பச்சைக் குழந்தைகளின் தலையில் பாடச் சுமையும் தேர்வுச் சுமையும்

புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019

முன்னாள் விண்வெளி ஆய்வுத்துறைத் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள தேசியக் கல்விக் கொள்கை நகல் அறிக்கை இன்று பெரிய அளவில் கவனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். கல்வி என்பது இன்று அறிவு வளர்ச்சிக்கு மட்டுமின்றி நல்ல வாழக்கை அமைவதற்கான ஒரு முக்கிய கருவியாக அமைந்துள்ளது என்பது ஒன்று. மற்றது பா.ஜ.க அரசு அமையும் போதெல்லாம் அது கல்வித்துறையில் ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய மாற்றங்கள் எப்போதுமே மக்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஐயத்திற்கும் ஆளாகியுள்ளன.

வழக்கமான கல்விக் கொள்கை அறிக்கையைப்போல் அல்லாமல் இந்த அறிக்கை சற்றே சலிப்பூட்டும் அளவிற்கு அளவில் பெரியதாக இருப்பதாலும், சுருக்கமாகவும் தெளிவாகவும் ஐயத்திற்கு இடமில்லாமல் ஒவ்வொரு பரிந்துரையையும் முன்வைக்காததாலும்  வாசிப்பவர்களுக்குப் பல்வேறு குழப்பங்களையும் ஐயத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளதை இதுவரை இதுகுறித்து வந்துள்ள விமர்சனங்களை வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்கிறோம்.

புதிதாக இப்படியான ஒரு கொள்கை அறிக்கை முன்வைக்கப்படும்போது இதுவரையிலான இத்துறை அறிக்கைகள் முன்வைத்தவை, பின்னோக்கிப் பார்க்கும்போது அவற்றில் காணப்படும் நிறை குறைகள், அவற்றின் பரிந்துரைகள் எந்த அளவிற்கு முந்தைய அரசுகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு சுருக்கமான கணக்கெடுப்பை அது முன்வைப்பது அவசியம். அந்த அடிப்படையில் இன்றைய சமூகப் பொருளாதார மாற்றங்களுக்குத் தக்காற்போல இனி மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும், உதறித் தள்ளவேண்டிய பழமைகளையும், செய்ய வேண்டிய புதுமைகளையும் அது சொல்வது அவசியம்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை இவ்வகையில் பெரிய அளவில் தோல்வியுற்றுள்ளது. மோடி தலைமையில் 2014ல் பா.ஜ.க அரசு அமைக்கப்பட்ட போது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் எனும் முன்னாள அரசு அதிகாரி தலைமையில் கல்வி தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டதை அறிவோம். அதன் அடிப்படையிலும் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவ்வறிக்கை, முந்திய அறிக்கை முன்வைத்த சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்துக் காட்டும் மௌனம் குறிப்பிடத் தக்கது. எடுத்துக்காட்டாக பத்தாம் வகுப்பில் கற்கைத் திறனைப் பொருத்து மாணவர்களைத் தரம் பிரித்துத் திறன் குறைவானவர்களைத் தொழிற்பயிற்சிக்குத் திருப்புவது என்பது சுப்பிரமணியம் குழு முன்வைத்த ஒரு பரிந்துரை. இது இங்கு பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. இது குறித்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மௌனம் சாதிக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த அறிக்கை 9ம் வகுப்பிலேயே மாணவர்கள் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இந்த வயதில் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை குழந்தைகள் எடுக்க முடியாது என்பதால் இந்தப் பரிந்துரை இன்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் குழந்தைகளைத் தரம் பிரிப்பது என சுப்பிரமணியம் குழு சொன்னதுதான் இங்கே இப்படி வேறு சொற்களில் முன்வைக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

சுப்பிரமணியம் குழு தாய்மொழியில்தான் கல்வி அமைய வேண்டும் என்பதை உறுதியாகச் சொன்னது. கஸ்தூரிரங்கன் குழுவோ, “சாத்தியமானல் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு வரையாவது மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். எட்டாம் வகுப்புவரையில் தாய்மொழியில் கற்க முடிந்தால் நல்லது எனக் கூறுவதன் மூலம் முந்தைய குழு தாய்மொழி வழி  கல்வி பயில்வதற்கு அளித்த முக்கியத்துவம் நீர்க்கச் செய்யப்படுகிறது. தவிரவும் இப்போது கூடுதலாக மும்மொழிக் கொள்கை முன்மொழியப்படுகிறது. அதில் ‘இந்தி’ கட்டாயமாக இருக்கும் எனச் சொல்லி, அதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எரெற்பட்டவுடன் இரண்டே நாட்களில் அந்த நிபந்தனை நீக்கப்பட்டதை அறிவோம்.

எனினும் மூன்று மொழிகள் கட்டாயம் என்பது தொடர்கிறது. ஆங்கிலம் தவிர மற்ற இரண்டும் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. வேறு நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாமாம், அது நான்காவது மொழியாகத்தான் இருக்க முடியும் எனவும் சிறு வயதில் குழந்தைகள் ஒரே நேரத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் எனவும் மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு 85 சத மூளை வளர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது என்றும் இவ்வறிக்கை சொல்லிக் கொண்டே போகிறது. அந்த வகையில் இனி குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மூன்று வயது முதலே கணக்கிடப்படும் எனவும் கஸ்தூரிரங்கன் குழு  கூறுகிறது. அது மட்டுமல்ல குழந்தைகள் 3, 5, 8 வகுப்புகளிலேயே பொதுத் தேர்வுகள் எழுத வேண்டும் என இக்குழு முன்வைக்கும் கருத்து இன்று கல்வியாளர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

எட்டாவது வகுப்புகள் வரை தேர்வுகள் கூடாது என்று இருந்த நிலை இப்படி இன்று அதிரடியாக மாற்றப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடு நம்முடையது. மூன்று வயதிலேயே குழந்தைகளுக்கு முழு மூளை வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பாடச் சுமையோடு, தேர்வுச்சுமைகளையும் அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்கிற கருத்தைக் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்..

இதை ஒட்டி கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் கல்வி உரிமை விரிவாக்கப்படும் என இவ் அறிக்கை சொல்வதை நாம் வரவேற்கலாம். இப்போதுள்ள சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைதான் கல்வி உரிமை வரையறுக்கப் பட்டுள்ளது இனி அது குழந்தைக் கல்வி (3வயது) தொடங்கி 12 ம் வகுப்பு (18 வயது) வரை நீடிக்கப்படும். இதை நாம் வரவேற்றபோதிலும் வசதிகளும் படிப்பறிவும் மிக்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இணையாக இந்த நாட்டின் பெரும்பான்மையாக உள்ள அடித்தளச் சமூகக் குழந்தைகளின் மீது இப்படி கல்விச் சுமையை மூன்று வயதிலிருந்தும், தேர்வுச் சுமையை எட்டு வயதிலிருந்தும் ஏற்றுவதை இத்துடன் இணைக்கும் போது தான் நம்மால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இப்படிச் சின்ன வயதிலேயே குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கே வழி வகுக்கும்.

“ஒரேநாடு ஒரே தேர்தல்”. “ஒரேநாடு. ஒரே ரேஷன் கார்டு” முதலான வரிசையில் கஸ்தூரிரங்கன் குழு இந்தியா முழுவதும் “ஒரேநாடு ஒரே பாட நூல்” என்கிற அடிப்படையில் NCERT பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்குவதும் கவனிக்கத்தக்கது. ஒன்று NCERT பாட நூலை அப்படியே பின்பற்ற வேண்டும். அல்லது NCERT பாடத் திட்டத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்..

இதேபோல 6,7,8 ம் வகுப்புகளிலேயே தொழிற் திறமையை வளர்க்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுமாம். என்ன வகையான தொழிற்பயிற்சி என்பதை அரசும் “உள்ளூர்ச் சமூகமும்” (local community) தீர்மானிக்குமாம்.. இவ்வாறு கல்வி வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் “உள்ளூர்ச் சமூகம்” மற்றும் ஏற்கனவே “கல்வி வளர்ச்சி அடைந்த உள்ளூர் சமுதாயம்” ஆகியவற்றின் “உதவிகளைப் பெறுதல்” என்பதற்கு இந்த அறிக்கை பல்வேறு மட்டங்களில் முக்கியத்துவம் கொடுப்பதை க;ல்விக் கொள்கைகளைத் தொடர்ந்து மதிப்பிட்டு வரும் பேரா. கும்கும் ராய் போன்றவர்கள் கண்டித்துள்ளனர். இந்தியாவைப் பொருத்த மட்டில் “சமூகம்” என்பது. பல்வேறு சாதிகளாகப் பிளவுண்ட “சமூகங்களின்” தொகுப்பாகத்தான் உள்ளது. எனவே உள்ளூர்ச் சமூகம் தீர்மானிக்கும் என்கிறபோது அங்குள்ள ஆதிக்க சாதியினரே தீர்மானிப்பர் என்றுதான் பொருளாகும்.

“இந்தியச் சமூகம்”, “இந்தியப் பண்பாடு”, “சமஸ்கிருதத்தின் சிறப்பு” ஆகியவற்றை இந்த அறிக்கை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து அடையாளமாக்குவதும் குறிப்பிடத் தக்கது. “பல்வேறு கல்வித் துறைகளைக் கற்பித்த இந்திய நாளந்தா மற்றும் தட்சசீலம் முதலான பல்கலைக் கழகங்கள்” மற்றும் “குருகுல” கல்வி முறை ஆகியவற்றை இந்தியாவின் பாரம்பரியக் கல்விமுறை என  இந்த அறிக்கை பேசிக் கொண்டே இருக்கிறது. “அந்த மாபெரும் பாரம்பரியத்தை நாம் மீளுருவாக்கம் செய்யவேண்டும்” என்கிறது. இப்படி குருகுலக் கல்வியையும்  நாளந்தா மற்றும் தட்சசீலம் முதலான பல்கலைக் கழகங்களையும் ஒரே நிலையில் வைத்துப் புகழ்வது அபத்தம்.பௌத்த மரபில் வந்த நாளந்தா,. தட்சசீலம் முதலியன 17ம் நூற்றாண்டில் உருவான ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களுக்கு முன்னோடியாக இருந்தவை. பல கலைகளில் தேர்ச்சி பெற்ற பல நாட்டு அறிஞர்கள் ஒரே இடத்தில் கூடி சாதி வருண வேற்பாடுகள் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த மாணவர்களுக்குப் பல துறைகளிலும் பயிற்சி அளித்தவை அவை. குருகுலமுறை என்பது ஏதேனும் ஒரு துறை நூல்கள் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெற்ற முனிவர்களிடம் சென்று அவர்களுக்குச்  சேவை செய்து அவற்றைக் கற்றுக்கொள்ளுதல். கடுமையான வருண சாதிக் கட்டுப்பாடுகளூக்கு அவை உட்பட்டவை என்பதற்கு ஏகலைவன் வரலாறு ஒன்றே சாட்சி. பழமை என்பதற்காக எல்லாவற்றையும் கொண்டாடுவது எத்தனை ஆபத்து என்பத்ற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,

