவும் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஏழாண்டுகளில் எந்தக் குற்றச்சாட்டையும் அதிகாரிகள் வைத்ததில்லை.

இப்போது நடந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியும். உரிய மெமோ முதலான ஆவணங்களுடன் வந்த எங்கள் வண்டியைத் தடுத்து நிறுத்தி அதன் கண்ணாடியையும் உடைத்தார்கள். மையத்தில் இருந்த அனைவரையும் இரண்டு நாட்களில் RDO தலைமையில் வந்த குழுவினர் எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டார்கள். எங்கே கொண்டுபோனார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் நலக் குழுவினர் (CWC) வந்து எங்கள் பணியாளர்களின் குழந்தைகளையும் பெற்றோர்களிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்ல முயன்றார்கள். மீடியாக்கள் அவதூறுகளைப் பரப்பின. சிரமப்பட்டு உருவாக்கிய நிறுவனம் மூன்றே நாட்களில் இப்போது மூடப்பட்டு விட்டது.”

I.6.2 .இராஜேஷ் (26) த.பெ ராம் பண்டு, ஓட்டுநர், செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ்

“நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். நல்லா தமிழ் பேசுவேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் மனைவி தம்பரம் இரும்புலியூர்ல இருக்கிற எங்க ‘கலெக்‌ஷன் சென்டரை’ பாத்துக்கிறாங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு (பிப் 20) காலையில் நான் இரும்புலியூரிலேருந்து மூணு பேரை ஏத்திக் கொண்டு போய் பாலேஸ்வரத்துல விடணும். அந்த மூணு பேருல ஒருத்தர் அன்னம்மாள் என்கிற பாட்டி. 16ந் தேதி அன்னிக்கு கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசன்ல மெமோ போட்டு வச்சிட்டு சொன்னாங்க. 17ந் தேதி அவங்களை இரும்புலியூர்ல கொண்டு வந்து தங்க வச்சோம். இன்னொருத்தர் விஜயகுமார். இவரை ஒரு வாரத்துக்கு முன்னாடியே ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்தோம். அவருக்கு அங்கே உள்ள போலீஸ் ஸ்டேசன்ல மெமோ குடுத்தாங்க. இன்னொருத்தரையும் அதே நாள்ல குரோம்பேட்டையிலேருந்து கொண்டு வந்தோம். அந்த போலீஸ் ஸ்டேசன்ல மெமோ குடுத்து அனுப்புனாங்க.

19ந் தேதி இரவு இந்த விஜயகுமார் செத்துப் போனார். செத்துப் போறவங்கள ஏத்திட்டுப் போற வேன் அன்னைக்கு ரிப்பேர். புளிச்சபள்ளம் போற வழியில மோதி ரிப்பேர். ஆனால் இறந்தவரை பாலேஸ்வரம் கொண்டுபோய்தான் அடக்கம் பண்ணனும். என்ன செய்றதுன்னு தெரியல. இன்னொரு வேன்ல எப்போதும் இந்த கலெக்சன் சென்டர்ல இருக்குறவங்களயும் காய்கறிகளையும் ஏத்திட்டுப் போவோம். அன்னிக்கு வேற வழி இல்லாம நான் அந்தக் காய்கறி வண்டியிலேயே அந்த டெட் பாடி’யையும் ஏத்திட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினேன். வேன்ல முன்னாடி காய்கறிகளை வச்சிட்டு, டெட் பாடியை ஒரு ஒரமா போட்டுட்டு அந்தப் பாட்டியையும், பெயர் தெரியாதவரையும் சீட்ல உக்கார வச்சு கதவை மூடிட்டு காலையில் (பிப் 20) வண்டியை ஓட்டிட்டுப் போனேன். புறப்படும் போதெல்லாம் அந்த ரெண்டு பெரும் ஒண்னும் சொல்லல. ஆனா கொஞ்ச நேரத்துல திருமுக்கூடல் கிட்ட போகும்போது இரண்டு பேரு வண்டியை நிப்பாட்டச் சொன்னாங்க. வேன்ல உட்கார்ந்திருந்த பாட்டி, ஒரு ஓட்டை வழியா கையை நீட்டி அவங்களை நிப்பாட்டச் சொன்னாங்களாம்.

அது ரொம்ப மோசமான ரோடு. தூக்கிப் போட்டபோது அந்தப் பிணம் ஆடுறதப் பார்த்து அந்தப் பாட்டி பயந்துட்டு. எல்லாரையும் இறக்கிவிடச் சொன்னாங்க. மெமோ கொடுத்து போலீஸ் அனுப்பி வச்சிருக்காங்க, அப்படி விட்ற முடியாதுன்னு சொன்னேன். அவங்க பிடிவாதமா இருந்ததால வாங்க சாலவாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்குப் போகலாம்னு கூப்பிட்டேன். அவங்கள்ல ஒருத்தர் ஏறி என் பக்கத்துல உட்கார்ந்துட்டார். இன்னும் மூணு நாலு பேர் பைக்ல பின்னாடி வந்தாங்க.

போலிஸ் ஸ்டேஷன்ல அந்த பாட்டி வச்சிருந்த பேப்பர்ல இருந்த நம்பர் ஒண்ணுக்குப் போன் பண்னினாங்க. அவங்க சொந்தக்காரங்க வந்தா எழுதி வாங்கிட்டு அந்த பாட்டியை ஒப்படைச்சிடலாம்ன்னு ஃபாதர் சொன்னார். அதுக்குள்ள அங்கே கருணாகரன் வந்து யாரையும் பாலேஸ்வரம் அனுப்பக் கூடாதுன்னு தராறு பண்ணினார். முறைப்படி மெமோ வச்சிறுக்காங்க. அதனால அவங்களத் தடுத்து நிறுத்த முடியாதுன்னு போலீஸ் சொன்னாங்க. கருணாகரன் ஒத்துக்கல. அதுக்குள்ள அந்தப் பாட்டியோட சொந்தக்காரங்களுக்குத் தகவல் போய் அவங்களும் வந்தாச்சு. வேன் கண்ணாடியையும் யாரோ உடைச்சிட்டாங்க. கருணாகரனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்தப் பாட்டியை அவங்க சொந்தக் காரங்களோட அனுப்பிச்சுட்டாங்க. டெட் பாடியை தாம்பரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி போஸ்ட்மார்டம் பண்ணிட்டு எங்க கிட்ட ஒப்படைச்சாங்க. பாலேஸ்வரம் கொண்டு வந்து அங்கேயே எல்லோரையும் புதைக்கிற இடத்துல புதைச்சிட்டோம்.

I.6.3.அருட் பணியாளர் ஏசுமரியான், வழக்குரைஞர்

2011 டிசம்பர் 28 அன்று காஞ்சி மாவட்ட சமூகநலத் துறை இந்தக் கருணை இல்லத்திற்கு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக 2011 ஆகஸ்டில் கல்லறைக்கு ஒப்புதல் (No Objection) வழங்கப்பட்டுள்ளது. 2014 செப் 19 அன்று மாவட்ட சமூக நலத்துறை ஒப்புதல் நீடிப்பு செய்துள்ளது. 2017 செப் 15 அன்று ஒப்புதல் நீடிப்புக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 2017 செப் 16 அன்று மாவட்ட அளவிலுள்ள துணை சுகாதார இயக்குனரே சுகதாரச் சான்றை அளிக்கலாம் எனப் பொது சுகாதார இயக்குநர் அறிவுறுத்தி இருந்தும் மாவட்டத்தில் உள்ள துணைச் சுகாதார அதிகாரி அந்தச் சான்றிதழை வழங்கவில்லை. பார்வையாளர்கள் குறிப்பேட்டில் (Visitor’s Report) 2017 செப் 21 அன்று தனிவருவாய் அதிகாரி, வட்ட வழங்கு அலுவலகம் மேற்கொண்ட கள ஆய்வில் நல்ல உணவு, நல்ல முறையில் maintenance மேற்கொள்ளப் படுவதாகப் பாராட்டுக் குறிப்பு உள்ளது; 2017 டிச 08 அன்று சென்னை மருத்துவக் கல்விக்கான துணை இயக்குநர் டாக்டர் சுவர்ணலதா எம்.டி. இந்த இல்லம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதாகவும் இங்கு அப்போது இருந்த 407 பேர்களும் (ஆண்கள் 235, பெண்கள் 172) சிறந்த மருத்துவக் கவனிப்புகள் அளிக்கப்பட்டு அன்புடனும், நல்ல உணவளித்தும், அமைதியாக உறங்க வகை செய்தும் பேணப்படுகின்றனர் எனவும் பார்வையாளர் குறிப்பு நோட்டில் பதிந்துள்ளார்.

அனுமதி நீடிப்பு காலாவதி ஆகியும் அடுத்த மூன்று மாதம் வரை அனுமதி நீடிப்பும் அளிக்கப்படவில்லை. மாறாக 2018 பிப் 22 அன்று ஒரு வாரத்துக்குள் விளக்கம் கோரிக் கடிதம் ஒன்று (show cause notice) உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய்க் கோட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப் படுகிறது. கொடுக்கப்பட்ட கெடுவிற்குள் 2018 மார்ச் 1 அன்று உரிய விளக்கத்தை பாதிரியார் அனுப்புகிறார். ஆனால் கெடு முடியும் முன்பே விளக்கமளித்தும் அந்த விளக்கம் வரும்வரை கூடப் பொறுக்காமல் ஏன் அந்த இல்லத்தில் இருந்த 323 பேரையும் வெளியேற்றினார்கள்? நடவடிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட தவறுகள் திடீரென மேற்கொள்ளப்பட்டதல்ல. மாறாகத் தொடக்கத்திலிருந்து இருந்து வந்தவைதான். திருத்தப்பட முடியாத ஒன்றும் அல்ல. திருத்தப்படக் கூடியவைதான். பின் ஏன் அத்தனை அவசரமாக அங்கிருந்த சாகும் தருவாயில் இருந்தவர்களையும், மன நோயாளிகளையும் வெளியேற்றினீர்கள். வெளியேற்றிய சிலரை செங்கல்பட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து வைத்தீர்கள். அவர்கள் இப்போது பிச்சை எடுத்துக் கொண்டு வீதிகளில் அலைகிறார்களே? ஏதோ அந்தப் பாதிரியாரும் அந்த நிறுவனமும் கிரிமினல் குற்றம் ஒன்றைச் செய்துள்ளதைப் போல ஒரு கருத்தை ஏற்படுத்துகிறீர்கள். criminal negligence எல்லாம் criminal குற்றங்கள் ஆகிவிடுமா?

I.6.4 பாலேஸ்வரம் கிராம மக்கள் சொன்னவை:

“இங்கே 12 வருசமா இந்தக் காப்பகம் செயல்பட்டு வருது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவங்க யாரையும் அவங்க வேலைக்கு எடுக்குறது இல்ல. இங்கே இருக்கிறவங்க யாரும் உள்ளே போய் பார்க்கிறதுக்கு அனுமதியும் இல்லை. எல்லாம் மர்மமாத்தான் நடக்குது. சாகுறவங்களைக் கண்ணியமா சாக அனுமதிச்சுப் புதைக்கிறதுதான் அவங்க நோக்கமுன்னா ஏன் வெளியிலேருந்து பிணத்தை இங்கே கொண்டு வர்றாங்க? எங்கேயாவது செத்த உடல் கிடைச்சா உடனே ஓடிப்போய் தூக்கிட்டு வந்துடுறாங்க. இங்கே யாரோ ஒருத்தர் அநாதையா வந்தார். அவரை நாங்க சோறு போட்டுக் காப்பாற்றி வந்தோம். அவரையும் ஒரு நாள் இங்கே இருந்து தூக்கிட்டுப் போயிட்ட்டாங்க. நாங்க போய் அவர் இருக்காரான்னு பாக்கணும்னு கேட்டதுக்கு உள்ளே அனுமதிக்க மாட்டேன்னுட்டாங்க.”

அப்படி அவர்களால் காப்பாற்றப்பட்டவரின் பெயர் என்ன, எந்த ஊர்க்காரர் எனக் கேட்டதற்கு “தெரியாது” என அவர்கள் பதில் கூறினர்.

I.5.5. கருணாகரன், மாவட்ட ம.தி.மு.க அவைத் தலைவர்

எங்க தலைவர் (வை.கோ) அறிக்கையில் சொல்லியுள்ளதை நீங்க அப்படியே எடுத்துக்கலாம். இந்த இல்லத்தை தொடங்குறதுக்காக ஃபாதர் தாமஸ் இங்கே வந்தபோது ஒரு நல்ல காரியம் என்கிற அடிப்படையில் அவர்கள் மின்சார இணைப்பு பெறுவதற்கெல்லாம் நான்தான் உதவினேன். கொஞ்ச நாளில் அவருக்கும் அந்த இல்லக் கட்டிடத்தைக் கட்டித் தந்த வெள்ளை மேஸ்திரி என்கிற கான்ட்ராக்டருக்கும் பிரச்சினை வந்தது. அதிகாரிகள் அல்லது விசாரணக்கு யார் போனாலும் பணத்தைக் கொடுத்து அந்த ஃபாதர் சரி செய்து விடுவார். அந்த விடுதியில் அடைத்து வைத்திருப்பவர்களில் எண்பது சதம் பேர் விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டவர்கள்தான். மற்ற இருபது சதமும் மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விடுவிப்பதுதான் இனி என் கடமை என முடிவெடுத்தேன். பொன்னையா கலெக்டரைச் சந்தித்து அந்த விடுதிக்குச் சென்று ஆய்வு செய்யுங்கள் எனக் கேட்டேன். எஸ்.பி யைப் பார்த்து, unknown body ஐ dispose செய்ய முறையான procedure, எதையும் கடைபிடிக்காமல் dispose பண்ணுகிறார்களே எனக் கேட்டேன். “ஆமாம், ஆனால் நான் மட்டும் என்ன செய்றது. கலெக்டரும் சேர்ந்துதானே செய்யணும்” என்று அவர் சொன்னார். RDO பன்னீர்செல்வம் ஐந்து உடல்களை வெளியே எடுக்கச்சொல்லிப் பார்த்தார். ஒரு உடலில் நெற்றியில் காயம். இன்னொன்றில் உடல் பூராவும் காயம். கேட்டதுக்கு, ‘விழுந்துட்டாங்கன்னு’ பதில் வந்தது. 45 உடல்கள் முறையான விதிகள் கடைபிடிக்கப்படாமல் வச்சிருக்காங்க, நிறைய தவறுகள் நடந்துள்ளது என அவர் (RDO) அறிக்கை கொடுத்தார்.

சம்பவம் நடந்த அன்னிக்கு கவிஞர் கிருஷ்ணன் எனக்கு போன் பண்ணி, “எங்க அக்காவை சாலவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல புடிச்சு வச்சிருக்காங்க. போய் என்னன்னு பாருங்கன்னு” சொன்னார். நடந்தது இதுதான். அந்த அம்மா வீட்ல கோவிச்சுட்டு வந்துட்டாங்க. சென்னை சின்னமலையில் வந்து உட்கார்ந்திருக்கும்போது அங்க வந்த ஃபாதர் கிட்ட, ஏதாவது ஒரு ஆஸ்ரமத்தில சேர்த்து விடுங்கன்னு கேட்டுருக்காங்க. அவர் இவங்களை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள விடுதிக்கு (புனித ஜோசஃப் இல்லக் கிளை) அனுப்பி வச்சிருக்காங்க. அந்த அம்மாவுக்கு அங்கே இருக்கப் பிடிக்கல. இரண்டு நாள் கழிச்சு அவங்களை பாலேஸ்வரம் கொண்டு செல்ல வேன்ல ஏத்தி இருக்காங்க. அதுல ஒரு பிணம், காய்கறி எல்லாம் ஏத்தி இருந்துருக்கு. இவங்க கத்தி அழ ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா வேன் டிரைவர் அவங்களை உள்ளே வச்சு வேன் கதவைப் பூட்டிட்டு ஓட்டி வந்துட்டு இருக்கும்போதுதான் திருமுக்கூடல் அருங்குன்றம் வரும்போது மக்கள் பிடிச்சு சாலவாக்கம் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தது, நான் போய் வேன்ல இருந்தவங்கள விடுவிச்சு நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். வண்டிய விட முடியாதுன்னு சொன்னேன். எஸ்.பி, ஆர்.டி.ஓ எல்லாருக்கும் போன் பண்ணினேன். ஆனால் அங்கே இருந்த எஸ்.ஐ யும், டி.எஸ்.பியும், “எல்லா டாகுமென்ட்சும் வச்சிருக்காங்க, அதனால வண்டிய விடுங்கன்னு” சொல்லி வற்புறுத்துனாங்க. பாலேஸ்வரத்துலருந்து வந்து கருணை நிலையம் சார்புலயும் புகார் கொடுத்தாங்க. என் மேல கேஸ் பதிவு பண்ணி ரிமான்ட் பண்ணினாங்க.

இந்த பாதிரியார் பெரிய நெட் ஒர்க் வச்சிருக்கார். எல்லாரையும் பணம் கொடுத்து சரி பண்ணி வச்சிருக்கார். அந்த ஆள் ஒரு மரண வியாபாரி. அந்த இல்லத்துல வச்சிருக்கிற குழந்தைங்க எல்லாம் அங்கே வேலை செய்றவுங்க குழந்தைகள்னு சொல்றதும் பொய். Birth certificate பதிவு வச்சிருக்காங்களா? பேருதான் கருணை இல்லம். உண்மையில் அது மரண இல்லம்.

