டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்

{ஆக 2017  ‘புத்தகம் பேசுது’ இதழில் நூல் விமர்சனமாக வெளி வந்துள்ள என் விரிவான கட்டுரை }

1.

நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேத்தி, “என்ன தாத்தா கடைசிக் காலத்திலே பைபிள் படிக்க ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேலி செய்கிறாள். இது வரை நான் பைபிள் படித்து அவள் பார்த்ததில்லை. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனானாலும் என் தந்தை அந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும் நம்பிக்கையுடன் வாழ்ந்த என் தாயின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதும் இல்லை. விசேட நாட்களில் என் அம்மா மாதா கோவிலுக்குச் செல்வதிலும் குறைந்த் பட்ச மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவர் தலையிட்டதில்லை.

என் அப்பாவின் தூண்டுதலால் பல முக்கிய இலக்கிய ஆளுமைகளின் புனைவுகள், மார்க்ஸ், காந்தி, நேரு ஆகியோரின் அரசியல் எழுத்துக்கள் எனப் படித்துத் திரிந்த காலத்திலும், அதற்குப் பின் நானே எழுதத் தொடங்கிய இந்த முப்பது ஆண்டுகளிலும் கூட எனக்கு பைபிளைப் படிக்கும் விருப்பு ஏற்பட்டதில்லை. சில முக்கியமான தருணங்களில, குறிப்பாக ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்கிற கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது ஏசுவின் மலைப் பிரசங்கத்தை எடுத்து வாசித்தது என்பது போன்ற சந்தர்ப்பங்கள் தவிர விவிலியத்தை முழுமையாக வாசிக்க முனைந்ததில்லை.

இப்போது அவ்வளவு ஆர்வமாக என்னை விவிலியத்தைப் புரட்டத் தூண்டியது வழிப்போக்கன் மொழியாக்கியுள்ள டால்ஸ்டாயின் ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ நூல்தான். இந்த நூலை வாசித்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அவர், ‘அன்னா கரீனா’வையும், ‘புத்துயிர்ப்பை’யும் எனக்கு வாங்கித் தந்து, “பெரிசா இருக்கேன்னு மலைக்காதே. தொடங்கும்போது போரடிக்குதேன்னும் நினைக்காதே. முழுசும் படிச்சுப் பாரு. இந்தப் புத்தகங்கள் உனக்கு நிறைய விஷயத்தைக் கத்துக் குடுக்கும்..” என்று சொன்னதோடு நிற்கவில்லை. “உனக்குத் தெரியுமா காந்தியையே மாத்துன புத்தகங்கள்டா … பைபிளைப் பத்திக் கூட டால்ஸ்டாய் ஒரு புத்தகம் எழுதி இருக்காராம். தமிழ்ல அது எனக்குக் கிடைக்கல. எங்காவது கிடைச்சா அதையும் படிச்சுப்பாரு. இங்கிலீஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்கும் பழக்கம் வரும்போது நிச்சயம் அதைத் தேடிப் படி..” என்று சொன்ன காட்சி என் நினைவுக்கு வந்தது.

நான் அப்பா சொன்ன அந்த டால்ஸ்டாயின் விவிலியத்தை pdf ல் தரவிரக்கம் செய்தபோது அவர் இறந்து கால் நூற்றாண்டாகி இருந்தது. அபோதும் கூட என் வாசிப்புஇல் அது முன்னுரிமை பெறவில்லை. அதன் முக்கியத்துவத்தை நான் உணரவில்லை.

இப்படியான ஒரு பின்னணியில்தான் சென்ற ஆறு மாதங்களுக்கு முன் ‘பாரதி புத்தகாலயத்தில்’ ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்கிற இந்தத் தமிழாக்கத்தைக் கண்டபோது அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் இந்த மொழியாக்கத்தில் ஆறாம் அத்தியாயத்தைப் படிக்கும்போது எனக்கொரு அய்யம் வந்தது. இதென்ன? இவை எல்லாம் திருமறைகள் என திருச்சபையால் வெளியிடப்பட்டுள்ள சுவிசேஷங்களில் உள்ளவைதானா? இல்லை டால்ஸ்டாயின் கற்பனையா? சுவிசேஷங்களின் சுருக்கம் என்றால் இவர் எதைச் சுருக்கியுள்ளார்? – என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நூலின் ஆங்கில, தமிழ் இரு வடிவங்களிலும் உள்ள இறுதி இணைப்பில் டால்ஸ்டாயின் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு முக்கிய வசனமும், மத்தேயு, லூக்கா, யோவான், மார்க்கு முதலான  திருமறைகளில் எங்கெங்கு காணப்படுகின்றன என்பது துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளதைக் கண்டேன்.

