மல்லிப்பட்டனம் தேர்தல் கலவரத்தை முன்வைத்து…

நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தைத் தம் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்ததாகவும், அதை மீறி கருப்பு குழுவினர் நுழைந்த போது கலவரம் மூண்டதாகவும் அறிகிறோம்.

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க யாரும் வரத்தான் செய்வார்கள். எங்கள் பகுதிக்கு வரவேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்திருக்கத் தேவை இல்லை என ஃபிர்தௌஸ் கூறி இருந்தார். உண்மைதான். நமக்குப் பிடிக்காதவர் ஆனபோதிலும் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து அனுப்புவதே பண்பாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது.

எனினும் முழுமையாக அன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊர். கிழக்குக் கடற்கரையில் பரவலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இப்பகுதியில்தான் அதிகம்.

தற்போது கலவரம் நடந்த இப்பகுதியில் தீவிரமாகச் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளில் முக்கியமானவர் இந்தக் கருப்பு.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் முதலான பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக மதக் கலவரங்கள் நடை பெற்று வருகின்றன. மதக் கலவரங்கள் எனச் சொல்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள், அவர்களது கடைகள், இதர சொத்துக்கள் தாக்கப்படுவது அவ்வப்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலில் முத்துப்பேட்டை கடைவீதியில் இருந்த ஒரு மரவாடி, சைக்கிள் ஸ்பேர் பார்ட் ஷாப் உள்ளிட்ட பல கடைகள் எரிக்கப்பட்டு, தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னை மற்றும் வாழைத் தோப்புகளில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அந்தக் கலவரத்தின்போது ஏற்பட்ட சொத்திழப்பு அபோதே ஒரு கோடி ரூபாய் என எங்கள் உண்மை அறியும் குழு மதிப்பிட்டது.

அப்போது நான் தஞ்சையில் இருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் காலையில் நாகை சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். எதிரே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார். அடையாளம் தெரியவில்லை. பின் அவரே சொன்னார். சற்று முன் குறிப்பிட்டேனே அந்தக் கலவரத்தில் முழுமையாக எரிக்கப்பட்ட சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்காரர். அந்த ஊரை விட்டே தான் இடம் பெயர்ந்து விட்டதாகவும். தற்போது தஞ்சையில் ஒரு கடையைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

முத்துப்பேட்டை முஸ்லிம்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் வந்தாலே அச்சம் தோன்றி விடும். அபோதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அங்கு வினாயகர் ஊர்வலம் நடத்துவார்கள். வினாயகர் சிலையைத் தூக்கிக் கொண்டு சந்தைப்பேட்டை முஸ்லிம் தெரு வழியாக ஊர்வலம் வருவார்கள். அந்த முஸ்லிம் தெரு மிகக் குறுகலானது. வினாயகர் ஊர்வலத்தினர் என்னென்ன முழக்கங்களை இடுவார்கள், எதையெல்லாம் செய்வார்கள் என்பதை நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைவார்கள். குறிப்பாகப் பெண்கள் தொடர்பான இழிவுப் பேச்சுக்கள் வரும்போது இவர்கள் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினைகள் வரும். பிறகு கலவரம்தான்,

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு பெருங்கலவரத்திற்குப் பின் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய முக்கிய பரிந்துரை ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என்பது. முத்துப்பேட்டையைச் சுற்றி இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. நாகூருக்குப் பிறகு மத வேறுபாடுகள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் புனிதப் பயணம் வருகிற தர்ஹா ஒன்றும் அங்குள்ளது. விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்தக் குறுகிய முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் போக அவசியமே இல்லை. வம்புக்காக்கத்தான் அத்தனையும்.

இந்த வம்புகள் அனைத்தின் நாயகரும் கருப்பு என்கிற முருகானந்தம் தான்.

தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடும் ‘டென்ஷன்’தான். இடையில் ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை முஸ்லிம்கள் அணுகினர். இந்திய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நண்பர் முகமது சிப்லி அந்த வழக்கைத் தொடுத்திருந்தார். எங்கள் அறிக்கையும் அதில் ஒரு முக்கிய ஆவணமாக முன்வைக்கப்பட்டது. நீதிமன்றமும் மாற்றுப் பாதை ஒன்றைச் சுட்டிக்காட்டி ஆணையிட்டது.

