அஸ்ஸாம் கலவரமும் வங்கதேச முஸ்லிம்களும் 

[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி]

அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 500 கிராமங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் மக்கள் வரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 273 முகாம்களில் இவர்கள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும்கூட இல்லை என்பதோடு பெரிய அளவில் இங்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி செய்திகள் குவிகின்றன. இத்தகைய முகாம்களின் நிலை எப்படி இருக்கும் என இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியடில்லை.

கொல்லப்பட்டவர்களிலும் அகதிகளாக்கப்பட்டவர்களிலும் சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பிறர் போடோ பழங்குடியினர். போடோ பழங்குடி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் அருகருகே வாழ்ந்து வந்த போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலையில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளஞர்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாகச் சென்ற ஜூலை 19 அன்று ‘போடோ விடுதலைப் புலிகள்’ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 20 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில்தான் மேற்குறிப்பிட்ட அவலங்கள் அரங்கேறின. இந்த நாட்களில் அஸ்ஸாம் தலைநகரான குவாகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த சுமார் 32 வேக ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, குவாகாட்டி ரயில் நிலையத்தில் பல்லாயிரம்பேர் 72 மணி நேரம் போதிய உணவு, தண்ணீரின்றித் தவித்திருந்தனர். விமானச் சேவைகள் பயணத் தொகையை இரட்டிப்பாக்கின. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் ஓடி வந்து பார்த்துவிட்டு இது ஒரு தேசீய அவமானம் என்றார். இப்படியான ஒரு கலவரத்திற்கு எல்லாவிதமான சாத்தியங்கள் உள்ளன என அறிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆறு நாட்கள்வரை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவுமில்லை.

இன அடிப்படையில் கலவரங்கள் உருவாவதும் மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆக்கப்பட்டும் துன்புறுவதும் அஸ்ஸாமுக்குப் புதிதல்ல. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இது நடைபெற்று வருகிறது. வெளியார் ஊடுருவல் மற்றும் குடியுரிமை வழங்குதல் தொடர்பாக 1970 மற்றும் 80களில் அங்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றதை அறிவோம். 1983 இல் நடைபெற்ற நெல்லிப் படுகொலையில் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். இன்றுவரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தி யாரும் தண்டிக்கப்படவுமில்லை. வெளி நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குடியுரிமை குறித்த 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் உடன்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பும் 1993-94ம் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தம் வீடுவாசல்களை இழந்து ஓடவேண்டியதாயிற்று. எனினும் இதுவரை நடந்த இந்தக் கலவரங்கள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியினர் உள்ளிட்ட அஸ்ஸாமியர்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்குமான மோதல்கள் என்பதில்லை. 1996-98 இல் சந்தாலிகள், ஓரான் மற்றும் முண்டா முதலான பழங்குடியினர் இலக்காக்கித் தாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அஸ்ஸாமின் பூர்வகுடியினரும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நில உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுமான போடோக்கள் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் தொடங்கினர். 1993ல் போராட்டத்தை முன்னெடுத்திருந்த ‘அனைத்து போடோ மாணவர் இயக்கத்திற்கும்’ (ABSU) அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓரளவு சுயாட்சித் தன்மையுடைய ‘போடோ சுயாட்சிக் கவுன்சில்’ (BAC) உருவாக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடையாத ஏராளமான போடோ இளைஞர்கள் தலைமறைவாயினர். முழு மாநில அந்தஸ்து கோரி தீவிரமான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ‘போடோ நாட்டிற்கான தேசிய ஜனநாயக முன்னணி’ (NDFB) மற்றும் ‘போடோ விடுதலைப் புலிகள்’ (BLT) எனும் அமைப்புகள் கடும் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசும் தன் தரப்பில் இன்னும் கொடும் வன்முறைகளுடன் இதை எதிர்கொண்டது.

2003ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக போடோ விடுதலைப் புலிகள் தம் பெயரை ‘போடோ மக்கள் முன்னணி’ (BPF) என மாற்றிக் கொண்டு, புதிய ஒப்பந்ததின்படி உருவாக்கப்பட்ட ’போடோ பிரதேச கவுன்சிலில்’ (BTC) பங்கேற்றது. அதன் தலைவர் ஹகராமா மொகிலாரி கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் ஆனார். எனினும் அனைத்து போடோ மாணவர் இயக்கமும் போடோ தேசிய ஜனநாயக முன்னணியும் முழு மாநில அந்தஸ்து என்கிற கோரிக்கையைத் தொடர்ந்தன. 2003 ஒப்பந்தத்தில் போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கறாராக வற்புறுத்தப்படாததன் விளைவாக போடோ விடுதலைப் புலிகள் மற்றும் போடோ தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் திரிவது என்பது போடோலான்டில் அன்றாட நிகழ்வுகளாகியது.

தற்போதைய கலவரத்தில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியினர் வழக்கமாகப் பயன்படுத்துகிற எந்திரத் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் முஸ்லிம்களைக் கொல்வதற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என உளவுத்துறை கூறுகிறது. ஹகராமா மொகிலாரியும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

மொகிலாரியின் தலைமையில் உள்ள போடோ பிரதேச கவுன்சில் ஊழலுக்கும் திறமையின்மைக்கும் பெயர்பெற்ற ஒன்றாகிவிட்டது. தாருண் கோகோய் தலைமையிலான அஸ்ஸாம் மாநிலக் காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. இன்னொருபக்கம் சட்ட ஒழுங்கு அதிகாரம் அதாவது போலீஸ் அதிகாரம் இல்லாத போடோ பிரதேச நிர்வாகத்தால் தமக்கு எந்தப் பயனுமில்லை என்கிற கருத்து போடோக்களிடம் உள்ளது. போடோ மாவட்டக் கவுன்சிலுக்குள் பழங்குடியினரல்லாத அந்நியர்கள் யாரும் 2003க்குப்பின் நிலம் வாங்கக்கூடாது. அதாவது முஸ்லிம்கள், அஸ்ஸாமுக்குள் பழங்குடியினராக வரையறுக்கப்படாத சந்தாலிகள் ஆகியோர் இங்கு புதிதாக நிலம் வாங்கக்கூடாது. ஆனால் முன்னதாக இப்பிரதேசத்தில் அவர்கள் பெற்றிருந்த நில உரிமை செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவையும் போடோக்கள் ஏற்பதில்லை. அவர்களின் கருத்துப்படி ஏற்கனவே அவர்களின் நிலங்களெல்லாம் பறிபோய்விட்டதால் பழைய நில உரிமைகளை ஏற்க முடியாது.

