தோழர் கோவை ஈஸ்வரன் (1939 – 2017)

(நெஞ்சை விட்டகலா நினைவுகள்  : ஆக 2017 “விகடன் தடம்” இதழில் வெளிவந்துள்ள கோவை ஈஸ்வரன் அவர்கள் பற்றிய என் நினைவுக் குறிப்பு)  

சமகால மக்களை ஈர்க்கும் பேச்சாளர், குறைந்தபட்சம் இரண்டு நக்சல்பாரி இயக்க ஆதரவு இதழ்களுக்கு (மனிதன், செந்தாரகை) ஆசிரியராக இருந்தவர், ஒரு மனித உரிமைப் போராளி, தொழிற்சங்கத் தலைவர், நகர வளர்ச்சித் துறை (CIT)  எனும் அரை அரசு நிறுவனமொன்றில் பணி புரிந்தவர், அந்தப் பணியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவர், பிழைப்பிற்கு முட்டைக் கடை ஒன்றை நடத்திய பார்ப்பனர், கட்சியிலிருந்து சற்றே ஒதுங்கி வாழ நேர்ந்த போதெல்லாம் நிதி நிறுவனங்கள் சிலவற்றில் ‘மேனேஜராக இருந்தவர் எனப் பல பரிமாணங்களை உடையவர் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள். தமிழ்த் தேசியத்தில் தொடங்கியவராயினும் வாழ்வின் பெரும்பகுதியை அரசுகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி இயக்கங்களோடு குடும்ப சகிதம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர் அவர், இறுக்கமான கட்சிக்காரராகவே அடையாளம் காணப்பட்ட போதும் மிகவும் நெகிழ்ச்சியான சிந்தனை உடையவர், அதனாலேயே எந்தக் கட்சிக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தாரோ அந்தக் கட்சியாலேயே ‘குட்டி முதலாளிய அறிவுஜீவி’ ‘கிராமத்திற்குச் சென்று ஐக்கியமாகத் தயாராக இல்லாதவர்’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டபோது சற்றே நொந்து போனவர், எனினும் தொடர்ச்சியாக இறுதிவரை பல்வேறு குழுக்களாகச் சிதைந்து போயிருந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒருங்கிணைக்க முயற்சித்தவர். அதன் எழுச்சிகள், பின்னடைவுகள் எல்லாவற்றின்போதும் அதனோடவே இருந்து மறைந்தவர்.

e2

அவருடைய வாழ்க்கை குறித்த ஓரளவு விரிவான பதிவாக நமக்குக் கிடைப்பது அவரது ‘தீராநதி’ நேர்காணல் (ஜூன் 2012) என்றுதான் நினைக்கிறேன். அவரது அன்பு மனைவியும் உற்ற தோழருமான ரத்னா அவர்களை அவர் இழந்திருந்த நேரம் அது. மீனா அந்த நேர்காணலைச் செய்தபோது கூட இருந்தது நானும் ஈஸ்வரனின் மைத்துனரும், ரத்னாவின் சகோதரருமான பி.வி.சீனிவாசனும்தான். ‘பி.வி.எஸ்’ என அழிக்கப்பட்ட சீனிவாசனும் நக்சல்பாரி இயக்கத்திற்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டடவர்தான். சென்ற ஆண்டு மறைந்தார் அவர்.