அந்த ஆண்டில் நாங்கள் மீண்டும் ஊர்வலத்தன்று அங்கு சென்றோம். முத்துப்பேட்டைக்கு நாங்கள் செல்வது இது மூன்றாம் முறை. கடைவீதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள சி.பி.அய் கட்சியின் அலுவலக மாடியில் நின்றவாறு வெறி கலந்த முழக்கங்களுடன் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு ஆத்திரம்கொண்ட நிலையில்தான் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. நீதிமன்ற ஆணை முழுமையாகக் கடைபிடிக்கப்படாமல்தான் ஊர்வலம் நடந்தது. சில கல்வீச்சுக்கள் அப்போதும் நடக்கத்தான் செய்தன. ஊர்வலம் முடிந்தவுடன் கல்வீச்சுகளால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளைச் சென்று பார்த்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. கருப்புவிற்கு பா.ஜ.க வில் ஏதோ முக்கிய பதவியெல்லாம் கொடுத்துள்ளனர். அவர் இப்போது அதிகம் சென்னையில்தான் இருப்பதாகவும், ஊர்ப்பக்கம் பெரிதாக வருவதில்லை எனவும், அதனால் கலவரங்களும் கொஞ்சம் குறைந்துள்ளதாகவும் முத்துப்பேட்டையைச் சேந்த ஒருவர் குறிப்பிட்டார். நான்கூட ஒருமுறை அவரை சென்னையில் ஒரு தொலைக்காட்ட்சி விவாதத்தில் சந்தித்தேன்.

இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவரற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட.

இப்படி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி முக்கிய பங்கு வகிக்கும் போது அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்களும் கூட அந்தப் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர். எனவே அவர்கள் வேவ்வேறு எதிர் எதிர் கட்சிகளில் இருந்தபோதும், முஸ்லிம்களைத் தாக்கிய தீவிரக் கும்பலில் அவர்கள் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும், அவர்களுக்கு ஆதரவாகவே செயல் படுகின்றனர்.

முத்துப் பேட்டையிலும் அதைக் கண்டோம்.

கருப்பு என்கிற முருகானந்தத்தின் மீது அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. அவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். மல்லிப்பட்டினம் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனஅவருக்கு நிச்சயம் தெரியும். அவருடைய நோக்கம் வாக்கு சேகரிப்பதும் அல்ல. எப்படியோ இன்று நடைபெற்றுள்ள சம்பவம் இரு சமூகங்களையும் எதிர் எதிராக நிறுத்த உதவி செய்துள்ளது. இந்துத்துவ சக்திகள் விரும்புவது அதுதான். அப்படி இம்முரண் கூர்மைப் படும்போதுதான் பா.ஜ.க அதிக இடங்களைத் தேர்தல்களில் கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதுவரை பா.ஜ.க அதிக இடங்களை வென்ற, ஆட்சி அமைத்த தேர்தல்கள் (92 / 96 / 98) எல்லாவற்றிலும் அது உ.பியில் 50 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்து /முஸ்லிம் polarisation னும் அங்கு உச்சமாக இருந்தது. 2000க்குப் பின் அந்த அளவிற்கு இந்துக்களையும் முலிம்களையும் எதிர் எதிராக நிற்க வைக்க இந்துத்துவ சக்திகளால் முடியவில்லை. சிறையிலிருந்து விடுதலை ஆன அமித் ஷாவை மோடி உ.பி மாநிலத் ‘தேர்தல் பணிக்கு’ என அனுப்பி வைத்ததே இந்த நோக்கத்திற்காகத்தான் எனவும், முசாபர் நகர் கல்வரம் இந்த நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டது எனவும் ஒரு ‘தியரி’ உண்டு.

கருப்பின் நோக்கம் எதுவானாலும் வாக்கு சேகரிக்க வந்தவர் என்கிற வகையில் அவரை அனுமத்தித்திருக்கலாம், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை அவர்கள் இப்படி வெளிப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காவல்துறையை அணுகி, பெருங் கூட்டம், முழக்கங்கள் இல்லாமல் வாக்கு கேட்க வேண்டும் எனவும், அதிக அளவில் காவல்துறையினர் கூட வரவேண்டும் எனவும் கோரி இருக்கலாம்.

அப்பாவிகள் பலரும் கைது செய்யபட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது காவல்துறை வழக்கமாகச் செய்வதுதான். உண்மையில் இப்படியான ஒரு பிரச்சினையைக் காவல்துறை எதிர்நோக்கி இன்னும் அதிகப் பாதுக்காப்பை அங்கு உறுதி செய்திருந்தால் இந்தச் சம்பவமே அன்று தடுக்கப் பட்டிருக்கலாம்.

முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறையின் அரசியல்

சென்ற மாத (செப்டம்பர் 2013) இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறையில் இன்று சுமார் 50,000 பேர் வீடு வாசல்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக (internally displaced) ஆக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தம் சொந்த கிராமங்களுக்குத் திரும்பும் வாய்ப்பு சமீபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்லப்பட்டவர்களைப் பொருத்தமட்டில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லும் கணக்கு இதுவரை 53. அறிவிக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நூறுகள் வரை இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். ஏனேனில் காணாமற்போன இன்னும் பலர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வயல்களில் கரும்புகள் வெட்டப்படும்போது இன்னும் பல உடல்கள் கிடைக்க நேரிடும் என்று கூறுகின்றனர்.

அகிலேஷ் யாதவின் அரசு வழக்கம்போல அடக்கி வாசிக்கிறது. அதன் கணக்குப்படி கொல்லப்பட்டவர்கள் வெறும் 39 பேர்; இதில் 33 பேர் முஸ்லிம்கள், ஆறு பேர் ‘ஜாட்’கள். இடம்பெயர்க்கப்படவர்கள் 25,000 பேர். இதில் 700 பேர் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்கள், அதாவது பெரும்பாலும் ஜாட்கள். பாதிக்கப்பட்ட ஜாட்களின் கணக்கைப் பொருத்தமட்டில் அரசு சொல்லும் கணிப்பை ஏற்றுக் கொள்ளலாம். காணாமல் போனவர்கள் மற்றும் இடம் பெயர்க்கப் பட்டவர்கள் குறித்து அவர்கள் சொல்லும் கணக்கு அரசு சொல்வதுடன் ஒத்துப் போகிறது.

பிரச்சினை மேலோட்டமாகப் பார்க்கும்போது சென்ற ஆகஸ்ட் 17 அன்று கவால் என்னுமிடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒட்டிய தொடர் நிகழ்வு என்பது போலத் தோன்றினாலும் இதன் பின் இந்துத்துவ சக்திகளின் திட்டமிட்ட முஸ்லிம் வெறுப்பும் அரசியல் சதியும் உள்ளதை நடுநிலையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். முசாபர்நகர் உள்ளிட்ட மேற்கு உ.பி மாவட்டங்கள் மற்றும் உத்தர்கான்ட் பகுதிகளை மையப்படுத்தி இன்று இன்று இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன. மேற்கு உ.பியில் இதற்கு முன்னும் இவ்வாறு மத வன்முறைகள் நடந்துள்ளபோதும் வழக்கம்போல நரங்களை மையமாகக் கொள்ளாமல் இப்போது அது கிராமங்களை மையமாகக் கொண்டுள்ளது குறிபிடத் தக்கது. கடந்த சில ஆண்டுகளாக விசுவ இந்து பரிஷத் முதலான இந்துத்துவ அமைப்புகள் ஒவ்வொரு கிராமத்திலும் வேலையில்லாத ஜாட் இளைஞர்களாகத் தேர்வு செய்து அவர்களுக்குக் கை நிறைய ஊதியமும் பயிற்சிகளும் அளித்துக் கீழிறக்குவதை கலவரத்திற்குப் பின் அங்கு சென்று ஆய்வு செய்து உண்மைகளை வெளிப்படுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது தேர்தல் நேரம். நரேந்திர மோடியை முன்னிறுத்தி இந்துத்துவம் செய்யும் அரசியலில் மதக் கலவரங்களைத் தூண்டி இந்து வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கு முக்கிய அழுத்தம் கொடுக்கப் படுகிறது. அயோத்தி பிரச்சினையைக் கிளப்பி யாத்திரை முயற்சிகளை இரண்டு மாதம் முன்பு அவர்கள் செய்தபோது உ.பி அரசு அதைக் கடுமையாகக் கையாண்டதோடன்றி, அங்குள்ள இந்து மத அமைப்புகளே அம்முயற்சியை எதிர்த்தன. வெறு வழியின்றிப் பின்வாங்கிய இந்துத்துவ வன்முறையாளர்கள், அடுத்த கட்டமாக முசாபர்பூரில் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

