தலைஞாயிறு பகுதியில் நிவாரணம் கோரிய போராட்டங்களும்  காவல்துறை தாக்குதல்களும்                      

 உண்மை அறியும் குழு அறிக்கை

  நாகப்பட்டிணம், டிச 15, 2018

சமீப காலங்களில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு கஜா புயல். நான்கு மாவட்டங்களில் அது அழிவை ஏற்படுத்தினாலும் புயல் கரை கடந்த தொடக்கப் புள்ளியான வேதாரண்யம், தலைஞாயிறு முதலியன மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. இதுவரை அரசுத் தரப்பிலிருந்து சாலைப் போக்குவரத்தைச் சரி செய்தது, நகர்ப்புறங்களில் மின் சேவையை ஓரளவு ஒழுங்கு படுத்தியது முதலியன தவிர முறையான நிவாரணங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பாக பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது.

கடைமடைப் பகுதியாக உள்ள தலைஞாயிறை ஒட்டிய சந்தானம் தெரு, சிந்தாமணி, கேசவனோடை, திருமாலம் காமராஜ் வீதி, லிங்கத்தடி ஆகிய குடியிருப்புகளில் வாழும் அடித்தள மக்கள் இன்று இந்தப் புயல் இழப்புகளோடு இன்னொரு அதைவிடப் பெரிய தாக்குதலையும் சந்திக்க வேண்டியவர்களாகி உள்ளனர். வழக்குகள், கைது, தலைமறைவு வாழ்க்கை எனப் பலவாறும் அவர்கள் அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர். சுமார் 40 க்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர், இதில் காமராஜ் வீதியைச் சேர்ந்த நால்வரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் மீது காவல்துறையினரைத் தாக்கினர், வாகனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தினர் முதலான குற்றங்கள் இன்று சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

 1. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) (9444120582),
 2. கவின்மலர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாகை (9841155371),
 3. பூ. தனசேகரன், வழக்குரைஞர், திருத்துரைப்பூண்டி (9442333332),
 4. கே.நடராசன், ஓவியர், சமூகச் செயல்பாட்டாளர், நாகை (9444234074),
 5. தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி (9655972740),
 6. என்.செந்தில், விடுதலைச் சிறுத்தைகள், மருதூர் (99789557308),
 7. கே.எஸ்.தமிழ்நேசன், வழக்குரைஞர் (9894953919).

இக்குழுவினர் டிச 11, 2018 ஒரு நாள் முழுவதும் மேற்குறித்த கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சேரான்குளம் முதலான பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசினோம். காவல்துறைத் தாக்குதல் மற்றும் தேடுதல் வேட்டைக்குப் பயந்து கொண்டு இன்னும் வீடுகளில் இரவில் தங்கத் துணிவில்லாமல் தெருவில் உள்ள கோவிலில் தங்க நேர்ந்துள்ள பெண்கள், எல்லோருக்காகவும் அப்பகுதி ஆரம்பப் பள்ளியில் மூன்று வேளையும் சமைத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அம் மக்களின் ஒருசாரர் என எல்லோரையும் சந்தித்தோம். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் சிலரை மீண்டும் இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்ய வேதாரண்யம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள் என அறிந்து அங்கு சென்று அவர்களுக்காகக் காத்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மூத்த வழக்குரைஞர் சபாரத்தினம் ஆகியோரிடமும் பேசினோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு பேரூராட்சி நகரச் செயலாளர் திரு சோமு இளங்கோ மிக விரிவாக அங்கு நடந்தவற்றைத் தொகுத்துரைத்தார்.

வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, ஆசியவங்கி உதவியுடன் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி, காவல்துறையினரின் வாகனங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மறியல் நடந்த பகுதிகள் முதலானவற்றையும் நேரில் சென்று பார்த்தோம்.

காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டபோது பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் அறிவழகன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பணியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தொடர்பான வழக்குகளை நடத்திக் கொண்டுள்ள தலைஞயிறு / வேட்டைக்காரனிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போசுடன் இம்மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விரிவாகப் பேசினோம்.

இனி அங்கு இதுவரை நடந்தவற்றைப் பார்க்கலாம்.

நவம்பர் 18

கஜா புயலைப் பொருத்த மட்டில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளில் முனைப்புக்காட்டிய அளவிற்கு நிவாரண நடவடிக்கைகளில் அரசு அக்கறை காட்டவில்லை, விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மை. அதேபோல விவசாயக் கூலிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு அற்றுப் போனது தவிர அவர்களது குடிசைகள் முற்றாக அழிந்துள்ளன. குடிசைகள் இருந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிவாரணப் பணிகள், இழப்பீடு வழங்குதல் ஆகியன சரியாகச் செயல்படாத நிலையில் மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்திலும் ஆங்காங்கு அரசை எதிர்த்து சாலை மறியல்கள் முதலான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்படியான நிலையில்தான் கடைமடைப் பகுதியான இப்பகுதி மக்களும் ஆங்காங்கு சாலை மறியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த கிராமங்களின் வழியாகத்தான் அரிச்சந்திரா நதி ஓடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டியுள்ள சாலையில் சென்றால் வேதாரணியம் – நாகை இணைப்புச் சாலை வருகிறது.  அங்குதான் ஆசியாவிலேயே பெரிய குடோன் எனச் சொல்லப்படும் கட்டிடங்களும் சரிந்து கிடக்கின்றன.

இந்தச் சாலையில் உள்ள கன்னித்தோப்பு என்ற இடத்தில்தான் புயலடித்த இரண்டாம் நாள் (நவ 18) அமைச்சரும் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் தாக்கப்பட்டு அவரது வாகனமும் உடைக்கப்பட்டது. அமைச்சர் தப்பித்து வருவாதே அன்று பெரும் பிரச்சினையாகிவிட்டது என ஊடகங்கள் எழுதியதை அறிவோம்.

இந்தத் தாக்குதலுக்கும் நாம் இப்போது பேசிக் கொண்டுள்ள தலைஞாயிறு அருகிலுள்ள தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமைச்சர் காரைத் தாக்கியவர்கள் தலைஞாயிறை ஒட்டியுள்ள மக்கள் கிடையாது.

கன்னித்தோப்பில் அமைச்சர் தாக்கப்பட்ட அதே நேரத்தில் அவர் அப்பகுதியில் ஏதோ துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளதாகக் கேள்விப்பட்ட தலைஞாயிறு பகுதி மக்கள் அவர் வந்தால் நிறுத்தி தம் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக சந்தானம் தெருவிலும் தலைஞாயிறு சாலையிலும் நின்றிருந்தனர். தலைஞாயிறு சாலையில் நின்றிருந்தவர்கள் சாலை மறியல் செய்யும் நோக்குடன் திரண்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் அவரது இல்லத்திற்கு அவ்வழியேதான் செல்லவேண்டும். அவ்வழியில்தான் சிந்தாமணி காலனியும் உள்ளது.

சிந்தாமணியிலிருந்த குடிசைகள் முற்றிலும் அழிந்து நீர் தேங்கிச் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் கட்டிக் கொள்ள மாற்றுத் துணிகளும் இல்லாத அம்மக்கள் சாலை ஓரத்தில் நின்று கஞ்சி காய்ச்சி அதைப் பகிர்ந்து குடித்துக் கொண்டு நின்றிருந்தனர். அம்மக்களுக்கு அமைச்சரைத் தடுத்து நிறுத்திக் குறைகளைச் சொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. தாக்குதலுக்குத் தப்பி வந்த அமைச்சர் அவர்களைத் தாண்டிச் சென்று சாலை மறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருப் பக்கம் செல்லாமல் அதற்கு முன் இருந்த ஒரு குறுக்குப் பாதை வழியாக பத்திரமாக அவரது வீட்டை அடைந்து விடுகிறார்.

எனினும் அதற்குப் பின்வந்த காவல்துறையினரும் மற்றும் தாக்குதல் படையினரும் சிந்தாமணி நகரில் அமைதியாகக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த மக்களைச் சகட்டு மேனிக்குத் தாக்கியுள்ளனர். அம்மக்கள் பயந்து தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் சந்தானம் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர்.

மக்கள் அடிபட்டுப் பதட்டத்துடன் ஓடிவந்ததைக் கண்ட சந்தானம் தெருவில் திரண்டிருந்த மக்கள் செய்தி கேட்டவுடன் அவர்களுடன் சேர்ந்து சாலைமறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருவை நோக்கி ஓடியுள்ளனர்.

அங்கே இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்தும் ஒரு ஜே.சி.பி வாகனமும் அடித்து நொறுக்கப்படுகிறது. காவல்துறை வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் அங்கிருந்த மக்கள் பேருந்து மற்றும் ஜே.சி.பி இயந்திரம் தாக்கப்பட்டதை மட்டுமே கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதலை ஒட்டி இனியன், தேவா, மணிகண்டன், கார்த்தி, முருகேசன் எனும் ஐவர் மீதும், மற்றும் பெண்கள் உடபடப் பலர் எனவும் குறிப்பிட்டு தலைஞாயிறு காவல் நிலையத்தில் அன்றே (நவ 18) இ.த.ச 294பி, 323, 324, 341,307 மற்றும் பொதுச் சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பது (PPD 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று (எண் 135/18) பதியப்பட்டது. இவர்களில் கார்த்திக்கும் தேவாவும் முன் பிணை பெற்று தலைஞாயிறு காவல் நிலையத்தில் தினம் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தனர். நான்காவது நாளாக (டிச 12) அவர்கள் கையெழுத்துப் போடச் சென்ற போது அவர்கள் மீது வேறொரு வழக்கைப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

டிசம்பர் 7:

இரவு 2 மணி. தலைஞாயிறைச் சேர்ந்த திருமாலம் காமராஜர் வீதி, காந்தி வீதி, சந்தானம் தெரு ஆகியவற்றில் திடீரென போலீஸ் படை நுழைந்து கதவை இடித்துத் திறக்கச் சொல்லி பெண்களை அவதூறாகப் பேசி, ஆண்களை இழுத்துச் சென்றுள்ளனர். காலை நாலரை மணிக்குள் மொத்தம் 33 பேர்கள் அன்று அவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தானம் தெருவில் 21 பேர். சிந்தாமணியில் 3, கேசவனோடையில் 2, காமராஜர் வீதியில் 4, லிங்கத்தடியில் 3 பேர் அன்று கைது செய்யப்பட்டனர். இதில் காமராஜர் வீதியில் கைது செய்யப்பட்ட 4 பேர்கள் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள். மற்ற அவ்வளவு பேரும் பட்டியல் சாதியினர்.

நவம்பர் 18 சம்பவத்தின்போது கீழ்க்கண்ட வாகனங்கள் உடைக்கப்பட்டதாக இந்த வழக்குகளில் கூறப்படுகின்றன: VIP வாகனம் எண் TN51 / G 0700; அரசுப் பேருந்து எண் TN68 / N 0816; கண்காணிப்பாளர் (SP) வாகனம் எண் TN51 / G 493; பார்த்தசாரதி என்பவருக்குச் சொந்தமான JCP எண் TN 51 / AH 5562.

9 காவலர்கள் தாக்கப்பட்டதாகவும் இளவரசன், அருண்குமார் என்கிற இரண்டு காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டன. அவை:

குற்ற எண்: 104/2018: இதச143,147, 148, 332,341, 353 மற்றும் 3(1) of PPDL Act Dt 22-11-2018,

குற்ற எண்: 135/18 இனியவன், தேவராஜன், கார்திக் மணிகண்டன், முருகேசன் மற்றும் பல ஆண்கள் பெண்கள் உட்பட இ.த.ச 147, 148, 294(b) 323,324,341,307 மற்றும் 3(1) of PPDL Act Dt 18-11-2018.

குற்ற எண் 138/2018 இதச 143,341,353, Dt 18-11-2018

குற்ற எண்: 144/18 இதச 143,341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 101/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 108/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353.

இந்த அறிக்கை எழுதப்பட்டபின் இன்று காலை 4 மணி அளவில் பிரிஞ்சிமூலை கீழத்தெருவில் உள்ள 36 தேவேந்திர குல வேளாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ், காளிதாஸ், நாகராஜ், முத்து, வினோத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தி சற்று முன் கிடைத்தது. இதில் முதலிருவரும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள். அடுத்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சொல்லியவை:

அப்பகுதிகளில் நிரந்தரமாகக் காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எந்த நேரத்திலும் வீடு புகுந்து தாம் கைது செய்யப்படலாம் என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆங்காங்கு காவல்துறையினர் உட்கார்ந்திருப்பதால் பெண்கள் கொல்லைக்குப் போகக் கூட முடியவில்லை என்றார் சேரான்குளம் பக்கிரிசாமி.

தமது அரசுப்பணியைத் துறந்து மக்கள் பணி செய்துவரும் சோம இளங்கோ சொல்லும்போது, “நவம்பர் 18 அன்று சிந்தாமணியில் சாலை ஓரமாக நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை திடீரென போலீஸ் வண்டிகளிருந்து இறங்கிய காவலர்கள் கண்மண் தெரியாமல் அடித்தனர். பெண்கள், குழந்தைகள் எல்லாம் சிதறி ஓடினாங்க. அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அறிவழகன் வந்து வல்லபதாஸ் மகன் கார்த்தி, முருகதாஸ் மகன் தேவா இரண்டு பேர் மேலேயும் கேஸ் இருக்கு. அவங்களைக் கொடுங்க கைது பண்ணனும் என்றார். நீங்க அவங்களை அடிச்சு சித்திரவதை பண்ணுவீங்க என்றோம். அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டோம் என்றார். நாளைக்கு ஒப்படைக்கிறோம்னு சொன்னோம். அவர் போயிட்டார். ஆனா நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டு அந்தப் பையங்க அடுத்த நாள் தலைமறைவாயிட்டாங்க. நவம்பர் 18 தொடர்பா போடப்பட்ட எல்லா FIR லும் மற்றும் பெண்கள் உட்படப் பலர்னு போட்டு மறுபடி மறுபடி அதே குற்றத்துல வேறு சிலரையும் சேக்குறாங்க, அதனால கிட்டத் தட்ட இன்னைக்கு 50 பேருக்கும் மேல பயந்துகிட்டு எங்கெங்கோ தலைமறைவா இருக்காங்க..” என்றார்.

சந்தானம் தெரு பள்ளிக்கூடத்தில் ரேஷன் அரிசி வாங்கி அங்கே தினம் அங்குள்ல 654 பேருக்கு சோறு சமைக்கப்படுகிறது. அங்கிருந்த பெண்கள் சொன்னது: “ஆறாந்தேதி (டிச 6) நடு ராத்திரியில வந்து கதவை உடைச்சுத் திறந்தாங்க. அசிங்கம் அசிங்கமா பேசுனாங்க. எங்க லைன்ல இருக்கிற எல்லா வீட்டுக் கதவுகளும் உடைச்சுட்டாங்க. ஆம்பிளைங்களைப் புடிச்சு போலீஸ் வண்டியில ஏத்தினாங்க. வீட்டுல வச்சிருந்த பொருள்களை எல்லாம் சேதப் படுத்துனாங்க. வாங்கி வச்சிருந்த ரேஷன் அரிசியில தண்ணியை ஊத்துனாங்க. மூணு மோட்டார் சைக்கிளை உடைச்சுப் போட்டுட்டாங்க. இப்ப எங்களுக்கு ராத்திரியில தூக்கமே இல்லை. அதோ அந்தக் கோயில்லதான் ராத்திரில படுத்துக்குறோம். ஆம்புளைப் புள்ளைங்க எல்லாம் புயல் அடிச்சப்போ எவ்வளவு உதவி பண்ணாங்க. இன்னிக்கு அவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னே தெரியல” என்றார்கள்.

பேரூராட்சித் தலைவராக இருந்தவர் ராஜேந்திரன். அவரது குடிசையைப் பார்த்தாலே அவர் எத்தனை நேர்மையானவர் என்பது விளங்குகிறது. இன்று அவர் மட்டுமல்ல அவரது மூத்த மகன் மணிகண்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு இளைய மகன் இனியவன் Accused No 1 ஆக இன்று தேடப் படுபவர். நாங்கள் பேசிய பலரும் இனியன் கைது செய்யப்பட்டால் என்கவுன்டர் பண்ணிக் கொன்று விடலாம் எனத் தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டனர். ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமியை நாங்கள் அவரது குடிசை வீட்டில் சந்தித்தோம். ராஜேந்திரன் தீவிர சர்க்கரை நோய் உடையவராம். காலில் புண்ணுடன் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்ற போது இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்யப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட வர்களில் அவரும் இருந்தார். நீதிபதி எங்கோ வெளியில் சென்றிருந்ததால் காலை முதல் அவர்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்திலேயே உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தனர். “என் புருஷனும் மூத்த மகனும் ஜெயில்ல இருக்கிறாங்க இன்னோரு மகனைத் தேடுறாங்க. அவன் என்ன தப்பு பண்ணிட்டான். அவன் பேசுனது வீடியோவில் இருக்கு பாருங்க. அவன் நியாயத்தைத் தானே பேசி இருக்கான். இப்பிடி ரெண்டு ஆம்பிளைங்க ஜெயில்ல. இன்னொரு மகன் எங்கேன்னு தெரியல. நானும் எம் மகளும் என்ன செய்யிறது?” என்று கண்கலங்கினார்.

ஆண்கள் கைது செய்து கொண்டு செல்லப்படும்போது, “இன்னிக்கு தடிப் பயல்களைக் கொண்டு போறோம். நாளக்கி சிறுக்கிகளை தூக்குவோம்” எனச் சொல்லி அச்சுறுத்திச் சென்றதையும் பலரும் குறிப்பிட்டனர்.

இரண்டு நாட்கள் முன்னர் (டிச 12) அமைச்சர் ஓ.எஸ். மணியனைச் சந்தித்தபோது அவர் கூறியதாக சந்தானம் தெருவைச் சேர்ந்த வீரசேகர் சொன்னது: “நேற்று ஒரு நூறு பேர் போயி அமைச்சரைச் சந்தித்தோம். மக்கள் படுற கஷ்டத்தை எல்லாம் சொன்னோம். அப்படியா இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது என்றார் அமைச்சர். கோவிலில்தான் பெண்கள் தங்கி இருக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது அவருக்கு ஆச்சரியமா இருந்தது. இனிமே உங்க வீடுங்களுக்கு போலீஸ் வரமாட்டாங்கன்னு சொல்லி எங்க முன்னாடியே எஸ்.பிக்கு போன் பண்னி சொன்னாரு. இனிமே யாரையும் கைது பண்ன மாட்டாங்கன்னாரு. கூடுதலா யார் மேலயும் குற்றப்பிரிவுகளையும் இனி சேக்கமாட்டாங்கன்னும் சொன்னாரு” என்றார்.

இது குறித்து நான் சமூகச் செயல்பாட்டாளர் சோமு இளங்கோ அவர்களிடம் கேட்டபோது அவரும், “அமைச்சர் அன்று அப்படிச் சொன்னது உண்மைஜான். நானும் அன்று அங்கிருந்தேன்” என்றார்.

ஊர்மக்கள் சார்பாக எஸ்.பியைச் சென்று பார்ர்த்தபோது இனி இரவில் வந்து பெண்களை எல்லாம் கைது செய்ய மாட்டோம் எனவும் வழக்கில் உள்ள 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் 3 அரசு ஊழியர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் அவர் கூறியதாக அவர்கள் கூறினர்.

காவல்துறையின் கருத்து:

தலைஞாயிறு காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சுபாஷ் சந்திர போசை வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தித்தோம். கை நிறைய இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களுடன் அவர் காட்சியளித்தார். இப்படிப் பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது அப்படி எதுவும் தாங்கள் செய்யவில்லை என்றார். கோப்பிலிருந்து கொஞ்சம் புகைப்படங்களை எடுத்து எங்களிடம் தந்தார். “இதெல்லாம் மக்கள் செய்த வன்முறைகளுக்கான ஆதாரங்கள். கிடைக்கக் கூடிய படங்கள் எல்லாவற்றையும் நாங்கள் ஒன்றுக்குப் பத்து முறை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே கைது செய்கிறோம் என்று சொன்னார். எஸ்.பியே நேரடியாக இவ்வழக்கைக் கையாள்வதாகவும், எல்லாவற்றையும் உறுதி செய்து கொண்ட பின்பே கைதுகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறி அகன்றார்.

எமது பார்வைகள்

 1. வீடு வாசல் இழந்த மக்கள் ஈரத் துணிகளுடன் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது எந்தக் காரணமும் இல்லாமல் காவல்துறையினர் அவர்களைத் தாக்கியதிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்குகிறது. அப்போது நிவாரணங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புயல் தாக்கிய அத்தனை ஊர்களிலும் சாலை மறியல்கள் நடந்து கொண்டிருந்தன. எங்கும் அப்படி மறியல் செய்தவர்கள் போலீசால் தாக்கப்படவோ கைது செய்யப்படவோ இல்லை. அமைச்சர் தாக்கப்பட்ட இடத்தில் கூட பொலீஸ் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிந்தாமணியில் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டதற்கு அவர்கள் ஏழை எளிய தலித் மக்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அப்படியான தாக்குதல் சம்பவம் அன்று நடக்கவில்லை என்றால் இவ்வளவும் ஏற்பட்டிருக்காது.
 2. நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத் தெருவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்துள்ளனர். சிலர் 5000 பேர்கள் இருக்கும் எனவும் கூறினர். அன்று சில காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது உண்மை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளவர்கள்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் காமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தப் புயலில் அவை செயல்பட்டிருக்கப் போவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமூக ஊடகங்களில் கிடைத்த ஆதாரங்கள் போதாது. தவிரவும் மிகவும் உள் நோக்கத்துடன் சிலர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதியானது. இனியவன் என்கிற இன்று தேடப்படும் இளைஞரின் குடும்பத்தில் உள்ள மூன்று ஆடவர்களும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவரும் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ராஜேந்திரன் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் இன்று வன்முறைகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ராஜேந்திரந்தி.மு.க சார்பில் நின்று பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர். அவருக்கும் அமைச்சர் ஓ.எஸ் மணியனுக்கும் இடையில் அரசியல் பகை இருந்தது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர். கஜா புயலால் இப்பகுதியில் பெரிய சேதம் ஏதும் இல்லை என அமைச்சர் மணியன் கூறியதாகப் பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் கண்டித்து இனியவன் பேசிய வீடியோ நாக்கீரன் தளத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் ‘வைரல்’ ஆகப் பரவியுள்ளது. இன்று அவர் என்கவுன்டர் செய்யபடலாம் என்கிற அள்விற்கு மக்கள் மத்தியில் அச்சம் உள்ளாகியுள்ள நிலை மிகவும் வருந்தத் தக்கது.
 3. அமைச்சருக்கும் இன்று தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடும் அதன் காரணமான புகைச்சலும் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இப்பகுதி தலித் மக்கள் அதிக அளவில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பூதான இயக்கத்தால் பயன் பெற்றவர்கள். நல்ல விளைச்சலுள்ள இப்பகுதியின் ஒரே பிரச்சினை கடல் நீர் (back waters) விவசாய நிலங்களில் உட் புகுவதுதான். காலம் காலமாக அவர்களே மண்ணை வெட்டிப் போட்டு தடுப்புகளைச் செய்துதான் வாழ்ந்து வந்துள்ளனர். விவசாயத்தைப் பாதிக்காத வண்ணம் நிரந்தரமான தடுப்பணைகளை இப் பகுதியில் கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி Climate Adaptation in Vennar Subdivision in Cauvery Delta Project எனும் திட்டத்தின் கீழ் ரூ1560 கோடி நிதி உதவி வாக்களித்து அதில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு வேலை தொடங்கும் போதுதான் ஊர் மக்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் பிரச்சினை தொடங்கியது. அரிச்சந்திரா நதியை ஒட்டி வேதாரண்யம் – நாகை சாலையை நோக்கி தலைஞாயிறிலிருந்து செல்லும் சாலையில் வேதாரண்யம் கால்வாய் சந்திக்கும் இடத்தைத் தாண்டி கிழக்கில் சற்றுத் தூரம் தள்ளி இந்த இயக்கு அணையைக் கட்ட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது தானாகவே நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தும் அமைப்பைத்தான் இயக்கு அணை என்கின்றனர். உப்பின் அளவு குறையும்போது அது தானாகவே நீரோட்டத்தை அனுமதிக்கும். அப்படி மக்கள் விருப்பத்தை ஏற்று அமைத்து இருந்தால் கடல் நீர் ஏறும் காலத்தில் அது இப்பகுதி விவசாய நிலங்களைப் பாதிக்காமல் இயக்கு அணையால் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் விருப்பத்திற்கு நேர் எதிராக அப்பகுதியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள முதலியப்பன் கண்டியில் இயக்கு அணை இன்று கட்டப்பட்டுள்ளது இதனால் இப்போது கடல் நீர் ஏறும் காலத்தில் அது தடுப்பு அணைக்கு முன்னதாகவே உட்புகுந்து விடுகிறது. அதனால் வேதாரண்யம் கால்வாய்க்கு மேற்கே உள்ள விவசாய நிலங்கள் பாழாகிறது. முன்னைப்போல எளிதாக அதைத் தடுக்கவும் முடியவதில்லை. இது பெரிய அளவில் இப்பகுதி விவசாயத்தைப் பாதித்துள்ளது. இதற்குக் காரணம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்தான் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய நிலங்கள் அழிந்து இப்போது இப்பகுதி இறால் பண்ணைகளாக மாறியுள்ளன. இறால் பண்ணைகளுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும் என்பதால் அமைச்சர் இப்படி இயக்கு அணையை மேற்கு நோக்கித் தள்ளி அமைத்துவிடார் என நாங்கள் சந்தித்த இப் பகுதி மக்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் உரிய முறையில் விதிப்படி கருத்துக் கணிப்பு நடத்தவில்லை எனவும் கூறுகின்றனர். இத் திட்டத்திற்கான பயனீட்டாளர் குழுவின் துணைத் தலைவராக உள்ள சோமு இளங்கோ அவர்களும் இக்கருத்தை ஆமோதித்தார். இப்படியான பிரச்சினை அப்பகுதி மக்களுக்கும் அமைசருக்கும் இடையில் உள்ளதும் இன்றைய காவல்துறை அடக்குமுறைகளுக்கு ஒரு காரணம் என நாங்கள் சந்தித்த மக்கள் கூறினர்.
 4. புஷ்பவனம் என்னும் இடத்தில் மீன்வளக் கல்லூரி உருவாக்கும் திட்டத்தையும் அமைச்சர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது ஊருக்கு அருகில் உள்ள ஓரடியம்பலம் எனுமிடத்திற்கு அதை மாற்றியுள்ளதையும் நாங்கள் சந்தித்த மக்கள் கண்டித்தனர். புஷ்பவனத்தில் மீன் வளர்ப்பு மையம் அமைப்பது என்பதாக அத்திட்டம் இப்போது மாற்றப்பட்டுள்ளது.
 5. தாங்கள் சந்தித்தபோது அமைச்சர் மணியன் இனி யாரையும் கைது செய்ய மாட்டார்கள் எனவும், காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களை வழக்கிலிருந்து விலக்கிவிடுவதாகவும் வாக்களித்ததாக நேற்றுத்தான் சந்தானம் தெரு மக்கள் எங்களிடம் நம்பிக்கையோடு கூறினர். ஆனால் இன்று காலை நாலரை மணி அளவில் பிரிஞ்சி மூலை கீஅத் தெருவில் மகேஷ், காளிதாஸ், நாகராஜ் மற்றும் அவர் மகன் முத்ட்கு, வினோத்குமார் என்கிற ஐந்து பேர்கள் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் இருவரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கைகள்

 1. சென்ற நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்த சம்பவங்களுக்கு வித்திட்டது சிந்தாமணியில் அமைதியாகச் சாப்பிட்டுக் மொண்டிருந்த தலித் மக்களை எந்தக் காரணமும் இன்றி காவல்துறையினர் தாக்கிய நிகழ்ச்சிதான் என இக்குழு உறுதியாகக் கருதுகிறது. இது குறித்து விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
 2. காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டுள்ள பலரும் அந்த வன்முறைகளுக்குக் காரணம் எனக் கூறுவதற்கில்லை. பல கைதுகள் உள்நோக்கம் கொண்டவையாகவே உள்ளன. அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் கடுஞ் சட்டப் பிரிவுகளும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தில் மூவர் மீது இன்று வழக்குகள் போடப்பட்டுள்ளதும் இங்கே கவனத்துக்குரியதாக அமைகிறது. அமைச்சருக்கும் இம்மக்களுக்கும் இடையேயான கருத்து மாறுபாடுகள் இந்தக் கைதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் உண்மை உள்ளது என நாங்கள் கருதுகிறோம். இரவு நேரங்களில் வீடு புகுந்து மக்கள் தாக்கப்பட்டது என்பதெல்லாம் தமக்கு ஒன்றுமே தெரியாது என அமைச்சர் சொல்வதை ஏற்க இயலாது.
 3. வழக்கில் உள்ளவர்கள் முன் ஜாமீன் பெற்று வரும்போது அவர்கள் மீது இன்னொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்வது என்பதெல்லாம் காவல்துறையின் பழிவாங்கும் நோக்கத்தையே காட்டுகிறது. 18ந் தேதி போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் எனத் தேடப்பட்டவர்கள் ஐவரும் வந்து 22 அன்று இன்னொரு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எனச் சொல்லி இன்னொரு FIR பதிவு செய்வது என்பதெல்லாம் ஏற்கக் கூடிய ஒன்றல்ல. அப்படித் தேடப்படுபவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் அங்கேயே அவர்களைக் கைது செய்ய வேண்டியதுதானே என நீதிமன்றமும் காவல்துறையை கேட்காதது வருந்தத் தக்கது. கடும் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணங்களூம் ஏதுமின்றி துயரத்திற்காளான மக்கள் எக்காரணமும் இன்றி தாக்கப்பட்ட பின்னணியில் நடந்த சம்பவங்களை அரசு இத்தனை கடுமையாக எதிர்கொள்வதில் அடிப்படை நியாயங்கள் ஏதுமில்லை. புயலில் அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த எளிய மக்கள் மீது பழிவாங்கும் நோக்கில் மிகைப்படுத்தித் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
 4. ஊருக்குள் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும்.
 5. விவசாயத்தைப் பாதிக்கக் கூடாது என ஆசிய வங்கி உதவியுடன் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மூன்று இயக்கு அணைகளையும் மறு பரிசீலனை செய்ய வல்லுனர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் மறு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அந்த மூன்றில் பொருத்தம் இல்லாதவற்றை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். அதேபோல மீன்வளக் கல்லூரி இடம் மாற்றப்பட்டதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
 6. புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் உடனடியாக நிவாரணங்கள், இழப்பீடுகள் வழங்கும் பணிகள் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட வேண்டும்.

 

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20. செல்: +91 94441 20582

கஜா புயல் அழிவுகள் : ஒரு நேரடி கள ஆய்வு 

சென்ற நவ 14, 2018 அன்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் அழிவுகள் குறித்து டிச06,07 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் ‘மக்கள் களம்’ இதழுக்கு எழுதப்பட்ட கட்ட்

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டங்களில் பயிர்கள், மரங்கள் முதலியன பெரிய அளவில் அழிந்துள்ளன. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குடிசைகளும் ஓட்டு வீடுகளும் கிட்டத்தட்ட எல்லாமே அழிந்துள்ளன. கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே தப்பித்துள்ளன. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

1952 க்குப் பின் மிகப் பெரிய அழிவுகளைத் தமிழகத்தில் ஏற்படுத்திய புயல் இது எனக் கூறுகின்றனர். குறைந்த பட்சம் 45 பேர்கள் பலியாகி உள்ளனர் எனக் கூறப்படுகிறது. 65 பேர்கள் வரை இறந்துள்ளனர் என ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் புயல் அழிவு குறித்து மூன்று அம்சங்கள் இங்கே கவனத்துக்குரியன. 1.இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வது குறித்த நம் தயாரிப்பு நிலை. 2.இந்தப் புயலின் ஊடாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு. 3.விவசாயத் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு.

நேரடி கள ஆய்வு மற்றும் ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் ஊடாக இவை குறித்துச் சிலவற்றைக் காணலாம்.

பேரழிவு நிர்வாகம் மேம்படுத்தப்படல் ஒரு உடனடித் தேவை

இந்தியத் துணைக் கண்டம், குறிப்பாகத் தென்னகம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ள ஒரு நாடு இது. தமிழகத்தில் மட்டும் கடந்த அறுபதாண்டுகளில் 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய புயல்கள் தாக்கி உள்ளன. 2015 ல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழை வெள்ளம், இந்த ஆண்டு கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கு ஆகியன ஏற்படுத்திய வெள்ள அழிவுகள் கடந்த சில ஆண்டுகளில் நாம் எதிர்கொண்டவை.