யாரைப்பற்றியும் சொல்லும்போது அவர்களின் சாதியைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது உண்மைதான் ஆயினும் ஈஸ்வரன் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதைச் சொல்வது அவசியம் என நினைக்கிறேன். கோபிசெட்டிப் பாளையத்தில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று முறைப்படி மந்திரம் ஓதிப் பூணூல் அணிந்து கொள்ளும் ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். எனினும் முற்றிலுமாகத் தன்னைச் சாதி விலக்கம் செய்து கொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறிய வயதில் பூணூல் அணிவிக்க வீட்டிற்கு வந்த புரோகிதர், இவர் மந்திரம் சொல்ல இயலாததைக் கண்டு, “நீ பிராமணன் இல்லை. சூத்திரனுக்குத்தான் பிறந்திருக்கணும்” எனச் சபித்ததைச் சொல்லிச் சிரிப்பார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் ஆசாரமான தந்தை ஒரு காந்தியவாதி, ஒராண்டு சிறைப்பட்டு, சிறை தந்த பரிசாகக் காச நோய்க்கு ஆளாகி இளம் வயதில் மறைந்தார். ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்த ஈஸ்வரனின் தாய் சென்னைக்கு இடம் பெயர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று மகனையும் வளர்த்துள்ளார்.

நானெல்லாம் மாணவனாக இருந்தபோது ஏ.எம். கே எனப்பட்ட கோதண்டராமன், பி.வி.எஸ் என அழைக்கப்பட்ட சீனிவாசன் ஆகியோர் என்னைப் போன்றவர்களால் வியந்து நோக்கப்பட்டவர்கள். மிகக் கொடுமையான அடக்குமுறைகள் நிகழ்ந்த ஒரு கட்டத்தில் தலைமறைவாகச் செல்ல இருந்த பி.வி.எஸ் தன் சகோதரி ரத்னாவை ஈஸ்வரனுக்கு மணமுடித்துச் சென்றுள்ளார். ரத்னாவும் கூட ஒரு பார்ப்பனராயினும் கணவரைப் போலவே தன்னை முழுமையாகச் சாதிநீக்கம் செய்து கொண்டவர். நந்தனம் சி.ஐ.டி காலனியில் இருந்த அவர்களின் சிறு வீட்டில் எந்நேரமும் தமிழகம் முழுவதிலிருந்தும் வழக்கு தொடர்பாகவும், சில நேரங்களில் மருத்துவத்திற்காகவும் வரும் தோழர்கள் தங்கி இருப்பதைப் பார்த்துள்ளேன். அவ்வளவு பேருக்கும் இயன்ற வரையில் சோறு சமைத்துப் போட்டவர் ரத்னா. சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை மருத்துவமனையில் சேர்த்து ஒரு தாதியைப் போலக் கவனித்துக் கொண்டவர் அவர்.. ‘ரத்னா’ எனச் சொன்னால் அவருக்குப் பிடிக்காது. ‘தோழர்’ என்றுதான் சொல்ல வேண்டும். அவர் மறைந்த போது அவரது உடலை நந்தனத்திலிருந்து கண்ணம்மாப்பேட்டைச் சுடுகாடுவரை பெண்களே சுமந்து சென்று எரியூட்டியதை சென்னை நகர மக்கள் வியந்து நோக்கினர்.

e4

தோழர்கள் ஈஸ்வரன் – ரத்னா இணையர் தம் மகளை ஒரு பிற்படுத்தப்பட்ட இளைஞக்குத்தான் திருமணம் செய்வித்தனர். மகன் திருமணம் செய்து கொண்டது ஒரு தலித் பெண்ணை.

கடுமையான நெருக்கடிகள் மத்தியில் வாழ்ந்தவர் ஈஸ்வரன். அரசு நெருக்கடிகள் மட்டுமல்ல, கட்சிக்குள்ளும் நெருக்கடிகள்தான். இந்த உள் நெருக்கடிகள் பல நேரங்களில் அரசு நெருக்கடிகளையும் விடத் துயர் மிகுந்ததாக இருக்கும் என்பதைப் பட்டவர்கள் அறிவர். சிறைக் கொடுமைகளைக் கூட அனுபவித்துவிடலாம். சக தோழர்களின் இரக்கமற்ற அவதூறுகள் தாள முடியாதவை.

