விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு – உண்மை அறியும் குழு அறிக்கை

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் (வயது 28, த/பெ கணேசன்) என்பவரின் வலது காலும் கையும் துண்டிக்கப்பட்ட செய்தி இந்த மாதத் தொடக்கத்தில் தமிழக அளவில் பிரச்சினையாகியது. செந்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள தோகைப்பாடி கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகளைத் (வயது 17) தான் காதலித்ததாகவும், அந்தக் காரணத்திற்காகவே சென்ற ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி வாக்கில் தான் தலையில் தாக்கப்பட்டு கை கால்கள் துண்டிக்கப்பட்டு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகில் உள்ள ரயில் பாதையை ஒட்டிய புதரில்  வீசப்பட்டதாகவும் சென்ற ஜூலை 3 அன்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் அளித்தவுடன் இப்பிரச்சினை பரபரப்பானது.

கடந்த சில ஆண்டுகளாக இப்படி சாதி மீறிய காதல்களுக்கு எதிராக இங்கு பா.ம.க முதலான கட்சிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதும், தலித்கள் தவிர்த்த இதர ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதும், சாதி அமைப்புகள் காதலர்களை, அதிலும் குறிப்பாக காதலிக்கும் ஆண் தலித்தாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வன்முறையாகப் பிரிப்பதற்கென கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதும் சமூக அமைதியை நாடுவோர் மத்தியில் ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது. தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் முதலானோர் இவ்வாறு பிரிக்கப்பட்டுப் பின் ரயில் பாதை அருகில் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்த சம்பவங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள பின்னணியில் விழுப்புரம் செந்தில் தானும் ஒரு தலித் என்பதாலும் ஒரு வன்னியர் பெண்ணைக் காதலித்ததாலும் இவ்வாறு கை, கால் துண்டிக்கப்பட்டு ரயில் பாதை ஓரத்தில் வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியது எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

ஆனால் அடுத்த சில நாட்களில் இப் பிரச்சினையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பீமராஜ் மேற்பார்வையில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் .அண்ணாதுரை தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து செய்தி வெளியிடப்பட்ட அதே நேரத்தில் (ஜூலை 5), காவல்துறை தரப்பில் இன்னொரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. தோகைப்பாடி கிராமத்தில் செந்தில் குறிப்பிடும் பெயரில் ஒரு பெண்ணே இல்லை எனவும், செந்திலை அப்படி யாரும் காதலித்ததற்காக ஆதாரம் இல்லை எனவும், செந்தில் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், அவர் பெயர் ‘போக்கிரிகள் பட்டியலில்’ இருப்பதாகவும் குறிப்பிட்ட காவல்துறையின் அறிக்கை செந்திலுக்கு ஏற்பட்டது ஒரு ரயில் விபத்துதான் என்கிற பொருளில் அமைந்திருந்தது. இது மீண்டும் தமிழக அளவில் கவனத்தை ஈர்த்தது.

ஒருபக்கம் இது சாதி வெறியர்கள் காதலர்களைப் பிரிப்பதற்காகச் செய்த திட்டமிட்ட வன்முறை எனவும், இன்னொரு பக்கம் செந்தில் தரப்பு சொல்வது பொய் எனவும் இரு கருத்துக்கள் இப்போது மேலெழுந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர்,  மனித உரிமைகளுக்கான  தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas – NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4. பி.வி.ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்,

5. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

6. முகிலன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி,

7. கு.கோ.சாக்ரடீசு, திராவிடர் விடுதலைக் கழகம், விழுப்புரம்.

