போலி என்கவுன்டர் கொலைகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டு சிறைகளில் கிடக்கும் சுமார் 32 குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் தலைவனும் ஷொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி, இர்ஷத் ஜெஹான் முதலானவர்களின் போலி என்கவுன்டர் கொலைகளை நிகழ்த்தியவனுமான டி.ஐ.ஜி வன்சாரா, விரக்தியின் உச்சத்தில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளது இன்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி உள்ளது.
இந்த விரக்தி நிலையை எட்டுவதற்கு முன் பல தந்திரங்களைப் பயன்படுத்தித் தப்ப முயன்றவன் வன்சாரா, இது குறித்து நான் அவ்வபோது எழுதியுள்ளேன். காவல் நீடிப்பு மற்றும் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது தன் சாதிக்காரர்களைத் திரட்டி நீதிமன்ற வாசலில் நிறுத்தி, “வருது வருது யாரு பாரு, குஜராத்தின் சிங்கம் வருது” என முழக்கமிட்டுத் தன் கைதை அரசியலாக்குவது ஒரு தந்திரம். மற்றது தேசத் துரோகிகளால் இந்தத் தேசத்திற்கு வந்த ஆபத்தைப் போக்கிய வீர தீர தேசபக்தனாகத் தன்னை முன்னிறுத்தி வீர வசனங்களை நீதிமன்றங்களிலும், பத்திரிக்கையாளர்கள் முன்னும் கக்குவது. தெரியாமலா சொன்னார் தந்தை பெரியார், ஒருமுறை இரு முறை அல்ல. திருப்பித் திருப்பித் திருப்பிச் சொன்னாரே, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி” என்று. வன்சாரா, மோடி வகையறாக்கள் எல்லாம் தங்களைத் தேசபக்தர்கள் எனச் சொல்லும் போதுதான் பெரியார் சொன்ன இன்னொரு வாசகத்தின் கருத்தும் புரிகிறது. அது: “நான் தேசபக்தன் அல்லன், நான் தேசத் துரோகி என அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவன்”
நிற்க. வன்சாரா தன் ராஜினாமாக் கடிதத்தில் கூறியுள்ள கீழ்க்கண்ட வாசகங்கள் முக்கியமானவை:
“போலி என்கவுன்டர் எனக் குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு என்கவுன்டர் கொலைகளுக்காக என்னையும் என் அதிகாரிகளையும் குஜராத் சி.ஐ.டியும், மத்திய சி.பி.ஐயும் கைது செய்துள்ளன. இக் குற்றச்சாட்டு உண்மையானால், துளசிராம், ஷொராபுதீன், சாதிக் ஜமால், இஷ்ரத் ஜெஹான் ஆகிய நான்கு என்கவுன்டர் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ புலனாய்வு அதிகாரிகள், (இதற்கான) கொள்கை வகுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். களத்தில் நின்று செயல்பட்ட அதிகாரிகளாகிய நாங்கள் அரசின் பிரக்ஞை பூர்வமான கொள்கைகளை வெறுமனே நிறைவேற்றியவர்கள் மட்டுமே. அதுவே (அதாவது அரசே) நெருக்கமாக நின்று எங்களின் (இந்த) நடவடிக்கைகளை உற்சாகமூட்டி, மேற்பார்வையிட்டு வழி நடத்தியது. இந்த தர்க்கத்தின்படி, இந்த அரசு (அதாவது மோடி அரசு) இன்று இருக்க வேண்டிய இடம் காந்தி நகர் அல்ல. மாறாக அது இருக்க வேண்டிய இடம் நவி மும்பையின் டலோஜா மத்திய சிறை அல்லது அகமதாபாத்திலுள்ள சபர்மதி மத்திய சிறைதான் என நான் உறுதியாகக் கருதுகிறேன்..”
கடுமையான வாசகங்கள்தான். விரக்தியின் உச்சம் வன்சாராவை உண்மைகளைக் கக்க வைத்துள்ளது. பத்தொனபது வயதுக் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று சட்ட விரோதக் காவலில் வைத்து அவளோடு இன்னும் மூவரையும் ஒரு காரில் அமர்த்திச் சுட்டுக் கொன்று கைகளில் ஆயுதங்களைத் திணித்துப் படம் எடுத்துப் பத்திரிக்கைகளுக்கு அளித்த கும்பலின் தலைவனுக்குக் கடைசியாக ஞானம் கிட்டியுள்ளது எனச் சொல்லலாமா?
தெரியவில்லை. அது பிரச்சினை இல்லை. தாங்கள் குற்றவாளி என்றால் அமித் ஷா, மோடி ஆகியோரும் குற்றவாளிகள்தன் எனச் சொல்ல வேண்டிய தருணம் வான்சாராவுக்கு வந்துவிட்டது என்பது வெளிப்படை. “இந்த அரசின் வழிகாட்டலில்தான் இவ்வளவும் செய்தோம்” எனச் சொல்வதற்கு வேறென்ன பொருள்?