I.6.6. ஆ.சண்முகம், ஓய்வுபெற்ற ஆசிரியர்

(சம்பவம் நடந்த அன்று விருப்பத்திற்கு மாறாக பாலேஸ்வரம் இல்லத்திற்கு பிணம் ஏற்றிச் சென்ற வேனில் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படும் அன்னம்மாளின் ஒன்று விட்ட சகோதரர்): அவங்க என் பெரியம்மா மகள். பிள்ளைங்ககிட்ட கோவிச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க. சென்னையில் சின்னமலைப் பக்கம் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவங்களை அங்கு வந்த ஒரு பாதிரியார் விசாரித்து இருக்கிறார். வீட்டை விட்டு வந்து இருக்காங்கன்னு தெரிஞ்ச உடனே அவங்களை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள விடுதிக்கு அனுப்பி வச்சிறுக்கார். அங்கே இருக்க அக்காவுக்குப் பிடிக்கல. அவங்க வெளியே போக அனுமதிக்கல. இரண்டு நாள் கழிச்சு அங்கே உள்ளவங்களைப் பரிசோதிக்க இரண்டு டாக்டர் வந்திருக்காங்க. அவங்ககிட்ட எங்க அக்கா புகார் பண்ணி இருக்காங்க. அந்த டாக்டர்கள், “விருப்பம் இல்லாத இவங்களை இங்கே ஏன் கட்டாயமா வச்சிருக்கீங்க. வெளியே அனுப்புங்க” ன்னு சொல்லி இருக்காங்க. அதனால அவங்களை பாலேஸ்வரத்துக்குப் போன அந்த வேனில் ஏத்தி அனுப்பிச்சிருக்காங்க. அந்த வேன்ல ஒரு பிணம், இன்னொரு மனநோயாளி, காய்கறி எல்லாம் இருந்திருக்கு. உள்ளே வச்சு வேன் கதவ பூட்டி அவங்களைக் கொண்டு போய் இருக்காங்க. அக்கா வேனுக்குள்ளேயே என்ன சத்தம் போட்டும் கேக்கல. ரொம்பதூரம் போன பிறகுதான் வேன் கதவில் ஒரு ஓட்டை இருக்குறத பார்த்துட்டு அதன் வழியே கையை நீட்டி சத்தம் போட்டிருக்காங்க. அதைப் பார்த்த இரண்டு பேர் வேன மறிச்சு நிறுத்தி இருக்காங்க. அப்புறம் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

I.7 பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அரசால் இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளவர்களின் கருத்துக்கள்

I.7.1.திண்டிவனம் அன்னை கருணாலயா இல்லத்தில் உள்ளோர்

பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டவர்களில் 21 பேர்கள் சென்ற ஏப்[ரல் 3, 2018 அன்று இரவு 9.30 மணியளவில் திண்டிவனத்திலுள்ள அன்னை கருணாலயா – விருட்சம் முதியோர் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். அடுத்த சில நாட்களில் இவர்களில் 13 பேர் சென்னை முகப்பேரில் உள்ள அன்னை கலைச்செல்வி கருணாலயா இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது திண்டிவனம் அன்னை கருணாலயா இல்லத்தில் ஆறு ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 8 பேர் உள்ளனர். மேலும் 6 மாதத்திற்கு முன்பு இதே நிறுவனத்தால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள புளிச்சப்பள்ளம் என்னும் கிராமத்தில் தொடங்கப்பட்ட இல்லத்திற்கு பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அனுப்பட்டிருந்த கலா என்கிற பெண்மணியும் தற்போது இங்கு கொண்டுவரப்பட்டுள்ளார். ஆக மொத்தம் 9 பேர் (ஆண்கள் 6, பெண்கள் 3) இங்கு உள்ளனர். எல்லோரும் சுமார் 45 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த 9 பேரிலும் கூட ஒரு ஆண், ஒரு நடுத்தர வயது பெண், மூதாட்டி ஒருவர் என மூன்று பேர் பேசும் நிலையில் உள்ளனர். மூன்று ஆண்கள் என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத மனப்பிறழ்ச்சிக்கு ஆளானவர்கள்.  தனக்குத்தானே பேசிக்கொள்வது, சிரிப்பது எனும் நிலையில் உள்ளவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காரு (எ) ராமசாமி, சென்னையைச் சேர்ந்த மூதாட்டி கமலா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி கலா ஆகிய மூவரும்தான் பேசக்கூடிய நிலையில் உள்ளனர். கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜூலு, சென்னையில் எந்தப் பகுதி எனத் சொல்லத்தெரியாத ராஜா, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ், பல்லாவரம் அருகிலுள்ள பாக்கியம், எந்த ஊர் எனத்தெரியாத கமலா (வாய் பேசமுடியாதவர், காதும் கேட்காது), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலா ஆகியோர் உள்ளனர்.

பங்காரு (எ) ராமசாமி, கமால், கலா ஆகிய மூன்று பேருமே பாலேஸ்வரம் இல்லத்தைவிட இங்கு (திண்டிவனம் இல்லம்) உணவு பரவாயில்லை எனவும், வசதிகளும் நன்றாக உள்ளதாகவும், சுகாதாரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மூன்று பேருக்குமே உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் முதலானோர் உள்ளது தெரிகிறது. அவர்கள் வீட்டிற்கு அழைத்தால் சென்றுவிட விருப்பம் உள்ளதாகவும், அதுவரை இங்கேயே இருக்க விரும்பதாகவும், பாலேஸ்வரம் இல்லம் தேவையில்லை என்றும் சொல்கின்றனர்.

ஆனால் பாலேஸ்வரம் இல்லத்தைப் குறித்து பெரிதான குறைகளாக எதுவும் இவர்கள் கூறவில்லை. சாப்பாடு நன்றாகத்தான் இருக்கும் என்றும், ஃபாதர் நன்றாக கவனித்துக்கொண்டதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் அங்கிருந்த பணியாளர்கள் அலட்சியமாக இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அந்தப் பணியாளர்கள் மீது ஒரு அதிருப்தி  அவர்களுக்கு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த பங்காரு (எ) ராமசாமி, , என்பவர் நம்மிடம் கூறியது: ‘’எனக்கு காலில் அடிபட்டது. நிறைய செலவானது. வீட்டில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. முதியோர் இல்லம் சென்றால் பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னார்கள். அதனால் திண்டுக்கல்லில் உள்ள முதியோர் இல்லம் மூலமாக பாலேஸ்வரம் இல்லத்திற்கு போனேன். மூனு வருசமா அங்கே இருந்தேன். இப்ப அங்க என்ன பிரச்சனைன்னு எனக்கு ஒண்ணும் தெரியல. சாப்பாடு எல்லாம் அங்க நல்லாதான் இருக்கும். எப்போவாது ஒருமுறை குழம்புதான் கொஞ்சம் சரியில்லாம இருக்கும். மத்தபடி எல்லாம் நல்லாதான் இருக்கும். ஹோம்ல உள்ள எல்லாருக்கும் ஒரே சாப்பாடுதான். மூனு வேளையும் வேற வேற செஞ்சுதான் கொடுப்பாங்க.

பிரச்சனைகள் எதாவது உண்டுன்னு சொன்னா ‘சிக்’ வார்டுல இருக்கிற சில பேர் நம்ம மாதிரி நல்ல மனநிலையில இருக்கமாட்டாங்க. சில நேரத்துல அவங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. இது ஒன்னுதான் பிரச்சனை. நர்ஸ். மூணு பேர் இருக்காங்க. மாத்திரை மட்டும் கொடுப்பாங்க. ஊசி போட வேற டாக்டர் வருவாரு. பெருக்க சுத்தம் செய்ய மூணு பேரு வேலைக்கு இருக்காங்க. இவங்க எல்லாம் சில நேரத்துல எங்கள மாதிரி தங்கியிருக்கிறவங்கள்ல யாரு நல்லா இருக்காங்களோ அவங்கள சின்ன சின்ன வேலை வாங்குவாங்க. அதுக்கு ஓன்னு ரெண்டு பிஸ்கட் கொடுப்பாங்க. அதுக்காக இவங்களும் வேலை செய்வாங்க. அப்ப சொல் பேச்சு கேக்காதவங்கள் இவங்க லேசா மிரட்டுறது தட்டுறது உண்டு.

பாலேஸ்வரத்துல ரெண்டு வார்டு உண்டு. சாதாரண வார்டு எங்கள மாதிரி நல்லா இருக்கிறவங்க, நடமாட முடியறவங்க இருக்குறது. இன்னொன்னு ‘சிக்’ வார்டு. இதுல முடியாதவங்கதான் இருப்பாங்க. எழுந்திருச்சி நடக்கமுடியாதவங்க பெட்லேயே ஒன்னுக்கு, வெளிக்கு எல்லாம் போயிடுவாங்க. அதையெல்லாம் சுத்தப்படுத்த மூணு ஆளு வச்சிருக்காங்க. செய்வாங்க. ஆனாலும் அந்த வார்டு சுத்தமில்லாத மாதிரியே இருக்கும். நார்மல் வார்டு நல்லாதான் இருக்கும்.

நல்ல நிலைமயில இருக்கிறவங்க அவங்களால முடிஞ்ச வேலைகளைச் செய்வாங்க. நான் கூட கால் சரியாகி நடக்கிற நிலைமைக்கு வந்ததும் என்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சேன். கேட் திறந்துவிடுற வேலையைதான் நான் செஞ்சேன். அப்படி நான் வேலை செஞ்சதுக்கு சம்பளம் உண்டுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத் சம்பளமா தரல. கணக்கு வச்சுருப்பாங்க. ஃபாதர் நல்லவரு. தருவாரு.”

I.7.2 பனையூர் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ காப்பகத்தில் உள்ளோர்

பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்த சிலர் சென்னை- புதுச்சேரி சாலையில் உள்ள பனையூரில் உள்ள ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ எனும் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதை அறிந்து மார்ச் 11 அன்று எம் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் அங்கு சென்று அதன் இயக்குநர் அய்யப்பனைச் சந்தித்தார். பாலேஸ்வரத்திலிருந்து 19 பெண்களும் 11 ஆண்களும் ஆக மொத்தம் 30 பேர் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். எல்லோருமே மன நோயாளிகள். அதில் சிலர் தமிழ் பேசத் தெரியாத பிற மாநிலத்தவர். அதில் 5 பேர் கடப்பாக்கத்திலுள்ள ஒரு காப்பகத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.

மீதியுள்ள 25 பேரில் டி.ஆர். லலிதா (50) என்கிறை லேசான மனநோய் உள்ள பெண்மணி தான் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாகச் சொல்லி விவரம் சொல்லியுள்ளார். இங்குள்ள காப்பாளர் உடனடியாக மாநில குற்ற ஆவண அமைப்பிலுள்ள (State Crime Record Bureau) ஆய்வாளர் திருமதி தாஹிரா விடம் தகவலைச் சொல்லியுள்ளார். லலிதாவின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என இரண்டாண்டுகளுக்கு முன் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தகவல் சொல்லப்பட்டு அவர்கள் வந்து மூன்றாண்டுகளுக்குப் பின் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.  பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தபோதும் லலிதா தன்னை வெளியே அனுப்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டும் அவரது உறவினர்களைக் கண்டு பிடித்து அனுப்பும் முயற்சியை அங்குள்ளவர்கள் செய்யவில்லை எனத் தெரிகிறது.

அங்கிருந்தவர்களில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜமுனா (62) என்பவரும் ஓரளவு பேச முடிந்த மனநோயாளி. சாலையில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு வாகனத்தில் அடிப்பட்ட அவரை குணசேகரன் எனும் மருத்துவர் சிகிச்சை அளித்துப் பின் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பின் அவர் தாம்பரத்திலுள்ள பாலேஸ்வரம் கிளைக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, பின் அங்கிருந்து பாலேஸ்வரம் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். அங்கு 5 மாதங்கள் இருந்துள்ளார். இப்போது அவர் கொடுத்த முகவரி காவல்துறைக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் அவரது உறவினர்களைத் தேடும் முயற்சியில் உள்ளனர்

பாலேஸ்வரம் காப்பகத்தில் அங்குள்ளவர்களை ராதாகிருஷ்ணன் எனும் ஊழியர் அடிப்பதுண்டு என அன்பு (30) என்பவர் கூறினார். அந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கமும் உடையவராம். அன்புவிற்கு வீட்டுக்குச் செல்ல ஆசை. ஆனால் ‘குட்கா’ பழக்கம் உள்ள அவரை அவரது வீட்டார் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அழைத்துச் சென்றால் மீண்டும் குட்கா பழக்கம் வந்துவிடும் அதனால் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் எனச் சொல்கிறார்களாம்.

I.7.3 செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செத்துக் கொண்டிருந்தவர்கள்

பாலேஸ்வரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 91 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் ஒரு ஆறுபேகள் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். மார்ச் 7 அன்று மாலை எம் குழுவில் இருந்த அ.மார்க்ஸ், பாபு, டாக்டர் சத்யபாபு முதலானோர் சென்று பார்த்தனர். அங்கு நிலைமை மோசமாக இருந்த அறுவரும் தொற்று நோய்ப் பகுதியில் வைக்கப்பட்டு இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் முதல்நாள் இரவும் இன்னொருவர் அன்று காலையும் இறந்திருந்தனர். மீதம் இருந்த நால்வரில் ஒருவர் மட்டும் வார்டில் கிடந்தார். மற்ற மூவரும் வராந்தாவில் உள்ள கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் ஒரு தட்டில் சோறும் குழம்பும் ஈ மொய்த்துக் கிடந்தன. அவர்கள் நால்வரில் ஒருவர் மட்டும் கேட்ட போது மிகவும் சிரமப்பட்டுத் தன் பெயரைச் சொன்னார். மற்றவர்களால் ஏதும் பேச இயலவில்லை. ஒருவர் செத்துக் கொண்டிருந்தார். பொறுப்பில் இருந்த ARMO விடம் பேசியபோது அவர்களைத் தனிக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்வதாகவும் சாப்பிடமுடியாதவர்களுக்கு ஊட்டிவிட ஏற்பாடு உள்ளதாகக் கூறினார்.

பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் சாலையில் பிச்சை எடுக்கும் படத்துடன் ஊடகங்களில் செய்தி ஒன்றும் வந்தது.

I.8  அரசு அதிகாரிகளின் கருத்துக்கள்

I.8.1 வருவாய்க் கோட்ட அதிகாரி திரு ராஜு

காஞ்சிபுரம் வருவாய்க் கோட்ட அதிகாரி (RDO) ராஜுவை மார்ச் 5 அன்று இக்குழுவினர் சந்தித்தபோது பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து தபாலில் அனுப்பப்படும் இறந்தோர் குறித்த அறிவிப்புகளை VAO வாங்க மறுத்துத் திருப்பி அனுப்புவது ஏன் எனக் கேட்டோம். ஒரு அரசு ஊழியர் மக்களிடமிருந்து வரும் கடிதங்களை வாங்க மறுப்பது குற்றம் என்பதையும் சுட்டிக் காட்டினோம். தனக்கு அது தெரியாது எனவும் விசாரிப்பதாகவும் கூறினார்.

குழந்தைகள் நலக் குழுவினர் காப்பகத்திலிருந்த குழந்தைகளை இரக்கமின்றி முரட்டுத்தனமாகக் கையாண்டது குறித்துக் கேட்டபோது, தான் அப்போது அங்கில்லை எனவும், ஆனால் அப்படி நடப்பதை அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததாகவும், அவர் குழந்தைகள் நலக் குழுவினருடன் உடன் தொடர்பு கொண்டு உடனடியாகக் குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டதாகவும் சொன்னார்.

பாலேஸ்வரம் காப்பகத்தில் 323 பேர்கள் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கிருந்து 289 பேர்களே இப்போது பல்வேறு காப்பகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர் எனச் செய்தி வருகிறது (இப்போது 294 பேர்கள்தான் இருந்தனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன). மீதமுள்ள 34 பேர்களின் நிலை என்ன, அவர்கள் உங்களுக்குத் தெரியாமலேயே வெளியேறிவிடார்களா எனக் கேட்டபோது அப்படி நடக்கவில்லை எனவும், தாங்கள் போலீஸ் காவலுடன் கவனமாக அங்கிருந்த ஒவ்வொருவரையும் வெளியேற்றியதாகவும் ஆர்.டி.ஓ பதிலளித்தார்.

வெளியேற்றப்பட்டபின் எவ்வளவு பேர் இறந்துள்ளனர் எனக் கேட்டபோது அது குறித்துத் தன்னிடம் தகவல் இல்லை என்றார். எனினும் அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்ட செய்தி தெரிந்தபின் அவர்களில் சிலரது உறவினர்கள் வந்து உரிய ஆதாரங்களைக் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் என்றார். இப்போது அவ்வாறு தேடி வருபவர்களுக்கு விவரம் சொல்லி உதவுவதற்காக உத்தரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒருவருக்குப் பணி கொடுக்கப்பட்டுள்ளதாகத் திரு ராஜு கூறினார். பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தவர்களின் புகைப்பட விவரங்களுடன் வருபவர்களை அவர் வழிநடத்துகிறார் எனவும் அவர் கூறினார்.