சீனப்பாதையைத்  தேர்வு செய்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி உடைந்த போதும், பின் அதன் வர்க்க சமரசத்திற்கு எதிராக நக்சல்பாரி அமைப்பு உருவானபோதும் அந்த உருவாக்க முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஈஸ்வரனும் ஒருவர், ‘தீக்கதிர்’, ‘மனிதன்’ முதலான இவ் இயக்கங்களின் பத்திரிகைகளின் உருவாக்கத்திலும் அவருக்கு முக்கிய பங்கிருந்தது. ‘தீக்கதிர்’ இதழின் தொரக்கத்திலும் ‘மனிதன்’ இதழில் இறுதிவரையும்’ ஆசிரியராக இருந்தவரும் அவரே. எனினும் மக்கள் திரள் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ‘வர்க்க எதிரிகளின் அழித்தொழிப்பு’க்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது, அளிப்பது மக்களோடு வாழ்ந்து விவசாயிகளைத் திரட்டாமல் தலைமறைவு வாழ்க்கையையே பிரதானப் படுத்துவது, காந்தீயத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காந்தி சிலை உடைப்பு  முதலானவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது போன்றவற்றை ஈஸ்வரன் விமர்சித்தபோது அவர் தனிமைப்பட நேர்ந்தது. ‘கட்சிவிரோத நடவடிக்கை’, ‘குட்டி முதலாளிய நகர்ப்புறவாதம்’ முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. கட்சியிலிருந்து விலகி வெறும் ஆதரவாளர் எனும் நிலையில் தொடர அவர் வற்புறுத்தப்பட்டார்.

நொந்துபோன தோழர் சென்னையை விட்டகன்று சொந்த ஊரான கோபிக்குத் திரும்பி அவரது மாமா வீட்டில் சிலகாலம் வாழ நேரிட்டபோது, அவரைத் தேடி வந்த ஏ.எம்.கே அவர்கள் அன்று சிறையில் அடைப்பட்டுக் கிடந்த தோழர்களை விடுதலை செய்யும் மனித உரிமைப் பணிகளில் ஈடுபட அவரை வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்று மீண்டும் சென்னைக்கு வந்த ஈஸ்வரனுக்கு இப்போது இன்னொரு அரிய தோழமை கிடைத்தது. தமிழக மனித உரிமை வரலாற்றில் மிக முக்கியமாகத் தடம் பதித்த இன்னொரு அற்புதமான மனிதரான மேயர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து அந்தப் பணியைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. காந்தியத்தையும் கம்யூனிசத்தையும் ஒரு சேர நேசித்த கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ஒரு பார்ப்பனர்தான். குடிசைப் பகுதி மக்களுடன் மிக நெருக்கமாக வாழ்ந்தவர் அவர். எம்.ஜி.ஆர் நகர் என இப்போது அழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் எல்லாம் அவரால்தான் உருவானவை என்பர். சிறைப்பட்டிருந்த அன்றைய நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் முதலாளித்துவ அரசின் இந்த நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது என்கிற கொள்கை உடையவர்களாக இருந்தனர். அவர்களைச் சிறைகளில் சந்தித்து வழக்காடச் சம்மதிக்க வைப்பதே ஈஸ்வரன் போன்றோருக்குப் பெரும்பாடாக இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த தோழர்கள் புலவர் கலியபெருமாள், தியாகு, பஞ்சலிங்கம், கிருஷ்ணசாமி ஆகியோரின் தண்டனை ரத்தானதில் இவர்களின் பங்கு முக்கியமானது. அன்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இதில் அவர்களுக்குப் பெரிதும் உதவினர். எனினும் அவர் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி எனவும் அவரைப் பாராட்டக் கூடாது எனவும் கட்சிக்குள் ஈஸ்வரனுக்குக் கடும் எதிர்ப்பிருந்தது. ஆனாலும் ஒரு நான்கு வரியில் மிகச் சுருக்கமாக கலைஞரை ஈஸ்வரன் பாராட்டியபோது அவருக்கு ஒரு பொட்டலம் நிறைய மயிரைப் பார்சல் செய்து சிலர் அனுப்பி இருந்தனர். “இது தலைமுடி அல்ல. அடிமுடி” எனக் குறிப்பு வேறு. இப்படிப் பல அனுபவங்கள். தோழர் சாரு மஜூம்தார் சென்னைக்கு வந்தபோது மாநிலக் குழு கூட்டத்தில் ‘அழித்தொழிப்புப் பார்வை தவறு’ என ஈஸ்வரன் விமர்சனம் வைத்தார். அதை ஒட்டி ஈஸ்வரன் மாநிலப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மைதிலி சிவராமனும் என். ராமும் .நடத்திய Radical Review இதழில் நக்சல்பாரி இயக்கத்தை விமர்சித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ் அவர்கள் எழுதியபோது அதை மறுத்து ஈஸ்வரன் எழுதிய பதில் கட்டுரை பிரசித்தமானது. ஈஎம்.எஸ் அவர்கள் மீண்டும் அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால் அப்போது கட்சிப் பொறுப்பில் இருந்தவரும் பின்னர் தமிழகக் காவல்துறையால் கடத்திச் சென்று கொல்லப்பட்டவருமான தோழர் அப்பு அவர்கள் அதற்கு பதில் எழுத வேண்டாம் என ஆணையிட அந்த விவாதம் அத்தோடு முடிந்தது.

