கிறிஸ்தவப் பொது நிலையினர் அரசியல் மயப்பட வேண்டிய உடனடி அவசியம் இன்று ஏற்பட்டுள்ளதைத்தான் இத்தகைய கருத்தரங்கு ஒன்று இங்கு கூட்டப்பட்டிருப்பது காட்டுகிறது. கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுவது, கன்னியர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஆகியன அப்படி ஒன்றும் புதிதில்லை என்றாலும் இன்றைய சூழல் சற்று வித்தியாசமனது.
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் ஊடாக இன்று ஏற்பட்டுள்ளது ஒரு வெறும் ஆட்சி மாற்றமல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (UPA) அரசு போய் பா.ஜ.க தலைமையில் உள்ள ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’(NDA) அரசு நிறுவப்பட்டுள்ளது என்கிற அளவில் இதைப் பார்த்துவிட முடியாது. இன்று ஏற்பட்டுள்ளது ஒரு பண்பு மாற்றம். ஒரு regime change.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆட்சி மீது பல விமர்சனங்கள் நமக்கு உண்டு. ஊழல், அமெரிக்க ஆதரவு, கார்ப்பொரேட்களுக்கு அபரிமிதமான சலுகைகள், ஈழப் பிரச்சினையில் ராஜபக்ஷே அரசுக்கு உதவி என நிறையச் சொல்லலாம். ஆனால் இவை அனைத்திலும் பா.ஜ.க அரசு காங்கிரஸ் அரசைக்காட்டிலும் பல மடங்கு அதிகமாக அதே திசையில் செல்வதை இந்தப் பத்து மாத காலத்திலேயே நாம் கண்டு விட்டோம்.
இவை தவிர பா.ஜ.க விற்கும் காங்கிரசுக்கும் கூடுதலாகக் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகள் உள்ளன என்பதுதான் இப்போது ஏற்பட்டுள்ளதை ஒரு பண்பு மாற்றமாக ஆக்குகிறது. இவை மிக முக்கியமானவை மட்டுமல்ல மிக மிக மிக ஆபத்தானவை. சொல்லப் போனால் காங்கிரசிலிருந்து பா.ஜ.க வேறுபடும் புள்ளிகள் என்பதைக் காட்டிலும், பா.ஜ.க இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கட்சிகளிலிருந்து வேறுபடும் ஆபத்தான புள்ளிகள் எனவும் இதைச் சொல்லலாம். அவை:
- காங்கிரஸ் கட்சிக்கும் இதர மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் நோக்கம் கிடையாது. நமது அரசியல் சட்டத்தில் சில குறைபாடுகள் உண்டு. எனினும் உலக அளவில் பல ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது பல வரவேற்கத்தக்க கூறுகள் இதில் உண்டு. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (UDHR) வெளியிடப்பட்ட (1948) பின் உருவான அரசியல் சட்டம் என்கிற வகையில் அதன் பல கூறுகள் நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஆக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளாக உள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்துத்துவ சக்திகள் ஏற்பதில்லை. அதனாலேயே இந்த அரசியல் சட்டத்தை அவை மதிப்பதில்லை. சென்ற முறை பா.ஜ.க தலைமியிலான அரசு அமைந்தபோது நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவது குறித்த பரிந்துரைகளைச் செய்ய குழு ஒன்றை நியமித்தது நினைவிருக்கலாம். இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அரசியல் சட்டத்தின் முகப்புரையில் அமைந்துள்ள சோஷலிசம், மதசார்பின்மை முதலான சொற்களை நீக்கி அவர்கள் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்தது நினைவிருக்கலாம். நிச்சயமாக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் கவிழ்க்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான திட்டம் ஏதும் கிடையாது.
