இறுக்கமில்லாத இஸ்லாமை யார் கொல்கின்றனர்?
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் ஹாசன் சூரூர் எழுதியுள்ள இஸ்லாம் குறித்த தனது சமீபத்திய நூலில் (Who Killed Liberal Islam) பிரிட்டிஷ்காரர்கள் பேசுகிற ஆங்கிலத்திற்கும் அமெரிக்கர்கள் பேசுகிற ஆங்கிலத்திற்கும் உள்ள வேறுபாடுபற்றி பெர்னார்ட் ஷா நகைச்சுவையாகச் சொன்ன ஒரு கூற்றைக் குறிப்பிடுகிறார். “அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் ஒரே பொது மொழியால் பிரிக்கப்பட்ட இரு சமூகங்கள்” என்பதுதான் அது. திருக்குரான் எனும் பொதுமறையைப் பின்பற்றக் கூடியவர்களாயினும் இஸ்லாத்தைப் புரிந்துகொள்வதிலும், கடைபிடிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் முஸ்லிம் சமூகத்திடையே உள்ள இரு முக்கிய போக்குகளைச் சுட்டிக்காட்டும் போதுதான் ஹாசன் சூரூர் இதைச் சொல்கிறார்.
நண்பர் லியாகத் அலி கலிமுல்லா அவர்களின் இந்த நூலை இம் முன்னுரைக்காக வாசித்தபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது. திருக்குரான் வெறும் மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் முன்வைக்கும் புனித நூலல்ல. இஸ்லாம் அப்படியான மதமும் அல்ல.அது முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை, அரசியல், ஒழுக்கம், சமூகக் கடமை ஆகிய அனைத்து அம்சங்களையும் அதைக் கடைபிடிப்போருக்கு அருளும் புனித நூல். இறைவாக்குகளாக அமையும் அந்நூல் ஒரே நாளில் அருளப்பட்டதும் அன்று. சுமார் 23 ஆண்டுகள் பல்வேறு சந்தர்ப்ப சூழல்களில் நபிகளின் வழியாக அருளப்பட்டது அது. சொந்தச் சமூகத்தில் வாழ்ந்தபோதும், புலம்பெயர்ந்து சென்று இன்னொரு பெருஞ் சமூகத்துடன் வாழ்வைப் பகிர்ந்துகொண்ட போதும், போர்க் காலங்களிலும், சமாதானச் சக வாழ்வின் ஊடாகவும் அருளப்பட்ட நூல் அது. ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் அவருக்கு அதுவே ஆதியும் அந்தமுமாக உள்ள வாழ்க்கை வழிகாட்டி. இதன் பொருள் அதைத்தவிர வேறொன்றையும் ஒரு முஸ்லிம் அறிய வேண்டியதில்லை என்பதல்ல. ஆனால் எதை அறிந்தாலும், எத்தகைய அனுபவங்களை எதிர்கொண்டாலும் அவற்றை உரசிப்பார்க்க அடிப்படையாக அமையும் இறைவாக்குகளின் தொகுப்பு அது.
அப்படி உரசிப் பார்க்கும்போதுதான் ஓவொரு இறைவாக்கும் எத்தகைய சந்தர்ப்பங்களில், எப்படியான சூழற் பின்புலங்களில் அருளப்பட்டது என்பது முக்கியமாகிறது. திருக்குர்ஆனை வாழ்நெறியாகக் கொள்ளும் யாரும் தம்மை இறுக்கிக் கொண்டவராக அமைத்துக் கொள்ளாமல் மிகவும் தாராள சிந்தை உடையவர்களாகவும் வரலாற்றுக் கொண்ணோட்டம் உடையவர்களாகவும், அமைவது அவசியமாகிறது. இன்றைய சூழல் மிகவும் நெருக்கடியான ஒன்று. இந்திய முஸ்லிம்கள் ஓரிருவர் அல்ல. உலகில் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லிம் சமூகம் இது. எனினும் தன்னைவிடப் பல மடங்கு பெரிதான இன்னொரு சமூகத்துடனும், இன்னும் பல சிறு சமூகங்களுடனும் தனது இருப்பையும் வாழ்வையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்துள்ள சமூகம் அது.
