தொலைதூர இந்தியாக்களை இணைக்கும் பாலமாக பௌத்தமும் மணிமேகலையும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23           

கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத் தொடர்புகளின் ஊடாக பர்மா (Myanmar), தாய்லந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம் ஆகியவற்றில் பவுத்தம் பரவியது. பொதுவில் தென்கிழக்காசிய பவுத்தத்தைத் தேரவாதம் எனச் சொல்வது வழக்கம். எனினும் பாலி மொழியில் புனித நூற்கள் எழுதப்பட்ட தென்கிழக்காசிய தேரவாதத்திற்கும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் பயிலப்படும் சமஸ்கிருதமயப்பட்ட வடக்கத்திய மகாயனம் மற்றும் தந்திராயனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.  தாய்லாந்து மற்றும்பர்மிய பவுத்தர்கள் பொதுவில் தம்முடைய பவுத்தத்தை கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகரது காலத்திய துறவிகளான சோனா மற்றும் உத்தரா ஆகியோரால் தம்முடைய தங்கத் தீபகற்பத்திற்கு (ஸ்வர்ணபூமி)  கொண்டுவரப்பட்ட ஒன்றாகக் கருதுவதே வழக்கம். அந்த வகையில் தம்முடையதைத் தேரவாத மரபு சார்ந்தது எனச் சொல்வர்.

“தொலைதூர இந்தியா” (Farther India) என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர்த்த தென் கிழக்காசியத் தீவான இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், இந்தோசீன தீபகற்பம் உள்ளிட்ட கங்கைக்கு அப்பாலான இந்தியப் பகுதிகள் ஆகியன அடங்கும். முற்றிலும் வங்க அடையாளங்களுடன் கூடிய அஸ்சாமும் இந்தியத் தாக்கத்திற்கு ஆட்படாத வடக்கு வியட்நாமும் இந்தத் ‘தொலைதூர இந்தியா’வுக்குள் வராது (G.Coeds, Indianized States of South Asia (Ed by Wlter F Vella, Australian National University Press, Canberra, 1975). இந்திய மதங்களான இந்துமதம், பௌத்தம் ஆகிய இரண்டின் தாக்கங்களும் இந்தத் தொலைதுர இந்திய உருவாக்கத்தில் உண்டெனினும் பவுத்தத் தாக்கம் கூடுதல்.  5

தொடக்கத்தில் அது தங்கபூமி. பின் அது மசாலாப் பொருட்கள் (spices), கற்பூரம், சந்தனம் முதலான வாசனை மரங்களுக்குப் பெயர் பெற்ற நிலப்பகுதி, பின் ரப்பர், டின், எண்ணை என வணிகத் தொடர்புகள் இன்னும் தொடர்கின்றன. வணிகத்திற்கு அப்பால் பண்பாட்டு ரீதியான தாக்கம் ஏராளம்.  அதன் மொழி வழக்கில் கலந்துபோன சமஸ்கிருதக் கூறுகள், எழுத்துருக்கள், இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகக் கூறுகளின் தாக்கம் என நிறையக் கண முடியும். இஸ்லாமாக மாறிய பகுதிகளிலும்கூட இந்தத் தொடர்ச்சியை நாம் இன்னும் காண முடிகிறது. சிற்பம், கட்டிடக் கலை ஆகியவற்றில் பவுத்தத்தாக்கம் ஏராளம். 2016 ல் தாய் இளவரசர் Maha Vajiralongkorn மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது தமிழில் பாசுரங்கள் ஓதப்பட்ட செய்தி அப்போதைய நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது (Times Of India, Nov 08, 2016). ‘மணிமேகலை’ எனும் கடற் தெய்வம் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தத் தொலைதூர இந்தியாவுக்கும் பொதுவாக உள்ளது குறித்து நாம் இந்தத் தொடரில் வேறு சில சந்தர்ப்பங்களிலும் பேசியுள்ளோம். பல தமிழ்ச் சொற்களும் கிட்டத்தட்ட அதே ஒலிப்புடன் அங்கு பயிலப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில: தங்கம் (தொங்கம்) குரு (க்ரு). அப்பா (பா), புத்ரன் (புத்ரு). மாலை (மாலெ).

இதில் மிகவும் வேடிக்கை என்னவெனில் இந்தியர்களும், தமிழர்களும் கிழக்கு நாடுகளுக்குத் தாம் அளித்த இந்தக் கொடையைச் சமீப காலம் வரை மறந்திருந்ததுதான். ஃப்ரெஞ்ச் மற்றும் டட்ச் மொழிகளை அறிந்து பாரிஸ் மற்றும் லெய்டன் பல்கலைக் கழகங்களில் பணி செய்த சில பேராசிரியர்கள்தான் முதன் முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது (Sylvain Levi,  Pour L’Histoir du Ramayana, JA, January, February, 1918, Page 80 ff).

துறைமுக நகரமான நாகப்பட்டிணத்தில் இருந்த பௌத்த நிறுவனங்களுக்கும் ஜாவா மற்றும் சுமத்ராவிலிருந்த சைலேந்திர மன்னர்களுக்கும் முதலாம் ராஜராஜன் காலந் தொடங்கி நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதை அவனது அகன்ற லெய்டன் செப்பேடு பதிவு செய்கிறது. ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த மாறவிஜயோத்துங்க வர்மனால் நாகப்பட்டிணத்தில் கட்டப்பட்ட அழகிய சூடாமணி விகாரை குறித்த பதிவு அதில் உள்ளது (K.V.Subramaniya Aiyer, The Larger Leiden Plates, Epigraphia Indica 22/6, (1934), 241, 42). புத்தர் மற்றும் எதிர்கால மைத்ரேய புத்தர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் நாகையில் கிடைத்துள்ளன. சைலேந்திரா என்பது மலையின் இந்திரன் எனப் பொருள்படும் சொல். நாகையில் சீனர்கள் கட்டிய ‘பகோடா’ ஒன்றும் இருநூற்றாண்டுகளுக்கு முன்புவரை இருந்துள்ளதும் நினைவுகூரத் தக்கது. ஜாவாவின் மையமாக உள்ள பாராபுதூரில் உள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்தச் சின்னத்தில் உள்ள இந்தியத் தாக்கங்கள் குறித்து விரிவான பதிவுகள் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்தியாவையும் (அதாவது தமிழகத்தையும்) தென் கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு இலக்கிய ஊடகமாக மணிமேகலை இருந்தது என்பார் ஆனே மோனியஸ் (Anne E Monius, Imagining a Place for Buddhism, Navayana, 2009, Page 110). ஒரு இலக்கிய மொழியாக அமைந்து தென் இந்தியா எனும் மைய நிலத்தை (Main Land) சாவகம் எனுன் விளிம்புடன் (periphery) ஒரு ஒற்றை மத நம்பிக்கையுடன் கூடிய குமுக அலகாகவும் பவுத்த உலகாகவும் இணைக்கும் பணியை தமிழ் நிறைவேற்றுகிறது என்பார் மோனியஸ்.

