கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகின்றனரா?

கவிஞர் தாமரையின் பதிவொன்றை (Kavignar THamarai, 27.3.18) சற்று முன் ஒரு நண்பர் கவனப்படுத்தினார். படித்து அதிர்ச்சி அடைந்தேன்.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பதிவொன்றைப் பகிர்ந்து தாமரை கூறி இருப்பதாவது:

“இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல கிறித்தவ, இசுலாமிய அடிப்படைவாதங்கள்….. இதுவரை நடுநிலையாளர்களாக இருந்தவர்கள் இனி எதிர்த்து அடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர்” -. Charu Nivedita-

நண்பர் சாருவின் இக்கருத்தைச் சுட்டிக்காட்டி தாமரை தொடர்வது:

’சாரு நிவேதிதாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இந்த விடயத்தில் சாரு நிவேதிதாவின் கருத்துதான் எனதும். முழுமையாக ஆமோதிக்கிறேன். கிறித்துவ அடிப்படைவாத மதமாற்ற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன, இசுலாமிய அடிப்படைவாதம் வேறு பரிமாணம் எடுத்து அது ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, இந்துத்துவத்தை மட்டும்தான் துவைத்து எடுப்பேன் என்பது மகா மட்டமான, முட்டாள்தனமான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால், இந்த மதங்களின் Agendaவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிகிறது. நடுநிலைப் பார்வையாளனாக இருந்த ஒரு சராசரி இந்து கூட மோடி பக்தனாக உருமாறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருகிறான். புரிந்து விழித்துக் கொண்டால் நலம். “

இதுதான் தாமரையின் பதிவு. அவர் பகிர்ந்துள்ள சாரு நிவேதிதாவின் பதிவில் இங்கே தாமரை சொல்லியுள்ளதைக் காட்டிலும் பெரிதாக ஒன்றுமில்லை. சாரு நிவேதிதா எதையும் பேசுவார். அடுத்த நாள் அதை மறுத்து விட்டுப் போகவும் செய்வார். அதில் வில்லங்கங்கள் இருக்காது. அப்படி வாழ்வதையே தன் அடையாளமாகவும் பெருமிதமாகவும் கொள்பவர் அவர். நித்தியானந்தாவைப் புகழ்ந்து வந்தவர், அவர் விஷயங்கள் வெளிப்பட்ட உடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டதையும் அறிவோம்.

சரி இதில் தாமரை சாருவை ஒட்டி என்ன சொல்கிறார்?

1. கிறித்துவ அடிப்படைவாத மதமாற்ற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன,

2. இசுலாமிய அடிப்படைவாதம் வேறு பரிமாணம் எடுத்து அது ஒருபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

3. இந்நிலையில் இந்துத்துவத்தை மட்டும்தான் துவைத்து எடுப்பேன் என்பது மகா மட்டமான, முட்டாள்தனமான நிலைப்பாடு

4. கிறுஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் இந்த Agendaவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிகிறது.

5. நடுநிலைப் பார்வையாளனாக இருந்த ஒரு சராசரி இந்து கூட மோடி பக்தனாக உருமாறும் நிலைக்குத் தள்ளப் பட்டிருகிறான். புரிந்து விழித்துக் கொண்டால் நலம்.

6. இதுவரை நடுநிலையாக இருந்தவர்கள் இனி இவற்றை (கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம்) எதிர்த்து அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இவை அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை எல்லாம் சரிதானா?

இந்தியாவின் பன்மைத்தனமையை அதன் சிறப்பு என நாம் சொல்லுகிறோம். இது இந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல. ஆதிவாசிகள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், பார்சிகள், முஸ்லிம்கள், தமிழர்கள். மலையாளிகள், இந்திக்காரர்கள், சிந்திகள், குஜராத்திகள், காஷ்மீரிகள், சைவ உணவு உண்போர், அசைவம் உண்போர். பசுவை வழிபடுவோர். பன்றியை வெறுப்போர், பன்றிக்கறியை உண்போர் என்றெல்லாம் பலரும் ஒன்றாக வாழ்ந்திருந்த, வாழ்கிற நாடு.

