அம்பேத்கரும் தேசியமும்

 

{நேற்று நெல்லையில் நடைபெற்ற ‘அம்பேத்கர் 125’ கருத்தரங்கில் ‘அம்பேத்கரும் தேசியமும்’ எனும் தலைப்பில் நான் பேசிய உரை. இங்கு எழுத்துருவில்.

ஏராளமான மாணவர்கள், ஆய்வாளர்கள், இயக்கவாதிகள் முதலான சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த அரங்கில் சற்று ஆழமான ஆய்வுரைகளும் அதிக சலசலப்பின்றி கவனமாகக் கேட்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

திரு.சூரியா சேவியர் முயற்சியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தேசியக் கருத்தரங்கில் கருத்தரங்கு அமைப்பில் பங்குபெற்ற உள்ளூர்த் தலைவர்கள் தவிர நீதிபதி முத்துராஜ், ஆய்வாளர் காஜேந்திரன், வ.கீதா, கிறிஸ்துதாஸ் காந்தி. இயக்குனர் ரஞ்சித் ஆகியோரும் உரையாற்றினர்.}

அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வைகளின் தனித்துவத்தையும், சிறப்புகளையும், சிக்கல்களையும் புரிந்துகொள்ள 1905 ல் இந்தியாவில் வங்கப் பிரிவினையை ஒட்டி எழுந்த ‘இந்திய தேசிய’ எழுச்சி (திலகர், அரவிந்தர், லஜபதிராய் முதலானோரால் முன்னெடுக்கப்பட்டது), அதனூடாக சாவர்கர் முதலானோர் கட்டமைத்த ‘கலாச்சார (இந்து) தேசியம்’. முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபாமையினரையும் உள்ளடக்கி காந்தி அடிகள் உருவாக்கிய inclusive nationalism ஆகியவற்றை நாம் முதலில் புரிந்து கொண்டு அவற்றிலிருந்து அம்பேத்கர் வேறுபட்டு நின்ற அம்சங்களை நாம் நோக்க வேண்டும்.

அம்பேத்கர் இறுதிவரை தேசியம் குறித்த ஐயத்துடனேயே (sceptical) அதை அணுகினார். இந்து தேசியத்தை மட்டுமல்ல அகில இந்தியத் தேசியம், மொழிவாரித் தேசியம் அனைத்தையும் அவர் அப்படித்தான் அணுகினார்.

தேசிய உணர்வை அவர் இயற்கையானது எனக் கருதவில்லை. தேசியங்கள் அடையாளங்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகின்றன. அம்பேத்கரைப் பொருத்தமட்டில் அவரது இந்தியச் சமூகம் குறித்த ஆய்வுகளின் அடிப்படைச் சமூக அலகுகளாக (basic social units) அவர் அன்றைய அரசியல் மற்றும் சமூகவியலாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு நின்று பார்ப்பனர் / பார்ப்பனர் அல்லாதார் / தீண்டத்தக்கவர்கள் / தீண்டத்தகாதவர்கள்/ நாகர்கள் / criminal tribes முதலான அடையாளங்களையே அவர் முதன்மைப் படுத்தினார். அந்த அடிப்படைகளிலேயே அவரது சமூக ஆய்வுகள் அமைந்தன.

பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தபோதுதான் அவர் சற்று விரிவாக தேசியப் பிரச்சினைக்குச் செவி கொடுத்தார். Nationality / Nationalism என அவர் தேசிய உணர்வை இரண்டாகப் பகுத்து அணுகினார். ஒரு சமூக உறுப்பினர்கள் தாம் அந்தக் குழுமத்தில் ஒருவராக இருப்பதையே இயல்பாகவும் பாதுகாப்பாகவும் உண்ர்ந்து வேறொரு குழுமத்தில் அங்கமாக இருப்பதை இயல்புக்கு எதிரானதாகவும், சங்கடமாகவும் உணரும்போது அந்த நிலையை அவர் Nationality என்றார். அத்தகைய நிலையை அடைந்த ஒரு சமூகம் ஒரு புவியியற் பகுதியை அடைடாளம் கண்டு தனி அரசதிகாரத்தைக் கோரும்போது அந்த நிலையை Nationalism என்றார். அத்தகைய நிலையை ஒரு சமூகம் அடையும்போதும் கூட ஒட்டு மொத்தமான சாதக பாதகங்களின் அடிப்படையிலேயே அதன் சுய நிர்ணய உரிமையை ஏற்க முடியும் என்றார்.

