பல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்

          நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  25                                                    

பல்வேறு சமய, தத்துவச் சிந்தனைகள் செழித்திருந்த தமிழ் மண்

வைதீகம், ஆசீவகம், பௌத்தம், சாங்கியம், பூதவாதம் எனப் பல நெறிகளும், செழித்திருந்த காலம் மட்டுமல்ல, அவற்றுக்கிடையே ஆரோக்கியமான விவாதமும் நடந்து கொண்டிருந்த காலம் அது. சேரமன்னன் செங்குட்டுவன் வடக்கே படையுடன் சென்று, கங்கையைக் கடந்து, கனக விசயர் முதலான வடபுல மன்னர்களை வென்று, அவர்தம் தலைகளில், இமய மலையிலிருந்து பெயர்த்தெடுத்த கற்களைச் சுமக்கச்  செய்து கொண்டு வந்தான் எனவும், அவற்றைக் கொண்டே  கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்றும் நம்பிக்கைகள் உருவான காலத்தில் எழுந்த காவியம் மணிமேகலை. இக்காதையின் இறுதி வரிகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

செங்குட்டுவனை, ” பூக்காத வஞ்சியில் பூத்த வஞ்சி  மலர்களைச்சூடிய விரர்கள் வலம் வரும் சேர நாட்டுச் செங்கோல் வேந்தன்” எனக் கூறும் சாத்தனார், அந்த வீரர்கள் தாம் செல்லும் நாட்டை எல்லாம் சேரநாடாக ஆக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிறார். திருமுடியில் வாகை சூடிய அச்சேரனின் வஞ்சியில் எடுக்கப்பட்ட கண்ணகிப் படிமத்தை வணங்கி ஆசிபெற்ற மணிமேகலை, முன் அத்தியாயத்தில் கண்ணகி அவளுக்குச் சொன்னபடியே  ஆணுருவில் வஞ்சி மாநகருக்குள்  நுழைகிறாள். பௌத்தம் முன்னிறுத்தும் நான்கு பேருண்மைகளையும் புரிந்தேற்கும் வண்னம் இத்தருணத்தில் அவளுக்குத் “திருந்திய நல் ஏதுக்கள் முதிர்ந்திருந்தன” என நிறைவுறுகிறது  முந்திய காதை.

புத்தர் உறைத்துச் சென்ற நான்கு பேருண்மைகள் என்பன என்ன?

(i) வாழ்வின் அடிப்படையாக ‘துக்கம்’ தான் உள்ளது (ii) ‘ஆசை’ யும் பற்றுமே எல்லா துக்கங்களுக்கும் அடிப்படை (iii) தன்னை மையமாகக் கொண்ட நோக்கு, ஆசை அதன் விளைவான துக்கம் எல்லாம் நீக்கப்படக் கூடியவையே. (iv) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படியிலான எண்வழிப்பாதை (அஷ்டாங்க மார்க்கம்) மூலம் ‘சரியான வாழ்வை’ வாழும் யாரும் துக்கத்தை வெல்ல முடியும் – என்கிற இப்பேருண்மைகளை உணர்ந்தேற்கும் நிலையை மணிமேகலை எனும் கணிகைக் குலத்தில் பிறந்த ஒரு இளம்பெண் வந்தடைதலையும், அதனூடாக அவள் பெறும் அனுபவங்களையும் சொல்வதுதான் மணிமேகலைக் காவியம் என்பதை நாமும் உணர்ந்து கொள்கிறோம்.

இனி நாம் காணப்போகும் மணிமேகலையின் இறுதி நான்கு அத்தியாயங்களும் அன்று இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழகத்திலும் முகிழ்த்திருந்த முக்கிய பல சமயங்களின் கருத்தாக்கங்களையும், அவற்றில் பௌத்த சிந்தனைகள் எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றன என நிறுவுபவையாகவும் அமைகின்றன.

இப்போது நாம் காணப் போகும் “சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதை’ யில் மணிமேகலை ஆணுருக்கொண்டு புறச்சமயக் கணக்கர் பலரையும் கண்டு அவர்தம் மதக் கோட்பாடுகள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொள்கிறாள். யாருடனும் வாதிடுவதில்லை. இறுதியாகச் சந்திக்கும் பூதவாதிக்கு மட்டும் மறுமொழி சொல்வாள். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்தில் அன்று செழித்திருந்த பல்வேறு மத நெறிகளின் அடிப்படைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

‘சமயக் கணக்கர்’ என்பதில் உள்ள ‘கணக்கு’ எனும் சொல் ‘தத்துவம்’ அல்லது ‘மெய்யியல்’ எனும் பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. கணக்கர் என்பதை ‘தத்துவ விற்பன்னர்’ அல்லது ‘சமயவாதி’ அல்லது ‘சமய நெறியை ஆய்ந்துரைப்போர்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘அளவை’ என்பது தர்க்கம் (logic).

அ. அளவை வாதி

மணிமேகலை முதலில் சந்திப்பது வைதிக நெறியைச் சேர்ந்த ‘அளவை வாதி’ யை. வைதிக வாதி என்பது வேதங்களை ஏற்றவர், அதனடியாக அணுகுபவர் எனப் பொருள்படும். அவனிடம் ‘நின் கடைப்பிடி இயம்பு’ எனக் கூறி அவன் கடைபிடிக்கும் தத்துவத்தைக் கூறுமாறு மணிமேகலை கேட்டவுடன் அவன் தொடங்குவான்.

வேத வியாசன், கிருத கோடி, சைமினி (ஜைமினி) முனிவன் ஆகியோர் முறையே பத்து, எட்டு, ஆறு என்கிற எண்ணிக்கைகளில் தமது அளவைகளை அவரவர்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளனர். இவர்களில் சைமினி ‘.மீமாம்சை’யை எழுதியவர்.

அடுத்து பிரமாணம் என்பது எந்த அடிப்படை அல்லது ஆதாரம், அல்லது கொள்கையினடியாக ஒன்றை ஏற்றல் என்பது. அப்படியான பத்து பிரமாணங்களை அவன் பட்டியலிடுவான். அவை:

1.கண்ணால் கண்ட காட்சி,

 1. கருதுதல் (சிந்தனையில் மதிப்பிடல் அல்லது அனுமானத்திலிருந்து அனுமேயத்தை உய்த்தறிதல்),
 2. உவமம் (ஒப்புமையின் அடிப்படையில் முடிவுக்கு வருதல்),
 3. ஆகமம் (நூற் பிரமாணம் அல்லது நூலறிவு),
 4. அருத்தா பத்தி (ஆயர் குடியிருப்பு என்றால் அது கங்கையின் அருகில் இருக்கும் என ஒன்றிலிருந்து இன்னொன்றை அறிதல்),
 5. இயல்பு (ஒன்றின் தன்மை அறிந்து முடிவு கோடல். யானை மேல் இருப்பவன் கீழே கிடக்கும் ஏதொன்றையும் எடுத்துத் தருமாறு கேட்கும்போது அங்குசத்தை எடுத்துத் தருதல்),
 6. ஐதீகம் ( உலகுரை அல்லது வழி வழி வந்த கருத்து அல்லது நம்பிக்கை,)

8, அபாவம் (இன்மை – அதாவது குதிரைக்கு கொம்பு இல்லை என உணர்ந்தறிதல். ஒன்றைச் சொல்லும்போதே அது உறுதியாக அப்படியல்ல என முடிவுக்கு வருதல்),

 1. மீட்சி ஒழிவறிவு (இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் எனப் பொருள் கோடல்),
 2. எய்தியுண்டாம் நெறி (சம்பவத்தால் அறிதல், அதாவது ஒரு பொருளுக்கு அருகிலுள்ள இரும்பு சுழல்வதைக் கண்டு அதைக் காந்தம் என அறிதல்)