மணிமேகலைக் காப்பியம் இவ்வாறு ஒரு ஒற்றை  இலக்கிய பிரபஞ்சத்துக்குள் சாவகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பணியை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிலேயே ஒரு தொலைப் பார்வையுடன் செய்தபோதும், அது எதார்த்தமாக நிகழ்வதற்கு இன்னும் ஏழெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஜாவாவை (சாவகத்தை) தனது முக்கிய களங்களில் ஒன்றாகச் சாத்தனார் தேர்வு செய்ய நேர்ந்தது எங்ஙனம்? தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே சாத்தனாரின் காலத்தில் அதிக இலக்கிய வளம் மிக்க பகுதியாக ஜாவாதான் விளங்கியது என்பதை மோனியஸ் சுட்டிக் காட்டுவார். தவிரவும் ஸ்ரீவிஜயத்தின் ஜாவா- சுமத்ரா அரசுப்பகுதிதான் சமஸ்கிருதக் கல்வியிலும் அப்போது சிறந்து விளங்கியிருந்தது. “நாகராக்ருதாகம” எனும் ஒரு காவியத்தை ‘காஞ்சிபுரி’ யைச் சேர்ந்த ஸ்ரீபுத்தாதித்யா என்றொரு கவி பதினான்காம் நூற்றாண்டில் இயற்றியுள்ளது குறித்து இந்தத் தொடரில் நான் முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களில் கடற் கடவுளாக இருந்து எதிர்கால புத்தர் ஒருவரைக் காப்பாற்றிய தெய்வமாகவும், கடல் விபத்துகளில் காப்பாற்றும் தன் கடமையைச் சிலகாலம் தவறி இருந்த தெய்வமாகவும், பத்தினி (கண்ணகி) மற்றும் கோவலனுடன் நெருக்கமாக உறவு கொண்டவராகவும் ஜாதகங்களிலும் நாடுப்பாடல்களிலும் மணிமேகலை ஏராளமாக இடம் பெறுவதும் குறிப்பிடத் தக்கது.3

இனி நாம் நாகபுரத்தை அடைந்த மணிமேகலையைத் தொடர்வோம்.

நாகபுரத்தின் அப்போதைய மன்னனான புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாக அவதரித்திருந்தவன். தருமசாவகன் தனது மன்னனைப் புகழ்ந்து உரைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் தன் உரிமைச் சுற்றத்துடன் அங்கு வந்தான். தருமசாவகனைக் கண்டு வணங்கினான். அறம், மறம், நிலையாமை, நித்தியம், துக்கம், உடலை விட்டுப் பிரிந்த உயிரின் நிலை, பேதமை முதலான பத்துவகைச் சார்பின் தோற்றம், சார்பை அறுத்து உய்தி பெறும் வழி முதலானவற்ரை அவன் அரசனுக்கு எடுத்துரைத்தான். அரசனும் அவற்றை அமைதியாய் ஏற்றுக் கொண்டான்.

பின் அருகிருந்த மணிமேகலையை நோக்கினான் மன்னன். இணையற்ற அழகுடையவளாக இருந்தும் அவளது கண்ணசைவுகள் காமனுக்குத் துணை சேர்க்காததைச் சுட்டிக்காட்டித் தன் அழகிய கைகளில் பாத்திரத்துடன் நிற்கும் இவாள் யார் என வினவினான். அப்போது அரசனுடன் வந்திருந்த கஞ்சுகன், தான் கிள்ளிவளவனைச் சந்திக்க புகார் சென்றபோது அறவண அடிகளீடம் இவள் பிறப்பை அறிந்து வந்து அரசனுக்குரைத்ததை நினைவூட்டினான்.

மணிமேகலை பேசலுற்றாள். “என் கையில் இப்போதுள்ள இப்பாத்திரம் முன்னொரு பிறவியில் உன்கையில் இருந்த ஒன்றுதான். நீ இப்போது உன்னிடம் செர்ந்துள்ள பெருஞ்செல்வத்தில் மயங்கி நிற்கிறாய். எனவே நீ அதையெல்லாம் இப்போது அறியாய். அந்தப் பிறவியை அறியாத போதும், பசு ஒன்றின் வயிற்றில் பிறநதுள்ள இப்பிறப்பினையும் நீ அறியாமற் போனதென்ன? மணிபல்லவம் சென்று அங்கு பீடிகையை வலம்வந்து வணங்கினாலன்றி பற்றுக்களுடன் உன்னைப் பிணிக்கும் பிறவியின் தன்மையை நீ அறியாய். ஆதலின் நீ அங்கு வருவாய் அரசே!” – என மணம் மிக்க மாலையை அணிந்து நின்றிருந்த அரசனிடம் கூறி அவ்விடம் விட்டகல ஆயத்தமானாள்.

வானத்தில் எழுந்த மணிமேகலை கதிரவன் மேற்திசையில் வீழும் முன் வானிலிருந்து இறங்கிப் பூக்களின் நறு மணத்துடனும், சுருண்டெழும் அலைகளுடனும் விளங்கும் மணிபல்லவத் தீவை அடைந்து வலம் வந்தாள். பிறவிப் பிணியை அறுக்கும் மாதவனது பாதபீடிகையின் தரிசனம் கண்டவுடன் அதைத் தொழுது வலம் வந்தாள். தன் பழம் பிறப்பையும் உணர்ந்தாள்.

மணிமேகலை அவ்வாறு தொழுதிருந்த அதே நேரத்தில் அம் மலர்வனத்தை விட்டகன்ற மன்னன் புண்ணியராசன் தன் நகரடைந்தான். அங்கே அவனது வளர்ப்புத்தாயான அமரசுந்தரி அவனது இப்பிறவி வரலாற்றை உணர்த்தினாள். தந்தை முனிவனாகவும் தாய் பசுவாகவும் கொண்டு பிறந்த அவனது பிறப்பும், மாமுனிவன் அருளினால், எல்லா மானுடப் பிறவியும் போலன்றி குடல் மாலையால் சூழப்படாமல் தான் ஆங்கொரு பொன் முட்டையுள் அடங்கிப் பசு வயிற்றினுள் இருந்து, மக்கட்பேறு இல்லாத மன்னன் பூமிசந்திரனால் கொண்டுவரப் பெற்றதையும் அவ்வளர்ப்புத் தாயின் வாயால் கேட்ட ஆபுத்திரன் மிகுதியான துயரடைந்தான்.

