டிசம்பர் 6 : அந்த மூவர்

டிசம்பர் 6 வந்துபோய்விட்டது. முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரு கூட்டம் அல்லது ஆர்பாட்டம் நடத்தி தங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டன. போலீஸ்காரர்கள் பத்து இடங்களில் அல்லது பதினைந்து இடங்களில் என ஏதோ ஒரு கணக்கைச் சொல்லி வெடிகுண்டு வைக்கத் திட்டம் எனச் செய்தி பரப்பி, ஒவ்வொரு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் பெட்டி படுக்கை எல்லாம் சோதனை செய்து, அவற்றை ஊடகங்களிலும் காட்டி, முஸ்லிம் பயங்கரவாதக் கட்டமைப்புக்குத் தங்கள் வருடாந்திர சேவையைச் செய்துவிட்டார்கள்.

மசூதி உடைக்கப்பட்டபோது “அந்த இடத்தில் மீண்டும் மசூதியை எழுப்பியே தீருவோம்” என வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இப்போது அதிகம் வாய் திறப்பதில்லை. அப்படித் திறந்தாலும் “நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதி மன்றத் தீர்ப்பின்படி நடப்போம்” என்கிற ரீதியில் பேசி முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னும் இப்படிச் சொல்வதற்கு அவர்களுக்கு வெட்கமில்லை..

தங்களின் ‘பெட்’ கோரிக்கைகளுக்காகப் போராட்டும் நடத்தும் கட்சி மற்றும் இயக்கங்கள் தங்களுக்கு முஸ்லிம் ஆதரவும் உள்ளது எனக் காட்டிக் கொள்ள ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்புத் தலைவரின் பெயரையும் துண்டறிக்கைகளிலும் போஸ்டர்களிலும் போடுவார்கள். இவர்களும் போய் அவர்களைக் காட்டிலும் படு தீவிரமாக அந்தக் கோரிக்கைகளை ஆதரித்துச் சூளுறைத்துத் திரும்புவார்கள். ஆனால் இவர்களைத் தங்களின் போராட்டங்களில் பயன்படுத்திக் கொண்டவர்கள் டிசம்பர் 6 வந்தால் காணாமற் போய் விடுவார்கள்.

என்னிடம் ஒரு முஸ்லிம் இதழுக்கு டிசம்பர் 6குறித்து ஒரு கட்டுரை கேட்டனர். “நாந்தான் வருடா வருடம் எழுதுகிறேனே. இப்போது என்ன புதுசா எழுதிடப் போறேன். உங்களைக் கூப்பிட்டு ஆர்பாட்டம் எல்லாம் நடத்துறாங்களே அந்தத் தலைவர்களிடம் எல்லாம் கேட்டுக் கட்டுரை வாங்கிப் போடுங்களேன். அவர்களின் ஆதரவு இந்தக் கோரிக்கைக்கு இருப்பதாவது உலகத்திற்குத் தெரியட்டும்” என்றேன். “என்ன சார் இது..” என்று நழுவி விட்டார்கள்.

டிசம்பர் 6 வரும்போதெல்லாம் என் நினைவில் மூன்று பேர் வந்து போவார்கள். 1949 டிசம்பர் 22 இரவு திருட்டுத்தனமாக மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலைகளை வைத்துவிட்டு அந்தக் கிரிமினல் கும்பல் ஓடியவுடன் மனம் பதைத்து அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், உ.பி.முதல்வர் கே.சி.பந்த் முதலானோருக்கு ஒரு பிரதமர் என்ற முறையில் கண்டித்தும் வேண்டியும், முஷ்ருவாலா என்பவருக்கு ஒரு நண்பர் என்கிற வகையில் ஒன்றும் செய்ய இயலாத வேதனையை வெளிப்படுத்தியும் கடிதங்கள் எழுதிய நேருவைச் சொல்லவில்லை.

மசூதி இடிக்கப்பட்ட பின்பு ஆற்றப்பட்ட மூன்று எதிர்வினைகளைச் சொல்கிறேன். மசீதியை இடித்த கிரிமினல் கும்பல் அத்தோடு போகவில்லை. மசூதியின் மைய விதானம் இருந்த இடத்தில் இரு விக்கிரகங்களை வைத்து ஒரு தற்காலிகக் கூரையையும் அமைத்துவிட்டுத்தான் போனார்கள். நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு உடனே ஒரு சட்டம் இயற்றி அந்த இடத்தைக் கைப்பற்றி, சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து, ஆயிரக் கணக்கான துணை இராணுவத்தைக் கொண்டு குவித்து அந்தத் தற்காலிகக் ‘கோவிலுக்கு’ப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். உள்ளே சகல பாதுகாப்புகளுடனும், வசதிகளுடனும் பூசை புனஸ்காரங்கள் நடக்கின்றன. சுற்றிலும் கடைகள். மசூதி இடிப்புக் காட்சியைக் காட்டும் குறுந்தகடு மற்றும் போட்டோ ஆல்ப விற்பனைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடைகள்… ஒரே திருவிழாக் கோலம் போங்கள்.