அத்தொடு நிறுத்தவில்லை அந்த வைதிகவாதை. அடுத்து ‘பிரமாண ஆபாசங்கள்’ என என எட்டு அளவைக் குற்றங்களைப் பட்டியலிடுவான். அவை:

 1. சுட்டுணர்வு : ஏதொன்றின் தோற்ற உண்மையை மட்டும் கண்டு பிறவற்றை ஆராயாது ஏற்றல் (நிருவிகற்ப காட்சி).
 2. திரியக்கோடல் : காணும் ஒன்றைத் திரித்துணர்தல். எதிரொளிக்கிறது என்பதாலேயே இப்பியை சிப்பி எனக் கொள்ளுதல் (விபரீதக் காட்சி)
 3. ஐயம் : எதையும் உறுதிப்படுத்தாமல் ஐயமுற்று நிற்பது.
 4. தேராது தெளிதல் : ஆராயமற் முடிவெடுத்தல். ‘தேரான் தெளிவும், தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’ – குறள்.
 5. கண்டுணராமை : கண்ணால் கண்டும் உணராமை. புலியைக் கண்டும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலாமல் நிற்றல்.
 6. இல்வழக்கு : முயற் கொம்பு என்பதுபோல இல்லாத ஒன்றை வெறும் சொற்பொருளிலிருந்து கற்பித்துக் கொள்ளல்.
 7. உணர்ந்ததை உணர்தல்: குளிருக்கு நெருப்பருகே அமர்தல் ஆறுதல் அளிக்கும் என அறிந்தும் அதனை மீண்டும் சோதித்து அறிய முனைதல்.
 8. நினைப்பு : ஒருவர் சொல்வதை காரண ஆய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.

ஆ. சைவவாதி

அடுத்து  ஈசன் (சிவன்) ஒருவனையே இறைவன் எனக் கொள்ளும் ஒரு சைவனைச் சந்தித்து அவன் வணங்கும் தெய்வம் குறித்து  உசாவுகிறாள் மணிமேகலை.

ஞாயிறு திங்கள், இயமானன் (‘நான்மறையோனுமகத்து இயமான்பட’- மாணிக்கவாசகர்) மற்றும் மண், நீர், தீ, காற்று, வான் எனும் ஐம்பூதங்கள் என எட்டினையும் தன் உடம்பாகவும் தான் உயிராகவும் கொண்டுத் தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் யாவற்ரையும் படைத்துத் திருவிளையாடல் புரிபவனே எம் இறைவன் எனப் பதிலுறுக்கிறான் அவன்.

இ. பிரமவாதி

இந்தப் பேருலகெல்லாம் பிரமதேவன் இட்ட முட்டை என முடித்துக்கொள்கிறான் இவன். பிரமவாதம் என்பது வைதிக அறுவகை நெறிக்குள் அடங்காது. புராணங்களில் மட்டுமே காணப்படுவது. இங்கு கூறப்படும் கருத்து மனுதருமத்தில் (1-9) காணப்படுவது.

ஈ. வைணவ வாதி

நீலவண்ணக் கடவுளின் புராணத்தை ஓதும் வைணவன் ‘நாராயணனே காப்பு’ என முடித்துக்கொண்டான்.

உ. வேத வாதி

‘கற்பமே’ (வேதங்களின் ஆறங்கங்கள்). கைகள், சந்தமே (ஒலி நயம்) கால்கள், எண்களே கண்கள் (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்), தெளிவான விளக்கம் அளிக்கும் நிருத்தமே (பாவம் / அபிநயம்) செவியாகவும், சிக்கையே (சிட்சை) மூக்காகவும், இவற்றோடு சொல் இலக்கணமே முகமாகவும் கொண்டு எந்தச் சார்பும் இன்றித் தான்தோன்றியாக வெளிப்பட்ட வேத புருடர்க்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. அவ்வேத வாக்குகளே எம் சமய நெறியாகும் என விளக்கினான் வேதவாதி.

‘மெய்த் திறம் (மெய்யான திறன்) அல்லது உலக வழக்கு எனக் கூறப்படும் எதிலும் இவ் வைதிகர் கூறுவன பொருந்தாது என எண்ணியவாறு தம் காலத்திய இன்னொரு முக்கிய சமயப் பிரிவான மற்கலியின் ஆசீவக நெறியறிந்த ஒரு முதியோனை அணுகினாள் மணிமேகலை.

ஊ. ஆசீவக வாதி

ஆசீவகர் கொள்கையச் சற்று விரிவாகவே பேசுகிறார் சாத்தனார். எல்லை இல்லாத பொருள்களில் எங்கும் எப்போதும் அகலாது பின்னிக் கிடந்து புலப்படுபவனும், எல்லையில்லாத அறிவினை உடையவனுமாகிய அவனே எங்கள் இறைவன். அவன் (மற்கலி) உரைத்த நூற்பொருட்கள் ஐந்து வகையாம். அவை திடம் தரும் உயிர், மற்றும் நிலம், நீர், தீ, காற்று எனும்  நால்வகை அணுவகைகள். அவ்வணுக்கள் நுண்மையானவை ஆனாலும் அவை தம்மை உற்றும், கண்டும் உணர்ந்திடுமாறு ஒன்றோடொன்று கூடுதலும் பிரிதலும் செய்யும். மலை, மரம், உடம்பு எனத் திரளவும் செய்யும். வெவ்வேறாகிப் பிரியவும் செய்யும். அவ்வாறு திரளவும், பிரியவும் செய்யும் வகையினை ஆராய்ந்தறிவதே உயிர் எனப்படும். ஆசீவகத்தின் அணுக் கொள்கையின்படி உயிரும் ஒரு அணுவே. அது உற்றும் கண்டும் உணர்ந்திடும் வகையில் கூடவும் செய்யும் பிரியவும் செய்யும். “ஒன்றாய், வேறாய், உடனாய்” எனும் ஆசீவகத்தின் ஒருமைவாதக் கோட்பாடு இங்கே குறிக்கப்படுகிறது. ஆசீவக நெறியை மறுக்கும் நீலகேசியிலும் (659 – 729) ஆசிவகத்தின் அணுக் கொள்கை இவ்வாறு விளக்கப்படுவதைக் காணலாம்.

ஆசீவகவாதி தொடர்கிறான்: நில அணுக்கள் வன்மையானதாக அமையும். நீரணுவானது வீழ்ந்தும், குளிர்ச்சியும் சுவையும் உடையதாகவும் இருக்கும்.. ‘இழின்’ எனும் ஒலியோடு வீழ்ந்து நிலத்தின் ஆழத்தே உறிந்து கொள்ளப்படும். தீ அணுவோ எரிவதும் மேல்நோக்கி எழுவதுமான பண்புகளைக் கொண்டிருக்கும்.. காற்றணுவோ குறுக்கிட்டு (விலங்கி) அசையும் பண்பு கொண்டிருக்கும்..