சென்ற பிறவியில் தன் தாய் செய்த செயலையும், இப்பிறவியில் தானடைந்துள்ள நிலையையும் ஒரு கணம் நினைவுகூர்ந்தான் மன்னன். ஒரு பக்கம் மன்னர்கள் அவன் செவ்விக்காகக் காத்துக் கிடக்கின்றனர். அரசானாக இருந்து மேலோர்களைப் பேணியும், நாடகம் கண்டும், பாடல்களையும் இன்னிசையையும் கேட்டுக் கொண்டும், தேவியர்தம் ஊடல்களை அனுபவித்துக் கொண்டும், தான் பணிந்து அவற்றை முடிவுக்குக் கொணர்ந்தும், அவர்தம் அழகிய மார்பகங்களில் குங்குமச் சாந்தால் எழுதியும், மலர்களை அவர்களின் சுருண்ட குழலில் சூட்டியும், நறுமுகைகளின் உள்ளே பொதிந்து கிடக்கும்  அமுது போன்றதாகிய அவர்களின் சிவந்த வாயூறலை உண்டும், அவர்தம் மதிமுகத்தில் அலையும் கருங்கண்களின் செம் முனைகள் கலங்குமாறு மன்மதன் மலரம்புகளைத் தூவ, காமக் கள்ளையுண்டு மகிழ்ந்திருக்கும் தன் போக வாழ்வை இகழ்ந்து, “பற்றறுத்துத் துறத்தலே நன்று” என வாய்விட்டு அரற்றினான்.

“தெளிந்த உணர்வுடைய நாதமுனி என் செவியிலிட்ட அறநெறி வித்து இன்று மணிமேகலையைக் காரணமாகக் கொண்டு பழுதற விளைந்தது” என்று பலவாறும் புலம்பினான் புண்ணியராசன்.

“ஆகா, மனம் வேறாயினான் மன்னன்” என உணர்ந்த அமைச்சன் சனமித்திரன் அவனைத் தொழுது வணங்கி, “என் சொற் கேட்பீர் ! நின் தந்தை உம்மை அடைவதற்கு முன்பாக உம் நாடு மழைவளமற்று, பெற்றதாய் தன் குழந்தைக்கு  இரங்காமல், கிடைக்கும் உணவைத் தானே உண்ணும் நிலைக்குச் சரிந்திருந்தது. வெங் கோடை நாளொன்றில் சூல் கொண்ட கருந்திரள் மேகம் ஒன்று எழுந்ததுபோல நீ தோன்றினாய். அன்று முதல் இன்றுவரை வானம் பொய்க்கவில்லை; நிலவளம் குன்றவில்லை; ஊனுயிர்கள் உறுபசி அறியா நிலை எய்தின. இந்நிலையில் நீ எல்லாவற்றையும் விட்டகன்றால் இந்நாடு முழுதுமே தாயற்ற குழந்தை எனும் நிலையை எய்தும்.2

“துயர்நிலை பெற்ற இவ்வுலகை அத்துயர் நீக்கிக் காத்தலன்றி, நீ மட்டும் உயர்நிலை உலகம் ஒன்றை விரும்பிச் செல்வாயாயின் உயிர்கள் அனைத்தும் இறுதி எய்தும்; தன்னுயிரை முதன்மையாகக் கருதாத புத்ததேவன் உரைத்த நெறியும் இதுவல்லவே”- என்று அறம் உரைத்தான் அமைச்சன்.

அமைச்சன் உரைத்த அறவுரை கேட்ட மன்னன், “மணிபல்லவத்தை வலம் கொள்ள எழுந்த என் வேட்கை அத்தனை எளிதாகத் தணியாது. அதனால் அரசையும், மக்களையும் ஒருமாத காலம்வரை காத்துவருதல் நின் கடன்” – எனக் கூறியவாறு எழுந்து மரக்கலம் செய்யும் கம்மியரை “வருக” என அழைத்துத் தன் மரக்கலத்தே ஏறினான். அம்மரக்கலமும் இடை நிற்காது சென்று மணிபல்லவத்தை அடைந்தது. அங்கே மணிமேகலை காத்திருந்தாள். இருவரும் தீவை வலம் வந்தனர். முற்பிறவியை உணர்விக்கும் பீடிகையை மணிமேகலை அவனுக்குக் காட்டினள். ஒரு தூய கண்னாடிபோல அவன் முற்பிறவியை பீடிகை அவனுக்கு உணர்த்தியது.

“என் பிறப்பறிந்தேன். என் இடர் தீர்ந்தேன். தென்தமிழ் மதுரையின் அழகிய கலைப் பாவையே! இரந்துண்ணும் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட என்னிடத்தே, வந்தோர்க்கு அருந்துவதற்குரிய உணவேதும் காணாது வருந்துவோனாகிய என் கையிலே, ‘நாடே வறுமையுற்ற போதிலும் இந்த ஓடு மட்டும் வருமையுறாது. எழுந்து இதனை ஏற்றுக் கொள்!’ – எனக் கூறி அமுதசுரபியைத் தந்து என் பிறவி அறுத்த பாவையே! உணர்வில் தோன்றி, மெய்ப்பொருள் உணர்த்தி அருளும் அணிதிகழ் அவிரொளி மடந்தையே! தேவராயினும், பிரமராயினும், அவர்களின் நாவால் எழும் குற்றத்தைக் கழுவித் தூய்மையாக்கும் நின் திருவடிகளைப் பிறவிகள் தோறும் போற்றுதலன்றி மறந்தும் வாழேன் இனி நான்!” – எனச் சிந்தாதேவியைப் போற்றி நின்றான் முற்பிறவியில் ஆபுத்திரனாக வழ்ந்து இப்பிறவியில் புண்ணியராசனாய்ப் பிறப்பெடுத்தவன்.