இன்று முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகளில் மட்டும் வாழவில்லை. பெரிய அளவில் மேலை நாடுகள் பலவற்றிலும் வாழ்கின்றனர். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் இனி உலக முரண்பாடு என்பது கலாச்சாரங்களின் அடிப்படையிலேயே நிலவும் என சாமுவேல் ஹட்டிங்டன்கள் ஆரூடம் சொல்லும் காலகட்டம் இது. அந்த வகையில் “இஸ்லாமோ ஃபோபியா” எனும் முஸ்லிம் வெறுப்பு பெரிய அளவில் உருவாகியுள்ள ஒரு உலகில். முஸ்லிம் வெறுப்பையே மூலதனமாக்கி வளர்ந்த ஒரு கட்சியின் ஆட்சியில் வாழும் மக்களாக இன்றைய இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் உள்ளனர்.
இப்படியான சூழலிலும் கூட எப்படியான நெருக்கடிகளைச் சந்திக்க நேரும்போதும் அவற்றை எதிர்கொள்ளத் திருக்குர்ஆன் வழிகாட்டுமா? வழிகாட்டும். நபிகள் நாயகம் இப்படியான வெறுப்புமிக்க மாற்றுச் சமூகம் ஒன்றின் மத்தியிலும் வாழ நேர்ந்தவர். அப்போதும் அவருக்கு அப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்ள உரிய வழிகாட்டல்களை இறைவன் திருக்குர்ஆன் வழியாகத் தந்துள்ளான். அந்தவகையில் திருக்குர்ஆன் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானது என்பது மீண்டும் மீண்டும் மெய்யாகிறது.
எனினும் திருக்குர்ஆனையும் அதன் வழிகாட்டலில் ஒரு மாபெரும் முஸ்லிம் சமூகத்தைக் கட்டமைத்த நபிகள் நாயகத்தின் உரைகளையும் (ஹதீஸ்), வாழ்வனுபவங்களையும் ஏற்றுப் பின்பற்றும் யாரும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. திருமறையின் ஒவ்வொரு கூற்றும் ஒவ்வொரு குறிப்பான சூழல்களில் வெளிப்பட்ட ஒன்று. சமாதான காலங்களில் மட்டுமல்ல போர்க்காலங்களிலும் வெளிப்பட்டவை. அவை தட்டையான “கூற்று”களல்ல. அவை வளமான பொருள்களை உள்ளடக்கிய “ஆயத்து”கள். அவை எந்தச் சந்தர்ப்பத்தில். எத்தகைய சூழலை எதிர்கொண்ட நிலையில் அருளப்பட்டவை என்பது முக்கியம். திருமறையை வாசித்தலும், நடைமுறைப்படுத்தலும் பயிற்சியின்பாற்பட்ட ஒன்று. மிக்க படைப்புத் திறனையும் கற்பனாவளத்தையும் கோரும் ஒன்று.
எந்த ஆயத்தை, எந்தச் சூழலில் எப்படிப் பயன்கொள்ள வேண்டும் என்பதில் கவனப் பிசகு ஏற்படுவதன் விளைவுதான் நாம் தொடக்கத்தில் சொன்ன பிரச்சினையின் அடிப்படை ஆகிறது. ஒரு புனித நூலை வாசிக்கும் முறையில் நாம் எந்தத் தவறையும் இழைத்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மற்றும் சமகால முஸ்லிம்களின் வாழ்வனுபங்கள் ஊடாக விண்டு விளக்குவதுதான் லியாக்கத்தின் இந்த அரிய நூல்.
