விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

(ஈழப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரனுடன் தொடங்கி முடிவது அல்ல. இதோ ஒரு இடதுசாரி ஆயுதப் போராளியின் வரலாறு. யார் அவரைக் கொன்றார்கள்? இந்தக் கேள்விக்கான விடையை உங்களால் ஊகிக்க முடியும்தான்.அவருடனான எனது இரண்டு நாள் நினைவுகள் இங்கே.)

vis-deva-2

தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். கொண்டிருந்த குறைந்த காலப் பழக்கத்தில் அந்த உறவு அப்படித்தான் இருந்தது. ஒரே ஒருமுறைதான் அவரை நான் சந்தித்தேன். அது 1986 ஜூலை அல்லது ஆகஸ்ட். துல்லியமாக நினைவில்லை. முதல் நாள் காலையும் அடுத்த நாள் மாலையும் தஞ்சையிலிருந்த என் “12/28, அம்மாலயம் சந்து” வீட்டில் அமர்ந்து நெடு நேரம் அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு அவரைக் கொண்டு சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வரும் வரை இடையிடையே சிறு கேள்விகளைத் தவிர நான் வேறொன்றும் பேசவில்லை.

நேரில் கண்டதில்லை ஆனாலும் அவரது எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசித்து வந்தேன். 1984 கோடையில் வெளிவந்த ‘இலக்கு’ முதல் இதழிலிருந்து புரட்டாதி 86 ல் வெளி வந்த ‘பயணம்’ இரண்டாவது இதழ் வரை தவறாமல் எனக்குக் கிடைத்து வந்தது. ஓரளவுக்கு அப்போது நான் ஈழத்தில் உள்ள இடதுசாரித் தோழர்களுக்கு, குறிப்பாக சண்முகதாசன் வழி வந்தோருக்கு நான் பரிச்சயமாகி இருந்தேன். தோழர் கே. டானியல் அவர்களுக்கும் எனக்குமான நட்பு, அவரது நூல்களை நாங்கள் வெளியிட்டு வந்தது என்பதன் ஊடாக அது சாத்தியமாகியிருந்தது. 1983 ஜூலைக்குப் பின் ஒரு முறை சண்முகதாசன் அவர்கள் இங்கு வந்தபோது சென்னயில் ஒரு சிறு சந்திப்பை நான்தான் ஏற்பாடு செய்திருந்தேன். உலகறிந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தபோதும் அன்று இங்கிருந்த இடதுசாரி அரசியல் சூழலில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சீனச் சார்பு  மற்றும் ரஷ்யச் சார்பு) அவருடன் பேசத் தயாராக இல்லை.

நான் அப்போது ‘மார்க்சிஸ்ட் கட்சி’ எனப்பட்ட சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டிருந்தேன். ஈழப் போராட்டத்தை ஆதரித்து கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராகக் கூட்டங்கள் பேசினேன் என்பது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதன்பின் நான் இங்கிருந்த நக்சல்பாரி இயக்கங்கள் என அழைக்கப்படும் ஆயுதப் போராட்டங்களை ஆதரிக்கும் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தேன். இவற்றுள் ‘மக்கள் யுத்தம்’ என்றழைக்கப்பட்ட குழுவுடன் பின் ஐக்கியமானேன். ஆனால் அன்று இந்தக் குழுக்களும் சண் அவர்களின் கூட்டத்திற்கு வரவில்லை. சண் அவர்களின் கட்சி தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதுதான் காரணம். நக்சல்பாரி இயக்கங்கள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும் உண்மையாகவும் ஈழ ஆயுதப் போராட்டங்களை ஆதரித்துக் கொண்டிருந்தன. எந்த ஒரு குறிப்பிட்ட ஈழ ஆயுதக் குழுவையும் முழுமையாக ஆதரிக்காத போதுங் கூட தனி ஈழம் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் தேவை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியில் வந்த பின் என் நிலைப்பாடு அத்தனை தெளிவுடன் இருந்தது எனச் சொல்ல இயலாது. ‘கைலாசபதி இலக்கிய வட்டம்’ எனநாங்கள் ஒரு இலக்கிய அமைப்பு வைத்திருந்தோம். அதன் சார்பாக அப்போது நாங்கள் “தேசிய இனப் பிரச்சினை : கேள்விகளை நாங்கள் கேட்கிறோம். பதில்களை மார்க்சீய ஆசான்கள் சொல்கின்றனர்” என்றொரு எட்டு பக்க பிரசுரத்தை வெளியிட்டோம். அதில் தேசிய சுய நிர்ணயப் போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் ஆதரித்தே ஆக வேண்டும் என்பதாக அந்த மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