தவிரவும் இவ் அறிக்கை பெரும்பாலான  “இந்திய மொழிகளுக்கிடையே உள்ள வியக்கத்தக்க அறிவியல் பூர்வமான ஒற்றுமை, ஒரே மாதிரியான இலக்கணம், ஒலிப்பு முறைகள், சொற்களஞ்சியம், அறிவியல் அடிப்படையில் அமைந்த அகரவரிசை, எழுத்துருக்கள்” – முதலானவற்றை வியந்து போற்றுகிறது,  சமஸ்கிருதம் மற்றும் இதர செவ்வியல் மொழிகளிலிருந்து  இந்திய மொழிகளின் சொற்களஞ்சியங்கள் உருவாயின என்றும் வியப்புக் காட்டுகிறது. ஆனால் மறந்தும் கூட இந்திய மொழிகள் என்பவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்பதையும், குறைந்தபட்சம் இங்கே மூன்று மொழிக் குடும்பங்கள் இருந்தன என்பதையும் குறிப்பிடுவதில்லை. சமஸ்கிருதமும் திராவிட மொழிகளும் முற்றிலும் வேறுபட்ட மூலங்களைக் கொண்டவை என்பதையும், சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியப் பின்புலம் கொண்டது என்பதையும் சொல்வதில்லை. ஒலிப்புமுறை, எழுத்துவடிவம், இலக்கணம் ஆகியவற்றிலும் இவ்விரண்டு மொழிக் குடும்பங்களும் முற்றிலும் வேறுபட்டவை. மேசை என்றால் ஆண்பால், நாற்காலி என்பது பெண்பால் என்பதுபோன்ற சமஸ்கிருத இலக்கண முறை திராவிட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

உயர் கல்வியில் முன்மொழியப்படும் மாற்றங்கள்

சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும், இந்த அறிக்கைக்கும் இடைப்பட்ட இந்தச் சில ஆண்டுகளில் உயர் கல்வியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி நல்கை அளிப்பது மட்டுமல்லாமல் அவற்றுக்கு ஏற்பு வழங்குதல் முதலான அதிகாரங்களையும் பெற்றிருந்த “பல்கலைக் கழக மான்யக் குழு (UGC)” முதற்கட்டமாக வெறுமனே நிதி நல்கைக்கான குழுவாக ஆக்கப்பட்டு பlல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீக்கப்பட்டது. “உயர்கல்வி நிதி நல்கை முகமை” (Higher Education Financing Agency – HEFA) எனும் பெயரில் பல்கலைக் கழகங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதி முகமை ஒன்றும்  அறிவிக்கப்பட்டது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை எனத் தரப்படுத்தப்பட்ட சுயாட்சி (Graded Autonomy), பெரும் நிதி ஆதரவுடன் கூடிய “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institutions of Eminence)” முதலியனவும் மோடி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களோடு இன்று ‘‘உயர்கல்வி நிதிநல்கை அமைப்பு’’ (Higher Education Grants Council – HEGC) என்பதாக அதிகாரம் குறைக்கப்பட்ட பல்கலைக் கழக மான்யக்குழுவிற்கு புதிய பெயர் சூட்டப் பட்டுள்ளது. “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று’’ அமைப்பு (NHERA) எனும் புதிய அமைப்பு இனி பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்துமாம்.

அதுமட்டுமல்ல பல்கலைக் கழகங்களைத் தர நிர்ணயம் செய்யும் ‘நாக்’ அமைப்பிற்குப் பதிலாக மேலும் அதிகாரப்படுத்தப்பட்ட ஒரு புதிய NAAC அமைப்பு, “தேசிய உயர்கல்வி தகுதி நிர்ணய அமைப்பு’  (National Higher Education Qualification Framework) என்பவற்றோடு மேலாண்மை, ஒழுங்காற்றுப்படுத்தல், நிதிநல்கை, ஏற்பு வழங்கல் முதலான உயர்கல்வி தொடர்பான நான்கு முக்கிய அதிகாரங்களையும் உள்ளடக்கிய ‘ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்’ (RSA) எனும் ஒரு நிறுவனத்தையும் இன்று கஸ்தூரிரங்கன் குழு முன்வைக்கிறது. இந்த RSA எனும் அமைப்பு நேரடியாகப் பிரதமரின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படியானப் பல அமைப்புகள், அவற்றுக்கிடையே போட்டி, தரப்படுத்தல், பெரிய அளவில் தனியார் பல்கலைக் கழகங்கள் உட்பட அறிவிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தலும் தொடங்கிய பின் இன்று இந்த அறிக்கையில் ‘அரசாங்க நிதி உதவியுடன் கூடிய உயர்கல்வி’ பற்றிப் பேசப்பட்டுள்ளது புதிராக உள்ளதென டெல்லியிலுள்ள “தேசிய கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாக” (NIEPA) அமைப்பைச் சேர்ந்த சுதான்ஷு பூஷன் முதலான கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். ஒருவேளை இப்படிப் பல ஆயிரம் கோடிகளை அம்பானியின் ‘ஜியோ’ முதலான பல்கலைக் கழகங்களுக்கு அள்ளிக் கொடுப்பதைத்தான் “அரசாங்க உதவியுடன் கூடிய உயர் கல்வி” என கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்கிறதோ எனும் ஐயமும் ஏற்படுகிறது. தவிரவும் இப்படிப் பல அமைப்புகள் உருவாக்கப்படுவதால் அவற்றின்  அதிகாரங்கள் ஒன்றோடொன்று உரசக்கூடிய நிலை ஏற்படும் எனவும், அது ஆரோக்கியமானதல்ல  என்றும் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இப்படி ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக் எனும் அமைப்பை உருவாக்கி எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கீழ் குவிக்கப்படுவது என்பது நாடு ஒரு ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கிச் செல்கிறதோ என்கிற அய்யத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

2016 செப்டம்பர் 6 அன்று சென்னையில் நடந்த SIO பயிற்சி முகாமில் ஆற்றிய உரை

ஒன்று:

தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல் நமக்குத் தேவை. குறிப்பாக, இந்திய தேசியத்தையும் தமிழ்த் தேசியத்தையும் பற்றிய புரிதல்கள் அவை எவ்வாறு, யாரால், வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் உள்நோக்கம் மற்றும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களும் தலித்களும் இதில் கவனம் செலுத்துதல் அவசியம்.

தமிழக அரசியல் சூழலில், 80-களுக்குப் பிறகு ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்தபோது, தேசியம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் பல மேலெழுந்தன. தமிழ்த் தேசியம் வரையறுக்கப்படுவது தொடர்பான ஏராளமான நூல்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வெளிவந்தன.

எனினும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்ற தமிழ் இயக்கங்களை ஒழித்துத் தனி ஓர் இயக்கமாக நின்றதற்குப் பின் இந்த ஆரோக்கியமான விவாதங்கள் இலங்கையில் மட்டுமின்றி தமிழகத்திலும் நின்று போனது.

தமிழகத்தின் ஒரு நூறாண்டு கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் தமிழ்த் தேசியத்தில் இரண்டு போக்குகள் தொடக்கம் முதல் இருந்தன.

1. திராவிடக் கட்சிகளின் பார்வையில் தேசியம்:

பெரியார், பிறகு திமுக முதலான திராவிடக் கட்சிகளால் மொழியப்பட்டது இது. தமிழ்நாட்டில் ஒரு 30 சதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒரு 12 சதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். வெறும் இரண்டரை சத அளவே உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது. அப்போதுகூட அவர்கள் மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்ரும் என்றோ யாரும், பெரியார் உட்படச் சொன்னதில்லை.

பார்ப்பனர்களுக்கும் கூட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சத ஒதுக்கீடு கொடுத்துவிடலாம், வரலாறு பூராவும் இருந்ததுபோல அனைத்துப் பதவிகளையும் அவர்களே ஆக்கிரமிப்பது என்பதற்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மட்டும்தான் அவர் சொன்னார். சரியாகச் சொல்வதானால் அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் எதிர்த்தார். பார்ப்பனரை எதிர்க்கவில்லை. பின்னால் வந்த திமுகவோ இந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிட்டது. மொத்தத்தில் திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. முஸ்லிம் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்தது. அது எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism.

2. தமிழ்த் தேசியக் கட்சிகளின் பார்வையில் தேசியம்:

இதற்கு ஒரு அடையாளமாக ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானத்தைச் சொல்லலாம். இவர் இங்குள்ள 30 சத மொழிச் சிறுபான்மையரையும் வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மதச் சிறுபான்மையை பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையாயினும் அவரது பார்ப்பனிய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதச் சிறுபான்மையினரை ஒதுக்கின.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டாவது போக்கு இன்னொரு பரிமாணம் எடுத்தது. பெங்களூரு குணா என்பவர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு புத்தகம் எழுதினார். அப்பட்டமான வரலாற்றுப் புரட்டுகளுடன் கூடிய அந்த நூல் இங்கிருந்த கொடுமையான மன்னர் ஆட்சிகளையெல்லாம் பொற்காலம் என்றது. இங்குள்ள மொழிச் சிறுபான்மையினர்தான் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிற ஓர் அப்பட்டமான பொய்யை முன்வைத்தது. அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியது. வெறும் இரண்டரை சதமாக இருந்து கொண்டு பல மடங்கு அதிகமான அரசுப் பணிகளை எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களையும் பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அது விமர்சிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தமிழர்களாம். இவர்கள் இலக்காக்கித் தாக்கியதெல்லாம் இந்த 30 சதம் அளவு உள்ள மொழிச் சிறுபான்மையினரைத்தான்.

சரி, யார் அந்த மொழிச் சிறுபான்மையினர்? தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் முதலானோரைத்தான் அவர்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்றனர்.

இதில் ஒரு சிறு பகுதியாக உள்ள மார்வாரிகள் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் தமிழகத்தையே பல காலமாகத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிற சாதாரண மக்கள். இவர்களுள் பெரும்பாலானோர் இப்போது தமிழையே தாய்மொழியாகக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தமிழ் மீடியத்திலேயே படிக்க வைத்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது என்றால் எங்கே போவார்கள்? நமது பண்பாட்டை ஏற்றுக்கொண்டு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களில் பெரும்பாலானோர் கூலிகளாகவும், சாதாரண பணிகளிலும் இருப்போர். பிற தமிழ்ச் சாதிகளாக இவர்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்களைப் போலவே பொருளாதார நிலை உடையவர்கள். இந்த மொழிச் சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கவேண்டும், இட ஒதுக்கீடு போன்ற பலன்கள் இவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்கிறார்கள். இங்கே நம்மோடு வாழ்ந்து நமது மலத்தை அள்ளி, இங்குள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்து வாழ நேர்ந்த நம் அருந்ததியர் இனச் சகோதரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதெனச் சொல்கிறார்கள். குனா இதை வெளிப்படையாகச் சொன்னவர்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் விடுதலைக்காக முன்னின்று, உலக அளவில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கருக்கு இங்கு ஊரெங்கும் சிலைகள் திறக்கப்படுவதை, “அம்பேத்கராம்! மராட்டியருக்கு இங்கு சிலைகள் ஏன்” எனக் கேட்டவர்கள் இவர்கள். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். மார்வாரிகளைப் பற்றியும் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுள் எல்லோரும் பெரிய வணிகர்களாக இருப்பதில்லை. அவர்களிலும் எளிய மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் ஒருவர் BSNL-ல் வேலை செய்கிறார். அடித்தளச் சாதியைச் சேர்ந்தவர் அவர், மனைவி ஒரு மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்.