இதை ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை உணவுப் பழக்கம் என்றெல்லாம் ஒற்றை அடையாளமாக உள்ள இந்து ராஷ்டிரமாக ஆக்குவது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா, பா.ஜக மோடி ஆகியோரின் நோக்கம். இதை அவர்கள் மறைமுகமாக அல்ல வெளிப்படையாக அறிவித்துச் செயல்படுகின்றனர்.

இங்கு தாமரை, சாரு நிவேதிதாவை மேற்கோள் காட்டி இந்த நடைமுறை உண்மையை, அப்பட்டமாக நம் முன் இப்போது அரங்கேற்றப்படும் இக் கொடுமையை, முற்றிலும் தலை கீழாக்கி முன் வைக்கிறார். இன்றைய இந்தப் பன்மைத்துவம் கெடுவதற்கே கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதும், இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளும்தான் காரணமாம்.

கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை இங்கு வெறும் 2.4 சதம். ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் இவர்களின் மக்கள் தொகை வீதம் குறைந்து கொண்டு போகிறதே ஒழிய அதிகரிக்கவில்லை என்கிற அடிப்படை உண்மையைத் தாமரை அறிந்திருக்கவில்லை என்பது நமக்குப் புரிகிறது. .

இரண்டு நாள் முன்னர் நான் ஜார்கண்டில் இருந்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு 20 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். கொன்று மரத்தில் தொங்கவிடப் பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் மதமாற்றம் செய்தவர்களா? ஏதேனும் ஆதாரம் உண்டா?

இதோ இன்று மதுரை சந்தையூரில் அருந்ததிய மக்கள் முஸ்லிம்களாக மாறப் போகிறேன் என்கிறார்கள். எந்த மௌலவி அல்லது முஸ்லிம் இயக்கம் அதன் பின்னணியில் உள்ளது? விரல் நீட்டி அடையாளம் காட்ட முடியுமா ?

வன்முறைகளுக்கு யார் காரணமோ அவர்களையே வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவது சாமர்த்தியம் இல்லை . உண்மை யாராலும் எளிமையாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. அதைன் யாராலும் எளிதில் மறைத்துவிட இயலாது..

இப்படித்தான் புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவில் பெண்கள் பொது உடைமை ஆக்கப்படுகிறார்கள் என ஒரு காலத்தில் இங்கே வதந்திகள் அப்ப்போது நம் நாட்டில் வாழ்ந்த ஒரு கவிஞர் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அதை ஆய்வு செய்தார். உண்மையை அறிந்தார். உலகத்திற்கு வெளிப்படுத்தினார். அவரை நாம் மகாகவி என்கிறோம். ருஷ்யாவில் பெண்கள் நிலை குறித்த அவரது அற்புதமான கட்டுரையை அவசியம் படியுங்கள். மகாகவி பாரதி, தன் சமகால மதச் சிந்தனைகளை எல்லாம் ஆழப் பயின்று காப்பியம் இயற்றிய சீத்தலைச் சாத்தன், திருவள்ளுவன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழக்கிய கணியன் பூங்குன்றன் போன்ற அறிவுக் கூர்மை மிக்க கவிஞர்கள் வாழ்ந்த மண் இது.

இது போன்ற விடயங்களில் கருத்துச் சொல்வதற்கு பரந்த படிப்பு வேண்டும், உழைப்பு வெண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக விசாலமான மனம் வேண்டும்.

இரண்டு

கவிதை எழுதுவது என்பது வெறும் வார்த்தை விளையாட்டல்ல. ஆழ்ந்த அறிவு, விரிந்த அனுபவம் , அளவிடற்கரிய மனித நேயம் எல்லாம் வேண்டும். சம காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த அவதானிப்பு வேண்டும். தவறுகள் என அறியும்போது பச்சைக் குழந்தைகள் போலத் திருத்திக் கொள்ளும் மனம் வேண்டும். எஸ்ரா பவுண்ட் போலச் சில பாசிசத் தொடர்புடையவர்களும் கூட நல்ல கவிஞர்களாக இருந்துள்ளனரே எனக் கேட்கலாம். அது விதி அல்ல. ஒரு வகையில் அது விதி விலக்குதான். வரலாறு முழுமையிலும் ஒடுக்கப்படுபவர்களின் பக்கமாகக் கவி மனங்கள் கசிந்துள்ளதே அதிகம்.

“மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்” – எனக் கூறி நாடு துறந்து அகன்றதாகத்தான் கவிமனங்கள் குறித்து செவி வழிச் செய்திகளும் பகரும்.

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக் கவிஞர் தாமரை சொல்வது ஏற்புடையதல்ல என நிறுவுவதற்கு நாம் ரொம்பச் சிரமப் பட வேண்டியதில்லை. கூகிளைத் தட்டினால் கடந்த நான்கைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் கிட்டும். நீங்கள் சொன்னபடி இங்கு கிறிஸ்தவர்கள் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர்கள் என்றால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அவர்களின் மக்கள் தொகை வீதம் கூட வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? அவர்களின் வீதம் குறைந்து கொண்டே போகிறது. கூகிளைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லையானால் என் நூல்களைச் சற்றே புரட்டிப் பாருங்கள் மேடம்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை முன்னூறு ஆண்டுகாலம் ஆண்டான். ஆனால் அவன் போகும்போது இங்கிருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டரை சதம்தான். அவன் நோக்கம் மதம்மாற்றுவதல்ல. அவன் நோக்கம் இங்கிருந்து வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதாகத்தான் இருந்தது. பல நேரங்களில் மிஷனரிகளுக்கும் வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையில் மோதல்கள் வந்துள்ளன. முதற்கட்ட வெள்ளைப் பாதிரிமார்கள் பலரின் சராசரி ஆயுள் 50 க்கும் குறைவு.

பெரிய அளவில் மதம் மாறியவர்களாக இருந்தவர்கள் தலித்களாகவும், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினராகவுமே இருந்தது ஏன்?

சுதந்திரம் வந்தது. சரி. என்ன நடந்தது? இந்த அடித்தளச் சாதியினர் கிறிஸ்தவ, முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றானது. நான் கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்தவன். ஆனால் அப்படி வளர்க்கப்பட்டவன் அல்லன். என் தந்தை ஒரு நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்ட். அனாதையான இரண்டு தலித்களை வளர்த்து ஆளாக்கியவர். சாகும்வரை சொத்து என எதுவும் இல்லாமலிருந்து செத்தவர் அவர். என்னைச் சேர்த்து ஐந்து பிள்ளைகளை என் பொறுப்பில் விட்டுச் சென்றவர் அவர். நான் படித்து முடித்து வேலைக்குப் போகும் வரை எனக்கு இட ஒதுக்கீட்டுப் பலன் ஏதுமில்லை. தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்புதான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இன்றளவும் கிறிஸ்தவ தலித்கள் பட்டியல் சாதி உரிமைகளைப் பெறவில்லை. பொறையாரில் விஜியின் தந்தை இறந்த போது அவரது உடலை எரித்தவரை ‘நாநாய்க்கம், நாநாய்க்கம்’ என ஆதிக்க சாதியினர் அழைத்ததைப் பார்த்து விட்டு அடுத்த நாள் அவரைத் தனியே அழைத்து விசாரித்தேன். அவர் பெயர் ஞான ஆதிக்கம். கிறிஸ்தவ தலித். செய்யும் தொழில் வெட்டியான். ஆனால் அவருக்கு இட ஒதுக்கீடு இல்லை. கவிஞரே இதெல்லாம் உங்கள் கவனத்தில் பட்டதுண்டா?

மேடம் , ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன். நான் பொன்னேரி அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். ஆசிரியர் சங்கச் செயலபாட்டாளன், சங்கச் செயல்பாடுகளுக்காக ஊதிய உயர்வு வெட்டு பல்வேறு இடமாற்றங்கள் எனப் பழி வாங்கப்பட்டவன் என்கிற வகையில் ஆசிரியர்கள் எப்போதும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.

