சேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை

                                                                          உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம்

மே10, 2019

சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக என்கவுன்டர் கொலைகள் என்றாலே திட்டமிட்ட படுகொலை என்கிற நிலை இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது நடந்துள்ள சேலம் என்கவுன்டரைப் பொருத்தமட்டில் போலீஸ் தரப்புச் செய்திகளில் உள்ள முரண்பாடுகள் மிக வெளிப்படையாக நாளிதழ்களிலேயே சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

பேரா. அ,மார்க்ஸ், தலைவர் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை (9444120582).

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (9894054640),

பி.சந்திரசேகரன், வழக்குரைஞர், சேலம், (9362117499),

கோ.அரிபாபு, வழக்குரைஞர், சேலம் (8870579345),

பி.தமயந்தி, வழக்குரைஞர், சேலம் (75503126669),

எம்.ஜாஹிர் அஹமத், வழக்குரைஞர், சேலம் (9943999001),

எச்.முஹமது ஹாரிஸ், சமூக ஆர்வலர், சேலம் (904343510)

இந்தக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் தங்கி சம்பவம் நடந்தாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு, கொல்லப்பட்ட கதிர்வேலுவின் ஊரான குள்ளம்பட்டியில் அவர் வீடு இருக்கும் பகுதி, வீராணம் காவல் நிலையம், கதிர்வேலுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சேலம் மாவட்ட மருத்துவமனை முதலான பகுதிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தது. என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடுக்கு அருகில் உள்ள செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்கள், கதிர்வேலுவின் உறவினர்கள், கதிர்வேலுவால் கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்படும் காவலர்கள் இருவருக்கும் மருத்துவம் செய்த மருத்துவர், கதிர்வேலுவின் உடலைக் உடற்கூறாய்வு செய்த மருத்துவர் என எல்லோரையும் சந்தித்துப் பேசினர். வாழப்பாடி சரக உதவி காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, வீராணம் காவல் உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோரைக் காவல் நிலையத்தில் காண முடியாததால் தொலைபேசியில் பேசியது. இன்று காலை இந்த என்கவுன்டர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலை, சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் தங்கதுரை ஆகியோரிடமும் தொலைபேசினோம்.imag 2

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கனிக்கரைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றபோது அவருக்கு உடனடிப் பணி இருப்பதால் பேச இயலாது எனக் கூறப்பட்டது. நாங்கள் காத்திருந்து பேசவோ, இல்லை அவர் சொல்லும்போது வருவதற்கோ தயார் எனக் கூறியபோது, “இது குறித்து நீதித்துறை விசாரணை நடைபெறுவதால் தான் ஏதும் பேச முடியாது” எனக் கூறித் திருப்பி அனுப்பப் பட்டோம். காவல் உதவி ஆய்வாளர் பூபதி தான் ஊட்டியில் இருப்பதாகவும் தொலைபேசியில் ஏதும் பேச முடியாது  எனவும் கூறினார்,

கதிர்வேல் என்கவுன்டர் குறித்து காவல்துறை கருத்துக்களின் அடிப்படையில் நாளிதழ்கள் முன்வைப்பவை:

சென்ற மாதத்தில் கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலத்தில் மோட்டார் சைகிளில் கோரிமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஆடவர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்துப் பணம் பறித்தது. கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பான புகார் செய்யப்பட்டதை ஒட்டி ரவுடி வெங்கடேஷ் உட்பட அவரைச் சேர்ந்தோர் தேடப்பட்டனர். இது தொடர்பாக அக்கும்பலுடன் தொடர்புகொண்ட முறுக்கு வியாபாரி கணேசனைப் பிடித்து விசாரித்தபோது அவர் எல்லா விவரங்களையும் போலீசில் சொன்னதாகவும் இதனால் கணேசன் மீது வெங்கடேஷ் கும்பலுக்கு ஆத்திரம் வந்ததாகவும் அதனால் அக்கும்பலால் கணேசன் சென்ற ஏப்ரல் 5 அன்று கொல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கதிர்வேல், முத்து, பழனிச்சாமி முதலான சிலர் தேடப்பட்டனர். காட்டூர் ஆனந்தன், முருகன், கார்த்தி, கோபி முதலானோர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

இதைத் தொடந்து காவல்துறை விடுக்கும் கதை வருமாறு: மே 2 அன்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு அருகில் கதிர்வேல் பதுங்கி இருந்ததாகச் செய்தி வந்து ஆய்வாளர் சுப்பிரமணி, எஸ்.ஐ மாரி, பெரியசாமி ஆகிய காவலர்கள் அங்கு சென்றனர். அவர்களைக் கண்டவுடன் கதிர்வேல் தப்பி ஓட முயற்சித்ததோடு போலீசைத் தாக்கவும் செய்தார். இதனால் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் உடலில்  இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஆய்வாளர் சுப்பிரமணி தற்காப்புக்காகச் சுட்டபோது கதிர்வேலு இறந்தார். காயமடைந்த ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டி.ஐ.ஜி.செந்தில்குமார், எஸ்.பி தீபா கனிக்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

போலீசாரின் இந்தக் கூற்றில் பத்திரிகைகள் கண்ட முரண்கள்:

மே 2 காலை தினத்தந்தியில் கதிர்வேலு முதல் நாள் போலீசில் சரணடைந்தார் எனச் செய்தி வருகிறது. மே 2 மாலை நாளிதழ்களில் கதிர்வேலு அன்று முற்பகலில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வருகிறது. இதன் பொருள் என்ன? காவல்துறை காவலில் இருந்தவர் அன்று காலை கொல்லப்பட்டார் என்பது தானே. அடுத்த நாள் தினத்தந்தி காவல்துறை முதல்நாள் கூறிய செய்தியை (அதாவது கதிர்வேலு முதல்நாள் கைது செய்யப்பட்டார் என்பதை) மறுத்துள்ளதாகக் கூறுகிறது.

மே 4 மாலைமலர் நாளிதழ் சுட்டிக் காட்டிய சில முரண்களை இனி பார்க்கலாம். “சேலம் ரவுடி என்கவுன்டரில் தொடரும் மர்மங்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் எழுப்பப்படும் சில கேள்விகள்: “பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது” எனச் சொல்லும் அந்த இதழ், “முந்தைய நாள் இரவில் கதிர்வேலை போலீசார் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் கைது செய்ததாகவும், பின்னர் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைத்து கதிர்வேலிடம் விசாரணை நடத்தியதாகவும், பின்னர் முறுக்கு வியாபாரி கணேசனைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் போலீசாரை தாக்கியதாகவும், அப்போது அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் கதிர்வேல் குள்ளம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், அவரைப் பிடிக்க சென்றபோது அவர் கத்தியால் குத்தியதால் போலீசார் தற்காப்புக்காக அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்படி இந்த என்கவுன்டர் நடந்ததென பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றது.”

மேலும் அந்த நாளிதழ் கணேசன் கொலையில் சரணடைந்த முத்து, பழனிசாமி இருவரும் போலி குற்றவாளிகள் என்று கூறப்படுவதாகவும், சுட்டுக் கொல்லப்படும் அளவுக்குக் கதிர்வேல் குற்றவாளி இல்லை என மக்கள் பேசிக் கொள்வதாகவும் குறிப்பிட்டது. முத்தாய்ப்பாக அந்த இதழ் “எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” – எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்த நான்கைந்து நாட்கள்வரை முத்து, பழனிச்சாமி இருவரும் கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படவில்லை என்பது இத்துடன் ஒத்துப்போவதும் கவனத்துக்குரியது,

மே 3 தேதிய ‘தினத்தந்தி’ நாளிதழ் சுட்டிக் காட்டிய முரண் இன்னும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. அது:

“பிரபல ரவுடி கதிர்வேல் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்  எனக் காலை 11 மணி அளவில் தகவல் வெளியானது. இது தொடர்பாக சம்பவ இடத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள், போலீசாரிடம் ‘எந்த இடம்?’ எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமான தகவல்களைத் தந்தனர். அதாவது மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி எனத் தெரிவித்தனர். இந்த இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் சுற்றித் திரிந்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடம் எனச் சொல்லப்படும் குள்ளம்பட்டியில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் 4 பேர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். பின்னர்தான் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்’”

imag1நாங்கள் விசாரித்தபோதும் அருகில் செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்களும் அப்படி எதையும் தாங்கள் காணவில்லை எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டோம். அதோடு கொலை செய்த ஆயுதங்களை மறைத்துவைக்க அந்த இடத்தில் எந்த வாய்ப்பும் இல்லை.

 “இது கொலை! என்கவுன்டர் அல்ல” எனும் அறிக்கையில் சொல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி

இந்நிலையில் முகவரி ஏதும் போடப்படாத ஒரு அறிக்கை சுற்றுக்கு வந்தது. அதில், “மே 1 அன்று மாலை 4.20 மணி அளவில் முன்கூட்டி வீராணம் உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசி ஏற்பாடு செய்தபடி கதிர்வேலு அவரிடம் சரண் அடைந்தார். புதிய பேருந்து நிலையம் ‘சரவணா பேக்கரி’ மற்றும் சுற்றியுள்ள CCTV களில் இதற்கான பதிவு உண்டு. பின் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு உயர் அதிகாரியிடம் அவரை ஆஜர்படுத்தி, அதன்பின் மாலை 6.30 தொடங்கி இரவு சுமார் 11 மணிவரை வீராணம் காவல்நிலையத்தில் வைத்திருந்து பின் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கதிர்வேலு காரிப்பட்டி காவல் நிலையப் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார்.”

என்பதுதான் அச்செய்தி. இது பெயரும் முகவரியும் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை ஆனாலும் இது தினத்தந்தி மே 2 நாளிதழ்ச் செய்தியுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

எமது குழு இது தொடர்ப்பாக சரவணா பேகரி பகுதியில் விசாரித்தபோது அந்த CCTV பதிவு தற்போது காவல்துறையால் நீக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசலாம் என வீராணம் காவல்நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அவர் விடுப்பில் சென்றிருப்பது தெரிந்தது. அங்கு அதிகாரிகள் யாருமில்லை. எழுத்தரும் பெண்காவலர் இருவரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தமக்கு எதுவும் தெரியாது எனவும், மே1 அன்று தம் காவல் நிலையத்தில் அவ்வாறு சரணடைந்த யாரும் வைக்கப்படவில்லை எனவும் கூறினர். எனினும் அவசர அவசரமாக எங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர்கள் தவறவில்லை..

காவல்துறையினரைச் சந்திக்க முயன்றபோது

உதவி ஆய்வாளர் பூபதியைத் தொடர்பு கொண்டு பேசினோம். பொறுமையுடன் பதிலளித்த அவர் நாங்கள் எவ்வளவு வற்புறுத்தியும் தொலைபேசியில் எதையும் சொல்லமுடியாது எனச் சொல்லிவிட்டார்.

வாழப்பாடி சரக டி.எஸ்.பி சூரியமூர்த்தியிடம் பேசியபோது தான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சந்திக்க முடியாது எனவும் கூறினார்.  முதல் நாளே கதிர்வேலு சரணடைந்ததாகச் செய்திகள் வெளியானதை நாங்கள் குறிப்பிட்டபோது அது இல்லவே இல்லை எனத் தீவிரமாக மறுத்தார். இது தொடர்பாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

எஸ்.பி தீபா கனிக்கர் எங்களிடம் பேச மறுத்ததைக் குறிப்பிட்டோம். நீதித்துறை விசாரணை நடப்பது இப்படிக் கருத்துக் கூற மறுப்பதற்கு அவர்களுக்கு ஒரு சாக்காகப் போய் விட்டது.

இந்த என்கவுன்டர் கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலையிடம் நாங்கள் பேசியபோது விசாரணை நடப்பதாகவும் இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும் கூறினார். கதிர்வேலு முதல்நாளே கைதுசெய்யப்பட்டார் அல்லது சரண் அடைந்தார் எனச் செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளதை அவரிடம் குறிப்பிட்டபோது அது தன் கவனத்திற்கு வரவில்லை எனவும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறினார். மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்கவுன்டருக்கு முதல்நாளே கதிர்வேலு சரணடைந்து அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது அதை அவர் முற்றாக மறுத்தார்.

மருத்துவர்களைச் சந்தித்தபோது                                       

கதிர்வேலுவின் உடலைக் கூறாய்வு செய்த மருத்துவர் டாக்டர் கோகுலரமணாவைச் சந்தித்து கதிர்வேலு உடலில் துப்பாக்கிச் சூடு தவிர வேறு காயங்கள் இருந்ததா முதலான ஐயங்களைக் கேட்டோம்.. பொறுமையாகப் பதிலளித்த அவர் கூறாய்வு முடிவுகள் எதையும் கூற இயலாது எனவும் அவற்றை  கவனத்துடன் செய்து முடிவுகளை சீல் வைக்கப்பட்ட உறையில் அனுப்பி விட்டதாகவும், எல்லாமும் உரிய வகையில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கதிர்வேலுவைப் பிடிக்கச் சென்றபோது அவரால் கத்தியால் குத்தப்பட்டவர்களாகவும், அதனால் அவரைச் சுட்டுக் கொன்றவர்களாகவும் அறியப்படும் உதவி ஆய்வாளர் மாரி, ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முந்திய நாளே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றிருந்தனர், அவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி ராஜ் அசோக்கைச் சந்தித்துப் பேசியபோது மாரிக்கு இரு சிறு காயங்களும் சுப்பிரமணியத்துக்கு  மூன்று சிறு காயங்களும் இருந்ததாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அதற்குச் சிகிச்சை தேவையா எனக் கேட்டபோது சிரித்தார். “அவர்களுக்கு வேறு சில ‘கம்ப்லைன்ட்ஸ்’ இருக்கும். மருத்துவமனையில் சேர்ந்தால் அதையும் கவனித்தாக வேண்டும்” என்றார்.

கதிர்வேலுவின் குடும்பத்தார் மற்றும் அருகிலுள்ளோரைச் சந்தித்தபோது

முதல்நாள் எங்கள் குழு சென்றபோது கதிர்வேலுவின் பெற்றோரைச் சந்திக்க இயலவில்லை. சுற்றியுள்ள மக்களைத்தான் சந்தித்துப் பேச முடிந்தது.  இன்று (மே 10) முற்பகல் அவரது வயதான பெற்றோரையும் ஈனும் சிலரையும் சந்திக்க முடிந்தது. என்கவுன்டருக்குச் சில நாட்கள் முன் காவல்துறையினர் வந்து வீட்டில் இருந்த கதிர்வேலுவின் புகைப்படத்தைப் படம் எடுத்துச் சென்றதாகவும், தொலைக்காட்சியில் செய்தி வந்தபின்னரே தம் மகன் கொல்லப்பட்டதை அறிந்துகொண்டதாகவும் அவர்கள் கூறினர். அவரது உடலில் இருந்த காயங்கள் பற்றிக் கேட்டபோது மார்பில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது தவிர கைகளிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். கதிர்வேலுவின் உடலை முழுமையாகப் பார்ப்பதற்கும் காவல்துறையினர் விடவில்லை எனவும் அருகிலுள்ளோர் கூறினர்.

மே 03 காலை கதிர்வேலுவின் பெற்றோர், தம்பி முதலானோரை ஒரு காரில் போஸ்ட்மார்டம் நடக்கும் மருத்துவமனைக்குக் காவல்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டபின்  கதிர்வேலுவின் சடலத்தை குள்ளம்பட்டிக்குக் கொண்டு செல்லும்போது அந்தக் காருக்கு முன் ஒரு போலிஸ் வேனும், பின்னே மோட்டார் சைக்கிள்களில் இரு போலீஸ்காரர்களும் சென்றுள்ளனர்.

கதிர்வேலு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறித்த ஐயம் பலருக்கும் உள்ளது. தன் கைகால்களை முறிக்கப் போவதாகத் தனக்குத் தகவல்கள் வந்ததாகவும் அந்த பயத்தின் காரணமாகவே  தன் மீதாதான  கொலை வழக்கு காரிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்தபோதும் அவர் மாநகரக் காவல் நிலையத்தில் சரணடைய வந்தார் எனவும் இங்கு பேசப்படுவது குறிப்பிடத் தக்கது. கணேசன் கொலை வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் அதனுடன் தொடர்பில்லாதவர்கள் எனவும் கூறப்படுகிறது. பத்திரிகைகளும் அவ்வாறு எழுதியுள்ளன. அப்படித் தொடர்பில்லாதவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுதல் வேண்டும்,

எமது பார்வைகள்

  1. கதிர்வேலு என்கவுன்டரில் கொல்லப்பட்டு சுமார் பத்து நாட்களுக்குப் பின் நாங்கள் ஒரு குழுவாக இந்த ஆய்வில் ஈடுபட்டபோதும் இக்குழுவில் உள்ள உள்ளூர் தோழர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட முதல்நாள் தொடங்கி நடந்ததைக் கவனித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருந்தனர். சென்ற 4ம் தேதி இங்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை தந்த மக்கள் கண்காணிப்பகமும் முந்தியநாளே சரணடைந்த கதிர்வேலுவை காரிப்பட்டி காவல்துறையினர் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக மக்கள் பேசிக் கொண்டதைக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறை முன்வைப்பதுபோல கதிர்வேலு அப்படியெல்லாம் பெரிய ரவுடி இல்லை எனச் சொல்கிறது, என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி இருக்கும் மக்கள் அன்று அப்படி எல்லாம் எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது. அரசியல் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்பட்ட கொலை இது எனவும் அவ்வறிக்கை பதிவு செய்கிறது. இரண்டு முக்கிய சாதிகள் மற்றும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இடையே உள்ள முரணும் பகையும் கதிர்வேலுவின் கொலையில் பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் சந்தித்த பலரும் குறிப்பிட்டனர். இதைப் பார்க்கும்போதுதான் ஒரு பகுதியில் பெரும்பான்மையாய் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை வருவாய்த்துறை மற்றும் காவல்துறைகளில் முக்கிய அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்கிற கருத்து வலுப்படுகிறது.
  2. எல்லா என்கவுன்டர் கொலைகளையும்போல இதுவும் ஒரு போலி என்கவுன்டர்தான் என்பதோடு கூடுதலாக இதில் பத்திரிகைகளே வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் அளவிற்கு அப்பட்டமான அற மீறல்கள் நடந்துள்ளன. இரக்கமுள்ள ஒரு அதிகாரியைச் சந்தித்து சரணடைந்து தன் குற்றத்திற்கான தண்டனை அனுபவிப்பை நோக்கி நகர்ந்த ஒரு இளம் குற்றவாளி, மாவட்ட காவல்துறையின் ஒருமித்த சதியால் இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் மணமாகாத ஒரு இளைஞர் மட்டுமல்ல ஒரு குடிசைவாசி, அவனுக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும். வயதான பெற்றோர்களும் உள்ளனர். மகனை இழந்த அவர்கள் நம்மைப்போலத் துக்கம் விசாரிக்கச் செல்பவர்களிடமும் கூட மனம்திறந்து பேச இயலாத அளவுக்குக் காவல்துறை மற்றும் உளவுத்துறைகளின் கெடுபிடிகளுக்கு இடையில் இன்று நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளகியுள்ளனர்.
  3. இப்படியான என்கவுன்டர் கொலைகளின் பின்னணியில் எப்படி வெளிப் பகைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிறைவேற்றலுக்கு அப்பாற்பட்ட காரணிகள் செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தைச் சேந்த காந்திராஜன் எனும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எவ்வாறு சென்னை நகரத்தில் ‘கேங்ஸ்டர்ஸ்’ காவல்துறையினரின் துணையுடன் செயல்படுகின்றனர் என்பது குறித்து ஒரு ஆய்வையே செய்து அது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. அப்படியெல்லாம் இருந்தும், ஆளும்கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் கூட இப்படியான என்கவுன்டர் படுகொலைகளைக் கண்டுகொள்ளாததும் கண்டிக்காததும் வேதனைக்குரிய ஒன்று.
  4. இந்தப் படுகொலை தொடர்பாகக் காவல்துறை முன்வைக்கும் கதையாடலில் (narrative) உள்ள முரண்களை நாளிதழ்கள் சுட்டிக் காட்டியமைக்காக எம் குழு இதழியல்துறைக்குப் பாராட்டுக்களை கூறிக் கொள்கிறது. என்கவுன்டரில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றாலே அவரை ‘ரவுடி’ ‘அவன்’, ‘இவன்’ என்றெல்லாம் எழுதுவதையும், காவல்துறை சொல்வதை எல்லாம் கருப்பு வெளுப்பில் பதிவதையும் இதழியற்துறையினர் புறக்கணிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக்கொள்கிறது.

எமது கோரிக்கைகள்

  1. என்கவுன்டர் கொலைகள் நடக்கும்போது அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிக விரிவான நெறிமுறைகளை உச்சநீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் வகுத்துத் தந்துள்ளன. என்கவுன்டர் செய்யும் அதிகாரிகளுக்கு வீரச் சக்கரம் வழங்குதல், பணப்பரிசளித்தல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை தடை செய்துள்ளதோடு என்கவுன்டர் கொலை செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இந்த என்வுன்டர் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது என நிறுவும்வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்பது இந்தப் பரிந்துரைகளின் முக்கியமான அம்சம். இந்த என்கவுன்டரிலும் அது கடைபிடிக்கப்பட வேண்டும். கொலை செய்த இரு போலீஸ்காரர்கள் மட்டுமலாமல் பின்னின்று ஆணையிட்ட உயர் அதிகாரிகளும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரித்து உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கிடைத்துள்ள தகவல்களின்படி கதிர்வேலு கொல்லப்பட்டது ஒரு போலி என்கவுன்டர்தான் என எம் குழு உறுதியாக நம்புகிறது,
  2. என்கவுன்டரில் கொல்லப்பட்ட கதிர்வேலு கொல்லப்படுவதற்கு முதல்நாளே சரண் அடைந்தார் அல்லது கைதுசெய்யப்பட்டார் எனக் குறைந்த பட்சம் ‘தினத்தந்தி’, ‘மாலைமுரசு’, ‘காலைக்கதிர்’ முதலான இதழ்களில் செய்தி வந்துள்ளது. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அறிக்கையும் மக்கள் அவ்வாறு சொல்வதைப் பதிவு செய்துள்ளது. எங்களிடமும் பலர் அவ்வாறே கூறினர். அது உண்மையாயின் காவல்துறை ஏன் அதை மறைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.
  3. இந்த என்கவுன்டர் குறித்து காவல்துறை சொல்வதும் ஊடகங்களும் மக்களும் சொல்வதும் முரணாக இருப்பதால் இந்த என்கவுன்டரை நடத்திய உள்ளூர் காவல்துறையே இவ்வழக்கை விசாரித்தால் நீதிகிடைக்காது என்பதால் கதிர்வேலு கொலை குறித்த புலன் விசாரணையை மத்திய புலனாய்வு முகமையிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும்.
  4. என்கவுன்டர் கொலைக்குப் பலியான கதிர்வேலுவின் குடும்பநிலையை உத்தேசித்து அவர்களுக்கு உடனடியாக ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வயதான அவரது தம்பி பூபதிக்குக் அவரது கல்வித் தகுதிக்குத் தகுந்த ஒரு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு கோருகிறது.

கோ.அரிபாபு, வழக்குரைஞர், 228, சின்னேரி வயக்காடு, பள்ளப்பட்டி, சேலம் 636009, செல்: 9945311889

தலைஞாயிறு பகுதியில் நிவாரணம் கோரிய போராட்டங்களும்  காவல்துறை தாக்குதல்களும்                      

 உண்மை அறியும் குழு அறிக்கை

  நாகப்பட்டிணம், டிச 15, 2018

சமீப காலங்களில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு கஜா புயல். நான்கு மாவட்டங்களில் அது அழிவை ஏற்படுத்தினாலும் புயல் கரை கடந்த தொடக்கப் புள்ளியான வேதாரண்யம், தலைஞாயிறு முதலியன மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. இதுவரை அரசுத் தரப்பிலிருந்து சாலைப் போக்குவரத்தைச் சரி செய்தது, நகர்ப்புறங்களில் மின் சேவையை ஓரளவு ஒழுங்கு படுத்தியது முதலியன தவிர முறையான நிவாரணங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பாக பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது.

கடைமடைப் பகுதியாக உள்ள தலைஞாயிறை ஒட்டிய சந்தானம் தெரு, சிந்தாமணி, கேசவனோடை, திருமாலம் காமராஜ் வீதி, லிங்கத்தடி ஆகிய குடியிருப்புகளில் வாழும் அடித்தள மக்கள் இன்று இந்தப் புயல் இழப்புகளோடு இன்னொரு அதைவிடப் பெரிய தாக்குதலையும் சந்திக்க வேண்டியவர்களாகி உள்ளனர். வழக்குகள், கைது, தலைமறைவு வாழ்க்கை எனப் பலவாறும் அவர்கள் அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர். சுமார் 40 க்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர், இதில் காமராஜ் வீதியைச் சேர்ந்த நால்வரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் மீது காவல்துறையினரைத் தாக்கினர், வாகனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தினர் முதலான குற்றங்கள் இன்று சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

  1. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) (9444120582),
  2. கவின்மலர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாகை (9841155371),
  3. பூ. தனசேகரன், வழக்குரைஞர், திருத்துரைப்பூண்டி (9442333332),
  4. கே.நடராசன், ஓவியர், சமூகச் செயல்பாட்டாளர், நாகை (9444234074),
  5. தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி (9655972740),
  6. என்.செந்தில், விடுதலைச் சிறுத்தைகள், மருதூர் (99789557308),
  7. கே.எஸ்.தமிழ்நேசன், வழக்குரைஞர் (9894953919).

இக்குழுவினர் டிச 11, 2018 ஒரு நாள் முழுவதும் மேற்குறித்த கிராமங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சேரான்குளம் முதலான பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசினோம். காவல்துறைத் தாக்குதல் மற்றும் தேடுதல் வேட்டைக்குப் பயந்து கொண்டு இன்னும் வீடுகளில் இரவில் தங்கத் துணிவில்லாமல் தெருவில் உள்ள கோவிலில் தங்க நேர்ந்துள்ள பெண்கள், எல்லோருக்காகவும் அப்பகுதி ஆரம்பப் பள்ளியில் மூன்று வேளையும் சமைத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அம் மக்களின் ஒருசாரர் என எல்லோரையும் சந்தித்தோம். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் சிலரை மீண்டும் இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்ய வேதாரண்யம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள் என அறிந்து அங்கு சென்று அவர்களுக்காகக் காத்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மூத்த வழக்குரைஞர் சபாரத்தினம் ஆகியோரிடமும் பேசினோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு பேரூராட்சி நகரச் செயலாளர் திரு சோமு இளங்கோ மிக விரிவாக அங்கு நடந்தவற்றைத் தொகுத்துரைத்தார்.

வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, ஆசியவங்கி உதவியுடன் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி, காவல்துறையினரின் வாகனங்கள் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மறியல் நடந்த பகுதிகள் முதலானவற்றையும் நேரில் சென்று பார்த்தோம்.

காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டபோது பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் அறிவழகன் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பணியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தொடர்பான வழக்குகளை நடத்திக் கொண்டுள்ள தலைஞயிறு / வேட்டைக்காரனிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போசுடன் இம்மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விரிவாகப் பேசினோம்.

இனி அங்கு இதுவரை நடந்தவற்றைப் பார்க்கலாம்.

