குல மரபுகளை ஏற்க மறுக்கும் பவுத்தம்

(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -16 , தீராநதி, மே 2017)                                                 

தன் சந்ததி தனது குலமரபிற்கு மாறகத் துறவறப் பாதையில் காலடி வைப்பதை சித்திராபதியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவரவர் குலமரபை அவரவர் காக்க வேண்டும். அதுவே அவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து  உய்வதற்கான பாதை. என உரைத்த வைதீகச் சிந்தனைகளை எதிர்த்துக் கிளர்ந்த மதம் பௌத்தம்.  பௌத்த அறங்களையும், கோட்பாடுகளையும் விளக்க வந்த மணிமேகலைக் காப்பியம் தன் ஒவ்வொரு காதையிலும் வெவ்வேறு நுட்பங்களுடன் காவிய அழகு சிதையாமல் அதைச் செய்து முடிக்கும். இங்கு குல மரபு காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை முன்னெடுத்து வாதிடுபவளாக மூத்த தலைமுறையினளான சித்திராபதியையும், அதை மறுத்து முன் செல்லும் இளைய தலைமுறையாக மாதவியையும் மணிமேகலையையும் முன்னிறுத்துகிறார் சாத்தனார்.

உதயகுமாரன் இந்த உலகை ஆளும் வண்டு. அவன் அருந்திக் களிக்க விரும்பிய மணிமேகலையை அவனிடம் கொண்டு சேர்ப்பேன். ஒரு பிச்சைப் பாத்திரத்தைப் பெருமையோடு கையில் ஏந்தித் திரிகிறாளே அந்தச் சிறு பெண் அதைப் பிடுங்கி அங்கு திரியும் பிச்சைக்கார்களின் கையில் திணிப்பேன். அவளை உதயகுமாரனின் பொற்றேறில் ஏற்றிக் கொண்டு செல்வேன் – எனப் பலவாறும் ஆத்திரத்தை வெளிப்படுத்தித் தேரோடும் வீதியில் அவள் விரைந்து சென்ற போது அவளோடு வளை செறிந்த கைகளுடன் கூடிய பிற நாடக மங்கையரும் சென்றனர் என்கிறார் சாத்தனார். மக்களைப் பல்வேறு குலங்களாகப் பிரித்து நிறுத்தி, அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மரபை வரையறுப்பது மட்டுமின்றி அந்த மரபு குறித்த பெருமையை அவர்களுக்கு ஊட்டுதல் என்பதில்தான் வருண – சாதி அடிப்படைகளிலான குல மரபுகள் இங்கே மக்களின் ஒப்புதலுடன் பேணப்பட்டு வருகின்றன..buddha-amongst-lotus-flowers

பத்தினி ஒழுக்கத்தைப் பெருமையோடு முன்வைக்கும் அதே சமூகம்தான் இங்கு பலர் கைப்பட வாழும் கணிகையர் மரபையும் கொண்டாடுகிறது. பத்தினி ஒழுக்கத்தைக் கொண்டாடும் குலங்கள் மட்டுமின்றி, எந்தக் குலத்திடமிருந்து பத்தினி ஒழுக்கம் விலக்கி வைக்கப்படுகிறதோ அந்தக் குலமும் தங்களுக்கு அந்த ஒழுக்கமின்மையைக் கொண்டாடுகிறது. இந்தக் காதையில் வெளிப்படுவது ஒரு பாட்டி தன் பேத்தி குறித்துக் கொள்ளும் கவலை மட்டுமல்ல. அந்தச் சமூகமே அதை ஏற்கவில்லை. மணிமேகலையை உதயகுமாரனிடம் கொண்டு சேர்ப்பேன் எனச் சித்திராபதி வஞ்சினம் கூறிச் செல்லும்போது அந்தச் சமூகமே அவளுடன் செல்கிறது. இப்படியாகக் குல வழக்கங்களை மீறியோர் அதன்பின் சக அரங்கக் கூத்தியர்களின் வீட்டிற்குள் கூட நுழைய இயலாத பழியோடுதான் வாழ நேரும் என்பதையும் சொல்லிவிடுகிறார் சாத்தனார்.