- காங்கிரஸ் ஆட்சியின் வன்முறை என்பது அரச வன்முறை மட்டுமே. தண்டகாரண்யம் மற்றும் காஷ்மீர் முதலான பகுதிகளில் அஃப்ப்சா முதலான கருப்புச் சட்ங்களின் ஊடாகவும், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டும் போராடும் மக்கள் மீது கடும் வன்முறையைப் பிரயோகித்த அரசுதான் காங்கிரஸ் அரசும். இந்த வன்முறைகளை அதே மக்கள் மீது பிரயோகிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு எந்த வகையிலும் சளைக்காத ஒன்று பா.ஜ.க அரசு என்பதை விளக்க வேண்டியதில்லை. கூடுதலாக இது அரசு சாரா வன்முறையையும் (violence by non state actors) கைக் கொண்டுள்ளது என்பது கவனத்துக்குரியது. பஜ்ரங் தள், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி என்பன போன்ற கிட்டத்தட்ட 60 க்கும் மேலான பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்த வன்முறை அமைப்புகள் தொடர்ந்து சிறுபான்மை மதத்தவர் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது வன்முறையைப் பிரயோகித்துக் கொண்டே உள்ளன. கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி ஆயுதப் பயிற்சி, இராணுவத்தில் ஊடுருவுதல், வெடி மருந்துத் தொழிற்சாலைகளைச் செயல்படுத்துதல், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல், கிறிஸ்தவ இஸ்லாமிய தொழுகைத் தலங்களைத் தகர்த்தல் என்கிற வகைகளில் இவற்றின் வன்முறைகள் அமைகின்றன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் இந்த அரசு சாரா வன்முறைகள் என்பன அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தொடர்கின்றன என்பதுதான்.
- காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளைப் பின்னின்று இயக்கும் வன்முறை அமைப்பு ஏதும் இல்லை. அவை சுயேச்சையாகச் செயல்படும் அமைப்புகள். ஆனால் பா.ஜ.க இப்படி சுயேச்சையாக இயங்கும் அமைப்பு அல்ல. பா.ஜ.க மற்றும் ஏராளமான அதன் துணை அமைப்புகள் மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஆர்.எஸ்.எஸ்சால் பின்னின்று இயக்கப்படுகின்றன. இந்து ராஷ்டிரம் ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பு வெளிப்படையாக ஆயுதப் பயிற்சிகளைச் செய்யத் தயங்காதது என்பதும் குறைந்த பட்சம் இருமுறை பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படைகளில்தான் இப்போது ஏற்பட்டுள்ளது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல என்கிறோம். இது பாசிசத்தை நோக்கிய ஒரு பண்பு மாற்றம்.
சென்ற சில மாதங்களுக்கு முன்னர் Frontline இதழ் நேருவின் 125வது பிறந்த நாளை ஒட்டிச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. இந்துத்துவ சக்திகளால் காந்தி அடிகளுக்கு அடுத்தபடியாக மிகக் கடுமையாக வெறுக்கப்படுபவர் நேரு. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசுக்கான அடித்தளத்தை இட்ட அவரது 125வது பிறந்த நாளை பா.ஜ.க உரிய மரியாதைகளுடன் கொண்டாடாமல் அடக்கி வாசிக்கும் சூழலில் வெளிவந்த அந்த ஃப்ரன்ட்லைன் இதழ் நேரு குறித்துச் சிறந்த ஆய்வறிஞர்கள் எழுதிய கட்டுரைகளுடன் மிளிர்ந்தது. அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கட்டுரைகள் பெறப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிடும் ‘பாஞ்சஜன்யம்’ இதழின் முன்னாள் ஆசிரியரும், தற்போது பா.ஜ.கவின் மாநிலங்கள் அவை உறுப்பினருமான தாருண் விஜய் அவர்களில் ஒருவர்.
பா.ஜ.க ஆளுகையின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை மிக மிக முக்கியமான ஒன்று. நேருவின் ஆளுகையைத் தான் ஏன் வெறுக்கிறேன் என்பதற்கு அவர் குறைந்த பட்சம் ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறார். நேருவை அவர்கள் வெறுப்பதற்கான மிக முக்கியமான காரணம் அவரிடம் வெளிப்பட்ட மதச்சார்பின்மை என்பதை உலகறியும் அது தவிர அவர்கள் நேருவை வெறுப்பதற்கான இதர காரணங்களாக அவர் சொல்வன:
- இந்தியப் பொருளாதாரத்தை முழுக்க முழுக்க கார்பொரேட்களின் கையில் உள்ள சந்தையின் கட்டுப்பாட்டிற்குள் விடாமல், அரசுக் கட்டுப்பாடு உள்ள திட்டமிட்ட பொருளாதாரமாக அமைக்க நேரு அடித்தளமிட்டார். சோவியத் மாதிரியில் அமைந்த ஐந்தாண்டுத் திட்டங்கள், திட்ட ஆணையம் (Planning Commission) ஒன்றை அமைத்து அதன் மூலமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்.