இது ஒரு நெருக்கடியான காலகட்டம். அதிலும் இந்திய முஸ்லிம்களுக்கு மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். முஸ்லிம்களின் குடியுரிமைக்கே வேட்டு வைக்கும் ஒரு கொடிய காலகட்டத்தில் வாழ நேர்ந்தவர்கள் நாம். தாடி வைக்கக் கூடாது, தொப்பி அணியக்கூடாது என்றெல்லாம் சட்டங்கள் இயற்றப்படுமோ என ஒரு முஸ்லிம் கவலை கொள்ள நேரும் காலம் இது,
அந்த வகையில் இன்றைய முஸ்லிம் விரோதப் போக்கு உலக அளவிலும் இந்திய மண்ணிலும் முளைவிட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பலவாறும் சொல்லிச் செல்கிறது இந்நூல். முஸ்லிம் வெறுப்பை ரத்தத்தில் ஏந்தியவர்கள் மட்டுமின்றி நட்புடன் அணுகும் தோழர்களும் கூட பிரச்சினைகள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வரட்டு நாத்திகம் பேசிச் சீண்டுவது உட்படப் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் இந்நூல் இது.
முஸ்லிம்கள் குறித்துத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகளை எதிர்கொள்வதற்கு என இங்கு கையாளப்படும் சில உத்திகள் இன்று காலம் கடந்தவையாகியுள்ளன. முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோவில்களை இடித்தார்கள் என்றால், இல்லை அப்படியெல்லாம் இல்லவே இல்லை என ஆதாரம் காட்டி மறுப்பது போதாது. ஏனெனில் அது முழு உண்மையாகாது. மன்னர்கள் எல்லோரும் மன்னர்கள்தான். தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே அவர்களின் முதல் நோக்கம். அந்த வகையில் முஸ்லிம் மன்னர்களும் பிற மன்னர்களைப் போலவே வாழ்ந்தார்கள் ஆண்டார்கள். அவர்கள் கோவில்கள் கட்ட குமரகுருபரர்களுக்கு உதவவும் செய்தார்கள். பிரச்சினைக்குரிய இந்துமன்னர்களின் கோவில்களை இடிக்கவும் செய்தார்கள். முஸ்லிம் மன்னர்கள் ஆண்டார்களே ஒழிய தொடக்ககால சுல்தான்கள் தவிர வேறு யாரும் இங்கே “முஸ்லிம் ஆட்சியை” நிறுவ முயலவில்லை. முஸ்லிம் ஆட்சிகளின்போது முக்கிய அதிகாரிகளாக இந்துக்கள் செயல்பட்டனர். மதமாற்றமும் முஸ்லிம் மன்னர்களின் நோக்கமாக இருந்ததில்லை. இன்று முஸ்லிம் நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் வலுவான முஸ்லிம் அரசுகள் எந்நாளும் மையம் கொண்டிருந்ததில்லை. முஸ்லிம்கள் வலுவான ஆட்சிகளைக் கட்டமைத்திருந்த மத்திய இந்தியாவில்தான் இன்று முஸ்லிம்களின் எண்ணீக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
இந்த வகையில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிகளை அணுகுவது, முஸ்லிம் சமூக அமைப்புகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மத நிர்வாகங்களில் நிலவும் ஊழல்களின்மீது கவனத்தை ஈர்ப்பது, முஸ்லிம்களைச் சீண்டுபவர்களின் சீண்டல்களுக்கு எளிதில் பலியாகி அதே தொனியில் அவற்றை எதிர்கொள்ளும் போக்குகளைச் சுட்டிக்காட்டுவது, முஸ்லிம் அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது எனப் பல அம்சங்களில் இந்நூல் முன்மாதிரியான ஒன்று. பாசிசப் பின்னணியில் இங்கு வளர்ந்துவரும் முஸ்லிம் வெறுப்பு அரசியலைக் கண்டித்து எழுதிவருகிற முஸ்லிம் அல்லாத என்னைப் போன்றவர்கள் சொல்லத் தயங்கும் இம்மாதிரி அம்சங்களை லியாகத்தின் இன்னூல் தெளிவாக அடையாளப்படுத்துகிறது.
இன்று உருவாகி வளர்ந்துவரும் இந்த வெறுப்புச் சூழலை எதிர்கொள்ள ஒரே வழி நாம் நம் அடையாளத்தை வற்புறுத்தி அதற்குள் பதுங்கிக் கொள்வது அல்ல. இத்தகைய “பதுங்கு குழி மனப்பான்மையை” விட்டொழித்து வெளியே வாருங்கள், பிற சமூகத்தினரைக் கட்டித் தழுவுங்கள் என இந்ந்நூல் மொத்தத்தில் நம்பிக்கையை விதைக்கிறது.
