தெலங்கானா தள்ளி உருவாக்கிய தனித் தெலங்கானா

சென்ற வாரம் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்திற்கு (UAPA) எதிரான பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நகரத்தைச் சென்றடையும்வரை, புதிய தெலங்கானா மவட்டம் கண்டு மீளும் ‘தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி’த் தலைவர் சந்திரசேகர ராவுக்கு வைக்கப்பட்ட பிரும்மாண்டமான வரவேற்பு ஃப்லெக்ஸ் போர்டுகள் ஊரெங்கும் நிறைந்திருந்தன. நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்த இளம் நண்பர்களிடம் புதிய மாநிலம் பற்றிய கருத்துக்களைக் கேட்டபோது, தெலங்கானாவைச் சேர்ந்த அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பதிலிறுத்தனர். தங்களுக்குப் புதிய மாநிலத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அவர்களிடம் மிகுந்திருந்தன.

முஸ்லிம் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவரும் உற்சாகமாகவே பதிலளித்தார், உருவாக உள்ள தெலங்கானாவில் சுமார் 13 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். கிட்டத்தட்ட எல்லோரும் உருது பேசுபவர்கள். 1956ல் தெலங்கானாவாக இன்று பிரிய உள்ள 10 மாவட்டங்களும் விசாலாந்திராவில் இணைக்கப்பட்டபோது அவை பிரிட்டிஷ் ஆட்சியில் நிஜாமின் சமஸ்தானமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. உருவாக உள்ள சீமாந்திராவில், குறிப்பாக ராயலசீமா பகுதிகளிலும் கூட முஸ்லிம்கள் இருந்தபோதும் அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள். நிஜாமின் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட தெலங்கானாவில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைக்கும் ஒரு பாலமாக உருது மொழி இருந்தது. இன்றும் கூட ஹைதராபாத்தில் உருதுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

1956ல் தெலங்கானா மாவட்டங்கள் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆந்திரப் பிரதேசமாக ஆக்கப்பட்டபோது, இனி தெலுங்கு மொழியே அரச மொழியாக இருக்கும் என்கிற நிலையில், அதன் காரணமாகவே 56,000 முஸ்லிம்கள் வேலை இழக்க நேரிட்டது என்றார் அந்த முஸ்லிம் இளைஞர். அதன் பின் உலகின் வளம் நிறந்த மொழிகளில் ஒன்றான உருது இங்கு வளர்ச்சியின்றித் தேங்கியது என்றார். மொழியின் தேக்கம், அம் மொழியைப் பேசுகிற மக்களின் தேக்கமாகவும் இருக்கும்தானே.

ஆனால், சமீப ஆண்டுகளில் தெலங்கானா போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் பெரிய அளவில் ஊடுருவியுள்ளதாக அறிகிறோமே என வினவியபோது அவரது முகம் சற்று வாட்டமுற்றது. “உண்மைதான். தனித் தெலங்கானா வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்ப முடியாதுதான், ஆனாலும் தனித் தெலங்கானா என்பது எங்களின் அடிப்படைக் கோரிக்கை. அதை நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார். சரி, நீங்கள் விசாலாந்திராவிலிருந்து பிரிந்துவிட்டால் அங்கு விடப்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டபோது, “அது பெரிய பிரச்சினையாக இருக்காது” என்றார் அவர். “அவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள். தவிரவும் ராயலசீமாவில் அவர்கள் கணிசமாக உள்ளனர்” என்றார்.

இம்முறை மாஓயிஸ்ட் நண்பர்கள் யாரையும் சந்திக்க இயலவில்லை. ஆனால் அவர்கள் தெலங்கானா போராட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, அதில் தீவிரமாகப் பங்கேற்றவர்களும் கூட. 2009ல் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி தனித் தெலங்கானா கோரிக்கையை மீண்டும் மேடை ஏற்றியபோது புரட்சிப் பாடகர் கத்தாரின் நேர்காணல் ஒன்று ‘ஓபன்’ இதழில் வெளி வந்தது, தெலங்கானா என் தாய், மற்றவை எல்லாம் அதற்குப் பின்தான் என அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. எப்படித் தெலங்கானா பகுதிகள் வளர்ச்சியற்றுப் போயுள்ளன என்பதையும், உலகமயம் என்பது நிலமையை இன்னும் எவ்வாறு மோசமாக்கியுள்ளது என்பதையும் அவர் அதில் கவனப்படுத்தி இருந்தார்.

