செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்  

{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது}

நரேந்திர மோடி அரசு  எந்தவிதமான அற மதிப்பீடுகளும் இல்லாத ஒரு மதவாத அரசு என அறிந்த பலரும் கூட அது ஒரு திறமையற்ற அரசு என்பதைப் புரிந்திருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது மத்தியதர வர்க்கம் இந்த அரசைத்தான் ரொம்பவும் திறமையான அரசு எனவும் இதன் மூலமே இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகப் போகிறது எனவும் நம்பிக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகள் எத்தனை அபத்தம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் இன்று இந்தப் பண மதிப்பீட்டு நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களுக்கு, குறிப்பாக அடித்தள மக்களுக்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ள இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரே நல்ல விளைவு இதுதான்.

யோசித்துப் பார்த்தால் எல்லா எதேச்சிகார அரசுகளுமே இன்னொரு பக்கம் முட்டாள்தனமான அரசாக இருப்பது விளங்கும். ஒரு ஜனநாயக அரசின் சிறப்பே எந்தப் பிரச்சினையிலும் கூட்டு முடிவு எடுப்பது என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது? நிதி அமைச்சருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கூடத் தெரியாமல் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்து அதை மறுக்கவில்லை அசடு வழிய அமர்ந்திருந்தார். ஒரு ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவு அப்போது உருப்பெற்றிருக்காது. நரேந்திரமோடி, அமித் ஷா முதலான ஒரு சில நபர்கள் எடுத்த இந்த எதேச்சதிகார முடிவு இன்று 130 கோடி மக்களையும் பாதித்துள்லது.

நிதி அமைச்சருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்தான் தெரியவில்லையே ஒழிய யாருக்கெல்லாம் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அறிவிப்பு வருவதற்கு முதல்நாள் மே.வங்க பா.ஜக அலுவலகத்திலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உயர்மதிப்பு நோட்டுக்கள் வங்கியில் செலுத்தப்பட்ட கதை ஊரறியும். தவிரவும் இந்த ஏப்ரலில் அதிக அளவில் 500 மற்றும் 1000 தவிர்த்த சிறிய அளவிலான நோட்டுகள் தங்கள் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளன என SBI வங்கி தெரிவித்துள்ளது. இப்படியான நடவடிக்கை எடுக்கப்போவது குறித்த செய்திகள் பல இதழ்களிலும் கூட வெளியாகியிருந்தன.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டை இப்போது  அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்றெல்லாம் சொல்லத் துணிகிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சுதநெதிரத்திற்கு அப்பால் இன்று பொருளாதாரச் சுதந்திரத்தையும் இன்று கேலிக் கூத்தாக்கியுள்ளது. நான் என்ன வாங்குகிறேன், எப்படி வாங்குகிறேன், எதைச் சாப்பிடுகிறேன், எப்படி என் பணத்தைச் செலவழிக்கிறேன் என்பதெல்லாம் என் சொந்தப் பிரச்சினை. இதில் தலையிட அரசுக்கு அருகதையும் இல்லை; அனுமதியும் இல்லை. இன்று மோடி அரசு நம் மீது திணிக்கும் இந்த எலெக்ரானிக் பணப் பரிவர்த்தனை என்பது நமது இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் அரசின் கண்காணிப்பிற்குள் கொண்டு வருகிறது. இப்படிச் செய்ய அரசுக்கு உரிமையில்லை. அது மாத்திரமல்ல, இப்படியான எலெக்ட்ரானிக் பரிவர்த்தனையின் ஊடாக ஒவ்வொரு முறையும் நாம் அதற்கெனப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்மூலம் நமக்குச் சொந்தமான பணத்தின் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்று அவர்கள் கதைப்பதெல்லாம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான்.  அறிவிக்கப்பட்ட இந்த நோக்கங்களுக்கும்  இந்த நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பார்ப்போம்.

1.500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க இயலாது. ஏனெனில் இன்று மொத்தமுள்ள கருப்புப் பண்த்தில் பணமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் 5 முதல் 6 சதம்தான். கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகள் மூலம் வெளி வந்துள்ள உணமை இது. மற்றவை தங்கமாகவும், நகர்ப்புற நிலங்களாகவும், அந்நிய நாடுகளில் வாங்கப்படும் சொத்துக்களாகவும் அந்நியச் செலாவணியாகவும்தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அவற்றையெல்லாம் வெளிக் கொணர முடியாது.