முசாபர்பூர் கிட்டத்தட்ட நம் கன்னியாகுமரி மாவட்டம் போல. இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளனர். முஸ்லிம்களின் எண்ணிக்கை இங்கு ஏறத்தாழ 47 சதம். இப்படியான இடங்களில் மத அடிப்படைவாத பாசிச சக்திகள் தம் கைவரிசையைக் காட்டுவது எளிது என்பது நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட பாதி அளவு முஸ்லிம்கள் இருந்தபோதும் இவர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்கள். பலர் ஜாட்களின் நிலங்களில் பண்ணை அடிமை வேலை செய்பவர்கள். தெலி, ஃபக்கீர், ஜோகி, லோஹர், ஜுலாஹி, தோபி முதலான அடித்தளத் தொழிற் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்தான் இன்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஜாட்கள் என்போர் கிட்டத்தட்ட நம்மூர் முக்குலத்தோர் போல. இன்று தமிழகத்திலுங் கூட, குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் செறிந்துள்ள கிழக்குக் கரையோர மாவட்டங்களில் இவ்வாறு தேவர், நாடார் முதலான சாதியினர் மத்தியில் வேலை செய்து குறிப்பான இந்துச் சாதிகளை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தும் போக்கை இந்துத்துவம் மேற்கொள்வது குறிப்பிடத் தக்கது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடற்கரை ஊராகிய முத்துப்பேட்டை, திருநெல்வேலியின் தென்காசி முதலியன சில எடுத்துக்காட்டுகள்.

முசாபர்நகரில் சென்ற மாதம் நடைபெற்ற மத அடிப்படையிலான இந்த வன்முறைகளுக்கும் தமிழகத்தில் சமீபமாய் சாதி அடிப்படையில் நடைபெற்ற தருமபுரி மற்றும் மரக்காணம் வன்முறைகளுக்கும் அளவில் பெரிய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரண்டிற்குமிடையே காணப்படும் வேறு சில பொருத்தங்கள் நமக்குக் கவலையையும் வியப்பையும் அளிக்கின்றன.

இரண்டிலும் பின்புலமாக இருபது மத மற்றும் சாதி அடையாளங்களின் அடிப்படையில் தம் ஆதரவு சக்திகளை முழுமையாகத் திரட்டிக் கொள்ளும் நோக்கந்தான் என்பது தவிர, இரண்டிலும் பெண்ணுடல்களை சாதிப் பெருமைகளின் இருப்பிடமாக முன்வைத்து இயங்கும் ஆணாதிக்கச் சொல்லாடல் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இங்கே பா.மகவினர் “நாடகக் காதல்” எனும் சொல்லாடலை மிதக்கவிட்டனர் என்றால் முசாபர்நகரில் “லவ் ஜிகாத்” எனும் சொல்லாடலை இறக்கியுள்ளனர். அதாவது முஸ்லிம்கள் காதல் களத்தில் இந்து ஜாட்களின் மீது ஒரு புனிதப் போரைத் (ஜிகாத்) தொடங்கியுள்ளனராம். இதன்மூலம் ஜாட்களின் சாதிக் கவுரவமும் (இஸ்ஸாத்), தூய்மையும் குலைக்கப்படுவதோடு முஸ்லிம்கள் தம் எண்னிக்கையையும் பெருக்கிக் கொள்கின்றனராம். இதுவரை இந்த லவ் ஜிகாத் சொல்லாடல் கேரளம், கர்நாடகம் முதலான தென் மாநிலங்களிலேயே முலிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது வடக்கிற்கும் இது பரவியுள்ளது.

கிட்டத்தட்ட பா.ம.க.வினர் போலவே இந்துத்துவவாதிகளும் சொல்லாடியுள்ளதை சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு நவீன பேஷன் உடைகளை (பா.ம.க மொழியில் ஜீன்ஸ் பேன்ட்கள்) அணிகின்றனர், நாகரீகமான நடைமுறைகள், நளினமான பேச்சுக்கள், நவீனமான செல்போன்கள் முதலியவற்றால் எம் பெண்களைக் கவர்ந்து காதல் வலையில் வீழ்த்துகின்றனர் என்பது ஜாட் சாதி (கப்) பஞ்சாயத்துகளில் வைக்கப்படும் குற்றச் சாட்டு. ஆக ‘காதல்’ என்பதும், பாலியல் சுதந்திரம் மற்றும் சுய தேர்வு என்பதும் இங்கே மிகப் பெரிய சாதிக் கவுரவ இழுக்காக முன்வைக்கப்படுகின்றன. சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள ஆணாதிக்க மதிப்பீடுகள் இந்த ‘நியாயத்தை’ எந்த விமர்சனமுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்ள வழிவகுத்துவிடுகிறது.