ஆந்திரம், மே.வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகப் புயல் வெள்ள ஆபத்துகள் உள்ளவை எனவும், இதர பல மேற்குக் கடற்கரை மாநிலங்கள் அடுத்தகட்ட ஆபத்துகள் உள்ளவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றை எதிர் கொள்வதற்கான நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. ஒன்றை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இயற்கையுடன் நாம் கொண்டுள்ள முறையும் நீதியும் அற்ற உறவின் ஊடாக இனி புயல் வெள்ள ஆபத்துகள் என்பன ஏதோ நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக் கூடிய பேரழிவுகள் அல்ல. அவை எந்த நிமிடமும் நிகழலாம். ஒரே ஆண்டில் இருமுறை கூடவும் ஏற்படலாம். எனவே இது குறித்த விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் நமக்குத் தேவை. இப்படியான இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ளத்தக்க அகக் கட்டுமானங்கள், பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளில் குடியிருப்புகளைத் தவிர்த்தல், புயல் வெள்ளங்களைத் தாங்கக் கூடிய வீடமைப்புகளை உருவாக்குதல், புயல் எப்போது கரையைக் கடக்கும், அது எந்தத் திசையில் நகரும் என்பவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும் Tropical Cyclone Ensemble Forecast முதலான சாதனங்களையும் அமைப்புகளையும் கடலோரப் பகுதிகளில் அமைத்தல் முதலான தொலை நோக்கிலான திட்டங்கள் நமக்குத் தேவை.

182 பேரை, உரிய எச்சரிக்கை செய்யாததால் பலி கொடுத்த ஓகிப் புயல் அழிவின்போதே இந்த மூன்னூகிப்புக் கருவிகளின் தேவைகளை நாம் வற்புறுத்தினோம். ஆனால் அந்தத் திசையில் எந்த நகர்வும் அரசிடம் இல்லை. கஜா புயல் கிட்டத்தட்ட ஒருவாரம் போக்கு காட்டியது. நவ 14 அன்று தமிழகத்துக்கு பெரிய ஆபத்தில்லாமல் அது U திருப்பம் மேற்கொண்டு எங்கோ கரையைக் கடக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எப்படி நகரும் என ஊகிக்க வானிலை ஆய்வு மையங்களால் முடியவில்லை. உரிய கருவிகளும், பயிற்சியும் இன்மையுமே அடுத்த இரண்டு நாட்களில் (நவ 16) இந்த நான்கு கடலோர மாவட்டங்களில் இத்தகைய பேரழிவுக்குக் காரணமாயின.1G

பேரழிவு நிர்வாகம் என்பது இன்னும் துல்லியப்படுத்தப்படுதல் (professionalizing disaster management), தாக்குதல் சாத்தியம் மிக்க பகுதிகளில் குடிருப்புகளைத் தவிர்த்தல், குடிசைகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றுதல் முதலியன உடனடித் தேவை என்பன நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

அரசின் தோல்வி

அரசு இப்போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக ஒரு பேச்சு இங்குள்ளது. வை.கோ, ப.சிதம்பரம், கி.வீரமணி முதலான தலைவர்களும் பெரிதாக இதைப் பாராட்டி வேறு உள்ளானர். புயல் வரப் போகிறது என்கிற எச்சரிக்கையைச் செய்தது, சில தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றியது, முதலுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தால்தான் அரசு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எத்தனை அதிருப்தியுடன் உள்ளனர் என்பது விளங்கும். நான் சந்தித்த மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இதுவரை மக்களின் இழப்புகளை ஈடுக்கட்ட எதுவும் நடக்கவில்லை என்றனர். இரண்டு நாட்களாக நான் பலரையும் சந்தித்தேன். டிச 5 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 250 இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அதே நாளில் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை அறிக்கை இயக்கம் ஒன்றை நடத்தியது. நான் பேருந்தில் திருவாரூர் மாவட்டத்தில் பயணித்தபோது பல இடங்களில் சாலை மறியல்களும் நடந்து கொண்டிருந்தன.  முதலமைச்சர் அடையாளமாக வந்து தந்த அந்த 27 பொருள்கள் உள்ள மூட்டை என்பது அதற்குப் பின் யாருக்கும் தரப்படவில்லை. அமைச்சர்களுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் ஏற்பட்டபின் அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவதில்லை. என்னருகில் பேருந்தில் அமர்ந்திருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெரியவர், “இந்த ஊர்காரர்தான் அமைச்சர் காமராஜ், பக்கத்து ஊர்லதான் திருமணம் செய்துள்ளார். அவர் இந்தப் பக்கத்திலேயே காணாம். முதலமைச்சர் பழனிச்சாமியுடன் வந்த கார்களின் பெட்ரோல் செலவை மட்டும் மக்களுக்குக் கொடுத்திருந்தால் இரண்டு நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம்” என்றார்.

CPI கட்சியைச் சேர்ந்த தோழர் டி.வி.சந்திரராமன், CPM கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் தோழர் ரகுராமன், எனது மாணவரும் தற்போது வழ்க்குரைஞராகவும் பணி செய்யும் கவிஞர் தை.க, நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஆனந்தன், என்னுடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேரா. அருளானந்தசாமி மற்றும் அப்பகுதிகளில் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியவர்கள் சொன்னவையிலிருந்து நான் அறிந்து கொண்டது இதுதான். நகர்ப்புறங்களில் ஓரளவு மின்சார வசதிகள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் நகரை ஒட்டிய பகுதிகளிலும் அறுந்து தொங்கும் மின் கம்பிகள்  கூட இன்னும் நீக்கப்படவில்லை. ஓரிடத்தில் மின் கம்பிகளில் துணி காயப்போட்டிருந்தனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியும் மின் வசதி உட்புறப் பகுதிகளில் சரிசெய்யப்படவில்லை. முக்கிய சாலைகளில் இருந்த மரங்கள் நீக்கப்பட்டு பேருந்துப் போக்குவரத்துகள் சரி செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்களின் குடியிருப்புகள் சரி செய்யப்படாமலேயே திருப்பி அனுப்பப் பட்டுப் பள்ளிகள் டிசம்பர் 5 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன..

நான் சென்ற போது மடப்புரத்திற்கு அருகில் உள்ளே தள்ளியுள்ள ஒரு குடிசைப் பகுதியில் தனியாக வசிக்கக் கூடிய ஒரு பெரியவரின் குடிசையைச் சுற்றி தண்ணீர் தேங்கி, அவர் உள்ளே போக முடியாமல் வெளியே நின்று கொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி பெண்கள் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட ஒரு 50 குடும்பங்கள் மட்டும் அவர்களின் குடிசைப் பகுதி முற்றிலும் சீரழிந்துள்ளதால் பள்ளியை விட்டு அகல மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர்.

உதவித் தொகை எனவும் எதுவும் கொடுக்கப்படவில்லை. நூறுநாள் வேலைத் திட்டம் ஓரளவு செயல்படுகிறது. தோட்டங்களில் விழுந்த மரங்கள், மட்டைகள் முதலியவற்றை வெட்டி நீக்கும் பணிகளில் சிலருக்கு வருமானம் கிடைக்கிறது.

அரசு ஊழியர்கள் இழப்பீடுகளைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர். அவ்வளவுதான்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

நாகை, தஞ்சை, திருவாரூர் முதலியன பெரிய அளவில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலையே நம்பியவை. அதிலும் இந்த டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக் காவிரி நீர் இல்லாமலும், பருவ மழை பொய்த்தும் போனதால் நெற் சாகுபடி குறைந்து தென்னை, பலா, வாழை, நெல்லி. மா, புளி முதலான பழச் சாகுபடிகளுக்கு அப்பகுதி மாறியுள்ளது.

தற்போதைய அழிவில் நெற்பயிர்களின் சேதம் ஒப்பீட்டளவில் குறைவு. முற்றியிருந்த நெற்பயிர்கள்தான் அழிந்துள்ளன. இளம்பயிர்கள் ஓரளவு தப்பி விட்டன. சுமார் 30 சத நெற்பயிர்கள் அழிந்துள்ளன எனலாம். அவர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழு இழப்பிற்கும் உள்ள தொகையைக் கணக்கிட்டு இழப்பீடு அளிக்க வேண்டும்.

தென்னை மரங்கள்தான் அதிக அளவில் அழிந்துள்ளன. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள் ஓரளவு வீசும் காற்றுக்குத் தடையாக இருந்து அதன் வேகத்தைக் குறைக்கும். இங்கு அப்படியான தடைகள் இல்லாததால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வேரோடு சாய்தும் கிடக்கின்றன. விழாத மரங்களிலும் பலவற்றில் கொண்டை எனச் சொல்லப்படும் மேற் பகுதி திருகிச் சுருண்டுள்ளன. மதுக்கூருக்கு அருகில் உள்ள வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்ச்சி நிலையமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெர்சாகுபடியைப் பொருத்த மட்டில் இப்போது அழிவு ஏற்பட்டாலும் அடுத்த சில மாதங்களில் அடுத்த சாகுபடியைத் தொடங்கிவிட முடியும். ஆனால் வீழ்ந்த இந்தப் பழ மரங்களை மீண்டும் உருவாக்கி அது பயன்தரக் குறைந்தது ஏழெட்டு வருடங்கள் ஆகும். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் மரம் ஒன்றிற்கு ரூ 15,000 வரை இழப்பீடு கேட்கின்றனர். நால்வழிச்சாலை முதலானவற்றிற்காக மரங்கள் வெட்டப்பட்டபோது எந்த அளவு இழப்பீடு கொடுக்கப்பட்டதோ அந்த அளவு இப்போதும் கொடுக்கப்பட வேண்டும் என்றார் இன்னொரு விவசாயி. வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதும் விவசாயிகளுக்குப் பெரிய செலவு. அதற்கான இழப்பீடுகளும் உரிய அளவில் கணக்கிட்டுத் தரப்பட வேண்டும்.

வீழ்ந்த மரங்களைக் கணக்கெடுப்பதிலும் அரசு இப்போது எளிய மக்களுக்கு ஒரு துரோகம் செய்கிறது. 10 மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ள “தோப்பு”களுக்கு மட்டுமே இழப்பீடு தரப்படும் என அறிவித்துள்ளது. இது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார் CPM கட்சியைச் சேர்ந்த ரகுராமன். பத்து மரங்களுக்குக் கிழே இருந்தால் பதியவே வேண்டாம் எனவும், மக்கள் ரொம்பவும் வலியுறுத்தினால் சும்மா ஒரு பேப்பரில் எழுதிக் கிழித்தெறிந்துவிடுங்கள் எனவும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கணக்கெடுக்க வந்த அதிகாரி சொன்னதாகப் பேரா. அருளானந்தசாமி குறிப்பிட்டார்.

இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. வீட்டைச் சுற்றியுள்ள கொஞ்ச நிலத்தில் உள்ள இப்படியான மரங்களை வைத்தே பிழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை இது. சொல்லப் போனால் இவர்களுக்கான இழப்பீடு சற்றி அதிகமாகத் தர வேண்டும் என்பதே நியாயம்.

தவிரவும் புயல் வாய்ப்புகள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் எளிதில் கீழே விழாத உயரக் குறைவான தென்னைகளை அரசு பிற பகுதிகளிலிருந்து வரவழைத்து இவ்விவசாயிகளுக்கு இலவசமாகத் தர வேண்டும்.

புளிய மரத்திற்கு இழப்பீடு கிடையாது என அரசு கூறியுள்ளதும் கண்டிக்கத் தக்கது. அவற்றுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தற்போது இடதுசாரிக் கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளில் இதுவும் அடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளிகள் மற்றும் குடிசை வாழ் மக்கள்

கஜா புயல் அழிவுகள் குறித்து ஆங்கில, தமிழ் இதழ்கள் மற்றும் ஊடகங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளைச் செய்துள்ளன. தென்னை மற்றும் பழ விவசாயிகளின் இழப்புகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதியுள்ளன. இவற்றை வரவேற்கும் அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் குடிசை வாழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு இவற்றில் உரிய முக்கியத்துவம் அளிக்கப் படாததையும் இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம்.

பாதிக்கப்பட்டுள்ள இந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளிகள் என்போர் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. குடிசைவாழ் மக்களிலும் இவர்களே அதிகம். இவர்களில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தம் குடிசைகளைச் சிறு ஓட்டு வீடுகளாக மாற்றியுள்ளனர். அவையும் இன்று அழிந்துள்ளன.

கஜா புயலில்  குடிசை வீடுகள் புரட்டி எறியப்பட்டுள்ளன. ஓட்டுவீடுகளும், தகர மற்றும் பிளாஸ்டிக் ஷீட்கள் பொருத்தப்பட்ட கூரைகளும் பிய்த்து எறியப் பட்டுள்ளன. இவ்வாறு எறியப்பட்டவையும் அருகில் உள்ள கூரை வேய்ந்த குடிசைகள் மீது விழுந்து அவற்றையும் அழித்துள்ளன. இன்று இப்பகுதிகளுக்குச் சென்றீர்களானால் இந்தக் கூரை வீடுகளில் எஞ்சியவை தற்போது பல்வேறு அமைப்புகளாலும் கொடையாக அளிக்கப்பட்ட தார்பாலின்களைப் போத்திக் கொண்டு நீல, மஞ்சள் வடிவங்களில் காட்சியளிப்பதைக் காண முடியும். தாழ்வான பகுதிகளில்தான் இந்தக் குடிசைகள் பெரும்பாலும் உள்ளன. அங்கெல்லாம் தண்ணீர் புகுந்து சேராகக் குழப்பிக் கிடப்பதையும் காண முடிகிறது.

தற்போது அரசு கணக்கெடுக்கும்போது இப்படியான குடிசைகளில் இரண்டு சுவர்களும் வீழ்ந்திருந்தால்தான் இழப்பீடு தர முடியும் எனச் சொல்லியுள்ளதையும் சி.பி.எம் கட்சியின் ரகுராமன் குறிப்பிட்டார். இதையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

குடிசை மக்கள் உள்ளடங்கி இருந்ததனாலும், சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததாலும் சாத்தங்குடி, ஆழங்கால், வினோபாஜி காலனி முதலான பல ஊர்களை மூன்று நாட்கள் வரை யாரும் அணுக முடியவில்லை, அவர்களுக்கு எந்த உதவியும் போகவில்லை என்றார் கவிஞர் தை.க. அவர் தன் சொந்த முயற்சியில் கோவையில் உள்ள நண்பர்களைத் தொடர்பு கொண்டு கொன்சம் ரெடிமேட் ஆடைகள் முதலியவற்றைப் பெற்று சில குடிசைப் பகுதிகளுக்குச் சென்று உதவியுள்ளார். உதவிப் பொருட்களைக் கொண்டு வருபவர்களைச் சாலை ஓரங்களில் உள்ளவர்கள் வழி மறித்துப் பெற்றுக் கொண்டு உள்ளே தள்ளியுள்ளவர்களுக்கு உதவிகள் சென்றடையா வண்ணம் தடுப்பது என்பது இம்மாதிரி இயற்கைப் பேரழிவுகளில் எப்போதும் நடப்பதுதான். இதனால் பாதிக்கப்படுவதும் குடிசை வாழ் பழங்குடி மற்றும் தலித் மக்கள்தான். இப்போதும் பல இடங்களில் அப்படித்தான் நடந்துள்ளது.

அந்தந்த சாதி அமைப்புகள் அவரவர் சாதிக்கு மட்டும் அதிக விளம்பரம் இல்லாமல் உதவி செய்ததையும் ஒருவர் குறிப்பிட்டார்.

“தென்னை, பழ மரங்கள் ஆகியவற்றின் அழிவால் அந்த விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்தப் பண்ணைகளில் வேலை செய்த மரமேறித் தேங்காய் பறிப்பவர்கள், கீற்று முடைபவர்கள் முதலான தொழிலாளிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடு மாடுகள் தீவனங்கள் இல்லாமல் அலைகின்றன. முகாம்களில் இருந்தவர்கள் ஒரு வாரம் கழித்துக் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் போவதற்கு வீடுகள் இல்லை. குறைந்த பட்சம் பிளாஸ்டிக் படுதா முதலியவற்றையாவது கொடுத்தனுப்பி இருக்க வேண்டும். முகாமில் இருந்த வரைக்கும் அரிசி முதலியவற்றைக் கொடுத்தார்கள். கூட்டாஞ்சோறுபோல ஆக்கித் தின்றோம். இனி வேலையும் இல்லாமல், வீடும் இல்லாமல் இம்மக்கள் என்ன செய்வது?” என்றார் CPI கட்சியின் சந்திரராமன்.

“இன்று இப்பகுதிகளில் கீற்று கிடைக்கவில்லை. நூறு கீற்றின் விலை ஆயிரத்துப் பத்து ரூபாய். நாங்கள் கரூரிலிருந்து கீற்று வரவழைத்து இந்தக் குடிசைகளைக் கட்டிக் கொடுக்கிறோம்” என்றார் மொரார்ஜி தேசாய். இவர் ஒரு வக்கீல் குமாஸ்தா. சாதி மீறிய காதலர்கள் இவரைத்தான் நாடி வருவார்கள். இவர் உரிய சட்ட உதவிகளைச் செய்வார். இப்படியான உதவிகளைப் பெற்று திருமணம் செய்து கொண்டவர்களை அணுகி அவர்களது நன்கொடையில் பத்து குடிசைகளை இவர் புனரமைத்துக் கொடுத்துள்ளார். வேதனை என்னவெனில் அவரது எளிய சிறிய வீடும் முற்றாக அழிந்துள்ளது.

புயலடித்து இப்போது மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கட்டாயமாக மக்கள் முகாம்களிலிருந்து அனுப்பப் பட்டுள்ளனர். பெரியநாயகிபுரம் எனும் இடத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு தலித் குடியிருப்பு பற்றி எரிந்து சுமார் 50 வீடுகள் நாசமாயின. அங்குள்ளவர்கள் உதவியில் அவர்கள் தம் குடிசைகளைப் புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்று அவர்களின் அந்தக் குடிசைகளும் அழிந்துள்ளன. அவர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள்.

குடிசைகளுக்குத் திருப்பி அனுப்பபட்டவர்கள் ஏதோ சொந்த முயற்சியில் கொஞ்சம் தம் குடிசைகளைப் புனரமைத்துக் கொண்டு வாழ்வைத் தொடங்கியுள்ளனர். இப்போது இழப்பீடு கணக்கிடும் அரசு புயலுக்குப் பின் அந்த வீடு அழிந்திருந்த புகைப்படம் வேண்டும் எனக் கேட்கிறது. அவர்கள் என்ன செய்வார்கள்?

பேரிடர் அழிவுகள் எல்லோரையும் பாதிக்கிறது. மேலே உள்ளவர்களின் இழப்பே வெளியில் தெரிகிறது. கீழே இருப்பவர்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை யாரும் கவனிப்பதில்லை.

 

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:உண்மை அறியும் குழு அறிக்கை

NCHRO   National Confederation of Human Rights Organizations

Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal,New Delhi – 110014. Tel: 011-40391642 Mob: 94898 71185, 96 00 222 930,Email: nchromail@gmail.com, www.nchro.org. 

ஜூன் 5,2018;                                                                                                                                                                                           சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்புக்ளை ஏற்படுத்தி சுற்று வட்டார மக்களின் உயிருக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படுத்தி வருவதற்கு எதிராக அப்பகுதி மக்கள், அந்த ஆலையை மூடக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அந்த ஆலை இப்போது விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ஆலையை மூடுவதற்கான மக்கள் போராட்டம் தீவிரமானது. தற்போது தொடங்கிய போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி மே 22 அன்று மக்கள் ஊர்வலமாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக அறிவித்ததை ஒட்டி அரசு 144 தடை உத்தரவை இட்டது. தடையை மீறிச் சென்று முற்றுகையிட்டுக் கைதாவது என மக்கள் சென்ற போது அன்று முற்பகல் 11.30 மணி அளவில் காவல்துறை மக்களை நோக்கிச் சுட்டது. அன்று இரண்டு முறையும், அடுத்த நாள் ஒரு முறையும் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிப் பிரயோகத்தில் இப்போது 14 பேர்கள் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச்சுடு இது. இது குறித்த உண்மைகளை அறிய ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, இக்குழு சென்ற ஜூன் 27,28 தேதிகளில்தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள கிராமங்கள் சிலவற்றிற்கும் நேரில் சென்று பலரையும் சந்தித்தோம்..

குழுவில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

ரெனி அய்லின், தேசியச் செயலாளர், NCHRO, திருவனந்தபுரம்,

வழக்குரைஞர் ப.பா.மோகன், மாநிலத் தலைவர், NCHRO, கோவை,

வழக்குரைஞர். என்.எம்.ஷாஜஹான், மாநிலப் பொதுச் செயலாளர், NCHRO,

வழக்குரைஞர். சென்னியப்பன், மனிதம் சட்ட உரிமை,

இரா.பாபு, அம்பேத்கர் சட்ட ஆதாரமையம், கடலூர்,

வழக்குரைஞர். உதயணன். மதுரை,

அஹமது நவவி, NCHRO, திருநெல்வேலி,

வழ. அப்துல் காதர், NCHRO, மதுரை,

அப்துல் காதர், மனித உரிமை ஆர்வலர், தூத்துக்குடி,

வழக்குரைஞர். எம்.கே.நஜ்முதீன், NCHRO, மதுரை,

வழக்குரைஞர். பி.பொன்ராஜ், NCHRO, மதுரை.

இக்குழு சென்ற மே 27, 28 தேதிகளில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், துப்பாக்கிக் குண்டுக் காயம் மற்றும் காவல்துறையின் தடியடிப் பிரயோகத்தில் எலும்புகள் முறிந்து இன்னும் சிகிச்சையில் உள்ளோர், அன்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களில் சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டுள்ள வழக்குரைஞர்களில் சிலர், காயம் பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், துப்பாக்கிச் சூடு நடந்த அன்று களத்தில் இருந்த மக்களில் பலர், தொடர்ந்து அ.குமாரெட்டிபுரத்தில் ஆலையை மூடும்வரை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து கொண்டுள்ளவர்கள், தூத்துக்குடி வரலாற்றறிஞர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி முதலானோரைச் சந்தித்து உரையாடியது. மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்தூர்ராஜன் முதலானோரை தொலை பேசியிலும் தொடர்பு கொண்டது காவல்துறை கண்காணிபாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்றபோது சந்திப்பதாகச் சொல்லி எங்களைக் காத்திருக்கச் சொன்ன அவர் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் சந்திக்க மறுத்து விட்டார்.sterlite-sniper

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைப் போராட்டம்: இந்த அறிக்கை தூத்துக்குடியில் சென்ற மே 22, 23 தேதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த உண்மைகளையே பிரதானமாகத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. எனினும் சுருக்கமாக இந்த ஆலை மற்றும் இன்றைய போராட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம். 1994 முதல் இங்கு இயங்கும் இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை பன்னாட்டு கார்பொரேட் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட்டின் கிளை அமைப்புகளில் ஒன்று. பொதுவில் தாமிர உருக்காலைகள் கடும் சுற்றுச் சூழல் தீங்குகளை விளைவிப்பவை என்பதால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தாமிரத் தாது ஏராளமாக இருந்தபோதும் அங்கு உருக்காலைகளை அவை அனுமதிப்பதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அங்கிருந்துதான் கப்பல்களில் மூலத் தாதுக்கள் கொண்டுவரப்படுகின்றன. 1993 ல் இந்நிறுவனம் இந்த உருக்காலையை மகாராஷ்டிரத்தில் தொடங்க இருந்தபோது அங்குள்ள மக்கள் இந்தக் காரணங்களுக்காக அதை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அது தமிழகத்தை அப்[போது ஆண்ட ஜெயலலிதா அரசை அணுகி அனுமதி பெற்று தூத்துக்குடியில் இந்த ஆலையைத் தொடங்கியது. அதன் கழிவுகளின் ஊடாக வெளிப்படும் நச்சுக்கள் விளைவிக்கும் ஆபத்துகளை அனுபவரீதியாக உணர்ந்த மக்கள் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்க்கத் தொடங்கினர். ஆண்டொன்றுக்கு நாலு இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை விதிமுறைகளையும் ஒத்துக் கொண்ட கடப்பாடுகளையும் மீறியுள்ளதைப் பலமுறை பாசுமைத் தீர்ப்பாயம் முதலான அரசு நிறுவனங்களும், சுற்றுச் சூழல் அமைப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஏராளமான தகவல்கள் போராடும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த ஆலையின் உற்பத்தியை இரண்டுமடங்காக்கி விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள சூழலில் மூன்று மாதங்களுக்கு முன் தற்போதைய போராட்டம் தொடங்கியது

அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள எட்டு கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு ஈயத் தாது கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. ஆலையைச் சுற்றியுள்ள மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர்  கெட்டுள்ள உண்மையை தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ உடனடியாக வெளியிட்டு மக்களை எச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமே தாங்கள் இதைத் தெரிந்து கொண்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் எங்களிடம் தெரிவித்தார்.

இப்படியான சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளைச், சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமைப் பட்டி வளர்க்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகிறது. ஆனால் வெறும் 25 மீட்டர் பசுமைப் பட்டி அமைத்தால் போதும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சலுகை அளித்துள்ளது எனவும், அதையும் கூட அது சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும் நித்யானந்த் கூறினார். இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலை இப்போது தன் உற்பத்தியை ஆண்டுக்கு எட்டு இலட்சம் டன் தாமிரத் தகடுகள் என இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்கியது. இதை ஒட்டி சென்ற பிப்ரவரி யில் இந்த இறுதிக் கட்டமக்கள் போராட்டம் தொடங்கியது.

மாசுபட்ட காற்று மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் விளைவாகப் புற்று நோய் உட்படப் பல்வகை நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் நாங்கள் சென்றபோதும் ஆலையை மூடும்வரை போராடுவோம் எனத் தொடர்ந்து அ.குமரெட்டிபுரத்தில் மக்கள் அமர்வுப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்த எங்கள் குழு மே 28 அன்று காலை அங்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த பெண்களின் சார்பாகப் பேசிய வள்ளிமயில், தங்களில் பாதிப்பேருக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது எனவும், கருச்சிதைவு, குழந்தையின்மை ஆகியன அதிக அளவில் அப்பகுதியில் உள்ளதாகவும் கூறினார்.

“விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள் எல்லாருமே பாதிக்கப்படுறோம். இந்த நிலையில் இன்னும் பெருசா ஆலையை விரிவாக்கம் பண்ணுனா நாங்க என்ன ஆகுறது.? ஆலைப் பக்கம் போய் (விரிவாக்க) வேலை தொடங்கி இருக்குறதை எல்லாம் பாத்துட்டு ஆலையை விரிவாக்கக் கூடாதுன்னு முதல் கட்டமா எங்க ஊரில்தான் பிப்ரவரி 12 அன்னிக்குப் போராட்டத்தைத் தொடங்கினோம். அதுக்கு நல்ல ஆதரவு எல்லா ஊர்களிலும் இருக்கிறதப் பார்த்துட்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினோம். மூணு மாசம் முன்னாடி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமாத்தான் இது தொடங்குச்சு. இருட்டுன பிறகும் நாங்க எழுந்து போகாம அங்கேயே இருந்தோம். போலீஸ் கலையச் சொன்னபோதும் போகல. அடுத்த நாளMGR பூங்காவுல நுழைந்து உட்காரப் போனோம். நுழைய விடலை. அப்புறந்தான் இது நூறுநாள் போராட்டமா மாறுச்சு இங்கேயே உட்கார ஆரம்பிச்சோம்.. ஏபரல் 9 சாலை மறியல்; ஏப் 23 மாசு கட்டுப்பாட்டு வாரிய முற்றுகை, மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என அறிவிச்சோம். இதுக்கு நடுவுல பத்து தடவை கலெக்டரைப் பார்க்கப் போனோம். அவர் பார்க்க மறுத்துட்டாரு.”

தேதிவாரியாக அந்தப் போராட்ட வரலாற்றை அம்மக்கள் நெஞ்சில் ஏந்தியுள்ளனர். தங்கள் கண்முன் ஸ்டெர்லைட் நிர்வாகம் பெரிய ‘போர்’  கிணறுகளைப் போடுவதைப் பார்த்த அம்மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாயினர். ஏற்கனவே நிலத்தடி நீர் வற்றியுள்ள சூழலில் இந்தப் புத்திய விரிவாக்க முயற்சி முற்றிலுமாக நிலத்தடி நீர் வற்றுவதற்குக் காரணமாகும் என அஞ்சினர். பெரிது பெரிதாக வந்திறங்கும் கருவிகள் அவர்களின் அச்சத்தை அதிகமாக்கிய பின்னணியில் தான் பிப்ரவரி 12 அன்று  மிகவும் தன்னிச்சையாக அந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.. குமரெட்டியபுர மக்களின் இந்தப் போராட்டத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருகியது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி உட்படப் பல இடங்களிலும் அவ்வப்போது ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு இருந்ததா என நாங்கள் கேட்டபோது, “இது மக்கள் போராட்டம் சார். எந்த இயக்கத்தையும் நாங்க வழிகாட்ட அழைக்கல. பாதிக்கப்பட்டிருக்குற எல்லா ஊர் மக்களும் தானா ஒண்ணு திரண்டாங்க. அரசியல்வாதிகள்.உள்ளே நுழைஞ்சுடக் கூடாதுங்குறதுல நாங்க உறுதியா இருந்தோம்” என்றார் அங்கிருந்த ஒரு இளைஞர். முற்றுகைப் போராட்டத்துக்கு மே 22 காலையில் அவ்வூர் மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது வழி மறித்து அடித்து வேன்களில் ஏற்றப்பட்டனர். அப்போது கடுமையாக அடிபட்டவர் அவர். தன் செல்போனில் எல்லா விவரங்களையும், அவர்கள் கொடுத்த மனுக்களையும் பதிவு செய்து வைத்துள்ளார் அவர்.

22 ஆண்டுகளாகப் பல்வேறு மட்டங்களில் இந்தப் போராட்டம் நடந்தபோதும் வை.கோ போன்ற அரசியல்வாதிகள் ஆதவளித்தபோதும் இப்போதைய இந்த நூறுநாள் போராட்டம் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகை என்பது கிராம மக்களே இணைந்து “ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” என்கிற பெயரில் எந்தக் கட்சி அல்லது இயக்கத்தையும் சாராமல் நடத்திய போராட்டம் இது.

இப்படித் தொடங்கிய போராட்டத்தின் ஊடாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் உருவாயின.

போராட்டம் இப்படித் தீவிரமானதை ஒட்டி சென்ற ஏப்ரல் 9 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட ஆணையிட்டது. எனினும் வழக்கமான சீரமைப்புகளுக்காகவே ஆலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் மீண்டும் அனுமதி பெற்றுத் தாங்கள் செயல்படுவோம் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்லி வந்தது. இவ்வாறு இந்த ஆலை மூடப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 2013 மார்ச் 23ல்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரிலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போதைய துப்பாக்கிச் சூட்டை ஒட்டிக். கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டது. கடந்த 28 அன்று தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து ஆலை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆலை பூட்டப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலை மீண்டும் இயங்கும் என்கிற பொருளிலும் வேதாந்தா நிறுவனம் இப்போது பேசி வருகிறது.

சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்டெர்லைட் நிறுவனம் ICICI வங்கிக் காசோலையின் மூலம் பாஜக விற்கு 15 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதைப் பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளதும் (ஜூ.வி 36: 43) நினைவுக்குரியது. பா.ஜ.க. காங்கிரஸ் முதலான அரசியல் கட்சிகளுக்கு அது தாராளமாக நிதி அளிப்பதற்கும் அது தயங்குவதில்லை.

மே 22,23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகள்: துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்நாள்  மே 21 அன்று மாவட்ட நிர்வாகம் அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் மக்கள் அறிவித்துள்ளபடி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தக் கூடாது எனவும், பதிலாக எஸ்,ஏ.வி பள்ளி வளாகத்தில் கூடலாம் எனவும் மாவட்ட நிரவாகம் தரப்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தைக் காட்டிலும் மிகவும் சிறிய அந்த வளாகத்தில் ஏராளமான மக்கள் எப்படிக் கூட முடியும் என்பது குறித்து நிர்வாகம் சிந்திக்கவில்லை. அதன்  நோக்கமெல்லாம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து ஒரு அமர்வுப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதாகவே இருந்துள்ளது. இப்படியான ஒரு முடிவு திணிக்கப்பட்ட  போதும் அது முறையாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இரவு எட்டு மணிவாக்கில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் உரிய முறையில் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அன்று  (மே 21) நடந்த போராட்டக் குழு கூட்டத்தில் 144 தடையை மீறி ஊர்வலம் செல்வது எனவும், காவல்துறை மறித்தால் கைதாவது எனவும் போராட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி சார்பில் ஐ..ஜி. மகேஸ்வரன் இப்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மே 22 போராட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பில் பேசியபோது அமைதியான முறையில் போராட அவர்கள் சம்மதித்ததாகக் கூறுவது (தினத்தந்தி, சென்னை, ஜூன் 3) குறிப்பிடத் தக்கது. அப்படி மக்களக்சொல்லியும் 144 உத்தரவு தளர்த்தப்படவில்லை. பெரிய அளவில் காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று காலை மக்கள் குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். நகரத்தில் கூடிய மக்கள் பனிமயமாதா கோவில் அருகில் உள்ள வெளியில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மடத்தூர் கிராமத்தில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.