பா.ஜ.கவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் மொழி வாரி மாநிலத்திற்கு எதிரிகள். மொழி மற்றும் தேசிய இன அடையாளங்கள் தாங்கள் கட்டமைக்க விரும்பும் இந்து அடையாளத்துடன் கூடிய அகண்ட பாரதக் கனவுக்கு இடையூறாக இருக்கும் எனது அவர்களின் சித்தாந்தம். எனவே ‘பாரதத்தை’ 72 நிர்வாக அலகுகளாகப் பிரிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. மொழிவாரியாக இந்தியக் கூட்டாட்சியைக் கட்டமைப்பது என்பது காங்கிரஸ், குறிப்பாக காந்தியின் கருத்துக்களில் ஒன்று. மாநிலங்கள் அவ்வாறு பிரிக்கப்படாத போதே காங்கிரஸ் கட்சி அவ்வாறே பிரிக்கப்பட்டு இயங்கியது. 1920 களிலேயே இக்கருத்தைக் காந்தி முன்வைத்தார்.

எனினும் மொழிவாரி மாநிலம் என்பதே முழுமையான ஒன்று, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்ககூடிய ஒன்று என்கிற நிலை அப்போதே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. குறிப்பாகத் தெலங்கானா மக்கள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினர். வெறும் தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் என்கிற அடிப்படையில் ஒரே குடைக்குக் கீழான அரசு சாத்தியமில்லை; குறை வளர்ச்சியுடைய தெலுங்கானாவும் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றுள்ள ராயலசீமா மற்றும் கடற்கரையோர ஆந்திராவுடனும் தாங்கள் இணைகப்பட்டால் இழப்பு தங்களுக்குத்தான் என்பதை உணர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

நேருவும் இதன் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். விசாலாந்திரா கோரிக்கை விரிவாக்க நோக்கமுடையது, அது தெலங்கானாவுக்கு நியாயம் அளிக்காது என்றார். எனினும் தெலுங்கு மொழி, இன அடையாளத்தை முன் வைத்து உண்ணாவிரதமிருந்து மடிந்த பொட்டி ஶ்ரீராமுலு உருவாக்கியிருந்த இன உணர்வு அரசியலுக்கு தெலங்கானாவை நேரு பலி கொடுக்க வேன்டியதாயிற்று.

உலகெங்கிலுமே தேசிய அரசு (Nation State) என்பது ஒரு சமீப காலத்திய கண்டுபிடிப்புத்தான். கொடும் வன்முறைகள், இன அழிப்புகள், சிறுபான்மையினர் ஒடுக்கப்படுதல் ஆகியவற்றின் ஊடாகவே தேச அரசுகள் உருவாயின. தேச அரசுகள் மற்றும் உள்நாட்டு மாநில அரசுகள் ஆகியவற்றில் எல்லைகள் வகுக்கப்படும்போது தொடர்புடைய மக்களின் விருப்புகளைக் காட்டிலும் அவ்வக்கால புவி அரசியல் சூழல்களே முக்கிய பங்கு வகித்துள்ளன. இது குறித்து நான் நிறைய எடுத்துக்காட்டுகளை என் முந்தைய கட்டுரைகளில் தந்துள்ளேன். ஒன்று மட்டும் இங்கே.:‘பஞ்சாபி சுபா’ இயக்கம் உருவாகி, அது தனி நாடு கோரிக்கையாக உருப்பெற்று விடுமோ என்கிற அச்சம் உருவானபோது காங்கிரஸ் அரசு பஞ்சாப் மாநிலத்தின் குன்றுப்பகுதிகளை ஏற்கனவே யூனியன் பிரதேசமாக் இருந்த ஹிமாச்சலத்துடன் இணைத்து ‘ஹிமாசல பிரதேஷ்’ மாநிலம் உருவாக்கப்பட்டது (1966). இப்படியான மாநிலம் அன்று உருவாக்கப்பட்டதற்கு மொழியோ, இனமோ அடிப்படையாக இல்லாமல் “குன்றுப் பகுதிகள்” என்கிற புவியியல் அடையாளம் அடிப்படையாக்கப்பட்டது.