(அடுத்து மணிமேகலை வஞ்சி சென்று கண்ணகியின் அறிவுரை பெறுதல்)

“அறிவு உண்டாக”- என ஆங்கவன் வாழ்த்தினன்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018                         

மணிமேகலையின் கதை அமைப்பு சற்றுச் சிக்கலானது. ஆங்காங்கு பவுத்த அறங்களைக் காப்பியத்தின் கதைப் போக்கில் பொருத்தமாய்ப் பதிக்க வேண்டியது இப்படிக் கதை அமைப்பு சிக்கலாவதில் ஒரு பங்கு வகிக்கிறது. சோழ அரசன் கிள்ளிவளவன் நாக நாட்டு இளவரசி பீலிவளையுடன் கொண்ட காதற் கதையை சித்திராபதி சொல்வதன் நோக்கம் மணிமேகலையை சிறையிலிருந்து மீட்டு அழைத்துச் செல்வதே. கடலை ஆளும் மணிமேகலா தெய்வத்தின் வலிமையைச் சொல்வதற்கு அவள் இங்கே இந்த வரலாற்றைச் சொல்கிறாள். அப்போது பூம்புகார் அழியவில்லை. ஆனால் தீவகச் சாந்தி செய்யாவிட்டால் மணிமேகலா தெய்வம் கோபம் கொள்ளும். நகரம்  கடல் வயிறு புக நேரும் என்றொரு சாபம் இருக்கிறது. அதன் விளைவாக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அத் தெய்வத்தின் பெயர் தாங்கிய தன் பேத்தியைச் சிறையில் இட்டுத் துயரில் ஆழ்த்தினால் அதை அத் தெய்வம் பொறுக்காது என வெளிப்படையாகவே சொல்லி விடுகிறாள் சித்திராபதி.

அரசி அதற்குத் தக்க பதிலைச் சொல்லிவரும் நேரத்தில்தான் அறவணரும் மாதவியும் மணிமேகலையை மீட்க அங்கு வருகின்றனர். அடிகளைக் கண்டதும் அரசியும் அவள் ஆயச் சுற்றமும், சித்திராபதி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்கின்றனர். வீழ்ந்து வணங்கிய அரசியை அறவணர், “அறிவு உண்டாக” என வாழ்த்துகிறார்.

“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு” வாழ்க என்றெல்லாம் அம் மாதவர் வாழ்த்தவில்லை. அறிவு உண்டாக என மட்டுமே அவர் வாழ்த்துகிறார். பவுத்தம் துறவை மட்டும் போதிக்கும் மதமல்ல, திறன் சாரந்த வாழ்வு என்பதையும் அது வலியுறுத்துகிறது, அறன் சார்ந்த வாழ்வே திறன் சார்ந்த வாழ்வாகவும் இருக்க முடியும் என்பதையும் அது முன்வைக்கிறது.  புத்தரின் இறுதி நேரத்தில் அவரோடு இருக்க வாய்த்த அடியார்கள் அவரிடம் இறுதியாய் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என வினவும்போது அவர், “புதிதாய் என்ன சொல்லப் போகிறேன். உனக்கு நீயே விளக்கு” என்றுதான் கூறுகிறார். தனது போதனைகளே உங்கள் வழிகாட்டி எனக் கூட அவர் சொல்லவில்லை. தனது போதனைகளையும் கூட அவரைப் பின்பற்றுபவர்கள் சிந்திப்பதற்கான ஒரு பொருள் என்றே அவர் முன்வைத்தார். ‘உபய கவுசல்ய’ என்பது ஒரு பவுத்தக் கருத்தாக்கம். அதாவது சூழலுக்குத் தகுந்த உபாயம். அவ்வப்போது எதிர் கொள்ளும் சூழலுக்குத் தக அவர்கள் தங்கள் அறிவின் துணை கொண்டு அறத்தின் வழி நின்று உபாயங்களைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இறைவனை வேண்டியோ, புனித நீராடியோ, நல்ல நேரம் பார்த்தோ, விரதம் இருந்தோ, புனித யாத்திரை சென்றோ வாழ்வில் வெற்றி பெற இயலாது. அப்படி வாழ்வது அறம் சார்ந்த வாழ்வாகாது.

புத்தர் காட்டும் எண்வழிப் பாதை ‘சம்மா திட்டி’ எனத் தொடங்கும். அதாவது சரியான பார்வை. தொடர்ந்து சரியான நோக்கம், சரியான நடத்தை சரியான பேச்சு, சரியான வாழ்முறை, சரியான முனைப்பு, சரியான ஓர்மை, சரியான தியானம் என முடியும். இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? எது சரியான பாதை என பவுத்தம் சொல்லவில்லை. பின் நாம் அதை எப்படித் தேர்வு செய்வது? எது குறித்தும் நமக்கு சரியான பார்வை என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழலுக்குத் தக அறவழியில் அறிவைப் பயன்படுத்திக் காண்பதே. இதுவே புத்தர் அருளிய வழிகாட்டல். ‘சரியான’ என்பதை right எனப் பொருள் கொள்வதைக் காட்டிலும் correct, perfect  எனப் பொருள் கொள்ள வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல. புத்த பகவன் ஒரு தத்துவவாதியோ, சடங்குகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒரு மதத்தை உருவாக்கியவரோ  இல்லை என்றெல்லாம் சொல்வதன் பொருள் இதுவே.

அப்படியாயின் ‘இறுதி உண்மை’ என எதுவும் இல்லையா? பௌத்தம் அதைத்தான் ‘நிர்வாண நிலை’ என்கிறது. இவ்வுலக வாழ்வை வெறும் மாயை என அது மறுக்கவில்லை. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகின் விதிகளையும், அவை குறித்த உண்மைகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.. மற்ற அனைத்து மதங்களும் விஞ்ஞான முடிவுகளை ஏற்காத நிலையில் பவுத்தம் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக் கொண்டது. கிரகங்களின் நிலையை வைத்து எதிர்காலத்தைச் சொல்ல இயலும் என்கிற கருத்தை புத்தர் அளவிற்கு வன்மையாகக் கண்டித்தவர் யாருமில்லை.  இந்த phenomenal world ன் விதிகளாகவும் உண்மைகளாகவும் அறிவியல் கோட்பாடுகளை அவர் அங்கீகரித்தார்.
ஆனால் இவை ஒப்பீட்டளவிலானவை. நமது அறிதல், அளவுகோல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவையே இந்த அறிவியல் உண்மைகள்.. அந்த அளவிற்கு அவை உண்மையானவை. அதே நேரத்தில் அந்த வகையில் அவை ஒப்பீட்டளவிலானவையும் கூட. பொருள்களை உங்களின் கருத்துக்கள், முன் முடிவுகளின் அடிப்படையில் அணுகி நீங்கள் அடையும் முடிவுகள் அவை. அதையும் கூட அறிவியல் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டது. எல்லாம் சார்பானவையே; எதுவும் முற்றுண்மையானவை அல்ல என்பதுதானே ஐன்ஸ்டினின் கோட்பாடு.
ஆனால் எதையும் அதன் இயல்பில் அறிந்து கொள்வதற்கு (nominal truth) எல்லாவற்றையும் முற்றுண்மையானது  என அணுகும் பார்வை தடையாகிறது.  nominal truth ஐ அறிந்துகொள்ள வழி என்ன? எந்த முன்முடிவுகளும், நம்பிக்கைகளும், அறிதலும் அற்ற நிலை அடைவதுதான். அதைத்தான் புத்த பகவன் ‘நிர்வாண நிலை’ என்றார். அதுவே ஒளிபெற்ற நிலை. intuition, ப்ரக்ஞை, “பன்னா”.