நகரத்துக்குள்ளிருந்து வந்தவர்கள் ஆங்காங்கு போடப்பட்டிருந்த தடுப்பரண்களைத் தாண்டி வந்து கொண்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னாக சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ‘VVD சிக்னல்’ அருகே மக்கள் வந்தபோது அங்கே ஒரு மாட்டின் வாலை முறுக்கி வெறியேற்றி விரட்டிக் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்யப்பட்டதைப் பலரும் எங்களிடம் கூறினர். அப்படியும் கூட்டம் கலையாமலும், தடுத்த காவல்துறையினரைப் பொருட்படுத்தாமலும் முன்னேறியபோது காவல்துறை பின்வாங்கி அவர்களை முன்னேற அனுமதித்தது.

மக்கள் மூணாம் மைல் பாலத்தில் இருந்த தடுப்பு அரண்களளைத் தாண்டி முன் செல்ல செல்ல முற்பட்டபோது காவல் படையினர் பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் பார்க்காமல் மார்பில் கை வைத்துத் தள்ளினர்.     மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.காவல்துறை தாக்கத் தொடங்கியது. இளையோர், முதியோர் என்றெல்லாம் பார்க்காமல் மண்டை ஓடு, கை கால்கள் உடையும் வகையில் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. தடியடியோடு இப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. மக்கள் சிதறி ஓடிய போதும் எப்படியும் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து உட்கார்ந்து விடுவது என ஒரு பகுதியினர் முன்னேறியபோது போலீசார் மீண்டும் பின்வாங்கினர், மக்கள் முன்னேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை எட்டியபோது எந்த எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அப்போது காலை மணி 11.30 இருக்கும்.

இதை மக்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் பல திசைகளிலும் ஓடத் தொடங்கினர். போலீசார் துரத்தி வந்து சுட்டனர். வழக்கமான சீருடையில் இல்லாத, மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த படையினர் சுட்டவர்களில் இருந்தனர். இவர்கள் எதிரிகளைக் குறி பார்த்துச் சுடுவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். மிக நவீனமான கொலை ஆயுதமான ஸ்னிப்பர் துப்பாக்கிகள் அவர்கள் கைகளில் இருந்தன கலைந்து சிதறி ஓடிய மக்களைக் கீழே தள்ளி ஏறி மிதித்து லத்திகளாலும் அடித்துக் கைகால்களை உடைத்தனர்.  .

மக்கள் பயந்தோடி வந்து தங்கள் வீடுக்ளை அடைந்தபின்னும் காவல்துறையினர் ஆயுதங்களுடன் மில்லர்புரம், திரேஸ்புரம் முதலான பகுதிகளில் தொடர்ந்து வந்து சுட்டனர், ஆங்காங்கு நின்று கொண்டு நடந்த கொடுமைகளைப் பற்றிப் பேசிக் கொடிருந்த இளைஞர்களை எல்லாம் அடித்து வேன்களில் ஏற்றி மிதித்துத் துவைத்தனர்., சிறுவர்களாக இருந்தபோதும் கடுமையாக அடிக்கப்பட்டனர், மில்லர்புரத்தில் இருவர் சுடப்பட்டுக் கிழே விழுந்தனர். திரேஸ்புரத்தில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாதபோதும்  . அங்கு இளைஞர்களைக் குறிவைத்துத் தேடி வந்து கண்ணில் பட்ட இளைஞர்களை எல்லாம் அடித்துக் கைது செய்ததோடு எந்தத் தேவையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்ற ஜான்சி (34) எனும் மீனவப் பெண் தலையில் குண்டடிபட்டுச் செத்து வீழ்ந்தார். அவர் போராட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர் என்பது குறிப்பிடத் தக்கது

தொடர்ந்து கடுமையான தேடுதல் வேட்டையும் கைதுகளும் தொடங்கின. பிடிபடாமல் தவிர்க்க ஆண்கள் படகுகளில் ஏறிச் சென்று இரவில் கடலில் தங்கும் நிலை அடுத்த மூன்று நாட்கள் வரை இருந்தது. நள்ளிரவில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்கள், கைதுகள் நடந்தன. பூட்டியிருந்த கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பயந்து ஒளிந்து கொண்டிருந்த இளஞர்கள் அடித்துக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுடப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வேன்களில் ஏற்றிக் கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரண்டாவது நாள் அண்ணா நகரில் திரண்டிருந்த மக்கள் திரளைக் கலையச் சொல்லிச் சுட்ட போது 22 வயது காளியப்பன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார், ஆவரது இறந்த உடலை லத்தியால் அடித்தும் மிதித்தும் “நடிக்கிறியா?” எனக் கேட்டுக் காவலர்கள் பகடி செய்தது பெரிய அளவில் ஊடகங்களில் செய்தியானது.

சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து வந்து மட்டூரில் திரண்டு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற மக்களை வழியிலேயே ஆயுதப் படையினர் வந்து அவர்களை அடித்து வேன்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து ஏற்ற முயற்சித்தபோது தாங்கள் மறுத்து ஒரே வேனில்தான் ஏறுவோம் என ஏறிச் சென்றதாக அ.குமரெட்டியபுர இளைஞர் ஒருவர் கூறினார். ரயில்வே கேட்டைத் தாண்டும்போது வாகனத்தின் வேகம் குறைந்தபோது குதித்து மண்டை அடிபட்ட கருப்பசாமி என்பவரையும் பார்த்தோம்.

மே 25 வரை இப்படியான கொடூரமான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. நாங்கள் வந்த பின்னும் ஆங்காங்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வந்தன.

குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்: நூறுநாள் போராட்டத்தில் முன்னணியில் இருந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் கே. சந்தோஷ்ராஜ் பேரணியில் சக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தபோது தலை உடைக்கப்பட்டு இன்னும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளார். புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் குறிவைத்துச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் தொடர்ந்து போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன். தமிழரசனின் கொலை உறுதியாகக் குறிவைத்துச் செய்யப்பட்டதாகவே கருதப் படுகிறது.

தேடி வந்து தாக்குதல்: திரேஸ்புரம் மீனவர்கள் குறிவைத்துத் தக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற முதல் கட்டத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் அன்று மாலை 3 மணி வாக்கில் திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அப்படியானதுதான்.. முதல் கட்டத் துப்பாக்கிச் சூடு நடந்தபின் தப்பித்தோடித் தங்கள் பகுதியான திரேஸ்புரத்தில் வந்து துப்பாக்கிச் சூட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது முற்றிலும் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன. போராட்டத்தில் தீவிரமாக இருந்த இப்பகுதியில் சிலரையாவது கொல்ல வேண்டும் என்றே வந்து  கொன்றிருக்கிறார்கள்.. கல்லெறிந்தார்கள், தீ வைத்தார்கள் எனவே சுட்டோம் என்றெல்லாமும் கூடக் காரணம் கற்பிக்க இயலாத தாக்குதல்கள் இவை. மே 22 காலை முற்றுகைக்குக் கூட சென்றிராத ஜான்சி (46) அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். காலையில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்துவிட்டுத் திரும்பி வந்து அங்கு நடந்தவற்றை அங்குள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருந்த மீனவர் செல்வம் இடுப்பின் வலதுபுறம் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் உள்ளார்.

வேலைக்குச் சென்றிருந்தவர்கள் சுட்டுக் கொலை : மே 22 செவ்வாய்க்கிழமை என்பது ஒரு வேலை நாள். துப்பாக்கிச் சூடு நடந்தது பலரும் வேலைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில். அதையும் சுட்டவர்களும் அதற்கு ஆணையிட்டவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகினர். பாலிடெக்னிப் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரின்ஸ்டன் (22) த/பெ கிளாட்வின் இப்போது இப்படித்தான் துப்பாக்கிச் சூட்டில் தன் வலது காலை இழந்துள்ளார். தினம் மில்லர்புரத்திலிருந்த தன் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் தன் மோட்டார் சக்கிளை சி.ஐ குடோன் அருகே நிறுத்தி வைத்துவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கிக் குண்டு பட்டுக் கீழே விழுந்தவர் அவர். காலை இழந்ததால் தற்போது சென்னையில் கிடைத்துள்ள ஒரு நல்ல வேலைக்கும் இனி அவர் செல்ல இயலாது. தடியடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சாயர்புரம் செல்வசேகர் (40) தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தவர். அன்று போராட்டத்தை ஒட்டி அந்த நிறுவனம் விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அவரைச் சரமாரியாக லத்தியால் அடித்து வீழ்த்தி ஏறி மிதித்துள்ளனர். அவர் அடுத்த நாள் இறந்தார். அவருடைய தாயும் திருமணமாகாத சகோதரியும் அவரது உழைப்பில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணி செல்வராஜ் என்பவர் அஜய் ஜோன்ஸ் மற்றும் அம்ரிதா எனும் இரு குழந்தைகளின் தந்தை. ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் மோட்டார் சைகிளில்  வந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் விவரம்: 1. ரஞ்சித்குமார் (22), தூத்துக்குடி 2. கிளாஸ்டன் (40) லூர்தம்மாள்புரம், தூத்துக்குடி 3.கந்தையா (55) சிலோன் காலனி, தூத்துக்குடி 4. தமிழரசன் (45), குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம் 5. சண்முகம் (25), மாசிலாமணிபுரம், தூத்துக்குடி 6.மாணவி ஸ்னோலின் (17), தூத்துக்குடி 7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி, 8. மணிராஜ் (25), தாமோதர நகர், தூத்துக்குடி 9. கார்த்திக் (20) தூத்துக்குடி 10. ஜான்சி (46), திரேஸ்புரம், தூத்துக்குடி, 11. செல்வசேகர் (40), தூத்துக்குடி 12. காளியப்பன் (22), தாளமுத்து நகர், தூத்துக்குடி 13. ஜெயராமன் (45), உசிலம்பட்டி

இது தவிர ஒரு திருமணத்திற்காகப் பரோலில் வந்திருந்த ஆயுள் கைதி பாரத் என்பவர் சென்ற மே 23 அன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது  காவல்துறையினரால் அடித்து தூக்கிச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டுள்ளார். பின் அவர் நீதிமன்ற ஆணையின் பேரில் பாளை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சரியான சிகிச்சை இன்றி ஜூன் 29 இரவு இறந்துள்ளார். அவர் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

மே 25 அன்று கருங்குளம் எனும் பகுதியில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஒரு அரசுப் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த திருவைகுண்டம் வள்ளியம்மாள் என்பவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மே 31 அன்று இறந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் சித்திரவதை : 22, 23 தேதிகளில் கண் மண் தெரியாமல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். எவ்வளவுபேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்கள் சொல்லப்படவில்லை. இதன் விளைவாக அவர்களின் வீட்டார்கள் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லை அவர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனரா எனத் தெரியாமல் கலங்கிக் கிடந்தனர். கொல்லப்பட்ட உடல்கள் பல திருநெல்வேலி மருத்துவமனையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.

இவ்வாறு பலர் காணவில்லை என்பது குறித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சந்திரசேகர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நடுவர் பகவதி அம்மாள் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணை நடத்துமாறு விலாத்திகுளம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் காளிமுத்துவேலுக்கு உத்தரவிட்டார்.

அவர் ஆய்வு செய்தபோது வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சித் தளத்தில் 95 பேர்கள் கடும் சித்திரவதைத் தாக்குதல்களின் மூலம் காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த வழக்கு தொடர்பாக அவர்கள் கொண்டுவரப்பட்டு இங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கேட்டபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் திருதிருவென விழித்துள்ளனர். “அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை” என பத்திரிகைகள் இது குறித்து எழுதின (தினத்தந்தி நெல்லைப் பதிப்பு, மே 26), விசாரணை செய்த நடுவர் கண்டித்த பின் அவர்களில் 30 பேர்கள் விடுவிக்கப்பட்டு மீதி 65 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

முதன்மை நீதிபதி சாருஹாசினி வழக்குரைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக உயர்நீதிமன்றப் பதிவாளருடன் தொடர்புகொண்டு, அவரது அனுமதியுடன் அப்போதே வழக்கை விசாரித்து உடனடியாக அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் மேலும் 62 பேர்களைக் கொண்டு வந்து ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்காக நீதிபதி சாருஹாசினி அவர்கள் இரவு 12 மணிவரை நீதிமன்றத்திலேயே காத்திருந்தும் அரசு வழக்குரைஞர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். அவர் ஆஜர் ஆகாததை ஒட்டி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதிகள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கலில் மிக்க கரிசனத்துடன் நடந்து கொண்டதைப் பலரும் குறிப்பிட்டனர்.

இப்போதும் சுமார் 30 பேர்கள் வரை விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளதாக நேற்று (ஜூலை 4) தூத்துக்குடியில் விசாரித்தபோது ஒரு மனித உரிமை ஆர்வலர் குறிப்பிட்டார்.

இணையம், ஏ.டி.எம் சேவைகள் முடக்கம்: எங்கள் குழு சென்ற போது அங்கு இணைய சேவை செயல்படவில்லை. அன்று (மே 27) நள்ளிரவில்தான் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இணைய சேவையை உணர முடிந்தது. மே 22 தொடங்கி தூத்துக்குடி மட்டுமின்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இணைய சேவை நிறுத்தப்பட்டது. நீதிமன்றக் கண்டனத்துக்குப் பின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் இணைய சேவைகள் அளிக்கப்பட்டன. தூத்துக்குடி நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 72 ஏ.டி.எம் களும் வேலை செய்யவில்லை. ‘க்ரெடிட் கார்ட்’ பயன்பாடும் சாத்தியமில்லாமல் ஆனது. மேற்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய மாணவர்கள் சொல்லொணாத் சிரமங்களுக்கு ஆளானதைப் பத்திரிகைகள் கண்டித்தன.

மே 27 காலைதான் 144 தடை நீக்கப்பட்டது. எனினும் ஆங்காங்கு செக் போஸ்டுகள், போலீஸ் கெடுபிடிகள் குறையவில்லை. எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுப் பைகள் முதலியன சோதனை செய்யப்பட்டன. மே 26 வரை வெளியார்கள் சென்று வருவதில் கடும் கெடுபிடிகள் இருந்துள்ளன. வழக்குரைஞர்கள் ஊருக்குள் சென்று வருவதற்கான ஆணையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதன் விளைவாக அவர்களின் நுழைவை மட்டும் தடுக்க இயலவில்லை.

தலைவர்கள் கைது: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மே 25 அன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது அவரும் ஆதரவாளர்களும் என மொத்தம் ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த அன்றே இயக்குநர் கௌதமனைக் காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிய காட்சியத் தொலைக்காசிகள் காட்டின. மே 31 அன்று நடிகர் ரஜினி வீட்டை முற்றுகை இடுவது எனக் கூறிச் சென்ற ‘மக்கள் ஜனநாயக் கட்சி’ தலைவர் கே.எம் ஷெரீஃபும், அவரது ஆதரவாளர்கள் 30 பேர்களும் கைது செய்யப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1 அன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆய்வு செய்ய அங்கு சென்ற TNCRO என்கிற ஒரு மனித உரிமைக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வீடு புகுந்து தேடல், மக்களை உளவு பார்ப்பதெற்கென வானில் பறக்கும் குட்டி விமானங்கள், 6000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என அந்தக் கடலோரச் சிறு நகரே எதோ எதிரி நாட்டு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நகரம்போல இருந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது (மே 27) ஓரளவு குணமடைந்தோர் அனுப்பப்பட்டு அங்கு அப்போது சுமார் 56 பேர்கள்தான் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்கள் 104 பேர்கள். அவர்களில் 17 பேர்கள் ‘ஆபத்தான’ நிலையில் இருந்தவர்கள். வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பாதிரியார் ஜெயசீலன் (70) தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் சென்றபோது அரசு மருத்துவமனை ICU வில் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த இளைஞர் பிரின்ஸ்டன் வைக்கப்படிருந்தார். IMW வில் ராமசந்திரன் (24) த/பெ மாரிமுத்து, ஜஸ்டின் (29) த/பெ மரிய ஃப்ரான்சிஸ் என இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு ‘டயாலிசிஸ்’ நடந்துகொண்டிருந்தது. இருவரும் ஓட்டுநர்கள். இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன் மே 22 காலை 11.30 மணி வாக்கில் நடைபெற்ற தாக்குதலில் உயிருக்கு ஆபத்தாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பணியில் இருந்த மருத்துவர்கள் அவர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறினர். சற்று ஆபத்தான நிலையில் இருந்த மூவர் மதுரையில் சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்ர இருவரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மருத்துவமனை உயரதிகாரிகளைச் சந்தித்தபோது அவர்கள் மூவரும் தங்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். புகழ்பெற்ற தனியார் மருத்துவ மனைகளில் உள்ளதைக் காட்டிலும் சிறந்த மருத்துவத்தைத் தாங்கள் அளித்துள்ளதாகவும், பார்க்க வருகிறவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வருவதுதான் பிரச்சினை எனவும் கூறினர்.

பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களும் மருத்துவர்கள் நல்ல முறையில் பணியாற்றுவதாகக் கூறினர்.  குண்டு மற்றும் தடியடிக் காயங்களுடன் வருபவர்களைப் பதிவு செய்யும் AR எனப்படும் விபத்துப் பதிவேட்டில் போலீஸ் தாக்குதலில்தான் இப்படி ஆனது எனப் பதிவு செய்கிறீர்களா எனக் கேட்டபோது, அப்படிப் பதிவது வழக்கமில்லை எனவும் தாக்கியவர்கள் தெரிந்தவர்களா, தெரியாதவர்களா (Known or Unknown) என்று மட்டுமே பதிவு செய்வதுதான் வழக்கம் எனவும் கூறினர்.

:பாராட்டுக்குரிய நீதித்துறை: உள்ளூர் மருத்துவர்களைப் போலவே, தூத்துக்குடி வழக்குரைஞர்களும், மாவட்ட நீதித்துறையும் மிகவும் இரக்கத்துடனும் கடமை உணர்வுடனும் செயல்பட்டதாக மிக்க நன்றியுடன் எல்லோரும் கூறினர். குறிப்பாகக் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படாமல் துப்பாக்கிப் பயிற்சியகத்தில் அடைத்து வைக்கப்பட்ட மக்களை தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்ததில் நீதித்துறை மிகுந்த பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. குறிப்பாக நீதியரசர்கள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோரை மக்கள் குறிப்பிட்டுச் சொல்லினர்.

இழப்பீடு : வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகள் மற்றும் குவிக்கப்பட்ட படைகள் குறித்து அரசுத் தரப்பில் சொல்லப்படுவது:

பாதுகாப்பு: டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 4 DIG, 8 IG க்கள்,5,000 போலீஸிருந்தனர் மேலும் கமாண்டோ படைகள் உட்பட இன்னும் 1000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் அட்வகேட் ஜெனெரல் செல்லபாண்டியன் மே 25 அன்று நீதிமன்றத்தில் சொன்னது: காயம் பட்டவர்கள் மொத்தம் 72 பேர். இதில் 52 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும். ஒருவர் மதுரையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.. 52ல் 26 பேர்களுக்குத் தலா  3 லட்சமும், மீதி 26 பேர்களுக்கு தலா 2 லட்சமும் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூ என்பது அதிகப்படுத்தப்படும்.

கணக்கில் வராத காயம்பட்டவர்கள்: காயம்பட்டவர்கள் என அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை மிகக் குறைவு. அது மட்டுமல்ல. காவல்துறை தாக்குதலில் படுகாயமுற்ற பலர் அதை வெளிப்படுத்தினால் தங்கள் மீதும் வழக்குப் போடுவார்கள் என அஞ்சி அவற்றை வெளிப்படுத்தாமல் சொந்த முறையில் சிகிச்சை செய்துகொண்டு உள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம். காயம் பட்டவர்கள் வெறும் 72 பேர்கள்தான் எனச் சொல்வது முழுப் பொய். இதற்கிடையில் சில சமூக ஆர்வலர்கள் அப்படி அஞ்சி வெளியே சொல்லாமல் உள்ளவர்களை அணுகி அதை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கொள்வதாகவும் அறிகிறோம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க முயன்றபோது: துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரியைச் சந்தித்தபோது அவசரமாக அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தபோதும் நாங்கள் கூறியவற்றைக் கவனத்துடன் கேட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாங்கள் சொன்ன போது,  அது தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது எனக் கூறிய அவர் “எனினும் நீங்கள் அவற்றை ஒரு மனுவாக எழுதித் தந்தால் எனது பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறினார். FIR ல் துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது துணைத்தாசில்தார்கள் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியபோது நிர்வாக நடுவர்களாக (Executive Magistrates) துணைத் தாசில்தார்களை நியமிக்க இடமுண்டு என்றார். துப்பாக்கிச் சூடு தேவையற்றது என நாங்கள் சொன்னபோது கேட்டுக் கொண்ட அவர் “போராட்டக்காரர்கள் மத்தியிலும் அன்று வன்முறைகள் இருந்ததை மறுக்க முடியாது” என்றார்.

அடுத்து காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) திரு. முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்ற போது சாதிப்பதாகச் சொல்லிக் காத்திருக்கச் சொன்னார்.. எனினும் அதற்குள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட்டது உதவித் தாசில்தார்கள்தான் என்பது குறித்த எங்களின் நேர்காணல்கள் பல சேனல்களில் ஒளிபரப்பாகத் தொடங்கின. சந்திப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் சந்திக்க முடியாது எனச் சொல்லிவிட்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து திரும்பினோம். காவல்துறை அத்துமீறல்கள் குறித்துக் கடும் அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவும் சூழலில் மக்கள் முன் உரிய விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு உயர் அதிகாரி அப்படி நடந்து கொண்டது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய உண்மை:: தூத்துக்குடி வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ள பேராசிரியர் சிவசு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை இன்று தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லாத் தரப்பு மக்களையும் பாதிப்பதை விரிவாக விளக்கினார். தொடக்கத்தில் ஆலைக் கழிவுகளால் மீன் வளம் குறைந்ததை ஒட்டி மீனவர்களே இது குறித்துக் கவலைப்பட்டனர். ஸ்டெர்லைட் நிர்வாகமும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முதலானோருக்கு சிறிய ஒப்பந்தங்கள், தற்காலிக வேலைகள் முதலியவற்றை அளித்து மக்களைப் பிளவுறுத்தும் முயற்சியையும் மேற்கொண்டது. அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் மாசுபட்டது, பல்வேறு வழிகளில் சுற்றுச் சூழல் அழிந்தது ஆகியன எல்லா மக்களையும் பாதித்ததனால் இப்போது கடலோர மக்கள், விவசாயிகள், வணிகர்கள், அடித்தள மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று ஆலைக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ளனர் என்றார். எனவேதான் சில சமூக விரோத சக்திகள் சாதி, மதம் கடந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் எற்பட்டுள்ள இந்த ஒற்றுமையை அழிக்கப் பார்க்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பனிமயமாதா ஆலயம் அருகில் மக்கள் கூடிப் போராட்டத்திற்குப் புறப்பட்டது குறித்துப் பரப்பப்படும் பிளவுப் பிரச்சாரங்கள்: மே 22 காலை பனிமய மாதா ஆலயத்தில் மக்கள் திரண்டு அங்கிருந்துதான மக்கள் சென்றதாகவும் அந்த வகையில் கலவரத்திற்கு கிறிஸ்தவ மதத் தூண்டுதல் காரணம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே என இங்கு எல்லோராலும் மதிக்கப்படும்பாதிரியார்கள் எக்ஸ்.டி.செல்வராசு ,சுந்தரி மைந்தன் ஆகியோரைக் கேட்டபோது அவர்கள்  அதை மறுத்தனர். இந்தப் போராட்டம் மூன்று மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. மாதா கோவில் அருகே பெரிய வெளி இருப்பதால் கூடங்குளம் போல மாதா கோவிலுக்கு அருகில் பந்தலிட்டு போராட்டக்காரர்கள் தினந்தோறும் கூடினர். கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் எல்லா மதத்தினரும் அதில் இருந்தனர். அங்குள்ள பங்கு குருவின் சம்மதம் இன்றி அது நடந்தது. அவர் தொடர்ந்து அவர்களை அங்கு கூடக் கூடாது என வற்புறுத்திக் கொண்டே இருந்தார். கூடங்குளத்தில் அரசு கிறிஸ்தவ சர்ச் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மறந்துவிடவில்லை. எனவே அங்கு கூடவேண்டாம் என மக்களை பங்கு குரு தொடர்ந்து கேட்டுக் கொண்டார் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி எல்லாத் தரப்புப் பிரதிநிதிகளும் இப்படியான பிரச்சாரத்தை வெளிப்படையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

                                  

                                      எமது பார்வைகள்         

 

1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது.   அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத்தாசில்தார்களும் கோட்டக் கலால்துறை அதிகாரி ஒருவரும் சுடுவதற்கு ஆணையிட்டதாக ‘முதல் தகவல் அறிக்கைகள்’ (FIR) தயாரிக்கப்பட்டுள்ளன. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல்  (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR ல் (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஶ்ரீவைகுண்டம் வட்டவழங்கல் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டுள்ள கோபால் எனும் துணைத் தாசில்தார் தன் பெயரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி பரவுகிறது எனப் புகார் செய்துள்ளார். அதை ஒட்டித் தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்துர் ராஜன் இப்படித் துணைத் தாசில்தார்களின் பெயரில் பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மற்ற FIR களும் பொய்தானா என நாங்கள் செந்துர்ராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படித்தான் செய்திகள் பரவுகின்றன, அந்தத் துணைத் தாசில்தார்களும் தொடர்பில் இல்லை என்றார். அவர்கள் பயந்து கிட்டத்ட்ட தலைமறைவான நிலையில் உள்ளனர். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதும் இன்று பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுவதும் தமிழகக் காவல்துறை மீது உள்ள கடைசித் துளி நம்பிக்கையையும் அறச் செய்கிறது. 22ம் தேதி துப்பாக்கிச் சூட்டிற்கு 27ந்தேதி வரை யார் சுடுவதற்கு அனுமதி அளித்தனர் என்பது மக்கள் முன் விளக்கப்படவில்லை. கேள்விக்குத் தமிழக முதல்வர் மழுப்புகிறார் எனப் பத்திரிகைகள் எழுதின. துணைத் தாசில்தார்களை நிர்வாக நடுவர்களாக நியமிக்கலாம் என 1973ல் ஒரு அரசாணை உள்ளது என்றாலும் இப்படித் தேர்தல் துறை, கலால்துறை முதலியவற்றில் உள்ளவர்களை எல்லாம் நடுவர்களாக நியமிப்பது சரியா? மக்களைக் கொல்வதற்கான ஆணை இடலில் இத்தனை பொய்கள் உ:ள்ளதற்கு அரசு முறையான விளக்கம் தர வேண்டும்.ஸ்னோலின்

 1. Tamilnadu Police Standing Order and Police Manual ல் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் கடைபிடிக்கப்பட வேண்டிய 6 விதிகளில் ஒன்று கூட தூத்துக்குடியில் கடைபிடிக்கப்படவில்லை. மக்களுக்கு அச்சமூட்டிக் கலைப்பது மட்டுமே துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் எனபது அந்த நெறிமுறைகளின் அடிநாதமாக உள்ளது. சட்டவீரோதமாகக் கூடியுள்ளீர்கள் என எச்சரிக்கை செய்வது, கண்ணீர்ப்புகை, தண்ணீரைப் பீச்சி அடித்து விரட்டுதல், சுடப்போவதாகவும், மரணங்கள் நேரலாம் எனவும் எச்சரித்தல், வானை நோக்கிச் சுடுதல் என்கிற எதுவும் கடைபிடிக்கப்படாமலேயே அன்று மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், முழங்காலுக்குக் கீழ் என்பதாக அல்லாமல் பெரும்பாலும் மார்புக்கு மேல் மக்கள் சுடப்பட்டுள்ளனர். மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இணையம் முதலான மக்கள் தொடர்புச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 நாட்கள் வெளியார்கள் யாரும் தூத்துக்குடிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போல அரசும் காவல்துறையும் கையாண்டுள்ளன.
 2. இப்படிப் 13 பேர்கள் இன்று தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.. சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். பரோலில் வந்த சிறைக் கைதி ஒருவரும் போலீஸ் தாக்குதலின் பாதிப்பால் செத்துள்ளார். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
 3. இது திடீரென நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு அல்ல. முன்கூட்டி மேல்மட்டத்தில் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை. கார்பொரேட்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு எதிராக பாதிக்கப்படுகிற மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் நடக்கக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கத் தேவையானால் மத்திய படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
 4. இந்த நோக்கில்தான் மே 22 அன்று போராடும் மக்கள் சீண்டப்பட்டுள்ளனர். அவர்கள் அமைதியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதில் அரசும் காவல்துறையும் குறியாக இருந்துள்ளது. நூறு நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் மக்கள் ஒரு பூங்காவுக்குள் நுழைய முயற்சித்தபோதும் இப்படித்தான் விரட்டப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜல்லிகட்டுப்[ போராட்டத்திலும் அவ்வாறே இறுதியில் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு மக்கள் விரட்டப்பட்டனர். இம்முறை வெறுமனே அப்படி விரட்டினால் போதாது என அரசு முன்கூட்டித் தீர்மானித்துத்தான் ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் குறி பார்த்துச் சுடுபவர்களை நிறுத்தி வைத்திருந்தது.
 5. இப்படியான போராட்டங்களில் மக்கள் ஆத்திரம் கொண்டு காவல்துறை வாகனங்களை எரிப்பது ஏற்கத் தகாததுதான் என்றபோதிலும் அது எங்கும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அது, இப்படியான துப்பாக்கிச் சூடுகள் இல்லாமலேயே காவல்துறையால் சமாளிக்கப்படக் கூடிய ஒன்றுதான். வானை நோக்கிச் சுடுதல், அப்படியே சுட்டாலும் ஓரிருவரை மட்டும் முழங்காலுக்குக் கீழே சுடுதல் முதலான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தைக் கலைப்பதே வழமை.. இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும்போதுதான் மக்கள் வைக்கும் குற்றச்சாட்டையும் நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டி உள்ளது. . சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டு, கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றை அவர்கள் மேற்கொண்டனர் என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது என்று மக்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 6. மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் ஒரு திருவிழாவிற்குச் செல்வது போலச் சென்றிருக்க மாட்டார்கள்.. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன், அண்ணன் மனைவி, அவர்களின் 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தைகள் எனக் குடும்பமே அங்கு வந்துள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம்.
 7. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்”, “புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான அமைப்புகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். கூட்டத்தில் தீவிரவாதிகள் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

9 திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள தன் மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்றுகொண்டிருந்த ஜான்சி (46) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் வினிதா என்று காவல்துறை முதலில் பதிவிட்டுள்ளது. அவரது வீட்டார்கள் சென்று அடையாளம் காட்டியபின் அவசரமாக ஜான்சி எனப் பெயரை மாற்றி ‘மெமோ’ பதிவு செய்துள்ளனர். சென்ற 28 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்ட போது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது வெறும் அலட்சியமா இல்லை வினிதா என வேறு யாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்களா என்றெல்லாம் ஐயம் உருவாகிற அளவிற்கு இன்று காவல்துறை நடந்து கொள்கிறது.

 1. மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். என்கவுன்டர் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை இங்கும் கடைபிடிக்கப்பட வேண்டும்
 2. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் தூத்துக்குடியில் கன்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள் ககன்தீப் சிங்,டேவிதார் மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சென்ற மே 26 அன்று கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கெனத் தனியாகவும்  அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு செயல். எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றில் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சில மதவாத சக்திகள் இத்தகைய பிரச்சாரத்தைச் செய்து கொண்டுள்ளபோது  இந்த உயர் அதிகாரிகள் இவ்வாறு மக்களைப் பிரிப்பதன் பொருள் என்ன? இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை எல்லோருக்கும் போதுவானது. இரண்டு தரப்பு மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல இது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் கூட மீனவர்கள் மூவர்; நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் இருவர்; நாயக்கர் ஒருவர், ஆதி திராவிடர் இருவர் (நக்கீரன் 31:15, பக்.6) என அனைத்துச் சமூகத்தினரும் உள்ளனர். அனைத்து மக்களுக்கும் ஒரு கார்பொரேட்டுக்கும் இடையிலான பிரச்சினையை ஏதோ மத மோதல் பிரச்சினை போலக் கையாண்டதற்கு கண்காணிப்புக் குழுவில் இருந்த உயரதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
 3. போராட்டத்தில் வெளியார்கள் (outsiders) புகுந்து விட்டதாக)வும், அதுவே வன்முறைகளுக்குக் காரணம் எனவும் ஒரு மதிக்கத்தக்க ஊடகம் எழுதியது வருந்தத் தக்கது. தமிழக மக்கள் இன்று காவிரி நீர்ப் பிரச்சினை தொடங்கி, ஹைட்ரோகார்பன், அணு உலை வரை பலவகைகளிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த கவலை மக்களுக்கு இருப்பது இயல்பு. கல்பாக்கம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது சென்னை மக்களையும் பாதிக்கும். இந்நிலையில் இத்தகைய போராட்டங்களில் மக்களை வெளியார்கள் X உள்ளூர் மக்கள் (Outsiders X Insiders) என்றெல்லாம் பிரித்து இருமை எதிர்வுகளை (binary oppoositions) உருவாக்கி நிறுத்தும் மொழி விளையாட்டு வருந்தத் தக்கது. அரசும் காவல்துறையும் மக்கள் மத்தியில் சமூக விரோத சக்திகள் புகுந்து விட்டன எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தனர். யார் அந்தச் சமூக விரோதிகள் என அவர்கள் இதுவரை அடையாளம் காட்டவில்லை. ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி’ முதலான அமைப்புகள் மிகவும் வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும் இயங்குபவை. அவர்கள் ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்வதோ, தலைமறைவாக இயங்குவதோ கிடையாது. அப்படியான நிலையில் அவ்வமைப்புகளை இவ்வாறு முத்திரை குத்துவதும், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்க முயற்சிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’, ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் அமைப்பினரும் இன்று அதிக அளவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 4. தூத்துக்குடி அரசுமருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்

கோரிக்கைகள்

1.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூ இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும்.