திருமறைகளில் உள்ளவற்றைத்தான் மீண்டும் எழுதுகிறார் என்றால் பின் இங்கு டால்ஸ்டாய் என்னதான் புதிதாகச் செய்துள்ளார்?

இதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் நான் இப்போது என் பேத்தி கேலி செய்கிற அளவுக்கு கிறிஸ்தவர்களின் ஆகப் புனிதமான திருவிவிலியத்தைப் புரட்டிக் கொண்டிருப்பது.

2

டால்ஸ்டாய் சுருக்கித் தரும் சுவிசேஷங்களில் இருப்பவை அனைத்தும் அப்படியே திருமறை என இதுகாறும் அறியப்பட்ட ‘புதிய ஏற்பாட்டில்’ உள்ளவைதான். கிட்டத் தட்ட அதே சொற்களில்தான் அவை அமைந்துள்ளன. அது மட்டுமல்ல அதே கால ஒழுங்குடன்தான் அமைந்துள்ளன. யோசேப்புக்கும் மரியாளுக்கும் திருமணம். ஏசு பிறக்கிறார். பன்னிரண்டு வயதில் பெற்றோருடன் ஒரு திருவிழாவிற்குச் சென்று வரும்போது அவர் காணாமல் போகிறார். மூன்றாம் நாள் அவர் எருசலேமில் ஒரு கோவிலில் மூத்தோர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறார். அளவற்ற ஞானமுடையவனாக வளரும் அம் மகன் தன் முப்பதாம் வயதில் பரலோக ராச்சியம் பற்றிப் பேசிக்கொண்டும், அதனால் ஈர்க்கப்பட்டு வருவோருக்குத் திருமுழுக்கு அளித்துக்கொண்டும் இருக்கிற தீர்க்கதரிசி யோவானைத் தேடிச் சென்று அவரிடம் திருமுழுக்குப் பெறுகிறார். பின் அவர் பாலைவனத்தில் நீரும் உணவும் இன்றி நாற்பது நாள் நோன்பிருக்கிறார். அப்போதுதான் அவர் உயிர் வாழ்வின் இரு சாத்தியங்களை உணர்கிறார். ஆவியின் வாழ்வுக்கும் மாமிசத்தின் வாழ்விற்கும் உள்ள போராட்டத்தில் மாமிச வாழ்வை வெல்கிறார்…. இப்படிச் செல்லும் அவரது வரலாறு திருச்சபையின் விவிலியத்தில் காணப்பட்டவாறே நகர்ந்து அதே முக்கிய திருப்பங்களுடன் இறுதியில் அவர் மத மற்றும் அரச அதிகாரங்களால் கல்வாரி மலையில் கொல்கதா என்னுமிடத்தில் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவதில் சட்டென்று முடிகிறது.

இயேசுவின் வழக்கமான வரலாறுதான். எனில் டால்ஸ்டாய் செய்த புதுமைதான் என்ன? ஏன் அதை ஏற்கவே இயலாது எனத் திருச்சபை செய்தது? ருஷ்ய ஜார் அரசும் அதற்கு இசைந்தது?

3

டால்ஸ்டாய்க்கு 1800 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து சிலுவையில் ஏற்றப்பட்ட ஏசுவை அன்றைய மதமும் அரசும் எந்தக் காரணங்களுக்காக அதைச் செய்ததோ அதே காரணங்களுக்காகத்தான் இன்றைய திருச்சபையும் ஜார் அரசும் அவரை வெறுத்தன. அவரது சுவிசேஷமும் கருத்துக்களும் தடை செய்யப்பட்டன.

முதலில் சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அளவிற்கு ஏசு என்ன செய்தார் எனப் பார்ப்போம். இறைவன் மனிதர்களின் ஆவிக்குரிய வாழ்விற்கான அறக்கட்டளைகளை ஏற்கனவே தந்திருந்தார். அன்றைய மதமும் அரசும் அவற்றைக் கறைப் படுத்தி மக்களை அத்தகைய அற வாழ்விலிருந்து அகற்றி இருந்தன. ஏசுவின் பணி அந்தக் கறைகளை எல்லாம் நீக்கி மீண்டும் மனிதர்களின் ஆவிக்குரிய வாழ்விற்கான கடளைகளைத் தந்தது என்பதுதான். ஆனால் மக்களை மாமிசத்திற்குரிய வாழ்வில் அமிழ்த்து வைத்திருப்பதே தங்களின் அதிகாரத்திற்கான வழி என்பதை உணர்ந்திருந்த அரசும் மதமும் ஏசுவின் செயல்களை ஏற்கவில்லை. அதைப் பேராபத்தாகக் கருதின. அதன் விளைவே அவர் சிலுவையில் அறையப்படது.