I.8.2 செங்கல்பட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு. மதிவாணன்

பிப்ரவரி 20 அன்று சாலவாக்கம் காவல்நிலையத்தில் பாலேஸ்வரம் வாகனத்தை மறித்து கருணாகரன் தலைமையில் சிலர் பிரச்சினை செய்தபோது நடவடிக்கை எடுத்து அந்தச் சூழலைக் கையாண்ட டி.எஸ்.பி மதிவாணன் சுருக்கமாக முடித்துக் கொண்டார். வாகனத்தில் இருந்த ஒரு இறந்த உடல் மற்றும் இருவர் ஆகிய மூவருக்கும் உரிய போலீஸ் மெமோ வை வாகன ஓட்டி வைத்திருந்ததால் அந்த வேனை முடக்கி வைப்பது சாத்தியமில்லை என்பதால் கருணாகரனின் கோரிக்கையைத் தன்னால் ஏற்கமுடியவில்லை என்றார் மதிவாணன். இதற்கிடையில் வாகனத்தில் இருந்த அன்னம்மாளின் உறவினர்கள் உரிய ஆதாரத்துடன் வந்ததாலும் அன்னம்மாளும் அவர்களுடம் போகச் சம்மதித்ததாலும் அவரை அவர்களுடன் அனுப்பியதாகவும் இறந்தவரது உடலை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார். காவல்நிலையத்தில் இருந்த வேன் காண்ணாடியை உடைத்தது மற்றும் காவல்நிலையத்தில் வந்து பிரச்சினைகள் செய்தது ஆகியவற்றுக்காக அன்று கருணாகரனைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறினார்.

I.9 பாலேஸ்வரத்தில் மதவாத அமைப்புகள் செய்யும் பிரச்சாரம்

எல்லாவற்றையும் மதவாத நோக்கிலிருந்து அணுகும் சில அமைப்பினர் இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினையை முன்வைத்து பாலேஸ்வரம் காப்பகத்தை மூட வேண்டும் என்கிற பிரச்சாரத்தை முன்வைப்பதையும் எங்களால் காண முடிந்தது.

இந்து மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் கிளை, அர்ஜுன் சம்பத் தலைமையில் பிப் 27 அன்று காப்பகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக உள்ள சுவரொட்டிகளை ஊர் முழுவதும் கண்டோம். “கிருஸ்துவ கருணையற்ற இல்லங்களை இழுத்து மூடு!, ‘செய்ன்ட் ஜோசப் கருணையற்ற இல்லத்தை இழுத்து மூடு!, ‘முதியவர்களைக் கடத்திக் கொன்று அவர்களின் எலும்புகளை மர்மமான முறையில் கடத்திய பாதிரியார் தாமசை உடனே கைது செய்,! ‘சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் பாதாள கான்க்ரீட் பிணவறையை இடித்து விட்டு கருணை இல்லாத இல்லத்தை உடனே இழுத்து மூடு!” – முதலிய முழக்கங்களுடன் ஒரு சுவரொட்டி இருந்தது.

மற்றொன்று ‘இந்து முன்னணி’ (காஞ்சி-தெற்கு) அமைப்பின் சுவரொட்டி.  காப்பகத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாதது ஏன் எனும் கேள்வியை எழுப்பியுள்ள இச்சுவரொட்டிகள், “கடத்தி வந்த முதியவர்களை ஈவு இரக்கமின்றி சாகவிட்டு வேடிக்கை பார்த்த கசாப்புக்கடைக்காரன் பாதிரியார் தாமசைக் கைது செய்” எனவும், “தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷனறிகளின் கொலைக் கூடங்களை இழுத்து மூடு!” எனவும், “NIA. CBI விசாரணை வேண்டும்” எனவும் கோரிக்கைகளை வைத்திருந்தது.

இன்னொரு சுவரொட்டி உத்திரமேரூர் மதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்தது. பிப் 20 அன்று காப்பக வாகனத்தை மறித்துக் கைது செய்யப்பட்ட கருணாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்த இச்சுவரொட்டி அத்துடன், “சட்டவிரோதமாக இயங்கி வரும் கருணை இல்லாச் சித்திரவதை மரண வியாபரத்தின் பரிசோதனைக் கூடத்தை உடனடியாக இழுத்து மூடு” என்றும் கோரி இருந்தது.

                                                                  பகுதி II

II  முதியோர் பாதுகாப்பு குறித்த அரசு விதிகளும் திட்டங்களும் 

இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முதியோர் பராமரிப்பு, இறந்து கொண்டிருப்பவர்களின் பராமரிப்பு ஆகியவை குறித்தும், தற்போது அதுகுறித்த அரசு விதிகள், மற்றும் சட்டங்கள் குறித்த சில அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

II.1. அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள்         

சமூக முன்னேற்றம் மற்றும் மருத்துவ வளர்ச்சியின் விளைவாக மக்களின் சராசரி ஆயுள் இன்று அதிகரித்துள்ளது, நகர்மயமாதல், நவீன வேலைமுறைகள் மற்றும் உலகமயப் பொருளாதாரம் ஆகியவற்றின் ஊடாக நகர்ப்புறங்களிலும், தொலை தூரங்களிலும் இன்றைய இளைஞர்கள் பணி நிமித்தம் சென்று வாழ நேர்கிறது .இன்னொரு பக்கம் பாரம்பரியமான கூட்டுக் குடும்ப முறை கிராமப்புறங்களிலும் சிதைந்து வருகிறது. இவற்றின் ஊடாக தனிமையில் வாழ்கிற முதியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காலம் இது. 1975ல் 52 ஆக இருந்த சராசரி ஆயுள் இப்போது 67 ஆகியுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட நிறைவேற்ற அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி 2050 ல் மக்கள் தொகையில் 25 சதம்பேர் முதியவர்களாக இருப்பர்.

இவர்களில் 90 சதம்பேர் அமைப்புசாராத் தொழில்களில் இருந்தவர்கள். எந்தவிதமான ஓய்வூதியம், மருத்துவக் காப்பு உரிமைகள் முதலியன இல்லாதவர்கள். 75 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்போர், 32 சதம் பேர் 65 வயதுக்குப் பின்னும் அமைப்புசாராத் தொழில்களில் வேலை செய்து வாழ வேண்டியவர்கள், 60 சதத்திற்கு மேற்பட்ட பெண்களில் 58 சதம் பேர் துணையின்றி வாழ்பவர்களாக இருப்பர். 2025 வாக்கில் 60 வயதிற்கு மேற்பட்டோரில் 25 சதமும், 75 வயதுக்கும் மேற்பட்டோரில் 40 சதமும் தனியாக வாழ்பவர்களாக இருப்பர்.

இந்த நிலையை எதிர்கொள்வதற்கான அரசு திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தவிர அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவும் இல்லை. ஆதரவற்ற முதியோர்களுக்கு 90 சத நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலமாக முதியோர் இல்லங்கள் நிறுவிச் செயல்படுத்தப்படும் என 1992 ல் அறிவிக்கப்பட்டது.  அவ்வாறு இதுவரை இந்தியா முழுவதும் 352 முதியோர் இல்லங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளன. 1999 ல் ‘முதியோர்களுக்கான தேசியக் கொள்கை’ (National Policy on Older Persons) நகல் உருவாக்கப்பட்டு இருமுறை திருத்தப்பட்டது. இன்னும் மாநில அரசுகள் இதை மதிப்பீடு செய்து பதிலளிக்கவில்லை. 2007ல் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம்’ (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007). இயற்றப்பட்டது. 29.09.2008 முதல் இது நம் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விதிகள் (Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules) உருவாக்கப்பட்டு 31.12.2009 முதல் அமுலாகிறது.. இதன்படி பெற்றோர்களையும் முதியோர்களையும் அவர்களின் வாரிசுகள் கைவிடுவது தண்டிக்கப்படக் கூடிய குற்றம். எனினும் இதன் மூலம் வயதான மூத்தோர்கள் நீதிமன்றங்களை அணுகி நீதி பெறுவது எளிதல்ல. தவிரவும் இதன் மூலம் சொத்துள்ள முதியோர்கள்தான் பாதுகாப்பு பெற முடியும்.

2010 ல் மத்திய மருத்துவ நல அமைச்சகம் National Program for Health Care of the Elderly என்கிற திட்டத்தை உருவாக்கியது.. இது ஏற்கனவே மற்றொரு அமைச்சகம் அறிவித்திருந்த இன்னொரு பழைய செயல்படாத திட்டத்தின் மறு உருதான்.

இந்நிலையில் முதியோர்களைப் பாதுகாக்க என்னதான் வழி?

1.முதியோர் இல்லங்கள் – இவை போதுமானதாக இல்லை.

 1. ஓய்வுபெற்றோர் இல்லங்கள் – இது வசதியானவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
 2. அரசின் முதியோர் உதவித் திட்டம்.: – இது 10 சதம் பேருக்கே பயனளிக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களே இதன் மூலம் பயனடைய முடியும் (மாதம் 200 முதல் 1000 ரூ).
 3. வயதானவர்களுக்கான நலக் காப்பீட்டுத் திட்டங்கள் – இதற்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 14,000 செலுத்த வேண்டும். எல்லா காப்பீட்டு நிறுவனக்களும் இதைச் செய்வதும் இல்லை.

II.2 முதியோர் இல்லங்களுக்கான நடைமுறையில் உள்ள விதிகள்

முதியோர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலம் தொடர்பான தமிழக அரசு விதிகளின்  (Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules, 2009) சில முக்கிய அம்சங்கள்:

 1. இத்தகைய சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் குறித்த விவரங்கள் குறித்த பதிவேடுகளை முறையாகத் தொகுத்து வருவது மாவட்ட சமூக நல அதிகாரியின் கடமை.
 2. சமூக நல அதிகாரிக்கு இத்தகைய இல்லங்களை பார்வையிட்டு விவரங்கள் சேகரிக்கும் அதிகாரம் உண்டு.
 3. தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முதியோர் இல்ல நிர்வாகம் தொடர்பான அத்தியாயம் 4, 19 பிரிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

(A): ஒரு முதியோர் இல்லம் அதற்குரிய அனைத்து வசதிகளையும் (physical facilities) கொண்டிருக்கவேண்டும்.

(B) தேவை அடிப்படையில் சேர்க்கை அமைய வேண்டும். அன்றாடம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் அனுப்புகிறவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலி இடங்கள் உள்ளனவோ அதைக் காட்டிலும் நபர்கள் அதிகம் வந்தால் உடனடியாகக் கவனிக்க வேண்டியவர்கள், அதிக வயதுடையோர், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கலாம். உரிய முறையில் விண்ணப்பிக்க இயலாத நிலையில் உள்ள மூத்தோர்களாயின் அவர்களை மாவட்ட ஆட்சியரோ இல்லை அவரால் நியமிக்கப்படுவோரோ, அவர்களின் நிலை குறித்து திருப்தி கொள்வாராயின் முறையான விண்ணப்பங்கள் இன்றியும் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

(C) சாதி, மத அடிப்படையில் சேர்க்கை அமையக் கூடாது.

(D) இரத்த உறவினராகவோ, கணவன் மனைவியராகவோ இருந்தாலொழிய ஆண்களும் பெண்களும் தனித்தனியே தங்க வைக்கப்பட வேண்டும்.

(E) தினசரி நிர்வாகம் (இணைப்பு iii ல் உள்ளவாறு) ஒரு நிர்வாகக் குழுவால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு அவ்வப்போது அனுமதி மற்றும் நிர்வாகம் குறித்து சேர்க்கை மற்றும் நிர்வாகம் குறித்த வழிகாட்டல்களையும், ஆணைகளையும் வழங்கும்.

அத்தியாயம் VII  22 மற்றும் 23 பிரிவுகள்: இச்சட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பொருட்டு அரசுக்கு அறிவுரை வழங்க மாநில அரசு மூத்த குடிமக்களுக்கான மானிலக் குழு மற்றும் மாவட்டக் குழுக்களை உருவாக்க ஆணையிடலாம்.

II.2 இறக்கும் தறுவாயில் உள்ளோர் பராமரிப்பு (Hospice) 

“இறப்பு என்பது விளக்கு அணைந்து இருள் கவ்வுவது அல்ல; விடியலின் அருகாமையை உணர்ந்து விளைக்கை நிறுத்துவது..” – ரவீந்திரநாத் தாகூர்

தமிழில் இறப்பைக் குறிக்க “காலம் ஆதல்” என்கிற ஒரு அற்புதமான சொல்லை நாம் பாவிக்கிறோம். இறப்பு என்பது அழிவல்ல. அது காலத்தில் கரைவது. வேறு எந்த மொழியிலும் இத்தகைய ஒரு கருத்தாக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

இறப்பிலிருந்து யாரும் தப்ப இயலாது. அது வாழ்வின் ஓர் அங்கம். ஒவ்வொருவரும் ஒரு கண்ணியமான, அதிகத் துன்பமில்லாத ஒரு மரணத்தை அடைவதற்கு உரிமை உண்டு. மரணத்தை அடைவதோடும் எல்லாம் முடிந்துவிடுவது இல்லை. இதுவரை அந்த உயிரை ஏந்தி இருந்த அந்த உடலுக்கு மதிக்கத்தக்க முறையிலும், அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ற வகையிலும் ஒரு இறுதி விடையளித்து அந்த உடலை dispose செய்யவும் வேண்டும். அத்தோடும் கூட சமூகத்தின் கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் உற்றார் உறவினர்கள் அந்தத் துயரிலிருந்து ஆறுதல் பெறுவதற்கும் துணை நிற்க வேண்டும்.

இனி பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என முடிவானதுடன் மருத்துவ சேவை முடிந்துவிடுவதில்லை. அதிகத் துயரும் வேதனையும் இல்லாமல் உயிர் பிரிய ஆதரவும் சேவையும், அதிக பட்சமான கவனிப்பும் (palliative care) இறந்துகொண்டுள்ள அவருக்குத் தேவை. இந்தச் சேவையைத்தான் Hospice என்கிற கருத்தாக்கம் முன்வைக்கிறது.

இந்தச் சேவை குறித்த ஒரு பிரக்ஞையும் புரிந்துணர்வும், உரிய விதி முறைகளும், சட்டங்களும் நம்மிடம் இல்லை. முதியோர் பாதுகாப்பு, காப்பகம் முதலான சட்டங்களே மிகச் சமீபத்தில்தான் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும், அவற்றையும் கூடச் செயல்படுத்துவதற்கான விருப்புறுதியும், நிதி ஒதுக்கீடும் நம் அரசுகளிடம் இல்லை என்பதையும் கண்டோம். அந்த வகையில் இந்த இறப்போருக்கான கண்ணியமான பராமரிப்பு என்கிற திசையில் எந்த முயற்சியும் அரசுத் தரப்பில் இல்லை.

எனினும் இது தொடர்பாக Indian Society of Critical Care Medicine (ISCCM) and the Indian Association of Palliative Care (IAPC) முதலான அமைப்புகள் இருபதுக்கும் மேற்பட்ட மாநாடுகளை (Indian Association for Palliative care Conference) நடத்தியுள்ளன. இந்தத் துறையில் விரிவான முன்வைப்புகளையும் அவை முன் வைத்துள்ளன. ஆனால் இது இன்றளவும் ஒரு மிகவும் மேற்தட்டுக் கருத்தக்கமாகத்தான் உள்ளதே ஒழிய சமூகத்தில் பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள இந்த நாட்டில் இந்தச் “சொகுசு” அடித்தள மக்களை இன்னும் எட்டவில்லை. எட்டுவதற்கான திட்டமும் இல்லை.

பிழைக்க வாய்ப்பில்லாதவர்கள் என உறுதியாக முடிவானவர்களை பராமரிப்பதற்கான எந்த வசதியும் திட்டமும் நம் அரசு மருத்துவமனைகளில் இல்லை எனவும், அப்படியானவர்களை எப்படியாவது வெளியே அனுப்புவதே இன்றைய மருத்துவ அமைப்பின் அணுகுமுறையாக உள்ளது எனவும் கூறுகிறார் ‘சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின்’ தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத். மிகவும் எளிய மக்கள் அப்படியானவர்களை வைத்துப் பராமரிக்க இயலாதவர்களாக உள்ளதால் அவர்களும் எப்படியாவது இப்படியானவர்களைக் கைகழுவுவது என்கிற நிலையிலேயே உள்ளனர். அதுமட்டுமல்ல இறக்கும் நிலையை எட்டிவிட்டதை அறிபவர்களும் கூடத் தாங்கள் மற்றவருக்குச் சுமையாக இல்லாமல் எப்படியாவது ஒழிய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். எனவே அவர்களே வீட்டை விட்டு வெளியேறிப் புகலிடம் தேடி அலைகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் சேர்க்கபடும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு துணையாள் இருந்தால்தான் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனும் நடைமுறை இப்போது கடைபிடிக்கப்படுவது என்பதும் யாருமற்ற ஆதரவற்றோரின் இறுதிக் காலங்களை மிகவும் துயர் மிக்கதாய் ஆக்கிவிடுகிறது.

தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் உள்ள இப்படியான யாருமற்றோர்களில் பலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் தமிழில் பேச முடியாதவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலர் மனநோயாளிகள். இவர்களை இவர்களது உறவினர்கள் தொலைதூர ரயில்களில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர் எனவும் செய்திகள் வருகின்றன. தமிழக நெடுஞ்சாலைகளில் இப்படியான வடமாநில மனநோயாளிகள் நடந்து திரிவதையும், பல நேரங்களில் வாகனங்களில் அடிபட்டுச் சாவதையும் காணலாம்.

இறக்கும் எளிய மக்களுக்கு ஒரு கண்ணியமான சாவு என்பது இன்னும் இங்கு எட்டாத தொலைதூரக் கனவாகவே உள்ளது.