- அயலுறவில் ‘அணி சேராக் கொள்கை’யை அவர் கட்டமைத்தார். அவர் தலைமை ஏற்ற Non Alignment Movement (NAM) இதற்கொரு எடுத்துக்காட்டு.
- அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளில் அவர் உறுதியான முடிவெடுக்காமல் அனுசரித்துப் போகும் கொள்கையை மேற்கொண்டார். ‘பஞ்ச சீலம்’ முதலான அறக் கோட்பாடுகளின் அடிப்படையில் சீனா மற்றும் இதர அண்டை நாடுகளுடன் அவர் உறவை மேற்கொண்டது ஒரு எடுத்துக்காட்டு.
- இராணுவ பலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்தியாவை ஒரு இராணுவ வல்லமை மிக்க நாடாக ஆக்காமல் அதைப் பலவீனமாக்கியது.
இவை தாங்கள் வெறுக்கக் கூடிய நேரு காலத்திய (Nehruvian Era) ஆளுகையின் முக்கிய கூறுகள் என்கிறார் விஜய். இந்தக் காரணங்களுகாகத்தான் இந்துத்துவவாதிகள் நேரு சகாப்தத்தையும் நேருவிய ஆளுகையயையும் எதிர்க்கிறார்களாம். இதன் மறுதலை, இதற்கு நேர் மாறாகத்தான் இந்துத்துவ ஆளுகை, அதாவது பா.ஜ.க ஆளுகை இருக்கும் என்பது.
மதச்சார்பின்மையை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களது இலட்சிய இந்து ராஷ்டிரத்திற்கு ஒவ்வாதவை என கூடுதலாக அவர்கள் சொல்பவை அணி சேராக் கொள்கை, பஞ்ச சீலம் முதலியன. அற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கோட்பாடுகளான இவை. சமாதான சக வாழ்வை (peaceful co-existence) அடிப்படையாகக் கொண்டு நேரு உலகிற்கு அளித்த அறக் கொடைகள். அண்டை நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அகண்ட பாரத அணுகல் முறைக்காரர்களால் இவற்றை எப்படிச் சீரணிக்க இயலும்? பொகாரனில் அணு குண்டை வெடித்த கையோடு அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி “இனி அயலுறவில் அறத்திற்கு இடமில்லை. எதார்த்த அரசியலுக்கே (Real Politiq) இனி இடம்” எனச் சொன்னது நினைவிருக்கலாம்.
ஏதோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். இன்னொரு பக்கம் அவர்கள் இவற்றைச் சாத்தியமான அளவிற்கெல்லாம் நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எந்தப் பெரிய விவாதங்களுக்கும் இடம் கொடாமல் அவர்கள் செய்துள்ள சில:
- நேரு அமைத்த திட்ட ஆணையத்தைக் கலைத்தது.
- மதக் கலவரங்களைத் தடுப்பதெற்கென நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட ‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை’ (National Integration Council) கலைத்தது.
- நீதிபதிகள் தேர்வில் அரசுத் தலையீடு கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட collegium முறையைக் கலைத்தது.