நம்முடைய தமிழர்கள் இங்கிருந்து கூலிகளாகவும் வணிகர்களாகவும் சென்று எத்தனையோ நாடுகளில் வசிக்கின்றனர், இலங்கையில் மலையகத்தில் இருக்கிறார்கள், மலேசியாவில், மொரிஷியசில், சிங்கப்பூரில் எல்லாம் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ் அரச மொழிகளுள் ஒன்று. அவர்களை எல்லாம் அந்தந்த நாடுகள் திருப்பி அனுப்புவது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமா?

கி.ராஜநாராயணன் என ஒரு தமிழ் எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழுக்கு வளம் சேர்த்தவர். கரிசல் மண்ணில் புழங்கப்படும் தனித்துவமான தமிழ்ச் சொற்களுக்கு அகராதி உருவாக்கிய தமிழறிஞர் அவர். அவருடைய மூதாதையர் எத்தனையோ தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்தவர்கள். அவரை இன்று திருப்பி அனுப்புவது முடியுமா, சரியா, நியாயமா? அல்லது அவரது குடும்பத்தாரை இரண்டாம் தர மக்களாக, உரிமையற்றவர்களாக நடத்துவது என்றால்… எத்தனை கொடூரமான மனித உரிமை மீறல்கள் இவை.

இங்கு வாழும் பிற மொழியினர் எல்லோரும் தமிழகத்தைச் சுரண்டி வளம் கொழிப்பவர்கள் அல்ல. இவர்களால் ஒரிஜினல் தமிழர்கள் எனச் சொல்கிற எல்லோரும் இங்கு கூலி வேலை செய்து துன்புறுபவர்களும் அல்ல. எல்லா மக்களிலும் பணக்காரர்களும் உள்ளனர், ஏழை எளியோரும் உள்ளனர். குடந்தை, மதுரை போன்ற இடங்களில் சௌராஷ்டிரர்கள் உள்ளனர். மிகவும் அடித்தள நெசவாளிகள் அவர்கள். ஆம்பூர், வாணியம்பாடி முதலான பகுதிகளில் வசிக்கும் உருது முஸ்லிம்கள் எல்லோரும் தோல் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அல்ல. தோல் தொழிற்சாலைகளில் பெரிய பதவிகளில் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்கள்தான் உள்ளனர். தோலைச் சுரண்டித் தூய்மைப்படுத்துவது முதலான தூய்மைக் குறைவான வேலைகளில் எவ்வளவோ உருது முஸ்லிம்கள் பணியில் உள்ளனர். இவர்களையெல்லாம் உருது பேசுபவர்கள் என்பதற்காகவே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குதல் நியாயமா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மொழிவாரி தேசியம் பேசும் ம.பொ.சி, குணா, சீமான், மணியரசன் போன்றோர் தமிழ்நாட்டில் தற்போது வாழ்கிற மக்களில் இப்படியான ‘தமிழர்கள் அல்லாதவர்களை’ அடையாளம் காண என்ன வழியைக் கையாள்கிறார்கள்? அது பெரிய கொடுமை.

சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். எந்தச் சாதிமுறை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்தச் சாதிமுறையை இவர்கள் இந்த நோக்கில் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது முஸ்லிம் என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை. மண்வெட்டிக் கூலி தின்னும் ஓட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம்.

மக்களை இப்படிச் சாதி அடிப்படையில் கூறுபோடும் இவர்கள் மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டர்களாகவும் உள்ளனர். தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றையெல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின் திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதிமுறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்தமட்டில் பொற்காலம். .

கூர்ந்து பார்த்தால் இவர்கள் தமிழுக்கும் உண்மையானவர்களாக இல்லை என்பது புலப்படும். எண்ணாயிரம் என்கிற இடத்தில் சோழர் காலத்தில் இருந்த கல்வி நிலையம் குறித்து எல்லோரும் பீற்றிக் கொள்வார்கள். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத் திட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதமாகவே இருந்தது.

இவர்கள் இப்படி மொழி அடிப்படையில் தமிழர்களைக் கூறுபோடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத அடிப்படையிலும் இவர்கள் தமிழர்களைப் பிரித்து நிறுத்துகிறார்கள்.

பார்ப்பனிய ஒதுக்கல்களுக்கும், வருண சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராக மலர்ந்த சீர்திருத்த மதங்களான பௌத்தம், சமணம் ஆகியவற்றை இவர்கள் வட இந்திய மதங்கள் எனப் புறந்தள்ளுகின்றனர். அதன் மூலம் வருண சாதி அமைப்பை வலியுறுத்திய சனாதனப் பார்ப்பன மதத்தையே இவர்கள் தமிழர்களின் மதமாக முன் வைக்கிறார்கள். பார்ப்பனியமும் வடநாட்டிலிருந்து இங்கு வந்ததுதான் என்பதைப் பற்றி இவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை. இவர்களின் இந்தக் கணக்குப்படி இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியனவும் அந்நிய மதங்கள்தான். ஆனால் தமிழின் சிகரங்களாக உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எனச் சொல்லப்படுபவையும், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் இலக்கண நூல்களும் இவர்களால் வட இந்திய மதங்கள் எனச் சொல்லப்படக் கூடிய பௌத்த, சமணப் புலவர்களால் உருவாக்கப்பட்டதுதான். கிறிஸ்தவம் இங்கு அச்சைக் கொண்டு வந்தது; நம் மக்களுக்குக் கல்வியைத் தந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மதுரைப் பல்கலைக் கழகம் ஐந்து தொகுதிகளாக நூல்கள் வெளியிட்டுள்ளது.

இந்துமதம் தொன்மையான மதம் என்பது உண்மைதான். இஸ்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நம்மோடு வாழும் மதம். கிறிஸ்தவம் ஐநூறு ஆண்டுகளாகத் தமிழிலிருந்தும் தமிழர்களிடத்திலிருந்தும் பிரிக்க இயலாமல் ஒன்றுகலந்த மதம். இன்று தமிழகத்தில் தடம் இல்லாமல் போனாலும் பௌத்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் செழித்திருந்த மண் இது. இன்று தமிழ் பவுத்தம் என்றொரு ஆய்வுத்துறையே உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட மதம் அது.
இத்தனையையும் ஒதுக்கிவிட்டு என்ன சொல்கிறார்கள் இவர்கள்? என்ன செய்கிறார்கள் இவர்கள்?

இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் தமிழர்களை ஒன்றிணைக்கும் தேசியமல்ல. சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் தமிழர்களைக் கூறுபோடும் தேசியம்.

“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என ஊரெங்கும் சொல்லித் திரிந்த பெரியாரை இவர்கள் ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களால் கொண்டாடப்படும் பார்ப்பனியத்திற்கு உறுதியான எதிரியாக அவர் இருந்தார் என்பதுதான் அவர்களின் எரிச்சல்.

இவர்கள் பேசுவது மக்களை சாதி, மதங்களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தமிழ்த் தேசியம் அல்ல. மாறாக மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்.

இது இன்று இந்த நாட்டில் உருவாகி வரும் கொடூரமான மதவாத பாசிசத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று..

இரண்டு

இந்திய அளவில் பார்க்கும்போதும், இது போலவே தேசியம் குறித்து இருவகையான அணுகுமுறைகள் உண்டு. ஆனால் அது இப்படி மொழி அடிப்படையிலானதல்ல. மத அடிப்படையிலானது. இந்திய தேசியத்தை மிகத் தீவிரமாக வரையறுக்கும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கும் தேசியம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தி முன்வைத்த இந்திய தேசியம். காந்தி கொல்லப்படுவதற்குக் காரணமே அவருக்கும் இந்துத்துவ சக்திகளுக்கும் தேசிய வரையறை விஷயத்தில் இருந்த முரண்பாடுதான்.

என்ன முரண்பாடு அது?

இந்தியா, இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கமெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இங்கு கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சிதான் இப்போது உள்ள இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அப்போதுகூட ஒட்டுமொத்தமான இந்தியா, இந்தியர் என்னும் கருத்தாக்கம் எல்லாம் உருவாகவில்லை. பிளாசிப் போருக்குப் (1757) பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா ஒருங்கிணைக்கப் பட்டதை அறிவோம். 1857ல் சிப்பாய்க் கலகம் அல்லது முதல் சுதந்திரப் போர் நடந்தபோதுகூட இந்தியா, இந்திய தேசியம் என்கிற கருத்து, உணர்வு எல்லாம் இங்கு உருவாகவில்லை. சிப்பாய்க் கலகம் அந்த அடிப்படையில் உருவாகவும் இல்லை. 1858க்குப் பின் இங்கு நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சி அறிவிக்கப்பட்டது. 1885ல் இந்தியத் தேசிய காங்கிரஸ் உருவானபோதும் அது இந்திய தேசிய உணர்வுடன் தொடங்கப்பட்டதல்ல. அதைத் தொடங்கியதே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்கிற ஒரு ஆங்கிலேயர்.

நம்முடைய இந்திய சுதந்திரப் போராட்டக் கவிஞரான மகாகவி பாரதியார் 1905ஆம் ஆண்டு இங்கே எப்படி தேசபக்தி என்கிற உணர்வு திடீரென உருவானது எனச் சொல்வார். அப்போது இந்திய கவர்னராக இருந்த கர்சான் பிரபு, ஒன்றாக இருந்த வங்க மாநிலத்தை இந்துக்களின் மேற்கு வங்கம் எனவும், முஸ்லிம்களின் கிழக்கு வங்கம் எனவும் இரண்டு மாநிலங்களாகப் பிரித்தார். அதற்கு எதிராக இங்கு உருவான எதிர்ப்பைத்தான் நாம் இந்திய தேசியத்தின் தொடக்கப் புள்ளியாகக் கொள்ள முடிகிறது. இமயம் முதல் குமரி வரை என்பதுபோன்ற உணர்வுடன் இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்கிற கருத்தெல்லாம் இப்போதுதான் ஏற்பட்டது. வங்கப் பிரிவினையை ஒட்டி “தேசபக்தி என்கிற நவீன மார்க்கம்” தோன்றி, “நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது” என 1908ல் நம் பாரதியார் எழுதுவார். இந்த நேரத்தில்தான் காந்தியும் தன் முக்கிய ஆக்கங்களுள் ஒன்றான ‘ஹிந்த் சுயராஜ்’ நூலை (1909) எழுதினார். இந்திய சுதந்திரம் பற்றிய அவரது கருத்தாக்கத்தை அதில் அவர் விளக்கியிருந்தார்.