e5

1973 தொடங்கி நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் வரை (1975) ‘மனிதன்’ ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. 1980 களில் ஆந்திர மாநிலத்தில் கொண்டபள்ளி சீதாராமையா தலைமையில் இயங்கியவர்களும் தமிழகத்தில் ஏ.எம்.கே முதலானோரும் இணைந்து “மக்கள் யுத்தக் குழு” (PWG) உருவாக்கப்பட்ட போது மீண்டும் தீவிரமாக நகசல்பாரி இயக்கத்தில் செயல்படத் தொடங்கிய ஈஸ்வரன் அப்போது உருவாக்கப்பட்ட ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, அதன் மாத இதழான ‘செந்தாரகை’ ஆகியவற்றில் கோ.கேசவன், பழமலை, அ.மார்க்ஸ் ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டது “ஒரு பொற்காலம்” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எனினும் அந்தப் பொற்காலமும் விரைவில் முடிந்தது. மீண்டும் ஏ.எம்.கே முதலானோர் மக்கள் யுத்தக் குழுவிலிருந்து விலகினர். விவசாயிகள், தொழிலாளிகள் என எல்லா இயக்கங்களையும் ‘போர்க்குணம் மிக்க பொருளாதாரவாதம்’ என்று நிராகரித்த தமிழக அமைப்பிலிருந்து தான் ஒதுங்க நேரிட்டது எனக் கூறிய ஈஸ்வரன் அதன் பின் இங்கு செயல்படுகிற நக்சல்பாரிவழி வந்த இயக்கங்கள் அனைத்திற்கும் பொதுவான, எல்லோராலும் மதிக்கப்படும் தோழரானார். இறுதிக் காலத்தில் தற்போதுள்ள மாஓயிஸ்ட் இயக்கத்துடன் சற்று நெருக்கமாக இருந்தார்.

அமைப்புகளிலிருந்து ஒதுங்கி நின்ற முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தவர்களை ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ஐக்கிய அணி’ என ஒருங்கிணைக்கச் செய்த முயற்சி ஒன்றில் முக்கிய பங்காற்றினார். எனினும் அவர்கள் பலமுறை சந்தித்துப் பேசியும் ஒன்றும் உருப்படியாக நடந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர் ஈஸ்வரன். பிற மாநிலத் தோழர்கள் இங்கு வரும்போது அவர்களது பேச்சுக்களை மொழி பெயர்ப்பது, ஆங்கிலக் கட்டுரைகளைக் கட்சித் தோழர்களுக்கு மொழி பெயர்த்துத் தருவது எனத் தன்னை நக்சல்பாரி இயக்கத்திற்கு இறுதிவரை அர்ப்பணித்துக் கொண்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் மறைந்த தோழர் ஏ.கே கோபாலனின் அயனாவர உரையை மொழி பெயர்த்ததும் அவர்தான். நக்சல்பாரி இயக்கத்தின் மீது அவர் சில விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதும் இறுதிவரை அதனுடந்தான் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எந்நாளும் அதை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.