தடையை மீறி நங்லாமன்டார் என்னுமிடத்தில் சென்ற செப்டம்பர் 7 அன்று ஜாட்களால் நடத்தப்பட்ட மகாபஞ்சாயத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டுள்ளனர். . சாதி வெறி மற்றும் மத வெறுப்புப் பேச்சுக்கள் விண்ணை முட்டியுள்ளன. “மா, பேட்டி பஹூ பச்சோவ்” என்பது முக்கிய முழக்கமாக இருந்துள்ளது. மா, பேட்டி என்பன குலப் பெண்களையும், ‘பச்சோவ்’ என்பது அவர்களைப் பாதுகாப்பையும் குறிக்கின்றன. கூட்டப்பட்ட பஞ்சாயத்தின் பெயரே ”பேட்டி பச்சோ பகு பச்சோ மகா பஞ்சாயத்” மற்றும் “பேட்டி பஹூ இஸ்ஸாத் பச்சோ மகாபஞ்சாயத்” என்பதாகத்தான் முன் வைக்கப்பட்டது. இதில் ‘இஸ்ஸாத்’ என்பது கவுரவம். அதாவது தம் குலப் பெண்களின் கவுரவத்தை, அதன் மூலம் தம் சாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் சாதி மாநாடு என்பது பொருள். சாத்வி பிரச்சி என்கிற காவியுடை அணிந்த ஜாட் பெண்ணின் பேச்சு அதிக வெறியையும் வெறுப்பையும் ஊட்டுவதாக இருந்துள்ளது. காவல்துறைக்குத் தெரிந்தும் தெரியாமலும் ட்ராக்டர்களில் ஏற்றி வரப்பட்ட கத்தி முதலான ஆயுதங்கள் உயர்த்தி வீசப்பட்டு முழக்கங்கள் இடப்பட்டன.

பஞ்சாயத்தில் பரிமாறப்பட்ட சாதி கவுரவ மத வெறிப் பேச்சுக்களால் வெறியூட்டப்பட்டுத் திரும்பும்போதுதான் முஸ்லிம்கள் மீதான பெருந்திரள் வன்முறை அரங்கேறியது. இதிலும் கூடத் தமிழகத்திற்கும் முசாபர்நகருக்கும் ஒரு மிகப் பெறிய ஒற்றுமை உள்ளதை விளக்க வேண்டியதில்லை. டிராக்டர்களில் திரும்பி வந்து கொண்டிருந்த ஜாட்கள் ஆங்காங்கு முஸ்லிம்களைச் சீண்டிக் கொண்டு வந்தனர், ஓரிடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். திரண்ட முஸ்லிம்கள் டிராக்டரைக் கொளுத்தியுள்ளனர். ஜாட்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். 16 டிராக்டர்கள் எரிக்கப்பட்டதாகவும், 200 ஜாட்கள் கொல்லப்பட்டதாகவும் உடனடியாக வதந்திகள் பரவின. உண்மை அறியும் குழுவினர் சென்று பார்த்தபோது எரிந்த இரண்டு டிராக்டர்கள்தான் காவல் நிலைய வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நெஞ்சில் வன்மம், கையில் ஆயுதம் கேட்கவா வேண்டும். வழியெங்கும் முஸ்லிம் கிராமங்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கத்திகள், துப்பாக்கிகள், உடைந்த கண்ணாடிகள் பாவிக்கப்பட்டு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. லன்க். லிசாரா, பாகவதி, புகானா, மொகமட்பூர், ஷம்லி முதலான கிராமங்களில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களைக் கொன்று குவிப்பது என்பதைக் காட்டிலும் அவர்களை அச்சுறுத்தி ஜாட் பெரும்பான்மைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதுதான் வன்முறையாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் உள்ள கிராமங்களைக் காட்டிலும் 5 முதல் 15 சதம் வரை முஸ்லிம்கள் இருந்த கிராமங்களே குறிவைக்கப்பட்டன. பெரிய அளவில் பாலியல் வன்முறைகள் நடந்ததாகச் செய்திகள் இல்லையாயினும் லிசாரா, லன்க், ஃபிகுனா முதலான கிராமங்களில் அவ்வாறு சில சம்பவங்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அகிலேஷ் அரசு போதிய முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளவில்லை, உரிய அளவில் கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை, மிக மோசமாகவும், திறமைக் குறைவாகவும் இப்பிரச்சினையைக் கையாண்டது என்பது இன்று அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு. தவிரவும் காவல்துறையினர் ஜாட்களுக்குச் சார்பாக இருந்தனர் என்பதும் கவனத்திற்குரிய ஒன்று. இமாதிரியான பிரச்சினைகுரிய பகுதிகளில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஆதரவான சூழல் காவல் நிலையங்களில் அமையக் கூடாது என்கிற நிலை இன்று மாறியுள்ளதும் இந்த நிலைக்கு ஒரு காரணம் என்பதும் அகிலேஷ் அரசின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனகளில் ஒன்று. சாதி, மத வன்முறைகள் சாத்தியமாகுகிற பகுதிகளளில் காவல் மற்றும் அரசு நிர்வாகத் துறைகள் பெரும்பான்மைக் கருத்தியலைச் சுமந்தவர்களால் நிரப்பப்படக் கூடாது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது, வழக்கு பதிவு செய்வது, குற்றவாளிகளைக் கைது செய்வது என்பவற்றிலும் பல குறைபாடுகள் உள்ளன.