அந்த வெளியீடு டானியல் அவர்கள் வழியாக சண் அவர்களைச் சென்றடைந்தது. அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அழகான ஆங்கிலத்தில் மிக விரிவாக ஒரு பதில் எழுதினார். இப்படி மேற்கோள்களைப் பிய்த்துப் போட்டு ஆதரிப்பது அல்லது எதிர்ப்பதன் மூலம் எதையும் நியாயப்படுத்தி விடலாம்; ஆனால் அது தவறு. இன்றைய சூழலில் அப்படியான ஒரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என அந்தக் கடிதத்தில் அவர் விளக்கி இருந்தார்.

விசுவானந்த தேவன் மற்றும் தோழர்களின் NLFT உருப்பெற்ற காலத்தில் இங்கு சூழல் எப்படி இருந்தது என்பதை விளக்கத்தான் இவ்வளவையும் சொல்ல வேண்டியதாகி விட்டது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நாங்கள் ஒன்றும் பெரிய சக்திகள் இல்லை. ஒரு மிகச் சிறிய குழு அவ்வளவுதான். எனினும் இடது சார்புள்ள ஈழப் போராளிகள் பலரும் தஞ்சையில் என் அம்மாலயம் சந்து வீட்டுக்கு வந்து போவர். ஒரு இருபது கி.மீ தொலைவில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் ப்ளாட் அமைப்பின் முகாம் ஒன்று செயல்பட்டு வந்தது. அவர்களின் ஒலிபரப்பு நிலையம் தஞ்சையிலிருந்து இயங்கியது. இப்போது ஃப்ரான்சில் உள்ள தோழர் சிவா வின் தலைமையில் அது இயங்கியது. அவரும் அவரது தோழர்களும் வீட்டுக்கு வருவர். ஒரு கட்டத்தில் ப்ளாட் அமைப்பின் பின் தள மாநாடு தமிழகத்தில் நடந்தபோது சில தோழர்கள் என் வீட்டில் தங்கிப் பல நாட்கள் அவர்களின் ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்டதும் உண்டு. இதற்கிடையில் தோழர் டானியலும் இங்கு வந்து போவார். என் வீட்டில்தான் தங்குவார். சுருக்கமாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகள் தவிர்த்த பிற அமைப்பில் உள்ள சற்றே இடதுசாரிச் சார்புடைய பலரும் எங்களுடன் நட்பாக இருந்தனர்.

அந்தப் பின்னணியில்தான் இங்கிருந்த NLFT தோழர்களும் எங்களுடன் தொடர்பில் இருந்தனர். இலக்கு இதழ்கள் தொடர்ந்து எனக்கு வந்தன. இங்குள்ள மற்ற நண்பர்களுக்கும் அவை என் வழி சென்றடையும். இலக்கு இதழில் வெளி வரும் கட்டுரைகளை முழுமையாக வாசித்து நண்பர்களுடன் விவாதிப்போம்.