ஆனால் இப்படி முஸ்லிம்கள் மத்தியில் விமர்சிக்கப்பட வேண்டிய கூறுகளைச் சுட்டிக்காட்டும் நூலாக மட்டுமே இது அமையவில்லை. இன்று உருவாக்கப்பட்டுள்ள முDஸ்லிம் வெறுப்புகளில் இதுவரை அடையாளம் காட்டப்படாத சில நுணுக்கமான போக்குகளையும் லியாகத் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நிர்பயா மீதான பாலியல் வன்முறை எத்தனை கொடுமையானதோ அத்தனை கொடுமைகளும், அதைவிடக் கொடுமைகளும் குஜராத் முதலான முஸ்லிம்களைக் குறிவைவத்து நடந்த கலவரங்களில் நிகழ்ந்தன. எனினும் நிர்பயா பிரச்சினையில் கொலையாளிகளுக்கு மரண தண்டன வழங்கி உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என இங்கு கோரிக்கைகள் எழுந்ததுபோல பல்கீஸ் பிரச்சினையில் கோரிக்கைகள் எழாததையும், பெண்கள் மீதான ஆசிட் வீச்சு என்றாலே விநோதினி நினைவுகூறப்பட்ட அளவிற்கு சந்திரலேகா எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரிமீதான ஆசிட் வீச்சு இன்று நினைவுகூறப் படாததையும் சுட்டிக்காட்டி ஒன்றன் பின் மத வெறுப்பும், இன்னொன்றின் பின் அதிகாரத்தை விமர்சிக்க இயலாத கோழைத் தன்மையும் உள்ளதைச் சுட்டிக் காட்டுவது மிகவும் நுணுக்கமான ஒன்று. இலங்கையில் தேவாலயங்களில் வணங்கிக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் நியூசிலாந்தில் இப்படி வணங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கிறிஸ்தவ வெள்ளை இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இலங்கைச் சமூகமும், நியூசிலாந்து மக்களும் இதை எவ்வாறு எதிர்கொண்டனர்? இலங்கை அரசு இனி யாரும் ‘ஹிஜாப்’ அணிந்து பொது இடங்களுக்கு வரக்கூடாது என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தவும் செய்தது. நியூசிலாந்திலோ அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணிந்து கிறிஸ்தவ – முஸ்லிம் ஒற்றுமையை வற்புறுத்தினர். பயங்கரவாதத்தை அடக்குமுறையாலும் அன்பாலும் அணுகும் இந்த இரு போக்குகளையும் அருகருகே நிறுத்தி லியாகத் விளக்கும் பாங்கு மனதைத் தொடுகிறது.
அன்றாடம் நாம் கண்டு விமர்சிக்கும் பல்வேறு அம்சங்களையும் வேறு கண்ணோட்டங்களில் இருந்தும் பார்க்க வேண்டிய தேவைகளை இந்நூல் ஆங்காங்கு சுட்டிக்காட்டுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லிம் பெண்கள் மத்தியில் புர்ஹா அணியும் வழக்கம் வந்த பின்புதான் அவர்கள் ஒப்பீட்டளவில் மிக எளிதாகப் பொது வெளிகளில் சஞ்சரிக்க முடிந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுவதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
முஸ்லிம்களிடையே மிதவாதிகளாக இருப்பவர்கள்தான் அடிப்படைவாதத்திலிருந்து தப்பித்தவர்களாக மட்டுமல்லாமல், தப்புவிப்பவர்களாகவும் உள்ளார்கள் என இந்நூலில் ஓரிடத்தில் கூறப்படுகிறது. தீவிரவாதம் இன்றைய சூழலில் பயனளிக்காது என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம்களில் மிதவாதியாகத் தோற்றமளிக்கும் சிலர் முஸ்லிம் வெறுப்பைத் திட்டமிட்டு மேற்கொள்ளும் சிலரின் கருவிகளாக ஆகிவிடும் ஆபத்தையும் நாம் இன்று காண்கிறோம். இதை மறந்துவிடக் கூடாது.