எல்லா அறிதல்களிலிருந்தும் விடுதலை என்பதன் பொருள் இதுவே. அப்படித் துறக்க வேண்டியவற்றுள் புத்தர் தன்னுடைய சிந்தனைகளையும் கூட உள்ளடக்கினார். இப்படிக் கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் எப்போதும் சுமந்து திரிபவர்களை அவர் நதியைக் கடக்கத் தயாரித்த மரத் தெப்பத்தை நதியைக் கடந்தபின்னும் தலையில் சுமந்து வரும் மூடத் தனத்துடன் ஒப்பிட்டார் (மஜ்ஜிம நிகாயம், அலகத்தூபம சுத்தம்). மரணப்படுக்கையிலும் அவர்  சொன்னாரே: “உனக்கு நீயே விளக்கு..”

அறிவைப் போற்றிய பவுத்தம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்தியாவில் உருவான நாளந்தா, தட்சசீலம், விக்ரம சீலம், வல்லபி, புஷ்பகிரி, சோமபுரி மகாவிகாரை முதலான பல்கlலைக் கழகங்கள் யாவும் பவுத்தம் உருவாக்கியவை என்பது நினைவுக்குரியது. இன்றைய ‘பல்கலைக்கழகங்களுக்கு’ ஒரு தொன்ம மாதிரிகளாக அவை இருந்தன. வைதீக குருகுலக் கல்வி முறையிலிருந்து அது பலவகைகளில் வேறுபட்டது. ஒற்றை ஆசிரியரிடம் அவரது இருப்பிடம் சென்று, பணிவிடைகள் மேற்கொண்டு அவர் அறிந்தவற்றை மட்டுமே கற்றுக் கொள்ளும் குருகுல முறை கடுமையான வருண நெறிகளுக்கு ஆட்பட்டிருந்ததை நாம் ஏகலைவன் வரலாற்றிலிருந்து அறிகிறோம். பவுத்த பல்கலைக் கழகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஓரிடத்தில் குவிந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பலவற்றையும் கற்றுத் தரும் முறை அது. வருண வேறுபாடுகளுக்கு அங்கு இடமில்லை.

விஹாரைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றால் பௌத்த மதக் கல்வியாக மட்டும்தானே இருக்கமுடியும் என்கிற ஐயம் தோன்றலாம். பிக்குகளாக வருபவர்களுக்கு மட்டும்தான் மதக் கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு மதம் சாராத secular கல்வி அங்கே கற்றுத் தரப்பட்டது.

பிராமணக் கல்வி முறைக்கும், சிரமணக் கல்வி முறைக்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. பிராமணம் போலச் சிரமணம் புறச் சடங்குகளுக்கும், இதர புற வினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அகப் பயிற்சிக்கே அது முதன்மை அளித்தது. நல்வாழ்வு, திறன் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றையே பௌத்தம் கல்வியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தது. அற வாழ்வு, ஆழ்நிலைஉள்நோக்குச் சிந்தனை (contemplation), ஞானம் (wisdom) ஆகியன கல்வியின் உள்ளடக்கங்களாக இருந்தன. ஆன்மீகப் பயிற்சி என்பதாகச் சுருங்காமல்  உடல், ஒழுக்கம், அறிவு, சிந்தனை ஆகிய முழுமையான ஆளுமை வளர்ச்சியை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. அவற்றோடு பவுத்தக் கல்வி முற்றுப் பெறுவது  இல்லை. உரிய தொழிற் பயிற்சிகளுக்கும் அதில் இடமிருந்தன.

அறவணர் அரசியை ‘அறிவுண்டாக’ என வாழ்த்தியதன் உட்பொருள் இதுவே.

அடிகளுக்கு ஆசனம் காட்டி, திருவடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், “என் நல்வினைப்பயனே உம்மை இங்கு அழைத்து வந்தது. உங்கள் சொல்வலிமை குன்றவில்லை என்ற போதிலும் உடல் தளர்ந்துள்ளது. மூத்த இவ்வுடல் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தினாள் அரசி. “தேவி ! கேட்பாயாக” -எனத் தன் அறவுரையைத் தொடங்கினார் அடிகள்.

“தவநெறி மேவிய உடல் கொண்டவனாயினும் நான் கீழிறங்கும் மாலைச் சூரியன் போன்றவனே. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் என்பது இயல்புதானே ! பேதமை தொடங்கி வினைப்பயன் ஈறாக வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறிந்தால் பெரும் பேறு பெற்றவர்கள் ஆவர். அறியார் ஆயின் ஆழ் நரகை அடைவர்” -எனக் கூறி அவற்றை விளக்குவார்.

“பேதமை என்பது கண்ணால் கண்டு ஆராய்ந்து ஒன்றை நம்பாது சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்புதல்; மூவுலகங்களிலும் சேதனப் பிரபஞ்சம் எனப்படும் உயிர்களின் இவ்வுலகம் மிகப் பெரிது. ஒருவர் தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப இவ்வுயிர்களில் ஏதொன்றின் கருவில் உதித்து, அவ் வினைப்பயனுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை அனுபவிப்பர். கொலை, களவு, காமம், தீய ஆசைகள் ஆகியன உடலால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள்; பொய், கோள், கடுஞ்சொல், பயனற்ற சொல் ஆகிய நான்கும் சொல்லால் இழைக்கப்படும் குற்றங்கள்; தீய விருப்பு (வெஃகல்), கோபம், மயக்கம் முதலியன உள்ளத்தால் நிகழும் குற்றங்கள்; நல்லறிவுடையோர் இக் குற்றங்களில் மனம் செலுத்த மாட்டார்கள். அப்படிச் செய்வார்கள் என்றால் அவர்கள் விலங்கு, பேய், நரகர் முதலான பிறப்புகளை எடுத்து உழல்வார்கள்.

“இப்பத்து வகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கி, பஞ்சசீலம் தாங்கி, தானம் செய்து வாழ்வாராயின் வானவர், மக்கள்,  பிரமர் என்போராய் நல்வினைப் பயனை அனுபவிப்பார்கள்.

“அரசமா தேவியே ! உடனிருக்கும் மங்கையரே ! குற்றமற்ற நல் அறத்தினைப் போற்றுவீர் ! மறுபிறப்புணர்ந்த மணிமேகலையே ! நீ பிற சமய அறங்களை எல்லாம் கற்று வந்த பின் உன் பால் வந்து, இவ் அற நெறிகள் எல்லாவற்றையும், அவற்றின் கூறுகளையும் முற்படக் கூறுவேன்” – எனக் கூறி எழுந்தார்.