ஒரு நாள் மதியம் ஏதோ கல்லூரி விடுமுறை. சென்னை நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் அந்த கம்பார்ட்மென்டில் அன்று நானும் என்னுடன் பணியாற்றிய பேரா ராம்குமாரும் (பெயர் மாற்றியுள்ளேன்) மட்டும்தான்.

ராம்குமார் மெதுவாக என்னிடம் கேட்டார் : “நான் ஒரு கிறிஸ்தவன். தெரியுமா சார்?”

“தெரியாது ராம்குமார். நான் அதை எல்லாம் கவனிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே..”

“ஆனா நான் இப்ப கிறிஸ்தவன் இல்லை சார்” – அவர் குரல் கரகரத்திருந்தது.

“,,,,,,,,,,,,,,”

“எம். பில் முடிச்சுட்டு 5 வருஷம் எனக்கு வேலை கிடைக்கல. நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். இருந்தும் கிடைகல. எங்க சொந்தக்காரர்தான் இளங்கோவன் ஐ.ஏ.எஸ் (உண்மைப் பெயர். கல்வித்துறைச் செயலராக இருந்தவர்). அவரைப் போய் பார்த்தேன். அவர் திட்டினார். ‘நீ ஏன்யா இன்னும் கிறிஸ்தவ சர்டிஃபிகேட்டையே வச்சிட்டு இருக்கே. மதுரையிலதான் அந்த சைவ மடத்திலே மதம் மாற்றி சர்டிஃபிகேட் தர்றாங்க இல்ல. போய் இந்து அருந்ததியர்னு சர்டிஃபிகேட் வாங்கிட்டு வா..’ அப்டீன்னு சத்தம் போட்டாரு. எனக்கு மனசு வரல. ஆனா அடுத்த முறை டி.ஆர்.பி அப்லை பண்ணும்போது இந்துன்னு சர்டிஃபிகேட் வாங்கிட்டேன். SC ரிசர்வேஷன்ல வேலை கிடச்சுது..”

அவர் குரல் இப்போது முற்றிலும் உடைந்திருந்தது.

“அதனால என்ன இப்போ விடுங்க ராம் குமார்” என்றேன்.

“இல்ல சார். இப்ப நான் இரண்டு பிள்ளைங்களையும் இந்துவாத்தான் வளர்க்கிறேன். வீட்டீலே ஏசு, மாதா படங்கள் எதுவும் வச்சுக்கிறது இல்ல. பொய் சொல்லி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன்னு யாராவது புகார் பண்ணிடுவாங்களோன்னு பயம் …..”

அவர் திடீரென அழ ஆரம்பித்தார். சின்ன வயதிலிருந்து மதப்பற்று, சடங்குகள் இல்லாமல் வளர்க்கப்பட்ட எனக்கு இது ஒரு புதிய அனுபவம். விரும்பி மதம் மாறுவது என்பது வேறு. இப்படி விருப்பத்திற்கு மாறாக மதம் மாற நேர்வது என்பது இத்தனை வலி மிகுந்த ஒன்றாக இருக்கும் என நான் நினைத்ததில்லை.

அப்புறம் நான் இது குறித்து ஆய்வு செய்தபோது அப்போது (15 ஆண்டுகளுக்கு முன் ) ஆண்டொன்றுக்கு மதுரை ஆதீனத்திலிருந்து மட்டும் இவ்வாறு கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறியதாக சான்றிதழ் வாங்குபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1000 என அறிந்தேன்.

(பேரா. முனைவர் ராம்குமார் இப்போது சென்னையிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் இயற்பியல் துறையில் உள்ளார்)

மூன்று

கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வீதம்குறைந்து வருவதாக நாம் சொல்லி இருப்பது ஏதோ பொய் என்பது போல இந்துத்துவ நேசர்கள் இங்கே அலம்பல் பண்ணிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கடந்த மூன்று மக்கள் தொகைக் கணக்கீட்டு விவரங்கள் இதோ (அத்வானியின் முன்னுரையுடன் கூடிய Centre for policy Studies – Religious Demography in India எனும் தலைப்பில் உள்ள தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இவை.):