ஏசுவுக்குப் பின் உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தைத் துவங்கியபோதும் விரைவில், குறிப்பாக மன்னன் கான்ஸ்டான்டின் கிறிஸ்தவத்தை ஏற்ற பின்னால், ஏசு எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ அவற்றை எல்லாம் மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தது. மனிதர்கள் ஆவிக்குரிய அற வாழ்விலிருந்து விலகி மாமிசத்திற்குரிய பொருளாயத வாழ்வுக்குரியவர்களாக இருப்பதையே மத அதிகாரமும் அரசதிகாரமும் விரும்பின. தமது அதிகாரங்கள் நிலை கொள்ள அதுவே வழி என்பதை அவை புரிந்து கொண்டன. மக்களை ஏசு காட்டிய வழியிலிருந்து விலக்கி மீண்டும் பழைய வாழ்வை நோக்கி இயக்குவதற்கு மீண்டும் இயற்கை அதீத கற்பனைகளையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் புகுத்தி ஏசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவனின் கட்டளைகளை மீண்டும் கறைப்படுத்தி இருந்தன என்பதனைக் கண்டு கொண்ட டால்ஸ்டாய் மீண்டும் ஏசு 1800 ஆண்டுகளுக்கு முன் செய்த திருப்பணியை இப்போது மேற்கொள்ள முனைகிறார். ஏசுவின் வரலாறாகவும், உரையாடல்களாகவும் பிந்தைய கிறிஸ்தவ மதத்தால் முன்வைக்கப்பட்ட புனித நூல்களை ஆழமாக வாசித்து, புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்தக் கறைகளை நீக்கித் தூய்மை செய்து, மீண்டும் அவற்றைக் கிறிஸ்துவிற்கு உரியதாக ஆக்க முயல்கிறார் டால்ஸ்டாய். அவற்றிலுள்ள இயற்கை அதீதக் கூறுகளை (supernatural elements), மிகைப்படுத்தல்களை, மகத்துவங்களை, புனிதங்களை, சடங்குகளை எல்லாம் களைந்து மீண்டும் கிறிஸ்துவுக்குரிய விவிலியத்தைச் செதுக்குகிறார்.

ஆக இப்போது டால்ஸ்டாயின் பணி ஏற்கனவே வழங்கப்படும் சுவிசேஷங்களில் புதிதாய் எதையும் சேர்ப்பதல்ல. மாறாக ஏசுவுக்குப் பின் இடைக்காலங்களில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை அவற்றிலிருந்து நீக்குவதே.

அப்படி நீக்கப்பட்டுத் தூய்மை செய்யப் பட்டதுதான் டால்ஸ்டாயின் ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’.

4

ஏசுவின் பிறப்பு இவ்வாறாக இருந்தது..சுவிசேஷங்களிலிருந்து இயற்கை அதீத கற்பனைகளை, புனிதங்களை, அற்புதச் செயல்களை, இறை மகத்துவங்களை எல்லாம் கவனமாக நீக்கி ஏசு என்கிற மகத்தான மனிதனைப் படைத்துக் காட்டுகிறார் டால்ஸ்டாய்  அவர் இதை எப்படிச் செய்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். ஏசு ஒரு இறைமகன். அவர் எல்லா உயிர்களையும் போல ஆண் – பெண் பாலியல் உறவின் ஊடாக உயிர்ப்பிக்கவில்லை என்பது புனித விவிலியம் சொல்லும் செய்தி. பரிசுத்த ஆவியின் அருளால் மரியாள் கருத்தறித்து ஈன்றவரே ஏசு. டால்ஸ்டாயின் ஏசு வரலாறு இப்படித் தொடங்குகிறது:

“இயேசுவின் தாயாரான மரியாளுக்கு யோசேப்புடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழத் துவங்கும் முன்னரே மரியாள் கர்ப்பவதியாக இருப்பதைப்போலத் தோன்றியது. யோசேப்பு ஒரு நல்ல மனிதனாக இருந்தமையினால் மரியாளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க அவன் எண்ணவில்லை. எனவே அவளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு அவள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை அவளிடன் உறவு கொள்ளாமலேயே அவன் இருந்தான். மரியாள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுத்து அக்குழந்தைக்கு ஏசு என்று பெயரிட்டாள்.ஏசுவின் பிறப்பு இவ்வாறாக இருந்தது.”

