ஜோ டி குரூசின் நாவலை வெளியிடும் நவாயனா லிட்டில் ஆனந்த் : இரு குறிப்புகள்

1. ஜோ டி குரூசின் நாவலை வெளியிட மறுத்த லிட்டில் ஆனந்தின் கதை

இன்றைய “தமிழ் இந்து”வில் நவாயனா பதிப்பக உரிமையாளர் ஆனந்த், தான் ஜோ டி குரூசின் நூல் வெளியீட்டை நிறுத்தியது குறித்துச் சொன்ன கருத்து பதிவாகியுள்ளது. குரூசின் நூலை வெளியிடுவதில்லை என்கிற முடிவில் தன்னுடைய பங்கு குறைவு எனவும், மொழியாக்கிய கீதா அது வெளிவருவதை விரும்பவில்லை எனவும், தான் இந்த முடிவைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும், குரூஸ் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அன்று முதல் குரூசைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கிடைக்கவில்லை எனவும் நசுக்கி நசுக்கிக் கூறியுள்ளார்.

குரூசின் நூலை வெளியிடவில்லை என அறிவித்ததன் மூலம் ஒரே நாளில் ஃபேமஸ் ஆன ஆனந்த் குறித்த பழைய வரலாறொன்றை இங்கு நினைவுபடுத்துவது அவசியம். ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் அவுட்லுக் ஆங்கில இதழின் நிருபராக இங்கு வாழ்ந்தவர் அவர். ஆந்திரப் பார்ப்பனராகிய இவர் தன்னை ஒரு அம்பேத்கரிஸ்ட் ஆகக் காட்டிக் கொள்பவர். “லௌஹீகப் பாப்பானை விட இந்த அரசியல் பாப்பான்கள் ரொம்ப டேஞ்சரானவர்கள்” எனப் பெரியார் சொன்னதாகச் சொல்வார்களே அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இந்த ஆனந்த்.

ஆனந்த்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு ஏதேனும் ஒரு வரியில் சொல்லமுடியுமானால் “ரவிக்குமாரின் நெருங்கிய நண்பர்”. இருவரும் சேர்ந்துதான் பெரியார் குறித்த அவதூறை மிகப் பலமாகவும் தந்திரமாகவும் செய்தனர். ரவிக்குமார் தமிழக அளவில் இதைச் செய்ய, இந்திய அளவில் இந்தக் காரியத்தைச் செய்த நபர் ஆனந்த்.. ரவிக்குமாருக்குக் ‘காலச்சுவடு’ இந்தப் பிரச்சாரத்திற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. பெரியார் ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ என்கிற அளவிற்கு ரவிக்குமார் அப்போது காலச்சுவடில் எழுதியது பிரசித்தம். “பாருங்கள், நாங்கள் திட்டவில்லை; ஒரு தலித் இன்டலெக்சுவால் சொல்றார். இப்ப என்ன சொல்றீங்க, இப்ப என்ன சொல்றீங்க….” என்கிற ரீதியில் பெரியாரைப் பழிவாங்கக் காத்திருந்த சக்திகள் எல்லாம் ரவிக்குமாரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன.

ஆனந்த் இந்திய அளவில் இந்தக் காரியத்தைச் செய்த நபர், அம்பேத்கரிஸ்ட் என்கிற போர்வையில் பெரியார் மற்றும் திராவிட இயக்கம் குறித்த அவதூறுகளைச் செய்து வந்த இந்த நபர் குறித்து நான் அப்பொழுதே நிறைய எழுதினேன். ‘சிறியவன் ஆனந்த்’ என்கிற பெயரில் அந்த நபர் எழுதுவது வழக்கம். நான் அதை ‘லிட்டில் ஆனந்த்’ என (அப்படி ஒரு தியேட்டர் சென்னையில் அப்போது உண்டு) கிண்டலடித்துத் தோலுரித்து எழுதிய கட்டுரைகள் பல ‘கவிதா சரண்’ இதழில் வெளி வந்துள்ளன. அவுட்லுக் இதழொன்றில் பெரியார் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில், “பெரியார் என்றால் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரிவதில்லை. அது ஏதோ ‘பெரிய ஆறு’ என நினைப்பார்கள்” என எழுதிய நபர் அந்த ஆனந்த்..