அது கிடக்கட்டும். இத்தகைய நிலைமை இனி யாருக்கும் வரக்கூடும் என்பதை நம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லாக் காவல்துறையினரும் உணர வேண்டும்.
இந்த நாட்டு ஜனநாயகத்திலும், நீதி வழங்கு முறையிலும் ஆயிரம் குறைபாடுகள் இருப்பது உண்மைதான், ஆனால் நூறில் ஒன்றிலாவது இப்படி ஆகும் அளவிற்கு இந்த நாட்டில் இன்னும் ஜனநாயகம் ஒட்டிக் கொண்டுள்ளது என்பது குறித்து இவர்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.
இந்த நாட்டு மனித உரிமை அமைப்புகள் ரொம்ப ரொம்பப் பலவீனமானவைதான். பெரிய மக்கள் ஆதரவு அற்றவைதான். பொதுப் புத்தி அவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் அர்ப்பணிப்பு மிக்க மனித உரிமைப் போராளிகள், பல்வேறு இன்னல்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடத்தும் போராட்டங்கள் முற்றிலும் பயனற்றவையாகி விடாது என்பதை இவர்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டு மக்கள் தம் இரத்த சொந்தங்கள் அரச வன்முறைகளால் சித்திரவதைகளுக்கும் வன்கொலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதைக் காலப்போக்கில் மறந்து தத்தம் வாழ்வையாவது காப்பாற்றிக் கொள்வோம் என்கிற நிலையில் வாழ்ந்து மடிபவர்களாக இருக்கலாம்தான். ஆனால் பல்வேறு சிரமங்கள், செலவினங்கள், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கும் மத்தியில் நீதிக்காகக் கடைசி வரை போராடுகிறவர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள் என்பதை இவர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மோடி ஒன்றும் வன்சாரா கும்பல் கொலையாளிகள் என்பதால் அவர்களைக் கைவிட்டு விட்டதாகக் குழந்தைகள் கூட நம்பமாட்டார்கள். அவர் இந்தக் கொலையாளிகளைக் காப்பாற்ற மனதார நினைத்தும், அவர்களுக்காக இரத்தக் கண்னீர் சிந்தியும், அதைத் தவிர வேறெதையும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதையும், இந்த நிலை யாருக்கும் வரலாம் என்பதையும் என்கவுன்டர் கொலையாளிகள் மனங்கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம். கடந்த பத்தாண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஒன்று “மதக் கலவரத் தடுப்புச் சட்ட வரைவு”. இரு முறை முன்வைக்கப்பட்டு, விமர்சனங்களின் அடிப்படையில் திருத்தப்பட்டு, இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பாலும், மென்மை இந்துத்துவக் கட்சியான காங்கிரசின் நேர்மை இன்மையாலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது இந்த வரைவு. இதில் இன்னும் கூடச் சில குறைபாடுகள் இருந்தபோதும் முதன்முதலாக ஓரு முன்மாதிரியான பாராட்டுக்குரிய அம்சத்தை உள்ளடக்கியுள்ளது இந்த வரைவு.
அதுதான் command responsibility எனப்படும் ஆணைப் பொறுப்பு. மதக் கலவரங்கள் முதலானவற்றில் இரு கொடுமைகள் வழக்கமாகச் சாத்தியமாகின்றன. ஒன்று மேலிடத்து வாய்மொழி ஆணை எனச் சொல்லி வன்முறைகளைத் தடுக்காமல் உயரதிகாரிகள் தம் பொறுப்பிலிருந்து நழுவுவது. மற்றது அரசின் கொள்கை நடவடிக்கைளின் வழிகாட்டலில் அதிகாரிகள் வன்கொலை உட்படக் குற்றங்களைப் புரிவது. இரண்டிற்கும் கண்முன் எடுத்துக்காட்டாக இதோ மோடியின் குஜராத் நம்முன்.
ஒரு வன்முறை நிகழும்போது மேலிருந்து ஆணை வந்ததெனச் சொல்லி ஒரு அதிகாரி வாளாவிருக்க இயலாது. அதேபோல அந்த வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்குக் களத்தில் உள்ள அதிகாரி மட்டுமல்ல அந்தத் துறை அமைச்சர் வரை, ஏன் குஜராத் 2002 போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் வரை ஆணைப் பொறுப்பு உண்டு.
இந்த அளவிற்கு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் ஆணைப் பொறுப்பை விரிவாக்கவில்லை ஆயினும், கொள்கை அளவில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்ட வரைவுக்குள் கொண்டும் வரப்பட்டுள்ளது.