5

மதபோதகர்கள்தான் இப்படி என்றால் மத நம்பிக்கைகளை ஏற்காதவர்களும் அதையே செய்தனர். அதாவது ஏசுவை முற்றாக நிராகரித்தனர். இயேசு ஒரு கடவுள் இல்லை என்கிற அவர்கள் அவரை ஒரு மனிதராகக் கருதி அவரது சொற்களின் அடிப்படையிலேயே அவரை ஆய்வு செய்திருக்க வேண்டும். மாறாக இவர்களும் மதபோதகர்கள் சொன்ன ஏசுவையே எடுத்துக் கொண்டார்கள். மதபோதகர்கள் இடைச்செருகல்களாகச் சேர்த்தவற்றிற்கெல்லாம் ஏசுவைப் பொறுப்பாக்கி அவரை நிராகரித்தார்கள். ஆக இருசாரருமே ஏசு முன்வைத்த உண்மையான கருத்துக்களை நிராகரிப்பவர்களாகவே உள்ளனர். வரட்டு நாத்திகம் பேசுகிறவர்களும் இறை நம்பிக்கையாளர்களும் இணையும் புள்ளி இது.

1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு பரம ஏழை தான் கொண்ட கருத்திற்காக சாட்டையால் அடித்துச் சிலுவையில் ஏற்றிக் கொல்லப்பட்டான். எனினும் இன்றுவரை கோடிக்கணக்கானோர் அவனை இறைவன் என நம்பி ஏற்கின்றனர். இது எப்படி நிகழ்ந்தது? அவன் என்னதான் சொன்னான் என்பதை ஆராய்வதுதான் இதை அறிவதற்கான ஒரே வழி.

6

டால்ஸ்டாயின் இந்த நூல் முழுவது ஏசு என்ன சொன்னார் என்பவற்றைத்தான் பேசுகிறது. சுருக்கம் கருதி ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். அது ஏசுவின் புகழ்பெற்ற மலைப் பிரசங்கம்.

“ஏழைகளும் தங்குவதற்கு இடமில்லாதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்வில் மட்டுமல்ல உள்ளத்திலும் எளிமையாக இருப்போரே எளியோர். அவர்களே கடவுளின் சித்தப்படி வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் பணக்காரர்களுக்கோ அய்யோ. அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்துத் தீர்த்துவிட்டார்கள். இனி அவர்கள் பசியோடு இருப்பார்கள்.”

இந்த முன்னுரையோடு, கூடி நின்ற மக்களை நோக்கிய ஏசு அவர்களின் முந்தைய சட்டங்களைச் சொல்லி அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் சொல்கிறார். மொத்தத்தில் ஐந்து கட்டளைகளாக அவர் சுருக்கி முன்வைப்பவை:

1.கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடன் இருங்கள்.

2.விபச்சாரம் செய்து மனைவியைக் கைவிடாதீர்கள்

3.ஆண்டவனின் பெயரால் ஆணையிடாதே என்பது பழைய கட்டளை. நான் சொல்கிறேன் எந்த உறுதிமொழியையுமே எடுக்காதீர்கள்.

4.தீமையை எதிர்க்காதீர்கள். யாரையும் நியாயம் தீர்க்காதீர்கள் (Do not Judge). யாருடனும் வழக்காடாதீர்கள்.

5.வெவ்வேறு நாடுகளிடையே பிளவுகளை உருவாக்காதீர்கள். உங்கள் நாட்டவரைப்போலவே பிற நாட்டவரையும் நேசியுங்கள்.

