ராம்குமாரின் ‘தற்கொலையும்’ தலித் இயக்கங்களும்

ராம்குமாரின் கதை முடிந்துவிட்டது. இல்லை முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஆகப் போகிறது எனப் பலரும் ஐயங்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோதே இது நடந்துள்ளது. நாம் முன் வைக்கும் ஐயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் போகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்படும் அநீதிகளை மனம் கொண்டு இந்த ஐயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிப்பதும் விளக்கங்கள் சொல்வதும் அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கடமை ஆகிறது.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? எந்த ஐயங்களுக்கும் முறையான பதில் இல்லை, ஆனால் அதே நேரத்தில் ஐயங்களை முன்வத்தவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எனும்போதுதான் நமக்குக் கவலையாக உள்ளது.

சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். கொலையாளி எனச் சித்திரிக்கப்பட்ட ஒரு இளைஞர் முதுகுப் பையுடன் நடந்து செல்வதாக வெளியிடப்பட்ட படங்கள் இரண்டிலும் உள்ள வேறுபாடுகளைச் சிலர் சுட்டிக்காட்டினர்.

சுவாதியை யாரோ ஒருவர் அல்லது சிலர் முன்னதாகத் தொடர்ந்து வந்தனர் என்பதும் ஒருமுறை ரயில் நிலையத்தில் வைத்து அவரை யாரோ தாக்கினர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் வெட்டிக் கோலை செய்யப்பட்ட முறையிலும் ஐயங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரே நபர் அதைச்செய்திருக்க இயலாது என்கிற ஐயமும் இருந்தது. ராம்குமாரைக் கைது செய்யச் சென்றபோது அவர் தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு சாக முயற்சித்தார் என்கிற கூற்றையும் அவரது பெற்றோர்கள் மறுத்தனர்.

இந்த ஐயங்கள் எல்லாம் உண்மையானவை என நான் சொல்லவில்லை. அவை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் ஐயங்களைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியது புலனாய்வு முகமைகளின் கடமை. இப்படியான சந்தேகங்களை உங்களால் நிறுவமுடியுமா எனக் காவல்துறை நம்மிடம் கேட்பதில் பொருளில்லை. என்னுடைய வீட்டில் ஒரு கொலை நடந்தால் சில சந்தேகங்களைத்தான் என்னால் முன்வைக்க முடியும். அதை நிறுவும் வாய்ப்புகள், கருவிகள் எல்லாம் என்னிடம் இருக்கும் என்பதில்லை. காவல்துறைதான் என்னையும் விசாரித்து நான் குற்றம் சாட்டுபவர்களையும் விசாரித்து உண்மையை அறிய வேண்டும். அந்தப் பொறுப்பு investigating agency க்குத்தான் உண்டு.

ஆனால் என்ன நடந்தது? இப்படி முன்வைக்கப்பட்ட ஐயங்கள் பொருட்படுத்தப்படவே இல்லை. மாறாக ஐயங்களை முன்வைத்தவர்களே தண்டிக்கப்பட்டனர்.

பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும் முயற்சியில் இருந்தனர். ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் முதலானோரின் கருத்துகள் சர்ச்சையாகின. அந்தத் திசையில் காவல்துறை விசாரித்தது. சுவாதியின் காதலர் எனச் சொல்லப்படும் ஒரு முஸ்லிம் இளைஞர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவர் அப்படி விசாரிக்கப்பட்டது முற்றிலும் சரியான நடவடிக்கை. விசாரித்து அந்த இளைஞருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பில்லை என காவல்துறை உறுதி செய்தது.

ஆனால் இப்படி இதை ஒரு இந்து முஸ்லிம் பிரச்சினை ஆக்குவோர் மீது முன்வைக்கப்பட்ட ஐயங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை. மாறாக அப்படி ஒரு ஐயத்தை முன்வைத்த திலீபன் எனும் இளைஞர் காவல்துறையால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்து முஸ்லிம் பிரச்சினையாக இதை முன்வைத்து அரசியல் லாபம் பெறுவதற்காக ஒரு சிலர் திட்டமிட்டு தென்காசியைச் சேர்ந்த கூலிப்படை ஒன்றை வைத்து சுவாதியைக் கொலை செய்ததாகவும், இந்தக் கொலையாளிகளுக்கு ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் பாதுகாப்புக் கொடுப்பதால் தமிழக போலீஸ் அவர்களைக் கைது செய்யாமல் அந்தக் கொலையாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட அப்பாவியான ராம்குமாரைப் பலிகடா ஆக்குவதாகவும் திலீபன் என்பவராலும் ஃப்ரான்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவராலும் ஒரு ஐயம் சமூக ஊடகங்களில் வலுவாக முன்வைக்கப்பட்டது.

இதில் தொடர்புடையவர்கள் என ஒரு சிலரையும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் என பா.ஜக வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தத்தையும் பெயர் குறிப்பிட்டு இவர்கள் எழுதினர். தான் எந்த விசாரணைக்கும் தயார் என அந்தத் தமிழச்சி என்பவர் எழுதியது இன்னும் வலைத்தளங்களில் இருக்கிறது. பெயர் குறிப்பிடப்பட்ட குற்றசாட்டு இது. இது தவறாகவும் இருக்கலாம். சரியானதாகவும் இருக்கலாம். உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறைக்கு அக்கறை இருக்குமானால் அது என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் இந்த திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோரை விசாரித்து அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஒருவேளை குற்றம் சாட்டும் இவர்கள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்றால் இவர்கள் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? அந்தக் கருப்பு முருகானந்தம் என்பவர் இதுவரை பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர். முத்துப்பேட்டையில் நடந்த ஒரு மதக் கலவரம் தொடர்பான எங்களின் ஆய்வறிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் மீது 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தோம். அவர் இப்போது திருவாரூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த ஐயங்களை முன்வைத்த திலீபனைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். எப்படியாவது ராம்குமாரை வைத்தே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என நினைத்துக் காவல்துறை செயல்பட்டது.

இப்போது ராம்குமார் இப்படி மரணம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது, அவர் வெளியில் வந்து உண்மைகளைப் பேசினால் ஆபத்து எனக் கருதி அவர் கொல்லப்பட்டார் என ஐயம் உருவாவது தவிர்க்க இயலாதது.
ஒரு சாதாரண ‘சில்க் ஒயரை’ பல்லால் கடித்து உள்ளே உள்ள கம்பியை வெளியே எடுக்கவே நமக்குச் சில நிமிடங்கள் ஆகிறது. தற்கொலை மனநிலையுடன் இருந்த ஒரு இளம் கைதி ஓடிச் சென்று ஒரு வலிமையான ‘லைவ்’ ஒயரைப் பல்லால் கடித்துத் தற்கொலை செய்யும் வரை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பதெல்லாம் நம்பத் தகுந்ததாக இல்லை.

2001 முதல் 2011 வரை இங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) கவனத்துக்கு வந்த சம்பவங்களில் மட்டும் இந்தியச் சிறைகளில் கிட்டத்தட்ட 13,000 பேர் இறந்துள்ளனர். புழல் சிறையில் இப்படித் தொடர்ந்து மரணங்கள் நடக்கின்றன. இவை வெறும் காவல் மரணங்கள் இல்லை, இவை நீதித்துறைக் காவலில் நடக்கும் மரணங்கள்.

இவற்றிற்கு நீதித்துறை பொறுப்பேற்க வேண்டும். இந்த மரணம் இன்று சிறைக்குள் நடந்தது என்றாலும் இதில் சிறைத்துறை, இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, தன்னுடைய காவலில் இருக்கும் ஒருவருக்கு நேர்ந்த சந்தேகத்துக்குரிய மரணம் பற்றிப் பொறுப்பேற்காத நீதித்துறை எல்லோரும் பொறுப்பாகிறார்கள்.

இம்மாதிரிக் கொலைகள் மேலிருந்து திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ராஜாராம், கண்ணன் என்கிற இரண்டு பேர் தமிழ் தேசியத் தீவிரவாதிகள் என அப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருந்த சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டைருந்தனர். அவர்களைக் கொல்லப்போவதாக காவல்துறை வெளிப்படையாக மிரட்டியது. இது குறித்து அவர்கள் புகாரும் செய்திருந்தனர்.

ஒரு நாள் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வழக்கமாக வரும் அண்ணாசாலை வழியாக வராமல் கோட்டூர்புறம் வழியாகக் கொண்டுவந்து ட்ராஃபிக்கை நிறுத்திவிட்டு அவர்களைச் சாலையில் இறக்கிச் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களின் உடல்களை வாங்கிக் கொள்ள மறுத்துப் பல மாதங்கள் அவை பிணக் கிடங்கில் அழுகிக் கிடந்தன. நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆக இப்படியான கொலைகள் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை எல்லாம் சேர்ந்து அரசியல் ஆதரவுடன் நடத்தப்படுபவைதான். அப்படியான ஒன்றுதான் ராம்குமாரின் இந்த மரணமும். இது திட்டமிட்ட கொலை என ஐயம் கொள்வதற்கான எல்லா நியாயங்களும் உண்டு.

இதுவரை இப்படி மேலிட ஒப்புதலுடன் காவல்துறை செய்த தவறுகள் தண்டிக்கப்பட்டதில்லை. என்ன செய்தாலும் காவல்துறையினர் தண்டிக்கப்படக் கூடாது என்றே அரசு செயல்படுகிறது. அதுவும் இன்றைய ஆட்சி காவல்துறையைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது. சென்ற ஆண்டு கான்சாபுரம் கிட்டப்பா என்பவரைப் பிடித்துச் சென்று திருநெல்வேலி போலிஸ் கொன்றது. நாங்கள் அதை வெளிப்படுத்தி அறிக்கை அளித்தோம். பின்னர் NHRC அதில் தலையிட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக நாங்கள் உண்மை அறியச் சென்றபோது அந்த வழக்கை ஊற்றி மூடி மீண்டும் அவர்களைப் பணியமர்த்தும் வேலை நடந்து கொண்டிருப்பதை அறிந்தோம்.
இந்த வழக்கைப் பொருத்தமட்டில் ராம்குமார் தரப்பில் விட்ட ஒரு பிழை விமர்சனத்துக்குரிய ஒன்றுதான். இந்தப் புகார்களை முறையாகச் செய்யவில்லை என்பதுதான் அது. முகநூலில் எழுதினேன் என்பது திலீபனின் பதில். நாங்கள் கொடுத்ததை அவர்கள் ஏற்கவில்லை எனவும், திலீபன் போன்றவர்கள் அதைப் புகாராகச் செய்திருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் ராம்குமாரின் வழக்குரைஞர் ராமராஜ் சொல்கிறார்.

புகாரை ஏற்க மறுத்தால் பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கலாம்; மின்னஞ்சலில் அனுப்பி இருக்கலாம். உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்திருக்கலாம். நீதிமன்றத்தையும் அணுகி இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் உடனடிப் பலன் உள்ளதோ இல்லையோ இது போன்ற பதிவுகள் முக்கியம். அது நமக்குப் பின்னால் உதவும். புகார் கொடுத்திருந்தால் கொடுப்பவருக்கு ஆபத்து எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உள்ளோமோ அந்த அளவிற்கே நமக்குப் பாதுகாப்பு. முறையாகப் புகார் கொடுக்காதபோதும் இன்று திலீபன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படியோ ராம்குமாரின் கதை முடிக்கப்பட்டுவிட்டது. ராம்குமாரின் கதை மட்டுமல்ல சுவாதி கொலை தொடர்பான இதர உண்மைகளும் இத்தோடு சமாதியாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் நாம் என்ன செய்ய முடியும்?

குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டார் எனச் சொல்லி சுவாதி கொலை வழக்கை முடிக்க விடக் கூடாது. சுவாதி கொலையில் வேறு சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற நியாயமான ஐயங்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்று அந்த விசாரணை சி.பிஐ இடம் ஒப்புவித்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும். சிறையில் ராம்குமார் “தற்கொலை” செய்துகொண்டார் என்பது ஐயத்துக்குரிய ஒன்றாக இருப்பதால் பணியில் உள்ள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு அவரது மரணம் விசாரிக்கப்பட வேண்டும்.

ஒரு கவலைக்குரிய பின்குறிப்பு

ராம்குமார் பிரச்சினையில் தலித் இயக்கங்கள் தம் உட்சாதி வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஒற்றுமையாக நீதி வேண்டிக் குரல் கொடுத்தது பாராட்டுக்குரியது. தருமபுரி இளவரசன் மரணத்தின்போதும் இந்த ஒற்றுமை வெளிப்பட்டது. இது தொடர வேண்டும்.

எனினும் தலித் எழுச்சியில் கூட நின்று தொடர்ந்து என்னால் இயன்றதைச் செய்துவருபவன் என்கிற வகையில் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற sensational பிரச்சினைகளில் காட்டப்படும் கவனமும் ஒற்றுமையும் தலித் விடுதலையை தொலை நோக்கில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடிய இதர முக்கிய பிரசினைகளில் வெளிப்படாதது மிகவும் கவலைக்குரிய ஒன்று. இரண்டை மட்டும் இங்கே மேலோட்டமாகத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். விரிவாகப் பின்னர் எழுதுவேன்.

1. மோடி அரசு பதவி ஏற்ற பின் இந்துத்துவச் சகிப்பின்மை எல்லை மீறியுள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும்தான். தலித்களின் மீதான வன்கொடுமைகள் இன்று அதிகரித்துள்ளன.

“அம்பேத்கரைப் புகழ்ந்தால் மட்டும் போதாது. அம்பேத்கரின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வேண்டும்” – இப்படிச் சொல்லியிருப்பது உ.பியில் உள்ள மிக முக்கியமான தலித் அமைப்பான ‘அம்பேத்கர் மகாசபா’ வின் தலைவர் டாக்டர் லால்ஜி நிர்மல்.
“தலித்கள் மீதான தாக்குதல்கள் அளவே இல்லாமல்போ ய்க்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினக்கான தீர்வு குறித்து உடனடித் தீர்வு இன்று தேவை. முதலமைச்சர்களின் மாநாடொன்றைக் கூட்டி இது குறித்து அழுத்தமான செய்தி ஒன்றை நரேந்திர மோடி சொல்வார் என நினைத்தோம். ஆனால் நாடாளுமன்றத்திலோ இல்லை அவரது மன்கி பாத் உரையிலோ அவர் இதைச் செய்யவில்லை.” – எனவும் அவர் சாடியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் தலித்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதைக் கண்டித்து அம்பேத்கர் மகாசபா சென்ற ஆகஸ்ட் 27 அன்று லக்னோவில் மாநாடொன்றை நடத்தியது.

இந்த மாநாட்டின் முக்கிய அழைப்பாளர் குஜராத்தில் “அமகதாபாத் – உன்னா மாபெரும் தலித் யாத்திரை” யை நடத்திய தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் உன்னா எனும் இடத்தில் மாட்டுத் தோலை உரித்தார்கள் என நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த அந்தப் பல்லாயிரம் பேர் பங்கேற்ற யாத்திரை உலகின் கவனத்தை ஈர்த்தது. குஜராத முதல்வர் பதவி விலகினார்.

இதை ஒட்டி தேசம் தழுவிய தலித் பேரியக்கம் ஒன்றை இன்று மேவானி, நிர்மல் போன்றோர் திட்டமிடுகின்றனர்.

லக்னோ மாநாட்டின்போது பேட்டியளித்த மேவானி, “மோடியின் ‘குஜராத் மாடல்’ வளர்ச்சியை நான் இங்கு தோலுரிப்பேன். தலித் சமூகத்தின் மத்தியில் பிரக்ஞை உருவாக்குவேன். தாத்ரியில் முகமது அக்லக் கொல்லப்பட்டதும் உனாவில் மாட்டுத்தோலை உரித்த தலித்கள் தாக்கப்பட்டதும் கருத்தியல் மட்டத்தில் ஒன்றுதான். ஒரு அகன்ற நோக்கில் ‘தலித் – முஸ்லிம்’ ஒற்றுமையை உருவாக்குவதற்கு வாய்ப்பாக இந்த இயக்கம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்..” என முழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அகமதாபாத் – ஊனா பேரணிக்கு ஆதரவாக நாடெங்கும் தலித் அமைப்புகள் பேரணிகளை நடத்தின. தமிழகத்தைத் தவிர.

தமிழகத்தில் தலித் அமைப்புகள் மத்தியில் ஏன் இது பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை?

இங்கே ரவிகுமார் போன்ற தலித் தலைவர்கள் அதே நேரத்தில் மோடியை ஆதரித்துப் பேசியதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மோடி தலித் வாக்குகளை மனதில் கொண்டு பேசியதை மேற்கோள்காட்டி ரவிகுமார் மோடி புகழ்பாடினார். அகமதாபாத் – ஊனா யாத்திரை இந்திய அளவில் எழுச்சியை ஏற்படுத்திக் மொண்டிருந்தபோது இங்கு இப்படி மோடி புகழ் பாடப்பட்டது.

ராம் விலாஸ் பாஸ்வான் அல்லது ராம்தாஸ் அதாவலே போல பாஜக புகழ்பாடி வேண்டுமானால் ஓரிரு தலித தலைவர்கள் அமைச்சராகலாம். ஆனால் அதன் மூலம் பலியாவது தலித் மக்களின் நலன்களாகத்தான் இருக்கும், என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. சில மாதங்களுக்கு முன் இந்தத் தொடரில் குஜராத்தில் படேல்களின் போராட்டம் குறித்து எழுதியிருந்தேன். புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக வேலை வாய்ப்புகள் அருகுவது, உயர்கல்வி அதிகச் செலவுடையதாக ஆவது ஆகியவற்றின் பின்னணியில் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மூலதனமாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் தமக்கும் தலித்கள் போல இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடத்தொடங்கியுள்ளனர். இது விரைவில் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கப்போகிறது என அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

அது இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினரான மராத்தாக்கள் இட ஒதுக்கீடு கோரிப் பேரணிகளை நடத்துகின்றனர். ராஜஸ்தானில் குஜ்ஜார்கள், உ.பியில் ஜாட்கள் என இப்படியான கோரிக்கைகளும் இயக்கங்களும் பெருகி வருகின்றன.

இவர்கள் ஆதிக்க சாதியினராக இருந்த போதும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கின்றனர். குஜராத் அரசு அவர்களுக்குப் பணிந்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடும் அறிவித்துள்ளது. சாதி மற்றும் தீண்டாமை அடிப்படைகளில் ஒதுக்கீடு அளிப்பது என்பதற்கு அவர்கள் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி உள்ளனர் என்பது மட்டுமே காரணமல்ல. அதற்கும் அப்பால் அவர்கள் சாதி, வருண அடிப்படைகளில் ஒதுக்கப்பட்டு பலவீனமானவர்களாக (vulnerable) உள்ளனர் என்பதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.

அரசின் இன்றைய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் கூட தங்களின் சாதி ஆதிக்க நோக்கில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பயன்படுத்திக் கொள்வது மட்டுமின்றி கூடவே அவர்கள் தலித்களைப் பாதுகாக்கும் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை’ யும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைப்பது கவனிக்கத்தக்கது. மராத்தாக்கள் நடத்தும் இன்றைய இந்த ‘மராத்தா கிரந்தி மோர்ச்சா’ க்களில் இதுவும் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் பா.ம.க ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலித் மக்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் இவை.

தமிழக தலித் இயக்கங்கள் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கிறிஸ்தவத்தில் சாதீயம்

வரலாற்றில் இரு நிகழ்வுகள்

இந்தியாவிற்குள் தோன்றியதாயினும், இல்லை வெளியில் இருந்து வந்ததாயினும் முதலா:ளித்துவம் உட்பட எந்த நிறுவனமும், இந்தியாவில் சாதீயத்திற்குப் பலியாகிப் போன வரலாற்றை நாம் அறிவோம். கோட்பாட்டளவில் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை முதலானவற்றை ஏற்காத மதங்களும் இதற்கு விலக்கல்ல. கிறிஸ்தவம், அது கத்தோலிக்கமானாலும், சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆனாலும் முழுமையாகச் சாதியை, தீண்டாமையை ஏற்றுக் கொண்டது, இஸ்லாம் ஒப்பீட்டளவில் இதற்கு விதிவிலக்காக இருந்ததால்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தைப் பரிந்துரைத்தார்.

கிறிஸ்தவம் சாதீயத்திற்கும் தீண்டாமைக்கும் பலியாகி இருந்த அவலத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் மட்டுமின்றி நடப்பிலும் உண்டு. நம் கவனத்தில் அதிகம் பட்டிராத இரு வரலாற்றுச் செய்திகள் இங்கே:

முதலில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு. திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்த ஜி.யு போப் (ஜார்ஜ் யுக்ளோ போப்) (1820-1908) தனது 19ம் வயதில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்து சமயப் பணிகளைத் தொடங்கினார். 1851 முதல் 1858 வரை சுமார் எட்டாண்டு காலம் தஞ்சை மாநம்புச் சாவடியில் உள்ள தூய பேதுரு ஆலய குருவாகப் பணியாற்றியதோடு, வடக்கு வீதியில் இன்றும் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்தி அதன் முதல்வராகவும் பணியாற்றினார். சங்.சீ.யு.போப்பையர் என அவர் போற்றப்பட்டார். மகாவித்துவான் இராமாநுச கவிராயர் மற்றும் ஆரியங்காவுப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அவர்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ்ச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கிய பங்களிப்பாளரான வேதநாயக சாதிரியாரும் தஞ்சையில் வாழ்ந்தார். கிறிஸ்தவ இசை மரபிலும் முக்கிய பங்களிப்புச் செய்தவர் வேதநாயகர். “எல்லாம் ஏசுவே.. எனக்கு எல்லாம் ஏசுவே..” என்கிற புகழ் பெர்ற கீர்த்தனை அவருடையதே,

வேதநாயகர், போப் இருவருமே அப்போதைய தஞ்சை மன்னர் சிவாஜிக்கு நெருக்கமாக இருந்தனர். மன்னரின் உதவி பெற்று போப் மாநம்புச் சாவடிக் கிறிஸ்தவக் குடியிருப்பில் தூய பேதுரு ஆலய வடபுறம் குளம் ஒன்றையும் வெட்டுவித்தார். இப்போது குளம் தூர்க்கப்பட்டு பிளேக் மேநிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமாக்கப்பட்ட போதும், குளத்தின் தென்கரைச் சுவற்றில் இது குறித்து வெட்டப்பட்ட கல்வெட்டு இன்னமும் உள்ளது (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1987, பக்.98).

வேளாளச் சாதியரான வேதநாயகர் சாதி வேறுப்படுகளுக்கும் வேளாளப் பெருமைக்கும் ஆதரவாக இருந்தவர். கிறிஸ்தவராக மாறிய பின்னும் தம்மைக் ‘காராள மரபினர்’ ‘கங்கை குலத்தார்’. ‘வெள்ளாளர்’ என இச்சாதியினர் தம்மைக் குறிபிட்டுப் பெருமை பாராட்டி வந்தனர்.

வெள்ளைக்காரரான போப்போ சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இவர் பொருட்டுக் கிறிஸ்தவமாயினர்.. ஆனால் ‘சின்னக்கோட்டை பெரிய தேவாலயத்தின்’ வழி வந்த வேளாளக் கிறிஸ்தவர்கள் ‘போப்புடன் வந்த புது மிசியோனரிமாரை’ மதிக்காததோடு தீண்டாமை பாராட்டவும் செய்தனர். இரு தரப்பாருக்கும் பகை மூண்டு திருவையாறு நீதிமன்றத்தில் வழக்குகளும் நடந்தன.

போப் சாதி வேறுபாட்டை ஏற்காதிருந்ததோடு வெள்ளாளருக்குச் சமமாகப் பிறரையும் நடத்தியதை வேதநாயகரால் ஏற்க இயலவில்லை. போப்பிற்குக் கடுந் துன்பம் விளைவித்ததாகவும், அவருக்கறெதிராக ‘போப்பையர் உபத்திரா உபத்திரவம்’ என்றொரு நூலையே எழுதியதாகவும் செ,இராசு குறிப்பிடுகிறார். பெத்தலகேம் குறவஞ்சியை எழுதிய கைகள் இந்த அவதூறையும் எழுதின.

எதிர்ப்புகள் முற்றவே போப் அவர்கள் இரவோடிரவாகத் தன் குடும்பத்தாருடன் தஞ்சையை விட்டு உதகமண்டலம் நோக்கி அகன்றார் என அறிகிறோம்.

இனி கத்தோலிக்கக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு: புதுச்சேரியில் ‘சாதி’இந்துக்களாகவிருந்து மதம் மாறியோர் தம்மைத் “தமிழ்க் கிறிஸ்தவராக” அடையாளப்படுத்திக் கொண்டனர். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் ‘கிறிஸ்தவப் பறையர்’ களாக ஒதுக்கப்பட்டனர். ‘தமிழ்’ அடையாளம் என்கிற தாழ்த்தப்பட்டோரை விலக்கியதாக இருந்ததற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு. ‘தமிழர் என்போர் பறையரல்லாத பிறர்’ என்பதாக வரையறுக்கப்பட்டதும், பின்னி மில் போராட்டத்தை எழுத வந்த ஒரு தமிழறிஞர், “பறையர்களை வைத்துத் தமிழர்களை அடிக்கிறார்களே” என ஆத்திரப்பட்டதும், “மாட்டுமாமிசம் தின்னாராயுள்ள தமிழர்கள்’ எனஎழுதிய பிறிதொரு தமிழறிஞர் ‘தமிழாள்’, ‘துலுக்காள்’ என்கிற வழக்கு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியதும் பிற சில எடுத்துக்காட்டுகள்.

புதுச்சேரி செல்லும் யாரும் பார்க்கத் தவறாத ஒன்று சம்பா கோவில் என மக்களால் அழைக்கப்படும் அழகிய புனித தேவாலயம் (St Paul’s Church). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்துத்துவவாதிகள் பாபர் மசூதியை இடித்த திமிரோடு இதையும் ‘முன்னாள் இந்துக் மோவில்’ என்றொரு கதையைக் கிளப்பி இடித்தொழிக்க முயன்ற கதை சிலருக்கு நினைவிருக்கலாம் (பார்க்க: நானும் பிரபஞ்சனும் இணந்து எழுதிய ‘மசூதிக்குப் பின் மாதா கோவிலா?” எனும் குறு நூல்). பல்வேறு சமூகத்தவரும் இணைந்து வாழ்கிற பன்மைக் கலாச்சரத்திற்குரிய புதுச்சேரி மக்கள் மத்தியில் இந்துத்துவத்தின் பருப்பு வேகவில்லை. அவர்களின் முயற்சி தோற்றது.

இந்தக் கோவிலில் 18ம் நூற்றாண்டில் ‘தமிழ்க் கிறிஸ்தவர்களும்’, ‘பறைக் கிறிஸ்தவர்களும்’ (சொற் பயன்பாட்டிற்கு மன்னிக்க) தனித்தனியே அமர்ந்து பூசை காண குறுக்குச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. வேதனை என்னவெனில் இப்படிக் குறுக்குச் சுவர் வைப்பதற்கு போப்பாண்டவர் 15ம் பெனுவா (Benoit XV) அனுமதி அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

1745ல் காரைக்காலில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து சேர்கிறார் ஒரு வெள்ளைப் பாதிரியார் (இவரும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கிய பாதிரியார்தான். பெயர் மறந்து விட்டது. நினைவுக்கு வந்ததும் குற்றிப்பிடுகிறேன். யாருக்கேனும் நினைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்). அவருக்கு இந்தக் கொடுமை சகிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிப் பேசுகிறார். அவர்கள் அனைவரும் 1745 அக்டோபர் 16 அன்று “கும்பலாகக் கூடி” “பெரிய சாமியாரை”ப் பார்த்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை இவ்வாறு ஒதுக்கி வைப்பது குறித்து முறையிட்டதை ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பெரிய சாமியார் இதைப் பொறுமையாகக் கேட்டதோடன்றி, அவர்களின் கருத்தை ஏற்று குறுக்குச் சுவற்றை இடித்தும் போட்டார்.

என்ன இருந்தாலும் கிறிஸ்தவ வேதத்தில் இப்படிப் பிரிவினை காட்டுவதற்கு இடமில்லை அல்லவா. பெரிய சுவாமியார் இப்படிச் சுவரை இடித்ததை சாதிக் கிறிஸ்தவர்களால் உடனடியாக எதிர்க்க இயலவில்லை. அவர்களின் ஆத்திரமெல்லாம் காரைக்காலிலிருந்து வந்த புதுச் சாமியாரை நொக்கித் திரும்பியது, சமயம் பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு அத்தகைய சமயமொன்று வாய்த்தது.

புகழ்பெற்றிருந்த தரகர் கனகராய முதலியாரின் சகோதரர் மகனும் கிறிஸ்தவருமான ஆசாரப்பமுதலியாரின் மனைவி, ஏராளமான ஆபரணச் சுமைகளுடனும், வாசனைத் திரவியங்களுடனும், விலை உயர்ந்த மெல்லிய சல்லாப் புடவையுடனும் பூசை காண வந்திருந்தார். எரிச்சலுர்ற காரைக்கால் பாதிரியார் ஒரு பிரம்பால் அம்மையாரின் கொண்டையில் ஒரு தட்டுத் தட்டி, “இப்படிச் சல்லாப் புடவையுடன் கோவிலுக்கு வரக் கூடாது. எழுந்து போ” என விரட்டியதோடு, இனிமேல் இப்படிக் கிறிஸ்தவப் பெண்கள் சல்லாப் புடவை, வீண் ஆபரண ஆடம்பரங்கள் அணியக் கூடாது, கொண்டையை முடியக் கூடாது, வாசனைத் திரவியங்கள் பூசி வரக் கூடாது எனச் சரமாரியாக ஆணையிட்டார்.

தமிழ்க் கிறிஸ்தவர்கள் பொறுப்பார்களா? கனகராய முதலியாரியாரின் மைத்துனர் கெவுனிவாச முதலியார் தலைமையில் பாதிரியாரைச் சந்தித்து இந்த நூதன உத்தரவுக்கெல்லாம் நாங்கள் பணியமாட்டோம் எனச் சொன்னதோடு அவரது அங்கியைப் பிடித்திழுத்துத் தகராறும் செய்தனர். இனி கோவிலுக்கு வரமாட்டோம் எனவும் அறிவித்தனர். பிறகு கனகராயரும் தலையிட பாதிரியார் தன் நூதன உத்தரவைத் திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

எனினும் பாதிரியாரும் பிரச்சினையை விட்டுவிடுவதாக இல்லை. ஆளுநர் டூப்ளேயைச் சந்தித்து முறையிட்டார். தமிழ்க் கிறிஸ்தவர்கள் நான்கு பேருக்கு மேல் எங்காவது கூடிப் பேசுவதைக் கண்டால் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க டூப்ளே உத்தரவிட்டான்.

அடுத்த நாள் கோவிலுக்குச் சென்ற போது முன்னர் குறுக்குச் சுவர் இருந்த இடத்தில் நாற்காலிகளை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு தமிழ்க் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்படட் கிறிஸ்தவர்களும் தனித்தனியே பூசை காணும்படிச் செய்யப்பட்டிருந்தது.

அதற்குப்பின் என்ன நடந்தது என ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பிலிருந்து அறிய இயலவில்லை என்கிறார் இந்நிகழ்வுகளைத் தொகுத்துத் தந்துள்ள அ.செபஸ்தியான் (18ஆம் நூர்றாண்டில் புதுவையின் வாழ்க்கை நிலை, ஆனந்தரங்கப் பிள்ளை ஆய்வு மையம், புதுச்சேரி, 1991).

இன்னுங்கூட தமிழகத்தில் பல ஊர்களில் இத்தகைய நிலை இருக்கத்தான் செய்கிறது. எனினும் சம்பா கோவிலில் இன்று அந்நிலைமை இல்லை.

_______________________________________________________________________________________________________

கிறிஸ்தவத்தில் சாதீயம் 2 : குண்டர் சட்ட நடுவர் குழு முன் அளிக்கப்பாட ஒரு மனு

[கிறிஸ்தவப் பாதிரிமார்களின் சாதி மனநிலையையும் செயல்பாடுகளிடும் தட்டிக் கேட்ட ஒரு நண்பர், பாதிரியார் ஒருவர் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டது. குண்டர் சட்ட நடுவர் ஆயத்தின் முன் சமர்ப்பிக்கத் தயார் செய்த மனு]

அனுப்புனர்

எம்.அமல்ராஜ், த/பெ. மாசிலாமணி,

மேல அரும்பூர், திருவெற்றியூர்,

திருவாடனை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.

பெறுநர்

உயர்திரு தலைவர் அவர்கள்,

அறிவுரைக் குழுமம், 32, ராஜாஜி சாலை,

சிங்காரவேலர் மாளிகை, சென்னை மாவட்ட ஆட்சியரகம்,

சென்னை – 600 001

அய்யா,

நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். என் அண்ணன் திரு.பெர்னர் தூஸ்பாஸ் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது ( ஆணை எண்: 7/ குண்டர் / 2014). இது தொடர்பாக கீழ்க்கண்ட உண்மைகளை உங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர அநுமதி அளிக்க வேண்டுகிறேன்.

எனது அண்ணன் பெர்னர் தூஸ்பால் மீது இதுவரை எந்தக் குற்றத்திற்காகவும் ஒரு வழக்கு கூட இல்லாதபோதும், பாதிரியாரைத் தாக்கிய சம்பவத்தில் அவர் பங்கு பெறவே இல்லாத போதும், அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும், இப்படி அவர் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணம். இந்தத் தனிப்பட்ட பகைக்கான காரணம் சில பொது நியாயங்களை அவர் கேட்டதுதான்.

கிறிஸ்தவமதத்தில், இந்து மதத்தைப்போலவே சாதி, தீண்டாமை எல்லாம் உண்டு என்பதை அய்யா அறிவீர்கள். எங்கள் மறை மாவட்டத்திலும் இந்தக் கொடுமை அதிகம். இப்பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படும் “பள்ளர்” என அழைக்கப்படும் “தேவேந்திர குல வேளாளச் சாதியினர்” தான் அதிகம். நாங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் மறை மாவட்ட பாதிரிமார்கள் மத்தியில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆதிக்க சாதியினரே அதிகாரத்தில் உள்ளனர்.

திருவிழாக்களில் எங்களைச் சமமாக உட்கார வைப்பது கிடையாது. எங்களைப் போன்ற தலித் கிறிஸ்தவர்களும், ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்களும் ஒன்றாக வாழும் ஊரில் பொதுக் கல்லறைகளில் எங்கள் சாதிக்காரர்களைப் புதைக்கவும் அனுமதிப்பதில்லை.

இன்னும் பல வகைகளிலும் எங்கள்மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு, எங்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. 2012 -13 கல்வி ஆண்டில் மட்டும் எங்கள் சாதியைச் சேர்ந்த 22 குழந்தைகளை “சரியாகப் படிப்பதில்லை” எனப் பொய்க் காரணம் சொல்லி மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிகளிலிருந்து நீக்கிவிட்டனர்.

எங்கள் சாதியில் படித்து முடித்தவர்களுக்கு, உரிய தகுதி இருந்தும், அவர்களை மறை மாவட்ட நிறுவனங்களில், குறிப்பாகப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிப்பதில்லை.

எங்கள் சாதியினருக்குக் குருத்துவப் படிப்பு முடித்து பாதிரிமார்களாகப் பணியாற்றவும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் எங்களின் சிவகங்கை மறை மாவட்டத்தைச் சேர்ந்த, எங்கள் சாதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் குருத்துவப் படிப்பு முடித்துப் பட்டம் பெறும் தறுவாயில் குருத்துவக் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுள்ளார். இதனால் அவர் உரிய தகுதி இருந்தும் பாதிரியாராக இயலாமல் போய்விட்டது. இதை எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் நடை பெறுகின்றன. இது நாளிதழ்களிலும் வந்துள்ளது. (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). இதுவரை பள்ளர் சாதியைச் சேர்ந்த 18 பேர்கள் இவ்வாறு பாதிரியாராகாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இப்படி எங்கள் சாதியினர் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படும் போது, எங்கள் மேல அரும்பூர் கிராம தலித், கிறிஸ்தவர் பிரதிநிதி என்கிற வகையில் இன்று குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள என் அண்ணன் பெர்னர் தூஸ்பால் பாதிரிமார்களிடம் சென்று எங்கள் தரப்புக் கோரிக்கைகளை முன்வைப்பார்.

என் அண்ணன் மீதுள்ள இந்த ஒரே வழக்கிற்குக் காரணமான பொய்ப் புகாரை அளித்துள்ள திருவெற்றியூர் பங்கு ஆலய குருவும், அப்பகுதி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவருமான திரு.ஆரோக்கியசாமி அடிகளார் இப்படி நியாயம் கேட்பதற்காகவே என் அண்ணன் மீது ஆத்திரம் கொண்டிருந்தார், பங்கு குரு ஆரோக்கியசாமி அடிகளார் மீது எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆபாசமாகத் திட்டியதற்காக தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு (எண் 158 /13 , தேதி 01-11-2013, தொண்டி காவல் நிலையம்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் நாளிதழ்களில் (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). வெளி வந்துள்ளது. அந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் வந்துள்ளார் என்பதையும் தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இந்தக் காரணங்களினால் என் அண்ணன் மீது தனிப்பட்ட முறையில் ஆத்திரம் கொண்டிருந்த பாதிரியார் ஆரோக்கியசாமி அவர்கள், குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தில் என் அண்ணனுக்குப் பங்கே இல்லாதபோதும்,அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும் இவ் வழக்கில் பொய்யாக இணைத்துப் புகாரளித்துள்ளார். அவருடன் நெருக்கமாக உள்ள காவல்துறையினரும் அதை ஏற்று இன்று என் அண்ணன் குண்டர் சட்டத்தில் சிறைப்படக் காரணமாகி உள்ளனர்.

(1) இது வரை என் அண்ணன் மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. (2) இதுவும் ஒரு பொய் வழக்கு (3) என் அண்ணனுக்குப் பிணையில் விடுதலை உத்தரவான பின்னரே, பழி வாங்கும் நோக்குடன் அவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப் பட்டுள்ளது (இது குறித்த விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) (4) என் அண்ணி மோட்சமேரி அவர்கள் தன் கணவர் மீது தடுப்புக் காவல் சட்டம் போடக்கூடாது என அளித்த மனுவை உத்தரவு இட்ட அதிகாரி பரிசீலிக்கவே இல்லை. (5) தடுப்புக் காவல் ஆணையில் ஆதார வழக்கின் குற்றப் பிரிவுகள் தவறாக உள்ளன (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) (6) கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் என் அண்ணனின் இரு சக்கர வாகன எண் என வேறொன்று எழுதப்பட்டுப் பின் அது அழித்துத் திருத்தப்பட்டுள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது). (7) ஆதார வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தும், அதில் பலபேர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்தும், சம்பவ இடத்திலேயே இல்லாத என் அண்ணன் மீது மட்டும் குண்டர் சட்டம் பிரயோகித்திருப்பது உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

அய்யா,

என் அண்ணன் உரிமம் பெற்று செங்கற் காளவாய்த் தொழிலைஅமைதியாக நடத்தி வந்தவர். இதுவரை எந்த வழக்கிலும் கைது செய்யப்படாதவர். அவருடைய சம்பாத்தியத்திலேயே என் அண்ணன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு வேறு வருமானம் இல்லை. மகள்கள் இருவரும் மகன் ஒருவனும்படித்துக் கொண்டிருக்கின்றனர், அண்ணனின் பராமரிப்பில் உள்ள அம்மாவும் அண்னியும் நோயாளிகள்.

இவை எல்லாவற்றையும் அய்யா அவர்கள் கருத்தில் கொண்டு அநியாயமாக என் அண்ணன் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரது குடும்பத்தில் விளக்கேற்றுமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

02 – 04- 2014

தங்கள் உண்மையுள்ள,

சென்னை

(எம்.அமல்ராஜ்}

குடிசை வாழ் மக்களின் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல்).

1960 களின் பிற்பகுதி தொடங்கி சென்னைக் குடிசை வாழ் மக்களின் பிரச்சினைகள், உலக வங்கித் தலையீட்டால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், பெரும்பான்மைக் குடிசை மக்கள் தலித்களாகவும் தொழிலாளிகளாகவும் இருந்தபோதும் அவர்களின் பிரச்சினைகள் தலித் பிரச்சினையாகவும் தொழிலாளிகளின் பிரச்சினையாகவும் பார்க்கபடாமற் போன வரலாறு, உலக மயம் மற்றும் உலகத் தரமான பெருநகர உருவாக்கங்களினூடாக சென்னையிலேயே இரு சென்னைகள் உருவாகும் அவலம் முதலிய பல பிரச்சினைகள் இந்நேர்காணலில் அலசப்படுகின்றன.

வெண்மணி: சென்னை நகரில் அடிக்கடிக் குடிசைகள் தீப்பற்றி எரிவது குறித்து உண்மை அறியும் குழுக்களை அமைத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளீர்கள். எவ்வளவு காலமாக இப்படிக் குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன? இதனுடைய பின்புலமென்ன?

அ.மார்க்ஸ்: நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே இதுபோல ஒரு மிகப் பெரிய தீ விபத்து நடந்தது. தீப்பிடிக்காத சுமார் 5000 வீடுகளை தி.மு.க அரசு அப்போது எரிந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்தது. குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் இயற்கையாகக் கூட நடக்கலாம். சமீப காலமாகச் சென்னை நகரில் நடக்கும் தீ விபத்துக்களை அரசு தானாகவே ஏற்பட்டவை எனவும் மின் கசிவு முதலியவைதான் காரணம் எனவும் சொல்லுகிறது. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை. அப்படி நம்பாததற்குக் குறிப்பாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்த விபத்துக்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அறிவிக்கப் படும் இடங்களிலேயே நடை பெறுகின்றன. திட்டங்களுக்காக அப்பகுதியிலுள்ள குடிசைகளை அகற்ற வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அம் மக்கள் மத்தியில் வந்து பேசியிருப்பார்கள். கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். மக்கள் அதற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள். திடீரென அப்பகுதிக் குடிசைகள் தீப்பற்றி எரியும். 2009 இறுதியில் வியாசர்பாடி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் 320 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அதற்குச் சில நாட்களுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக அப் பகுதியினர் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் கூட்டம் நடத்திப் பேசியிருந்தார்கள். அருகிலுள்ள பி.கே.புரம் மற்றும் புது நகரிலும் அதே காலகட்டத்தில் சுமார் 130 வீடிகள் தீப்பற்றி எரிந்தன. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக இங்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, அவர்களது வீடுகளெல்லாம் அளந்து குறியிடப்பட்டிருந்ததையும் நாங்கள் பார்த்தோம். 2009 ஜூனில் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் விரிவு ஆகிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து எரிந்தன. அடையாறு-போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவேக்காக நிலம் அளந்து கல் பதிக்கப்பட்ட இடம் இது. தீ விபத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடையாறு பூங்கா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு இம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி இவர்களிடம் “கருத்துக் கேட்கப்பட்டு” இருந்தது. இப்படி நிறையச் சொல்லலாம். சென்ற மாதத்தில் அசோக் பில்லர் அருகே அம்பேத்கர் காலனி எரிந்து 500 குடிசைகள் சாம்பலாகியதல்லவா? அருகில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திற்கு, இப்பகுதி மக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ஒரு கிரவுண்ட் தேவை எனச் சொல்லிப் பிரச்சினை இருந்தது. ஆக இந்த ‘விபத்துக்களெல்லாம்’ திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்கிற ஐயம் மக்களுக்கு உள்ளது.

இரண்டாவதாக, தற்போது குடிசைகள் எரியும்போதெல்லாம், முன்னைப்போல அதே இடங்களில் தீப்பிடிக்காத குடியிருப்புகளை அரசு கட்டித் தருவதில்லை. உடனடியாக அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, நகருக்கு வெளியே துரைப்பாக்கம், ஓக்கியம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் விரிவிலிருந்த 106 வீடுகளும் எரிந்த ஒரு வாரத்தில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு உள்ளே யாரும் நுழையக் கூடாது எனப் பலகைகளும் நடப்பட்டன. பெருங்களத்தூர் கன்னடபாளையம் அருகில் ஆள் நடமாட்டமும் எந்த வசதியும் இல்லாத பகுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு சென்ட் நிலத்தைக் கொடுத்துக் கட்டாயமாக அவர்கள் கொண்டு விடப் பட்டனர். தற்போது எரிந்துள்ள அசோக்நகர் மற்றும் மக்கீஸ் கார்டன் பகுதிகளிலும்கூட உடனடியாக வந்து பார்வையிட்ட அமைச்சர்களும் மேயரும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொன்னது, இங்கிருந்து நீங்கள் போய்விடுங்கள் என்பதுதான். எரியும் பகுதிகளில் இருந்தவர்களுக்குச் சில ஆயிரம் நிவாரணப் பணம் வழங்குவதோடு முடித்துக் கொள்ளுகிறார்கள். முன்னைப்போல அந்தந்த இடங்களிலேயே தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த விபத்துக்கள் எல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

வெண்மணி: மக்களுக்கு இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் பலமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்று அறிக்கை அளித்துள்ளீர்கள். உங்கள் கருத்து என்ன? இந்தத் தீவிபத்துகளுக்குப் பின் ஏதாவது சதி உள்ளதா?

அ.மா: எங்களின் உண்மை அறியும் குழு அறிக்கைகளில் நாங்கள் நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உள்ளவற்றைத்தான் இறுதி முடிவாகச் சொல்வது வழக்கம். அப்படிச் சாத்தியமில்லாத நிலையில் அரசும் ஊடகங்களும் முன்வைக்கும் கதைகளில் உள்ள முரண்களை அம்பலப்படுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மறைக்க முயல்கிற அம்சங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்போம். முழுமையாக நடந்ததை வெளிக் கொணர வேறு சாத்தியமான விசாரணை முறைகளைக் கோருவோம். இந்த விஷயத்திலும் நாங்கள் அப்படித்தான் சொல்கிறோம். மக்களின் அய்யங்களில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும் காரணங்கள் பலவும் நம்பும்படியாக இல்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த புகழ் பெற்ற மூர் மார்க்கெட்டைக் கொளுத்தித்தானே அங்கு கடை வைத்திருந்தோரை வெளியேற்றினார்கள். இந்தத் தீவிபத்துக்கள் எல்லாவற்றையும் மின் கசிவு என்பதுபோலக் காரணம் சொல்லி, “விசாரணையில் உள்ளது” எனப் பதிவு செய்து கொஞ்ச காலத்தில் கதையை முடித்து விடுகிறார்கள். தீயணைப்புத் துறையைக் கேட்டால், “நாங்கள் சேவை செய்யும் அமைப்பு மட்டுந்தான். விசாரிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. நீங்கள் சொல்வது போல இது திட்டமிட்ட சதி வேலையாகவும் இருக்கலாம். எந்தெந்தப் பகுதியில் தீ விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். குடிசைப் பகுதிகளுக்கு மிக அருகாக தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது, குழாய்களைக் கொண்டு சென்று தீயை அணைக்க முயலும் முன் காரியம் முடிந்து விடுகிறது. இந்தப் பகுதிகளில் நிரந்தரமாகத் தண்ணீரை அதற்கான தொட்டிகளில் வைத்திருப்பதையும் ‘சாலிட் ஹைட்ரன்ட்’ முதலான தொழில் நுட்ப வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் அரசு இதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை” என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மக்கீஸ் கார்டனில் சுமார் 200 குடிசைகள் மூன்று வாரங்களில் தவணை முறையில் எரிந்து சாம்பலாயின. எல்லாவற்றையும் மின்கசிவு எனச் சொல்லி மேல் விசாரணை இல்லாமல் வைத்திருந்தார்கள், இது குறித்து ஆயிரம் விளக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம் கேட்டோம். மக்களின் ஐயங்களைச் சொல்லி, இப்படித் தவணை முறையில் எரிவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே, அவர்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சி என்கிற கோணத்தில் இதை விசாரிக்க முடியாதா எனக் கேட்டோம். அவர் சிரித்தார். “அப்படீன்னா, அரசாங்கமே இப்படிச் செய்யுது என்று விசாரிக்கணும் என்கிறீங்களா? அது எப்படி சார் முடியும்? அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதானே செய்யும்?” என்றார். ஆக, போலீஸ் விசாரணை மூலம் இந்தத் தீவிபத்துக்கள் குறித்த உண்மைகள் வெளிவராது.

இன்று சென்னையில் நான்கைந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயலில் உள்ளன. துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுர வாயில் வரை கூவம் ஆற்றின் ஓரமாகவும், அடையாறு மலர் மருத்துவ மனையிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் வரையில் அடையாற்றங்கரை ஓரமாகவும், எண்ணூர்- பேசின் பிரிட்ஜ்- வால்டாக்ஸ் சலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாகவும் கட்டப்படும் அதி வேக உயர் நெடுஞ்சாலைகள் இவற்றில் முக்கியமானவை. இந்த நதிக்கரை ஓரங்களில்தான் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் உள்ளன. மிகவும் சுகாதாரக் கேடான, எந்த வசதியும் இல்லாத இந்தச் சாக்கடைக் கரையோரங்களில்தான் புழுக்களைப்போல நம் மக்கள் வசித்து வருகின்றனர், நகர்ப் புறத்தில் அமைந்துள்ள வாழ்வாதாரங்களுக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் காலங் காலமாக இங்கே வசித்து வருகின்றனர். இந்த வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துக் கடன் தரும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குத் தக இன்று நமது அரசுகள் நகர்ப்புறக் குடியிருப்பு உருவாக்கம் தொடர்பான தனது கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. குடிசைகள் இருந்த இடங்களிலேயே உறுதியான வீடுகளைக் கட்டித் தருவது, வசதிகளை மேம்படுத்துவது என்பதற்குப் பதிலாக, குடிசை மக்களை நகர் மையங்களிலிருந்து வெளியேற்றி தூரமாகக் கொண்டு சென்று பிற குடிமக்களிடமிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தத் தீவிபத்துக்கள் மிகுந்த சந்தேகத்திற்குரியவைகளாக உள்ளன. இதனை நமது காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிசைப் பகுதி தீ விபத்துக்கள் குறித்து நீதி விசாரணை ஒன்று வேண்டும் என்கிறோம்.

வெண்மணி: உலக நிதி நிறுவனங்களின் தலையீட்டால் மத்திய மாநில அரசுகள் குடிசை மாற்று தொடர்பான தமது அணுகள் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன என்று சொன்னீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?

அ.மா: மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று இது. கூடிய வரை சுருக்கமாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில், குறிப்பாக அறுபதுகள் தொடங்கி கிராமப் புறங்களிலிருந்து பெரிய அளவில் அடித்தள மக்கள் நகரங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அரசின் தவறான கொள்கைகள், கிராமப்புறம் மற்றும் விவசாய வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டாமை, நேரு காலத்தியத் தொழில் முயற்சிகள் யாவும் நகரங்களை மையப்படுத்தி இருந்தது முதலியன இப்படியானதற்குக் காரணங்களாக இருந்தன. இவர்கள் ஆக அடித்தள மக்கள் மட்டுமல்ல. ஆக அடித்தளச் சாதிகளையும் சேர்ந்தவர்கள். இன்று சென்னையிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதம் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், வீடற்றவர்களாகவும் உள்ளனர். வீடற்றவர்கள் என்பது நடைபாதை ஓரங்கள் முதலானவற்றில் ஒண்டியிருப்பவர்கள். இந்தக் குடிசை வாழ் மக்கள் மற்றும் வீடற்றோர்களில் 90 சதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வெண்மணி: ஆகக் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தலித் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் அல்லவா?

அ.மா: நிச்சயமாக. அதைத்தான் சொல்ல வருகிறேன். இங்கிருந்த பாரம்பரியமான தலித்கள், கடலோரங்களில் வசித்த மீனவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் முதலான உதிரித் தொழிலாளிகள் போன்றோரில் பெரும்பகுதியும் உறுதியான வீடுகளின்றிக் குடிசைப் பகுதிகளில் வசித்தவர்கள்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடது. எனினும் புதிதாக இடம்பெயர்ந்து வந்த அடித்தளச் சாதியினர் நகரத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அசுத்தமானப் பகுதிகளில், குறிப்பாக இன்று சாக்கடைகளாக மாறிப்போன நதிக்கரைகளில் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இவர்களில் 90 சதம் பேர் தலித்களாகவே இருந்தபோதும் சென்னை நகரத் தலித்கள் என்றால் பரம்பரியமாக இங்கிருந்த தலித்கள் மட்டுமே மனம் கொள்ளப்பட்டனர். புதிதாகக் குடியேறிய இந்தக் குடிசை மக்களைத் தலித்களாகப் பார்க்கும் வழமை இங்கில்லை. சாதி என்பதை பிறப்புடனும் பிறந்த நிலத்துடனும் (Nativity) தொடர்புபடுத்திப் பார்க்கும் நமது மனநிலையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

இறுக்கமான மார்க்சீய வரையறையின்கீழ் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை. வேலை உறுதி, தொழிற் கள உரிமைகள் எதுவும் இல்லாமல் துண்டு துக்காணி வேலைகள் (piecemeal works) செய்து வாழ்பவர்கள் இவர்கள். வீட்டு வேலைகள் செய்வது, கார்ப்பொரேஷன் பள்ளி வாயில்களில் நாவற் பழம், மலிவான மிட்டாய்கள் முதலியவற்றை விற்பது, பூ விற்பது, வண்ணம் பூசுவது, வண்டி இழுப்பது, மெக்கானிக் ஷாப்களில் இரும்பு அடிப்பது, சாவு மேளம் அடிப்பது, பாலியல் தொழிலாளியாகச் செயல்படுவது, சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, கட்டிடத் தொழிலாளிகளாக ஒப்பந்தக் காரர்களிடம் பணிபுரிவது, குழந்தைத் தொழிலாளிகளாக ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்வது, குப்பை பொறுக்குவது, குழி தோண்டுதல், லாரிகளில் சுமை ஏற்றுதல் முதலானக் கடின வேலைகளைச் செய்வது முதலியன இவர்களில் பெரும்பாலானோரது தொழில்கள். இந்தத் தொழில்களில் பல கடினமானவை மட்டுமல்ல, பாலியல் சுரண்டல் மட்டுமின்றிப் பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும் வழி வகுப்பவை. இப்படியான உதிரித் தொழில்களைச் செய்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை.

ஆக வர்க்க அடிப்படையில் அணி திரட்டியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைத் திரட்டியவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்.

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அணுகல் முறைகளிலிருந்து அவர்கள் பல அம்சங்களில் வேறுபட்டனர், தங்களுடைய ஆதரவு சக்திகளாக இருந்த குடிசை வாழ் மக்கள் முதலானோருக்கு உடனடிப் பலன்கள் கிட்டுமாறு சில திட்டங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தினர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் மற்றும் 1971ம் ஆண்டு நகரத் திட்டமிடல் சட்டம் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1970 டிசம்பர் 23 அன்று நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் ‘தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தை’த் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் ஏழாண்டுகளில் சென்னை நகரில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாகச் சூளுரைத்து அதற்கென 40 கோடி ரூபாய்களை ஒதுக்கவும் செய்தார். 1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி சென்னையிலுள்ள குடிசை வாழ் மக்களின் என்ணிக்கை 7.37 இலட்சம். 2001ம் ஆண்டுக் கணக்கின்படி இது 10.79 இலட்சம். இது மொத்தச் சென்னை மக்கள்தொகையில் 26 சதம். இன்றைய நிலையில், நடைபாதையில் வசிப்போர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது உயர்ந்த பட்சம் 30 சதமாக இருக்கலாம்.

திமு.க அரசு தான் அறிவித்த குறிக்கோளை நிறைவேற்ற இயலாமற் போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இது தொடர்பாக அது கொண்டிருந்த அணுகல் முறை உண்மையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று. குடிசைகளை ஒழித்து அந்த இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை உருவாக்குவது என்பதில் குடிசை மக்கள் அதே இடங்களில் குடியமர்த்தப் படுவது என்பது முக்கிய அம்சமாக இருந்தது. நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், அயோத்தி குப்பம் முதலான மீனவர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்படித்தான் உருவாயின. இராம.அரங்கண்ணல் போன்ற கட்சித் தலைவர்கள் குடிசை மாற்று வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கட்டப்பட்ட குடியிருப்புகளை யாருக்கு அளிப்பது என்கிற அதிகாரம் வாரியத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ‘ஹட்கோ’ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் உலக நிதி நிறுவனங்கள் இதில் தலையிட்டு மிகப் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தன. இதன் முக்கியமான அம்சம் என்னவெனில் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி வெகு தொலைவில் கொண்டு சென்று பிற நகர மக்களிலிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பதே. 1972லிருந்து உலக வங்கியின் தலையீடு தொடங்கியது. இதற்கென அது சில கொள்கை அறிக்கைகளையும் உருவாக்கியது, Urbanisation (1972), Sites and Services Projects (1974), Housing (1975) முதலியன இவற்றில் சில. இது குறித்து நித்யா ராமன் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (EPW, July 30, 2011). குடிசை மாற்று நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டைக் குறைத்து அதிகாரவர்க்க மயப்படுத்துவது (bureucritisation), மக்கள் நலன் என்பதைக் கட்டிலும் இந்தத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியை எவ்வாறு சிக்கனமாகவும் மீட்டெடுக்கும் வகையிலும் பயன்படுத்துவது முதலான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னதாக நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு இக்குடியிருப்புகள் வழங்கப்படும்போடு அவர்கள் மாதந்தோறும் வெறும் 10 ரூபய்கள் கொடுத்தால் போதுமானது எனவும், வைப்புத் தொகையான 500 ரூபாயையும் கூட அவர்கள் கட்ட வேண்டியதில்லை எனவும் தி.மு.க அரசு உத்தரவிட்டிரூந்தது குறிப்பிடத்தக்கது.

1977ல் மொத்தத் திட்டத் தொகையான 62 மில்லியன் டாலரில் 24 மி டாலரை உலக வங்கி கடனாக அளித்தது. சென்னை நகர வளர்ச்சித் திட்டம்1 (MUDP 1) என இதற்குப் பெயர். 1980-88ல் MUDP 2க்கு 42மி டாலரும், 1988-97 காலகட்டத்தில் தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 255 மி டாலரும் கடனளிக்கப்பட்டது. குடிசைப் பகுதி மக்களை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றாமல் அவரவர் இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை கட்டிக் குடியமர்த்துவது என்கிற தமிழக அரசின் கொள்கையை உலக வங்கி வெறுப்புடன் பார்த்தது. நகருக்கு வெளியே இடங்களைக் கண்டுபிடித்து அங்கே தங்குவதற்கான ‘வசதிகளை ஏற்படுத்தி’ தகுதியானவர்களுக்கு அளிப்பது, கூடியவரை கட்டிடங்களாகக் கட்டி அளிப்பது என்பதைத் தவிர்ப்பது, அரசு மாநியங்களைப் பெரிய அளவில் குறைப்பது, வாரியத் தலைவர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது முதலியன உலகி வங்கியின் கொள்கைகளாக அமைந்தன. கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு அளிக்கும்போது, அவர்களிடமிருந்து உடனடியாகக் கட்டுமானச் செலவில் பத்து சதத்தை வசூலிப்பது, மீதத் தொகையை 12சத வட்டியில் 20 ஆண்டுகளில் வசூலிப்பது முதலியன உலக வங்கி ஏற்படுத்திய சில மாற்றங்கள். முன்னதாக 4 சத வட்டியே பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படித் தொடங்கியதுதான் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி ஓக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது. 1986ல் மெரீனா கடற்கரையை அழகு படுத்துவது என்கிற பெயரில் மீனவர் குடியிருப்புகளக் காலி செய்ய எம்.ஜி.ஆர் அரசு நடவடிக்கை மேற்கொண்டதும், இடம்பெயர மறுத்த மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர்கள் கொல்லப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

வெண்மணி: சென்னைக்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களே கட்டுவது இல்லை என்பதுதான் அரசு முடிவா?

அ.மா: ஆமாம். அரசு அப்படித்தான் முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கீஸ் கார்டனில் குடிசைகள் எரிந்ததையொட்டி நாங்கள் குடிசை மாற்று வாரியத்தில் விசாரித்தபோது இத்தகைய பதில்தான் வந்தது. பட்டினப்பாக்கம் தவிர இனி சென்னைக்குள் குடிசை மாற்றுக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டமே இல்லை என உறுதியாகச் சொன்னார்கள். மேயர் சைதை துரைசாமியும் அதைத்தான் சொன்னர். “சென்னைக்குள் எங்கே சார் இடமிருக்கு? இருந்தா காட்டுங்க, அம்மாட்ட சொல்லி உடனே கட்டித் தருகிறேன்” என்றார்.

வெண்மணி: அவர்கள் சொல்வது உண்மைதானா? சென்னை நகர மையத்தில் இனிமேல் இடமே கிடையாதா?

அ.மா: இல்லை. அது தவறான கருத்து. தவறு என்பதைக் காட்டிலும் அது முழுப் பொய். இது குறித்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரும் “Transparent Chennai’ என்கிற அமைப்பு சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது.

அதன்படி. சென்னை நகருக்குள் புதிதாகக் குடிசைக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே இருந்த போதிலும் 1985க்குப் பின் புதிய குடிசைப் பகுதிகள் ஏதும் அராசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் புதிய குடிசைப் பகுதிகள் உருவாகும்போது அவற்றைக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டுமென்பது விதி. கடைசியாக இது குறித்த விரிவான ஆய்வு 1971ல் செய்யப் பட்டது. அப்போது 1202 புதிய குடிசைப் பகுதிகள் அடையாளம் கண்டு அறிவிக்கப் பட்டன. அதற்குப் பின் 1985ல் அந்தப் பட்டியலில் மேலும் 17 குடியிருப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.அதன்பின் நூற்றுக்கணக்கான புதிய குடிசைப் பகுதிகள் உருவாகியிருந்த போதிலும் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. சிலவற்றில் வாழ்ந்தவர்கள் உரிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

ஆனால் இப் புதிய குடிசைப் பகுதிகள் அனைத்தும் சென்னை நகரத்திற்குள் மிகக் குறைந்த சிறு நிலப் பரப்பிலேயே அமைந்துள்ளன. குடிசை மாற்று வாரியம் 2002ல் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின் படி இந்த அங்கீகரிக்கப் படாத புதிய குடிசைப் பகுதிகள் சென்னை நகரின் மத்தியப் பகுதியில் வெறும் 1.7 சதுர கி.மீ பரப்பிலேயே அமைந்துள்ளன. மொத்தச் சென்னைப் பெரு நகரப் பகுதியிலும் வெறும் 4.8 சதுர கி.மீ பரப்பில்தான் இவை உள்ளன. இது விரிவாக்கப் பட்ட கார்பொரேஷனின் மொத்தப் பரப்பில் வெறும் 1.1 சதம் மட்டுமே.

தகவல் அறியும் உரிமைச் சட்டதைப் பயன்படுத்தி பாடம் நாராயணன் அறிந்துள்ள ஒரு தகவலின்பட்டி நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சென்னை முழுவதிலும் அரசு கையகப் படுத்தியுள்ள மொத்த நிலத்தில் பயன்படுத்தப் படாது கைவசமுள்ள நிலம் 10.42 சதுர கி.மீ. ஆக அரசு நினைத்தால் இந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்வை அழிக்காமல் சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த இயலும். வெறும் 4.8 சதுர கி.மீயில் சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இவர்களை உபரியாக உள்ள 10.42 சதுர கி.மீ பரப்பில் குடியேற்ற முடியாதா என்ன?

ஆனால் சிங்காரச் சென்னைக்குப் பொருத்தமற்ற அழுக்குகளாகக் கருதி இம்மக்களை செம்மஞ்சேரி முதலான பகுதிகளுக்கு வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கும் அரசுகள் நகருக்குள் இடமே இல்லை எனச் சாதிக்கின்றன. குடிசைப் பகுதிகள் எரியும்போது அந்த இடத்திலேயோ, இல்லை 5கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றியோ அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன. சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும். வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை.

வெண்மணி: ஏன் இப்படிக் குடிசைப் பகுதிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்த்துள்ளீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அ.மா: எந்த வகையிலும் குடிசைப் பகுதி மக்களுக்குச் சட்டபூர்வமான நிலை அளித்துவிடக் கூடாது என்பதுதான். இவர்களை எப்போதும் சட்ட விரோத ஆக்ரமிப்பாளர்களாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். குடிசைப் பகுதிகள் பலவற்றில் மக்கள் தாமாகவே மின் இணைப்புகளைக் கொடுத்துக் கொள்கின்றனர். அசோக் பில்லர் அருகிலுள்ள அம்பேத்கர் காலனிக்கு நாங்கள் சென்றபோது எரிந்து போன இடங்களில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்களாகவே இணைப்புக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் இதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்த “மின் திருட்டு” அறிந்தே அனுமதிக்கப் படுகிறது. குடிசை வாழ் மக்களை பிற குடிமக்களுக்குச் சமமானவர்களாக நடத்த அரசு விரும்பவில்லை. அவர்களை ஒருவகைச் சட்ட விரோதக் குடிமக்களாகவும், குற்ற நிலையினராகவுமே வைத்துக்கொள்ள அரசு நினைக்கிறது. குடிசைப் பகுதிகளை அங்கீகரித்தால், அவர்களை நினைத்தபடி வெளியேற்ற இயலாது. சில விதி முறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கண்ணகி நகர் போன்ற இடங்களில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை பற்றி எங்கள் அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளோம். முன்பிருந்த இடங்களிலிருந்து சுமார் 20,30 கி.மீ தொலைவில் இவர்கள் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்படும்போது முதலில் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுகிறது. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் அவற்றைத் தொடர இயலுவதில்லை. பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. கடன், கந்து வட்டி, கள்ளச் சாராயம், ராவுடியிசம், தற்கொலைகள், இப்படித்தான் அங்கே வாழ்க்கை அமைந்துள்ளது.

இப்போது பெரும்பாக்கத்தில் ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்ட்த் திட்ட’த்தின் கீழ் மிகப் பெரிய மெகா குடியிருப்பு ஒன்றை அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் 950 கோடி ரூபாய் நிதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு எட்டு மாடி வளாகம். 27,158 வீடுகள் இங்கே கட்டபடுகிறதாம். ஒவ்வொரு வீடும் 200 சதுர அடியாம். இப்படியான மெகா குடியிருப்புத் திட்டம் மிக மிக மோசமானது. முதலில் இவ்வாறு அடித்தள மக்களை சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டு சென்று ஒதுக்கி வைப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து, இந்த ஜவஹர்லால் நேரு திட்டம், ராஜீவ் அவாஸ் யோஜனா (JNNURM / RAY) என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளை அந்த்தந்த இடங்களிலேயே (in situ) வைத்து மேம்படுத்துவது என்பதுதான். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது தவறு.

பெரும்பாக்கம் குடியிருப்பில் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்வதையும் நாம் நம்ப இயலாது. பாடம் நாராயணன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலின்படி அங்கே 20 அங்கன்வாடிகள் 3 நர்சரிப் பள்ளி, 5 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகள், 1 கல்லூரி, 1 விடுதி, 50 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனை எல்லாம் கட்டித்தரப்படுமாம். ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர்கள் இருப்பதாகக் கொண்டால் பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ள 27,158 வீடுகளிலும் 1,35,790 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு எப்படி 50 படுக்கை கொண்ட மருத்துவமனை போதும்? குறைந்த பட்சம் 100 அங்கன்வாடிகள் 20 பள்ளிகள் தேவைப்படாதா? அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 க்கும் மேற்பட்ட லிஃப்ட்கள் பொருத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்கு இவை ஒழுங்காக வேலை செய்யும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன.

4 அல்லது 5 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இப்படி ஒரே இடத்தில் கட்டுவது மிகப் பெரிய அபத்தம். அரசு அதிகாரிகளே இந்த முட்டாள்தனமான திட்டத்தை எதிர்த்துள்ளதாக அறிகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வெண்மணி: இன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். சென்னை நகரக் குடிசை வாழ் மக்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

அ.மா: நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. உலகமயம் பல்வேறு தளங்களில் அடித்தள மக்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. “தேச அரசுகள் தனியார் மயப் படுத்தப்படல்” (privatization of nation states) என்கிற நிலை உருவாகி வருவதாக அர்ஜுன் அப்பாத்துரை போன்றோர் குறிப்பிடுகின்றனர். அரசு செய்ய வேன்டிய பல பணிகள் இன்று தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ‘அவுட் சோர்ஸ்’ செய்யப்படுகின்றன. உலக வங்கி போன்றவை தேச அரசுகளின் கொள்கை உருவாக்கங்களிலும், நிறைவேற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்திய தொழிற் பொருளாதாரம் என்பது இன்று சேவைப் பொருளாதாரத்திற்கு முதன்மை அளித்தல் என்கிற நிலைக்குச் சென்றிருக்கிறது. ஒரு காலத்தில் நகருக்குள் இரு வர்க்கத்தினரும் வர்க்க வேறுபாடுகள் இருந்தபோதிலும் அருகருகே வாழ்ந்த நிலை இப்போது மாறி வருகிறது. உலகத் தரமான, எல்லா அகக்கட்டுமானங்களும் உள்ள நகரங்களுக்கே அந்நிய முதலீடு வந்து குவியும் நிலை உள்ளது. எனவே மைய நகர்ப் பகுதியில் குடிசைகளுக்கும், அதில் வசித்த மக்களுக்கும் இடமில்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. முன்பெல்லாம் இரு வக்கத்தினரும் தத்தம் வேறுபாடுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய பொது வெளிகள் இருந்தன. ஒரே திரை அரங்கில் பால்கனியில் மேல் தட்டினரும், தரையில் அடித்தள மக்களும் சினிமா பார்ப்பது என்கிற நிலை இன்று இல்லை. மேல் தட்டினருக்கென இனாக்ஸ் தியேட்டர்கள் உருவாகிவிட்டன. இந்தத் திரையரங்குகளில் உள்ள கான்டீன்களில் உள்ள உணவை ஃப்ரென்ச் செஃப்கள் தயாரிக்கின்றனர். ஒரே காய்கறிக் கடையில் இரு சாரரும் காய் கனிகள் வாங்குவது என்கிற நிலை இப்போது இல்லை. முன்னைப்போலக் கஞ்சத் தனம் இல்லாமல் தாராளமாகச் செலவு செய்கிற ஒரு மத்தியதர வர்க்கம் இப்போது உருவாகியுள்ளது. எனவே இரண்டு சென்னைகள் உருவாவது என்பதை இன்றைய மனநிலை ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்தப் பின்னணியிலிருந்துதான் குடிசை மக்களின் பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் பிரச்சினைகள் உருவாகும்போது அவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது என்கிற மட்டத்திலேயே செயல்பட முடியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள்தான் குடிசை மக்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராட முடியும். தீண்டாமைப் பிரச்சினைகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆற்றி வரும் பணிகள் முக்கியமானவை.. குடிசை வாழ் மக்களின் பிரச்சினையும் ஒரு தலித் பிரச்சினைதான் என்பதை நாம் முதலில் மனம்கொள்ள வேன்டும். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்த ஒரு நீதி விசாரணையை நாம் கோர வேண்டும். நகர்ப்புற உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் உபரியாக அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிலங்களின் விவரங்களைப் பெற்று, அவை இன்றுள்ள நிலை, ஆக்ரமிக்கப் பட்டிருந்தால் இன்று யாரிடம் அந்த நிலங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளைகளைக் கட்ட வேண்டும் எனப் போராட வேண்டும். இனி யாரையும் வெளியேற்றுவதில்லை என்கிற கொள்கை அறிவிப்பை நோக்கி நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 1985க்குப் பின் உருவாகியுள்ள குடிசைப் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை அங்கீகரித்து அறிவிப்புச் செய்யக் கோர வேண்டும். பெரும்பாக்கத்தில் கட்டப்படுகிற இந்த ஆபத்தான திட்டத்தைக் கைவிடக் கோரிப் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களின் ஊடாகக் குடிசை மக்களை ஓரணியில் திரட்ட வேண்டும்.