பேரழிவு ஆயுத வணிகம்

(‘இளைஞர் முழக்கம்’ இதழ் மார்ச் 2011 மற்றும் ஜூன் 2011 ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரை)

உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என இளம் தோழர்கள் என்னிடம் கேட்டபோது என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ‘உலகம்’ ‘ஆயுதம்’, வணிகம் என்கிற மூன்று சொற்களில் முதல் சொல் மட்டுமே இன்றைய நிலையை விளக்க உதவும் என எனக்குத் தோன்றியது. இன்றைய உலகின் மூலை முடுக்குகள் வரை ஆயுத வணிகம் எட்டியுள்ளது. சிறிய கொலை ஆயுதங்கள் முதல் மிகப்பெரிய ஏவுகணைகள், விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை இன்று ஆயுதச் சந்தைகளில் கிடைக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி ஆயுதம் தாங்கிப் போர் செய்கிற குழுக்கள், இயக்கங்கள் யாரும் ஆயுதங்களை வாங்க இயலும். இணையத் தளங்களில் “ஆர்டர்’’ கொடுத்து ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒருவர் வாங்கிவிட இயலும். இந்த வகையில் ‘உலகம்’ என்கிற சொல் அடுத்த கிரகங்களில் நாம் குடியேறாத வரையில் பொருத்தமானதுதான்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி, எறிகுண்டு என்கிற நிலை எல்லாம் தாண்டி இன்று மிகப்பெரிய பேரழிவுகளை கண நேரத்தில் உருவாக்கி கோடிக்கணக்கான மக்களைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் உருவாகிவிட்டன. இன்றைய குறிக்கோள் இத்தகைய பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகத்தான் உள்ளது. எனவே வெறுமனே ஆயுதம் என்று சொல்லாமல் ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம்.

‘வணிகம்’ என்கிற சொல் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவருக்கொருவர் பொருட்களை விற்று, வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்கிற விவகாரமல்ல இது. பல வணிகர்கள் மத்தியில் பொருட்களைப் பார்த்து யாரிடம் வாங்குவது எனத் தேர்வு செய்கிற சுதந்திரமும் இங்கில்லை. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் இவ்வணிகத்தில் ஒரு சிலரே வியாபாரிகள். மற்ற எல்லோரும் வாங்குபவர்கள்தான். ஆக இது ஒரு ஏகபோக வணிகம். ஏகபோகத்திற்கான அத்தனை கொடூரப் பண்புகளும், விளைவுகளும் இதில் வெளிப்படுகிறது. ஆக இதனை ‘உலகப் பேரழிவு ஆயுத ஏகபோக வணிகம்’ (Global weapons monopoly) எனச் சொல்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

இராணுவச் செலவுகளுக்கே உலகம் இன்று ஆண்டொன்றுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. உலக மொத்த உற்பத்தில் சுமார் மூன்று சதம் இப்படிச் செலவழிக்கப்படுகிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை “பாதுகாப்பு ’’க்கென செலவழிப்பதை அறிவோம். 2006ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நூறு அழிவாயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 315 பில்லியன் டாலர்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் பனிப்போர் முடிவடைந்ததை ஒட்டி கொஞ்ச காலத்திற்கு அழிவாயுத விற்பனை குறைந்திருந்தது. எனினும் விரைவில் சாவு வணிகங்கள் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்கிற சொல்லாடலையும் அதையட்டி உலகம் மாறிப்போன கதையையும் நாம் அறிவோம். எனவே மறுபடியும் 2003 தொடங்கி அழிவாயுத விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் காங்கிரசுக்கான ஆய்வுச் சேவை (Congressional Research Service) அவ்வப்போது அழிவாயுத வணிகம் குறித்து ஆய்வறிக்கைகளை அளித்து வருகிறது. இணையத் தளங்களில் இவற்றைக் காணலாம். 2008ஆம் ஆண்டு அறிக்கையின்படி அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அழிவாயுத விற்பனை ஒப்பந்தங்களின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர். இதில் அமெரிக்காவின் பங்கு 37.8 டிரில்லியன் டாலர். அதாவது மொத்தச் சாவு வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 68.7 சதமாகும்.

சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் (1990) மொத்த அழிவாயுத விற்பனை 32.7 பில்லியன் டாலராகவும், இதில் அமெரிக்காவின் பங்கு 10.7 பில்லியனாகவும் இருந்தது. எவ்வளவு வேகமாக அமெரிக்கா இந்த அழிவாயுத விற்பனையில் வளர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

அழிவாயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிற்கிற நாடுகளாக உள்ளவை ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், சீனா, இஸ்ரேல், நெதர்லான்ட், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, உக்ரேன், கனடா ஆகியன. இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்கிற அழிவாயுத வணிகம் மொத்தத்தில் 32 சதம். சாவு வணிகத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு ஏகபோகம் கொண்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அழிவாயுதங்களை யார் அதிகம் வாங்குகின்றனர்? எந்தெந்த நாடுகள் இத்தகைய அழிவாயுத இறக்குமதிக்கு அதிகம் செலவிடுகின்றன? இந்த விஷயத்தில் பிற எல்லா நாடுகளையும் ‘பீட்’ பண்ணி நம்பர் ஒன்னாக நின்று அமெரிக்க விசுவாசம் காட்டிக் குழைகிற நாடு இந்தியா.

2000 த்தில் மட்டும் 911 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழிவாயுதங்களை அது இறக்குமதி செய்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரித்து 2003இல், 2802 பில்லியன் டாலராகவும், பின்பு சற்றுக் குறைந்து, மீண்டும் 2007இல், 2179 பில்லியன் டாலராகவும், 2009இல், 2116 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிச் செலவை 158 பில்லியன் டாலரிலிருந்து 2000 த்தில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2009ல் இது 1146 பில்லியன் டாலராக இருந்தது. பிற முக்கியமான ஆயுத இறக்குமதி நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிரீஸ், தென்கொரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், சீனா, நார்வே ஆகியன. சீனாவைப் பொருத்தமட்டில் படிப்படியாக தனது அழிவாயுத இறக்குமதிச் செலவை 2015 பில்லியன் டாலரிலிருந்து (2009)ல் 595 பில்லியன் டாலராக 2009 ல் குறைத்துள்ளது. அதுவே ஒரு ஆயுத ஏற்றுமதி நாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

பஞ்சைப் பராரி நாடுகளெல்லாம் இத்தகைய அழிவு ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகைகளைப் பார்க்கும்போது நமக்குப் பகீரென்கிறது. அமெரிக்க இராணுவ மையமான பென்டகனின் தரவுகளின்படி கம்போடியா (3.04 லட்சம் டாலர்), கொலம்பியா (256 மில்லியன் டாலர்), பெரு (16.4 மில்லியன் டாலர்), போலந்து (79.8 மில்லியன் டாலர்) ஆகியன அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கின்றன. பென்டகனின் இன்னொரு அறிக்கையின்படி 2008இல் அமெரிக்காவுடன் அழிவாயுத இறக்குமதி ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளான, சவூதி அரேபியா (6.06 பில்லியன் டாலர்), ஈராக் (2.5 பில்லியன்), மொராக்கோ (2.41 பில்லியன்), எகிப்து (2.31 பில்லியன்), இஸ்ரேல் (1.32 பில்லியன்), ஆஸ்திரேலியா (1.13 பில்லியன்), தென்கொரியா (1.12 பில்லியன்), பிரிட்டன் (1.1 பில்லியன்), இந்தியா (1 பில்லியன்), ஜப்பான் (840 மில்லியன்).