கொலை செய்யாதே என்கிற வடிவில் இருந்த முந்தைய கட்டளையை கொலை மட்டுமல்ல யாருக்கும் மன வருத்தத்தையே ஏற்படுத்தாதே, எல்லோருடனும் சமாதானமாக இரு என்பதாக ஏசு மாற்றி அமைக்கிறார். இன்னொரு பெண்ணை விரும்பி மனைவியை விவாகரத்து செய்ய அனுமதி அளிக்கும் முந்தைய கட்டளையை மறுக்கும் ஏசு உடலிச்சையை முதன்மைப் படுத்தும் வாழ்வு ஆவிக்குரியதல்ல என்கிறார்,

ஆண்டவனின் முன் ஆணையிடாதே எனும் பழைய கட்டளையை “எந்த உறுதிமொழியையும் எடுக்காதே (Do not take oath)” என்பதாகத் திருத்துவதன் மூலம், அரசுகள் தேசபக்தி உட்படப் பல்வேறு அடையாளங்களை முன்னிறுத்தி உங்களிடம் பணிவிற்கான உறுதிமொழியைக் கோரும். அதை ஏற்காதீர்கள் எனத் திருத்துகிறார். டால்ஸ்டாயை “கிறிஸ்துவ அரசுமறுப்புவாதி” (Christian Anarchist) எனச் சொல்வது இந்த அடிப்படையில்தான். ‘தீமையை எதிர்க்காதீர்கள்’ என்பதைப் பொருத்த மட்டில் இதன் பொருள் தீமைக்குப் பணியுங்கள் என்பதல்ல. ஏசு வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் அப்படியானதல்ல. தீமையைத் தீமையால் எதிர்க்காதே என்பதுதான். பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதாக இந்த எதிர்ப்பு அமையக் கூடாது. அதனால் பகைதான் தொடருமே ஒழிய தீமை அழியாது. அன்பு செய்யுங்கள். தீமை தீமையை வளர்ப்பது என்பது போல அன்பும் அன்பை வளர்க்கும்.  இதன் மூலம் அவர் யாரையும் குற்றவாளிகளாக்கித் தீர்ப்பளிக்கும் உரிமையையும் மறுக்கிறார்.

நாடுகளிடையே பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள் என்பதைப் பொருத்த மட்டில் முன்னதாக இருந்த கட்டளை அவரவர் நாட்டை அவரவர் நேசிக்க வேண்டும் என்பது. எனவே இது பிற நாட்டவரையும் நேசி என்கிற வகையில் மீண்டும் ‘தேசபக்தி’ எனும் கருத்தை மறுக்கும் ஒரு அரசெதிர்ப்பு அராஜகச் சிந்தனையாக அமைகிறது. இங்கே நாடு என்பது மொழி, சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுறுத்தப்பட்ட எல்லா மக்கள் திரள்களையும் உள்ளடக்கும்.

7

ஆறாம் அத்தியாயம் முழுவதையும் ஆவிக்குரிய வாழ்வு என்பதையும் மாமிசத்துக்குரிய வாழ்வு என்பதையும் வேறுபடுத்தி விளக்கும் முகமாக டால்ஸ்டாய் அமைத்துள்ளார். ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் அவற்றை விளக்குகிறார். சுருங்கச் சொல்வதானால் மாமிசத்திற்கான வாழ்வு எனில் இவ்வுலகப் பெருமைகள், இன்பங்கள், இச்சைகள், சுகங்கள், சொத்துக்கள் ஆகியவற்றுக்கான வாழ்க்கை. ஆவிக்குரிய வாழ்வு எனில் அது மேன்மைப் படுவதற்கான ஒரு வாழ்வு. தந்தை, அதாவது இறைவனுக்கான வாழ்வு. எனில் அது என்ன? இதையும் சுருங்கச் சொல்வதானால் முன் கூறிய அனைத்தின் மீதான பற்றுக்களையும் துறந்த வாழ்வு. இந்தப் பற்றுக்களில் குடும்பப் பற்றும் அடங்கும். ஏசுவின் வாழ்வையே அதற்கொரு சான்றாக முன்வைக்கிறார் டால்ஸ்டாய். அவரைப் பார்க்க அவரைச் சுமந்து ஈன்ற அன்னையும் அவரது சகோதரர்களும் வந்து காத்திருக்கும் செய்தி அவருக்குக் கவனப்படுத்தப்பட்ட போதும் ஏசு மக்கள் பணியையே முதன்மைப் படுத்தி அகல்கிறார்.

எல்லாப் பற்றுக்களைக் காட்டிலும் சொத்துக்கள் மீது பற்றுக் கொள்ளும் மூடத் தனத்தை ஏசு எள்ளி நகையாடும் இடங்களை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில் தொகுத்துத் தருகிறார். அதோ மரணம் வாசற் கதவருகில் காத்து நிற்பதை அறியாமல் சொத்து சேகரிப்பில் லயித்திருப்போரைப் பார்த்து நகைக்கிறார். “ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது” எனும் ஏசுவின் புகழ் மிக்க வாசகத்தை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில்தான் பயன்படுத்துகிறார். “ஒருவன் தனக்காக சொத்துக்களை வைத்துக் கொண்டு தந்தையின் சித்தத்தின்படி வாழ முடியாது” என்கிறார். அதாவது சொத்துடையோருக்கு ஆவிக்குரிய வாழ்வு சாத்தியமே இல்லை என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்.