அதே ஆண்டில்தான் இந்துத்துவத்தின் முன்னோடிகளில் முக்கியமானவரான வினாயக் தாமோதர் சாவர்கரும் (1883 – 1966) தன் ‘முதல் சுதந்திரப் போர்’ எனும் நூலை எழுதினார். அது 1857ல் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ எனச் சொல்லப்பட்ட பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வரலாறு. ‘எரிமலை’ எனத் தமிழிலும் அது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நூலை வாசித்தால் இன்று இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் வெறுப்பு எதுவும் அதில் இருக்காது. மாறாக இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்று அந்நியர்களான பிரிட்டிஷ்காரர்களை எதிர்ப்பது என்பதுதான் அதன் அணுகல்முறையாக இருக்கும். ஆக, அந்நியர்கள் என்றால் வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை அடிமைகளாக்கி ஆளும் ஆங்கிலேயர். இந்தியர்கள் என்றால் அது முஸ்லிம்கள் உட்பட எல்லோரையும் உள்ளடக்கும் ஒரு கருத்து என்பதுதான். ஆக, அப்போது அது எல்லோரையும் உள்ளடக்கும் ஒரு inclusive தேசியமாகத்தான் இருந்தது.

ஆனால் போகப் போக சாவர்கரின் தேசியம் முஸ்லிம்களை வெளியே நிறுத்தும் exclusive தேசியமாக மாறியது. வெள்ளையர்களை அந்நியர்களாகவும், எதிரிகளாகவும் பார்ப்பதற்குப் பதிலாக அவர் முஸ்லிம்களை அந்நியராகவும் எதிரியாகவும் கட்டமைக்கத் தொடங்கினார். இப்போது வெள்ளையர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள முரண்பாட்டைக் காட்டிலும் இந்தியர்களுக்கு உள்ளே இருந்த இந்து X முஸ்லிம் முரண்பாடே பெரிதாகப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்திய மக்களின் எதிரியாக அந்நிய ஆட்சியை முன்வைப்பதற்குப் பதிலாக இந்தியாவுக்குள்ளேயே முஸ்லிம்களை எதிரியாகச் சுட்டிக்காட்ட இந்துத்துவம் தொடங்கியது. இந்த அடிப்படையில்தான் ‘இந்துத்துவம்: இந்து என்பது யார்?’ எனும் குறுநூலை (Hindutva: Who is a Hindu) சாவர்கர் 1923ல் வெளியிட்டார்.

இந்துத்துவவாதிகள் தேசியத்திற்கான தம் வரையறையை சாவர்க்கரின் இந்த நூலில் இருந்துதான் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்து என்பவன் யார் என்கிற கேள்வியை எழுப்பி சாவர்க்கர் இப்படிப் பதிலளிப்பார்:

யார் ஒருவனுக்கு இந்தியாவே தந்தையர் நாடாகவும், புனித பூமியாகவும் உள்ளதோ அவனே இந்து. அது மட்டுமல்ல அவனுக்கே இந்தியர்களில் நாடான இந்தியா உரியது.

ஒரு Exclusive Nationalism என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சாவர்க்கரின் இந்த விஷம் தோய்ந்த கருத்து. அதாவது, இந்தியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் இந்தியராக முடியாது. இந்தியாவே அவரது புனித பூமியாகவும் இருக்க வேண்டும். அவர்களின் இறைத்தூதர்கள் அல்லது இறைமகன்கள் தோன்றிய இடமாகவும் அதுவே இருக்க வேண்டும். அந்த வகையில் ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்களும், மக்காவைப் புனித மண்ணாகக் கருதும் முஸ்லிம்களும் இந்தியர்கள் அல்ல. இந்திய தேசியத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதுதான் இந்துத்துவம் அடிப்படையில் சொல்லும் சேதி.

இன்றளவும் பவுத்தர்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் முக்கிய எதிரிகளாக்கப் பார்ப்பதன் பின்னணி இதுதான்.

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். இந்த சாவர்க்கர்தான் கோட்சேவின் கையில் துப்பாகியைக் கொடுத்துக் காந்தியைக் கொல்வதற்குக் காரணமாக இருந்தவர். காந்தியும் இராமனைக் கடவுளாகக் கொண்டாடியவர்தான். தன்னை இந்துவாக அறிவித்துக் கொண்டவர்தான். ராமராஜ்யம் ஒன்றை உருவாக்குவதைத் தன் லட்சியமாகச் சொன்னவர்தான். பின் அவரை ஏன் இவர்கள் சுட வேண்டும்? இன்றளவும் முக்கிய எதிரியாக முன்னிறுத்த வேண்டும்?

வேறொன்றும் இல்லை. காந்திக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் உள்ள பகை எல்லோரையும் உள்ளடக்கும் தேசியத்திற்கும், ஒரு சாராரை வெறுத்தொதுக்கும் தேசியத்திற்கும் இடையிலான பகைதான். காந்தி தன்னை இந்துவாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரித்தானது எனச் சொன்னதே இல்லை. இது இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட எல்லோருக்குமான நாடு என்றார் அவர்.

தான் இராமனை வணங்குபவன் எனவும் ராமராஜ்யம் அமைய வேண்டும் எனவும் சொன்ன அவரிடம், “இராமன் அயோத்தியில் பிறந்தானா?” எனக் கேட்டபோது உடனடியாக மறுத்தவர் அவர். “என் இராமன் ஒரு இலட்சிய மனிதன். அவன் ஒரு வரலாற்று மனிதன் அல்ல” என்றார்.

நம்பிக்கையை வரலாற்றிலிருந்து பிரித்து. அணுகியவர் அவர். என்னுடைய மதம் எனக்கு எப்படிப் புனிதமானதோ அதேபோல உன்னுடைய மதம் உனக்குப் புனிதமானது என அறிவேன். என்னுடைய நம்பிக்கைகளுக்காகப் போராடுவது போலவே உன்னுடைய நம்பிக்கைகளுக்காகவும் போராடுவேன் என வாழ்க்கையையும் அரசியலையும் அணுகியவர் அவர்.

1947 ஆகஸ்டு 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய கையோடு பசுவதைத் தடைச் சட்டத்தை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளிருந்து அவருக்கு அழுத்தம் வந்தபோது, “நான் சிறு வயதுமுதல் கோமாதாவை வணங்கி வருபவன். ஆனால் என்னுடைய மதம் எப்படி இன்னொருவருடைய மதமாக ஆக முடியும்?” எனக் கேட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர்.

நிறையச் சொல்லலாம். என்னுடைய புத்தகங்களில் இது குறித்து நிறைய எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள்.

அவர் தென் ஆப்பிரிக்காவில் 22 வருடங்கள் இருந்தார். அவருக்கு அங்கு ஆண்டு வருமானம் 6000 பவுண்டு. அவர் அங்கு இந்தியர்கள் எல்லோரையும் சேர்த்து இரண்டு ‘கம்யூன்’களை அமைத்தார். அந்தக் கம்யூன்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், குஜராத்திகள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் எனப் பலரும் ஒன்றாக வாழ்ந்தனர். எல்லொருடைய ஊதியமும் ஒன்றாக்கப்பட்டு சமமான வசதிகளுடன் வாழ்ந்தனர். மலம் அள்ளுவது உட்பட அனைத்து வேலைகளையும் சமமாகப் பகிர்ந்து செய்தனர். அவர் எந்நாளும் வருணாசிரமத்தைக் கடைப்பிடித்ததில்லை.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவுடன் உடனடியாக அரசியலில் அவர் ஈடுபடவில்லை. இரண்டாண்டுகள் முழுமையாக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, எல்லா மக்கள் போராட்டங்களிலும் கலந்து கொண்டுவிட்டு அவர் முதன் முதலில் அறிவித்த போராட்டம், ‘கிலாஃபத் இயக்கம்’. முஸ்லிம் பிரச்னைகளுக்கான ஓர் இயக்கம். அலி சகோதரர்களும் மகாத்மா காந்தியும் கரம் கோர்த்துக் களத்தில் நின்றனர். உலகில் மிகப் பெரிய அளவு முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் எந்தவொரு அரசியலும் அவர்களை உள்ளடக்காமல் சாத்தியமில்லை என அதன்மூலம் அவர் உலகுக்கு உணர்த்தினார்.

இனிய மாணவர்களே! எல்லோரையும் உள்ளடக்கிய inclusive nationalism என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு மகாத்மா காந்தியைக் காட்டிலும் உங்களுக்கு எந்த எடுத்துக்காட்டும் கிடையாது.

காந்தி இங்கு வருவதற்கு முன் தேசியப் போராட்டம் என்பது உயர்சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்ததுது. திலகர், அரவிந்தர்… இப்படி. அதை விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இணைந்த மிகப் பெரிய மக்கள் போராட்டமாக மாற்றியது அவர்தான்.

அன்று தொடங்கி மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்கள் அவரைக் கொல்ல முயற்சித்தனர். ஏழுமுறை முயற்சித்து, இறுதியில் சாவர்க்கர் வழிகாட்டலில் ஓர் உயர்சாதி வன்முறைக் கும்பல் அவரைச் சுட்டுக் கொன்றது.

மூன்று

தேசியம் பற்றிய கோட்பாட்டாளர்களுள் ஒருவரான எர்னஸ்ட் கெல்னர், “தேசியப் போராட்டங்கள்தான் தேசத்தை உருவாக்குகிறதே ஒழிய, தேசம் தேசியப் போராட்டங்களை உருவாக்குவதில்லை” என்பார். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்திய தேசியம்தான். முன்னதாக இந்திய தேசம் என ஒன்று இருந்ததில்லை. 1905ல் இங்கு உயர்சாதி மேட்டிமைச் சக்தியினரின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசியப் போராட்டம்தான் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை உறுதி செய்தது. காந்தியின் இடையீடு அதை வெகுமக்கள் மயமாக்கியது. அப்படியாக உருவாக்கப்பட்ட தேசம் இங்கு முஸ்லிம்கள், பார்ப்பனர்கள், தலித்கள், பிற இந்துக்கள் ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என காந்தி முயன்றார்.

இன்னொரு பக்கம் இதை இந்துக்களுக்கான நாடாக மாற்றுவது என்பதில் இந்துத்துவவாதிகள் மிகத் தீவிரமாக முயன்றனர். பெரும்பான்மை மத உணர்வை அவர்கள் எளிதாகத் தூண்டினர். ஆனால், காந்தி என்கிற மனிதருக்கு இருந்த மக்கள் ஆதரவும், அவரிடமிருந்து வெளிப்போந்த அற நோக்கும் அவர்களின் முயற்சியை முறியடித்தன. அவர் உயிருடன் இருந்தவரை இது எல்லோருக்குமான தேசம் என்கிற கருத்தாக்கத்தை அவர்களால் தகர்க்க முடியவில்லை.

கடைசியாக அவரைக் கொன்று தீர்த்தார்கள். அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டது. பல வட மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பாரதிய ஜனசங் கட்சி உருவாக்கப்பட்டது.

அடுத்த சுமார் முப்பதாண்டுகளில் அவர்கள் பெரிய அளவில் மக்கள் திரள் செயல்பாடுகளில் இறங்காவிட்டாலும் மிகத் தீவிரமாக அமைப்பு ரீதியில் செயல்பட்ட அவர்கள் 1982 மீனாட்சிபுர மதமாற்றத்துக்குப் பின் தீவிரமாக வெளிப்போந்தார்கள். இடையே 1961 முதல் மீண்டும் மதக் கலவரங்கள் ஆங்காங்கு அரங்கேறின. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் எனப் பலவாறான இயக்கங்கள் உருவாயின. 1992ல் பாபர் மசூதி இடிப்பு, 2002ல் குஜராத் படுகொலைகள், 2004ல் மத்தியில் ஆட்சி என இங்கு முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஒதுக்கி நிறுத்தும் exclusive nationalism இந்திய அளவில் தலைதூக்கியது.