ஆனால் குல மரபைப் புறந் தள்ளித் துறவற வாழ்வை ஏற்கும் மணிமேகலை அந்தப் பழியோடு வாழ நேரவில்லை. அவள் ஏற்ற பௌத்தம் அவளை அந்தப் பழியிலிருந்து காப்பாற்றுகிறது. காப்பாற்றுவது மட்டுமல்ல, பல்வேறு சமயக் கணக்கர்களையும் வென்று சிறக்கும் ஒரு அறிஞையாகவும், தூயோளாகவும் போற்றப்படும் நிலைக்கு அவளை உயர்த்தவும் செய்கிறது.

சக நடன மங்கையர் புடை சூழ வஞ்சினம் கூறி வெஞ்சினத்துடன் செல்லும் சித்திராபதி இளவரசன் வீற்றிருக்கும் உல்லாச மண்டபத்தை அடைகிறாள். வெண்சாமரம் வீசும் மங்கையர் மத்தியில் உல்லாசமாக அமர்ந்திருக்கும் உதயகுமாரனின் காலடியில் வீழ்கிறாள்.

ஒரு பக்கம் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரியும் மக்கள் கூட்டம். இன்னொரு பக்கமோ சித்திர விதானங்களுடன் கூடிய பளிங்கு மண்டபங்களில் உல்லாசம் அனுபவிப்போர். இப்படித்தான் தமிழகம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இருந்திருக்கிறது என்பதையும் மணிமேகலைக் காப்பியம் ஆங்காங்கு சுட்டிக் கொண்டே செல்கிறது.

“மாதவியும் மணிமேகலையும் கொண்ட பிக்குணிக் கோலம் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டுள்ளதா?” எனக் கேட்டு நகைக்கிறான் இளவரசன்.

பலர் மத்தியில் அமர்ந்து கொண்டு இவ்வாறு நகையாடும் இளவரசனிடம், “என் பேத்தி மணிமேகலை பூப்பெய்தி, உன்னால் கூடுவதற்குரிய பருவம் அடைந்து விட்டாள். இப்போது இந்த மூதூரின் புறப்பகுதியில் அமைந்துள்ள அம்பலத்தில்தான் உள்ளாள், அவளைச் சென்றடைவாயாக”  என்கிற செய்தியை சித்திராபதி பூடகமாகச் சொல்வதாக இப்பகுதி அமைகிறது. சாத்தனாரின் கவித்திறத்திற்கு ஒரு சான்றாக இந்த உரையாடலை உரையாசிரியர்கள் வியப்பார்கள்.. குருகு எனும் சொல்லுக்கு பறவையினம் என்றொரு பொருளுண்டு. குருகு என்பதைக் குருக்கத்தி எனக் கொண்டால் அதை மாதவி எனப் பொருள்படும் ஒரு மலராகவும் கருதலாம். அதேபோல காஞ்சி எனும் சொல் காஞ்சி மரத்தையும் குறிக்கும்; மேகலையையும் குறிக்கும். குருகினங்கள் கரு உயிர்க்கும் வண்ணம் மணிக்காஞ்சி மரம் பூத்து அவிழ்ந்துள்ளது. உதயகுமாரன் எனும் வண்டு அந்த அவிழ்ந்த மலரை உறிஞ்சி உண்ணுதற்குரிய நேரம் கனிந்துவிட்டது எனப் பொருள் தொனிக்கும் வண்ணம் இதை  உதயகுமாரனிடம் சித்திராபதி சொல்வதாக இந்த உரையாடலைச் சாத்தனார்  அமைத்திருப்பார்.