இங்கொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஸ்ஸாம் பழங்குடியினரிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் போடோக்கள்தான் எனினும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே. போடோ பிரதேச மாவட்டத்திற்குள்ளும் கூட இன்று அவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. சுயாட்சி உரிமை பெற்றுள்ள இந்த மாவட்டக் கவுன்சிலில் மூன்றில் இரு பங்கினர் போடோ அல்லாதவர்கள். இவர்கள் எல்லோரும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களும் அல்லர். சந்தாலி, முண்டா, ஓரான் போன்ற இதர பழங்குடியினர், ராஜ்பங்சிகள், நேபாளிகள், மார்வாரிகள், முஸ்லிம்கள் எனப் பலரும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இவர்கள் ‘போடோ அல்லாதவர் சுரக்‌ஷா சமிதி’ (NBSS) என்றொரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு தமது பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையாகத் தாமிருந்தும் அதிகாரத்தில் தமக்கிடமில்லை என்பது இவர்களின் பெரும் குறை. பட்டியல் சாதியில் இடம் மறுக்கப்பட்டுள்ள கோச் ராஜ்பங்க்சிகள் தாம் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியை உருவாக்கி அதற்குக் ‘காம்டாபூர்’ எனப் பெயரிட்டு சுயாட்சி வழங்கக் கோருகின்றனர்.

வழக்கம்போல பிரச்சினை மிகவும் சிக்கலானது. இந்துத்துவவாதிகள் இதை ‘இந்து’ போடோக்களுக்கும் “அந்நிய’ முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரமாகக் கட்டமைக்க முயல்கின்றனர். எண்பதுகளுக்குப் பின் உலகெங்கிலும் உருவாகியுள்ள இந்த அடையாள அரசியலை (identity assertion) இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சொல்வதுபோல போடோக்கள் எல்லோரும் இந்துக்களல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள கிறிஸ்தவம் போடோக்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வேர்பிடித்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் எல்லோரும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுள்ளும் கோரியா, டேசி எனப் பல பிரிவுகள் உண்டு. எல்லோரும் அந்நியர்களுமல்ல. எல்லோரும் தற்போது ஊடுருவி வந்தவர்களுமல்ல. வங்க தேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அஸ்ஸாம் மாவட்டங்களில் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளைக் காட்டிலும் மக்கள்தொகையின் அளவு மற்றும் பண்பு மாற்றம் (demographic change) சற்றுக் கூடுதல்தான் என்றபோதிலும் இந்தக் கூடுதல் “சற்று”தான் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் தொகைக் கணக்கீடுகளிலிருந்து இந்தப் பத்தாண்டு சனத்தொகை மாற்றம் (decadal population increase) கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆண்டு        இந்தியா        அஸ்ஸாம்         துப்ரி             தேமாஜி            கர்பி ஆங்லாங்

 

 

1971-91           54.51               54.26                     46.65             107.50                      74.72

 

1991-01           21.54                18.92                     22.97             19.45                        22.72

 

2001-11           17.64                 16.93                    24.40              20.30                        18.69

 

துப்ரி, தேமாஜி, கர்பி ஆம்லாங் என்கிற எல்லையோர மாவட்டங்களில் ஒவ்வொரு பத்தாண்டு சனத்தொகை மாற்றமும் இதர இந்திய மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் மேற்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்படுகிறது. 1971;91 ஆண்டுக் கணக்கு இருபதாண்டுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ளவும். 1981 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வேறுபாடு தொடக்கத்தில் சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும் போகப் போக இது பெரிதும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்துத்துவ சக்திகள் சொல்வதுபோல இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலைச் சாகுபடிக்காக வங்க தேசத்திலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் ஆசைகாட்டியும், கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இலங்கை மற்றும் மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளிகள் கொண்டு செல்லப்பட்டதுடன் இதை ஒப்பிடலாம். இது தவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து ‘செட்டில்’ ஆகியுள்ளனர். புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா சொல்வதுபோல போடோக்கள் எதையும் சற்று ‘மெதுவாக’ச் (லேஹி…..லேஹி) செய்பவர்கள். கடும் உழைப்பாளிகளான வங்கதேச முஸ்லிம்கள் எதிலும் வேகம் காட்டுபவர்கள். நிலப் பஞ்சம் மிகுந்த வங்கப் பகுதியிலிருந்து இவர்கள் வளமிக்க பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கின் ஆற்றங்கரையோரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறி விவசாயம் செய்து நிலங்களை உரிமையாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தவை.

போடோக்களின் பழங்குடி மனப்பாங்கில் நிலத்தைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கு இடமிருக்கவில்லை. பாசன விவசாயத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. சமூக உடைமை, இடம் பெயர் விவசாயம் என்பதாக இருந்த அவர்கள் நில உரிமையை இழந்த வரலாறு இதுதான். ஆற்றங்கரையோரம் குடியேறி இடம்பிடித்த முஸ்லிம்கள் காலப்போக்கில் சற்று உள்ளேயும் இடம்பெயர்ந்தனர். தேர்தல் அரசியல் உருப்பெற்றபோது குறிப்பிட்ட அளவு அரசியலதிகாரம் பெறவும் தொடங்கினர்.

இதெல்லாம் ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீபகாலத்தில் நடைபெற்ற பெரிய அளவு புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதும் ஏற்பட்டதுதான். மேற்கண்ட அட்டவணையில் 1971-91 காலகட்டத்தில் ஏற்பட்ட சற்றுக் கூடுதலான அதிகரிப்பு இந்தப் பின்னணியில் உருவானதே. இந்த அதிகரிப்பெல்லாம் கூட வெறும் வங்கதேச முஸ்லிம்களால் மட்டுமே ஏற்பட்டது என்பது தவறு. தேமாஜி மற்றும் கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 1.84 மற்றும் 2.22 சதங்கள் மட்டுமே. இன்று கலவரம் நடந்துள்ள கோஹ்ராஜ்பூரில்தான் கடந்த பத்தாண்டில் அஸ்ஸாமிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள்தொகை அதிகரிப்பு (5.19சதம்) நடந்துள்ளது.

அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடல் அவிழ்த்து விடப்பட்டபின் இந்திய அரசு எல்லையோர ஊடுருவலைப் பெரிய அளவில் தடுத்துள்ளது. 4000கி.மீ நீளமுள்ள எல்லையில் 80சதம் இரட்டை முள்வேலியாலும் , தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் மின் விளக்குகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லை ஓரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருளை ஊடுருவக்கூடிய தொலைநோக்கிகளைக் கொண்டு இரவு பகலாக ஊடுருவல் கண்காணிக்கப்படுகிறது. வங்கதேசத் தூதரக அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவிய 600 வங்கதேச முஸ்லிம்கள் இன்று இந்தியச் சிறைகளில் அடைபட்டுள்ளனர். தவிரவும் அமார்த்யா சென் உருவாக்கிய ‘பிரடிசி ட்ரஸ்டின்’ முன்னாள் இயக்குனர் ஏ.ஜே.பிலிப் கூறியுள்ளதுபோல அஸ்ஸாமின் இப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் சமூக வளர்ச்சிப் புள்ளிகள் இன்று ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து இங்கே இப்போது புலம்பெயர்வதற்கான தேவையுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க அஸ்ஸாம் பற்றி எரிந்து கொன்டிருந்தபோதே அத்வானி, அருண்ஜேட்லி, நரேந்திரமோடி போன்றோர் பிரச்சினையை அந்நிய ஊடுருவலாகத் திசை திருப்பியதிலும், முஸ்லிம் வெறுப்பைப் பரப்பியதிலும், மோடி ஒருபடி மேலே போய் “இந்த ஊடுருவல் தேசப் பாதுகாப்பிற்கே ஆபத்து” என்பதாக முழங்கியதிலும் வழக்கம்போல எள்ளளவும் நியாயமில்லை. 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி (1). 1966க்கு முன் வந்தவர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை உண்டு. (2). 1966லிருந்து மார்ச் 24, 1971 வரை இடம்பெயர்ந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அடுத்த பத்தாண்டுகளில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். (3). 1971 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கு வந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி பெரிய அளவில் 1971க்குப் பின் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் நிகழவில்லை என்பதால் தற்போது கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டுமுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அனைவருமே சட்டபூர்வமான குடிமக்கள்தான். இதில் கொடுமை என்னவெனில் இன்று அகதிகளாகியுள்ள முஸ்லிம்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அத்தோடு அவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.

பிரச்சினை வழக்கம்போலச் சிக்கலானது. பூர்வகுடிகளான போடோக்கள், வங்கத்திலிருந்து தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம்கள் இருசாரருமே இன்று சமூகத்தின் ஆக அடிநிலையில் இருப்பவர்கள். இந்த முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்த வேர்களை இழந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. அவர்களை அந்நியர்கள் எனச் சொல்லி வெளியேற்றுவது அடிப்படை மனித நியாயங்களுக்குப் புறம்பான ஒன்று. போடோக்கள் முஸ்லிம்கள் இருசாரரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருப்பது பத்திரிக்கைப் பேட்டிகளைப் படிக்கும்போது விளங்குகிறது. பொருளாதார ரீதியாக அப்பகுதி மேம்படுத்தப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது முதலான நடவடிக்கைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சத்திலிருந்து விடுவிப்பதன் மூலமாகவுமே அங்கே அமைதி ஏற்படுத்தப்படவேண்டும். இன, மத வெறுப்புகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாட்டெல்லைகள் என்பன மிகச் சமீபமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால் மனித உறவு காலங்காலமானது. இன்னுங் காலங்காலமாய்த் தொடரக்கூடியது.

Top of Form

 

சுந்தரராமசாமியின் கடிதங்கள்

இந்தப் புத்தகச்சந்தையின் போது (2011) நான் கலந்து கொண்ட இரு நூல் வெளியீட்டு விழாக்களில் ஒன்று, “அன்புள்ளஅய்யனார், சுந்தரராமசாமியின் 200 கடிதங்கள்” உள்ளிட்ட மீனாள் பதிப்பக நூல்களுக்கானது. யாரிடம் பணியாற்றினாலும் நட்பாக இருந்தாலும் அவரிடம் நூறு சதம் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பவர், பழகுபவர் அய்யனார் என்கிற பவுத்த அய்யனார். மேலூர் கிராமம்ஒன்றில் பிறந்து, அதிகம் படித்திராத, ஆனால் இலக்கிய ஆர்வமுள்ள ஒரு நபராகச் சுந்தரராமசாமியைக் கண்டடைந்த ஒரு கிராமத்து இளைஞனை இந்த நட்பு ஒரு நல்ல வாசகனாக, பொறுப்புள்ள குடும்பத்தவனாக,ஒரு எழுத்தாளனாக அவர் உருவாக்கிய வரலாற்றைச் சொல்கின்றன இந்த 200 கடிதங்களும் (மொத்த பக்கங்கள் 272).

சுந்தர ராமசாமியுடன்எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அதிக நெருக்கம் இல்லாதபோதும், இப்படிப் பலரை ஊக்குவித்து உருவாக்கியவர் என்பதைக் அறிந்துள்ளேன். ஒரு நண்பராய், தத்துவ ஆசானாய், வழிகாட்டியாய் சு.ரா பலருக்கும் அமைந்துள்ளார். அவர்களுள் அய்யனார் ஒருவர். சு.ரா வின் அத்தனை கடிதங்களிலும்இது வெளிப்படுகிறது. படிக்க வேண்டிய புத்தகங்கள், கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடங்கி அன்றாடம் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகள், சொந்த வாழ்வு குறித்த ஆலோசனைகள் எனஒரு தந்தையின் கரிசனத்தோடு அமைகின்றன இக்கடிதங்கள்.

எல்லாவற்றைக் காட்டிலும், எந்த ஒரு உறவும் இல்லாமல், ஒரு வாசகனாக மட்டுமே வந்த அய்யனாரை ஒரு எழுத்தாளனாகஉருவாக்கியதுதான் இக்கடிதங்களின் ஆகப் பெரும் சாதனை. எழுத வேண்டுமெனில் ஒருவன் புத்திசாலியாக, அசாதாரண கடும் உழைப்பாளியாக, உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர்க்குக் கிடைத்த அனுபவங்களை உண்மையாக, ஆம் இது முக்கியம், உண்மையாக உணர்ந்து, நேர்மையாகப் பதிவு செய்வதுதான் முக்கியம். எவ்வளவு சாதாரணமானவராக இருந்தபோதிலும் அவரிடம் சொல்வதற்கும், மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கும் செய்திகள் உண்டு என்கிற தன்னம்பிக்கையை சுந்தரராமசாமியின் இந்தக் கடிதங்கள் ஊட்டுகின்றன.

அய்யனார் ராமசாமியைத் தந்தைக்கும் மேலாகக் கருதியதற்கும், கருதுவதற்கும் எல்லா நியாயங்களும் உண்டு. தனது திருமணத்தின்போது கூட அவர்தான் தாலி எடுத்துத் தர வேண்டும் என்கிறார் அய்யனார். அய்யனாருக்கு ராமசாமி ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறார்; எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போ என்கிறார்.

திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு கடிதத்திலும் அய்யனாரின் மனைவி முத்துப் பிள்ளையின் நலத்தையும், குழந்தைப் பேறுக்குப்பின் மகன் ஆனந்த புத்தனின் நலத்தையும் அவர் விசாரிக்காமல் விடுவதில்லை. தனது குடும்பத்தில்அந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், தான் மிகவும் நேசித்த காலச்சுவடு இதழ்ப் பணி எம்மட்டில்இருக்கிறது என்பதையும் சு.ரா சொல்லத் தயங்குவதில்லை. சில்க் ஸ்மிதா வறுமையில் மரணமடைந்ததுகுறித்த தனது வருத்தம், உலகிலேயே ஆகச் சிறந்த உணவு தோசைதான் என்கிற அரிய கண்டுபிடிப்பு ஆகியவற்றையும் ராமசாமி அய்யனாரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவருக்குள் ஒளிந்திருந்த வேறு சில மனிதாயப் பரிமாணங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

தமிழில் கடிதங்கள் தொகுப்பாக வந்துள்ளது குறைவு. புதுமைப்பித்தன், வண்ணதாசன், கி.ரா, டேனியல், முதலானோரின் கடித வரிசையில் கடைசியாகச் சேர்ந்துள்ளது இத் தொகுப்பு. இலக்கியத்தரம், இதழியம் குறித்தெல்லாம் கறாரான பார்வை உடைய சு.ரா, ஒருவரின் கடிதங்கள் நூலாகத் தொகுக்கப்படுவதற்கான இலக்கணத்தையும்இக் கடிதங்களில் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

“கடிதங்களைஅச்சேற்றுவது பற்றிப் பொதுத் தீர்மானம் என்று வைத்துக் கொள்ள முடியாது. கடிதங்களின்உள்ளடக்கம் முக்கியம். காலத்திற்கும் படைப்பாளிக்குமான இடைவெளியும் முக்கியம். புதுமைப்பித்தன்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அவர் உயிரோடு இருந்த காலத்தில் வெளிவந்திருந்தால் மிகவும்அசட்டுத்தனமாக இருந்திருக்கும். கம்பன் சடையப்ப வள்ளலுக்கு ஒரு கூரான எழுத்தாணி வேண்டும்என்று ஒரு விருத்தம் எழுதியிருந்து அது இன்று கிடைத்தால் அதை நீங்கள் அச்சேற்றி வரலாற்றில்இடம் பெறலாம்.” (பக். 164)

அழகான வரையறைதான். இந்த வரையறை இந்தத் தொகுப்பிற்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்கிற கேள்வி ஒருவருக்கு எழுவது தவிர்க்க இயலாது. எனினும் புதிதாக எழுத வருபவர்களுக்கு சு.ரா கொடுக்கும் பல’டிப்ஸ்’ மிகவும் பயன்படும் என அய்யனார் உறுதியாக நம்புகிறார். அதில் ஓரளவு உண்மையுண்டு.

ஆனால் இந்த அடிப்படியில்பார்க்கும்போது சுந்தர ராமசாமி உயிருடன் இருந்து இந்தத் தொகுப்பை ‘எடிட்’ பண்ண நேர்ந்திருந்தால் இதில் பல கடிதங்களை அவர் நீக்கியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கடிதங்களில் சமகால அரசியல் குறித்து அதிகமில்லை. காங்கிரஸ் ஜெயலலிதா கூட்டிற்கு எதிராக மூப்பனார் கலைஞர் தேர்தல் கூட்டு உருவாவது பற்றி ஒரு கடிதத்தில் மகிழ்ச்சி, 1997 தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் குறித்த ஒரு வருத்தம், காமராசர் சிலை திறப்பு தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த கலவரம் பற்றிய ஒரு பதிவு ஆகியவற்றை மட்டுமே நாம் இந்த வகையில் காண முடிகிறது.

இக்கடிதங்கள் அனைத்தும் ஜூன் 1986 – செப் 2005 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இதே காலகட்டத்தில் நடைபெற்ற சோவியத் வீழ்ச்சி, இந்துத்துவ எழுச்சி, செப் 11, 2011க்குப் பின் உலகம் ‘மாறியது’ குறித்தெல்லாம் சு.ரா கவலைப்படவில்லையா, இல்லை அய்யனாருடன் பகிர்ந்து கொள்ளத் தக்கனவாக அவர் இவற்றையெல்லாம் கருதவில்லையா தெரியவில்லை.

அய்யனாரைத் தயார்செய்ததில் சு.ராவுக்கு ஒரு நோக்கும் போக்கும் இருந்ததும் கடிதங்களில் வெளிப்படுகிறது.’யாத்ரா’, ‘கொல்லிப்பாவை’, ‘இனி’, ‘இன்று’ .. இப்படியான ஒரு சிற்றிதழ்ப் பட்டியல்தான்அவருக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. அதே காலத்தில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’,”நிகழ்’, ‘மீட்சி’, ‘மார்க்சியம் இன்று’, ‘இலக்கிய வெளிவட்டம்’ முதலானவை கவனமாகத் தவிற்கப் படுகின்றன.

நகுலன், கந்தசாமி, ஞானக்கூத்தன், அ.மார்க்ஸ் ஆகியோர் குறித்த ஒரு ‘அலர்ஜி’ ராமசாமிக்கு இருந்துவந்தது யாவரும் அறிந்ததே, அது இக்கடிதங்களிலும் உறுதிப்படுகிறது. தான் ஏதோ எல்லோராலும் கடிந்து ஒதுக்கப்படுவதாக ஒரு சுய பச்சாதாப உணர்ச்சியும் சு.ராவிடம் வெளிப்படுகிறது. இது ஏனென்று தெரியவில்லை.வாழ்ந்த காலத்தில் அவருக்கு சாகித்ய அகாதமியும் ஞானபீடமும் கிடைக்காமற் போயிருக்கலாம். ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்த கவுரவம் எழுத்துலகில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. வலிமையான ஒரு இதழும், வெளியீட்டு நிறுவனமும், அவற்றைத் தன்னை விமர்சிப்பவர்களுக்குஎதிராகப் பயன்படுத்தும் சாதுரியமும் அவரிடம் இருந்தது. எனினும் ஏன் இந்தச் சுய இரக்கம் ?