தொடர்ந்து மணிமேகலையும் எழுந்தாள். அறவணரின் நல்ல மொழிகளை மறவாது போற்றிச் சிறப்புறுங்கள் என வாழ்த்தினாள். பிறகு, “நான் இனி இங்கிருந்தேனாயின் இளவரசனின் மரணத்திற்குக் காரணமானவள் எனப் பழிப்பர். ஆதலால் நான் இப்போது ஆபுத்திரன் நாட்டை அடைந்து, அதன் பின் மணிபல்லவம் சென்று தொழுது, வஞ்சி மாநகருக்குச் சென்று  மா பத்தினியான கண்ணகிக்காகக் குறைவற்ற நல்லறத்தினை எங்கும் செய்து கொண்டிருப்பேன். என மனதுக்கு இனியவர்களே ! எனக்கு ஏதும் துன்பம் நேருமென்று யாரும் கலங்க வேண்டாம்” என்று அனைவரையும் வணங்கி நின்றாள்.

இங்கு நமக்கொரு கேள்வி எழுகிறது. கண்ணகி அன்று பத்தினித் தெய்வமாக போற்றப்பட்டவள். ஆலயம் எடுத்து வணங்கப்பட்டவள். அவளுக்காக இந்த இளம் பெண் அறம் செய்யப் போகிறேன் எனச் சொல்வதன் பொருள் என்ன? கண்ணகி தனக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு வெகுண்டு மதுரை மாநகரையே எரித்து அழித்ததை மணிமேகலையின் பவுத்த மனம் ஏற்கவில்லை எனக் கொண்டு, அதற்குப் பகரமாய் தனது அறச்செயல்களின் பலன்களைக் காணிக்கையாக்குகிறாள் எனப் பொருள் கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

மணிமேகலை அங்கிருந்து புறப்படுகிறாள். காப்பியத்தின் இறுதிக் கட்டத்திற்குள் நாமும் அடியெடுத்து வைக்கிறோம். அந்த மாலைப் பொழுதில் அவளது சம்பாபதி ஆலயம், உலகவறவி , ஒளி சிந்தும் கந்திற்பாவை எல்லாவற்றையும் வணங்கி வலம் வந்தாள். வானில் பறந்து சென்று புண்ணியராசன் ஆளும் சாவகம் அடைந்து நகர் புறத்தே உள்ள ஒரு பூஞ்சோலையுள் இறங்கினாள். இளைப்பாறலுக்குப் பின் அங்கு உறையும் மாதவனான தரும சாவகனைச் சென்று வணங்கினாள். இந்நகரின் பெயர் யாது, ஆளும் மன்னனின் பெயர் என்ன என வினவினாள்.

நாகபுரம் எனப் பதில் வந்தது. பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன் இந்நாட்டு மன்னன். இவன் பிறந்தது தொடங்கி இங்கே மழை பொய்ப்பதில்லை; மண்ணும் மரங்களும் வளங்களை அள்ளித் தருகின்றன. எவ்வுயிர்க்கும் நோய் நொடிகள் இல்லை என அந்த மாதவன் பதிலுரைத்தான்.

புகார், மணிபல்லவம், சாவகம், வஞ்சி, காஞ்சி என மணிமேகலையின் பிரபஞ்சம் விரிவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் பார்த்து வருவது போல மணிமேகலை விரிக்கும் பவுத்த பிரபஞ்சம் இவ்வாறு தமிழகம், ஈழம், சாவகம் என்பதாக அமைகிறது. புத்தபிரான் அவதரித்த லும்பினி, அவர் ஒளி பெற்ற புத்த கயா ஆகியனகூட ஓரிடத்திலும் சுட்டப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோம். சாவகம் என்பது இன்றைய ஜாவா தீவைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான இது இன்று இந்தோனேசியாவில் அமைந்துள்ளதை அறிவோம்.. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தா இங்குதான் உள்ளது. இன்று இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. கி.மு 800 களில் அங்கு பவுத்த அரசு இருந்தது. முன்னதாக அங்கு இந்து மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. சாவகத்தை ஆளும் புண்ணியராசன் இந்திரனின் வழி வந்தோன் என சாத்தனார் பதிவு செய்வதும் கவனிக்கத் தக்கது.

 

(துறவை நோக்கிய மணிமேகலையின் இறுதி நகர்வு தொடங்குகிறது)

 

 

 

 

 

 

 பிரபஞ்சனும் அவரது   எழுத்துக்களும் – சில நினைவுகள்

(ஜனவரி 2019 ‘உங்கள்நூலகம்’  இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை)

பிரபஞ்சனின் எழுத்துக்களைவிட பிரபஞ்சன் என்னும் மனிதர் இன்னும் சுவாரசியமானவர். எழுத்தை மட்டுமே நம்பிய ஒரு வாழ்வைத் தேர்வு செய்தவர்கள் பட்டபாட்டை எல்லாம் அறிந்த பின்னும் பிடிவாதமாக இறுதிவரை எழுதியே வாழ்ந்து இறந்தவர் அவர். அவருடைய முதல் கதை 1961ல் ஏதோ ஒரு சிறிய இதழில் வெளிவந்தது. அப்போது அவருக்குப் பதினாறு வயது. இறந்த போது அவர் வயது 73. ஆக அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட எழுத்துலக அனுபவம் உடையவர் அவர். கடைசிவரை மருத்துவச் செலவு உட்படப் பெரிய அளவில் அவர் எல்லாவற்றிற்கும் பிற உதவிகளைச் சார்ந்துதான் வாழ வேண்டி இருந்தது. அந்த வாழ்வை விரும்பியும், பிடிவாதமாகவும் தேர்வு செய்தவர் அவர்.

