உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை

[ஒரு சிறுபான்மைப் பிரிவினரின் புனித நாளில் மதக் கடமையை ஆற்றச் சென்றவர்கள், பச்சிளம் குழந்தைகள் எனவும் பாராமல் கொல்லப்படுவதுதான் எத்தகைய கொடுமை. மத உணர்வு என்பது மத வெறியாக மாறும்போது அது எத்தகைய கொடூரமாக மாறிவிடுகிறது! அன்று கொல்லப்பட்ட 253 பேர்களுக்காகவும் படுகாயம் அடைந்தோருக்காகவும் இன்று உலகமே கண்ணீர் வடிக்கிறது. இந்தன் பின்னணி என்ன, ஒரு காலநூற்றாண்டு க்கும் மேற்பட்டஇந்த அழகிய தீவின் இனம் சார்ந்த முர்டண்பாடுகள் எவ்வாறு மத முரண்பாடாக இன்று மாற்றம் கண்டுள்ளது என்பதைச் சொல்லும் கட்டுரை இது.  தமிழக வாசகர்களுக்காக எழுதப்பட்ட இக் கட்டுரை ‘மக்கள் களம்’ மே 2019 இதழில் வெளிவந்தது]

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வகையில் ஏசு பிறந்த கிறிஸ்துமஸ் நாளைக் காட்டிலும் அவர் மறு உயிர்ப்புச் செய்த ‘உயிர்த்த ஞாயிறு’ (ஈஸ்டர்) புனிதமானது என்பார்கள். கொடும் வதைகளின் ஊடாக உயிர்விட்ட ஏசு இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் புனித நாள் அது. நாற்பது நாட்கள் நோன்பிருந்த கிறிஸ்தவர்கள் காலையில் ஆலயங்களுக்குச் சென்று பூசை கண்டு வந்து நோன்பு முறித்து ஏசுவின் மறு உயிர்ப்பைக் கொண்டாடும் திருநாள் அது. ஆனால் இந்த முறை அது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மறக்க இயலாத ஒரு சோக நாளாக விடிந்தது.

இலங்கையில் நீர்க்கொழும்பு, கொழும்பு, மட்டகளப்பு ஆகிய மூன்று ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும், கொழும்பில் உள்ள ஷங்ரிலா, சின்னாமன் கிரான்ட், கிங்ஸ்பரி, மற்றும் தெஹிவளையில் உள்ள  ட்ராபிகல் இன் முதலான சொகுசு ஓட்டல்களிலும் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் 253 அப்பாவி உயிர்களைப் பறித்துச் சென்றன. தொழுது கொண்டிருந்த நிலையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே அவர்களும் வெடித்துச் சிதறினார்கள். மேலும் சுமார் 500 பேர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்குத் தூக்கிச் செல்லப்பட்டார்கள். தெமடகோடாவில் உள்ள ஒரு வசிப்பிடப் பகுதியிலும் குண்டுகள் வெடித்தபோதும் பெரிய உயிர்ச்சேதம் இல்லை. ஏப்ரல் 21 காலை மணி 8.25 லிருந்து மாலை 2.15 க்குள் எல்லாம் முடிந்தன.

இறந்தவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்பதல்ல, பிறரும் இருந்தனர். ஓட்டல்களில் கொல்லப்பட்டவர்களில் 42 பேர் வெளிநாட்டினர். இரண்டு காவல்துறையினரும் கூடக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டகளப்பு என மிகத் துல்லியமாகவும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களில் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் ஏழு பேர்களும் இலங்கையர்கள்தான் என்றபோதிலும், அவர்களை இப்படியான கொடுஞ்செயலில் கரைகண்ட ஏதோ ஒரு பன்னாட்டுப் பயங்கரவாத இயக்கம்தான் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது என்பதும் அன்றே ஊகிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் (ஏப்ரல் 23, 2019) இன்று உலகளவில் மிகப் பெரிய பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் IS, ISIS, IL, ‘இஸ்லாமிய அரசு’ என்றெல்லாம் அழைக்கப்படும் அமைப்பு அந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. ஒரு வாரத்தில் (ஏப் 29) அந்த அமைப்பின் ‘அல் ஃபுர்கான் மீடியா’ வெளியிட்ட ஒரு 18 நிமிட வீடியோவில் அதன் தலைவர் அபூ பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் உயிரிழந்த மனித வெடிகுண்டுகளைப் பாராட்டிய காட்சி ஒளிபரப்பானது. அதன் மூலம் பாக்தாதி இன்னும் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.