2.காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

 1. இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
 2. சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தூத்துத்துக்குடி ‘சிப்காட்’ காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) செல்வநாகரத்தினம் ஆகிய இருவரும் மிகவும் கொடுரமாக மக்களைத் தாக்கினர் என்பதை மக்களில் பலரும் எங்களிடம் கூறினர். இவர்கள் இருவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனவும் கூறினர். அவர்கள் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் சொத்து விவரங்கள் முதலியன விசாரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் விசாரணை ஆணையமும் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.
 3. ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும். தாங்கள் சுட உத்தரவிட்டதாகப் பொய்கூறச் சொல்லி வருவாய்த் துறை அதிகாரிகள் வற்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்குத் தெரியாமலேயே இப்படியான பொய் FIR கள் போடப்பட்டது பற்றிய குற்றச்சாட்டும் விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
 4. ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ தலைவர் வேல்முருகன், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர், ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ தலைவர் கே.எம்.ஷெரிஃப் முதலானோர் போராட்டத்தை ஆதரித்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இயக்குநர் கௌதமன் முதலானோர் உள்ளிட்ட இப் போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அனைவர் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்..
 5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை ஒட்டி அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய இழப்பீடுகளை வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அரசு பெற்றுத் தர வேண்டும். வேலை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கும் மாற்று வேலைவாய்ப்புகளுக்கும் அரசு உதவ வேண்டும்.
 6. இத்தனைக்கும் பின்னாவது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது வரவேற்கத் தக்கதுதான் எனினும் இதற்காகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வலுவாக இல்லை என்கிற கருத்தைச் சட்ட வல்லுனர்கள் முன்வைத்துள்ளனர். ஓரு ஆலையை மூடும்போது எத்தகைய விதி மீறல்களுக்காக அது மூடப்படுகிறது, அந்த விதிமீறல்கள் எந்த வகையில் மக்களுக்கும் இயற்கைக்கும் கேடாக உள்ளன என்பது விரிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விளக்கங்கள் இந்த ஆணையில் இல்லை. முன்னதாக இந்த ஆலையை மூடுவது தொடர்பாக வழக்கு நடந்தபோது நீதிபதிகள் தர்மாராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் விரிவாக ஆய்வு செய்து எத்தகைய விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அவர்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். அவை இந்த ஆணையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்., இந்த வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் இப்படியான பிரச்சினைகளில் வல்லுனர்களாக உள்ள வழக்குரைஞர்களின் ஆலோசனையையும் பெற்று அதையும், முன் கூறிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதி மீறல்களையும் உள்ளடக்கிக் கூடுதல் அரசாணை ஒன்றை அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். வேதாந்தா முந்திக்கொள்ளுமுன் தமிழக அரசு இதைச் செய்ய வேண்டும்.

 

தொடர்புக்கு : அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், முதல் குறுக்குத் தெரு, சென்னை-20, செல்: +91 9444120582

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செங்கல்பட்டு பாலேஸ்வரம் காப்பகப் பிரச்சினை : அறிக்கை

செங்கல்பட்டு பாலேஸ்வரம் மரணத் தறுவாய் பராமரிப்பு   நிலையம்  (St Joseph Hospice)  மீது  அரசு  நடவடிக்கை

 

                                      உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை,

ஏப்ரல் 20, 2018.

பகுதி I

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகில் உத்திரமேரூர் செல்லும் வழியில் வலப்புறம் சற்றே உள்ளடங்கியுள்ள சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ‘புனித ஜோசப் மரணத் தறுவாய் பராமரிப்பு நிலையம்’ (St. Joseph’s Hospices) எனும் சேவை நிலையத்தில் முறைகேடுகள் உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது அதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இரும்புலியூர் (தாம்பரம்), திருவல்லம் (வேலூர்) மற்றும் புலிப்பள்ளம் (விழுப்புரம்) ஆகிய ஊர்களில் அமைந்திருந்த அதன் கிளைகளில் இருந்தவர்களும் இப்போது வெளியேற்றப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 14 நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பராமரிப்பு நிலையங்களின் இயக்குநர் பாதிரியார் ஆர்.வி. தாமஸ் அவர்களிடன் விளக்கம் கோரியும் அனுமதியின்றி குழந்தைகளைக் காப்பகத்தில் வைத்திருந்தார் எனவும் இரு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனினும் பாதிரியார் தாமசுக்கு அளிக்கப்பட்ட விளக்கக் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.

 1. குழுவில் பங்கு பெற்றோர்
 2. பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை,
 3. தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சென்னை,
 4. பேரா. பிரபா.கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்,
 5. அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO),
 6. வி.சீனிவாசன், சுற்றுச்சூழல் ஆர்வலர், சென்னை,
 7. ஆசிர், மக்கள் கண்காணிப்பகம், மதுரை,
 8. செல்வி, உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை,
 9. வன்னிஅரசு. துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள், சென்னை,
 10. குடந்தை அரசன், நிறுவனத் தலைவர். விடுதலைத் தமிழ்ப் புலிகள்,
 11. ரைட்ஸ் பாபு, சசி மனித உரிமை அமைப்பு, கடலூர்,
 12. தேவநேயன், மனித உரிமைச் செயல்பாட்டாளர், சென்னை,
 13. மு.களஞ்சியம், திரைப்பட இயக்குநர், சென்னை,
 14. எஸ்.சத்யபாபு, ஹெல்ப் ஏஜ் இன்டியா, கடலூர்,
 15. முருகப்பன், பத்திரிகையாளர், திண்டிவனம்.

இந்தக் குழுவினர் மார்ச் 03 மற்றும் 07 தேதிகளில் பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள அச் சேவை நிலையத்திற்குச் சென்றனர். அப்பகுதி மக்கள் அந்த நிலையத்தின் மீது கோபமாக இருப்பதாலும், ஒரு கொந்தளிப்பான சூழல் அப்பகுதியில் நிலவுவதாலும் பாதுகாப்பு கருதி அதன் இயக்குநர் பாதிரியார் தாமஸ் அங்கிருந்து வெளியேறி வேறெங்கோ இருந்ததால் முதல் முறை சென்றபோது அவரைச் சந்திக்க இயலவில்லை. எனினும் பாதிரியாரின் உதவியாளரும், அந்நிறுவனத்தில் சமூகப் பணியாளராகவும் உள்ள அலெக்ஸ் பாண்டியன் எங்களிடம் விரிவாகப் பேசியதோடு, தேவையான ஆவணங்களையும் எங்களுக்குக் காட்டி உதவினார். அங்கிருந்த சொற்பப் பணியாளர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பார்த்துப் பேசினோம். நாங்கள் சென்றபோது சாந்தோம் மாதாகோவில் நிர்வாகத்தில் பணி செய்யும் அருட் பணியாளரும் வழக்குரைஞருமான ஸ்டாலினும் அங்கிருந்தார். தேவையான சில விளக்கங்களை அவரும் எங்களுக்கு அளித்தார். இரண்டாம் முறை சென்ற போது பாதிரியார் தாமசும் இருந்தார். அவரது கருத்துக்களையும் பதிந்து கொண்டோம்.

H1 நிலையத்தையும், அங்கே தங்கவைக்கப்படுகிற இறக்கும் தருவாயில் உள்ளவர்கள், மனநோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான மருத்துவ வார்டுகள், இறந்தோரைப் புதைப்பதற்காக அந்த வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மீண்டும் பயன்படுத்தக் கூடிய கான்க்ரீட் கல்லறை அமைப்பு (reusable concrete vaults) ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்துப் படங்களையும் எடுத்துக் கொண்டோம். கல்லறை அமைப்பிலுள்ள படிக்கட்டுகளில் இறங்கி இறந்தோரின் எலும்புகள் விழுவதற்கான மூடப்பட்ட பகுதியையும் பார்வையிட்டோம்.

திரும்பும் வழியில் பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலரையும் சந்தித்து அந்நிலையம் தொடர்பான அவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டோம். பின் நிலையத்தின் மீது புகார் அளித்துள்ளவரும், பிப் 20 அன்று சர்ச்சைக்குரிய அந்த இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிலைய வாகனம் இடையில் நிறுத்தப்பட்டுப் பிரச்சினையானபோது அதற்குக் காரணமாக இருந்தவரென தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ள ம.தி.மு.க பிரமுகரான கருணாகரனையும் சந்தித்து விரிவாக அவரது கருத்துக்களையும் பதிந்து கொண்டோம். இரண்டாம் முறை சென்ற போது பாதிரியார் தாமஸ், செங்கல்பட்டு காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ ஆகியோரையும் சந்தித்து விளக்கங்களைப் பெற்றுக் கொண்டோம்.

நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் எல்லோரையும் சந்திக்க இயலவில்லை ஆயினும் சென்னை- புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ காப்பகத்தில் தற்போது உள்ள 24 பேர்களில் சிலரை எம் குழுவில் உள்ள சீனிவாசன் மார்ச் 11 அன்று சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டார். மார்ச் 13 அன்று திண்டிவனம் ‘அன்னை கருணாலயம்’ எனும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 9 பேர்களையும் இக்குழுவில் உள்ள பேரா.கல்விமணி மற்றும் பத்திரிகையாளர் முருகப்பன் ஆகியோர் சந்தித்து அவர்களில் பேசக் கூடியவர்களின் வாக்குமூலங்களையும் பதிந்து கொண்டனர்.

நிலையத்திலிருந்தவர்கள் அகற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிக் குழப்பம் நிலவுகிறது. அகற்றப்பட்டபோது அங்கு 323 பேர்கள் இருந்ததாக நிலையத்தில் பணியாற்றும் அலெக்ஸ் பாண்டியன் கூறினார். இன்று அரசு 294 பேர்கள்தான் இருந்ததாகச் சொல்கிறது.  அகற்றப்பட்டவர்களில் ஒரு 91 பேர் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுப் பின் அவர்களில் சாகும் தருவாயில் இருந்த ஆறு பேர்களை மட்டும் அங்கேயே விட்டுவிட்டுப் பிறரை வேறு இல்லங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருந்தவர்களை, பிப் 07 அன்று மாலை, எம் குழுவில் உள்ள பேரா. மார்க்ஸ், பாபு, டாக்டர் சத்யபாபு  ஆகியோர் சென்று பார்த்தனர். நாங்கள் போன அன்று காலையில் ஒருவரும், முதல் நாள் மாலையில் ஒருவரும் இறந்திருந்தனர். மற்றவர்களை மட்டும் பார்க்க முடிந்தது.

I.2. பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பான பிரச்சினையின் பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள ‘புனித ஜோசஃப் இறக்கும் தறுவாய் பராமரிப்பு நிலையம்’ என்பது முதியோர்களைப் பராமரிப்பதற்கான தமிழக அரசின் (Tamilnadu Maintenance and Welfare of the Parents and Senior Citizens) விதி எண் 12 (3) (Central Act 56 of 2007)ன் கீழ் 28.12.2011 முதல் செயல்பட்டு வருகிறது. 18 ஏக்கர் நிலத்தில் இதற்கென கட்டப்பட்ட நவீனமான கட்டிடம் ஒன்றில் இது கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. பாதிரியார் ஒருவர் கொடையாகக் கொடுத்த நிலத்தில் அந்நிலையம் கட்டப்பட்டுள்ளதாக இதன் நிர்வாகி பாதிரியார் ஆர்.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Founder இந்தக் காப்பகம் செயல்படுவதற்கான அனுமதியையும், பதிவுச் சான்றையும் (Certificate of Registration) அது தொடங்கப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அளித்துள்ளது (Roc. No. 2588/A1/2011, Dated: 28.12.2011). ‘பராமரிப்பு தேவைப்படும் முதிய குடிமக்களுக்கான நிறுவனம்’ (Institution for Senior Citizens in need of care) என இந் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்’ குறித்த விதி 12(3) (Rule 12-3 of the Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens rule 2009) ன் கீழ் அந்தச் சான்று வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்தப் பதிவு 01.01.2012 முதல் 30.06.2012 வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாநில சமூகநல ஆணையரின் அனுமதியுடன் மாவட்ட சமூக நல அதிகாரி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த அனுமதி 30.06.2012 தேதியுடன் காலாவதி ஆனபின் அனுமதித் தொடர்ச்சிக்கு விண்ணப்பித்து விட்டு அது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. எனினும் சுமார் 27 மாதங்களுக்குப் பின் 19-09-2014 அன்றுதான் இந்நிறுவனத்திற்கு அடுத்த மூன்றாண்டுகள் (19.09.2014 முதல் 18-09-2017) வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட சுமார் இரண்டே கால் ஆண்டுகள் இந்நிறுவனம் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தும் பதிலளிக்கப்படவில்லை என நிறுவன இயக்குநர் தாமஸ் குறிப்பிட்டார். ஆனாலும் அந்நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அரசு நிறுவனங்கள் மெமோ எழுதித் தந்து பராமரிப்பு தேவைப்படுபவர்களை அந் நிறுவனத்துக்கு அனுப்பிக் கொண்டும் இருந்துள்ளன. அதிகாரிகளும் வந்து போய்க் கொண்டிருந்துள்ளனர்.

2017 செப்டம்பர் 18 உடன் இந்த அனுமதியும் காலாவதி ஆகிவிடுகிறது. இந்தத் தேதிக்கு மூன்று மாதம் முன்னதாகவே அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும் என்பதும், அலுவலக அறையில் இந்த அனுமதிக் கடிதம் எல்லோரும் பார்க்கும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முன்னர் விதிக்கப்பட்ட நிபந்தனைகள். அவ்வாறே அலுவலக வரவேற்பறையில் அக் கடிதம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. நிலையத்தின் அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பம் 15.09.2017 அன்று அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாகத் தாங்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டுள்ளதையும் அக்கடிதத்தில் அந் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அனுமதித் தொடர்ச்சிக்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வெண்டிய சுகாதாரச் சான்றிதழ் தவிர பிற ஆவணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டன. சுகாதாரச் சான்றிதழுக்காக மாவட்ட  சமூகநல அலுவலகத்திற்கு விண்ணப்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் அவரது அதிகாரத்தின் கீழ் அதை வழங்காமல், அவ்வாறு வழங்கலாமா என, 28.07.2014 அன்று, மாநில சமூகநல ஆணையரிடம் அறிவுரை கோரியுள்ளார். மாநில சமூகநல ஆணையர் உரிய ஆவணங்களைப் பெற்று அனுமதி வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார் (ந.க.எண்.33410/மானியம்.1/2014, நாள் 3.09.2014). எனினும் பிரச்சினை உருவான நாள் வரை அந்த அனுமதிக் கடிதம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து சமூக நலத்துறை அலுவலகத்திடமிருந்து எந்தக் கடிதமும் இல்லை.

இதன் விளைவாக அந்த ஆவணம் மட்டும் இல்லாமல் மற்ற ஆவணங்களான கட்டிட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட 15 ஆவணங்களுடன் காப்பகத்தின் அனுமதித் தொடர்ச்சிக்கு சென்ற 15-09-2017 அன்று மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இன்றைய பிரச்சினை தொடங்கும் வரை (பிப் 20,2017) அனுமதித் தொடர்ச்சிக்கான ஆணை வரவுமில்லை. தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவும் இல்லை.

I.3 இப்போது அந்நிறுவனத்தின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை விவரம்

இந் நிறுவனத்தின் கீழ் பாலேஸ்வரம் உட்பட, கிளைக் காப்பகங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஐந்து நிலையங்கள் செயல்படுகின்றன. 2008ம் ஆண்டில் திண்டுக்கல்லில்தான் ‘இறந்து கொண்டிருப்பவர்களுக்கான பராமரிப்புக் காப்பகம்’ (Hospice) எனும் கருத்தாக்கத்துடன் முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பின் 2011ல் பாலேஸ்வரம் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் புதுச்சேரிக்குப் பத்து கி.மீ தொலைவில் புளிச்சப்பள்ளம் எனும் ஊரில் ஒரு சிறிய காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.. வேலூருக்கருகில் திருவல்லம் எனும் இடத்திலும் சிறு கிளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது இவை தவிர தாம்பரம் இரும்புலியூரில் கிறிஸ்தவ சபை கொடுத்துள்ள நிலம் ஒன்றில் ஒரு சிறிய காப்பகம் கட்டப்பட்டுள்ளது. சென்னை நகரில் காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவ மனைகளிலிருந்து இப்படிப் பாதுகாப்புத் தேவைப்படுகிற யாருமற்றோர் குறித்த தகவல்கள் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும்போது இவர்கள் அங்கு சென்று, உரிய ‘மெமொ’ எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களைத் தங்களின் வாகனத்தில் ஏற்றி வந்து இந்த இரும்புலியூர் காப்பகத்தில் தங்கவைக்கின்றனர். சுமார் 25 பேர்களுக்கு மேல் சேர்கிறபோது அதிகமாக உள்ளவர்களைத் தங்களின் ஆம்புலன்சுகளில் பாலேஸ்வரம் கொண்டு செல்வதாகக் கூறினர்.

இதற்கென இரண்டு ஆம்புலன்சுகள் உள்ளன. பெரியது TN19 L 2695; சிறியது TN57 AC 6327. இறந்தவர்களைக் கொண்டுவர என தனி ஆம்புலன்சுகள் கிடையாது. ஏன் எனக் கேட்டபோது தாங்கள் சாகும் தறுவாயில் உள்ளவர்கள் மற்றும் நோயாளிகளைத்தான் கொண்டுவருவதாகவும் இறந்த உடல்களைக் கொண்டுவருவதில்லை எனவும், காப்பகத்தில் இறப்பவர்களை அந்த வளாகத்திற்குள்ளேயே புதைப்பதால் அதற்கு வாகனம் தேவைப் பட்டிருக்கவில்லை எனவும் கூறினர்.

தவிரவும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் கோயம்பேடு காய்கறி வியாபாரிகளால் நன்கொடையாகக் கொடுக்கப்படும் காய்கறிகள் ஆகியனவும் இரும்புலியூரில் சேகரிக்கப்பட்டுப் பின் பாலேஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென TN 57 AM 3351  என்கிற எண்ணுள்ள சிறிய வான் ஒன்றும் இருந்துள்ளது. ராஜேஷ் என்கிற வாகன ஓட்டி தன் மனைவியுடன் இரும்புலியூர் காப்பகத்தில் இருந்துள்ளார்.

 

கடந்த பிப்ரவரி 19 அன்று இரும்புலியூர் காப்பகத்தில் இருந்துள்ளவர்களில் மூவரை பாலேஸ்வரம் கொண்டு செல்ல வேண்டி இருந்துள்ளது. அவர்கள் முறையே 1. விஜயகுமார் (65) த/பெ முத்துக்குமார். இவருக்கு ராஜிவ்காந்தி நினைவு மருத்துவமனைக் காவல்நிலைய ஆய்வாளர் கடந்த பிப் 13 அன்று மெமோ எழுதி இங்கு அனுப்பி உள்ளார். இரண்டாமவர் அன்னம்மாள் (75) க/பெ முருகேசன். இவருக்கு கோட்டூர்புரம் காவல்நிலைய ஆய்வாளர் பிப் 16 அன்று மெமோ எழுதி அனுப்பியுள்ளார். மூன்றாமவர் ‘பெயர் தெரியாதவர்’ (65). இவரை குரோம்பேட்டை உதவி ஆய்வாளர் பிப் 13 அன்று மெமோ எழுதி அனுப்பியுள்ளார்.

இந்த அன்னம்மாள் தன் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்தவர். சென்னையில் எங்கு செல்வது எனத் தெரியாமல் அலைந்து இறுதியாக பிப் 16 அன்று சின்னமலைப் பக்கம் வந்து அங்கே தனியாக அமர்ந்துள்ளார். சின்னமலை இயேசுவின் சீடர் புனித தாமஸ் வந்து இருந்ததாக நம்பப்படும் இடம். அங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் முதலியன உண்டு. அங்கிருந்த பாதிரியார் ஒருவர் இவரைக் கண்டு விசாரித்தபோது இந்த அம்மையார் தனக்கு யாரும் இல்லை எனவும் தன்னை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிடுமாறும் கேட்டுள்ளார். அவர் இரும்புலியூர் காப்பகத்துடன் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லியுள்ளார், அவர்கள் சின்னமலைக்கு அருகில் உள்ள கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு அந்த மூதாட்டியுடன் சென்று அங்குள்ள அதிகாரியிடம் மெமோ எழுதி வாங்கி இரும்புலியூர்க் காப்பகத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு வந்தபின், அங்கு சாகும் நிலையிலிருந்தவர்களை எல்லாம் பார்த்துவிட்டு அன்னம்மாளுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவர் தன்னை விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் போலீசில் பதிவு செய்து மெமோ எழுதி வாங்கியபின் அவர்களுக்கு காப்பாகம் பொறுப்பாகி விடுவதால் அப்படிச் செய்ய இயலாது எனவும், யாரும் உறவினர்கள் ஆதாரத்துடன் வந்தால்தான் விடமுடியும் என்பதுதான் காப்பகத்தின் விதி என்பதாலும் அவர் கேட்டவுடன் அவரை வெளியே அனுப்ப முடியவில்லை என காப்பகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இரும்புலியூர்க் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வந்த இரு மருத்துவர்களிடம் அன்னம்மாள் தன்னை விடுவிக்கக் வேண்டியதாகவும், அந்த மருத்துவர்கள் விரும்பாத ஒருவரை ஏன் இங்கே வைத்துள்ளீர்கள் எனக் கூறிக் கடிந்து கொண்டதாகவும் அன்னம்மாள் தரப்பில்  கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும் அன்னம்மாளின் நெருங்கிய உறவினருமான கிருஷ்ணனும் எங்களிடம் அவ்வாறே கூறினார்.

இந்தப் பின்னணியில்தான் இரும்புலியூரிலிருந்து அன்னம்மாளையும், உடனடியாக பாலேஸ்வரம் கொண்டு செல்லும் நிலையில் உள்ள முன் கூறிய விஜயகுமார் மற்றும் பெயர் சொல்ல இயலாத ஒருவர் உட்பட மூவரையும் பிப் 20 அன்று பாலேஸ்வரம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்களில் இறக்கும் தறுவாயில் இருந்த விஜயகுமார் 19 ந்தேதி மாலை இறந்துள்ளார். இறந்தவர்களைப் புதைக்க இங்கு வழி இல்லாததால் அவரது உடலை அங்கு கொண்டு சென்று விடுவது என ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ், தான் தன்னிச்சையாக முடிவு செய்ததாகக் கூறுகிறார்.St_Joseph_Hospice_750

அது மட்டுமல்ல. காப்பகத்திலுள்ள மூன்று வாகனங்களில் ஒன்று புளிச்சப்பள்ளம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி இருந்ததாலும், இன்னொரு வாகனம் பாலேஸ்வரத்தில் இருந்ததாலும் ஒரே வாகனத்தில் இறந்த விஜயகுமாரின் உடல், காய்கறிகள், அன்னம்மாள் மற்றும் பெயரில்லாத முதியவர் எல்லோரையும் ஏற்றிச் சென்றதாக ராஜேஷ் சொல்லுகிறார்.

பிணத்துடன் உட்கார்ந்திருந்த இருவரில் அன்னம்மாள் பயந்து வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் அழத் தொடங்கியுள்ளார். வான் டிரைவரைப் பொருத்த மட்டில் தான் தன்னிச்சையாக அவரை விட முடியாது எனவும் பாலேஸ்வரம் சென்று ஒப்படைத்துவிட்டால் பாதிரியார் போலீசுக்குச் சொல்லி முடிவெடுத்துக் கொள்ளட்டும் எனவும் எண்ணியதால் அந்த மூதாட்டி அழுத போதும் தான் அவரை விட முடிவில்லை எனவும் கூறினார்.

அழுது கொண்டே வண்டியில் வந்த அவரை வழியில் சிலர் கண்டு சந்தேகப்பட்டு, வேனை நிறுத்தி சாலவாக்கம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பிரச்சினையைக் கேள்விப்பட்டுக் காவல் நிலையத்திற்கு வந்த உள்ளூர் ம.தி.மு.க பிரமுகர் கருணாகரன் வேனை காப்பகத்திற்கு அனுப்பக் கூடாது என அவரது ஆதரவாளர்களுடன் காவல்துறை டி.எஸ்.பி மதிவாணனிடம் வாதிட்டுள்ளார். எனினும் முறையான போலீஸ் மெமோக்கள் இந்த மூவருக்கும் உள்ளதால் வேன் செல்வதைத் தான் தடுக்க இயலாது எனக் கூறியதாக டி.எஸ்.பி மதிவாணன் எங்களிடம் கூறினார். பாலேஸ்வரம் காப்பக நிறுவனர் பாதிரியார் தாமசிடம் தனிப்பட்ட பகையுள்ள கருணாகரன் அதை ஏற்கவில்லை. இதற்கிடையில் யாரோ அங்கிருந்த வேனின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். அதை ஒட்டி கருணாகரன் மீது இ.த.ச 147, 148, 341, 294(b), 506(1) மற்றும் பொதுச் சொத்து அழிப்புச் சட்டம் (PPD) 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து (சாலவாக்கம் காவல் நிலையம், F.I.R No 42 / 2018) அவர் கைது செய்யப்பட்டார். வேனில் இருந்த உடல் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைக்குப்  பின் பாலேஸ்வரம் காப்பகம் வசம் ஒப்புவிக்கப்பட்டு அங்கே உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது. அன்னம்மாளிடம் இருந்த தொலைபேசி எண்ணைப் பெற்று அவரது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் அவர் ஒப்புவிக்கப்பட்டார்.

I.4. பாலேஸ்வரம் காப்பகத்தின் மீது அரசு தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை

இச்சம்பவத்தை ஒட்டி அடுத்த நாள் (பிப் 21) ஆர்.டி.ஓ நேரில் வந்து இல்லத்தைப் பார்வையிட்டு உள்ளிருந்தோரை விசாரித்தும் சென்றுள்ளார். இரண்டாம் நாள் (22.02.2018) காஞ்சிபுரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய்க் கோட்ட அலுவலரிடமிருந்து (RDO) அந் நிறுவனத்திற்கு குற்ற விசாரணைச் சட்டம் 133 (ஆ) பிரிவின் கீழ் விளக்கம் கோரும் அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

(1)தமக்கு வந்துள்ள புகார்களின் அடிப்படையில் இந்நிறுவனத்தில் போதிய சுகாதாரம் இன்மை, இறக்கும் நபர் அனுமதியின்றி புதைக்கப்படுதல், பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது, இக்காப்பகம் உரிய துறைகளின் அனுமதி இன்றி செயல்படுவது முதலியன தெரியவருகிறது (2) அதில் உள்ளவர்களுக்கும், பிற ஆதரவற்ற நபர்களுக்கும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிப்பதாகவும் தெரிகிறது (3) இவற்றைத் தடுக்க வேண்டும்  எனக் கோரப்படுகிறது (4) எனவே உரிய அனுமதியில்லாத இந்தக் காப்பகத்தை ஏன் தடை செய்யக் கூடாது என ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் தம் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுதான் இந்த விளக்க அறிவிப்பின் சாரம்.

இக்கடிதம் பிப்ரவரி 22 தேதியிட்டு அனுப்பப்படுகிறது. எனவே பிப்ரவரி 29 வரை பதிலளிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கால அவகாசம் உள்ளது. பிப்ரவரி 28 அன்று நிறுவனம் சார்பாக நிர்வாக இயக்குநர் தாமஸ் அவர்களின் பதில் அனுப்பபப்டுகிறது. (1) தாம் உரிய அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளதாகவும், உரிய காலகெடு முடியும் முன்பே தான் அனுமதி புதுப்பிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவற்றுக்குரியதாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும், (2) தாங்கள் சேர்க்கை மற்றும் சுகாதாரம் தொடர்பாகக் கடைபிடிக்கும் நடைமுறைகளை விவரித்தும், (3) புதைப்பதற்குத் தடை இல்லை எனத் தாங்கள்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றுள்ள கடித நகலை இணைத்தும் (4) முன்னதாகத் தனி வருவாய் ஆய்வாளர், மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் முதலியோர் காப்பகத்தில் தரமான சமையல் மற்றும் சுகாதாரமான சூழல் உள்ளதாக அளித்துள்ள சான்றுகளை முன்வைத்தும் அந்தப் பதில் உள்ளது.

ஆனால் உரிய காலகெடுவுக்குள் அளிக்கப்பட்ட இந்தப் பதில் விளக்கக் கடிதம் சென்றடையும் முன்பே, காலகெடு முடிவதற்கு உள்ளாகவே சென்ற பிப்ரவரி 22 அன்று புனித ஜோசப் ஹாஸ்பிஸ் எனப்படும் இந்நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கே தங்க வைக்கப்பட்டிருந்த 323 (அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கணக்குப்படி 294) பேர்களும் பிப்ரவரி 22, 23, 24 தேதிகளில் வெளியேற்றப்பட்டுப் பல்வேறு காப்பகங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் கீழ்க்கண்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவை: 1.DGS காப்பகம், மதுராந்தகம் 2.பார்வையற்றோர் காப்பகம், பெரும்கண்டிகை, அச்சரபாக்கம் 3.அன்னை கருணாலயம், திண்டிவனம் 4.அன்னை இல்லம், சோளிங்கநல்லூர் 5.கலைச்செல்வி கருணாலயம், சேலையூர் 6.லிட்டில் உட்வர்ட்ஸ், ECR சாலை, பனையூர் 7.Shelter for Urban Homeless, தண்டையார்பேட்டை 8.சரணாலயம் ட்ரஸ்ட் கருணை இல்லம், பெருமாள்பேட்டை, வாணியம்பாடி 9.செயின்ட் ஆனிஸ் இல்லம், குடியாத்தம் 10.SRDPS, பெருமாள்நகர், திருப்பத்தூர் 10.ORD, வேலூர்.

எனினும் காஞ்சிபுரம் RDO மற்றும் நிர்வாக நடுவர் சென்ற பிப் 22 அன்று குற்ற விசாரணை முறைச் சட்டம் 133 (ஆ) வின் படி பாலேஸ்வரம் காப்பகத்தை ஏன் மூடக் கூடாது என அனுப்பிய அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. ரமேஷ் அவர்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளார் (தேதி: 22.03.2018, WP. No 5240 of 2018 & WMP No 6430).

I.5 காப்பகத்தில் இருந்த குழந்தைகள் தொடர்பான நடவடிக்கை

காப்பகத்தில் ஒன்பது குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காப்பகத்தில் வேலைசெய்பவர்களின் குழந்தைகள் எனவும் அக்குழந்தைகள் அந்தக் காப்பகத்தில் தம் பெற்றோர்களுடன் வசிக்கிறார்கள் எனவும் காப்பகம் தரப்பில் சொல்கின்றனர். நாங்கள் அப்படியான மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் சந்தித்தோம். அவர்களில் ஒருவர் ஏஞ்சலினா, குழந்தையின் பெயர் மஞ்சுளா (வயது 1 1/2). இன்னொருவர் மஞ்சுளா, குழந்தை ஜோபின் மஞ்சு (7 1/2 வயது). மூன்றாமவர் சத்யா க/பெ முருகன், குழந்தையின் பெயர் இளவரசி (வயது 1 1/2). இவர்களில் மஞ்சுளா அங்கு எங்கள் ஆய்வின் போது தேவையான விவரங்களை எடுத்துத் தந்து கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். மற்ற இருவரில் ஒருவர் பேசும் நிலையில் இல்லை. மூன்றாமவர் பேச இயலாதவராக இருந்தபோதும் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடியவராக இருந்தார்.