இந்தப் பின்னணியில்தான் ஆயுதப் போராட்டக் குழுக்களிடையே மோதல்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு மற்ற குழுக்களை அழிப்பது, கருத்து மாறுபாடுகள் கொண்டவர்கள் கடுஞ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது என்பதெல்லாம் நடந்தேறின. டானியல் அவர்கள் இதச் சுட்டிக்காட்டிப் ‘பாருங்கள் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்’ என்று எங்களிடம் வாதிடுவார். இந்த நிலையில்தான் நான் ‘எரிதழல்’ எனும் அப்போதைய எனது புனை பெயரில் ‘ஈழப் போராளிகளின் சிந்தனைக்கு’ எனும் சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டேன் (நூலகம் எனும் தளத்தில் அது கிடைக்கும்). இந்தப் போக்குகளை நான் அதில் கடுமையாகச் சாடி இருந்தேன். ஒரத்தநாட்டில் இருந்த ப்ளாட் அமைப்பில் சிலர் ஒரு நாள் ஆயுதங்களுடன் வந்து அந்த வெளியீட்டிற்காக என்னை எச்சரித்துச் சென்றதும் நடந்தது.

இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ப்ளாட் அமைப்பு பலவீனமாகி அதிலிருந்து பிரிந்த ஒர் குழுவினர் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமத்தில் தங்கி இருந்தனர். அவர்களைச் சந்திக்க விசுவானந்த தேவன் வருகிறார் என்கிற தகவல் எனக்கு வந்தது. விசுவானந்த தேவன் குறித்து அறிந்திருந்த நான் மிக்க ஆவலுடன் அவரை எதிர்பார்த்திருந்தேன். இந்த நேரத்தில் வெளி வந்து கொண்டிருந்த இலக்கு இதழ்களில் இயக்கங்களுக்கு இடையே நடைபெறும் இந்தக் கொலைகள், அழித்தொழிப்புகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் கட்டுரைகளும் வந்திருந்தது எனது எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

#    #    #

அன்று காலை நான் தன்சைப் பேருந்து நிலையத்தில் தேவாவுக்காகக் காத்திருந்தேன். புகைப்படத்திலும் கூட அவரை நான் பார்த்ததில்லை. இலக்கு இதழில் படங்கள் மட்டுமல்ல, கட்டுரைகளில் ஆசிரியர் பெயரும் இருந்ததில்லை. எல்லாக் கட்டுரைகளையும் நாங்கள் தேவாவை வைத்தே அடையாளப் படுத்தியிருந்தோம்.  எனக்கு அவர் முகம் பரிச்சயமில்லை என்ற போதிலும் பத்திரிகைகளில் வெளி வந்த புகைப்படங்களின் ஊடாக தேவாவுக்கு என் முகம் ஓரளவு பரிச்சயமாயிருந்திருக்க வேண்டும்.

தோழர் என விளித்தாரா, மார்க்ஸ் என விளித்தாரா என எனக்கு நினைவில்லை. என் எதிரே ஒரு கைலி (சாரம்), மேலே ஒரு அரைக் கை சட்டை, கையில் ஒரு துணிப் பை சகிதம் அவர் நின்றிருந்தார்.

என் சைக்கிளில் அவரைப் பின்னால் அமர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவர் சந்திக்க வந்தவர்கள் அருகில் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தனர். அந்த முகவரியை விசாரித்து மதியம் வந்து அழைத்துச் செல்வதாக நண்பர் வேல்சாமி சொல்லியிருந்தார். மதியம் இரண்டு மணி வாக்கில்தான் தேவாவை அழைத்துச் செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் வேல்சாமி அனுப்பிய அவரது பணியாளர் வந்தார். அதுவரை என் கேள்விகளுக்கெல்லாம் மிக்க பொறுமையாகவும், எளிமையாகவும் தேவா பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் இரவு நான் அவருக்குச் சென்னைக்கு டிக்கட் ரிசர்வ் செய்திருந்தேன். அன்று மாலை அந்தக் கிராமத்திற்குச் சென்று அவரை அழைத்து வர வேண்டும். மாலை நான்கு மணி வாக்கில் வேல்சாமி வந்தார். அப்போது அவரிடம் ஒரு ‘பஜாஜ் எம் 80’ என்றொரு சிறிய மொபெட் இருந்தது. அதில் அந்தக் கிராமத்திற்குச் சென்றோம். அதற்குள் அங்கிருந்தவர்களோடு தேவா பேசி முடித்திருந்தார். என்ன என்பது குறித்து நாங்களும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.