இந்த வகையில் பாகிஸ்தான் பிரிவினை கோரிய முஸ்லிம்களுக்கு அந்த உரிமை உண்டு என்பதாக அம்பேத்கர் தம் கருத்தை முன்வைத்தார். காஷ்மீர்ப் பிரச்சினையிலும் கூட காஷ்மீர் பள்ளட்தாக்கை பாகிஸ்தானிடம் அளிப்பது, ஜம்மு மற்றும் லதாக் பகுதிகளை இந்தியா வைத்துக் கொள்வது என்பதாகவே அவரது கருத்து இருந்தது.

முஸ்லிம்களின் இந்த உரிமையை ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் இந்துக்கள் மற்றும் மொழிவாரி தேசியத்தை முன்வைப்போரின் இந்த உரிமை கோரலை  ஏற்கவில்லை. இந்துக்கள் ஒரு சமூகமாகவே உருப்பெறவில்லை. அவர்கள் nationality எனும் நிலையையே எட்டவில்லை. ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் சமூகத்தின் ஓரங்கமாக உணர்வதுபோல ஒரு இந்து தன்னை இந்துவாக உணர்வதில்லை. அவன் /அவள் தன்னை ஒரு சாதியாகவே அடையாளம் காண்கிறார்/ள்.ஓரு சாதிக்குள்ளேயே  ஒரு இந்து பாதுகாப்பாகவும் சங்கடமில்லாமலும் உணர்கிறான். மற்றொரு சாதியுடன் அடையாளப்படுத்தி அவன் இத்தகைய உணர்வை அடைவதில்லை .இந்திய முஸ்லிம்கள் மத்தியிலும் கூட சில சாதிய வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர்களிடம் மேலோங்கி நிற்பது முஸ்லிம் எனும் அடையாளந்தான். முஸ்லிம் என்கிற அடிப்படையில் அவர்கள் இயல்பாகவே nationality எனும் நிலையை எய்தியுள்ளனர்.

ஆனால் இந்துக்கள் எந்நாளும் nationality என்கிற நிலையையே எட்ட இயலாது. சாதிகள் இருக்கும்வரை இந்தியா ஒரு nation என்கிற நிலையை எட்டவே முடியாது. பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த முஸ்லிம் அல்லாத இரண்டு தலைவர்கள் என அம்பேத்கரையும் பெரியாரையும் மட்டும்தான் நாம் காட்ட இயலும்.

இதெல்லாம் ஏதோ அகில இந்தியத் தேசியத்தை மட்டுமே முன்வஈத்து எழுதப்பட்டது என்பதல்ல. மொழிவாரியத் தேசியம் குறித்தும் அவருக்கு இந்த ஐயம் இருந்தது. மொழிவாரி மராத்தா மாநிலம் வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது அது மராத்தா சாதி ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும், அந்த வகையில் தலித் மக்களுக்கு அது எதிராக இருக்கும் என்பதே அவர் கருத்தாக் இருந்தது. மொழிவாரி மாநிலங்களாக எல்லாம் பிரிக்கப்பட வேண்டுமானால் அவை இந்தியை பொது மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூடக் குறிப்பிட்டார்.