1956ல் மாநிலச் சீரமைப்பு ஆணையம் மொழிவாரி அடிப்படையில் 14 மாநிலங்களை உருவாக்கியது. இன்று தெலங்கானாவையும் சேர்த்தால் 29 மாநிலங்களாகிவிட்டன. இன்னும் ஏழெட்டு மாநிலக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தை மட்டும் நான்காகப் பிரிக்க வேண்டும் என்கிறார் மாயாவதி. 1970களுக்குப் பின் அஸ்ஸாம், பீஹார் முதலான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மிசோராம், ஜார்கண்ட் முதலான மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோடு மொழியை காட்டிலும் இன அடையாளம் ஒரு குறிபிட்ட் அளவிற்கு அடிப்படையாகியது. இப்போது உருவாகியுள்ள தெலங்கானா உள்ளிட்ட்ட மாநிலக் கோரிக்கைகள் பிராந்திய, பொருளாதார, வளர்ச்சி மற்றும் பண்பாட்டுக் காரணிகளை முதன்மையாக வைத்து உருவாகியுள்ளன. உலகமயம், வெளிநாட்டு மூலதனம், கனிம வளம், நில வளம், நீர் வளம் ஆகியவற்றின் பலன்கள் அவ்வப்பகுதி மக்களுக்கே கிடைக்க வெண்டும் என்கிற அவாவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலே குறிப்பிட்ட புரட்சிப் பாடகர் கத்தாரின் பேட்டியில் அவர் இதைக் குறிப்பிடுகிறார். எவ்வாறு சந்திரபாபு நாயுடுவும் ராஜசேகர ரெட்டியும் தகவல் தொழில்நுட்பம், வளர்ச்சி, சைபர் நுட்பங்கள் என்கிற பெயர்களில் ஒப்பந்த விவசாயங்களையும் வெளிநாட்டு மூலதனங்களையும் ஊக்குவித்துத் தம் மக்களின் நில மற்றும் நீர் வளங்கள் சூறையாடப்பட்டன என்பதைச் சினம் பொங்கக் குறிப்பிடுகிறார்.

இன்றைய ஆந்திரமாநிலத்தில் தெலங்கானா பகுதியில்தான் பெரிய அளவில் கனிம வளங்கள் குவிந்துள்ளன. கிருஷ்ணா, கோதாவரி இரண்டு ஆற்று நீர்களிலும் சுமார் 70 சதம் தெலங்கானா வழியாகத்தான் பாய்கிறது. ஆனால் பலன்களெல்லாம் மற்ற இரு பகுதிகளுக்கும் என்பதை அவர்களால் பொறுக்க இயலவில்லை. 1956 இணைப்பு குறித்து பிடிக்காத மணமகளுக்குச் செய்விக்கப்பட்ட திருமணம் என்றார் நேரு. எந்த நேரத்திலும் விவாகரத்து செய்யும் உரிமையும் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1970களிலேயே தெலங்கானா மக்கள் விவாகரத்துக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினர். ஆனால் அந்தப் போராட்டங்களின் பலன்கள் தெலங்கானா மக்களைச் சென்றடையாமல் சென்னா ரெட்டி, நரசிம்மா ராவ் முதலானோர் தம்மை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டன,

ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் உதவி சபாநாயகராக இருந்த சந்திரசேகர ராவ் தொடர்ந்து அரசியல் ரீதியில் தான் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்துப் பதவி விலகி தனித் தெலன்கானா கோரிக்கையை முன்னெடுத்தார். 2009ல் அவர் தொடங்கிய அந்தப் புகழ்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது.. 1980 களின் பிற்பகுதி தொடங்கி உருவான அடையாள அரசியலின் வீரியமிக்க சாத்தியத்தை அவர் திறம்படப் பயன்படுத்தினார். அந்த உண்ணாவிரதம் பத்து நாள் நீடித்தது. ஆந்திரமாநிலம் செயலற்றுப் போனது. அன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனித் தெலங்கானாவை அறிவித்தார்.

இது ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் எதிர்வினைகளை உருவாக்கின. இணைப்பினால் பயன்களை அனுபவித்திருந்த ஆதிக்க சக்திகள் எரிவினையை எதிர்த்தன. எல்லா அரசியல் கட்சிகளும் இப்போது உடையக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்த எதிர் போராட்டங்களும் மிகக் கடுமையாக இருந்தபோதிலும் அது தெலங்கானாப் போராட்டம் அளவிற்கு வீரியம் பெறாமற் போனதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்களின் பக்கம் உண்மை இல்லை; நியாயங்கள் குறைவாகவே இருந்தன. இரண்டு, எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் பிளவுபட்டிருந்தன. சந்திரபாபு நாயுடுவை எடுத்துக் கொண்டால் அவரது கட்சியின் சாதித் தளமான கம்மா நாயுடு உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் தெலங்கானாவில் சுமார் 45 சத அளவு உள்ளனர். அவர்களது வெறுப்பை அவர் முழுமையாகச் சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரத்தில் ஒட்டு மொத்தமான விசாலாந்திராக் கோரிக்கையின் பின்புலமாக இருக்கும் வெலமா ரெட்டி உயர்சாதியினரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள அவருக்குத் தைரியம் கிடையாது. தவிரவும் தெலங்கானா பிரிவினையின் அரசியல் பலனை முழுமையாகக் காங்கிரஸ் அறுவடை செய்வதையும் அவர் ஏற்கவில்லை.