2.இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படும் என்கிற பிரச்சாரத்திலும் பொருளில்லை. கொல்கத்தாவில் உள்ள ‘இந்தியப் புள்ளியியல் நிறுவன’ ஆய்வு ஒன்றின்படி இன்று புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய்தான். அதாவது இன்று செல்லாதவை என ஆக்கப்பட்டுள்ள நோட்டுகளில் வெறும் 0.028 சதம்தான் கள்ள நோட்டுகள். இதற்காக 14 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாததாக்கி மக்களைத் தெருவில் அல்லாட வைப்பது மாதிரி அநீதி, குரூரம், அபத்தம் ஏதும் இருக்க முடியுமா? இது ஏதோ மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையை நினைவூட்டவில்லையா? தவிரவும் இந்த நோட்டுக்களைச் செல்லாததாக்கிவிட்டுப் புதிய நோட்டுக்களை அச்சிட ஆகும் செலவு 12,000 கோடி முதல் 15,000 கோடி ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

3.தொடக்கத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை குறித்த செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை.

4.இருந்த கொஞ்ச நஞ்சக் கருப்புப் பணத்தையும் வெள்ளையாக்கப் பல வழிமுறைகள் இருந்தன. பழைய தேதியிட்டு தங்கம் வாங்குவது அதில் ஒன்று. கருப்புப் பணத்தை  மாற்றுவதற்கான கருப்புச் சந்தைகளும் உருவாகிச் சுறு சுறுப்பாக வேலைகள் நடந்தன.

5.கருப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளைத் தடுக்கும் முயற்சி இணையாக மேற்கொள்ளப்படவில்லை. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) கருப்புப் பணத்தின் மதிப்பு 20 சதம். எனவே ஆண்டுதோறும் உற்பத்தி ஆகும் கருப்புப் பணம் 30 லட்சம் கோடி. மொத்தமாகப் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு வெறும் 17.77 லட்சம் கோடிதான். இதில் 86 சதம் 500 / 1000 ரூ நோட்டுகளாக உள்ளன. அவைதான் இன்று செல்லாததாக்கப்பட்டன. ஆக இவ்வாறு செல்லாததாக்கப்பட்ட அத்தனை பணமுமே கருப்புப் பணம்தான் என்றாலும் கூட இது ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தியாகும் கருப்புப் பணத்தில் பாதி மட்டுமே. இந்தக் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க எந்தத் திட்டமும் இல்லை.

6.விளம்பரத்துக்காக மோடி அரசு செய்த ஆரவாரங்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்தின.  வாக்குறுதி அளிக்கப்பட்ட இந்த நோட்டுகளை செல்லாததாக்கியது மட்டுமின்றி அடுத்த சிலவாரங்களுக்குள் பணம் எடுப்பது, நோட்டுகளை மாற்றுவது அல்லது வைப்பில் செலுத்துவது தொடர்பாக சுமார் 59 ஆணைகளை அரசு இட்டுள்ளது. இவற்றில் பல சட்ட விரோத ஆணைகளாகவும் உள்ளன. ஆனால் நீதிமன்றத்திற்குச் சென்றால் இப்படித் தொடர்ச்சியான ஆணைகள், ஒன்றை ரத்து செய்து வெளியிடப்பட்ட இன்னொரு ஆணை என ஏகப்பட்டவை இருப்பதால், நீதிமன்றங்களுக்கும் சட்ட விரோத ஆணைகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன

7.எந்தத் தயாரிப்பும், பிரச்சினைகள் குறித்த முன் ஊகங்களும் இல்லாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் பொது மக்கள் சந்தித்த துயரங்களை விளக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கிக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் விளைவாக அது போதிய அளவு 100 / 50 ரூ நோட்டுகளை தயாராக வைத்திருக்கவில்லை. புதிய நோட்டுகளும் போதிய அளவு உடனடியாக அச்சிட முடியவில்லை. முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் சௌமித்ரா சவுத்ரி, “புதிய நோட்டுகள் அச்சடிக்க சுமார் ஆறு மாதங்கள், அதாவது. 2017 மே வரை ஆகும்” என்கிறார். புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளைவிட அளவில் சிறியதாக இருந்ததால் ATM கள் அனைத்தும் மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலைக்குள்ளாகின. இது பொருட்செலவு மட்டுமின்றி உடனடியாக ATM களும் வேலை செய்யாமல் போய் மக்கள் சந்தித்த அவதி சொல்லி மாளாது. அச்சிடப்பட்ட புதிய நோட்டுக்கள் தொழில்நுட்ப ரீதியாகபல நுணுக்கங்களுடன் தயாராவதாகவும் இனி யாரும் கணக்குக் காட்டாமல் அதிக அளவு இந்த நோட்டுகளைச் சேமித்து வைத்திருந்தால் தானாகவே அரசுக்கு அது தெரியும் எனவும் ‘ஜீபூம்பா’ கதைகளை எல்லாம் அரசு பரப்பி வந்தபோதும் வந்த நோட்டுக்கள் ஏற்கனவே இருந்தவற்றைக் காட்டிலும் தரம் குறைந்தவையாகவும், எந்தப் புதிய தொழில்நுட்பங்களும், பாதுகாப்புகளும் இல்லாதவையாகவுமே உள்ளன. எளிதாக இவற்றைக் கள்ள நோட்டுகளாக்க முடியும் என்பதோடு 2000 ரூ நோட்டுக்களை இப்படிக் கள்ள நோட்டுகள் ஆக்கினால் அப்படிச் செய்பவர்களுக்கு முன்னைக் காட்டிலும் கூடுதல் லாபமும் ஏற்படும்.

8.உயர் மதிப்பு நோட்டுக்கள் கருப்புப் பணத்தைச் சேமித்து வைக்க இலகுவாக உள்ளது எனச் சொல்லி 500 / 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்துப் பதிலாக 2000 ரூ நோட்டுக்களை அச்சிடும் முட்டாள்தனத்திற்கு இன்றுவரை அரசிடமிருந்து எந்த சமாதானமும் சொல்லப்படவில்லை. பணப் பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்றெல்லாம் ஆரவாரமாகப் பீற்றிக் கொண்டாலும் அதற்கான உள்கட்டுமானங்கள் ஏதும் இங்கு இல்லை. 30 கோடி மக்கள் இங்கே வங்கிக் கண்க்கு தொடங்குவதற்கான ஆதார ஆவணங்கள் இல்லாதோர். இன்டெர்நெட் தொடர்புகள், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லாத ஏராளமான மக்களைக் கொண்ட நாடு இது. ATM மற்றும் வங்கி வசதிகள் எல்லாம் பெருநகரங்களில்தான் போதிய அளவு இல்லை. இந்நிலையில் மீண்டும் உயர் மதிப்புள்ள நோட்டுகளைத்தான் அவர்கள் அச்சிட வேண்டி உள்ளது. இதையெல்லாம் முன்கூட்டிச் சிந்திக்கும் அறிவில்லாத ஒரு அரசு நமக்கு வாய்த்துள்ளது.

9.1000 ரூபாய்க்குப் பதிலாக 2000 ரூ நோட்டுகளை அச்சிட்டுவிட்டால் மட்டும் இங்கு எப்படிப் பணப் பரிவர்த்தனை இல்லாத பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும்? இங்குள்ள வங்கி வசதி வெறும் 40 சத அளவுதான். 22 சத மக்கள்தான் இன்டெர்னெட் வசதி உள்ளவர்கள். 19 சத மக்கள் மின்சார வசதிகூட இல்லாதவர்கள். 14 மில்லியன் வணிகர்களில் 1.2 மில்லியன் வணிகர்கள்தான் point of sale வசதி உடையவர்கள். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்பது எளிய மக்களின் மீது சுமத்தப்படும் இன்னொரு அநீதி.

10.இந்த முட்டாள்தனமான அவசரக் குடுக்கை நடவடிக்கை மக்களுக்குப் பெரிய அளவில் துயரங்களை ஏற்படுத்தியுள்ளதோடன்றி தொழில் துறையையும் சகல மட்டங்களிலும் பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் சொகுசுப் பொருட்கள் விற்பனை 30 முதல் 60 சதம் வீழ்ச்சி. மொத்தத்தில் GDP சரிவு 1 முதல் 2 சதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் வணிகம் வீழ்ந்து சிறு வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது நிக்கேய் இந்தியா உற்பத்திக் கணக்கீட்டுப் புள்ளி (The Nikkei India Manufacturing PMI) அக்டோபரில் 54.4 ஆக இருந்தது நவம்பரில் 52.3 ஆகக் குறைந்துள்ளது.