நிலம், நீர், தீ, காற்று எனும் இந்நான்கும் ஆதியில்லாத அநாதியான பரமாணுக்கள். பிரிதல், பின் கூடுதல் எம்கிற வேறு இயல்புகளை எய்தும் விகாரமுடையவை. ஆனால் இதனால் இவை கேடுற்றுச் சிதைந்தழிவதும் இல்லை. புதிதாய் ஓரணு தோன்றி இன்னொன்றுக்குள் புகுவதும் இல்லை. அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதும் இல்லை. ஓரணு ஈரணுக்களாய்ப் பிரிவதும் இல்லை. தவிரவும் நெல் அவலாய் பரந்துபடுவதுபோல போல இவை விரிவதும் இல்லை. உலாவுவதும், தாழ்வதும், உயர்வதும் உண்டு. நில அணுக்களால் அமைந்த மலை, பின் சிதைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடலாம். பலவாகக் கூடியிருப்பன பின் பிரிந்துத் பின் பழைய அணுத்தன்மை உடையதாக மாறவும் கூடும். மரமாய்ச் செறிந்துள்ள அணுக்கள் திண்மையாய்ச் செறிந்து வேறேதேனும் ஆகலாம். மூங்கிலும் மர அணுக்கள் ஆனபோதிலும் அவை மூங்கிலாய் உருப்பெறும்போது உள்ளே துளைகொண்ட  தன்மையதாகவும் ஆகலாம். வித்தாகி மீண்டும் முளைக்கவும் ஆகலாம். தேயாத முழுநிலவைப்போல வட்டமான செழித்த நிலப்பரப்பாகவும் ஆகலாம்..

இந்த அணுக்கள் நிலம் நீர் முதலான பஞ்சபூதங்களாய் உருப்பெரும்போது இந்த நால்வகை அணுக்களும் அவையவைக்கு உரிய அளவிலேயே இருக்க வேண்டும். அவற்றில் எதுவும் குறையவோ கூடவோ கூடாது.. ஒன்று, முக்கால், அரை, கால், பங்கு என அவை வேறுபடும். எடுத்துக்காட்டாக நிலமாகிய பூதம் உருப்பெறும்போது அதில் நில அணு ஒன்று அமைந்தால் நீரணு முக்கால், நெருப்பு அரை, காற்று கால் எனும் அளவுகளில் பங்கு பெரும். இவற்றில் எது மிகுந்துள்ளதோ அதனால் அது பெயர் பெறும்.. இப்படியான வீதத்தில் அணுக்கள் செறிந்து அமையும் போதுதான் அவை நிலம் அல்லது நீர் என்பது போலப் பண்பு கொண்டிருக்கும். அதாவது நிலமாய் உறுதி பெறுதல் அல்லது நீராய் பள்ளம் நோக்கி ஓடுதல், நெருப்பாய்ச் சுடுதல், காற்றாய் வீசுதல் முதலான தொழில்களை அடைந்திடும்.

தெய்வ, ஞானக் கண்களை உடையோர் ஒவ்வோர் அணுவையும் கண்டறிவர். ஏனையோர் பூதமாய்த் திரண்டு நிற்பவற்றின் உண்மைகளை அறியார். கரும் பிறப்பு,, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம் பிறப்பு, பொன்பிறப்பு, வெண் பிறப்பு என மக்கள் இவ் அறுவகைப் பிறப்பிலும் பிறந்து இறுதியாக அதி வெண்மையான பிறப்பில் பிறந்து வீடுபேறடைவர். தாம் துன்பமுற்று அழிந்து படுவதை விரும்பாதோர் வீடுபேற்றிற்கு உரியதான அதிவெண்பிறப்பில் பிறப்பதற்கு உரியோர் ஆவர். இதுவே ‘செம்போக்கு’ எனும் நன்னெறியாகும். இந்நெறியில் தவருற்றுத் துன்புற்றால் அதுவே ‘மண்டல’ நெறி என அறிதல் வேண்டும்.

ஆசீவகத்தின் பார்வையில் வீடுபேற்றுக்கான வழி இப்படியாக அறுவகைப் பிறப்புகளிலும் பிறந்து படிப்படியாக உயர வேண்டும் என்றாகிறது. இவ்வாறு பல்வகைப் பிறப்புகளுக்கும் நிறங்கூறுவது என்பது சீவக சிந்தாமணி முதலான சமணக் காப்பியங்களிலும் காணப்படுவதை வேங்கடசாமி நாட்டார் சுட்டிக் காட்டுகிறார். பெரியாழ்வாரும் வீடுபேற்றுக்குரியவர்களை ‘வெள்ளுயுர்’ எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக அந்த ஆசீவகன், “நற்பேறுகளைப் பெறுதலும், பெற்றவற்றை இழத்தலும், இடையூறுகள் நேர்தலும், பொருந்தும் இடத்தை அடைதலும், இன்பத்தையும் துன்பத்தையும் அடைதலும், பொருந்திய இடத்திலிருந்து நீங்கலும், பிறத்தலும், சாதலும் கரு உயிர்த்தபோதே உயிருடன் கலந்து விடும். இந்த இன்பமும், துன்பமும் ஆகிய இவையும் அணுவெனப்படும்.. முன்னுள்ள ஊழே பின் நல்லது கெட்டதற்குக் காரணமாகிறது. இதுதான் மற்கலி கோசகர் தன் நூலில் உரைத்துள்ளவையாம்” எனத்தன் ஆசிவக நெறியை மணிமேகலைக்கு உரைத்தான்.

கிட்டத்தட்ட இந்த அத்தியாயம் மணிமேகலைக் காப்பியத்தின் மொழியாக்கமாகவே அமைந்துள்ளது. சாத்தனாரின் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வளமான தத்துவ விவாதங்கள் குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இது உதவும். சாங்கியம், பூதவாதம் முதலான மேலும் சில முக்கிய போக்குகளையும் அவற்றின் மீதான கருத்துக்களையும் தொடர்வோம்.

(அடுத்து நிகண்ட வாதம் சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய நெறியாளர்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.)

 

 

 

 

 

 

இந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்?

(மார்ச் 2019  ‘மக்கள் களம்’ இதழில் வெளி வந்தது)

சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அஹமட் தர் எனும் 22 வயது இளைஞனின் தற்கொலைத் தாக்குதலால் (2019  பிப்ரவரி 14) குறைந்த பட்சம் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து பத்தொன்பது நாட்கள் கழித்து இக்கட்டுரையை ‘டைப்’ செய்து கொண்டுள்ளேன். இடையில் நிறைய நடந்துவிட்டன. ஆசியாவின் அணுவல்லமை மிக்க இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு யுத்தம் தொடங்கி மிகப் பெரிய அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமோ என்கிற அச்சம் இப்போது சற்றே குறைந்துள்ளது. இந்நிலை உருவானதில்,  நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பாக் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் காரணமாகியுள்ளதை உலகமே பாராட்டுகிறது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொழுது இளைஞன் ஒருவன் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்திவிடுவான் என யாரும் நினைக்கவில்லை. மோடி அரசு பதவி ஏற்றபின் (2014) காஷ்மீரப் பள்ளத்தாக்கில் வேகமாக அமைதி குலைந்தது.எனினும், இதற்கும் முந்தைய பல ஆண்டுகால முஜாஹிதீன் பயங்கரவாதத்திற்கும் 2014 க்குப் பிந்திய அமைதியின்மைக்கும் ஒரு வேறுபாடு உண்டு.2014 க்கும்முன் பள்ளத்தாக்கிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில்காஷ்மீர மகளைக் காட்டிலும் அதிக அளவில் அந்நிய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட முஜாகிதீன்களே அதிகமானதும், முக்கியமானதுமான பங்கு வகித்தனர்.