II.3 இறப்போரைப் புதைப்பதற்கான திரும்பப் பயன்படத் தக்க கான்க்ரீட் பெட்டக (Vault) அமைப்பு

இடப்பற்றாக்குறை, நகர்மயமாதல் ஆகியவற்றின் விளைவாக இன்று நகர்ப்புறங்களில் இறந்தோரைப் புதைப்பது என்பது பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. மத அமைப்புகளின் கல்லறைத் தோட்டங்கள் நிரம்பி வழிகின்றன. தனியார் கல்லறைகளில் ஒருவரது உடலைப் புதைக்க இப்போது சென்னையில் சில இலட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் உலகெங்கிலும் இப்படியான திரும்பப் பயன்படத் தக்க கான்க்ரீட் பெட்டக அமைப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த விவரங்கள் இணையத் தளங்களில் நிறையக் கிடைக்கின்றன. கேரளாவில் இப்படியான நவீன கல்லறை அமைப்புகள் சுமார் நாற்பது ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளன (Innovative concrete vaults now used to burry ead in Krala, Ramesh Menon, India Today, Nov 30,1990).

இவற்றில் பலமுறைகள் உள்ளன. ஒன்றின்மீது ஒன்றாக கான்க்ரீட் பெட்டகங்களை அமைத்து அவற்றுக்குள் இறந்த உடல்களைப் பெட்டிகளில் வைத்து மீண்டும் திறக்க இயலாமல் சீல் வைப்பது ஒரு வகை. அப்படி வைக்கப்பட்ட உடல்  மக்கியவுடன், சில ஆண்டுகளுக்குப் பின் ‘சீலை’ உடைத்து அந்தச் சவப் பெட்டியையும் உள்ளே உள்ள மக்கிய உடலின் எலும்புகள் உள்ளிட்ட எச்சங்களையும்  கீழே அமைக்கப்பட்டுள்ள கான்க்ரீட் பள்ளத்திற்குள் தள்ளிவிட்டுப் பின் இன்னொரு உடலைப் பெட்டிக்குள் வைத்து அந்த கான்க்ரீட் அறையை மீண்டும் பயன்படுத்துவது இன்னொரு முறை. இதுவும் இப்போது கேரளாவில் பயன்பாட்டில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்திலும் இது இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கீழ் வரிசையில் உள்ள வால்டுகளை ஒரு குடும்பம் விலை கொடுத்து வாங்கி விட்டால் அக்குடும்பத்தினர் இறக்கும்போது தொடர்ந்து அதைக் கீழே வைப்பட்டுள்ள கான்க்ரீட் பள்ளம் நிரம்பும் வரை பயன்படுத்தலாம். மேலே உள்ள வால்ட்டுகள் அவ்வாறு குடும்பப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதில்லை.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்த அமைப்பில் எவ்வளவு கால இடைவெளியில் ஒரு உடல் வைத்து சீல் பண்ணப்பட்ட வால்ட்டைத் திறக்கலாம் என்பது இப்போது சர்ச்சைக்குள்ளாகி முடிவுக்கு வராமல் உள்ளதாக அறிகிறோம். சிங்கப்பூரில் உள்ள இத்தகைய வால்ட் அமைப்பில் புதைக்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த உடலின் எச்சங்களை எடுத்து, எரித்துச் சாம்பலாக்கி, அதை அங்கேயே ஒரு சிறிய பள்ளத்தில் (niche) வைப்பது அல்லது அந்த உடலுக்குரிய உறவினர்களிடம் அளிப்பது என்கிற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது (Burial and Reuse Options, www.welters-worldwide.com).

பெட்டிகளில் வைத்துப் புதைத்துக் கான்க்ரீட் சீல் வைப்பது என்பதைக் காட்டிலும் உடலை அப்படியே மண்ணில் புதைத்தால் எளிதில் உடல் மக்கிச் சிதைவதோடு சுற்றுச்சூழல் மாசாகாமலும் இருக்கும் என்கிற அடிப்படையில் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் green burial என்பது சில தனியார் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகிறது (www.naturalburialcompany.com).

பாலேஸ்வரத்தில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டுக்குரிய கான்க்ரீட் வால்ட் அமைப்பில் பிணங்களைப் பெட்டிக்குள் வைக்காமல், உடலைத் துணியில் சுற்றி வால்டுகளில் வைத்து சீல் வைக்கின்றனர். இவ்வாறு 1663 உடல்கள் ஏழாண்டுகளில் அதில் புதைக்கப்பட்டுள்ளன என அதன் நிர்வாகி பாதிரியார் தாமஸ் கூறினார்.

II.4 ஆதரவற்றோரைக் கட்டாயமாகக் காப்பகங்களில் அடைத்தல் குறித்து

சில நாடுகளில் (எ.கா ஃப்ரான்ஸ்) தெருக்களிலும் ‘சப்வே’ சுரங்கப் பாதிகளிலும் தங்கியுள்ளோரை அரசு அவ்வப்போது அகற்றிக் கொண்டு சென்று காப்பகங்களில் வைக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை விரும்புவதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அவ்வாறு கட்டாயமாகக் காப்பகங்களிலிருந்து எவ்வகையிலாவது தப்பிச் செல்வதற்கே முயல்கின்றனர். எல்லாச் சிரமங்களையும் காட்டிலும் மனிதர்கள் சுதந்திரமான இயக்கத்தை விரும்புவதையே இது காட்டுகிறது. எனவே இத்தகைய காப்பகங்களில் விரும்பி வந்து சேர்கிறவர்கள் அல்லது காவல்துறை மற்றும் மருத்துவ மனைகளால் அனுப்பப்படுகிறவர்கள் சில காலத்திற்குப் பின் தாங்கள் அங்கிருந்து வெளியேற விரும்பலாம். அப்படியானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வழிமுறைகளையும் சமூக நலத்துறை மூலம் அரசு மேற்கொள்வது அவசியம். அவர்களுக்கு உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் சேர்ப்பிப்பது போன்ற வகைகலில் இந்த உதவிகள் அமையலாம். தற்போது பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களில் பலர் அங்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதை நாம் இந்தக் கோணத்திலிருந்தும் அணுகுதல் அவசியம்.

                             பகுதி III

             எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

III.1 அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறல்கள்

III.1.1 பாலேஸ்வரம் புனித ஜோசப் காப்பகம் இறக்கும் நிலையில் உள்ளோருக்கான பராமரிப்புக் காப்பகம் (hospice) என அதன் நிறுவனர் உரிமை கோருகிறார். அவ்வாறே அவர் அனுமதி விண்ணப்பத்தையும் அளித்துள்ளார். அரசைப் பொறுத்த மட்டில் இறக்கும் நிலையிலுள்ளோர் பராமரிப்புக் காப்பகத்திற்கான எந்தச் சட்டமும் விதிகளும் இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த புரிதல் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பது அவர்கள் அளித்துள்ள ஆணைகளை எல்லாம் பார்க்கும்போது அறியவருகிறது. எடுத்துக்காட்டாக 28.12.2011 ல் இக்காப்பகத்திற்கு மாவட்ட சமூகநலத்துறை ஆணையர் முதல் முறையாக அனுமதி வழங்கியபோது, அது “Dying Destitute Registration Under the Rule 12(3) of the Tamilnadu Maintenance and Welfare of the Parents and Senior Citizen Rule 2009” எனக் குறிப்பிடப்படுகிறது. இந் நிறுவனத்திற்கான பதிவுச் சான்றிதழும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. அந்த விதி Old Age Home க்கான விதி மட்டுமே. ஆனால் அனுமதி அளித்த ஆணையர் “இறந்து கொண்டிருக்கும் அனாதைகள் இல்லம்” என்பதையும் “முதியோர் இல்லம்” என்பதையும் ஒன்றாக்கி  ஒரு ஆணையை இட்டுள்ளார். இரண்டும் வெவ்வேறானவை என்கிற புரிதல் அரசு அதிகாரிகளுக்கு இல்லை. “இங்கு இறப்போர் பராமரிப்புக் காப்பகம் என்பதற்கான விதிகள் கிடையாது. எனவே நீங்கள் முதியோர் இல்ல விதிகளைத்தான் கடை பிடிக்க வேண்டும்” எனத் தெளிவாகச் சொல்லவுமில்லை. இந்தக் குழப்பம் கடைசி வரை இருந்துள்ளது.

II.1.2 2015 பிப் 02 அன்று கட்டிட அனுமதிச் சான்றிதழ் வேண்டி காப்பக இயக்குநர் தாமஸ் விண்ணப்பித்து உள்ளார். உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் இருந்து மே 09 அன்று அனுமதி அளிக்க இயலாது எனப் பதில் வந்துள்ளது. சொல்லப்பட்ட காரணம்: “1965ம் ஆண்டு தமிழ்நாடு கட்டட உரிமச் சட்டம் 2(8)(1) ன்படி ‘பொதுக்கட்டிடம் என்பதில் கல்வி நிறுவனங்கள், விடுதிகள், நூலகம், மருத்துவமனை, டிஸ்பென்சரி, நர்சிங் ஹோம், கிளினிக், பிரசவ நிலையம், கிளப், ஹோட்டல், பொதுக்கூட்டம் மற்றும் திருமண அரங்கு ஆகியன மட்டுமே அடங்கும். உங்களின் கருணை இல்லம் மேற்படி வரையறையின் கீழ் வரவில்லை. எனவே கட்டிட அனுமதிச் சான்றிதழ் வழங்க இயலாது.”

இந்தப் பட்டியலில் ‘முதியோர் இல்லம்’ என்பதும் இல்லை. அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களுக்கெல்லாம் எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவை இயங்கி வருகின்றன?

இதில் இன்னொரு முரண் என்னவெனில் திண்டுக்கல்லில் இயங்கிவரும் இதே நிறுவனத்திற்கு நிலக்கோட்டை தாசில்தார் கட்டிட அனுமதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

II.1.3 பாலேஸ்வரம் காப்பகத்திற்கு முதியோர் இல்லம் எனப் பதிவும் அனுமதியும் வழங்கப்பட்டாலும் மருத்துவ மனைகளிலிருந்தும், காவல்துறையிடமிருந்தும் முதியோர்கள் மட்டுமின்றி தொடர்ந்து இறக்கும் தறுவாயில் உள்ளோர், மனநலம் பிறழ்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எல்லோரும் இங்கு ‘மெமோ’ எழுதி அனுப்பப்பட்டுள்ளனர்.

II.1.4 இந்த அனுமதி ஆணைகளில் அதிகபட்சமாக அக் காப்பகத்தில் எவ்வளவு பேர்கள் அனுமதிக்கப்படலாம் என்பது தெளிவாக்கப்படவில்லை. அரசு நிறுவனங்களும் அனுப்பிக் கொண்டே இருந்தன. காப்பகத்தினரும் அதன் கொள்ளளவு குறித்துக் கவலைபடாமல் வந்தவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டே இருந்துள்ளனர். சென்ற டிச 08, 2017 அன்று மருத்துவக் கல்விக்கான உதவி இயக்குநர் இக் காப்பகத்தைப் பார்வையிட்டு பார்வையாளர் குறிப்பேட்டில் best health care அளிக்கப்படுகிறது எனப் பாராட்டிப் பதிவு செய்துள்ளார். அன்றைய தேதியில் அக்காப்பகத்தில் 235 ஆண்கள், 172 பெண்கள் என மொத்தம் 407 பேர்கள் இருந்துள்ளனர்.

II.1.5 2012 ல் இக்காப்பகத்தின் மீது எலும்புகள் விற்கப்படுகின்றன என்பது முதல் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அப்போதெல்லாம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்து, ஆவணங்களைப் பார்வையிட்டதோடு. இறந்தோரைப் புதைக்கும் ‘வால்ட்’களைத் திறந்து சோதனை செய்தும் சென்றுள்ளனர். அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தனர் என்பது தெரியவில்லை. நிறுவனத்திற்குத் தகவலும் இல்லை. நிறுவனத்தின் மீது விதிகள் எதையும் மீறியதாகவோ, குறைகள் இருந்ததாகவோ, எது குறித்தும் சந்தேகம் இருந்ததாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை. 19.09.2014 அன்று காப்பகத்திற்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வட்டவழங்கு அலுவலகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனி வருவாய் ஆய்வாளர் சோதனை செய்து எழுதியுள்ள காப்பகத்தில் உள்ளோருக்கான உணவு தொடர்பான பதிவுகளிலும் பாராட்டுக்கள்தான் அதிகமாக உள்ளன.

II.1.6. தற்போது காப்பகத்தில் உள்ளோர் வெளியேற்றப்பட்டு அதன் இயக்குநர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. “அனுமதி இல்லாமல் செயல்பட்டது” ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி 18.09.2017ல் காலாவதி ஆகிறது. அதற்கு மூன்று நாள் முன்னதாக 15.09.2017 அன்று அத்துடன் இணைக்கப்பட வேண்டிய சுகாதாரச் சான்றிதழ் தவிர பிற சான்றிதழ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு அனுமதி விண்ணப்பம் காப்பகம் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரச் சான்றிதழுக்கு முறைப்படி காப்பக நிர்வாகி காஞ்சிபுரம் சுகாதார துணை இயக்குநருக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் இது குறித்து மாநில சுகாதார இயக்குநருக்கு அறிவுரை கோரி 13.07.2017 ல் கடிதம் எழுதியுள்ளார். காப்பகத்தை ஆய்வுசெய்து தகுதியாயின் சான்றிதழ் வழங்குமாறும், இல்லையேல் மறுக்குமாறும்  மாநில சுகாதார இயக்குநர் பதிலளித்துள்ளார் (09.10.2017). ஆனால் அடுத்த மூன்று மாதங்கள் ஆகியும் அந்தத் துணை இயக்குநர் ஆய்வுசெய்து பதிலளிக்கவில்லை. அனுமதித் தொடர்ச்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் அந்தச் சான்றிதழ் மட்டும் இல்லாமல் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. 15.09 2017ல் அனுமதி விண்ணப்பம்  அனுப்பட்டிருந்தாலும் அடுத்த நான்குமாதம் வரை எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், காப்பகத்திடம் உரிய அனுமதி இல்லை என்பதையும் இப்போது அதை மூடுவதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்படுவது முற்றிலும் ஏற்புடையதல்ல.

II.1.7 22.02.2018 அன்று காஞ்சிபுரம் RDO குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 133 (ஆ) பிரிவின்கீழ் காப்பகத்திடம் விளக்கம் கோருகிறார். காப்பகத்தின் மீது பல புகார்கள் வந்துள்ளதாகவும், அதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அப்படி அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பு உள்ளது. ஆனால் ஏழு நாள் கூட அல்ல, ஒரு நாள் கூடப் பொறுக்காமல் காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தால் அதை முறைப்படி விசாரிப்பது அதிகாரியின் கடமை. ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல் அதன் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆர்.டி.ஓவுக்கு என்ன மாதிரி அழுத்தங்கள் யாரால் கொடுக்கப்பட்டன? RDO வின் இந்த நடவடிக்கை தவறானது என்கிற குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் (prima facie) உள்ளதென இன்று உயர்நீதிமன்றம் RDO வின் அந்த அறிவிப்பைத் தடை செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

II.1.8  எந்தத் திட்டமும் இல்லாமல் உடனடியாக வெளியேற்றப்பட்ட அம் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட ஒருவர் செங்கல்பட்டில் பிச்சை எடுத்துத் திரிந்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது.

II.1.9 காப்பகத்தில் பணியாற்றுகிறவர்களின் 9 குழந்தைகளும் கதறக் கதற அன்று அவர்களின் தாயார்களிடமிருந்து பிடுங்கி வாகனத்தில் வீசி எறியப்பட்டுள்ளனர். காலில் அடிபட்ட ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்றை நாங்கள் பார்த்தோம். இப்படிக் குழந்தைகளிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட செங்கல்பட்டு குழந்தை நலக் குழுவின் (CWC) இரக்கமற்ற நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குறிப்பாக ஸஹிருதீன் எனும் உறுப்பினர் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதாக எல்லோரும் கூறினர். அக்குழந்தைகள் உரிய பிறப்புச் சான்றுகள் முதலான ஆதாரங்களுடன் அவர்களின் தாய் அல்லது தந்தையிடம் இருந்துள்ளனர் என இன்று காப்பகம் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது..

II.1.10 இந்தப் பிரச்சினையை மதவாத சக்திகள் தமது வெறுப்பு அரசியலுக்குப் பான்படுத்துவதை எம் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

II.2 பாலேஸ்வரம் புனித ஜோசப் காப்பகத்தின் குறைகள்

II.2.1 கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கிறிஸ்தவமும் பாதிரிமார்களும் செய்துள்ள பாராட்டுக்குரிய பணிகளை உலகறியும். இறப்போரில் சுமார் 1 சதம் பேர் தெருக்களில் அனாதைகளாகச் சாகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லி நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 10 பேர்கள் இப்படித் தெருக்களில் சாகின்றனர் என சமூகச் செயல்பாட்டாளர் ஹர்ஷ் மான்டர் குறிப்பிட்டுள்ளார் (Harsh Mander, Barefoot: Death on the Streets, The Hindu, Oct 2, 2010). அப்படியாகச் சாக நேரும் மக்களுக்கு கூடியவரை அதிக வலி இல்லாத கண்ணியமான மரணத்திற்கு உதவுவது என்கிற நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்தக் காப்பக முயற்சி பாராட்டுக்குரியது. எனினும் எங்கள் ஆய்வில் பல ‘சீரியசான’ குறைபாடுகள் இக்காப்பகத்தின் செயல்பாட்டில் இருந்ததை எங்களால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

II.2.2. ‘இது ஒரு ஹாஸ்பிஸ் என இதன் நிறுவனர் பாதிரியார் தாமஸ் அவர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டாலும் இந்தக் காப்பகத்தில் இருந்தோர்களில் பெரும்பாலோர் அந்த வகைக்குள் அடங்கமாட்டார்கள். மனநோயாளிகள் குறிப்பிட்ட அளவு இருந்துள்ளனர். குணமாக்க முடியாதவர்கள், துணை இல்லாதவர்கள் எல்லோரையும் மருத்துவமனைகள் இங்கே அனுப்பியுள்ளன. காவல்துறையினரும் இவ்வாறே செத்துக் கொண்டிருபொபவர்கள் என்கிற வகைக்குள் வராதவர்களை எல்லாம் அனுப்பியுள்ளனர். எந்தச் சந்தர்ப்பத்திலும் செத்துக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் மற்றவர்களே அதிகமாக இருந்துள்ளனர். இப்படி மனநோயாளிகளையும் மற்றவர்களையும், தொற்று நோய் சாத்தியமுள்ளவர்களையும் ஒரே கட்டிடத்தில் அருகருகே வைப்பதை ஏற்க முடியாது.

