எதிரிகளால் தாம் ஏன் அவரை வெறுக்கிறோம் எனச் சொல்ல இயலாமற் போனதே கலைஞரின் சாதனை

விகடன் தடம், செப் 2018

கலைஞரின் மறைவு குறித்து இன்று வெளிப்படும் பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்க்கும்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது. நீண்ட காலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அப்படியான ஒருவரின் மறைவு என்கிற அளவில் குறைந்த பட்ச அனுதாபமும் கூட இல்லாமல் வெளிப்படையாக அவர் மீது வெறுப்பைக் கக்குபவர்கள் அடைகிற ஒரு சங்கடம்தான் அந்த சுவாரஸ்யத்துக்குரிய அம்சம். அவர்களால் வெறுப்பைத்தான் கக்க முடிகிறதே ஒழிய ஏன் தாங்கள் இந்த வெறுப்பைக் கக்க நேர்கிறது என்பதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.

கலைஞரின் சமாதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வெறுப்பைக் கக்கும் அவர்கள்,

“கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதமாகவும், பிற்படுத்தப் பட்டோருக்குமான இட ஒதுக்கீட்டை  25 சதத்திலிருந்து 31 சதமாகவும் உயர்த்தினார், சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்தார், தமிழ்நாட்டை இந்தி இல்லாத மாநிலமாக ஆக்கினார், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிச் சட்டம் இயற்றினார், எல்லாச் சாதியினரும் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை அமைத்தார், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தார், பாலம் கட்டுவதற்கு இராமன் என்ன எஞ்சினீயரா எனக் கேட்டார், இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் திரும்பி வந்தபோது அதை வரவேற்காமல் அவமதித்தார் – இதை எல்லாம் நாங்கள் எப்படிச் சகித்துக்க் கொள்வோம், இவற்றுக்காகத்தான் நாங்கள் அவரை ஜென்ம வைரியாகப் பார்க்கிறோம்”

என எப்படிச் சொல்வார்கள்?

இப்படித் தன் அரசியல் எதிரிகளை ஏன் தாங்கள் அவரை எதிர்க்கிறோம் எனச் சொல்ல இயலாதவர்களாக ஆக்கியதுதான் கலைஞர் அரசியல் களத்தில் அடைந்த முக்கிய வெற்றி எனத் தோன்றுகிறது. அவர் மீது வீமர்சனங்களே இல்லை என்பதோ அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதோ அல்ல. ஆனால் எந்த விமர்சனங்களும் மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சனாதனிகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதைக் கணக்கில் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