8. வி.செந்தில், சமூக ஆர்வலர், திண்டிவனம்,

இக்குழுவினர் முழுமையாகவும் பிரிந்தும் சென்ற ஜூலை 7,10,11 ஆகிய தேதிகளில் விழுப்புரம் சென்று சகல தரப்பினரையும் சந்தித்தோம். சிகிச்சைக்குப் பின் தற்போது கே.கே.சாலை சுடுகாடு அருகில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ள செந்திலை இருமுறை சந்தித்தோம். அவரது விதவைத் தாய் ஆதிமா, கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் செந்திலை மருத்துவ மனைக்கு இட்டுச் சென்ற அவரது தம்பி ராஜசேகர், வேற்றுசாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக செந்திலின் கை கால் வெட்டப்பட்டது எனும் பொருளில் புகார்க் கடிதம் எழுதிக் கொடுத்த வழக்குரைஞர் பிரபு ஆகியோரிடமும் பேசினோம்.

செந்திலைக் காதலித்ததாகச் சொல்லப்படும் பெண், அவரது தந்தை அங்கப்பன், அம்மா நாகம்மாள் ஆகியோரையும் அவர்கள் வீட்டிற்கும் இரு முறை சென்று விரிவாகப் பேசினோம். சம்பவம் நடந்த அன்று தன்னை இரும்புக் கம்பியால் மண்டையில் அடித்து மயக்கமடையச் செய்து தன் கை கால் துண்டிக்கப்பட்டதற்குக் காரணமானவர் என செந்திலால் குற்றம் சாட்டப்படும் பால்காரர் சிவப்பிரகாசத்துடன் (பெண்ணின் மாமா) தொலை பேசியில் உரையாடினோம்.

சம்பவம் நடந்த அன்று கை கால் துண்டிக்கப்பட்டுக் கிடந்த செந்திலை முதன் முதலில் கண்ட இந்திரா நகரைச் சேர்ந்த பெயின்டர் அய்யப்பன், ஆம்புலன்சுக்கு (108) போன் செய்து வரவழைத்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். செந்தில் ஓட்டுனராகப் பணி செய்த ‘ஆண்டவர் பஸ்’ லீஸ் உரிமையாளர் ரவியையும் விசாரித்தோம்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மாம்பழப்பட்டு ரயில்வே கேட்டில் பணியிலிருந்த கணபதியைச் சந்தித்து, சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ‘டிராக் மேன்’ ரிதீஷ் அது தொடர்பாக அனுப்பிய தகவல் கடிதப் பிரதியைப் பெற்றுக் கொண்டோம். சம்பவ தினத்தன்று காட்பாடியிலிருந்து விழுப்புரம் செல்லும் அந்தப் பாசஞ்சர் ரயில் (எண்: 56885), சம்பவ இடத்தை 40 கி.மீ வேகத்தில் இரவு 08.40 மணி அளவில் கடந்தது என்பதையும் அவரிடமிருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக இது குறித்து விசாரித்து வரும் தனிப்படைத் தலைவர் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் எங்கள் குழுவினர் விரிவாகப் பேசினர்.

பத்திரிகையாளர்கள் சிலரும், தமிழ் வேங்கை, இளங்கோ முதலான அப்பகுதியில் இயக்கப் பணி புரிவோரும் தங்களுக்குத் தெரிந்த சில தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சம்பவம் நடந்த மாம்பழப்பட்டு ரயில் கேட் அருகில் உள்ள இடத்திற்கு இரு முறை சென்று பார்வையிட்டோம். அப்பகுதி மக்கள் இயற்கை கடன்களைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகவும், குடிப்பவர்களுக்கு மது அருந்தும் இடமாகவும் அது உள்ளது. 

நடந்த சம்பவம் 

இது குறித்து முன்வைக்கப்படும் இரு எதிர் எதிரான கருத்துக்கள்:

1. செந்தில் தரப்பில் சொல்லப்படுவது:

செந்தில் அந்தப் பெண்ணை இரண்டாண்டுகளாகக் காதலிப்பதாகச் சொல்கிறார். அதாவது அந்தப் பெண்ணும் 10ம் வகுப்பு (அப்போது வயது 15) படிப்பதிலிருந்து தன்னைக் காதலிப்பதாகவும், தான் பொட்டு, அலங்காரப் பொருட்கள் முதலான சிறு சிறு பரிசுப் பொருட்களெல்லாம் வாங்கித் தந்துள்ளதாகவும். அந்தப் பெண்ணும் தினசரி பூ கொண்டு வந்து தான் ஓட்டும் மினி பஸ்சில் உள்ள சாமி படத்துக்குப் போட்டுச் செல்வாள் எனவும் சொல்கிறார். ஆனால் கடந்த 6 மாத காலமாக அந்த வீட்டாரின் வற்புறுத்தலால் தன்னிடம் அவள் பேசுவதில்லை என்றார். முன்னதாக பெண்ணின் வீட்டருகில் உள்ள கோவிலை ஒட்டி அவர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்பெண் தன்னை சந்திக்க மறுத்த கடைசி ஆறு மாதத்தில் தான் பல முறை அவர்கள் வீட்டுப் பக்கம் சென்றது உண்மைதான் எனவும் அதை ஒட்டி அப் பெண்ணின் தாய்மாமனுக்கும் தனக்கும் ஒரு தள்ளு முள்ளு வந்ததாகவும், அந்த அடிப்படையில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு முறை (மார்ச் 17, 2015) தாய் மாமன் கொடுத்த புகாரில் தான் 11 நாட்கள் ரிமான்ட் செய்யப்பட்டுப் பின் நிபந்தனை ஜாமீனில் தினசரி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்ததையும் ஒத்துக் கொள்கிறார்.

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பின்னும் ஒரு முறை தன் மீது புகார் கொடுக்கப்பட்டுத் தானும் தன் அம்மாவும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டோம் எனவும் அங்கு இனிமேல் எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை எனத் தான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வந்ததாகவும் சொல்கிறார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண்ணின் மாமன் சிவப்பிரகாசம். “உன்னைக் கை காலை வெட்டாமல் விடமாட்டேன்” என எச்சரித்ததாகவும் உடன் செந்திலின் தாய் அவர்கள் காலில் விழுந்து ‘இனி எதுவும் நடக்காது, அப்படிச் செய்துவிடாதீர்கள்’ எனக் கெஞ்சியதாகவும் தாய், மகன் இருவரும் கூறினர்.

அடுத்த நாள், அதாவது சம்பவம் நடந்த ஏப்ரல் 16, 2015 அன்று காலைமுதலே தான் குடிக்கவில்லை எனவும், மாலை 8 மணி அளவில் மாம்பழப்பட்டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் அருகில் உள்ள இரட்டைத் தென்னை மரங்கள் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் பெண்ணின் மாமன் சிவப்பிரகாசம், “பறப் பயல் உனக்கு கவுண்டர் பொண்ணு கேக்குதா” எனச் சொல்லிக் கொண்டே ஒரு இரும்புத் தடியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் அதன் பின் சுமார் இரண்டு வாரம் கழித்துக் கண் விழித்தபோது தான் கால், கை துண்டிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்ததாகவும் செந்தில் கூறினார்.

தலையில் அடித்துப் பின் கை, கால் துண்டிக்கப்பட்டதைத் தான் தெரிந்திருந்தாலும் தானும் தாயும் புதுச்சேரியில் இருந்து (ஏப்ரல் 17 முதல் ஜூன் 31 வரை) வைத்தியம் பார்ப்பதிலேயே கவனம் செலுத்தியதால்தான் உடனடியாகப் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்றார் செந்தில். அவரது அம்மாவும் அதையே சொன்னார்.

ஏற்கனவே ‘பெண்கள் வதைத் தடுப்பு’ வழக்கொன்றில் தனக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அது மேல் முறையீட்டில் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ளும் செந்தில், “ஆனால் அது முழுவதும் ஒரு பொய் வழக்கு” என்றார்.

நாங்கள் விடை பெறும்போது, “என்னைக் காதலிக்கலன்னு அந்தப் பொண்ணு பொய் சொன்னாலும் அது பத்திக் கவலை இல்லை. அது யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கட்டும். ஆனா என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினவங்களை மட்டும் சும்மா விடக் கூடாது” என்றார்.