நவம்பர் 18

கஜா புயலைப் பொருத்த மட்டில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளில் முனைப்புக்காட்டிய அளவிற்கு நிவாரண நடவடிக்கைகளில் அரசு அக்கறை காட்டவில்லை, விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மை. அதேபோல விவசாயக் கூலிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு அற்றுப் போனது தவிர அவர்களது குடிசைகள் முற்றாக அழிந்துள்ளன. குடிசைகள் இருந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிவாரணப் பணிகள், இழப்பீடு வழங்குதல் ஆகியன சரியாகச் செயல்படாத நிலையில் மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்திலும் ஆங்காங்கு அரசை எதிர்த்து சாலை மறியல்கள் முதலான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்படியான நிலையில்தான் கடைமடைப் பகுதியான இப்பகுதி மக்களும் ஆங்காங்கு சாலை மறியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த கிராமங்களின் வழியாகத்தான் அரிச்சந்திரா நதி ஓடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டியுள்ள சாலையில் சென்றால் வேதாரணியம் – நாகை இணைப்புச் சாலை வருகிறது.  அங்குதான் ஆசியாவிலேயே பெரிய குடோன் எனச் சொல்லப்படும் கட்டிடங்களும் சரிந்து கிடக்கின்றன.

இந்தச் சாலையில் உள்ள கன்னித்தோப்பு என்ற இடத்தில்தான் புயலடித்த இரண்டாம் நாள் (நவ 18) அமைச்சரும் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் தாக்கப்பட்டு அவரது வாகனமும் உடைக்கப்பட்டது. அமைச்சர் தப்பித்து வருவாதே அன்று பெரும் பிரச்சினையாகிவிட்டது என ஊடகங்கள் எழுதியதை அறிவோம்.

இந்தத் தாக்குதலுக்கும் நாம் இப்போது பேசிக் கொண்டுள்ள தலைஞாயிறு அருகிலுள்ள தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமைச்சர் காரைத் தாக்கியவர்கள் தலைஞாயிறை ஒட்டியுள்ள மக்கள் கிடையாது.

கன்னித்தோப்பில் அமைச்சர் தாக்கப்பட்ட அதே நேரத்தில் அவர் அப்பகுதியில் ஏதோ துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளதாகக் கேள்விப்பட்ட தலைஞாயிறு பகுதி மக்கள் அவர் வந்தால் நிறுத்தி தம் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக சந்தானம் தெருவிலும் தலைஞாயிறு சாலையிலும் நின்றிருந்தனர். தலைஞாயிறு சாலையில் நின்றிருந்தவர்கள் சாலை மறியல் செய்யும் நோக்குடன் திரண்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் அவரது இல்லத்திற்கு அவ்வழியேதான் செல்லவேண்டும். அவ்வழியில்தான் சிந்தாமணி காலனியும் உள்ளது.

சிந்தாமணியிலிருந்த குடிசைகள் முற்றிலும் அழிந்து நீர் தேங்கிச் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் கட்டிக் கொள்ள மாற்றுத் துணிகளும் இல்லாத அம்மக்கள் சாலை ஓரத்தில் நின்று கஞ்சி காய்ச்சி அதைப் பகிர்ந்து குடித்துக் கொண்டு நின்றிருந்தனர். அம்மக்களுக்கு அமைச்சரைத் தடுத்து நிறுத்திக் குறைகளைச் சொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. தாக்குதலுக்குத் தப்பி வந்த அமைச்சர் அவர்களைத் தாண்டிச் சென்று சாலை மறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருப் பக்கம் செல்லாமல் அதற்கு முன் இருந்த ஒரு குறுக்குப் பாதை வழியாக பத்திரமாக அவரது வீட்டை அடைந்து விடுகிறார்.

எனினும் அதற்குப் பின்வந்த காவல்துறையினரும் மற்றும் தாக்குதல் படையினரும் சிந்தாமணி நகரில் அமைதியாகக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த மக்களைச் சகட்டு மேனிக்குத் தாக்கியுள்ளனர். அம்மக்கள் பயந்து தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் சந்தானம் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர்.

மக்கள் அடிபட்டுப் பதட்டத்துடன் ஓடிவந்ததைக் கண்ட சந்தானம் தெருவில் திரண்டிருந்த மக்கள் செய்தி கேட்டவுடன் அவர்களுடன் சேர்ந்து சாலைமறியல் நடந்து கொண்டிருந்த கடைத்தெருவை நோக்கி ஓடியுள்ளனர்.

அங்கே இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்தும் ஒரு ஜே.சி.பி வாகனமும் அடித்து நொறுக்கப்படுகிறது. காவல்துறை வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் அங்கிருந்த மக்கள் பேருந்து மற்றும் ஜே.சி.பி இயந்திரம் தாக்கப்பட்டதை மட்டுமே கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதலை ஒட்டி இனியன், தேவா, மணிகண்டன், கார்த்தி, முருகேசன் எனும் ஐவர் மீதும், மற்றும் பெண்கள் உடபடப் பலர் எனவும் குறிப்பிட்டு தலைஞாயிறு காவல் நிலையத்தில் அன்றே (நவ 18) இ.த.ச 294பி, 323, 324, 341,307 மற்றும் பொதுச் சொத்துக்கள் மீது சேதம் விளைவிப்பது (PPD 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று (எண் 135/18) பதியப்பட்டது. இவர்களில் கார்த்திக்கும் தேவாவும் முன் பிணை பெற்று தலைஞாயிறு காவல் நிலையத்தில் தினம் கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தனர். நான்காவது நாளாக (டிச 12) அவர்கள் கையெழுத்துப் போடச் சென்ற போது அவர்கள் மீது வேறொரு வழக்கைப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

டிசம்பர் 7:

இரவு 2 மணி. தலைஞாயிறைச் சேர்ந்த திருமாலம் காமராஜர் வீதி, காந்தி வீதி, சந்தானம் தெரு ஆகியவற்றில் திடீரென போலீஸ் படை நுழைந்து கதவை இடித்துத் திறக்கச் சொல்லி பெண்களை அவதூறாகப் பேசி, ஆண்களை இழுத்துச் சென்றுள்ளனர். காலை நாலரை மணிக்குள் மொத்தம் 33 பேர்கள் அன்று அவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தானம் தெருவில் 21 பேர். சிந்தாமணியில் 3, கேசவனோடையில் 2, காமராஜர் வீதியில் 4, லிங்கத்தடியில் 3 பேர் அன்று கைது செய்யப்பட்டனர். இதில் காமராஜர் வீதியில் கைது செய்யப்பட்ட 4 பேர்கள் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள். மற்ற அவ்வளவு பேரும் பட்டியல் சாதியினர்.

நவம்பர் 18 சம்பவத்தின்போது கீழ்க்கண்ட வாகனங்கள் உடைக்கப்பட்டதாக இந்த வழக்குகளில் கூறப்படுகின்றன: VIP வாகனம் எண் TN51 / G 0700; அரசுப் பேருந்து எண் TN68 / N 0816; கண்காணிப்பாளர் (SP) வாகனம் எண் TN51 / G 493; பார்த்தசாரதி என்பவருக்குச் சொந்தமான JCP எண் TN 51 / AH 5562.

9 காவலர்கள் தாக்கப்பட்டதாகவும் இளவரசன், அருண்குமார் என்கிற இரண்டு காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டன. அவை:

குற்ற எண்: 104/2018: இதச143,147, 148, 332,341, 353 மற்றும் 3(1) of PPDL Act Dt 22-11-2018,

குற்ற எண்: 135/18 இனியவன், தேவராஜன், கார்திக் மணிகண்டன், முருகேசன் மற்றும் பல ஆண்கள் பெண்கள் உட்பட இ.த.ச 147, 148, 294(b) 323,324,341,307 மற்றும் 3(1) of PPDL Act Dt 18-11-2018.

குற்ற எண் 138/2018 இதச 143,341,353, Dt 18-11-2018

குற்ற எண்: 144/18 இதச 143,341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 101/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353 Dt 18-11-2018.

குற்ற எண்: 108/18 வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் இதச 143, 341,353.

இந்த அறிக்கை எழுதப்பட்டபின் இன்று காலை 4 மணி அளவில் பிரிஞ்சிமூலை கீழத்தெருவில் உள்ள 36 தேவேந்திர குல வேளாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ், காளிதாஸ், நாகராஜ், முத்து, வினோத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தி சற்று முன் கிடைத்தது. இதில் முதலிருவரும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள். அடுத்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சொல்லியவை:

அப்பகுதிகளில் நிரந்தரமாகக் காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டோம். எந்த நேரத்திலும் வீடு புகுந்து தாம் கைது செய்யப்படலாம் என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆங்காங்கு காவல்துறையினர் உட்கார்ந்திருப்பதால் பெண்கள் கொல்லைக்குப் போகக் கூட முடியவில்லை என்றார் சேரான்குளம் பக்கிரிசாமி.

தமது அரசுப்பணியைத் துறந்து மக்கள் பணி செய்துவரும் சோம இளங்கோ சொல்லும்போது, “நவம்பர் 18 அன்று சிந்தாமணியில் சாலை ஓரமாக நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை திடீரென போலீஸ் வண்டிகளிருந்து இறங்கிய காவலர்கள் கண்மண் தெரியாமல் அடித்தனர். பெண்கள், குழந்தைகள் எல்லாம் சிதறி ஓடினாங்க. அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அறிவழகன் வந்து வல்லபதாஸ் மகன் கார்த்தி, முருகதாஸ் மகன் தேவா இரண்டு பேர் மேலேயும் கேஸ் இருக்கு. அவங்களைக் கொடுங்க கைது பண்ணனும் என்றார். நீங்க அவங்களை அடிச்சு சித்திரவதை பண்ணுவீங்க என்றோம். அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டோம் என்றார். நாளைக்கு ஒப்படைக்கிறோம்னு சொன்னோம். அவர் போயிட்டார். ஆனா நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டு அந்தப் பையங்க அடுத்த நாள் தலைமறைவாயிட்டாங்க. நவம்பர் 18 தொடர்பா போடப்பட்ட எல்லா FIR லும் மற்றும் பெண்கள் உட்படப் பலர்னு போட்டு மறுபடி மறுபடி அதே குற்றத்துல வேறு சிலரையும் சேக்குறாங்க, அதனால கிட்டத் தட்ட இன்னைக்கு 50 பேருக்கும் மேல பயந்துகிட்டு எங்கெங்கோ தலைமறைவா இருக்காங்க..” என்றார்.

சந்தானம் தெரு பள்ளிக்கூடத்தில் ரேஷன் அரிசி வாங்கி அங்கே தினம் அங்குள்ல 654 பேருக்கு சோறு சமைக்கப்படுகிறது. அங்கிருந்த பெண்கள் சொன்னது: “ஆறாந்தேதி (டிச 6) நடு ராத்திரியில வந்து கதவை உடைச்சுத் திறந்தாங்க. அசிங்கம் அசிங்கமா பேசுனாங்க. எங்க லைன்ல இருக்கிற எல்லா வீட்டுக் கதவுகளும் உடைச்சுட்டாங்க. ஆம்பிளைங்களைப் புடிச்சு போலீஸ் வண்டியில ஏத்தினாங்க. வீட்டுல வச்சிருந்த பொருள்களை எல்லாம் சேதப் படுத்துனாங்க. வாங்கி வச்சிருந்த ரேஷன் அரிசியில தண்ணியை ஊத்துனாங்க. மூணு மோட்டார் சைக்கிளை உடைச்சுப் போட்டுட்டாங்க. இப்ப எங்களுக்கு ராத்திரியில தூக்கமே இல்லை. அதோ அந்தக் கோயில்லதான் ராத்திரில படுத்துக்குறோம். ஆம்புளைப் புள்ளைங்க எல்லாம் புயல் அடிச்சப்போ எவ்வளவு உதவி பண்ணாங்க. இன்னிக்கு அவங்க எல்லாம் எங்க இருக்காங்கன்னே தெரியல” என்றார்கள்.

பேரூராட்சித் தலைவராக இருந்தவர் ராஜேந்திரன். அவரது குடிசையைப் பார்த்தாலே அவர் எத்தனை நேர்மையானவர் என்பது விளங்குகிறது. இன்று அவர் மட்டுமல்ல அவரது மூத்த மகன் மணிகண்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு இளைய மகன் இனியவன் Accused No 1 ஆக இன்று தேடப் படுபவர். நாங்கள் பேசிய பலரும் இனியன் கைது செய்யப்பட்டால் என்கவுன்டர் பண்ணிக் கொன்று விடலாம் எனத் தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டனர். ராஜேந்திரன் மனைவி முத்துலட்சுமியை நாங்கள் அவரது குடிசை வீட்டில் சந்தித்தோம். ராஜேந்திரன் தீவிர சர்க்கரை நோய் உடையவராம். காலில் புண்ணுடன் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்ற போது இன்னொரு வழக்கில் ரிமான்ட் செய்யப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட வர்களில் அவரும் இருந்தார். நீதிபதி எங்கோ வெளியில் சென்றிருந்ததால் காலை முதல் அவர்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்திலேயே உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தனர். “என் புருஷனும் மூத்த மகனும் ஜெயில்ல இருக்கிறாங்க இன்னோரு மகனைத் தேடுறாங்க. அவன் என்ன தப்பு பண்ணிட்டான். அவன் பேசுனது வீடியோவில் இருக்கு பாருங்க. அவன் நியாயத்தைத் தானே பேசி இருக்கான். இப்பிடி ரெண்டு ஆம்பிளைங்க ஜெயில்ல. இன்னொரு மகன் எங்கேன்னு தெரியல. நானும் எம் மகளும் என்ன செய்யிறது?” என்று கண்கலங்கினார்.

ஆண்கள் கைது செய்து கொண்டு செல்லப்படும்போது, “இன்னிக்கு தடிப் பயல்களைக் கொண்டு போறோம். நாளக்கி சிறுக்கிகளை தூக்குவோம்” எனச் சொல்லி அச்சுறுத்திச் சென்றதையும் பலரும் குறிப்பிட்டனர்.

இரண்டு நாட்கள் முன்னர் (டிச 12) அமைச்சர் ஓ.எஸ். மணியனைச் சந்தித்தபோது அவர் கூறியதாக சந்தானம் தெருவைச் சேர்ந்த வீரசேகர் சொன்னது: “நேற்று ஒரு நூறு பேர் போயி அமைச்சரைச் சந்தித்தோம். மக்கள் படுற கஷ்டத்தை எல்லாம் சொன்னோம். அப்படியா இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது என்றார் அமைச்சர். கோவிலில்தான் பெண்கள் தங்கி இருக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது அவருக்கு ஆச்சரியமா இருந்தது. இனிமே உங்க வீடுங்களுக்கு போலீஸ் வரமாட்டாங்கன்னு சொல்லி எங்க முன்னாடியே எஸ்.பிக்கு போன் பண்னி சொன்னாரு. இனிமே யாரையும் கைது பண்ன மாட்டாங்கன்னாரு. கூடுதலா யார் மேலயும் குற்றப்பிரிவுகளையும் இனி சேக்கமாட்டாங்கன்னும் சொன்னாரு” என்றார்.

இது குறித்து நான் சமூகச் செயல்பாட்டாளர் சோமு இளங்கோ அவர்களிடம் கேட்டபோது அவரும், “அமைச்சர் அன்று அப்படிச் சொன்னது உண்மைஜான். நானும் அன்று அங்கிருந்தேன்” என்றார்.

ஊர்மக்கள் சார்பாக எஸ்.பியைச் சென்று பார்ர்த்தபோது இனி இரவில் வந்து பெண்களை எல்லாம் கைது செய்ய மாட்டோம் எனவும் வழக்கில் உள்ள 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் 3 அரசு ஊழியர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் அவர் கூறியதாக அவர்கள் கூறினர்.

காவல்துறையின் கருத்து:

தலைஞாயிறு காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சுபாஷ் சந்திர போசை வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தித்தோம். கை நிறைய இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களுடன் அவர் காட்சியளித்தார். இப்படிப் பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது அப்படி எதுவும் தாங்கள் செய்யவில்லை என்றார். கோப்பிலிருந்து கொஞ்சம் புகைப்படங்களை எடுத்து எங்களிடம் தந்தார். “இதெல்லாம் மக்கள் செய்த வன்முறைகளுக்கான ஆதாரங்கள். கிடைக்கக் கூடிய படங்கள் எல்லாவற்றையும் நாங்கள் ஒன்றுக்குப் பத்து முறை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே கைது செய்கிறோம் என்று சொன்னார். எஸ்.பியே நேரடியாக இவ்வழக்கைக் கையாள்வதாகவும், எல்லாவற்றையும் உறுதி செய்து கொண்ட பின்பே கைதுகள் மேற்கொள்ளப் படுவதாகவும் கூறி அகன்றார்.

எமது பார்வைகள்

  1. வீடு வாசல் இழந்த மக்கள் ஈரத் துணிகளுடன் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது எந்தக் காரணமும் இல்லாமல் காவல்துறையினர் அவர்களைத் தாக்கியதிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்குகிறது. அப்போது நிவாரணங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புயல் தாக்கிய அத்தனை ஊர்களிலும் சாலை மறியல்கள் நடந்து கொண்டிருந்தன. எங்கும் அப்படி மறியல் செய்தவர்கள் போலீசால் தாக்கப்படவோ கைது செய்யப்படவோ இல்லை. அமைச்சர் தாக்கப்பட்ட இடத்தில் கூட பொலீஸ் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிந்தாமணியில் உட்கார இடமில்லாமல் சாலையில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டதற்கு அவர்கள் ஏழை எளிய தலித் மக்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அப்படியான தாக்குதல் சம்பவம் அன்று நடக்கவில்லை என்றால் இவ்வளவும் ஏற்பட்டிருக்காது.
  2. நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத் தெருவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்துள்ளனர். சிலர் 5000 பேர்கள் இருக்கும் எனவும் கூறினர். அன்று சில காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது உண்மை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளவர்கள்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் காமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தப் புயலில் அவை செயல்பட்டிருக்கப் போவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமூக ஊடகங்களில் கிடைத்த ஆதாரங்கள் போதாது. தவிரவும் மிகவும் உள் நோக்கத்துடன் சிலர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதியானது. இனியவன் என்கிற இன்று தேடப்படும் இளைஞரின் குடும்பத்தில் உள்ள மூன்று ஆடவர்களும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவரும் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ராஜேந்திரன் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் இன்று வன்முறைகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ராஜேந்திரந்தி.மு.க சார்பில் நின்று பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர். அவருக்கும் அமைச்சர் ஓ.எஸ் மணியனுக்கும் இடையில் அரசியல் பகை இருந்தது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டினர். கஜா புயலால் இப்பகுதியில் பெரிய சேதம் ஏதும் இல்லை என அமைச்சர் மணியன் கூறியதாகப் பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் கண்டித்து இனியவன் பேசிய வீடியோ நாக்கீரன் தளத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் ‘வைரல்’ ஆகப் பரவியுள்ளது. இன்று அவர் என்கவுன்டர் செய்யபடலாம் என்கிற அள்விற்கு மக்கள் மத்தியில் அச்சம் உள்ளாகியுள்ள நிலை மிகவும் வருந்தத் தக்கது.
  3. அமைச்சருக்கும் இன்று தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடும் அதன் காரணமான புகைச்சலும் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இப்பகுதி தலித் மக்கள் அதிக அளவில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பூதான இயக்கத்தால் பயன் பெற்றவர்கள். நல்ல விளைச்சலுள்ள இப்பகுதியின் ஒரே பிரச்சினை கடல் நீர் (back waters) விவசாய நிலங்களில் உட் புகுவதுதான். காலம் காலமாக அவர்களே மண்ணை வெட்டிப் போட்டு தடுப்புகளைச் செய்துதான் வாழ்ந்து வந்துள்ளனர். விவசாயத்தைப் பாதிக்காத வண்ணம் நிரந்தரமான தடுப்பணைகளை இப் பகுதியில் கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி Climate Adaptation in Vennar Subdivision in Cauvery Delta Project எனும் திட்டத்தின் கீழ் ரூ1560 கோடி நிதி உதவி வாக்களித்து அதில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டு வேலை தொடங்கும் போதுதான் ஊர் மக்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் பிரச்சினை தொடங்கியது. அரிச்சந்திரா நதியை ஒட்டி வேதாரண்யம் – நாகை சாலையை நோக்கி தலைஞாயிறிலிருந்து செல்லும் சாலையில் வேதாரண்யம் கால்வாய் சந்திக்கும் இடத்தைத் தாண்டி கிழக்கில் சற்றுத் தூரம் தள்ளி இந்த இயக்கு அணையைக் கட்ட வேண்டும் என்பது மக்கள் விருப்பம். நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது தானாகவே நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தும் அமைப்பைத்தான் இயக்கு அணை என்கின்றனர். உப்பின் அளவு குறையும்போது அது தானாகவே நீரோட்டத்தை அனுமதிக்கும். அப்படி மக்கள் விருப்பத்தை ஏற்று அமைத்து இருந்தால் கடல் நீர் ஏறும் காலத்தில் அது இப்பகுதி விவசாய நிலங்களைப் பாதிக்காமல் இயக்கு அணையால் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் விருப்பத்திற்கு நேர் எதிராக அப்பகுதியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள முதலியப்பன் கண்டியில் இயக்கு அணை இன்று கட்டப்பட்டுள்ளது இதனால் இப்போது கடல் நீர் ஏறும் காலத்தில் அது தடுப்பு அணைக்கு முன்னதாகவே உட்புகுந்து விடுகிறது. அதனால் வேதாரண்யம் கால்வாய்க்கு மேற்கே உள்ள விவசாய நிலங்கள் பாழாகிறது. முன்னைப்போல எளிதாக அதைத் தடுக்கவும் முடியவதில்லை. இது பெரிய அளவில் இப்பகுதி விவசாயத்தைப் பாதித்துள்ளது. இதற்குக் காரணம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்தான் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாய நிலங்கள் அழிந்து இப்போது இப்பகுதி இறால் பண்ணைகளாக மாறியுள்ளன. இறால் பண்ணைகளுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும் என்பதால் அமைச்சர் இப்படி இயக்கு அணையை மேற்கு நோக்கித் தள்ளி அமைத்துவிடார் என நாங்கள் சந்தித்த இப் பகுதி மக்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் உரிய முறையில் விதிப்படி கருத்துக் கணிப்பு நடத்தவில்லை எனவும் கூறுகின்றனர். இத் திட்டத்திற்கான பயனீட்டாளர் குழுவின் துணைத் தலைவராக உள்ள சோமு இளங்கோ அவர்களும் இக்கருத்தை ஆமோதித்தார். இப்படியான பிரச்சினை அப்பகுதி மக்களுக்கும் அமைசருக்கும் இடையில் உள்ளதும் இன்றைய காவல்துறை அடக்குமுறைகளுக்கு ஒரு காரணம் என நாங்கள் சந்தித்த மக்கள் கூறினர்.
  4. புஷ்பவனம் என்னும் இடத்தில் மீன்வளக் கல்லூரி உருவாக்கும் திட்டத்தையும் அமைச்சர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது ஊருக்கு அருகில் உள்ள ஓரடியம்பலம் எனுமிடத்திற்கு அதை மாற்றியுள்ளதையும் நாங்கள் சந்தித்த மக்கள் கண்டித்தனர். புஷ்பவனத்தில் மீன் வளர்ப்பு மையம் அமைப்பது என்பதாக அத்திட்டம் இப்போது மாற்றப்பட்டுள்ளது.
  5. தாங்கள் சந்தித்தபோது அமைச்சர் மணியன் இனி யாரையும் கைது செய்ய மாட்டார்கள் எனவும், காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களை வழக்கிலிருந்து விலக்கிவிடுவதாகவும் வாக்களித்ததாக நேற்றுத்தான் சந்தானம் தெரு மக்கள் எங்களிடம் நம்பிக்கையோடு கூறினர். ஆனால் இன்று காலை நாலரை மணி அளவில் பிரிஞ்சி மூலை கீஅத் தெருவில் மகேஷ், காளிதாஸ், நாகராஜ் மற்றும் அவர் மகன் முத்ட்கு, வினோத்குமார் என்கிற ஐந்து பேர்கள் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் இருவரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் M.Phil பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கைகள்

  1. சென்ற நவம்பர் 18 அன்று தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்த சம்பவங்களுக்கு வித்திட்டது சிந்தாமணியில் அமைதியாகச் சாப்பிட்டுக் மொண்டிருந்த தலித் மக்களை எந்தக் காரணமும் இன்றி காவல்துறையினர் தாக்கிய நிகழ்ச்சிதான் என இக்குழு உறுதியாகக் கருதுகிறது. இது குறித்து விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று கைது செய்யப்பட்டுள்ள பலரும் அந்த வன்முறைகளுக்குக் காரணம் எனக் கூறுவதற்கில்லை. பல கைதுகள் உள்நோக்கம் கொண்டவையாகவே உள்ளன. அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் கடுஞ் சட்டப் பிரிவுகளும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தில் மூவர் மீது இன்று வழக்குகள் போடப்பட்டுள்ளதும் இங்கே கவனத்துக்குரியதாக அமைகிறது. அமைச்சருக்கும் இம்மக்களுக்கும் இடையேயான கருத்து மாறுபாடுகள் இந்தக் கைதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் உண்மை உள்ளது என நாங்கள் கருதுகிறோம். இரவு நேரங்களில் வீடு புகுந்து மக்கள் தாக்கப்பட்டது என்பதெல்லாம் தமக்கு ஒன்றுமே தெரியாது என அமைச்சர் சொல்வதை ஏற்க இயலாது.
  3. வழக்கில் உள்ளவர்கள் முன் ஜாமீன் பெற்று வரும்போது அவர்கள் மீது இன்னொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்வது என்பதெல்லாம் காவல்துறையின் பழிவாங்கும் நோக்கத்தையே காட்டுகிறது. 18ந் தேதி போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் எனத் தேடப்பட்டவர்கள் ஐவரும் வந்து 22 அன்று இன்னொரு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எனச் சொல்லி இன்னொரு FIR பதிவு செய்வது என்பதெல்லாம் ஏற்கக் கூடிய ஒன்றல்ல. அப்படித் தேடப்படுபவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் அங்கேயே அவர்களைக் கைது செய்ய வேண்டியதுதானே என நீதிமன்றமும் காவல்துறையை கேட்காதது வருந்தத் தக்கது. கடும் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணங்களூம் ஏதுமின்றி துயரத்திற்காளான மக்கள் எக்காரணமும் இன்றி தாக்கப்பட்ட பின்னணியில் நடந்த சம்பவங்களை அரசு இத்தனை கடுமையாக எதிர்கொள்வதில் அடிப்படை நியாயங்கள் ஏதுமில்லை. புயலில் அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த எளிய மக்கள் மீது பழிவாங்கும் நோக்கில் மிகைப்படுத்தித் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
  4. ஊருக்குள் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும்.
  5. விவசாயத்தைப் பாதிக்கக் கூடாது என ஆசிய வங்கி உதவியுடன் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மூன்று இயக்கு அணைகளையும் மறு பரிசீலனை செய்ய வல்லுனர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் மறு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அந்த மூன்றில் பொருத்தம் இல்லாதவற்றை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். அதேபோல மீன்வளக் கல்லூரி இடம் மாற்றப்பட்டதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  6. புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் உடனடியாக நிவாரணங்கள், இழப்பீடுகள் வழங்கும் பணிகள் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட வேண்டும்.