மிகவும் இளம் வயதில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் அவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது (1942) அவருக்குப் பதினெட்டு வயது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டபோது (1947) இருபத்தி மூன்று வயது. முதல் பொதுத் தேர்தல் நடந்த அதே ஆண்டில்தான் (1952) அவரது ‘பராச்சக்தி’ திரைப்படம் வெளிவந்து பெரும் புகழை அவர் எட்டியிருந்தார். 1953 ல் கல்லக்குடி போராட்டத்தின் ஊடாக அவரது புகழ் மேலும் கூடியது. அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலப் பின்னணி இதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சியினூடாக இங்கு தேர்தல் அரசியல் அறிமுகப்பட்டுத்தப்பட்ட அதே காலத்தில் தென்னக அரசியலைப் பொருத்தமட்டில்  அது வட இந்திய அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருந்தது. இங்கே இந்து – முஸ்லிம் பிரச்சினை அரசியலில் முதன்மைப்படவில்லை. மாறாக திராவிடர் X ஆரியர் என்கிற சமூக நீதிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை இங்கே மேலுக்கு வந்தது. காங்கிரசைக் காட்டிலும் இங்கே நீதிக் கட்சி வலுவாக இருந்தது. இட ஒதுக்கீடு எனும் கருத்தாக்கம் இங்கே முக்கிய அரசியலாக வடிவெடுத்திருந்தது. 1940 களில் இங்கு காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த நீதிக்கட்சி அண்ணா, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாற்று அரசியல் களத்தை அமைத்துத் தந்தது. சுய மரியாதை, மொழிப்பற்று, திராவிடத் தனித்துவம் ஆகியன அன்று இளைஞர்களின் ஈப்புக்குரிய கொள்கைகளாக அமைந்தன. இந்திய தேசிய உருவாக்கம், பொதுவுடைமைச் சமூக உருவாக்கம் என்கிற அரசியல் லட்சியங்களுக்கு அப்பால் இங்கு இப்படி மூன்றாவதாக ஒரு மாற்று அடித்தள அரசியல் உருவாகியிருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து உலகெங்கும் ஒரு சுதந்திர வேட்கை, ஜனநாயக உணர்வு, மனித உரிமைப் பிரகடனம்,, அரசியல்சட்ட ஆளுகை, அடிப்படை உரிமைகள் என்கிற எண்ணங்கள் மேலெழுந்து கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலுமிருந்த ஒரு பொதுப்போக்கு இது. ருஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கூட ஒரு வகையில் புரட்சி நிறைவேறி சமதர்மம் உருவாகி விட்டதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. ஆக அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டம், பள்ளிக் கூடங்களை விட்டு வெளியேறி சிறைச்சாலைகளை நிரப்புதல், ஏதோ ஒரு லட்சியத்தின் பெயரால் தூக்குக் கயிற்றை முத்தமிடல் என்கிற அரசியல் மதிப்பீடுகள் தகர்ந்திருந்த அல்லது தணிந்திருந்த காலத்தில் உருவானதுதான் தி.மு.க.

அண்ணா தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களை முழுமையாகப் படிப்பவர்களுக்குத் தெரியும். “பெரிய போராட்டங்கள், தியாகங்கள், சிறைச்சாலைகளை நிரப்புதல் இதெல்லாம் இன்றைய அரசியல் இல்லை; தம்பி! மனையில் மகிழ்ந்திரு, பிளைகளை நன்றாகப் படிக்க வை, கூடவே தமிழ் உணர்வையும் கொண்டிரு, இந்திய நாட்டுத் தூதுவர்கள் உலகெங்கும் உள்ளார்கள், நமது தேசியக் கொடி ஐ.நா அவையில் பறப்பதைப் பார்” – என்பவைதான் அண்ணாவின் கடிதங்களின் சாராம்சமாக இருந்தன.

இப்படியான மதிப்பீடுகளின் ஊடாகவே தி.மு.கவினர், தேசியக் கொடியை எரிப்பதையும்,  சிறைகளை நிரப்புவதையும் தன் அரசியலாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்த பெரியாரின் இயக்கத்திலிருந்தும் பிரிந்தனர். இன்னொரு பக்கம் அன்று இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாமல் ஆயுதப் போராட்டம் என்கிற வடிவை எடுத்த கம்யூனிஸ்டுகள் நேரு அரசால் கொடுமையாக ஒடுக்கப்பட்டனர். சூழலும் மதிப்பீடுகளும் மாறி இருந்ததைக் கம்யூனிஸ்டுகள் அண்ணாவைப்போலப் ‘புத்திசாலித்தனமாக’ப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தி.மு.க வீழ்த்தியது என்பதைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் இங்கே தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொண்டனர் என்பதே பொருத்தம்.

1967ல் மத்திய அரசு பிரிவினை கேட்பதைத் தேசத்துரோகமாகத் தடை செய்த அடுத்த கணமே தி.மு.க திராவிடநாட்டு கோரிக்கையைக் கைவிட்டுக் கண் சிமிட்டியதை நாம் இந்தப் பின்னணியில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நான் இழிவாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். ரொம்பவும் நடைமுறை சார்ந்த pragmatic அரசியல் இது. அண்ணாவுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு இந்தப் ”ப்ராக்மாடிசத்தை” (pragmatism) தமிழ் மக்களின் தனித்துவமான அரசியலாகக் கொண்டு சென்றவர் கலைஞர்.

மைய நீரோட்டத்தில் கலந்து கொண்டதனால் அவர் தென்னகத்தின் தனித்துவங்களைக் கைவிட்டு விடவில்லை. மாநிலசுயாட்சி என்கிற அடிப்படையில் மாநில உரிமைக் கோரிக்கைகளை அவர் உரத்து ஒலித்துக் கொண்டே இருந்தார். தனது அரசியல் சமரசத்துக்கு ஈடாக இன்னொரு பக்கம் அவர் குறியீட்டு (Symbolic) ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாகவும் பல உரிமைகளை அவர் தக்க வைத்துக் கொண்டார். தமிழகத்துக்கென ஒரு மொழி வாழ்த்துப் பாடல், சுதந்திரநாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை ஆகியன இப்படிக் குறியீட்டு ரீதியாகப் பெற்ற உரிமைகள்; ஏக இந்தியா என்பதன் அடையாளமாக உள்ள தேசியக் கொடியை ஏற்றுவது, சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தை ‘எடிட்’ பண்ணி வடமொழியைக் காட்டிலும் தமிழை உயர்த்திச் சொல்லும் வரிகளை நீக்கியது ஆகியன கலைஞர் தமிழ் மக்கள் மீது சுமத்திய சமரசங்கள். இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது, முஸ்லிம் வெறுப்பைத் தமிழகத்துக்குள் அனுமதிக்காதது, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி தமிழ்ச் சமூக அமைப்புக்குத் தக அருந்ததியர், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என ஒதுக்கீட்டை விரிவாக்கியது முதலியன அரசியல் மற்றும் பொருளியல் ரீதியாக நமக்குக் கிடைத்த பயன்கள். கலைஞரை அரசியல் ரீதியாகத் தோற்கடித்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட அவரது வழியிலேயேதான் தொடர்ந்து செல்ல முடிந்தது. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது மதிய உணவை விரிவாக்குவது என்பதாகத்தான் அவர்கள் தம் சாதனைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

பொது விநியோகமுறையை இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக விரிவாக்கியது, பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கி இந்தியாவிலேயே மலிவான சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது, பல்கலைக் கழகங்களை அதிகப்படுத்தியது, நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாகக் குடிசைமாற்று வாரியம் அமைத்தது முதலியன கலைஞர் அரசின் சாதனைகளாகச் சொல்லத் தக்கவை.

தேசிய அரசியலில் அவர் நெருக்கடி நிலயை எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தது வரலாற்றில் மறக்க இயலாத ஒன்று. மத்திய அரசில் நான்குமுறை அவரது கட்சியினர் பங்குபெற்றனர். எனினும் வாஜ்பேயீ அமைச்சரவையில் பங்குபெற்ற ஐந்தாண்டுகாளில் அதன் மூலம் தமிழகத்துக்குப் பெரிய பலன்கள் ஏதும் இல்லை. அமைச்சரவைக் குழுக்கள் (GoM) என்கிற அமைப்பைப் புகுத்தி எல்லா அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டபோது அந்த அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க உட்பட மாநிலக் கட்சிகளுக்கு உரிய பங்களிக்கப்படவில்லை. அதை எல்லாம் தி.மு.க மௌனமாக ஏற்றுக் கொண்டது.