கறாரான இலக்கியப்பார்வையுடையவர் என்கிற சு.ரா பற்றிய பிம்பத்திலும் சில நேரங்களில் சிதைவு ஏற்படுவதற்கும் இக்கடிதங்கள் சாட்சி பகர்கின்றன. அய்யனாரின் மதிப்பிற்குரிய இன்னொரு ஆசான் தமிழின் முக்கிய கவிஞர்களில்ஒருவரான கவிஞர் அபிபுல்லா என்கிற ‘அபி’. அவரும் ஒரு அழகியல் உபாசகர். ல.ச.ராவை வியப்பவர். சுராவுக்கும் அபிக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்க அய்யனார் ரொம்பவும் சிரமப்படுகிறார். அபியின் கவிதைகள் குறித்து ராமசாமியை எழுத வைத்துவிட வேண்டுமென்று அய்யனார் ரொம்பவும் மெனக்கெடுகிறார். அபியின் கட்டுரைகளைத் தன் இதழில் பயன்படுத்திக் கொள்ள விழைந்தபோதும் அவரது கவிதைகள் பற்றிக் கருத்துரைப்பதை ராமசாமி தவிர்க்கிறார். அபியின் கவிதைகளோடு தன்னால் “ஒட்டமுடியவில்லை” என்கிறார் (பக். 231).

ஆனால் அதே நேரத்தில்காலச்சுவடு வட்டத்திற்கு நெருக்கமாக இருந்த சல்மாவின் கவிதைகள், “மிக நன்றாக இருக்கின்றன.அவருக்கென்று தனித்துவமான குரல் இருக்கிறது” என ஆரவாரிக்கிறார் சு.ரா. சல்மாவைத் தவிர வேறு யாரும் இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்றெனக்குத் தோன்றவில்லை.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அய்யனார் பணியாற்றியபோது அவருக்குப் போதிய ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதை சு.ரா ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிக்கிறார் (பக்.173). அதை விட்டுவிலகும்போது போதிய பணப் பயன் கிடைத்ததா என அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால் அந்த அக்கறை தனது சொந்த நிறுவனத்தில் அய்யனார் பணியாற்றிய காலத்தில் ராமசாமியிடம் வெளிப்படவில்லை. தான், “காயடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டேன்” என தான் காலச்சுவடிலிருந்து வெளியேற நேர்ந்தது குறித்து அய்யனார் இந்நூல் வெளியீட்டின்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  அது குறித்து ராமசாமி கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாதது அவர் ஒரு வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, முதலாளியும்கூட என்பதையே காட்டுகிறது.

காலச்சுவடு பொறுப்பிலிருந்து ராமசாமி பெயரளவு வெளியேறியபோதும் மிக்க கரிசனத்தோடு அதன் பணிகளை வீட்டுக்குள்ளேயே எட்டநின்று கவனித்து வந்துள்ளதும் கடிதங்களில் வெளிப்படுகின்றது. எனினும் அதன் செயற்பாடுகள் குறித்து எந்த விமர்சனமும்அவருக்கு இல்லை. முழு திருப்தியுடன் இருந்தார் என்றே இந்தக் கடிதங்களின் வாயிலாக உணர்கிறோம்.

மனுஷ்யபுத்திரன், லல்லி, அய்யனார் மற்றுமுள்ள அன்றைய அவரது இலக்கியச் சுற்றம் ஆகியவற்றின் நட்பையும், அன்பையும், சந்திப்புகளையும் சு.ரா ரொம்பவும் ரசித்து மகிழ்ந்துள்ளதற்கும் இக்கடிதங்கள்சாட்சியம் பகிர்கின்றன.

அய்யனாருக்கு ராமசாமிஅளித்த அறிவுரைகளில் ஒன்று. “முதல் தரமானவற்றை மட்டுமே படி. இரண்டாம் தரமானவற்ரைப்
படிக்காதே” என்பது. இத்தகைய தர அளவுகோல்கள் குறித்த சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். பிறிதோரிடத்தில் அய்யனாரின் எழுத்து ஒன்றை “கணையாழித்தனமானது”, அதாவது இரண்டாம்தரமானது என்கிறார். (முதல்தரமானது அவர் பத்திரிகை). அப்படியாயின் ஒரு வாசகன் அதை படிக்க வேண்டியதில்லைஎன்றாகிறது. அப்படியாயின் இத்தகைய எழுத்துக்களின் கதி? சரி. இது ஒரு பிரச்சினை இல்லை.தன் வளர்ப்பு ஆகச் சிறந்ததை அறிந்து வளர வேண்டும் என்கிற ஒரு தந்தையின் விருப்பாக இதைஎடுத்துக் கொள்வோம். அப்படி எடுத்துக் கொள்வதற்கான ஒரு உறவு அவர்களுக்கிடையே உள்ளதைநாம் உணர முடிகிறது.

நூல் முழுவதும்மனிதர்களின் மீது ஒரு அவநம்பைக்கையை ராமசாமி வெளிப்படுத்திக் கொண்டே போவது வியப்பாகஇருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு இது எப்படிச் சாத்தியம்?

மொத்தத்தில் சுந்தரராமசாமியைப் புரிந்துகொள்ள இது இன்னொரு ஆவணம்.

தெனாலிராமனை நேசிக்க முடியவில்லை முல்லாவைப் பிரிய மனமில்லை

ரொம்ப சின்ன வயதிலிருந்தே எனக்கு முல்லாவுடன் பரிச்சயம் உண்டு. அந்தப் பேறை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நான் ‘குமுதம்’ இதழுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ‘நல்லாத்தான் சொன்னாரு முல்லா’ என்கிற தலைப்பில் குமுதத்தில் முல்லா கதைகளை வெளியிட்டு வந்தார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குட்டி இலவச வெளியீடாக முல்லா கதைகளின் சிறு தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் ஞாபகம்.

சாண்டில்யனையும், ரா.கி.ரங்கராஜனையும், சுஜாதாவையும் ஆவலுடன் வாசித்துக் கொண்டிருந்த காலம் அது. இவற்றுக்கிடையே கண்ணில் தட்டுப்பட்ட முல்லா எல்லோருக்கும் மேலாக நெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். சஃபி சொல்வது போல பிரிய நண்பராய் மட்டுமல்ல, இனிய தோழராய், பாசமுள்ள தந்தையாய், ஆசைப் புதல்வியாய், இனிக்கும் காதலியாய், எதார்த்த வாழ்வின் தர்க்கங்களால் கெட்டி தட்டிப் போன மனத்தை இளக்கித் தரும் ஔடதமாய் முல்லா நெருக்கம் கொண்டார். இந்த அனுபவம் என்னைப் போலவே முல்லாவை அறிந்த மற்றவர்களுக்கும் கிட்டியிருக்கும் என நம்புகிறேன்.

