இன்குலாப் குறித்த ஜெயமோகனின் வக்கிர உமிழ்வுகள்

இன்குலாப் : காலன் வெல்லலாம், கவிதைகள் வாழும்

கவிஞர் இன்குலாபிற்கு களத்தில் நிற்கும் அனைத்துத் தரப்பு இயக்கத்தினரும் ஒருமித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்தோர், மரபுவழி இடதுசாரிகள், தலித் இயக்கத்தினர், தமிழ்த் தேசியர்கள் என எல்லோரும் அணி அணியாக வந்து ஊரப்பாக்கத்தில் இருந்த அவரது எளிய இல்லத்தில் அன்று அஞ்சலி செலுத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர் இந்த இயக்க வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றிணையும் குவி புள்ளியாக வாழ்ந்து மரித்துள்ளார் இன்குலாப்.

அவர் இந்த இயக்கங்கள் எல்லாவற்றோடும் நின்றிருந்தாலும் இவற்றில் ஏதொன்றிலும் உறைந்துவிட வில்லை. திராவிட இயக்கம் நடத்திய மொழிப்போராட்டத்தின் ஊடாக அரசியல்மயப்பட்ட அவர், அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் எல்லா இயக்கத்தினரையும் போலவே தொழிலாளர் போராட்டங்களின் மீது வன்முறையை ஏவியபோதும், தலித் பிரச்சினைகளில் நழுவியபோதும் அவர்களைக் கண்டிக்கவும் விலகி அகலவும் தவறவில்லை. எனினும் அவர்களினூடாக உருவான மொழி உணர்வை அவர் எந்நாளும் உதறிவிடவும் இல்லை. அதே தருணத்தில் அந்த மொழி உணர்வு வரட்டுத்தனமான பழம் பெருமைப் பேசுவதாகவும் இருந்ததில்லை. தமிழ்த் தொன்மை, தமிழ்க் கற்பு, தமிழ் மன்னர்களின் விரிவாக்க வீரப் பெருமைகள் முதலானவற்றை அவரளவுக்குக் கேலி செய்து கிழித்தெறிந்தவர்கள் இல்லை. அவரால் அதிகாரத்தின் குறியீடுகள் எதனுடனும் ஒன்றி நிற்க இயலாதென்பதற்கு அதுவே சான்று. ஈழப் போராட்டத்தையும், பிரபாகரனின் தலைமையையும் அவர் விமர்சனமின்றி ஆதரித்தபோதும்கூட ஈழ இதழொன்றில், “ஒருவேளை நீங்கள் இங்கு பெரும்பான்மையாக இருந்து, சிங்களர்கள் சிறுபான்மையாக இருந்து அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தால் நான் அவர்களோடுதான் நின்றிருப்பேன்” என ஈழ ஆதரவாளர்களை நோக்கிச் சொல்லும் நெஞ்சுரம் பெற்றிருந்தார். அந்த நெஞ்சுரம் இன்குலாப் தவிர வேறு எந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் அவர் வைத்த அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால் போராட்டங்களுக்கான அவரது ஆதரவு என்பது அவற்றின் நியாயங்களுக்காக மட்டுமே இருந்தது. எந்த வகையான சொந்தப் பலாபலன்களுக்கும் குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது. அந்த வகையில் அவர் ஒரு அறம் சார்ந்த மனிதர். அவரிடம் நிறைந்திருந்த இந்த அற உணர்வே அவரது கவிதை ஊற்றின் அடிநாதமாகவும் இருந்தது. அவரது வாழ்வின் எளிமை, அவரது வாழ்வைப் போலவே நிகழ்ந்த அவரது மரணத்தின் ளிமை, அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்தின் எளிமை இவை மட்டுமே போதும் அவரது அற வாழ்விற்குச் சான்று பகர.
அவரது தலித் ஆதரவு அவர் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் ஊடாகக் கிளர்ந்த ஒன்று. அவர் தன்னை ஒரு தலித்தாகவே உணர்ந்தார். ஏதோ தன் பெருந்தன்மையைக் காட்ட ஒரு வாய்ப்பாக தலித் ஆதரவு நிலை எடுத்தவர் அல்லர் அவர். அவரது மனுசங்கடா பாடலில் மட்டுமல்ல தலித் வன்முறைகளைக் கண்டித்துக் கிளர்ந்து சீறிய அத்தனை பாடல்களிலுமே அந்த நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆளானவர்களாக அவர் தன்னையே கண்டார். அவை இரங்கற் பாடல்கள் அல்ல. அவை மற்றவர்க்கு இரங்கிப் பாடியவை அல்ல. அவை தன்னுணர்ச்சிப் பாடல்கள். தன் சுய வேதனையைச் சொல்லி அரற்றிய பாடல்கள்; சீறிச் சினந்த பாடல்கள். சீறி வழி கண்ட பாடல்கள். சுயத்திற்கும் சுயத்திற்கு அப்பாலுக்கும் உள்ள இடைவெளியை அழித்த பாடல்கள்.

அரசியல் கவிதைகள் என்பன சுயப் பிரக்ஞையிலிருந்து விடுப்பட்டவை (that which renounces the fiction of self) என்பர். சுயத்தைத் துறக்க முயலும் போராட்டத்தின் ஊடாகவே (challenging the ego within the poetry itself) அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. அந்த வகையில் இன்குலாப்பின் கவிதைகளில் பல தமிழின் முக்கிய அரசியல் கவிதைகள் எனும் இடத்தைப் பெறுகின்றன.