பிற ஆறு குழந்தைகளின் விவரங்களாவன: 1.சூரிய பிரகாஷ் (9) த/பெ ரவி 2.தேசிகபிரியன் (5) த/பெ பிரேம்குமார் 3.சபிதா ஜான்சி (8 1/2) த/பெ ஜோசப் சகாயராஜ்- செலின் மேரி 4.ஜோஷி (1 1/2) தா/பெ சின்னபொண்ணு – பிரவீன் 5.ரோஹினி (7 1/2) த/பெ இன்னாசியார்- பிரகாஷ் மேரி 6.எம்மா (3 1/2), த/பெ மணி – நாகம்மாள்.

ஆக மொத்தம் 9 குழந்தைகள் அந்தக் காப்பகத்தில் தம் பெற்றோருடன் இருந்துள்ளனர். சில குழந்தைகளுக்குத் தாய் மட்டும், சிலருக்கு பெற்றோர் இருவரும் இருந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இங்கு அடைக்கலமாக வந்து பின் குணமாகி இங்கேயே தொடர்ந்து பணியாளர்களாக இருப்போரின் குழந்தைகள். சித்த சுவாதீனமற்று வீட்டை விட்டு வந்து, அல்லது எல்லோராலும் கைவிடப்பட்டு தெருவில் அலைந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள் கருத்தரித்து இங்கு காவல்துறை மூலமாகவோ வேறு எப்படியோ அடைக்கலமாக வரும்போது அவர்கள் இங்கே தங்க வைக்கப்பட்டுக் குழந்தைகளைப் பெறுகின்றனர். அவர்களில் பலர் வேறு எங்கும் செல்ல வழியற்று இங்கேயே தங்கி விடுகின்றனர். இந்நிறுவனம் அவர்களை ஊழியர்களாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஒன்பது குழந்தைகளில் நால்வர் பாலேஸ்வரம் மான்ட்ஃபோர்ட் சென்டினரி ஹையர் செகன்டரி பள்ளியிலும் மற்ற நால்வர் பாலேஸ்வரம் அங்கன்வாடியிலும் படித்து வருகின்றனர். ஒரு குழந்தை தாயுடன் உள்ளது.

பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்த அனைவரையும் அரசு வெளியேற்றியபின் இங்கு ஊழியம் செய்த இவர்களும், இந்தக் குழந்தைகளும் அங்கேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்ற பிப் 27 அன்று செங்கல்பட்டு Child Welfare Committee (CWC) அமைப்பினர் அங்கு வந்து அங்குள்ள குழந்தைகளை உரிய அனுமதி இன்றியும், மேற்படி குழந்தை நலக் குழுவிற்கு (CWC) தெரிவிக்காமலும் ‘சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக’ குற்றம் சாட்டி எல்லாக் குழந்தைகளையும், அவர்கள் அழ அழ முரட்டுத்தனமாக வேன்களில் ஏற்றி வேறு இரண்டு அனாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கென டாக்டர் மணிகண்டன் தலைமையில் உள்ள அந்த அமைப்பின் ‘லெட்டர் பேடில்’ அவசர அவசரமாக அடித்தல் திருத்தல்களுடன் கூடிய, தெளிவற்ற கையொப்பத்துடன் கூடிய ‘ஆணை’ ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்தகவல் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட, அவர் தலையிட்டு குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

எனினும் தற்போது பாலேஸ்வர காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் மீது இது தொடர்பாக Juvenile Justice (Care and Protection of Children Act) சட்டம் 34 மற்றும் 42 பிரிவுகளின் கீழ் வழக்கொன்று தொடரப்பட்டு உத்திரமேரூர் நடுவர் நீதிமன்றத்தில் (Dt Munsif cum Judicial Magistrate Court) விசாரணையில் உள்ளது. பாதிரியார் தாமஸ் மீது அனுமதி இல்லாமல் குழந்தைகளை வைத்திருந்தது, அரசுக்குத் தெரிவிக்காமல் குழந்தைகள் காப்பகம் நடத்தியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடக்கிறது. குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளனர். இது குழந்தைகள் காப்பகம் அல்ல என்கிற அடிப்படையில் பாதிரியார் தரப்பில் வழக்காடப்படுகிறது.

I.6. நாங்கள் சந்தித்தவர்கள் அளித்த வாக்குமூலங்கள்

I.6.1. பாதிரியார் தாமஸ், நிர்வாகி பாலேஸ்வரம் கருணை இல்லம்

“நான் இங்கிலாந்தில் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்துவிட்டு இந்தியா திரும்பியபின் முதுமையில் கைவிடப்பட்டு மரணத் தறுவாயில் உள்ளவர்களைப் பராமரித்து அவர்கள் ஒரு கண்ணியமான மரணத்தை அடைய உதவுவது என்கிற முடிவை எடுத்து இந்தப் பணியைத் தொடங்கினேன். முதலில் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு, பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் ஆகியவற்றில் இத்தகைய Hospices தொடங்கினேன். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும் வேலூரிலும் தொடங்கியுள்ளோம். இனிமேல் மருத்துவம் பயனளிக்காது என டாக்டர்கள் முடிவெடுக்கும் நோயாளிகள் குறித்த தகவல்களை மருத்துவமனைகளில் இருந்து எங்களுக்கு அனுப்புகிறார்கள். உரிய மருத்துவச் சான்றுகளைப் பெற்று அவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். தெருவோரங்களில் இப்படிச் செத்துக் கொண்டிருப்பவர்கள், அனாதைகளாகக் கிடப்போர் குறித்த தகவலை காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் ‘மெமோ’ எழுதி வாங்கிக் கொண்டு இங்கே அழைத்து வருகிறோம்.

நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வெண்டும். குணமாக்க முடியாத நோய், சீழ் வடியும் உடல், கழுவப் படாத நரகல்கள் ஆகியவற்றுடன் வரும் நோயாளிகளைப் பராமரிப்பது ரொம்பவும் கடினமான, கடும் சகிப்புத்தன்மை வேண்டும் ஒரு பணி.

உரிய போலிஸ் மெமோ அல்லது மருத்துவச் சான்றிதழில்லாமல் யாரையும் நேரடியாக இங்கே அனுமதிப்பதில்லை. இயற்கைச்சூழலும் காற்றோட்டமும் உள்ள எங்கள் இல்லத்தில் பணியாற்றுபவர்கள் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். இங்கு ஆண்கள், பெண்கள், செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தனித்தனியாக போதிய கழிப்பறைகளுடன் கூடிய வார்டுகள் உண்டு.  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியான பெண்கள் ஆகியோரும் இங்கே அனுப்பப் படுகிறார்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம், இட நெருக்கடி ஆகியவற்றின் விளைவாக இன்று ஒருவரைப் புதைத்த இடத்திலேயே இன்னொருவரைப் புதைக்கும் முறை உலகில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கேரளத்தில் இப்படியான முறை அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டிலும் கீழ்ப்பாக்கத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது. அப்படியான ஒரு முறையைத்தான் இங்கு பின்பற்றுகிறோம்.  30X20 அடி பள்ளம் ஒன்று தோண்டி, கீழ்ப் பகுதியில் நிலத்தடி நீர் வராத அளவு கான்க்ரீட் தளம் அமைக்கப்படுகிறது. அதன்மீது கான்க்ரீட் தூண்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கிடையே கம்பிப் படுக்கை உருவாக்கப் படுகிறது. ஒவ்வொரு படுக்கைக்கும் இடையே காற்றுப் புகாத வண்ணம் தனித்தனி அறைகள் உருவாக்கப் படுகின்றன. இறந்த உடல் கான்க்ரீட் படுக்கையில் வைக்கப்பட்டு காற்றுப் புகாத வண்ணம் அடைக்கப்படுகிறது. 70% தண்ணீரும் 30% எலும்பும் உள்ள மனித உடல் இறந்தபின் தானே மக்கி அழிந்து போகும். இதுவரை இந்த ஏழு அண்டுகளில் 1663 பேர் இப்படிப் புதைக்கப்பட்டுள்ளனர்.

இங்கே நிரந்தர மருத்துவர்கள் யாரும் இல்லை ‘அவுட் ரீச்’ புரோக்ராமில் ‘கற்பக விநாயகர் மருத்துவ மனையிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு டாக்டர்கள் வந்து முதியவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ உதவி அளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற நர்சுகள் இருவார் உள்ளனர்.

யாரேனும் வெளியில் உள்ளவர்கள் வந்து இங்கிருப்பவர்கள் தம் உறவினர்கள் எனச் சொல்லி அழைத்துப் போக வேண்டும் என்றால் அவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை முதலான அடையாளங்களுடன் வர வேண்டும். அப்படி வந்தால் அவர்களோடு அவர்கள் தேடி வரும் நபரை அனுப்பி விடுவோம்.” – இவை பாதிரியார் தாமஸ் கூறியவை

வேலை செய்பவர்கள் பற்றி அவரிடம் கேட்டபோது மொத்தமாக இங்கு 24 பேர் வேலை செய்வதாகவும். தோட்ட வேலைக்கு 6 நபர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மனநோயாளிகளுக்கான வார்டு, இறக்கும் தறுவாயில் உள்ளோருக்கான வார்டுகள் தனியாக உள்ளன எனவும், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான வார்டுகள் உள்ளன எனவும் காட்டினார்கள்.

இறப்புச்சான்றிதழ் பற்றிக் கேட்டபோது பாதிரியார் சொன்னது:

“இறந்து போகிறவர்கள் குறித்த தகவலை படிவம் 2A ல் கிராம அலுவலரிடம் அளிக்கிறோம். காவல் நிலையத்திற்கும் தகவல் அளிப்போம். மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு பதிவுத் தபாலில் தகவல் அனுப்புவோம். 09.01.2018 வரை இவ்வாறு பதிவுத் தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2017 அக்டோபர் 31வரை கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்துள்ளோம். ஆனால் 2018ல் இருந்து படிவம் 4A வில் மருத்துவரின் சான்றுடன் விண்ணப்பத்தை அளிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் கேட்டார். ஆனால் நாங்கள் மருத்துவமனை நடத்தவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தோம். அவர் ஏற்கவில்லை. நாங்கள் அனுப்பிய பதிவுத் தபாலை அவர் வாங்காமலேயே திருப்பி அனுப்பிக் கொண்டுள்ளார்.”

மேலும் பாதிரியார் தாமஸ் கூறியவை:

“இந்தக் கட்டிடத்தைக் கட்டிய வெள்ளை மேஸ்த்திரி என்பவர் பாதிக் கட்டிடம் முடியும்போது மணல் விலை ஏற்றம் முதலியவற்றைச் சொல்லிப் பேசிய தொகையைக் காட்டிலும் கூடுதலாகக் கேட்டார். நான் அந்தத் தேதி முதல் கூடுதலாகத் தருகிறேன் என்றேன். அவர் தொடக்கம் முதல் கூடுதல் தொகை கணக்கிடப்பட வேண்டும் என்றார். சுமார் 30 இலட்ச ரூ கூடுதலாக அவர் கேட்டபோது நான் மறுத்து விட்டேன். அவருக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் பிரமுகர் கருணாகரன் என்பவர் வந்து பேசினார். காஞ்சிபுரம் எஸ்.பி மனோகரன் அவர்களிடமும் புகார் செய்தார்கள். அவர் கூப்பிட்டு விசாரித்தபோது எல்லா ஆவணங்களையும் காட்டினேன். அவர் என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவரது அப்பா தாமோதரன் ஆகிய இருவரும் 2012ல் என்னோடு நில எல்லை தொடர்பான பிரச்சினைக்கு வந்தார்கள். ஒரு நாள் நான் வந்து கொண்டிருந்தபோது ஆலஞ்சேரியைச் சேர்ந்த இரண்டு பேர்கள் என்னை அருகில் இருந்த மலைக்குக் கடத்திச் சென்று பணம் கேட்டு அடித்து மிரட்டினார்கள். அவர்களில் ஒருவர் காலில் முள் குத்தி விழுந்தபோது நான் தப்பித்து ஓடி வந்தேன்.

என்மீது பல குற்றச்சாட்டுகளையும் வதந்திகளையும் பரப்பினார்கள். ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து இல்லத்தில் உள்ளவர்களைக் கொன்று எலும்புகளையும், உடல் உறுப்புகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன் என்று வதந்தி பரப்பினார்கள். புகார்களும் எழுதினார்கள். விசாரணைக்கு வந்த அதிகாரிகள் கல்லறையை உடைத்துப் பார்த்தனர். உத்தரமேரூரிலிருந்து வந்து விசாரணை செய்த உளவுத்துறை போலீஸ் சிவராமன் சடசடவென எலும்புகள் கடும் நாற்றத்துடன் விழுவதைப் பார்த்து ஓடினார். 2012ம் ஆண்டில் இது தொடர்பாக விசாரணைகள் செய்து பரிசோதித்தும் பார்த்தார்கள். நான் விளக்கங்கள அளித்தேன். மேல் நடவடிக்கை இல்லை.

இது தவிர ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர், மற்றும் காவல்துறையினர் வந்து ஆய்வு செய்து குறிப்பேட்டில் பதிவும் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஏழாண்டுகளில் எந்தக் குற்றச்சாட்டையும் அதிகாரிகள் வைத்ததில்லை.

இப்போது நடந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியும். உரிய மெமோ முதலான ஆவணங்களுடன் வந்த எங்கள் வண்டியைத் தடுத்து நிறுத்தி அதன் கண்ணாடியையும் உடைத்தார்கள். மையத்தில் இருந்த அனைவரையும் இரண்டு நாட்களில் RDO தலைமையில் வந்த குழுவினர் எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டார்கள். எங்கே கொண்டுபோனார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் நலக் குழுவினர் (CWC) வந்து எங்கள் பணியாளர்களின் குழந்தைகளையும் பெற்றோர்களிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்ல முயன்றார்கள். மீடியாக்கள் அவதூறுகளைப் பரப்பின. சிரமப்பட்டு உருவாக்கிய நிறுவனம் மூன்றே நாட்களில் இப்போது மூடப்பட்டு விட்டது.”

I.6.2 .இராஜேஷ் (26) த.பெ ராம் பண்டு, ஓட்டுநர், செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ்

“நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். நல்லா தமிழ் பேசுவேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் மனைவி தம்பரம் இரும்புலியூர்ல இருக்கிற எங்க ‘கலெக்‌ஷன் சென்டரை’ பாத்துக்கிறாங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு (பிப் 20) காலையில் நான் இரும்புலியூரிலேருந்து மூணு பேரை ஏத்திக் கொண்டு போய் பாலேஸ்வரத்துல விடணும். அந்த மூணு பேருல ஒருத்தர் அன்னம்மாள் என்கிற பாட்டி. 16ந் தேதி அன்னிக்கு கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசன்ல மெமோ போட்டு வச்சிட்டு சொன்னாங்க. 17ந் தேதி அவங்களை இரும்புலியூர்ல கொண்டு வந்து தங்க வச்சோம். இன்னொருத்தர் விஜயகுமார். இவரை ஒரு வாரத்துக்கு முன்னாடியே ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்தோம். அவருக்கு அங்கே உள்ள போலீஸ் ஸ்டேசன்ல மெமோ குடுத்தாங்க. இன்னொருத்தரையும் அதே நாள்ல குரோம்பேட்டையிலேருந்து கொண்டு வந்தோம். அந்த போலீஸ் ஸ்டேசன்ல மெமோ குடுத்து அனுப்புனாங்க.

19ந் தேதி இரவு இந்த விஜயகுமார் செத்துப் போனார். செத்துப் போறவங்கள ஏத்திட்டுப் போற வேன் அன்னைக்கு ரிப்பேர். புளிச்சபள்ளம் போற வழியில மோதி ரிப்பேர். ஆனால் இறந்தவரை பாலேஸ்வரம் கொண்டுபோய்தான் அடக்கம் பண்ணனும். என்ன செய்றதுன்னு தெரியல. இன்னொரு வேன்ல எப்போதும் இந்த கலெக்சன் சென்டர்ல இருக்குறவங்களயும் காய்கறிகளையும் ஏத்திட்டுப் போவோம். அன்னிக்கு வேற வழி இல்லாம நான் அந்தக் காய்கறி வண்டியிலேயே அந்த டெட் பாடி’யையும் ஏத்திட்டுப் போகலாம்னு முடிவு பண்ணினேன். வேன்ல முன்னாடி காய்கறிகளை வச்சிட்டு, டெட் பாடியை ஒரு ஒரமா போட்டுட்டு அந்தப் பாட்டியையும், பெயர் தெரியாதவரையும் சீட்ல உக்கார வச்சு கதவை மூடிட்டு காலையில் (பிப் 20) வண்டியை ஓட்டிட்டுப் போனேன். புறப்படும் போதெல்லாம் அந்த ரெண்டு பெரும் ஒண்னும் சொல்லல. ஆனா கொஞ்ச நேரத்துல திருமுக்கூடல் கிட்ட போகும்போது இரண்டு பேரு வண்டியை நிப்பாட்டச் சொன்னாங்க. வேன்ல உட்கார்ந்திருந்த பாட்டி, ஒரு ஓட்டை வழியா கையை நீட்டி அவங்களை நிப்பாட்டச் சொன்னாங்களாம்.

அது ரொம்ப மோசமான ரோடு. தூக்கிப் போட்டபோது அந்தப் பிணம் ஆடுறதப் பார்த்து அந்தப் பாட்டி பயந்துட்டு. எல்லாரையும் இறக்கிவிடச் சொன்னாங்க. மெமோ கொடுத்து போலீஸ் அனுப்பி வச்சிருக்காங்க, அப்படி விட்ற முடியாதுன்னு சொன்னேன். அவங்க பிடிவாதமா இருந்ததால வாங்க சாலவாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்குப் போகலாம்னு கூப்பிட்டேன். அவங்கள்ல ஒருத்தர் ஏறி என் பக்கத்துல உட்கார்ந்துட்டார். இன்னும் மூணு நாலு பேர் பைக்ல பின்னாடி வந்தாங்க.

போலிஸ் ஸ்டேஷன்ல அந்த பாட்டி வச்சிருந்த பேப்பர்ல இருந்த நம்பர் ஒண்ணுக்குப் போன் பண்னினாங்க. அவங்க சொந்தக்காரங்க வந்தா எழுதி வாங்கிட்டு அந்த பாட்டியை ஒப்படைச்சிடலாம்ன்னு ஃபாதர் சொன்னார். அதுக்குள்ள அங்கே கருணாகரன் வந்து யாரையும் பாலேஸ்வரம் அனுப்பக் கூடாதுன்னு தராறு பண்ணினார். முறைப்படி மெமோ வச்சிறுக்காங்க. அதனால அவங்களத் தடுத்து நிறுத்த முடியாதுன்னு போலீஸ் சொன்னாங்க. கருணாகரன் ஒத்துக்கல. அதுக்குள்ள அந்தப் பாட்டியோட சொந்தக்காரங்களுக்குத் தகவல் போய் அவங்களும் வந்தாச்சு. வேன் கண்ணாடியையும் யாரோ உடைச்சிட்டாங்க. கருணாகரனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்தப் பாட்டியை அவங்க சொந்தக் காரங்களோட அனுப்பிச்சுட்டாங்க. டெட் பாடியை தாம்பரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி போஸ்ட்மார்டம் பண்ணிட்டு எங்க கிட்ட ஒப்படைச்சாங்க. பாலேஸ்வரம் கொண்டு வந்து அங்கேயே எல்லோரையும் புதைக்கிற இடத்துல புதைச்சிட்டோம்.

I.6.3.அருட் பணியாளர் ஏசுமரியான், வழக்குரைஞர்

2011 டிசம்பர் 28 அன்று காஞ்சி மாவட்ட சமூகநலத் துறை இந்தக் கருணை இல்லத்திற்கு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக 2011 ஆகஸ்டில் கல்லறைக்கு ஒப்புதல் (No Objection) வழங்கப்பட்டுள்ளது. 2014 செப் 19 அன்று மாவட்ட சமூக நலத்துறை ஒப்புதல் நீடிப்பு செய்துள்ளது. 2017 செப் 15 அன்று ஒப்புதல் நீடிப்புக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 2017 செப் 16 அன்று மாவட்ட அளவிலுள்ள துணை சுகாதார இயக்குனரே சுகதாரச் சான்றை அளிக்கலாம் எனப் பொது சுகாதார இயக்குநர் அறிவுறுத்தி இருந்தும் மாவட்டத்தில் உள்ள துணைச் சுகாதார அதிகாரி அந்தச் சான்றிதழை வழங்கவில்லை. பார்வையாளர்கள் குறிப்பேட்டில் (Visitor’s Report) 2017 செப் 21 அன்று தனிவருவாய் அதிகாரி, வட்ட வழங்கு அலுவலகம் மேற்கொண்ட கள ஆய்வில் நல்ல உணவு, நல்ல முறையில் maintenance மேற்கொள்ளப் படுவதாகப் பாராட்டுக் குறிப்பு உள்ளது; 2017 டிச 08 அன்று சென்னை மருத்துவக் கல்விக்கான துணை இயக்குநர் டாக்டர் சுவர்ணலதா எம்.டி. இந்த இல்லம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதாகவும் இங்கு அப்போது இருந்த 407 பேர்களும் (ஆண்கள் 235, பெண்கள் 172) சிறந்த மருத்துவக் கவனிப்புகள் அளிக்கப்பட்டு அன்புடனும், நல்ல உணவளித்தும், அமைதியாக உறங்க வகை செய்தும் பேணப்படுகின்றனர் எனவும் பார்வையாளர் குறிப்பு நோட்டில் பதிந்துள்ளார்.

அனுமதி நீடிப்பு காலாவதி ஆகியும் அடுத்த மூன்று மாதம் வரை அனுமதி நீடிப்பும் அளிக்கப்படவில்லை. மாறாக 2018 பிப் 22 அன்று ஒரு வாரத்துக்குள் விளக்கம் கோரிக் கடிதம் ஒன்று (show cause notice) உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய்க் கோட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப் படுகிறது. கொடுக்கப்பட்ட கெடுவிற்குள் 2018 மார்ச் 1 அன்று உரிய விளக்கத்தை பாதிரியார் அனுப்புகிறார். ஆனால் கெடு முடியும் முன்பே விளக்கமளித்தும் அந்த விளக்கம் வரும்வரை கூடப் பொறுக்காமல் ஏன் அந்த இல்லத்தில் இருந்த 323 பேரையும் வெளியேற்றினார்கள்? நடவடிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட தவறுகள் திடீரென மேற்கொள்ளப்பட்டதல்ல. மாறாகத் தொடக்கத்திலிருந்து இருந்து வந்தவைதான். திருத்தப்பட முடியாத ஒன்றும் அல்ல. திருத்தப்படக் கூடியவைதான். பின் ஏன் அத்தனை அவசரமாக அங்கிருந்த சாகும் தருவாயில் இருந்தவர்களையும், மன நோயாளிகளையும் வெளியேற்றினீர்கள். வெளியேற்றிய சிலரை செங்கல்பட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து வைத்தீர்கள். அவர்கள் இப்போது பிச்சை எடுத்துக் கொண்டு வீதிகளில் அலைகிறார்களே? ஏதோ அந்தப் பாதிரியாரும் அந்த நிறுவனமும் கிரிமினல் குற்றம் ஒன்றைச் செய்துள்ளதைப் போல ஒரு கருத்தை ஏற்படுத்துகிறீர்கள். criminal negligence எல்லாம் criminal குற்றங்கள் ஆகிவிடுமா?

I.6.4 பாலேஸ்வரம் கிராம மக்கள் சொன்னவை:

“இங்கே 12 வருசமா இந்தக் காப்பகம் செயல்பட்டு வருது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவங்க யாரையும் அவங்க வேலைக்கு எடுக்குறது இல்ல. இங்கே இருக்கிறவங்க யாரும் உள்ளே போய் பார்க்கிறதுக்கு அனுமதியும் இல்லை. எல்லாம் மர்மமாத்தான் நடக்குது. சாகுறவங்களைக் கண்ணியமா சாக அனுமதிச்சுப் புதைக்கிறதுதான் அவங்க நோக்கமுன்னா ஏன் வெளியிலேருந்து பிணத்தை இங்கே கொண்டு வர்றாங்க? எங்கேயாவது செத்த உடல் கிடைச்சா உடனே ஓடிப்போய் தூக்கிட்டு வந்துடுறாங்க. இங்கே யாரோ ஒருத்தர் அநாதையா வந்தார். அவரை நாங்க சோறு போட்டுக் காப்பாற்றி வந்தோம். அவரையும் ஒரு நாள் இங்கே இருந்து தூக்கிட்டுப் போயிட்ட்டாங்க. நாங்க போய் அவர் இருக்காரான்னு பாக்கணும்னு கேட்டதுக்கு உள்ளே அனுமதிக்க மாட்டேன்னுட்டாங்க.”

அப்படி அவர்களால் காப்பாற்றப்பட்டவரின் பெயர் என்ன, எந்த ஊர்க்காரர் எனக் கேட்டதற்கு “தெரியாது” என அவர்கள் பதில் கூறினர்.

I.5.5. கருணாகரன், மாவட்ட ம.தி.மு.க அவைத் தலைவர்

எங்க தலைவர் (வை.கோ) அறிக்கையில் சொல்லியுள்ளதை நீங்க அப்படியே எடுத்துக்கலாம். இந்த இல்லத்தை தொடங்குறதுக்காக ஃபாதர் தாமஸ் இங்கே வந்தபோது ஒரு நல்ல காரியம் என்கிற அடிப்படையில் அவர்கள் மின்சார இணைப்பு பெறுவதற்கெல்லாம் நான்தான் உதவினேன். கொஞ்ச நாளில் அவருக்கும் அந்த இல்லக் கட்டிடத்தைக் கட்டித் தந்த வெள்ளை மேஸ்திரி என்கிற கான்ட்ராக்டருக்கும் பிரச்சினை வந்தது. அதிகாரிகள் அல்லது விசாரணக்கு யார் போனாலும் பணத்தைக் கொடுத்து அந்த ஃபாதர் சரி செய்து விடுவார். அந்த விடுதியில் அடைத்து வைத்திருப்பவர்களில் எண்பது சதம் பேர் விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டவர்கள்தான். மற்ற இருபது சதமும் மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விடுவிப்பதுதான் இனி என் கடமை என முடிவெடுத்தேன். பொன்னையா கலெக்டரைச் சந்தித்து அந்த விடுதிக்குச் சென்று ஆய்வு செய்யுங்கள் எனக் கேட்டேன். எஸ்.பி யைப் பார்த்து, unknown body ஐ dispose செய்ய முறையான procedure, எதையும் கடைபிடிக்காமல் dispose பண்ணுகிறார்களே எனக் கேட்டேன். “ஆமாம், ஆனால் நான் மட்டும் என்ன செய்றது. கலெக்டரும் சேர்ந்துதானே செய்யணும்” என்று அவர் சொன்னார். RDO பன்னீர்செல்வம் ஐந்து உடல்களை வெளியே எடுக்கச்சொல்லிப் பார்த்தார். ஒரு உடலில் நெற்றியில் காயம். இன்னொன்றில் உடல் பூராவும் காயம். கேட்டதுக்கு, ‘விழுந்துட்டாங்கன்னு’ பதில் வந்தது. 45 உடல்கள் முறையான விதிகள் கடைபிடிக்கப்படாமல் வச்சிருக்காங்க, நிறைய தவறுகள் நடந்துள்ளது என அவர் (RDO) அறிக்கை கொடுத்தார்.

சம்பவம் நடந்த அன்னிக்கு கவிஞர் கிருஷ்ணன் எனக்கு போன் பண்ணி, “எங்க அக்காவை சாலவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல புடிச்சு வச்சிருக்காங்க. போய் என்னன்னு பாருங்கன்னு” சொன்னார். நடந்தது இதுதான். அந்த அம்மா வீட்ல கோவிச்சுட்டு வந்துட்டாங்க. சென்னை சின்னமலையில் வந்து உட்கார்ந்திருக்கும்போது அங்க வந்த ஃபாதர் கிட்ட, ஏதாவது ஒரு ஆஸ்ரமத்தில சேர்த்து விடுங்கன்னு கேட்டுருக்காங்க. அவர் இவங்களை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள விடுதிக்கு (புனித ஜோசஃப் இல்லக் கிளை) அனுப்பி வச்சிருக்காங்க. அந்த அம்மாவுக்கு அங்கே இருக்கப் பிடிக்கல. இரண்டு நாள் கழிச்சு அவங்களை பாலேஸ்வரம் கொண்டு செல்ல வேன்ல ஏத்தி இருக்காங்க. அதுல ஒரு பிணம், காய்கறி எல்லாம் ஏத்தி இருந்துருக்கு. இவங்க கத்தி அழ ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா வேன் டிரைவர் அவங்களை உள்ளே வச்சு வேன் கதவைப் பூட்டிட்டு ஓட்டி வந்துட்டு இருக்கும்போதுதான் திருமுக்கூடல் அருங்குன்றம் வரும்போது மக்கள் பிடிச்சு சாலவாக்கம் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தது, நான் போய் வேன்ல இருந்தவங்கள விடுவிச்சு நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். வண்டிய விட முடியாதுன்னு சொன்னேன். எஸ்.பி, ஆர்.டி.ஓ எல்லாருக்கும் போன் பண்ணினேன். ஆனால் அங்கே இருந்த எஸ்.ஐ யும், டி.எஸ்.பியும், “எல்லா டாகுமென்ட்சும் வச்சிருக்காங்க, அதனால வண்டிய விடுங்கன்னு” சொல்லி வற்புறுத்துனாங்க. பாலேஸ்வரத்துலருந்து வந்து கருணை நிலையம் சார்புலயும் புகார் கொடுத்தாங்க. என் மேல கேஸ் பதிவு பண்ணி ரிமான்ட் பண்ணினாங்க.

இந்த பாதிரியார் பெரிய நெட் ஒர்க் வச்சிருக்கார். எல்லாரையும் பணம் கொடுத்து சரி பண்ணி வச்சிருக்கார். அந்த ஆள் ஒரு மரண வியாபாரி. அந்த இல்லத்துல வச்சிருக்கிற குழந்தைங்க எல்லாம் அங்கே வேலை செய்றவுங்க குழந்தைகள்னு சொல்றதும் பொய். Birth certificate பதிவு வச்சிருக்காங்களா? பேருதான் கருணை இல்லம். உண்மையில் அது மரண இல்லம்.

I.6.6. ஆ.சண்முகம், ஓய்வுபெற்ற ஆசிரியர்

(சம்பவம் நடந்த அன்று விருப்பத்திற்கு மாறாக பாலேஸ்வரம் இல்லத்திற்கு பிணம் ஏற்றிச் சென்ற வேனில் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லப்படும் அன்னம்மாளின் ஒன்று விட்ட சகோதரர்): அவங்க என் பெரியம்மா மகள். பிள்ளைங்ககிட்ட கோவிச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க. சென்னையில் சின்னமலைப் பக்கம் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவங்களை அங்கு வந்த ஒரு பாதிரியார் விசாரித்து இருக்கிறார். வீட்டை விட்டு வந்து இருக்காங்கன்னு தெரிஞ்ச உடனே அவங்களை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள விடுதிக்கு அனுப்பி வச்சிறுக்கார். அங்கே இருக்க அக்காவுக்குப் பிடிக்கல. அவங்க வெளியே போக அனுமதிக்கல. இரண்டு நாள் கழிச்சு அங்கே உள்ளவங்களைப் பரிசோதிக்க இரண்டு டாக்டர் வந்திருக்காங்க. அவங்ககிட்ட எங்க அக்கா புகார் பண்ணி இருக்காங்க. அந்த டாக்டர்கள், “விருப்பம் இல்லாத இவங்களை இங்கே ஏன் கட்டாயமா வச்சிருக்கீங்க. வெளியே அனுப்புங்க” ன்னு சொல்லி இருக்காங்க. அதனால அவங்களை பாலேஸ்வரத்துக்குப் போன அந்த வேனில் ஏத்தி அனுப்பிச்சிருக்காங்க. அந்த வேன்ல ஒரு பிணம், இன்னொரு மனநோயாளி, காய்கறி எல்லாம் இருந்திருக்கு. உள்ளே வச்சு வேன் கதவ பூட்டி அவங்களைக் கொண்டு போய் இருக்காங்க. அக்கா வேனுக்குள்ளேயே என்ன சத்தம் போட்டும் கேக்கல. ரொம்பதூரம் போன பிறகுதான் வேன் கதவில் ஒரு ஓட்டை இருக்குறத பார்த்துட்டு அதன் வழியே கையை நீட்டி சத்தம் போட்டிருக்காங்க. அதைப் பார்த்த இரண்டு பேர் வேன மறிச்சு நிறுத்தி இருக்காங்க. அப்புறம் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

I.7 பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அரசால் இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளவர்களின் கருத்துக்கள்

I.7.1.திண்டிவனம் அன்னை கருணாலயா இல்லத்தில் உள்ளோர்

பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டவர்களில் 21 பேர்கள் சென்ற ஏப்[ரல் 3, 2018 அன்று இரவு 9.30 மணியளவில் திண்டிவனத்திலுள்ள அன்னை கருணாலயா – விருட்சம் முதியோர் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். அடுத்த சில நாட்களில் இவர்களில் 13 பேர் சென்னை முகப்பேரில் உள்ள அன்னை கலைச்செல்வி கருணாலயா இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது திண்டிவனம் அன்னை கருணாலயா இல்லத்தில் ஆறு ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 8 பேர் உள்ளனர். மேலும் 6 மாதத்திற்கு முன்பு இதே நிறுவனத்தால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள புளிச்சப்பள்ளம் என்னும் கிராமத்தில் தொடங்கப்பட்ட இல்லத்திற்கு பாலேஸ்வரம் இல்லத்திலிருந்து அனுப்பட்டிருந்த கலா என்கிற பெண்மணியும் தற்போது இங்கு கொண்டுவரப்பட்டுள்ளார். ஆக மொத்தம் 9 பேர் (ஆண்கள் 6, பெண்கள் 3) இங்கு உள்ளனர். எல்லோரும் சுமார் 45 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த 9 பேரிலும் கூட ஒரு ஆண், ஒரு நடுத்தர வயது பெண், மூதாட்டி ஒருவர் என மூன்று பேர் பேசும் நிலையில் உள்ளனர். மூன்று ஆண்கள் என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத மனப்பிறழ்ச்சிக்கு ஆளானவர்கள்.  தனக்குத்தானே பேசிக்கொள்வது, சிரிப்பது எனும் நிலையில் உள்ளவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காரு (எ) ராமசாமி, சென்னையைச் சேர்ந்த மூதாட்டி கமலா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி கலா ஆகிய மூவரும்தான் பேசக்கூடிய நிலையில் உள்ளனர். கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜூலு, சென்னையில் எந்தப் பகுதி எனத் சொல்லத்தெரியாத ராஜா, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ், பல்லாவரம் அருகிலுள்ள பாக்கியம், எந்த ஊர் எனத்தெரியாத கமலா (வாய் பேசமுடியாதவர், காதும் கேட்காது), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலா ஆகியோர் உள்ளனர்.