 

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20. செல்: +91 94441 20582

ஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை

 National Confederation of Human Rights Organizations (NCHRO)

Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal,

New Delhi – 110014. Tel: 011-40391642 Mob: 97183-51204, 86063-37319

Email: nchromail@gmail.com, www.nchro.org

———————————————————————————————————————

ஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை

ஜனவரி 03, 2018

நாகர்கோவில்

சென்ற நவம்பர் 29-30 இரவில் கன்னியா குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் உயிர், பயிர் மற்றும் தொழில் அழிவுகளை ஏற்படுத்திய ஓகி புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அந்தப் பாதிப்புகளின் சுமையிலிருந்து அம்மக்களுக்கு உடனடி ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் ஆற்ற வேண்டிய கடமைகள், அளிக்க வேண்டிய நிவாரணங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகளின் முன்னும், மக்கள் முன்னும் அறிக்கை ஒன்றை முன்வைக்கும் நோக்குடன் ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (National Confederation of Human Rights Organisations – NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

  1. பேரா. அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO, Cell: 094441 20582
  2. கோ.சுகுமாரன், தேசிய செயற்குழு உறுப்பினர், NCHRO, Cell: 098940 54640,
  3. எஸ்.அஹமத் நவரி, தமிழக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர், NCHRO, Cell: 099446 55252
  4. ஈ.சந்திரமோகன், அமைப்பாளர், சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை, கன்னியாகுமரி மாவட்டம், Cell: 095669 40970
  5. .எஸ்.அன்சார், குமரி மாவட்டச் செயலாளர், SDPI கட்சி, Cell: 097895 10550
  6. எஸ், சையது இஷ்ஹாக், குமரி மாவட்டச் செயலாளர், PFI, Cell- 075981 59592
  7. ஏ.ரெவி, செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கம், தடிக்காரன்கோணம், Cell: 094866 63224
  8. கடிகை ஆன்டனி, சமம் குடிமக்கள் இயக்கம், நாகர்கோவில், Cell: 098405 90892
  9. அஹமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், சென்னைப் பல்கலைக் கழகம், Cell: 095245 83834
  10. எஸ்.பி.சர்தார் அராஃபத், வழக்குரைஞர், திருநெல்வேலி, Cell: 097894 04940

இக்குழு சென்ற டிசம்பர் 14, 15 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. குளச்சல் வட்டத்தில் உள்ள கடலோரக் கிராமங்களான தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, இறையுமன்துறை, இரவிப்புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டந்துறை, நீரோடிக் காலனி முதலான மீனவக் கிராமங்களுக்கும், நாகர்கோவில், தக்கலை, கருங்கல் மற்றும் தோவாளை வட்டத்தில் உள்ள சிறமடம், உவார்ட்ஸ்புரம், அழகியபாண்டிபுரம், தோமையாபுரம், கீரிப்பாறை, வெள்ளாம்பி முதலான விவசாய மற்றும் பழங்குடிப் பகுதிகளில் வாழை, ரப்பர், கமுகு, தேக்கு மரச்சீனி, மிளகு முதலான விவசாயம் சார்ந்த விளைபொருட்கள் பயிற்செய்கை செய்யப்படும் கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். கடலோர கிராமங்கள், விவசாயகிராமங்கள், பழங்குடியிருப்புகள் ஆகிய மூன்று தரப்பு நிலப்பகுதிகளில் மக்களுக்கும், அவர்களின் தொழில்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முடிந்தவரை பார்வையிட்டோம்.

கடலோரப் பகுதிகளைப் பொருத்தமட்டில், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஓகிப் புயலில் தங்களது விசைப்படகுகள் கவிழ்ந்து சுமார் 24 மணி நேரம் கடலில் கிடந்து தப்பி வந்த சிலரது வாக்கு மூலங்களைக் கேட்க முடிந்தது. புயலின்போது கடலில் இருந்து அதற்குப் பின் சுமார் இரண்டு வாரங்கள் ஆனபின்னும் இன்னும் வராமல் உள்ள நிலையில் தற்போது அவர்களின் கதி என்ன என அறியாத அவர்களின் உறவினர்கள் சுமார் முப்பதுக்கும் பேற்பட்டோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களையும் பதிந்து கொண்டோம். இந்த மக்களின் மதத் தலைவர்களாக மட்டுமின்றி அவர்களின் சமுதாய நலன்களிலும் அக்கறையுடன் செயல்படுபவர்களாக உள்ள அருட் தந்தை சர்ச்சில் அடிகளார், தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன், நீரோடி ஆலயப் பங்குத் தந்தை ஷைனிஷ் போஸ்கோ ஆகியோரிடமும் விரிவாகப் பேசித் தகவல்களைத் தொகுத்துக் கொண்டோம். சின்னத்துறையைச் சேந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி மிக விரிவாகா அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளைத் தொகுத்துத் தந்தார், பேராசிரியர் கான்ஸ்டான்டின் வரீதையா மிகவும் நுணுக்கமாக மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கினார். பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் ஆழ்ந்த ஆர்வம் உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களின் பிரச்சி25498431_1756485541090829_5360056275836301562_n o5னைக்ளைத் தொகுத்துத் தந்தார். ஓகிப் புயலில் சிக்கித் தப்பித்து வந்தவரான எழுத்தாளரும் மீனவருமான கடிகை அருள்ராஜ், பல்கலைக் கழகம் ஒன்றில் ஆய்வு செய்துவரும் நீரோடி சேவியர் ஆகியோர் விரிவான தகவல்களைத் தந்தனர்.

இரண்டாம் நாள் நாங்கள் தோவாளை வட்டம், பேச்சிப்பாறை முதலான மேற்குறிப்பிட்டப்  பகுதிகளுக்குச் சென்று விவசாய அழிவுகளைப் பார்வையிட்டோம். அப்பகுதியில் வாழ்பவரும் பல ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வருபவருமான சந்திரமோகன் அவர்கள் எங்கள் குழுவிலேயே இருந்ததால் அவரும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புயல் அழிவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கினார். தவிரவும் விவசாயிகளின் பிரதிநிதியாக நின்று அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வரும் குமரி மாவட்டப் பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ அவர்கள் மிக விரிவாக எங்களுடன் பேசி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விளக்கி, அவற்றின் அடிப்படையில் தாங்கள் வைக்கும் கோரிக்கைகளையும் கூறினார். தவிரவும் பத்மநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் அவர்கள் இங்கு இன்று ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், இழப்பீடுகளை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்கள், உருவாகிவரும் கவலைக்குரிய மதவாத அரசியல் ஆகியவற்றை உரிய தரவுகளுடன் விளக்கினார்.  மலைவாழ் பழங்குடி மக்களைப் பொருத்த மட்டில் கீரிப்பாறை சாலையில் உள்ள வெள்ளாம்பி குடியிருப்பில் ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியும் முன்னாள் கவுன்சில் தலைவருமான ராமன் காணி மற்றும் எங்கள் குழுவில் இருந்த விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் தடிக்காரக் கோணம் ரெவி ஆகியோர் ஓகி புயல் பழங்குடி மக்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வாறெல்லாம் பாதித்துள்ளது என்பதை விளக்கினர்.

கிட்டத்தட்ட கன்யாகுமரி மாவட்டம் முழுமையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பாதிப்புகள் உண்டென்ற போதிலும் எம் குழு. கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஆய்வை வரையறுத்துக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 1) மீனவர்கள், 2) விவசாயிகள், 3) மலைவாழ் காணிப் பழங்குடியினர் ஆகிய மூன்று தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளபோதிலும், இம்மூன்று தரப்பினரின் பாதிப்புகளும் முற்றிலும் வெவ்வேறானவை. மீனவர்களுக்கு படகுகள் முதலானவை அழிந்து ஏற்பட்டுள்ள தொழில் சார்ந்த பேரிழப்புகள் தவிர, ஈடு செய்ய இயலாத அளவிற்குப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உயிரிழப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும் மிகப் பெரிய அளவு விவசாயச் சொத்திழப்புகள் ஏற்பட்டுள்ளன. பழங்குடி மக்கள் என்றென்றும் பின்தங்கி இருப்பவர்கள். இன்று மரங்கள் வீழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளததோடு அன்றாட வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்..

இப்படி இந்த மாவட்டம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று தரப்பு மக்கள் அனைவரையும் சந்திப்பதும், அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆராய்வதும் ஒரு உண்மை அறியும் குழுவால் இரண்டு நாட்களுக்குள் முடித்துவிடக் கூடிய பணி அல்ல. எனினும் இது தொடர்பாக இதுவரை வெளி வந்துள்ள பல்வேறு ஊடகச் செய்திகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு உண்மைகளை உறுதி செய்து கொண்டோம். இது தொடர்பாக இம்மக்கள் மத்தியில் பணி செய்து வருபவர்களையும் தவறாமல் சந்தித்துத் தகவல்களையும் திரட்டிக் கொண்டோம்.

மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் அவர்களை நீரோடி கிராமத்தில் அவர் மக்கள் குறை கேட்க வந்தபோது சந்தித்து எத்தகைய நிவாரண வேலைகள் நடைபெறுகின்றன என்பவற்றையும், எதிர்காலத் திட்டங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

1.மீனவர்களின் உயிரிழப்பு மற்றும் மூலதன இழப்புகள்   

கடலோர மாவட்டமான கன்னியாகுமரியச் சூறையாடிய மீது ஒகி புயலால் மிக அதிக பாதிப்புகளை அனுபவித்துள்ளவர்கள் மீனவர்கள்தான். இவர்கள் பெரிய அளவில் உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். படகுகள், வலைகள், கருவிகள் எனப் பெரிய அளவில் மூலதன இழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல ஏராளமான மீனவர்களின் நிலை இன்றளவும் உறுதியாகத் தெரியாத நிலையில் அவர்களின் துயரமும் கவலையும் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ள நிலை இன்னும் கொடுமையான ஒன்று.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மீனவக் கிராமங்களாவன: நீரோடிக் காலனி, மார்த்தாண்டத் துறை, வள்ளவிளை, இரவிப் புத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, மிடாலம், இனயம் புத்தன் துறை . இறய்மன் துறை முதலியன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் பெரிய அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வசிப்பவை, எனினும் ஓகிப் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்தான் எனச் சொல்லிவிட முடியாது. கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து சென்று இப்பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்; இன்னும் திரும்பி வராமலும் உள்ளனர். அதேபோல உள்ளூரில் படித்தும் வேலை இல்லாமல் உள்ள பிற மத இளைஞர்களும் தற்போது மீனவர்களுடன் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.

தவிரவும் ஆழ் கடல் மீன் பிடிப்[புக்குச் செல்லும் விசைப் படகுகளில் வட இந்திய (immigrant) தொழிலாளிகளும் உதவியாளர்களாக இப் படகுகளில் செல்கின்றனர். எனினும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மீனவர்களே. ஊர் தோறும் கிறிஸ்தவ ஆலயங்களே பொது மையங்களாகக் அமைந்துள்ளன. பாதிரிமார்கள் மதக் கடமைகளை ஆற்றுபவர்களாக மட்டுமின்றி அம் மக்களின் சமூகத் தலைவர்களாகவும் உள்ளனர்.

நாங்கள் மூன்று பாதிரிமார்களைச் சந்தித்தோம். நாங்கள் சென்ற போது (டிசம்பர் 14, மதியம் சுமார் 12 மணி) சின்னத்துறை கிராமத்தில் நிறுத்தப்பட்டோம். இந்தக் கிராமத்திலுள்ள மாதா கோவில் முன்புறம் அமைந்துள்ள மிக விசாலமான திடலில்தான் அன்று இப்பகுதிக்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களைச் சந்தித்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்ததோடு காவல்துறையும் குவிக்கப்பட்டு இருந்ததால் நாங்கள் மேலே செல்ல இயலாமல் அங்கேயே சுமார் ஒரு மணி நேரம் தாமதிக்க நேரிட்டது.

அந்த இடைவெளியில் அப்போது அங்கிருந்த அருட் தந்தை சர்ச்சில் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். தன்னிடமிருந்த துண்டுச் சீட்டை எடுத்து தற்போது காணாமற் போயுள்ள மீனவர்களின் கிராமவாரியான எண்ணிக்கை, தப்பிப் பிழைத்து வந்துள்ளவர்கள், கண்ணால் பார்த்த சாட்சியத்தின் அடிப்படையில் உறுதியாக இறந்தவர்கள், கண்ணால் பார்த்து உறுதி செய்ய முடியாவிட்டாலும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாக இறந்திருக்கக் கூடியவர்கள் என்பதை எல்லாம் ஊர் வாரியாகப் படித்துக் காட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊர்கள் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் உள்ளன. தூத்தூர் பங்குகுரு பெபின்சன் அவர்களை அன்று மாலை சந்தித்தபோது அவர் இந்த எட்டு கிராமங்களில், மொத்தமாகக் காணாமல் போனவர்கள், உறுதியாக இறந்தவர்கள் என அறியப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகளோடு இழந்த படகுகள் முதலானவற்றின் எண்ணிக்கைகளையும் சொன்னார்.

நாங்கள் சென்ற போது புயல் அழிவுகள் நடந்து சுமார் 14 நாட்கள் ஆகியிருந்தன என்பதால் அதற்குள் இது குறித்துப் பெருமளவு உண்மைக்கு நெருக்கமான தகவல்களை அவர்களால் திரட்ட முடிந்திருந்தது, அவ்வப்போது ஒரு சிலர் மீட்கப்பட்டு வரும்போது எண்ணிக்கைகள் மாறுவதும் நிச்சயமாக இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுவதும் அவற்றில் தவிர்க்க இயலாததாக உள்ளது. எனினும் அவர்கள் குறிப்பிடும் எண்ணிக்கைகள் எந்த விதமான மிகைகப்படுத்தல்களும் இன்றி அந்தக் கணத்தில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருந்ததையும் எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தவிரவும் ஒவ்வொரு மீனவக் குடியிருப்பிலும் அந்தந்தக் குடியிருப்பிலிருந்து இன்று “மாயமாகிப் போனவர்களின்” பட்டியல் புகைப் படங்களுடன் ஊர்ப் பொது இடத்தில், பெரும்பாலும் மாதாகோவில்களின் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிரிமார்கள் தந்த எண்ணிக்கையும் ஒன்றாகவே உள்ளன.

1.1 ஓகிப் புயல் அழித்த உயிர்களின் எண்ணிக்கை

இறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றும் காணாமற் போயிருப்பவர்கள் குறித்து நாங்கள் சேகரித்த இரு தகவல்கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காணுமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:

  1. புயலில் காணாமற்போய் இன்னும் தகவல் கிடைக்காதவர்களை “மாயமாகிப் போனவர்கள்” என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
  2. இறந்தவர்கள் உடல் கொண்டுவரப்படவில்லை. ஏற்கனவே பலநாட்கள் தண்ணீரில் ஊறிக் கிடந்ததோடு மீன்கள், நண்டுகள் முதலானவற்றால் கடிக்கப்பட்டுச் சிதைந்திருந்த உடலங்களைக் கொணர்தல் சாத்தியமில்லை. தவிரவும் நீந்திவரும்போது ஒவ்வொருவராக இறக்கின்றனர். அப்போது மற்றவர்களுக்கு அவர்களை அப்படியே விட்டுவிட்டுத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இப்படி இறக்கும்போது கண்ணால் கண்ட சாட்சிகள், இறந்தவர்களின் உடல்களிலிருந்து கண்டெடுத்துக் கொண்டுவரப்பட்ட செல்போன்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படுகிறது.

3. நாங்கள் இப்பகுதிக்குச் சென்று மீனவர்களைச் சந்தித்தது டிசம்பர் 14 அன்று. நேரடியாக மீனவர் கிராமங்களில் சந்தித்த             மக்களிடமிருந்து திரட்டிய தகவல்கள் தவிர அருட் தந்தை சர்ச்சில் மற்றும் தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன்            ஆகியோரிடமிருந்து பெற்ற விவரங்கள் மற்றும் இங்கு பணி செய்யும் சமூக அமைப்புகள் சேகரித்துள்ள விவரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து ஒப்பிட்டு எங்களால் இயன்றவரை சரியான தரவுகளைக் கணக்கிட்டுக் கொண்டோம். இந்தத் தரவுகள் அடுத்த இரண்டு வாரங்களில் மாறியுள்ளன. தினந்தோறும் மாறிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. நாங்கள் அங்கு சென்றபோது (டிச 14, 2017) வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 என்றார்கள். ததையூஸ் என்பவரின் விசைப் படகில் சென்றிருந்த 10 பேர் அதில் அடக்கம், நாங்கள் வந்தபின் சென்ற 19 ந்தேதி அன்று, காணாதவர்களைத் தேடிச் சென்ற மீனவர்களால் அவர்கள் கண்டுபிடித்துக் காப்பாற்றப்பட்டுள்ளனர். தேடிச் சென்ற மீனவர்கள், அவர்களுக்கு முதல் உதவி அளித்து, அவர்களின் படகையும் சீர்படுத்தி, பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்துள்ளனர். இனி கண்டுபிடிக்க யாரும் இல்லை, கடலில் யாரும் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனக் கடற்படை மற்றும் கரையோரக் காவற்படைகளால் கைவிடப்பட்டவர்கள் இவர்கள். எந்த நவீன வசதிகளும் தொழில் நுட்பங்களும் இல்லாத மீனவர்களின் சுய முயற்சியால் இப்போது இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த மேலும் 47 மீனவர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நாங்கள் சென்ற அன்று வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 ஆக இருந்தது. இப்போது (டிசம்பர் 25) அது 33 ஆகக் குறைந்துள்ளது. இப்படி எல்லாத் தரவுகளும்தொடர்ந்து மாறிக் கொண்டிருந்தன.

  1. காணாமற் போயிருப்பவர்களில் மீனவர்கள் தவிர கடலில் இறங்கும் மீனவர்களுக்கு உதவியாக அழைத்துச் செல்லப்பட்ட வட இந்திய immigrant தொழிலாளிகளும் சிலர் இன்று மாயமாகியுள்ளனர்.
  2. அரசும், இப்பகுதி மக்களும், அக்கறையுள்ள சமூக ஆர்வலர்களும் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் உயிருடன் இருந்தால் எப்படியும் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் கரைக்குத் திரும்பிவிடுவர் என கிறிஸ்துமசை ஒரு எல்லைக் கோடாக வைத்துள்ளதை ஒட்டி, எங்கள் குழுவும் டிசம்பர் 25 ஐ ஒரு எல்லைக் கோடாக வைத்துக் காத்திருந்து அன்று கிடைத்துள்ள உறுதி செய்யப்பட்ட இரு எண்ணிக்கைகள் இங்கே தரப்படுகின்றன.

இந்தத் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மீனவக் கிராமங்களிலிருந்து இன்று ஓகி புயலில் இறந்துள்ள மற்றும் “மாயமாகிப் போயுள்ள” வர்களின் எண்ணிக்கை வருமாறு:

தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன் அவர்கள் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் வட்டத்தில் இறந்தவர்கள் மாயமாகி இருப்பவர்கள் குறித்துச் சேகரித்துள்ள தரவு (டிசம்பர் 25, 2017)

 மீனவர் குடியிருப்பு              இறந்தோர்             மாயமானோர்

  1. நீரோடி                                           37                                     –
  2. மார்த்தாண்டத் துறை                05                                    02
  3. வள்ளவிளை                                03                                    33
  4. இரவிப்புத்தன் துறை                  06                                     –
  5. சின்னத்துறை                               40                                     –
  6. தூத்தூர்                                           11                                     –
  7. பூத்துறை                                         05                                   05
  8. இறையுமன் துறை                        02                                   13

மொத்தத்தில் இந்த எட்டு மீனவர் குடி இருப்புகளில் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்களாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 109. இதுவரை திரும்பி வராது மாயமானவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 48.

இது தவிர ஓகி புயலில் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளில் மூழ்கிப் போனவை 14. காணாமல் போனவை13. காணாமற் போன தங்கல் வள்ளங்கள் 29. மூழ்கியவை 3, மூழ்கிய சிறிய தங்கல் வள்ளங்கள் 60, கட்டுமரங்கள் 4 இறந்தவர்கள், மாயமானவர்கள், மூழ்கிப் போன மற்றும் காணாமற் போன படகுகள் குறித்த மேற்கண்ட இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தூத்தூர் மறை வட்டத்தைச் சேர்ந்த எட்டு கிராமங்களில் ஏற்பட்ட அழிவுகளை மட்டும் உள்ளடக்குகிறது என்பது நினைவிற்குரியது. கன்னியாகுமரி மாவட்டம் முழுமையும் ஏற்பட்டுள்ள அழிவுகள் இதனினும் அதிகம்.

சின்னத்துறை பங்குத் தந்தை சர்ச்சில் அவர்கள் ஓகி புயலில்  கன்னியாகுமரி மாவட்டம் முழுமையிலும் இறந்த மற்றும் மாயமாகிப் போயுள்ளோர் குறித்துத் தொகுத்துள்ள தரவு

நீரோடி                                               37

மார்த்தாண்டத் துறை                    07

வள்ளவிளை                                    33

இரவிப்புத்தன்துறை                       06

சின்னதுறை                                      40

தூத்தூர்                                               12

பூத்துறை                                             26

இறையுமன் துறை                            02

மொத்தம்                                             142

____________________________________________________________________________________

முள்ளூர் துறை                                   02

ராமன் துறை                                        03

இனையம் புத்தன் துறை                   01

மேல் மிடாலம்                                     04

கடியாபட்னம்                                        01

முட்டம்                                                  01

கொளச்சல்                                            06

மேல் மணக்குடி                                   03

_________________________________

ஆக மொத்தம்                                     163

இது தவிர மீனவர்களுடன் சென்று கடலில் மாண்ட அசாம் மாநிலத்தைச் சேந்தோர் 5 பேர்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தோர் 3 பேர்கள். ஆக மொத்தத்தில் உயிரிழந்த இந்திக்காரர்கள்’ 8 பேர்

இது தவிர இந்த ஓகிப் புயலில் மீனவர் அல்லாத விவசாயப் பகுதிகளில் இறந்தோர் எண்ணிக்கை:

கலிங்கராஜ பட்டினம்                        01

\நித்திரவிளை                                      02

புதுக்கடை                                             01

தோவாளை                                          01

திட்டுவிளை                                         01

____________________________________

மொத்தம்                                               06

______________________________________.

இது தவிர மேற்குறித்த கன்னியாகுமரி மீனவர்களுடன் சேர்ந்து சென்றிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 22 பேர்களும், கடலூர் மாவட்டத்தினர் 16 பேர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தினர் 4 பேரும் ஓகிப் புயலில் இறந்துள்ளனர்.

இந்தக் கணக்குப்படி எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஓகிப் புயலில் இறந்தோரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 182+6 = 188.  வடமாநிலத்தைச் சேர்ந்தோர் 8. பிற மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து இவர்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்து இறந்தோர் 42. மொத்தமாக கூகிப் புயலில் கன்னியாகுமரிக் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இறந்தவர்கள் 196+42 = 238.

24 ம் தேதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கு இது. திரும்பிவராத எல்லோரையும் சேர்த்து இந்த எண்ணிக்கை கணக்கிடப் பட்டுள்ளது.

சென்ற டிசம்பர் 28 அன்று சென்னையில் இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின்படி கூகிப் புயலில் மாயமானோர் எண்ணிக்கை:

இதுவரை டிசம்பர் 20 வரை தமிழகத்தைச் சேர்ந்த 453 பேர், கேரளத்தைச் சேர்ந்த 362, லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளைச் சேர்ந்த 30 பேர் என ஆக மொத்தம் 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ந் தேதி நிலவரப்படி இன்னும் 661 பேர் மாயமாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 400 பேர். கேரளாவைச் சேர்ந்தோர் 261 பேர். (தினத்தந்தி, டிசம்பர் 29, 2017)

மாயமானவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பொறுப்பு மாநில மீன்வளத்துறையுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.

மீட்கப்படவர்கள் பற்றிச் சொல்கையில் கப்பற்படை, கடலோரக் காவல் படை மற்றும் விமானப் படையினர்தான் இதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரிய அளவில் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்களே காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர். பலர் மிகுந்த சிரமங்களுக்கிடையில் தாங்களே மீண்டு வந்துள்ளனர். இது குறித்து அமைச்சர் ஒன்றும் கூறாதது கவனிக்கத் தக்கது.

 

2.மீனவ மக்களின் துயரங்களும் அரசின் அலட்சியமும்

டிச 14 காலை 11 மணி முதல் இரவு எட்டு மணிவரை நாங்கள் குளச்சல் கடற்கரையோர மீனவர்கள் கிராமங்களிலேயே இருந்து பலரையும் சந்தித்தோம். குறிப்பாகக் கணவன் நிலை அறியாது தவிக்கும் பெண்கள், பிள்ளைகள் நிலை அறியாது தவிக்கும் தாய்மார்கள் சகோதரர்கள் என நாங்கள் சந்தித்த பலருள் மேரி செலின், மெடில்டா மேரிஹெலன், அஜிதா நிர்மலா, மரிய புஷ்பம், வியாகுல அடிமை, ஜோதி எனப் பலரும் அடக்கம். ததையூஸ் என்பவரின் படகில் சென்ற 10 பேர் நாங்கள் வந்தபின் காப்பாற்றச் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வந்துள்ளது. இவர்களில் சிலர் கடலுக்குப் புறப்பட்ட தேதி நவம்பர் 22. இன்னும் சிலர் அக்டோபர் 22ம் தேதி அதாவது புயலுக்குச் சுமார் 40 நாட்களுக்கு முன் கடலுக்குப் புறப்பட்டவர்கள்.