இதே காலகட்டத்தில் பாட நூல்களின் வாயிலாக அறிமுகமான தெனாலிராமனுடன் இத்தகைய ஒட்டுதல் எனக்கு ஏற்பட்டதில்லை. பாட நூல்களின் மூலமான அறிமுகம் மட்டும் அதற்குக் காரணமாகவில்லை. வேறு ஏதோ ஒன்று தெனாலிராமனுடன் ஒட்டுதல் ஏற்படுவதற்குத் தடையாக இருந்தது. இத்தனைக்கும் ஒரு வகையில் ராமன் நமது உள்ளூர்க்காரர். அரசையும் (பார்பன) அரச குருவையும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மட்டம் தட்டும் அவரது விகட சாகசம் ரசிக்கத் தக்கதுதான். இருந்தாலும் முல்லாவைப் போல ராமன் நம் நெஞ்சில் இடம் பிடித்ததில்லை.

சஃபி மொழியாக்கித் தொடுத்துள்ள இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போதுதான் இதற்குரிய விடை கிடைக்கிறது. தெனாலிராமன் ஒரு புத்திசாலி, கெட்டிக்காரர், சாதுர்யமிக்கவர். யாரிடமும் அவர் தோற்பதில்லை. தன்னை அவமானப் படுத்தியவர்களை அவர் மன்னித்ததில்லை. அரசாலும் இனம் காண முடியாத ராஜ துரோகிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி ராமன் அவர்களைக் கொல்லாமலும் வருவதில்லை.

முல்லை பி.எல். முத்தையா தொடுத்துள்ள 48 தெனாலி ராமன் கதைகளை என்.சி.பி.எச் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 1986 தொடங்கி பிப்ரவரி 2006க்குள் 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன. முத்தையாவின் மிகச் சிறிய முன்னுரை ஒன்று அதில் உண்டு. தெனாலிராமன் கதைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

“மந்திரம், மாயம், தெய்வீகம் எதுவும் ஊடாடாமல் தந்திரம், யுக்தி, நகைச்சுவை, பகுத்தறிவு இவையே பிரதானமாகக் கொண்டு (இவை) விளங்குகின்றன…. வாசகர்களின் அறிவு வளர்ச்சியைக் கருதி, பல்வேறு துறையில் நூல்களை வெளியிடுவதில் முன்னணியில் திகழ்கின்ற “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” இந்நூலை வெளியிடுவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி”.
என்பார் முத்தையா.

நமது மரபில் தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன வாசகரின், கேட்போரின் “அறிவு வளர்ச்சி கருதியவை”. பஞ்ச தந்திரக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆர்தர் டபிள்யூ. ரைடர் (1925) அவற்றை, “புத்திசாலித்தனமாக வாழ்வதற்கான கலையைக் கற்றுத்தரும் ஒப்புயர்வற்ற வழிகாட்டி” என்பார். ‘பஞ்ச தந்திரம்’ ஒரு “நீதி சாஸ்திரம்”. ‘நீதி’ என்பதன் கொருள் ‘justice’ அல்ல. வாழ்வைக் கெட்டிக்காரத் தனமாக வாழ்வதே ‘நீதி’. துறந்தவர்களுக்கான தருமம் அல்ல நீதி; மாறாக சமூக வாழ்விலுள்ளவர்கள் பாதுகாப்புடனும், வளத்துடனும், உறுதியுடனும் வாழ்ந்து வெற்றி பெறுவதற்கான வழி முறைகளே நீதி என விளக்கமளிக்கிறார் ரைடர்.

கிறிஸ்துவிற்குச் சில நூற்றாண்டுகள் முந்தியதாகச் சொல்லப்படும் ‘பஞ்ச தந்திரம்’ உருவானதற்குச் சொல்லப்படும் முன்னுரைக் கதையும் இதையே சொல்கிறது. ஒரு அரசனுக்கு மூன்று பிள்ளைகள். படிப்பே ஏறாத அந்த முட்டாள்ப் பிள்ளைகளைக் கெட்டிக்காரர்களாக்க வழி தேடுகிறான் மன்னன். முறையான கல்வி பயிற்றுவிப்பதென்றால் இலக்கணம் கற்கவே பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். பிறகு இதர சாஸ்திரங்களைக் கற்க வேண்டும். பின்னரே அறிவுக்கண் திறக்கும். எனவே சுருக்கு வழியொன்றை அமைச்சர்கள் உரைக்கின்றனர். “விஷ்ணு சர்மன் என்றொரு கிழப் பிராமணன் உள்ளான். பல்வேறு கலைகளிலும், வித்தைகளிலும் பயிற்சியுள்ளவன். உங்கள் பிள்ளைகளின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்கு அவனே வல்லவன்” என்பதே அவர்கள் காட்டிய வழி.

விஷ்ணு சர்மன் ஆறே மாதத்தில் அந்த மூன்று மர மண்டைகளிலும் அறிவு கொளுத்தினான். அதற்கு அவன் கண்ட உபாயமே பஞ்ச தந்திரம். அய்ந்து தலைப்புகளில் அவன் சொன்ன 84 பஞ்ச தந்திரக் கதைகளினால் அவர்கள் புத்திசாலிகளாயினர்.

புத்த ஜாதகக் கதைகள் சற்று வித்தியாசமானவை. மனிதத் துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு அறவாழ்வையே ஒரே வழிமுறையாக உபதேசித்துத் திரிந்த புத்த பகவன் வாழ்வறங்களை விளக்குவதற்காக அவ்வப்போது சொன்ன சுமார் 500க்கும் மேற்பட்ட கதைகளே புத்த ஜாதகக் கதைகள். குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் தொகுக்கப்பட்டவை இவை. பாலி மொழியிலிருந்து பேரா. ஈ.பி., கோவெல் அவர்களின் தலைமையில் மொழி பெயர்க்கப்பட்ட 537 கதைகள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

கோதம புத்தருக்கு முன் ‘எண்ணில் புத்தர்கள்’ தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்தப் போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாகப் பகவன் புத்தர் சொன்ன கதைகளே இவை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கே புத்தர் இந்தக் கதையைச் சொன்னார் என்கிற முன்னுரையுடன் இவை தொடங்கும். கதைக்குப் பின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் இப்பிறவியில் யாராக உள்ளனர் எனப் புத்தர் விளக்கக் கதை முடியும். அற அடிப்படையிலான திறன் சார்ந்த வாழ்வை வற்புறுத்தியவர் புத்தர். இதே அறங்களை விளக்கும் முகமாக இக்கதைகள் அமைந்தன.