டிசம்பர் 9 : மசூதி இருந்த இடத்தில் மசூதிதான் என்றெல்லாம் எல்லோரும் வார்த்தைகளால் பசப்பிக் கொண்டிருந்தபோது ஒரே ஒருவர்தான், “குற்றச் செயலின் பலன்களாக (fruites of the crime) அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கொட்டகையையும் சிலைகளையும் முதலில் உடைத்து எறியுங்கள்” என்று கூறும் துணிச்சலைப் பெற்றிருந்தார். அவர்தான் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மே.வங்க முதல்வருமான மறைந்த தோழர் ஜோதி பாசு.

பணி நிமித்தம் அந்த இடத்தைப் பார்வையிட வந்த மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போலிடம் உள்ளே சென்று பாலராமரை வணங்கிச் செல்லவில்லையா எனக் கேட்டனர், மாதவ் ஒன்றும் நாத்திகரோ கம்யூனிஸ்டோ அல்ல. இந்து மதத்தைப் பின்பற்றுபவர். இராமனை வணங்குபவர். “ஏகப்பட்ட பொய், ஏமாற்று, அப்பட்டமான வன்முறை ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இதற்குள் கடவுள் இருக்க மாட்டார்” என்று கூறி உள்ளே செல்லாமல் அந்த இடத்தை விட்டகன்றார் மாதவ் கோட்போல்.

ஒரு சொத்து தன்னுடையது என வழக்காடி இருவர் வந்தால் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்? குற்ற நடைமுறைச் சட்டத்தின் 145வது பிரிவு இதற்குத் தெளிவாக விடை அளிக்கிறது. முதலில் அச் சொத்து பிரச்சினை தொடங்கும்போது “யாருடைய அனுபவத்தில் இருந்தது” (Fact of Actual Position) என்கிற உண்மையின் அடிப்படையில், “வன்முறையாகவும் தவறாகவும் பிடுங்கப்பட்டவர்களிடம்” (forcefully and wrongfully dispossessed) அதை ஒப்புவிக்க வேண்டும். மற்றவர் அதை ஏற்காத பட்சத்தில் அவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு தொடுக்கலாம்.

ஆனால் இங்கு என்ன நடந்தது? 145வது பிரிவு நேர் எதிராகப் பயன்படுத்தப்பட்டது. சொத்து வன்முறையாகவும் திருட்டுத்தனமாகவும் அதைக் கைப்பற்றியவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. கைப்பற்றியவர்கள் அதை அனுபவிக்கவும், அதாவது வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். 500 ஆண்டு காலம் அனுபவ பாத்தியதை உள்ள அச் சொத்திற்கு உரியவர்கள் சிவில்வழக்குப் போடத் தள்ளப்பட்டனர். இதற்கான ஆணையை ஒரு நீதிமன்ற நடுவர் இடுகிறார் (டிச 29, 1949). ஒரு மாவட்ட நீதிபதி இந்தப் புதிய நிலையில் எந்த மாற்றமும் கூடாது எனத் தடை (injunction) ஆணை அளிக்கிறார் (ஜன 19, 1950). உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்கிறது (ஏப் 26, 1955). அதுவரை ஒரு ஓரமாக நின்று அந்தச் சிலைகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களுக்கு மசூதியின் பூட்டை உடைத்து முழுமையாகத் திறந்துவிட்டு பூசை வழிபாடுகள் செய்ய மாவட்ட ஆட்சியர் ஒரு நாள் உத்தரவிடுகிறார் (ஜன 25, 1986). 1992 டிசம்பரில் மசூதி உடைத்துத் தரைமட்டம் ஆக்கப்படுகிறது.