நீரோடி, சின்னத்துறை, வள்ளவிளை, பூத்துறை ஆகிய மீனவர் குடியிருப்புகளில்தான் அதிகம் பேர்களின் இறப்பு உறுதியாகியுள்ளது. நீரோடியைச் சேர்ந்த செய்ன்ட் ஆன்டனி எனும் விசைப்படகு (TN 15MM 5705) 13 மீனவர்களைச் சுமந்து கொண்டு அக்டோபர் 23 அன்று கடலில் இறங்கியது. படகின் சொந்தக்காரர் சுதர்சன். சுதர்சனின் மனைவி மேரி ப்ரைதா (23). ஒருவர் கூட இன்று திரும்பவில்லை. கடலில் மிதந்த ஒரு உடல் காலியான எண்ணை கேன்களில் பிணைந்து கிடந்து ஒரு பையுடன் கண்டெடுக்கப்பட்டது அந்தப் படகில் சென்றவர்களில் எட்டு பேர்களின் செல் போன்களும் இரண்டு அடையாள அட்டைகளும் அதில் இருந்தன. இப்படி நிறையப் பேர்களின் துயரக் கதைகளைக் கேட்டோம். எல்லோரும் சொன்னதை மிகச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:

“காப்பாத்துற பிள்ளைகளையும் இழந்து போட்களையும் இழந்து ஒண்ணுமில்லாமல் நிற்கிறோம். எங்க வயித்துக்கு மீன் பிடிக்கிறது மட்டுமில்லை. இந்த நாட்டின் 60 சத கடல் எல்லையையும் நாங்கதான் பாதுகாக்கிறோம். எங்களைத் தாண்டி கடல் வழியா ஒரு ஈ காக்கை கூட நுழைய முடியாது. பயங்கரவாதி அஜ்மல் கசாப் கூட ஒரு மீனவனைக் கொன்னுட்டுதான் இந்த நாட்டுக்குள்ள புக முடிஞ்சுது. நேவி என்ன செய்யுது?  நாங்க உலகத் தரமான மீனவங்க. சூறை மீனையும் சுறா மீனையும் பிடிக்கிறதுல எங்களைக் காட்டிலும் திறமையானவுங்க யாரும் இல்லை. 300 நாடிகல் மைலைக் கடந்து போயி வலையையும் தூண்டிலையும் வீசி மீன் பிடிக்கிறவங்க நாங்க. ஒரு தடவை புறப்பட்டுப் போனால் ஒரு வாரம், பத்து நாளு, சில சமயம் ஒரு மாசங் கூட ஆகும். அதுக்குத் தகுந்தாப்போல தயாரிப்புகளோட போறோம். எட்டு லட்ச ரூபா வரைக்கும் அதுக்கு இன்வெஸ்ட் பண்ணித்தான் கடல்ல இறங்குறோம். அதுக்குத் தகுந்த மாதிரி மீன் கிடைக்கலன்னா தங்குற நாளை extend பண்ணுவோம். அவ்வளவு நாள் தங்குற மாதிரி தயாரிப்போட, சமைக்கிறதுக்கு ஆளோட போவோம். கிடைக்கிறதுல டீசல் முதலான செலவுகள் போக, ஒரு பங்கு சொந்தக்காரருக்கு, ஒரு பங்கு ஊழியர்களுக்குன்னு பிரிச்சுக்குவோம். எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு? 300 நாட்டிகல் மைல் தாண்டி லட்சத் தீவு வரைக்கும் போற எங்களுக்கு சேட்டலைட் போன் தரணும். இந்த ஓகி புயல் அழிவை தேசியப் பேரிடர்னு அறிவிக்கணும். புயல் பற்றி முன்னெச்சரிக்கை பதினைந்து நாட்களுக்கு முன்னாடியே அறிவிக்கணும். குளச்சல்லையாவது தேங்காப்பட்டினத்துலயாவது ஒரு ஹெலிபாட் தளம் அமைக்கணும். அதுல எப்பவும் இரண்டு ஹெலிகாப்டர்கள் தயாரா இருக்கணும்”

இப்படித் தொகுத்துக் கூறிய நீரோடி சேவியர் லூயிஸ் துபாயில் உள்ளார். இந்த ஆண்டு கிறிஸ்மஸ்சுக்காக வந்தவர் இப்படியான சோகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

“இந்த மீனவர் கிராமங்கள்ல இருக்கிற எல்லோரும் அவங்க எங்கே இருந்தாலும், கடலில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கிறிஸ்த்மஸ்சுக்கு இங்கே வந்துடுவோம். இந்த வருசமும் கிறிஸ்த்மஸ்தான் எங்களுக்கு எல்லை. அன்னைக்கு வரைக்கும் பாத்துட்டு, அன்னைக்கும் வரலேன்னா வராதவங்களை இறந்தவங்களா கருதி எங்களுக்கு அரசாங்கம் அறிவிச்ச்சுள்ள இழப்பீடைத் தரணும். வேணும்னா கிறிஸ்மஸ்சுங்கிறதை ஜனவரின்னு வச்சு டிசம்பர் 31 ஐ எல்லையா வச்சு இறந்தவங்களை அறிவிக்கணும்”

டிசம்பர் 31 ஐ எல்லையா வைத்து இறந்தவர்களைக் கணக்கிட வேண்டும் என்பது இப்போது ஒரு பொதுக் கோரிக்கையாக அங்கு உருப்பெற்றுள்ளது.

இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்கிற உணர்வை எல்லோரும் வெளீப்படுத்துகின்றனர்.

2.1எச்சரிக்கை செய்யப்படாததே எல்லா அழிவிற்கும் காரணம்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போனவர்களைப் பொருத்தமட்டில் புயலுக்கு ஒரு வாரத்திற்கும் முன்னர் முதல் ஒரு மாதம் முன்னர் வரை கடலுக்குச் சென்றவர்கள் அடக்கம், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் 300 கடல் மைலுக்கும் அப்பால் வரை சென்றிருப்பர். அவர்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பி வரும் அளவிற்கு முன்னதாக எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை அவர்களுக்கு எட்டவும் வேண்டும். இரு கடல் மைல் என்பது 1.852 கிமீ அல்லது 1.1508 மைல் தூரத்திற்குச் சமம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆழ்கடல் அளவிற்குச் செல்லாமல் ஒப்பீட்டளவில் கரைக்கு அருகாக இருந்து மீன்பிடிப்பவர்கள் பெரும்பாலும் நவம்பர் 29 அன்றுதான் மீன்பிடிக்கக் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது குறைந்த காற்றழுத்த மன்டலம் உருவாகியுள்ளது எனவும் அது வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் மட்டுமே வானிலை மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மற்றபடி புயல் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஏதும் தரப்படவில்லை. பொதுவாக இப்படியான எச்சரிக்கை வரும்போது மீனவர்கள் இதைப் பொருட்படுத்துவது இல்லை. உறுதியாகப் புயல் வரும் என அறிவித்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும்போதே மீனவர்கள் அதை ஏற்று கடலுக்குள் இறங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். வெறும் காற்றழுத்த மண்டலத் தாழ்வு என்பதை எல்லாம் அவர்கள் பெரிதாகச் சட்டை செய்வதில்லை. ஆனால் இம்முறை நவம்பர் 30 அன்று காலை விடிகிற நேரத்தில்தான் தாங்கள் புயல் எச்சரிக்கையைக் கேட்க நேர்ந்தது எனத் தப்பிவந்த ஒருவர் கூறுவது Kumari Tamil என்னும் தளத்தில் பதிவாகியுள்ளது. நாங்கள் பேசிய மீனவர்களும் அவ்வாறே கூறினர். புயல் எச்சரிக்கை செய்யப்பட்டபோது அவர்கள் ஆழ்கடலுக்குள் இருந்துள்ளனர்.

இந்தத் தாமதம் பற்றிக் கூற வரும்போது வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், “பேரிடர் தொடர்பான தகவல்களை நேரடியாக மீனவர்களுக்கு நாங்கள் அறிவிப்பதில்லை. ஓகிப் புயல் விஷயத்தில் குறுகிய கால அவகாசமே எங்களுக்கு இருந்தது. புயல் சின்னம் தொடர்பாக எங்களுக்கு இரண்டு நாள் முன்னம்தான் தெரியவரும்” – எனச் சொல்லியுள்ளார் (தினத்தந்தி, பக்.5, டிசம்பர் 17, 2017).

மொத்தத்தில் சரியான நேரத்தில் ஓகி புயல் குறித்த எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. ‘ஓகி’ என இப் புயலுக்குப் பேர் சூட்டிப் பேசுவது என்பதெல்லாம் எல்லாம் முடிந்த பின்பே நடந்தேறியுள்ளது.

வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் புயல் குறித்த எச்சரிக்கையை இரண்டு நாள் முன்னர்தான் செய்ய முடியும் என்கிறார். எனினும் tropical cyclone ensemble forecast முறையில் நான்கு நாட்கள் முன்னதாகவே புயல் அடிக்கப் போவதைக் கண்டறிய முடியும். அது எந்தத் திசையில் நகரும், எங்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது முதலியவற்றையும் கணிக்க இயலும். 7,517 கி.மீ (4,671 மைல்) நீளமுள்ள ஏராளமான மீன் வளம் மிக்க கடற்கரையை உடைய இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படித் துல்லியமாக புயல் வருவதை ஊகிப்பது எச்சரிக்கை அளிப்பது ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளும் மெத்தனங்களும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கன.

மீனவர்களை அரசு ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நமது மீனவர்கள் பல நூறு நாடிகல் மைல்கள் தாண்டி மீன்பிடிப்பவர்கள். நமது மக்களின் உணவுத் தேவையைக் கணிசமாக பூர்த்தி செய்பவர்கள். எல்லை தாண்டினார்கள் எனும் குற்றச்சாட்டில் சுற்றியுள்ள பல நாடுகளில் நம் மீனவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். ஆனாலும் இன்று வரை மீனவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மீனவர் பிரச்சினைகளில் அக்கறை உள்ளவரும் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்டான்ன்டின் கூறும்போது, “உலகின் மிகத் திறமையான மீனவர்களைக் கொண்ட பகுதி இந்தத் தூத்தூர் மண்டலம். சுமார் 900 கடல் மைல் தொலைவு வரை கடலில் சென்று மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளும் இவர்களுக்கு உண்டு. சுறா மீன்களையும் சூறை மீன்களையும் வாரி அள்ளுவதில் வல்லவர்கள் இவர்கள். இவர்களது செயல்பாட்டால் சூழல் அழிவு ஏற்படுகிறது என எந்தப் புகாரும் இதுவரை கிடையாது. அதே நேரத்தில் 193 ‘பன்னாட்டு ஆலை (industrial) மீன்பிடிப்புக் கப்பல்களுக்கு’ அனுமதி அளிக்கப்பட்டு அவை பல ஆண்டுகளாக எந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறையும் இல்லாமல் அள்ளிச் செல்கின்றன நம் மீன் வளத்தை” என்றார்.

2.2 நிரந்தரத் தீர்வுக்கு வழி என்ன?

சின்னத்துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி சந்தித்தோம். ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து அங்கு நிவாரணப் பணிகளைச் செய்து வருபவர்.. விரிவாக அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கிய அவர் இறுதியாக மீனவர்களின் பாதுகாப்பை நோக்கி முன்வைத்த கோரிக்கைகள்:

1.புயலுக்கு முன் அரசு அறிவிப்புகள் மீனவர்களைச் சென்றடைய வேண்டும். கரையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்த எச்சரிக்கை கிடைக்க வழி செய்ய வேண்டும். 2. மீனவர்களுக்கு இரு வழித் தொடர்புடன் கூடிய சேட்டலைட் போன்கள் கொடுக்கப்பட வேண்டும். கரையிலுள்ள குறிப்பான பேரிடர் பாதுகாப்பு மையம் ஒன்றுடன் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அந்தக் கருவி அமைக்கப்படும்போது எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழாது. 3.வானிலை ஆய்வு மையப்பணிகள் திருப்திகரமாக இல்லை. அவை திறம்படச் செயல்படுபவையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 4. வானிலை ஆய்வு மையம், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும், கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் வசதிகளுடன் கூடிய ஹெலிபாட் தளம் ஒன்றும் இக் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட வேண்டும். 4. மத்திய அரசில் மீனவர் நலன்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். 5. அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ஓகிப் புயலில் மறைந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். 6. டிசம்பர் 31 (2017) ஐ எல்லையாக வைத்து அதுவரை திரும்பாத மீனவர்கள் அனைவரையும் இறந்தவர்களாகக் கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கும் வகையில் உடனடியாக அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 7. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குத் தகுந்த நிரந்தர அரசுப் பணி அளிக்க வேண்டும்.  8. மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு அரசுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். இவை தவிர மிகவும் பின்தங்கிய வாழ்க்கையை வாழ்பவர்களான இப்பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவசக் கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கபட வேண்டும்.

2.3 ஒரு மீனவக் குடும்பத்தின் கதை

அப்பகுதி மீனவ மக்களின் நிலையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக சின்னத்துறை கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ள ஆன்டனி என்பவரது குடும்பத்தின் கதையை ஜஸ்டின் ஆன்டனி சொன்னார். சென்ற அக்டோபர் 11 (2017) அன்று கேரளத்தில் காசர்கோடு அருகில் பேய்ப்பூர் எனும் பகுதியில் கடலில் ஆன்டனியின் குழு மீன் பிடித்துக் கொண்டிருந்தது. நடுக்கடலில் தமது விசைப்படகில் அக்குழுவினர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று மோதி அவர்களின் படகு மூழ்கியது. படகில் இருந்த ஆறு பேர்களில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். ஆன்டனி சடலமாக மீட்கப்பட்டார். மற்ற மூவரது உடலும் கிடைக்கவில்லை. அவர்களில் இருவர் கேரளத்தைச் சேர்ந்த கடலோடிகள். இன்னொருவர் ஆன்டனியின் மாமனார். மோதிய கப்பலைக் கண்டுபிடித்து இந்தக் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உட்படப் பலரிடமும் பலமுறை முறையிட்ட போதும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் இப்போது ஓகிப் புயலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மாயமாகியுள்ளனர். ஒருவர் ஆன்டனியின் மைத்துனர். மற்றவர் அவரது சகலை. இன்று அந்தக் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. ஒரே சொத்தான விசைப்படகும் அழிந்து விட்டது. இன்று இந்தக் கிராமங்களில் ஆண்களே இல்லாத குடும்பங்கள் ஏராளமாக உள்ளன.

2.4 ஏழாண்டுகள் முன் வீசிய புயலின் நிவாரணமே இன்னும் கிடைக்கவில்லை

மார்த்தாண்டத் துறையில் சுனில் (48) த/பெ லூபர் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 4 அன்று இதேபோல வீசிய Phyan என்னும் புயல் பற்றிச் சொன்னார். தெற்கிலங்கையிலிருந்து குஜராத் வரை அது பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் அந்தப் புயலில் இறந்தனர். ஒருவர் உடல் மட்டும் கிடைத்தது. ஏழு பேர் மாயமாயினர். இன்னும் திரும்பி வராத ஏழு பேர்களில் ஒருவர் சுனிலின் அண்ணன். வழக்கம்போல ஆட்களின் இழப்பு ஒரு பக்கம் என்றால் வலைகளும் ஏராளமான படகுகளும் அழிந்தன. அவர்களின் 4 இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ள வலையும் அழிந்ததாம். இறந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் இதுவரை இல்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் திரும்பி வராதவங்களை இறந்ததாகக் கருதி அதற்குப் பின் இழப்பீடு தருவதாக இதுவரை சொல்லி வந்துள்ளனர். இப்போது ஏழு ஆண்டுகள் முடிந்தும் எந்த இழப்பீடுகளும் வழங்கவில்லை என்றார் அவர்.

2.5 உயிர்கள் மட்டுமல்ல மூலதனங்களும் அழிந்துள்ளன

அடுத்து நாங்கள் சந்தித்தது தூத்தூர் ஆலயப் பங்குத் தந்தை பெபின்சன். ஓகிப் புயலில் அழிந்துபோன வள்ளங்கள் குறித்து அன்றைய தேதி வரை கிடைத்துள்ள விவரங்களைத் தந்தார்.

உயிரிழப்புகள் தவிர பெரிய அளவில் அவர்களது மூலதனங்கள், படகுகள், வலைகள், தூண்டில் முதலான கருவிகள் எல்லாம் அழிந்துள்ளன. பல வீடுகள் இன்று ஆண்கள் இல்லாத வீடுகள் ஆகிவிட்டன. உயிர் பிழைத்து வந்தவர்களும் இந்த மூலதனங்களை இழந்துதான் வந்துள்ளனர். விசைப் படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்பவர்கள் நீண்ட நாடகள் தங்கிப் பிடிப்பதற்கு ஏற்ப சுமார் எட்டு இலட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள தேவையான பொருள்களைக் கொண்டு செல்கின்றனர். அவையும் அழிந்துள்ளன. கடந்த 15 நாட்களாக அவர்கள் மீண்டும் கடலில் இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அன்று கடலில் அழிந்த படகுகளில் சிலவற்றில் படகின் உரிமையாளர்களும் சென்றுள்ளனர். சிலவற்றில் உரிமையாளர்கள் செல்லவில்லை. ஆனால் அவர்கள் படகுகள் அழிந்துள்ளன. அந்த உரிமையாளர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தப்பிப் பிழைத்துத் திரும்பிக் கரை வந்தடைந்த படகுகளும் பலவாறு சேதம் அடைந்துள்ளன. எல்லாம் பழுதுபார்க்கப்பட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் மணக்குடி, தென் தாமரைக்குளம், வடக்கு தாமரைக்குளம் புதுக்கிராமம் ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 1000 ஹெக்டேர் பரப்பில் உப்பளங்கள் உண்டு எனவும் அவற்றில் ஆண்டுதோறும் 1000 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் இயற்கை விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால்மோகன் கூறுகிறார். இவ்வாறு சேமிக்கப்பட்டிருந்த உப்பு புயல் வெள்ளத்தில் கரைந்தோடியுள்ளது. இப்படியான பல்வேறு இழப்புகளும் உரிய வகையில் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம்.

2.6 சேமிப்பதில் ஈடுபாடு காட்டாத மீனவர் சமூகம்

மீனவர்கள் தாம் சம்பாதிப்பதை சேர்த்து வைப்பது, சேமிப்பது முதலான வழக்கங்கள் இல்லாதவர்கள் என்பது அவர்களைப் பற்றி எழுதும் எல்லோரும் பதிவு செய்கிற ஒன்று இவர்கள் சம்பாதிக்கும் காசை உடனடியாகச் செலவு செய்பவர்கள் என்பது. சம்பாதிப்பதை சொத்துக்களிலோ, தொழில்கள் மற்றும் வணிகத்திலோ முதலீடு செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் கிடையாது என்றார் இப்பகுதியைச் சேர்ந்தவரும். குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் பங்குபெற்றுச் சிறை சென்றவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் தற்போது வளைகுடா நாடுகளுக்குச் சென்று வரும் சிலரும் கூட சம்பாதித்து வரும் காசை வீடுகள் கட்டுவது தவிர வேறு எதிலும் முதலீடு செய்து சம்பாதிக்கும் எண்ணமோ பயிற்சியோ இல்லாதவர்கள் என்றார் அவர். இதோ எட்டிப்பார்த்தால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளத்தை அள்ளித் தரும் கடலன்னை இருக்க நாளை குறித்த அச்சம் ஏன் என வாழ்பவர்கள் அவர்கள்.

இம்மக்களுக்கு எல்லாமும் இவர்கள் நம்பும் கிறிஸ்தவமும் பாதிரிமார்களும்தான். இன்று இந்தப் பேரழிவின் பாதிப்பை நாம் அறிய வேண்டி இம்மக்களிடம் சென்றால் அவர்கள் தங்களின் இழப்புகள், காணாமற்போன உறவுகள் குறித்து கண்ணீர் மல்க அழத்தான் செய்வார்களே ஒழிய அதற்கு மேல் நாம் ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பாதிரிமார்களைத்தான் அணுக வேண்டும். எங்கள் பயணத்தில் நாங்கள் சந்தித்த மூன்று பாதிரிமார்களும் விரிவாகப் பிரச்சினைகளை விளக்கினர். ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த விவரங்களை மிகத் துல்லியமாகவும், உண்மைத் தன்மையுடனும் மிகைப் படுத்தாமலும் கூறினர்.

பாதிரிமார்கள் இங்கு வெறும் மதக் கடமைகளை நிறைவேற்றுபவர்களாக மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் அம் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் பொறுப்பாளர்களாகவும் உள்ளனர். தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அளவிற்கு கிறிஸ்தவர்கள் ஒரு அரசியல் சக்தியாகப் பரிணமிக்க இயலாமற் போனமைக்கு இதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக வேர்கொண்டுள்ள சாதி வேறுபாடுகளுமே காரணம். குமரி மீனவர்களின் இன்றைய இந்த இக்கட்டான சூழலில் பாதிரிமார்களின் பங்கை வைத்து இங்கு அச் சமூகத்திற்கு எதிராக ஒரு அரசியல் மேற்கொள்ளப்படுகிற நிலையில் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

2.7 மீனவர்களோடு கடலில் செல்லும் வட இந்தியத் தொழிலாளிகள்

மீனவர்களோடு சேர்ந்து இம்முறை வடமாநிலத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் “இந்திக்கார்களும்” எட்டு பேர்கள் இறந்துள்ளனர். கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு விசைப்படகிலும் செல்கிற மொத்த ஊழியர்கள் சுமார் 12 பேர் என்றால் அதில் இரண்டு முதல் நாலு பேர்கள் இந்திக்காரர்கள் என்றார் கடியாபட்டினத்தைச் சேர்ந்த மீனவரும் “கடல் நீர் நடுவே” என்கிற மீனவர் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட புதினம் ஒன்றை எழுதியுள்ளவருமான கடிகை அருள்ராஜ். அவரும் ஓகிப் புயலில் தப்பி உயிர் பிழைத்துக் கொல்லத்தில் கரை ஏறியவர். அன்று தன்னுடைய படகில் 12 பேர் இருந்ததாகவும் அதில் நால்வர் இந்திக்காரர்கள் என்றும் அவர் கூறினார். இந்த வடமாநிலத் தொழிலாளிகளுக்கு பிற மீனவர்களைப் போலவே சமமாக ஊதியம் தரப்படும் என்றார். அவர்களும் இவர்களோடு சேர்ந்து எல்லா வேலைகளும் செய்வர். எனினும் அவர்கள் நிரந்தரமாக ஒரே படகில் வேலை செய்வதில்லை. கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தேவையான அளவிற்கு அவ்வப்போது ஒவ்வொரு பயணத்திலும் அழைத்துச் செல்வோம் என்றார் அருள் ராஜ். அவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை எல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் யாரிடமும் அவர்கள் நிரந்தரமாக வேலை செய்யாததால் அவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. ஆனால் தூத்தூர் வட்டத்தில் உள்ள அந்த எட்டு மீனவக் கிராமங்களிலும் உள்ள மொத்த வள்ளங்களைக் கணக்கிட்டால், ஒரு வள்ளத்திற்கு சராசரியாக இரண்டு அல்லது மூன்று என வைத்து ஒருவாறாக மொத்தம் எவ்வளவு பேர் இருந்திருக்கலாம் எனக் கணக்கிடலாம் என்றார். தற்போது அவர்கள் எல்லோரும் பயந்து கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டதால் போதிய ஆள் கிடைக்காததும் புயலுக்குப் பின் இன்று தொழில் முடங்கிக் கிடப்பதற்கு ஒரு காரணம் என்றார். கடிகை அருள்ராஜ் சொல்வதைப் பார்க்கும்போது மொத்தம் கடலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு இந்த வடமாநிலத் தொழிலாளிகள் என ஊகிக்க முடிகிறது. ஆக அவர்களின் இழப்பும் கணிசமானதுதான்.

 

3.ஓகிப் புயலில் சீரழிந்த விவசாயம்

அடுத்த நாள் (டிச 15) விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாகக் கடை அடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க முன் கை எடுத்து அறிவித்திருந்த இந்தக் கடை எடுப்பில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்குபெற்றிருந்தனர். தி.மு.கவும் இந்தக் கடை அடைப்பிற்கு ஆதரவு அளித்திருந்தது. புயல் அழிவில் மீனவர்கள் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது எனவும் விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் இங்கு அரசியல் பிரச்சாரம், ஆங்காங்கு எதிர்ப்புகள், மறியல்கள் முதலியவற்றைச் செய்து கொண்டிருந்த பா.ஜ.க மற்றும் ஆதரவு அமைப்புகள் அதன் உச்ச கட்டமாக இந்தக் கடை அடைப்பை நடத்தின. விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டுப் பிற கட்சிகலும் ஆதரவளித்தன.

முந்தின நாள் மீனவர் பகுதிகளைப் பார்வையிட்ட நாங்கள் அது முடிந்தவுடன் பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ் அவர்களைச் சந்தித்து விரிவாக உரையாடிவிட்டு இரவு 9.30 மணி வாக்கில் புறப்பட்டபோது, ‘பார்த்துப் போங்கள். பஸ்களின் கண்ணாடிகளை எல்லாம் கல் வீசி உடைகிறார்கள் எனச் செய்தி வருகிறது” என எச்சரித்து அனுப்பினார். நாங்கள் வரும் வழியில் அவ்வாறு சில அரசு பேருந்துகளும், ஒரு தனியார் பள்ளிப் பேருந்தும் கண்ணாடி உடைக்கப்பட்டு நின்று கொண்டிருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

என்வே அடுத்த நாள் காலை நாங்கள் சற்று நேரம் காத்திருந்து, பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என உறுதி செய்து கொண்ட பின்னரே பகல் சுமார் சுமார் 11.30 மணி வாக்கில் புறப்பட்டோம். தோவாளைத் தாலுகாவில் உள்ள கிராமங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அப்படியே கீரிப்பாறை அருகில் உள்ள காணி பழங்குடியினர் குடியிருப்புகளுக்கும் செல்வது எங்கள் திட்டம். கிராமப் புறங்களில் சில கடைகள் சாத்தப்பட்டும், சில கடைகள் திறந்தும் இருந்தன. நாங்கள் திட்டவிளை – நெடுமங்காடு (கேரளம்) சாலையில் உள்ள தெரிசனகோப்பு, சிறமடம், உவார்ட்ஸ்புரம், தோமையாபுரம், அழகியபாண்டிபுரம், தடிக்காரக் கோணம், கீரிப்பாறை முதலான ஊர்களுக்குள் சென்று வாழை, ரப்பர் தோட்டங்கள், தேக்கு மரங்கள், தென்னை முதலான தோப்புகளும் விவசாயங்களும் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டோம். அதே போல நெல், மரச்சீனிச் சாகுபடி ஆகியனவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.

பெரிய அளவில் வாழைத் தோப்புகள். ஓடிந்து விழுந்து இந்த இடைப்பட்ட இரு வாரங்களில் காய்ந்து கிடந்தன. எல்லாம் கிட்டத் தட்ட குலை தள்ளும் பருவம். அதே போல ரப்பர் மரங்களும் சாய்ந்து கிடந்தன. அவற்றில் பலவும் பாலூறும் பருவம். அவற்றை அப்புறப்படுத்தும் வேலையும் ஆங்காங்கு நடந்து கொண்டிருந்தன. மீண்டும் அங்கு செடிகளை நட்டு வளர்த்தால் பலன் கிடைக்கத் தொடங்குவதற்கு இன்னும் சுமார் எட்டாண்டு காலம் காத்திருக்க வேண்டும். அந்த வகையில் எட்டாண்டு கால உழைப்பு அங்கு வீணாகி இருந்தது.

நிறைய தேக்கு மரங்கள் மட்டுமின்றி காட்டு மரங்களும் விழுந்து சாலையை அடைத்துக் கிடந்து பின் அவை வெட்டப்பட்டு மறுபடியும் சாலைப் போக்குவரத்துகள் நடந்து கொண்டிருந்தன. மரச்சீனித் தோட்டங்களும் பாழ்ப்பட்டிருந்ததை அறிந்தோம்.

எங்களுடன் குழுவில் பங்குபெற்று வந்திருந்த தோழர் சந்திரமோகன் (த/பெ சி.பி.இளங்கோ) அவர்களும் ஏ.ரெவி அவர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்திரமோகன் ‘சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை’ எனும் இயக்கத்தின் அமைப்பளர். ரெவி ‘விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்’ செயலாளர். இவர்கள் அப்பகுதிக் காணி பழங்குடியினர் மத்தியிலும் அவர்களின் உரிமைகளுக்காகச் செயல்படுவோர்.

3.1 குத்தகை விவசாயிகளுக்கும் இழப்பீடு தர வேண்டும்

“மீனவர்களின் இழப்பையும், விவசாயிகளின் இழப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு வகையானவை. இங்கே ஒவ்வொரு பயிரையும் வேறுபடுத்தி மதிப்பிட்டு இழப்புகளுக்கு முழு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்த விவசாயிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் குத்தகை விவசாயிகள். அவர்களே மூலதனம் இட்டு உழைத்துப் பயிராக்கி உள்ளனர். எனவே இழப்பில் அவர்களின் பங்கு அதிகம். அதற்குரிய வகையில் அளிக்கப்படும் இழப்பீடு அவர்களுக்கு உரிய அளவில் போய்ச் சேர வேண்டும். அளிக்கப்படும் இழப்பீடு முழுவதும் ஜமீனுக்குப் போய்விடக் கூடாது. வரி கட்டிய ரசீது முதலியன ஜமீன்களிடமே இருக்கும் என்பதால் முழு இழப்பையும் அவர்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேபோல கோவில் நிலங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்திற்குக் கூட இங்கு நிலம் உள்ளது. ரப்பர் எஸ்டேட்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இழப்புகள் பெருந் தனக்காரர்களுடையது. ரப்பர் வாரியமும் அவர்களுக்கு இழப்பீடு தரும் வாய்ப்புள்ளது. ஆனால் நெல், வாழை, மரச்சீனிப் பயிர்கள் ஏழை விவசாயிகளுடையது. இயற்கை அழிவுகளும் கூட எல்லோரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. ஜமீன்கள், குத்தகைதாரர்களுக்கு அப்பால் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளும் உள்ளனர். அவர்களுக்கு மழை வெள்ளத்தின் விளைவாக இப்போது வேலையும் இல்லை. கூலியும் இல்லை. இவர்களது இழப்புகளை அரசு எவ்வாறு ஈடு செய்யப் போகிறது? புயல் 30 ந்தேதி அடிச்சது. இரண்டு வாரம் ஆகியும் பழங்குடிப் பகுதிகளுக்கு மின்சாரம் போகவில்லை. நெல்லை மாவட்ட வெல்ஃபேர் ட்ரஸ்டிலிருந்து உடனடித் தேவைகளுக்காக ‘நிவாரண பாக்கெட்’கள் கொடுத்தார்கள். ஆனால் ‘கரன்ட்’ இல்லாமல் இப்போது அவர்களால் செல்போன்களைக் கூட சார்ஜ் செய்ய முடியாமல் கிடக்கிறார்கள். இதுமாதிரி மோசமான அரசாங்கத்தைப் பார்த்ததே இல்லை. விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நிவாரண வேலைக்குப் பக்கத்து மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உட்பட சிலர் இறந்துள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்றார் சந்திரமோகன்.