ஒரு அறம் சாரந்த வாழ்வை வாழ்ந்து விடைபெற்றுள்ள அவரை ஜெயமோகன் எனும் ஆர்.எஸ்.எஸ் எழுத்தாளர் கோடூரமான சொற்களில் சாடியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் எழுத்துக்களுக்கு அக்மார்க் குத்திரை குத்தும் அதிகாரியாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர் தன் பதிவொன்றில் இன்குலாப் மீது துப்பியுள்ள அவதூறுகள் வருமாறு:

“நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் (என நினைத்திருந்தேன் அப்படி அல்ல)”

“பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர்” (அதாவது ‘ரிஸ்க்’ எடுக்காமல் பம்மாத்து பண்ணியவர்)

“புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்”

(ஆபத்துகளைத் தவிர்த்து) இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்..

“கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம்.”

“தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள்.”

இவை அனைத்தும் ஜெயமோகன் இன்குலாபின் மீது தூற்றியுள்ள வசைகள். தன் பிள்ளைகளைக் கூட எல்லோரையும் பெரிய படிப்பு படிக்க வைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளாத வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெருந்தகையை, எந்த நேரமும் வேலை போய்விடலாம் என்கிற அச்சத்துடனேயே வாழ்வைக் கழித்த ஒரு கவிஞனை, போலீஸ் மிரட்டல்களுக்கும், நள்ளிரவுக் கடத்தல்களுக்கும் ஆட்பட்ட ஒரு போராளியை, முஸ்லிம்களின் மத்தியில் உள்ள சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் வெளிப்படையாகக் கண்டித்த ஒரு நேர்மையாளரை, தான் பணியாற்ரிய ஒரு முஸ்லிம் கல்லூரியிலேயே அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, ஆதரவாக வந்த பழனிபாபாவுடன் மோதத் தயங்காத ஒரு மதச்சார்பற்ற வாழ்வை வாழ்ந்தவரை ஒரு எழுத்தாளன் இத்துனைக் கீழிறங்கி அவதூறு செய்திருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதற்குமேல் விரிவான பதில் ஜெயமோகன் போன்ற நபர்களுக்குத் தேவையில்லை.

***************************************************

கிட்டத்தட்ட சுமார் பத்தாண்டுகளாக இன்குலாப் நோய்வாய்ப்பட்டு முடங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தன் கால்களில் ஒன்றை இழக்கவும் நேரிட்டது. அக்காலகட்டத்தில் அவர் அதிகம் எழுதவில்லை. எனினும் அப்போது வர் எழுதியவற்றில் சில முன்னதன் தொடர்ச்சியாகவும் (முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துகொண்டிருக்கிறது என் தாய்மொழி), பல இன்னொரு கட்டத்தை எட்டியதாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக அவர் இறுதியாக எழுதியது எனச் சொல்லப்படும் கீழ்க்கண்ட கவிதையைச் சொல்லலாம்:

கண்ணாமூச்சு

(இறுதிக் கவிதை, உகரம் இதழ்)

“உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
தான் விரும்பும்போது தன்னோடு
கண்ணாமூச்சு ஆட வேண்டும்

கருவறைச் சுவரில்
கைச்சாத்திட்டோம்

தவழும்போதே ஆட்டம் தொடங்கியது.
நான்தான் ஜெயித்தேன்.

பிள்ளைப் பருவமும் இப்படியே
தொடர்ந்தது.
இளமையில் ஒப்பந்தம்
குறித்து
மறந்தே போனோம்.

என் கிளைகளில் பறவைகள்
பேசின.
கருங்குயிலும் வரிக்குயிலும்
இடையறாது கூவின.
செண்பகக் குயில்
கூடுகட்டிக்
குஞ்சும் பொரித்தது.

வெளியும் ஒளியும்
எமக்குச் சாட்சியமாயின.

காலம்
என் பற்கள் சிலவற்றைப்
பிடுங்கியது.
ஒரு கண்ணில் ஒளியைத்
திரையிட்டது.
மூக்குக்கு மணத்தை
மறைத்தது.
இதயத்தைக் கீறிப்பார்த்தது
ஒரு காலைப் பறித்து
ஊனமாக்கியது.
என் இளமை உதிர்ந்து
விட்டது

காலம் இன்னும் வேர்களைக்
குலுக்கி
விளையாடக் கூப்பிடுகிறது

இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா?

என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்

என் கண்ணொளியை
மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்

என் இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்துத் துடிக்கும்

என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!”

(நன்றி: செ.சண்முகசுந்தரம்)

இன்குலாபின் “ஒவ்வொரு புல்லும்” எனும் மொத்தக் கவிதைத் தொகுதி வெளிவந்த பின் இப்படியாக அவர் எழுதியுள்ள கவிதைகளை வாசித்து மதிப்பீடு செய்வது அவசியம். மனிதர்கள் வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றனர். நோய், பிரிவு என்பனவெல்லாம் பல மாற்றங்களை ஒவ்வொருவரிடமும் எற்படுத்துகின்றன். படைப்பாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் 2010 க்குப் பிந்திய இன்குலாப்பின் எழுத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதே போல ‘ஆனாலும்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட அவரது கட்டுரைகள், “பாலையில் ஒரு சுனை” எனும் அவரது தொடக்க காலக் கதைத் தொகுப்பில் உள்ள 12 கதைகள் மற்றும் ஒரு குறுநாவல் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்குலாப் எனும் நம் காலத்து நாயகனின் மொத்தப் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

காலனுக்கும் இன்குலாப்புக்கும் நடந்த கண்ணாமூச்சி விளையாட்டில் காலன் வென்றுவிட்டான். இன்குலாப் காலம் ஆகிவிட்டார். அவர் இதயம் நின்றுவிட்டது. ஆனால் அவர் எழுத்து துடித்துக் கொண்டுள்ளது.