2002ம் ஆண்டு என நினைக்கிறேன். நாங்கள் மதுரையில் “அம்பேத்கர் 2000” என்றொரு நிகழ்ச்சி நடத்தினோம். அந்த இரு நாள் கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவர் கெய்ல் ஓம்வேத். மதுரையில் அவர் பேசும்போது அம்பேத்கரை மட்டுமின்றி பெரியாரின் பங்களிப்பையும் பாராட்டிப் பேசினார். அடுத்த நாள் சென்னை திருவல்லிக்கேணி கிரசென்ட் பள்ளியில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். திண்ணியம் எனும் ஊரில் ஆதிக்க சாதியினர் தலித்கள் வாயில் மலம் திணித்ததைக் கண்டித்த கூட்டம் அது, பாதிக்கப்பட்ட நபர்களை வழக்குரைஞர் ரத்தினம் அவர்கள் சென்னைக்கு அழைத்து வந்திருந்தார். அந்தக் கண்டனக் கூட்டத்திலும் கெய்ல் கலந்து கொள்ள இருந்தார். அவரை ரயிலில் அழைத்து வந்து கொண்டிருந்தேன். எழும்பூரில் அவர் தங்க அறை ஏற்பாடு செய்திருந்தோம். காலையில் நாங்கள் வந்த ரயில் எழும்பூர் நிலையத்தை அடைந்தபோது அங்கே ஆனந்த் நின்றதைக் கண்டவுடன் எனக்குத் திக்கென்றது. ஆனந்துடன் பேசிய கெய்ல் என்னிடம் சொல்லிவிட்டு ஆனந்தைப் பின் தொடர்ந்தார். கெய்ல்லுக்காக ரிசர்வ் செய்திருந்த அறையைக் காலி செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றேன். மாலையில் கெய்ல் அந்தக் கூட்டத்திற்கு வந்தபோது அவரிடம் சில மாற்றங்களைக் காண முடிந்தது. கூட்டத்தில் பேசும்போது அவர் பெரியாரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாட்டில் தலித்கள் மீதான இத்தகைய கொடுமைகளுக்கு பெரியார்தான் காரணம் என்கிற ரீதியில் அன்று கெய்லின் பேச்சு இருந்தது. ஆனந்தின் வேலைதான் இது என்பதை விளக்க வேண்டியதில்லை.

இந்திய அளவில் பெரியார் குறித்து ஒரு எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகச் செயல்படுத்திய இந்த லிட்டில் ஆனந்த்தான் இன்று ஒரே நாளில் இப்படி திடீர்புரட்சியாளர் ஆகியுள்ளது. ஆனந்த் குறித்த இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வந்துள்ள அந்த நபரின் கூற்றை இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள்.. இந்தப் புரட்சியாளனின் லட்சணம் விளங்கும்.

இன்று நான் சொல்கிறேன். பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்று ஏதோ தான் இந்துத்துவ எதிர்ப்பாளி என்பதுபோலக் காட்டிக்கொள்ளும் இந்த நபர் எந்த வகையிலும் இந்துத்துவத்திற்கு எதிரானவரல்ல. ‘அஜென்டாவை’ இன்னும் நளினமாக நடைமுறைப்படுத்தும் இந்த நபரின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.

வ. கீதா அவர்கள் ஜோ டி குரூசின் நூலை வெளியிடுவதில்லை என எடுத்த முடிவு முக்கியமானது. கீதாவும் எஸ்.வி.ஆரும் பெரியாரியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர்கள். ஒரு பெரியாரியச் சிந்தனையாளரான கீதா தான் மொழியாக்கிய இந்த நூலை வெளியிட பெரியாரிய விரோதியான ஆனந்தைத் தேர்வு செய்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அந்தக் காரணத்தினாலேயே நான் அவரை இது தொடர்பாக இன்றுவரை அழைத்து எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்ல இயலவில்லை.

பி.கு: இரண்டு நாள் முன்னர் ஆனந்தின் கூட்டாளி ரவிக்குமார், தான் நவாயனா பதிப்பகத்திலிருந்து ஓராண்டுக்கு முன்னரே விலகிவிட்டதாகத் தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். என்ன காரணம் என்கிற மர்மத்தையும் அவர் விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கிற்கும் இதற்கும் தொடர்பிருக்காது என நம்புவோமாக.

