ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வார் இருவரும் சொந்த மகளையும் அவளது காதலனையும் கொன்று குற்றத்தை மறைத்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அளவில் ஊடகங்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்டு வந்தது.

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பனும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காகவும் இந்த டாக்டர் தம்பதியருக்கு சென்ற வாரம் காசியாபாத் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது..

2008 மே 16 அன்று இருவரையும் கொன்ற டாக்டர் தம்பதியர் ஹேம்ராஜே தம் மகளைக் கொன்றதாக ஐயத்தை உருவாக்கினர். எனினும் அடுத்த நாள் பூட்டப்பட்டிருந்த மாடியில் ஹேம்ராஜின் அழுகிய பிணம் கண்டெடுக்கப்பட்டபோது அதை டாக்டர் தம்பதியரால் மட்டுமல்ல யாராலும் விளக்க இயலவில்லை. ராஜெஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். எனினும் இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்பதற்காக இவழக்கைத் தொடராமல் முடித்துக் கொள்வதாக. இவ் வழக்கைப் புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுத் சென்ற டிசம்பர் 29, 2010ல் அறிவித்தது.

இவ்வாறு வழக்கு முடிக்கபடுவதை ஏற்றுக் கொல்ளாத உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மறு விசாரணைக்கு ஆட்படுத்தியது. இன்று டாக்டர் தம்பதியர் தண்டிக்கப்பட்டதில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது என்பதை யாரும் ஏற்க இயலாது என்கிற வகையில் உச்ச நீதிமன்றம் பாராட்டுக்குரியதாகிறது.. .

எனினும் இதை வரவேற்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. இராகவன் போன்றோர் கவனப்படுத்தும் (The Hindu, Nov 29, 2013) இத் தீர்ப்பின் அடிப்படை மனித உரிமை நோக்கிலிருந்து பார்ப்போருக்குக் கவலை அளிக்கிறது. 2002 குஜராத் படுகொலைகளின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரி உட்பட 68 பேர் கோடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேந்திர மோடி மற்றும் 58 பேர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என நற்சான்றிதழ் வழங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை ஏற்றவர் இந்த இராகவன் என்பது குறிப்பிடத் தக்கது.

குற்றத்தை நிறுவத்தக்க “முடிவான சான்றுகள்” (conclusive evidences) இல்லாதபோதும், “நியாயமான அய்யங்களுக்கு அப்பால்” (beyond reasonable doubt) குற்றம் உறுதியாக நிறுவப்படாத போதும் கூட, வெறும் “சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களின்” (circumstantial evidences) அடிப்படையிலேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்படாலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இத்தீர்ப்பை இம் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலும் குற்றவியல் நீதிமுறை கீழ்க்கண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அவை:

குற்றம் அய்யத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படும்வரை குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியாகவே கருதப்படுவார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்கு மவுனமாக இருக்க உரிமை உண்டு.
குற்றத்தை நிரூபிக்கும் கடமை குற்றத்தைச் சுமத்துகிற கவல்துறையுடையதே தவிர அது நீதிமன்றத்துடையது அல்ல; அதேபோல குற்றத்தைத் தான் செய்யவில்லை என நிறுவும் பொறுப்பும் குற்றம் சுமத்தபட்டவருக்குக் கிடையாது: அய்யத்திற்கிடமின்றி அதை நிறுவுவது காவல்துறையின் பொறுப்பு.

இதில் இரண்டாவது அம்சத்தைக் கொஞ்சம் விளக்க வேண்டும். “தன்னைத்தானே குற்றவாளியாக்கிக் கொள்ளும் நிலைக்கு எதிரான காப்புறுதி” (guaranteed protection against self incrimination) என இது அழைக்கப்படுகிறது. தன்னை நோக்கி விசாரணையின்போது வைக்கப்படும் கேள்வி ஒன்றிற்குத் தான் அளிக்கும் பதில் தன்னைக் குற்றச் செயலுடன் தொடர்புபடுத்தும் என ஒருவர் கருதினால் அவர் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க நமது அரசியல் சட்டமும் {A 20 (3)}, குற்ற நடைமுறைச் சட்டமும் {Cr PC 161 (2)}. இடமளிக்கின்றன.

ஆனால், தேங்கிக் இடக்கும் ஏராளமான கிரிமினல் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடாமல் அவர்கள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகப்படுத்துவது என்கிற பெயர்களில் மேற்கண்ட மூன்று அடிப்படை நீதி வழங்கும் நெறிமுறைகளையும் ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

குற்ற நீதி வழங்குமுறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கென இந்திய அரசால் அமைக்கப்பட்ட ‘மாலிமத் குழு’ மற்றும் ‘மாதவ மேனன்’ குழு முதலியன இதை நோக்கிப் பரிந்துரைகளை அளித்துள்ளன. இன்றைய நீதிவழங்கு முறை “நீதி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளது” எனக் குற்றம் சாட்டும் மாலிமத் குழு அதற்கு மாற்றாகச் சொல்லும் வழிமுறை மிக ஆபத்தாக உள்ளது.