இவை சில எடுத்துக்காட்டுகள். இந்த நிறுவனங்களில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவை உன்னத நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. குறைபாடுகளை நீக்கி முறையாகச் செயல்படுத்தாமல் அவற்றை ஊற்றி மூடுவதன் பின்னணியில் அவர்களின் உள் நோக்கம் உள்ளது. ராஜீவ் காந்தி அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தபோது கூட ஏதோ ஒரு வகையில் ஓராண்டு காலம் தேசிய விவாதத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எந்த விவாதமும் இன்றி இன்று இவை கலைக்கப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் மேற்கொண்ட வேறு சில அணுகல் முறைகளையும் கவனியுங்கள். பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோது இறுதி வரை நரேந்திர மோடி அரசு அந்தக் குண்டு வீச்சைக் கண்டிக்க மறுத்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வற்புறுத்தியும் இந்த நிலையை அது கைவிடவில்லை. பாரம்பரியமான இந்திய அரசின் அயலுறவு அணுகல் முறைகள் குப்பையில் எறியப்பட்டன. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தததில் அமெரிக்க விசுவாசியான மன்மோகன் சிங் அரசு கூடக் காட்ட மறுத்த சலுகைகளை மோடி அரசு காட்டியுள்ளது. மன்மோகன் அரசும் கார்பொரேட் ஆதரவு அரசுதான். ஆனால் அது நிறைவேற்றிய ‘நிலப் பறிப்புச் சட்டத்தை’ அது கார்பொரேட் நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக இன்று முறியடிக்கத் துடித்து நிற்கிறது மோடி அரசு.
2015 – 16ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அது கார்பொரேட் வரியைக் குறைத்துள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம், எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கான திட்டங்கள் எல்லாவற்றிற்குமான நிதி ஒடுக்கீட்டைச் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைத்துள்ள பா.ஜ.க அரசு இராணுவ ஒதுக்கீட்டை மட்டும் 10 சதம் அதிகரித்துள்ளது.
இப்படி நிறையச் சொல்லலாம். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன். 2002 ல் அன்றைய பா.ஜ.க பிரதமர் வாஜ்பேயி அமெரிக்கா சென்றபோது ‘கடல் கடந்த பா.ஜ.க நண்பர்கள்’ (Overseas Friends of BJP) எனும் அமைப்பு ஸ்லேடன் தீவில் அவருக்கு விருந்தொன்று அளித்தது. அப்போது அவர், “இப்போது நமக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. கூட்டணி ஆட்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும். அப்போது நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்” எனப் பேசியது குறிப்பிடத் தக்கது.
இப்போது அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டது. எதிர் காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கிடைக்கலாம். அப்போது அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உங்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.
2.
இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அவர்களின் அணுகல் முறைகளை நான் விரிவாகப் பேசவில்லை. அவற்றை நாம் எல்லோரும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால். ICHR போன்ற உயர் வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் சநாதனமான கருத்துக்களைத் தாங்கியுள்ள, கல்வித்துறைச் சாதனைகள் ஏதுமற்ற இந்துத்துவவாதிகளை நியமித்தது, ‘கர் வாபசி’ என்கிற பெயரில் வெளிப்படையாகக் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களிலிருந்து இந்து மதத்திற்குக் கட்டாய மதமாற்றம் செய்தது, தலைநகர் டெல்லியிலேயே கிறிஸ்தவ ஆலயங்களும் திருலோக்புரி முஸ்லிம்களும் தாக்கப்பட்டது, கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை கிடையாது எனக் கூறியது, புனித ரமலான் நாளில் வழமையாக அளிக்கப்பட்டு வரும் அரசு விருந்துகளை நிறுத்தியது, மாட்டுக் கறி உண்பதைக் குற்றமாக்கியது…. இப்படி நிறையச் சொல்லலாம்.ஆட்சிக்கு வந்த இந்தச் சில மாதங்களில் இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மீது 800 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று சிறுபான்மையினர் மத்தியில் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
3.
இந்தக் ‘கர் வாபசி’ குறித்து ஒரு சொல்.
நமது அரசியல் சட்டத்தில் உள்ள முற்போக்கான சில கூறுகளைத் தொடக்கத்தில் சிலாகித்தேன். எனினும் அன்றைய அரசியல் சட்ட அவையில் மிகுந்திருந்த வலதுசாரி சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிராகச் சில ஆபத்தான கூறுகளைப் புகுத்தத்தான் செய்தனர்.