நான்கு

தேசிய உருவாக்கத்தின் அடிப்படை என்ன என்பதை எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் பொதுவாக வரையறுத்துவிட முடியாது. ஒரு நாட்டில் தேசிய உருவாக்கத்தின் அடிப்படையாக மதம் முன்வைக்கப்படலாம். இந்துத்துவ தேசியம் மத அடிப்படையில் கட்டமைக்கப்படுவதைப் பார்த்தோம்.

சரி, மதம்தான் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்குமா என்றால் அப்படியும் இல்லை. இரண்டு நாடுகளிலும் ஒரே மதத்தினரே வாழ்ந்தபோதும் பாகிஸ்தானும், வங்கதேசமும் ஒன்றாக இருக்க முடியவில்லை. பெரும் இரத்தக் களறியுடன்தான் அவை பிரிந்தன.

இதோ இலங்கையில் நம் தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே மொழி பேசக் கூடியவர்களாக இருந்த போதும் இன்று மூன்று தேசங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். தமிழகத்தில்கூட தமிழ்ப் பேசுகிற முஸ்லிம்கள் தவிர உருது பேசுகிற முஸ்லிம்களும் கொஞ்சம் உள்ளனர். முற்றிலும் தமிழ் மட்டுமே பேசும் இலங்கை முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களிடமிருந்து பிரித்துத் தனித் தேசியமாக முன் வைக்கின்றனர். இங்கே மதம் என்பது தேசியத்தின் அடையாளமாக அமைகிறது. அதே நேரத்தில் மலையகத் தமிழர்கள், அவர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்தபோதிலும், தமிழ்ப் பேசுபவர்களாக இருந்தபோதும், யாழ்ப்பாணத் தமிழர்களிலிருந்து தனித்து ஒரு தேசிய இனமாக உணர்கின்றனர்.

எனவே, மதமோ மொழியோ இங்கு தேசியத்தின் அடிப்படையாக இல்லை. பஞ்சாபிலும் மொழிக்கு அப்பாற்பட்ட தேசியத்தைப் பார்க்க முடிகிறது. அங்கு வாழும் சீக்கியர்களும், இந்துக்களும் பஞ்சாபி என்கிற ஒரே மொழி பேசுபவர்களானாலும் அவர்கள் தனித்தனித் தேசியமாக உணர்கின்றனர். அவர்களை ஒரே இனமாக உணரவைக்க மொழிக்கு அங்கே சக்தியில்லை. பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் ஒரே தேசிய உணர்வுக்குள் இணைப்பதற்கு அங்கு மதத்தால் முடியவில்லை. ஒன்றாக இருந்த விசால ஆந்திர மாநிலத்தில் ஒரே மொழி (தெலுங்கு), ஒரே மதம் என இருந்தும் அது ஒற்றை அலகாக நிலைக்க முடியவில்லை. தெலங்கானா தனியாகப் பிரிந்து நான்காண்டுகளுக்கு மேலாகிவிட்டன. தெலங்கானா பிரிவினையின் அடிப்படையாக ‘வளர்ச்சி’ (development) என்பது இருந்தது. எங்கள் நாட்டின் ஊடாகத்தான் எல்லா நதிகளும் பாய்ந்தாலும் வளர்ச்சியில் உரிய பங்கு எங்களுக்கு இல்லை எனத் தெலுங்கானா பிரிவினை இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர்கள் வாதிட்டு வெற்றி பெற்றனர்.

ஆக ஒரு தேசம் அமைவதற்கு மொழி, இனம், பிரதேசம், மதம் என்றெல்லாம் இயற்கையான காரணி என ஏதுமில்லை. காரணங்கள் என்பன உருவாக்கப்படுபவை; கட்டமைக்கப்படுபவை (constructed). அந்தந்தச் சமூகங்களிலுள்ள பெரும்பான்மை ஆதிக்க சக்திகளே அதைத் தீர்மானிக்கின்றன. இதன் பொருள் அவ்வாறு உருவாக்கப்படும் காரணிகள் பொய்யானவை என்பதல்ல. இந்தியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் தனித்தனி மதத்தினர் என்பது ஒரு உண்மை. முஸ்லிம்களின் புனிதத் தலம் மக்காவிலும், இந்துக்களுக்கு அது காசியிலும் உள்ளதென்பதும் சாவர்க்கர் சொன்னது போல ஒரு உண்மைதான். ஆனால் ஒரு தேசம் உருவாவதற்கு இதெல்லாம் தடையில்லை என்றார் காந்தி. அது ஒன்றே ஜனநாயகம் தழைப்பதற்கான, எல்லோரும் இன்புற்றிருப்பதற்கான ஒரே வழி என்றார் அவர்.

இல்லை! இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு மதத்தினர்; நாம் ஒன்றாக இருக்க முடியாது; நாம் இருவரும் எல்லாவற்றிலும் வேறு வேறு என வாதிட்டு ஒரு பெரிய இரத்தக் களறியையும் உருவாக்க முடியும் என்பதற்கு சாவர்க்கரின் இந்துத்துவ தேசியம் ஒரு எடுத்துக்காட்டு.

இந்த நிலையைத்தான் தேசியம் என்பது ஒரு ‘கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்’ (imagined community) என பெனடிக்ட் ஆன்டர்சன் குறிப்பிடுவார். இதன் பொருள் தேசியம் என ஒன்றில்லை என்பதோ அல்லது அது ஒரு மாயை என்பதோ அல்ல. தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது. தேசியத்தின் பெயரால் ஒருவன் அல்லது ஒருத்தி ஓர் அடையாளத்தைப் பெறுகிறார்கள். முகம் பார்த்தறியாத எங்கோ இருக்கும் ஒருவரைத் தனது தேசத்தவர் என உணர்ந்து ஒரு ஒற்றுமை உணர்வை (solidarity) வெளிப்படுத்துவதை அது சத்தியமாக்குகிறது.

இன்னொரு பக்கம், தேசியத்தின் பெயரால் போர்கள் நடக்கின்றன, கொலைகள் நடக்கின்றன, புதிய நாடுகள் உருவாகின்றன, நாடுகள் பிரிகின்றன, நாடுகள் இணைகின்றன. எந்த அடிப்படையில் நாடுகள் பிரிகின்றன அல்லது இணைகின்றன என்பதைப் பொருத்தமட்டில் வரலாறும் அரசியலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரியாரும் ம.பொ.சியும் தமிழகத்தை வெவ்வேறாகக் கட்டமைத்தனர். காந்தியும் சாவர்க்கரும் இந்திய தேசத்தை அவ்வாறே வெவ்வேறாகக் கட்டமைத்தனர். யார் எப்படிக் கட்டமைக்கின்றனர் என்பது அவரவர்களின் அரசியலைப் பொருத்து அமைகிறது. அறம் சார்ந்த பார்வையுடன் எல்லோரையும் உள்ளடக்கும் தேசியமே எல்லோருக்குமானது. சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிகோலுவது. காந்தியும், பெரியாரும் அந்த வகையில் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இன்றைய உலகில் ஒற்றை இனம் அல்லது மொழி, அல்லது மதம் முதலான வடிவங்களில் தேசம் அமைவது சாத்தியமில்லை. பல்வேறு வேறுபாடுகளுடன் உருவாகிற சமூகங்களில், இத்தகைய அடையாளங்களின் அடிப்படையில் நாடுகளைப் பிரிப்பதற்கான புவியியல் சாத்தியங்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதும் இல்லை.

அவரவர் அடையாளம், அவரவர் மொழி, மதம், பண்பாடு அவரவர்க்கு முக்கியம். அதே போல அடுத்தவர் பண்பாடு, மொழி, மதம் முதலானவை அவர்களுக்கு முக்கியம் என்கிற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். இதற்கு எதிரான அரசியல் பாசிசத்திற்கே வழி வகுக்கும்.

பாசிசம் எந்தச் சிறுபான்மைக்கு எதிராக வடிவம் கொள்கிறதோ அந்தச் சிறுபான்மையை மட்டும் ஒடுக்குவதில்லை. எந்தப் பெரும்பான்மையின் பிரதிநிதி எனத் தன்னைக் காட்டிக் கொள்கிறதோ அந்தப் பெரும்பான்மையின் உரிமைகளையும் அது பறிக்கும். அது இறுதியில் ஒரு அதிகாரக் கும்பலின் கொடூரமான ஊழல் ஆட்சியாகவே அமையும். உலகெங்கிலும் பாசிச சர்வாதிகாரிகள் அப்படித்தான் நடந்துள்ளனர்.

இந்தியாவும் சரி, தமிழகமும் சரி பல்வேறு பன்மை அடையாளங்களைச் சுமந்து நிற்பவை. இந்தப் பன்மைத்துவத்தைக் காப்போம். பன்மைத்துவத்திற்கு எதிரான சக்திகளை அடையாளம் கண்டு எதிர்ப்போம். பாசிசம் ஏதோ ஒரு சமூகத்திற்கு மட்டும் கேடல்ல. அது எல்லோருக்கும் கேடு.

தேசிய உணர்வு கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்குவது ஒன்றுதான் தேசியம் பாசிசமாக மாறாமல் இருப்பதற்கான ஒரே வழி.

கஸ்தூரிரங்கனின் கல்விக் கொள்கையும் பா.ஜ.க கொள்கையும் சந்திக்கும் புள்ளிகள்

தேசியக் கல்விக் கொள்கை 2019 (2) [மக்கள் களம், ஜூலை, 2018)

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை:

ஒருகல்விக் கொள்கையை உருவாக்குபவர்கள் எத்தகைய அணுகல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்?

“உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் கல்விக் கொள்கை என்பது உலகளவில் உள்ள கல்விப் போக்கு குறித்த ஒரு கவனமும், அதை நோக்கி நமது இலக்கு அமையவேண்டும் எனும் விருப்பும் கொண்டிருப்பது தவிர்க்க இயலாது என்பது ஆட்சியாளர்கள் முன்வைக்கும் கருத்து. இன்று உலகளவில் வேலைவாய்ப்புகளைத் தேடி நம் இளைஞர்கள் அலைந்து கொண்டுள்ள நிலையில் நாம் ஒன்றும் அதை முரட்டடியாக மறுத்துவிட முடியாது.

edn policy

ஆனால் உலக அளவிலான கல்வி குறித்த அணுகல்முறை என்கிற கருத்தக்கத்தை நாம் நமது மண், நமது மக்கள் என்கிற பின்னணியில் வைத்துப் பார்ப்பது மிக மிக அவசியம் என்பதை நாம் எக்காரணம் கொண்டும் புறக்கணித்துவிடவும் முடியாது. இந்த நாட்டின் சாதி, ஏழ்மை, தீண்டாமை முதலான தனித்துவங்கள், மக்கள்தொகை, கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் உலகத்தரம் பற்றி நாம் பேசிவிட முடியாது.