பா.ஜ.கவுக்கும் அதே நிலைதான். கொள்கையளவில் அது தெலங்கானா பிரிவினையை, பிரிவினையின் நியாயமான காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக ஏற்றுக் கொண்டபோதிலும், இந்தப் பெருமையைக் காங்கிரஸ் சுமந்து கொண்டு தெலங்கானாப் பகுதியில் உள்ள 19 நாடாளுமன்றத் தொகுதிகளையும் காங்கிரசும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதே அதன் நிலைபாடாக இருந்தது. நாடாளுமன்றத்தில் காங்கிரசின் தனித் தெலங்கானாச் சட்டத்தின் அவசர நிறைவேற்ற முயற்சிகளுக்கு முழுமையா ஆதரவளித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் காங்கிரசைக் குறைகூறி வழக்கமான அதன் இரட்டை நாக்கை அதி வேகமாகச் சுழற்றியது. தெலங்கானா பிரிவினை சரிதான், ஆனால் அதே நேரத்தில் சீமாந்திரா மக்களின் கவலைகளைப் போக்கக் காங்கிரசிடம் சரியான திட்டமில்லை என்றார் சுஷ்மா சுவராஜ்.

காங்கிரசைப் பொருத்தமட்டில் அதன் தனித் தெலங்கானா கோரிக்கையின் விளைவாக, அதன் முக்கிய பலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தில் தன் செல்வாக்கப் பெருமளவில் இழந்துள்ளது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அதைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தி இருந்தது. இன்று அதன் எஞ்சியுள்ள ஆறு எம்.பிக்களை அவர்களின் தெலங்கானா எதிர்ப்பிற்காக அது கட்சியை விட்டு விலக்க வேண்டி வந்துள்ளது. மாநில முதலமைசர் கிரண் ரெட்டி பதவி விலகி இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது, கிரண் தனிக் கட்சி தொடங்கப் போவதாக வெளி வந்த செய்தி என்ன ஆச்சு எனத் தெரியவில்லை. இந் நிலையில் தெலங்கானாவின் 19 நாடாளுமன்ரத் தொகுதிகளையுமாவது ஆது முழுமையாகக் கைக்கொள்ள முயற்சிக்கிறது. தலித் தெலங்கானா அறிவிக்கப்பட்டால் தனது ராஷ்ட்ரீய சமிதியைக் காங்கிரசுடன் இணைத்து விடுவதாக சந்திரசேகர ராவ் முன்பே வாக்களித்திருந்தார். சமீபத்திலும் அதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித் தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அவர் மறுபடி இது குறித்துப் பேசவில்லை. அவர் காங்கிரசுடன் தன் சமிதியை இணைக்காமல் தனி அடையாளத்துடன் தொடர்ந்தாலும் அவரது ஆதரவு காங்கிரசின் பக்கமே இருக்கும்.

இந்த அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றத்தில் காங்கிரஸ் சற்றுக் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டுள்ளது. எல்லோரும் கண்டிக்கத்தக்க சில முறை மீறல்களும் நடைபெற்றுள்ளன. இதுவரை உருவான எல்லா மாநிலச் சீரமைப்புகளும் அந்தந்த மாநிலச் சட்டமன்ற ஒப்புதல்களுடனேயே நடந்துள்ளன. முதல் முறையாக மாநிலச் சட்டமன்ற ஒப்புதலில்லாமல் ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை, இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளில் அக்கரை உள்ள அணைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனவும் சட்ட ரீதியாக நிற்காது எனவும் திருனாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறியுள்ளார்.