1987ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் கோஸ்டாரிகாவின் குடியரசுத் தலைவருமான ஆஸ்கார் ஏரியஸ் சான்செஸ் கூறினார். “கல்வி, வீட்டு வசதி, மருத்துவம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு அழிவாயுதங்களில் முதலீடு செய்வதென ஒரு நாடு முடிவு செய்யுமானால் ஒரு தலைமுறையினரின் வாய்ப்புகளையும், நல்வாழ்வையும் அது புறந்தள்ளுகிறது என்றே பொருள். இந்தப் புவியில் வாழ்கிற ஒவ்வொரு பத்து மனிதருக்கும் ஒரு கொலை ஆயுதத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் நம்மால் சாத்தியம்தான் என்றாலும் பசியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. மொத்த அழிவாயுத வணிகத்தில் முக்கால் வாசியை பின் தங்கிய நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நமது சர்வதேச நெறிமுறைகள் வழிவகுக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ஏதுமில்லை. இந்த ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பொறுப்புகள் எதையும் சர்வதேச நெறிமுறைகள் ஆயுத விற்பனை நாடுகள் மீது சுமத்துவதுமில்லை.’’

ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா

 

அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இரண்டு வழிகளில் ஆயுத விற்பனை செய்கின்றனர். முதலாவது அயல் இராணுவ விற்பனைகள் அமெரிக்க இராணுவ கேந்திரமான பென்டகன் ஊடாக இரு அரசுகளுக்கிடையே நேரடியாக பேரம்பேசி விற்கப்படுவது இது. மற்றது நேரடி வர்த்தக விற்பனைகள். இதில் ஆயுத கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாடுகளுடன் பேரம்பேசி அரசியல் உரிமம் பெற்று விற்பது. இந்த பேரத்தில் ஏராளமான ஊழல்களுக்கு இடமுண்டு.

இது தவிர அமெரிக்க அரசு தனது இராணுவ ஆயுதக் கிடங்குகளிலிருந்து மிகக் குறைந்த விலையிலும். சமயங்களில் இலவசமாகவும் தனக்கு வேண்டிய நாடுகளுக்கு கொடுப்பதும் உண்டு. தேவைக்கு அதிகமான பாதுகாப்புப் பொருட்களாக ஒதுக்கப்பட்டவை என இதற்கு பெயர். இது தவிர பிறநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சிகள் அளிப்பது பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சி எடுப்பது என்பதெல்லாம் இன்று அதிகமாகியுள்ளதை நாம் அறிவோம். செப்டம்பர் 11, 2011க்கு பிறகு இவை இன்னும் அதிகமாகியுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி,ஏ,ஈ சிஸ்டம்ஸ், போயிங், ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எஃப் ஆகிய ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள். இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். ஏழாவது மட்டுமே பிரான்சுடையது.

“சிறு ஆயுத விற்பனை” பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர், துணை இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரும் கூட அதிகம் பயன்படுத்தும் ஆயுதங்களான கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல்கள்) ஃரைபில்கள், எந்திரத் துப்பாக்கிகள், தாக்குதல் ரைப்பில்கள், எறிகுண்டு வீசிகள் எடுத்துச்செல்லக்கூடிய டாங்கி மற்றும் விமானங்களைச் சுடும் பீரங்கிகள் முதலியவை பெரிய அளவில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. இவற்றை ரொம்பவும் விலை மலிவாகவும், எளிதாகவும் யாரும் வாங்கக்கூடிய நிலை இன்று உள்ளது. அரசுகள் மட்டுமின்றி போராளிக் குழுக்கள், மாஃபியா கும்பல்கள், கடற் கொள்ளையர்கள், கடத்தல்காரர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள் எல்லோரும் இத்தகைய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கார்ப்பரேட்டுகள் இந்த விற்பனையைச் செய்கின்றனர். அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை.