திரும்பி வரும்போது அந்தச் சின்ன வண்டியில் மூவரும் வந்தோம். வெண்ணாற்றங்கரைப் பாலத்தைத் தாண்டி வரும்போது ஒரு அதிர்ச்சி. அங்கு காவல்துறையினர் நின்று போகிற, வருகிற வாகனங்களைச் சோதித்துக் கொண்டிருந்தனர். ஒரே வண்டியில் மூவர் வருவதைக் கண்டதும் நாங்கள் நிறுத்தப்பட்டோம். வண்டியைச் சற்றுத் தள்ளி நிறுத்திய வேல்சாமி எங்கள் இருவரையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு சோதனை செய்து கொண்டிருந்தவர்களிடம் சென்றார். வண்டியில் செல்வது யார் என்பதை அவர்கள் குடையவில்லை. மூன்று பேர் வந்தத்தைத்தான் அவர்கள் பெரிய குற்றமாகச் சொன்னார்கள். வேல்சாமி ஏதோ கொஞ்சம் பணம் தந்து அவர்களைச் சரி செய்தார். வேல்சாமியையும் தேவாவையும் அதே வண்டியில் அனுப்பி விட்டு நான் பஸ்சில் பின் தொடர்ந்தேன்.

அன்றிரவு பத்து மணி அளவில் தேவாவுக்கு பஸ். பேசிக்கொண்டே இருந்தோம். இன்னொரு நாள் இருந்து மேலும் சிலரைச் சந்தித்துச் செல்லலாமே என்றேன். உடனடியாகச் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டும் எனவும் தங்குவது சாத்தியமில்லை எனவும் கூறி இரவே புறப்பட்டார். முழுக்க முழுக்க அவரது அன்றைய உரையாடல் போராட்டம் மற்றும் அரசியல் பற்றித்தான் இருந்தது. தனிப்பட்ட முறையில் அவர் யாரைப் பற்றியும் பெரிதாக ஏதும் பேசவில்லை.

செல் போன்கள் இல்லாத காலம் அது. சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் துயரமும் அதிர்ச்சியும் மிக்க அந்தச் செய்தி எனக்குக் கிட்டியது. சென்னையிலிருந்து இலங்கைக்குச் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் விசுவானந்த தேவன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதான் முதலில் கேள்விப்பட்டோம். பின்னர் கிடைத்த செய்திகள் அவர் சென்னையிலிருந்து இலங்கை சென்று மீண்டும் சென்னை வரும்போது கொல்லப்பட்டர் எனத் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டதற்கும் கூட ஆதாரம் இல்லை எனவும் இப்போதைக்கு அவர் மறைந்து போனார் என்றே கொள்ள வேண்டும் எனவும் பின்னர் கூறப்பட்டது. இலங்கைப் படையா, இல்லை இயக்கங்களுக்குள்ளான மோதலா எது இந்த மறைவின் பின் உள்ள காரணம் எனவும் யாருக்கும் தெரியவில்லை. டெலோ, EPRLF முதலான இயக்கங்கள் அழிக்கப்பட்ட காலம் அது.

1986 ஏப்ரலில்தான் டானியலும் இறந்து போனார். என் வீட்டில் தங்கி அவர் சிகிச்சை மேற்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.

ஈழத்து இடதுசாரி நண்பர்களுடனான எனது தொடர்புகள் அறுந்தன.

#    #    #

அந்த இரண்டு நாட்கள் நான் விசுவானந்த தேவனுடன் என்ன பேசினேன் என இப்போது நினைவில்லை.

