வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும்

[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து எழுதியுள்ள நூலுக்கு நான் எழுதிய முன்னுரை]

தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் தீண்டாமை அடிப்படையில் வன்கொடுமைகள் நடப்பவை என அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 542.. அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு எனில் உண்மை நிலை இன்னும் பலமடங்காக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.பதிவான வழக்குகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் வன்கொடுமைகளைக் குறித்துப் புகாரளிக்கவோ அல்லது ஏதேனும் எதிர்ப்புக்காட்டி அதைச் செய்தியாக்கவோ இயலாத நிலையுள்ள கிராமங்கள் இன்னும் ஏரா:ளமாக உள்ளன என்பதை இதுபோன்ற பிரச்சினைகளில் அக்கறை உள்ளோர் அறிவர். இரு வாரங்களுக்கு முன் கூட பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீண்டாமை ஒதுக்கல்களை அவர் விரிவாகச் சொன்னார். ஏதாவது செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தக் கொடுமைகளைப் பட்டியலிட்டு ஏதாவது போராட்டம் நடத்துங்களேன் என்றேன். அதெல்லாம் இங்கு செய்து பார்த்தும் பலனில்லை, மேற்கொண்டு எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லாமல்தான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் அவர்.

வன்கொடுமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தலித் இயக்கங்களும் தீண்டாமைப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிற பிற இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி, இத்தகைய வன்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய சூழல் உருவான பின்னும் நிலைமை இப்படித்தான் உள்ளது. ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யால் கவனப்படுத்தப்படாதவரை உத்தபுரத்தில் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருந்தது யாருக்குத் தெரியும். இன்னும்கூட இந்த கிராமங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்தபாடில்லை.

தமிழகத்தில் இச்சட்டங்களின் (1955 மற்றும் 1988ம் ஆண்டுச் சட்டங்கள்) அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதாக மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளது (New Indian Express, July 3, 2012) குறிப்பிடத் தக்கது. முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்யாமை, சரியான நேரத்தில் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமை, நியமிக்கப்படும் சிறப்பு வழக்குரைஞர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசீலனை செய்யாமை முதலானவற்றை இதன் காரணங்களாகச் சுட்டிக்காட்டி, இவை நீக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இச்சட்டத்துன் கீழ் வேண்டுமென்றே உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வழி இருந்தும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல் துறை அதிகாரியும் கூட இதற்காகத் தமிழகத்தில் தண்டிக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்காகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகிற தேர்வுகளில் இச்சட்டம் குறித்த அறிவைக் கோரும் தேர்வு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2008 – 2010 ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் தேசிய அளவில் 31 சதமாக இருக்க, தமிழகத்தில் அது வெறும் 17.4 சதமாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகமும் உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது (The Hinde, Dec, 15, 2013).

நிலைமை இப்படியிருக்க இங்கு வன்கொடுமைத் தடுபுச் சட்டத்திற்கு எதிராக ஆதிக்க சாதிக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்பட்டுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியுடன் ஒரு முறையும், பா.ஜ.கவுடன் ஒருமுறையும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இருமுறையும் இந்த இரு கட்சிகளும் சில மாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையில் இயங்கிய ஆட்சிகளைக் கவிழ்த்தன. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை முதல்வர் மாயாவதி கறாராகப் பயன்படுத்தியமைக்கு எதிராகவே இந்த இரு ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது. சாதி, மத, இன அடிப்படைகளில் இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய நாடுகளில் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் அக் கொடுமைகளால் பாதிக்கப்படுவோரை ஆற்ற்றல்படுத்த வேண்டிய அவசியங்களும் எழுகின்றன. ஏதோ இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு சட்டம் செயல்படுவது போல இங்குள்ள ஆதிக்க சாதிகள் சொல்வது அப்பட்டமான பொய்.

ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் இத்தகைய “புறக்கணிப்புகளுக்கு எதிரான சட்டங்கள்” (Anti – Discrimination Acts) செயல்படுகின்றன. ‘ஒதுக்கல்களுக்கு எதிரான சட்டம், 1991’ (ஆஸ்திரேலியா), Law Agains Racism, 2010 ((பொலிவியா), Race Relations Amendment Act, 2000 ((பிரிட்டன்) முதலியன சில எடுத்துக்காட்டுகள். நிலைமை இப்படி இருக்க தமிழக ஆதிக்க சாதி அமைப்புகள் இச்சட்டம் குறித்த தவறானதும், பொய்யானதுமான பல செய்திகளைப் பரப்பி எப்படியாவது இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளனர்.

நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை “ஒழிக்கப்பட்டு” விட்டது. தீண்டாமை ஒரு குற்றம். எனினும் நமது வழமையான குற்றவியல் சட்டங்களில், நடைமுறையில் உள்ள பல தீண்டாமைச் செயல்கள் குற்றப்பட்டியலின் கீழ் வரா. அப்படியே வந்தாலும் அதற்குரிய கடுமையுடன் அவை முன்வைக்கப் படாமல் மிகச் சாதாரணக் குற்றங்களாகவும், குறைந்த தண்டனைக்குரியவையாகவுமே அவை அணுகப்பட்டிருக்கும். 1948ம் ஆண்டின் உல்களாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டபின் உருவான நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஓரளவு நன்றாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான குற்றவியல் மற்றும் சிவில் உரிமைச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வடிவிலேயே தொடர்கின்றன. அரசியல் சட்டத்திற்குத் தக அவை ஒத்திசையச் (tune) செய்யப்படவில்லை.

எனவே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு உண்மையிலேயே அமுலாக்கப்பட வேண்டுமானால் அதற்குத் தக குற்றவியல் சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் இரு மாற்றங்கள் இதற்குத் தேவையாகின்றன. அவை.:

குற்றவியல் சட்டங்களில் காணப்படாத புதிய குற்றங்களை வரையறுப்பது. (சமூக விலக்கு செய்தல், சொத்துக்களை அனுபவிக்க இயலாது தடுத்தால், எதிர் வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்தக் குற்றங்களுக்கு தண்டனைகளையும், சில குற்றங்களுக்கான குறைந்தபட்சத் தண்டனைகளாகக் குற்றவியல் சட்டங்கள் விதித்துள்ளதையும் அதிகரிப்பது. (குற்றம் செய்தவர் அரசு ஊழியராயின் அதுபோன்ற குற்றங்களுக்குச் சாதாரணமாக வழங்கபடும் குறைந்த பட்சத் தண்டனையைக் கூட்டுவது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீனை மறுப்பது, அவரது சொத்துக்களை முடக்குவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தகையோரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வது முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்த அடிப்படையில்தான் 1955ல் ‘சிவில் உரிமைச் சட்டமும்’, பின் அதன் போதாமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து, 1989ல் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்’, 1995ல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலேயுள்ள இவ்விரு கூறுகளையும் தவிர மேலும் மூன்று முக்கிய வரவேற்கத் தக்க கூறுகளைக் கொண்டதாக அமைந்தது. அவை:

குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாரரும் எந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அவசிய நிபந்தனைகள் ஆக்கப்பட்டன. ஒரு சனநாயக அரசியல் அமைப்பில் இது சாத்தியமில்லை. குற்றவியற் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க இயலும். குற்றம் இழைத்தவர் தலித் அல்லாதவராக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர் தலித்தாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை உருவாக்க இயலாது. ஆனால் இன்று இச்சட்டத்தில் அப்படியான ஒரு நிபந்தனை உருவாக்கப் பட்டது ஒரு மிக முக்கியமான மாற்றம். சாதிக்கொரு தண்டனை என்கிற மனு நீதி கோலோச்சிய நாட்டில் அந்நிலை முதன்முதலாக இப்படித் தலை கீழாக்கப்பட்டது என்பது ஒரு புரட்சி எனலாம்.
பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைத்தல் ஆகியவை இச்சட்டத்தில் விரிவாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், சாட்சிகள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், பயணப்படி முதலியவற்றை அளித்தல், பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல் முதலியன இதில் அடங்கும்.
இவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த உரிய கருவிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வழி வகுக்கிறது.. இந்த வழக்குகளை விரைவாக நடத்தித் தண்டனைகளை வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், வழக்கை நடத்தச் சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்தல்,. வன்கொடுமை நடக்கக் கூடிய பகுதிகளை அடையளம் கண்டு கண்காணிக்கவும், ஆய்வு நடத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் உரிய ‘செல்’களை அமைத்தல் முதலியன இதில் அடங்கும்.
இப்படியான வழிமுறைகளெல்லாம் இருந்தபின்னும் ஏன் உரிய பலன்களை இந்தச் சட்டத்தின் மூலம் தலித் மற்றும் பழங்குடியினர் பெரிய பயன் ஏதும் பெற இயலவில்லை? தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் குறையவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ஆய்வு நூல். இச்சட்டத்தின் பயன்பாடு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. கடலூர், விழுப்புரம், ஈரோடு கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் 2012வரை நடை பெற்ற தலித் மக்களின் மீதான் வன்கொடுமைகளை இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகள், நேரடியான கள ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ் வன்கொடுமைகள் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் கையாளப்பட்டன என்பதை விரிவான ஆதாரங்களுடன் தொகுத்து ஆய்வு செய்கின்றனர் இதன் ஆசிரியர்களான முருகப்பனும் ஜெசியும். வன்கொடுமை மேற்கொள்ளப்படுவது தொடங்கி புகார் பதிவு செய்யப்படுவது, வழக்கு விசாரிக்கப்படுவது, சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுவது, நீதிமன்றம் இவ்வழக்குகளைக் கையாள்வது என ஒவ்வொரு நிலையையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மட்டத்திலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது, வன்கொடுமைகளை மேற்கொண்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர் என்பவற்றைத் துல்லியமாக நிறுவுகின்றனர்.

மதுரையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம் 2007ம் ஆண்டு இதே போல ஒரு ஆய்வு நுலை வெளியிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு முடிவுகளை எம்.ஏ.பிரிட்டோ தொகுத்திருந்தார். 1996 லிருந்து 2001 வரை நடைபெற்ற கொடுமைகள் அந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த நூலின் முடிவுகளைத் தற்போது நண்பர்கள் முருக்கப்பனும் ஜெசியும் கண்டடைந்துள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில் எத்தகைய முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது விளங்குகிறது. காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றிற்கு, மொத்தத்தில் அரசிற்கு இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்புறுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அளவில் நீதிம்ன்றங்கள் எவ்வாறு இச்சட்டத்திற்குத் தவறான விளக்கங்களை அளித்து குர்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ராஜேஷ் சுக்லா ஆய்வு செய்துள்ளார் (Economic and Political Weekly, Oct 21, 2006). அதைச்சுருக்கித் தமிழாக்கி 2008ல் ‘சஞ்சாரம்’ எனும் இதழில் வெளியிட்டேன். எனது ‘நெருக்கடி நிலை உலகம்’ நூலிலும் (எதிர் வெளியீடு, 2008) அது உள்ளது.

இவ்வாறு குற்றம் செய்கிற ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள இச் சட்ட வாசகங்கள் சிலவற்றையும், ஒட்டுமொத்தமாகச் சில பிரிவுகளஈயும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக அக்கறையுள்ளோர் மத்தியில் தற்போது தேசிய அளவில் கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. இது குறித்தும் சென்ற ஆண்டு ‘மக்கள் களம்’ என்னும் தலித் மாத இதழில் விரிவாக எழுதியுள்ளேன். எனது இணையத் தளத்திலும் அது உள்ளது.

முருகப்பனும் ஜெசியும் தொகுத்துள்ள இந்நூலின் முதற் பகுதி மிக விரிவாக தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகளின் வரலாற்றையும், அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சரளமான நிரடலற்ற மொழியில் சொல்லியுள்ளது மொத்தத்தில் தமிழக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இது அமைந்துள்ளது.. இவ்வகையில் நூலாசிரியர்களையும் இவ் ஆய்வை மேற்கொண்ட ‘இளைஞர்களுக்கான சமூக விழிபுணர்வு மையம், தமிழ்நாடு’ (SASY) மற்றும் ‘நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புது டெல்லி’ (NDMJ) ஆகிய அமைப்புகளையும்கும் இவ் வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கறையுள்ள நாம் எல்லோரும் பாராட்டக்க் கடமைப்பட்டுள்ளோம்.

இறுதியாக ஒன்று. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச்சட்டத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் ஓரிரு பொய் வழக்குகளைப் பெரிதுபடுத்தி இச்சட்டத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையே கொச்சைப்படுத்துடுகின்றன ஆதிக்க சாதி அமைப்புக்கள். இதன் மூலம் இச்சட்டம் உண்மையில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வன்கொடுமை செய்யும் சாதியினர் காப்பாற்றப்படுவதற்கே வழி வகுக்கப்படுகிறது என்கிற உண்மை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறைக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், தமது ஆதரவாளர்கள் மூலமாகவும் செயல்படுத்துகிற சமூக வலைத்தளங்கள் இதில் முன்னிற்கின்றன. இந்நிலை கவலைக்குரியது. இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாறு பொய் வழக்குத் தொடுப்போரை வெளிப்படையாகக் கண்டித்து அவ்வழக்குகளைத் திரும்பப்பெற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கரையுள்ளோர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறின்றி நாம் மௌனம் சாதிப்போமேயானால் அது ஆதிக்க சாதியினரின் பொய்ப் பிரச்சாரத்திற்கே வலு சேர்க்கும்.

அ.மார்க்ஸ்,

14-03- 2014,

குடந்தை