II.2.3. காப்பகத்தில் அதிக பட்சம் எவ்வளவு பேர்கள் தங்கவைக்கப்படலாம் என்பது குறித்த வரம்பு எதையும் இந்நிறுவனம் கடைபிடிக்கவில்லை. இம்மாதிரியான நிறுவனங்களில் அதிகபட்சம் 70 பேர்கள் இருக்கலாம் என்கின்றனர் இது குறித்த வல்லுனர்கள். நமது சூழலில் நூறு பேர்கள் வரை இருக்கலாம் என வைத்துக் கொண்டாலும் சில நேரங்களில் இக்காப்பகத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.

II.2.4 என்னதான் hospice எனச் சொல்லிக் கொண்டாலும் இப்படிப் பலதரப்பட்ட நோயாளிகளும் இருந்த ஒரு காப்பகத்தில் ஒரு நிரந்தர மருத்துவரும் கூட இல்லாததை ஏற்க இயலாது. இரண்டு நர்சுகள் இருந்ததாகச் சொன்னார்கள். அப்படி இருந்திருந்தாலும் கூட அதுவும் போதாது. 300 க்கும் மேற்பட்டோர் இருந்த அந்தக் காப்பகத்தில் ஒரு நிரந்தர பட்டதாரி மருத்துவர் மற்றும் ஐந்து நர்சுகளாவது இருந்திருக்க வேண்டும். அங்கு அடைக்கலம் கோரி வந்தவர்களையே குணமானபின் அங்கே பணிக்குச் சேர்த்துக் கொண்டோம் எனச் சொன்னார்கள். அப்படிக் காட்டப்பட்டவர்களில் சிலர் இன்னும் மனத் தெளிவு இல்லாதவர்களாகவே இருந்ததைப் பார்த்தோம். முழுநேரப் பணியாளர்கள் மிகச் சிலர்தான் அங்கிருந்துள்ளனர்.

II.2.5 அங்கிருந்தவர்களோ மனநோய் உடபடப் பல மாதிரித் துயர்களுக்கு ஆளானவர்கள். செத்துக் கொண்டு தெருக்களில் கிடந்தோர் மிகவும் அசுத்தமான நிலையில் இருந்துள்ளனர். அப்படியானவர்களையும் அருவருப்பு இல்லாமல் அங்கிருந்தவர்கள் கையாண்டார்கள் என்பதை நேரில் பார்த்த சிலர் எங்களிடம் குறிப்பிட்டது உண்மைதான். ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பிற காப்பகங்களில் இருக்கும் சிலரை நாங்கள் சந்தித்தபோது அவர்களில் பேசக்கூடியவர்களில் பலர் தம்மை அங்குள்ள பணியாளர்கள் அடித்ததாகவும் குறிப்பிட்டனர். இது மிகவும் வருந்தத் தக்கது. இப்படியானவர்களைக் கையாள்வதற்கான போதிய பயிற்சியின்மை, போதிய பணியாளர்கள் இல்லாமையினால் ஏற்பட்ட பணிச்சுமை ஆகியனவே இம்மாதிரியான அத்துமீறல்களுக்கான காரணங்களாக அமையும். தமது பணியாளர்கள் 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் பணி செய்வதாக பாதிரியார் தாமஸ் அடிக்கடி குறிப்பிட்டார். இருக்கலாம். ஆன போதிலும் போதிய ஓய்வு எல்லோருக்கும் தேவை.

II.2.6 அங்கிருந்த 9 குழந்தைகளும் அவர்களின் தாய் அல்லது தந்தையுடன் இருந்தது உண்மைதான் நாங்களும் அவர்களைக் கண்டோம். எனினும் இப்படியான மனநோய் உள்ளவர்கள் அதிக அளவில் உள்ள. மரணச் சூழல் கவ்விய ஒரு இல்லத்தில் பிள்ளைகள் வளர்வது உறுதியாக அவர்களைப் பாதிக்கும். பணியாளர்களுக்குக் காப்பகத்திலிருந்து போதிய தனியான குவார்டர்ஸ் கட்டப்பட வேண்டும்.

II.2.7 காப்பக நிர்வாகத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையில் நல்லுறவு இல்லாமல் போனது இன்றைய பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது. காப்பகம் தொடர்பாகக் கிராம மக்கள் பல்வேறு ஐயங்களை எங்கள் முன் வைத்தனர். அவற்றில் பல தவறான புரிதல்களின் அடிப்படையில் உருவானதாகக் கூட இருக்கலாம். ஆனால் இப்படி ஊர் மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு இருப்பதே பல்வேறு ஐயங்களுக்கு அடிப்படையாகும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும். கிராமத் தலைவர் மற்றும் ஊர்மக்களில் சிலர் பங்கு பெறுகிற ஒரு மக்கள் தொடர்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல் மிக மிக அவசியம். ஒரு சிலர் தம்மிடம் சில பலன்களைக்  கோரி பிரச்சினை செய்ததை ஒரு காரணமாக் பாதிரியார் குறிப்பிட்டார். அப்படியானவர்களைத் தனிமைப்படுத்தவும் கூட இப்படி ஊர் மக்களுடனான உறவு வழி வகுக்கும். உள்ளூர் மக்களில் சிலர் நிரந்தரப் பணியாளர்களாகவே காப்பகத்தில் நியமிக்கப்பட வேண்டும்.

II.2.8 இறப்போருக்கான இறப்புச் சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஒரு ஆவணம். பல்வேறு ஐயங்களும் எழுப்பப்படும் ஒரு சூழலில் ஒரு மருத்துவர் சான்றளித்துக் கையொப்பமிட்ட 4A விண்ணப்பத்தில் இறப்பைப் பதிவு செய்ய மனு அளிக்கப்பட வேண்டும் என அரசு நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சரியானதே. 4A படிவத்தில் இறந்து போனவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்தான் கையொப்பம் இட வேண்டும். “ஆனால் இங்குதான் மருத்துவரே கிடையாதே” எனப் பாதிரியார் தாமஸ் எங்களிடம் கூறினார். இதை ஏற்க இயலாது. ஒரு தகுதியான மருத்துவர் இங்கு நிரந்தரமாகப் பணியாற்றி இருந்தால் இப்படியான சட்டச் சிக்கலும் வந்திராது.

11.2.9 கைவிடப்பட்ட மூத்தோர்கள் மற்றும் இறப்போர்களைப் பராமரிப்பது என்பதில் சமூகத்திற்கும் அரசுக்கும் பொறுப்புள்ளது. அரசு மருத்துவமனைகள் தங்கள் மருத்துவர்களில் சிலரை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை அங்கு அனுப்பி மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும். சமூக நலத் துறையினர் மாதம் ஒருமுறையேனும் காப்பகத்திற்கு வந்து அங்குள்ளவர்களில் வெளியே செல்லவும், தம் குடும்பத்தோடு சேரவும் விருப்பம் தெரிவிப்போரைக் கண்டறிந்து உரிய உதவிகளிச் செய்ய வேண்டும்.

II.2.10 காப்பகத்திற்குக் கொண்டுவரப் பட்டவர்கள் சில நேரங்களில் வெளியே செல்லவும் விரும்பலாம். சிலருக்கு உறவினர்களிடம் கோபித்துக் கொண்டும் வந்திருக்கலாம். அப்படியானவர்கள் வெளியேறிச் செல்லும் கோரிக்கை வைத்தால் முறைப்படி காவல்துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு அவர்களை உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் சேர்ப்பித்திருக்கலாம். பாலேஸ்வரம் காப்பகத்தில் அவ்வாறு விரும்பியவர்கள் வெளியே செல்ல எந்த உதவியும் செய்யவில்லை எனத் தெரிகிறது. இங்கிருந்து இப்போது வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் அடுத்த ஒரு வாரத்திற்குள் தம் உறவினர்களுடன் சென்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

II.2.11. இறப்போரைப் புதைப்பதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள மறுமுறை பயன்படுத்தக் கூடிய பெட்டகம் குறித்துப் பல்வேறு ஐயங்கள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியைக் காவல்துறை கண்காணிப்பளர் அளித்துள்ளார். 1999 ம் ஆண்டு பஞ்சாயத்து விதிகளின்படி (The Tamilnadu Village Panchayats Provision of Burial and Burning Grounds) Rules 1999) ஊர்ப் பஞ்சாயத்துதான் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். ஆனால் இங்கே பஞ்சாயத்து அனுமதி வழங்காததால் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அதைப் பெறுமாறு  தான் அறிவுறுத்தப்பட்டதாகப் பாதிரியார் கூறினார். அந்த அடிப்படையில் அவர் 20.04.2011 அன்று காஞ்சிபுரம் SP யிடம் விண்ணப்பம் செய்ய, அவர் அதையும் சாலவாக்கம் காவல் ஆய்வாளரின் அது குறித்த அறிக்கையையும் 03.06.2011 ல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புகிறார். அதன் பின் 18.08.2011 அன்று அந்த நிறுவனத்தில் புதைப்பதற்கான ‘தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தங்களது பணியை இப்படி மாவட்ட வருவாய்த்துறை காவல்துறையிடம் கைமாற்றி விட்டதை ஏற்க இயலாது. பாதிரியாரைப் பொறுத்த மட்டில் அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர் “அனுமதி” யைப் பெற்றுள்ளார். இப்போது அதுவும் சிக்கலாகியுள்ளது. ஆனால் இதற்குக் காப்பக நிர்வாகத்தை மட்டும் பொறுப்பாக்க முடியாது. இன்றைய உலகம் எத்தனையோ ஆண்டுகால மனித உழைப்புகளின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒன்று. இவ்வுலகின் பொது வெளிகளில் இன்றைய மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ உரிய வசதியை அளிப்பது இன்றைய மக்களின் கடைமை.

II.2.12  மேற்குறித்த பஞ்சாயத்து விதி 7ன் படி மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து புதைக்கும் அல்லது எரிக்கும் இடம் குறைந்த பட்சம் 90 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இக்காப்பகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கல்லறை அமைப்பு அங்கே தங்கவைக்கப்படும் முதியோர்களின் வார்டுக்கு அருகாமையிலும் எந்நேரமும் அவர்களின் கண்ணில் படும்படியாகவும் உள்ளதை எம் குழு கவனித்தது. தவிரவும் ஏழு ஆண்டுகளில் 1663 உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. படிகளில் இறங்கி, கீழே மக்கிய உடல்கள் தள்ளப்படும் பகுதியைப் பார்க்க எம் குழுவினர் சென்றபோது அங்கே வீசிய கடுமையான துர்நாற்றம் சில நிமிடங்கள் கூட அவர்களை அங்கு நிற்க இயலாமற் செய்தது. தவிரவும் வால்ட் சுவர்களிலிருந்து சில இடங்களில் நீர்க் கசிவு இருந்ததையும் காண முடிந்தது.

III.3 எமது கோரிக்கைகள் 

III.3.1 பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் இறப்போருக்கான காப்பகத்தை அவசரக் கோலமாக அரசு மூடி நடவடிக்கை எடுத்ததை எம் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தெருக்களில் யாருமற்று இறக்கும் பரிதாபத்திற்குரிய மக்களுக்கு சாகும் நேரத்தில் ஒரு ஆறுதலையும் ஓரளவு சுகமான மரணத்தையும் அளிக்கும் பணி என்பது மிகவும் உன்னதமானது. அந்தக் காப்பகம் மீண்டும் சேவையைத் தொடர சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். தற்போது நீதிமன்ற உத்தரவை மீறி மறைமுகமாக இந்நிறுவனத்தைச் செயல்படாமல் தடுக்க  மாவட்ட நிர்வாகம் முயற்சி ஏதும் செய்யக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

III.3.2 அனுமதி வழங்கப்படுவதில் ஏற்பட்ட கால தாமதம், விளக்கம் கேட்டு உரிய பதிலளிக்கும் முன்னதாகவே அவசரக் கோலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டது ஆகியவை குறித்துத் தொடர்புள்ள அதிகாரிகளின் செயல்பாடுகல் குறித்து ஒரு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். காப்பகத்தில் சில முறை மீறல்கள்: நடந்திருப்பதாக அதிகாரிகள் ஐயம் கொண்டிருந்தால் அது குறித்த விளக்கங்களைப் பெற்ற பின்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திடீர்டென இப்படி அந்தக் காப்பகத்தை மூடி, அங்கிருந்து எதனை பேர்கள் வெளியேற்றப்பட்டார்கல் என்பதற்குக் கூட உரிய கணக்கில்லாமல் நடவடிக்கை எடுத்த முறையை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது

III.3.3 இப்படியான Hospices களின் உருவாக்கம், செயல்பாடு, நிர்வாகம், கடப்பாடுகள் ஆகியன தொடர்பான  சட்டம் ஒன்றையும், அதற்குரிய விதிகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இப்படியான பணிகளுக்கு அரசு சட்டபூர்வமான எல்லா உதவிகளையும் தாமதமின்றிச் செய்து தர வேண்டும். புதைப்பதற்கு உரிய இடம் அமையாவிட்டால் அதற்கான இடம் ஒதுக்குதல், வசதிகள் அளித்தல் முதலியவற்றிலும் அரசு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும். அனுமதி நீடிப்பு முதலான ஆணைகளை ‘ஆன் லைனில்’ விண்ணப்பித்து உரிய கால கெடுவில் வழங்கும் முறையை ஏற்படுத்தி ஊழல் வாய்ப்புகளை நீக்க வேண்டும்.

III.3.3. (i) இறப்போருக்கான ஆறுதல் அளிக்கும் விடுதி எனில் அதில் அப்படியான நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இறக்கும் நிலையில் உள்ளோர், மனநோய் உள்ளோர், முதியோர் எனும் பலரையும் ஒன்றாகத் தங்கவைக்கக் கூடாது. (ii) இப்படியான விடுதிகளில் அதிகபட்சம் 100 பேர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. (iii) ஒரு நிரந்தர மருத்துவர் போதுமான செவிலியர் முதலானோர் இருக்க வேண்டும். (iv) மருத்துவர் சான்றளித்த 4A விண்ணப்பத்தில் இறப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் (v)  பணியாளர்களுக்குத் தனி இருப்பிடங்கள் தொலைவில் கட்டித்தரப்பட வேண்டும். (vi) இப்படியான காப்பகங்களில் உள்ளோர் வெளியேற செல்ல விரும்பினாலும், உறவினர்களுடன் சேர விரும்பினாலும் உடனடியாகக் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளும் இதைக் கண்காணிக்க வேண்டும்.

III.3.4 எலும்புகள், உடலுறுப்புகள் விற்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகள் உள்நோக்கம் கொண்டவை என இக்குழு கருதுகிறது. எனினும் இப்படியான் ஒரு ஐயம் முன்வைக்கப்பட்டவரைக்கும் அரசு இது தொடர்பாக வல்லுனர் குழு ஒன்றை அமைத்து தற்போது பாலேஸ்வரம் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த இறந்தோரைப் புதைக்கும் வால்ட் அமைப்பைத் திறந்து ஆய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர ஆவன செய்ய வேண்டும்.

III.3.5 (i) மீண்டும் இந்நிறுவனம் இயங்க அனுமதிக்கும்போது இறந்தோரைப் புதைக்கும் இந்தப் பெட்டக முறை எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாதவாறும் காப்பகத்தில் உள்ள வார்டுகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிலும் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த வல்லுனர்கள் சான்றளித்த பின்பே இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். (ii) இங்கு இறப்போரில் 98 சதம் பேர் இந்துக்கள் எனப் பாதிரியார் சொன்னார். இந்துக்கள் இறந்தோரைப் எரிக்கும் வழக்கம் உடையவர்கள். இறப்பதற்கு முன் அவர்களின் விருப்பை அறிந்து அவர்கள் விரும்பிய முறையில் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படுதல் அல்லது எரிக்கப்படுதல் வேண்டும்.

III.3.6 (i) மூத்தோர்களுக்கான மருத்துவ வார்டுகளை (geriatric care) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பாதுகாப்பிற்கான 2007ம் ஆண்டு சட்டத்தின்படி, எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட மருத்துவ மனைகள், வட்ட. கிராம அளவிலான மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் உருவாக்க வேண்டும்.

(ii) அதேபோல இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கான துயர் குறைக்கும் (Palliative care wards) மருத்துவ வார்டுகளையும் எல்லா மட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் உருவாக்க வேண்டும்.

(iii) துணையில்லாமல் வரும் நோயாளிகளை அரசு மருத்துவ மனைகளில் சேர்ப்பதில்லை என்கிற விதியை உடனடியாக நீக்க வேண்டும்.