சமீபகால வரலாற்றில் நாம் எது குறித்தாவது மகிழ்ச்சி கொள்ள முடியுமானால் அது நமக்கு ஒப்பீட்டளவில் ஒரு நல்ல அரசியல் சட்டம் கிடைத்துள்ளது என்பதுதான். அதையும்கூட “ஒப்பீட்டளவில்” என்கிற நிபந்தனையுடன்தான் சொல்ல முடியும். இரண்டாம் உலகப்போரை ஒட்டி உலகளவில் மேலெழுந்த சமத்துவம், ஜனநாயகம், மானுட உரிமைகள் குறித்த சிந்தனைகளின் பின்னணியில் டாக்டர் அம்பேத்கர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சட்டத் தொகுப்பு நம்முடையது. எனவே எந்த ஒரு வரைவு, கொள்கை, திட்டம் ஆனாலும் அரசியல் சட்டம் முன்வைக்கும் இந்த மதிப்பீடுகளே உரைகல்லாக இருக்க முடியும்,

இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் எந்த ஒரு கொள்கையையும் மதிப்பிட முடியும். முன்னாள் விண்வெளி ஆய்வு விஞ்ஞாநி கஸ்தூரிரங்கன் உருவாக்கியுள்ள இந்த ஆகப் பெரிய அளவிலான (484 பக்கம்) கல்விக் கொள்கை அறிக்கை இன்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை முதலான அரசியல் சட்ட மதிப்பீடுகள் கஸ்தூரிரங்கன் அறிக்கையில் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன என்பது இதன்மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம். பதிலாக நமது பாரம்பரியம், நமது மொழிகள், நமது பழம் கல்விமுறை முதலானவை குறித்து இவ் அறிக்கை எழுப்பும் தவளைக் கூச்சல் குறித்த கண்டனக் குரலை இதுவரை இவ் அறிக்கை குறித்து விமர்சித்துள்ள (நான் உட்பட) எல்லோரும் முன்வைத்துள்ளனர். எனவே அது குறித்து விரிவாகப் பேசாமல் ஓரிரண்டை மட்டும் சுட்டிக்காட்டி மேலே செல்வோம்.

eklavya-drona

அரசு வெளியிட்டுள்ள இவ் அறிக்கையின் ஆங்கில வடிவில் (பக்கம் 26) இந்தியக் கல்விமுறையின் விளைச்சலாக, “சரகர், சுஸ்ருதர், ஆர்யபட்டர், பாஸ்கராச்சாரியர், சாணக்கியர், பதஞ்சலி, பாணினி மற்றும் எண்ணற்றோர்..” உள்ளனர் என இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. தொடர்ந்து இவர்கள் கணிதம், வானியல், மருத்துவ அறிவியல், அறுவை சிகிச்சை, கட்டிடக் கலை, கப்பல் கட்டும் தொழில்,  யோகா, நுண்கலைகள் … மற்றும் “பலதுறைகளில்” வல்லுனர்களாக இருந்தனர் எனச் சொல்கிறது.

இப்படியான பட்டியல் இடுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இதில் சுட்டிக்காட்டப்படும் கல்வித் துறைகளில் சிலவற்றிற்கும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளவர்களின் பெயர்களுக்கும் தொடர்பே இல்லை. ‘சாணக்கியர்’ போன்றோர் அவர்தம் அறிவுத் திறனுக்காகப் போற்றப்படுவதைக் காட்டிலும் அவர் முன்மொழிந்த குறுக்கு வழிகளுக்காக இகழ்ச்சிக்குரியவராகவே வரலாற்றில் மதிப்பிடப் படுகின்றனர். சரகர், சுஸ்ருதர் போன்றோர் அறுவை சிகிச்சை முதலானவற்றிற்காக மதிக்கப்பட்டாலும் இங்கு உருவான பார்ப்பனீய வரலாறு, “அம்பட்டம் சிகிஸ்தனம்” எனக் கூறி அவர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே ஒதுக்கி வைத்த கதையை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற இந்தியத் தத்துவவியல் அறிஞர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். “மருத்துவர்” என்போர் இங்கு தீண்டத் தகாதவர்களாகவே மதிப்பிடப்பட்டனர், மேற்சாதியினரை நாடி பிடித்துப் பார்க்கும்போது கூட அவர்களைத் தொட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு பட்டுத்துணியைச் சுற்றி அதன்மீது விரல்களை வைத்துத்தான் மருத்துவர்கள் நாடி பார்க்க வேண்டும் எனும் நிபந்தனை இங்கிருந்ததையும் எப்படி மறந்துவிட இயலும்?

அதோடு இங்கு குறிப்பிடப் பட்டுள்ள பெருமக்கள் எல்லோரும் வடமொழிப் பாரம்பரியத்திலேயே வந்தவர்கள், திராவிடப் பாரம்பரியத்தில் சுட்டிக்காட்ட யாருமே கஸ்தூரிரங்கனின் கண்களில் படவில்லையா? பாணினியைச் சொல்லும் வாய் தொல்காப்பியரைச் சொல்லாதா?

இங்கே குறைந்தபட்சம் இரு பாரம்பரியங்கள் இருந்துவந்துள்ளன. வடமொழிப் பாரம்பரியங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல தென்மொழிப் பாரம்பரியங்கள். ஆனால் இந்த உண்மையைக் கஸ்தூரிரங்கன் அறிக்கை புறக்கணித்துள்ளது. பண்டைய அறிஞர்கள் என்றால் “ஆர்யபட்டா, பிரமகுப்தா, பாஸ்கரா, மாதவா” முதலானவா எழுதியவை மட்டுந்தான் (பக் 98) பண்டைய முக்கிய ஞானநூல்கள் என்றால் ‘பஞ்சதந்திரம், ஜாதகம், ஹிதோபதேசம்’ என்பனதான் (பக் 97). செவ்வியல் இசை என்றால் அது “கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்” தான் (பக். 89). கஸ்தூரிரங்கன்களின் கண்களில் திருவள்ளுவர் படமாட்டார். வள்ளுவர் அவர் குறிப்பிடும் வரிசையில் வைக்கத் தக்க  அறிஞர் அல்ல. தப்பித்தவறி பௌத்த மரபில் வந்த ஜாதகத்தை இவ்வறிக்கை குறிப்பிட்டுவிட்டது. அது வடமொழி ஒன்றில் இருந்ததால்தான் அந்தத் தகுதி அதற்குக் கிடைத்துள்ளது. ஆனால் பஞ்சதந்திரத்திற்கும், ஜாதகக் கதைகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ‘பஞ்சதந்திரம்’ எப்படி மற்றவர்களை ஏமாற்றி வாழ்வது எனும் தந்திரத்த்தை மக்களுக்குப் புகட்டியது, பௌத்த ஜாதகமோ அறவாழ்வின் அடிப்படைகளைக் கதை வடிவில் உரைத்தது.

மாணவர்கள் மத்தியில் ஒரே சீரான அறிவுவளர்ச்சிக்கு இன்றைய கல்விமுறை காரணமாகிறது எனக்கூறி, அதையே இன்றைய கல்வியின் குறைபாடகவும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது (பக் 27). இதன் மூலம் மாணவர்களின் தனித்துவமான திறன்கள் ஊக்குவிக்கப் படுவதில்லையாம். இது நமது பாரம்பரியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிரானது என்கிறது இவ் அறிக்கை. ஏகலைவன் (மகாபாரதம்), சம்புகன் (இராமாயணம்) ஆகியோரின் தனித்துவமான திறமைகளுக்கு என்ன மரியாதையை உங்கள் கல்விமுறை கொடுத்தது எனும் கேள்வியை கும்கும்ராய் முன்வைக்கிறார்.

eklavya

“சமூகத்தில் பெண்களின் உயர்நிலை மற்றும் பெண் கல்வி” ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது எனப் புகழும் இக்கட்டுரை, அரசியல், மதம், இலக்கியம், முதலான துறைகளிலும், பொதுவில் இந்தியச் சமூகத்திலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி இந்தியப் பாரம்பரியத்தை ஆகா ஓகோ என்கிறது இந்த அறிக்கை (பக்.145). பிரிட்டிஷ் ஆட்சி வரும்வரை இங்கே பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் அதன் பின்னரே இங்கு உடன்கட்டை முதலான கொடுமைகள் ஒழிக்கப்பட்டன, பெண்கல்வி என்பது சாத்தியமாயிற்று என்பவற்றையும் இங்கே நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. அறிக்கை சொல்வதில் ஓரம்சத்தை வேண்டுமானால் ஏற்கலாம். வரலாற்றுத் தொடக்கத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக அறிவுமிக்கவர்களாக வாழ்ந்தது உண்மைதான். அவ்வையார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களை நாம் சங்க காலத்தில் பார்க்கிறோம். கார்கி போன்ற பெண் அறிஞர்களை வேதகால கங்கைச் சமவெளியிலும் பார்த்தோம். ஆனால் அதற்குப் பிற்பட்ட 2500 ஆண்டுகளில் ஏன் பெரிய அளவில் பெண்பால் அறிஞர்கள் என யாரையும் காண இயலவில்லை? குடும்பப் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது இதில் முக்கிய காரணம் வகிக்கிறது. 18ம் நூற்றாண்டில் மறைப்பணி செய்யவந்த சீகன்பால்கு அன்றைய தமிழகத்தின் கல்விமுறை குறித்துச் சேகரித்த தகவல்களின்படி பெண்களில் தேவதாசியருக்கு மட்டுந்தான் சில குறிப்பிட்ட நூல்கள் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டன என்பதை அறிய வருகிறோம். “குடும்பப் பெண்கள்’ என்போருக்குக் கல்வி மறுக்கப்பட்டதுதான் நம் பாரம்பரியம். ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் கூட ஒருவகையில் குடும்ப வாழ்வைத் துறந்தவர்கள்தானே.

பொற்கால “இந்து இந்திய” பழம் பெருமைகளைத் தேவையே இல்லாமல் இங்கு பேசியதன் மூலம் இந்த அறிக்கை 484 பக்கங்களுக்கு நீண்டதுதான் மிச்சம்.

சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலே செல்வோம். 

வரவேற்கத்தக்க முன்வைப்புகளும் அதனுடன் கூடிய வில்லங்கங்களும்

1498511027-3391

அப்படியானால் இந்த அறிக்கையில் வரவேற்பதற்கு ஒன்றுமே இல்லையா எனும் கேள்வி எழுகிறது.. வரவேற்க வேண்டியவற்றை வரவேற்பதில் நமக்கு எந்த வயிற்றெரிச்சலும் இல்லை. 6 வயது முதல் 14 வயது வரையில் மட்டுமே ‘கல்வி உரிமைச் சட்டம்’ மூலமான பாதுகாப்பு என்பது இப்போது மூன்று வயது முதல் 18 வயதுவரை என இவ்வறிக்கை விரிவாக்கிப் பரிந்துரைக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனால் இதோடு நிறுத்தாமல் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு 3 வயது முதல் தொடங்குவதாக இவ் அறிக்கை முன்மொழிகிறது. இதுவரை பள்ளிப் படிப்பு 5 வயதுமுதல்தான் தொடங்குவதாகக் கணக்கிடப்பட்டது. எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி முதலான இரண்டாண்டுகள் பள்ளிப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. இந்த வயதில் கற்கையைக் காட்டிலும் விளையாட்டுகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை மூன்று வயதுமுதல் கல்வி தொடங்குவதாக அறிவிக்கிறது. 9 வயதில் அதாவது 5ம் வகுப்பில் அக்குழந்தை பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்கிறது, அது மட்டுமல்ல. 7 மற்றும் 9ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுத வேண்டுமாம். 8ம் வகுப்பில் பாஸ் – ஃபெயில் முறையை மோடி அரசு கொண்டுவந்தபோதே தமிழகம் அதை எதிர்த்தது. இன்று 3ம் வகுப்பிலிருந்து பொதுத் தேர்வைப் புகுத்துவதற்கு இவ் அறிக்கை சொல்லும் சமாதானம் குழந்தைகளின் 85 சத மூளை வளர்ச்சி இந்த வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது என்பதுதான். வளர்ச்சி அடைந்த ஏழை நாடுகளின் புள்ளிவிவரங்களை கல்வி வளர்ச்சி குறைந்த நம் நாடுகளில் எந்திரகதியாக எப்படிப் பொருத்த முடியும்?