அதுபோலவே இர்ஷத் ஜெஹான் போன்ற “அரசின் கொள்கை வழிகாட்டலில்” நடை பெறும் போலி என்கவுன்டர் கொலைகள் போன்றவற்றிலும் களத்தில் உள்ள அதிகாரிகளோடு, அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட அரசின் கொள்கை வகுப்பாளர்களும் ஆணைப் பொறுப்பேற்க வேண்டும். அதே நேரத்தில் அரசின் கொள்கை வழிகாட்டலில் நாங்கள் கொலை செய்தோம் என ஒரு என்கவுன்டர் கொலையாளி தப்பித்துக் கொள்ளலாகாது. அவருக்கும் சட்டப்படிச் செயல்பட வேண்டிய ஆணைப் பொறுப்பு உள்ளது.
காவல்துறைச் சீர்திருத்தம் (Police Reform) என்பது பலமுறை பல்வேறு ஆணையங்களால் சுட்டிக் காட்டப்பட்டும் அது இங்கு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆணைப் பொறுப்பை உள்ளடக்கியக் காவல்துறைச் சீர்திருத்தமும், மதக் கலவரத் தடுப்புச் சட்ட நிறைவேற்றமும் இன்றைய உடனடித் தேவை.
என்கவுன்டர் கொலைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய மேலும் சில உடனடிச் சீர்திருத்தங்கள்:
1.காவல்துறை மற்றும் ஆயுதப்படைகள் மீதான என்கவுன்டர் கொலைக் குற்றச்சாட்டுகளை விசாரித்து விரைவாக நீதி வழங்கும் ஒரு தனி அமைப்பு (special agency) உருவாக்கப்படவேண்டும்.
2.குஜராத் என்கவுன்டர் கொலை விசாரணைகளைப் பொருத்தமட்டில் அது இன்று IB, CBI, மாநில CID ஆகிய உளவு மற்றும் புலனாய்வு நிறுவனங்களுக்கிடையிலான மோதலாகவும் வெளிப்பட்டுள்ளது. உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்திலும் உளவு நிறுவனங்கள் அனைத்தும் நாடாளுமன்ற / சட்டமன்ற மேற்பார்வைகளுக்கு (Over View) உட்பட்டே செயல்படுகின்றன. அரசியல் சட்ட அடிப்படையிலான ஒரு ஜனநாயகக் குடியரசு என்கிற வகையில் இந்திய உளவு நிறுவனங்களும் நாடாளுமன்ற / சட்டமன்ற மேற்பார்வைக்குட்பட்டதாக மாற்றப்பட வேண்டும்.
2.ஜனநாயக அமைப்பில் உளவு நிறுவனங்களும் (intelligence agencies), புலனாய்வு நிறுவனங்களும் (investigative agencies) தனித்தனியாக இயங்க வேண்டும். உளவு நிறுவனங்கள் பல நேரங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நெறிமுறைககளைக் கையாள்கின்றன (Clandestine organisations). இவை சேகரிக்கும் உளவுகளுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. புலனாய்வு நிறுவனமே புலனாய்ந்து, வழக்கைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில், உரிய சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தை நிறுவ வேண்டும். இந்தியாவில் மட்டுமே இந்த இரண்டும் இணைக்கப்பட்டு, அதாவது உளவு நிறுவனமே, புலனாய்வு நிறுவனமாகவும் செயல்படும் நிலை உள்ளது. இது பல மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகிறது. எ.கா: தமிழ்நாட்டில் செயல்படும் ‘கியூ’ பிரிவு போலீஸ். இந்த போலீசுக்கு சீருடை, பெயர் தாங்கிய காவல் நிலையம், தொலை பேசி எண் எதுவும் கிடையாது, தற்போது இந்திய அளவில் உருவாக்கப்பட உள்ள ‘தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம்” (NCTC) என்பதும் இப்படியான ஒன்றுதான். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
4. பாட்லா ஹவுஸ் (டெல்லி) என்கவுன்டர் கொலைகளைச் சுதந்திரமாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி உயர்நீதி மன்றம், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு (NHRC) உத்தரவிட்டபோது, அது என்கவுன்டர் செய்த காவல் துறையின் அறிக்கையை அப்படியே விழுங்கிக் கக்கியது. காவல்துறைக்கு clean chit கொடுத்தது. தேசிய மனித உரிமை ஆணைய அமைப்பு விதிகளின்படி தலைவரைத் தவிர்த்து ஒரு உறுப்பினர் முன்னாள் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மற்றொருவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருக்க வேண்டும். மேலும் இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் தொடர்பான விரிந்த அறிவும் ஞானமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இது நாள்வரை இவ்விரு உறுப்பினர்களும் CBI, NIA முதலான புலனாய்வு நிறுவனங்களின் முன்னாள் தலைவர்களிலிருந்தே நியமிக்கப்பட்டனர். இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நிறுவனங்களாக உள்ள காவல்துறைகள் சார்ந்த அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையத்தில் இடமிருக்கக் கூடாது. மாறாக இவ்விரு உறுப்பினர்களும் தகுதிமிக்க மனித உரிமைப் போராளிகளிலிருந்து நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவை எல்லாவற்றையும்விட நமக்குப் பாதுகாப்பு நமது விழிப்புணர்வு மட்டுமே.