எதார்த்தததில் இன்று அதுதான் நிகழ்கிறது என்பதையும் நாம் காணமுடிகிறது. இன்று மகாராஷ்ரத்தில் நடைபெறும் ‘மராத்தா கிரந்தி மோர்ச்சா’ க்களில் தலித்களை தீண்டாமைக் கொடுமைகளைலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ ஒழிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. தமிழகத்திலும் தமிழ்த் தேசியம் பேசுவோர் ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை ஆகியவற்றில் தீவிரம் காட்டும் அளவிற்கு தீண்டாமை ஒழிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதையும், தருமபுரித் தாக்குதல் அல்லது இதர தலித்களின் மீதான வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதியும் நாம் கவனம் கொண்டால் அம்பேத்கர் இது குறித்து வெளிப்படுத்திய ஐயத்தையும் கவலையையும் நாம் புரிந்த்து கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் ராஜராஜன் போன்ற நிலப்பிரபுத்துவ மன்னர் புகழ் பாடும் இவர்கள் நந்தனை எரித்துக் கொன்ற நிலப்பிரபுத்துவத்தைத் ‘தமிழர்காணியாட்சி’ எனவும் தேவதாசிக் கொடுமையை ஆதரித்தும் பேசிவருவதும் இவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

அம்பேத்கரைப் பொருத்த மட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டோர் உள்ளடக்கப்படும் வரைக்கும் இங்கு தேசியம் சாத்தியமில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதேசிய அரசு என்பதிலும் பொருளில்லை.

“இந்தத் தேசத்தின் நலனுக்கும் தாழ்த்தப்பட்டோரின் நலனுக்கும் இடையில் முரண்பாடு வருமேயானால் என்னைப் பொருத்தமட்டில் நான் தாழ்த்தப்பட்டோரின் நலத்தின் பக்கமாகவே நிற்பேன்.”

என்ற அம்பேத்கர் கராச்சி காங்கிரஸ் முழுச் சுதந்திரம் எனும் கோரிக்கையை வைத்தபோது அம்பேத்கர் அதை எதிர்த்தார். 1930 ஆக 8 அன்று நடைபெற்ற அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் (AIDCC), “காலங்காலமான சனாதன இந்துக்களின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்ய வந்த பிரிட்டிஷாரை வரவேற்கிறோம்” எனத் தீர்மானம் இயற்ரப்பட்டது.

1941 ல் உலகப் போர் வந்தபோது காலனிய அரசுக்கு  முழு ஒத்துழைப்பையும் அம்பேத்கர் அளித்தார். 1942 ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் பங்குபெற மறுத்ததோடு வைசிராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் அமைச்சராகவும் பங்கேற்றார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றினார். பிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்பதே தேசபக்தியின் அடையாளம் எனக் கருதப்பட்ட காலத்தில், “இது ஒழுங்கின்மைக்கும் குழப்பத்திற்குமே வழிவகுக்கும். ஜப்பானுக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்” என்றார்.

இந்தப் பார்வைகளின் உச்ச கட்டமாகவும் இறுதியாகவும் அவர் 1950 களில் இந்தியாவின் தனித்துவமான மதம் எனக் கருதப்படும் இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தத்தைத் தழுவினார்.

இவற்றைச் சுட்டிக்காட்டித்தான் இந்துத்துவவாதிகள் குறிப்பாக அருண்ஷோரி போன்றோர் அம்பேத்கரை “தேசத்துரோகி” என்கின்றனர்.

அம்பேத்கரை அவர்கள் தேசத்துரோகி என்றனர். தந்தை பெரியார் தன்னைத் தானே தேசத்துரோகி என அறிவித்துக் கொண்டார்.

“நான் தேசபக்தன் அல்லன். தேசத் துரோகி” எனச் சொல்வதில் பெருமை கொள்கிறேன்” என்றார். “தேசபக்தி” என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என ஒருமுறை அல்ல பலமுறை த்இரும்பத்திரும்பக் கூறினார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டுமானால் அவர்கள் நான்கு பற்றுகளை (‘அபிமானங்களை’) விட்டோழிக்க வேண்டும் என்றார். பெரியார் குறிப்பிட்ட அந்த நான்கு பற்றுகள், “தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்” என்பவைதான்.

தேசப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று என இவை எல்லாமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நாடியவர்கள் அனைவரும் கருதினர். அம்பேத்கரும் இதற்கு விதி விலக்கல்ல. அம்பேத்கர் ஒரு பிரச்சாரகர் மற்றும் இயக்கவாதி மட்டுமல்ல. அவர் ஒரு சமூக ஆய்வறிஞரும் கூட. ஒரு ஆய்வாளருக்குரிய நுணுக்கத்துடன் இந்தக் கருத்துகள் அவரிடம் வெளிப்பட்டன.