2014க்குப் பிந்திய இந்த எழுச்சியில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் காஷ்மிர் முஸ்லிம் இளைஞர்களே முக்கியமாக இருந்தனர்.வீதிகளில் கூடி கற்களை வீசி, பெல்லட் குண்டுகளுக்குத் தம் கண்களைப் பறி கொடுத்த நூற்றுக்கணக்கானோரிடம் பெரிய ஆயுதங்களும் இருந்ததில்லை.அவர்கள் பயிற்சிபெற்ற முஜாஹிதீன்களும் இல்லை. புர்வான் வானி  ஆசிரியக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு இளைஞன், அவனது அண்ணன் ஆசையாக வாங்கியிருந்த ஒரு மோட்டார் சைகிளை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனை ஒரு இந்தியவீரன் பிடித்துச் சென்று, கடும் சித்திரவதைகளுக்குப் பின் அவன் கொல்லப்படுகிறான். இது அங்கு அன்றாட நிகழ்வாகிப்போன ஒன்று.சுமார் ஆறு குடிமக்களுக்கு ஒரு படை வீரன் என உலகிலேயே அதிக அளவில் படைகள் நிறுத்தப்பட்டுள்ள மிகச் சில பகுதிகளில் காஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒன்று.இந்தியாவின் எந்தச் சட்டங்களும் நெருங்க இயலாத அளவிற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய படைவீரர்கள் அவர்கள், அவர்கள் செய்யாத கொடுமைகள் இல்லை. அண்ணன் இவ்வாறு இந்தியப் படை வீரர்களால்  கொல்லப்பட்டதை அறியும் புர்ஹான் வானி ஒரு முஜாகிதீன் ஆகிறான். அந்த 22 வயது இளைஞனை இந்திய இராணுவம் பிடித்துக் கைது செய்ய வாய்ப்பொன்று கிடைத்தபோது அவனைக் கைது செய்து விசாரிக்காமல் சுட்டுக் கொன்றபோது (2016) பள்ளத் தாக்கே கிளர்ந்து எழுந்தது. அவனது மரண ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்.

அதற்குப் பின் அங்கு முந்திய சில ஆண்டுகளில் இருந்த அமைதி குலைந்தது. ஆனால் இந்த அமைதிக் குலைவுக்குக் காரணம் பயங்கரவாதிகளோ இல்லை அந்நிய மண்ணில் பயிற்சி பெற்றவர்களோ இல்லை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள்தான, கைகளில் வெறும் கற்களைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லாமல் வீதிகளில் நின்றனர், இராணுவத்தினர் மீது கற்களை வீசினர். இராணுவம் ‘பெல்லட்’ குண்டுகளால் ஆயிரக் கணக்கானோரின் கண்களைக் குருடாக்கிய கதையை உலகறியும்.இப்படியான ஒரு பின்னணியில்தான் புர்ஹான் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் கூட முடிவடையும் முன் இன்றைய போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

நாற்பதுக்கும் குறையாத இந்தியப் ம்படைவீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வோடு இன்றைய அமைதியின்மையும் போர்ச்சூழலும் உருவாகியுள்ளது.

113059-yzpstdrwyp-1550154353

இந்தத் தாக்குதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1இன்று இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான இந்தத் தற்கொலைப் போரளியும் உள்ளூர் காஷ்மீரிதான்.அவன் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவன் ஆனாலும் அவன் பாகிஸ்தானியோ இல்லை வெளியிலிருந்து வந்தவனோ அல்ல, அவன் ஒரு உள்ளூர் காஷ்மீரி.அப்படிப் பொது மக்களிலிருந்து கோபத்துடன் கைகளில் கற்களை மட்டும் ஏந்தி வந்து கண்களைக் குருடாக்கிக் கொண்டஇளைஞர்கள் இப்போது ஒரு தலைமுறைக்குப் பின் மீண்டும் பயிற்சியளிக்கப்பட்ட முஜாஹிதீன்களாகக் பயங்கரமான வெடிமருந்துகளுடன் தன்னை அழித்துக் கொண்டு கூடவே படைவீரர்களுக்குப் பேரழிவு ஏற்படுத்த்ம் தற்கொலைப் போராளி ஆகிறான். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.மீண்டும் நிலைமை பழைய நிலைக்குத் திரும்புகிறது.காஷ்மீர இளைஞர்கள் இன்று முழுமையாக அந்நியமாகிப் போயுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.இதும ்கட்ந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட நிலை..

அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பயங்கரவாதத்திற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் ஜெய்ஷ்ஏ முஹமது அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது..

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்தவர்கள்.அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாத நிலையில் பல காலம் ஆயுதங்கள் எடுக்காமல் போராடி இறுதியில் ஆயுதப் போராட்டத்துத் தள்ளப்படுகின்றனர்.

நீண்ட கால ஆயுதப் போராட்டம், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்றெல்லாம் இருந்து பின் அவர்கள் சற்றே ஓய்ந்திருந்து 2008 வாக்கில் அமைதி வழியில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து பேரணி ஒன்றிற்காகத்  திரண்ட போது மன்மோகன் சிங் அரசு அதை ஒடுக்கியது.

எனினும் 2014 வரை அங்கு பெரிய அளவில் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் இல்லை.அதாவது நிலைமை சரியாகிவிட்டது என்பதில்லை.ஏதோ ஒரு வகையில் காஷ்மீரிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமாக இருந்தது.

மோடி அரசு பதவி ஏற்றபின் நிலமை மீண்டும் மோசமானது.ஆனால் அப்போதும் கூட காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றையப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவன் வெளியிலிருந்து வந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவ்பன் அல்ல, ஜெய்ஷ் அமைப்பு ஒரு உள்ளூர் இளைஞனை இதற்குப் பயன்படுத்தியுள்ளது என்பது சிந்திக்கத் தக்கது. மீண்டும் காஷ்மீர் மக்களின் இந்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த ஐந்தாண்டுகளில் ஜெய்ஷ் போன்ற அமைப்புகள் உள் நுழையக் கூடிய போராட்டமாக மாறியுள்ளது.மக்கள் முற்றிலும் அந்நியமாகியுள்ல நிலையை இன்று ஜெய்ஷ் முதலான அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எந்தப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக இல்லை எனும் நிலைபாட்டை எடுத்துக் கொண்டு, இருக்கும் நிலையில் எந்த மாற்ரத்தையும் ஏற்படுத்த மோடியோ இல்லை ராஜ்நாத் சிங்கோ தயாராக இல்லத சூழலில் மீண்டும் அங்கே பயங்கரவாதம் தலைஎடுத்துள்ளது.

பிரச்சினை இங்கே இருக்கிறது.

பாகிஸ்தானுடனான ஒரு யுத்தம் இதற்குத் தீர்வாகி விடுமா?

1971 க்குப் பின் மீண்டும் இன்றுதான் இந்திய விமானப் படை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் மீதுஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.அதைக் கண்டு எல்லோரும் நடுங்கினோம்.நாம் மட்டுமல்ல உலகே நடுங்கியது.இரண்டும் அணு ஆயுதங்களைக் கையில் கொண்ட நாடுகள்.என்கிற அச்சம் எல்லோருக்கும் உள்ளது.இது ஒரு சமநிலையை எற்படுத்தி அது போரைத் தடுக்க உதவுமா?

ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தியா பாக்கைக் காட்டிலும் 8.5 மடங்கு பொருளாதார பலமும், இரண்டு மடங்கு படைபலமும் உள்ள நாடு.அதன் தாக்குதல் வலிமை பாக்கைவிட மிக அதிகம்,இந்நிலையில் போரில் சமநிலை இல்லாதபோது தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் ஆசை அதற்கு வரலாம்.முதல் ஆசை யாருக்கு வந்தால் என்ன, அழிவது இருவருந்தான்.