“தொலை நோக்கில் நல்ல பலன்கள் கிடைக்கும்”  என்பதுதான் இதுவரை மோடி அரசின் ஒரே பதிலாக வெளிப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் அன்று பொருளியல் வல்லுனர் கீன்சை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல தொலை நோக்கில் நாம் எல்லோருமே செத்துப் போய் விடுவோம்.

.

பண மதிப்பு நீக்கம் பற்றி  இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமார்த்ய சென்:

“ரூபாய் நோட்டு என்கிற காகிதம் ஒரு ‘பிராமிசரி நோட்’, அதாவது அந்தக் காகிதத்தை ஒப்படைத்தால் அதில் வாக்களிக்கப்பட்ட மதிப்புள்ள தொகை எந்தக் கணமும் திருப்பித் தரப்படும் என்பதுதான். திடீரேன ஒரு அரசு தான் அளித்த அந்த வாக்குறுதியை மீறுவதாக அறிவித்தால் அது ஒரு கொடூரமான எதேச்சாதிகார அரசாகத்தான் இருக்க இயலும். யாரோ சில கோணல் பேர்வழிகள் கருப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளார்கள் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்று மக்கள் அனைவரையும் கோணல் பேர்வழிகள் என்பதாக எதிர்கொள்கிறது. அவர்கள் கஷ்டத்திற்கு மட்டுமல்ல அவமானத்துக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து நம் மக்களின் வாழ்வை வளமையாக்கப் போகிறேன் என்கிற தேர்தல் நேரத்து வாக்குறுதியைப் போலவே இதுவும் ஒரு பம்மாத்துதான்.”

முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் :

ஒரு காலத்தில் பணமதிப்பீட்டு நீக்கம் என்பது கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் உத்தியாக இருந்திருக்கலாம். இப்போது கருப்புப் பணத்தை யாரும் மொத்தமாக பணமாக வைப்பதில்லை. அதைப் பலவாறாகப் பிரித்து வைக்கின்றனர். பெரிய அளவு தங்கமாகப் பதுக்கி வைக்கப்படுகிறது. இதை வெளிக் கொண்ர்வது கடினம். நமது நாட்டில் அதிகபட்சமான வரி என்பது மொத்த வருமானத்தில் 33 சதம்தான். தொழில் வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் வரி இதைவிட அதிகம். அமெரிக்காவில் இது 39 சதம். விற்பனை வரியையும் சேர்த்தால் இது 50 சதத்தை எட்டும்திப்போது உள்ளதைக் காட்டிலும் இன்னும் திறமையான வரி வசூல் முறைதான் கருப்புப் பணம் உற்பத்தியாவதைத் தடுக்க சரியான வழி. 

முன்னாள் அமெரிக்க நிதித்துறைச் செயலர் லாரன்ஸ் எச். சம்மெர்ஸ் (Lawrence H. Summers)

பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை. ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி வழங்கல் தொடர்பான ஒரு அறம். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். (அதேபோல இன்று மோடி அரசு உருவாக்கியுள்ள) இந்தக் குழப்பத்தின் ஊடாக கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு அறக்கேடு.

The Guardian:

மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண மதிப்பு நீக்கத்தின் விளைவாக 2 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரம் சுருங்கும். ஊழலில் சம்பாதித்த பணத்தை ஷேர்களாகவும், ரியல் எஸ்டேட்டிலும், தங்கமாகவும் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள் இல்லாத பெரும்பாலான ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The New York Times :

இந்தியாவில் கோலோச்சுவது நேரடியான பணப் பரிவர்த்தனைதான். சுமார் 78 சதப் பரிவர்த்தனைகள் நேரடியான பணப் பரிவர்த்தனையின் ஊடாகத்தான் நடைபெறுகிறது… இப்போது மோடி அரசு புதிய 500, 2000 ரூ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பணப் பரிவர்த்தனையின் ஊடான பொருளாதார ஊழல்கள் இனி இந்தப் புதிய நோட்டுக்களின் ஊடாக தொடரப் போகிறது.

Al Jazeera : இந்த நடவடிக்கை ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மூலமாகவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த (நடுத்தர) மக்களும் கூட இன்று வங்கிகள் முன்பும் ATM கள் முன்பும் குவிந்துள்ளனர். .