கலை விமர்சகர் தேனுகா – சில நினைவுகள்

(சென்ற அக் 24 அன்று கலை விமர்சகர் எனத் தடம் பதித்த நண்பர் தேனுகா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளைக் குடந்தை நண்பர்கள் நினைவு கூர்ந்தனர். நிகழ்வில் நான் பேசியது.)
நண்பர் தேனுகா குறித்து இங்கு எல்லோரும் அவர் எவ்வாறு இங்குள்ள கோவில்கள், சிற்பங்கள் இவை குறித்தெல்லாம் ஆழமான அறிதலைக் கொண்டிருந்தார், எப்படி அவைகளையெல்லாம் நேசித்தார், சிற்பம், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளை ரசிப்பதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் ஒரு வாழ்நாளை அர்ப்பணித்தார் என்பதை எல்லாம் விரிவாகச் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து ஓராயிரம் ஆண்டுகளாக சிற்பக் கலை வளர்த்து வரும் சுவாமிமலையில் வளர்ந்த நண்பர் தேனுகாவை ‘முதன் முதலில் தமிழில் உருவான நுண் கலை விமர்சகன்’ என தஞ்சைப் பிரகாஷும், தேனுகாவின் “டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை’ எனும் முதல் கட்டுரையைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட இதே தொனியில் க.நா.சுவும் ஏற்கனவே பாராட்டியுள்ளனர். கும்பகோணத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் பலரும் இதே போல அவரைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.
நுண்கலை தொடர்பான பல முக்கிய விருதுகளும் அவருக்கும் அவரது நூல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
எல்லாச் சிறப்புகளுக்கும் தகுதியானவர் தேனுகா என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
ஆனால் தேனுகாவின் பெருமைகள் அவர் நமது பாரம்பரிய நுண்கலைகளைப் போற்றியவர் என்பதோடு முடிந்துவிடுவதில்லை. மிகவும் சமகாலத்தவராகவும் அவர் விளங்கினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சோழர்காலச் சிற்பங்களைப் பாராட்டியதோடும், அவற்றின் நுண்மைகளை விளக்கியதோடும் அவர் நின்றுவிடவில்லை. வித்யா சங்கர் ஸ்தபதி போன்று நம்மோடு வாழ்ந்து வரும் இன்றைய சிற்பிகள், இன்றைய ஓவியர்கள் ஆகியவர்கள் குறித்தும் அவர் வியந்தார் அவர்களின் சிற்ப, ஓவிய மொழிகளை விளக்க முயன்றார்.
அத்தோடும் அவர் நிற்கவில்லை. மேற்குலகில் மிக நவீனமாகவும், பின் நவீனமாகவும் தோற்றமெடுத்த ஓவியக் கோட்பாடுகள், புதிய இசங்கள், வான்கோ போன்ற ஓவியர்கள், காம்யூ போன்ற எழுத்தாளர்கள் எல்லோரையும் வியந்தார் அறிமுகம் செய்தார்.
இவற்றினூடாக தேனுகாவின் முக்கிய பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் வெறும் பழமையோடு ஓய்ந்துவிடவில்லை. அவை இன்றும் தொடர்கின்றன. எப்படித் தமிழ் மொழியின் தொடர்ச்சி பேணப்படுகிறதோ அவ்வாறே தமிழ்க் கலைகளிலும் தொடர்ச்சி பேணப்படுகிறது. அவை அழிந்துவிடவில்லை என்பதன் மீது அவர் நம் கவனத்தை ஈர்த்தார்.
2. கலைகளை, குறிப்பாக நுண்கலைகளை பழமைX புதுமை; மேற்குX கிழக்கு என்றெல்லாம் பெரிதாக வேறுபடுத்திப் பார்க்கத் தேவை இல்லை. அவற்றுக்கிடையே ஒரு தொடர்ச்சி (continuity) இருக்கிறது; தொடர்ச்சி மட்டுமல்ல ஒரு ஒத்திசைவும் (harmony) உள்ளது என்பதையும் அவர் தொட்டுக்காட்டினார். கலைகளுக்கிடையேயேயான இந்தத் தொடர்ச்சி மற்றும் ஒத்திசைவு என்பதற்கு அழுத்தம் கொடுத்தது அவரது இன்னொரு முக்கிய பங்களிப்பு.
3.கலைகளின் தொடர்ச்சி என்பதன் பொருளென்ன? காலங் காலமாக இருந்து வருகிற, அல்லது, ஒரு புவிப்பகுதியின் மரபுவழிப்பட்ட இலக்கண விதிகளை அப்படியே பின்பற்றி அவற்றிற்கு உண்மையாக இருப்பதா? இசையின் லயம், தாளம், அல்லது சிற்பக் கலையின் ஆகம இலக்கணங்கள் ஆகியவை மீறவே இயலாதவையா? அப்படி இல்லை என்கிற உண்மையையையும் தேனுகா தன் எழுத்துக்களின் ஊடாக நிறுவுகிறார்.
இவற்றை  எல்லாம் அவர் தன் முனைப்போடு இப்படியெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அதன் வழி நின்று முன் வைக்கவில்லை. தன்னியல்பாக அவரது எழுத்துக்களின் ஊடாக இவை வெளிப்படுகின்றன. வித்யாசங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழியைப் பற்றி எழுத வரும்போதாகட்டும் ராஜரத்தினம் பிள்ளையின் ‘தர்பாரி’ல் இன்னொரு இராகக் கலப்பு ஏற்படுவது குறித்தாகட்டும் தேனுகா இந்த இலக்கண மீறல்களைச் சுட்டிக் காட்டுவதோடு அவைதான் அவர்களின் சிறப்புகள் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
அவரது முதல் கட்டுரையான டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை என்பதும் கூட இந்தப் பிரச்சினையை விவாதிப்பதுதான். எப்படி இயற்கையில் சில உயிர்வகைகள் அழிந்து போகின்றன, அத்தகைய உயிர்வகைகள் எப்படி இருந்தன எனப் பிந்திய தலைமுறைகளுக்குக் காட்டுவதற்கு அவற்றின் இறுதி உயிர் வடிவங்களைப் பதப் படுத்தி வைப்பவர்கள்தான் டாக்ஸிடெர்மிஸ்டுகள். தமிழ்க் கவிதை முதலான இலக்கிய வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பதைப்பவர்களைத்தான் தேனுகா இப்படிக் கூறுகிறார்.
கலை இலக்கியங்களின் வளர்ச்சி என்பன இலக்கணங்களை மீறுவதுதானே. இல்லாவிட்டால் தமிழில் இத்தனை இலக்கணங்கள் ஏன்? தொல்காப்பியம் ஒன்று போதாதா? பின் ஏன் நன்னூல், அணி இலக்கனங்கள், வீர சோழியம், பாட்டியல் நூல்கள் எல்லாம்?
#######
தேனுகா அதிகம் கலை இலக்கியங்களுக்கு அப்பால் எழுதியதில்லை. அப்படி எழுதிய சிலவற்றுள் காந்தி பற்றிய நான்கு கட்டுரைகள் இங்கு சொல்லப்பட வேண்டியவை. அரசியல் குறித்தெல்லாம் அதிகம் பேசாதவராயினும் காந்தியின் இன்றைய தேவையை அவர் உணர்கிறார்.
காந்தியை அவர் புரிந்துகொள்வது மற்றும் அறிமுகப்படுத்துவதுமான அவர் பாணி மிகவும் தனித்துவமானது. காந்தியின் வாழ்வு குறித்து கிட்டதட்ட ஆயிரம் நூல்கள் உள்ளன என்பர், அவர் உயிருடன் இருந்த காலத்திலிருந்தே, ஏன் தென் ஆப்ரிகாவில் இருந்த காலத்திலிருந்தே அவருக்கு வாழ்க்கை வராலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
காந்தியைப் பற்றி எழுத முனையும் யாரும் இந்த நூல்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவது சிரமம். ரோமன் ரோலந்த் முதல் லூயி ஃபிஷர் தொடங்கி எத்தனை பேர்கள் அவரது வரலாற்றை எழுதியுள்ளனர். ஐன்ஸ்டினில் இருந்து பியர்ல் எஸ் பக் வரை எவ்வளவோ பேர் அவரைக் கொண்டாடியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதிப்புகள் ஏதும் என்றி முற்றிலும் சுயமாக, ‘ஒரிஜினலாக’ அமைகிறது தேனுகாவின் கட்டுரை. காந்தி குறித்து ஆகா ஓகோ என்றெல்லாம் அவர் ஏதும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்விலிருந்து ஒரு நான்கைந்து சம்பவங்களைத் தேர்வு செய்து நம் முன் வைப்பதோடு தேனுகாவின் பணி முடிந்துவிடுகிறது. அதன் ஊடாக காந்தி குறித்த ஒரு அழகான தோர்றம் வாசிப்பவருக்கு உருவாகிவிடுகிறது.
தேர்வு செய்த சில காட்சிகளைப் பார்ப்போம். முதலில் சத்திய சோதனையில் காந்தி தன் மூத்தோர்கள் பற்றிச் சொல்வது. காந்தியின் தாத்தா உக்கம்சந்த் போர்பந்தர் சமஸ்தானத்திலிருந்து நாடுகடத்தப்படுகிறார். பின் அவர் மீதான அந்தத் தடை நீக்கப்படுகிறது. அதற்காக அவர் முறையாக நன்றி ஏதும் தெரிவிக்கவில்லை. இடது கையால் வணக்கம் வைக்கிறார். கேட்டதற்கு என் வலது கை ஏற்கனவே போர்பந்தருக்கு அர்ப்பணமாகிவிட்டது என்கிறார். தாய் புத்லிபாயோ ஒரு இறுக்கமான மரபு வழிப்பட்ட இந்துப் பெண். அனைத்து இந்து நம்பிக்கைகளையும் முறையாகப் பின்பற்றுபவர். அப்பா கரம்சந்த் அனைத்து மத நம்பிக்கைகளை உடையவர்களுடனும் சமமாகப் பழகுபவர். அவர்களை மதிப்பவர். அவர்களது கருத்துகளைப் பொறுமையோடு கேட்டு உவப்பவர்.
இரண்டாவது காட்சி காந்தி தென் ஆப்ரிக்கவிலிருந்து வந்த தொடக்கத்தில் (1916) நடந்தது. காசியில் ஒரு இந்துக்கல்லூரியை அன்னிபெசன்ட் தொடங்குகிறார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பலரும் அழைக்கப்படுகின்றனர். சமஸ்தான மகாராஜா ஒருவர் தலைமை தாங்குகிறார். காந்தி குஜராத்திகளில் குறிப்பாக அவரது கத்தியவார் பகுதி மக்களின் மரபுடையில் அங்கு தோன்றுகிறார். தலையில் டர்பன் சகிதம் காந்தியின் படம் ஒன்று நினைவில் உள்ளதுதானே. தான் ஆங்கிலத்தில் பேச நேர்வதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு இந்திய மக்களின் அன்றைய பரிதாபத்திற்குரிய நிலையை விரிவாகச் சொல்கிறார் காந்தி. இது குறித்து நாம் பிரக்ஞையற்று இருப்பது, மன்னர்களும் பெருந்தனக்காரர்களும் கவலையற்று அந்நிய ஆட்சியை அண்டிப் பிழைப்பது முதலானவற்றைச் சாடுகிறார். தலைமை ஏற்ற மகாராஜா எழுந்து போய்விடுகிறார். அன்னிபெசன்ட் காந்தியின் பேச்சை நிறுத்தச் சொல்கிறார். பாதுகாப்புக் கருதி பிரிட்டிஷ் போலீஸ் அன்றிரவு அவரை காசியில் தங்க வேண்டாம் எனச் சொல்கிறது,.
பிடிவாதக்காரரான காந்தி அன்று இரவு அங்கு தங்கிச் செல்கிறார்.
மூன்றாவது காட்சி; காந்தியின் தலைமையிலான அஹிம்சைப் போராட்டங்களில் சௌரிசவ்ரா உட்பட சில இடங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன. வழக்கு விசாரணையின்போது இந்த வன்முறைகளுக்குக் காந்தி பொறுப்பல்ல என பிராசிகியூஷன் தரப்பு வழக்குரைஞரே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் காந்தி தான் அஹிம்சையில் உறுதியாக நம்பிக்கை உள்ளவன் ஆனபோதிலும் தனது போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக ஏற்றுக் கொள்கிறார். நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டுகள் தண்டனை வழங்குகிறது.
நான்காவது காட்சி: சுதந்திரம் அளிப்பது உறுதியாகிவிட்டது. தேதியையும் மவுன்ட்பேட்டனே நிச்சயிக்கிறார். அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள்தான் பின்னாளில் பா.ஜ.கவை உருவாக்கிய தலைவர்கள் எல்லாம் இருக்கின்றனர். மவுன்ட்பேடன் ஒருமுறை காந்தியிடம் எகதாளமாகக் கூறுகிறார் :”உங்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியே இப்போது என் கைகளில்..” . நறுக்குத் தெறித்தாற்போலப் பேசுவதில் வல்ல காந்தி, “அதனாலென்ன, இந்திய மக்கள் என் பக்கம் அல்லவா இருக்கின்றனர்” என்கிறார்
காந்தியின் இறப்பின்போது பியர்ல் எஸ் பக் முதலானவர்கள் உரைத்த சில கருத்துக்களோடு தேனுகாவின் கட்டுரை முடிகிறது.
############
தேனுகா அவரது கடைசி ஆண்டுகளில் என்னிடம் சற்று நெருக்கமாக இருந்தார். நான் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் குடந்தையில் இருப்பேன். என் வீடும் அவர் வீடும் மயிலாடுதுறைச் சாலையில்தான் என்கிற வகையில் மாதத்திற்கு ஒரு முறையேனும் அவரைச் சாலையில் சந்திப்பதுண்டு, என் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அகல்வோம். கடைசியாக ஒரு முறை வீட்டுக்கு வந்து அவரது பெருந் தொகுப்பாக வந்திருந்த நூலைத் தந்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றார்.
அடுத்த முறை நான் வந்தபோது அவசரமாக ஏதோ வேலையாகச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் வந்த அவர் என்னை நிறுத்தியபோது, “அவசரமாகச் செல்கிறேன். போய் போன் செய்கிறேன்..:” எனச் சொல்லி அகன்றேன். ஆனால் மறந்து போனேன். அடுத்த சில வாரங்களில் நான் சென்னையில் இருந்தபோது அம்மாசத்திரம் இளங்கோவன் அந்தத் துயரச் செய்தியைக் கூறியபோது அன்று அவர் அழைத்த கணம் நான் நிற்காமல் அகன்ற நினைவு மேலெழுந்து கண்களை மறைத்தன.
என்ன செய்வது சில நேரங்களில் அப்படித்தான் ஆறாத வடுக்கள் அமைந்து விடுகின்றன.
(மேற்கோள்கள் அனைத்தும் நினைவிலிருந்து கூறியவை)