பேச்சுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட எல்லா அடிப்படை உரிமைகளையும் நிபந்தனை இன்றி வரையறுத்துள்ள இந்திய அரசியல் சட்டம், மதத்தைக் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றைப் பொருத்த மட்டிலும், “சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வரையில்” என்கிற நிபந்தனையோடு அனுமதித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் இன்று பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மதம் மாற்றுவதால் சமூக அமைதி குலைகிறது எனச் சொல்லி இச்சட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற்றுவது, அது மத மாற்றமே இல்லை. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” எனச் சொல்லிக் குற்றமற்றதாக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இதற்கு வழி இல்லாவிட்டாலும் நடைமுறையில் இது அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதே போல தலித் (SC) பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும் ஒதுக்கீட்டை மறுப்பதற்கு அரசியல் சட்டம் வழி வகுக்கிறது. இதன் விளைவாக இன்று பெரிய அளவில் கிறிஸ்தவ தலித்கள் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பதற்கெனவே ஆண்டு தோறும் இந்து மதத்திற்கு மாறுகின்ரனர். மதுரை ஆதீனம் உள்ளிட்ட சில மடங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பல ஆயிரம் பேர்களை “மதம் மாற்றி” தாய் மதம் திருபிவிட்டதாகவும், இனி அவர்கள் இந்துக்கள் எனவும் சான்றளிக்கின்றன. இவற்றை அரசுகளும் ஏற்கின்றன.
அதே போல மாநில அளவில் சிறுபான்மை மக்களுக்கு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையைக் கருதி இட ஒதுக்கீடு அளிப்பதிலும் அரசியல் சட்ட வாசகங்கள் தெளிவின்றி உள்ளதைப் பயன்படுத்தி இன்று அவை எதிர்க்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் அவற்றை ஏற்கின்றன.
இவை அரசியல் சட்டத்திலேயே சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள்.
4.
காங்கிரஸ் ஆட்சியில், பல ஆண்டுகள் விவாதங்களுக்குப் பின், வரைவாக்கப்பட்ட ‘மதக் கலவரத் தடுப்புச் சட்டம்’ (Prevention of Communal Violence Act) பா.ஜ.கவின் கடும் எதிர்ப்பால் நிறைவேற்றப்படவில்லை. பல நல்ல கூறுகளைக் கொண்டுள்ள இச் சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசும் முனைப்புக் காட்டவில்லை.
சிறுபான்மையினரது முன்னேற்றத்திற்கென பல நியாயமான பரிந்துரைகளைச் செய்துள்ள ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது.
சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்த பரிந்துரைகளைச் செய்துள்ள சச்சார் அறிக்கை முன்வைக்கும் “சம வாய்ப்பு ஆணையம் “ (Equal Opportunity Commission) அமைத்தல், அனைத்துத் துறைகளும் ஆண்டுதோறும் “பன்மைக் குறியெண்”களை (Diversity Index) வெளியிடலைக் கட்டாயமாக்குதல் முதலியன அனைத்துச் சிறுபான்மையினருக்கும், தலித் முதலான புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய பரிந்துரைகள்.. இவை குறித்தும் இன்று கேட்க நாதியில்லை.
5.
இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை சதத்திற்கும் குறைவு. முன்னூறு ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்கும், சுமார் 500 ஆண்டுகால மிஷனரி நடவடிக்கைகளுக்குப் பின்னும் இதுதான் நிலை. இந்த இரண்டரை சதக் கிறிஸ்தவர்களுங் கூட தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலுமே செறிந்துள்ளனர்.
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் சுமார் ஆறு சதம் உள்ளனர். முஸ்லிம்களைக் காட்டிலும் இது சற்று அதிகம். இரு சமூகங்களுமே இன்று வளர்ந்து வரும் வலதுசாரி பாசிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும், இயக்க ரீதியிலும் திரண்டுள்ள அளவிற்கு கிறிஸ்தவர்கள் திரளவில்லை.
முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் அணி திரண்டிருப்பதால் அவர்களுக்கு இன்று அரசியல் அரங்கில் அங்கீகாரம் உள்ளது, மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு அது இல்லை. முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளத்துடன் கூடிய கட்சிகளின் சார்பாகத் தேர்தலில் பங்கேற்கிறார்கள். தேர்தல் கூட்டணிகளில் இடம் பெறுகின்றனர். முக்கிய அரசியல் கட்சிகளுடன் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்துப் பேரம் பேசுகின்றனர். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இணைக்க வேண்டி உள்ளது.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் அரங்கில் அந்த ஏற்பு இல்லை. காரணம் நீங்கள் அரசியல்மயப் (politicize) படவில்லை என்பதுதான்.
