லெனினின் ஏகாதிபத்தியக் கோட்பாடும் வாலர்ஸ்டைனின் மைய விளிம்புக் கோட்பாடும்

கார்ல் மார்க்ஸ் 8 (மக்கள் களம் டிசம்பர், 2017)

இன்றைய உலக முதலாளியத்தை மார்க்சியம் எப்படி விளக்குகிறது?   

லெனின் ஒருமுறை இப்படிச் சொன்னார், கார்ல் மார்க்சுக்குப் பிந்திய முதலாளிய மாற்றங்கள் அதன் விளைவுகள் ஆகியவற்றை விளக்க “இன்னும் எழுபது மார்க்சுகள் வேண்டும்” என. லெனினுக்கு இது வெறும் கோட்பாட்டுப் பிரச்சினையாக மட்டுமின்றி நடைமுறைப் பிரச்சினையாகவும் இருந்தது. பிரும்மாண்டமாக வடிவெடுத்து உலகளாவ அதிவேகமாகப் பரவி வந்த முதலாளியத்திற்கு மத்தியில், ஒரு சிறு தீவைப்போல, சோவியத் ருஷ்யாவிற்குள் ஒரு சுரண்டல் சாத்தியமாகாத மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்பை முயற்சித்தவர் அவர். நடைமுறை அவருக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அணுகல்முறைகளில் அவர் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார். அவருடைய காலத்திலேயே அவர் மீது மார்க்சீய அணுகல்முறைகளிலிருந்து விலகுகிறார் என்கிற குற்றச்சாட்டுகளை எ;ல்லாம் அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ என்கிற சொல்லாக்கம் அவரால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. அந்தப் பெயரில் மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு மத்தியில் சந்தைப் பொருளாதாரம் உட்பட்ட சில முதலாளியச் செயல்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

அன்று முதல் இன்றுவரை நாம் பல மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டு உள்ளோம். சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாம் எதிர்கொண்ட மாற்றங்கள் முதலாளியத்திற்கு ஒரு வெற்றி மமதையையும், சோஷலிசக் கோட்பாட்டளர்களுக்குக் கோட்பாட்டிலும் நடைமுறைகளிலும் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன. இன்று உருவாகியுள்ள “உலகமயம்” என்பது ஒரு வகையில் எல்லாவற்றையும் “தேசிய” எல்லை கடந்ததாக மாற்றியுள்ளது. உலக அளவிலான முதலாளிகள் வரிசையில் இடம்பெறத்தக்க முதலாளிகள் சிலரை நாம் இந்தியா போன்ற நாடுகளிலும் அடையாளம் காண முடிகிறது. இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல கொடுஞ்சுரண்டலுக்கு ஆளாகிற, எந்த விதமான வாழ்க்கை உத்தரவாதங்களும் இல்லாத தொழிலாளி வர்க்கத்தை நாம் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காண முடிகிறது. இதன் பொருள் அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தியா போன்ற நாடுகளும் எல்லா அம்சங்களிலும் ஒன்றாகிவிட்டன என்பதோ இல்லை முதலாளியம் என்பது அதன் தவிர்க்க இயலாத நெருக்கடிகளை எல்லாம் கடந்துவிட்டது என்பதோ அல்ல.

இன்றைய சூழலை நாம் இப்படித்தான் சொல்ல வேண்டும்: முதலாளி, தொழிலாளி, ஏகாதிபத்தியம், காலனியம், நவ காலனியம் என்பனவெல்லாம் முன்னைப்போல இறுக்கமாக வரையறுக்கப்பட்ட “தெளிவு” களுடன் நம் முன் காட்சி அளிக்க வில்லை. யார் தன்னுடைய முதலாளி என்று கூட அடையாளம் காண இயலாத நிலையில் இன்றைய ‘கால் சென்டர்’ முதலான  பணிகளில் உள்ள தொழிலாளிகள் உள்ளனர். எல்லா வரையறைகளும் இன்று தெளிவற்றதாகி (nebulous) விட்டன.