2. இனி பெண் தரப்பில் சொல்வது:

இரண்டாண்டுகளாகத் தான் அந்தப் பையனைக் காதலிப்பதாகச் சொல்வது பச்சைப் பொய் என்று அந்தப் பெண் மறுத்தார். இல்லை நீங்கள் இருவரும் விரும்பிப் பழகியதாகச் சொல்லப்படுகிறதே என இரண்டாம் முறை நாங்கள் கேட்டபோது அந்தச் சிறு பெண் முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளித்தது. இதுவும் ஒரு ஏழைக் குடும்பந்தான். அந்தப் பகுதியில் வன்னியர் குடும்பங்கள் 5 மட்டுமே உள்ளதாகச் சொன்னார்கள் . தலித்களும் வன்னியர்களும் சேர்ந்து வாழ்கிற பகுதி அது. தான் எப்போதும் அந்த மினி பஸ்சில் தான் பள்ளிக்குப் போய் வருவதாகவும் கடந்த ஆறு மாத காலமாக அந்தப் பையன் செந்தில் தன்னை ரொம்பத் தொல்லை செய்ததாகவும் அந்தப் பெண் கூறினார். விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து செந்தில் தன்னைப் பின் தொடர்ந்து ஒரு நாள் வந்ததாகவும், மற்றொரு நாள் பஸ்சிலேயே பின்னால் உட்கார்ந்து பேசிக் கொண்டு வந்ததாகவும், இறங்கும்போது, “செருப்பால் அடிப்பேன்” எனத் தான் சொல்லிவிட்டு இறங்கியதாகவும் கூறினாள். தனக்குப் பரிசுப் பொருள் எல்லாம் தந்ததாகச் சொல்வது பொய் எனச் சொன்னபோது அப் பெண்ணுக்கு மறுபடியும் கோபம் வந்தது.

பிரச்சினை இப்படியான பிறகு செந்தில் குடித்துவிட்டு அப் பெண்ணின் வீட்டு வாசலில் வந்து படுத்திருப்பது, வீட்டுக்குப் பின்னே உள்ள ரயில் பாதையில் வந்து உட்கார்ந்து கொள்வது என்பது தொடர்ந்துள்ளது. ஒரு முறை இது தொடர்பாக அப் பெண்ணின் மாமன் முறையுள்ள பால்காரர் சிவப்பிரகாசம் வழியில் கோபமாகப் பேச ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தன் பால் வண்டியை செந்தில் தள்ளி உடைத்துவிட்டதாக சிவப்பிரகாசம் புகார் கொடுத்து செந்தில் கைது செய்யப்பட்டு 11 நாள் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார். நிபந்தனை ஜாமீனில் வந்த பின்னும் செந்தில் இப்படிப் பிரச்சினை செய்யவே மீண்டும் போலீசில் புகார் கொடுத்ததாகவும், போலீஸ் கூப்பிட்டு விசாரித்தபோது இனி அப்படிச் செய்வதில்லை என செந்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும், அவரது தாய் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும் கூறினர்.

ஏப்ரல் 16ந் தேதியன்று மாலையில் மாம்பழப்பட்டு எக்ஸ்சேஞ்ஜ் அருகில் இரும்புக் கம்பியால் செந்திலை அடித்தது, அவரது கை, காலை வெட்டியது என்பதெல்லாம் முழுப்பொய் என சிவப்பிரகாசமும் அந்தப் பெண்ணின் பெற்றோரும் கூறினர்.