காவல்துறை இப்படி நடந்து கொண்டதன் விளைவாக முஸ்லிம்களின் பாதுகாப்பு அவர்களது சமூகத்தின் பொறுப்பாக்கப்பட்டது. சிறுபான்மையாக முலிம்கள் இருந்த கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்களில் தஞ்சமடைந்தனர். இன்று ஷாமியானாக்களின் கீழ் அமைந்த அகதி முகாம்கள் எதிர்பார்ப்பதுபோலவே எந்த அடிப்படை வசதிகளுமின்றி எந்நேரமும் தொற்று நோய்கள் பரவக்கூடியதாக உள்ளன. குழந்தைகளுக்குப் பாலில்லை. பிள்ளைகளுக்குப் படிப்பில்லை. பெரியவர்களுக்கு வேலையில்லை. மருத்துவ வசதி மட்டுமல்ல முகாம்களில் காவல் அவுட் போஸ்டுகளும் கூடக் கிடையாது.

கடந்த இரண்டாண்டு காலமாகவே இதற்கான முன் தயாரிப்புகளைச் சங்கப் பரிவாரங்கள் மேற்கொண்டு வந்தன. தொப்பி, தாடியுடன் வாழும் முஸ்லிம்கள் அனைத்துலக ஜிகாதிகளுடன் (global jihadis) தொடர்புபடுத்தப்பட்டு பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம். நவீன தோற்றப் பொலிவுடன் வெளிப்படும் முஸ்லிம் இளைஞர்களை ‘காதல் ஜிகாதி’களாகச் சித்திரிக்கும் சொல்லாடல்கள் இன்னொரு புறம். எங்காவது ஒரு ஜாட் பெண் ஒரு முஸ்லிம் இளைஞனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் பயிற்றுவித்து இறக்கப்பட்டுள்ள இந்துத்துவ இளைஞர்கள் அவர்களைத் தாக்குவது அல்லது இதை ஒரு முகாந்திரமாக முன்வைத்து ஒரு பிரச்சினையை உருவாக்குவது என்பது வழக்கமானது. சில இடங்களில் இவர்களே முஸ்லிம்களைப்போல் ஒரு குல்லாயை அணிந்து கொண்டு இந்துப் பெண்களைக் கேலி செய்து பிரச்சினையை உருவாக்குவது அல்லது சுய தோற்றத்தில் முஸ்லிம் பெண்களிடம் வம்பு செய்வது என்றெல்லாமும் நடந்துள்ளது.

அதே நேரத்தில் இதற்கிணையாக இந்துத்துவ வெறுப்பு அரசியலும் ஜாட்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன் குறிப்பிட்ட மகாஜாதிப் பஞ்சாயத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களில் சில:

“பாகிஸ்தானா கபர்ஸ்தானா, முலிம்களே தேர்வு செய்யுங்கள்…!”