எனினும் நம் அரசியல் சட்டத்தில் மாநில ஒப்புதலுடன் மட்டுமே மாநிலச் சீரமைபுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உறுதிபடச் சொல்லவில்லை, மாநில ஒப்புதலுடன்தான் ஒரு மாநிலத்தின் எல்லைகள் மாற்றப்பட முடியும் என்பது ஒரு மிக அடிப்படையான கூட்டாட்சி நெறிமுறை என்றபோதிலும் அதை நமது அரசியல் சட்டத்தில் அன்று அதை வெளிப்படையாகப் பதிக்க இயலாததற்குச் சில நியாயங்கள் இருந்தன. பல்வேறு இன, மொழி, புவியியற் பிரச்சினைகள் மட்டுமின்றை சுமார் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் இந்தியக் கூட்டாட்சிக்குள் இணைக்க இப்படியான அரசியல் சட்ட நிபந்தனை தடையாக இருக்கும் என அன்றைய அரசியல் சட்ட அவை கருதியது. எனினும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இப்படியாகச் சட்டம் இயற்றவேண்டிய நிலைக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துக்கள் நியாயமானவையே. எதிர்காலத்தில் அப்படி மாநிலங்களின் ஒப்புதலின்றி மாநிலச் சீரமைப்புகள் நடைபெறாது என்கிற ரீதியில் வெளிப்படையாக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. “இது மாநில விருப்பத்தை மத்திய அரசு புறக்கணிக்க வழிவகுக்கிறது எனக் குர்றஞ்சாட்டப் படுகிறது. இந்தக் குர்றச்சாட்டை ஏற்க வேண்டியதுதான். ஆனால் இந்தக் காரணத்திற்காக நமது அரசியல் சட்டத்தைக் கண்டிப்பத்ற்கு முன் சில விடயங்களை மனங்கொள்ள வேண்டும். முதலில்,மத்திய அரசுக்கு வழங்கப்படும் இந்த மேலாதிக்க அதிகாரத்தை நமது அரசியல் சட்டத்தின் இயல்பான நடைமுறையாகக் (normal feature of the constitution) கொள்ளக் கூடாடது. இதன் பயன்பாடு மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே (confined to emergencies only) உரித்தானது” என்பது அவர் அரசியல் சட்ட அவையில் அளித்த வாக்குறுதி (நவம்பர் 17, 1948).

அரசியல் சட்டப் பிரிவு ஒன்று குறித்து இப்படியான சர்ச்சிகளும் பிரச்சினைகளும் எழும்போது, இறுதி முடிவு எடுக்க்கையில் அரசியல் சட்ட விவாதங்கள் மற்றும் அங்கு அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சட்ட வாசகங்களின் தொனி தீர்மானிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறை. தவிரவும் கேசவானந்த பாரதி வழக்கில் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் திருத்த இயலாது என உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள புகழ் பெற்ற தீர்ப்பும் உள்ளது.

எப்படியாயினும் தனித் தெலங்கானா என்பது ஒரு காலத்தின் கட்டாயம். ஒரு அறம் சார்ந்த கோரிக்கை. காங்கிரசுக்கு அதை நிறைவேற்ற வேண்டிய வரலாற்று ரீதியான கடப்பாடும் இருந்தது. எனினும் மாநிலத்தைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசே மாநிலங்களைப் பாதிக்கும் சட்டங்களை இயற்ற இது ஒரு முன்மாதிரியாக அமைந்து விடக் கூடாது. இன்று ஏற்பட்டுள்ள புவி அரசியற் சூழலில் ஒரு புதிய மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. அப்படி நேரும்போது அது சரியான நெறிமுறைகளுடன் உருவாக்கப்பட வேண்டும் அவசர கதியில், கடும் அமளிகளுக்கு மத்தியில், வெறும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட தெலங்கானா மாநில உருவாக்கச் சட்டம் இயற்றப்பட்ட நெறிமுறை ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.

இறுதியாக ஒன்று:

இன்று தனித் தெலங்கானா உருவாகிவிட்டது. சீமாந்திராக்காரர்கள் இதச் செரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரச்சினைதான் இன்று இன்று இரு தரப்பாருக்கும் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தின் இன்றைய வளர்ச்சியில் சீமாந்திராக்காரர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. 1995 -2004 காலகட்டத்தில் சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் என்கிற பாரம்பரியமான நகரம் சைபராபாத் என அழைக்கக் கூடிய அளவிற்கு நவீனப்படுத்தப் பட்டது. கூகிள், மைக்ரோசாஃப்ட், டெல்ல், ஆரகிள், டிசிஎஸ மற்றும் டிலோய்ட், அக்சென்சர், பான்க் ஆஃப் அமெரிகா, ஃபேஸ்புக், அமேசான், வொல்வோ கார் என எல்லாப் பெறு நிறுவனங்களும் அங்கு மையம் கொண்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகம் தயாரிக்கப்படும் தெலுங்கு சினிமாவின் உற்பத்தி மையமாகவும் ஹைதராபாத்தான் உள்ளது. இவற்றின் விளைவான உயர் ஊதிய மேற்தட்டு வர்க்கங்களுக்கான அடுக்கு மாடி சொகுசுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என இன்று இந்த 650 சதுர கி.மீ பரப்பு நவீன மெகாசிடி வேலை தேடுவோரின் சொர்க்க பூமியாக உள்ளது. இதை இழக்க சீமாந்திராக்காரர்கள் தயாராக இல்லை. தங்களின் பாரம்பரிய நகரை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க தெலங்கானாக்காரர்களும் தயாராக இல்லை.

கடந்த நான்காண்டு கால உறுதியின்மை ஹைதராபாத்தின் இவ்வளர்ச்சியைச் சற்றுப் பாதித்துள்ளது. ரியல் எஸ்டேட் விலைகள் சற்றுச் சரிந்துள்ளது. புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடுகளைச் செய்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைக்கு பத்து ஆண்டுகளுக்கு உருவாகப்போகும் இரு மாநிலங்களுக்குமே ஹைதராபாத் தலைநகரமாக இருக்க்கும் எனவும் அதற்குள் விஜயவாடா போன்ற ஏதேனும் ஒரு சீமாந்திரா நகரம் தலைநகராக வளர்த்தெடுக்கப்படும் எனவும் உருவாகியுள்ள சட்ட வரைவு கூறுகிறது. குறிப்பாக ஒரு நகரத்தை மட்டும் வளர்த்தெடுக்காமல் ஒன்றைத் தலை நகரமாகவும், மற்ற சில நகரங்களைப் பெரிய அளவிலும் வளர்த்தெடுக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும்.

ஆனால் ஹைதராபாத்திற்கு சீமாந்திராவுடன் நேரடியான நிலவியல் தொடர்பு இல்லை. தெலங்கானா வழியாகத்தான் அவர்கள் ஹைதராபாத்திற்குள் நுழைய வேண்டும். இதெல்லாம் என்னமாதிரியான சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தப் பத்தாண்டுகளுக்குப் பின் பெரிய பிரச்சினை இல்லாமல் ஹைதராபாத்தைச் சீமாந்திராக்காரர்கள் விட்டு விலகினால் சரி.

Tail Piece: இத்தாலிய மருமகள் ‘தெலங்கானா தள்ளி’யான கதை: பிடிவாதமாக நின்று தெலங்கானாவைச் சாத்தியமாக்கிய சோனியா காந்தி இன்று ‘தெலங்கானா தள்ளி’யாக (தெலங்கானா தாய்) உருப்பெற்றுள்ளார். மாமியாருக்கு அடுத்தபடியாக இன்று இந்த மருமகளுக்குக் கோவில் கட்டப்படுகிறது. ஹைதராபாத் – பெங்களூர் சாலையில், தலைநகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள நந்திகாமா என்னுமிடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார் மருத்துவரும் தலித் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஷங்கர் ராவ். தனது சொந்த நிலத்தில் 9 சதுர கி.மீ பரப்பில் அமைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு அவர் ‘சோனியா காந்தி சாந்திவனம்’ என்று பெயரிட்டுள்ளார். இதில் 9 அடி உயரம், 500 கிலோ எடையில் தெலங்கானா தள்ளியின் உருவச் சிலை வெண்கலத்தில் அமைக்கப்படுகிறது இனி சார்மினாரோடு தெலங்கானாவின் முக்கிய டூரிச மையங்களில் இந்தச் சோனியா காந்தி சாந்திவனமும் ஒன்றாகப் போகிறது. ஒரு பக்கம் இது கிறுக்குத் தனமான போதிலும், இருக்கட்டும் மோடி முதல் நம்மூர் சின்ன மோடி வைகோ வரை இத்தாலிய சோனியா என அவரை ‘அந்நிய சக்தி’யாக கரித்துக் கொட்டிய இந்துத்துவ சக்திகள் வயிறெரியட்டும். என்ன வைகோவையும் இந்துத்துவ சக்தி என்று சொல்கிறீர்களே என்கிறீர்களா. தெரிந்துதான் சொல்கிறேன். பெரிய தப்பொன்றும் இல்லை.