3.2 ஒவ்வொரு பயிருக்கும் எவ்வளவு இழப்பீடுகள்

அன்று மாலை தக்கலையில் குமரி மாவட்டப் பாசனத் துறைத் தலைவர் வின்சென்ட் ஆன்டோ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாகப் பேசினோம். முதல் நாள் விவாசாயிகள் சார்பாக நடந்த கடை அடைப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் அவர். மிகவும் விரிவாக ஓகிப் புயலினால் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும், ஒவ்வொரு வகைப் பயிருக்கும் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் பட்டியலிட்டார். அது:

“மரங்களுக்கான இழப்பீடுகளைப் பொறுத்த மட்டில் 2013ல் நால்வழி நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக இம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப் பட்டபோது வெட்டப்பட்ட மரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை (National Highways Authority of India- NHAI) விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு தந்ததோ அதே அளவு இழப்பீடு இந்தப் புயல் அழிவுக்கும் தர வேண்டும் என்கிறோம். இப்போது 8000 ஏக்கரில் இருந்த 20 இலட்சம் ரப்பர் மரங்கள் அழிந்துள்ளன. இதில் 4 இலட்சம் மரங்கள் ரப்பர் போர்டு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமானவை. NHAI தந்ததுபோல மரத்திற்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூ வரை ஒவ்வொரு மரத்துக்கும் மதிப்பிட்டு அளிக்கணும். அரசு ஏக்கருக்கு 40,000 ரூ தான் தருவதாகச் சொல்லியுள்ளது. ஒரு ஏக்கரில் 250 மரம் இருக்கும். அதாவது ஒரு மரத்துக்கு 1600 ரூ தான் சொல்லி இருக்காங்க.அது போதாது.

தென்னை மரங்கள் 25,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. ஆனால் அரசு 22,000 மரங்கள்தான்னு சொல்றாங்க. ஒரு மரத்துக்கு ரூ 5,000 த்திலிருந்து 7,000 ரூ வரைக்கும் இழப்பீடு தரணும்.

வாழை மரங்கள் 12,000 ஏக்கர்ல 80 இலட்சம் மரங்கள் அழிஞ்சிருக்கு. குமரி மாவட்டத்தில் மட்டி, செவ்வாழை போன்ற உயர் ரக வாழைகள் பயிரிடுகிறோம். இது விளைஞ்சிருந்துதுன்னா ஒரு ஏக்கருக்கு 12 லட்சம் ரூ வரை கிடைத்திருக்கும். இப்ப நாங்க ஒரு ஏக்கருக்கு 4 லட்சம் ரூ மட்டும் கேட்குறோம். அரசு 48,000 ரூ விலிருந்து 63,000 ரூ வரைக்கும்னு அறிவிச்சிருக்காங்க.

நெல்லைப் பொருத்த மட்டில் 5,000 ஏக்கர் பயிர் அழிஞ்சிருக்கு. அரசு 3,000 ஏக்கர்னு மதிப்பிடுது. ஏக்கருக்கு 25,000 ரூ இழப்பீடு கேட்கிறோம். அரசு இன்னும் அறிவிக்கல.

மரச்சீனி கிழங்கு 3,000 ஏக்கர் பாழாகி இருக்கு.ஏகருக்கு 60,000 ரூ கேட்கிறோம். ஏன்னா குத்தகைதாரருக்கே விவசாயி 25,000 ரூ கொடுக்க வேண்டி இருக்கு.

கமுகு (பாக்கு) 25,000 மரம் அழிஞ்சுருக்கு. ஒரு மரத்துக்கு 1000 ரூ கேட்கிறோம்.

தேக்கு 25,000 த்திலிருந்து 30,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. தேக்கு, பலா, மா மற்றும் பழ மரங்கள் எல்லாவற்றிற்கும் NH 47 நால் வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது NHAI அளித்த (Award No:.5/2013, RoC No 14.3.2010, Dated 17.12.2013)) அதே தொகையைத் தர வேண்டும்.”

3.3 இறந்தவர்களுக்கு 20 இலட்சம் இழப்பீடு

தொடர்ந்து வின்ஸ் ஆன்டோ கூறியது:

“இது தவிர மின்சார கம்பங்களை ரிப்பேர் பண்ணும்போதும், மரம் வெட்டும்போதும் சிலர் இறந்துள்ளனர், வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்படி இதுவரை 9 பேர்கள் இறந்த தகவல் கிடைச்சிருக்கு. மொத்தம் 25 பேர் வரைக்கும் இப்படி இறந்திருக்கலாம்னு சொல்றாங்க. கேரளாவில் தந்துள்ளது போல ஒவ்வொரு இறப்பிற்கும் 20 இலட்சம் ரூ இழப்பீடு தரணும். எல்லாவிதமான விவசாய கடன்களும் விவசாய நகைக் கடன்களும் ரத்து செய்யப்படணும். சுமார் 300 முதல் 400 குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் உடைப்பெடுத்துள்ளன அவற்றைச் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூ ஒதுக்க வேண்டும்.

3.4 ஊர்களுக்குள் மழை வெள்ளம் வருவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு

பொதுவாகக் குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் ஊருக்குள் வருவது கிடையாது. இப்போது சுசீந்திரம் போன்ற இடங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டதுக்கு நால்வழிச் சாலைகள் அமைக்கப்பட்டதுதான் காரணம் களியக்காவிளை – கன்னியாகுமரி சாலையில் மட்டும் 267 இடங்களில் நால்வழிச்சாலையில் கால்வாய்கள் வருகின்றன. அவற்றை உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வழிவதற்கு வழி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் சிறிய குழாய்கள் அமைத்து நீரை வடியவிட்டுள்ளதால் பெரு மழைகளில் வெள்ளம் வருகிறது. அவையும் சரி செய்யப்பட வேண்டும்”

என விரிவாக வின்ஸ் ஆன்டன் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் நிவாரணங்களையும் பட்டியலிட்டார்.

“3.5 அரசின் முழுத் தோல்வி” : சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ்

முதல் நாள் நாங்கள் மீனவர் கிராமங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ. தங்கராஜ் அவர்களை கருங்கல் கிராமத்தில் இருந்த அவரது வீட்டில் சந்தித்து நிவாரணப் பணிகள் குறித்து விரிவாகப் பேசினோம். அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்.

“புயல் எச்சரிக்கை அறிவிப்பு என்பதிலும், உடனடியாகக் கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் அரசு முழுத் தோல்வி அடைந்துள்ளது. மீட்பு முயற்சிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் செய்வதிலும் தோல்விதான். ஒரு பேரிடர் ஏற்படும்போது அதை எதிர் கொள்வது, பாதிப்புகள் பெரிதாக இல்லாமல் தணிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது ஆகியவற்றில் தமிழ்நாட்டில் எந்தத் தயாரிப்பும் இல்லை.என் தொகுதியில் மட்டும் 1000 வீடுகள் புயலில் வீழ்ந்துள்ளன. மொத்தம் மாவட்டத்தில் 5000 வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்துள்ளன. நிவாரணப் பணிகள், இழப்பீடு நிர்ணயிப்பது என்பவற்றில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. நிர்வாகம் சில உறுதியான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும். அதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டிலுள்ள மரம் முறிந்து அடுத்தவர் வீட்டின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தை வெட்டி அகற்றுவது யார் பொறுப்பு? ஒரு மரத்தை வெட்டி அகற்றுவதற்கு இப்போது ஆயிரக் கணக்கில் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. அதேபோல விவசாய பாதிப்பிலும் எல்லாவற்றையும் எவ்வளவு ஏக்கர் பாதிப்பு என்கிற ரீதியில் மட்டும் இழப்பீட்டைக் கணக்கிட முடியாது. ஒரு சில பாதிப்புகளில் அப்போதுதாதான் நடப்பட்ட மரங்களாக இருக்கலாம். இன்னொரு இடத்தில் வளர்ந்து பயன் தரத் தொடங்கிய மரமாக இருக்கலாம். இரண்டுக்கும் எண்ணிக்கை அல்லது ஏக்கர் கணக்கின் அடிப்படையில் ஒரே மதிப்பீட்டைச் செய்ய முடியுமா? அதேபோலத்தான் வீடுகளின் சேதங்களையும் தகுந்தாற்போல மதிப்பிட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் திறமையாகச் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் சென்ற 8 ம்தேதி நாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைக் கூட நடத்த வேண்டியதாகி விட்டது. மிகப் பெரிய பேரழிவை இந்த மாவட்டம் சந்தித்துள்ளது தேசியப் பேரிடராக இதை அறிவிக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால் பார்வையிட வந்த மத்திய பாதகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதெல்லாம் அறிவிக்க முடியாது என கறாராகச் சொல்லி விட்டுப் போகிறார். மொத்தத்தில் குமரி மாவட்ட விவசாயிகள், மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அரசு தன் கடமையை நிறைவேற்றத் தவறும்போது மக்கள்: போராடுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை. போராட்டம் நடத்தும்போது அதில் வந்து குழப்பம் விளைவிப்பது என்பதையெல்லாம் ஏற்க முடியாது.”

 

  1. காணி பழங்குடியினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

 

குமரி மாவட்டத்தில் மலைகளிலும் அடிவாரங்களிலும் காணி பழங்குடியினரின் குடியிருப்புகள் (settlements) 48 உள்ளன. இவற்றில் சுமார் 4,000 குடும்பங்கள் உள்ளன. பொன்மனைப்பட்டி பஞ்சாயத்தில் வில்லுசாரி, ப்ராவிளை, கீரப்பாறை, வெங்காலமேடு, காயல்கரை, கருவாவெட்டி, அம்புடும் சுனை முதலிய குடியிருப்புகள் உள்ளன; பேச்சிப்பாறை பஞ்சாயத்தில் வலியமலை, ஆலம்பாறை, படுபாறை, சிரங்குன்று, சோரப்புளி, ஆண்டிப்பொத்தை, தோணிகுழி, இஞ்சிலாமடக்கு, எட்டங்குன்று, வளையந்தூக்கி, கோட்டாமலை, மாறாமலை, சட்டாங்குப்பாறை, பச்சைமலை, நலம்பொத்தை, கணப்பாறை, தின்னமோடு, விளாமலை, மாங்காமலை, கொடுத்துறை, மணலிக்காடு, முடவன் பொத்தைமுதலிய குடியிருப்புகள் உள்ளன; தடிக்காரக்கோணம் பஞ்சாயத்தில் வெள்ளாம்பி எனும் குடியிருப்பும், சுருளோடு பஞ்சாயத்தில் கூவைக்காடும் உள்ளன. கீரிப்பாறை, பேச்சிப்பாறை, பட்டுகாணி, ஆறுகாணி, புலி இறங்கி, அகத்தியர் மலை, பெருஞ்சாணி ஆகிய குடியிருப்புகளும் உள்ளன.

மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இவர்களில் சிலருக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் ரப்பர், கமுகு, புளி, பலா, தென்னை போன்ற மரங்கள் சொந்தமாக உண்டு, மரங்கள் என்றால் எஸ்டேட்கள் அல்ல. மிகச் சில அளவில் இருக்கும். இவற்றுக்கு இடையே ஊடு பயிராக நல்ல மிளகுச் சாகுபடியும் சிறிய அளவில் இருக்கும். அடிவாரக் கிராமமான வெள்ளாம்பிக்கு நாங்கள் சென்றபோது அங்கு நாங்கள் சந்தித்த சாஸ்தா என்பவரின் மகன் கிருஷ்ணன் தான் ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டிருந்ததாகவும் அது முழுவதும் இப்போது அழிந்து விட்டது எனவும் சொன்னார். குலை தள்ளிய வாழை மரங்கள் விழுந்து கிடக்கும் படத்தையும் காட்டினார். ஏதேனும் நிவாரணம் கிடைத்துள்ளதா எனக் கேட்டபோது ஒன்றும் இல்லை என அங்குள்ள மக்கள் கூறினர்.

அக்குடியிருப்பின் தலைவரும், முன்னாள் கவுன்சிலரும், ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியுமான ராமன் காணி தங்களின் முதல் பிரச்சினை புயலில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுதான் என்றார். பாதைகளின் குறுக்கில் எல்லாம் நீண்ட மரங்கள் விழுந்து கிடந்தன. வனத்துறை அனுமதி இல்லாமல் அவர்கள் வெட்டிப் பாதையைச் சீரமைக்க முடியாது, அனுமதி இல்லாமல் வெட்டினாலோ கொண்டு சென்றாலோ அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். வனத்துறையினரும் வந்து அவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அதே நேரத்தில் நாங்கள் வந்த பாலமர் சாலையில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்கு வரத்து உடனடியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. இயற்கைப் பேரிடர் பாதிப்புகளும் கூட எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. பதினைந்து நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் மின்சாரம் வந்தது என்றார் இராமன் காணி. இதுவரை அரசு அறிவித்த 5,000 ரூ மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று லிட்டர் மண் எண்ணை ரேஷனும் கொடுக்கப்பட்டதாம், மற்றபடி சேவா பாரதி அமைப்பினர் வந்து ஒரு பாய், போர்வை, சர்க்கரை, பருப்பு முதலியவற்றைத் தந்து சென்றனராம்.

இந்தப் புயலை ஒட்டி அவர்கள் சந்தித்துள்ள கூடுதல் பாதிப்புகள் மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அவர்களது நிரந்தரமான பிரச்சினைகள் ஏராளம். தற்போது சூழலியல் பாதுகாப்பு என்கிற பெயரில் வனப்பகுதிகளை மூன்று கி.மீ அளவு விரிவாக்கத் திட்டம் ஒன்று உள்ளது, அது நடைமுறைப் படுத்தப்பட்டால் அடிவாரங்களில் வசிப்பவர்களின் நில உரிமைகள் பறிபோகும். நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்தில் அவர்கள் அந்தக் கவலையையும் வெளிப்படுத்தினர். ஓரளவு படித்துள்ளவர்களுக்கு வேலையும் இல்லை என்றனர். புயலை முன்னிட்டு கூலி வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லாமல் உள்ளது. பழங்குடி மக்கள் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறை உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமாரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது அம்மக்கள் பயிர்கள் அழிந்ததோடு வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில் உள்ளனர் எனவும், தங்களுக்குக் குடும்பம் ஒன்றிற்கு பால் கறக்கக்கூடிய ஒரு கறவை மாடு கொடுத்தால் உடனடியாகப் பயனுடையதாக இருக்கும் என்கிற கருத்தை அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

இழப்பீடு தொடர்பாக அவர்களது தற்போதைய கோரிக்கை என்ன எனக் கேட்டபோது எங்களுடன் வந்த விவசாயிகள் சங்கச் செயலாளர் ரெவி, “ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10,000 என இரண்டு மாதத்திற்குத் தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளதாகச் சொன்னார்..

 

  1. மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தபோது

மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் அவர்களை நாங்கள் நீரோடி மீனவர் கிராமத்தில் சந்தித்தோம். உறவினர்களைக் காணாமல் தவிக்கும் மக்கள் அவரிடம் மனு கொடுத்துவிட்டுச் சென்றபின் நாங்கள் அவரிடம் சில நிமிடங்கள் பேசியபோது. “ஏன் உரிய காலத்தில் புயல் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை?” எனக் கேட்ட போது சரியான நேரத்தில் கொடுத்துள்ளோமே என்றார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று மட்டுமே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் 29 ந்தேதிதான் கொடுக்கப்பட்டது எனவும் புயல் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான் புயல் பற்றிய அறிவிப்பையே தாங்கள் கேட்க முடிந்ததாகவும் மக்கள் சொல்கிறார்களே என்றபோது அந்த அளவிற்குத்தான் சொல்ல முடியும் என்றார் அவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி துரிதமாக நடக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுவதைச் சொன்னபோது, “அது இங்கே ஒரு பிரச்சினையே (issue) இல்லை. கேரளாவில்தான் அது ஒரு பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று பதிலளித்தார். கேரளத்தில் உள்ள அளவிற்கு நிவாரணம், தேடுதல் முதலான பணிகள் இங்கு செய்யப்படவில்லை என்பதுதான் பொதுக் குற்றச்சாட்டாக இருக்கும்போது ஆட்சியர் அங்குதான் இந்தப் பிரச்சினை உள்ளது எனச் சொன்னது வியப்பை அளித்தது. கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் முன்னூறுக்கும் மேற்பட்டோரின் கதி தெரியவில்லை. ஏழு வருடங்கள் வரை திரும்பி வராமல் இருந்தால்தான் அவர்களை இறந்தவர்களாகக் கருதி இழப்பீடு தர முடியும் என்கிற விதி தளர்த்தப்படுமா? எனக் கேட்டபோது உறுதியாக அதைத் தளர்த்தி இழப்பீடு தருவதுதான் அரசு முடிவாக உள்ளது என்றார்.

 

  1. இந்த இக்கட்டின் ஊடாகவும் அங்கு வெளிப்படும் அச்சத்துக்குரிய மதவாதம் 

கன்னியாகுமரி மாவட்டம் மதவாத சக்திகளின் சோதனைச் சாலையாக உள்ள ஒன்று என்பது உலகறிந்த விடயம். தமிழகத்தின் மிகப்பெரிய சமீப கால மதக் கலவரம் அரங்கேறிய மண்டைக்காடு இங்குதான் உள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகமான அளவு சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டமும் இதுதான். அதேபோல பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் வலுவாக உள்ளதும் இங்குதான். பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெரும்பான்மை மதங்களில் ஒன்றாக உள்ள கிறிஸ்தவம் இங்கு கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும் உள்ளது.

மதம் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான கேடாக விளங்கும் சாதியப் பிளவுகளும் எங்கும்போல இங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிகளுக்குள் மதங்களும் செயல்பட்டுப் பிளவுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக இங்கு முக்கிய சாதிகளில் ஒன்றாக உள்ள நாடார்களுள் கிறிஸ்தவ நாடார்கள், இந்து நாடார்கள் எனப் பிளவுகள் உண்டு. அதேபோல மதங்களுக்குள் சாதிப் பிரிவினைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக கிறிஸ்தவ மதத்திற்குள் நாடார்கள், மீனவர்கள் என்கிற வேறுபாடும் உண்டு. வழிபாட்டு நிலையிலேயே அந்தப் பிரிவுகள் உண்டு என்பதைக் கவிஞர் என்.டி.ராஜகுமார் நினைவூட்டினார். கடலோர மீனவர்கள் மத்தியில் சவேரியார் வழிபாடும், கரைகளில் வசிக்கும் நாடார்கள் மத்தியில் அந்தோணியார் வழிபாடும் முக்கியமாக உள்ளன என்றார் ராஜ்குமார். மீனவர்கள் முழுக்க முழுக்க கடல் சார்ந்து வாழ்பவர்கள், நாடார்கள் வணிகம், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மீனவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சமூகப் பிரச்சினைகளிலும் கூட முழுக்க முழுக்க கிறிஸ்தவ நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்துள்ளனர் என்பதை முன்பே குறிப்பிட்டோம். இப்படி மத நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்திருப்பது அவர்களுக்கு பலமாக இருப்பது போலவே அவர்களது பலவீனமாகவும் அதுவே அமைந்து விடுகிறது. நெருக்கடி நேரங்களில் மிக எளிதாக அரசு பாதிரியார்களின் ஊடாக அந்தச் சமூகத்தையே கையாண்டுவிட முடிகிறது. கூடங்குளம் போராட்டத்திலும் இதை நாம் கண்டோம். அணு உலைகளுக்கு எதிரான மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கிறிஸ்தவ நிறுவனகளின் மீதான தாக்குதலைத் தொடுத்ததையும், இடிந்த கரை மாதா கோவிலிலிருந்து போராட்டக்காரர்களை அகற்ற இந்த அழுத்தம் பயன்படுத்தப்பட்டதையும் அறிவோம்.

6.1 இக்கட்டான நேரத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத சக்திகள்

இப்படியான சூழலைப் பயன்படுத்தி இந்த நெருக்கடி நேரத்திலும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதில் மதவாத சக்திகள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.

புயல் அறிவிப்பில் அரசு முற்றிலும் தோல்வியுற்றதோடு மட்டுமின்றி, புயலுக்குப் பின் கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து காப்பாற்றுவதிலும் படு தோல்வி அடைந்த நிலையில் மீனவர்கள் உடனடி மனிதாபிமான நிவாரணங்களுக்காகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கப்பற் படை மூலமாகக் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்ற வேண்டியும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியதாயிற்று. ஒப்பீட்டளவில் கேரள அரசு விரைவாக நிவாரணம் அளிப்பதிலும் தேடுதல் பணிகளிலும் முன்னணியில் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். அதோடு இறந்த மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு எனக் கேரள அரசுதான் முதலில் அறிவித்தது. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து சென்ற டிசம்பர் 8 ந் தேதி அன்று பாதிரியார்களும் மீனவர்களும் சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடைப் பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதி வழியாக செல்லவேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடுத்த தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை ஒட்டி 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது (மாலை மலர், டிச 08, 2017).

இது குறித்து பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கன்னியாகுமரியில் குறிப்பிட்ட மதத் தலைவர்கள் மீனவர் போராட்டம் என்கிற பெயரில் ஊர்வலம் நடத்துகின்றனர். இது போராட்டமல்ல, மதப் போர். சாதி மோதல் வந்தால்தான் மதமாற்றம் செய்யமுடியும் என்பதாகவே செயல்படுகின்றனர்” எனக் கூறியது பத்திரிகைகளைல் வந்தது (புன்னகை.காம், 12.12.2017). அர்ஜுன் சம்பத், “நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது.மத்திய மானில அமைச்சர்கள் குமரி மீனவர்களின் பிரதிநிதியாக கிறிஸ்தவ ஆயர்களைக் கருதுகின்றனர். விவசாயிகள் மற்றும் பிற சமூகப் பிரதிநிதிகளை மக்களாக அரசு கருதவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூ தர வேண்டும் என ஆயர் கேட்டதை அரசு தருகிறது. கரையோர மக்களுக்கு ரூ 500, மீனவர்களுக்கு 5000 ரூ வழங்குகிறார்கள். வீடு கால்நடை, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் இல்லை. மண்டைக்காடு கலவரத்தின் போது 13 இந்துக்களைக் காணவில்லை. இதுவரை அவர்களுக்கு நிவாரணமோ, குடும்பத்துக்கு வேலை வாய்ப்போ வழங்கவில்லை”. எனப் பேசியுள்ளார் (தினமணி, டிச 14, 2017).

shreetv.tv என்னும் இணைய தளத்தில் ‘மீனவர் போராட்டம்- பின்னணியும் சதியும்’ என்கிற தலைப்பில் பாதிரிமார்கள் மீதும், கிறிஸ்தவ மதம் மீதும் ஓகி புயல் அழிவுகளை முன்வைத்துக் கடும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.  “இது மீனவர் போராட்டம் இல்லை.. இது முழுக்க முழுக்க மத அரசியலை முன் வைத்து நடத்தும் போராட்டம். மீனவர்களைப் பிணையாக வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் நடத்தும் போராட்டம்” என்றெல்லாம் கடுமையாக சின்னத்துறை மற்றும் பூந்துறையைச் சேர்ந்த பாதிரியார்கள் இருவரது பெயர்களைக் குறிப்பிட்டு அவதூறு பேசப்படுகிறது. Vedic Science Research எனும் இணைய தளத்தில் டிசம்பர் 15 2017 அன்று. “குமரி மீனவர் போராட்டம் – உண்மை நிலை- தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி” எனும் தலைப்பில் இதேபோல கிறிஸ்தவ மிஷனரிகள் மீது குற்றம்சாட்டி ஒர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் இன்று வரலாறு காணாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது. இதில் மீனவர்களைப் போலவே விவசாயிகளும் மிகப் பெரிய அளவு பொருளிழப்பைச் சந்தித்துள்ளனர். விவசாயிகளுக்கான பொருள் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டு முழு இழப்பையும் ஈடு செய்யவேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது. மீனவர்களோ விவசாயிகளோ யார் இறந்திருந்தாலும் ஒரே அளவு இழப்பு தரப்பட வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.

மீனவர்களைப் பொருத்த மட்டில் அவர்களுடைய உயிரிழப்பு மிக அதிகம். அது மாத்திரமல்ல இன்று வரை அம்மக்களில் பலர் கடலுக்குச் சென்ற தங்களின் உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பதே தெரியாமல் தவித்த தவிப்பும் அதன் பின்னுள்ள துயரமும் ஈடு செய்யவே முடியாத ஒன்று. இதில் அரசு மிகப்பெரிய பிழைகளைச் செய்துள்ளது அவர்களது கப்பற் படை, கடலோரப் பாதுகாப்புப் படை எல்லாம் கைவிட்ட நிலையில் எந்த நுண்மையான கருவிகளும் இல்லாமல் தாமே கடலில் இறங்கித் தம் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் தம் பிரச்சினைகளைப் பேசுவதற்கும் பாதிரிமார்களையே நம்பி இருக்க வேண்டுமா என்கிற விவாதம் அவர்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. பாதிரிமார்களும் அம் மக்களில் ஒருவர்தான். அவர்கள் மீனவர் பிரச்சினைகளைப் பேசவே கூடாது என எப்படிச் சொல்ல முடியும். மதத் தலைவர்கள் அச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியல் பேசுவது இந்து, முஸ்லிம் என எல்லா மதங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.

இக்கட்டான இந்த நேரத்தில் இப்படியான ஒரு பிளவை ஏற்படுத்துவதும், மீனவர் Xவிவசாயிகள்; இந்துக்கள் X கிறிஸ்தவர்கள் என்றும் சாதி அடிப்படையிலும் பகையைத் தூண்டுவதும் மிகவும் கவலைக்குரியதும் கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது.

நாங்கள் எங்கள் ஆய்வைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் (டிசம்பர் 13) அன்று தக்கலையில் தி.மு.க, காங்கிரஸ் முதலான எதிர்க் கட்சிகள் இணைந்து குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதிப்பிற்குள்ளான ஒரு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தக்கலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது எனக் கூறி அந்தப் போராட்டத்தினர் மீது தக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது, அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பாக புயல் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட  தொல்.திருமாவளவன் அவர்கள், திரு.பாலபிரஜாபதி அடிகளாருடன் சாமித்தோப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது கருப்புக் கொடி ஆர்பாட்டம் என்கிற பெயரில் ஒரு மதவாத அமைப்பினர் வன்முறை விளைவித்தது முதலான செய்திகளும் கவலை அளிக்கின்றன. திருமாவளவன் மீதான தாக்குதல் முயற்சியை ஒட்டி 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு இக்கட்டான சூழலைச் சமாளிக்க வேண்டிய நேரத்தில் இப்படியான வன்முறைகளும் பிளவு முயற்சிகளும் கவலை அளிக்க்கின்றன.

சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோ தங்கராஜ் அவர்களைச் சந்தித்தபோது அவரும் இப்படி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிளவு முயற்சிகளையும் அதனூடாக மீனவர்களையும் விவசாயிகளையும் எதிர் எதிராக நிறுத்தும் போக்கையும் கவலையோடு சுட்டிக்காட்டினார். தான் அப்போது இது தொடர்பான ஒரு கண்டன அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

  1. இதுவரை வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகள்

மீனவர்களுக்கு தொடக்கத்தில் 2,500 ரூ தரப்பட்டது.சென்ற 12 ம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி இங்கு வந்தபோது மேலும் 2,500 ரூ இழப்பீடு அறிவித்தார். இதுதவிர அவர்கள் தற்போது வேலைக்குப் போகாமல் இருப்பதைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலத்தில் அளிக்கப்படும் பஞ்சப்படியான 5,000 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் பஞ்சப்படி போக 5000 ரூ இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதால் பலர் அதை எடுக்கச் சிரமப்படுவதையும் அறிந்தோம். எடுத்துக்காட்டாக வங்கிக் கணக்கு ஆண்கள் பெயரில் இருக்கும்போது, அந்த ஆண்கள் இல்லாத குடும்பங்கள் அவசரத்திற்கு அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

விவாசாயிகளைப் பொருத்த மட்டில் இப்படி குறிப்பிட்ட தொகை என அறிவிக்கப்படவில்லை. இப்போதைக்கு, கோழிகள், ஆடுகளின் இழப்புக்கும் வீடுகளில் ஏற்பட்டுள்ள இடிபாடுகள் தொடர்பாகக் கொஞ்சம் பேருக்கும் இழப்பீடுகள் தரப்பட்டுள்ளது என்றும் அதிகபட்சமாக இது 5,000 ரூபாயைத் தாண்டாது எனவும் மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ குறிப்பிட்டார்.

இறந்தவர்களுக்கான இழப்பீடு முதலில் நான்கு இலட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுப் பின் அது கேரளாவை ஒட்டி 20 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இறந்து உடல் கிடைத்தவர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே. அவர்களுக்கு அந்த இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. தப்பி வந்தவர்கள் நேரடி சாட்சியத்தின் அடிப்படையில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆனால் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களுக்கும் இந்த இழப்பீட்டை அளிக்க விதிகளில் இடமில்லை. இன்னும் சுமார் 50 பேர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையிலும், மாயமாய்ப் போனவர்கள் என்கிற அடிப்படையிலும் இறப்பு உறுதியான பின்னும் அப்படி இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏழாண்டு காலம் காத்திருந்த பின்தான் அவர்களை இறந்தவர்களாக ஏற்றுக் கொண்டு அரசு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்பது விதி. அந்த விதி தளர்த்தப்படும் என்பதாக இப்போது தமிழக அரசு கூறியுள்ளது

மக்களைப் பொருத்தமட்டில் வரும் டிசம்பர் 31 க்குள் உயிருடன் இருப்பார்களாயின் அவர்கள் வந்து விடுவர். எனவே அதற்குப் பின் இப்படி வராத அனைவரது குடும்பத்திற்கும் இந்த முழு இழப்பீடும் அளிக்கப்படும் என நம்புகின்றனர். எனினும் அரசு எப்படி இந்த விதிகளைத் தளர்த்தப்போகிறது, எப்போது அந்தப் பயன் அந்தக் குடும்பங்களுக்குப் போய்ச் சேரும் என்பது தெரியவில்லை.

இந்த இழப்பீடு மீனவர்களுக்கு மட்டுமின்றி ஓகிப் புயலில் இறந்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது இப்போது விவசாய மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. .இப்போதைக்கு இறந்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு அந்தத் துறை விதிகளின்படி வழக்கமாக அளிக்கப்படும் இழப்பீடுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.

சென்ற டிசம்ப12 அன்று இப்பகுதியைப் பார்வையிட வந்த முதலமைச்சர் பழனிச்சாமி மேலே கூறியவை தவிர,

  1. i) இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
  2. ii) பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு

iii) உலக வங்கி உதவியுடன் நவீன் கருவிகள் பெற்றி பேரிடர்களைச் சமாளித்தல்

  1. iv) கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தல் ஆகிய வாக்குறுதிகளைத் தந்துள்ளார்.
  2. எமது பார்வைகளும் கோரிக்கைகளும்

8.1. ஓகிப் புயல் குறித்த எச்சரிக்கையை உரிய வகையில் உரிய காலத்தில் அளிப்பதிலும், புயலுக்குப் பிந்திய உயிர் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகள் படு தோல்வி அடைந்துள்ளதை அவை ஏற்க வேண்டும். அரசின் கடலோரக் காவற்படை, கப்பற்படை முதலியன இனி தங்களால் யாரையும் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டபின் உயர் தொழில்நுட்பங்கள் எதுவும் கைவசம் இல்லாத மீனவர்கள் சென்று கடலில் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த குறைந்தபட்சம் 57 மீனவர்களைக் காப்பாற்றி, முதலுதவி அளித்துக் கரை சேர்த்துள்ளனர். அரசின் “காப்பாற்று” முயற்சிகளின் மீது மட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினையில் அரசுக்குள்ள “அக்கறை” யின் மீதே இன்று பெரிய அளவில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இப்படியான சூழலில் மத்திய அமைச்சராக மட்டுமின்றி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு.பொன் இராதாகிருஷ்ணன், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துக் குறைகள் கேட்காததை இக்குழு வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறது.

8.2. புயல் எச்சரிக்கையைச் சரியான தருணத்தில் அளிக்க இயலாமல் போனது, புயலுக்குப் பின் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உரிய தருணத்தில் காப்பாற்ற இயலாமற் போனது, சக மீனவர்களால் காப்பாற்றப்படவர்களைக் கூட பயிற்சி பெற்ற படையினர் காப்பாற்ற முடியாமற் போனது ஆகியவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாத வண்ணம் உரிய பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என இக்குழு கோருகிறது. தக்க வல்லுனர்கள் இக்குழுவில் இணைக்கப்படுதல் மட்டுமின்றி, இத்தறை சார்ந்த அயல் நாட்டு வல்லுனர்களின் கருத்துக்களைக் கோரிப் பெற்று அந்த ஆய்வை இவ்வாறு நியமிக்கப்படும் விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

8.3. ஓகிப் புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவை ‘தேசியப் பேரிடர்’ என அறிவிக்க வேண்டும் என்பது பா.ஜ.க தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளாலும், அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. உரிய வல்லுனர்களைக் கொண்டு ஆய்வுகள் எதையும் செய்வதற்கு முன்னதாகவே எந்த ஆய்வுமின்றி மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் “தேசியப் பேரிடர் என இதை அறிவிக்க முடியாது” என அறிவித்ததை இக்குழு வன்மையாகக கண்டிக்கிறது.

8.4 ஓகிப் புயல் பேரழிவின் விளைவாக இன்று மிகக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டபோதும் சுமார் 182 மீனவர்கள் இன்று இறந்தும் “காணாமற்போயும்” உள்ளனர். மீனவர்கள் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 6 பேர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். மீனவக் குடும்பங்கள் பலவற்றில் இன்று கடலில் இறங்கிச் சம்பாதிப்பதற்கு ஆண்கள் இல்லை. விவசாயப் பகுதிகளில் இன்று அனைத்து வகைப் பயிர்களும் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் வேலையின்மை அங்கும் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போதுமானதாகவும், துரிதமாகவும் இல்லை என்பதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

8.5. இறந்தவர்களுக்கான இழப்பீடுகளைப் பொருத்தமட்டில் தற்போது இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 20 இலட்ச ரூபாய்கள் என அரசு அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பீட்டில் இது மிகக் குறைந்த தொகை. இதை 25 இலட்சமாக உயர்த்த வேண்டும் என இக்குழு கோருகிறது. அறிவிக்கப்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கி அல்லது கருவூலத்தில் வைப்பாகச் செலுத்தினால் குடும்பத்தினரின் முக்கிய தேவைகளுக்கு அதைத் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்க வேண்டும்.  உயிர் பிழைத்து வந்தவர்களிலும் சிலர் மிக மோசமான உடல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் மீண்டும் வேலை எதுவும் செய்ய இயலாதவர்களாகி உள்ளனர். அபர்களுக்கும் அவர்களது பாதிப்பிற்குத் தக இழப்பீடு அளிக்க வேண்டும். பேரிடர் தாக்குதலால் மனம் கலங்கியுள்ளவர்களுக்கு உரிய மனநல சிக்கிச்சை அளிக்க உள்ளூர் அரசு மருத்துவ மனைகளில் வசதி செய்ய வேண்டும்.

8.6. இறந்த மற்றும் காணாமற்போன மீனவர்களைப் பொருத்த மட்டில் தமிழகம் முழுவதும் மொத்தத்தில் இதுவரை எட்டு உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது 37 உடல்கள் அடையாளம் தெரியாமல் கேரளத்தில் அழுகிக் கிடக்கின்றன. டி.என்.ஏ சோதனைகள் மூலமாக அவற்றின் அடையாளங்களையும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். கடலில் இறந்த பலரையும் கூடச் சென்றவர்கள் வேறு வழியின்றி அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். உடல்கள் கிடைக்காதவர்களைப் பொருத்த மட்டில் தற்போதுள்ள விதிகளின்படி ஏழு வருடங்களுக்குப் பின்பே அவர்களின் இறப்பை உறுதி செய்து இழப்பீடு வழங்க முடியும். ஆனால் அடுத்த வேளை உணவுக்குச் சம்பாதிக்க ஆளில்லாத குடும்பங்களுக்கு இப்படித் தாமதமான இழப்பீட்டில் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் உடனடியாக இழப்பீட்டுத் தொகைகளை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை இக் குழு வரவேற்கிறது. எனினும் எவ்வளவு காலத்திற்குள் இது சாத்தியம் என்பதை அரசு சொல்லவில்லை. சம்பாதிப்பவர்களை இழந்துள்ள இக் குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்கும் வழியின்றி உள்ளதை உணர்ந்து அரசு இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

8.7. இறந்தோர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததை இக்குழு வரவேற்கிறது. இதுவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகிறோம். ஏற்கனவே அரசு இவ்வாறு அறிவித்த போதுகளில் நிரந்தரப் பணிகள் இல்லாமல் சத்துணவு ஆயா முதலான பணிகள் அதுவும் நிரந்தரமில்லாத தற்காலிக ஒப்பந்தப் பணிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவ்வாறின்றி இப்போது பணி அளிக்கப்படுபவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான நிரந்தரமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும்.

8.8. மீனவர் பகுதியில் தற்போது ஒரு கல்லூரி உள்ளது. கல்வி வளர்ச்சி மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் பகுதியில் கடல் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயுற்றுவிக்கத் தக்க ஒரு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் படித்து முடித்துள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் சிறப்பு முன்னுரிமை அளித்து ஊக்குவித்தலும் அவசியம்.

8.9. இறந்தோர்களின் குடும்பங்கள் வாங்கியுள்ள கல்விக் கடன்கள், விவசாயக் கடன்கள், விவசாய நகைக் கடன்கள் மற்றும் இதர தொழிற்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.

8.10. விவசாய நிலங்கள், சாகுபடிகள் பெரிய அளவில் அழிந்துள்ளன. இது குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் (பகுதி 3) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விவசாய அழிவுகளைப் பொருத்தமட்டில் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது 2013 ல் NH 47 சாலை நால்வழிச் சாலையாக மாற்றப்படும்போது கையாண்ட அதே நடைமுறை இப்போதும் கையாளப்பட வேண்டும் எனவும், அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த பயிர்கள் மரங்கள் முதலானவற்றிற்கு அளிக்கப்பட்ட அதே அளவு இழப்பீட்டுத் தொகை இப்போதும் அளிக்கப்பட வேண்டும் எனவும் அம்மக்கள் கோருகின்றனர். அது முற்றிலும் நியாயமானது என இக்குழு கருதுகிறது. அதோடு பயிர்களின் இழப்பை மதிப்பிடும்போது விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவற்றிற்கு உரிய அதிக விலை அளிக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் மதிப்பிடும் அதிகாரம் முழுமையாக அதிகாரிகளுக்கு மட்டும் இல்லாமல் விவசாயப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அமைந்த குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் தமக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறைவாக உள்ளது என ஒருவர் கருதினால் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் இழப்புகள் ஏற்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

8.11. விவசாய இழப்பீட்டுத் தொகைகள் முழுமையாக நிலச் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவது என்றில்லாமல், குத்தகை விவசாயிகளுக்கு உரிய பங்களிக்கப்பட வேண்டும்.

8.12. காணி பழங்குடியினர் மத்தியிலும் இவ்வாறு பயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கும் இவ்வாறே மதிப்பிட்டு உடனடியாக இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

8.13. காணி பழங்குடியினர் மற்றும் புயல் அழிவினால் உடனடி வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 5,000 ரூ இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பழங்குடியினர் வசிக்கும் வனப் பகுதிகளில் விழுந்து கிடந்து மக்களுக்குச் சிரமம் ஏற்பத்துதும் மரங்கள் உடனடியாக நீக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வனத்துறை இது குறித்த உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பம் ஒன்றிற்கு ஒரு கறவை மாடு அளித்தால் உடனடிப் பயனுடையதாக இருக்கும் என்கிற கோரிக்கையை இன்று பழங்குடி மக்கள் வைக்கின்றனர். அரசு அது குறித்தும் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.

8.14. மீனவர்களுக்கு உயிரிழப்புகள் மட்டுமின்றி அவர்களுக்கும் மூலதன இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் விசைப் படகுகள் மூழ்கியுள்ளன; தப்[பி வந்தவையும் சேதமடைந்துள்ளன, வலைகள், தூண்டில்கள் முதலான உபகரணங்களும் அழிந்துள்ளன. சில விசைப் படகுகளில் உரிமையாளர்கள் சென்றுள்ளனர். சிலவற்றில் செல்லவில்லை. விசைப் படகுகள் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் விலைகள் மதிப்பிடப்பட்டு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கட்டுமரங்கள் உட்பட அனைத்திற்கும் இழப்பீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும். இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். மேல்முறையீடுகளுக்கும் வழி இருக்க வேண்டும்.

8.15. மாவட்டம் முழுமையும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவையும் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

8.16. இம்முறை மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து சுசீந்திரம் முதலான இடங்களில் பெருஞ் சேதங்களை விளைவித்துள்ளன. நால்வழிச்சாலைகள் அமைக்கும்போது குறுக்கே செல்லும் கால்வாய்களில் உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வடிய ஏற்பாடுகள் இன்மையே இதற்குக் காரணம். இவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

8.17. மீனவர்களை எச்சரிப்பதிலும், காப்பாற்றுவதிலும், இப்போது நிவாரணங்கள் வழங்குவதிலும் அரசுகள் மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத் தக்க ஒன்று. சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை இங்குள்ளது. மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மீன் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்த போதிலும் இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் மீன்வளத்துறைக்கான அமைச்சகம் ஒன்றை அமைக்க முயற்சி எடுக்காமை குறிப்பிடத் தக்கது. மீன்வளத்துறை அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என இக்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

8.18. மீனவர்களைப் பழங்குடிகளாக அறிவிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. உடனடிஆக அப் பரிந்துரை நிறைவேற்றப்பட வேண்டும்.

8.19. புயல் உருவாக்கம், மற்றும் அது நகரும் திசை ஆகியவற்றைக் கூடியவரை முன் கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயனுக்குக் கொண்டுவருவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். கணிக்கப்படும் எச்சரிக்கைகள் வழக்கமான அதிகாரவர்க்கச் சோம்பல்களின் ஊடாகத் தேங்காமல் உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வானிலை மையக் கிளை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

8.20. புயல் முதலான அழிவுகள் ஏற்படும்போது உடனடியாகச் சென்று கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏற்ப கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு எப்போதும் தயாரான நிலையில் ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்பு மையம், மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும் இங்கு அமைக்கப்பட வேண்டும்.

8.21. ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்கள் உடனடியாகக் கரையில் உள்ள இந்த மையங்களுடன் தொடர்பு கொண்டு ஆபத்தைத் தெரிவிக்குமாறு ‘சேடல்லைட்’ போன் வசதிகள் மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்களுடன் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு இருவழி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழியில்லை.

8.22. இப்பகுதிக் கடல்கள் குறித்த சில அடிப்படையான அறிதல் கூட இல்லாதவர்களாக நம் கடலோரக் காவல்படை இருப்பது என்பது இன்று கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்ற இயலாமற் போனதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரக் காவற் படைகளுக்கு ஆள் தேர்வு செய்யும்போது கடல்கள் குறித்த நடைமுறை அறிவு மிக்க மீனவ மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

8.23. ‘நீலப் புரட்சி’, ‘சாகர்மாலா திட்டம்’ ஆகியவற்றின் ஊடாக  ஆறு பெரும் துறைமுகங்களை உருவாக்கி இணைப்பது, கடற்கரையோரப் பொருளாதார மண்டலங்களை (Coastal Economic Zones) உருவாக்கிக் கடல் வளத்தையும் கடற்கரைகளையும் பன்னாட்டுக் கொள்ளைகளுக்கு உட்படுத்துவது முதலான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அச்சத்திலிருந்து இம்மக்களை விடுவிப்[பது அரசின் பொறுப்பாக உள்ளது. இனயம் துறைமுகம் முதலான இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் கரையோர மக்களை இடம்பெயர்க்கும் என்கிற அச்சமும் அவர்களிடம் உள்ளது. மீனவர் பாதுகாப்பில் அரசு காட்டும் அலட்சியம் என்பது இந்தத் திட்டங்களுக்கான எதிர்ப்புகளை முறியடிக்கும் உத்தியாக இருக்குமோ என்கிற கவலையும் அவர்களுக்கு உள்ளது. எதுவானாலும் அம் மக்களின் ஒப்புதல் இன்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்கிற உத்தரவாதத்தை அரசு அளிப்பது இன்று அவசியமாகிறது.

8.24. வட மாநிலங்களில் இருந்து வந்து இங்குள்ள மீனவர்களுடன் கடலுக்குச் செல்லும் குழுவில் பங்குபெறும் மீனவர்கள் குறித்த விரிவான பதிவு ஒன்றை அரசு செய்ய வேண்டும். ஒவ்வொரு படகும் கடலில் இறங்கு முன் அதில் யார் யார் போகின்றார்கள் என்கிற பதிவு ஒன்றைச் செய்யும் முறை ஒன்றைக் கொண்டு வருதல் அவசியம். ஓகிப் புயலில் அழிவுக்குள்ளான படகுகளில் இவ்வாறு எத்தனை ‘இந்திக்காரர்கள்’ சென்றனர் எனக் கணக்கிடவும் இப்பிரச்சினையில் அக்கறை கொண்டு செயல்படும் பாதிரியார்கள் முன்கை எடுக்க வேண்டும். இம்முறை அப்படிச் சென்று கடலில் மரித்தவர்கள் எட்டு பேர்கள் எனத் தெரிகிறது. அவர்களின் முகவரியைக் கண்டறிந்து அவர்களின் குடும்பங்களுக்கும் முழு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும்.

8.25. இத்தனை துயருக்கும் மத்தியில் மதம் மற்றும் சாதி அடிப்படைகளில் மக்களைப் பிளவுறுத்தி எதிர் எதிராக நிறுத்தும் முயற்சிகளை மதவாத சக்திகள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்கள் இன்னொரு மதக் கலவரத்திற்கும் வித்திடலாம் என இக்குழு அஞ்சுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசை இக்குழு கேட்டுக் கொள்கிறது. சமூக ஒற்றுமையில் அக்கறையுள்ள அனைவரும் இத்தகைய பிளவு முயற்சிகளைக் கண்டிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக் கொள்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்

இன்று குடந்தையில் வெளியிடப்பட்ட எங்களின் உண்மை  அறியும் குழு அறிக்கை

                                                                                                                                              கும்பகோணம்

ஜூலை 15, 2017

                                                       

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.  முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள்:

பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,

இரா.பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்,

வி.பி.இளங்கோவன், எழுத்தாளர், அம்மாசத்திரம், குடந்தை,

அகமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், நாகூர்

k6

இக்குழுவினர் ஜூலை 13, 14 தேதிகளில் கதிராமங்கலம், குற்றாலம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளமல், அடியக்கமங்கலம் முதலான பகுதிகளுக்குச் சென்று போராடும் மக்களைச் சந்தித்தோம். திருவாரூரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தோம். எரிவாயுக் குழாய் வெடித்த பகுதிகளுக்கும் சென்றோம். பாதிக்கப்பட்டு உயிர் வாழும் மக்கள் சிலரது துயரக் கதைகளையும் பதிவு செய்து கொண்டோம். குத்தாலத்தில்  அமைந்துள்ள ONGC அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் ஜோசப், கார்பொரேட் செய்தித் தொடர்பாளர் ராஜசேகர் ஆகியோருடன் விரிவாகப் பேசினோம். ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்.

கதிராமங்கலம் மக்கள் சொன்னவை

ஊர் மத்தியில் உள்ள அய்யனார் கோவில் முன்னுள்ள திடலில் இப்போது அந்த ஊர் மக்கள் தினந்தோறும் கூடி நாள் முழுக்கத் தம் கோரிக்கைகளை முழங்கிக் கொண்டும், பார்க்க வருபவர்களிடம் தம் பிரச்சினைகளை விளக்கிக்கொண்டும் அமர்ந்துள்ளனர். நாங்கள் சென்ற அன்று (ஜூலை 13) அப்படி அவர்கள் அமர்வது மூன்றாம் நாள். தினந்தோறும் அந்த ஊரில் ஒரு வார்டைச் சேர்ந்தவர்கள் உணவு சமைத்து மதியம் போராடுபவர்களுக்கு வழங்குகின்றனர். பெரிய அளவில் பெண்கள் பங்குபெறுவது குறிப்பிடத் தக்கது.

போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த கலையரசி (க/பெ) முருகன், ராஜு, கவிஞர் கதிரை முருகானந்தம், அப்போது அங்கு வந்திருந்த திமுக ஒன்றியச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சமீபத்தில் நிகழ்ந்தவை குறித்துக் கூறியவை:

“கதிராமங்கலம் மிக்க வளம் கொழித்த பூமி, நெல் தவிர நாட்டு வாழை, பச்சை வாழை, மஞ்சள் முதலியன பெரிய அளவில் சாகுபடியான நிலம் அது. எல்லாம் 2010 க்கு முன். அதன் பின் எல்லாம் பழங்கதை ஆயின. பாதி நிலம் இப்போது தரிசாகிவிட்டது. நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் ‘போர்’ மூலம் விவசாயத்திற்காக நீர் எடுக்க 80 அடி துளையிட்டால் போதும். இப்போது 200 அடி துளைத்தாலும் நீர் வருவதில்லை. குடி நீரும் பெரிய அளவில் மாசுபட்டு உள்ளது. குடி நீரில் எண்ணை மிதப்பதைக் காணலாம். தூய நீர் போலத் தோற்றமளிப்பது சிறிது நேரத்தில் மஞ்சளாகி விடுகிறது. ஒரு சிறுவனுக்கு குடி நீராலேயே இருதய நோய் வந்துள்ளது இன்னொரு சிறுவனுக்குச் சதைச் சிதைவு நோய் வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் ONGC ஆழ் துளைக் கிணறுகள் தோண்டி எண்ணை உறிஞ்சுவதோடு அதை வயல்களுக்குக் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் 2 கிமீ தொலைவு கொண்டு சென்று பின் விக்ரமன் ஆறு ஊடாக குத்தாலம் கொண்டு சென்று தேக்குவதுதான். இது குறித்த விழிப்புணர்வை பேராசிரியர் ஜெயராமன் அய்யா போன்றவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தினர்.

k1 k2 k3

“இது குறித்து நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளையும் ONGC நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியும் எந்தப் பயனுமில்லாத நிலையில் சென்ற மே 19 அன்று ONGC நிறுவனம் ஊருக்குள் கொண்டு வந்து ஏராளமான கருவிகளை இறக்கியது. இது ONGC தன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கான முயற்சி என்பதை உணர்ந்த நாங்கள் கூடிச் சென்று தடுத்தபோது அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. சாலை மறியல் செய்தபோது மாலை 5 மணிக்குள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கண்துடைப்பாகச் சில லாரிகள் அளவு கருவிகள் மட்ட்டுமே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன.

“தொடர்ந்து ‘சமாதானக் கூட்டம்’ என்கிற பெயரில் மக்கல் பிரதிநிதிகள் அடிக்கடி அழைக்கப்பட்டனர். எங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பது என்பதற்குப் பதிலாக அவ்ர்களின் கருத்துக்களை எங்கள் மீது திணிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஊர் மக்களைக் கலந்தாலோசித்து வந்து பேசுவத்ர்கும் உரிய அவகாசம் எங்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படவில்லை.

“இதற்கிடையில் ஜூன் 2 அன்று ஊரில் திருவிழா. காளியாட்டம் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. திருவிழா நடந்து கொண்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. திரண்டிருந்த மக்களும் சுமார் 400 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டோம். இரவில்தான் 10 பேர் தவிர இதரர் விடுதலை செய்யப்பட்டோம். சமாதானக் கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை உறுதியாகப் பேசியதாக அடையாளம் காணப்பட்ட அந்த 10 பேர்களும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊர் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டு எங்கும் அச்சம் நிலவியது. நாங்கள் ஊரைப் புரக்கணித்துச் செல்வது என முடிவு செய்து அகன்று ஓட்டைக்கால் திடலுக்குச் சென்று தங்கினோம். கம்பர் வாழ்ந்த பகுதி என இதைச் சொல்வார்கள். சப் கலெக்டர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். உலகத் தரமான குழாய்கள் வழியேதான் இந்த எண்ணை, எரிவாயு எல்லாம் கொண்டு செல்லப்படுகிரது. அது உடையாது, தெறிக்காது, எந்தப் பயனும் இல்லை என்றெல்லாம் அந்த சப் கல்க்டர் உறுதி அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இறக்கப்பட்ட கருவிகள் முழுமையாக திருப்பி எடுத்துச் செல்லப்படும் எனவும், நல்ல குடிதண்ணீர் வழங்கப்படும் எனவும் உறுதி வழங்கப்பட்டது.

“இதை ஒட்டி கண்டனக் கூட்டம் ஒன்று குடந்தையில் நடத்தப்பட்டது. இரு முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மாசுபட்ட தண்ணீரை எல்லாம் காட்டி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினோம்..