இதன் பொருள் தொழிலாளி வர்க்கம் அழிந்து விட்டது என்பதோ, சென்ற நூற்றாண்டுகளில் திரட்டப்பட்டது போல செவ்வியல் வடிவத்தில் அமைப்பு ரீதியாகத் திரளச் சாத்தியமற்றதாக ஆகிவிட்டது என்பதோ அல்ல. மார்க்ஸ் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் இடையில் அடிப்படைகள் மாறிவிடவில்லை. ஆனால் சூழல்கள் பெரிதாக மாறிவிட்டன. இன்றும் முரண்கள் அப்படியேதான் உள்ளன. சொல்லப்போனால் முரண்கள் இன்னும் கூர்மை அடைந்துள்ளன. முதலாளியத்தின் மக்கள் நல அரசு (welfare state),  சமூகப் பாதுகாப்பு (social security) என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தகைய அம்சங்களில் உலகெங்கிலும் தொழிலாளிகளுக்கிடையிலான வேற்றுமைகளும் ஏற்றத் தாழ்வுகளும் குறையத் தொடங்கிவிட்டன என்றும் கூற முடியும். இதன் பொருள் உலகளவில் உழைப்பின் ஊதியம் சமமாகி விட்டது என்பதல்ல. நிரந்தரமின்மை, பாதுகாப்பின்மை முதலானவை உலகளவில் பொதுமையாகும் நிலை உருவாகியுள்ளது. 2008 ல் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் (Great Recession), 2011 ல் ஏற்பட்ட ஓய்வூதியப் போராட்டங்கள் (pension strikes), வால்ஸ்ட்ரீட் உட்பட உலகெங்கிலும் நடந்த அமர்வுப் போராட்டங்கள் (occupy movements) ஆகியன இப்படியான நெருக்கடிகள் மட்டுமல்ல, முதலாளியத்திற்கு எதிரான எதிர்ப்புகளும் இன்று உலக அளவில் உருவாகத் தொடங்கி விட்டன என்பதற்குச் சான்றாக உள்ளன.

மார்க்சின் காலத்தில் இல்லாத இம்மாற்றங்களைக் கணக்கில் கொண்டு மார்க்சீயத்தை நவீன சிந்தனைகளின் துணையோடு வளர்த்தெடுக்க வேண்டிய முயற்சிகளை இன்று இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எவ்வாறு மேற்கொள்கின்றனர் என்பதை மிகச் சுருக்கமாகக் காணலாம். எல்லாவற்றையும் இங்கே தொகுக்க இயலாது என்பதால் இம்மானுவேல் வாலெர்ஸ்டைன் மற்றும் அந்தோனியோ நெக்ரி, மிஷெல் ஹார்ட் என்கிற இரட்டையரின் கோட்பாடு ஆகியவற்றை மட்டும் பார்க்கலாம்.Core & Periphery

முதலாளியம் இன்றைய உலகை வேறெப்போதைக் காட்டிலும் மிக நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளது என்பதற்கு இந்தக் கோட்பாடுகள் முகியத்துயவம் அளிக்கின்றன. முதலாளியத்தின் அடிப்படையான மூலதனத் திரட்டல் என்பதில் காலனியக் கொள்ளைகள் என்பன எத்தகைய முக்கிய பங்கு வகித்தது என்பதை மார்க்ஸ் நுணுக்கமாகச் சுட்டிக் காட்டிய விவரங்களைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். உலகை இந்த அடிப்படையில் முதலாளிய “மையம்” எனவும் “விளிம்புகள்” எனவும் பிரித்தணுக வேண்டும் என்கிறது வாலர்ஸ்டைன் முதலானோர் முன்வைக்கும் அணுகல் முறை.

முதலாளியம் தோன்றிய காலத்திலிருந்தே உலக அளவில் கட்டுமானச் சீரமைப்புகளைத் (structural adjustment) தொடங்கிவிட்டது என்பதைக் கண்டோம். கி.பி 1500 தொடங்கி உருவாகி வரும் இம்மாற்றங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்:

கட்டம் 1: கி.பி 1500 – 1640 : உலக முதலாளியத்திற்கு அடித்தளம் அமைக்கும் முயற்சிகள், தொடக்ககால வணிகங்கள் ஆகியன இக்காலகட்டத்தின் முக்கிய செயற்பாடுகள்;

கொள்ளைகள், படையெடுப்புகள், தொடக்ககால ஐரோப்பியக் குடியேற்றங்கள் என்பன இதன் வடிவங்கள்.

கட்டம் 2 : கி.பி 1640 – 1750 : இதற்கு முன் இருந்திராத ‘உலகம்’ எனும் கருத்தாக்கம் உருப்பெற்று அதன் அடிப்படையில் வணிக முதலாளிய அமைப்பு உறுதிப்படல்:

கொள்ளைகள் பரவுதல், குடியேற்றங்கள் உறுதிப்படுதல், விளிம்புகளில் மையங்களின் பாசறைகள் வலுப்படுதல், கண்டங்களைக் கடந்த பொருள் வணிகம் பெருகுதல் முதலியன இக்காலகட்ட வடிவங்கள் மற்றும் விளைவுகள்.

கட்டம் 3 : கி.பி 1750 – 1870 : செவ்வியல் முதலாளியம் (classical capitalism), உலகெங்கிலும் ஐரோப்பவை நோக்கி மூலதனம் திரளுதல், மூலதனம் மூலதனத்தை உற்பத்தி செய்தல், எனினும் புராதன (வடிவில்) மூலதனத் திரட்சி தொடர்தல் என்பன வடிவங்கள்.

தொடரும் குடியேற்றங்கள், தூரத்து விளிம்புகள் உட்கவரப்படுதல், மையங்களைச் சார்ந்து விளிம்புகள் நிற்றல் என்பது வெளிப்படையாக மேல் வருதல் என்பன இக்காலகட்ட வெளிப்பாடுகள்.

கட்டம் 4 : கி.பி 1870 -1950 : ஏகபோக முதலாளியம், புராதன மூலதனத் திரட்சி என்பது இப்போது வணிக மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றத்தாழ்வான பரிவர்த்தனையாக வெளிப்படுதல், அய்ரோப்பிய நிதி மூலதனம் (financial capital) உலகை முதலாளியமயமாக்கல், அய்ரோப்பாவை நோக்கிய மூலதனக் குவிப்பு தொடர்தல் முதலியன இக்காலகட்ட வடிவங்கள்.

விளிம்புகள் மையங்களைச் சார்ந்து நிற்கும் நிலை வளர்ந்து உறுதியடைதல், இந்தியா முதலான நாடுகள் அரசியல் விடுதலை பெறுதல், எனினும் இவ்வாறு விடுதலை பெற்றவை உட்பட விளிம்புகள் கீழ் நிலையில் ஒருங்கிணைக்கப்படல் ஆகியன இக்காலத்தின் வெளிப்பாடுகள்.

கட்டம் 5 : கி.பி 1500 க்குப் பின் உலகமயத் தொடக்கம் வரை : பன்னாட்டு முதலாளியம் (multinational) என்கிற  வடிவம் உருவாதல், மூலதனம் உலகமயமான போதிலும் மையங்களில் செறிவடைதல்; இதன் விளைவான புதிய பன்னாட்டு வேலைப் பிரிவினை ஒன்று உருவாதல்;

 

பிற குடியேற்ற நாடுகளும் (colonies) விடுதலை அடைதல், ஆனாலும் சார்பு நிலை (dependency) நுணுக்கமாகத் தொடர்தல், விளிம்புகளின் மேலாதிக்க சக்திகள் உலக முதலாளிய மையங்களின் வடிவில் விளிம்புகளைச் செதுக்கும் நோகில் ‘புதிய பன்னாட்டுப் (பொருளாதார) ஒழுங்கு’ (New World Order) ஒன்றை உருவாக்குதல்.

மிகவும் சுருக்கமாக இவை இங்கே விளக்கப்பட்டுள்ளன. இது முழுமையான சித்திரமல்ல. சில விதிவிலக்குகள் உண்டு. எடுத்துக்காட்டாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த வகையில் உலகம் ஒழுங்கமைக்கப்படுவதில் தம்மளவில் ஒரு எதிர்ப்பைக் காட்டி வந்ததும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிந்திய இந்தியா 1990 வரை ஓரளவுக்கு இந்த ஒழுங்கமைப்பிற்குள் திட்டமிட்டப் பொருளாதாரம் (planned economy) முதலியவற்றச் செயல்படுத்த முயன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சோவியத் ருஷ்யா, சீனா, வியட்நாம், யுகோஸ்லாவியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலியன இந்த உலக ஒழுங்கமைப்பிலிருந்து விலகி நின்று ஒரு வகையான சுய மையப் பொருளாதார (national auto centric) வளர்ர்ச்சியைச் செயல்படுத்தியதையும் மறந்துவிட இயலாது.

தவிரவும் மேற்கண்ட இந்த மாற்றங்களை இறுக்கமான படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களாகக் காணத் தேவையில்லை. இவை பொதுப் போக்குகள். எல்லா இடங்களிலும் இப்படித்தான் அமைந்தன என்பதல்ல. அதோடு மையங்களுக்கிடையேயான மேலாண்மை ஐரோப்பிய நாடுகளுக்கிடையே மாறிக்கொண்டே இருந்தன. இரண்டாம் உலகப் போரை ஒட்டி இது அமெரிக்காவிற்கு மாறியது. 1960 களில் இந்த அமெரிக்க மேலாண்மையும் சிறிது ஆட்டங் காணத் தொடங்கியது.

இந்த மைய – விளிம்பு வடிவிலான முதலாளிய ஒழுங்கமைப்பில் உள்ளார்ந்து சில முக்கிய மாற்றங்களும் நிகழ்ந்தன. தொடக்க நிலையில் விளிம்புகள் கச்சாப் பொருட்களையும், உடலுழைப்பாளிகளையும் (எ.கா இலங்கை, மலேசியா போன்ற காலனிகளுக்குத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டது) ஏற்றுமதி செய்தன;  அதே நேரத்தில் மையங்கள் நுகர்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்தனw.

இது படிப்படியாக மாறியது. விளிம்புகள் நுகர்பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கின; மையங்கள் நுகர் பொருள் உற்பத்தியிலிருந்து கருவி உற்பத்திக்கு மாறின. இன்று அவை கருவி உற்பத்தியையும் இரண்டாம் பட்சமாக்கி பணித்துறை சார்ந்த (service sector) ‘பொருள்சாரா’ உற்பத்தி என்கிற நிலைக்கு மாறியுள்ளன. இதைச் சற்று விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.

ஆக இந்த மையம் – விளிம்பு எனும் வேலைப் பிரிவினையின் ஊடாக முதலில் விளிம்பு நாடுகளில் (காலனிகளில்) உள்ள தொழில்கள் எல்லாம் நீக்கப்பட்டு (deindustrialization) அவை முதலில் கச்சாப் பொருட்கள் மற்றும் அடிமைகள் / தோட்டத் தொழிலாளிகளின் உற்பத்திக் கேந்திரங்களாக்கப்பட்டன. பின்னர் இங்கேயுள்ள மலிவான உழைப்பு சக்தியைப் பயன்படுத்தி இங்கேயே நுகர் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தோதாக தொழில்நுட்பத்திற்கும், நிதி மூலதனத்திற்கும் மையங்களைச் சார்ந்திருக்குமாறு அவை re-industrialise செய்யப்பட்டன. “இறக்குமதிப் பதிலீடு” (import substitution), “ஏற்றுமதிப் பதிலீடு” (export substitution) என இவற்றை பொருளியலாளர்கள் விளக்குவர். மொத்தத்தில் சார்புநிலை அதிகரித்தல், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி மூலதனத் திரட்சி அமைதல், தொழில்நுட்ப இடைவெளி அதிகமாதல் முதலியன இந்த மைய – விளிம்பு உறவுகளின் முக்கிய பண்புகளாகவும் விளைவுகளாகவும் அமைந்தன.

லெனினியத்தின் ஏகாதிபத்தியக் கோட்பாட்டிற்கும் வாலர்ஸ்டைன் போன்றோரின் இந்த மைய – விளிம்புக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் எத்தகையன?

ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்காக ஐரோ[ப்பவைக் கண்டித்தபோதும், ஏகாதிபத்தியத்தின் பங்கை முதன்மைப்படுத்துவதன் ஊடாக ஏகாதிபத்திய உருவாக்கத்தில் விளிம்புகளின் பங்கிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன்மூலம் ஐரோப்பா, அமெரிக்கா முதலான மையங்களை முதன்மைப்படுத்தும் போக்கு அவர்களிடமிருந்தது. இதனை ஒருவகை ஐரோப்பிய மையப் பார்வை எனலாம். உண்மையில் விளிம்புகள் உலக முதலாளிய உருவாக்கத்தில் மிகவும் செயலூக்கமுள்ள பங்கை வகித்தன. இந்தியா இல்லாமல் 17ம் நூற்றாண்டுக்கான இங்கிலாந்து வரலாறு இல்லை; கரீபியத் தீவுகளின்றி வலுவான அமெரிக்கா இல்ல; லத்தீன் அமெரிக்கா இன்றி ஸ்பெயின் கிடையாது; ருவாண்டா இன்றி பெல்ஜியம் கிடையாது; இப்படி.

இது ஏதோ பொருலியல் ரீதியான கட்டமைப்பு மட்டுமல்ல. மையங்களில் உருவான அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் விளிம்புகளின் தாக்கங்கள் இருந்தன. விளிம்புகளின் ‘மற்றது’ களாக மையங்கள் தம்மை நிறுத்திக் கொண்டன. இந்தியாவை Oriental ஆகக் கட்டமைப்பதன் ஊடாக அவை தம்மை Occidental ஆகக் கட்டமைத்துக் கொண்டன.

இன்னொரு பக்கம் விளிம்புகளிலுள்ள மேலாதிக்க சக்திகள், பொருளியல் மற்றும் அதையொட்டிய நவீனமயமாதல் முதலான அம்சங்களில் மையங்களின் பிரதிபலிப்பாகவும், பண்பாட்டு அம்சங்களில் மையங்களின் மாற்றுகளாகவும் தம்மைக் கட்டமைத்துக் கொண்டன. இன்றளவும் பரதீய ஜனதாக் கட்சி தங்களுக்கு, “உருளைக் கிழங்கு சிப்ஸ்’ வேண்டாம்; ஆனால் எலட்ரானிக் சிப்ஸ் வேண்டும்” என முழக்கம் வைப்பதைக் காணலாம்.

மொத்தத்தில் இந்தக் கட்டமைப்புகள் அனைத்தும் விளிம்புகளைப் பலவீனப் படுத்துவதாகவும், மையங்களைப் பலப்படுத்துவதாகவும் இருந்தபோதிலும் விளிம்பிலுள்ள மேலாதிக்க சக்திகள் (elites) இதனைச் செயலூக்கமுள்ள பங்குடன் விருப்பபூர்வமாகவே மேற்கொண்டன. எனவே ஏகாதிபத்தியத்தை உற்பத்தி செய்யும் விளைமூலங்கள் (sources of imperialism) (எ.கா: முதலாளிகள்) ஏகாதிபத்திய மையங்களில் மட்டுமே உள்ளன என்பதற்கு மாறாக  மைய – விளிம்புக் கோட்ப்பாட்டின் அடியாக “உலக முதலாளியம்” எனக் கூறுபவர்கள் ஏகாதிபத்திய மூலங்களை 1) மையங்களில் உள்ளவை 2) விளிம்புகளில் உள்ளவை என இரண்டாகப் பிரிக்கின்றனர். ஏகாதிபத்திய மூலங்கள் என்பவற்றில் பொருளியல் ஆதிக்க சக்திகளோடு அரசியல் மற்றும் பண்பாட்டு சக்திகளும் அடங்குவர்.

பொதுவில் ஏகாதிபத்திய அமைப்பை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்: 1.ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள். 2.ஏகாதிபத்தியத்திற்கும் விளிம்பிற்குமுள்ள உறவு. 3.விளிம்புகளில் உள்ள உற்பத்திசக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள். லெனினிய ஏகாதிபத்தியக் கோட்பாட்டின்படி இம்மூன்றில் முதலாவது அம்சமே மற்ற இரண்டையும் தீர்மானிக்கிறது.  மாறாக மைய – விளிம்பு அணுகல் முறை ஏகாதிபத்தியத்திற்கும் விளிம்பிற்குமுள்ள உறவே மற்ற இரண்டையும் தீர்மானிக்கிறது என்கிறது.

இவ்வாறு அணுகுவதன் ஊடாக உலக முதலாளிய அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஏதோ ஏகாதிபத்தியம் தன்னிச்சையாகத் தீர்மானிக்கிறது என்பதாக எளிமைப்படுத்திப் பார்க்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மாறாக, மையத்திற்கும் விளிம்பிற்கும் உள்ள உறவின் தன்மை மாறாதவரை உலக முதலாளிய அமைப்பு தன்னை தக்கவைத்துக் கொள்ளும், நெருக்கடிகளிலிருந்து தன்னை மீட்டும் கொள்ளும். இதை மையத்திலுள்ள ஆதிக்க சக்திகளும் விளிம்பிலுள்ள ஆதிக்க சக்திகளும் இணைந்து நின்று செய்யும்.

எனவே உலகமுதலாளியத்தின் மூலம் பயனடைபவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுவது நகைப்பிற்குரியதே.

 

(அடுத்த இதழில் 1990 களுக்குப் பின் உலக முதலாளியத்தில் ஏற்பட்டுள்ள போக்குகள், கார்பொரேட் அமைப்பு, எங்கும் ஒப்பந்தப் பணிகள் என்கிற காலத்தில் புரட்சி இனி சாத்தியமா? மார்க்சீயம் சொல்வதென்ன?)