இன்றைய நீதிமுறையில் நீதிபதி என்பவர் ஒரு நடுநிலையாளர் (umpire). இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டதா என நிறுத்து முடிவெடுக்க வேண்டியது அவர் பொறுப்பு. இந்நிலையை ஒழித்து, நீதிபதி ஒரு நடு நிலையாளராக மட்டும் அமையாமல், அவரே குற்றத்தை நிறுவும் பாத்திரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இவ் அறிக்கை. அதாவது நீதிமன்றம் என்பது, “விசாரணையின் ஊடாக நீதிவழங்கும் அமைப்பு” என்கிற நிலையிலிருந்து விலகி, “குற்றத்தை நிறுவி தண்டனை வழங்கும் அமைப்பாக” (inquisitorial system) மாற வேண்டுமாம்.

அதாவது முடிவான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்தைக் காவல்துறை முழுமையாக நிறுவாதபோதும், வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நீதிபதி குற்றத்தை உறுதி செய்து தண்டனையை வழங்கலாம். ஏதூனும் ஒரு கேள்விக்குக் குற்றம் சுமத்தபட்டவர் பதிலளிக்க மறுத்தால் அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் கொண்டு தண்டனை வழங்கலாம்.

அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டாத யார் மீதும் கடுங் குற்றங்களைச் சுமத்திப் போதிய ஆதாரங்களின்றி அவர்களைப் பழிவாங்கவும், சிறையிலடைக்கவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் அடித்தள மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் முதலானோருக்காகப் போராடுகிற இயக்கத்தவர், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் டாக்டர் பினாயக் சென் போன்றோர் எந்தக் குற்றமும் செய்யாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்படுவதற்கும் கடும் தண்டனைக்குள்ளாவதற்கும் இது வழி வகுக்கும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியன தலைதூக்கியுள்ள ஒரு காலகட்டத்தில், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பியபோதும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நீதி வழங்கு நெறியை ஏற்க இயலாது என்கிற சொல்லாடல்கள் இன்று மிதக்கவிடப்படுகின்றன. மாறாக, “ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டபோதும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது” என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. தேசப் பாதுகாப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகரித்தல் என்கிற பெயர்களில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைக் குடிமக்களுக்கு மறுத்துவிட இயலாது. இப்படியான சந்தர்ப்பங்களில் தேசப்பாதுகாப்பு முதலியவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடையில் மிகவும் நுணுக்கமான ஒரு சமச் சீர்மையைக் (balance) கையாள்வது நீதிமன்றத்தின் பொறுப்பாகிறது. எக்காரணம் கொண்டும் அரசு, காவல்துறை மற்றும் இதர நிறுவனங்கள் மக்களுக்கும், அடிப்படை நெறிமுறைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய தன்மையைப் (accountability) பலி கொடுத்துவிட இயலாது.

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பை “கவுரவக் கொலைகளுக்கு” எதிரான தீர்ப்பு என்றும் சிலர் கொண்டாடுவதையும் ஏற்க இயலாது. கவுரவக் கொலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இடுப்பதற்கு உரிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது என்பதும் அடிப்படை நீதி வழங்கு நெறிகளை அப்படியே தூக்கிக் கடாசி எறிவதும் ஒன்றல்ல. அதேபோல டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மட்டும் சிறுவனாக இருந்ததால் அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது அது குறைந்த தண்டனை என எழுந்த கண்டனங்களும் இத்தகையதே. சாதிப் பெருமையைக் காரணம் காட்டிக் காதலர்கள் கொலை செய்யப்படுவதும், அதே போலப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் கவுரவக் கொலை, அல்லது பாலியல் வன்முறை, தேசப் பாதுகாப்பு என எதன் பெயராலும் அடிப்படை நீதி வழங்கு நெறிமுறைகளை மீறுவது அரசு மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும். அரசியல் சட்ட ஆளுகையில் எந்நாளும் இவற்றுக்கு இடமில்லை.

“சந்தேகத்தின் பலன்களை” மட்டுமின்றி “சந்தர்ப்ப சூழல்களின் பலன்களையும் கூட ”குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு“ மட்டுமின்றி, “குற்றம் நிறுவப்பட்டவர்களுக்கும்” கூட வழங்க வேண்டும் என்பதே நீதி வழங்கு நெறிமுறையின் அடிப்படை. இந்த வகையிலேயே சட்ட நூல்களில் வரையறுக்கப்பட்டு இருக்காவிட்டாலும் கூட, நீதி வழங்கு நெறியினூடாகவே, “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படவேண்டும்” என்பது போன்ற எழுதப்படாத சட்டங்கள் (judicially evolved principles) உருவாகியுள்ளன. நாளை ஆருஷி வழக்குத் தீர்ப்பும் கூட இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையாக மாறினால், அது உறுதியாக அது ஒரு ஜனநாயக ஆளுகையின் அடையாளமாக இருக்காது.