குறிப்புகள் 1: அம்பேத்கர் தேசம் என்பதைத்தான் ஏற்கவில்லை. ஆனால் வலிமையான மத்திய அரசு என்கிற கருத்தில் அவர் உறுதியாக இருந்தார். அரசு வலிமையாக இருந்தால்தான் தீண்டாமை முதலான சமூகக் கொடுமைகளுக்கு எதிரான உறுதியான சட்டங்களை அதன் மூலம் இயற்றி,  செயல்படுத்த முடியும் என்கிற வகையில் அவர்  வலிமையான அரசை ஆதரித்தார். இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முதலியன ஒரு வலிமையான அரசின்றிச் சாத்தியமில்லை என்பதிலிருந்து அவர் இந்த முடிவுக்கு வருகிறார். காந்தியும் அம்பேத்கரும் வேறுபடும் இன்னொரு புள்ளி இது.  காந்தி ஒருவகையில் ஒரு அரசு எதிர்ப்பாளர். எவ்வளவுக்கு எவ்வளவு அரசு வலிமையற்று இருக்கிறதோ அவ்வளவுக்கு அது மக்களுக்கு நல்லது என்பது அவரின் அணுகல் முறை. தோரோ, டால்ஸ்டாய் முதலானோரின் வழியில் காந்தி வந்தடைந்த அணுகல்முறை இது. எனினும் காந்தியும் எங்கும் தேசபக்தியை வற்புறுத்தியவர் அல்ல.

2.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சந்திக்கும் பல பிரச்சினைகளை அம்பேத்கரும் சந்திக்க நேர்ந்தது. ஒரு ஒடுக்கப்பட்டமக்களின் அரசியலின் நோக்கம் பெரும்பான்மைச் சமூகத்தில் நிலவும் ஒதுக்கல்களை ஒழித்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை உருவாக்குவது. அதற்கென அது ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி ஓரணியாக நிறுத்திப் பெரும்பான்மைச் சமூகத்தின் அநீதிகளை எதிர்க்கிறது. அந்த வகையில் பெரும்பான் மைச் சமூகத்திற்கும் அதற்குமான இடைவெளி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கிறது. ஆக பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்து பொதுக் கோரிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அம்பேத்கர் வெளிநாட்டில் படிப்பை முஇத்துவிட்டு இந்தியா வந்தவுடன் அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியைத் தொடங்குகிறார். அப்போது அவர் உருவாக்கிய இயக்கம் “பகிஷ்கரித் பாரத்’ (Depressed class association). ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்கிற இந்தக் குறுகிய அடையாளத்திலிருந்து விலகி அவர் 1930களின் இறுதியில் Independent Labor Party எனும் அமைப்பைத் தொடங்கித் தேர்தலில் பங்கேற்கிறார். பின் அவர் மீண்டும் ‘பட்டியல் சாதியினர்’ எனும் சிறிய அடையாளத்தைத் தேர்வு செய்து Scheduled Casts Federation ஐத் தொடங்குகிறார். இறுதிக் காலத்தில் மறுபடியும் அவர் தன் இறுதிக் காலத்தில் அகன்ற அடையாளத்தை நாடுகிறார். Republican Party (குடியரசுக் கட்சி) எனும் அகன்ற அடையாளத்தை நாடுகிறார்.

3.அம்பேத்கர் காலனிய அரசுடன் இணைந்து செயல்பட்டாலும் காலனிய அரசை நியாயப்படுத்தி விரிவாக எதையும் பேசவில்லை. காலனிய அரசின் ஊடாக உருவான புதிய நிறுவனகள், சட்டத்தின் ஆட்சி, பிரதிநிதித்துவ அரசு ஆகியவற்ரின் ஊடாக முதன்முதலாக அடித்தட்டு மக்களுக்கான அரசியல் வெளி விரிவடைகிறது என்பதே அவரது காலனிய ஆதரவு நடவடிக்கையின் அடிப்படை. இறுதிக் காலத்தில் அவர் காலனிய அரசு தீண்டத்தகாத மக்களை ஏமாற்றி விட்டதாக அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டவும் செய்தார்.