1983 முதல் 2009 வரை உள்நாட்டுப் போரில் அமைதி இழந்து கிடந்த நாடு இலங்கை. மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகளையும், தாக்குதல்களையும், மக்களின் இடப் பெயர்வுகளையும், இராணுவ அடக்குமுறைகளையும் சந்தித்த நாடு அது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் மட்டும் குறைந்தபட்சம் 40,000 பேர்கள் கொல்லப்பட்டதை அறிவோம். ஒரு பத்தாண்டுகள் (2009 – 2019) அமைதியாக இருந்த அந்த அழகிய தீவை மீண்டும் இப்படிச் சோகம் கப்பியது. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஐ.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய “தேசிய தவ்ஹீத் ஜமாத்”தின் (NTJ) உறுப்பினர்களைத் தேடும் வேட்டையை அரசு தொடங்கியது.

இந்த NTJ என்பது “ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்” (SLTJ) எனும் அமைப்பிலிருந்து சில ஆண்டுகள் முன் பிரிந்த ஒரு குழு. கடும்போக்கு கொண்ட இந்தக் குழுவில் அதிகபட்சம் 150 பேர்கள்தான் இருப்பார்கள் என அறியப்படுகிறது. இதன் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிம் ஈஸ்டர் தாக்குதலின்போது  ஹோட்டல் ஒன்றில் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறியதும் தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள அந்த அமைப்பின் பிற உறுப்பினர்களும் மனித வெடிகுண்டுகளாக இருக்கலாம் எனவும், மேலும் இப்படியான தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் பீதி பரவியது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த கால்நூற்றாண்டில் எத்தனையோ தாக்குதல்கள், கலவரங்கள், இன அழிப்புகள், படுகொலைகள் நடந்தபோதும் இன்றைய இந்தத் தாக்குதல் அவற்றிலிருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்டுள்ளது. இப்படியான மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் அப்போதும் கூட நடத்தப்பட்டு ராஜிவ் காந்தி உட்படப் பலர் அவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்றபோதும் இப்படியான ஒருங்கிணைக்கப்பட்ட துல்லியமான தொடர் தாக்குதல்களாக அவை இருந்ததில்லை. அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சொகுசு விடுதிகள் குறிவைத்துக் தாக்கப்பட்டதும் இல்லை.

அதேபோல இதுவரையிலான முரண்பாடுகளும் மோதல்களும் இப்படி மத அடையாளங்களின் அடிப்படையில் நடக்கவும் இல்லை. 2012 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் மொத்த மக்கள் தொகை 22 மில்லியன். அவர்களில் பௌத்தர்கள் 70 சதம். ஹிந்துக்கள் 12.6 சதம். முஸ்லிம்கள் 9.7 சதம். கிறிஸ்தவர்கள் 7.6 சதம். பௌத்தவர்கள் அனைவரும் சிங்களர்கள். இந்துக்கள் எல்லோரும் தமிழர்கள். முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதும் அவர்கள் தனி இனமாகவே அடையாளம் காணப்படுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் சிங்கள இனத்திலும் இருந்தனர், தமிழர்களிலும் இருந்தனர். தமிழ் பேசும் மக்களைப் பொருத்தமட்டில் அவர்கள் பூர்வீகத் தமிழர்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும், மலையகத் தமிழர்கள் எனவும் பிரிந்துள்ளனர்.

சிங்களக் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தனி அரசியல் அடையாளத்துடன் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை ஈழ விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். அதனால் சிங்கள இராணுவம் பலமுறை கிறிஸ்தவ ஆலயங்களைக் குறிவைத்துத் தாக்கியதுண்டு. அப்படியான தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் அவை தமிழர்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அன்று கருதப்பட்டதே ஒழிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது இல்லை.

உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்த நிலை முற்றாக மாறியுள்ளது. இன்று இன முரண்பாட்டின் இடத்தை மத முரண்பாடு பிடித்துள்ளது. 2009 க்கு முந்தைய உள்நாட்டுப் போரின்போதும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். அதெல்லாமும் கூட இன முரண்பாடாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டன. பௌத்தர்களும்கூட இலங்கையை பௌத்த நாடாகவும் பௌத்த அரசாகவும் அடையாளப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருந்தபோதிலும் கூட, தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை இன அடிப்படையில்தான் பார்த்தனர். பௌத்தர்கள் இன ஆதிக்கத்தின் ஒரு கருவியாகவே மதத்தைப் பயன்படுத்தினர்.

இன்று அங்கு முரண்பாடுகள் மத அடிப்படைவாத நிலை எடுப்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ‘பொதுபல சேனா’ எனும் பெயரில்  போருக்குப் பிந்தைய இலங்கையில் உருவாகியுள்ள அமைப்பு தன்னைத் தீவிரமான பௌத்த மதவாத அமைப்பாக முன்னிறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரின் மத்தியில் 2004ல் உருப்பெற்ற தீவிர வலதுசாரி இனவாதக் கட்சியான  “ஜாதிக ஹெல உருமய” விலிருந்து போருக்குப் பின் பிரிந்த அமைப்புதான் பொதுபல சேனா. கலகொட ஞானசாரா, கிராம விமல்ஜோதி, திலந்த விதநாகே முதலான பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு 2012ல் தன் முதல் மாநாட்டை நடத்தியது. ‘பௌத்தத்திற்கு ஆபத்து’ என்பதான ஒரு அரசியலை அது முன்னிறுத்தி இன்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்களை இலக்காக்கிய ஒரு மதவாத அரசியலை அது முன்வைக்கிறது. 2014 இறுதியில் இவ்வமைப்பு இலங்கையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் பௌத்த மதவாத அமைப்பான “969” எனும் இயக்கத்தின் தலைவர் பிக்கு விராத்து அழைக்கப்பட்டபோது அவருக்கு விசா அளிக்கக் கூடாது என இலங்கை முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராஜபக்‌ஷே அரசு அவருக்கு விசா அளித்தது. பௌத்தத்திற்கு உலக அளவில் ஆபத்து வந்துள்ளதாகவும், தமது அமைப்பு பொது பல சேனாவுடன் இணைந்து செயல்படும் எனவும் அப்போது அவர் கூறியது குறிப்பிடத் தக்கது. பொதுபலசேனா ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் தொடர்பில் உள்ளது. அதன் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கலந்து கொள்வதாக ஒரு செய்தி வெளியாகிப் பின் அது மறுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர் அரசியல் என்பதில் சைவத்தின் தாக்கம் எப்போதும் இருந்துவந்தது என்றாலும் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ அமைப்பின் வடிவில் அது அமைந்ததில்லை. ஆனால் இன்று அங்கே இந்தியப் பாணியில் சிவசேனா உருவாகியுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தம் தனது தள்ளாத வயதில் இந்திய இந்துத்துவ அமைப்புகள் போல இராணுவச் சீருடையுடன் மேடைகளில் தோன்றுகிறார். ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி  முதலான இந்திய மதவாத அமைப்புகளுடன் இணைந்து தாம் செயல்படுவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார். இந்தியப் பாணியில் மதமாற்றத் தடைச் சட்டம் ஒன்று இலங்கையிலும் நிறைவேற்ற வேண்டும் எனவும், “மாடறுப்பு” (மாட்டுக் கறி) தடை செய்யப்பட வேண்டும் எனவும் கோருகிறார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பசுவதைக்கு எதிரான சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன இப்படியான ஒரு அரசியல் பத்தாண்டுகளுக்கு முன் அங்கு கிடையவே கிடையாது.

கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கு சிறிய அளவில் தொடங்கின. மார்ச் 2018ல் அம்பாறை, கண்டி முதலான இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். முஸ்லிம் உணவு விடுதிகளில் கருத்தடை மாத்திரைகள் உணவில் கலக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு இக்கலவரங்கள் தூண்டப்பட்டன. வன்முறைகளில் இரு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ‘மஹாசேன பலகாய’ எனும் சிங்கள இனவாத அமைப்பும் இதில் முன்னின்றது. கண்டியில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009 க்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் நிலை அப்போதுதான் ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. மொத்தத்தில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இன்று  பொதுபல சேனா, சிங்கள ராவய, மஹாசேன பலகயா, சிங்ஹலே முதலான சிங்கள இனவாத அமைப்புகள் 2012 க்குப் பின் முஸ்லிம்களைக் குறி வைத்து இயங்குகின்றன என அப்போது பத்திரிகைகள் எழுதின.

சுமார் ஒரு மாதம் முன் ஏப்ரல் 16, 2019 ல் அனுராதபுரத்திற்கு அருகில் உள்ள குண்டிச்சான் குளம் எனும் இடத்தில் உள்ள கிறிஸ்தவ மெதாடிஸ்ட் சர்ச் ஒன்று தாக்கப்பட்டது. அன்று கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான “குருத்து ஞாயிறு”. தாக்கியவர்கள் ராஜபக்‌ஷேவின் ‘ஸ்ரீலங்கா மக்கள் கட்சி’யைச் (SLPP) சேந்தவர்கள். அப்போது 12 கிறிஸ்தவர்களை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் The Sunday Times இதழ் எழுதியது (ஏப்ரல் 21, 2019).

இவை எல்லாம் பெரிய அளவிலான மதக் கலவரங்களாக மாறவில்லை ஆயினும், உள்நாட்டுப் போருக்கு முந்தைய வன்முறைகளுக்கும் பிந்தைய வன்முறைகளுக்கும் இடையிலான இந்த அணிசேர்க்கைகளும், பண்புமாற்றங்களும் கூர்மையாகக் கவனிக்கத் தக்கன.

இன்று நடந்துள்ள உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதப் படுகொலைகளைப் புரிந்துகொள்ள நாம் இத்துடன் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய இந்த வன்முறைகளை நிகழ்த்திய மனித வெடிகுண்டுகள் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தீவிரவாத முஸ்லிம் இயக்கம் ஒன்றைச் சேந்தவர்கள் ஆனாலும், அவர்களைத் துல்லியமாகப் பின்னின்று இயக்கியது பன்னாட்டுப் பயங்கரவாத அமைப்பான ISIS. இந்தப் பின்னணியைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மைத்ரிபால – விக்ரமசிங்கே அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து இது குறித்த எச்சரிக்கை இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் ஒருவர் இப்படி நடக்கும் என அஞ்சி தான் உயிர்த்தநாள் பூசைக்குச் செல்லவில்லை என வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். தனக்கு ஏன் இந்த எச்சரிக்கை தெரிவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் கேட்டுள்ளார். பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கும் உள்ள அரசியல் பகையினால் விளைந்த ஆளுகைத் தோல்வி என இதை எடுத்துக் கொள்ளலாமா, இல்லை இதன்பின் ஒரு மிகப் பெரிய சதி மறைந்துள்ளதா என்கிற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.