“இந்நிலையில்தான் ஜூன் 30 காலை வயல் பக்கம் சென்ற பெண்கள் கடும் துர்நாற்றத்துடன் வயலொன்றின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு கடும் எரி சக்தியுடன் கூடிய வாயுவும் திரவமும் வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்து வந்து ஊருக்குள் கூறினர். அங்கு திரண்ட மக்கள் கூட்டம் சம்பவ இடத்தில் திரண்டது. யாரும் எளிதில் நுழைய இயலாமல் அங்கு கிடந்த முள், புதர் எல்லாவற்றையும் போட்டுத் தடுப்பு அமைத்து  மக்கள் அங்கு கூடி நின்றனர். செய்தி அறிந்து அங்கு பெரிய அளவில் போலீஸ் படை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. “உலகத்தரமான குழாய்” என உத்தரவாதம் அளித்த அதே சப்கலெக்டர் மறுபடியும் மக்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் பேச முடியாது என மறுத்தோம். மாவட்ட ஆட்சியர் வந்து பேசி அதன் பின் கசிவை அடைக்கட்டும் என்றோம். மாவட்ட ஆட்சியர் கடைசி வரை வரவில்லை. அனால் கடுமையாக அடித்து எங்களை விரட்ட அவர் ஆணையிட்டார். இடையில் தடுப்புக்காக நாங்கள் வெட்டிப்போட்ட அந்த முட்புதர் நெருப்புப் பிடித்தது. இதச் சாக்காக வைத்துக்கொண்டு கடுமையக எங்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தி நாங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டோம். போலீஸ்காரர்கள் கடுமையாக அடித்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டவும் செய்தார்கள். ஜெயராமன் ஐயா உட்பட 10 பேர் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். வைக்கோல் போர் ஒன்றை நாங்கள் கொளுத்தியதாக முதலமைச்சர் சொல்வதெல்லாம் முழுப் பொய்.

“அந்த 10 பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படணும். அவங்க மேல ;போட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். ONGC யை இங்கிருந்து விரட்டி அடித்து காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.”

வழக்குகள்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1.Cr No. 126/2017 u/s 147, 506(11), 307, 3(1), 148, 294 b, 324,336, IPC 353,436 dt 01-07-2017

2.Cr No 127/2017 u/s 147,341,294 b, 353, 506(1), 505 (1) (b),r/w 3/1 PPd act dt 30-06-2017

இரண்டிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் : பேரா. ஜெயராமன், விடுதலைச்சுடர், தருமராஜன், செந்தில்குமார், முருகன், ரமேஷ், சிலம்பரசன், வெங்கட்ராமன், சந்தோஷ், சாமிநாதன்.

ONGC யினால் ஏற்படும்சுற்றுச் சூழல் கேடால் பாதிக்கப்பட்டோர்

1.ஜெயலட்சுமி (க.பெ) பழனிவேல். வயது 60. கதிராமங்லத்திற்குள் உள்ள நறுவெளியைச் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இரவு 10 மணி வாக்கில் கொல்லைப் பக்கம் சென்றுள்ளார். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிப்பறைகள் கிடையாது. வெளியில்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்று அவர் உட்கார்ந்த போது ONGC குழாய்கள் இரண்டின் இணைப்பு ஒன்று வெடித்து தீப்பற்றியது. முகத்தில் கடும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயலட்சுமி கும்பகோணத்தில் உள்ள அன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்த அவருக்கு 75,000 ரூ இழப்பீடு அளிக்கப்பட்டது.

2.முத்துசரண் (த.பெ) நாராயணன். வயது 8. மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் கூலி வேலை செய்யும் ஒருவரின் மகன். சென்ற ஜனவரியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு பல நாட்களுக்குப்பின் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளான். இரத்தத்தில் கிருமி கலந்து இதயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இப்படி ஆனதற்குக் குடிநீரே காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்பகுதியில் உள்ள நீர் விஷமானதன் விளைவுதான் இந்தப் பாதிப்பு என அக்குடும்பத்தினர் உறுதியாகக் கூறுகின்றனர்.

எமது குழுவைச் சேர்ந்த சிவகுருநாதன் இவ்வாறு ONGC குழாய்க் கசிவின் விளைவாக அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள சில மரணங்கள் மற்றும் விபத்துகளைக் கடந்த சுமார் எட்டு ஆண்டுகளாகக் கவனத்தில் எடுத்து, நேரில் சென்று விசாரித்துப் பதிவுகள் செய்து வந்துள்ளார். அவரது ஆய்வில் வெளிக் கொணர்ந்துள்ள மேலும் சில உண்மைகள் வருமாறு.

  1. ஜூலை 30, 2011 சனி இரவு திருவாரூர் விளமல் – தியானபுரம் சாலையில் குறிஞ்சி நகருக்கு அருகில் ONGC எண்ணெய் / எரிவாயுக் குழாயில் லாரி ஏறி தீப்பற்றி எரிந்ததில் லாரி டிரைவரும் கிளீனரும் தீயில் கருகி இறந்தனர்.   செந்தாமரைச்செல்வி (12) என்ற சிறுமி காயமடைந்தார்.  அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த அந்த லாரி, அருகில் நின்றிருந்த மினி லாரி, கடை, வீடு, மரங்கள் என அவ்விடத்திலுள்ள அனைத்தும் எரிந்து சாம்பலானது. எரிவாயுக் குழாய் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் மக்கள் நடமாடும், வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் தரை மீது போடப்படும் அளவிற்கு மக்கள் பாதுகாப்பு குறித்து எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் ONGC நடந்துகொண்ட நிலை இதன் மூலம் அம்பலமானது. அதன் பின்புதான் இனி குழாய்களை எல்லா இடங்களிலும் மண்னுக்குள் புதைப்பது என்கிற நிலையை எடுத்ததாக நாங்கள் சந்தித்த அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.

4.. நவம்பர் 18, 2009 அன்று திருவாரூர் கமலாபுரம் அருகே தேவர்கண்ட நல்லூர் – உச்சிமேடு கிராமத்தின் ஆற்றங்கரைத் தோப்பில் காலைக்கடன் கழிக்கச் சென்ற கலியபெருமாள் (35) என்பவர் சிகரெட் பற்ற வைக்க, தீக்குச்சியை உரசியபோது ONGC எரிவாயுக் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவால் மூங்கில் காடுகள் நிறைந்த அவ்விடமே பற்றியெரிந்தது.  கலியபெருமாள் தவிர அங்கு ஏற்கனவே ஒதுங்கியிருந்த குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆனந்தராஜ் (14), சேதுபதி (14) உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து பின்னர் இவர்களில் ஆனந்தராஜ் இறந்தார்.. கலியபெருமாளும் சேதுபதியும் கடுமையான்காயங்களுடன் உயிர் தப்பினர். சேதுபதி அவரது  தந்தை சேகர் ஆகியோரை சிவகுருநாதன்  சந்தித்து உரையாடினார்.. சேதுபதி 9ம் வகுப்பு படிக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது. அவரை சென்னை குளோபல் மருத்துவமனையில் ONGC. நிர்வாகம் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியது. கோரமான முகத்தைச் சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி இன்னும் செய்யவில்லை. +2 க்குப் பிறகு தனியார் ஐ.டி.ஐ.யில் ஃபிட்டர்  படிப்பு முடித்த அவருக்கு ஓராண்டிற்கு முன்னர் வெள்ளக்குடி ONGC யில் மெக்கானிக் வேலை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட  தன்  மகனுக்கும் கலியபெருமாளுக்கும் இறந்த சக மாணவன் ஆனந்தராஜ் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்துதர ONGC.யை வலியுறுத்தவில்லை என்பதையும் சேதுபதியின் தந்தை பகிர்ந்துகொண்டார்.

ONGC க்கு எதிரான போராட்டங்களில் பங்குபெற்ற சமூக ஆர்வலரும் திருவாரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஜி.வரதராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. என்ணெய்க் கசிவால் விவாசாய நிலங்கள் பாழ்படுவது ஒருபுறம், விபத்துகளால் உயிரிழப்புகள் மறுபுறம். மாவட்ட  நிர்வாகமும் ONGC யும் இரு வழிகளில் இதனைக் கையாள்கின்றன. ஒன்று போராட்டக்காரர்களை பணம் போன்ற காரணிகளைக் கொண்டு கட்டுக்குள் கொண்டுவருவது, மற்றொன்று, இவர்களைப் பிளவுபடுத்துவது. இங்குள்ள சமூக விரோத சக்திகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன” என்றார்.

“ மரணம், விபத்து, எரிவாயுக் குழாய் வெடிப்பு, கசிவு, விளைநிலம் பாழ், மூங்கில் மற்றும் மரத்தோட்டங்கள் தீயால் கருகுதல், தொடர்ந்து எரிய விடப்படும் எரிவாயுவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு, மழைக்குறைவு என ஏதோ ஒரு பாதிப்பு இங்குள்ள பல கிராமங்களில் உண்டு.” என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என்கிறார் சிவகுருநாதன்.

ONGC சார்பில் சொல்லப்பட்டவை

குத்தாலத்தில் உள்ள ONGC சேகரிப்பு நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அங்கு ஏதோ ஒரு ‘மீட்டிங்’ நடக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றுபவராக அறியப்படுகிற நெல் ஜெயராமன் மற்றும் கதிராமங்கலம் கிராமத்தில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்யும் ஸ்ரீராம் அய்யர்  ஆகியோர் அந்த ‘மீட்டிங்கிற்காக’ வந்து சேர்ந்தனர். எங்களை முதலில் சந்திக்க மறுத்த நிர்வாகம் இறுதியில் அவர்களின் ‘மீட்டிங்கிற்கு’ முன் சில நிமிடங்கள் பேசச் சம்மதித்தனர்.

ONGC யின் இப்பகுதித் தலைமையகமான காரைக்காலில் பணியாற்றும் கார்பொரேட் தொடர்பாளர் ஏ.பி.ராஜசேகர் எங்களிடன் சொன்னவற்றின் சுருக்கம்:

“ONGC என்பது ஒரு மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனம் (public sector unit). இதை ஒழித்துக் கட்டுவதில் பல்வேறு சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி இப்பகுதியில் செயல்பட்டு வந்த ONGC மீது இபோது அபாண்டமாக இப்படித் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உண்மையான பிரச்சினை 2010 முதல் காவிரி நீர் வரத்து பெருமளவில் இல்லாமற் போனதுதான். மழையும் இல்லை. எனவே நீர்மட்டம் இங்கு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழ்இறங்குவது மட்டுமின்றி அதன் உப்புத் தனமையும் அதிகரித்து வருகிறது. ஆந்திரப் பகுதிகளில் கோதாவரி பேசினிலும் நாங்கள் பலகாலமாக இதே முறையில் எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் எடுத்து வருகிறோம். இங்குள்ளதை விடச் சுமார் 14 மடங்கு அதிகம் எரிபொருள் அங்கு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அங்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை புகார்கள் எழும்பவில்லை.

இப்பகுதியிலும் கூட எந்தப் புகாரும் இதுவரை எழுந்ததில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் செயல்பட்டு வரும் நெல் ஜெயராமன் மற்றும் இப்பகுதியில் 62 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வரும் ஶ்ரீராம் அய்யர் ஆகியோர் ONGC பணிகளால் எந்த பாதிப்புகளும் இல்லை என்று கூருகின்றனர்.”

இப்படிச் சொன்ன அந்த அதிகாரி இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிடப் போவதாக எங்களிடம் அதைக் காட்டினார். அதை வாசிக்கக் கேட்டபோது கையெழுத்தான பின் தருவதாகச் சொன்னார். அன்று குத்தாலம் ONGC அலுவலகத்தில் நடைபெற உள்ள ‘மீட்டிங்’ இது தொடர்பானதுதான் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். தொடர்ந்து அந்த அதிகாரி கூறியது:

“நாங்கள் பயன்படுத்துவது துளைக் கிணறு முறை பலகாலமாக எல்லா நாடுகளிலும் பயன்படுவதுதான் (conventional drilling). 1984 முதல் நாங்கள் செய்து வருவதுதான். மீத்தேன் எடுக்கும் திட்டத்தில்தான் பக்கவாட்டில் நிலத்தடியில் துளையிடப்படும். அது மரபுவழிப்பட்ட முறை அல்ல (non conventional drilling). இதில் ஆபத்துகள் நேர வாய்ப்புண்டு. ஆனால் தற்போது ONGC இதை முழுமையாகக் கைவிட்டு விட்டது. தவிரவும் செங்குத்தாக ஆழ் துளை இட நாங்கள் பயன்படுத்தும் திரவம் முற்றிலும் விஷமற்றது. எந்த ஆபத்தும் இல்லாதது. CSIR முதலான நிறுவனங்களால் எந்த ஆபத்தும் இல்லாதது என உறுதி வழங்கப்பட்டது.

‘தண்ணீர் மாசுபடுகிறது என்றால் அதற்கும் எங்கள் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவிரவும் அப்பகுதி மக்களுக்கு ‘டாய்லெட்’ முதலான வசதிகளையும் நாங்கள் செய்துதருகிறோம். அவர்கள் வெளியில் சென்று இப்படிப் பாதிப்படையத் தேவையில்லை.

“ஏதேனும் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாகச் சரி செய்து விடலாம். இந்தப் பிரச்சினையில் கூட ஜூன் 30 அன்று கசிவு ஏற்பட்ட போது அது காலை 8.30 மணிக்கு எங்களுக்குத் தெரிய வந்தது. 8.45 க்கு நாங்கள் அங்கிருந்தோம். 9 மணிக்கெல்லாம் எல்லாம் தயார் நிலையுல் இருந்தது. அன்று மக்கள் அனுமதித்து இருந்தால் அப்போதே எல்லாவற்ரையும் சரி செய்திருப்போம்.”

ஆக தங்களின் நடவடிக்கைகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்த அதிகாரிக்கு நாங்கள் 2011 ல் விளமலில் ஏற்பட்ட விபத்தில் இருவர் இறந்தது தெரிந்திருக்கவில்லை. அருகில் இருந்த இன்னொரு அதிகாரி அதை ஒத்துக் கொண்டார். தலைமைப் பொறியாளர் ஜோசப், “இங்குள்ள மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் நெருப்புப் பொறிகள் தெறிப்பதை எல்லாமும் கூட எங்களால் ஏற்பட்டது எனக் கூறுகின்றார்கள்” எனக் கூறி அப்படி ஏதோ ஒரு சம்பவத்தையும் விளக்கினார்.

எமது பார்வைகள்

1.இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரம் அழ்ந்து வருவதற்கு ONGC இப்பகுதியில் செய்து வரும் பணிகளே காரணம் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். கதிராமங்கலத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளி வைத்தீஸ்வரன் – கவிதா ஆகியோரின் மகன் வருண் குமார் (17) கடந்த சில ஆண்டுகளாக சதைச் சிதைவு நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இது மரபணு தொடர்பான வியாயதியாயினும் தங்கள் மரபில் யாருக்கும் இதுவரை இப்படியான நோய்கள் வந்ததில்லை எனச் சொல்லும் பெற்றோர், தங்கள் மகனின் இந்த நோய்க்கு ONGC செயல்பாடுகளே காரணம் என உறுதியாக நம்புகின்றனர்.

  1. இப்படியான ஒரு நிலையில் அரசு தலையிட்டு உண்மை நிலையை வெளிக் கொணரவும், உரிய பாதுகாப்புகளை மேற்கோள்ளவும், பாதுகாப்புகள் சாத்தியமே இல்லை எனும்பட்சத்தில் திட்டத்தை விரிவுபடுத்துவதை நிறுத்துவதும், தேவையானால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவற்ரையும் நிறுத்தி வைப்பதையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளையும், அச்சங்களையும் முன்வைத்துப் போராடும்போது காவல்துறையை அனுப்பித் தடியடி நடத்துவது, கைதுகள் செய்வது என்பது மட்டுமே தனது பணி என நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத் தக்கது.
  2. ONGC ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். பொதுத்துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய ஒன்று. 68 சத ‘ஈக்விடி ஸ்டேக்’ உள்ள ஒரு லாபம் ஈட்டக்கூடிய துறை. 1958 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 26 பகுதிகளில் தன் பணிகளைச் செய்து வருகிறது. 11,000 கி.மீ நீளமுள்ள வாயுக் குழாய்களை அது பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு செல்கிறது. இப்படியான ஒரு நிறுவனம் மக்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளாமையும், மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்றும் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று. மக்கள் எதிர்ப்பால் இப்போது மீதேன் எடுப்பது கைவிடப்பட்ட பின்னர் அப்படி எடுப்பது ஆபத்தானது என இன்று ஏற்றுக்கொள்ளும் ONGC அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது இதை வெளிப்படையாகக் கூறவில்லை. பத்திரிகைச் செய்திகளை விரிவாக ஆய்வு செய்தோமானால் மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களுடன் அது செயல்படுவதும் தேவையானால் சுற்றுச் சூழல் கலந்தாய்வுகளுக்கு விலக்களிக்க அது கோருவதும் விளங்குகிறது. ஆனால் அது குறித்து பகுதி சார்ந்த மக்களிடம் அது உரையாடுவதோ கருத்துக்கள் கேட்பதோ இல்லை. விபத்துக்கள் ஏற்பட்டு மூவர் இறந்தது வரை இந்த ஆபத்தான எரி பொருள் குழாய்களை குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தரை மீது கிடத்தப்பட்டிருந்ததி இருந்ததை என்னவென்று புரிந்துகொள்வது. இன்று ONGC செயல்பாடுகளை ஆதரித்து மக்கள் மத்தியில் பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு அதிகாரிக்கு அந்தச் சம்பவமே தெரிந்திருக்கவில்லை என்பது ONGC யின் அலட்சியப் போக்கை விளக்கும். இப்படியான விபத்துக்களில் மக்கள் உயிர்கள் பலியாக்கப்பட்ட பின்தான் உரிய பாதுகாப்புகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படும் என்றால் இதன் பொருள் என்ன? மக்கள்தான் ONGC யின் சோதனை எலிகளா?
  3. சுற்றுச் சூழல் ஆய்வு, அது தொடர்பான விதிமுறை கடைபிடிப்பு ஆகியவற்றை மீறுவதில் மிகவும் இகழ் வாய்ந்த வரலாற்றை உடையது ONGC. உரிய விதிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனச் சொல்லி காவிரிப் படுகையில் செயல்படும் இதன் எரிவாயுத் தளங்களில் 23 ஐ அனுமதிப்பட்டியலிலிருந்து மத்திய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் (Union Ministry of Environment, Forests and Climate Change) சென்ற மே 17, 2017ல் நீக்கியது குறிப்பிடத் தக்கது. இந்தச் செய்தியை மேலோட்டமாக வாசிக்கும்போது சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் ONGC பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும், மத்திய அரசு அக்கறையுடனும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்பது போலவும் தோன்றும். நுணுக்கமாகக் கவனித்தால்தான் இரண்டுமே மாநில மக்களைப்பற்றி இம்மியும் அக்கறையற்றுச் செயல்படுவது விளங்கும்.

இன்னொரு செய்தியைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும். சுற்றுச் சூழலைப் பாதிக்கவல்ல எந்த ஒரு திட்டமானாலும் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படும் மக்களைக் கூட்டி பொதுக் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தக் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்வது அவசியம். ஒப்பீட்டளவில் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால் மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அது தயங்கும். சென்ற 2015ல்  காவிரிப் படுகையில் மேலும் 35 சோதனைக் கிணறுகளைத் தோண்ட ONGC திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும் 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூரிலும், 5 தஞ்சாவூரிலும் அமைந்தன. இவற்றில் கடலூர் தவிர பிற மாவட்டங்களில் கருத்துத்துக் கணிப்புகள் நடந்தன. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துறை வழங்கத் தயங்கியது. சில காலம் பொறுத்திருந்த ONGC சென்ற 2015 மே 19 அன்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியது. பொதுக் கருத்துக் கணிப்புக் கேட்பது கால விரயத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துகிறது எனவும் ONGC அதனிடம் புகார் கூறியது. அதை அப்படியே ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு உரிய அனுமதியை அளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்ற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்ற ஜூன் 9, 2015 அன்று அந்த 35 திட்டங்களுக்கும் மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கியது.

சென்ற பிப் 15 (2017) அன்று மோடி தலைமையில் கூடிய ‘பொருளாதார விடயங்களுக்கான அமைச்சரவைக் குழு’ (Cabinet Committee on Economic Affairs) 31 பகுதிகளில் இயற்கை வாயு மற்றும் எண்ணை முதலான ஹைட்ரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான அனுமதியை அளித்தது. 2016 ல் உருவாக்கப்பட்ட மோடி அரசின் “கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள்” (Discovered Small Fields) திட்டத்தின் கீழ் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

19959221_1567244540014931_2368950282021424061_n

சென்ற ஜூன் 28 (2017) ல்  அந்த செய்தியின்படி காவிரி டெல்டா பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் ONGC அனுமதி கோரியுள்ளது. ஒவ்வொரு கிணறு தோண்டவும் 2 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் எனவும் ‘நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்’ மூலம் உரிய நிலங்கள் குத்தகை அடிப்படையில் கைப்பற்றப்படும் எனவும், உற்பத்தி தொடங்கியவுடன் அந்த நிலங்கள் அவரவர் வசம் திருப்பித் தரப்படும் எனவும் கூறப்படுகிறது.

தவிரவும் இப்போது மத்திய அரசு எல்லாவிதமான ஹைட்ரோ கார்பன்களை எடுக்கவும் ஒரே உரிமத்தை (sigle license) வழங்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இப்படி ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கத் தொடங்கியுள்ளன. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே இத்திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன என மாநில அமைச்சர் கருப்பண்ணன் இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. .

1991 லெயே காவேரிப் படுகையிலிருந்து பெரிய அளவில் ஹைட்ரோ கார்பன் வளங்களை உறிஞ்சி எடுப்பதென ONGC திட்டமிட்டது. அப்போது அதனிடம் ஒன்பது “ரிக்” களும் 12 கிணறுகளுமே இருந்தன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 மடங்கு உற்பத்தியை அதிகரிப்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அந்தத் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

  1. 2010 க்குப் பின் ஏற்பட்ட வறட்சியின் விளைவாகத்தான் எல்லாப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன., அதற்கு முன் மக்களுக்கும் ONGC க்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போலச் சொல்வதையும் ஏற்க இயலாது. மீத்தேன் எதிர்ப்பிற்கு முன்பே பல இடங்களில் ONGC .யை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்துள்ளன. தொடக்கத்தில்  பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியன டேங்கரில் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது  தொடங்கி அவற்றை மறித்து போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போதும் உடைப்பு, விபத்து ஏற்படும் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. .அடியக்கமங்கலம் பகுதியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் கசிவு மற்றும் எண்ணெய்ப் படலத்தால் பெருமளவு நிலங்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கும் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போது டேங்கர்களில் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதில்லை எனினும் இரவு நேரங்களில் ரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள் வழியே எண்ணைய்க் கழிவுகள் வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த உண்மைகலை விளக்கி மக்களின் அச்சத்தைப் போக்க இதுவரை ONGC முயற்சித்ததில்லை. ‘வாட்ஸ் அப்பில்’ பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்றார் எங்களிடம் பேசிய அதிகாரி. அப்படிப் பொறுப்பில்லாமல் சில வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதில் உண்மை இருக்கலாம். அது ONGC தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவு என்பதையும், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அதரற்கு உள்ளது என்பதையும் அது ஏற்கவில்லை.இவ்வளவு காலங்களையும்  விட இப்போது திடீரென போராட்டங்கள் மேலுக்கு வருகின்றன என்றால் இப்போது அதிக அளவில் போராட்டங்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்திற்குப் பிறகு மக்களின் போர்க்குணமும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளன என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
  2. வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களிடம் நேரடியாக்கப் பேசி அவர்களின் ஐயங்களைப் போக்குவது என்பதற்குப் பதிலாக ஒரு சிலரைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கையூட்டு அளித்துத் தமக்கு ஆதரவாக முன் நிறுத்தும் வேலையை ONGC செய்வதாக ஒரு கருத்து மிகப் பரவலாக நிலவுவதை எங்களால் அறிய முடிந்தது.
  3. ஜூன் 30 சம்பவங்களைப் பொறுத்த மட்டில் அன்று காலை முதல் மக்கள் அங்கு கூடி நின்று மாவட்ட ஆட்சியர் அங்கு நேரடியாக வர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆபத்தான நிலையில் எரிவாயு கசிந்து கொண்டுள்ள சூழலில் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் இறுதிவரை அங்கு வந்து மக்களைச் சந்திக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சப் கலெக்டர் ஏற்கனவே கொடுத்த உறுதி மொழிகள் பொய்த்துப் போனபின் மாவட்ட ஆட்சியரின் வாக்குறுதியை மட்டுமே நம்ப முடியும் என்கிற மக்களின் கருத்திற்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பளித்திருக்க வேண்டும். அன்று மட்டும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்திருந்தால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்திருக்கும். தேவை இல்லாமல் தடி அடி நடத்தி, பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, இன்று அம்மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதை எல்லாம் தவிர்த்திருக்கும் வாய்ப்பை மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் தவற விட்டதும், அன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியும் கண்டிக்கத் தக்க ஒன்று.

எமது பரிந்துரைகள்

  1. சிறைவைக்கப்பட்டுள்ள பத்து பேர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எந்த நிபந்தனைகளும் இன்றி நீக்கப்பட வேண்டும்.
  2. காவிரிப் படுகையில் எரிபொருள் தோண்டிவரும் ONGC யின் செயல்பாடுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் நடைபெற்ற விபத்துகள் மட்டுமின்றி மக்களின் நியாயமான ஐயங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய விசாரணை செய்ய பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் உரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனித உரிமைச் செயலாளிகள் ஆகியோர் இணைக்கப்பட வேண்டும். தற்போது ஜூன் 30 அன்று நடைபெற்ற எரிவாயு மற்றும் திரவக் கசிவு தொடர்பாக ONGC அளவில் ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்க இயலாது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர்களின் முடிவு நம்பகத் தன்மை உடையதல்ல.
  3. தற்போது கதிராமங்கலம் பகுதியில் ONGC யின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முழுமையாக இந்த ஆய்வுகள் எல்லாம் செய்யப்பட்டு மக்களின் ஐயங்கள் எல்லாம் தெளிவாக்கப்பட்டு அது ஏற்கப்படும்வரை ONGC யின் பணிகள் இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டும்.
  4. ONGC இப்பகுதியில் செய்துவருகிற, செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள், விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவை குறித்து பல செய்திகள் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளி வருகின்றன. பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை ஒன்றை உடனடியாக ONGC வெளியிட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அது பலமுறை மத்திய – மாநில அரசு நிறுவனங்களாலும். இது குறித்த ஆர்வலர்களாலும் அது கண்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த வெள்ளை அறிக்கை பேச வேண்டும்.
  5. எதிர்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் ஊர் மக்கள் ஏற்றூக் கொள்ளக் கூடிய உள்ளூர்த் தலைவர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ONGC வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
  6. அமைதியான முறையில், ஆனால் அதே நேரத்தில் உறுதியாகப் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை இக்குழு பாராட்டுகிறது.
  7. போராடுபவர்கள் வாட்ஸ் அப் முதலான நவீன சாதனங்களைப் பயன்படுத்தும்போது அதன் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேறெங்கோ நடந்த ஒரு விபத்தைக் கதிராமங்கலத்தில் நடந்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டதை எங்களிடம் பேசிய அதிகாரி சுட்டிக் காட்டினார். இது போன்ற செய்திப்பரப்பல்களில் நம்பகத் தன்மை மிக மிக முக்கியம் என்பதையும் நாங்கள் நினைவூட்டுகிறோம்.

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -20, செல்: 9444120582

 

 

 

 

 

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்

 உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சை
ஜூன் 19, 2012

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். பழங்குடிப் பட்டியல் இனத்தவரான (scheduled tribes) இவர்கள் பன்றி வளர்ப்பு, கூடை முடைதல், அம்மி கொத்துதல் முதலான தொழில்களைச் செய்து பிழைத்து வருகின்றனர். சிலர் விவசாயம், கொத்து வேலை முதலியவற்றையும் செய்து வருகின்றனர்.