இன்று விசுவானந்த தேவனும் தோழர்களும் மட்டுமல்ல, அவர்களின் NLFT, PLFT, இலக்கு, பயணம் எல்லோரும், எல்லாமும் பழைய வரலாறாகி விட்டதற்குச் சாட்சிகளாக நாம் நிற்கிறோம். எஞ்சியுள்ள நாம் இந்த எல்லாத் தியாகங்களையும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட விட்டுவிடக் கூடாது.  முடிந்தவரை நமது அறிவுக்கும் அனுபவங்களுக்கும் எட்டியவரை நம்முடைய இந்த வரலாற்றைப் பதிவு செய்வதும் மதிப்பிடுவதும் அவசியம். வருகிற தலைமுறைகளுக்குப் பயன்படுமாறு விருப்பு வெறுப்பின்றி நாம் அதைச் செய்தல் வேண்டும். விசுவானந்த தேவனும் தோழர்களும் மறைந்த இந்த முப்பதாம் ஆண்டு நினைவு அதற்குக் கால்கோள் இட வேண்டும். அந்த வகையில் சில:

தோழர்களின் மறைவுக்குப் பின் இடதுசாரி இயக்கங்கள் வெகு விரைவாகப் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தன. இலங்கையில் மட்டுமல்ல, உலகளவிலும் இதுதான் நிலை என்பது கவனத்துக்குரியது. பெருகிவந்த இனவாதத்தின் முன் இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் நிற்க இயலவில்லை. இடதுசாரி அடையாளத்துடன் உருப்பெற்ற NLFT எந்நாளும் பெரிய அளவில் வளர இயலவில்லை. இந்தத் தேக்கம் பல உள்கட்சி விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்குமே இட்டுச் சென்றது. இறுதியில் எல்லா இடதுசாரி இயக்கங்களைப் போலவும் அது பிளவில் முடிந்தது. பிளவிற்குப் பின் NLFT யிலிருந்து PLFT உருப்பெற்றபோதும் அது பெரிதாக வளரவில்லை. மிக விரைவில் அதன் தத்துவார்த்த வழிகாட்டியாக இருந்த விஸ்வானந்த தேவன் கொல்லப்பட்டார் (1986, அக் 15). அதன் பின் NLFT மட்டுமல்ல PLFT யும் சிதைந்து சிறுத்தது. விசுவானந்த தேவனுடன் வெளி வந்து PLFT ஐ உருவாக்கிய அன்ரன், ரமணன் போன்றோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டுக் கடுஞ் சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தோர் ஒன்று வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர் அல்லது அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கினர்.

உலக அளவிலும் இடதுசாரி இயக்கங்கள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன. சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் வீழ்ந்தன; கட்சிகளும் இல்லாமற் போயின. லத்தீன் அமெரிக்கா, சீனம் போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தம் அடிப்படை அடையாளங்களை இழந்தன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் ஆயுதப் போராட்டங்களும் படிபடியாக ஒடுங்கின. இலங்கையில் எல்லா இயக்கங்களையும் அழித்தொழித்த விடுதலைப் புலிகள் அமைப்பும் அழித்தொழிப்புக்கு ஆளானது.

#     #     #

பாரம்பரிய இடதுசாரி இயக்கங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு வெளிவந்த விஸ்வானந்த தேவனும் தோழர்களும் அங்கிருந்து விலகி “தமிழீழப் போராளிகளுடன் தன்னையொரு புதிய தோழனாக” அடையாளம் கண்டு “பெருமிதம்” கொண்டனர். உருவாகியிருந்த ஈழ ஆயுதப் போராட்டங்களை அவர்கள் “சொந்த ஜனநாயக அரசை அமைத்துக் கொள்வதற்காகத் தமிழ் இனம் நடாத்திவரும் புரட்சிகரப் போராட்டம்” என வகைப்படுத்தி “அதில் தனது பங்களிப்பைச் செய்கின்ற நோக்கில்” தம்மையும் இணைத்துக் கொள்வதாக அறிவித்து அவர்களின் ‘இலக்கு’ தன் பயணத்தைத் தொடங்கியது. அது மாத்திரமல்ல இப்படி முன்வைக்கப்படும் தனது பங்களிப்பு நடந்து கொண்டிருந்த “தமிழீழ தேசியப் போராட்டத்தை சரியான திசைவழியில் முன்னெடுத்துச்” செல்ல உதவும் எனவும் அது நம்பியது.