இலங்கையின் நலவாழ்வு அமைச்சர் ரஜிதா சேனரத்னே ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஈஸ்டர் தாக்குதலில் பங்குள்ளது என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார் (“Srilanka military linked to Easter Sunday Bombers” – JDS, May 02, 2019). ஒரு இரகசியமான உளவுத்துறை அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் முந்தைய ராஜபக்‌ஷே அரசால் இஸ்லாமிய, பௌத்தத் தீவிரவாதிகள் ஊக்குவிக்கப்பட்டனர் (bankrolled) எனக் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையில் உயர் நிலையில் அமர்த்தப்பட்டிருந்த மகிந்தவின் சகோதரர் கோதபயா ராஜபக்‌ஷேதான் அதை வழிநடத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராஸிக் ஒரு இராணுவ உளவுத்துறை உறுப்பினர்” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த அளவிற்கு இவை எல்லாம் உண்மை என்பது காலப்போக்கில் வெளிப்படும். ஆனால் இந்த ஈஸ்டர் பயங்கரவாதத்தை வெறுமனே உள்ளூர் முஸ்லிம் தீவிர அமைப்பு ஒன்றுடன் மட்டும் சுருக்கிக் கொண்டு இலங்கையில் வசிக்கும் எல்லா முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று. இன்று உலகளாவிய பயங்கரவாதக் கண்ணியில் இலங்கையும் சிக்கியுள்ளது. இன்னொன்றும் இங்கு கவனத்துக்குரியது. ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினர் என்கிற வகையில், இலங்கைத் தீவைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இதுவரை ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைப் பலிகடா ஆக்குவதன் ஊடாக நிலைமை இன்னும் மோசமாகும். ஆனால் அதுதான் இன்று நடந்துகொண்டுள்ளது. மிகப் பெரிய அளவில் இதை ஒட்டி முஸ்லிம் வெறுப்பு இலங்கை முழுவதும் பரப்பப்படுகிறது. இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவரும் இன்று தம் குற்றமின்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சந்தடி சாக்கில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதெல்லாம் இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போருக்குப் பின் உருவான மதவாத அரசியல் இன்று ஒட்டுமொத்தமாக முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வெறுப்பாக மாற்றப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ மதத் தலைவர்களைப் பொருத்த மட்டில் போப்பாண்டவர் முதல் இலங்கையிலுள்ள உயர் பாதிரிமார்கள் வரை மிகப் பொறுப்புடன் இந்தத் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். அமைதியாக இருக்குமாறும், பொறுமையுடன் இன்றைய துயரத்தை எதிர்கொள்ளுமாறும் தம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அருள் திரு பிஷப் வின்ஸ்டன் எஸ் ஃபெர்னான்டோ அவர்கள், “எந்த நியாயமும் இல்லாது தனக்கு அளிக்கப்பட்ட கொடுந்துன்பங்களை ஏசு தாங்கிக்கொண்டு மக்கள் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது போல நாமும் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டிய தருணம் இது. வேண்டுதல்களின் ஊடாக மனித நேயத்துடனும் நீதியுடனும் தீர்வுகளை நோக்கி நகர்வோம்” எனக் கூறியுள்ளார். கார்டினல் ரஞ்சித், “எந்த மதத்தையும் சேர்ந்த யாரையும் துன்புறுத்தலாகாது” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். “மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்” (CPA) எனும் கிறிஸ்தவ அமைப்பு, “மத விரோதங்களை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் நாம் தவிர்க்க வேண்டும். யாரையும் வெறுக்காமலும், யாருக்கும் அச்சம் விளைவிக்காமலும் இருப்போம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நமது அரசியல் தலைவர்களையும்  மதத் தலைவர்களையும் வேண்டுவது இதுதான்” எனக் கூறியுள்ளார்.

ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உயிர்த்த ஞாயிறு உரையாற்றிய போப்பாண்டவர், “தொழுகையில் இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு என் அன்பான நெருக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க துயரமான சூழலில் உயிர் நீத்த அனைவரையும் இறைவனிடம் நான் ஒப்படைக்கிறேன். இந்தத் தாக்குதலால் காயம்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏதோவொரு வகையில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோர் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதத் தலைவர்கள் ஆங்காங்கு இதை அரசியலாகவும், முஸ்லிம் வெறுப்பாகவும் மாற்றுவதற்கு முயற்சிக்காமல் இல்லை. தொடக்கத்தில் சாதாரணமாக அனுதாபம் தெரிவித்த அவர்கள் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதம் இருப்பதை அறிந்தவுடன் கடும் தொனியில் கண்டித்துள்ளனர். ஃப்ரான்சிலுள்ள வலதுசாரி National Rally Party ன் தலைவரான மரீன் லீபென், “உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்டுள்ளவர்கள் அவர்கள் கொண்ட நம்பிக்கையின் விளைவாக இந்நிலைக்கு ஆளாகியுள்ளனர். உலகெங்கிலும் இவ்வாறு துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக நான் மனம் இரங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.