2. ஜோ டி குரூசின் நாவலை வெளியிட மறுதப்பதாக ஸ்டன்ட் அடித்த நவாயனா ஆனந்தின் இன்றைய பின்வாங்கல்கள் ஏன்?

நவாயனா (லிட்டில்) ஆனந்த் ஒரு புரட்சியாளன் போல பம்மாத்துப் பண்ணி ஜோ டி குரூசின் நாவலை வெளியிட முடியாது என விளம்பரம் தேடிக் கொண்டதும், இப்போது பம்மிப் பம்மி அந்த நாவலை வெளியிட இருப்பதையும் கவனத்தில் இருத்துங்கள். ஏன் இந்த நாவலை ஆனந்த் கும்பல் வெளியிடத் தேர்வு செய்தனர்? ஏன் இன்னும் அதை வெளியிடத் துடிக்கின்றனர்? இதற்கிடையில் அந்த நாவலை வெளியிட முடியாது என இவர்கள் அடித்த ‘ஸ்டன்ட்’டின் நோக்கமென்ன?

இவர்களின் மத்தியில் அகப்பட்ட ஒரு அப்பாவியாகவே ஜோ டி குரூசைப் பார்க்க வேண்டியுள்ளது. கிராம்சி சொன்னதுபோல ஒரு வகையான ‘பொதுப் புத்தியின்’ {Common sense) பாற்பட்ட அப்பாவிதான் இந்த ஜோ டி குரூஸ்.

பிரச்சினையை மிகவும் localise பண்ணிப் பார்ப்பது Common Sense ன் ஒரு பண்பு. ஜோ டி குரூசிடம் காணப்படுவது அதுதான்.

ஒரு சிறுபான்மைச் சமூகம் (கிறிஸ்தவ மீனவர்கள்) பெரும்பான்மையாக இருக்கக் கூடிய பகுதியில் பிறந்தவர் ஜோ டி குரூஸ். அந்த வகையில் இந்த உள்ளூர்ப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையால் கொண்ட வெறுப்பை Universalise பண்ணும் ஒரு பொதுப்புத்தி மனநிலைக்குத் தள்ளப்படுகிறார் குரூஸ்.

ஆக, அவர் பிரச்சினையை மிகவும் localise பண்ணிப் புரிந்து கொள்கிறார். இங்கு கிறிஸ்தவம் என்பது ஒரு வகையில் பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மதமாகவும் உள்ளதைப் புரிந்து கொள்ளாமல் இந்த உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கிறிஸ்தவத்தை வில்லனாக்குகிறார். உலக அளவில் கிறிஸ்தவத்தை ஒரு ஆதிக்க நிறுவனமாகப் பார்ப்பதில் எல்லாவிதமான நியாயங்களும் உண்டு. ஆனால் இந்தியாவில், இங்குள்ள கிறிஸ்தவத்தை ஒட்டுமொத்தமாய் அப்படிப் பர்த்துவிட இயலாது. ஆனால் அப்படி ஒட்டுமொத்தமாய இந்திய கிறிஸ்தவத்தை ஆபத்தானதாகக் காட்டும் விருப்புடையவர்கள் இன்று ஜோ டி குரூசைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனந்த் கும்பலுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை ஜோ டி குரூஸ்தான்.

இந்த ஆள் வெளிப்படையாய் ஜோ டியை ஆதரிக்கப் போய் ஆனந்த் கும்பலுக்கு ஒரு அதிர்ச்சி. இதிலிருந்து அவர்கள் மீள மேற்கொள்ளும் முயற்சி பல தலைகீழ் பல்டிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்த ஆனந்த் வகையறாக்களின் பார்ப்பன அரசியலுக்கு மத்தியில் படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் ஜோ டி குரூசை ஆதரிக்கும் அசடுகள், தாங்கள் உண்மையில் ஜோ டி குரூசை ஆதரிக்கவில்லை, அவரை ஆட்டுவிக்கிற இந்துத்துவ அரசியலுக்குத் தான் துணை போகிறொம் எனத் தெரியாமலேயே அடக்கி வாசித்து ஆட்டம் போட்டுக் கொண்டுள்ளனர்.