ஆக ஏதோ ஒரு வகையில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழி முறைகளைச் சொன்னவையாக நமது மரபுக் கதைகள் அமைந்தன. மிகப் பழைய பஞ்ச தந்திரங்களனாலும் மிகச் சமீபத்திய (கிருஷ்ண தேவராயர் காலத்திய) தெனாலி ராமன் கதைகளானாலும் சரி அவை நிகழ் வாழ்வின் விதி முறைகளையும், தர்க்கங்களையும் விளக்கி அவற்றிற்கேற்ப வாழ்வை அமைத்து முன்னேறத் தோன்றியவை.

முல்லாவின் கதைகள் இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றன. முல்லாவை நம்மில் ஒருவராய் உணர்ந்து நெருக்கம் கொள்ளும் தருணம் இதுதான். முல்லா நிகழ் வாழ்வின் தர்க்கங்களை ஏற்பதில்லை. முல்லா அவற்றைக் கலைத்துப் போடுகிறார். முல்லா சாதுர்யமானவர் அல்ல. இன்றைய வாழ்வு மதிப்பீடுகளின்படி வெற்றி பெற்றவருமல்ல. அவரது சாதுரியமெல்லாம் பேச்சில் மட்டுமே. அவர் பல ஞானவான்களையும், பிரதாபங்களைக் கொட்டி அளக்கும் போர் வீரர்களையும் எதிர்கொண்டு நம்மைச் சிரிக்க வைத்தவர்தான். ஆனால் அவர்களுக்கும் மேலாகத் தன்னை நிறுவிக் கொள்வதன் மூலம் அவர் அதைச் செய்வதில்லை. ‘வீரப்பிரதாபம்’ (131), ‘ஆன்மீக குரு’ (159) முதலிய கதைகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தன்னை முட்டாளடித்துக் கலைத்துப் போடுகிறார். முல்லாவிடம் காணப்படும் சுய எள்ளலை நமது மரபில் காணவே முடியாது. முல்லா ஒரு புத்திசாலித்தனமான முட்டாள்.

எந்த நீதியையும் அவர் சொல்வதில்லை. எந்த அற போதனையையும் அவர் செய்வதில்லை. பதில் சொல்ல இயலாத எந்தக் கேள்விக்கும் அவரிடம் நீங்கள் விடை தேட முடியாது. அவருக்கு அதைப்பற்றியெல்லாம் ‘எதுவும் தெரியாது’. அவரே சொல்வது போல (‘பள்ளி’ – 54). “விஷயங்கள் உண்மையில் அதனதன் தன்மையில் அப்படி ஏன் இருக்கின்றன?” என்பது குறித்த சிந்தனையை உசுப்புவதே அவரது பணியாக அமைகிறது. வழக்கமாக நாம் உலகைப் பார்க்கும் முறையிலிருந்து நம்மைத் திசை திருப்பிவிடுகிறார் முல்லா.

எதார்த்த வாழ்வின் “அர்த்தங்களை” அவர் குலைத்துப் போடுகிறார். ஆளைவிட ஆடைக்குத்தான் இங்கு மரியாதை எனில் விருந்துப் பலகாரங்களை அந்த ஆடைக்கு அர்ப்பணிப்பது தானே சரியாக இருக்க முடியும்?. ‘அர்த்தம்’ (பொருள்), அர்த்தத்தின் பின்னே உள்ள ‘ஒழுங்கு’, ‘குறியீடு’, ‘அமைப்பு’ ஆகியவை குறித்த முன்னூகங்களையும் நம்பிக்கைகளையும் அவரது பேச்சுக்கள் கலைத்துப் போடுகின்றன; அவற்றுடன் சமர் புரிகின்றன. தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் முல்லா அத்தோடு உலகை நியாயப் படுத்துவதற்கு நமது கலாச்சாரம் பயன்படுத்தும் மரபுகளையும் ஒழுங்கு முறைகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கிறார்.

நடைமுறையிலுள்ள தர்க்கங்கள், பகுத்தறிவு சார்ந்த மதிப்பீடுகள் ஆகியவற்றின் தோல்விகள் மீது கவனத்தைத் திருப்பும் முல்லா வெளிப்படையாகத் தெரியும் மேல்மட்ட அர்த்தங்களுக்கு அப்பாலுள்ள இரண்டாம் நிலை அர்த்தங்களின் மீது நம்மை ஈர்க்கிறார்.

பிளேட்டோவும் பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளும் எழுப்பிய கேள்விகளைத் தாண்டி பின் வந்த தத்துவவாதிகள் யாரும் எதையும் புதிதாய்ச் சொல்லிவிடவில்லை என்றொரு கருத்து உண்டு. பிளேட்டோ காலத்திருந்து இன்று வரை நமது மொழி மாறாத போது நமது கேள்விகள் மட்டும் எப்படி மாறும் என்பார் விட்கென்ஸ்டெய்ன். முல்லா நமக்குப் புதிய மொழியையோ. புதிய தர்க்கத்தையோ கற்றுத் தந்துவிட்டார் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் நமது மொழியின் மாறா நிலையை, நமது தர்க்கத்தின் வன்முறையை நமக்கு உணர்த்திவிடுகிறார் முல்லா.

நகைச்சுவை என்பது ஒரு வகை உணர்வோ. அறுசுவைகளின் ஒன்று மட்டுமோ அல்ல. உலகை வழமையான பார்வையிலிருந்து விலகிப் பார்க்கும் முறைமைகளில் ஒன்று. இந்த வகையில் தான் எப்போதும் நகைச்சுவை என்பது ஒரு விமர்சனமாகவே அமைந்து விடுகிறது. நகைச்சுவை, பைத்திய நிலை, கனவு முதலியன அதிகாரங்களுக்கு எதிராகவே அமைவதன் பின்னணி இதுதான்.

இதனால்தான் பாசிசத்தால் நகைச்சுவையைச் சகிக்க இயலாமலுள்ளது. ஹிட்லர் ஆட்சியில் நகைச்சுவை ஒடுக்கப்பட்டது குறித்த நூலொன்று சமீபத்தில் வந்துள்ளது. ஜெர்மன் மொழித் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான ருடால்ஃப் ஹொஸோக் எழுதியுள்ள ஒரு நூலில் சொல்லப்படும் சில செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. 1944ம் ஆண்டு மரியன் எலிஸ்கே என்கிற ஒரு ஜெர்மன் தொழிலாளி மரண தண்டனைக் குள்ளாக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் ‘ஜோக்’ ஒன்றைப் பரப்பியதுதான். ‘வெறுப்புக் கருத்துக்கள் மூலம் அரசின் போர் முயற்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்’ என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர் சொன்ன நகைச்சுவை இதுதான். பெர்லின் நகரிலிருந்த வானொலி கோபுரத்தின் மீது ஹிட்லரும் கோயரிங்கும் நின்றிருந்தனர். “பெர்லின் நகரவாசிகளை குஷிப்படுத்த நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்” என்றார் ஹிட்லர். “அப்படியானால் நீங்கள் இங்கிருந்து கீழே குதிக்கலாமே” – இது கோயரிங். இதைச் சொன்னதற்காகவே மரண தண்டனை.