ஆனால் இப்படியான போர்ச்சூழல் உருவாகும் என புல்வாமா தாக்குதல் நடக்கும் வரை யாரும்  எதிர் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுகும் இடையில் ஒரு போர்உருவாகலாம் என ஒரு மாதம் முன்பே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது உண்மைதான்.ட்ரம்பும் கூட அப்படி இருவாரங்களுக்கு முன் ஒருமுறை கூறியது செய்தியானது. இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற நம்பிக்கைக்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளதுதான், இந்தியாவைக் காட்டிலும் பாக்கை அதிகமாக ஆதரித்து வந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக வெளிப்படையாக பாக்கைக் கண்டிக்கத் தொடங்கி இருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான பலமான சக்தியாக இருந்த ருஷ்யா இப்போது பலமிழந்து போயிருந்ததாலும், மோடியின் இந்தியா மிகத் தீவிரமாக அமெர்ரிக்க – இஸ்ரேல் அணியில் இணைந்து நின்றதாலும் இப்போது அமெரிக்கா துணிச்சலாக பாக்கின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாகிஸ்தான் தஞ்சமடைய இபோது சீனாவைத் தவிர வேறு கதி இல்லை என்கிற நிலையில் ட்ரம்ப் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து பாக்கிற்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார்..ஜனவரி 2018ல் அமெரிக்கா 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்திய போது பாக்கின் பொருளாதாரமே அட்டம் கண்டது.இதன் விளைவாக பாக்கும் லக்‌ஷர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது முதலான அமைப்புகளுக்கான ஆதரவுகளை நிறுத்தியிருந்தது. அவ்வமைப்புகளும் தம் பயிற்சி முகாம்களைக் கலைத்துச் சிதறி இருந்தன, அதனால்தான் இன்றைய பிரச்சினைகளுக்குச் சில நாட்கள் முன் (பிப்ரவரி 2019) நடைபெற்ற ம்யூனிச் பாதுகாப்பு அமைப்புச் சந்திப்பில் (Munich Security Forum) இந்தியா – பாக் உரசல் குறித்து எந்த விவாதமும் நடை பெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதல் நடந்தது.நரேந்திர மோடியைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருக்கும் அச்சம்தான்.போர்ச்சூழல் உருவாகும் என எதிர்பார்க்காதவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.நரேந்திர மோடியும் பாஜகவினரும் தேசிய உணர்வை மிகத் தீவிரமாக விசிறத் தொடங்கினர்.கம்யூனிஸ்டுகள் உட்பட யாரும் தேசத் துரோகியாக விரும்பாமல் யார் அதிக தேச பக்தர் என நிறுவிக் கொள்வதில் மும்முரமாயினர்.

பிப்ரவரி 26 நள்ளிரவில் இந்தியாவின் மிர்ரேஜ் 2000 விமானங்கள் பன்னிரண்டு பாக் எல்லைக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷே அமைப்பின் பயங்கரவாத முகாம் ஒன்றில் குண்டுகளை வீசி அதிலிருந்த சுமார் 250லிருந்து 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் பெரிய அளவில் செய்திகள் பரப்பப் பட்டன. இது இந்தியாவின் இரண்டாவது “துல்லியத் தாக்குதல்“ (surgical strike) எனக் கூறப்பட்டது. தாக்குதலுக்குச் சில மணி நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய் கோகலே இது ஒரு “இராணுவ நடைமுறையிலான தாக்குதல் அல்ல முன்கூட்டிய பாதுகாப்புத் தாக்குதல்” – எனும் பொருள் பட “preemptive nonmilitary strike” என்றும், “இது பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்” என்றும் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் பங்கிற்கு, “இது இராணுவ நடவடிக்கை அல்ல. ஒரு சிவிலியன் கூட பாதிக்கப்படவில்லை” – என்றார்.

பாக் இராணுவம் தன் பங்கிற்கு, “இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என முழங்கியது.அதாவது தாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என எச்சரித்தது.

சரி நிச்சயம் போர்தான் என அஞ்சினோம்.1971க்குப் பின் பல்வேறு சந்ந்தர்ப்பங்களில் மிகத்தீவிரமாகப் பிரச்சினைகள் வந்த போதெல்லாம் கூட இப்படி இரண்டு நாடுகளுமே எல்லை தாண்டித் தாக்குதலை நடத்தியதில்லை.இனி என்ன ஆகுமோ என்கிற அச்சம் நம் எல்லோரையும் சூழ்ந்தது.

இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாகப் பிரச்சினையைக் கையாண்டது பாக் பிரதமர் இம்ரான் கான் தான்.இரு நாடுகளும் மிகப் பெரிய அழிவாயுதங்களைச் சுமந்துள்ள நாடுகள்.நமக்குள் இப்படியான மோதல் எங்கு கொண்டுபோய் விடும்.பொறுமையாகப் பிரச்சினையை அணுகுவோம் என்றும் அப்படியான பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் தன் நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். இன்னொரு பக்கம் பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கி 300 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பொய் எனவும், அழிக்கப்பட்டது ஆள் இல்லாத மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதிதான் எனவும் சில புகைப்[பட ஆதாரங்களுடன் பாக் தரப்பில் செய்திகள் பரப்பப் பட்டன.l_440199_043358_updates

இந்த நேரத்தில் சில வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் களத்தில் இறங்கின. Huff Post இணைய இதழ் இந்தியா குண்டு வீசிய இடங்களில் வாழ்ந்த ஒரு சிலரைய நேர்கண்டு எழுதிய கட்டுரைச் செய்தி உலகம் முழுதும் பரவியது. ‘அல்ஜசீரா’ போன்ற ஊடகங்களும் அதே போன்ற செய்திகளை வெளியிட்டன.குண்டு வீசப்பட்ட இடத்தில் வாழும் நூரான் ஷேக் என்பவர் 250 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே அவர்களின் உடல்கள் எனக் கேட்டுச் சிரிப்பதைப் படத்துடன் ஹஃப் போஸ்ட் வெளியிட்டது. பெரிய முகாம் இருந்தது உண்மை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்தியாவின் இந்தத் தாக்க்குதல் நடந்த அடுத்த நாள் (பிப் 27) எல்லை தாண்டித் தமது எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய விமானப்படை விமானங்களைத் தான் சுட்டு வீ௳த்தியதாக பாக் அறிவித்தது. வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த விமான ஓட்டி அபிநந்தன் வர்த்தமானன் என்பவர் பாக் இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.இந்தப் பிரச்சினையிலும் இம்ரான் கான் உலகோர் வியக்கும்படி நடந்து கொண்டார். அபிநந்தனுக்கு நல்ல சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் இந்தியாவிடம் ஒப்படைத்தார்,

iaf-pilot-in-pakistani-custody-will-be-governed-under-geneva-convention-2019-02-27

பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷே பயங்கரவாத முகாமை அழித்து 300 பயங்கரவாதிகளைக் கொன்ற செய்தி பொய் என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நிறுவப்பட்ட பின் மார்ச் 04 அன்றுமத்திய தகவல்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அரசுத் தரப்பில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை எனவும் ஊடகங்கள்தான் அப்படிச் செய்தியைப் பரப்பிவிட்டன என்றும் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மார்ச் 4 அன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா அவர்கள், “எங்களின் நோக்கம் இலக்கைத் தாக்குவதுதானே ஒழிய எத்தனை பேர் இறந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார்.இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூடவே மார்ச் 3 அன்று இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித் ஷாஅளந்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லாம் உண்மைதான்.அதேபோல பாக் இராணுவம் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடிய நிலைமைகள் இருந்ததும் உண்மைதான்.ஆனால் நிலைமைகள் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.ஒரு நேரத்தில் தமிழகம் முழுவதும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்கள் எல்லாம் இங்கே ஆயுதப் பயிற்சி முகாம்களை அரசாதரவுடன் நடத்தியதை அறிவோம்.ராஜீவ் கொலைக்குப் பின்னர் அவை கலைத்து ஒடுக்கப்பட்டதையும் அறிவோம்.இன்று பாக்கிலும் ஓரளவு நிலைமை மாறியுள்ளது.பெரிய பயங்கரவாத முகாம்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.இராணுவமும் முன்னைப்போல இப்போது அரசை மீறிய அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கும் நிலையில் இல்லை.இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணு வல்லமை உடைய நாடுகள் மட்டுமல்ல. வறுமை நிறைந்த நாடுகள், அவை தமக்குள் போரிட்டுக் கொள்வதைப்போல மூடத் தனம் ஏதும் இருக்க இயலாது.balacot

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். 1947 தொடங்கி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்ந்தால் அவற்றுக்குப் பின் காஷ்மீர்ப் பிரச்சினை இருப்பது விளங்கும், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் வேறு எத்தனை நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டாலும் அங்கே அமைதியை நிலைநாட்ட முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனும் நிலையை மேற்கொண்டிருக்கும் வரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை.

