மக்கள் வாழ்வில் மகாபாரதம்

(முனைவர் மு.சண்முகம் நூலுக்கு எழுதிய முன்னுரை)

நண்பர் மு.சண்முகத்தை அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த காலம் முதல் அறிவேன். பாசமாகப் பழகும் இனிய நண்பர். ‘தோழர்’ என அவர் பாசத்தோடு விளிப்பதைக் கேட்க இனிக்கும். அவருடைய இந்த நூல் சற்றுத் தாமதமாக வருவதில் என்னுடைய பங்கும் உண்டு. அவர் இதை அச்சுக்குத் தயாரான நிலையில் என்னிடம் கொடுத்தும் முன்னுரை எழுதத் தாமதித்து விட்டேன்.

இது “தமிழ்ப் புனைகதைகளில் பாரதம்” என்கிற அவரது முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி. பகுதி பகுதியாக அவர் தன் ஆய்வேட்டை நூல்களாக வெளியிடுகிறார். இந்தத் தொடரில் இப்போது வெளிவரும் இந்நூலில் அவர் தமிழ்நாட்டில் பாரதம் எவ்வாறெல்லாம் பயிலப்பட்டு வந்தது, மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை விளைவித்தது என்பவற்றைத் தொட்டுக்காட்ட முனைந்துள்ளார்.

இதிகாசங்கள் என்பன அவை எழுதப்பட்ட காலம், இடம் ஆகியவற்றோடு தம் இறுதி வடிவத்தை அடைந்து விடுவதில்லை. காலந்தோறும், அவை பரவிச் செல்லும் இடங்கள், அங்கு வாழும் மக்கள் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவை மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் தேய்ந்து கொண்டும் உள்ளன. இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் வால்மீகிக்கும் கம்பனுக்கும் இடையில் குறைந்தது ஆயிரம் ஆண்டு கால இடைவெளி உள்ளது. வால்மீகியின் காலத்தில் இராமன் ஒரு காவிய நாயகன் மட்டுமே. கம்பனின் காலத்தில் அவன் “இராமாவதாரம்” ஆகி விடுகிறான். எனவே அதற்குரிய வகையில் இராமனைச் செதுக்க வேண்டிய பணிக்குக் கம்பன் ஆளாகிறான். அடிப்படைக் கதை அமைப்பு மாறாமல் ஒரு இறை அவதாரத்துக்குடிய மேன்மைகள் எதற்கும் குறை வந்து விடாமல், அப்படிக் குறையாக அமையக்கூடிய குணங்கள் மற்றும் செயல்கள் எல்லாவற்றையும் செதுக்கிப் புனிதப் படுத்தி இராமனைப் படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது கம்பனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதன் விளைவாகக் கம்ப இராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் ‘கச்சா’த் தன்மை’யை இழக்கவும் நேர்கிறது. சீரமைப்பு ஒரு அழகென்றால் கச்சாத் தன்மையும் இன்னொரு அழகுதானே. ஒரு பொது வெளியில் உருவாக்கப்படும் பூங்காவுக்கும், ஒரு இயற்கை வனத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கம்பனிலும் வால்மீகியிலும் கண்டு நுகரச் சாத்தியமுண்டு.

மகாபாரதத்தைப் போலன்றி இராமாயணம் இந்தியத் துணைக் கண்டத்தோடு நின்று விடாமல் தென் கிழக்காசிய நாடுகளிலும் பரவியது. இன்றளவும் அது அங்கு ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக அரங்கேறி வருகிறது. அங்கு இராமயண ஆசிரியராக வால்மீகி ஏற்கப்படுவதில்லை. அங்கு இதன் அடிப்படைக் கதை அமைப்பும் மாறுகிறது. அங்கு சீதை இராவணனின் மகள் ஆகிறாள். மறைந்த நடிகர் ஆர்.எஸ்.மனோகர் மேடை ஏற்றிய அவரது புகழ்பெற்ற ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் இந்தத் தென் கிழக்காசியக் கதை மரபைத்தான் தழுவி உருவாக்கப்பட்டது.

இராமாயணத்தைப் பொருத்த மட்டில் அது காலம், இடம் ஆகியவற்றின் ஊடாக மட்டுமல்ல மதங்களின் ஊடாகவும் பயணிக்கும் பேறடைந்த ஒரு காவியம் அது. சமணமும் அதை ஏற்றுக் கொண்டது. இந்த ஜைன இராமாயணத்தை எழுதியவர் விமலசூரி. அவரது இராமாயணத்தில் சீதை  இராமனின் சகோதரி ஆகிறாள். “இதுவரை நீங்கள் அறிந்திருந்த இராமாயணம் பொய்யானது. முட்டாள்களால் எழுதப்பட்டது” என விமலசூரி முன்னுரைக்கவும் செய்வார்.