கப்பல் கவிழ்ந்து கடலில் அலைக்கழிக்கப்பட்டவன் கைப்பற்ற ஒரு புணை கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படிக் களிப்புற்ற உதயகுமாரன் தான் முன்னம் ஒருநாள் மணிமேகலையைப் பளிக்கறையில் கண்டு தவித்ததை விவரிப்பான். அப்போது தெய்வமோ, தெய்வத்தன்மை கொண்ட ஒரு திப்பியமோ தோன்றி “தவத்திறம் கொண்டவள் அவள். அவளிடம் உன் திறத்தைக் காட்டாதே” என எச்சரித்ததையும் சொல்வான். “காமக் களியாட்ட மயக்கத்தில் செய்தவற்றையெல்லாம் மற” எனச் சொல்லிச் சிரிக்கும் சித்திராபதி,

nun-and-monks“வாள் திறம் மிக்க அரசே! கோதம முனிவனின் மனைவி மீது கொண்ட காமத்துக்காக எத்தனை துன்பங்களை இந்திரன் ஏற்றுக் கொண்டான். கற்புக்கரசிகள் பலரைத் தன் கணவனான அக்னிதேவன் புணர ஆசைப்[பட்டபோது, அவன் மனைவி ஸ்வாஹா தேவி, அந்தக் கற்புக்கரசிகள் ஒவ்வொருவரின் வடிவத்தையும்,மேற்கொண்டு அவன் ஆசையைத் தணித்தாளே. இதையெல்லாம் கேட்டபின்னுமா நீ தெய்வம் உரைத்தது அது, இது என்றெல்லாம் சொல்கிறாய்?”- என அவன் தயக்கத்தைப் புறந் தள்ளுவாள்.

பௌத்த அற மதிப்பீடுகள் எத்தனை மேன்மையானவை என்பதையும் அக்காலத்தே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வந்த வைதீக மதிப்பீடுகளும் புராண நம்பிக்கைளும் எத்தனை அறக்கேடானவை என்பதையும் உணர்த்தும் வண்ணம் இந்தக் காதை முழுவதும் அமைக்கப்படிருத்தல் கருதத்தக்கது. தொடர்ந்து குல மரபு, குலப் பெருமை, குல நியதி ஆகிவற்றை வற்புறுத்தும் தத்துவங்களும், நம்பிக்கைகளும் எத்தனை இழிவானவை என்பதை சித்திராபதியின் வாதங்களினூடாக அம்பலப்படுத்துவார் சாத்தனார்.

“குல மகளிர்தான் எல்லாப்  பருவங்களிலும் காவலுக்குட்பட்டவர்கள். குழந்தைப் பருவத்தில் பெற்றோர், திருமணமானபின் கணவன், அந்தக் கணவன் செத்தால் பிள்ளைகள் ஆகியோரால் காவலுக்கும் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறவர்கள். இப்படிக் கற்பைக் காத்து, பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காது, கொண்டவனைத் தவிர தெய்வத்தையும் கூடப் பேணாத குலத்திற் பிறந்தவரல்ல நாங்கள். நாட்டு மக்கள் காண அரங்கேறி ஆடல், பாடல், அழகு எல்லாவற்றையும் காட்டிக் காமத்தைத் தூவி, கண்களால் வலை வீசி, கண்டோர் நெஞ்சில் புகுந்து, கொஞ்சு மொழியால் பயன் பல அடைந்து, தேனுண்டபின் மலரைத் துறந்தோடும் கொண்டி மகளிரான எம்மைத் தன்வயமாக்கி அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல் தானே அரச நெறி!” – என உதயகுமாரனின் உள்ளத்தைப் பிளப்பாள் சித்திராபதி.

இவ்வாறு மகளிர் பலரையும் கவர்ந்து கொண்டு சென்று அந்தப்புரங்களை நிறைப்பதுதான் அரச நெறி – கோன்முறை – எனச் சித்திராபதி கூறுவது கவனத்துக்குரியது. பௌத்தம் உரைக்கும் அரச நெறி இதற்கு முற்றிலும் எதிரானது. பௌத்த அரச நெறிக்கு வாழ்ந்த ஒரு எடுத்துக்காட்டு அசோகச் சககரவர்த்தி. அவர் தருமச் சக்கரத்தை உருட்டியவர். சிறைக் கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கியவர். பௌத்த அறத்திற்கான புனைவு வெளிப்பாடுகள் எத்தனையோ பௌத்த ஜாதகக் கதைகளாக இந்தத் துணைக்கண்டம் முழுவதும் பரவியுள்ளன, பிற மதப் புராணங்களிலும் ஊடுருவியுள்ளன. சிபிச் சக்கரவர்த்தியின் கதை உட்பட இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.  இவ்வாறு, பௌத்தம் சொல்வனவற்றையும், பௌத்தத்தை மறுப்பவர்கள் முன்வைப்பவற்றையும் ஒப்பிட்டு இவற்றில் எவை பொய்யுரைகள் என்கிற கேள்வியை மிக நுணுக்கமாக நம்முள் எழுப்புகிறது மணிமேகலைக் காப்பியம்.