அப்படியும் ரகசியமாகப் பல ஜோக்குகள் நாஜி ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கவே செய்தன. அவற்றில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. ஹிட்லர் ஒரு பைத்தியக்கார விடுதியைப் பார்வையிடச் சென்றார். பைத்தியங்கள் எல்லோரும் ஒழுங்காக உடை உடுத்தப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தது. ஹிட்லர் அவர்களை பார்வையிட வந்த போது ஒரே நேரத்தில் அனைவரும் கையுயர்த்தி அவருக்கு வணக்கம் சொன்னார்கள். பார்வையிட்டு வந்த ஹிட்லர் ஒரு நபர் மட்டும் வணக்கம் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து எரிச்சலுற்றார். “ஏன் வணக்கம் சொல்லவில்லை?” என உறுமினார். நடுங்கிய அந்த நபர் சொன்னார் “மெய்ன் ஃப்யூரர், நான் ஒரு நர்ஸ், பைத்தியமல்ல”.

ஹிட்லரின் ஆட்சித் தொடக்கத்தில் புழக்கத்திலிருந்த ‘ஜோக்’ இது. நாளாக நாளாக கெடுபிடிகள் அதிகமாயின. ‘ஜோக்’குகள் மூலம் பாசிசத்தையோ. அதிகாரங்களையோ வென்றுவிட முடியும் என்பதல்ல. ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை ஒடுக்கப்பட்ட மக்களின் மன இறுக்கத்தை நெகிழ்த்துகின்றன. காந்தி ஒரு முறை சொல்லவில்லையா? “நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ செத்திருப்பேன்” என்று. காந்திக்கு மட்டுமன்று நம் எல்லோருக்கும் பொருத்தமானதே இது.

நமது அரங்க மரபில் ‘விதாஷகர்கள்’ நாயகர்களைச் சுற்றி எழுப்பப்படும் அதிகாரங்களைக் குலைத்துப் போடுவதைக் காண முடியும். வீரப்பிரதாபங்களுடன் அரங்கில் முன்னிறுத்தப்படும் நாயகனை விதூஷகன் வெகு சாதாரணமாகக் கிண்டலடித்து விடுவான். ஒரு வகையான ‘அந்நிய மாதல்’ உத்தியாகவும் அது விளங்கும். இந்த நிலை எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற ‘சூப்பர் ஹீரோ’க்கள் உருவான போது ஒழிந்தது. கதாநாயகர்களுக்கு சூத்து கழுவுபவர்களாக நகைச்சுவை நடிகர்கள் மாற்றப்பட்டனர். கவுண்டமணி காலத்தில் கொஞ்சம் நிலைமை மாறியது. ஆனால் அதனாலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தனது படங்களில் அவரைத் தவிர்க்கக்கூடிய நிலையும் உருவாகியது.

சின்ன வயதில் நமக்கு நெருக்கமாக இருந்த முல்லா, நமக்கு வயதாக ஆக அந்நியமாகிப் போகும் நிலையை சஃபி தனது கவிதையொத்த முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வாழ்வின் தர்க்கங்களுக்கு நாம் பலியாகிப் போவதன் விளைவு அது. எந்த ஒரு பிரச்சினையும், கெட்டிக்காரத் தனமாக மட்டுமே அணுகுவதற்கு நாம் நம்மைத் தயார் படுத்தி வைத்துள்ளோம். சூழலின் இயங்கு விதிகளை அதற்காகவே நாம் அறிந்து வயப்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் வெற்றி பெறுவது உண்மை தான். ஆனால் இந்த வெற்றியினூடாக நாம் சூழலுக்குள் அமிழ்ந்துவிடுகிறோம். ஆனால் முல்லா பலமுறை சூழலின் விதிகளுக்கு எதிராகவே எதிர்வினையாற்றுகிறார். தான் பொற்காசுகளை மறைத்து வைத்த இடத்தில் ஒட்டகச் சாணம் இருப்பதைப் பார்த்து அவர் பதறுவதில்லை. யார் அதை எடுத்துச் சென்றிருப்பார் எனத் துப்பறியத் தொடங்குவதுமில்லை. மாறாக இந்த மலை உச்சிக்கு ஒட்டகம் எப்படி வந்தது என்ற வியப்பில் ஆழ்வார். சூழலின் விதிகளை உணர்ந்து இயங்காமல் அவர் ‘தப்பு’ செய்கிறார். ஆனால் அதன் மூலம் சூழலில் அமிழ்ந்து விடாமல் ‘தப்பித்து’ விடுகிறார். பிழை செய்கிறார். அதனால் பிழைத்துவிடுகிறார். ஆனால் நாமோ வெற்றி பெற்று சூழலுக்குள் அமிழ்கிறோம். நமது தனித்துவத்தை இழக்கிறோம்.

சற்றே நம்மை இந்தத் தர்க்கத்தின் வன்முறையிலிருந்து தப்புவதற்கு உதவி செய்த சஃபிக்கும் இதை வெளியாகும் ‘புதிய காற்று’ நிறுவனத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். இஸ்லாமில் சுஃபி, பவுத்தத்தில் ‘ஸென்’, ஆகிய உட்கிளை மரபுகளில் இவ்வாறு அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கதைகள் உருவாகியது நமது சிந்தனைக்குரிய ஒன்று. உருது மற்றும் அரபி மொழிகளில் உருவான ‘லாடஇஃப்’, ‘லடிஃபா’, ‘ஹகாயத்’ முதலிய முதலியன போல பழம்பெருமை மிக்க நம் தமிழில் ஏன் உருவாகவில்லை? வீரமாமுனிவர் எனப்பட்ட தமிழறிஞரும் கிறிஸ்தவப் பாதிரியாருமான கான்ஸ்டான்டினோ பெஸ்கி அவர்களின் ‘பரமார்த்த குரு கதை’க்கு முன்னதாக இப்படியானதொரு இலக்கிய வகை இங்கு உண்டா?