அறிஞர் ஏ.கே.இராமானுஜத்தின் “முன்னூறு இராமயணங்கள்” நூல் உலக அளவில் புகழ் பெற்ற ஒன்று.

ராஜாஜி அவர்களது ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘வியாசர் விருந்து’ இரண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வாசிக்கப்பட்ட நூல்கள். தனது ‘வியாசர் விருந்து’ (பாரதம்) நூலுக்கான முன்னுரையில், “காலசேபக்காரர்களும், சினிமாக்காரர்களும், பாட்டிகளும் புகுத்திவிட்டிருக்கும் புதுச்சரக்குகள் கலக்காமல் (இவற்றை) சரியாகப் படித்துத் தெரிந்தவர்கள் வெகு சிலரே என்று நான் எண்ணுகிறேன்” என்பார். அவருடைய இந்த இராமகாதையும், பாரதமும் இன்னும் இரு புதிய சரக்குகள்தான் என்பதையும் அவை அவருக்குரிய பார்வைகளையும், தேர்வுகளையும் சுமந்து கொண்டுதான் உருப்பெற்றுள்ளன என்பதையும் மறந்து அப்படிச் சொல்வார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் இந்த இரு முக்கிய இதிகாசங்களில் மகாபாரதம் தான் சண்முகம் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப் பொருள். பாரதம் இராமாயணத்திற்கும் பிந்தியது. எனினும் மக்கள் மனத்தில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆழ்ந்த ஈர்ப்புடன் விளங்குவது. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களால் ஆன மகா காவியம் அது. மையக் கதை என்பது அதில் ஒரு பகுதியே. ஏராளமான கிளைக் கதைகள், தத்துவம், அரசியல், அற போதனைகள், அன்றாட வாழ்வியல் நெறிகள் என பாரதம் ஒரு “முழுமையான நூல்”.

இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் முதலான செமிடிக் மதங்கள் தம்மை “நூல்கள் வழங்கப்பட்ட மதங்கள்” எனச் சொல்லிக் கொள்பவை.  இறைவனால் அருளப்பெற்ற புனித நூல்கள் அவற்றுக்கு உண்டு. அந்தப் புனித நூற்கள் தம்மைப் பின்பற்றுவோர் கடைபிடிக்க வேண்டிய அறங்கள், நிறைவேற்ற வேண்டிய மதக் கடமைகள், எல்லாவற்றிற்கும் மேலாக உய்வதற்கு அல்லது சுவனம் (சொர்க்கம்) அடைவதற்கான வழிகளைச் சொல்பவை. ஆனால் மகாபாரதமோ இப்படி உய்வதற்கு மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைக்கும், அதில் நீங்கள் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சிக்கலுக்கும் விடை சொல்லும் நூல். அரச நீதியானாலும், தத்துவ விளக்கம் ஆனாலும் எல்லாவற்றிற்கும் மகாபாரதத்தில் விடையுண்டு.

ஆக மகாபாரதம் என்பது வாழ வழி சொல்லும் நூல். பாரதக்கதை கேட்பது என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. “அவர் பாரதம் வாசித்தவர்” என்றால் நாலும் தெரிந்தவர் எனப் பொருள். அத்தகைய தகுதியைத் தன்னை வாசிப்போருக்கு அளிக்கும் வல்லமை வாய்ந்ததாக அது அமைந்த காலம் இருந்ததது.

இப்படியான ஒரு இதிகாசம் ஒரு அருளப்பட்ட இறை நூலுக்குரிய புனித நிலையை வரலாற்று ஓட்டத்தில் வரித்துக் கொண்டது. ப்ருகு பிராமணர்கள் இதிகாசக் கதைகளை பாகவத இலக்கியங்களாக மாற்றி ராமனையும் கிருஷ்ணனையும் விஷ்ணுவின் அவதாரங்களாக ஆக்கிய வரலாற்றை வி.எஸ்.சுதாங்கர் எழுதுகிறார். அருளப்பட்ட ஒற்றை வேத நூல் என ஒன்றில்லாத இந்துச் சமூகத்தில் அதன் இடத்தை இந்த இதிகாசங்கள் இப்படித்தான் கைப்பற்றின. பண்டைய கிரேக்க இதிகாசங்களான ‘இலியத்’ அல்லது ‘ஒடிசி’ எட்ட இயலாத இந்த நிலையை இராமாயணமும் பாரதமும் எட்டின. வருண, சாதி தர்மங்களை மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் நியாயப்படுத்தி ஏற்கச் செய்யும் கருவியாகவும் இவ்வகையில் அவை ஒவ்வொரு கணமும் இந்தியச் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