மேலும் இரு குறிப்புகள்

 1. நாடுகளுக்கிடையேயான கடைபிடிக்கப்படும் சில அவசியமான ஒழுங்குகளில் (Westphalian Order) ஒன்று எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்கோட்டித் தாண்டிப் பிரவேசிக்கவோ தாக்கவோ கூடாது என்பது. 1971 க்குப் பின் நிலைமைகள் எவ்வளவு மோசமான போதும் இந்தியாவும் பாக்கும் அதைக் கடைபிடித்து வந்துள்ளன. எல்லை தாண்டித் தாக்குதல் செய்வதென்பது போர் தொடங்கிவிட்டதான ஓர் அறிவிப்பிற்குச் சமம். கிரீமியாவை ருஷ்யா இணைத்துக் கொண்டதை அவ்வாறே பன்னாட்டுச் சமூகம் எதிர் கொண்டுள்ளது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ருஷ்யாவின் தலையீடும் இவ்வாறே கருதப்படுகிறது. எனினும் இதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவிற்குள் இதுவரை எல்லைதாண்டியத் தாக்குதல் நடத்தியதில்லை. இந்தியா 1971 க்குப் பின் இதுவரை இதுவரை இப்படியான செயற்பாடுகளில் இறங்காதது பன்னாட்டளவில் அதன் மீதான மதிப்பு குறையாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்..
 1. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தியா மேற்கொண்ட சில கண்டிக்கத் தக்க நடவடிகைகளில் ஒன்று ஹுரியத் தலைவர்கள் உட்பட சுமார் 170 பேர்களுக்கு வழங்கி வந்த பாதுபாப்பை இந்திய அரசு ரத்து செய்தது. இதில் உயிராபத்து உள்ள பல காஷ்மீர அரசியல் கட்சித் தலைவர்களும் அடக்கம். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் காஷ்மீர மாணவர்கள், வணிகர்கள், ஊழியர்கள் முதலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்தனர். “இயல்பான தேசபக்தியின் எதிர் விளைவு என இதை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர். டெராடூனில் ஒரு கல்வி நிறுவனம் அடுத்த ஆண்டுமுதல் காஷ்மீர மாணவர்களுக்குத் தம் நிறுவனத்தில் இடமளிப்பதில்லை என பா.ஜ.க மாணவர் அணிக்கு எழுதிக் கொடுத்துள்ள செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும் நடந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் ஒரு நாள் கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 

கண்ணகி மதுரையை எரித்தது தவறு என வாதிடும் மணிமேகலை

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 24                .மார்க்ஸ்

கலங்கி நின்ற புண்ணியராசனிடம், “கலக்கம் கொள்ளாதே ! உன் நாட்டு மக்கள் உன் வருகையை எதிர்பார்த்து நிற்கின்றனர். அங்கு செல். நான் வஞ்சி செல்கிறேன்” எனக் கூறியவாறு தன் கணவன் மீது தணியாத காதல் கொண்ட கண்ணகியும் தன்னைப் பெற்றவனும் கொடைப் பண்பு மிக்கவனுமான கோவலனும் தெய்வமாக எழுதப்பட்டிருந்த படிமத்தைக் காணும் ஆர்வத்தோடு வானில் எழுந்த மணிமேகலை வஞ்சி நோக்கிப் பறந்தாள்.

சேர மன்னன் எழுப்பிய அந்தக் கோவிலில் நுழைந்து அவர்களை வணங்கி நின்றாள். அவர்களின் பெருமைக்குரிய குணங்களை எல்லாம் சொல்லிப் போற்றி அன்னையை நோக்கி, “அன்பின் அடிப்படையிலான கடமையிலும் நில்லாமல், நற்தவ நெறியையும் மேற்கொள்ளாமல். கற்புக்கடன் நின்று உம் கடமையை முடித்தீர்கள். அது ஏன் என விளக்கி அருளல் வேண்டும்” எனக்கூறிக் கண்கலங்கினாள்.KANNAGI TEMPLE 2

இந்தத் தொடரில் முன்னொரு இடத்தில் சமணம் போலப் பத்தினி வழிபாட்டிற்கு பவுத்தத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் மணிமேகலைக் காப்பியம் பத்தினி வழிபாட்டையும் ஏற்பது ஒரு சிறு முரண் என்பதுபோலக் குறிப்பிட்டிருப்பேன். அதற்கு இந்தக் கேள்வியிலேயே விடை அமைகிறது. கணவன் அநீதியாகக் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி ஆத்திரம் கொண்டு மாதுரை மாநகரை அழித்ததை, அவள் தன் கற்பிற்கு உண்மையாக இருந்து செய்த கடன் எனக் கூறும் மணிமேகலை, கணவன் மீது கொண்ட அன்பைப் பெரிதாகக் கொண்டிருந்தால் அவர் கொல்லப்பட்ட கணமே தானும் உயிர் விட்டிருக்க வேண்டும். நற் தவநெறியின்பால் நின்றிருந்தால் கைம்மை நோன்பு மேற்கொண்டு தன்னை வருத்திக் கொண்டோ இல்லை தன் அன்னை மாதவி போலத் துறவற வாழ்வைத் தேர்ந்தோ இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் வெஞ்சினம் கொண்டு மதுரை நகரையும் மக்களையும் தீக்கிறையாக்கியது, இவ்விரண்டையும் காட்டிலும் தன் கற்புக் கடனையே கண்னகி முன்னிறுத்தினாள் என்பதுதானே.   இது ஏன் என்பது மணிமேகலையின் கேள்வி. இது இங்கு ஒரு தெளிவு பெறும் நோக்கில் மட்டும் முன்வைக்கப்பட்ட கேள்வி அல்ல. மாறாக முன்னிரண்டு செயல்களைக் காட்டிலும் இது ஏற்புடையது அல்ல என கண்ணகிக்குச் சுட்டிக்காட்டும் முகமாக இக் கேள்வி இங்கே முன் வைக்கப்படுகிறது. இதன் ஊடாக கற்பின் வலிமையைக் கொண்டு கண்ணகி மதுரையை எரித்த செயல் ஒரு வகையில் கண்டிக்கப் படுவது இங்கே கவனிக்கத் தக்கது. அதோடு அச்செயலைக் கொண்டாடும் பத்தினி வழிபாட்டிற்கும் மணிமேகலை ஒப்புதல் அளிக்காததும் வெளிப்படுகிறது.

இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்து கண்ணீர் மல்க நிற்கும் மகளைச் சமாதானம் செய்ய வேண்டிய நிலை பத்தினிக் கடவுளாய் வடிக்கப்பட்டு நிற்கும் கண்ணகிக்கு ஏற்படுகிறது.

“என் தலைவனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாது எழுந்த வெஞ்சினத்தால் மதுரை அழல் பட்டு அழிய நேர்ந்த அந்நாளில் அந்நகரைக் காக்கும் பெருந் தெய்வமாகிய மதுராபதி என் முன் தோன்றியது. கோவலன் இவ்வாறு கொல்லப்பட்டது நீங்கள் முற்பிறவியில் செய்த (தீ)வினையின் பயனாய் விளைந்தது என அத் தெய்வம் அந்த வரலாற்றைக் கூறியது.