III.3.7. (i) ஆதரவற்ற முதியோர்களுக்கான உதவித் தொகையை 1000 ரூ என்பதிலிருந்து 3000 ரூ ஆக உடனடியாக உயர்த்த வேண்டும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு அதை 5000 ரூ ஆக ஆக்க வேண்டும்.

(ii) ஓய்வூதிய உரிமைச் சட்டம் ஒன்றை அரசு உடனடியாக நிறைவேற்றி 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியப் பாதுகாப்பை அடிப்படை உரிமை ஆக்க வேண்டும்.

(iii)  ஆதரவற்றோர் ஓய்வூதியம் என்பதை மாறாத தொகையாக நிர்ணயிக்காமல் விலைவாசிப் புள்ளிக்குத் தக்காற்போல அவ்வப்போது அதிகரிப்பதாக அது அமைக்கப்பட வேண்டும்.

III.3.8 இப்படியான பிரச்சினைகளை மதவாத நோக்கில் அணுகி மத வெறுப்பைத் தூண்டும் ஆபத்தை ஜனநாயக சக்திகள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

III.3.9 பிரச்சினைகளை முழுமையாக ஆராயாமல் அவசரக் கோலத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமைகளைப் பேசுகிறவர்களும் அறிக்கைகள் வெளியிடுவது தவறான கருத்துக்கள் பரவ வழி வகுத்துவிடுகிறது. பின்னணியில் இருந்து இயங்கும் சில சமூக விரோத சக்திகளுக்கே அது பயன்படுகிறது. சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் பொறுப்புடன் இத்தகைய பிரச்சினைகளை அணுக வேண்டும் என இக்குழு கேட்டுக் கொள்கிறது.

III.3.10 பாதிரியார் தாமசை அருகிலுள்ள மலை ஒன்றின் மேல் இழுத்துச் சென்று சிலர் தாக்கியதாகவும், வேறு சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறுகிறார். காவல்துறை இதைக் கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்.

இணைப்பு

எங்கள் குழு மார்ச் 3, 7 தேதிகளில் பாலேஸ்வரம் சென்று கள ஆய்வு மேற்கொண்டதையும், தொடர்ந்து இடம் பெயர்க்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ள காப்பகங்கள் இரண்டிற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து வந்ததையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்தும் இது தொடர்பான விவரங்கள், சட்ட விதிகள், இறந்தோரைப் புதைப்பதற்காக இங்கு கடைபிடிக்கப்படும் ‘வால்ட்’ அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை எல்லாம் சேகரித்து எங்கள் அறிக்கையை மார்ச் மூன்றாம் வாரத்தில் இறுதி செய்தோம்.

அதற்குப் பின்னும் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இரண்டு நாள் முன்னர்வரை (ஏப்ரல் 18) அங்கு பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன. சுருக்கமாக அவற்றை இப்படித் தொகுக்கலாம்:

மார்ச் 27, 2018 அன்று பாலேஸ்வரம் நிலைய நிர்வாகி பாதிரியார் ஆர்.வி.தாமஸ் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நீதியரசர்கள் சி.டி.செல்வம் மற்றும் என். சதீஷ்குமார் அடங்கிய அமர்வு (Division Bench of Madras HC)விசாரித்தது. தமது நிலையத்திலிருந்தோரை மீட்டுத் தரவேண்டும் எனக் காப்பகம் தரப்பில் அந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாலேஸ்வரம் நிலையத்திலிருந்து வெளியே பல அரசு மற்றும் தனியார் காப்பகங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட 294 பேர்களில் 12 பேர்கள் அதற்குள் இறந்து போயுள்ள செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறிய நீதிமன்றம், எஞ்சியுள்ள 282 பேர்களை உடனடியாகப் பாலேஸ்வரம் நிலையத்திற்குத் திருப்பி அனுப்புமாறு ஆணையிட்டது. காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அதிகாரியை மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ஆணையிட்டது (The Hindu மற்றும் The Indian Express, Chennai, March 28).  “நமது வீடுகளிலும் கூட நாம் வயதானவர்களை வைத்துப் பராமரிக்கத் தயங்குகிறோம். இந்த நிறுவனம் நல்ல நோக்கத்துடன் இப்படியானவர்களுக்குச் சேவை செய்து வந்துள்ளது. அதில் ஏன் தலையிட வேண்டும்?” எனவும் நீதிமன்றம் வினவியது.

பாலேஸ்வரம் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உயிருடன் இருப்பவர்கள் யாரும் இப்போது அங்கு திரும்பிவரத் தயாராக இல்லை என மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாலேஸ்வரம் காப்பகத்தில் உரிய வசதிகள், கவனிப்பு எல்லாம் இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது (The News Minute, March 30,2018). இதைக் கேட்ட நீதிமன்றம், “பாலேஸ்வரம் காப்பகத்தில் மரணத் தறுவாயில் இருந்தவர்கள், வயதானவர்கள், மன நோயாளிகள் எனப் பல மாதிரியானவர்கள் இருந்துள்ளனர். மீண்டும் அங்கு திரும்பிவருவது குறித்து இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி உணரக் கூடும்” எனக்கூறி, வெளியேற்றப்பட்டுப் பல்வேறு நிறுவனங்களிலும் வைக்கப்பட்டு உள்ளவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களது விருப்பத்தை அறிந்து, விரும்புகிறவர்களை மீண்டும் பாலேஸ்வரம் காப்பகத்திற்குக் கொண்டுவருவதற்காக மூத்த வழக்குரைஞர் சுந்தர்மோகன் தலைமையில் வழக்குரைஞர் ஆணையம் ஒன்றை நியமித்தது. அவருக்குத் துணை செய்ய ஒரு உளவியல் மருத்துவரையும், பாலேஸ்வர நிலைய ஊழியர் அலெக்ஸ் பாண்டியனையும் அக்குழுவில் சேர்க்கவும் ஆணையிட்டது.

இரண்டு நாள் முன்னர் (ஏப்ரல் 18, 2018) பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமசைத் தொடர்புகொண்டு நாங்கள் பேசியபோது அவர் கூறியது:

“இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 294 பேர்கள் எனவும், அவர்களில் 53 பேர்கள்தான் இங்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லி, அவர்கள் மட்டும் இப்போது இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆறு பேர்கள்தான் இடைப்பட்ட காலத்தில் இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தச் செய்திகளை நம்ப முடியவில்லை. எங்கள் காப்பகத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 35 பேர் இறந்து போகிறார்கள். குறைந்தபட்சம் 29 பேர்களும் அதிகபட்சம் 60 பேர்களும் இறந்துள்ளனர். அப்படி இருக்கும்போது எப்படி இந்த இரண்டு மாதங்களில் 6 பேர்கள் மட்டுமே இறந்திருக்க முடியும்?”

மற்றவர்கள் திரும்பிவர விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறதே எனக் கேட்டபோது அதை எல்லாம் நம்ப இயலவில்லை என்றார் பாதிரியார் தாமஸ். உங்கள் அலுவலகப் பிரதிநிதியாக அலெக்ஸ் பாண்டியனும் அந்தக் குழுவில் இருந்தார்தானே எனக் கேட்டபோது,

“அவர் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கள் காப்பகத்தில் இருந்தவர்கள்தானா என அடையாளம் காட்டுவது மட்டுமே அவர் வேலையாக இருந்தது. அதற்கு முன்னதாகவே அவர்களிடம் பேசி வர விருப்பமில்லை எனச் சொல்ல வைக்கப்பட்டிருக்க வேண்டும்” – என்றார்.

பாதிரியார் தாமஸ் அவர்கள் சொல்வதை முழுமையாக ஏற்க இயலாது. இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களை எங்கள் குழுவினர் சந்தித்துப் பேசியபோது அவர்களிலும் பலர் தாங்கள் திரும்பிப் போக விரும்பவில்லை எனக் கூறியதி இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான பேர்களை வைத்திருப்பது, போதிய ஊழியர்கள் மற்றும் மருத்துவ வசதி இன்மை, இறந்துபோகும் நிலையில் உள்ளவர்களையும் மனநோயாளிகள் உட்படப் பலரையும் அதிக அளவில் ஒன்றாக வைத்திருந்தது முதலான காரணங்களையும் நாங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளோம். இதற்கெல்லாம் இந்த நிறுவனத்தைப் போலவே அரசும் பொறுப்பாக இருந்துள்ளதையும் விளக்கியுள்ளோம்.

எனினும் அதிரடியாகவும் அவசரக் கோலமாகவும் மாவட்ட நிர்வாகம் மெற்கொண்ட நடவடிக்கைகள் பல விடை தெரியாத குழப்பங்களுக்கும் தொடர்ந்து காரணமாகிவருகிறது.

இரண்டு நாள் முன்னர், ஏப்ரல் 18 அன்று காலை வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் காப்பக வளாகத்திற்கு வந்து ஒரு அறிக்கையை ஒட்டிச் சென்றுள்ளனர்.

அதில் இறப்போரை இப்படியான வால்ட் அமைப்பில் புதைப்பது என்பது இறந்தோரர்களது உடல்களை dispose பண்ணுவதற்காக அரசு ஏற்றுக்கொண்ட முறைகளில் ஒன்றாக உள்ளடங்கவில்லை எனவும், இதுவரை புதைக்கப்பட்ட உடல்களை எல்லாம் உடனடியாக வெளியே அகற்றி, வால்டைத் தூய்மை செய்து, மீண்டும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பாதிரியார் தாமஸ் குறிப்பிட்டார்.

இதற்கு நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் எனக் கேட்டபோது, “இப்படி மாவட்ட நிர்வாகம் திடீரென ஆணையிட்டுள்ளது நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு எதிரானது, எந்த நடவடிக்கையும் கூடாது என அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபோது எப்படி இவர்கள் திடீரென இப்படி ஆணையிட முடியும்? நாங்கள் இதை எங்கள் வழக்குரைஞர் மூலம் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

“அதற்குள் யாரேனும் இறந்தால் என்ன செயப் போகிறீர்கள்?”

“எங்களுக்கும் தெரியவில்லை. கிராமத்திலும் அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 40 பேர்களை அங்கு புதைக்க முடியுமா”?

இது குறித்தெல்லாம் அரசு நிர்வாகமும் சிந்திப்பதில்லை. அவர்கள் சொல்வது போல இப்படியாக உடலைப் புதைக்கிற முறை அரசு அனுமதிக்கப்பட்ட ஒன்று இல்லை என்றால் எல்லாவற்றையும் அகற்றி வால்ட்டை சுத்தப்படுத்திய பின்பு மட்டும் எப்படி அவர்கள் அனுமதி அளிக்க முடியும்? இடைக்காலத்தில் உடலைப் புதைக்க வழி ஏதும் சொல்லாமல் இப்படி ஆணையிடுவது என்பது நீதிமன்ற ஆணையை மறைமுகமாக முறியடிக்கும் உத்திதானே. எப்படியாவது அந்தக் காப்பகத்தை மூடுவது எனும் நோக்கத்துடன் அரசும் நிர்வாகமும் செயல்படுவதைத்தானே இது காட்டுகிறது.

“மாவட்ட நிர்வாகத்தின் ஆணைப்படி வால்ட்களில் உள்ள இறந்தோரின் எச்சங்களை முழுமையாக வெளியேற்றினால் உங்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கும் விடைக் கிடைத்ததாக ஆகிவிடும் அல்லவா. 1663 பேர்கள் அங்கு உண்மையிலேயே புதைக்கப்பட்டுள்ளார்களா, இல்லை எலும்புகளை நீங்கள் எற்றுமதி செய்துள்ளீர்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா எனத் தெரிந்துவிடும்தானே“ – எனக் கேட்டபோது,

“தாராளமாக. நாங்கள் அதற்கு எப்போதும் தயார். நான் அப்போது முதல் அதைத்தான் சொல்லி வருகிறேன். அரசு வந்து அப்படி ஒரு ஆய்வைச் செய்ய வேண்டுமானால் நாங்கள் வால்ட்களைத் திறந்து எச்சங்களை ஒப்புவிக்கத் தயார். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்” என்றார் பாதிரியார் தாமஸ்.

இந்த அறிக்கையில் நாங்கள் கோரியுள்ளபடி (1) வல்லுனர் குழு ஒன்றை அமைத்து வால்டுகளைத் திறந்து அரசு ஆய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். வால்ட் முறை பாதுகாப்பானதுதானா என்பதையும் அப்போதுதான் கண்டறிய முடியும். நாங்கள் கோரியுள்ளது போல (2) அந்த வால்ட் அமைப்பை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான தொலைவில், பாதுகாப்பான வடிவில் அமைப்பதும், (3) ஒரு hospice என்பது இறக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கு ஆறுதலும், கூடியவரை துன்பமற்ற கண்ணியமான இறப்பை அளிக்கும் நிறுவனமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் கடைபிடிக்கப்பட வேண்டும்.. எக்காரணம் கொண்டும் மனநோயாளிகள், சாகும்நிலையில் இல்லாத முதியோர்களைச் செத்துக் கொண்டுள்ளவர்களுடன் தங்க வைப்பதை நிறுத்த வேண்டும். (4) வால்ட் முறையை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் இடைக்காலத்தில் இறப்போர்களைப் புதைக்க மாற்று ஏற்பாட்டை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அது எதையும் செய்யாமல் இப்படியான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் இடுவது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது. தற்போது எண்ணிக்கையில் குறைவானவர்களே அங்குள்ளனர். அதிக பட்ச எண்ணிக்கையை நிர்ணயித்து கான்க்ரீட் வால்ட் முறை ஆய்வு செய்யப்பட்டு  முடிவு காணும்வரை கிராமத்திலேயே இறப்போரைப் புதைப்பதற்கான இடம் ஒதுக்கித் தருவது அரசின் கடமை. ஏதாவது செய்து இந்த நிறுவனத்தை முடக்க வேண்டும் எனும் நோக்கில் மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

தொடர்பு:

Prof  M.H.Jawahirullah :9500062791

Thiagu : 8939154752

A.Marx : 9444120582

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்க்சீயமும் இலக்கியமும்

கார்ல் மார்க்ஸ்  11                                                 

marx-mural

சோஷலிச எதார்த்தவாதம் என்கிற பெயரில் மார்க்சுக்குப் பிந்திய மார்க்சீயக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டிருந்த அணுகல்முறை தொடக்கம் முதலே  கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. 1980 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் என்.சி.பி.எச் நிறுவனம் சோஷலிச எதார்த்தவாதம் குறித்து ஒரு கலந்தாய்வை நடத்தியது. மூத்த எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட  அந்த நிகழ்வில் அக்கோட்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான தொ.மு.சி ரகுநாதன் மிக வெளிப்படையாக அது குறித்துத் தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டார். தமிழகத்தில் செயல்படும் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவை சார்ந்த இலக்கிய அமைப்புகளும் வெளிப்படையாகத் தாம் அந்தக் கோட்பாட்டைக் கை விட்டதாக அறிவிக்கவில்லை ஆயினும் கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் யாரும் சோஷலிச எதார்த்தவாதம் என்றெல்லாம் பேசியதில்லை.

சோஷலிச எதார்த்தவாதத்தைத் தூக்கிப் பிடித்த பேரா நா. வானமாமலை அவர்கள் எழுதிய தமிழ்ப் புதுக்கவிதை பற்றிய ஆய்வு நூலும், இறுதிவரை அக்கோட்பாட்டைக் கைவிடாதவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பேரா.கோ.கேசவன் எழுதிய மார்க்சிய இலக்கியக் கோட்பாடு குறித்த நூலும் இன்று ஆய்வுலகால் புறக்கணிக்கப்பட்ட நூல்களாகிவிட்டன.

இது இங்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. உலகெங்கிலும் இதுதான் நிலை. எனினும் இது குறித்து இரண்டு அம்சங்கள் நினைவிற்குரியன.

1.சோஷலிசக் கட்டுமானங்களாக உருவான சோவியத் யூனியன், மக்கள் சீனம் முதலானவற்றில்தான் ‘அடித்தளம் – மேற்கட்டுமானம்’ – என்கிற கலை இலக்கிய அணுகல் முறை சோஷலிச எதார்த்தவாதம் என்கிற பெயரில்  முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில் உலகெங்கிலும் இருந்த மார்க்சியக் கோட்பாட்டாளர்களும், சிந்தனையாளர்களும் இந்த ‘சோஷலிச எதார்த்தவாதம் என்கிற கோட்பாட்டை நிராகரித்து, பதிலாக மார்க்சிய நோக்கில் இலக்கியத்தை அணுகுவது குறித்த மிகவும் நுணுக்கமான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் முன்வைத்தனர். ருஷ்யாவுக்குள்ளேயே விக்டர் ஷ்க்லொவ்ஸ்கி, போரிஸ் எய்ஷன்பாம் முதலானோர் முன்வைத்த  வடிவவியல் (Russian Formalism),  மிஷேல் பாக்தின் முன்வைத்த  ‘டயலாஜிசம்’ ரோமன் ஜாகப்சன் ரெனி வெல்லாக் முதலானோருடன் இணைந்து உருவாக்கிய ப்ரேக் மொழியியல் வட்டம், ஜெர்மனியில் வால்டர் பெஞ்சமின், தியோடர் அடர்னோ, ஹெர்பர்ட் மார்ல்யூஸ் முதலானோர் உருவாக்கிய ஃப்ராங்ஃபர்ட் பள்ளி மார்க்சியம், ஃப்ரான்சில் அல்துஸ்ஸர் முன்னெடுத்த அமைப்பியல் மார்க்சியத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட மேல்நிர்ணயம் (overdetermination) எனும் அணுகல்முறை, இத்தாலியில் அந்தோனியோ கிரம்ஸ்கி முன்வைத்த சமூக மேலாண்மை (hegemony) மற்றும் அடித்தள மக்கள் (subaltern) முதலான கோட்பாடுகள். ரேமன்ட் வில்லியம்சின் பண்பாட்டுப் பொருள்முதலியம் (cultural materialism). அமெரிக்க மார்க்சியரான ஃப்ரெடெரிக் ஜேம்சனின் critical theory, டெர்ரி ஈகில்டனின் மிகவிரிவான இலக்கிய வாசிப்புகள் முதலான கலை இலக்கிய முயற்சிகள், கோட்பாடுகள் இயக்கங்கள் எல்லாமும் மார்க்சீய அடித்தளத்தின் மீது நின்று, சோஷலிச எதார்த்தவாதத்திற்க மாற்றான புதிய சிந்தனைகளை முன்வைத்தன. இலக்கியத்தை அணுகுதல் குறித்த மிக முக்கியமான பங்களிப்புகளை மார்க்சிய அடிப்படையினூடாக இவை உலகிற்கு அளித்தன. வெறும் இலக்கியம் என்பவற்றோடும் இவர்கள் முடங்கிவிடவில்லை. பெர்டோல்ட் ப்ரெக்ட் அரங்கவியலிலும், செர்கே ஐசன்ஸ்டைன் திரைத்துறையிலும் மார்க்சீயக் கோட்பாட்டை அவற்றுக்குரிய வகையில் பயன்படுத்தினர்.