பங்காரு (எ) ராமசாமி, கமால், கலா ஆகிய மூன்று பேருமே பாலேஸ்வரம் இல்லத்தைவிட இங்கு (திண்டிவனம் இல்லம்) உணவு பரவாயில்லை எனவும், வசதிகளும் நன்றாக உள்ளதாகவும், சுகாதாரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மூன்று பேருக்குமே உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் முதலானோர் உள்ளது தெரிகிறது. அவர்கள் வீட்டிற்கு அழைத்தால் சென்றுவிட விருப்பம் உள்ளதாகவும், அதுவரை இங்கேயே இருக்க விரும்பதாகவும், பாலேஸ்வரம் இல்லம் தேவையில்லை என்றும் சொல்கின்றனர்.

ஆனால் பாலேஸ்வரம் இல்லத்தைப் குறித்து பெரிதான குறைகளாக எதுவும் இவர்கள் கூறவில்லை. சாப்பாடு நன்றாகத்தான் இருக்கும் என்றும், ஃபாதர் நன்றாக கவனித்துக்கொண்டதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில் அங்கிருந்த பணியாளர்கள் அலட்சியமாக இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அந்தப் பணியாளர்கள் மீது ஒரு அதிருப்தி  அவர்களுக்கு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த பங்காரு (எ) ராமசாமி, , என்பவர் நம்மிடம் கூறியது: ‘’எனக்கு காலில் அடிபட்டது. நிறைய செலவானது. வீட்டில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. முதியோர் இல்லம் சென்றால் பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னார்கள். அதனால் திண்டுக்கல்லில் உள்ள முதியோர் இல்லம் மூலமாக பாலேஸ்வரம் இல்லத்திற்கு போனேன். மூனு வருசமா அங்கே இருந்தேன். இப்ப அங்க என்ன பிரச்சனைன்னு எனக்கு ஒண்ணும் தெரியல. சாப்பாடு எல்லாம் அங்க நல்லாதான் இருக்கும். எப்போவாது ஒருமுறை குழம்புதான் கொஞ்சம் சரியில்லாம இருக்கும். மத்தபடி எல்லாம் நல்லாதான் இருக்கும். ஹோம்ல உள்ள எல்லாருக்கும் ஒரே சாப்பாடுதான். மூனு வேளையும் வேற வேற செஞ்சுதான் கொடுப்பாங்க.

பிரச்சனைகள் எதாவது உண்டுன்னு சொன்னா ‘சிக்’ வார்டுல இருக்கிற சில பேர் நம்ம மாதிரி நல்ல மனநிலையில இருக்கமாட்டாங்க. சில நேரத்துல அவங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. இது ஒன்னுதான் பிரச்சனை. நர்ஸ். மூணு பேர் இருக்காங்க. மாத்திரை மட்டும் கொடுப்பாங்க. ஊசி போட வேற டாக்டர் வருவாரு. பெருக்க சுத்தம் செய்ய மூணு பேரு வேலைக்கு இருக்காங்க. இவங்க எல்லாம் சில நேரத்துல எங்கள மாதிரி தங்கியிருக்கிறவங்கள்ல யாரு நல்லா இருக்காங்களோ அவங்கள சின்ன சின்ன வேலை வாங்குவாங்க. அதுக்கு ஓன்னு ரெண்டு பிஸ்கட் கொடுப்பாங்க. அதுக்காக இவங்களும் வேலை செய்வாங்க. அப்ப சொல் பேச்சு கேக்காதவங்கள் இவங்க லேசா மிரட்டுறது தட்டுறது உண்டு.

பாலேஸ்வரத்துல ரெண்டு வார்டு உண்டு. சாதாரண வார்டு எங்கள மாதிரி நல்லா இருக்கிறவங்க, நடமாட முடியறவங்க இருக்குறது. இன்னொன்னு ‘சிக்’ வார்டு. இதுல முடியாதவங்கதான் இருப்பாங்க. எழுந்திருச்சி நடக்கமுடியாதவங்க பெட்லேயே ஒன்னுக்கு, வெளிக்கு எல்லாம் போயிடுவாங்க. அதையெல்லாம் சுத்தப்படுத்த மூணு ஆளு வச்சிருக்காங்க. செய்வாங்க. ஆனாலும் அந்த வார்டு சுத்தமில்லாத மாதிரியே இருக்கும். நார்மல் வார்டு நல்லாதான் இருக்கும்.

நல்ல நிலைமயில இருக்கிறவங்க அவங்களால முடிஞ்ச வேலைகளைச் செய்வாங்க. நான் கூட கால் சரியாகி நடக்கிற நிலைமைக்கு வந்ததும் என்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சேன். கேட் திறந்துவிடுற வேலையைதான் நான் செஞ்சேன். அப்படி நான் வேலை செஞ்சதுக்கு சம்பளம் உண்டுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத் சம்பளமா தரல. கணக்கு வச்சுருப்பாங்க. ஃபாதர் நல்லவரு. தருவாரு.”

I.7.2 பனையூர் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ காப்பகத்தில் உள்ளோர்

பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்த சிலர் சென்னை- புதுச்சேரி சாலையில் உள்ள பனையூரில் உள்ள ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ எனும் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதை அறிந்து மார்ச் 11 அன்று எம் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் அங்கு சென்று அதன் இயக்குநர் அய்யப்பனைச் சந்தித்தார். பாலேஸ்வரத்திலிருந்து 19 பெண்களும் 11 ஆண்களும் ஆக மொத்தம் 30 பேர் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். எல்லோருமே மன நோயாளிகள். அதில் சிலர் தமிழ் பேசத் தெரியாத பிற மாநிலத்தவர். அதில் 5 பேர் கடப்பாக்கத்திலுள்ள ஒரு காப்பகத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.

மீதியுள்ள 25 பேரில் டி.ஆர். லலிதா (50) என்கிறை லேசான மனநோய் உள்ள பெண்மணி தான் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாகச் சொல்லி விவரம் சொல்லியுள்ளார். இங்குள்ள காப்பாளர் உடனடியாக மாநில குற்ற ஆவண அமைப்பிலுள்ள (State Crime Record Bureau) ஆய்வாளர் திருமதி தாஹிரா விடம் தகவலைச் சொல்லியுள்ளார். லலிதாவின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என இரண்டாண்டுகளுக்கு முன் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தகவல் சொல்லப்பட்டு அவர்கள் வந்து மூன்றாண்டுகளுக்குப் பின் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.  பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தபோதும் லலிதா தன்னை வெளியே அனுப்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டும் அவரது உறவினர்களைக் கண்டு பிடித்து அனுப்பும் முயற்சியை அங்குள்ளவர்கள் செய்யவில்லை எனத் தெரிகிறது.

அங்கிருந்தவர்களில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜமுனா (62) என்பவரும் ஓரளவு பேச முடிந்த மனநோயாளி. சாலையில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு வாகனத்தில் அடிப்பட்ட அவரை குணசேகரன் எனும் மருத்துவர் சிகிச்சை அளித்துப் பின் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பின் அவர் தாம்பரத்திலுள்ள பாலேஸ்வரம் கிளைக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, பின் அங்கிருந்து பாலேஸ்வரம் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். அங்கு 5 மாதங்கள் இருந்துள்ளார். இப்போது அவர் கொடுத்த முகவரி காவல்துறைக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் அவரது உறவினர்களைத் தேடும் முயற்சியில் உள்ளனர்

பாலேஸ்வரம் காப்பகத்தில் அங்குள்ளவர்களை ராதாகிருஷ்ணன் எனும் ஊழியர் அடிப்பதுண்டு என அன்பு (30) என்பவர் கூறினார். அந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கமும் உடையவராம். அன்புவிற்கு வீட்டுக்குச் செல்ல ஆசை. ஆனால் ‘குட்கா’ பழக்கம் உள்ள அவரை அவரது வீட்டார் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அழைத்துச் சென்றால் மீண்டும் குட்கா பழக்கம் வந்துவிடும் அதனால் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் எனச் சொல்கிறார்களாம்.

I.7.3 செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செத்துக் கொண்டிருந்தவர்கள்

பாலேஸ்வரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 91 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் ஒரு ஆறுபேகள் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். மார்ச் 7 அன்று மாலை எம் குழுவில் இருந்த அ.மார்க்ஸ், பாபு, டாக்டர் சத்யபாபு முதலானோர் சென்று பார்த்தனர். அங்கு நிலைமை மோசமாக இருந்த அறுவரும் தொற்று நோய்ப் பகுதியில் வைக்கப்பட்டு இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் முதல்நாள் இரவும் இன்னொருவர் அன்று காலையும் இறந்திருந்தனர். மீதம் இருந்த நால்வரில் ஒருவர் மட்டும் வார்டில் கிடந்தார். மற்ற மூவரும் வராந்தாவில் உள்ள கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் ஒரு தட்டில் சோறும் குழம்பும் ஈ மொய்த்துக் கிடந்தன. அவர்கள் நால்வரில் ஒருவர் மட்டும் கேட்ட போது மிகவும் சிரமப்பட்டுத் தன் பெயரைச் சொன்னார். மற்றவர்களால் ஏதும் பேச இயலவில்லை. ஒருவர் செத்துக் கொண்டிருந்தார். பொறுப்பில் இருந்த ARMO விடம் பேசியபோது அவர்களைத் தனிக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்வதாகவும் சாப்பிடமுடியாதவர்களுக்கு ஊட்டிவிட ஏற்பாடு உள்ளதாகக் கூறினார்.

பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் சாலையில் பிச்சை எடுக்கும் படத்துடன் ஊடகங்களில் செய்தி ஒன்றும் வந்தது.

I.8  அரசு அதிகாரிகளின் கருத்துக்கள்

I.8.1 வருவாய்க் கோட்ட அதிகாரி திரு ராஜு

காஞ்சிபுரம் வருவாய்க் கோட்ட அதிகாரி (RDO) ராஜுவை மார்ச் 5 அன்று இக்குழுவினர் சந்தித்தபோது பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து தபாலில் அனுப்பப்படும் இறந்தோர் குறித்த அறிவிப்புகளை VAO வாங்க மறுத்துத் திருப்பி அனுப்புவது ஏன் எனக் கேட்டோம். ஒரு அரசு ஊழியர் மக்களிடமிருந்து வரும் கடிதங்களை வாங்க மறுப்பது குற்றம் என்பதையும் சுட்டிக் காட்டினோம். தனக்கு அது தெரியாது எனவும் விசாரிப்பதாகவும் கூறினார்.

குழந்தைகள் நலக் குழுவினர் காப்பகத்திலிருந்த குழந்தைகளை இரக்கமின்றி முரட்டுத்தனமாகக் கையாண்டது குறித்துக் கேட்டபோது, தான் அப்போது அங்கில்லை எனவும், ஆனால் அப்படி நடப்பதை அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததாகவும், அவர் குழந்தைகள் நலக் குழுவினருடன் உடன் தொடர்பு கொண்டு உடனடியாகக் குழந்தைகளை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டதாகவும் சொன்னார்.

பாலேஸ்வரம் காப்பகத்தில் 323 பேர்கள் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கிருந்து 289 பேர்களே இப்போது பல்வேறு காப்பகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர் எனச் செய்தி வருகிறது (இப்போது 294 பேர்கள்தான் இருந்தனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன). மீதமுள்ள 34 பேர்களின் நிலை என்ன, அவர்கள் உங்களுக்குத் தெரியாமலேயே வெளியேறிவிடார்களா எனக் கேட்டபோது அப்படி நடக்கவில்லை எனவும், தாங்கள் போலீஸ் காவலுடன் கவனமாக அங்கிருந்த ஒவ்வொருவரையும் வெளியேற்றியதாகவும் ஆர்.டி.ஓ பதிலளித்தார்.

வெளியேற்றப்பட்டபின் எவ்வளவு பேர் இறந்துள்ளனர் எனக் கேட்டபோது அது குறித்துத் தன்னிடம் தகவல் இல்லை என்றார். எனினும் அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்ட செய்தி தெரிந்தபின் அவர்களில் சிலரது உறவினர்கள் வந்து உரிய ஆதாரங்களைக் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் என்றார். இப்போது அவ்வாறு தேடி வருபவர்களுக்கு விவரம் சொல்லி உதவுவதற்காக உத்தரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒருவருக்குப் பணி கொடுக்கப்பட்டுள்ளதாகத் திரு ராஜு கூறினார். பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்தவர்களின் புகைப்பட விவரங்களுடன் வருபவர்களை அவர் வழிநடத்துகிறார் எனவும் அவர் கூறினார்.

I.8.2 செங்கல்பட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு. மதிவாணன்

பிப்ரவரி 20 அன்று சாலவாக்கம் காவல்நிலையத்தில் பாலேஸ்வரம் வாகனத்தை மறித்து கருணாகரன் தலைமையில் சிலர் பிரச்சினை செய்தபோது நடவடிக்கை எடுத்து அந்தச் சூழலைக் கையாண்ட டி.எஸ்.பி மதிவாணன் சுருக்கமாக முடித்துக் கொண்டார். வாகனத்தில் இருந்த ஒரு இறந்த உடல் மற்றும் இருவர் ஆகிய மூவருக்கும் உரிய போலீஸ் மெமோ வை வாகன ஓட்டி வைத்திருந்ததால் அந்த வேனை முடக்கி வைப்பது சாத்தியமில்லை என்பதால் கருணாகரனின் கோரிக்கையைத் தன்னால் ஏற்கமுடியவில்லை என்றார் மதிவாணன். இதற்கிடையில் வாகனத்தில் இருந்த அன்னம்மாளின் உறவினர்கள் உரிய ஆதாரத்துடன் வந்ததாலும் அன்னம்மாளும் அவர்களுடம் போகச் சம்மதித்ததாலும் அவரை அவர்களுடன் அனுப்பியதாகவும் இறந்தவரது உடலை போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார். காவல்நிலையத்தில் இருந்த வேன் காண்ணாடியை உடைத்தது மற்றும் காவல்நிலையத்தில் வந்து பிரச்சினைகள் செய்தது ஆகியவற்றுக்காக அன்று கருணாகரனைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறினார்.

I.9 பாலேஸ்வரத்தில் மதவாத அமைப்புகள் செய்யும் பிரச்சாரம்

எல்லாவற்றையும் மதவாத நோக்கிலிருந்து அணுகும் சில அமைப்பினர் இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினையை முன்வைத்து பாலேஸ்வரம் காப்பகத்தை மூட வேண்டும் என்கிற பிரச்சாரத்தை முன்வைப்பதையும் எங்களால் காண முடிந்தது.

இந்து மக்கள் கட்சியின் காஞ்சீபுரம் கிளை, அர்ஜுன் சம்பத் தலைமையில் பிப் 27 அன்று காப்பகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக உள்ள சுவரொட்டிகளை ஊர் முழுவதும் கண்டோம். “கிருஸ்துவ கருணையற்ற இல்லங்களை இழுத்து மூடு!, ‘செய்ன்ட் ஜோசப் கருணையற்ற இல்லத்தை இழுத்து மூடு!, ‘முதியவர்களைக் கடத்திக் கொன்று அவர்களின் எலும்புகளை மர்மமான முறையில் கடத்திய பாதிரியார் தாமசை உடனே கைது செய்,! ‘சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் பாதாள கான்க்ரீட் பிணவறையை இடித்து விட்டு கருணை இல்லாத இல்லத்தை உடனே இழுத்து மூடு!” – முதலிய முழக்கங்களுடன் ஒரு சுவரொட்டி இருந்தது.

மற்றொன்று ‘இந்து முன்னணி’ (காஞ்சி-தெற்கு) அமைப்பின் சுவரொட்டி.  காப்பகத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாதது ஏன் எனும் கேள்வியை எழுப்பியுள்ள இச்சுவரொட்டிகள், “கடத்தி வந்த முதியவர்களை ஈவு இரக்கமின்றி சாகவிட்டு வேடிக்கை பார்த்த கசாப்புக்கடைக்காரன் பாதிரியார் தாமசைக் கைது செய்” எனவும், “தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷனறிகளின் கொலைக் கூடங்களை இழுத்து மூடு!” எனவும், “NIA. CBI விசாரணை வேண்டும்” எனவும் கோரிக்கைகளை வைத்திருந்தது.

இன்னொரு சுவரொட்டி உத்திரமேரூர் மதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்தது. பிப் 20 அன்று காப்பக வாகனத்தை மறித்துக் கைது செய்யப்பட்ட கருணாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்த இச்சுவரொட்டி அத்துடன், “சட்டவிரோதமாக இயங்கி வரும் கருணை இல்லாச் சித்திரவதை மரண வியாபரத்தின் பரிசோதனைக் கூடத்தை உடனடியாக இழுத்து மூடு” என்றும் கோரி இருந்தது.

                                                                  பகுதி II

II  முதியோர் பாதுகாப்பு குறித்த அரசு விதிகளும் திட்டங்களும் 

இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முதியோர் பராமரிப்பு, இறந்து கொண்டிருப்பவர்களின் பராமரிப்பு ஆகியவை குறித்தும், தற்போது அதுகுறித்த அரசு விதிகள், மற்றும் சட்டங்கள் குறித்த சில அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

II.1. அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள்         

சமூக முன்னேற்றம் மற்றும் மருத்துவ வளர்ச்சியின் விளைவாக மக்களின் சராசரி ஆயுள் இன்று அதிகரித்துள்ளது, நகர்மயமாதல், நவீன வேலைமுறைகள் மற்றும் உலகமயப் பொருளாதாரம் ஆகியவற்றின் ஊடாக நகர்ப்புறங்களிலும், தொலை தூரங்களிலும் இன்றைய இளைஞர்கள் பணி நிமித்தம் சென்று வாழ நேர்கிறது .இன்னொரு பக்கம் பாரம்பரியமான கூட்டுக் குடும்ப முறை கிராமப்புறங்களிலும் சிதைந்து வருகிறது. இவற்றின் ஊடாக தனிமையில் வாழ்கிற முதியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காலம் இது. 1975ல் 52 ஆக இருந்த சராசரி ஆயுள் இப்போது 67 ஆகியுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட நிறைவேற்ற அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி 2050 ல் மக்கள் தொகையில் 25 சதம்பேர் முதியவர்களாக இருப்பர்.

இவர்களில் 90 சதம்பேர் அமைப்புசாராத் தொழில்களில் இருந்தவர்கள். எந்தவிதமான ஓய்வூதியம், மருத்துவக் காப்பு உரிமைகள் முதலியன இல்லாதவர்கள். 75 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்போர், 32 சதம் பேர் 65 வயதுக்குப் பின்னும் அமைப்புசாராத் தொழில்களில் வேலை செய்து வாழ வேண்டியவர்கள், 60 சதத்திற்கு மேற்பட்ட பெண்களில் 58 சதம் பேர் துணையின்றி வாழ்பவர்களாக இருப்பர். 2025 வாக்கில் 60 வயதிற்கு மேற்பட்டோரில் 25 சதமும், 75 வயதுக்கும் மேற்பட்டோரில் 40 சதமும் தனியாக வாழ்பவர்களாக இருப்பர்.

இந்த நிலையை எதிர்கொள்வதற்கான அரசு திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தவிர அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவும் இல்லை. ஆதரவற்ற முதியோர்களுக்கு 90 சத நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலமாக முதியோர் இல்லங்கள் நிறுவிச் செயல்படுத்தப்படும் என 1992 ல் அறிவிக்கப்பட்டது.  அவ்வாறு இதுவரை இந்தியா முழுவதும் 352 முதியோர் இல்லங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளன. 1999 ல் ‘முதியோர்களுக்கான தேசியக் கொள்கை’ (National Policy on Older Persons) நகல் உருவாக்கப்பட்டு இருமுறை திருத்தப்பட்டது. இன்னும் மாநில அரசுகள் இதை மதிப்பீடு செய்து பதிலளிக்கவில்லை. 2007ல் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம்’ (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007). இயற்றப்பட்டது. 29.09.2008 முதல் இது நம் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விதிகள் (Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules) உருவாக்கப்பட்டு 31.12.2009 முதல் அமுலாகிறது.. இதன்படி பெற்றோர்களையும் முதியோர்களையும் அவர்களின் வாரிசுகள் கைவிடுவது தண்டிக்கப்படக் கூடிய குற்றம். எனினும் இதன் மூலம் வயதான மூத்தோர்கள் நீதிமன்றங்களை அணுகி நீதி பெறுவது எளிதல்ல. தவிரவும் இதன் மூலம் சொத்துள்ள முதியோர்கள்தான் பாதுகாப்பு பெற முடியும்.

2010 ல் மத்திய மருத்துவ நல அமைச்சகம் National Program for Health Care of the Elderly என்கிற திட்டத்தை உருவாக்கியது.. இது ஏற்கனவே மற்றொரு அமைச்சகம் அறிவித்திருந்த இன்னொரு பழைய செயல்படாத திட்டத்தின் மறு உருதான்.

இந்நிலையில் முதியோர்களைப் பாதுகாக்க என்னதான் வழி?

1.முதியோர் இல்லங்கள் – இவை போதுமானதாக இல்லை.

 1. ஓய்வுபெற்றோர் இல்லங்கள் – இது வசதியானவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
 2. அரசின் முதியோர் உதவித் திட்டம்.: – இது 10 சதம் பேருக்கே பயனளிக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களே இதன் மூலம் பயனடைய முடியும் (மாதம் 200 முதல் 1000 ரூ).
 3. வயதானவர்களுக்கான நலக் காப்பீட்டுத் திட்டங்கள் – இதற்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 14,000 செலுத்த வேண்டும். எல்லா காப்பீட்டு நிறுவனக்களும் இதைச் செய்வதும் இல்லை.

II.2 முதியோர் இல்லங்களுக்கான நடைமுறையில் உள்ள விதிகள்

முதியோர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலம் தொடர்பான தமிழக அரசு விதிகளின்  (Tamilnadu Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules, 2009) சில முக்கிய அம்சங்கள்:

 1. இத்தகைய சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் குறித்த விவரங்கள் குறித்த பதிவேடுகளை முறையாகத் தொகுத்து வருவது மாவட்ட சமூக நல அதிகாரியின் கடமை.
 2. சமூக நல அதிகாரிக்கு இத்தகைய இல்லங்களை பார்வையிட்டு விவரங்கள் சேகரிக்கும் அதிகாரம் உண்டு.
 3. தொண்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முதியோர் இல்ல நிர்வாகம் தொடர்பான அத்தியாயம் 4, 19 பிரிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

(A): ஒரு முதியோர் இல்லம் அதற்குரிய அனைத்து வசதிகளையும் (physical facilities) கொண்டிருக்கவேண்டும்.

(B) தேவை அடிப்படையில் சேர்க்கை அமைய வேண்டும். அன்றாடம் மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் அனுப்புகிறவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலி இடங்கள் உள்ளனவோ அதைக் காட்டிலும் நபர்கள் அதிகம் வந்தால் உடனடியாகக் கவனிக்க வேண்டியவர்கள், அதிக வயதுடையோர், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கலாம். உரிய முறையில் விண்ணப்பிக்க இயலாத நிலையில் உள்ள மூத்தோர்களாயின் அவர்களை மாவட்ட ஆட்சியரோ இல்லை அவரால் நியமிக்கப்படுவோரோ, அவர்களின் நிலை குறித்து திருப்தி கொள்வாராயின் முறையான விண்ணப்பங்கள் இன்றியும் அவர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

(C) சாதி, மத அடிப்படையில் சேர்க்கை அமையக் கூடாது.

(D) இரத்த உறவினராகவோ, கணவன் மனைவியராகவோ இருந்தாலொழிய ஆண்களும் பெண்களும் தனித்தனியே தங்க வைக்கப்பட வேண்டும்.

(E) தினசரி நிர்வாகம் (இணைப்பு iii ல் உள்ளவாறு) ஒரு நிர்வாகக் குழுவால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசு அவ்வப்போது அனுமதி மற்றும் நிர்வாகம் குறித்து சேர்க்கை மற்றும் நிர்வாகம் குறித்த வழிகாட்டல்களையும், ஆணைகளையும் வழங்கும்.

அத்தியாயம் VII  22 மற்றும் 23 பிரிவுகள்: இச்சட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பொருட்டு அரசுக்கு அறிவுரை வழங்க மாநில அரசு மூத்த குடிமக்களுக்கான மானிலக் குழு மற்றும் மாவட்டக் குழுக்களை உருவாக்க ஆணையிடலாம்.

II.2 இறக்கும் தறுவாயில் உள்ளோர் பராமரிப்பு (Hospice) 

“இறப்பு என்பது விளக்கு அணைந்து இருள் கவ்வுவது அல்ல; விடியலின் அருகாமையை உணர்ந்து விளைக்கை நிறுத்துவது..” – ரவீந்திரநாத் தாகூர்

தமிழில் இறப்பைக் குறிக்க “காலம் ஆதல்” என்கிற ஒரு அற்புதமான சொல்லை நாம் பாவிக்கிறோம். இறப்பு என்பது அழிவல்ல. அது காலத்தில் கரைவது. வேறு எந்த மொழியிலும் இத்தகைய ஒரு கருத்தாக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

இறப்பிலிருந்து யாரும் தப்ப இயலாது. அது வாழ்வின் ஓர் அங்கம். ஒவ்வொருவரும் ஒரு கண்ணியமான, அதிகத் துன்பமில்லாத ஒரு மரணத்தை அடைவதற்கு உரிமை உண்டு. மரணத்தை அடைவதோடும் எல்லாம் முடிந்துவிடுவது இல்லை. இதுவரை அந்த உயிரை ஏந்தி இருந்த அந்த உடலுக்கு மதிக்கத்தக்க முறையிலும், அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ற வகையிலும் ஒரு இறுதி விடையளித்து அந்த உடலை dispose செய்யவும் வேண்டும். அத்தோடும் கூட சமூகத்தின் கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் உற்றார் உறவினர்கள் அந்தத் துயரிலிருந்து ஆறுதல் பெறுவதற்கும் துணை நிற்க வேண்டும்.

இனி பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என முடிவானதுடன் மருத்துவ சேவை முடிந்துவிடுவதில்லை. அதிகத் துயரும் வேதனையும் இல்லாமல் உயிர் பிரிய ஆதரவும் சேவையும், அதிக பட்சமான கவனிப்பும் (palliative care) இறந்துகொண்டுள்ள அவருக்குத் தேவை. இந்தச் சேவையைத்தான் Hospice என்கிற கருத்தாக்கம் முன்வைக்கிறது.

இந்தச் சேவை குறித்த ஒரு பிரக்ஞையும் புரிந்துணர்வும், உரிய விதி முறைகளும், சட்டங்களும் நம்மிடம் இல்லை. முதியோர் பாதுகாப்பு, காப்பகம் முதலான சட்டங்களே மிகச் சமீபத்தில்தான் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும், அவற்றையும் கூடச் செயல்படுத்துவதற்கான விருப்புறுதியும், நிதி ஒதுக்கீடும் நம் அரசுகளிடம் இல்லை என்பதையும் கண்டோம். அந்த வகையில் இந்த இறப்போருக்கான கண்ணியமான பராமரிப்பு என்கிற திசையில் எந்த முயற்சியும் அரசுத் தரப்பில் இல்லை.

எனினும் இது தொடர்பாக Indian Society of Critical Care Medicine (ISCCM) and the Indian Association of Palliative Care (IAPC) முதலான அமைப்புகள் இருபதுக்கும் மேற்பட்ட மாநாடுகளை (Indian Association for Palliative care Conference) நடத்தியுள்ளன. இந்தத் துறையில் விரிவான முன்வைப்புகளையும் அவை முன் வைத்துள்ளன. ஆனால் இது இன்றளவும் ஒரு மிகவும் மேற்தட்டுக் கருத்தக்கமாகத்தான் உள்ளதே ஒழிய சமூகத்தில் பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள இந்த நாட்டில் இந்தச் “சொகுசு” அடித்தள மக்களை இன்னும் எட்டவில்லை. எட்டுவதற்கான திட்டமும் இல்லை.

பிழைக்க வாய்ப்பில்லாதவர்கள் என உறுதியாக முடிவானவர்களை பராமரிப்பதற்கான எந்த வசதியும் திட்டமும் நம் அரசு மருத்துவமனைகளில் இல்லை எனவும், அப்படியானவர்களை எப்படியாவது வெளியே அனுப்புவதே இன்றைய மருத்துவ அமைப்பின் அணுகுமுறையாக உள்ளது எனவும் கூறுகிறார் ‘சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின்’ தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத். மிகவும் எளிய மக்கள் அப்படியானவர்களை வைத்துப் பராமரிக்க இயலாதவர்களாக உள்ளதால் அவர்களும் எப்படியாவது இப்படியானவர்களைக் கைகழுவுவது என்கிற நிலையிலேயே உள்ளனர். அதுமட்டுமல்ல இறக்கும் நிலையை எட்டிவிட்டதை அறிபவர்களும் கூடத் தாங்கள் மற்றவருக்குச் சுமையாக இல்லாமல் எப்படியாவது ஒழிய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். எனவே அவர்களே வீட்டை விட்டு வெளியேறிப் புகலிடம் தேடி அலைகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் சேர்க்கபடும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு துணையாள் இருந்தால்தான் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனும் நடைமுறை இப்போது கடைபிடிக்கப்படுவது என்பதும் யாருமற்ற ஆதரவற்றோரின் இறுதிக் காலங்களை மிகவும் துயர் மிக்கதாய் ஆக்கிவிடுகிறது.

தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் உள்ள இப்படியான யாருமற்றோர்களில் பலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் தமிழில் பேச முடியாதவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலர் மனநோயாளிகள். இவர்களை இவர்களது உறவினர்கள் தொலைதூர ரயில்களில் ஏற்றி அனுப்பி விடுகின்றனர் எனவும் செய்திகள் வருகின்றன. தமிழக நெடுஞ்சாலைகளில் இப்படியான வடமாநில மனநோயாளிகள் நடந்து திரிவதையும், பல நேரங்களில் வாகனங்களில் அடிபட்டுச் சாவதையும் காணலாம்.

இறக்கும் எளிய மக்களுக்கு ஒரு கண்ணியமான சாவு என்பது இன்னும் இங்கு எட்டாத தொலைதூரக் கனவாகவே உள்ளது.

II.3 இறப்போரைப் புதைப்பதற்கான திரும்பப் பயன்படத் தக்க கான்க்ரீட் பெட்டக (Vault) அமைப்பு

இடப்பற்றாக்குறை, நகர்மயமாதல் ஆகியவற்றின் விளைவாக இன்று நகர்ப்புறங்களில் இறந்தோரைப் புதைப்பது என்பது பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. மத அமைப்புகளின் கல்லறைத் தோட்டங்கள் நிரம்பி வழிகின்றன. தனியார் கல்லறைகளில் ஒருவரது உடலைப் புதைக்க இப்போது சென்னையில் சில இலட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் உலகெங்கிலும் இப்படியான திரும்பப் பயன்படத் தக்க கான்க்ரீட் பெட்டக அமைப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த விவரங்கள் இணையத் தளங்களில் நிறையக் கிடைக்கின்றன. கேரளாவில் இப்படியான நவீன கல்லறை அமைப்புகள் சுமார் நாற்பது ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளன (Innovative concrete vaults now used to burry ead in Krala, Ramesh Menon, India Today, Nov 30,1990).