உலகம் என்பது இன்று மிகப்பெரிய போர்களின் களமாக உள்ளது. 36 நாடுகளில் நடைபெறும் 40 ஆயுதப் போராட்டங்களுடன் 21ம் நூற்றாண்டு விடிந்தது 2000யில் வெளியிட்ட கணக்கு) சிவில் யுத்தம் (உள்நாட்டுப் போர்) நடைபெறும் பல நாடுகளில் போரே வாழ்வாக மாறியுள்ளது. கண்முன் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களைப் பார்த்தவர்கள் நாம். உள்நாட்டுப் போர் என்பது உன்னத அரசியல் இலட்சியங்களுக்காக மட்டுமின்றி, நிதி சேகரிப்பதற்காக, போரால் கல்வி இழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக என்றெல்லாம் போருக்குப் பன்முகப் பரிமாணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதலிய பகுதிகளில் குழந்தைகள் முதலில் அறிந்து கொள்ளும் பொருட்களில், தெரிந்துகொள்ளும் மொழிகளில் பல வகைத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் ஆகியன அடங்கும். இத்தகைய சூழலில் திருட்டு ஆயுத வணிகம் பல்கிப் பெருகியுள்ளதை விளக்க வேண்டியதில்லை. உலகில் மிகப் பெரிய அளவில் இன்று கள்ள ஆயுத வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதம் பற்றி இன்று வாய் கிழியும் அமெரிக்கா ஏகப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கிய கதைகளை நாம் அறியலாம். கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் கூட இப்படி வளர்க்கப்பட்டவர்தான். சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒசாமா உள்ளிட்ட முஜாஹிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா. நாடுகளுக்கிடையே சோதனை இல்லாமல் பெரிய அளவில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1985ல் இத்தகைய ஆப்கன் முஜாஹிதீன்களை வெள்ளை மாளிகையில் வைத்துப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீசன், அமெரிக்காவை உருவாக்கிய நமது தந்தையர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று இன்னொரு நாட்டு எல்லைக்குள், அந்நாட்டின் அனுமதியின்றி நுழைந்து ஒசாமாவையும், கூட இருந்தவர்களில் சிலரையும் சுட்டுக் கொன்று ஒசாமாவின் உடலைக் கடலில் தூக்கி வீசி எறிந்திருக்கிறது அமெரிக்கா இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது ஒசாமாவை உயிருடன் பிடித்தப்பின் சுட்டதாகச் செய்தி ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன், நடேசன், புலித்தேவன் முதலியோரை நாங்கள் இப்படிக் கொன்றதை மட்டும் பெரிது படுத்துகிறீர்களே என்கிற ரீதியில் இலங்கையில் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியும் உள்ளார். ஒருவரை ஒருவர் உதாரணம் காட்டித் தத்தம் கொடுமைகளையும் சிவிலியன்களுக்கு (பொதுமக்களுக்கு) எதிரான தாக்குதல்களையும் நியாயப்படுத்தி கொள்வதற்கு இன்னொரு பெயர் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்.

1989முதல் 1998க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆப்பிரிக்க இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகள் அளித்த வகையில் மட்டும் அமெரிக்கா 227 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. பயனடைந்த நாடுகளில் பல உள்நாட்டு மக்களைக் கொன்று குவித்தவை. அவற்றில் சில காங்கோ, அங்கோலா, புருண்டி, ருவாண்டா, சூடான், உகாண்டா மற்றும் ஸிம்பாப்வே.

இவை தவிர இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல், சைனா, தய்வான், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் அமெரிக்கா, ப்ரான்சு, பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி முதலிய நாடுகள் ஆயுதங்களை விற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் உள்நாட்டுப் போராளிகள், சிறுபான்மை மொழி மற்றும் இனத்தினர், மதத்தினர், பழங்குடியினர் ஆகியோரின் மீது ஆயுதத்தாக்குதலை நடத்திய, நடத்துகிற நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது,ஆயுத விற்பனை செழிப்பதற்கு போர்கள் அவசியம். போர்களற்ற அமைதியான உலகை ஆயுத விற்பனையாளர்களால் சகித்துக்கொள்ள இயலாது. பல நாட்டு இராணுவங்களுக்கும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிப்பதில் இந்தப் பின்னணியும் சேர்ந்து கொள்கிறது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அரசு படைகளுக்கும், ருவாண்டா மற்றும் உகாண்டாவில் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் அமெரிக்க அரசு பயிற்சி அளித்தது. சட்டபூர்வமான ஆயுத விற்பனை தவிர சட்டபூர்வமற்ற இந்த ஆயுத உதவி மற்றும் விற்பனை சென்ற இதழில் நான் முன்வைத்த புள்ளி விவரங்களில் அடங்காது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாத நாடுகள் மனித உரிமை மீறல்கள் புரிகிற நாடுகள் ஆகியவற்றிற்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் (1999ம் ஆண்டு அமெரிக்க சர்வதேச ஆயுத விற்பனை நடத்தை விதி ஆகியன வரைமுறைகளை விதித்துள்ளதாம்) இவை அனைத்தும் ஏட்டோடு சரி, துருக்கி, இந்தோனேசியா, சவூதி, இலங்கை உட்பட மனித உரிமை மீறல்கள் புரிந்த பல நாடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி உதவிகளை செய்துவந்துள்ளன.

இன்னொன்றும் நம் கவனத்திற்குரியது மிகப்பெரிய அளவு ஊழல்கள் நடைபெறும் துறையாகவும் ஆயுத விற்பனை உள்ளது. இத்துடன் இணைந்த தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசியம் முதலான சொல்லாடல்கள் ஊழலை ஊற்றி வளர்க்கின்றன. மிகப்பெரிய அளவில் குவட்ரோஷி போன்ற இடைத்தரகர்கள் (போபர்ஸ் ஊழல்) இதில் இலாபம் குவிக்கின்றனர். கார்ப்பரேட்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி யுத்த பீதியை ஏற்படுத்திப் பரப்புவது முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ சிவில் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, எதிரி நாட்டு இராணுவ முன்னேற்பாடுகள் குறித்துப் பொய்யான தகவல்களை பரப்பி போட்டியை ஊக்குவிப்பது, உள்நாட்டு ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து போருக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கிடையே இரகசிய கூட்டுகளை உருவாக்கி ஆயுதங்களின் விலையை அபரிமிதமாக உயர்த்துவது முதலியன ஆயுத விற்பனையை அதிகரிக்க கார்ப்பரேட்டுகள் மேற்கொள்ளும் உத்திகள்.

இது ஏகாதிபத்திய விரிவாக்க அரசியலுடன் தொடர்புடைய விஷயமாக இருப்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் மானியங்களை அரசுகள் வழங்குகின்றன. ஆயுத விற்பனை தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் விதிக்கப்படுகிற நிபந்தனைகள் தேசியப் பாதுகாப்பு என வருகிற போது பொருந்தாது என்கிற பிரிவு சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. போலந்து அரசிற்கு விமானங்கள் வழங்கியதற்கு லாக்கதீடு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் மானியம் வழங்கியது சமீபத்திய எடுத்துக்காட்டு. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களின் முக்கிய பணியே தமது நாட்டிலுள்ள ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக செயல்படுவதுதான். இந்தியாவில் தற்போதைய அமெரிக்க தூதர் இன்று பதவி விலகியுள்ளார். ஒரு முக்கிய ஆயுத பேரம் ஒன்றில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒன்று பயனடையாமல் போனதே இதற்கு காரணம் எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

2011 செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா பிறநாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வது மற்றும் ஆயுத உதவிகளைச் செய்வது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பாதுகாப்பு தகவல் மையம் கூறுகிறது. மிகப்பெரிய பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள இந்நிறுவனம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதாக வாக்களித்துள்ள நாடுகளுக்கு வேறெப்போதையும் விட அதிக அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் முதலான அடிப்படையில் ஆயுத விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா பெரிதும் திருத்தி அமைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2002 பிப்ரவரி 4 தேதி இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உதவி செய்த நாடுகளுக்கு இவை இது தொடர்பாக செய்த செலவுகளை ஈடுகட்ட 390 மில்லியன் டாலர்களையும் வேறுசில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக 120 மில்லியன் டாலர்களையும் பிற சட்ட விதிகளின் தடையை மீறி அளிக்க பாதுகாப்பு துறைக்கு ஒப்புதலையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை அளித்துள்ளது.

திருட்டுத்தனமாக ஆயுதங்களை உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்து அதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் இந்நாடுகள் ஈடுபடுவதற்கு புரூலியா விவகாரம் தற்போதைய நடைமுறைச் சாட்சியாக உள்ளது. மேற்குவங்க இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்கு நரசிம்மராவ் அரசு துணைபோகியுள்ளதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆக்ஸ்டாம் இன்டர்நேஷனல் சிறு ஆயுதவிற்பனை தொடர்பான சர்வதேச வலைப்பின்னல் முதலான அமைப்புகள் ஆயுத விற்பனைக் கட்டுபாடுகளை ஏற்படுத்துவதற்கான பன்னாட்டு ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது அமெரிக்கா. புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவரை இது தொடர்பான பேச்சு வார்த்தைகளிலே கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒபாமா ஆட்சிக்கு வந்த பின் மாறியுள்ள சூழல்களின் விளைவாக வேறு வழியின்றி சென்ற 2009 அக்டோபர் 15 ல் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா கலந்து கொண்டது.

எனினும் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஹில்லாரி கிளின்டன் இது தொடர்பான எந்த முடிவும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடனேயே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிற பிரிவை மேற்குறித்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். அதாவது எந்த ஒரு நாடாவது மறுப்பு தெரித்தால் அந்த முடிவு நடைமுறைக்கு வராது. இது உள்ளிருந்து கெடுக்கும் வேலை என பல நாடுகள் பேசியதன் விளைவாக இறுதியாக ஹில்லாரி இதை வற்புறுத்தவில்லை. 2012க்குள் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இன்று உள்ளது. இதற்கென 2010 ஜூலையில் ஒரு தயாரிப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் இதற்கெதிராக பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றையும் நடத்தினர். ஆயுதங்கள் குற்றசம்பவங்களுக்கு பயன்படுத்துமானால் அந்த நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என நிபந்தனை விதித்தால் அது அமெரிக்காவின் இரண்டாம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு துப்பாக்கியை குற்றச் செயலுக்கு பயன்படுத்தினால் அந்த நாடே அதற்கு பொறுப்பு. இது தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பறிக்கும் எனவும் ஆயுதப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். தொலைகாட்சி தொடர்கள் தடைசெய்யப்படுதல் என்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருக்கும் எனவும்! கூறி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடக்கூடாது என இவர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பல மூன்றாம் உலக நாடுகள் ஏழ்மையிலும், பஞ்சத்திலும், கடனிலும் அமிழ்த்தப்படுவதற்கு ஆயுத விற்பனையே காரணம். ஆயுத விற்பனைச் சந்தையாக இன்று மூன்றாம் உலக நாடுகளே உள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தில் 19 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. பொது நலத்திற்கு வெறும் ஒரு சதம், கல்விக்கு 5 சதத்திற்கும் குறைவே என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தான் இதன் அபத்தம் புரியும். ஆனால் இதை யாரும், எதிர்கட்சிகளும் கூட வலுவாக எதிர்க்கவில்லை. தேச பாதுகாப்பில் அக்கறையில்லை என்கிற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற அச்சமே காரணம்.

தேசபாதுகாப்பு என்பது இராணுவத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகிவிடுவதில்லை. பகைக்கான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே தேசபாதுகாப்பை உறுதி செய்யமுடியும். தேவையற்ற தேசிய வெறி, பேச்சுவார்த்தைகளை நம்பியிராத வல்லரசு வெறி ஆகியவையே போர்களுக்கும், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் காரணமாகின்றன. அரசியல் தீர்வு அண்டை நாடுகளுடன் சமாதானம் ,ஆக்கிரமிப்பு படைகளை திரும்பப்பெறுதல் ஆகிய முழக்கங்கள் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும் போதே அது வெற்றி பெறும். ஆயுத விற்பனையிலும் உலக மேலாதிக்கத்திலும் முன்னிற்கும் அமெரிக்காவை நம்பி பிழைக்கும் அரசுகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதொன்றே நமது இன்றைய உடனடிப்பணியாக இருக்க முடியும்.