இப்படியான உரையாடலின் ஊடாக இளவரசனின் மனத்தைக் கரைத்து, நினைத்ததை சாதித்து விடுகிறாள் சித்ராபதி. வெறியூட்டப்பட்ட இளவரசன் பாய்ந்தோடும் பரிகள் பூட்டப்பட தேரில் ஏறி விரைகிறான். அமுதசுரபி கொண்டு மணிமேகலை  தீப்பசி கொண்ட மாக்களின் கடிப்பசி களைந்து கொண்டிருந்த அம்பலத்தை அடைகிறான். மக்களின் பசி ஆற்றுதல் என்பது பௌத்தம் போற்றும் உன்னத அறங்களில் ஒன்று என்பதற்கு. ‘கடிப்பசி’, ‘தீப்பசி’ என்றெல்லாம் பசியைச் சாத்தனார் கடிவது ஒரு சான்று.

அடங்காத காமத்துடன் அவள் முன் சென்றவனுக்கு அவளது துறவிக் கோலத்தைக் காணத் தாளவில்லை. நோன்பிருந்து உண்டு, உடலிளைக்கத் தவம் ஏற்று என்ன வாழ்க்கை இது. “நால்லாய் ! எதற்காக இந்த நற்றவம் புரிந்தது?” எனத் துணிந்து கேட்கிறான்.

மணிமேகலையிடம் துறவுக்குரிய ஏதுக்கள் கனியத் தொடங்கி இருந்தும் இன்னும் அது முற்றவில்லை. இராகுலன் எனும் பெயரில் முற்பிறவியில் தன்மீது அன்பு செலுத்திய கணவனாக இருந்தவன்தான் இப்பிறவி உதயகுமாரன் என்பதை அறிந்திருந்த மணிமேகலை, “இவன் அடி தொழுதலும் தகும்” எனக் கூறி அவனை வணங்கினாள். “வசமிழந்த என் நெஞ்சம் அவன்பால் அணுகினாலும், வளையணிந்த என் முன்கையை அவன் பற்றினும், முற்பிறவிக் காதலனின் சொல்லை எதிர் மறுத்தல் நன்றி அன்று” என ஒரு கணம் நடுங்கி மயங்கினாள் அச் சிறுபெண். எனினும் எல்லாம் ஒரு கணம்தான். வைராக்கியம் வென்றது.

“நீ கேட்டதற்குப் பதிலுரைப்பேன். கேட்டு உணரும் திறம்படைத்த செவி உடையவனாக நீ இருந்தாய் எனில் சொல்வேன். பிறத்தலும், மூத்தலும், பிணிபட்டு இரங்கலும், இறத்தலும் உடையதுதான் இந்த உடல். இது துயரங்களின் கொள்கலம். யாக்கையின் இந்த இயல்பு அறிந்தேன். எனவே இந்த உடலின்பங்களை வெறுத்து நல்லறங்களில் நாட்டமுற்றேன். போர்க்களத்தே எதிரிகளை அழிக்கும் களிறு போன்ற உனக்கு பெண்டிர் கூறத் தக்க பேரறிவும் உண்டோ? எனினும் நான் சொல்பவற்றை கேட்பவர் ஆயின் நீயும் அறத்தை விரும்பி ஏற்றவர் ஆகுக” என்றனள் மணிமேகலை.