எந்த நாளும், எந்த இக்கட்டுகள் மத்தியிலும் சினிமா அல்லது வேறு துறைகளை நாடி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள அவர் முனைந்ததில்லை. அப்படியே நேர்ந்தாலும் அதில் அவர் நிலைத்ததில்லை. எழுத்தாளர் பவா செல்லதுரை சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இடையில் ஒரு முறை மிகச் சில காலம் ஒரு கல்லூரியில் அவருக்குப் பேராசிரியப்பணி கிடைத்தது. அதை ஏன் விட்டீர்கள் எனக் கேட்டபோது, “இட்லிதான் காரணம்” எனச் சொன்னாராம். “மதிய இடைவேளை வந்தால் எல்லா ஆசிரியர்களும் டிஃபன் பொட்டலத்தைப் பிரிக்கிறார்கள். எல்லார் வீட்டிலிருந்தும் இட்லிகள். என் மனைவியும் இட்லி கொடுத்தனுப்பத் தொடங்கினாள். எனக்குச் சின்ன வயதிலிருந்து இட்லி பிடிக்காது. வேலையை விட்டுவிட்டேன்” என்றாராம். இது உண்மையோ இல்லை வெறும் நகைச்சுவையோ அவரால் அப்படியெல்லாம் ஒரு வேலையில் தரிக்க முடியவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

ஒரு சம்பவத்தை இங்கே குறிக்கத் தோன்றுகிறது. மோடி அரசின் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் முதலியவற்றை எதிர்த்து நாடெங்கும் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி உள்ளிட்ட அரசு விருதுகளைத் துறந்தபோது தமிழகத்திலிருந்து யாரும் அப்படிச் செய்யாததை அறிவோம். அப்போது யாரோ பிரபஞ்சன் எல்லாம் ஏன் அதைச் செய்யக் கூடாது எனக் கேட்டார்கள். அப்போது அவர், “நான் விருதைத் திருப்பிக் கொடுப்பது பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் அந்த விருதோடு கொடுக்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாயை நான் எப்படித் திருப்பிக் கொடுப்பேன்” எனக் கேட்டதாக ஒரு செய்தி பரவியது. அப்போது நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு நண்பர் என்னைத் தொடர்புகொண்டு, “நான் அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்” என்றார். நான் மறுத்துவிட்டேன். அவரை நாம் அறிவோம். அவரிடம் இப்படிச் சொல்வதே அவரை அவமதிப்பதுதான். பேசாமல் இருங்கள் என்றேன்.

அவர் அப்போது விருதைத் திருப்பிக் கொடுக்காததன் பின்னணி இதுதான். மற்றபடி பிரபஞ்சன் கூர்மையான அரசியல் பார்வை உடையவர். தன்னை திராவிட இயக்கப் பின்னணியில் உருவானவன் என ஒரு கட்டத்தில் அறிவித்துக் கொண்டவர். எனக்கு அவரோடு இது தொடர்பான சில அனுபவங்கள் உண்டு. தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் கண்டன அறிக்கைகள் வெளியிட நேர்ந்த போதெல்லாம் முதல் கையொப்பத்திற்காக அவரிடம்தான் போவேன். ஊரில் இல்லாவிட்டால் போனில் தொடர்பு கெள்வேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் அத்தனையிலும் அவர் கையொப்பம் இட்டுள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மதவாதம் பேசுகிற கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரு அறிக்கை வெளியிடலாம் எனச் சொன்னபோதும் அவர் முதல் ஒப்புதல் அளித்தார்; பா.ஜ.கவின் எச்.ராஜா பெரியாரை அவமரியாதையாகப் பேசியபோது அவரைக் கைது செய்ய வேண்டும் என காவல்துறைத் தலைவரிடம் (DGP) நேரடியாகப் புகார் செய்தபோதும் அதிலும் பிரபஞ்சன்  கையொப்பம் இட்டிருந்தார். இப்படி நிறைய..

புதுச்சேரி மாநிலத்தில் மண்டல் குழு பரிந்துரைகளின் நிறைவேற்றத்திற்காகப் போராட்டம் நடந்தபோது எவ்வாறு பிரபஞ்சன் தினந்தோறும் அந்த நடவடிக்கையில் பங்குபெற்றார் என்பதைப் புதுச்சேரி சுகுமாரன் பதிவு செய்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்த இரண்டாண்டில் (1994) புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சம்பா கோவில் என மக்களால் அழைக்கப்படும் மாதா கோவிலை இடிக்க வேண்டும் என அங்குள்ள இந்துத்துவ அமைப்புகள் சில கிளம்பின. ஒரு சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது அந்த மாதாகோவில் என்கிற பிரச்சாரத்தை அவர்கள்  தீவிரமாக முன்னெடுத்தனர். அப்போது அதற்கெதிராக உண்மை வரலாற்றை வெளிக்கொணரும் வகையில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவரலாம் என ரவிகுமார், சுகுமாரன், நான் எல்லோரும் முடிவு செய்தோம். அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை எல்லாம் சேகரித்தபோது மேலதிகமாகப் பிரபஞ்சன் பல விவரங்களைச் சொன்னார். அவரையே அதை எல்லாம் எழுதித் தருமாறு கேட்டோம். இறுதியில், “மசூதிக்குப் பின் மாதா கோவிலா?” எனும் தலைப்பில்  அந்தக் குறுநூல் வெளிவந்தபோது அதில் என்னுடைய கட்டுரையுடன் அவரது கட்டுரை ஒன்றும் அரிய வரலாற்றுத் தகவல்களுடன் அதில் இடம்பெற்றது.

அவர் என்னாளும் தன் அரசியலை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதில்லை. தனது புனைவுகளிலும் அவர் அவற்றைப் பதிவு செய்துள்ளார். அவரது சிறுகதை ஒன்றில் (நீரதன் புதல்வர்) ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிந்திய இந்தியா’ நூலிலிருந்து இந்திரா காந்தியின் அவசரகாலக் கொடுமைகள், பத்திரிகைத் தணிக்கைகள் முதலியன பற்றிய ஒரு பத்தி அப்படியே இடம்பெறும். அந்தக் கதையே எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஒரு அதிகாரி வீட்டில் கஞ்சாவைக் கொண்டு வைத்துப் பொய் வழக்குப் போட்டதாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டதுதான். பாதிக்கப்பட்டவரின் மனைவி தினந்தோறும் எம்.ஜி.ஆர் வீட்டு வாசலில் அவர் வரும்போது கண்ணில் படுமாறு குழந்தையுடன் நின்றதாகவும் கடைசியாக ஒரு நாள் அவர் நின்று விசாரித்துவிட்டு அடுத்த நாள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்ததாகவும் சொல்லப்படும் சம்பவம் அப்படியே முழுமையாக அக்கதையில் இடம் பெற்றிருக்கும்.