 எமது பார்வைகள்

  1. கடந்த ஆறு மாதகாலமாக இந்தப் பெண்ணை செந்தில் தொடர்ந்த நிலையில் செந்திலுக்கும் பெண்ணின் குடும்பத்தாருக்கும் பகை இருந்துள்ளது உண்மை. செந்தில் அப் பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்டதை மற்றவர்களும் உறுதிப் படுத்துகின்றனர். செந்தில் மீது இந்தப் புகார் வந்தவுடன் தான் விசாரித்து உறுதி செய்து செந்திலை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக ஆண்டவர் பஸ்சை லீஸ் எடுத்து நடத்தும் ரவி கூறினார். மூன்றாண்டுகளாக செந்தில் தன்னிடம் வேலை செய்தாலும் மூன்றாண்டும் மினி பஸ் ஓட்டுனராக அவர் தொடர்ந்து இருந்ததில்லை என்றும், இடையில் அவர் அவ்வப்போது வேலையை விட்டு நிற்பது, அல்லது தங்கள் நிறுவன லாரிகளை ஓட்டுவது என இருந்தவர்தான் செந்தில் என்றார்.
  2. கடந்த ஆறுமாதத்தில் இரு தரப்பினருக்கும் இருந்த பிரச்சினைகள், வழக்குகள் ஆகியவற்றைப் பொருத்த மட்டில் இரு தரப்பினர் சொல்வதும் ஒன்றாகவே உள்ளன. வேறுபடும் புள்ளி ஒன்றுதான். அந்தப் பெண்ணுக்கும் செந்திலுக்கும் இடையில் விருப்பபூர்வமான காதல் இருந்தது என செந்தில் தரப்பில் சொல்லப்படுகிறது. பெண்ணும் அவளது பெற்றோரும் அதை முற்றாக மறுக்கின்றனர். அந்தப் பெண்ணுக்குத் தன் மகன் ஆயிரம், இரண்டாயிரம் எனச் செலவழித்ததாக பெண்ணின் தாய் குறிப்பிட்டார். செந்திலிடம் நாங்கள் கேட்டபோது பொட்டு, பூ, என சிறு சிறு பண்டங்கள் என்று வாங்கித் தந்ததாகத்தான் எங்களிடம் கூறினார். அந்தப் பெண்ணோ கோபத்தோடு அதை மறுத்தாள். இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இந்த கல்லூரி நேர பஸ் பயணம் என்பது மாணவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவம். ஓட்டுநர், நடத்துநர் என்பவர்களோடு மாணவர்களின் உறவு மிக அந்நியோன்யமாக இருக்கும். மாணவர்களின் பெயரைச் சொல்லி நடத்துநர் கூப்பிடுவார். என்ன ரெண்டு நாளா காணோம் எனக் கேட்பார். இந்த டிரஸ் நல்லாருக்கே என்பார். மாணவிகள் பஸ்சில் உள்ள சாமி படத்திற்குப் பூ கொண்டு வந்து போடுவார்கள். பஸ்சில் ஜாலியான பாடல்கள் அந்த நேரத்தில் ஒலிக்கப்படும். மாணவர்களே ஒரு பென் டிரைவைக் கொண்டு வந்து இந்தப் பாட்டைப் போடு என்பார்கள். ஆண்டு இறுதியில் ‘பஸ் டே’ கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். இப்படியான பின்னணியில் எத்தகைய நட்பு செந்திலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே இருந்தது என்பதை எளிதாகச் சொல்ல இயலாது. இதில் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. அதோடு அந்தப் பெண்ணின் வயது மிகவும் குறைவு என்பதும் கருதத் தக்கது.
  1. மருத்துவமனைச் சேர்க்கை, ரயில்வே ட்ராக் மேன் குறிப்பு என சம்பவத்திற்குப் பின் உள்ள அனைத்து ஆவணப் பதிவுகளும் இது ஒரு ரயில் விபத்து என்றே சொல்கின்றன. தாய்க்கும் மகனுக்கும் எப்படியாவது குணமாகித் திரும்புவதொன்றே கவலையாக இருந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி வரும் வரை புகார் கொடுப்பது பற்றிச் சிந்திக்க நேரமில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படியான ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடந்து, இழப்பு ஏபட்டுள்ளபோது புகார் கொடுப்பதற்கும் அவர்கள் நேரம் செலவிட்டிருக்க முடியும். மகனருகில் தாய் இருக்க வேண்டிய அவசியம் இருந்த போதிலும் செந்திலின் தம்பி ராஜசேகர், மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் இதைச் செய்திருக்க இயலும். தவிரவும் கை கால் துண்டிப்புக்குப் பின் செந்தில் முழுமையாக நினைவற்று இருக்க வில்லை, அவர் சத்தம் போட்டுக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்ததை கூட இருந்தவர்கள் சொல்லுகின்றனர்.