பள்ளிக் கல்வியை மூன்று வயதில் தொடங்கும்போது இதுவரை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு எனச் செயல்பட்டுவரும் அங்கன்வாடிகளின் நிலை என்ன? இதுவரை அவை பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்ததில்லை. ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின்’ (WCD) பொறுப்பில்தான் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பரிந்துரைக்கு ஏற்ப இவ்விரு அரசுத் துறைகளுக்கு இடையில் பொறுப்புப் பகிர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கிறது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை இப்போது இருப்பதைக் காட்டிலும் இரண்டு மடங்காக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையின் இன்னொரு வரவேற்கத் தக்க பரிந்துரை. நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருந்ததுதான் இது. முந்தைய கல்விக் குழுக்களும் இதைப் பரிந்துரைத்திருந்தன.

தவிரவும் உயர் கல்வி என்பது அரசு நிதியில் மேற்கொள்ளப்படுவதே சரியாக இருக்கும் எனவும் அறிக்கை சொல்லி வைக்கிறது. அப்படி உயர்கல்வியில் தனியார் கொள்ளை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் நல்லதுதான். ஆனால் இன்றைய நடைமுறை இதற்கு எதிராகவே உள்ளது. பெரிய அளவில் மோடி ஆட்சியில் உயர் கல்வி தனியார் மயமாக்கப் பட்டுள்ளது அம்பானியின் ஜியோ மற்றும் ஜிண்டால், ஷிவ் நாடார் முதலானோர் எல்லாம் இன்று “உயர்சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களுக்கு” (Institutes of Eminence) அடிக்கல்நாட்டிப் பணி தொடங்கிய நிலையில் இந்தப் பரிந்துரையை எப்படிச் சாத்தியப்படுத்துவது? அது குறித்து இவ்வறிக்கை ஏதும் பேசவில்லை.

இந்த அறிக்கையின் இன்னொரு பாராட்டத்தக்க அம்சம் ஆசிரியர் பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். இது குறித்து மிக விரிவாக இவ் அறிக்கை பேசுகிறது. இது தொடர்பாகச் சில வரவேற்கத்தக்க திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள் மீது ஆசிரியர் அல்லாத பணிகளைத் திணிக்கக் கூடாது என்பது வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம், முறையான பதவி உயர்வு ஆகியனவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நிரந்தர ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இருவருக்கும் இடையில் ஊதிய வேறுபாடோ மிக மிக அதிகம், ஒரே வேலைக்கு இரு ஊதியம் என்கிற அநீதி ஆசிரியத் தொழிலில் மிக அதிகம். இந்த நிலை முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எனினும் இது குறித்து இவ் அறிக்கை ஏதும் பேசவில்லை.

ஆசிரியப் பற்றாக் குறையை நீக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மிகக் குறைந்த ஊதியத்தில் ‘சிக்ஷா  கர்மி’ மற்றும் ‘சிக்ஷா மித்ரா’ எகிற பெயர்களில் இருவகை பகுதி நேர ஆசிரியர்களை (para teachers) நியமிக்கப் பரிந்துரைக்கிறது. ஆனால் 2022 க்குள் இந்த நடைமுறையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கூறுகிறது. அதன் பின் அந்த கர்மிகள் மற்றும் மித்ராக்களின் கதி? அது குறித்து கஸ்தூரிரங்கன் குழுவின் பதில் மௌனம்தான். இப்படியாக இன்று இந்தியா முழுவதிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஆசிரியர்கள், எந்த ஒப்பந்தங்களும் இல்லாத guest lecturers முதலானோர் நிரந்தரமாக்கப்படுதல் அவசியம். 

இட ஒதுக்கீடுக்கு எதிராக

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை உயர்சாதி மேட்டிமைத்தனத்துடன் இருப்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிப்பது பற்றிய இவ் அறிக்கையின் பரிந்துரை. “இந்தக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநில மாணவர்களுக்கான சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்படும் எந்தப் (புதிய) இட ஒதுக்கீடு தொடர்பான வழிமுறைகளையும் ஏற்று நடத்தவேண்டும் என தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆணையிட முடியாது என்கிறது கஸ்தூரிரங்கன் குழு (பக்.334).

இட ஒதுக்கீடு தொடர்பாக அடித்தள சாதியினருக்கு சலுகைகள் அளிக்க தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை கஸ்தூரிரங்கன் குழு மிக மெலிதாகத் திணிப்பது கவனத்துக்குரியது.

அதேபோல இந்த அறிக்கை முழுவதிலும் ஆங்காங்கு “தரம்” (merit)     எனும் கருத்காக்கம் அளவுக்கு மீறி வற்புறுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.

 

 

ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு

அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது

மோடி அரசு தனது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை நிறைவேற்ற ஓராண்டு காலகெடு நிர்ணயித்துள்ளது. . இதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் நமது ரேஷன் அட்டையைக் காட்டிப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியுமாம். மாநிலங்களின் கருத்துக்கள் எதையும் கேட்காமல் கட்டாயமாக நிறைவேற்ற ஆணையிடப் பட்டுள்ளது.. அது மட்டுமல்ல ‘பி.ஓ.எஸ்’ கருவியின் மூலம் ரேஷன் வாங்க வருபவரின் விரல் ரேகையை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தண்ணீர் இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, வேலை வாய்ப்பு அருகிக் கொண்டே போகிறது. அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாத அரசு இப்படி நாட்டை “ஹை-டெக்” ஆக்குவதில் மும்முரம் காட்டுகிறது. இவற்றால் ஏழை எளிய எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் படும் அவதிகள் ஏராளம். உழைப்பாளிகளாக உள்ள இம்மக்களின் விரல் ரேகைகள் தேய்ந்ததின் விளைவாக 2018ல் மட்டும் டெல்லியில் 31,199 பேர்கள் இச்சோதனையில் வெற்றிபெற முடியவில்லை. இவர்களுக்கு ரேஷன் மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்தால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1,20,000 பேர்கள். அது மட்டுமல்ல. குடும்ப அட்டையில் பெயருள்ளவர்கள் நேரடியாகச் சென்றுதான் இம்முறையில் பொருட்களைப்[ பெறமுடியும். தனியாக வாழும் வயதானவர்களுக்கு இது பெரும் பிரச்சினை.

“ஒரேநாடு, ஒரே ரேஷன் அட்டை” திட்டத்திற்கு மோடி அரசு சொல்லும் ஒரே நியாயம் இதன்மூலம் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து பணியில் இருப்பவர்கள் பயனடைவார்கள் என்பதுதான். நாடு முழுவதும் மாநில வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கார்டுதான் என்பதால் எங்கும் யாரும் தங்கள் பங்கைப் பெற்றுவிட முடியும்.

“வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏன் ரேஷன் கொடுக்க வேண்டும்? எனவே இதை ஏற்க முடியாது” என்கிறார்கள் நம்மில் சிலர். நான் இதை ஏற்கவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே பிற மாநிலத்தவர்களும்  தங்களின் மாநில அட்டைகளைக் காட்டி இங்கேயே மத்திய அரசு மாநியத்தில் கொடுக்கும் பொருட்களை மட்டும் பெறலாம் என்பது என் கருத்து. மாநில அரசு அளிப்பதை வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்காமல் நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு வந்து வேலை செய்யும் வெளிமாநிலத்தவர் எல்லோருமே பெரிய அதிகாரிகள் இல்லை. மிகக் குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுகிற வெளிமாநிலத் தொழிலாளிகள்தான் ஏராளம். அவர்கள் வயிற்றில் நாம் அடிக்க வேண்டியதில்லை.

இந்தத் திட்டம் மோசமான ஒன்று, இதை ஏற்கக் கூடாது எனச் சொல்வதற்கு என்னிடம் வேறு பல நியாயங்கள் உண்டு. இந்தத் திட்டத்தை நாம் தனித்துப் பார்க்கக் கூடாது இத்துடன் மோடி அரசு திணிக்கும் “ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு”, “ஒரே நாடு ஒரே பயண அட்டை”, “ஒரே நாடு ஒரே ஆதார் அட்டை” என்கிற வரிசையில் இன்று இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டும் மோடி அரசின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக மாநில அரசு அதிகாரங்களுள் அத்து மீறல் நடைபெறுகின்றது. பொது வினியோக முறை அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து வன்முறையாகப் பறிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள்தான் எல்லா மாநிலங்களிலும் அளிக்கப்படும் என்கிற நிலையை இதன்மூலம் எளிதாக ஏற்படுத்தலாம். நமது தனிப்பட்ட உணவு முதலான வழமைகளுக்குள்ளும் இப்படி மத்திய அரசு மூக்கை நுழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்..

மோடி அரசு இத்துடன் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இனிமேல் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே அகில இந்தியத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யுமாம். நீதித்துறையைக் கையகப்படுத்துவதற்கு பா.ஜ.க அரசு வெறியோடு நிற்பதை நாம் அறிவோம். ‘கலேஜியம்’ முறையை ஒழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தாமே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் இவர்கள். அது இப்போதைக்கு முடியவில்லை என்பதால் மாநில நீதித் துறையைக் கைவசமாக்கிக் கொள்ள நிற்கின்றனர்.

ஏற்கனவே ஆளுநர்கள் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இப்படி அதிகாரங்களை  எல்லாம் தன் கையில் சுருட்டிக் கொண்டு மாநில அரசை டம்மி பீசாக மாற்றும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.

மோடி அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த கையோடு இந்த வேலைகள்.  படு தீவிரமாக நடக்கின்றன. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முழக்கத்தைப் பதவி ஏற்ற அடுத்த நாள்முதல் தொடங்கிவிட்டார் நரேந்திர மோடி. எந்நாளும் தாங்கள் கால் ஊன்ற முடியாத தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் வேர் பதிக்க ஒரே வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள்  ஒரே நாளில் தேர்தல் நடத்தும்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி வெற்றிபெறும்  வாய்ப்பு அதிகம் என்பதால் அதில் தீவிரனாக உள்ளனர்.

மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு தேசத்திற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு” (Nation State) என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். வரலாறு முழுவதிலும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் இப்படி அதிகாரங்கள் மையத்தில் குவிக்கப்பட்ட ‘தேச அரசுகளாக’ இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பல கூறுகளுக்கிடையில்  அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட  அமைப்புகளாகவே (segmentary state) அவை இருந்துள்ளன. அந்த வகையில் இன்றைய இந்திய அரசமைப்பை “அரசுகளின் தேசம்” (State Nations) என்பார்கள் லாயிட் ருடால்ஃபும், சூசேன் ருடால்ஃபும்.