அது மாத்திரமல்ல, எல்லா இறைக் கட்டளைகளையும் சிறுவயது முதலே நிறைவேற்றி வருகிறேனே எனச் சொல்லி அவர்முன் நின்றவனின் மேனியை அலங்கரித்த விலையுயர்ந்த ஆடையைப் பார்த்துவிட்டு, கொலை செய்யாதிருப்பாயாக, இச்சை கொள்ளாதிருப்பாயாக, பொய் சொல்லாதிருப்பாயாக, தன்னைப்போலப் பிறரையும் நேசிப்பாயாக என்கிற கட்டளைகளையெல்லாம் நீ உண்மையிலேயே நிறைவேற்றுகிறவனாக இருந்தால் முதலில் இங்கிருந்து கிளம்பிச்  சென்று உன் சொத்துக்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவா எனச் சொல்லி சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதை அடிப்படை நிபந்தனை ஆக்குகிறார்.

ஆவியினைப் பாதிக்கும் நோய்களிலேயே மிகவும் கொடியதானது பணக்காரனாக வேண்டுமென்று பொருளினைச் சேர்க்கும் ஆசையே என முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிக்கிறார்.

நூலின் இறுதி அத்தியாயத்தில் பயம், கோபம் முதலான பண்புகளும் தீமைக்கு இணங்குவதிலேயே போய் முடியும் என்பதனை ஏசுவை மரண தண்டனைக்கெனக் கைது செய்யும் தருவாயில் அவரது முக்கிய சீடர்களின் எதிர்வினைகளைக் கொண்டு சுட்டிக் காட்டுவார் டால்ஸ்டாய்.

ஐம்பது வயதில்தான் டால்ஸ்டாய் கிறிஸ்தவத்தைத் தழுவினார் என்று சொல்வதுண்டு. இதன் பொருள் அவர் பிறக்கும்போது கிறிஸ்தவ மதத்தில் பிறக்கவில்லை என்பதல்ல. இதற்கு முன அவர் இவற்றையெல்லாம் சிந்தித்ததில்லை என்பதுதான். ஐம்பது வயதில் அவரை ஆட்கொண்ட மரணம் குறித்த சிந்தனைகள் அவரை விவிலியத்தின் உண்மைப் பொருளின்பால கொண்டு சேர்த்தன. ஏசு என்கிற புரட்சியாளனை அவர் அப்போதுதான் அடையாளம் கண்டார். சுவிசேஷங்களின் சுருக்கம் மட்டுமின்றி The kingdom of God is within you, A confession முதலான நூல்களும் அவரது பிற்கால வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் அவரது இந்த நூலில்வெளிப்படும் கருத்துக்களின் அடிப்படையிலானவையாகவே அமைந்தன.

இந்த அருமையான நூலை மிகச் சிறந்த முறையில் மொழியாக்கியுள்ள வழிப்போகனின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. இந்த நூல் ஒரு வெறும் ஏசுவின் வரலாற்றைச் சொல்லும் நூலல்ல. மிகவும் உன்னதமான மானுட மேன்மைகளை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு தீவிர முயற்சி. இதற்குரிய ஒரு மொழி நடையையும், சொற்களையும், வாக்கிய அமைப்புகளையும் வழிப்போக்கன் தேர்வு செய்துள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு கூற்றை முடிக்கும்போது “என்று சொன்னார்” என்பதாக அல்லாமல் நூல் முழுக்க “என்றே சொன்னார்” எனக் கையாண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இது உருவாக்கும் ஓசை நயம் ஏதோ ஒரு வகையில் இதன் பேசு பொருளுடன் ஒத்திசைவதாக படிக்கும்தோறும் உணர்ந்தேன்.

பிழைகள் ஏதுமின்றி சிறந்த முறையில் அச்சிட்டு நியாயமான விலையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தையும் பாராட்ட வேண்டும்.

வெகு நாட்களுக்குப் பின் ஒரு மேன்மையான அனுபவமாக இந்த நூல் வாசிப்பு எனக்கு அமைந்தது.