  1. செந்தில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தபின் இந்தச் செய்தி கேள்வ்விப்பட்டு புகார் எழுதித் தந்த வழக்குரைஞர், தான் செந்தில் சொன்னவற்றை முதலில் முழுக்க நம்பியதாகவும், போகப் போக அதில் பல முரண்கள் தென்பட்டதால் அவர் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். சிவப்பிரகாசம் இரும்புத் தடியால் தலையில் தாக்கி செந்திலை மயக்கமடையச் செய்தது என்பதில் உள்ள “இரும்புத்தடி” என்பதெல்லாம் புகாருக்காக சேர்க்கப்பட்டது என அவர் கூறினார்.
  1. இரவு எட்டு மணி அளவில் மாம்பழப்பட்டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் பக்கம் உள்ள இரட்டைத் தென்னை மரம் அருகில்தான் தன்னை சிவப்பிரகாசம் இரும்புக் கம்பியால் தாக்கி மயக்கமடையச் செய்தார் என்கிறார் செந்தில். இந்த இடம் விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ளது. அருகில் ரயில்வே கேட். ஆள் நடமாட்டம் உள்ள பகுதி அது. இங்கே ஒருவரை தலையில் அடித்து வீழ்த்திக் கடத்திச் சென்றதை யாரும் பாக்கவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. அவர் அடித்து வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்திலிருந்து கை கால் துண்டிக்கப்பட்டுக் கிடந்த இடம் குறைந்த பட்சம் 400 மீ தொலைவு இருக்கும். அவ்வளவு தொலைவில் உள்ள இடத்திற்கு மயக்கமடைந்து இருந்த செந்தில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டார், யாரும் அதைப் பார்க்கவில்லையா என்கிற கேள்விகள் உள்ளன. தவிரவும் செந்தில் கை கால் துண்டிக்கப்பட்டு விழுந்து கிடந்த இடம் அப்பகுதி மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிக்கும் பகுதி. அதுதான் குடிப்பவர்கள் சந்தித்து மது அருந்தும் இடமும் கூட. அந்தப் பகுதியில் ஒருவரைக் கொண்டு வந்து ரயில் பாதையில் போடுவது அல்லது அங்கு கொண்டு வந்து வெட்டப்பட்ட பாகங்களையும் வெட்டப்பட்ட ஒருவரையும் தூக்கி எறிவது என்பதெல்லாம் நம்பற்குரியனவாக இல்லை.
  1. செந்தில் உடல் உறுப்புகள் துண்டாடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிய ஆட்டோ டிரைவர் மணிகண்டனை நாங்கள் தேடிக் கண்டுபிடித்தோம். இயற்கைக் கடன்களைத் தீர்ப்பதற்காக ரயில் பாதை அருகே அப்போதுதான் அமர்ந்த அவரை இந்திரா நகரில் வசிக்கும் பெயின்டர் அய்யப்பனின் குரல் எழுப்பியிருக்கிறது. “இங்கே ஒரு ஆள் ரயிலில் அடிபட்டுக் கிடக்கிறான். யாராவது செல் போன் இருந்தால் குடுங்க.. “ என கத்திக் கொண்டு அய்யப்பன் ஓடி வந்துள்ளார். மணிகண்டன் போய்ப் பார்த்தபோது இரண்டு தண்டவாளங்களுக்கும் இடையில் வெட்டுண்ட உடற்பாகங்களின் சிதறல்களும் கொழுப்புகளும் கிடந்துள்ளன. மணிகண்டனின் செல்லிலிருந்து 108 ஆம்புலன்சுக்குப் போன் செய்யப்பட்டுள்ளது.. அய்யப்பன் தவிர வேறு யார் அப்போது அங்கிருந்தனர் என்ற போது சரத், தங்கதுரை ஆகியோர் இருந்ததாக மணிகண்டன் சொன்னார். மிகவும் சிரமப்பட்டு அய்யப்பனை அடுத்த நாள் எங்கள் குழு கண்டுபிடித்தது, “நான் செல் போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு டாய்லட் போயிட்டு இருந்தேன். அப்ப ரயில் போச்சு. ரயில் கடந்தவுடன் யாரோ ‘அடிபட்டுட்டேன். காப்பாத்துங்கன்’னு சத்தம் போடுறது கேட்டது. ஓடிப் பார்த்தபோது தண்டவாளங்களுக்கு இடையில் செந்தில் அடிபட்டு உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கிடந்தார். அப்போது எதிரே வேல்முருகன் ஓடி வந்தார். ‘ரயில்ல அடிபட்டுக் கிடாக்கிறார். முதல்ல டிராக்மென் கிட்ட ஓடிச் சொல்லுங்க’ ன்னு அவர் சொன்னார். நான் ஓடிச் சொல்லிட்டு வர்றதுக்குள்ள செந்தில் தண்டவாளத்துக்கு வெளியில உருண்டு கிடந்தார்.” தான் முதலில் பார்த்தபோது செந்தில் கை, கால் துண்டிக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு இடையே கிடந்தார் என அவர் உறுதிபடச் சொன்னார். தண்டவாளங்களுக்கு இடையில் உடற் பிசிறுகள், கொழுப்புகள் கிடந்தன எனவும் கூறினார். காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ உதவியாளரும் இதே போல “அந்த இடத்தில் உடல் கொழுப்புகள் சிதறிக் கிடந்தன எனவும் கை, கால்கள் நசுங்கிய நிலையில் சிதறிக் கிடந்தன“ எனவும் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அய்யப்பனின் கூற்று ஒத்துப் போகிறது.
  1. ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கைக் குறிப்பேட்டில், செந்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது உடல் காயங்களில் ரயில் கிறீஸ், எண்ணை முதலியவை காணப்பட்டன என மருத்துவர்கள் குறிப்பெழுதியுள்ளதாகவும், அது குறித்த மருத்துவ மனை அறிக்கையைத் தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் இவ் வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் அண்ணாதுரை குறிப்பிட்டார். ஜிப்மர் டாக்டர்களின் இக் குறிப்பை நாங்கள் பார்க்க இயலவில்லை.
  1. சம்பவம் நிகழ்ந்த அன்று ரயில்வே ட்ராக்மேன் அதிகாரிகளுக்கு அனுப்பிய குறிப்பில், “ஒரு 30 வயது மதிக்கத் தக்க ஆண் ரயிலில் அடிபட்டு கை கால் துண்டாகிக் கிடப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னதன் பேரில் தான் அங்கு சென்று பார்த்த பொழுது உள்ளூர் மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை சிகிச்சைக்கு அனுப்ப இருந்தனர்” என உள்ளது. விழுப்புரம் சந்திப்பில் உள்ள ரயில்வே காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தபோது அங்கு பணியில் இருந்த எஸ்.எஸ்,ஐ அசோகன், ரயிலில் அடிபட்டு யாரும் இறந்தால்தான் தாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம் எனவும். மற்றபடி இத்தகைய விபத்துகளை உள்ளூர் காவல்துறைதான் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
  1. செந்தில் குடும்பத்தாரிடம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், “இது ரயிலில் அடிபட்டதால் ஏற்பட்ட விபத்து அல்ல. அரிவாளால் வெட்டப்பட்டுத் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை என ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கித் தருகிறேன் எனவும் அதைக் கொண்டு ஒரு நல்ல தொகையை இழப்பீடாகப் பெறலாம் எனவும் முதலில் செந்திலின் அண்ணனிடம் 10,000 ரூ பெற்றதாகவும், பின் அவரது அம்மாவிடம் மேலும் ரூ 2,000 பெற்றதாகவும் அறிந்தோம். இது குறித்து நாங்கள் செந்திலின் அம்மா ஆதிமாவிடம் விசாரித்தபோது முதலில் அவர் அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்றார். ஆனால் செந்திலிடம் அதைக் கேட்டபோது ஆம், அது உண்மைதான் என ஏற்றுக் கொண்டார். பின் மீண்டும் நாங்கள் செந்திலின் அம்மாவிடம் கேட்டபோது அவரும் அதை ஒத்துக் கொண்டார். அப்படி ஏமாற்றியிருப்பவர் பெயர் லோகநாதன் எனவும் அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் எனவும் ஐ.ஜே.கே கட்சியில் உள்ளார் எனவும் ஒருவர் கூறினார்.