இருவாரங்களுக்கு முன் மலேசியப் பிரதமர் மகாதிர் முகம்மது உலக முஸ்லிம்களின் மாநாடொன்றைக் கொலாலம்பூரில் கூட்டினார். சவூதி, பாகிஸ்தான், ஐக்கிய அரபுக்குடியரசு முதலான நாடுகள் அதைப் புறக்கணித்தபோதும் இன்றைய உலகில் முஸ்லிம் நாடுகள் இலக்காக்கக்கப் படுதல் குறித்த கவலை ஒன்று முஸ்லிம் நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளதை அது காட்டியது. உலக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஐந்து முக்கிய பிரச்சினைகளை அம்மாநாடு அப்போது சுட்டிக்காட்டியது. அவை :
1.ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 2.சீன அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லிம்கள் 3.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்ட யேமன் யுத்தம் 4. முஸ்லிம் சமூகங்களில் நிலவும் ஆண் – பெண் சமத்துவமின்மை 5.முஸ்லிம் நாடுகளுக்கிடையே நிலவும் மிகப் பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு.
உலகின் மிக அதிகமான வருமானமுள்ள நாடும் (கதார்) முஸ்லிம் நாடுதான். மிக்க வறுமையில் உழலும் நாடுகளையும் அங்குதான் காண்கிறோம். மிகப் பெரிய அளவு எண்ணை வளம் இருந்தபோதும் முஸ்லிம் நாடுகளால் தம் சொந்தப் பிரச்சினைகளைச் சமாளித்துவிட முடியவில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின் இன்று இஸ்லாமிய உலகம் மேற்குலகால் இலக்காக்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம் சமூகங்கள் இலக்காக்கப்படுகின்றன. இன்றைய உலகின் உயிர்நாடியாக உள்ள எண்ணை வளம் மிக்க நாடுகளாக இருந்தும் முஸ்லிம் நாடுகளால் உலகளவில் முஸ்லிம்களின் இன்றைய துயரைக் களைய இயலாத சூழல் கவலைக்குரிய ஒன்றுதான்.
இந்த நூலில் ஓரிடத்தில் குஜராத் கலவரத்தின்போது சபர்மதி ஆசிரமத்தை நோக்கிக் கலகக்காரர்கள் வந்தபோது ஆசிரமத் தலைவர்கள் காதவைச்சாத்திக் கொண்டு தம்மைப் பாதுக்காத்துக் கொண்டதைக் குறிப்பிடும் லியாகத் ஆசிரமத்தில் உள்ளோர் வெளியில் வந்து அவர்களை எதிர்கொள்ளாமல் இப்படி ஓடி ஒளிந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அப்போது அந்த ஆசிரமத்தில் காந்தி உயிருடன் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? உறுதியாக அவர் ஒளிந்திருக்கமாட்டார். பிரச்சினைகளைக் கண்டு அவர் ஒளிந்ததாக வரலாறு இல்லை. அவர் தலைமையில் இயங்கிப் பெற்ற சுதந்திர நாளில் அவர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் அன்று எங்கோ மதக்கலவரம் நடந்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காந்தியின் வரலாற்றை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியும். அவர் கொல்லப்பட்டது அவர் உயர்த்தி நிறுத்திய மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டிற்காகத்தான்.
இன்றைய நெருக்கடிமிக்க பாசிசச் சூழலில் இன்று நமக்கொரு காந்தி இல்லாதது பெருங்குறை. ஆனால் முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி நிறுத்திக் குடியுரிமை அற்றவர்களாக ஆக்குவதற்கு அனுமதியோம் என இன்று இந்தத் துணைக் கண்டம் முழுவதும் மக்கள் ஆர்த்தெழுந்து நிற்பது அவ்வளவு எளிதாக இம்மண்ணில் மதத்தின் அடியாக ஒரு வெறுப்பை நிலைநாட்டிவிட முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.
அந்த நம்பிக்கைதான் நமக்கு.