அவர் தன்னைத் திராவிட இயக்கத்தின் வெளிப்பாடு எனச் சொல்லிக் கொண்டாலும் திராவிட இயக்கத்தை அவர் கடுமையாக விமர்சிக்காமல் இருந்ததில்லை. ‘இரண்டு நண்பர்களின் கதை’ எனும் சிறுகதையும் ஒருவகையில் திராவிட இயக்கத்தை விமர்சித்து எழுதப்பட்டதுதான். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து பொருளை மட்டுமின்றி பிற சுகங்களையும் அடையும் ஒருவன் மற்றும் அவனைப்போல அத்தகைய குயுக்தி இல்லாத அவனது வகுப்புத் தோழன் ஒருவன் என இரு நண்பர்கள் பற்றிய சிறுகதை அது. அந்தத் திறமைசாலி நண்பனின் பெயர் செல்வம். கட்சியில் சேர்ந்தபின் அவன் பெயர் ‘தமிழ்ச்செல்வன்’. அந்தக் கட்சியை “நாக்கை மட்டுமே நம்பிய இயக்கம்” என்பார் பிரபஞ்சன். இந்த நுட்பம் எல்லாம் தெரியாமல் இந்த நண்பனிடமே உதவியாளனாய் இருந்து அவனால் வஞ்சிக்கப்படுவதாகச் சித்திரிக்கப்படும் அந்த இரண்டாவது நண்பனின் பெயர் ‘மாடன்’.

‘உயிர்மை’ இதழில் சங்க இலக்கியம் பற்றி பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளிலும் அவர் திராவிடர் இயக்கப் பாணியில் சங்க காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிக்காமல் அக் காலகட்டத்தைக் கூடியவரை எதார்த்தமாகச் சித்திரிக்கவே முயற்சித்திருப்பார். அந்த வகையில் வரலாற்று ஆய்வுகளில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கிற மார்க்சிஸ்டுகளின் தாக்கம் அதில் கூடுதலாக இருந்தது எனலாம். கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பயிற்சி பெற்றவராக இருந்தபோதும் நல்ல வேளையாக அத்தகைய பண்டிதத் தாக்கமும் அவரின் படைப்புகளில் வெளிப்படவில்லை.

எனினும் ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயகாந்தன் ஊடாக தமிழ்ச் சிறுகதை நுட்பம் பெரிய அளவில் வளர்ந்திருந்த காலத்தில் ஒரு கவனத்துக்குரிய எழுத்தாளராக வெளிப்போந்த பிரபஞ்சனின் சிறுகதைகளால் அவர்களது படைப்புகளின் உயரங்களைத் தொட இயலவில்லை. முழுக்க முழுக்க ஜனரஞ்சகப் பத்திரிகைகளைச் சார்ந்தே அவர் இருக்க நேர்ந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் நாவலாக்கங்களில் அவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக அவரது இரட்டை நாவல்களாகிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ ஆகியவற்றைச் சொல்லலாம். ‘மானுடம் வெல்லும்’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. கல்கி, சாண்டில்யன், அரு. இராமநாதன் பாணி வரலாற்று நாவல்களிலிருந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ வேறுபட்ட ஒன்று. தன் காலகட்ட அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளை எல்லாம் நாட்குறிப்புகளாகப் பதிவு செய்து வைத்திருந்த அனந்தரங்கம் பிள்ளைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்நிய ஆட்சி இங்கு தன் அதிகாரத்தை விரிவாக்கியதன் ஊடாக மக்கள் சந்தித்த பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட அளவு இடம் பெற்றதாலும் ராஜராஜ சோழன் அல்லது ஜெகநாத கச்சிராயன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் யாரையும் பிரபஞ்சன் தேடி அலையாததாலும் இந்த இரு படைப்புகளும் தமிழ் நாவல் வரிசையில் ஒரு முக்கிய இடம் பிடிக்கின்றன.

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாதமி, சாரல், பாரதிய பாஷா பரிஷத், இலக்கிய சிந்தனை முதலான படைப்பிலக்கியங்களுக்கான  முக்கியமான விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அந்தச் செலவுகளை புதுச்சேரி அரசு ஏற்றுக் கொண்டது. இப்போது அவரது இறுதிச்சடங்குகளும் அரசு மரியாதைகளுடன் நடந்தேறின. தமிழ் பேசும் மாநிலமானாலும் புதுச்சேரிக்கென சில தனி அடையாளங்களும் பண்பாடுகளும் உண்டு. அவற்றை எழுத்தில் கொண்டுவந்தவர் என்கிற வகையில் புதுச்சேரி அரசும் மக்களும் பிரபஞ்சனுக்கு உரிய மரியாதைகளை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தனிப்பட்ட முறையில் என்னிடம் மிக்க அன்புடன் பழகியவர் பிரபஞ்சன். என் நூல் வெளியீடுகள் பலவற்றிலும் கலந்து கொண்டு அவற்றை முழுமையாகப் படித்து வந்து விமர்சித்துள்ளார். தீராநதியில் நான் ஐந்தாண்டுகள் தொடர்ந்து ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ என்கிற தலைப்பில் எழுதிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெறவேண்டும் என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் தான் பணிபுரிந்து வந்த ஒரு வெளியீட்டு நிறுவனத்திற்கு ஒருநாள் என்னை அழைத்துச் சென்று அதை வெளியிட வற்புறுத்தினார். அவர்கள் அதைப் பகுதி பகுதியாக வெளியிட விரும்பியதை நான் ஏற்காததால் அது சாத்தியமாகவில்லை.

பிரபஞ்சனுடனான ஒவ்வொரு உரையாடலுமே ஒரு கதையை வாசிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்கும். எல்லவற்றையும் கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு. பள்ளியில் படிக்கும்போது அப்போதைய ஃப்ரெஞ்ச் சட்டத்தின்படி அவர் மீண்டும் கீழ் வகுப்பொன்றிலிருந்து படித்துவரவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதாம். வகுப்பிலேயே உயரமான பெரிய பையனாக வயதில் குறைந்த மாணவர்களுடன் தான் பயில நேர்ந்ததை சிரிக்கச் சிரிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு நாள். இப்படி நிறையச் சொல்லலாம். இரண்டாண்டுகளுக்கு முன் அவர் மனைவி இறந்தபோது அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டவுடன் எழுந்து வந்து  அருகில் அமர்ந்து வழக்கம்போலச் சிரித்துப் பேசத் தொடங்கிவிட்டார். எல்லோரும் பார்க்கத் தொடங்கியவுடன் ஒரு கணம் பேச்சை நிறுத்திவிட்டுப் பின், “இன்னிக்கு நான் சிரிக்கக் கூடாது இல்ல..” எனச் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார். பின் எழுந்து, “வாங்க ஒரு டீ குடிச்சிட்டுவரலாம்” எனச் சொல்லி அருகிலிருந்த ஒரு தேநீர்க் கடையில் எங்களுடன் டீ குடித்துவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் நான் புறப்பட்டுவிட்டேன். அடுத்தநாள் மனைவியின் சடலம் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லும்போது குலுங்கி அழுது அவர் கதறிய கதையை நண்பர் சுகுமாரன்  சொன்னபோது அது எனக்கு வியப்பாக இல்லை.

அதுதான் பிரபஞ்சன்.