தஞ்சை நகரை ஒட்டியுள்ள அன்னை சிவகாமி நகரிலுள்ள குறவர் குடியிருப்பில் கடந்த வாரத்தில் 60 பழங்குடிக் குறவர் பெண்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதமிருந்த செய்தியைப் பத்திரிக்கைகளில் படித்தோம். இவர்களில் நான்கு பெண்களின் உடல்நிலை மோசமானதையொட்டி அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்தோம்.. தஞ்சை, அரியலூர், திருவாரூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறைகளால் தாங்கள் குற்றப்பரம்பரையினராக நடத்தப்பட்டுப் பொய்வழக்குகள், சட்ட விரோதக் காவல், சித்ரவதை முதலியவற்றால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். போராட்டத்தை வழி நடத்திய விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் விவேகானந்தன் மற்றும் மனித உரிமைகளில் அக்கறை உள்ள சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இப்பிரச்சினை குறித்து விசாரிக்கக் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
4. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம், பேராவூரணி,
5. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
6. பேரா. சி. சுப்பிரமணியன், தஞ்சை

முதற் கட்டமாக சென்ற 11ந்தேதி அ.மார்க்ஸ் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அன்று மாலை மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் உண்ணாவிரதமிருந்த பெண்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

இரண்டாங் கட்டமாக எம் குழுவினர் அனைவரும் நேற்றும் இன்று காலையும் தஞ்சை சென்று பாதிக்கப்பட்ட சுமார் 50 குறவர் இன ஆண்கள் மற்றும் பெண்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், மாவட்டக் கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி ஐ.பி.எஸ் ஆகியோரையும். தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கேப்டன் துரை, மாநிலப் பொருளாளர் திருவாதிரை ஆகியோரையும் சந்தித்தனர்.
கு2

பின்னணி

காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவெங்கிலும் பல பழங்குடிகளையும், சாதிகளையும் “குற்றப் பரம்பரை” என அறிவித்து அவர்களைக் குற்றப்பறம்பரைச் சட்டத்திற்குள் (Criminal Tribes Act -1911) கொண்டுவந்திருந்த வரலாற்றை நாம் அறிவோம். இந்தப்பட்டியலிலுள்ள மக்களில் 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அனைவரும் தினம் மாலையில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து அங்குள்ள பதிவேட்டில் தம் கைரேகைகளைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் அங்கேயே தங்கிக் காலையில்தான் வீடு திரும்ப வேண்டும். வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டுமாயின் காவல் துறையிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இப்படியான ஒரு வாழ்வை வாழ நேர்ந்த இம்மக்களைக் காவல்துறையினர் எவ்வெவ் வகைகளிலெல்லாம் பயன்படுத்தியிருப்பர் என்பதை யாரும் யூகித்துக் கொள்ள இயலும். இலவச உழைப்பு, பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பவை தவிர தேவைப்படும்போதெல்லாம் திருட்டு வழக்குகளில் தொடர்புபடுத்திச் சிறையிலடைத்தல் என்பன இக்கொடுமைகளில் சில.

சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் இக்கொடுமைகட்கு எதிராக மக்கள் ஆங்காங்கு போராடினர். மதுரைக்கருகிலுள்ள பெருங்காமநல்லூரில் வாழ்ந்த பிரான்மலைக் கள்ளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 ஆண்களும் 1 பெண்ணும் இறந்தனர். முத்துராமலிங்கத் தேவர் போன்றோரும் இச்சட்டத்திற்கெதிரான போரட்டங்களை நடத்தினர். சுதந்திரத்திர்குப் பின் இச்சட்டம் நீக்கப்பட்டது.

சட்டம் ஏட்டளவில் நீக்கப்பட்டபோதும் நமது காவல்துறையினரின் நெஞ்சத்திலிருந்து அது நீங்கவில்லை. இந்தச் சட்டம் அளித்த அபரிமிதமான அதிகாரங்களை அவ்வளவு எளிதாக அவர்கள் இழந்துவிடத் தயாராக இல்லை. ஒருகாலத்தில் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும் எண்ணிக்கையில் பலமாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்தும் வாழ நேர்ந்த சாதியினர் தேர்தல் அரசியலினூடாக வலுவான அரசியல் சக்திகளாக மாறினர். ஆனால் அத்தகைய வாய்ப்புப் பெற்றிராத பழங்குடியினர்களான இருளர்கள், குறவர்கள், ஒட்டர்கள் முதலானோர் காவல்துறையினரால் குற்றப் பரம்பரையினராக நடத்தப்படுவது தொடர்ந்தது.. ஆண்டு இறுதியில் கணக்கு முடிக்கவும், கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை முடிக்கவும், சில நேரங்களில் காவல் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படும் திருட்டுக் கும்பல்களைக் காப்பாற்றவும், பதவி உயர்வுகளுக்காகவும், பதக்கங்கள் (out of turn promotion and gallantry awards) பெறுவதற்காகவும் இவர்கள் கைது செய்யப்படுவர். வீடு புகுந்து இழுத்துச் சென்று பல நாட்கள் வரை சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து, குற்றங்களை ஒப்புக் கொள்ளச் செய்து சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு தேடி வரும்போது இளம் பெண்கள் தென்பட்டால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப் படுவர். பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதும் உண்டு.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை விழாவை வெகு விமரிசையாகக் காவல் நிலையங்களில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரியும். அதை ஒட்டி பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடக்கும். ஆயுத பூஜை கொண்டாடும்போது காவல் நிலைய லாக் அப் அறை காலியாக இருக்கக் கூடாதாம். அதற்காக யாராவது ஒரு குறவரைக் கொண்டுவந்து பொய் வழக்கொன்றைப் போட்டு அடைத்து வைப்பார்களாம்.

காலங் காலமாக நடைபெற்று வந்த இக்கொடுமைகளை எதிர்த்துத்தான் இப்போது அந்தப் பழங்குடிப் பெண்கள் காலவரையரை அற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இனி அவர்களின் சொற்களினூடாகச் சில சோகக் கதைகளைக் கேட்கலாம். நாங்கள் சேகரித்த வாக்கு மூலங்களில் இரண்டு மட்டுமே மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்குமூலங்களிலிருந்து சுருக்கமாகச் சில செய்திகள்

1. முத்து வீரக் கண்டியன் பட்டி செல்வராணி க/பெ வீரையன்

“எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன். பண்ணி வளர்க்கிறது, கூலி வேலை மற்றும் வேஸ்ட் சாப்பாடு எடுக்கிறது எங்கள் தொழில். தொடர்ந்து என் புருசன் மேல கேஸ் போட்டுகிட்டே இருகாங்க. எல்லா ஸ்டேசன்லையும் அவர் மேல கேஸ் இருக்கு. மொத்தம் 17 கேஸ்கள். பிடிச்சிட்டுப்போய் சித்திரவதை பண்றாங்க. குறவன்ன்னா கேஸ் இல்லாம இருக்கக்கூடாதுங்கிறாங்க. பிள்ளைகள்

படிக்கக்கூடாதுங்கிறாங்க. போன வருசக் கடைசியில அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ்.ஐ டேவிட் இருவரும் வந்து என் புருசனத் தேடுனாங்க, ஒப்படைக்கலன்னா உன்னை பலாத்காரம் பண்ணுவேன்னாங்க. என் அப்பா துரைசாமி கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கார். வார்டு மெம்பராவும் இருக்கார். அவர் இது பற்றி மேலதிகாரிங்க கிட்டப் புகார் மனு கொடுத்தார். அதனால அவரையும் சட்டக் கல்லூரியில் படிக்கிற என் தம்பியையும் பிடிச்சுட்டுப் போனாங்க. அப்பாவ விலங்கு போட்டு தெருவுல நாய் மாதிரி இழுத்துட்டுப் போனாங்க. தம்பிய விட்டுட்டு அப்பா மேல கேஸ் போட்டாங்க. பத்து பவுன் நகை கொடுத்தா விட்டுடரேன்னு சொன்னாங்க. எங்க கிட்ட இல்லன்னோம். ஏதாவது ஒரு நகை கடையைக் காமி. இங்கதான் திருட்டு நகையை வித்தோம்னு சொல்லு. நாங்க அவன்கிட்ட வாங்கிக்கிறோம்னு சொன்னாங்க. அப்போ முல்லை பெரியார் பிரச்சினை இருந்துச்சு. முத்தூட் ஃபைனான்ஸ்லதான் குடுத்தேன்னு சொல்லுன்னு சொன்னாங்க. தாங்க முடியாம நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்ணையை ஊத்தி தீ வச்சுக்கிட்டேன்.”

50 சதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராணி சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டார். எனினும் கைது பொய் வழக்குகள் முதலியன தொடர்ந்தன. குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி பெருமாள்(60), அவரது மருமகன் அன்பழகன் (28) ஆகியோர் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், மானோஜிப்பட்டி நாகப்பா (37) மே 20ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை குறவர் பழங்குடி சங்கம் ஏற்பாடு செய்தது. இதை அறிந்த காவல் துறையினர் அன்னை சிவகாமி நகர் கணேசனை (45) கடந்த 5ம் தேதியும், இச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் செல்வராணியின் கணவருமான முத்துவீரக் கண்டியன் பட்டி வீரையனை ஏழாம் தேதியும் கைது செய்தது. மருத்துவக் கல்லூரிக் காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், வீரையனை தொலைபேசியில் அழைத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிக் கைது செய்தார். பின் அவர் அய்யம்பேட்டைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று பழைய வழக்கொன்றில் சிக்கவைக்கப்பட்டார்.

நேற்று மாலை பிணையில் விடுதலை ஆன அவரை சிறை வாசலிலேயே சாதாரண உடையிலிருந்த போலீசார் மீண்டும் கைது செய்ய முனைந்துள்ளனர். அவரது வழக்குரைஞர் காமராஜ் தலையிட்ட பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை தன்மீது 17 பொய் வழக்குகள் போடப்பட்டன எனவும் விசாரணை முடிந்த இரு வழக்குகளிலும் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீரையன் எம் குழுவிடம் கூறினார்.

கு 2

2. முருகாயி க/பெ ரஜினி

“மானோஜிப்பட்டி சரபோஜி நகரில் நாங்க இருக்கோம்.நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் தவிர கொத்தனார் வேலையும் அவர் செய்வார். 2005 லிருந்து எ3ன்னையும் என் புருசன், தம்பி, மாமியார், ஓப்படியா இப்டி எல்லாரையும் குடவாசல், அரியலூர், புதுக்கோட்டை, மெடிகல் காலேஜ் இப்படி பல போலீஸ்காரங்க பிடிச்சு, அடிச்சு, சித்ரவதை பண்ணி பொய் கேஸ் போட்டு கொடுமைப் படுத்திருக்காங்க. 2005ல குடவாசல் போலீஸ் என் புருசனப் புடிச்சிட்டுப்போயி 30 நாள் வச்சிருந்தாங்க. போய்க் கேட்டா காட்ட மாட்டாங்க. அடி தாங்க முடியாம என் புருசன் தப்பிச்சு ஒடிட்டாரு. உடனே எங்கள தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. என்னை, மாமியார், தம்பி, அண்ணன் நாலு பேரையும் புடிச்சுட்டுப் போனாங்க. மாமியாரை தஞ்சாவூர் நூலகக் கட்டிடத்துக்குப் பக்கத்துல ஒரு மாடியில வச்சு அடிச்சாங்க. அண்ணன், தம்பி ரண்டு பேரையும் குடவாசல் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என்னையும் நாலு வயசு, ஒன்றரை வயசுள்ள என் ரண்டு பிள்ளைகளையும் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என் பிள்ளைங்க போட்டிருந்த வெள்ளி அரணா, மோதிரம் எல்லாத்தையும் புடுங்கிட்டாங்க. என்னை ஒரு வாரம் போட்டு அடிச்சாங்க. என் புருசன் போய் அரெஸ்ட் ஆனார். அப்புறந்தான் எங்களை விட்டாங்க.
5பேர் மேல கேஸ் போட்டாங்க. அப்புறம் பெயிலில் எடுத்தோம். ஆனா மறுபடி மெடிகல் காலேஜ் ஸ்டேசன்ல அவரைக் கைது செய்து 20 நாள் வச்சு அடிச்சாங்க. அப்புறம் அவர் மேல 4 கேஸ் போட்டு திருவையாறில ரிமான்ட் பண்ணினாங்க. மறுபடி பெய்ல் எடுத்தோம். 2009ல் அரியலூர் ஸ்டேஷன்லேருந்து பிடிச்சுட்டுப் போய் ஒரு வாரம் வச்சிருந்து அடிச்சுச் சித்ரவதை பண்ணி அப்புறம் ஒரு கேஸ்ல ரிமான்ட் பண்ணினாங்க. அதோட முடியல. நான், என் ஓப்பிடியா, மாமியார், சித்தப்பா மொத்தம் 11 பேர், ரண்டு ஆண், 9 பெண்கள திருச்சி போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போச்சு.. திருச்சி டோல்கேட் மண்டபத்தில் வச்சு ராத்திரியெல்லாம் அடிச்சாங்க. சித்தப்பாவையும், மாமியாரையும் விட்டாங்க. என்னையும் ஓப்பிடியாவையும் புடவையெல்லாம் அவுத்துட்டு வெறும் பாடி, பாவாடையோட 3 பெண் போலீஸ்கள் தொடை மேல ஏறி நின்னு ஆண் போலீசை விட்டு அடிக்கச் சொன்னாங்க. இப்படி ஒரு வாரம் நடந்துச்சி. அப்புறம் திருமானூர் ஸ்டேசனுக்குக் கொண்டுபோயி மத்தவங்க மேல குண்டர் சட்டம் போட எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு விட்டாங்க. என் கொழுந்தனார் அப்புறம் அண்ணன் 2 பேர் மேல குண்டர் சட்டம் போட்டாங்க.

2010ல மறுபடி மெடிகல் காலேஜ் போலீஸ் வந்து பிடிச்சது. அங்கே வந்த புதுக்கோட்டை போலீஸ் எங்களை ஆலங்குடி கொண்டு போச்சுது. 8 நாள் வச்சிருந்தாங்க. நாலு நாள் என்னையும் எம் புருசனையும் பத்துப் பத்துப்பேர் சுத்தி நின்னு அடிச்சாங்க. அப்புறம் 6 பேர் மேல கேஸ் போட்டாங்க. எம் மேலையும் (24) ஓப்பிடியா (22) மேலையும் கொள்ளை முயற்சின்னு கேஸ் போட்டாங்க.

அப்புறம் அம்மாபேட்டையிலுள்ள அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ பஸ்சை நிறுத்தி ஏட்டு செழியன், ரவி ஆய்வாளர், சுபாஷ் சந்திர போஸ் என்கிற மூணு போலீஸ்களும் என்னை, அண்ணனை, வீட்டுக்காரரை அழைச்சிட்டுப் போனாங்க. இரவு 9 மணிக்கு என்னை விட்டுட்டாங்க. மறு நாள் போனேன். அவங்களைக் காட்டல. 28 நாள் இப்படி வச்சு அடிச்சாங்க. மஜிஸ்ட்ரேட்டிடம் பெட்டிசன் கொடுத்த பின்புதான் ரிமான்ட் பண்ணாங்க. ஆனா அப்புறம் அவரு மேல குண்டர் சட்டம் போட்டாங்க. தெற்கு ஸ்டேஷன், மெடிகல் காலேஜ், பல்கலை கழகம், கீழவாசல்ன்னு மொத்தம் எட்டு கேஸ் அவர் மேல இருக்கு. அப்புறம் திருவெறும்பூர் ஸ்டேஷன்லையும் ஒரு கேஸ் இருக்கு.”.

அன்னை சிவகாமி நகரில் சேதுமணி மாதவன் உருவாக்கிய பெண்கள் சிறைச்சாலை.

அன்னை சிவகாமி நகரில் முருகேசன் என்பவரை அப்போது (2005) இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் தேடி வந்தார், முருகேசன் பயந்தோடிச் சென்றவுடன் அவரது வீட்டில் அந்தப் பகுதியிலிருந்த 15 பெண்களை உள்ளே வைத்துப் பூட்டிச் சுமார் 45 நாள் சிறை வைத்ததாகப் பலரும் வாக்குமூலங்கள் அளித்தனர். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், முத்தரசு, தமிழ்ச்செல்வன் முதலானவர்களும் உடந்தையாக இருந்ததாக நாகன் மகன் கணேசன் கூறினார். வேண்டும்போது வந்து பண்ணி அடிச்சு விருந்து சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டும் போவார்களாம்

ஒரு நாள் மஃப்டியில் அங்கு வந்த இன்னாசிமுத்து, தருமராஜ் என்ற இரண்டு போலீஸ்களை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த செல்லன் மகன் ஆறுமுகம் அடித்து அங்கேயே உட்கார வைத்துவிட்டார். இதற்காக அவர் பட்ட சித்திரவதைகள், அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஏராளம். ஈரோடு, சேலம், பரமக்குடி முதலான பல இடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு கொலை வழக்கும் அடக்கம். எனினும் விசாரணை முடிந்துள்ள 3 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி ஆறுமுகம் என்பவரைத் தேடி வந்து அவரது மனைவி மீனாட்சியைக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் அவரைத் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். வயதில் சிறிய அவரது கொழுந்தன்முன் அவரது மேற்சீலையை அவிழ்த்து வீசி. கொழுந்தன் மீது அவரைத் தள்ளி “அவளைக் கெடுறா” எனச் சொல்லி அடித்துள்ளனர். கையை அடித்து, பின்புறம் இழுத்து வளைத்துச் சித்திரவதை செய்ததில் மீனாட்சியின் சுண்டு விரல் நிரந்தரமாக வளைந்துள்ளது. அவமானம் தாங்காத மீனாட்சி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முனைந்துள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்பதற்காக அவரது வீட்டார் அவரைக் கண்காணிப்பில் வைத்துப் பாதுகாத்துள்ளனர். தனது ஒன்பதாவது படிக்கும் மகளையும் பன்னிரண்டாவது படிக்கும் மகனையும் பள்ளியில் சென்று அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவமானம் செய்து, “நீங்கள்லாம் திருந்தினா எப்படி எங்களுக்கு வழக்குக் கிடைக்கும். எங்களின் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன செவாங்க? உங்களை நாங்க திருந்த விட்ருவோமா?” என ஏட்டு செழியனும் ஆய்வாளர் ரவிச்சந்திரனும் பள்ளியிலிருந்து விரட்டியதாகவும் மீனாட்சி வாக்குமூலம் அளித்தார். மகள் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

சித்திரவதைகளில் லாடம் கட்டுவது, விரல்களில் ஊசி ஏற்றுவது, சிகரெட்டால் சுடுவது, மிக அசிங்கமாகப் பேசுவது என இந்த அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

பெண்கள் மீதுப் பொய்யாகத் திருட்டுக் கேஸ்கள் போடுவது தவிர கஞ்சா கேஸ்கள் போடும் கொடுமையும் இங்கு நடந்துள்ளன. ஆனந்த் மனைவி கல்யாணி இவ்வாறு தன்மீது பொய்யாகக் கஞ்சா வழக்கு போடப்பட்டது குறித்து எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செழியன் என்னும் ஏட்டு காளியப்பனின் மனைவி பங்காருவின் வீட்டுப்பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். செழியன், ஆய்வாளர் சோமசுந்தரம் இருவரும் அவர்களின் மகன் ராஜாவின் டி,வி,எஸ் ஃபோர்ட் எனும் இரு சக்கர வாகனத்தையும் (எண்: டி.என். ஏ.கே 49/ 7480) எடுத்துச் சென்றுள்ளனர். ஓட்டர் அய்.டியையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் மானோஜிப்பட்டியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைக்குப்பின் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட்டார். சிறையிலிருந்தபோது அவர் இறந்து போனார். 2008ல் முன்னயம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற 9 வயதுச் சிறுவனைச் சமயபுரம் காவல் துறைக் கைது செய்து கொண்டு சென்று கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்து தலையில் கடுமையான காயங்களுடன் வீட்டில் கொண்டு சென்று போட்டது. மூன்று நாட்களில் அவன் இறந்து போனான்.

இம்மக்ககள் அளித்துள்ள இந்த வாக்கு மூலங்களைப் படித்தால் நம் காவல்துறையிடம் இத்தனை வக்கிரங்கள் புதைந்துள்ளனவா என ஒருவர் வியப்படைவதைத் தவிர்க்க இயலாது.

நிர்வாகத்தின் விளக்கங்கள்

மாவட்ட ஆட்சியரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது தன் அதிகார வரம்பிற்குள்ன் சாத்தியமான வகையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த விசாரணையில் காவல் அதிகாரிகள்மீது கூறப்பட்டிருக்கும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அவர் எங்களின் குற்றச்சாட்டுகளை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லுமாறும் வேறு எந்தெந்த முகமைகளிடம் இது குறித்துப் புகார்கள் செய்ய இயலுமோ அங்கெல்லாமும் முயற்சியுங்கள் என்றும் கூறினார். காவல்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாக இருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது என்பதைச் சொல்லி வந்தோம்.

ஐ.ஜி அலெக்சாண்டர் மோகன் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கிரிமினல்கள் மீது மட்டுமே தாங்கள் வழக்குகளைப் போடுவதாகவும், பொய் வழக்குகள் போடுவதில்லை எனவும் கூறினார். குற்றவாளிகள் மீது வழக்குகள் போடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஒரு இனத்தையே குற்றவாளியாகக் கருதி நடவடிக்கை எடுப்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம் எனச் சொன்னபோது அப்படியெல்லாம் இல்லை எனத் தான் குறவர் பிரதிநிதிகளிடம் விளக்கி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளனர் எனப் பதிலளித்த அவர் கண்காணிப்பாளரிடம் பேசுமாறு கூறினார். கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி மிகவும் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டார். காவல் துறை அதிகாரிகள் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

1. காவல் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளே இந்த அத்து மீறல்களுக்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பான போதிலும் உயர் அதிகாரிகள் இதற்கு உடந்தையாகவும், இது குறித்து முறையான விசாரணைக்குத் தயாரில்லாமலுமே உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் பழங்குடிப் பிரதிநிதிகள் ஐ.ஜி அலெக்சான்டர் மோகனைச் சந்திக்கச் சென்றபோது அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வேண்டுமானால் நீங்களே போலிஸ் ஸ்டேஷனை நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். இன்று அவர் தஞ்சையில் இருந்தும் நாங்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டும் எங்களை அவர் சந்திக்கவில்லை. தொடர்ந்து சில மாதங்களாக இந்த அத்து மீறல்கள் குறித்துப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருந்ததை மாவட்டக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. இன்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அக்கறையுடன் நாங்கள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டது குறிப்பிடத் தக்கது. வெறும் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் நீதி கிடைக்க வழி இல்லை என்பதையே இவை அனைத்தும் உறுதி செய்கின்றன.

2. குறவர்கள், இருளர்கள், ஒட்டர்கள் போன்ற பழங்குடிகள் எண்ணிக்கையில் சிறுத்தும் எந்த ஓரிடத்திலும் பெரும்பான்மையாக இல்லாதும் இருப்பதால் இவர்களின் பிரச்சினைகளை எந்த அரசியல் கட்சிகளும் பொருட்படுத்துவதில்லை. மிகவும் அடித்தள மக்களாகவும் எவ்வகையிலும் அரசியல் அதிகாரமும் அற்றுள்ள இவர்களின் பிரச்சினைகளில் இடதுசாரிக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை வழி நடத்துவது பாராட்டுக்குரியது. எனினும் குறிப்பான வழக்குகள் புகார்கள் ஆகியவற்றைக் காவல் துறை அதிகாரிகள் மீது பதிவு செய்து முறையான வழக்குகளை அத்து மீறிய காவல் அதிகாரிகளின் மீது மேற்கொள்ளும் முயற்சி இதுவரை செய்யப்படாதது வருந்தத் தக்கது.

3. இது போன்று பொய் வழக்குகள் போடுவதன் மூலம் திருட்டுக்களும், கொள்ளைகளும் குறைந்ததில்லை என்பதை காவல்துறை கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுவது குறித்தும் அதற்குக் கவலை இல்லை.

4. இதுவரை இவ்வாறு பழங்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்த வழக்குகள் அனைத்திலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் காவல்துறைக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

5. பெண்களை இவ்வாறு கொண்டுவந்து சித்திரவதை செய்து திருட்டு மற்றும் கஞ்சா வாழக்குகள் போடப்படும் கொடுமைகட்கும் அதிக முன்னுதாரணங்கள் இல்லை.

6. தஞ்சாவூரில் உள்ளவர்களைக் கொண்டு சென்று ஈரோடு, சேலம், பரமக்குடி முதலிய ஊர்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவர்களுக்கு உறவினர்களோ, தொடர்புகளோ உள்ளனவா எனக் கேட்டபோது அப்படி இல்லை என்பது தெரிய வந்தது. பொதுவாகப் பழக்கமில்லாத பகுதிகளில் திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் எந்த வீடுகளிலும் திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ அவை ந்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

7. பலர் மீது அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் திருடியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன. மானோஜிப்பட்டி பொதிகை நகரைச் சேர்ந்த பொன்னன் மகன் மணி சேலம் சிறையில் இருந்த காலத்தில் பந்தநல்லூரில் திருடியதாகப் பிடித்துச் சென்று 9 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து அடித்துள்ளனர். சேலம் சிறையில் இருந்ததை அவர் நிறுவியவுடன் அவர் மீது கஞ்சா வழக்குப் போடுச் சிறையில் அடைத்தனர்.

8.. காவல் துறை பழங்குடிக் குறவர்களைத் தேவைப்படும்போது வழக்குகள் போடுவதற்கான சேமிப்புப் படையாகவே வைத்துள்ளது.. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அதிக அளவில் கைது செய்யப்படும் அவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப் படுகின்றனர். சிறிய அளவில் கைதுகள் நடக்கும்போது ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படுகின்றன. கைதுகள், சட்ட விரோதக் காவல்கள், சித்திரவதைகள், சிறை வாழ்க்கை, வழக்குகள், பிணை விடுதலைக்கு அலைதல் என்பதாக அவர்களின் வாழ்க்கை கழிகிறது.

எமது கோரிக்கைகள்

இப்பழங்குடி மக்கள் காவல்துறை மீது வைக்கும் ஏராளமான குற்றச்சாட்டுகளை விசாரித்து நீதி வழங்குவது ஆர்.டி.ஓ விசாரணையில் சாத்தியமே இல்லை என்பதால் பதவியில் உள்ள நீதிபதி ஒருவரால் இவை விசாரிக்கப்பட அரசு உத்தரவிட வேண்டும்..

சேதுமணி மாதவன், சுபாஷ் சந்திர போஸ் சோம சுந்தரம், ரவிச்சந்திரன், தமிழ்ச் செல்வன், முத்தரசு, பழனியப்பன் முதலான ஆய்வாளர்கள் ரவி, செழியன், தருமராஜ், பன்னீர்செல்வம், பத்மநாபன் முதலான காவலர்கள் மீது இம்மக்கள் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகின்றனர். சாட்டுகின்றனர். அவர்கள் இப்பகுதியிலேயே பணியாற்றும் பட்சத்தில் விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுத் துறை நடவடிக்கை மட்டுமின்றிப் பழங்குடிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்ற விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சித்திரவதையில் இறந்துபோன முருகன், முத்துக்குமார் ஆகியோரின் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பழங்குடியினர் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் அனைத்துக் காவல் துறையினருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

பழங்குடிக் குறவர்கள்மீதான காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே இவ்வறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. இனச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருப்பது முதலான பழங்குடிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் எதுவும் இவர்களைச் சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் இவற்றைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

இது போன்ற சிறுபான்மையாக உள்ள மக்கட் பிரிவுகளின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆங்காங்கு அக்கறையுள்ள மனித உரிமை அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும்.

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ்

3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை – 600 020.
செல்: 9444120582.