முடிவாக

1. செந்திலின் கை கால் துண்டிக்கப்பட்டது ரயில் விபத்தால் ஏற்பட்டதுதான் என எங்கள் குழு உறுதியாகக் கருதுகிறது. இதன் பின் வேறு எந்தச் சதித் திட்டமும் இல்லை.

2. சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக இன்று பெரிய அளவில் சாதி அமைப்புகளும், பா.ம.க போன்ற அரசியல் கட்சிகளும் இயங்குவதாலும், அதன் விளைவாக இன்று இப்படியான காதல் திருமணங்களில் தலித் இளைஞர்கள் கொல்லப்படுவதாலும் இது போன்ற பிரச்சினைகளில் சாதி ஆதிக்க சக்திகள்தான் இதைச் செய்திருப்பார்களோ என்கிற அய்யம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் இதிலும் சில ஐயங்களை தனி நபர்களும், சில இயக்கங்களும் முன்வைக்கின்றன. செந்திலுக்கு ஏற்பட்டது விபத்தல்ல, அது திட்டமிட்ட தாக்குதல் என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது ஒரு உணர்வு நுட்பம் மிக்க ஒரு பிரச்சினையாக உள்ளதால், இது குறித்து ஒரு இரண்டாவது கருத்தைப் (second opinion) பெறுவதுபோல சி.பி.சி.ஐ.டி போன்ற வேறொரு புலனாய்வு நிறுவனத்திடம் இந்த வழக்கை மேல்விசாரணைக்கு ஒப்படைக்கலாம். அந்தப் பெண்ணின் பெயர் செந்திலின் புகாரில் தவறாக உச்சரிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே அப்படி ஒரு பெண்ணே இல்லை என இந்த வழக்கை விசாரித்த மேற்கு காவல் நிலையம் அறிவித்தது வழக்கை மூட நினைத்தது மிகப் பெரிய தவறு. எனவே மறு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடலாம் என்பதை எங்கள் குழு வற்புறுத்துகிறது.

3. இது போன்ற பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்போர் மிகவும் விழிப்புணர்வுடன் சாதீய வன்முறைகளைக் கண்காணிப்பது அவசியம் என்கிற அதே நேரத்தில், தீர விசாரித்துக் களத்தில் இறங்குவதும் அவசியம்.

4. செந்திலின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமானது. அவரது விதவை அன்னை 21 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு ரயில் விபத்தில் தன் கணவரைப் பறி கொடுத்தவர். இந்த முதிய வயதில் அவர் மகன் இந்நிலைக்கு ஆளாகியிருப்பது கொடுமை, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து செந்திலுக்கு உரிய இழப்பீடும் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர வாகனம் ஒன்றும் அளிக்க வேண்டும்.