e

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். அவர் ஒரு இளஞனாக அரசியல் களத்தில் நுழைந்தது ம.பொ.சியின் தமிழ்த் தேசிய இயக்கத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டுதான். அப்போது தமிழ்த் தேசிய உணர்வை திராவிட இயக்கமும் முன்வைத்துக் கொண்டிருந்தது. இரண்டிற்கும் உள்ள ஒரு அடிப்படை வேறுபாடு திராவிட இயக்கம் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்து முன் வைத்தது. ம.பொ.சியின் தமிழரசுக் கழகமோ இந்துமதம், பார்ப்பனீயம் ஆகியவற்றை ஏற்றுக் கடுமையாகப் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் எதிர்த்து வந்தது. அந்த நிலையில் ஈஸ்வரன் அவர்கள் ம.பொ.சியுடன் இணைந்து செயல்படுவது என்கிற நிலையைத் தேர்வு செய்தது குறித்து விரிவாக அவர் எங்கும் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை. எனினும் அவரது உரைகள் அந்தக் கால கட்டத் திராவிட இயக்கப் பாணியில்தான் இறுதிவரை அமைந்திருந்தன.

நான் முதன் முதலில் அவரைச் சந்தித்தது. 1980களின் தொடக்கத்தில். அப்போது நான் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மக்கள் யுத்தக் குழு பக்கம் திரும்பியிருந்தேன். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்திலும், செந்தாரகை இதழிலும் என்னைச் சேர்த்திருந்தனர். நான் கலந்து கொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் யாரோ ஒரு ஆதரவாளரின் வீட்டு மாடியில் நடந்தது. அங்குதான் ஈஸ்வரன் அவர்களை நான் முதன் முதலில் பார்த்தது. அந்தக் கூட்டத்தில் அந்த இயக்கம் குறித்து கோ.கேசவன் அவர்கள் தான் தயாரித்து வந்த அறிக்கையை ஒப்புதல் பெறுவதற்காக வாசித்தார். அதில் ஓரிடத்தில் “அந்நியமாதல் போன்ற மார்க்சீய விரோதக் கோட்பாடுகளை இங்கு சிலர் முன்வைத்துத் திரிகின்றனர்” என எஸ்.வி.ராஜதுரை, ஞாநி, எஸ்.என்..நாகராசன் போன்றோரை கேசவன் தாக்கி இருந்தார். நான் அதை மறுத்தேன். அந்நியமாதல் என்பது கார்ல் மார்க்ஸ் முன்வைத்த ஒரு கோட்பாடு. அதை எப்படி மார்க்சீய விரோதம் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என் கருத்தை அங்கிருந்தவர்களில் ஈஸ்வரன்தான் முதன் முதலில் ஆதரித்தார். இறுதியில் அவ்வாசகம் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. வறட்டுத்தனமான அரசியலுக்கு ஈஸ்வரன் எப்போதுமே எதிராக இருந்தார்.

நான் செந்தாரகை ஆசிரியர் குழுவில் செயல்பட்டபோது தஞ்சியில் இருந்தேன். ஆசிரியர் குழு முதலான கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் காலை மூன்று மணி வாக்கில் நந்தனத்தில் இறங்கி அவர் வீட்டுக் கதவைத் தட்டி அங்கு உறங்கிய அந்த நாட்கள் நினைவில் ஓடுகின்றன.

அவர் மறைந்த அன்று நேரில் அஞ்சலி செலுத்த இயலாமல் நான் வெளிநாடொன்றில் இருக்க நேர்ந்ததை நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன.