காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல்

என்ன செய்ய வேண்டும்?

NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை..

காஷ்மீர்  ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீது பாக் ஆதரவு ஃபிதாயீன் களின் எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு நம் அனுதாபங்கள்.

2002 கலூசக் தக்குதலுக்குப் பிந்திய பெரிய தாக்குதல் இது. இதை ஒட்டி வழக்கம்போல இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே முற்றியிருந்த பகை இன்று இன்னும் மோசமாகியுள்ளது. வழக்கம்போல இரு தரப்பிலும் கடும் பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. அணுவல்லமை உடைய இரு நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இந்த ஆபத்தான உரசல் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.

இரண்டுமாதங்களுக்கு மேலாகியும் காஷ்மீரில் அமைதியை உருவாக்க இயலாத சூழலில் இது நிகழ்வது கவலையை இன்னும் அதிகமாக்குகிறது. 2003 – 2008 காலகட்டத்தில் இங்கு தீவிரவாதம் ஓய்ந்திருந்த நிலையில் அரசியல் தீர்வை நோக்கிய முயற்சியில் இந்திய அரசு இறங்காததன் விளைவு இன்று அங்கு மீண்டும் இந்த நிலை உருவாகியுள்ளது. வெறும் இராணுவ நடவடிக்கைகள் மூலமான தீர்வு எனும் அணுகுமுறையைத் தாண்டி இதர அரசியல் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை இந்திய அரசு அணுக இயலாத சூழலில் இன்றைய பாக் ஆதரவு ஃபிடாயீன்களின் தாக்குதலும் நடந்து பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரை கவனத்துக்குரிய ஒன்று. இதை எழுதியுள்ள ஏ.எஸ்.துலத் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவராகவும் பிரதமர் அலுவலகத்தில் காஷ்மீர் விவகார ஆலோசகராகவும் இருந்தவர்.

பேச்சு, பேச்சு…… பேச்சு ஒன்றுதான் இத்தகைய தருணங்களில் ஒரே சரியான அணுகல்முறையாக இருக்க முடியும். இதுபோன்ற முந்தைய தருணங்களில் நான் எழுதிய கட்டுரைகள் சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்றைய ஹின்டு நாளிதழ்க் கட்டுரையில் இந்த ஆசிரியரும் இதைத்தான் சொல்கிறார். பேச்சு வார்த்தைகளுக்கான சாத்தியங்களையே நாம் முன்னெடுக்க வேண்டும் என்கிறார்.

சிலர் பயங்கரவாதிகள் மீது “துல்லியமான தாக்குதல்கள்” (surgical attacks) எனும் கருத்தை முன்வைக்கினர். போர் விரும்பிகளின் இந்தக் கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இக்கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு மியான்மரில் இருந்துகொண்டு செயல்படுஇம் வடகிழக்கு மாநிலத் தீவிரவாதிகள் மீது இந்தியப் படைகள் இப்படியான தாக்குதலை நடத்தின. இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகள் இருந்ததால் அது பிரச்சினை ஆகவில்லை. ஆனால் இப்போது பாக்கில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது அத்தகைய தாக்குதல்களைச் செய்தால், இரண்டு நாடுகளுக்கிடையே பகைச் சூழல் நிலவும் பின்னணியில் அது உகந்ததல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆக, உடனடியாகச் செய்யக் கூடியது இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்[பு ஆலோசகர்களும் (NSA) சந்தித்து உடனடியாகப் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் கருத்து.

படித்துப் பாருங்கள்.

http://www.thehindu.com/opinion/op-ed/uri-is-a-serious-provocation-by-pakistan-two-nsas-must-meet/article9125019.ece