“அழகொளிரும் மலர்வனங்கள் நிறைந்த கலிங்க நாட்டில் சிங்கபுரத்தை மையமாகக் கொண்டு ஆண்டு வந்த வசுவும், கபிலபுரத்திலிருந்து ஆண்டு கொண்டிருந்த குமரனும் பகைகொண்டு கடும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில் இடைப்பட்ட ஆறு காத தூரத்திற்குள் யாரும் நுழைய இயலாத ஒரு நிலை இருந்தது.

“அப்போது ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களை அள்ளிக் கொண்டு யாரும் அறியாமல், ஒளிவீசும் வளையணிந்த தன் மனைவியோடு சுங்கபுரத்தை வந்தடைந்தான் சங்கமன் என்பவன். ஆபரணங்களை விற்றுப் பொருள் சேர்ப்பது அவன் நோக்கம். அந்தச் செய்தி அரசுப் பணியில் இருந்த பரதனுக்கு வந்து சேர்கிறது. அந்தத் தீயவன் வேறு யாருமல்ல. கோவலனின் முற்பிறவி அவன். ஓடிச் சென்று தன் அரச்னிடம் சங்கமனைப் பற்றி அவனமொரு ஒற்றன் எனச் சொல்லி அவனைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கினான்.

“அவன் மனைவி அழுது அரற்றிய வண்ணம் ஒரு மலைமேல் ஏறித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நேரத்தில் இட்ட சாபத்தின் விளைவுதான் இப்பிறவியில் கோவலன் இப்படிச்சாக நேரிட்டது. முற்பிறவி வினை வந்து உருத்தாது ஒழியாது” – என மதுராபதித் தெய்வம் உரைத்த வரலாற்றை விரிவாக மகளுக்கு உரைத்த கண்ணகி, தொடர்ந்து,

“உன் தந்தை அநீதியாய்க் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் சீற்றம் கொண்டேன். செழுநகர் சிதைத்தேன். முற்காலத்தில் செய்த நல்வினையின் பயனாய் இன்று நாங்கள் வானவர் உலகத்தில் இடம் பெற்றோம். இந்த நல்வினைப் பயன் முடியும்போது எந்த வகையிலேனும் (மதுரையை எரித்த) இந்த ஆத்திரத்தால் விளைந்த பாவம் எம்மை அடையாமல் போகாது. மேலுலகில் இல்லாது போனாலும் இவ்வுலகிலேயே பல பிறவிகள் எடுத்து, எல்லாப் பிறவிகளிலும் வினைப் பயன்களை அனுபவித்து, உங்களைப் போலவே அகல்வதற்கு அரிதான இப்பிறவிப் பெருங் கடல் நீந்திப் பிறந்தும், இறந்தும் நாங்களும் உழல்வோம்.”- என்றனள் கண்ணகி. இக் கூற்று கூர்ந்து ஆராயத் தக்கது.

கணவனின் இறப்புக்காக மதுரை எரிக்கப்பட்டது எவ்வகையிலும் பெருமைக்குரிய ஒன்றல்ல. அது ஒரு பாவச் செயல். அதற்கான வினைப்பயனைக் கண்ணகி அனுபவித்துத்தான் ஆக வேண்டும். வினைப்பயனிலிருந்து யாரும் தப்ப இயலாது.. கண்ணகிக்குக் கோவில் எடுத்துவிடுவதால் மட்டும் அவள் தெய்வமாகிவிட முடியாது எனப் பல விடயங்களைக் இக்காதை மூலம் ஆணி அடித்தது போலச் சொல்லி விடுகிறார் சாத்தனார்.

அதற்காகவே இந்தக் காதை காப்பியத்தில் இடம் பிடிக்கிறது எனச் சொன்னாலும் அது தகும். ஆக பௌத்தக் காப்பியமான மணிமேகலை புத்த நெறிக்குப் பொருந்தாத பத்தினி வழிபாட்டிற்கு ஏற்பு வழங்குவதாகச் சொல்வதை நாம் அப்படியே ஏற்க இயலாது.

கண்ணகிக மகளிடம் உரைப்பன இத்தோடு முடிவதில்லை. அது மேலும் தொடர்கிறது:

“மறந்தும் மழை பொய்க்காத மகத நந்நாட்டின் நெற்றித் திலகம்போல விளங்கும் அழகிய கபிலவஸ்து நகரில், (பவுத்தம் கூறுகிற) பத்து வகையான ‘பாரமிதை’ ஒழுக்கங்களையும் அளவற்றதாகத் தன்னிடத்தே நிறைத்துக் கொண்டுள்ள புத்த ஞாயிறு எழும். அது போதி மரத்தடியில் எழுந்தருளி தீதற்ற ‘நால்வகை உண்மைகளையும்’ தெளிந்து, ‘பன்னிரு சார்புகளின்’ பகுதித் தோற்றத்தையும், அவை அழிவுறும் வகையையும் எடுத்து விளக்கி, பல்வேறு குற்றங்களிலிருந்தும் நீங்கி எண்ணற்ற அரிய உலகங்கள் எல்லாவற்றிலும் அறக் கதிர்களை அந்தப் புத்த ஞாயிறு விரிக்கும்.Tamil-Daily-News-Paper_2961651086808

“அப்போது, உன் தந்தையும் நானும் புத்தபகவனின் இந்திரவிகாரம் ஏழையும் வணங்கி, துன்பப் பிறவிகளிலிருந்து தப்பி, அன்புள்ளத்தோடு அவனது அறவுரைகளைக் கேட்டு, துறவு மனம் கூடி, இனிப் பிறவி எடுக்காத பேறு பெறுவோம். அவ்வாறு இறுதியில் பேறு பெறுவோம் என்றாலும் அநேக காலம் எல்லோருக்கும் ‘இருத்தியும்’ செய்து வருவோம்.

“மணம் கமழும் கூந்தல் உடைய நங்கையே! நீயும் இந்தப் பழம்பெரும் நகரினுள் (வஞ்சி) சென்று அவரவர் சமயக் கருத்துக்களை எல்லாம் கேட்கும்போது, அவை அனைத்தும் மெய்த்திறம் அற்றவையாய் உள்ளதை நீயே விளங்கியபின் பெரியவனின் திரிபிடக நெறியிலிருந்து பிறழாதவளாய் உருவாகுவை. இனி நிகழ்வன இவையே” என்றனள் அன்னை.

தொடர்ந்து மகளுக்கு எப்படிப் பிற சமயத்தவர்களை அணுகுவது என்றும் அறுவுரைத்தாள் கண்ணகி

“வயதிற் சிறியள். வளையணிந்த பெண் என எண்ணி யாருன் உனக்குத் தத்தம் மறை பொருளைக் கூறாமல் போவார்கள். எனவே வேற்றுருக் கொண்டு அவர்களை அணுகுவாய்” என்று முடித்தாள்.

முன்னர் தெய்வம் தனக்குச் சொல்லியிருந்த மந்திரத்தை ஓதி மணிமேகலை ஒரு பெரும் தவமுனிவரின் வடிவை அடைந்தாள். ஆலயங்கள், வேதிகைகள், பள்ளிகள், மலர்ப் பொழில்கள், பொய்கைகள் எனத் தவ முனிவர்களும், கற்றடங்கிய சான்றோரும், நூற்பயிற்சி மிக்க அறிஞர்களும் எங்கும் காணப்படும் நகரக் கோட்டை மதிலின் புறத்தே உள்ள இருக்கையை அடைந்தாள்.