முன்னதாக சுதமதியும் இவ்வாறே அவனுக்கு யாக்கை நிலையாமை குறித்து அறமுறைத்தது நினைவிருக்கலாம். மணிமேகலையைத் தன் தேரிலேற்றி வருவேன் என எட்டிகுமரனிடம் சூளுரைத்து மலர்வனம் அடைந்து வெறிகொண்டு நின்றவனை நோக்கி, “இளமை நாணி, முதுமை எய்தி / உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு / அறிவும், சால்பும், அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?” (4: 107-110) எனச் சுதமதி அப்போது அவனுக்கு அறிவுரைப்பாள்.

இந்த இரண்டு தருணங்களிலும் “பெண்டிர் கூறும் பேரறிவும் உண்டோ” எனவும், “செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?” எனவும் சொல்வதை ஒட்டி, பெண்களை ஆண்களுக்கு அறிவு கொளுத்தும் ஆற்றல் அற்றவர்களாகச் சாத்தனார் கூறுவதாகக் கருத வேண்டியதில்லை. அவர்கள் வாயால் அப்படிச் சொல்லினும் பெண்களின் வாயால் அறிவு கொளுத்தப்படும் நிலையில் இளவரசர்களும் கூட உள்ளனர் என்பதே இங்கு குறிப்பு. பெண்களுக்கு அத் தகுதி கிடையாது என்கிற பொதுப்புத்தியை நுணுக்கமாக விமர்சிக்கும் பாங்கே இது. ஒரு இளம் பெண்ணைக் காவிய நாயகியாக்கி நாயகனில்லாத ஒரு காப்பியத்தை யாத்தவர் சாத்தனார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.Green-Tara

இந்தச் சொற்களால் உதயன் திருந்திவிடுவான் என மணிமேகலை நம்பவில்லை. “ஆடவர்கள் என்ன செய்வார்கள் என்பதை யாரறிவார்” என மனதிற்குள் சொல்லிக் கொண்டு வாள்வலி மிக்க இளவரசனிடமிருந்து விலகி, அருகிலுள்ள மூத்த முதல்வி சம்பாபதியின் குறுங் கோவிலுள் நுழைந்தாள். சம்பாபதியை வணங்கி முன்னதாக மணிமேகலா தெய்வம் அவளுக்கு அருளியிருந்த வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை ஓதி காயசண்டிகையின் வடிவெடுத்து உதயகுமாரன் முன் தோன்றினள்.

எனினும் அவள் கையில் அந்தப் பிச்சைப் பாத்திரம், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி இருந்தது. என்ன ஆபத்து சூழ்ந்த போதிலும் மக்களின் கடி பசி நீக்கும் அந்த அற்புதத்தை அவள் எப்படித் துறப்பாள்.

உதயகுமாரனும் அதைக் கண்டான். பெரும்பசியால் வருந்தி உழன்ற காயசண்டிகையிடம் இப்பிச்சைப் பாத்திரத்தை அளித்துவிட்டு மணிமேகலை தன் மாயத் திறத்தால் தன்னை எங்கோ ஒளித்துக் கொண்டாள். இங்கு இந்தச் சுதைமண் பாவைகள் மத்தியில் இவளை யாரென உணர்வேன்? “அவள்தான் இவளென்று நீ அவளை அடையாளம் காட்டாவிட்டால் எத்தனை நாளானாலும் இங்கேயே பழி கிடப்பேன்” என உருமாறிய மணிமேகலையிடம் முறையிட்டான் உதயன்.

காம உணர்வும் காதலுணர்வும் மிகுந்து பலவாறும் அவள் முன் மணிமேகலையின் உடலழகை வியந்து பிதற்றத் தொடங்கினான். யாழினும் இனிய குரலில் அவள் அவனுக்கு அறம் உரைத்ததையும் சொன்னான். “மதியொத்த முகத்தினள் மணிமேகலையை விட்டு நீங்கிச் செல்லேன். உன் திருவடி தொழுதேன். என் குறை தீர்” எனத் தொழுது நின்றான்.a32f46d6929ff6be0eda9b9ac1212c05

(அடுத்த இதழில் உதயகுமாரனைக் கொல்லும் விஞ்சையன்: இந்த இருவரில் யாரின் ஊடாகக் காப்பியச் சோகம் விரிகிறது?)