“மோடியே வா.. தேசத்தைக் காப்பாற்று..!.”

“நீ இரண்டு இந்துக்களைக் கொன்றால் நாங்கள் நூறு முஸ்லிம்களைக் கொல்வோம்..!”

ஜாட் சாதி கவுரவம் என்பது விரிக்கப்பட்டு தேசத்தின் கவுரவமாக உயர்த்தப்படுவதும், அந்த தேச கவுரவத்தைக் காப்பாற்றும் நாயகனாக மோடி முன்நிறுத்தப்படுவதும் கவனிக்கத் தக்கது. மகாபஞ்சாயத்தில் மோடியை முன்நிறுத்தும் முழக்கங்கள் பெரிய அளவில் இருந்துள்ளதை ஹர்ஷ் மாந்தர், சுகுமார் முரளீதரன், கமல் மித்ர ஷெனாய் முதலானோர் பங்குபெற்ற உண்மை அறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கலவரத்தைப் “பற்ற வைத்த” சம்பவமாகக் (triggering incident) கூறப்படும் ஆகஸ்ட் 27 நிகழ்வுக்கு முந்தையவற்றில் ஓரிரண்டு மட்டும்:

எட்டு மாதங்களுக்கு முன் உமேஷ் மாலிக், சந்திப் பல்யான் என்கிற பா.ஜ.க தலைவர்கள் நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் திரிசூலங்கள் வினியோகிக்கப்பட்டன. கடுமையான முஸ்லிம் வெறுப்புப் பேச்சுக்கள் உமிழப்பட்டன. 2012 மார்ச்சில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடியைப்போல ஈர்ப்புமிக்க தலைவர்கள் உ.பி யில் இல்லையென விமர்சித்தது. தொடர்ந்து ‘மோடி இராணுவம்” என்கிற அமைப்பை நடத்தும் வினோத் ஜெயின் என்கிற நபர் உ.பி க்கு வந்து சுமார் 2 இலட்சம் பேரைச் சந்தித்துக் கருத்துப் பரவல் செய்தது குறிப்பிடத் தக்கது.

ஜூன் 5, 2013ல் லிசாரைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண் 17 வயது முஸ்லிம் இளைஞனுடன் ‘ஓடிப் போனாள்’. இதை வைத்து ஒரு பெரிய வன்முறையை இந்துத்துவவாதிகள் கட்டவிழ்த்தனர். முஸ்லிம்கள் பலர் தம் இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். பெரிய அளவில் இந்துக்கள் மத்தியில் திரிசூலங்கள் வழங்கப்பட்டன் துணை இராணுவப் படை வரவழைக்கப்பட்டு 16 இந்துத்துவவாதிகள் கைது செய்யபட்டனர்.

ஆகஸ்ட் 9 அன்று தன் மகளிடம் வம்பு செய்த ஒரு இந்து வாலிபனைப் பலர் முன்னிலையில் அடித்திருந்த இத்ரிஸ் என்பவர் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்தன. சுருக்கம் கருதித் தவிர்க்கிறேன்.

ஆகஸ்ட் 27 சம்பவம் : .சகோதரியைக் கேலி செய்ததைக் கேட்கப்போன இடத்தில் ஷா நவாஸ் என்கிற முஸ்லிம் இளைஞனும் சச்சின் சிங், கவுரவ் சிங் என்கிற இரு இந்து இளைஞர்களும் கொல்லப்பட்டனர். யாருடைய சகோதரியை யார் கேலி செய்தது (eve teasing) என்பது குறித்து இரு எதிரெதிரான தகவல்கள் உள்ளன. எது உண்மை எனத் தெரியவில்லை. முதலில் ஷாநவாசும் தொடர்ந்து இந்து இளைஞர்களும் கொல்லப்பட்டனர் என்பது உறுதி. இது பெண் கேலி செய்யப்பட்ட சம்பவமே அல்ல, சைக்கிளில் சென்ற இருவர் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை என்பதாகவும் ஒரு கருத்துண்டு. எது உண்மையாக இருந்தபோதும் பெண்ணுடலின் தூய்மைக்குப் பங்கம் என்பதாகவே பிரச்சினை முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்களும் கூட பிரச்சினையை இப்படித்தான் முன்வைத்தன. “பெண்ணைப் பின் தொடர்ந்து கேலி செய்ததே (Stalking) முசாபர்நகர் வன்முறைகளுக்குக் காரணம்” என்பது ஒரு இதழ் அளித்த தலைப்பு. Stalking என்பது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தில் கடுங் குற்றமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக பின்புலமாக உள்ள இந்துத்துத்துவத்தின் வன்முறை அரசியல் மறைக்கப்பட்டு பெண்ணுடல் தொடர்பான கவுரவப் பிரச்சினையே வன்முறைகளின் காரணமாக முன் வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களையும் இந்துத்துவவாதிகள் பெரிய அளவில் பயன்படுத்தினர். மீருட் வட்டத்திலுள்ள சந்தானா தொகுதி பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம் தனது செல்போன் மூலம் கவ்ரவ், சச்சின் இருவரும் மூர்க்கமாகக் கொலை செய்யப்பட்ட காட்சி எனப் பரப்பிய வீடியோ நறுக்கு பெரிய அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. உண்மையில் அவ்வாறு பரப்பப் பட்ட காட்சி இரண்டாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவக் காட்சிதான். அதற்கும் இந்தக் கொலைகளுக்கும் தொடர்பில்லை என்பது இன்று நிறுவப்பட்டு சங்கீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

