தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத் கோரி’ என அவற்றைச் சொல்வார்கள். சையத் கோரி சற்றுத் தொலைவில் தெரியும். இஸ்லாமியக் கட்டிடக் கலை வடிவில் அது காட்சியளிக்கும்.

எழுத்தாளர் டேனியல் அவர்களின் கல்லறைக்குச் செல்லும்போதெல்லாம் இவற்றை நோட்டம் விட்டுச் செல்வதுண்டு. அருகில் நெருங்கிப் பார்த்ததில்லை.

ராஜா கோரி என்பது மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதி என்றும் சையத் கோரி என்பது துக்கோஜி, இரண்டாம் ஈகோஜி, சுஜான்பாய், பிரதாப சிம்மன் ஆகியோரின் காலத்தில் கோட்டைத் தளபதியாகவும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (1735 – 38) king maker ஆகவும் இருந்த ஒரு முஸ்லிம் ‘கில்லேதாரரின்’ கல்லறை என்றும் விசாரித்தபோது தெரிய வந்தது.

மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி எனப்படும் முதலாம் ஈகோஜியால் (1674 – 86) தொடங்கி வைக்கப்பட்டது தஞ்சை மராட்டிய அரச வம்சாவளி (1674 – 1855). முதலாம் சரபோஜி மன்னனின் (1711 – 27) மரணத்திற்குப் பின் அவனது மகன் காட்டுராஜா உடனடியாக ஆட்சி பீடத்தில் அமர முடியவில்லை. சரபோஜியின் அதிகாரபூர்வமான மனைவியருக்கு அவன் பிறந்திராததே காரணம்.. சரபோஜியின் சகோதரன் துக்கோஜி (1728 -36) அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டான். அதன்பின் அவனது மகன் இரண்டாம் ஈகோஜி ஓராண்டு காலம் ஆண்டான். அவனது அகால மரணத்திற்குப் பின் அவனது மனைவி சுஜான்பாயியிடம் அதிகாரம் சென்றது.

ஆனால் விரைவில் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் சரபோஜியின் மகன் காட்டுராஜா, இரண்டாம் சாகுஜி, என்கிற பெயரில் ஆட்சிகட்டிலில் அமர்ந்ததில் (1938) சய்யிதின் பங்கு முக்கியமாக இருந்தது. சுஜான்பாயியைப் பிடித்துச் சிறையிலிட்டான் சய்யித்.

தஞ்சை அரசின் அதிகாரத்திற்குட்பட்ட காரைக்காலை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அளிக்குமாறு சாகுஜியை வற்புறுத்தி வந்தான் ஃப்ரெஞ்சுக்காரர்களுடன் நெருக்கமாக இருந்த சந்தா சாகிப். முதலில் ஒப்புக் கொண்டபோதும் இறுதியில் சாகுஜி மசியவில்லை. படை எடுத்து வந்த சந்தா சாகிப் சாகுஜி முறையாகப் பிறந்த மகனில்லை எனக் காரணம் சொல்லி அவனை அரச பதவியிலிருந்து வெளியேற்றினான் (1739).

காலியான அரச பதவியில் துக்கோஜியின் மகன் பிரதாப சிம்மன் (1739 – 63) அமர்ந்து கொண்டான். பிரதாபன் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த காரியங்களில் ஒன்று சய்யிதைக் கொன்றது. தன் மகளைச் சந்தா சாகிபின் மகனுக்குக் கட்டி வைத்துத் தஞ்சை ஆட்சியைக் கவரச் சதி செய்ததாக சய்யித் குற்றம் சாட்டப் பட்டான். சய்யிதின் தம்பி காசிம் இதில் அரசனுக்கு உடந்தையாக இருந்தான்.

இதுதான் சய்யிதின் கதை.

உலகிலேயே பெரியது எனச் சொல்லப்படும் கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோவிலின் தென் மேற்கு மூலையில் அமைதுள்ளது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் வம்சாவளியைச் சொல்லும் இம் மராட்டிய மொழிக் கல்வெட்டுடன் காலின் மெக்கன்சி தொகுத்துள்ளவற்றிலுள்ள இது தொடர்பான சுவடிகளையும் ஒப்பிட்டு மெக்கன்சி சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, 1987, பதிப்பாசிரியர் கே.எம்.வேங்கடராமையா). தரமான ஆய்வுப் பதிப்பு.