நிலத்தைக் கைப்பற்றிய மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஆணை ஒன்றின் மூலமாக, மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ஒரு இந்துக் கோவில் இருந்ததா எனக் கருத்துச் சொல்லுமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டது. நல்ல வேளையாக இந்த அம்சத்தில் மட்டும், ஆம் இந்த அம்சத்தில் மட்டும் நீதிமன்றம் சரியாக நடந்து கொண்டது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு அனுபவ பாத்தியதை உள்ள போது அங்கு அதற்கு முன் ஒரு கோவில் இருந்ததா இல்லையா என்கிற கேள்வி அர்த்தமற்றது. உச்சநீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

இப்படி மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததா என்று உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்கப்பட்டதை அறிந்தபோது ஒருவர் பதறிப் போனார். அவரும் ஒரு நாத்திகரோ, கம்யூனிஸ்ட்டோ இல்லை முஸ்லிம் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செயல்பட்டவரோ அல்ல. நாடறிந்த ஒரு புகழ்பெற்ற வாழக்கறிஞர். சட்ட வல்லுனர். அவர்தான் என்.ஏ.பால்கிவாலா. இது அடிப்படை நீதிநெறிகளூகு அப்பாற்பட்டதாயிற்றே என்கிற அடிப்படையில் அவரது ஆத்திரம் அமைந்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அவர் கடிந்து எழுதிய கட்டுரை ஒன்றின் பெரும்பகுதியை என் குறு நூல் ஒன்றில் மொழியாக்கித் தந்துள்ளேன் (பாபர் மசூதி ; தீர்வும் தீர்ப்பும், பக்.22,23). அதில் சில வரிகள் மட்டும்:

“வரலாறு அல்லது தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளில் தீர்ப்புச் சொல்லுமாறு இந்த நாட்டின் ஆக உயர்ந்த நீதிமன்றத்தைக் கேட்பது அபத்தம்… பாபரால் மசூதி கட்டப்பட்ட இடத்தில் முன்னதாகக் கோவில் இருந்ததா என்பது குறித்து வரலாற்றறிஞர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர். ராமன் அந்த இடத்துல்தான் பிறந்தான் என்பதற்குப் பெரிய அளவில் ஒப்புதலில்லை. ராமன் என்பவன் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு மனிதனா இல்லை கற்பனை செய்யப்பட்ட ஒரு அதி மனிதனா என்பதிலும் கருத்தொற்றுமை கிடையாது….

புராணம், வரலாறு, அல்லது இரண்டும் கலந்த கலவை குறித்து நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்பது நமது அரசியல் நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தகுதியற்றுப் போயுள்ளன என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது.

வரலாறு, நம்பிக்கை, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றத்தை நாடுகிற நிலை மட்டுமின்றி, அதன் தீர்ப்பிற்காக ஆவலுடன் நிற்க நேர்ந்துள்ள நிலை ஜனநாயகத்திற்கான எல்லாத் தகுதியையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது. எந்த நாடும் இப்படியான் பிரச்சினைக்கு நீதிமன்ரத்தை அணுகியதாக வரலாறே இல்லை.”

நீதிமன்றத்திற்கு இப்படியான பிரச்சினைகளில் முடிவு சொல்ல எந்தத் தகுதியும் கிடையாது என்பது மட்டுமின்றி நமது சாட்சியச் சட்டங்களிலும் இதற்கு இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பால்கிவாலா,

“அரசியல் புலத்திற்குள் நீதிமன்றத்தைப் பிடித்துத் தள்ளினால் அது நீதிமன்றத்தின் பெருமையைக் குலைக்கும். அதன் தகுதியைக் கீழறுப்புச் செய்யும்…..”

என்றார். வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளும் நிச்சயம் பால்கிவாலாவின் இக்கட்டுரையைப் படித்திருப்பர். நீமன்றம் இந்தக் கருத்துக்கோரலை ஏற்காது தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் இவ்வாறு மறுத்த ஒன்றிற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பஒப்புதல் அளித்தது. மசூதி இருந்த இடத்தை அகழ்ந்து கோவில் இருந்ததா எனப் பார்க்க ஆணையிட்டது (மார்ச் 5, 2003).

நல்லவேளை செப் 30, 2010க்கு முன்னேயே பால்கிவாலா இறந்து போனார், இல்லாவிட்டால் அலகாபாத் தீர்ப்பைக் கேட்டு மாரடைத்துச் செத்திருப்பார்.

ஒவ்வொரு டிசம்பர் 6 லும் இந்த மூவர், ஜோதி பாசு, மாதவ் கோட்போல், பால்கிவாலா இவர்கள் என் நினைவில் தோன்ற மறப்பதில்லை.