இந்தியத் துணைக்கண்ட மக்கள் “பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மை” (shared sovereignty) என்பதற்கே பழக்கப்பட்டவர்கள். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் முயற்சிகள் பாம்புப் புற்றுக்குள் கையை விடும் முட்டாள்தனமாகவே அமையும்.

கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்?

தேசியக் கல்விக் கொள்கை 2019 (1)

தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’ நகல் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது: “பா.ஜ.க அரசின் கல்விக் கொள்கை என்றவுடன் நம் எல்லோருக்கும் வரும் ஐயம் காவிமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான். நல்ல வேளையாக அப்படி எதுவும் இதில் இல்லை”. இந்தக் கட்டுரை ஆசிரியர் சொல்வது போல அப்படியெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை என்பது உண்மைதான். . ஆரம்ப மற்றும் உயர்கல்வியில் பன்னாட்டுத் தர அளவில் இந்தியக் கல்வியை இன்றைய உலக அளவிலான கல்விச் சூழலுக்குக் தக தகவமைப்பது என்கிற அடிப்படியில்தான் விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. ஆனால் அது மிக நுணுக்கமாக நமது நாட்டுக்கே உரித்தான சாதி, தீண்டாமை, பெரும்பான்மை மதவாதம் ஆகியன குறித்து வெளிப்படுத்தும் மௌனம் என்பது மோடி அரசைப் பொருத்தமட்டில் போதுமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக அளவில் இன்றைய அரசியல், பொருளாதாரம்,தொழில், வணிகம் முத்லான எல்லாத் துறைகளிலும் தனது இருப்பை நிலைநாட்டத் துடிக்கும் மோடி அரசு அப்படியெல்லாம் கல்வியை பழைய குருகுலக் கல்வி அமைப்பாக ஆக்கிவிட முடியாது. ஒருபக்கம் அது இன்றைய நவ தாராளவாத உலகக் கண்ணோட்டத்திற்குப் பொருந்திப் போக வேண்டும். காவிமயப்படுத்தல் முதலான ‘அஜென்டா’வை வெளிப்படையாக முன்வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவைற்ற சர்ச்சைகளை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. நாம் செய்ய வேண்டியதை நடைமுறையில் செய்து கொள்ளலாம் என்பதுதான் இன்று மோடி அரசின் அணுகல்முறையாக உள்ளது.

Anganwadi-preschool

வாஜ்பேயி தலைமையில் 1999 – 2014 காலகட்டத்தில் பா.ஜ.க அரசு அமைந்தபோது சோதிடம், புரோகிதம் குறித்தெல்லாம் பாடங்கள் பல்கலைக்கழகங்களில் தொடங்குவது என முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மனித வளத்துறை அமைச்சகம் வெளிப்படையாகத் திட்டமிட்டபோது கடுமையான எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் இங்கு உருவாயின. உலக அளவில் முக்கியமான இந்திய விஞ்ஞானிகள் பலரும் கையொப்பமிட்ட அறிக்கைகள் உலகெங்கும் பரவிக் கடும் கண்டனங்கள் முன் வைக்கப்பட்டன. அதற்குப் பின் அது அரசுத் தரப்பில் வற்புறுத்தப்படவில்லை. ஆனால் இன்று நிலைமை என்ன? தமிழ் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று சோதிடம் தொடர்பான பட்டயப் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படவில்லையா? அதுபோல இம்மாதிரியான அதன் இந்துத்துவத் திட்டங்களை அது வெளிப்படையாக முன்வைக்காமல் நடைமுறையில் செய்லபடுத்துவதுதான் இன்று அதன் அணுகல்முறையாக உள்ளது என்பதை நாம் மனங்கொள்வது அவசியம்.

மோடி அரசு பதவி ஏற்றவுடன் முன்னாள் அரசு அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இன்றைய இந்த தேசியக் கல்விக் கொள்கை அறிக்கையை உருவாக்குவதற்கான அடிப்படைக் அணுகல்முறைச் சட்டகம் இயற்றப்பட்டது. அது பல மாதங்கள் வரை அன்றைய கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஸ்மிருதி ராணியால் மக்கள் முன் வைக்கப்படாமையைக் கண்டித்து சுப்பிரமணியம் பின் அதைத் தானே வெளியிட்டார். அதற்குப்பின் மனித வளத்துறை அமைச்சக இணையத்தளத்தில் அவ்வரைவின் முக்கிய கூறுகள் வெளியிடப்பட்டன. அப்போதும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை. 2017 ல் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டபின்பும் பலமாதங்கள் வரை அது அரசிடம் அளிக்கப்படவில்லை. இப்போது இரண்டாம் முறையாக மோடி அரசு இன்னும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்பு அந்த 484 பக்க விரிவான அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டு, அது குறித்து மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டுள்லனன. ஆனால் அவ்வாறு கருத்து அறிவிக்க மக்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம் வெறும் 27 நாட்கள் மட்டுமே என்பது  குறிப்பிடத் தக்கது. நாமும் அவசர அவசரமாக அதை முழுவதும் படித்தும் படிக்காமலும் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுள்ளோம். ஒரு வேளை தனது முதல் நூறுநாள் வேலைத் திட்டத்தின் அங்கமாக மோடி அரசு இந்த அறிக்கை ‘நிறைவேற்றலையும்’ ஒரு சாதனையாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

கல்வி, மருத்துவம் முதலான சேவைத்துறைகளையும் ‘காட்’ வணிக ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரும் ‘காட்ஸ்’ (GATS) ஒப்பந்தத்திற்கு இந்திய மக்களை ஒப்புக் கொடுக்கும் அவசரத்துடன் இயற்றப்பட்டதுதான்  சுப்பிரமணியம் குழு அறிக்கை என்பதை அறிவோம். அதற்கும் இந்தக் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கைக்கும் இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் இன்று உயர்கல்வித் துறையில் பல புதிய திட்டங்கள், மாற்றங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டக சிலவற்றைiச் சொல்வதானால் GIAN Initiative எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து 20 மணிநேர விரிவுரைக்கு 5,00,000 ரூ ஊதியத்தில் பேராசிரியர்களைத் தருவித்தல், பெரிய அளவில் ‘ஆன் லைன்’ படிப்புகள் (MOOCs) தொடங்குதல், 5ம் வகுப்பிற்குப் பின் பாஸ்- ஃபெயில் முறையை நடைமுறைப்படுத்துதல், பொருளாதாரத் தன்னாட்சி (Financial autonomy), NET, NEET முதலான தேசியத் தேர்வுகள் (National Testing Agency), உயர்நிலை தன்னாட்சிப் பல்கலைக் கழகங்கள் (Institute of Eminence -IoE), உயர் கல்வி நிதி நல்கை முகமை (Higher Education Financing Agency-HEFA) முதலான செயல்பாடுகள் மற்றும் அமைப்புகள் உருவாக்கம் ஆகியவற்றைச் சொல்லலாம்,

இத்தனைக்கும் பின்புதான் இன்று இந்த தேசியக் கல்விக் கொள்கை நம்முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.இந்தச் செயல்பாடுகளுக்கும், இன்றைய இந்த அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனில் இவற்றில் எவை நிறைவேற்றப்படும்? எவை புறந்தள்ளப்படும்?

அதேபோல இந்த கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கும், அந்த அறிக்கைக்கான கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும் இடையிலும் பல வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சுப்பிரமணியம் குழு அறிக்கை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மும்மொழித்திட்டம், இந்தி கட்டாயம் எனச் சொல்லி கடும் எதிர்ப்பை இன்று எதிர்கொள்ள நேரிட்டது.

கடந்த ஐந்தாண்டுகால மோடி அரசின் செயற்பாடுகளுக்கும் கஸ்தூரிரங்கன் குழு முன்வைக்கும் பார்வைகள் சிலவற்றிற்கும் இடையில் உள்ள சில முரண்பாடுகளை டெல்லியிலுள்ள “கல்வி தொடர்பான திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றுக்கான தேசிய நிறுவனத்தின்’ (IEPA) சுதான்ஷு பூஷன் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது. மோடி அரசு உயர்கல்வியை அதிகபட்சமாகத் தனியார் மயமாக்கல் சந்தைக்குரியதாக்குதல், போட்டியை மையமாக்குதல், தர நிர்ணயம் செய்து வேறுபடுத்துதல் என்கிற நிலைக்கு இந்த ஐந்தாண்டுகளில் மாற்றியுள்ளது. சுயமாகவும், சந்தையில் கடன் வாங்கியும் நிதிதிரட்டல் என்பதையும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு நிதியுதவியில் இயங்கும் உயர்கல்விக்கு முதன்மை அளிப்பதைப் பற்றி கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை பேசுவதற்கு ஏதாவது பொருளுண்டா? – என்கிற கேள்வியை முன்வைக்கிறார் பூஷன், அரசாதரவுடன் கூடிய உயர் கல்வியைப் பரிந்துரைக்கும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையின் இந்த வரவேற்கத்தக் தக்க அம்சங்கள்  உயர்கல்விச் சந்தை ஒன்றை உருவாக்கியுள்ள மோடி அரசால்  புறக்கணிக்கப் படுவதிலேயே  முடியும் என பூஷன் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருளென்ன? கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள இதுபோன்ற உயர்கல்வி தொடர்பான சில வரவேற்கத்தக்க பரித்துரைகள் தூக்கி எறியப்படும். உயர்கல்வி சந்தைப்படுத்தப்படுதல் தொடரும்.

edu

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள மோசமான பரிந்துரைகளான

1.எல்லா மட்டங்களிலும் தகுதி /  திறமை என்பதை முக்கியப்படுத்துதவன் மூலம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்தியச் சமூகத்தில் இட ஒதுக்கீட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளுதல்,

2.தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை எனப் பரிந்துரைத்தல்,

3.நமது சமூகம் ஒரு மோசமான சாதியம், தீண்டாமை ஆகிவற்றைக் கடைபிடிக்கும் சமூகமாகவும், இன்னொருபக்கம் மத அடிப்படையில் பெரும்பான்மை மதவாதத்தை வன்முறையுடன் வெளிப்படுத்தும் சமூகமாகவும் உள்ள நிலையில் கல்விச் செயற்பாடுகளில் “சமூகம்” (community) என்கிற கத்தாக்கத்தை முதன்மைப்படுத்துத்தல்; அதாவது கல்விச் செயற்பாடுகளில் ‘சமூகத்தின்’ பங்கை வலியுறுத்தல்,

  1. இந்திய மொழிக் குடும்பங்களில் சமஸ்கிருதத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை திராவிட மொழிக் குடும்பத்திற்கு அளிக்காமை
  2. மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை
  3. கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிப் பேசாமை

முதலான கூறுகளை மட்டுமே மோடி அரசு கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து எடுத்துக் கொண்டு செயல்படுத்தும்..

மற்றபடி மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் தொடர்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்னும் வேகத்துடன் தொடரும் என்பது உறுதி.

(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘இந்தியக் கல்வியின் இருண்ட காலம்’ (2019) நூலில் உள்ள என் அகட்டுரை)