டைனிக் ஜக்ரான் என்னும் இந்தி நாளிதழில் வெளிவந்த செய்திகள் தலைப்பு மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. “முசாபர்நகரில் முஸ்லிம் பயங்கரவாதம் , இந்துக்கள் அச்சம்” என்பது அவ்வாறு பரப்பப்பட்ட தலைப்புகளில் ஒன்று. உண்மையில் அந்த இதழ் கொடுத்திருந்த தலைப்பு “பஞ்சாயத்திலிருந்து திரும்பும் வழியில் இருவர் கொல்லப்பட்டனர்” என்பதே. அதேபோல “கலகக்காரர்களைக் கண்டதும் சுட ஆணை” என்கிற தலைப்பு “பெருந்திரளில் இந்துக்களை முஸ்லிம்கள் கொன்று கொண்டுள்ளனர்” என்பதாக மாற்றிப் பரப்பப்பட்டது.

இதுபோல நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பொய்ச் செய்திகள் பரப்பபப்டுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் அடித்தள மக்களின் செய்தி பரப்பும் பண்டைய உத்திகளும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. எங்கே கப் பஞ்சாயத்துகள் கூட்டப்படுகின்றன, என்ன மாதிரி ஆயுதங்களுடன் வரச் சொல்லப்படுகின்றனர் என்பதையெல்லாம் வெளியே தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க இந்த உத்திகள் பயன்படுத்தப்பட்டன,

சரி, இதற்கெல்லாம் என்னதான் முடிவு? பெரிய அளவில் பா.ஜ.க இக்கலவரத்தின் பயனை இன்று அனுபவித்துள்ளது. ஜாட்களின் வாக்கு வங்கி அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள்ளுக்குக் கூடப் போகாமல் சிந்தாமல் சிதறாமல் பா.ஜ.கவின் கைகளைச் சென்றடைந்துள்ளது. தருமபுரியில் இன்று வன்னியர் வாக்குகள் பா.மகவிடம் திரண்டிருப்பதுபோல.

வன்முறைக்குக் காரணமானவர்களே வன்றையின் “பலன்களை” அறுவடை செய்வது எத்தனை கொடுமை?

மன்மோகன்சிங் வந்து கலவரப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் என அறிவித்துச் சென்றுள்ளார். மனித உரிமை அமைப்புகள் வழக்கம்போல உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை, முகாம்களில் வசதிகளை மேம்படுத்துதல்’ இழப்பீடுகள் வழங்குதல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் முதலியவற்றைப் பேசியுள்ளன.

தவறியும் கூட தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான “மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை” நிறைவேற்றுவோம்; பத்து ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட இம் மசோதாவுக்கு உயிர் கொடுப்போம் எனச் சொல்ல மன்மோகன் சிங்கிற்கு வாய் வரவில்லை.

முசாபர்நகர் கலவரச் செய்திகளை வாசிக்கும்போது தமிழக ஒப்புமை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. இங்குள்ள காதல் கவுரவச் சொல்லாடல்களில் இதுவரை மதம் கலக்க வழி இல்லாமற் போயுள்ளது ஒன்றே ஒரே வேறுபாடு