இன்னும் கூட “சிங்கள -தமிழ் இன தொழிலாளி வர்க்க இணைவு சாத்தியம்” என நம்பியவர்களை இலக்கு  வரட்டுச் சூத்திரவாதம் எனக் கேலி செய்தது. “ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒற்றுமைக் குரல் எழுப்பும் என எதிர்பார்ப்பது கயமைத்தனம்” எனச் சாடியது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இடதுசாரி அடையாளங்களை இழக்கத் தொடங்கியது.

இதன் விளைவாக அது இன அஇயாளத்தைத் தவிர பிற அடையாளங்களை மறுதலிக்கவும் தொடங்கியது. தமிழ் மக்களிடையே உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் கணக்கில் கொண்டாலும் அது குறித்த தெளிவான திட்டம் எதையும் NLFT, PLFT முதலியன முன்வைக்கவில்லை.

முஸ்லிம் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களைத் “தனித் தேசியப் பண்புகளைக் கொண்டிருப்பதாக” அங்கீகரித்த போதும் அவர்கள் “தனி இனமாகக் கூடுவதை” அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல “முஸ்லிம் மக்களுக்குத் தனியான அமைப்பு (என்பது) தவறான போக்கு” என அழுத்தம் திருத்தமாகவும் அவை முன்வைத்தன.

NLFT யிலிருந்து பிரிந்து PLFT ஐத் தொடங்கிய போது இரண்டும் வேறுபடும் புள்ளி குறித்து விசுவானந்த தேவனின் PLFT  முன்வைத்த ஓரம்சம் இங்கே குறிப்பிடத் தக்கது.

“பாட்டாளி வர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்த பின்னால்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமுடியும் என NLFT அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்து தவறானதென நாம் கருதுகிறோம். போராட்டம் முனைப்படைந்து ஏனைய வர்க்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்டுவது என்பது சாத்தியமற்றது”

என்பதுதான் அது. இப்படி அப்பட்டமாக வர்க்க அரசியலிலிருந்து இன அரசியலுக்குச் செல்வதை PLFT முன்மொழிந்துக் களம் இறங்கியபோதும் அந்த “ஏனைய வர்க்கங்கள்” இந்த மனம் திருந்தி வந்த “பாட்டாளி வர்க்கத்தை” அனுமதிக்கவில்லை என்பதுதான் வரலாறாக அமைந்தது.

எனினும் இந்தப் பிற வர்க்கங்களால் தலைமை தாங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சீரழிந்து வருவதை விசுவானந்த தேவனும் தோழர்களும் காணத் தவறவில்லை. “கருத்து மாறுபடுகிறவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாவதையும்”, ஆயுதப் போராட்டங்கள் சித்திரவதை முகாம்களாக மாறுவதையும்”, “இயக்கங்கள் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுவதற்குப் பதிலாக ஒருவரை  ஒருவர் அழித்துக் கொள்வதையும்” தோழர்கள் தங்களின் புதிய “பயணம்” ஊடாக அவர்கள் அடையாளப்படுத்தியபோதும் அந்த விஷச் சுழலிலிருந்து அவர்களால் தப்பிக்க இயலவில்லை.

இதுதான் நம் வரலாறு. இங்கே நான் நம் வரலாற்றை மட்டுந்தான் சுட்டிக்காட்டியுள்ளேன். இதிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் சிந்திக்க வேண்டும்.