2.சோஷலிச எதார்த்தவாதம் இன்று உலகளவில், எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள போதிலும் அதை இறுக்கமாக முன்வைத்தவர்கள்தான் இன்னொரு பக்கம் தொழிலாளி வர்க்கம் என்பதோடு பிற சுரண்டப்படும் வர்க்கத்தினரின் கலைகள் மற்றும் இலக்கிய வெளிப்பாடுகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்தனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சோஷலிச எதார்த்தவாதத்தை மிகவும் வரட்டுத் தனமாக முன் வைத்தவர் என இன்று ஒதுக்கப்படும் பேரா.நா.வானமாமலை அவர்கள்தான் நாட்டுப்புறவியல், கதைப்பாடல்கள் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கும், அவற்றைப் பதிப்பதற்கும் உரிய முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டவர். பவுத்தம் குறித்த ஆய்வுகளில் நாட்டம் செலுத்தியவரும் கூட. கோ.கேசவன் அவர்கள்தான் பள்ளு இலக்கியம் குறித்தும் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் குறித்தும் முன்னோடி ஆய்வுகளைச் செய்தவர்.

prawerமார்க்சிய இலக்கியக் கோட்பாடு தோற்றுவிட்டது என அவதூறு செய்வோர் இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கில் கொள்வது இல்லை.

மார்க்சோ எங்கல்சோ சோஷலிச எத்ர்ர்த்தவாதம் என்றெல்லாம் எதையும் சொல்லவில்லை. மனித வாழ்வுக்கும் அதனூடாக உருவாகும் மனிதப் பிரக்ஞைக்கும் உள்ள உறவைத்தான் அவர்கள் சுட்டிக் காட்டினர். “மனிதர்களின் பிரக்ஞை என்பது பிரக்ஞைபூர்வமான மனித இருப்பின் ஊடாகவே உருவாகிறது. (எல்லோரும் நினைப்பதுபோல) பிரக்ஞை வாழ்வை நிர்ணயிக்கவில்லை. வாழ்க்கைதான் பிரக்ஞைக்குக் காரணமாகிறது” என்பதுதான் மார்க்ஸ் சொன்னது. மார்க்சியம் என்பது அடிப்படையில் ஒரு பொருள்முதல்வாதம். அது பொருண்மையான வாழ்வை முதன்மைப் படுத்துவது. உலக வாழ்வு அதனூடாக அமையும் மனித உறவுகள் ஆகியவற்றின் ஊடாகத்தான் எண்ணங்கள் உருவாகின்றனவே ஒழிய எண்ணமும் உணர்வும்தான் உலக வாழ்வை ஆட்டுவிகின்றன என்கிற கருத்தியல் சார்ந்த உலகப்பார்வையை மார்க்சியம் ஏற்பதில்லை. இந்தக் கருத்திலிருந்தான் அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Superstructure) என்கிற கருத்தாக்கம் மார்க்சியர்களால் முன்வைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் சமத்துவ அடிப்படையில் உள்ளதா, ஏற்றத்தாழ்வான, சுரண்டல் அல்லது தீண்டாமை முதலான ஒதுக்கல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்துத்தான் அச்சமூகத்தின் பண்பாடு, கருத்துக்கள், ஒழுக்க வரையறைகள், மதம் மற்றும் கலை வடிவங்கள், எல்லாம் உருவாகின்றன. பின்னால் சொன்ன இந்த பண்பாடு, ஒழுக்கம், நீதி, சட்டம் எல்லாமே மார்க்சின் கருத்துப்படி “மனித மூளையில் உருவான மாயத்தோற்றங்கள் (“phantoms formed in the brains of men” – Marx) தான்.

இந்தக் கருத்தினடியாக உருவானதுதான் அடித்தளம் – மேற்கட்டுமானம் என்கிற உருவக வகைப்பட்ட கருத்தாக்கம். இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட எல்லாச் சிந்தனை வெளிப்பாடுகளும் அன்றைய சமூகத்தின் பொருளாயத உறவுகளால் தீர்மானிக்கப்படுபவைதான். இந்த உறவுகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் மேல்கட்டுமானம்தான் இலக்கியம், மதம், ஒழுக்கம் எல்லாம். மார்க்ஸ் – எங்கல்ஸ் இருவரும் மிகவும் பொருட் செறிவுடனும் ஆழமாகவும் முன்வைத்த இக்கருத்து அடுத்த தலைமுறையில் அத்தகைய ஆழமான பொருட் செறிவு கைவிடப்பட்டு மிகவும் இறுக்கமாக்கப்பட்டது.   மேற்கட்டுமானத்திற்கு முற்றிலும் இரண்டாம் நிலையிலான, செயலூக்கமற்ற ஒரு பங்கே இந்தக் கருத்தக்கத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது.

இப்படியான ஒரு இறுக்கமான சிந்தனையின் பின்னணியில்தான் முதற்கட்ட சோஷலிச நாடுகளில் சோஷலிச எதார்த்தவாதம் எனும் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இதன் மூன்று அடிப்படைகளாக ரேமன்ட் வில்லியஸ் கீழ்க்கண்டவற்றைச் சொல்வார். 1.Partinost : தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு விசுவாசமாக கலை இலக்கியப் படைப்பு அமைய வேண்டும். 2.Narodnost : கலைப்படைப்பு என்பது எளிமையானதாகவும் எல்லோரையும் ஈர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும். 3. Klassovost : வர்க்க நலன்களுக்கு எழுத்தாளன் / கலைஞன் விசுவாசமாக இருக்க வெண்டும்.

critical-theory-frankfurt-school-7-638ஆக எழுத்தாளன் என்பவன் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் இதான் மூலம் சொல்ல வருவது. 1934 ம் ஆண்டில் கூட்டப்பட்ட சோவியத் யூனியனின் எழுத்தாளர் மாநாடு இந்த சோஷலிச எதார்த்தவாதக் கோட்பாட்டைத் தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. கிறிஸ்டோஃப் காட்வெல், ஜார்ஜ் லூகாக்ஸ் முதலானோர் பெரிய விமர்சனங்கள் ஏதும் இல்லாமல் இதனை ஏற்றுக் கொண்டு தம் எழுத்துக்களை முன்வைத்தனர். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களே சரியான படைப்புகளைப் படைக்க்முடியும் அல்லது கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்கள் படைப்பதெல்லாம் சரியான இலக்கியம் என்கிற இந்த அணுகல்முறையே இறுதியாக அதன் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. பூர்போன் ஆளும் வம்சத்தைச் சேர்ந்த பால்சாக்கும், பெரும் பண்காரரும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவருமான டால்ஸ்டாயும் உன்னதமான இலக்கியங்களை எப்படிப் படைக்க முடிந்தது என்கிற கேள்வியை யாரும் வெளிப்படையாக முன்வைக்க இயலாத சூழல் 1930 களில் நிலவியது.

இன்றைய மார்க்சியர்கள் இந்த வகையிலான அடித்தள – மேற்கட்டுமான உறவையும், கட்சி விசுவாசத்தை மட்டுமே இலக்கணமாக கொண்டு எழுதப்படும் எழுத்துக்களையும் ஏற்பதில்லை. டெர்ரி ஈகிள்டன் இத்தகைய அணுகல் முறையைக் கொச்சை மார்க்சியம் (vulgar Marxism) என்பார். “கலை, அரசியல், சட்டம், மதம் என எந்த ஒரு சமூக மேற்கட்டுமானக் கூறும் தனக்கே உரித்தான உள் வளர்ச்சியையும், பரிணாமத்தைம் கொண்டிருக்கும். அவற்றை வெறும் வர்க்கப் போராட்டம், பொருளாதார நிலை ஆகியவற்றால் மதிப்பிட முடியாது. மேற்கட்டுமானத்தில் இருப்பவை எல்லாம் முற்றிலும் அடித்தளத்தால் நிர்ணயிக்கப்படுகிற, செயலூக்கமற்ற அம்சங்கள் மட்டுமே அல்ல. அவை மனிதப் பிரக்ஞையில் தாக்கம் செலுத்தும் சில கூறுகளையும் கொண்டிருக்கும். “கருத்தியல்” (ideology) என்பது அப்படியான ஒன்று” என்பார் அவர்.

ஒப்பீட்டளவில் தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய இந்தக் கருத்தியல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அரசியல், மதம், அறவியல், அழகியல் போன்ற சமூகப் பிரக்ஞையை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஒரு சோஷலிசக் கட்சி ஆளும் நாட்டிலும் ஊட ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை நியாயப்படுத்தும் கருத்தியல் மேற்கட்டுமானத்தில் அமையக்கூடும்.. எனவே அடித்தள வர்க்கத்தில் பிறந்ததனாலேயோ அல்லது அடித்தள வர்க்கக் கட்சிக்கு விசுவாசமாக இருபதாலேயோ ஒருவரது படைப்பு முற்போக்கானதாக மட்டுமே இருக்கும் எனச் சொல்ல இயலாது. அதேபோல அடித்தள வர்க்கத்தில் பிறக்காதவராக இருந்தபோதும் ஒருவரது படைப்பு விடுதலைக் கூறுகளைக் கொண்டதாக இருக்க முடியும்.

எனவே ஒரு கலைப்படைப்பையோ இல்லை ஒரு கலைஞனையோ முற்றிலும் இப்படியான வாய்ப்பாடுகளைக் கொண்டு மதிப்பிடுவது இயலாது.

சோஷலிச எதார்த்தவாதம் உருப்பெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில் (1914-1930) அதற்கு எதிர்ப்பும் 1920 தொடங்கி ருஷ்யாவில் தலை காட்டியது. ருஷ்ய வடிவவியல் வாதம் (Russian Formalism) இப்படியாக வெளிப்பட்ட ஒரு புதிய போக்கு. இது கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகியது. விக்டர் ஷ்க்லொவ்ஸ்கி, போரிஸ் டொமஷெவ்ஸ்கி, கிரிகோரிகு கோவ்ஸ்கி முதலானோர் இந்தப் போக்கை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ‘வடிவவியல்’ என்பது அவர்கள் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. மாறாக அந்தப் பெயர்  அவர்களுக்கு அவர்களை விமர்சிப்பவர்களால் சூட்டப்பட்டது.  பின்னாளில் ஜெர்மனி, பிரேக் முதலான பகுதிகளில் உருவான இலக்கியப் போக்குகள், ரஷ்யாவிலேயே உருவான பாக்தினின் ‘Diologism’ அறுபதுகளில் மேலுக்கு வந்த அமைப்பியல் முதலானவற்றில் வடிவவியலின் தாக்கம் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

மற்றமையை உள்ளடக்குவது என்கிற கருத்தக்கத்திற்கு மிகையில் பாக்தின் முன்வைத்த டயலாஜிச அணுகல்முறை முதன்மை அளித்தது. ஒரு படைப்புக்குள் அல்லது ஒரு இலக்கியப் போக்குக்குள் மாற்றுக் குரல்களின் இருப்பு என்பதை அது முன் நிறுத்தியது.  தமிழகத்திலும் கூட தொண்ணூறுகளில் தலித்தியம், பெண்ணியம் முதலியன மேலுக்கு வந்தபோது பாக்தின் பெரிதாகப் பேசப்பட்டது நினைவிருக்கலாம். கலையை ஒற்றைப் பண்புடையதாக்குவதற்கு ஒரு எதிர்க் குரலாக மேலுக்கு வந்த போக்கு இது. பல வர்க்கம், சாதி, மொழி என அமைந்த இந்தியா போன்ற நாடுகளில் இந்த பலகுரல் ஒலிப்பு என்பதுதான் சரியான கலை இலக்கியப் போக்காக இருக்க முடியும்.

Frankfurt-School1920 களில் வால்டர் பெஞ்சமின், தியோடர் அடர்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ் ஆகியோரால் ஜெர்மனியை மையமாகக் கொண்டு உருவான போக்குத்தான் ‘ஃப்ரான்க்ஃபர்ட் பள்ளி’ என்பது. மக்கள் திரள் பண்பாடு (mass culture), தகவல் தொடர்பு (communication), உளப்பகுப்பாய்வு, இருத்தலியல் கோட்பாடு, பண்பாட்டு விமர்சன ஆய்வுகள் (critical cultural studies)  முதலானவற்றை எல்லாம் உள்ளே கொண்டுவந்து மார்க்சிய அழகியலை இது வளப்படுத்தியது.

சோஷலிச எதார்த்தவாதத்தை ஏற்காத இன்னொரு முக்கிய மார்க்சியக் கலைஞர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியரான பெர்டோல்ட் ப்ரெக்ட். ஜெர்மனியில் பிறந்து நாஜி ஆட்சியில் நாட்டை விட்டோடித் தஞ்சம் புகுந்த அமெரிக்காவிலும் வாழ முடியாமல் இறுதியில் போருக்குப் பிந்திய கிழக்கு  ஜெர்மனியில் இறுதிக் காலத்தைக் கழித்த அவருக்கும் எதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடித்த ஜார்ஜ் லூகாக்சுக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன். ஒரு கலைப்படைப்பின் வெற்றி என்பது  பார்வையாளன் அல்லது வாசகனை கதாபாத்திரம் அழும்போது அழவைத்து, சிரிக்கும்போது சிரிக்க வைத்து, படைப்புடன் ஒன்ற வைப்பதில்தான் அடங்கியுள்ளது என்கிற கருத்தை ப்ரெக்ட் மறுத்தார். மாறாக அவனை படைப்பின் போக்கிலிருந்து அந்நியப்படுத்திச் (defemiliarisation) சிந்திக்கவைப்பதுதான் கலைப் படைப்பின் நோக்கம் என்றார் ப்ரெக்ட்.

மார்க்சிய அழகியல் மற்றும் கலை இலக்கியக் கோட்பாட்டிற்கு இன்னொரு பரிமாணம் சேர்த்த வால்டர் பெஞ்சமினும் ப்ரெக்டும், கலைப்படைப்புகளின் இன்னொரு முக்கிய பரிமாணமான சமூக உற்பத்தி என்பதற்கு முக்கியத்துவம் அளித்தனர். The Author as Producer எனும் புகழ்பெற்ற கட்டுரையில் வால்டர் பெஞ்சமின் ஒரு படைப்பாளி என்பவன் முதலில் அவன் ஒரு சமூக உறுப்பினன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பார். சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போரில் அவனது நிலைபாடு என்ன என்பதை அவன் தெளிவாக்க வெண்டும். கலை என்பது இப்போது விலைக்கு விற்கப்படும் பண்டம் என்றாகிவிட்ட நிலையில் அந்த லாபகரமான தொழிலில் படைப்பாளி என்பவன் ஒரு அங்கம். எனவே இனி படைப்பாளி என்பவனுக்கு எந்த ஒரு புனித இடமும் கிடையாது. நடக்கும் வர்க்கப் போராட்டத்திலிருந்து அவன் ஒதுங்கி நிற்க முடியாது. எந்தப் பக்கம் எனத் தீர்மானி. தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் நில் என்றார் பெஞ்சமின். கலைப் படைப்பின் உற்பத்தியில் சக உழைப்புச் சக்திகளை விமர்சனமின்றி ஏற்கக் கூடாது. அவர்களைப் புரட்சிகர சக்தியாக ஆக்க வேண்டிய கடமை அவனுக்கு உண்டு. கலிஞனுக்கும் அவனது பார்வையாளனுக்கும் இடையில் ஒரு புதிய புரட்சிகர உறவை அது ஏற்படுத்த வேண்டும்.

பெஞ்சமினின் கோட்பாட்டிற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக ப்ரெக்டின் அரங்க இயக்கம் அமைந்தது.

(இன்னும் இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் நிறைவுறும். அடுத்த இதழில் இந்தியா குறித்து கார்ல் மார்க்ஸ் கூறியதென்ன?)