பாரதத்தில் அடங்கிய கிளைக் கதைகதைகளும், முழு பாரதமும் எண்ணற்ற கதைகள், காவியங்கள், நிகழ்த்து கலைகள் ஆகியவற்றுக்கு வழிகோலின. இன்றளவும் திரௌபதி துகில் உரியும் வரலாறும், அவளின் சபதமும், பாரத்தத்தின் பல்வேறு கிளைக் கதைகளும் எண்ணற்ற நாடகங்களாக, தெருக்கூத்துக்களாக, பாகவத மேளாக்களாக ஆண்டுதோறும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. இன்றளவும் வட மற்றும் மேற்குத் தமிழகப் பகுதிகளில் மாதமும் முழுவதும் நடக்கக் கூடிய பாரதக் கதை நிகழ்வுகள் உண்டு. அச்சும் பத்திரிகைகளும் வந்த போது படக் கதைகள், சிறு கதைகள் என்றெல்லாம் பாரதம் பல்வேறு படைப்புச் செயல்பாடுகளுக்கு ஊற்றுக் கண்ணாய் அமைந்தது. காண்டேகர், எம்.வி.வெங்கட்ராம், எம்.டி.வாசுதேவன் நாயர், எஸ்.எல்.பைரப்பா, ராஜகோபாலாச்சரியார், ஐராவதி கார்வே, மகாகவி பாரதி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், புதுமைப்பித்தன்….. யார்தான் பாரதக் கதைகளை ஊற்றுக் கண்ணாகக் கொண்டு தங்களின் இலக்கிய வெளிப்பாடுகளை உருவாக்ககவில்லை ! பீட்டர் புரூக் பாரதக் கதையை ஒன்பது மணி நேரம் இயங்கும் நாடகமாக்கினார். எண்ணற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என எத்தனை வடிவங்களில் நம் வாழ்வின் பிரிக்க இயலாத அங்கமாகத் தினந்தோறும் நம்ம்மோடு பாரதம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது !

கலை இலக்கியங்கள் மட்டுமா, இன்றைய அரசியலும் இராமாயணத்தையும் மகா பாரதத்தையும் ஒரு ஆயுதமாக எடுத்துக் கொண்டிருக்கும்  காட்சியையும் நாம் பார்த்துக் கொண்டும், அதனூடாக வாழ்ந்து கொண்டும்தானே இருக்கிறோம்.

இந்தியாவில் தோன்றிய இதர மதங்களான பவுத்தமும் சமணமும் இப்படியான இராமன், கிருஷ்ணன் முதலான புராண நாயகர்களையும் புராணங்களையும் முன்வைக்காமல் மகாவீரர், புத்தர் என்கிற வரலாற்று நாயகர்களையும் அவர்களின் கருத்துரைகளையும் முன்வைத்ததால்தான் அவை இந்து மதத்தின் முன் நிற்க இயலாமல் ஆனதோ என்கிற கேள்வியும் நமக்கு எழத்தான் செய்கிறது.

இராமாயணம், பாரதம் இரண்டுமே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தபோதும் பாரதம் மக்களை இன்னும் தீவிரமாக ஆட்கொண்டதன் பின்னணியாக சண்முகம் சொல்வது, “இராமாயணம் ஒரு மூடிய பனுவலாகவும் (closed text)  மகாபாரதம் ஒரு திறந்த பனுவலாகவும் (open text) இருந்தது” என்பதுதான். இப்படிச் சொன்னதோடு நிற்காமல் அவர் இதை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கி இருக்க வேண்டும்.

பாரதத்தில் பொதிந்திருக்கும் பல்வேறு நிகழ்வுகளும், கிளைக் கதைகளும் வாசிக்கும் யாரையும் மிக ஆழமாகப் பாதிக்க வல்லவை. தந்தைக்குத் தன் இளமையைத் தாரை வார்க்கும் மகனும், தனது ஐந்து பிள்ளைகளைக் காப்பாற்ற, பிறந்த கணத்திலிருந்தே தன்னால் புறக்கணிக்கப்பட்டிருந்த மகனை உயிர்த் தியாகம் செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்கும் தாயும் எத்தனை விதமான சலனங்களையும், உணர்வுகளையும் வாசிப்போரின் இதயத்தில் எழுப்பியிருப்பர்.

சண்முகம் எனக்கு வாசிக்கத் தந்த கணினி அச்சுக் கோர்ப்புப் பிரதி நிறைய பிழைகளைக் கொண்டிருந்தது. அச்சில் நூலாக வெளிப்படும்போது அந்தப் பிழைகள் களையப்படும் என நம்புகிறேன்.

இன்னும் சிறந்த ஆக்கங்களை சண்முகம் எதிர்காலத்தில் படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அ.மார்க்ஸ்,

சென்னை, ஜனவரி, 8, 2018