இந்த நுலை நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தபோது மெக்கன்சி சுவடியில் (எண் 318, எம் 79) சய்யித் பற்றி இருந்த குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அதில் சில வரிகள் மட்டும் (பக்.100):

“…..இதுவுமல்லாமல் இவன் (சய்யிது/ சையிந்து) அகிறுத்தியம் பண்ணிக் கொண்டு வந்த தென்ன வென்றால் யெகோஜி ராஜா தஞ்சாவூர் றாட்சியத்துக்கு முதல் அதிபதியான பிற்பாடு இதுக்கு முன்னே பண்ணியிருக்கிற தற்ம்மமும் தஞ்சாவூர் றாட்சியத்திலே வெகு தேவாலையங்கள் காவேரி தீரத்தில் வெகு பிறாமணாள் வாசமா யிருக்கிறார்களென்று அக்கிறாரம் கட்டிவிக்கிறது, தேவாலையும் கட்டிவிக்கிறது, பிறாமணாளுக்கு சறுவமானியங் கொடுக்கிறது, யெக்கியம் (யக்ஞம்/வேள்வி) பண்ணிவிக்கிறது, அன்னசத்திரம் போடுவிக்கிறது, இந்த விதமாய் அனேக தற்ம்மங்கள் யெகோஜி மகராஜா நாள் முதல் பரம்பரையாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். அப்பால் பிரதாப சிம்ம ராஜா பட்டத்துக்கு வந்த நாள் முதல் விசேஷ தற்மம் பண்ணிக்கொண்டு வந்தார். இந்த தற்மத்துக்கெல்லாம் சய்யிது விரோதம் பண்ணி வந்தான்.”

ஆக, பார்ப்பனர்களுக்கு செய்யப்பட்ட சிறப்புச் சலுகைகளை ஏதோ ஒரு வகையில் சய்யிது எதிர்த்து வந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இது பிடிக்காமலிருந்திருப்பதும் தெரிகிறது. இப்படிச் சொல்வதன் பொருள் சய்யிதை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்த வீரனாகவும் தியாகியாகவும் தூக்கிப் பிடிப்பதல்ல. முழு விவரங்களும் நமக்குத் தெரியவில்லை. அன்றைய குழப்பமான சூழலில், தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளத் தன்னளவில் எல்லா வகைகளிலும் சய்யிதுவும் முயற்சித்திருப்பான் என்பதில் அய்யமில்லை.

வம்சாவளியைச் சொல்லும் இச்சுவடி தொடர்ந்து சய்யிது மீது வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு எத்தகைய கோணத்திலிருந்து வைக்கப்படுகிறது என்பதுதான் ஒரு கணம் நம்மை இந்தியத் துணைக் கண்ட அரச நீதியைப் பற்றிச் சிந்திக்க வைகிறது.

“இதுவுமல்லாமல் தான் துலுக்க சாதியாக யிருந்தும் கற்ணாட்டச் சாதி (கர்நாடக சாதி) தேவடியாள் கோவில் தேவடியாளைக் கெடுத்துப் போட்டான். அதிலே ஒருத்தி மொஹனா என்கிற தாசியைக் கெடுத்துப் போட்டு அவளைத் தன்னுடைய வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டான். இப்படிக்கொத்த துஷ்கிருத்தியமும் கிறுத்திறமும் மஹாறாஜாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் தாம் நூதினமாய் ராச்சியத்துக்கு வந்திருக்கிறோம் என்று அந்த சயிந்துக்கு தெண்டினை (தண்டனை) பண்ணாமல் சிறிது நாள் வரைக்கும் அவனுடைய அதிகாரமும் நடப்பித்தார்…..”

இப்பைச் செல்கிறது வம்சாவளி வரலாறு. அடுத்த சில வரிகளில் சய்யிது கொல்லப்படும் நிகழ்வு விரிவாக விளக்கப்படுகிறது.

மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும், அவர்களது விருப்பத்தை மீறி உறவு கொண்டாலோ, கடத்திச் சென்றாலோ அது குற்றம் என்பதில் யாருக்கும் கருத்து மறுபாடு இருக்க இயலாது. ஆனால் இங்கே சய்யிது மீது சாத்தப்படும் குற்றச்சாட்டு அத்தகைய உயரிய நோக்கிலிருந்து எழவில்லை.

பாலியல் தொழில் செய்வோர், கோவில்களுக்குப் பொட்டுக் கட்டிக் கொண்ட தேவதாசியர் முதலானோர் அதிகாரத்தில் உள்ளோரால் எந்த அளவிற்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர், பாலியல் உறவில் அவர்களது சுய விருப்பம் மற்றும் தேர்வுகளுக்கு எவ்வாறு இடமில்லாமல் இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காடுகள் உண்டு,. மூன்றாம் குலொத்துங்க சோழனது ஆட்சிக்காலத்திய திருக்காளத்தி (காளஹஸ்தி} கோவில் கல்வெட்டொன்றில் காணப்படும் செய்தி ஒன்று குறித்து நான் ஆதாரங்களுடன் என் கட்டுரைகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளேன். கோவிலுக்கென்று கொண்டுவரப்பட்டுப் பொட்டுக்கட்டப்பட்ட தெவதாசியரை குலோத்துங்க மன்னன் கட்டாயமாகத் தன் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று விடுகிறான். மக்கள் இதை அறிந்து எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவாக வேறு வழியின்றி மன்னன் அவர்களைக் கோவிலுக்குத் திருப்பி அனுப்பிய செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுதான் அது.

தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கொடுமைகள் எந்த அளவிற்கு இருந்தன என்பதற்கு தஞ்சை மோடி ஆவணங்கள் சாட்சி பகர்கின்றன. மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்படுள்ள மோடி ஆவணங்களில் ஓரிரு மூட்டைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டு, அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆவணத் தொகுதிகள் மூன்றைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தொகுப்பாசிரியர் பா.சுப்பிரமணியன்).. இந்த மூன்று தொகுதிகளிலேயே ஏராளமான பாலியல் வன்முறைகளும் பெற்றோர்களிடமிருந்தும், கணவன்மார்களிடமிருந்தும் பெண்கள் கடத்திச் செல்லப்படுகிற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அப்படியான சில சம்பவங்களைப் பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் தொகுத்து:ள்ளார் (’உங்கள் நூலகம்’, அக்டோபர் 2012).

மன்னர்களின் அதிகாரபூர்வமான மனைவியர் (ராணிகள்) தவிர ‘அபிமான மனைவியர்’, ‘விரும்பிக் கொண்ட மனைவியர்’, ‘சேர்த்துக் கொண்ட மனைவியர்’ என்கிற பெயர்களில் பலர் இருந்ததை வம்சாவளி வரலாறுகள் பதிவு செய்துள்ளன. இவர்கள் தவிரவும் பல காமக் கிழத்தியர்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கென தனி மாளிகைகள் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அரசாங்க நிதியிலிருந்து அவர்களுக்கு ‘சம்பளம்’ வழங்கப்பட்டது. அவர்களுக்குச் சமையல் செய்ய ஆட்களும், சமைக்கத் தனி விடுதிகளும் இருந்தன.

பெரிய அறிவுஜீவியும், நூல் சேகரிப்பாளனுமாகிய இரண்டாம் சரபோஜி மன்னனின் (1798 – 1832) இத்தகைய காமக் கிழத்தியர் திருவையாற்றில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள ‘கல்யாண மஹாலில்’ தங்க வைக்கப்பட்டனர். இரண்டாம் சிவாஜியின் (1832 – 55) 48 காமக் கிழத்தியர் தஞ்சை கீழ வீதியில் உள்ள மங்கள விலாசத்தில் இருந்தனர்ஈந்த மாளிகைகள் இரண்டும் இன்னும் திருவையாற்றிலும் தஞ்சையிலும் உள்ளன. இவர்களோடு இவகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அங்கு வசிப்பர். சிவாஜி இறந்தபோது 10 பெண் குழந்தைகளும், 15 ஆண் குழந்தைகளும் மங்களவாசத்தில் இருந்தனர். இறந்தபோது அவனுக்கு 303 ‘வைப்பாட்டிகள்’ இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் போர்பஸ் அரசுக்குக் கடிதம் எழுதினார் (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1987, பக்.7).

இவர்கள் ‘சத்மம்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் தாசிகளா? என்கிற கேள்வியை வெள்ளை நிர்வாகம் எழுப்பியபோது, அரண்மனை சிரேஸ்தார் வெங்கடராவ் அன்றைய வெள்ளை அதிகாரிக்கு (ரெசிடென்ட்) அளித்த பதிலில்,

“தாசிகளும் தோழிகளும் அநேக புருஷர்களுடன் சகவாசஞ் செய்வார்கள். அவர்களுக்கு மானமோ வெட்கமோ கிடையாது. விபச்சாரம் அவர்களுடைய தொழில். மங்கள விலாசப் பெண்கள் அப்படி அல்ல. மானத்துடன் ஒரே புருஷனிடத்தில் இருந்து வருபவர்கள். அந்தப் புருஷனுக்குப் பின்னர் பிழைத்திருக்கும் வரையில் வெளியே போகாமல், புருஷன் இறந்துபோன பின்பு ஸ்திரி புழங்க வேண்டிய முறைப்படி இருப்பார்கள்”

ஆனாலும் உண்மை நிலை அப்படி இல்லை என்பதை மோடி ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. இப்படி நூற்றுக் கணக்கான மனைவியரைப் பாலியல் ரீதியாக இந்தச் சோம்பேரி மன்னர்கள் எப்படிச் சமாளித்திருக்க முடியும்? இப்படி அடைப்பட்டுக் கிடந்த பெண்கள் தவிர்க்க இயலாமல் பிற ஆடவருடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், அது தொடர்பாக அரண்மனை அதிகாரிகளுக்கு புகார்க் கடிதங்கள் எழுதப்பட்டதையும் (அவற்றில் சில மொட்டைக் கடிதங்கள்) மோடி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. ரெங்கசாமினாயகர் என்பவர் 16.08.1876 அன்று எழுதிய புகார்க் கடிதத்தில்,

““தஞ்சாவூர் சிவாஜி மகாராஜன் வைப்பாட்டி என்கிற மங்கள விலாசத்தில் ஒருவளாகிய கோவிந்தாபாயி, லெட்சுமி அம்மாள் இவர்கள் இரண்டு பேரும் திருவையார் சகஜிநாயகர் அக்கிரகாரத்திலுள்ள அய்யங்கார் பிள்ளை, திருவேங்கடத்தையங்காரை இடைவிடாமல் வைத்துக் கொண்டு ரொம்பவும் கெட்ட செய்கைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு அனேக பெட்டிஷன்கள் எழுதியும் தாங்கள் கவனிக்கவில்லை. இப்பொழுது தாங்கள் தயவு செய்து விசாரிக்கும்படியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.”

எனக் கூறப்பட்டிருந்தது (மோடி ஆவணம் தொகுதி 2; 149 – 153).போகட்டும். இது நமக்குப் பிரச்சினை இல்லை. அந்தப் பெண்களை நாம் குற்றம் சொல்ல இயலாது.

நம்முடைய கவலை என்னவெனில் இப்படி அரசர்களாலும் அரண்மணை அதிகாரிகளாலும் கொண்டு செல்லப்பட்ட பெண்கள் பலர் குடும்பங்களிலிருந்தும், ஆதரவில்லாமலிருந்தும் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள்தான். தேவதாசியரைப் பொருத்த மட்டில் கேட்க வேண்டியதில்லை. மோடி ஆவணங்களிலிருந்து சிவசுப்பிரமணியம் சுட்டும் இரு நிகழ்வுகள்:

புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலம்பாயி எனும் பெண், தன் 9 வயது மகளை விசாலாட்சி எனும் தாசியிடம் மூன்றரை ரூபாய்க்கு அடமானம் வைத்துச் செல்கிறாள் (1842). திரும்பி வந்து பணத்தைத் தந்து மகளைக் கேட்டபோது, அரண்மனையிலிருந்து வந்தவர்கள் கட்டாயமாக அவளைக் கொண்டு சென்றுவிட்டனர் எனப் பதில் வருகிறது. தன் மகளை மீட்டுத் தரச் சொல்லி ஆங்கில ரெசிடென்டுக்கு எழுதிய கடிதம் ஒரு ஆவணமாகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (2:153 – 154).

அக்கச்சிப்பட்டி எனும் ஊரிலிருந்து பிழைக்க வந்த சிதம்பரம் பிள்ளையுடன் வந்த பெண்களை அரண்மனையார் கட்டாயமாகப் பிடித்துச் செல்கின்றனர். விடச் சொல்லிக் கேட்டபோது அவர் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார். அப் பெண்களை விலைக்கு விற்றதாக அவர் எழுதிக் கொடுக்க வேண்டியதாகிறது. ஆங்கில ரெசிடென்டிடம் புகார் அளித்தாலோ அவனும் விரட்டி அடிக்கிறான். கவர்னருக்குப் புகார் அளிக்கலாமென்றாலோ உள்ளூர் தபாலாபீசில் புகாரைப் பெற மறுக்கின்றனர் (2: 157- 159).

மாமனார் வீட்டில் விட்டுச் சென்ற தன் பால்ய மனைவி மீனாட்சி, பருவமெய்தியிருப்பாள் என அழைத்துச்செல்ல ஆவலோடு வந்த இளங் கணவன், அவள் இப்போது ஆனந்தவல்லி என்கிற பெயருடன் அரண்மனையில் வாழ்வதாக அறிந்து கவர்னர் துரைக்கு அளித்த புகார் இன்னொரு ஆவணம் (2: 160 -162).

அரண்மனை அதிகாரத்திற்கு எதிராகப் புகார் அளிக்கும் நடுவர்களாக ஆங்கில நிர்வாகத்தை மக்கள் கருத வேண்டிய நிலை இருந்தது என்பதும், பெரும்பாலும் ஆங்கில நிர்வாகம் அதிகாரத்திற்கே துணை போயுள்ளதையும் நாம் விளங்கிக் கொள்கிறோம். எனினும் பல நேரங்களில் நேர்மையுள்ளம் படைத்த ஆங்கில அதிகாரிகளும் இருந்துள்ளனர் என்பதற்கு அரண்மனைப் பார்ப்பன அதிகாரக் கும்பலால் உடன்கட்டை என்கிற பெயரில் தீக்கிரையாக்க முயற்சிக்காட்ட கிளாவரிந்த பாயைக் காப்பாற்றிய ஆங்கில ரெசிடென்ட் லிட்டில்டன் ஒரு சாட்சி (மாதவையாவின் ‘கிளாரிந்தா).

இப்படியான பின்னணியில்தான் “கோவில் தேவடியாளான” மொஹனா என்கிற பெண்ணை கோட்டைத் தளபதி சய்யிது கட்டாயமாக உறவு பூண்டு வீட்டுக்கும் கொண்டு சென்றதை மட்டும் பெருந் துஷ்கிருத்தியமென வரையறுக்கிறது போன்சே வம்ச வரலாறு. கட்டாயமாகத் தேவதாசி ஒருவரைக் கொண்டு சென்றதல்ல இங்கு குற்றம். ‘துலுக்க சாதியைச்” சேர்ந்த ஒருவன், “கற்ணாட்டச் சாதியச் சேர்ந்த ஒருத்தியைக் கொண்டு சென்றதால்தான் அது குற்றம். அவன் கோட்டைக் கில்லேதாரராக இருந்தாலும் துலுக்க சாதியைச் சேர்ந்தவன்: அவள் ‘கோவிற் தேவடியாளாக” (மன்னிக்கவும் இச் சொல்லைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு) இருந்தபோதும் கற்ணாட்டச் சாதியைச் சேர்ந்தவள்.

பிரச்சினை அறம் சார்ந்தது அல்ல: அது சாதி சார்ந்தது: மத அடிப்படையிலானது.

இதுதான் இன்று இந்துத்துவ சக்திகள் இன்று உன்னத அரச மாதிரியாக முன்வைக்கும் சிவாஜி மன்னர்கள் மற்றும் பேஷ்வா ஆட்சிகளின் அரச நீதி.