கிறிஸ்தவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றவர் ஏசு கிறிஸ்து. இன்றளவும் விடுதலை இறையியல் முதலான கிறிஸ்தவத்தின் அரசியல் ஈடுபாடு என்பது அங்கிருந்துதான் முகிழ்க்கிறது. நான் சொல்ல வருவது இன்றைய இந்திய அரசியல் நிலையை மனதிற் கொண்டு.
1938ல் சோலாபூரில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒரு குழுமமாக வந்து அவரைச் சந்தித்துத் தங்களுக்கு அறிவுரை கோரி நின்றனர். அவர்களுக்கு அண்ணல் சொன்ன அறிவுரை, “நீங்கள் அரசியல் மயப்பட வேண்டும்” என்பதே. “தலித்கள் நாங்கள் மாகாண சபையில் 15 உறுப்பினர்கள் உள்ளோம். ஆனால் கிறிஸ்தவர்கள் நீங்கள் ஒரு பிரதிநிதி கூட இல்லை.எங்கள் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அரசு விடுதிகள் உள்ளன. உங்களுக்கு அதெல்லாம் இல்லை. உங்களில் பலர் படித்துள்ளீர்கள். நல்ல வேலைகளில் உள்ளீர்கள். ஆனால் உங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் அரசியலை அலட்சியம் செய்வதன் விளைவு இது” என்றார்.
(“Your society is educated. Hundreds of boys and girls are matric. These people have not agitated against this injustice unlike the uneducated untouchables. If any girl becomes a nurse or any boy becomes a teacher they are involved in their own affairs, they do not get involved in public affairs. Even clerks and officers are busy in their work, he ignores the social injustice. Your society is so much educated, how many are District judges or magistrates? I tell you, this is because of your neglect towards politics,because there in nobody to talk of and fight for your rights. …” )
அவர் சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளது.
தமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது?
எனக்குத் தோன்றுகிற சில காரணங்களை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.
1.கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாதிற்கும் வரலாற்று ரீதியாக ஒரு வேறுபாடு உண்டு. கிறிஸ்து அநீதிகளுக்கு எதிராக நின்றார், அதற்காக அவர் துன்பங்களை ஏற்றார். ‘என் தேவனே, என் தேவனே, என்னைக் கைவிட்டீரே’ என மனம் வெதும்பிச் சிலுவையில் மாண்டார். கிறிஸ்துவிற்குப் பின்னர் அடுத்த 300 ஆண்டுகள் கிறிஸ்தவம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட (persecuted) மதமாகத்தான் இருந்தது. ஆனால் இஸ்லாத்தின் வரலாறு வித்தியாசமானது. இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு இறை வாக்குகள் வரத் தொடங்கிய காலத்தில் அவரும் துன்புறுத்தப்பட்டார். அவர் மக்காவிலிருந்து புலம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் விரைவில் அந்த நிலையை மாற்றியமைத்தார். அவரது எஞ்சிய காலம் வெற்றிகளில் கழிந்தது. அவருக்குப் பின் இஸ்லாம் ஏற்றத்தில் இருந்தது. வெற்றிகளைக் குவித்தது. நபிகள் குறித்து ஆய்வு செய்வோர் அனைவரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமல்ல. ஒரு Statesmen கூட. இஸ்லாத்திற்கு ஒரு political poject உண்டு. அது இறப்பிற்குப் பிந்திய இறுதித் தீர்ப்பு என்பதோடு தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த உலகிலேயே நீதியை நிலைநாட்டும் பொறுப்பையும் அது முன் வைத்தது.
கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக மாறியபோதிலும் அதன் உருவாக்கம் அப்படியாக இல்லை. அது மூன்றாம் உலக நாடுகளில் “விடுதலை இறையியலாக”(Liberation Theology) வடிவெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றது என்பதும் அதன் தொடக்க காலப் பாடுகளிலிருந்து பெற்ற உத்வேகந்தான். தமிழகத்திலும் கூட தலித் இயக்கங்களின் உருவாக்கத்தில் கத்தோலிக்க மதமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது. எனினும்கூட அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலவில்லை.