1971 ல் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை வீதம் 2.595% இது 1981 ல் 2.4315 ஆகவும், 1991 ல் 2.322% சதமாகவும் குறைந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தரவு இது என்பது குறிப்பிடத் தக்கது. அதே நேரத்தில் இந்த மூன்று சென்சஸ்களிலும் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை முறையே 1,42,25,000 // 1,66,45,000 // 1,96,51,000 என அதிகரித்துள்ளது. ஆனாலும் அவர்களின் மக்கள் தொகை வீதம் மொத்தத்தில் குறைந்து கொண்டே வருகிறது என்பதன் பொருள் என்ன? மற்ற இரு முக்கிய மதங்களின் மக்கள் தொகை வீதம் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் அதிகமாக அதிகரித்து வருகிறது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக மேற்படி தகவல் பிற இந்திய மதங்களின் (அதாவது முக்கியமாக இந்து மதம்) மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் பற்றிக் குறிப்பிடும் தகவலைப் பார்ப்போம்.

இதே 1971, 1981, 1991 ஆகிய மக்கள் தொகைக் கணக்கீட்டில் முறையே இது 47,25,17,000 // 58,66,81,000// 72,01,00,000 என அதிகரித்துள்ளது. அதாவது 1971-91 கால கட்டத்தில் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சுமார் 54 இலட்சம் என்றால், இந்துக்கள் 95 சதத்திற்கும் மேலாக உள்ள ‘இந்திய மதங்களின்’ மக்கள் தொகை சுமார் 25 கோடி அதிகரித்துள்ளது.

# # #

ஒப்பீட்டளவில் பிற மதங்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகைப் பெருக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி வீதம் அதிகமாக உள்ளதே. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ள சமூகங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

இந்தியக் கிறிஸ்தவத்தைப் பொருத்தமட்டில் அதன் இருப்பைத் தென்மாநிலங்களிலும் (தமிழகத்தில் அது சுமார் 6%), மேகாலயா, நாகாலந்து முதலான வட கிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே காண முடியும். மத்திய இந்தியாவில் அது 1% க்கும் குறைவு. அதனாலேயே சில ஆய்வாளர்கள் இந்திய கிறிஸ்தவத்தை “”திராவிட – பழங்குடி மக்களின் மதம்” எனக் குறிப்பிடுகின்றனர்.

சென்ற வாரம் நான் ஜார்கண்டில் இருந்தேன் என்றேன். அங்கே கிறிஸ்தவர்கள் 4 சதத்திற்கும் சற்றுக் கூட. முஸ்லிம்கள் 14 சதம். இந்துக்கள் சுமார் 66 சதம். மற்ற 16 சதத்தினரின் மதம் ‘சரணாயிசம்’ என அறிந்து சற்றுக் குழம்பிப் போனென். அது பழங்குடிகளின் மதம் என்பதைப் பின்னரே புரிந்து கொண்டேன். மரங்கள், ஆறுகள் முதலான இயற்கை வழிபாடு அவர்களுடையது.

இந்துத்துவ சக்திகள் இன்று பெரிய அளவில் இந்தியா முழுவதும் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்து மதமாற்றம் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விடயம். தற்போது மலேகான் முதலான பாங்கரவாத வழக்குகளில் சிக்கிச் சிறையில் இருக்கும் சுவாமி அசீமானந்தா இவ்வாறு குஜராத்தில் டாங்ஸ் பகுதியில் பழங்குடி மக்கள் மத்தியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து கொண்டிருந்த போது பெரிய அளவில் அங்கு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

# # #

தண்டகாரண்யப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மத்தியில் இராவண வழிபாடு உண்டு. அப்படியான ஒரு ஆறு பகுதிகளில் நடைபெறும் இராவண வழிபாடுகள் பற்றிய அழகான படங்களுடன் கூடிய கட்டுரை ஒன்றை நீங்கள் இணையத் தளங்களில் படிக்கலாம். (Celebrating Ravan, The Hindu, Oct 24,2015 – ’ஹிண்டு’ நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையையும் நீங்கள் பார்க்கலாம்.)

இராமாயணம் என்பது உண்மையில் கங்கைச் சமவெளியில் உருவான அரசுருவாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கு நோக்கிப் பரவி தண்டகாரண்யப் பகுதியில் வாழ்ந்தப் பழங்குடிக் குடிஅரசுகளை உள்வாங்கிய வரலாறுதான் என மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கும் கருத்து இன்றும் எஞ்சியுள்ள இந்த இராவண வழிபாட்டுடன் ஒப்பு நோக்கத் தக்கது. பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட mile to inch colored topo sheets சர்வே வரை படங்கள், வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் தண்டகாரண்யப் பெயர்கள், கோள் நிலைகள் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு சென்ற நூற்றாண்டில் பரமசிவ அய்யர் அவர்கள் ஆய்வு செய்துள்ளார். விரிவான அவரது நூல் குறித்து என் விரிவான கட்டுரை ஒன்றை என் முகநூல் பக்கங்களில் காணலாம். வால்மீகி இராமாயணக் கதையின்படி இராமன் விந்திய சாத்பூரா மலையைத் தாண்டவில்லை என அவர் நிறுவியுள்ளார். பார்க்க amarx.in. பரமசிவ அய்யர். பால காண்டத்தை மனப்பாடம் செய்தவர். ஆனால் அவர் இந்துத்துவ ஃபாசிஸ்ட் அல்ல என்பதுதான் இங்கே கவனத்துக்குரியது.

சரி இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். முகநூல் பதிவில் இதைச் சொல்லவில்லை. தேடிப் படித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிடேன். அது வேறொன்றும் இல்லை. அங்கு இந்துத்துவவாதிகள் புகுந்து இராவண வழிபாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். தங்கள் பண்பாடு நம்பிக்கைகள் எல்லாம் அழிகின்றனவே என அவர்கள் கலங்குகின்றனர். நேரடி ஆய்வில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான கட்டுரை அது.

குறிப்பு 1: கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிய என் விளக்கத்தை யாரும், அப்படி ஒருவேளை ஆவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தால் அது தவறுதான் என நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். யாரொருவரும் எந்த மதத்திலும் விரும்பி இணைவது அல்லது அதை விட்டு விலகுவது என்பதும், யாரொருவரும் என் மதத்திற்கு வாருங்கள் என மற்றவர்களை அழைப்பதும் அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பது என் கருத்து. மதத்தில் கட்டாயமும் வன்முறையும் கூடாது என்பது மட்டுமே என் கருத்து.

குறிப்பு 2: இது தொடர்பாக முகநூலில் நடந்த விவாதத்தில் ஒருவர் கிறிஸ்தவர்களின் வீதம் குறைந்து வருவதாக நான் சொல்வது பொய் எனவும், ஆந்திரத்தில் அவர்களின் வீதம் 40 சதம் எனக் கூறுவதையும் பார்க்கலாம். ஆந்திரத்தில் கிறிஸ்தவர்கள் 40 சதம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய் அல்லது தவறான புரிதல். ஆனால் அப்படிச் சொல்லியுள்ளவர் அதை உண்மை என நம்புகிறார். இதுதான் நமது கவலைக்கும் அச்சத்தும் உரிய விடயம். பாசிசம் இப்படியான பொய்களின் அடிப்படையிலேயே தன் வன்முறைகளை நியாயப்படுத்திக் கொள்கிறது. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆந்திர மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வெறும் 15.1% மட்டுமே. 1971 மக்கள் தொகையுடன் இதை ஒப்பிட்டால் இப்போது இங்கு கிறிஸ்தவர்களின் வீதம் 1.2% குறைந்துள்ளது.

இவ்வளவு ஆதாரங்களை முன்வைத்த பின்னும் அவர்கள் என்ன சொல்வார்கள்?

“கிறிஸ்தவர்கள் பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் அவர்களை மதம் மாற்றும்போது அரசாங்க ஆவணங்களில் நீங்கள் மதம் மாறியதைச் சொல்ல வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களின் வீதம் குறைவது போலத் தோன்றுகிறது” – என்பார்கள்.

வேறென்ன சொல்வார்கள்