இவற்றில் பலமுறைகள் உள்ளன. ஒன்றின்மீது ஒன்றாக கான்க்ரீட் பெட்டகங்களை அமைத்து அவற்றுக்குள் இறந்த உடல்களைப் பெட்டிகளில் வைத்து மீண்டும் திறக்க இயலாமல் சீல் வைப்பது ஒரு வகை. அப்படி வைக்கப்பட்ட உடல்  மக்கியவுடன், சில ஆண்டுகளுக்குப் பின் ‘சீலை’ உடைத்து அந்தச் சவப் பெட்டியையும் உள்ளே உள்ள மக்கிய உடலின் எலும்புகள் உள்ளிட்ட எச்சங்களையும்  கீழே அமைக்கப்பட்டுள்ள கான்க்ரீட் பள்ளத்திற்குள் தள்ளிவிட்டுப் பின் இன்னொரு உடலைப் பெட்டிக்குள் வைத்து அந்த கான்க்ரீட் அறையை மீண்டும் பயன்படுத்துவது இன்னொரு முறை. இதுவும் இப்போது கேரளாவில் பயன்பாட்டில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்திலும் இது இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கீழ் வரிசையில் உள்ள வால்டுகளை ஒரு குடும்பம் விலை கொடுத்து வாங்கி விட்டால் அக்குடும்பத்தினர் இறக்கும்போது தொடர்ந்து அதைக் கீழே வைப்பட்டுள்ள கான்க்ரீட் பள்ளம் நிரம்பும் வரை பயன்படுத்தலாம். மேலே உள்ள வால்ட்டுகள் அவ்வாறு குடும்பப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதில்லை.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்த அமைப்பில் எவ்வளவு கால இடைவெளியில் ஒரு உடல் வைத்து சீல் பண்ணப்பட்ட வால்ட்டைத் திறக்கலாம் என்பது இப்போது சர்ச்சைக்குள்ளாகி முடிவுக்கு வராமல் உள்ளதாக அறிகிறோம். சிங்கப்பூரில் உள்ள இத்தகைய வால்ட் அமைப்பில் புதைக்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த உடலின் எச்சங்களை எடுத்து, எரித்துச் சாம்பலாக்கி, அதை அங்கேயே ஒரு சிறிய பள்ளத்தில் (niche) வைப்பது அல்லது அந்த உடலுக்குரிய உறவினர்களிடம் அளிப்பது என்கிற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது (Burial and Reuse Options, www.welters-worldwide.com).

பெட்டிகளில் வைத்துப் புதைத்துக் கான்க்ரீட் சீல் வைப்பது என்பதைக் காட்டிலும் உடலை அப்படியே மண்ணில் புதைத்தால் எளிதில் உடல் மக்கிச் சிதைவதோடு சுற்றுச்சூழல் மாசாகாமலும் இருக்கும் என்கிற அடிப்படையில் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் green burial என்பது சில தனியார் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகிறது (www.naturalburialcompany.com).

பாலேஸ்வரத்தில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டுக்குரிய கான்க்ரீட் வால்ட் அமைப்பில் பிணங்களைப் பெட்டிக்குள் வைக்காமல், உடலைத் துணியில் சுற்றி வால்டுகளில் வைத்து சீல் வைக்கின்றனர். இவ்வாறு 1663 உடல்கள் ஏழாண்டுகளில் அதில் புதைக்கப்பட்டுள்ளன என அதன் நிர்வாகி பாதிரியார் தாமஸ் கூறினார்.

II.4 ஆதரவற்றோரைக் கட்டாயமாகக் காப்பகங்களில் அடைத்தல் குறித்து

சில நாடுகளில் (எ.கா ஃப்ரான்ஸ்) தெருக்களிலும் ‘சப்வே’ சுரங்கப் பாதிகளிலும் தங்கியுள்ளோரை அரசு அவ்வப்போது அகற்றிக் கொண்டு சென்று காப்பகங்களில் வைக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை விரும்புவதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அவ்வாறு கட்டாயமாகக் காப்பகங்களிலிருந்து எவ்வகையிலாவது தப்பிச் செல்வதற்கே முயல்கின்றனர். எல்லாச் சிரமங்களையும் காட்டிலும் மனிதர்கள் சுதந்திரமான இயக்கத்தை விரும்புவதையே இது காட்டுகிறது. எனவே இத்தகைய காப்பகங்களில் விரும்பி வந்து சேர்கிறவர்கள் அல்லது காவல்துறை மற்றும் மருத்துவ மனைகளால் அனுப்பப்படுகிறவர்கள் சில காலத்திற்குப் பின் தாங்கள் அங்கிருந்து வெளியேற விரும்பலாம். அப்படியானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வழிமுறைகளையும் சமூக நலத்துறை மூலம் அரசு மேற்கொள்வது அவசியம். அவர்களுக்கு உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் சேர்ப்பிப்பது போன்ற வகைகலில் இந்த உதவிகள் அமையலாம். தற்போது பாலேஸ்வரம் காப்பகத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களில் பலர் அங்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதை நாம் இந்தக் கோணத்திலிருந்தும் அணுகுதல் அவசியம்.

                             பகுதி III

             எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

III.1 அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறல்கள்

III.1.1 பாலேஸ்வரம் புனித ஜோசப் காப்பகம் இறக்கும் நிலையில் உள்ளோருக்கான பராமரிப்புக் காப்பகம் (hospice) என அதன் நிறுவனர் உரிமை கோருகிறார். அவ்வாறே அவர் அனுமதி விண்ணப்பத்தையும் அளித்துள்ளார். அரசைப் பொறுத்த மட்டில் இறக்கும் நிலையிலுள்ளோர் பராமரிப்புக் காப்பகத்திற்கான எந்தச் சட்டமும் விதிகளும் இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த புரிதல் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பது அவர்கள் அளித்துள்ள ஆணைகளை எல்லாம் பார்க்கும்போது அறியவருகிறது. எடுத்துக்காட்டாக 28.12.2011 ல் இக்காப்பகத்திற்கு மாவட்ட சமூகநலத்துறை ஆணையர் முதல் முறையாக அனுமதி வழங்கியபோது, அது “Dying Destitute Registration Under the Rule 12(3) of the Tamilnadu Maintenance and Welfare of the Parents and Senior Citizen Rule 2009” எனக் குறிப்பிடப்படுகிறது. இந் நிறுவனத்திற்கான பதிவுச் சான்றிதழும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. அந்த விதி Old Age Home க்கான விதி மட்டுமே. ஆனால் அனுமதி அளித்த ஆணையர் “இறந்து கொண்டிருக்கும் அனாதைகள் இல்லம்” என்பதையும் “முதியோர் இல்லம்” என்பதையும் ஒன்றாக்கி  ஒரு ஆணையை இட்டுள்ளார். இரண்டும் வெவ்வேறானவை என்கிற புரிதல் அரசு அதிகாரிகளுக்கு இல்லை. “இங்கு இறப்போர் பராமரிப்புக் காப்பகம் என்பதற்கான விதிகள் கிடையாது. எனவே நீங்கள் முதியோர் இல்ல விதிகளைத்தான் கடை பிடிக்க வேண்டும்” எனத் தெளிவாகச் சொல்லவுமில்லை. இந்தக் குழப்பம் கடைசி வரை இருந்துள்ளது.

II.1.2 2015 பிப் 02 அன்று கட்டிட அனுமதிச் சான்றிதழ் வேண்டி காப்பக இயக்குநர் தாமஸ் விண்ணப்பித்து உள்ளார். உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் இருந்து மே 09 அன்று அனுமதி அளிக்க இயலாது எனப் பதில் வந்துள்ளது. சொல்லப்பட்ட காரணம்: “1965ம் ஆண்டு தமிழ்நாடு கட்டட உரிமச் சட்டம் 2(8)(1) ன்படி ‘பொதுக்கட்டிடம் என்பதில் கல்வி நிறுவனங்கள், விடுதிகள், நூலகம், மருத்துவமனை, டிஸ்பென்சரி, நர்சிங் ஹோம், கிளினிக், பிரசவ நிலையம், கிளப், ஹோட்டல், பொதுக்கூட்டம் மற்றும் திருமண அரங்கு ஆகியன மட்டுமே அடங்கும். உங்களின் கருணை இல்லம் மேற்படி வரையறையின் கீழ் வரவில்லை. எனவே கட்டிட அனுமதிச் சான்றிதழ் வழங்க இயலாது.”

இந்தப் பட்டியலில் ‘முதியோர் இல்லம்’ என்பதும் இல்லை. அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களுக்கெல்லாம் எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவை இயங்கி வருகின்றன?

இதில் இன்னொரு முரண் என்னவெனில் திண்டுக்கல்லில் இயங்கிவரும் இதே நிறுவனத்திற்கு நிலக்கோட்டை தாசில்தார் கட்டிட அனுமதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

II.1.3 பாலேஸ்வரம் காப்பகத்திற்கு முதியோர் இல்லம் எனப் பதிவும் அனுமதியும் வழங்கப்பட்டாலும் மருத்துவ மனைகளிலிருந்தும், காவல்துறையிடமிருந்தும் முதியோர்கள் மட்டுமின்றி தொடர்ந்து இறக்கும் தறுவாயில் உள்ளோர், மனநலம் பிறழ்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் எல்லோரும் இங்கு ‘மெமோ’ எழுதி அனுப்பப்பட்டுள்ளனர்.

II.1.4 இந்த அனுமதி ஆணைகளில் அதிகபட்சமாக அக் காப்பகத்தில் எவ்வளவு பேர்கள் அனுமதிக்கப்படலாம் என்பது தெளிவாக்கப்படவில்லை. அரசு நிறுவனங்களும் அனுப்பிக் கொண்டே இருந்தன. காப்பகத்தினரும் அதன் கொள்ளளவு குறித்துக் கவலைபடாமல் வந்தவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டே இருந்துள்ளனர். சென்ற டிச 08, 2017 அன்று மருத்துவக் கல்விக்கான உதவி இயக்குநர் இக் காப்பகத்தைப் பார்வையிட்டு பார்வையாளர் குறிப்பேட்டில் best health care அளிக்கப்படுகிறது எனப் பாராட்டிப் பதிவு செய்துள்ளார். அன்றைய தேதியில் அக்காப்பகத்தில் 235 ஆண்கள், 172 பெண்கள் என மொத்தம் 407 பேர்கள் இருந்துள்ளனர்.

II.1.5 2012 ல் இக்காப்பகத்தின் மீது எலும்புகள் விற்கப்படுகின்றன என்பது முதல் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அப்போதெல்லாம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்து, ஆவணங்களைப் பார்வையிட்டதோடு. இறந்தோரைப் புதைக்கும் ‘வால்ட்’களைத் திறந்து சோதனை செய்தும் சென்றுள்ளனர். அவர்கள் என்ன அறிக்கை கொடுத்தனர் என்பது தெரியவில்லை. நிறுவனத்திற்குத் தகவலும் இல்லை. நிறுவனத்தின் மீது விதிகள் எதையும் மீறியதாகவோ, குறைகள் இருந்ததாகவோ, எது குறித்தும் சந்தேகம் இருந்ததாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை. 19.09.2014 அன்று காப்பகத்திற்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வட்டவழங்கு அலுவலகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனி வருவாய் ஆய்வாளர் சோதனை செய்து எழுதியுள்ள காப்பகத்தில் உள்ளோருக்கான உணவு தொடர்பான பதிவுகளிலும் பாராட்டுக்கள்தான் அதிகமாக உள்ளன.

II.1.6. தற்போது காப்பகத்தில் உள்ளோர் வெளியேற்றப்பட்டு அதன் இயக்குநர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. “அனுமதி இல்லாமல் செயல்பட்டது” ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி 18.09.2017ல் காலாவதி ஆகிறது. அதற்கு மூன்று நாள் முன்னதாக 15.09.2017 அன்று அத்துடன் இணைக்கப்பட வேண்டிய சுகாதாரச் சான்றிதழ் தவிர பிற சான்றிதழ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு அனுமதி விண்ணப்பம் காப்பகம் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரச் சான்றிதழுக்கு முறைப்படி காப்பக நிர்வாகி காஞ்சிபுரம் சுகாதார துணை இயக்குநருக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் இது குறித்து மாநில சுகாதார இயக்குநருக்கு அறிவுரை கோரி 13.07.2017 ல் கடிதம் எழுதியுள்ளார். காப்பகத்தை ஆய்வுசெய்து தகுதியாயின் சான்றிதழ் வழங்குமாறும், இல்லையேல் மறுக்குமாறும்  மாநில சுகாதார இயக்குநர் பதிலளித்துள்ளார் (09.10.2017). ஆனால் அடுத்த மூன்று மாதங்கள் ஆகியும் அந்தத் துணை இயக்குநர் ஆய்வுசெய்து பதிலளிக்கவில்லை. அனுமதித் தொடர்ச்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால் அந்தச் சான்றிதழ் மட்டும் இல்லாமல் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. 15.09 2017ல் அனுமதி விண்ணப்பம்  அனுப்பட்டிருந்தாலும் அடுத்த நான்குமாதம் வரை எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், காப்பகத்திடம் உரிய அனுமதி இல்லை என்பதையும் இப்போது அதை மூடுவதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்படுவது முற்றிலும் ஏற்புடையதல்ல.

II.1.7 22.02.2018 அன்று காஞ்சிபுரம் RDO குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 133 (ஆ) பிரிவின்கீழ் காப்பகத்திடம் விளக்கம் கோருகிறார். காப்பகத்தின் மீது பல புகார்கள் வந்துள்ளதாகவும், அதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அப்படி அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பு உள்ளது. ஆனால் ஏழு நாள் கூட அல்ல, ஒரு நாள் கூடப் பொறுக்காமல் காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தால் அதை முறைப்படி விசாரிப்பது அதிகாரியின் கடமை. ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல் அதன் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆர்.டி.ஓவுக்கு என்ன மாதிரி அழுத்தங்கள் யாரால் கொடுக்கப்பட்டன? RDO வின் இந்த நடவடிக்கை தவறானது என்கிற குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் (prima facie) உள்ளதென இன்று உயர்நீதிமன்றம் RDO வின் அந்த அறிவிப்பைத் தடை செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

II.1.8  எந்தத் திட்டமும் இல்லாமல் உடனடியாக வெளியேற்றப்பட்ட அம் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட ஒருவர் செங்கல்பட்டில் பிச்சை எடுத்துத் திரிந்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது.

II.1.9 காப்பகத்தில் பணியாற்றுகிறவர்களின் 9 குழந்தைகளும் கதறக் கதற அன்று அவர்களின் தாயார்களிடமிருந்து பிடுங்கி வாகனத்தில் வீசி எறியப்பட்டுள்ளனர். காலில் அடிபட்ட ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்றை நாங்கள் பார்த்தோம். இப்படிக் குழந்தைகளிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட செங்கல்பட்டு குழந்தை நலக் குழுவின் (CWC) இரக்கமற்ற நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குறிப்பாக ஸஹிருதீன் எனும் உறுப்பினர் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதாக எல்லோரும் கூறினர். அக்குழந்தைகள் உரிய பிறப்புச் சான்றுகள் முதலான ஆதாரங்களுடன் அவர்களின் தாய் அல்லது தந்தையிடம் இருந்துள்ளனர் என இன்று காப்பகம் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது..

II.1.10 இந்தப் பிரச்சினையை மதவாத சக்திகள் தமது வெறுப்பு அரசியலுக்குப் பான்படுத்துவதை எம் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

II.2 பாலேஸ்வரம் புனித ஜோசப் காப்பகத்தின் குறைகள்

II.2.1 கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கிறிஸ்தவமும் பாதிரிமார்களும் செய்துள்ள பாராட்டுக்குரிய பணிகளை உலகறியும். இறப்போரில் சுமார் 1 சதம் பேர் தெருக்களில் அனாதைகளாகச் சாகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லி நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 10 பேர்கள் இப்படித் தெருக்களில் சாகின்றனர் என சமூகச் செயல்பாட்டாளர் ஹர்ஷ் மான்டர் குறிப்பிட்டுள்ளார் (Harsh Mander, Barefoot: Death on the Streets, The Hindu, Oct 2, 2010). அப்படியாகச் சாக நேரும் மக்களுக்கு கூடியவரை அதிக வலி இல்லாத கண்ணியமான மரணத்திற்கு உதவுவது என்கிற நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்தக் காப்பக முயற்சி பாராட்டுக்குரியது. எனினும் எங்கள் ஆய்வில் பல ‘சீரியசான’ குறைபாடுகள் இக்காப்பகத்தின் செயல்பாட்டில் இருந்ததை எங்களால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

II.2.2. ‘இது ஒரு ஹாஸ்பிஸ் என இதன் நிறுவனர் பாதிரியார் தாமஸ் அவர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டாலும் இந்தக் காப்பகத்தில் இருந்தோர்களில் பெரும்பாலோர் அந்த வகைக்குள் அடங்கமாட்டார்கள். மனநோயாளிகள் குறிப்பிட்ட அளவு இருந்துள்ளனர். குணமாக்க முடியாதவர்கள், துணை இல்லாதவர்கள் எல்லோரையும் மருத்துவமனைகள் இங்கே அனுப்பியுள்ளன. காவல்துறையினரும் இவ்வாறே செத்துக் கொண்டிருபொபவர்கள் என்கிற வகைக்குள் வராதவர்களை எல்லாம் அனுப்பியுள்ளனர். எந்தச் சந்தர்ப்பத்திலும் செத்துக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் மற்றவர்களே அதிகமாக இருந்துள்ளனர். இப்படி மனநோயாளிகளையும் மற்றவர்களையும், தொற்று நோய் சாத்தியமுள்ளவர்களையும் ஒரே கட்டிடத்தில் அருகருகே வைப்பதை ஏற்க முடியாது.

II.2.3. காப்பகத்தில் அதிக பட்சம் எவ்வளவு பேர்கள் தங்கவைக்கப்படலாம் என்பது குறித்த வரம்பு எதையும் இந்நிறுவனம் கடைபிடிக்கவில்லை. இம்மாதிரியான நிறுவனங்களில் அதிகபட்சம் 70 பேர்கள் இருக்கலாம் என்கின்றனர் இது குறித்த வல்லுனர்கள். நமது சூழலில் நூறு பேர்கள் வரை இருக்கலாம் என வைத்துக் கொண்டாலும் சில நேரங்களில் இக்காப்பகத்தில் 400 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.

II.2.4 என்னதான் hospice எனச் சொல்லிக் கொண்டாலும் இப்படிப் பலதரப்பட்ட நோயாளிகளும் இருந்த ஒரு காப்பகத்தில் ஒரு நிரந்தர மருத்துவரும் கூட இல்லாததை ஏற்க இயலாது. இரண்டு நர்சுகள் இருந்ததாகச் சொன்னார்கள். அப்படி இருந்திருந்தாலும் கூட அதுவும் போதாது. 300 க்கும் மேற்பட்டோர் இருந்த அந்தக் காப்பகத்தில் ஒரு நிரந்தர பட்டதாரி மருத்துவர் மற்றும் ஐந்து நர்சுகளாவது இருந்திருக்க வேண்டும். அங்கு அடைக்கலம் கோரி வந்தவர்களையே குணமானபின் அங்கே பணிக்குச் சேர்த்துக் கொண்டோம் எனச் சொன்னார்கள். அப்படிக் காட்டப்பட்டவர்களில் சிலர் இன்னும் மனத் தெளிவு இல்லாதவர்களாகவே இருந்ததைப் பார்த்தோம். முழுநேரப் பணியாளர்கள் மிகச் சிலர்தான் அங்கிருந்துள்ளனர்.

II.2.5 அங்கிருந்தவர்களோ மனநோய் உடபடப் பல மாதிரித் துயர்களுக்கு ஆளானவர்கள். செத்துக் கொண்டு தெருக்களில் கிடந்தோர் மிகவும் அசுத்தமான நிலையில் இருந்துள்ளனர். அப்படியானவர்களையும் அருவருப்பு இல்லாமல் அங்கிருந்தவர்கள் கையாண்டார்கள் என்பதை நேரில் பார்த்த சிலர் எங்களிடம் குறிப்பிட்டது உண்மைதான். ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பிற காப்பகங்களில் இருக்கும் சிலரை நாங்கள் சந்தித்தபோது அவர்களில் பேசக்கூடியவர்களில் பலர் தம்மை அங்குள்ள பணியாளர்கள் அடித்ததாகவும் குறிப்பிட்டனர். இது மிகவும் வருந்தத் தக்கது. இப்படியானவர்களைக் கையாள்வதற்கான போதிய பயிற்சியின்மை, போதிய பணியாளர்கள் இல்லாமையினால் ஏற்பட்ட பணிச்சுமை ஆகியனவே இம்மாதிரியான அத்துமீறல்களுக்கான காரணங்களாக அமையும். தமது பணியாளர்கள் 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் பணி செய்வதாக பாதிரியார் தாமஸ் அடிக்கடி குறிப்பிட்டார். இருக்கலாம். ஆன போதிலும் போதிய ஓய்வு எல்லோருக்கும் தேவை.

II.2.6 அங்கிருந்த 9 குழந்தைகளும் அவர்களின் தாய் அல்லது தந்தையுடன் இருந்தது உண்மைதான் நாங்களும் அவர்களைக் கண்டோம். எனினும் இப்படியான மனநோய் உள்ளவர்கள் அதிக அளவில் உள்ள. மரணச் சூழல் கவ்விய ஒரு இல்லத்தில் பிள்ளைகள் வளர்வது உறுதியாக அவர்களைப் பாதிக்கும். பணியாளர்களுக்குக் காப்பகத்திலிருந்து போதிய தனியான குவார்டர்ஸ் கட்டப்பட வேண்டும்.

II.2.7 காப்பக நிர்வாகத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையில் நல்லுறவு இல்லாமல் போனது இன்றைய பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது. காப்பகம் தொடர்பாகக் கிராம மக்கள் பல்வேறு ஐயங்களை எங்கள் முன் வைத்தனர். அவற்றில் பல தவறான புரிதல்களின் அடிப்படையில் உருவானதாகக் கூட இருக்கலாம். ஆனால் இப்படி ஊர் மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு இருப்பதே பல்வேறு ஐயங்களுக்கு அடிப்படையாகும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும். கிராமத் தலைவர் மற்றும் ஊர்மக்களில் சிலர் பங்கு பெறுகிற ஒரு மக்கள் தொடர்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல் மிக மிக அவசியம். ஒரு சிலர் தம்மிடம் சில பலன்களைக்  கோரி பிரச்சினை செய்ததை ஒரு காரணமாக் பாதிரியார் குறிப்பிட்டார். அப்படியானவர்களைத் தனிமைப்படுத்தவும் கூட இப்படி ஊர் மக்களுடனான உறவு வழி வகுக்கும். உள்ளூர் மக்களில் சிலர் நிரந்தரப் பணியாளர்களாகவே காப்பகத்தில் நியமிக்கப்பட வேண்டும்.

II.2.8 இறப்போருக்கான இறப்புச் சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஒரு ஆவணம். பல்வேறு ஐயங்களும் எழுப்பப்படும் ஒரு சூழலில் ஒரு மருத்துவர் சான்றளித்துக் கையொப்பமிட்ட 4A விண்ணப்பத்தில் இறப்பைப் பதிவு செய்ய மனு அளிக்கப்பட வேண்டும் என அரசு நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது சரியானதே. 4A படிவத்தில் இறந்து போனவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்தான் கையொப்பம் இட வேண்டும். “ஆனால் இங்குதான் மருத்துவரே கிடையாதே” எனப் பாதிரியார் தாமஸ் எங்களிடம் கூறினார். இதை ஏற்க இயலாது. ஒரு தகுதியான மருத்துவர் இங்கு நிரந்தரமாகப் பணியாற்றி இருந்தால் இப்படியான சட்டச் சிக்கலும் வந்திராது.

11.2.9 கைவிடப்பட்ட மூத்தோர்கள் மற்றும் இறப்போர்களைப் பராமரிப்பது என்பதில் சமூகத்திற்கும் அரசுக்கும் பொறுப்புள்ளது. அரசு மருத்துவமனைகள் தங்கள் மருத்துவர்களில் சிலரை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை அங்கு அனுப்பி மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும். சமூக நலத் துறையினர் மாதம் ஒருமுறையேனும் காப்பகத்திற்கு வந்து அங்குள்ளவர்களில் வெளியே செல்லவும், தம் குடும்பத்தோடு சேரவும் விருப்பம் தெரிவிப்போரைக் கண்டறிந்து உரிய உதவிகளிச் செய்ய வேண்டும்.

II.2.10 காப்பகத்திற்குக் கொண்டுவரப் பட்டவர்கள் சில நேரங்களில் வெளியே செல்லவும் விரும்பலாம். சிலருக்கு உறவினர்களிடம் கோபித்துக் கொண்டும் வந்திருக்கலாம். அப்படியானவர்கள் வெளியேறிச் செல்லும் கோரிக்கை வைத்தால் முறைப்படி காவல்துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு அவர்களை உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் சேர்ப்பித்திருக்கலாம். பாலேஸ்வரம் காப்பகத்தில் அவ்வாறு விரும்பியவர்கள் வெளியே செல்ல எந்த உதவியும் செய்யவில்லை எனத் தெரிகிறது. இங்கிருந்து இப்போது வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் அடுத்த ஒரு வாரத்திற்குள் தம் உறவினர்களுடன் சென்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

II.2.11. இறப்போரைப் புதைப்பதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள மறுமுறை பயன்படுத்தக் கூடிய பெட்டகம் குறித்துப் பல்வேறு ஐயங்கள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியைக் காவல்துறை கண்காணிப்பளர் அளித்துள்ளார். 1999 ம் ஆண்டு பஞ்சாயத்து விதிகளின்படி (The Tamilnadu Village Panchayats Provision of Burial and Burning Grounds) Rules 1999) ஊர்ப் பஞ்சாயத்துதான் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். ஆனால் இங்கே பஞ்சாயத்து அனுமதி வழங்காததால் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அதைப் பெறுமாறு  தான் அறிவுறுத்தப்பட்டதாகப் பாதிரியார் கூறினார். அந்த அடிப்படையில் அவர் 20.04.2011 அன்று காஞ்சிபுரம் SP யிடம் விண்ணப்பம் செய்ய, அவர் அதையும் சாலவாக்கம் காவல் ஆய்வாளரின் அது குறித்த அறிக்கையையும் 03.06.2011 ல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புகிறார். அதன் பின் 18.08.2011 அன்று அந்த நிறுவனத்தில் புதைப்பதற்கான ‘தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தங்களது பணியை இப்படி மாவட்ட வருவாய்த்துறை காவல்துறையிடம் கைமாற்றி விட்டதை ஏற்க இயலாது. பாதிரியாரைப் பொறுத்த மட்டில் அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர் “அனுமதி” யைப் பெற்றுள்ளார். இப்போது அதுவும் சிக்கலாகியுள்ளது. ஆனால் இதற்குக் காப்பக நிர்வாகத்தை மட்டும் பொறுப்பாக்க முடியாது. இன்றைய உலகம் எத்தனையோ ஆண்டுகால மனித உழைப்புகளின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒன்று. இவ்வுலகின் பொது வெளிகளில் இன்றைய மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ உரிய வசதியை அளிப்பது இன்றைய மக்களின் கடைமை.

II.2.12  மேற்குறித்த பஞ்சாயத்து விதி 7ன் படி மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து புதைக்கும் அல்லது எரிக்கும் இடம் குறைந்த பட்சம் 90 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இக்காப்பகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கல்லறை அமைப்பு அங்கே தங்கவைக்கப்படும் முதியோர்களின் வார்டுக்கு அருகாமையிலும் எந்நேரமும் அவர்களின் கண்ணில் படும்படியாகவும் உள்ளதை எம் குழு கவனித்தது. தவிரவும் ஏழு ஆண்டுகளில் 1663 உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன. படிகளில் இறங்கி, கீழே மக்கிய உடல்கள் தள்ளப்படும் பகுதியைப் பார்க்க எம் குழுவினர் சென்றபோது அங்கே வீசிய கடுமையான துர்நாற்றம் சில நிமிடங்கள் கூட அவர்களை அங்கு நிற்க இயலாமற் செய்தது. தவிரவும் வால்ட் சுவர்களிலிருந்து சில இடங்களில் நீர்க் கசிவு இருந்ததையும் காண முடிந்தது.

III.3 எமது கோரிக்கைகள் 

III.3.1 பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் இறப்போருக்கான காப்பகத்தை அவசரக் கோலமாக அரசு மூடி நடவடிக்கை எடுத்ததை எம் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தெருக்களில் யாருமற்று இறக்கும் பரிதாபத்திற்குரிய மக்களுக்கு சாகும் நேரத்தில் ஒரு ஆறுதலையும் ஓரளவு சுகமான மரணத்தையும் அளிக்கும் பணி என்பது மிகவும் உன்னதமானது. அந்தக் காப்பகம் மீண்டும் சேவையைத் தொடர சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். தற்போது நீதிமன்ற உத்தரவை மீறி மறைமுகமாக இந்நிறுவனத்தைச் செயல்படாமல் தடுக்க  மாவட்ட நிர்வாகம் முயற்சி ஏதும் செய்யக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

III.3.2 அனுமதி வழங்கப்படுவதில் ஏற்பட்ட கால தாமதம், விளக்கம் கேட்டு உரிய பதிலளிக்கும் முன்னதாகவே அவசரக் கோலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டது ஆகியவை குறித்துத் தொடர்புள்ள அதிகாரிகளின் செயல்பாடுகல் குறித்து ஒரு உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். காப்பகத்தில் சில முறை மீறல்கள்: நடந்திருப்பதாக அதிகாரிகள் ஐயம் கொண்டிருந்தால் அது குறித்த விளக்கங்களைப் பெற்ற பின்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திடீர்டென இப்படி அந்தக் காப்பகத்தை மூடி, அங்கிருந்து எதனை பேர்கள் வெளியேற்றப்பட்டார்கல் என்பதற்குக் கூட உரிய கணக்கில்லாமல் நடவடிக்கை எடுத்த முறையை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது

III.3.3 இப்படியான Hospices களின் உருவாக்கம், செயல்பாடு, நிர்வாகம், கடப்பாடுகள் ஆகியன தொடர்பான  சட்டம் ஒன்றையும், அதற்குரிய விதிகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இப்படியான பணிகளுக்கு அரசு சட்டபூர்வமான எல்லா உதவிகளையும் தாமதமின்றிச் செய்து தர வேண்டும். புதைப்பதற்கு உரிய இடம் அமையாவிட்டால் அதற்கான இடம் ஒதுக்குதல், வசதிகள் அளித்தல் முதலியவற்றிலும் அரசு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும். அனுமதி நீடிப்பு முதலான ஆணைகளை ‘ஆன் லைனில்’ விண்ணப்பித்து உரிய கால கெடுவில் வழங்கும் முறையை ஏற்படுத்தி ஊழல் வாய்ப்புகளை நீக்க வேண்டும்.

III.3.3. (i) இறப்போருக்கான ஆறுதல் அளிக்கும் விடுதி எனில் அதில் அப்படியான நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இறக்கும் நிலையில் உள்ளோர், மனநோய் உள்ளோர், முதியோர் எனும் பலரையும் ஒன்றாகத் தங்கவைக்கக் கூடாது. (ii) இப்படியான விடுதிகளில் அதிகபட்சம் 100 பேர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. (iii) ஒரு நிரந்தர மருத்துவர் போதுமான செவிலியர் முதலானோர் இருக்க வேண்டும். (iv) மருத்துவர் சான்றளித்த 4A விண்ணப்பத்தில் இறப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் (v)  பணியாளர்களுக்குத் தனி இருப்பிடங்கள் தொலைவில் கட்டித்தரப்பட வேண்டும். (vi) இப்படியான காப்பகங்களில் உள்ளோர் வெளியேற செல்ல விரும்பினாலும், உறவினர்களுடன் சேர விரும்பினாலும் உடனடியாகக் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளும் இதைக் கண்காணிக்க வேண்டும்.

III.3.4 எலும்புகள், உடலுறுப்புகள் விற்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகள் உள்நோக்கம் கொண்டவை என இக்குழு கருதுகிறது. எனினும் இப்படியான் ஒரு ஐயம் முன்வைக்கப்பட்டவரைக்கும் அரசு இது தொடர்பாக வல்லுனர் குழு ஒன்றை அமைத்து தற்போது பாலேஸ்வரம் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த இறந்தோரைப் புதைக்கும் வால்ட் அமைப்பைத் திறந்து ஆய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர ஆவன செய்ய வேண்டும்.

III.3.5 (i) மீண்டும் இந்நிறுவனம் இயங்க அனுமதிக்கும்போது இறந்தோரைப் புதைக்கும் இந்தப் பெட்டக முறை எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாதவாறும் காப்பகத்தில் உள்ள வார்டுகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிலும் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த வல்லுனர்கள் சான்றளித்த பின்பே இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். (ii) இங்கு இறப்போரில் 98 சதம் பேர் இந்துக்கள் எனப் பாதிரியார் சொன்னார். இந்துக்கள் இறந்தோரைப் எரிக்கும் வழக்கம் உடையவர்கள். இறப்பதற்கு முன் அவர்களின் விருப்பை அறிந்து அவர்கள் விரும்பிய முறையில் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படுதல் அல்லது எரிக்கப்படுதல் வேண்டும்.