2.தமிழகத்தில் முஸ்லிம்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. ஆம் கிறிஸ்தவர்கள் இல்லை. இங்கே கிறிஸ்தவ உடையார்கள் உண்டு; கிறிஸ்தவ வன்னியர்கள் உண்டு: கிறிஸ்தவப் பிள்ளைமார்கள் உண்டு; கிறிஸ்தவ நாடார்கள் உண்டு; கிறிஸ்தவ மீனவர்கள் உண்டு; கிறிஸ்தவ தலித்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. இதன் விளைவு முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்கிற அடையாளத்தில் இணைவது போல இங்கே கிறிஸ்தவர்கள் இணைய முடியவில்லை.
3.கிறிஸ்தவத் திருச்சபைகள் மிக வலுவான படிநிலைப் படுத்தப்பட்ட ஒரு கார்பொரேட் வடிவம் எடுத்துள்ளன. மத நிறுவனமே இங்கு கிறிஸ்தவ அடையாளத்தைப் பேணும், காப்பாற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. “மேய்ப்பன் (ஆயர்) / ஆடுகள்” எனும் கிறிஸ்தவ மத உருவகம் ஒன்றே போதும் இந்நிலையை விளக்க. எனவே கிறிஸ்தவ மக்களின் நல்லது கெட்டதுகளை எதிர்கொள்வதற்கு திருச்சபை ஒன்றே போதும் என்கிற நிலை வந்து விடுகிறது. ஆனால் திருச்சபைகள், அவை ஒரு மத நிறுவனங்கள் என்கிற வகையில் பல்வேறு நிலைகளில் அரசுடன் சமரசம் மேற்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. கூடங்குளம் இதற்கொரு நல்ல உதாரணம். இதன் விளைவு? கிறிஸ்தவப் பொது நிலையினரிடம் (laity) அரசியல் முனைப்பு (political initiative) இருப்பதில்லை.
முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது இங்கே கிறிஸ்தவர்கள் மத்தியில் அரசியல் முனைப்பு மழுங்கிக் காணப்படுவதன் பின்னணியாக எனக்குப் படுபவை இவை. மட்டற்ற மனித நேயமும், சேவை மனமும், விடுதலைப் போராட்டங்களில் அர்ப்பணிப்பும் காட்டும் கிறிஸ்தவம் தன்னளவில் தனக்கான ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலாத நிலை உள்ளதற்கு இவை முக்கிய காரணங்களாக உள்ளன.
கிறிஸ்துமஸ் தினம் கூட கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். பாதிரிமார்கள் உயிருடன் எரிக்கப்படக் கூடிய, கன்னியர்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய, கிறிஸ்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்படக் கூடிய கால கட்டம் இது. தலித்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலை, மதமாற்றத் தடைச் சட்டங்களின் ஊடாக மத உரிமைகள் பரிக்கப்படும் நிலை ஆகியவற்றிற்கு நமது அரசியல் சட்டத்திலேயே வழிவகுக்கப்பட்டுள்ள அபத்தம்.
இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி முஸ்லிம்களைப் போல கிறிஸ்தவர்களும் அரசியல் மயப்பட வேண்டும். உங்கள் பிரச்சினைகளை இப்படி அறைக்குள் இருந்து கருத்தரங்குகள் நடத்திக் கொண்டிருப்பதன் மூலம் தீர்த்துவிட இயலாது. வீதியில் இறங்க வேண்டும். வீதிக்கு வரும்போது மட்டுமே உங்கள் பிரச்சினை ஊடக கவனம் பெறும். தொலைக் காட்சிகளில் விவாதப் பொருளாகும். அரசையும் அரசியல் கட்சிகளையும் உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். வலுவான அரசியல் சக்தியாக உருப்பெறுங்கள். சுயேச்சையாகச் செயல்படுங்கள். ஒவ்வொன்றிற்கும் திருச்சபையை நம்பியிராதீர்கள். உங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்குங்கள். இடதுசாரிகள், பிற சிறுபான்மையினர், தலித்கள், மதச்சார்பற்ற கட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து நின்று பாசிசத்தை எதிர் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை.