மனித உரிமைப் போராளியின் அடிப்படைத் தேவை நம்பகத்தன்மை

தமிழக NCHRO கிளை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை

இந்திய அளவில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வது தவிர, தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நின்று நீதி கிடைக்கப் போராடுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் முன்னணியில் நின்று செயல்படும் அமைப்புகளில் ஒன்று தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு. (National Confederation of Human Rights Organisations- NCHRO). கேரளத்தில் மனித உரிமைப் பணிகளில் முன்னோடியாக இருந்து செயல்பட்ட மறைந்த போராளி முகுந்தன் சி.மேனன் அவர்களால் கேரள மாநிலத்திற்குள் ‘மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது தேசிய அளவில் விரிவாக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டுவருகிறது. கேரளம் மட்டுமின்றி தற்போது தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் முதலான மாநிலங்களில் வலுவான அமைப்புகளைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரம், டெல்லி முதலிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. டெல்லியில் தலைமை அலுவலகம் உள்ளது. வரும் பிப்ரவரி 20 அன்று கோவா மாநிலத்தில் அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்திய அளவில் சிறப்பாக மனித உரிமைக் களத்தில் செயல்பட்டு வரும் முன்னோடிகளில் ஒருவருக்கு ஆண்டு தோறும் முகுந்தன் சி மேனன் பெயரில் சிறந்த மனித உரிமைப் போராளி எனும் விருதையும் NCHRO அளித்து வருகிறது. இந்த ஆண்டு அவ் விருதைப் பெறுபவர் பேரா. ராம் புனியானி அவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவ்விருது தமிழகத்தைச் சேர்ந்த அணு உலை எதிர்ப்புப் போராளி .உதயகுமாருக்கு அளிக்கப்பட்டது.

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)’ மூலம் இந்தியா முழுமையும் போராடும் இயக்கங்கங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படுவதையும் ஏராளமானோர் கைது செய்யப்படுவதையும் எதிர்த்துத் தொடர்ந்து இந்தத் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு போராடி வருகிறது. ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு நாளில் (ஜனவரி 26) சாத்தியமான பகுதிகள் எல்லாவற்றிலும் சுவரொட்டிப் பிரச்சாரம், அறைக் கூட்டங்கள் முதலானவற்றின் ஊடாக பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் கண்டிப்பதோடு டாக்டர் பினாயக் சென், கோபாட் காந்தி, சாய்பாபா, ஜிதேன் யும்நாம்,, எம்.என்.ராவுண்னி போன்ற மனித உரிமைப் பொராளிகள் மற்றும் இயக்கவாதிகள் கைது செய்யப்பட்டபோது கண்டித்தும், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காகத் தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வருகிறது.

இவை தவிர பெரிய அளவு மனித உரிமை மீறல்கள், பொய்க் கைதுகள், போலி என்கவுன்டர்கள், காவல் நிலையக் கொலைகள் நடக்கும்போது உடனடியாக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணர்கிறது. அசாம், புனே (மகாராஷ்டிரம்), முசாஃபர்நகர் (உ.பி), மாராட் (கேரளம்), அலேர் (தெலங்கானா) முதலான பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தேசிய அளவிலான குழுக்களை அமைத்து வெளிக் கொணர்ந்ததில் NCHRO வின் பங்கு முக்கியமானது. இது தவிர மாநில அளவிலும் பல்வேறு சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து இத்தகைய பணிகளைச் செய்து வருவதற்கு எடுத்துக்காட்டுகளாக செஷாசலம் காட்டில் 20 தமிழர்கள் போலி மோதலில் கொல்லப்பட்ட நிகழ்வு, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கழிவு நீர்த் தொட்டி வெடித்து ஒன்பது வட மாநிலத் தொழிலாளிகள் உட்பட பத்து பேர்கள் கொல்லப்பட்டது, திருநாள்கொண்ட சேரியில் தலித் பிணங்கள் பொது வீதியில் தூக்கிச் செல்லப்படுவது மறுக்கப்பட்ட பிரச்சினை முதலானவற்றில் NCHRO வின் பங்களிப்புகளைச் சொல்லலாம்.

உண்மைகளை அறிந்து  வெளிக்கொணர்வது என்பதோடு நில்லாமல் தொடர்ந்து அப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, வழக்குகள் பதிவு செய்து தொடர் பணிகளைச் செய்வதில் NCHRO வின் வழக்குரைஞர் குழுவின் பங்கு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அசாம் மற்றும் முசாபர் நகர் மத வன்முறைகளை ஒட்டி இவ்வழக்குரைஞர்களின் குழு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இப்பணியைச் செய்தனர்.  இப்போது முசாஃபர் நகர் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 50 வழக்குகளை NCHRO நடத்திக்கொண்டு இருக்கிறது. இவற்றில் இப்போது ஐந்து வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அதேபோல அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள சார்பாக NCHRO ‘வெளிநாட்டார் தீர்ப்பாயத்தில்’ நடத்திக் கொண்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 88. சுமார் 45 பேர்களுக்கு அவர்கள் உள்நாட்டவர்கள்தான் என்பதை NCHRO வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் யாசின் என்கிற 12 வயதுச் சிறுமி காவல் நிலையத்தில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, அக்ரம் ஷா என்பவர் காவல் நிலையத்தில் அடித்து முடமாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றையும் NCHRO தான் நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இழப்பீடுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல்நிலையத்தில் சையத் அலி என்கிற அப்பாவி முஸ்லிம் இளைஞர் காவல்துறை துணை ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் NCHRO உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் விளைவாக அந்த ஆய்வாளர் இன்று சிறையில் உள்ளார். அதேபோல கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் எனும் முஸ்லிம் இளைஞர் காவல்துறையால கொல்லப்பட்ட வழக்கில் மூன்று காவல் கண்காணிப்பாளர் உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் இறந்துள்ளனர். ஒரு உயர் அதிகாரி  தன்னை வழக்கிலிருந்து நீக்குமாறு செய்த முறையீட்டை நீதிமன்றம ரத்து செய்துள்ளது. மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்கு 8.56 இலட்சம் இழப்பீட்டையும் NCHRO தான் பெற்றுத் தந்துள்ளது.

பானைச் சோற்றுப் பதமாகச் சில வழக்குகளை மட்டுயமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த அளவிற்குத் தொடர்ந்து வழக்குகளி நடத்திக் கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை எனலாம். தமிழகத்திப் பொருத்தமட்டில் முகமது யூசுஃப், அப்துல்காதர், ஷாஜகான் முதலான அர்ப்பணிப்பு மிக்க இளம் வழக்குரைஞர்கள், ப.பா.மோகன், லஜபதி ராய், ஜின்னா முதலான புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர்களும் NCHRO வில் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவது குறிப்பிடத் தக்கது.

NCHRO வின் பணிகளையும், முக்கிய அறிக்கைகளையும் http://www.nchro.org/ எனும் இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.

2.

தமிழக எல்லைக்குள் நடந்த ஒரு எட்டு மனித உரிமை மீறல்களில்  NCHRO  அமைப்பு உண்மை அறியும் குழுக்களை அமைத்து வெளியிட்ட  அறிக்கைகளை நண்பர்கள் இங்கே தொகுத்துள்ளனர். இவை அனைத்தும் 2013 – 15 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை. இதில் நான்கு குழுக்களில் நான் பங்கு பெற்றுள்ளேன். இந்த நூலில் உள்ள அறிக்கைகளில் இரண்டு காவல் நிலையச் சாவுகள் தொடர்பானவை. ஒன்று போலி என்கவுன்டர் பற்றியது. ஒன்று இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ஒன்று பற்றியது. மற்றவை முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மற்றும் பொய்க் கைதுகள் தொடர்பானவை. ஆக, தற்போது நடை பெறும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் மாதிரிக்கு ஒன்று இதில் உள்ளது.

பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் காவல்துறை அத்துமீறல்கள் என்கிற வடிவிலேயே உள்ளன என்பதற்கு இந்தத் தொகுப்பு மேலும் ஒரு சான்றாக அமைகிறது. காவல்துறை எது செய்தாலும், அது எத்தனை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டாலும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் காவல்துறையின் உறுதி குலையும் என்கிற ஒரு மிக மோசமான அணுகல் முறையை அரசுகள் மேற்கொண்டிருக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.

இந்த முன்னுரையை எழுத்திக் கொண்டிருக்கும்போது சற்று முன் தொலை பேசியில் ஒரு செய்தி. இந்த தொகுப்பில் உள்ள கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை குறித்த அறிக்கையில் நாங்கள் கேட்டுள்ளபடி அந்த போலி என்கவுன்டரில் பங்கு பெற்ற 12 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மாவட்ட விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்திதான் அது. போலி என்கவுன்டர் வழக்குகளைக் கையாள்வது குறித்து நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் முதலியன எத்தனையோ நெறிமுறைகளை வழங்கி இருந்த போதும் அவை அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை.ஈதன் விளைவாக காவல்துறை எந்த அச்சமோ, நீதி, நேர்மை, அடிப்படை மனித இரக்கம் ஏதுமின்றி இப்படி ‘மோதல்’ என்கிற பெயரில் படுகொலைகளைச் செய்கிறது. தங்களுக்கு தண்டனை விலக்கு (immunity) உண்டு என்கிற திமிர் ஒவ்வொரு காவலர்களிடமும் உள்ளவரை இது தொடரவே செய்யும்.

இந்தக் கிட்டப்பா கொலை வழக்கைப் பொறுத்த மட்டில் அவர் மீது ஏகப்பட்ட வழ்க்குகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காகக் காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட இயலாது. அப்படிக் கொன்றால் நாம் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனாலும் கொன்றார்கள். கொலையின் பின்னணி இதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைகள் , கலவரங்கள் மிகுதியாகி விட்டன எனப் பத்திரிகைகள் எழுதின. எனவே காவல்துறை தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிணையில் வெளி வந்து, மாமியார் வீட்டில் இருந்து கொண்டு, திருந்தி வாழும் முடிவுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிட்டப்பாவைப் பொய் சொலி அழைத்துச் சென்று, முஸ்லிம் ஒருவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டுக்குள் வைத்து அவரைக் கதறக் கதறச் சுட்டுக் கொன்றார்கள் (ஜூலை 13, 2015). மிக மிக மிக ஏழைக் குடும்பம். நாங்கள் விசாரிக்கச் சென்ற போது கிட்டப்பாவின் இரண்டு வயதுக் குழந்தை அப்போதுதான் மொட்டை அடிக்கப்பட்டு, என்னவென்று தெரியாமலேயே தந்தைக்குச் சிரார்த்தம் செய்து கொண்டிருந்தான்.

போலி என்கவுன்டர்கள் என்றால் சில சடங்குகள் அடுத்தடுத்து முறையாகக் கடைபிடிக்கப்படும். ஒரு இரண்டு மூன்று போலீஸ்காரர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் ஒரு நான்கைந்து நாட்கள் அங்கு தங்கி விடுமுறையை சுகித்துக் கொண்டிருப்பார்கள். இங்கும் அப்படித்தான் நடந்தது. மருத்துவமனையில் இருந்த ஸ்டாஃப் நர்ஸ், அவர்களுக்கு ஒன்றும் இல்லை எனவும், மேலதிகாரிகளின் ஆணையினால்தான் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் வைத்திருப்பதாகவும் சொன்னார். இது போல எத்தனை நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம். மனைவி மக்களுடன் வார்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் நாங்கள் யார் எனத் தெரிந்தவுடன் கழற்றி வைத்திருந்த ‘பேன்டேஜ்’ களை அவசர அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்ட காட்சியை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் பார்த்துள்ளோம். அட்மிட் ஆகியுள்ள போலீஸ்காரர்கள் எங்கே எனக் கேட்டபோது அங்கிருந்த ஸ்டாஃப் நர்ஸ், மென்று விழுங்கிக் கொண்டு, அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க , வந்திடுவாங்க எனப் பதிலளித்ததை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கண்டுள்ளோம்.

ஆக மக்களின் உயிர்கள் மயிருக்குச் சமம் என்று காவல்துறை கருதுகிறது என்றால் அதற்கு ஆதாரமாகவும் பக்க பலமாகவும் இருப்பது அரசுதான்.

காவல் நிலையச் சாவுகளும் இப்படித்தான் நேர்கின்றன. கைது செய்வது, காவலில் வைத்து விசாரிப்பது முதலானவற்றிற்கும் உரிய நெறிமுறைகள் உள்ளன. அவை எங்கும் கடைபிடிக்கப்படுவதே இல்லை. கைது செய்து பல நாட்கள் வைத்து சித்திரவதை செய்து பின்னர்தான் நீதிமன்றத்திற்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரும்பாலும் திருட்டு வழக்குகளிள் கைது செய்யப்படுபவர்களும், தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்படுகிறவர்களுந்தான் இப்படிக் கொல்லப்படுகின்றனர். திருடிய பொருளை எங்கே வைத்திருக்கிறாய் எனக் கேட்டு அடிப்பது, சித்திரவதை செய்வது என்பன கொலைகளில் முடிகின்றன. உண்மையிலேயே திருடி இராதவன் என்ன செய்வான்? இந்தத் தொகுப்பில் மிக அழகாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள ஒரு அறிக்கை கானாத்தூர் ஹுமாயூன் என்பவர் காவல் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. வேலை செய்யப் போன இஅடத்தில் ஒரு கம்மலைத் திருடினார் எனும் குற்றச்சாட்டில் கொண்டுபோகப்பட்டவர் அவர். எஸ்.பி பட்டினம் காவல் நிலையச் சாவில் கொல்லப்பட்ட சையது முகமது வின் கொலைக்கு அந்தக் கொலையைச் செய்த காவல் துணை ஆய்வாளர் காளிதாசின் வக்கிர புத்தி காரணமாக இருந்துள்ளது. அந்தக் காளிதாஸ் சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என ஒரு தகவல் உண்டு. கொல்லப்பட்டவரோ ஒரு முஸ்லிம்.

இப்படிக் கொல்லப்படுபவர்கள், சித்திரவதை செய்யப்படுகிறவர்கள் என்ன குற்றச்சாட்டுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுதான்  அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இப்படிக் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் தலித்கள், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஏழை எளியவர்கள், பழங்குடி மக்கள் இப்படியாகவே இருப்பதை நாம் வேறு எப்படிப் புரிந்துகொள்வது? காவல் நிலையங்களுக்கு வெளியே இன்று கட்டமைக்கப்படும் வெறுப்பு அரசியல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயக்கவாதிகள் உளவுத் துறையுடன் வைத்துள்ள உறவுகளும் பெரும்பாலும் இயக்கவாதிகளுக்கு பாதிப்பில்தான் முடிகின்றன என்பதையும் இயக்கங்களில் உள்ளவர்கள் உணர வேண்டும். இப்படியான உறவுகள் முஸ்லிம் இயக்கங்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக என்ன விதமான போராட்டம் நடத்துவது, என்ன தேதியில் நடத்துவது என்பதையெல்லாம் உளவுத் துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் பழக்கம் இந்த இயக்கங்களில் உண்டு. அது அவர்களுக்குத்தான் ஏதோ ஒரு கட்டத்தில் ஆபத்தாக முடியும் என்பதற்கு பாபுலர் ஃப்ரன்ட் ஊர்வலத்தின் மீது இராமநாதபுரத்தில் நடந்த கொடுந் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு.

ஊர்வலம் செல்லும் பாதை என எழுத்து மூலம் கொடுப்பது ஒன்று. ஆனால் வாய் மொழியாக உளவுத்துறை சொல்வது வேறொன்று. கேட்ட பாதையைக் கொடுக்க முடியாது என எழுத்து மூலம் சொல்லிவிட்டு, வாய்மொழியாக, “பாய், நீங்க கேட்ட பாதை வழியாவே போகலாம் கவலைப்படாதீங்க..” எனச் சொல்வது. எல்லாம் நல்லபடியாகவே நடந்தால் ஓகே. ஆனால் பிரச்சினை என வந்தால் வாக்குறுதி அளித்த உளவுத் துறை அதிகாரி செல் போனை நிறுத்திவிட்டு எங்காவது தூங்கப் போய் விடுவார். நம்பிய ஊர்வலத்தினர் இங்கே தடியடி படவேண்டியதுதான். அப்படித்தான் இராமநாதபுரம் ஊர்வலத்தில் நடந்தது. அதுவும் என்கவுன்டர் கொலைகளைச் செய்தே பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை போன்றோரிடம் தடியைக் கொடுத்தால் வேறென்ன நடக்கும்?

ஆனால் இந்த பாபுலர் ஃப்ரன்ட்டின் சுதந்திர தின ஊர்வலத்தின் மீது தமிழக அரசுகள் மேற்கொள்ளும் அடக்குமுறையை விட ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் வேறென்ன இருக்க இயலும்? சுதந்திர தினத்தன்று அந்த அமைப்பினர் சீருடை அணிந்து தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். முறையாக அனுமதி பெற்று நடக்கும் அந்த அணி வகுப்பு அல்லது ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது அல்லது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குவது என்பதை காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப் பயிற்சி எடுக்கின்றன; மத வெறுப்பை விதைத்து திரிசூலங்களை விநியோகிக்கின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் நமது அரசியல் சட்டம் ஆகியவற்றை மதிப்பதுமில்லை. அவற்றிற்கு தாராளமாக அனுமதியும் பாதுகாப்புகளும் வழங்கும் நமது மத்திய மாநில அரசுகள் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பு நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பைத் தடை செய்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சார்பின்மையை இழந்து கொண்டுள்ளோம் என்பது தவிர இதற்கு வேறென்ன பொருள்?

இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு அவர்கள் கேட்ட பாதையில் அனுமதி வழங்காதபோதும், உளவுத்துறை அதிகாரிகள் கடைசி வரை அவர்களிடம் நீங்கள் கேட்ட வழியிலேயே அணிவகுப்பை நடத்தலாம் எனச் சொல்லியுள்ளனர். ஆனால் அணிவகுப்பு தொடங்கும்போது அந்த வழியில் போகக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்களுக்கு அனுமதி உண்டு எனச் சொல்லி வந்த அந்த உளவுத்துறை அதிகாரி செல்போனை நிறுத்திவிட்டுப் போயே போய் விட்டார். விளைவு ஊர்வலத்தின் மீது கடுமையான தாக்குதல். போலி என்கவுன்டர் ‘புகழ்’ வெள்ளத்துரை வேறு இப்போது அங்கு உயர் அதிகாரி. கேட்கவா வேண்டும்.

உளவுத்துறை அதிகாரிகளில் நல்லவர்கள் என்ன கெட்டவர்கள் என்ன, அவர்கள் உளவுத் துறை அதிகாரிகள். அவ்வளவுதான். அவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விசுவாசிகள்.ஈந்த விசுவாசிகளின் வழிகாட்டல்களை ஏற்பது குறித்த எச்சரிக்கை இயக்கங்களுக்குத் தேவை என்பதுதான் இராமநாதபுரம் அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ள அனுபவம்.

காவல்துறை அத்துமீறல்கள் என்பன பல வழிகளில் முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. ஏதேனும் ஒரு வன்முறை அல்லது தாக்குதலுடன் தொடர்புபடுத்தி உண்மையில் அந்தச் சம்பவத்தில் பங்கு பெறாதவர்களை எல்லாம் கைது செய்வது, உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தாமல் பலநாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்வது, பொய்வழக்குப் போடுவது என்னும் நிலை தொடர்கிறது. கைது செய்யப்படுகிறவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணச் சாத்தியங்கள் மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இப்படி அப்பாவிகளைக் கைது செய்து ஒரு சமூகத்தின் மத்தியில் இந்த நாட்டில் நமக்கு நீதி கிடைகாது என்கிற அவநம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம், மதுரையில் உள்ள நெல்பேட்டை முதலான ஏழை எளிய முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் உற்பத்திசாலை என்பதைப்போல காவல்துறை அணுகுவதும் விளம்பரப்படுத்துவதும் மிக மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நெல்பேட்டையில் பாரம்பரியம் மிக்க அந்த மசூதிக்குள் தொழுபவர்களைப் படம் பிடிக்க ‘சிசிடிவி’ களைப் பொருத்தினார்கள். NCHRO வழக்குரைஞர்களின் எதிர்ப்புகளுக்குப் பின் மசூதிக்குள் பொருத்தப்பட்டிருந்த காமராக்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இது போன்ற பகுதிகளில் வாழும் இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்களின் செல்போன்களைப் பயன்படுத்து அதில் உள்ள தொடர்பு எண்கள் அனைத்திற்கும் போன் செய்து எல்லோரையும் வரவழைத்து அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்வது, கிரிமினல்களைப்போல அவர்களைப் படம் எடுப்பது என profile களை உருவாக்குகின்றனர். நெல்பேட்டையில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு profile செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஒருவர். அனாதரவாக உள்ளவர்களை மிரட்டி அவர்களைக் காவல்துறை உளவாளிகளாக (informers) இருக்கக் கட்டாயப்படுத்துவது என இப்பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் அத்துமீறல்களும் சட்ட விரோதமாக குடிமக்களின் அந்தரங்கங்களில் தலையிடல்களும் நடக்கின்றன. நெல்பேட்டையில் கணவனை இழந்து, சொந்தத் தொழில் செய்து தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வரும் ஒரு பெண்ணை NCHRO குழு சந்தித்தது. தன்னை ஒரு informer ஆக இருக்க மதுரை காவல்துறை எத்தனை கொடூரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சொல்லிக் கேட்டபோது அதிர்ச்சி அடைந்தோம்.

இப்படி ஒரு சமூகத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகம் வாழும் சில பகுதிகளையும் “சந்தேகத்திற்குரிய சமூகங்களாகவும்”. “சந்தேகத்திற்குரிய  பகுதிகளாகவும்” கட்டமைப்பது அடிப்படை மனித நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமானதும், தேச ஒற்றுமையை அழிப்பதும் கூட.

இதை எல்லாம் தட்டிக் கேட்கும் அளவிற்கு அரசியல் கட்சிகள் எதுவும் தார்மீக பலம் உள்ளவையாக இப்போது இல்லை. இன்னொரு பக்கம் அரசு ஆதரவுடன் வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல் இரையைப் பிடிக்க வரும் ஒரு பாம்பு போலத் ட்ய்ஹிறந்த வாயுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்து நெளிந்து இங்கே வந்து கொண்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரங்களிலும், சிறுபான்மையர் செறிந்து வாழும் பிற பகுதிகளிலும் இந்த நிலையை யாரும் காண இயலும்.

3

உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து அறிக்கை ஒன்றை எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. அது ஒரு கவனம் மிக்க கடினமான பணி மட்டுமல்ல. மிகவும் அறம் சார்ந்த பணியும் கூட. இரு தரப்பு நியாயங்களையும் கேட்டு தீர்ப்பு எழுதும் ஒரு நீதிபதியின் பணியை விட இது கடுமையானது. ஒரு நீதிபதிக்கு முன் எல்லாத் தரவுகளும் ஆய்வுக்கு வைக்கப்பட்டிருக்கும், வழக்குரைஞர்களின் வாதமும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். தவிரவும் நீதிபதிக்கு அபரிமிதமான அதிகாரமும் கையில்  உண்டு. அவர் கேட்கும் தரவுகளை அரசு தந்தாக வேண்டும். ஆனால் ஒரு உண்மை அறியும் குழுவோ இவை எதுவும் இல்லாமல் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீண்ட வரலாறு உடைய ஒரு பிரச்சினையை ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

சில நேரங்கலில் ‘போஸ்ட்மார்டம் ரிபோர்ட்’ போன்ற தகவல்கள் கூட நாம் போகிற நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் இருக்கும். அல்லது தர இயலாது, வேண்டுமானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தட்டிக் கழிக்கக் கூடும். இத்தனைக்கும் மத்தியில்தான் நாம் அறிக்கையை எழுதியாக வேண்டும்.

இத்தகைய தருணங்களில் எல்லா உண்மைகளையும் நம்மால் சொல்லிவிட இயலாது. சொல்லவும் தேவை இல்லை. எந்த விடயங்களில் ஐயம் உள்ளதோ, எந்த விடயங்களில் உண்மைகள் உள்ளதாக நாம் நமக்குக் கிடைத்த வாக்குமூலங்களின் ஊடாகவும் சாட்சியங்களின் ஊடாகவும் அறிகிறோமோ அவற்றை கவனப்படுத்தி அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும் எனச் சொன்னால் அதுவே பெரிய விடயம். ஒரு நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை ஆர்வலர்களின் குழு இவ்வாறு ஐயங்களை முன் வைக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிய வைப்பதே நமக்குக் கிடைக்கிற முதல் கட்ட வெற்றியாக இருக்கும்.

“நம்பகத்தன்மை” என்று சொன்னேன். ஒரு உண்மை அறியும் குழுவின் மிகப் பெரிய பலம் மட்டுமல்ல, ஒரே பலமும் அதுதான். இவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள், தாங்கள் கொண்டுள்ள கருத்து நிலையின் அடிப்படையில் பொய்யான தகவல்களையோ, மிகைப்படுத்திய தகவல்களையோ சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையைச் சம்பாதிப்பது ஒரு மனித உரிமைப் போராளிக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

இதன் பொருள் நாம் “நடுநிலையாளர்களாக” இருக்க வேண்டும் என்பதல்ல. “நடுநிலையாளர்கள்” மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதும் அல்ல.

நாம் எப்படி நடுநிலையாளர்களாக இருக்க இயலும்? காவல்துறை தன்னிடமுள்ள அபரிமிதமான அதிகாரத்தை வைத்து ஒரு எளிய மனிதனைச் சட்ட விரோதமாகக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து கொல்லும்போதும், ஒரு ஆதிக்க சாதிக் கும்பல் தலித் ஒருவரை எரித்துக் கொல்லும்போதும், ஒரு பெரும்பான்மைப் பிரிவு இன்னொரு சிறுபான்மையின் உரிமைகளையும் உயிரையும் பறிக்கும் போதும் எப்படி நாம் நடுநிலையாளர்களாக இருக்க முடியும்? நாம் பாதிக்கப்பட்டவர்களோடுதான் நிற்க இயலும்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. நடுநிலையாளர்கள் மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதல்ல.  சார்புடையவர்களும் உண்மையைச் சொல்ல இயலும். நாம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்புடையவர்கள். உண்மையைப் பேசுவது நமக்கு இன்னும் எளிது. பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை உள்ளதை உள்ளபடிச் சொன்னாலே நமக்குப் போதும். அதுதான் நமக்குப் பலம். அந்தான் நம்மைக் காப்பாற்றும். “உண்மை வெல்லும்” என்பது வேறெதற்குச் சரியோ இல்லையோ ஒரு உண்மை அறியும் குழுவுக்கு அது வேத வாக்கியம்.

உண்மை அறியும் குழுவில் செல்பவர்க்கு இது ஒரு சவாலான பணி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மட்டுமல்ல. பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடச் சொல்வது எல்லாம் உண்மை என நாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவற்றில் மிகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. பொதுவாகவே மிகைப்படுத்தும் பண்பு மக்களுக்கு உண்டு சற்றுப் பெரிய ஒரு பாம்பைப் பார்த்து விட்டு வந்தால், “தொடைப் பெரிசு ஒரு பாம்பைப் பார்த்தேன்” என்பார்கள். சில நேரங்களில் வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பதும் உண்டு. அதே போல அதிகாரிகள் அல்லது ஆதிக்க நிலையில் உள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக நாம் மறுத்துவிட வேண்டியதும் இல்லை. உண்மை வெல்லும் என்பதுபோல “எல்லாவற்றையும் சந்தேகி” என்பதும் நமக்கு ஒரு வழிகாட்டு நெறிதான். ஆனால் சந்தேகத்தின் ஊடாக அங்கே தெரியும் உண்மையின் கீற்றுகளை நாம் முற்றாகப் புறந்தள்ளவும் வேண்டியதில்லை.

நாம் மனித உரிமை மீறல்களைக் கண்டு உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். அந்த உணர்ச்சிவயம்தான் நம்மை இந்தப் பணிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த உணர்ச்சி வயத்தை நாம் நம் அறிக்கையில் வெளிப்படுத்தாமலும் இருக்க முடியாது. வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதும் இல்லை. ஒரு மிகப் பெரிய மனிதத் துயரம் நம் கண்முன் விரிந்து கிடக்கும்போது நாம் எப்படி உணர்ச்சிவயப்படாமல் இருக்க இயலும்? நாம் எப்படி அதிலிருந்து விலகி நின்று எதையும் பேச இயலும்? நாம் அந்தத் துயரத்தோடும் துயரர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் எழுத முடியும். நாம் பாதிக்கப்பட்டவர்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதா இல்லை, உண்மைகளைக் கண்டறிவதற்காகவும் சொல்வதற்காகவும் நம்மை அவர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதா என்பதல்ல பிரச்சினை. எப்படி இந்த இரண்டு நிலைகளையும் ஒரு புள்ளியில் குவிப்பது என்பதுதான் ஒரு மனித உரிமை எழுத்தாளனின் முன் உள்ள சவால். மிகவும் புறவயமாக விலகி நின்று எழுதும்போது அது வரட்டுத்தனமாக மட்டுமல்ல அது அடிப்படை மனித நேய நெறிகளுக்கு எதிரானதாகவும் அமையும்; அதே நேரத்தில் வெறும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து எழுதும்போது அது உண்மையற்றும் திரிக்கப்பட்டதாகவும் போய்விடக் கூடும்.

அதேபோல கோரிக்கைகளை வைக்கும்போது அவை உச்சபட்சமாக இருக்கும் அதே நேரத்தில் அவை காரிய சாத்தியமானதாகவும், நடைமுறையில் உள்ள எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அந்த எல்லைகளைக் கடக்க முயல்வதாகவும் அமைதல் அவசியம்.

இந் நூலிலுள்ள அறிக்கைகள் அனைத்தும் இந்த வகையில் எழுதப்பட்டவை என நான் உரிமை கோரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த லட்சியங்களுக்கு மிகவும் நெருக்கமாக முன்னேறிச் செல்வதுதான் எங்கள் நோக்கம். எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரது மனித உரிமை மீறல்களையும் பேசுவது என நாங்கள் எங்களை குறுக்கிக் கொள்ளவில்லை. எங்கள் அறிக்கைகளில் பலவும் தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் பாதிப்புகளைப் பேசுவதாக அமைவதென்பது இன்றைய சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான். அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காக் நாங்கள் கான்சாபுரம் கிட்டப்பாக்களின் பிரச்சினைகளை விட்டுவிடுவதுமில்லை.

இப்போதெல்லாம் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் ஏராளமான மனித உரிமை அறிக்கைகள் வெளிவருவது, அப்படிப் ‘பிரபலமாகாத’ பிரச்சினைகள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது என்கிற ஒரு நிலை ஏற்பட்டு வருவதையும் கவனிக்கலாம். நாங்கள் இந்த அம்சத்திலும் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறோம்.

மனித உரிமைப் பணி என்பது அவ்வளவு புகழுக்குரிய பணி அல்ல. நிறைய உழைப்பையும் செலவையும் கோரும் பணி. நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்கக் கூடிய பணியும் கூட. இந்தப் பணியில் ஈடுபாட்டுடன் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் தோழர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். பலநேரங்களில் சில நல்ல அதிகாரிகள் எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைத்துள்ளார்கள். அதேபோல எங்கள் அறிக்கைகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையங்கள் முதலியனவும் எங்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. எல்லோருக்கும் நன்றிகள்.

அ.மார்க்ஸ்,

பிப் 09, 2016

தலைவர், மனித உரிமை அமைப்புகLiன் தேசியக் கூட்டமைப்பு (NCHRO)

சென்னை