சாத்தனார் இப்பகுதியில் கண்ணகியை ஒரு பௌத்தப் பிரச்சாரகராகவே மாற்றிவிடுவதைக் காண்கிறோம். சமணம் உட்பட அனைத்து வைதீக, அவைதீக மதச் சித்தாந்தங்கள் அனைத்திலும் பௌத்தமே உயர்ந்தது என்கிற கருத்தை  ஆணித்தரமாக முன்வைப்பவளாக கண்ணகியை அவர் இங்கு முன்னிறுத்துகிறார்.

இப் பகுதியில் நாம் “பத்துவிதமான பாரமிதை”, “நால்வகை உண்மைகள்”, “பன்னிரு சார்புகள்”, “இருத்தி” முதலான கருத்தாக்கங்களைக் கண்டோம். இவை மிகவும் ஆழமான பௌத்த தத்துவ அடிப்படைகள். இவற்றைக் கூடியவரை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். இனி உள்ள நான்கு அத்தியாயங்களும்கூட  இத்தகைய பௌத்த தத்துவ நெறிகளைச் சொல்பவையாகவும், அவை எவ்வாறு பிற சமயக் கருத்துக்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்துள்ளன என நிறுவும் வகையாகவும் அமையும். அவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

பாரமிதை: புத்த ஞாயிறு “பத்து வகையான ‘பாரமிதை’ களையும் தன்னிடத்தே நிறைத்துக் கொண்டுள்ளது” எனும் கூற்றை எடுத்துக்கொள்வோம். இங்கே ‘பாரமிதை’ எனத் தமிழ் வழக்கு மரபில் முன்வைக்கப்படும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தில் ‘பாரமிதா’ எனவும், பாலியில் ‘பாரமி’ எனவும் குறிப்பிடப்படும். ‘நிறைவான’, ‘குறைகளற்ற’ ‘முழுமையான’ எனப் பொருள்படும் (perfection / completeness) சொல் இது. முதன்மையான, ஆக உயர்ந்த, தலையாய என்றெல்லாம் பொருள்படும் “பரம”  எனும் வேர்ச்சொல்லிலிருந்து இது உருவாகிறது.

பாலி பௌத்த நூல்கள் பத்து வகையான ‘பாரமி’களை (முழுமைகளை) பட்டியலிடுகின்றன. அவை முறையே சமஸ்கிருதத்தில் ”தானம், சீலம், நிஷ்காம்யம், பிரக்ஞை, வீரியம், சாந்தி, சத்யம், அதிர்ஷ்டானம், மைத்ரி, உபேட்சை’ எனக் கூறுவர்.

தமிழில் இவற்றை – ஈகை, ஒழுக்கம், ஈகம், மெய்யறிவு, முயற்சி, பொறை, வாய்மை, வலிமை, கருணை, சமநிலை –  எனலாம்.

புத்த பகவன் தனது பல்வேறு பிறப்புகளில் எவ்வாறு இந்தப் பாரமிதைகளை நிறைவேற்றினார் என்பதைச் சொல்லும் முகமாகவே புத்த ஜாதகக் கதைகள் உருவாயின என்பர்.

நால்வகை வாய்மைகள்: துக்கம் (துயரம்), துக்கத்தின் தோற்றம், துக்க நீக்கம், துக்க நீக்க நெறி – ஆகியன. 1.எல்லா இருப்புகளின் நிபந்தனையாகவும் துக்கமே உள்ளது. 2.துக்கம் என்பது அதிருப்தி அல்லது திருப்தி அடையாமையின் விளைவு. 3. ஆசை அல்லது பற்று என்கிற தன்மயமான நோக்கு முயற்சியால் நீக்கப்படக் கூடியனவே. 4. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படையிலான ‘எண்வழிப் பாதை’யின் (அஷ்டாங்க மார்க்கம்) ஊடாக ஒருவர் துக்கத்திலிருந்து விடுபட முடியும்.

இவ்வாறு இருப்பின் நிபந்தனையாகத் துக்கம் உள்ளது எனச் சொல்வதோடு நிற்காமல் அதிலிருந்து விடுபடும் வழியையும் பௌத்தம் சொல்கிறது. அந்த வழி பக்தி மார்க்கமோ அல்லது புனிதத் தலங்களுக்குச் சென்று வணங்குவதோ, நீராடுவதோ அல்ல. மாறாக மனம், வாக்கு, காயத்தின் ஊடான அற வாழ்வு மற்றும் அறச் செயல்களின் ஊடாகவே அது சாத்தியம். ஆக பக்தியின் இடத்தில் அறத்தை நிறுத்துகிறது பௌத்தம் (விரிவுக்குப் பார்க்க : அ.மார்க்ஸ், புத்தம் சரணம், அடையாளம் வெளியீடு).

பன்னிரு சார்புகள்: பேதமை, செய்கை, உணர்வு, அரூரு, வாயில், ஊரு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் – ஆகியன. இவற்றை ‘பன்னிரு நிதானங்கள்’ எனவும் கூறுவர். பவுத்தம் கடவுளை ஏற்பதில்லை. கடவுள்தான் உலகைத் தோற்றுவித்தார் என நம்புவதும் இல்லை. உலகம் இருந்தது என்பதோடு சரி. பிற மதங்களைப்போல இயற்கை அதீதக் கற்பனைகள் எதையும் அது ஏற்பதில்லை. எனவே பிற மதங்களைப் போல அது உலகின் தோற்றத்தை விளக்க இயற்கைக்கும் அறிவுக்கும் பொருந்தாக் கற்பனைக் கதைகள் எதையும் சார்ந்திருப்பதில்லை. விதையா இல்லை செடியா எது முந்தியது என்பது போன்ற பொருளற்ற வெட்டிக் கேள்விகளை அது ஒதுக்கும். எதையும் தன்னளவில் உண்டு அல்லது இல்லை என அது நம்புவதில்லை. மாறாக அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. சார்பின் ஊடாகவே அவை இருக்கின்றன. இதை பௌத்தம் “பிரதித்ய சமுத்பாதம்” எனக் கூறுகிறது. Dependant Origination என ஆங்கிலத்திலும் “சார்புத் தோற்றக் கொள்கை” எனத் தமிழிலும் கூறப்படுகிறது.

ஒன்று தோன்ற இன்னொன்று காரணமாக உள்ளது என்கிறபோது அங்கு கடவுள் தேவையற்றவர் ஆகிறார். விளக்குச் சுடர் போலவும், ஓடும் நீர்போலவும் அனைத்தும் தொடர்ந்து கொண்டுள்ளன என பவுத்தம் கூறுகிறது. ஓடும் நீரில் எந்த ஒரு கணத்திலும் உள்ள நீர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து நீரோடிக் கொண்டுள்ளது.

இந்தச் சார்புகள் அல்லது நிதானங்களில் இருந்து விடுதலை பெறுவதையே பௌத்தம் ‘நிப்பானம்’ அல்லது ‘நிர்வாணம்’ என்கிறது.

இருத்தி பாதங்கள்: சிரத்தை, வீரியம், சித்தம், மீமாம்சம் – என்கிற இந்த நான்கு ஆற்றல்களையும் கைவரப் பெற்றவர்கள் விரும்பினால் உலகில் கல்ப காலம் வாழ முடியும் என்பர். இதில் சிரத்தை என்பது இலக்கை நோக்கிய தீவிர முனைப்பு; வீரியம் என்பது தொடர்ந்த இடையற்ற முயற்சி; சித்தம் என்பது தீயவைகளை நீக்கிய பரிசுத்த நினைப்பு அல்லது சிந்தை; மீமாம்சம் என்பது ஒருவர் தமது முனைப்பும் முடிவும் சரிதானா எனப் பகுத்தறிந்து ஆய்வுக்குட்படுத்துவது.

(அடுத்து வஞ்சி சென்று ஆங்குள்ள பல்சமய அறிஞர்களிடம் மணிமேகலை அளவளாவி அவர்தம் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ளல்)