கலைஞரின் அரசியல் வாழ்வில் கடும் விமர்சனத்துக்குரிய காலமும் (1999 – 2004) அதுதான். எந்த வகையிலும் திராவிடக் கொள்கைகளுக்குப் பொருத்தம் இல்லாத இந்துத்துவ அரசியலுடன் தி.மு.க கைகோர்த்து நின்றது மட்டுமல்ல, பாடநூல் திருத்தங்கள் உட்பட பா.ஜ.க அரசின் அத்தனை இந்துத்துவச் செயற்பாடுகளையும் அது மௌனமாக ஏற்றுக் கொண்டது. மோடி ஆட்சியில் குஜராத்தில் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற வன்முறைகளின் போது (2002) அவற்றை உரிய முறையில் கண்டிக்கும் திராணியற்றவராகக் கலைஞர் நின்றதை மறக்க இயலாது. அதே காலகட்டத்தில்தான் கோவையிலும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டத்தில் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் பின்னர் நடந்த வெடிகுண்டு பயங்கரவாதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். குண்டு வெடிப்பை ஒட்டி முஸ்லிம்கள் மீது  கடும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் ஆட்சியில் இருந்தவர் கலைஞர்தான். இன்றுவரை உரிய தண்டனைக் காலம் முடிந்த பின்னும் முஸ்லிம் கைதிகள் விடுதலை அடைய இயலாமல் இருப்பதற்குக் கால்கோள் இட்டவரும் அவர்தான்.  மதவாத அரசியலை முன்வைத்து இயங்கும் “ஸ்வராஜ்யாமேக்” எனும் ஆக்கில ஊடகம் கலைஞரை அவரது இறப்புக்குப் பின் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அவரது சிறந்த அரசியல் காலகட்டமாக இதைக் (1999- 2004) குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

பெரியார் மண் என நாம் சொல்லிக் கொள்ளும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத இயக்கங்கள் கால் பதித்ததை ஜெயா ஆட்சியைப் போலவே கலைஞர் ஆட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

மாநிலக் கட்சி என்றால் அது மாநில உரிமைகளைப் பேசுவதோடு முடங்க வேண்டும் என்பதில்லை. உலகளாவிய அரசியலிலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அவை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டும், அவற்றைச் செயல்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கலைஞரின் அரசியல் அப்படித்தான் இருந்தது. உலகமயம் என்கிற பெயரில் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கக் கூடிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசுகள் மேற்கொண்டபோது கலைஞர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு செயலூக்கமற்ற பார்வையாளராகவும், அவற்றைச் செயல் படுத்துபவராகவுமே அவர் இருந்தார்.

வாரிசு அரசியல் என்பது இந்தியா ஒட்டுமொத்தத்தின்  சாபக் கேடு என்ற போதிலும் வாரிசு அரசியலின் உச்சத்தைத் தொட்டது கலைஞர்தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. ஆபாசம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது குடும்ப அரசியல் அமைந்தது. எல்லா மட்டங்களிலும் ஊழல்கள் மலிந்த ஆட்சியாகவும் கலைஞர் ஆட்சிகள் அமைந்தன.

ஒரு பெரிய அரசியல் கட்சி என்கிற வகையில் இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் வலுவான தொழிற்சங்கங்களும், விவசாயச் சங்கங்களும் தி.முக வசம் இருந்த போதிலும் அதனூடாக தொழிலாளர்களும், விவசாயிகளும் பெரிய பலன்களை அடைந்துவிடவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஐந்து தடவைகளில் பத்தொன்பதாண்டு காலம் மாநில் முதல்வராக இருந்த யாருக்கும் ஒரு நீண்ட சாதனைப் பட்டியல் இருக்கும்தான். காமராஜர், எம்.ஜி.ஆர் உட்பட எல்லோருக்கும் சாதனைப் பட்டியல்கள் உண்டுதான். ஆனால் அந்தச் சாதனைகள் எந்தத் திசையை நோக்கி  அமைந்தன, எந்தப் பிரிவு மக்களுக்கு அவை வலுசேர்த்தன, யாரால் அவை வெறுக்கும்படியாக அமைந்தன என்கிற வகையில்தான் ஒரு ஆட்சியாளரின் சாதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சமூகநீதியை நேசிக்கும் யாரும் கலைஞரை மறந்து விடவோ வெறுத்துவிடவோ முடியாது.