III.3.6 (i) மூத்தோர்களுக்கான மருத்துவ வார்டுகளை (geriatric care) எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பாதுகாப்பிற்கான 2007ம் ஆண்டு சட்டத்தின்படி, எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட மருத்துவ மனைகள், வட்ட. கிராம அளவிலான மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் உருவாக்க வேண்டும்.

(ii) அதேபோல இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கான துயர் குறைக்கும் (Palliative care wards) மருத்துவ வார்டுகளையும் எல்லா மட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் உருவாக்க வேண்டும்.

(iii) துணையில்லாமல் வரும் நோயாளிகளை அரசு மருத்துவ மனைகளில் சேர்ப்பதில்லை என்கிற விதியை உடனடியாக நீக்க வேண்டும்.

III.3.7. (i) ஆதரவற்ற முதியோர்களுக்கான உதவித் தொகையை 1000 ரூ என்பதிலிருந்து 3000 ரூ ஆக உடனடியாக உயர்த்த வேண்டும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு அதை 5000 ரூ ஆக ஆக்க வேண்டும்.

(ii) ஓய்வூதிய உரிமைச் சட்டம் ஒன்றை அரசு உடனடியாக நிறைவேற்றி 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியப் பாதுகாப்பை அடிப்படை உரிமை ஆக்க வேண்டும்.

(iii)  ஆதரவற்றோர் ஓய்வூதியம் என்பதை மாறாத தொகையாக நிர்ணயிக்காமல் விலைவாசிப் புள்ளிக்குத் தக்காற்போல அவ்வப்போது அதிகரிப்பதாக அது அமைக்கப்பட வேண்டும்.

III.3.8 இப்படியான பிரச்சினைகளை மதவாத நோக்கில் அணுகி மத வெறுப்பைத் தூண்டும் ஆபத்தை ஜனநாயக சக்திகள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

III.3.9 பிரச்சினைகளை முழுமையாக ஆராயாமல் அவசரக் கோலத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமைகளைப் பேசுகிறவர்களும் அறிக்கைகள் வெளியிடுவது தவறான கருத்துக்கள் பரவ வழி வகுத்துவிடுகிறது. பின்னணியில் இருந்து இயங்கும் சில சமூக விரோத சக்திகளுக்கே அது பயன்படுகிறது. சமூக நலனில் அக்கறையுள்ளவர்கள் பொறுப்புடன் இத்தகைய பிரச்சினைகளை அணுக வேண்டும் என இக்குழு கேட்டுக் கொள்கிறது.

III.3.10 பாதிரியார் தாமசை அருகிலுள்ள மலை ஒன்றின் மேல் இழுத்துச் சென்று சிலர் தாக்கியதாகவும், வேறு சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறுகிறார். காவல்துறை இதைக் கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்.

இணைப்பு

எங்கள் குழு மார்ச் 3, 7 தேதிகளில் பாலேஸ்வரம் சென்று கள ஆய்வு மேற்கொண்டதையும், தொடர்ந்து இடம் பெயர்க்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ள காப்பகங்கள் இரண்டிற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து வந்ததையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்தும் இது தொடர்பான விவரங்கள், சட்ட விதிகள், இறந்தோரைப் புதைப்பதற்காக இங்கு கடைபிடிக்கப்படும் ‘வால்ட்’ அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை எல்லாம் சேகரித்து எங்கள் அறிக்கையை மார்ச் மூன்றாம் வாரத்தில் இறுதி செய்தோம்.

அதற்குப் பின்னும் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இரண்டு நாள் முன்னர்வரை (ஏப்ரல் 18) அங்கு பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன. சுருக்கமாக அவற்றை இப்படித் தொகுக்கலாம்:

மார்ச் 27, 2018 அன்று பாலேஸ்வரம் நிலைய நிர்வாகி பாதிரியார் ஆர்.வி.தாமஸ் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நீதியரசர்கள் சி.டி.செல்வம் மற்றும் என். சதீஷ்குமார் அடங்கிய அமர்வு (Division Bench of Madras HC)விசாரித்தது. தமது நிலையத்திலிருந்தோரை மீட்டுத் தரவேண்டும் எனக் காப்பகம் தரப்பில் அந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாலேஸ்வரம் நிலையத்திலிருந்து வெளியே பல அரசு மற்றும் தனியார் காப்பகங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட 294 பேர்களில் 12 பேர்கள் அதற்குள் இறந்து போயுள்ள செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறிய நீதிமன்றம், எஞ்சியுள்ள 282 பேர்களை உடனடியாகப் பாலேஸ்வரம் நிலையத்திற்குத் திருப்பி அனுப்புமாறு ஆணையிட்டது. காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அதிகாரியை மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ஆணையிட்டது (The Hindu மற்றும் The Indian Express, Chennai, March 28).  “நமது வீடுகளிலும் கூட நாம் வயதானவர்களை வைத்துப் பராமரிக்கத் தயங்குகிறோம். இந்த நிறுவனம் நல்ல நோக்கத்துடன் இப்படியானவர்களுக்குச் சேவை செய்து வந்துள்ளது. அதில் ஏன் தலையிட வேண்டும்?” எனவும் நீதிமன்றம் வினவியது.

பாலேஸ்வரம் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உயிருடன் இருப்பவர்கள் யாரும் இப்போது அங்கு திரும்பிவரத் தயாராக இல்லை என மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாலேஸ்வரம் காப்பகத்தில் உரிய வசதிகள், கவனிப்பு எல்லாம் இல்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது (The News Minute, March 30,2018). இதைக் கேட்ட நீதிமன்றம், “பாலேஸ்வரம் காப்பகத்தில் மரணத் தறுவாயில் இருந்தவர்கள், வயதானவர்கள், மன நோயாளிகள் எனப் பல மாதிரியானவர்கள் இருந்துள்ளனர். மீண்டும் அங்கு திரும்பிவருவது குறித்து இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி உணரக் கூடும்” எனக்கூறி, வெளியேற்றப்பட்டுப் பல்வேறு நிறுவனங்களிலும் வைக்கப்பட்டு உள்ளவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களது விருப்பத்தை அறிந்து, விரும்புகிறவர்களை மீண்டும் பாலேஸ்வரம் காப்பகத்திற்குக் கொண்டுவருவதற்காக மூத்த வழக்குரைஞர் சுந்தர்மோகன் தலைமையில் வழக்குரைஞர் ஆணையம் ஒன்றை நியமித்தது. அவருக்குத் துணை செய்ய ஒரு உளவியல் மருத்துவரையும், பாலேஸ்வர நிலைய ஊழியர் அலெக்ஸ் பாண்டியனையும் அக்குழுவில் சேர்க்கவும் ஆணையிட்டது.

இரண்டு நாள் முன்னர் (ஏப்ரல் 18, 2018) பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமசைத் தொடர்புகொண்டு நாங்கள் பேசியபோது அவர் கூறியது:

“இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 294 பேர்கள் எனவும், அவர்களில் 53 பேர்கள்தான் இங்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லி, அவர்கள் மட்டும் இப்போது இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆறு பேர்கள்தான் இடைப்பட்ட காலத்தில் இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தச் செய்திகளை நம்ப முடியவில்லை. எங்கள் காப்பகத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 35 பேர் இறந்து போகிறார்கள். குறைந்தபட்சம் 29 பேர்களும் அதிகபட்சம் 60 பேர்களும் இறந்துள்ளனர். அப்படி இருக்கும்போது எப்படி இந்த இரண்டு மாதங்களில் 6 பேர்கள் மட்டுமே இறந்திருக்க முடியும்?”

மற்றவர்கள் திரும்பிவர விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறதே எனக் கேட்டபோது அதை எல்லாம் நம்ப இயலவில்லை என்றார் பாதிரியார் தாமஸ். உங்கள் அலுவலகப் பிரதிநிதியாக அலெக்ஸ் பாண்டியனும் அந்தக் குழுவில் இருந்தார்தானே எனக் கேட்டபோது,

“அவர் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கள் காப்பகத்தில் இருந்தவர்கள்தானா என அடையாளம் காட்டுவது மட்டுமே அவர் வேலையாக இருந்தது. அதற்கு முன்னதாகவே அவர்களிடம் பேசி வர விருப்பமில்லை எனச் சொல்ல வைக்கப்பட்டிருக்க வேண்டும்” – என்றார்.

பாதிரியார் தாமஸ் அவர்கள் சொல்வதை முழுமையாக ஏற்க இயலாது. இங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களை எங்கள் குழுவினர் சந்தித்துப் பேசியபோது அவர்களிலும் பலர் தாங்கள் திரும்பிப் போக விரும்பவில்லை எனக் கூறியதி இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான பேர்களை வைத்திருப்பது, போதிய ஊழியர்கள் மற்றும் மருத்துவ வசதி இன்மை, இறந்துபோகும் நிலையில் உள்ளவர்களையும் மனநோயாளிகள் உட்படப் பலரையும் அதிக அளவில் ஒன்றாக வைத்திருந்தது முதலான காரணங்களையும் நாங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளோம். இதற்கெல்லாம் இந்த நிறுவனத்தைப் போலவே அரசும் பொறுப்பாக இருந்துள்ளதையும் விளக்கியுள்ளோம்.

எனினும் அதிரடியாகவும் அவசரக் கோலமாகவும் மாவட்ட நிர்வாகம் மெற்கொண்ட நடவடிக்கைகள் பல விடை தெரியாத குழப்பங்களுக்கும் தொடர்ந்து காரணமாகிவருகிறது.

இரண்டு நாள் முன்னர், ஏப்ரல் 18 அன்று காலை வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் காப்பக வளாகத்திற்கு வந்து ஒரு அறிக்கையை ஒட்டிச் சென்றுள்ளனர்.

அதில் இறப்போரை இப்படியான வால்ட் அமைப்பில் புதைப்பது என்பது இறந்தோரர்களது உடல்களை dispose பண்ணுவதற்காக அரசு ஏற்றுக்கொண்ட முறைகளில் ஒன்றாக உள்ளடங்கவில்லை எனவும், இதுவரை புதைக்கப்பட்ட உடல்களை எல்லாம் உடனடியாக வெளியே அகற்றி, வால்டைத் தூய்மை செய்து, மீண்டும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பாதிரியார் தாமஸ் குறிப்பிட்டார்.

இதற்கு நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் எனக் கேட்டபோது, “இப்படி மாவட்ட நிர்வாகம் திடீரென ஆணையிட்டுள்ளது நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு எதிரானது, எந்த நடவடிக்கையும் கூடாது என அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளபோது எப்படி இவர்கள் திடீரென இப்படி ஆணையிட முடியும்? நாங்கள் இதை எங்கள் வழக்குரைஞர் மூலம் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

“அதற்குள் யாரேனும் இறந்தால் என்ன செயப் போகிறீர்கள்?”

“எங்களுக்கும் தெரியவில்லை. கிராமத்திலும் அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 40 பேர்களை அங்கு புதைக்க முடியுமா”?

இது குறித்தெல்லாம் அரசு நிர்வாகமும் சிந்திப்பதில்லை. அவர்கள் சொல்வது போல இப்படியாக உடலைப் புதைக்கிற முறை அரசு அனுமதிக்கப்பட்ட ஒன்று இல்லை என்றால் எல்லாவற்றையும் அகற்றி வால்ட்டை சுத்தப்படுத்திய பின்பு மட்டும் எப்படி அவர்கள் அனுமதி அளிக்க முடியும்? இடைக்காலத்தில் உடலைப் புதைக்க வழி ஏதும் சொல்லாமல் இப்படி ஆணையிடுவது என்பது நீதிமன்ற ஆணையை மறைமுகமாக முறியடிக்கும் உத்திதானே. எப்படியாவது அந்தக் காப்பகத்தை மூடுவது எனும் நோக்கத்துடன் அரசும் நிர்வாகமும் செயல்படுவதைத்தானே இது காட்டுகிறது.

“மாவட்ட நிர்வாகத்தின் ஆணைப்படி வால்ட்களில் உள்ள இறந்தோரின் எச்சங்களை முழுமையாக வெளியேற்றினால் உங்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கும் விடைக் கிடைத்ததாக ஆகிவிடும் அல்லவா. 1663 பேர்கள் அங்கு உண்மையிலேயே புதைக்கப்பட்டுள்ளார்களா, இல்லை எலும்புகளை நீங்கள் எற்றுமதி செய்துள்ளீர்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா எனத் தெரிந்துவிடும்தானே“ – எனக் கேட்டபோது,

“தாராளமாக. நாங்கள் அதற்கு எப்போதும் தயார். நான் அப்போது முதல் அதைத்தான் சொல்லி வருகிறேன். அரசு வந்து அப்படி ஒரு ஆய்வைச் செய்ய வேண்டுமானால் நாங்கள் வால்ட்களைத் திறந்து எச்சங்களை ஒப்புவிக்கத் தயார். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்” என்றார் பாதிரியார் தாமஸ்.

இந்த அறிக்கையில் நாங்கள் கோரியுள்ளபடி (1) வல்லுனர் குழு ஒன்றை அமைத்து வால்டுகளைத் திறந்து அரசு ஆய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். வால்ட் முறை பாதுகாப்பானதுதானா என்பதையும் அப்போதுதான் கண்டறிய முடியும். நாங்கள் கோரியுள்ளது போல (2) அந்த வால்ட் அமைப்பை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான தொலைவில், பாதுகாப்பான வடிவில் அமைப்பதும், (3) ஒரு hospice என்பது இறக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கு ஆறுதலும், கூடியவரை துன்பமற்ற கண்ணியமான இறப்பை அளிக்கும் நிறுவனமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் கடைபிடிக்கப்பட வேண்டும்.. எக்காரணம் கொண்டும் மனநோயாளிகள், சாகும்நிலையில் இல்லாத முதியோர்களைச் செத்துக் கொண்டுள்ளவர்களுடன் தங்க வைப்பதை நிறுத்த வேண்டும். (4) வால்ட் முறையை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் இடைக்காலத்தில் இறப்போர்களைப் புதைக்க மாற்று ஏற்பாட்டை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அது எதையும் செய்யாமல் இப்படியான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் இடுவது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது. தற்போது எண்ணிக்கையில் குறைவானவர்களே அங்குள்ளனர். அதிக பட்ச எண்ணிக்கையை நிர்ணயித்து கான்க்ரீட் வால்ட் முறை ஆய்வு செய்யப்பட்டு  முடிவு காணும்வரை கிராமத்திலேயே இறப்போரைப் புதைப்பதற்கான இடம் ஒதுக்கித் தருவது அரசின் கடமை. ஏதாவது செய்து இந்த நிறுவனத்தை முடக்க வேண்டும் எனும் நோக்கில் மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

தொடர்பு:

Prof  M.H.Jawahirullah :9500062791

Thiagu : 8939154752

A.Marx : 9444120582

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WHY PFI BANNED IN JHARKHAND – NCHRO REPORT

New Delhi,

March 26, 2018

  Fact Finding Committee Report on the Attack on the Peoples     

                                 Movements in Jharkhand

The present BJP government in Jharkhand had arrested more than 4000 persons, mostly adivasis, for their participation in peoples movements and also had banned many organizations fighting for the rights of the people. Recently two such movements Mazdoor Sangathan Samiti (MSS) and Popular Front of India (PFI) were banned. A Fact Finding Committee comprising Prof A.Marx, Chair Person, NCHRO, Reny Ayline, National Secretary, NCHRO, Adv. Ansar Indori, ExCo Memmber, NCHRO visited Jharkhand on March 23 and 24 and met some of the organization leaders, relatives of the people in jail and some social activists and spoke to them on the real situation that prevails now in Jharkhand.

MSS is a registered labor organization functioning in the mining and industrial areas in Jharkhand with more than 20,000 mine workers as its members from 1985 onwards. It is fighting for the rights of the workers. PFI is also a registered organization functioning from 2006 onwards in almost all southern states and in some states in North and East. For the past two years the BJP government was threatening to ban PFI. On Feb 15 the central minister of state for home affairs Mr.Kiren Rijiju said that the Kerala government has sought a ban on the PFI. The next day the Kerala CM Mr. Pinarayi Vijayan refuted the statement saying that they never sought a ban on any organization including PFI. The next day the minister said that the DGP of Kerala had spoken about such a ban in the annual DGPs conference and this was also refuted from the office of the DGP, Kerala. In this background on Feb 22 2018 the Raguber Das government ruling Jharkhand announced the ban on PFI.

Both of these organizations are banned by invoking S 16 of the draconian Criminal Amendment Act (CLA) which gives power to the government to ban any organization. However the BJP government ruling Jharkhand said that PFI is influenced by IS and some of its members had joined in it. But the government has not given any proof for its statement.

The people we met and spoke in Jharkhand includes Father Stan Swami of ‘Bagacha’ movement fighting for the rights of the tribals, Debi w/o Damodhar Puri, the activist now arrested after the ban on MSS, Nadeem Khan, a CPI (ML) activist, Tridip Gosh, a retired engineer and HR activist, Hanzla Shiek, state vice president of the banned PFI and many others.

The Background

 In one sense Jharkhand is the richest as well the poorest state in India. Richest in the sense that Jharkhand possesses the costliest and rarest minerals in its land and poorest in the sense the traditional people of the land are being alienated from these treasures and are deprived of their lands. Recent satellite pictures have revealed that large amount of gold deposits are in Jharkhand.

As per the 2011 census the demographic pattern of Jharkhand is as follows: Hindus 67.8%, Muslims 4.5%, Christians 4.3% and the followers of Sarnaism (Aivasi religion) 12.8%. Adivasis are concentrated in Gumla, Lohardaga and Pashchim and Singhbhum districts. More than 50 to 65 % of the population is Adivasis in these districts. In Ranchi and Pakur districts about 40% are tribals.  Their presence is felt in Koderma and  Chatra districts also.

Muslims are concentrated in Pakur (35.8%), Sabiganj (34.6%). In Giridi, Godda and Lohardaga, Deogar and Santara they are between 20 and 22%. In Ranchi, Hasaribagh, Garhwaa, Koderma they are between 14 and 16%.

Central India that extends between Gujarat, Maharashtra, Odessa, Jharkhand and part of West Bengal is not only a tribal belt but also a mineral belt. Hence the eyes of the corporates and the central and state governments fell on these areas. But the lands are held by Adivasis. A thre member bench of the Supreme Court led by Justice R.M Lodha has ruled that the owner of the land is also the owner of the subsoil minerals (Civil Appeal No 4549 of 2000, delivered on July 8, 2013). Since the idea of the successive governments was to evacuate the people from their land and handover it to the corporates, the SC judgment is ignored.

The first mining giant who entered into Jharkhand was Tata in Jamshedpur.  After independence the Nehruvian slogan “Industries are the modern temples” allowed more and more big companies to enter into Jharkhand and more and more natives are alienated from their land.

The People We Met

We met Father Stan Swami (80) who closely associates himself with the adivasi movement Bagacha in Ranchi. Bagacha means a tribal assembly in which decisions are made unanimously. Quoting a survey made by Walter Fernandez and Alex Ekka he said that 2.4 million acres of land in Jharkhand were now alienated from the tribals and 1.9 million tribal people are displaced from their land. Almost all the riksha pullers and menial workers in the towns like Ranchi or Jamshedpur are from these people says Fr Stan. When Jharkhand became a separate state in the year 2000 the situation worsened. About 104 MoUs were signed with as many industries for all kinds of extraction of minerals from coal to gold.

In the background of the ideological and analytical supports given from outside the Adivasi organizations like Akil Bharatiya Adivasi Sabha began successful struggles from 1990s onwards against mining industries. In some such struggles the adivasis were successful in driving away the corporates . And sometimes even the military efforts to occupy their lands for creating ‘field firing ranges’ were also forestalled by such struggles.

At this stage state repression began to show its brutal face.  Anybody who participates and spearheads such struggles is arrested by branding them as Maoists and Naxalites and put into jail.  Fr Stan claims that a survey made by them had clearly shown that about 4000 Adivasi youths are now in the jails of Jharkhand. When RTI petitions were filed by them to get information about this, out of the 24 jails only 12 replied and that too after several reminders. Then they went directly and met 102 under trial prisoners in 18 districts who were released on bail. Of them only two out of these 102 people had any connection with Maoists. Thus 98 percent of them are innocents but now languishing in jails.

Last year the central Home Ministry announced that they are going to ban two such tribal organisatins (1) Niamgiri Bachao Andolan (2) Visthapan Virodi Janvikas Andolan. On 15th Feb 2018, Damodar Turi, an activist of Visthapan Virodi Janvikas Andolan was arrested on the charges that he belongs to the now banned MSS.  Damodar Turi’s wife  Debi  said that he has nothing to do with MSS. She is now writing some exams in the hope of getting some job to save herself.

Now Muslims are also targeted

Muslims of India after partition violence didn’t show much enthusiasm to organize themselves in all India basis. Especially the Muslims of north and north eastern India who were the worst sufferers in partition violence were reluctant to organize themselves and fight for their rights. The just privileges like reservation that they enjoyed under the British rule are also lost in the independent India. As the columnist and constitutional expert A.G.Noorani says not even a single demand of the Muslims had been settled by the successive governments till today, but their woes are growing day by day. After the demolition of Babri Masjid and the rise of right wing politics Muslim empowerment has become the slogan of Muslim youths. They also felt the necessity of an all India based Muslim party to voice their just demands. In this background some Muslim organizations begin to develop in an all India basis. Popular Front of India is one among them. It was already strong in south and now it is beginning to spread in North and North East also.

In Jharkand  the literacy rate of Muslims is slightly larger than the state average, but in higher education institutions their presence is virtually nil. Though among them 43.5% males and 18.5% females are employed, most of them are found only in household industries. 25.2% are in cultivation; 27% are agriculture laborers; those in state employment are only 6.7%. As far as economic conditions are considered urban Muslims are more deprived than rural Muslims. Urban poverty among Muslims is 30% whereas for others it is only 18% (data taken from Sachar committee Report).

Though Muslims of Jharkhand played an important role in the struggle for a separate Jharkhand state, after the new state was formed only one minister was chosen from the Muslim community in the first ministry after the new state formation. Of the 82 MLAs in the first assembly only 5 were Muslims. The only Muslim MP Farqan Ansari was also defeated in the next election. When BJP rule began in Jharkhand Muslims were more and more marginalized. It is in this background PFI entered in the arena.

In the recent past Muslims of Jharkand were targeted by the Hindutva forces and a number of Muslims were lynched in the name of cow slaughter, abduction of children and all sorts of false charges. In what is popularly known as Saraikala lynching four persons, Mohammad Naeem, Sheikh Halim, Sheikh Siraj and Sajjad, were lynched to death in Sobhapur village in Saraikela Kharsawan district on 18 May 2017. When everybody else including lawyers were not bold enough to fight for justice in this brutal mass murder case it was PFI which fought the case bravely.

When our team was proceeding to Ranchi we heard the news (March 22, 2018) that a fast track court in Ramgarh awarded life imprisonment to 11 of the twelve convicted in Alimuddin Ansari’s lynching that took place in Jharkhand’s Ramgarh district last year in June. The court has also directed the district services legal authority (DLSA) to initiate proceedings for ensuring adequate compensation to the victim’s family. In this case also PFI played an important role in getting convictions to the perpetrators of violence against that innocent poor Muslim.

Now PFI is banned by the Jharkhand government and two people were arrested in connection with this under section 17 of CLA Act. One is Themhirdur Rahman a motor cycle mechanic. His workshop is now closed. Another person arrested is Ubaidur Rahman who is the PFI district President of Pakur. A former office of PFI in which it is not functioning at present is also sealed now. Thermihidur Rahman’s brother Saeedur Rahman who is running a service shop helping people who apply for Aadhar or Pan cards was also harassed. His shop was searched and hard discs of his computers were seized by the police without giving any receipt. Now they call him to receive that seized hard disc. But Saeedur is afraid of going there for fear of being harassed and arrested.

When we contacted the state vice president of the now banned PFI Mr.Hanzla Sheikh yesterday and asked him why the BJP government had chosen to ban his organization he replied that no serious cases are against them and not even any Muslim is convicted in any serious crime. No Muslim of Jharkhand was arrested under ULAPA also. There is no news or even rumor that any Muslim in Jharkhand had joined in IS. We once again asked him why then they targeted them. After a moment of thought he listed the following reasons for the state rage against Jharkhand Muslims.

1.   In the recent past a no of Muslims were lynched to death in false charges. When even lawyers feared to appear for the victims it is we who fought for justice in almost all the cases and now some of them are sentenced in such cases, (See the attachment)

2.   PFI filed cases against Superintendents of Police of Pakur and Jamtara Dts,

3.   We filed a number of writ petitions for speedy trials, CBI enquiries and compensation to victim

4.   We filed a case against a BJP leader for his hate speech against Muslims..,

5.   After independence nobody worked for the upliftment of Muslims.  PFI worked in the most backward areas and we made poor Muslims conscious of their rights,

6.   We conducted educational awareness and legal awareness programs,

7.   We intervened in the mob lynching cases in the name of cow slaughter,

8.   The government perceived us as speed breakers of their programmers,

9.   We stopped the illegal income of the police,

10.  We raised the awareness of Muslims regarding their constitutional rights.

 We also met an Urdu professor who repeatedly requested us not to mention his name in our report. He said that atrocities against Muslims have increased in the recent past. Four Muslims were lynched near Jamshedpur on the false charge that they abducted children. Jamshedpur has a long history of violence against Muslims. He also said that PFI is a good organization that worked for the good of Muslims and raised their awareness. He said that as far as he remembered PFI never involved in any violence. Finally he said that Adivasis are also suffering like them. Muslims and Adiivasis should join together. He also demanded the ban on PFI should be lifted.

When we met the Ranchi office secretary of the CPI (ML) party Mr Tapan Goswami and asked him why the state government chose to ban PFI, he replied that his party has condemned it. He continued that land issue is most important in Jharkhand. To acquire the land the government wants to create panic among the masses. It wants to brand somebody as Maoists and somebody else as terrorists.

Mr.Nadeem Khan another social activist and CPI (ML) member told us that the local administration and intelligence agencies had recommended banning of the following organizations: (1) Insaf India (2) Muslim Ekta Munch (3) Bagaicha (4) JCDR – a breakaway group from PUCL (5) PFI (6) MSM. Out of this the state government has chosen PFI and MSM to be banned as a first step. Others will follow, he said. According to him 22 Muslims have been killed in various incidents after BJP came to power.

Anjani Kumar, a social activist whom we met in New Delhi yesterday told that already more than 12 organizations are banned in Jharkhand. He was able to recollect the names of few such organizations; (1) Nari Mukthi Sangh (2) Jharkhand Aphan (3) Communist Yuva League (4) Jharkhand Mukthi Munch (5) Kranthi Kari Buddhi Jeevi Munch (6) Kranthi Kari Kisan Committee.

Our Observations

Usually when the government ban any organization they say that so many cases are filed against that organization and so many people of that organization has been arrested and punished  on serious charges. As far as PFI is considered no such cases are filed against its members in Jharkhand. Then why they did it?  It is just because they don’t like an organization like PFI which works to increase the awareness of the minority people to develop in an all India basis. They tried to finish it in Kerala where PFI is strong. Since the state government didn’t cooperate with them they had chosen Jharkhand where their own party rules.

1.   For the ban on MSS also the state government is not able to put forward any convincing reasons for such an extreme action. Conducting a meeting in which the poet Varavara Rao spoke cannot be a reason to ban a labor organization. The meeting was arranged by Damodar Turi who has nothing to do with the banned organization. He belongs to another organization by name Vistapan Virodhi Janvikas Andolan.

2.   The BJP government hates the minorities to such an extent that they should not even conduct an educational awareness program within their community and presenting school kits containing educational materials.

3.   Keeping thousands of tribal people as under trial prisoners is really shocking. What prevents the Jail superintends to answer in proper time to the queries sent under the RTI act? Actions should be taken against them.

4.   Even among activists we found there is no enough awareness about the plight of Muslims.

5.   The BJP government at the centre and the Hindutva forces had chosen Jharkhand as their experimental state for their Rama Rajya. They had banned a number of organisattions fighting for the rights of Adivasis, Mining workers, Muslims and Women. They are having a plan to ban more number of organizations. They hate to see any party developing in an all India basis and fighting for the rights of minorities.

6.   There are now 450 non Hindu NGOs that have been black listed in Jharkhand. It doesn’t mean that the government is against NGOs. There are a large number of NGOs run by Hindutva organizations functioning in Jharkhand. The National Health Mission project is now implemented here  by such an organization led by Ashok Baghat. When we met an executive of this organization she said that this health program was entrusted to their organization by the present President Ramnath Govind when he was the governor of Jharkhand.

Demands

1.   The illegal ban on PFI and MSS should be immediately lifted and those arrested in related cases just to justify these bans should be released and the cases against them should be immediately withdrawn. List of the people arrested in related cases are 1. Themhirdur Rahman (PFI) 2. Ubairdur Rahman (PFI) 3. Ajay Hembrum (MSS) 4. Mohan Murmu (MSS) 5. Daya Chand Hembrum (MSS) 6. Damodar Turi (Vistapan).

2.   The draconian British imperial Law CLA 1908 should be immediately repealed.

3.   All the under trial prisoners should be released on bail immediately and a special court to be formed to dispose their cases.

4.   The NHRC and ST Commission should take note of these arrests of innocent adivasi youths in large numbers and necessary action should be taken against the state government. We demand a judicial enquiry should be ordered in this regard.

5.   A special court should be constituted to deal the lynching cases in Jharkhand and through a speedy trial the cases should be tried.

Annexure

          Legal Struggles Spearheaded by PFI in Jharkhand

There are no serious cases against PFI cadres in Jharkhand and nobody was punished under terrorist charges or for any unlawful activities. Even then the organization is now banned in the state. The only reason that could be cited for this is:

More and more Muslims are lynched to death in the name of beef and cow in this state.  Whenever one is murdered in such attacks by the so called Gau Rakshas, immediately the PFI filed cases against the killers. Recently in such a case eleven killers are punished. To cite a few cases in which PFI filed and helped to file cases in such attrocities :

 • Latehar Lynching : Two cow traders Mohammed Majlum Ansari (35) and Inayatullah Khan (12) were killed here on 18.03.2016. A PIL (WPC No 5370) was filed by the State President of PFI Hanjela Shaik in 2016 demanding a high level inquiry by some agency such as CBI. When the court advised the petitioner to file the cases on behalf of the near and dear of the victims, PFI withdrew its petition and helped the family of the victims to file the cases (WPC 7376 and 7430 of 2017). It was PFI that provided legal assistances through a competent lawyer.
 • Jamtara Lynching: Minhaz Ansari (22) of Dighari village (Narayanpura) in Jamtara dt  was arrested on the basis of a beef related WhatsApp message . He died in police custody on Oct 9, 2016. When the police were torturing Minhaz the Sangh goons were also allowed to beat him. Because of the strong efforts of PFI a murder case was filed u/s 302 IPC against the police and the Sanghis who were responsible for Minhaz’s death.  A criminal writ petition for fair investigation and a civil writ petition seeking compensation to the family were  also filed on behalf of the family with the help of PFI ,
 • Sareikela mob Lynching: On May 18, 2017 four Muslim youths (Shaik Naeem, Shaik Halim, Shaik Sajjad, Shaik Siraj) were lynched to death by a mob a few days before the beginning of Ramzan. The killers justified the crime saying that the victims were child abductors which is not true. The incident happened in Shobapur village in Sareikala dt. A fact finding team was organaised by the PFI District.Secretary Abdul Hannan. Four FIR s filed. 21 arrested. Four Writ Petitions (W.P 301,302, 303, 305 of 2017) filed by family members asking compensation and government jobs to the families.
 • A hate message was spread by one Hisabi Rai, a local BJP leader saying that  such killings by lynching would be a lesson to the Muslims. He also instructed his followers to spread this news. A complaint was made on 30.06. 2017 demanding action against him (FIR No79/2017, Pakur town PS). When no action was taken on their complaint, a protest march was organized in Pakur by the PFI against the increasing lynching incidents  and also demanding action against Hisabi Rai.  A lathi charge was unleashed by  the local police on the participants and false cases were filed against 63 PFI members  including the then Vice President and General Secretary  u/s 147,148,149, 341, 323, 353, 332,333, 308, 384 and 120b of IPC  (FIR 86?2017, Pakur PS). When 43 of them were produced before the CJM, all of them showed the injuries in their bodies due to police beating in the lock up. But the CJM refused to hear them and they were able to get bail only in the sessions court. A news was published  in a leading Newspaper that on hearing that the PFI activists were released on bail the CM called the SP and shouted, “How they got the bail? What were you doing?”
 • Because of the continuous peoples movement spearheaded by PFI demanding action against Hisabi Rai, finally a FIR was registered against him. But he was not arrested. Shamim Akhtar , a state committee member of PFI filed two criminal writ petitions in the High court with a plea for CBI enquiry in  the hate message case and the false cases against 43 persons who participated in the peaceful march.

One should remember that we have quoted here only a few incidents. It is in this background the ban on PFI is announced in Jharkhand immediately after the Kerala government refused to cooperate with the centre in banning PFI all over India.