 

 

 

 

 

 

 

அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 14     

தீராநதி, மார்ச் 2018              

பௌத்தத்தில் பத்தினி வணக்கம் முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தன்னை ஒரு பவுத்த காவியமாக முன்னிறுத்திக் கொள்ளும் மணிமேகலை இவ்வகையில் சற்று பௌத்த மரபிலிருந்து விலகி நிற்கிறது எனலாம். தான் தேர்ந்து கொண்ட என்பதைக் காட்டிலும் தனக்குத் தேர்ந்தளிக்கப்பட்ட வாழ்வைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு, தனது பேறாய்க் கிடைத்த அந்த அற்புத்தப் பாத்திரத்துடனும் உள்ளத்தில் சிலிர்த்த பேருவகையுடனும் பிச்சை ஏற்க வீதியில் இறங்கிய மணிமேகலை, “பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் பெரும் பெருமைக்குரியதாய் அமையும்” என்றனள்.

இந்த இடத்தில் மணிமேகலைக் காப்பியத்தினுள் இரு துணைக்கதைகள் பதிக்கப்படுகின்றன. அவற்றினூடாக இன்னும் சில அடிப்படையான பௌத்த அறங்கள் முன்வைக்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல இந்தப் பின்னணியில் தென் ஆசியப் பவுத்தப் பிரபஞ்சம் ஒன்றும் நம் முன் விரிக்கப்படுகிறது.

இங்கு அறிமுகமாகும் காயசண்டிகை எனும் பாத்திரத்தின் துயர் நிறைந்த கதையைச் சொல்லும்முன் அவள் வாயிலாக அறிமுகமாக்கப்படும் ஆதிரை  மற்றும் அவளது கணவன் சாதுவன் ஆகியோரின் வரலாறு பௌத்த அறங்களை விளக்க முற்படுகிறது எனப் பார்க்கலாம். பவுத்தம் எவ்வாறு மக்களுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டு, சில அம்சங்களில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியும், சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் இடமளித்தும் மக்கள் மத்தியில் தனக்கொரு இடத்தை நிறுவிக்கொள்கிறது என்பதையும் காணலாம்.

“ஒரு குளத்திற்கு அதனுள் பூத்திருக்கும் தாமரை மலர்கள் அழகு சேர்ப்பன. அவறுள் ஓங்கி வளர்ந்து அழகு சேர்க்கும் ஒரு திருமலர் போன்ற கற்பின் சிறப்பைப் பெற்றவளான ஆதிரை வாழும் வீடு இதுதான்” எனக் கூறி அவளிடம் சென்று முதற் பிச்சை ஏற்றல் தகும் என காயசண்டிகை சொல்வதனூடாக ஆதிரை சாதுவன் இணையரின் வரலாறு இங்கே பதியம் கொள்கிறது.

சாதுவன் தீய ஒழுக்கங்கள் பலவற்றின் ஊடாக மனையறம் பேணற்குரிய தகவு அற்றவனாகி, மனைவியைப் பிரிந்து, கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். வட்டாடல், சூதாடல் என எல்லாத் தீய ஒழுக்கங்களின் ஊடாகவும் தன் பொருளனைத்தையும் இழந்தான். அவனிடம் பொருள் இருந்தவரை அவனைப் பேணிக் கொண்டாடிய அக் கணிகையும் அவனை ஒன்றும் இல்லாதவன் எனப் பழித்துக் கைவிட்டாள்.

மீண்டும் செல்வந்தன் ஆகவேண்டும் என்கிற அடங்கா வேட்கையுடன் சாதுவன் மரக்கலம் ஒன்றில் ஏறி வணிகர்களுடன் பொருள் தேடிச் சென்றான். கோவலனின் கதையுடன் சில அம்சங்களில் ஒப்புமை உடைய சாதுவனின் வரலாறு பல அம்சங்களில் அதிலிருந்து வேறுபடுகிறது. மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் அவளை வெறும் பொறுளாசை மிக்க ‘வேசி’ என்பது போன்ற வழமையான கருத்தாக்கத்திலிருந்து வேறுபடுத்தி நிறுத்துவார் இளங்கோ அடிகள். மாதவியைப் பொருத்த மட்டில் அதே பார்வையுடன் அவளை இன்னும் ஒரு படி உன்னதப் படுத்தி பௌத்த அறம் பேணும் துறவு நிலை எட்டுபவளாகச் சித்திரிக்கும் சாத்தனார் இங்கு இந்தக் கணிகையை வழக்கமான பொதுப் புத்தி எப்படிப் பார்க்குமோ அப்படியே பதிவு செய்கிறார்ம. எனினும் காப்பியத்தின் போக்கு அக் கணிகையைத் தொடர்வதில்லை. அவள் இங்கு முக்கிய பாத்திரம் இல்லை.

கணிகையின் தொடர்பால் பொருளிழந்த கோவலனைப் போலவே மீண்டும் பொருள் தேடச் செல்லும் சாதுவனின் வரலாறும் பெரிதும் அதிலிருந்து வேறுபடுகிறது. அவன் சென்ற கலம் கவிழ்கிறது. எனினும் அவன் உயிர் பிழைத்து நிர்வாணச் சாரணப் பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலைப் பக்கமாய்க் கரை ஒதுங்குகிறான்.

மரக்கலம் சிதைந்து, சிதைந்த மரத் துண்டுகளைப் பற்றிக் கொண்டு அவனைப் போலவே கடலில் தத்தளித்த சக வணிகர்களில் சிலர் புகாரை அடைந்து சாதுவனின் மனைவி ஆதிரையிடம் அவன் விபத்தில் மறைந்தான் என்பதாகத் தகவல் அளிக்கின்றனர். கணவன் ‘இறந்த’ சேதி அறிந்த ஆதிரை, “சிறந்த என் கணவன், தன வினைப்பயன் உற்று இறந்தனன். நானும் உயிர் நீத்து அவனைத் தொடர்வேன்” எனக் கூறி தீப்பாய்கிறாள். ஆனால் அந்தத் தீ அவளைப் பற்றவும் சுட்டெறிக்கவும் மறுக்கிறது. தீக்குழியுனுள் அவள் அமைத்துக் கொண்ட படுக்கையும், அவள் உடுத்தியிருந்த்க கூறையும், அவள் கூந்தலை அணிசெய்திருந்த மாலையும் தீப்பற்றாது நின்றதோடன்றி தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல எந்த ஊறும் அடையாது ஒளிவீசி நின்றாள்  ஆதிரை.

“தீயும் கொல்லாத் தீவினையாடி ஆயினேன்” என அவள் ஏங்கி நிற்கும் தருணம் அசரீரி இறங்கி அவள் கனவன் உயிர் பிழைத்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது. ஆறுதல் கொண்டு வீட்டிற்குச் சென்று கணவனின் வருகைக்குக் காத்திருந்த ஆதிரையை, தன் கற்புத் திறத்தால் மழை பொழிய வைக்கவும் வல்ல பிற பத்தினிப் பெண்டிர் தொழுது போற்றும் பெருமை பெற்றவள் எனக் கூறுவதன் ஊடாகப் பத்தினிப் பெண்டிர் பெருமையைத் தொடர்கிறார் சாத்தனார்.

இன்னொரு பக்கம் கதை சாதுவனைப் பின்தொடர்ந்து பவுத்த அறங்களை விளக்க முற்படுகிறது. பவுத்த அறங்களை மட்டுமின்றி பவுத்தம் மக்களை அணுகிய வழிமுறைகளில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாக சாதுவன் வரலாறு பதிக்கப்படுகிறது. பிற அவைதீக அறக் கோட்பாடுகளை முன்நிறுத்திய சமணம் முதலான மதங்களைப் போலன்றி பவுத்தம் நீண்ட காலம் இந்திய மண்ணிலும் இன்னும் தென் ஆசிய நாடுகளிலும் நிலை கொண்டதற்கான காரணங்களில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகவும் அமைகிறது.

அங்கே கரை ஒதுங்கிய சாதுவன் ஒரு மலையடிவார மரநிழலில் மயங்கிக் கிடந்த தருணத்தில், அவ்விடத்தே வசிக்கும் நர மாமிசம் உண்ணும் வழமையுடைய நக்க சாரணர் அவனைக் கண்டனர். ‘தனியனாய் வந்து துயருற்றுக் கிடக்கிறான். எனினுன் ஊனுடை இவ்வுடல் நமக்கு நல்ல உணவாகலாம்’ என எண்ணி அவனை அணுகி எழுப்பினர்.

சாதுவன் வணிகன். பல நாடுகள் சென்று அம்மக்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களிடம் தன் பண்டங்களை விற்று தனக்குத் தேவையானவற்றை வாங்கி வரும் திறன் மிக்கவன். “மற்றவர் பாடை (மொழியை) மயக்கறு மரபிற் கற்றவன்” என அவனைக் குறிப்பார் சாத்தனார். யராயினும் அவரவர் பாடையில் (மொழியில்) பேசுதல் என்பது அவரோடு நட்பு பேணுதற்கும், நம் கருத்துக்களை அவரிடத்தே கொண்டு செல்லவும் நல்ல உபாயமாக இருக்கும். பிற மதங்கள் இங்கு வரும்போது அவை இங்குள்ள மொழிகளில் மக்களை அணுகியதையும், அத்னூடாக இங்குள்ள மொழிகளுக்கு அவை வளம் சேர்த்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கல் தகும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் இங்கு தமிழுக்கு வளம் சேர்த்தமையையும், இங்கு அவை நிலை கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்ததையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்தும் அணுக வேண்டும். தம் மொழியை உன்னதப் படுத்தி தேவ பாஷையாக நிலை நிறுத்தல் என்பதற்குப் பதிலாக அவை நம் மொழியில் பேசி நம் மொழிக்கு வளம் சேர்த்து நம்மோடு நிலை கொண்டன. சாதுவன் மற்றவர் மொழியை மயக்கமறக் கற்றவன் மட்டுமல்ல. அதை அதன் மரபு அறாமலும் கற்றவன்.

தம் மொழியில் சாதுவன் பேசியதைக் கண்டு வியப்புற்ற அச்சாரணர் அவனை வணங்கி அவர்களின் குருமகனிடம் அழைத்துச் சென்றனர். கள் காய்ச்சும் பானைகள், கழிவுகளின் முடை நாற்றம், வெயிலிற் காய்ந்து கிடக்கும் வெள்ளெலும்புத் துண்டுகள் சூழ்ந்த தன் இருப்பிடத்தில் கரடியொன்று தன் துணையோடு இருந்தாற்போலக் காட்சியளித்தான் அந்தக் குரு மகன்.

உரையாடல் தொடங்கியது. மொழி அவர்களைப் பிணைத்து நெருக்கமாக்கியது என்கிறார் சாத்தனார். “பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி” குளிர்ந்த பரநிழலில் அவனருகே சென்றமர்ந்த சாதுவனை, “நீ இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாருங்கள் மக்களே! இந்த நம்பிக்கு மிக்க இளமையுடைய ஒரு பெண், வெம்மையான கள், மாமிசம் எல்லாவற்றையும் வேண்டும் மட்டும் கொடுங்கள்” என ஆணையிட்டான்.

இந்த விருந்துபசார வார்த்தைகள் சாதுவனைத் துயருறச் செய்தன என்கிறார் சாத்தனார். இந்த இடத்தில் சாதுவனுக்கும் சாரணர் தலைவனுக்கும் இடையில் விவாதம் தொடங்குகிறது. “கொடிய சொற்களைக் கேட்டேன்! இது எதுவும் வேண்டேன்” என அவன் அவசரமாக மறுத்தது அந்தப் பழங்குடித் தலைவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆத்திரம் மட்டுமல்ல வியப்பும் தோன்றியது.

“அழகிய பெண்கள், சுவை மிகு உணவு இவை எல்லாம் இல்லாவிட்டால் மக்கள் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன்? அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல்!”

சாதுவன் சொல்லத் தொடங்கினான்:

“மயக்கும் கள்ளையும், உயிர்களைக் கொல்லுதலையும் சீறிய அறிவுடையோர் ஏற்பதில்லை. பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது.  நல்லறங்களைச் செய்வோர் நல்லுலகம் அடைதலும், நல்லதல்லாதவற்றைச் செய்வோர் அருநரகடைதலும்தான் முடிவு என உணர்ந்தோர் அவற்றைக் களைந்தனர். நீயும் இதை அறிந்து கொள்”

கட கடவென நகைத்தான் அந்தத் தலைவன். “உடம்பை விட்டகலும் அவ்வுயிர் ஒரு வடிவத்தில் இன்னொரு இடம் சென்று புகும் என்றாயே அது எப்படி? எனக்குச் சொல்” என்றான்.

“கோபப்படாமல் இதக் கேள். உடம்பில் உயிர் தரித்திருக்கும் வரை உடல் உறும் இன்ப துன்பங்களை அது உணரும். ஆனால் அந்த உயிர் உடலை விட்டு அகன்றால் எரியும் நெரிப்பில் இட்டாலும் அதை அது உணராது. எனவே இவற்றை எல்லாம் உணர்கின்ற உயிர் ஒன்றும் உள்ளதென்பதை அறிந்து கொள்” – இது சாதுவன்.

இது கேட்டதும், எரியும் விழிகளையுடைய அந்த நாகர் தலைவன் நன்கறிந்த அந்த செட்டியின் (சாதுவனின்) காலில் வீழ்ந்தான். “கள்ளையும், கறியையும் விட்டுவிட்டல் இந்த உயிரை நான் எப்படிக் காப்பேன். நான் சாகும் வரை வாழ்வதற்குரிய நல்லறங்களைச் சொல்” என வேண்டி நின்றான்.

“நல்லது. நன்னெறியில் உன் வாழ்க்கை தொடரட்டும். உனக்குத் தகுந்த (ஒல்லும்) அறம் உரைப்பேன். என்னைப்போல மரக்கலம் கவிழ்ந்து தப்பிப் பிழத்து வந்தடைவோரைக் கொல்லுதலைக் கைவிடு. அவர்களின் அரிய உயிரைக் காப்பாற்று. மூப்படைந்து வீழ்ந்து சாகும் விலங்குகளை அல்லாமல் பிற உயிர்களைக் கொல்லும் செயலைக் கைவிடு.”

சாதுவனின் இந்த அறவுரையைக் கேட்ட அந்தச் சிறுமகன், “இது எனக்குப் பொருந்தும். இதை ஏற்று என்னால் கடை பிடிக்க இயலும். இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள். இதுவரை மரக்கலம் கவிழ்ந்துத் தப்பி வரும் மக்களை எல்லாம் கொன்றோம். உண்டோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டனவே இவை. எல்லாம் சந்தனம், அகில் முதலான மண மரங்கள், மெல்லிய ஆடைகள், மிக்க மதிப்புடைய பொருட் குவியல்கள். எடுத்துக் கொள்” என்றனன்.

அவற்றை ஏற்றுக் கொண்ட சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகண் வந்த கப்பலொன்றில் ஏறி ஊர் திரும்பினான். அன்பு மனைவி ஆதிரையோடு இனிய அற வாழ்க்கை வாழ்ந்தான் என்பது மணிமேகலை உரைக்கும் சாதுவன் – ஆதிரை வரலாறு.

மணிமேகலைக் காப்பியத்துல் பதித்து அழகு சேர்க்கப்பட்ட இந்தத் துணைக் கதையின் ஊடாக பவுத்தப் பரவல் குறித்துச் சிலவற்றை நம்மால் உணர் முடிகிறது. பவுத்தத்திற்கு இறுக்கமான அறக் கோட்பாடுகள் இருந்த போதும் அவற்றை மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இறுக்கமாகவும் சமணத்தைப் போன்று மிக உச்சமாகவும் வற்புறுத்துத்துவதில்லை. மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து அவை தகவமைக்கப்பட்டன. இந்தக் கதஈல் உயிர்க் கொலை, மது, மாமிசம் பாலியல் பிறழ்வுகள் ஆகிய நான்கையும் கைவிடச் சொல்லித் தன் அறவுரையைத் தொடர்கிறான் சாதுவன். பெண்டிரை விடுதல் என்பது முற்றிலும் பாலியல் வேட்கையைக் கைவிடல் என்பதல்ல. இப்படியாக இளம் பெண்களைப் பரிசளித்தல், தாசிகள் என்றொரு பிரிவினை உருவாக்கல் முதலானவற்றைக் கைவிடுதலே பெண்டிரைக் கைவிடல் என்பதன் பொருளாகிறது. முற்றான துறவு என்பதையோ காமம் என்கிற உணர்வையே கைவிட வேண்டும் எனவோ சாதுவன் வற்புறுத்தவில்லை.

நாகர்களோ ஒரு கடலோர மலையடிவார நிலப்பகுதியில் வாழ்வோர். விவசாய வாய்ப்பு அங்கில்லை. கடலுணவு, மாமிசம் ஆகியவற்றை அவர்கள் தவிர்க்க இயலாது. எனவே இந்த அம்சத்திலும் சாதுவன் ஒரு சமரசத்திற்கு இணங்குகிறான். மாமிசத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் விருந்துகளுக்கெனவே கொல்லுதல் முதலானவற்றைத் தவிர்த்தல் தகும். இறந்த உடலங்களை உண்ணுதல் ஏற்கத்தக்கது என இந்த அம்சத்திலும் ஒரு முடிவு எய்தப்படுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சாதுவன் தொடக்கத்தில் வற்புறுத்திய அறங்களில் முற்றிலும் விட்டுக் கொடுக்காமல் அமைவது மயக்கும் மதுவைத் தவிர்த்தல் மட்டுமே.

ஆக ஒரு அற பேரம் (negotiation) ஒன்றுக்கு பவுத்தம் தயாராக இருந்தது.

(பவுத்தம் காட்டும் இறுதி உய்விற்கான ஒரே வழி – அடுத்த இதழில்)